(அன்பு நண்பர்களே.... உங்களின் தொடர் ஆதரவுகளால் என் ஐம்பதாவது
கதையை உங்கள் முன் படைப்பதில் பெருமை கொள்கிறேன்... வழக்கம்போலவே எப்போதும் உங்கள்
அனைவரின் ஆதரவை எதிர்நோக்கி.....)
அப்பா
இறந்த ஆறாவது நாள், அகிலனின் முகத்தை தவிர வீட்டில் வேறு எங்கும் கொஞ்சம் கூட துக்கத்திற்கான
அடையாளம் தென்படவில்லை... “இன்னிக்கு பீட்ரூட் பொறிக்கலாமா அக்கா?” சித்தியின்
குரல் மாடி வரை எதிரொலித்தது... “தாத்தா இறந்துவிட்டார்...! :(” என்று போடப்பட்ட பேஸ்புக் ஸ்டேட்டஸ்’க்கு
விழுந்த “ஆர்.ஐ.பி”க்களை லைக்’கக்கிக்கொண்டே சிற்றுண்டியை கொறித்துக்கொண்டிருந்தனர்
பேத்திமார்கள் இருவர்.... “மாமா, நான் போகோ சேனல் பாக்கணும்... சுமி வைக்க மாட்றா”
அக்காவின் குழந்தை ஒன்று கண்களை கசக்கியபடியே அகிலனிடம் முறையிட, ஒருவழியாக
பஞ்சாயத்து பேசி “அரை மணி நேரம் போகோ, அப்புறம் சன் மியூசிக்” என்கிற சரித்திர
புகழ் வாய்ந்த தீர்ப்பை சொல்லிவிட்டு மாடியில் வெகுநேரமாக காத்திருந்த அமுதாவை
நோக்கி நகர்ந்தான்...
அப்பாவின்
இறப்புக்கு ஆறாவது நாளாகவும் துக்கம் விசாரிக்க வருபவர்கள் குறைந்தபாடில்லை...
“எப்டி
ஆச்சு?”
“நல்லாதான்
சாப்ட்டு படுக்க போனார்... வழக்கத்தைவிட ஒரு தோசை கூடவே சாப்புட்டார், புதினா
சட்னி கேட்டு வாங்கி சாப்புட்டார்.... கடைசியா வழக்கமா பாக்குற சூப்பர்
சிங்கரையும் பார்த்துட்டுதான் படுத்தார்... விடிஞ்சு பார்த்தா உயிரில்ல... ஹார்ட்
அட்டாக்’னு சொல்றாங்க...” சித்தப்பா இதே வசனத்தை எத்தனையோ நூற்றுக்கணக்கான முறை
சலிக்காமல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்... ஒவ்வொரு முறையும் “தோசை, புதினா சட்னி”
கூட அவர் விளக்கத்திலிருந்து தவறியதில்லை...
ஆனால்,
இப்படி தொடங்கும் பேச்சு கடைசியில் வந்து நிற்கும் இடம்தான் அகிலனுக்கு எப்போதும்
பிடிப்பதில்லை...
“தம்பிக்கு
கல்யாணம் செஞ்சுப்பார்க்கத்தான் ஐயா ரொம்ப மெனக்கட்டார்... நம்ம மணப்பாறை’ல ஒரு
நல்ல இடம் இருக்கு... பேசுவோமா?” இப்படி வந்து போகும் பெரும்பாலானவர்களுக்கு
அகிலனின் “முப்பது வயது” கண்களை உறுத்தவே செய்தது...
“நல்ல
இடம் இருந்தா பிளாட் போட்டு விக்க சொல்லுங்க” கோபத்தில் ஒருதடவை துக்கம் விசாரிக்க
வந்தவரையே துயரத்தில் ஆழ்த்தும் வண்ணம் பேசிவிட்டான் அகிலன்... அதனால், அதற்கடுத்த
வருகையாளர்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பை சித்தப்பா எடுத்துக்கொண்டார்...
இப்போதும் ஹாலில் அமர்ந்து டீ’யில் இஞ்சி சேர்த்திருக்காங்களோ?னு யோசித்தபடி
குடித்துக்கொண்டிருக்கும் இருவரிடம் அதையேதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்
சித்தப்பா... “நல்லாதான் சாப்ட்டு படுக்க போனாரு.... ஒரு தோசை கூடவே....”
மாடிப்படிகளை கடந்து பால்கனியில் அமர்ந்திருந்த அமுதாவின் அருகாமையை
அடைந்துவிட்டான் அகிலன்...
“சாரி
அமுதா... ரொம்ப நேரம் காக்க வச்சுட்டேனா?”
“இல்லப்பா...
உனக்கு இந்த நேரத்துல எவ்வளவு வேலை இருக்கும்னு எனக்கு தெரியாதா? எதுக்காக என்னை
வர சொன்ன அகி?”
“அப்பா
ஒரு உயில் எழுதி வச்சிருந்த விஷயம் நேத்துதான் எனக்கு தெரியவந்துச்சு... லாயர்
அங்கிள் சொன்ன அந்த விஷயத்தை கேட்டு என்ன பண்றதுன்னே தெரியல அமுதா... அதான்”
அகிலனின் முகத்தில் சோகத்தை தாண்டிய பதற்றமும் தென்பட்டது...
“உயிலா?...
என்ன உயில்?”
“இன்னும்
ஒரு வருஷத்துக்குள்ள நான் கல்யாணம் செஞ்சுகிட்டாதான் அவரோட முழு சொத்தும் எனக்கு
கிடைக்கும்... இந்த ஒரு வருஷத்துக்குள்ளும் கூட சொத்துகளை வேற யாருக்கும் விக்க
அனுமதி இல்லையாம்... கல்யாணமாகி என் மனைவி கையெழுத்து போட்டா மட்டும்தான் ஒரு
பிள்ளையா அவரோட சொத்துகளை அனுபவிக்க முடியும்... இப்டி ஒரு உயில் எழுதி வச்சிட்டு,
இறந்தும்கூட என்னைய பழிவாங்கிட்டார்...” சுவரில் மாட்டப்பட்டிருந்த அப்பாவின்
புகைப்படத்தை அவன் கண்களின் பார்வையே எரித்துவிடுவது போல கோபக்கனல் கண்களை
நிறைத்திருந்தது...
“அடக்கடவுளே!...
இத்தனை வருஷமும் உன்ன கல்யாணம் செஞ்சுக்க சொல்லி சண்டை போட்டவரு, இப்டி ஒரு
எக்ஸ்ட்ரீமுக்கு போவார்னு நினைச்சுகூட பார்க்கல அகி... ஆனால், உன் கல்யாணத்துக்காக
அவர் எவ்ளோ ப்ரில்லியன்ட்டா, கிரியேட்டிவா யோசிச்சிருக்கார் பார்த்தியா?”
“ப்ரில்லியன்ட்டும்
இல்ல, கிரியேட்டிவும் இல்ல அமுதா... இதுவும் கூட அட்டக்காப்பி... என்னைக்கோ
போதையில பம்மல் கே சம்மந்தம் படம் பார்த்திருப்பார் போல, அதை பார்த்து இந்த
முடிவுக்கு வந்திருப்பார்... என்னோட மொத்த பிஸ்னஸ்’க்கும் ஷ்யூரிட்டியா இந்த
சொத்துகளைத்தான் வச்சிருக்கேன், சொத்து எனக்கு வரலைன்னா மொத்தமும் போய்டும்...
பூர்விக சொத்தா இருந்தா கூட கேஸ் போட்ருக்கலாம், ஆனால் மொத்தமும் அந்த மனுஷன்
சம்பாதிச்சது... என்னோட இத்தனை நாள் மொத்த கஷ்டமும் வீணாப்போய்டும் போல... இப்போ
என்ன பண்றதுன்னே தெரியல அமுதா”
“மொத்தமா
உங்கப்பா செக் வச்சுட்டார் அகி.... நீ கல்யாணம் செஞ்சுக்கறத தவிர வேற வழியில்ல...”
“நீயுமா
இப்டி பேசுற அமுதா?... நான் ஒரு கே’ன்னு உனக்கு தெரியாதா?... எனக்கும் தமிழுக்கும்
இருக்குற காதல் உனக்கு தெரியாதா?.... நான் எப்டி கல்யாணம் செஞ்சுக்க முடியும்?”
கேள்விகளால் வாக்கியங்களை நிறைத்தான் அகிலன்...
“அப்போ
என்னதான் பண்ண முடியும்னு நினைக்குற?... இதுக்கு வேறவழி இருக்குறதா எனக்கு தெரியல
அகி...”
“இருக்கு
அமுதா... ஆனால், நீ மனசு வச்சா மட்டும்தான் அது நடக்கும்...” சொல்லிவிட்டு அமுதாவின்
கண்களில் எழும் குழப்பத்தை கூர்ந்து கவனித்தான் அகிலன்....
“நானா?...
நான் என்ன பண்ண முடியும் அகி?... எனக்காக எவ்ளவோ செஞ்சிருக்க நீ, என்னால உனக்கு
ஒரு ப்ராப்ளம் சால்வ் ஆகும்னா நிச்சயம் பண்றேன்....” அமுதா ஆர்வமாக கேட்டாள்....
“நீ
ஏன் இவ்ளோ நாளா கல்யாணம் செஞ்சுக்கல?”
“அகி,
இப்போ நாம பேசுறது உன் பிரச்சினை பத்தி... என் ப்ராப்ளம் அப்புறம்
பார்த்துக்கலாம்...”
“சொல்லு
அமுதா... இதுலதான் இருக்கு என் பிரச்சினைக்கான தீர்வும்..”
“எனக்கு
கல்யாணத்துல நம்பிக்கை இல்ல... ஒரு கல்யாணத்தால என் அம்மா வாழ்க்கை முழுசும் கஷ்டப்பட்டதை
அணு அணுவா கூட இருந்தே அனுபவிச்சவ நான்... அப்பாவை விட்டு அம்மா பிரியுற வரை அவங்க
பட்டது நரக வேதனை... கல்யாணம்’ன்றதே எல்லா சொந்தபந்தமும் ஒன்னு சேர்ந்து ஒரு
படுகுழில நம்மள படுக்க வைக்கிற விஷயம், அதுனாலதான் நான் கல்யாணம் செஞ்சுக்கல...
உன் அப்பா மாதிரி என் அம்மா உயில் எழுதி வைக்கலையே தவிர, அவங்க இருந்தவரைக்கும்
என் கல்யாணத்த பத்தி பேசாத நாளே கிடையாது... ஆனால், அவங்க செஞ்ச அதே தப்ப நான்
செய்ய விரும்பல... என் கனவெல்லாம் ஒரு ஸ்கூல் ஆரமிக்கணும், அதை நல்ல விதத்துல
கொண்டுபோகனும்... அதுக்கான வேலைகள்தான் இப்போ பார்த்துட்டு இருக்கேன்... இப்போ
சொல்லு அகி, நான் சொன்னதுக்கும் உன் பிரச்சினைக்கும் என்ன சம்மந்தம்....”
“இருக்கு
அமுதா... ஏன் நாம ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்க கூடாது....” பட்டென
கேட்டுவிட்டான்...
“லூசா
அகி நீ?... என்ன பேசுற?” அமுதா சட்டென கோபத்தில் எழுந்துவிட்டாள், அவள் பார்வையில்
சுட்டெரிக்கும் கனல் கனன்றுகொண்டு இருந்தது...
“கூல்
அமுதா... இந்த கல்யாணம் சட்டத்தையும், என் சொந்தங்களையும் ஏமாத்த மட்டும்தான்...
மற்றபடி நீயும் நானும் எப்பவும் போல நண்பர்கள் மட்டும்தான்... ஒருவருஷத்துல என்
கைக்கு சொத்துகள் வந்ததும், அப்புறம் நாம டைவர்ஸ் வாங்கிக்கலாம்... உன்
விருப்பப்படி ஒரு ஸ்கூல் தொடங்க தேவையான எல்லா உதவியும் நான் பண்றேன்... நம்ம
சொசைட்டிக்கு கல்யாணம் பண்ணிக்காதது மட்டும்தான் ப்ராப்லமே தவிர, டைவர்ஸ்
பண்ணிக்கறது ரொம்ப சாதாரண விஷயம்... உன்ன நான் கட்டாயப்படுத்தல, நீ நல்லா யோசி...”
அகிலன் பேசி முடிக்கும்போது குவளையில் பழச்சாறுடன் உள்ளே நுழைந்தாள்
பெண்ணொருத்தி...
அகிலனின்
அக்கா மகள் இந்து, அந்த உரிமையுடனே குவளையை அவன் கையில் கொடுத்தபோது, சிரித்தவாறே
கண்ணடித்தாள்... “மாமா ஜோடி பொருத்தம் சூப்பர்...” மெல்ல அகிலனின் காதுக்குள்
சொன்னவளாக, அவன் அடியிலிருந்து தப்பிப்பதற்காக ஓடிவிட்டாள்....
“ஏய்
லூசு... இது என் பிரென்ட் அமுதா’டி...” அவள் ஓடும்போதே அடிக்க பாய்ந்தான் அகிலன்....
“எல்லாம்
தெரியும் மாமா.... நாங்களும் இப்டிதான் பிரென்ட்’னு வெளில சொல்லிக்குவோம்....”
அகிலனிடமிருந்து தப்பித்து ஓடும்போதும் பேச்சை அவள் நிறுத்தவில்லை... நிச்சயம்
கீழே இருவரை பற்றியும் வந்தந்திகள் ஆறாக ஓடிக்கொண்டிருக்கும் என்பதை அகிலன்
அறிவான்... அதைத்தான் அவன் விரும்பினானும் கூட....
சில
நிமிட மௌனங்கள் அமுதா யோசிப்பதாய் தெரிந்தது...
மெல்ல
எழுந்து அகிலனின் அருகே வந்தவளாக, “சரி அகி... ஆனால் தமிழ் இதுக்கு ஒத்துகிட்டானா?”
என்றாள்.....
“அவனை
சமாதானப்படுத்ததுறதுக்கு நான் தலையால தண்ணி குடிச்சேன்.... ஆனால், நீ என்னைய அவ்ளோ
கஷ்டப்படுத்திட மாட்டேன்னு நினைக்குறேன், நான் சொல்றது சரிதானே அமுதா?” என்ற
கேள்விக்குள் ஒரு அதிகாரம் தொனித்தது.... அது அவர்கள் இருவருக்கும் இடையிலான
ஆத்மார்த்தமான நட்பின் அடையாளமாகவே வெளிப்பட்டது....
“சரி
அகி... இதுதான் விதின்னா அப்டியே நடக்கட்டும்...” என்று அமுதா சொல்லும் சம்மதம்
கூட ஆயிரம் விதமான “வேண்டாவெறுப்பை”தான் அம்பலப்படுத்தியது... ஆனால் அதை அகிலன்
கவனிக்க விரும்பவில்லை.... தன் வாழ்க்கையில் எவ்வளவோ உதவிகள் செய்த அகிலன்,
முதன்முதலாக கேட்கும் இந்த உதவியை மறுக்க மனமில்லாத அமுதாவின் சம்மதம் அகிலன்
எதிர்பார்த்த ஒன்றுதான்....
*********************
“ஏய்,
அகிலன் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டான்....”
“வர்ற
தை மாசம் 28ம் தேதி நல்ல முகூர்த்தம்,
அன்னிக்கே கல்யாணத்தை வச்சுக்கலாம்...”
“முகூர்த்த
புடவை எடுக்க ஆர்.எம்.கே.வி போறோம்...”
“பத்திரிகை’ல
நம்ம குமார் மாமா பேரு விடுபட்டுடுச்சாம்...”
“அவசியம்
குடும்பத்தோட கல்யாணத்துக்கு வந்துரனும்...”
“கெட்டிமேளம்...
கெட்டிமேளம்..... மாங்கல்யம் தந்துனாநேனா....”
இரவு
பத்து மணி... திருமணம் முடிந்த களைப்பில் உறவினர்கள் அவரவரும் கிடைத்த இடங்களில்
நித்திரையை தொடங்கிவிட்டனர்... முதலிரவுக்காக அமுதா தயார் செய்யப்பட்டு, காதோரமாக
சில ரகசியங்களும் சொல்லப்பட்டுக்கொண்டு இருக்கிறாள்... மாடி அறையில் நண்பர்களின்
கேலிகளால் வெட்கத்தில் முகம் சிவந்திருந்தான் அகிலன்... ஆனால், அந்த கூட்டத்தில்
நடக்கும் எவ்வித நிகழ்வுகளிலும் உடன்பாடு இல்லாதவனாக, முகம் முழுக்க நிறைந்திருந்த
கவலைகள் காதோரம் வழியும் அளவிற்கு அமர்ந்திருந்தான் தமிழ்.... “காதலனுக்கு வேறொரு
பெண்ணுடன் திருமணம்” இந்த ஒருகாரணம் போதாதா தமிழின் கவலைக்கு?... சம்பிரதாய
திருமணம்தான் என்றாலும் கூட, ஏற்கத்தான் அந்த மனதிற்கு ஒப்பவில்லை... நண்பர்களின்
ஆலோசனைகள் (?) எல்லை மீறிடவே, அங்கிருந்து ஒருவழியாக வெளியேறிவிட்டான் தமிழ்...
இத்தகைய தருணத்தில் அவன் வெளியேறுவதுதான் சரி என்கிற எண்ணத்தில் பார்வையால்
தமிழின் விடைபெறுதலை ஆமோதித்தான் அகிலனும்..
சில
நிமிடங்களில் எதார்த்த அழகுடன் அறைக்குள் வந்தாள் அமுதா... காலை தொடங்கிய
“பதற்றம்” தொடங்கி, இப்போது அறையின் கதவு சாத்தப்படும்போது உதிர்த்த “வெட்கம்” வரை
எல்லாமும் பொய்யானவை என்பதை அமுதாவும் அகிலனும் மட்டுமே அறிவார்கள்...
“ரொம்ப
நன்றி அமுதா.... சூழலுக்கு ஏத்தமாதிரி நீயும் நல்லாவே நடிச்ச...” பெருமூச்சு
விட்டுக்கொண்டான் அகிலன்....
“ரொம்ப
நல்ல அனுபவம் அகி.... கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், நிறையவே சுவாரசியமா இருந்துச்சு...
அம்மா இருந்திருந்தா இன்னும் சந்தோஷமா இருந்திருக்கலாம்...!” அமுதாவின் கண்கள்
விழியோரம் கசிந்தன....
“கூல்
அமுதா.... சரி, காலைலேந்து உனக்கு ரெஸ்ட்டே இல்ல... தூங்கு” படுக்கை இரண்டாக
பிரிக்கப்பட்டு, படுத்த வேகத்தில் உறங்கியும்விட்டான் அகிலன்.... அமுதா காலை முதல்
நிகழ்ந்த நிகழ்வுகளை அசைபோட்டாள்... “இதான் திருமணமா?... நல்லாதான் இருக்குல்ல?”
தன் மனதையே ஒருமுறை கேட்டுக்கொண்டாள்...
விடிந்தது....
இரவின்
நெடுநேர யோசிப்புகளின் விளைவாக, எட்டு மணி சூரியனாதான் அமுதா கண் விழித்தாள்...
அகிலன் இன்னும் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறான், அவனை எழுப்ப மனமில்லாமல் மெல்ல
எழுந்து அறையைவிட்டு வெளியேறினாள்... மாடிப்படிகள் இறங்கி வரும் அமுதாவை அந்த
வீட்டின் பல ஜோடி கண்கள் “ஸ்கேன்” செய்தது....
“களைந்த
முடிகள், காணாமல் போன பொட்டு, கசங்கிய சேலை” இவற்றை பார்த்ததும் அந்த கண்களில் ஒரு
மகிழ்ச்சி பெருமூச்சு....
“மாமாவுக்கு
கல்யாணம்.... செம்ம ஜாலி...” ஸ்டேட்டஸ்’க்கு விழுந்த மொக்கை கருத்துகளுக்கும் லைக்
போட்டுக்கொண்டிருந்த இந்து மட்டும், உற்சாகத்தில் குதித்தபடி ஓடிவந்து, “அமுதா
அக்கா கலக்கிட்டிங்க....” என்று எவரும் அறியாமல் கை கொடுத்தாள்.... “எதுக்கு?”
புரியாமல் கேட்டாள் அமுதா....
“புரியாத
மாதிரி கேட்பீங்க... அதான் தலைமுடி கலைஞ்சிருக்கு, சேலை கசங்கிருக்கு, பொட்டு
காணல... இதுக்கெல்லாம் என்ன அர்த்தமாம்?”
“மண்ணாங்கட்டி
அர்த்தம்.... இதல்லாம் கார்த்திக் பிரபு காலத்து படங்கள் சீன்... லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு
வா இந்து... நீ சொல்றதை பார்த்தா இன்னிக்கு பெரியம்மாவுக்கும் சம்திங்
நடந்துச்சா?” என்று அமுதா பார்த்த பக்கத்தில், தூங்கி எழுந்து வந்த
பெரியம்மாவிடமும் அதே “சேலை, தலைமுடி, பொட்டு” சமாச்சாரங்கள்..... சிரித்தபடியே
இந்துவை கடந்து சமையலறையை நோக்கி நடந்தாள் அமுதா....
ஒருகாலத்தில்
அழுதே வீங்கிய கண்கள்தான் அமுதாவிற்கான அடையாளம், திருமணமான ஒரு வாரத்தில்
சிரித்தே அவள் வாய் வலித்தது... ஒரு கதாநாயகியை போல வீட்டில் அவள்
நடத்தப்பட்டாள்... சமையல் முதல் சகலமும் அவள் ஒப்புதல் பெற்றபிறகே வீட்டில்
அமல்படுத்தப்பட்டது... அமுதாவிற்கு அது வித்தியாசமான அனுபவமாக இருந்தது... இதுவரை
அவள் பார்த்த ஆண்கள் “சந்தர்ப்பவாதிகள்”, பெண்களோ “முட்டாள்கள்”... முதன்முதலாக
ஆண்களின் அடையாளமாக “அப்பா”வை நினைத்திருந்த அவள் எண்ணத்தை மாற்றியது அந்த
திருமணமான சிலநாட்கள்... அவ்வப்போது, “இது சில காலம்தான், அதிகம் ரசிக்காதே!”
என்று உள்மனம் அவளை எச்சரிக்கையூட்டியது...
****************
“என்ன
தமிழ் பிரச்சின உனக்கு?” நீண்டநேர தமிழின் பிடிபடாத பேச்சை தொடர்ந்து நேரடியாகவே
கேட்டுவிட்டான் அகிலன்...
“அதைத்தான்
நான் உன்கிட்ட கேட்குறேன்... கல்யாணமாகி ஒரு வாரமாச்சு, இப்போதான் என்னைய பார்க்க
உனக்கு நேரம் கிடச்சிருக்குல்ல?”
“இதல்லாம்
ஒரு பிரச்சினையா?... கல்யாணம் ஒருநாள்தான் தமிழ்... ஆனால், அதுக்கு அப்புறம்
நடக்குற கோவில் விசிட்’கள், விருந்துகள், சடங்குகள் எல்லாம் நெறைய இருக்குப்பா...
இப்போதான் என்னை ப்ரீயா விட்டிருக்காங்க... சட்டத்தையும், என் சொந்தங்களையும் ஏமாத்தனும்னா
இதல்லாம் பண்ணித்தான் ஆகணும்...” தமிழின் வெகு அருகாமையில் அமர்ந்து, அவன் தலையை
வருடியபடி விளக்கினான் அகிலன்...
“நீ
எதுசொன்னாலும் நான் நம்பித்தான் ஆகணும்... இப்போ உன் சொந்தங்களை ஏமாத்துற மாதிரி,
நாளைக்கு என்னைய ஏமாத்திடாத...” இன்னும் பிடிகொடுக்காமல் எழுந்து சென்றுவிட்டான்
தமிழ்...
நியாயமாக
பார்த்தால் இப்படி தமிழ் பேசிய பேச்சுக்கு அகிலனின் அனல் பறக்கும் வாதம் இந்நேரம்
தொடங்கி இருக்கணும்... ஆனால், அகிலனின் மனநிலை அந்த யுத்தத்துக்கு தயார் இல்லை...
தலையில் கைவைத்தபடி சோபாவில் சாய்ந்துவிட்டான்... சுவற்றில் மாட்டப்பட்டிருந்த
முருகன் அவனை பார்த்து சிரிப்பதாக தோன்றியது...
“நல்லா
சிரி முருகா.... நீ மட்டும் எப்டிய்யா ரெண்டு பேரையும் சமாளிச்சு, சந்தோஷமா
சிரிக்குற?” மனதிற்குள் முருகனை கேட்டுக்கொண்டான்... முருகனே காட்சி தந்து பதில்
சொல்ல அகிலன் ஒன்றும் அருணகிரிநாதர் இல்லையே, அதனால் அதே சிரிப்பைத்தான் பதிலாக
தந்தார்...
சில
நிமிட வீட்டின் அமைதி அகிலனை கொஞ்சம் கலவரமூட்டியது... கடிகாரத்தின் நொடிமுள் நகரல்,
கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனதிற்குள் படபடப்பை அதிகரிக்கவே செய்தது...
சமையலறைக்குள்
இருந்து வெளிவந்த தமிழின் கைகளில் தவழ்ந்த இரண்டு குவளைகளின் தேநீரை
பார்த்ததும்தான் அகிலனின் மனம் “சாந்தி!” அடைந்தது... மெல்ல அகிலனின் அருகில்
இருந்த மேசை மீது அதில் ஒன்றைவைத்துவிட்டு, இன்னொரு குவளையை குடிக்கத்தொடங்கினான்
தமிழ்...
மெல்ல
எழுந்து தமிழின் அருகாமையில் அமர்ந்த அகிலன், ஏற்கனவே தமிழ் குடித்துக்கொண்டிருந்த
குவளையை வாங்கி அதை ரசித்து குடித்தான்... அகிலனின் பார்வையில் காணப்பட்ட “ஒரு
வார” தாகம் தமிழின் கண்களில் பளிச்சிட்டது... குவளையில் ஊற்றப்பட்டிருந்த தேநீர்
காற்றில் கரையத்தொடங்கியது... ஒரு கட்டத்தில் குவளையின் மேல்பகுதியில் பால் ஆடை
படரத்தொடங்கிய போது, இருவரின் உடல்களும் ஆடைகளை துறக்கத்தொடங்கியது....
அந்தி
சாய்ந்து பல மணி நேரங்கள் ஆகியும், முத்த யுத்தத்தின் எச்சங்கள் இன்னும்
ஓய்ந்தபாடில்ளாமல் தொடர்ந்துகொண்டுதான் இருந்தன... ஒருவழியாக ஓய்ந்துபோய் ஒருவர்
மீது மற்றொருவர் சாய்ந்தபடி கண்ணயர்ந்தும் போய்விட்டனர்...
கண்களை
விழித்த அகிலன் நேரத்தை பார்த்தான், பத்தென காட்டியது.... “அச்சச்சோ!” என்றபடி
ஹாலை நோக்கி ஓடினான்... இருக்கையில் படுத்திருந்த அவன் அலைபேசி வெகுநேரம்
ஓலமிட்டதன் விளைவாக, அணையும் தருவாயில் “மரண ஓலம்” எழுப்பிக்கொண்டிருந்தது...
ஓடிசென்று எடுத்துப்பார்த்தான், பதினேழு தவறிய அழைப்புகள்!... எல்லாம்
வீட்டிலிருந்துதான்... சித்தப்பா - 8 ,
சித்தி - 6, இந்து - 2, மாமா –
1 என்று அவரவரும் கோபத்திற்கு ஏற்றபடி அழைத்திருக்கிறார்கள்...
உடைகளை
மாட்டிக்கொண்டு, உறங்கிக்கொண்டிருந்த தமிழின் கன்னங்களில் முத்தம் இட்டபிறகு
அங்கிருந்து வேகமாக வெளியேறினான்...
****************************
தெருவே
நிசப்தமாக காட்சி அளித்தது... ஒன்றிரண்டு இரவுப்பணி ஆட்களை தவிர, நாய்கள் மட்டும்
ஆங்காங்கே குரைத்துக்கொண்டிருந்தன... அவன் வீட்டில் மட்டும்தான் அனைத்து
அறைகளிலும் விளக்கு எரிந்துகொண்டு இருந்தன... “எங்க போனாலும் ஆறு மணிக்குள்ள
வீட்டுக்கு வந்திடு அகி... புதுசா கல்யாணம் ஆனவங்க, எங்கயாச்சும் அமுதாவை வெளில
கூட்டிட்டு போ..” சித்தப்பா வழக்கம்போல நான்கு முறை இதையே சொன்னது அகிலனின்
காதுகளுக்குள் ஒலித்து கலவரப்படுத்தியது... வீட்டு வாசல்கூட இன்னும்
திருமணத்திற்கான அடையாளங்களை முழுமையாக இழக்காதவண்ணம் மாவிலை தோரணங்கள் தொக்கிக்கொண்டு
நின்றன...
கொஞ்சம்
தயக்கத்துடன் வீட்டிற்குள் அவன் காலெடுத்து வைக்கும்போது மணி பதினொன்றை நெருங்கி
இருந்தது...
ஹாலில்
சித்தப்பா, “அங்கயும் வரலையா?.. அவன் பிரென்ட் தமிழ் நம்பருக்கும் ரொம்ப நேரமா
பண்றேன், அதுவும் சுவிட்ச் ஆப்’லதான் இருக்குப்பா?” என்று யாரிடமோ அலைபேசியில்
விசாரித்தபடி அமர்ந்திருந்தார்... தமிழின் அலைபேசியும் கூட அநேகமாக இருபது தவறிய
அழைப்புகளின் தொடர் தாக்குதலால் அணைக்கப்பட்டிருக்கக்கூடும்.... அலைபேசியில்
விசாரித்துக்கொண்டிருந்தபோது அகிலனை கவனித்துவிட்ட சித்தப்பா, “இல்லப்பா...
வேணாம்... அகி வந்துட்டான்... ரொம்ப தாங்க்ஸ்..” அலைபேசியை துண்டித்தார்....
எல்லோர்
கண்களும் அகிலனை விசித்திர பார்வை பார்த்தது... அந்த விசித்திரத்தில் கொஞ்சம்
கோபம், கொஞ்சம் வெறுப்பு, கொஞ்சம் நிம்மதி என எல்லாமும் கலந்திருந்தது... அத்தை,
சித்தி எல்லோரும் ஒரே நேரத்தில் ‘நிருபர்களிடம் மாட்டிய ஊழல் அரசியல்வாதி’யை போல
கேள்விக்கு மேல் கேள்விகளாக கேட்டனர்...
“என்னப்பா
அகி இதல்லாம்?... நாங்கல்லாம் எப்டி பதறிட்டோம்னு தெரியுமா?.... ஒருவார்த்தை போன்
பண்ணி சொல்லலாம்ல?.... எங்கதான் போன?” சித்திதான் பதில்களுக்கான இடைவெளியே
கொடுக்காமல் கேள்விகளை அம்புகளாக தொடுத்துக்கொண்டே இருந்தாள்... அகிலனை
சிறுவயதிலிருந்தே வளர்க்கும் அவன் சித்தியின் இந்த பதற்றம் அங்கு வழக்கமான
ஒன்றுதான்... “எனக்கு காய்ச்சல்’னு சுகந்தி சித்திகிட்ட சொல்லிடாத, போன் பண்ணியே
என்னை கொன்னிடுவாங்க” கல்லூரி விடுதியில் இருக்கும்போது இப்படித்தான் அவன்
அப்பாவிடம் கூறுவான்... ஒருபக்கம் சித்தப்பா “அட்வைஸ் கொலை” செய்வது வாடிக்கை
என்றால், மறுபக்கம் சித்தியோ “எமோஷனல் டார்ச்சர்” செய்வதில் முனைவர் பட்டமே
பெற்றவர்...
எல்லோரையும்
நிறுத்திய சித்தப்பா, “அகி, இப்போ உனக்கு கல்யாணம் ஆச்சு... இனியாச்சும் கொஞ்சம்
பொறுப்பா நடந்துக்கோப்பா.... அமுதா மாடில இருக்கு, போ” என்று “மினி மீல்ஸ்”
அறிவுரையை மட்டும் கொடுத்துவிட்டு மாடியேற சொன்னார்... நல்லவேளையாக இந்தமுறை ஒரு
தடவையோடு அதை நிறுத்திவிட்டார்...
மாடி
அறையில் பாதி தூக்கத்தில் கண்கள் சொருகிட, மீதி தூக்கத்தில் சுஜாதாவின் சிறுகதைகள்
படித்துக்கொண்டிருக்கிறாள் அமுதா... அறையின் மேசையில் அவனுக்கான சாப்பாடு
அப்பாவியாக காத்திருந்தது... சித்தி, “சாப்பிட்டியா?”னு கூட கேட்காததற்கான காரணம்
புரிந்தவனாக, அறைக்குள் வந்து கதவை தாழிட்டான்... அந்த சத்தத்தில்தான் அமுதா
திடுக்கிட்டபடி விழித்தாள்... தூக்கக்கலக்கம் தூரப்போனதன் அடையாளம் அவன் கண்களில்
தெரிந்தது.... கணேஷும் வசந்த்தும் நினைவை விட்டு விலகி, அகிலன் நிற்பதை ஒருவழியாக
உணர்ந்தாள்....
“சாரி
அமுதா... உன் தூக்கத்தையும் கெடுத்துட்டேன், நீ தூங்கு...” உடை மாற்றியபடி
கூறினான் அகிலன்....
“என்ன
நினைச்சுகிட்டு இருக்க அகி?... மணியை பார்த்தியா, பதினொன்னு... இப்டி கண்ட
நேரத்துலயும் வீட்டுக்கு வந்தா சும்மா இருக்க நான் ஒன்னும் உங்க சொந்தக்காரங்க
இல்ல... இதுவே உனக்கு கடைசி தடவையா இருக்கட்டும்...” அமுதா வார்த்தைகளை நெருப்பாக
கொட்டிவிட்டாள்...
அதிர்ச்சியில்
உரைந்தபடி நின்ற அகிலன், குழப்பத்தில் பேச்சை மறந்து திகைத்து நின்றான்....
சட்டென
சிரித்துவிட்ட அமுதா, “ஏய் ஏய்.... அழுதிடாத... நான் சும்மா விளையாடினேன்....”
சிரிப்பை அடக்க மாட்டாதவளாக சொல்லி முடித்தாள்...
நிம்மதி
பெருமூச்சு விட்டவனாக அமுதாவை விளையாட்டாக அடிக்க கை ஓங்கினான்... இருவரும்
பேசிக்கொண்டே அகிலனும் சாப்பிட்டு படுக்கும்போது நேரம் பன்னிரண்டை
கடந்திருந்தது.....
குடும்பம்
மற்றும் சட்டத்தை ஏமாற்றி, ஒருவழியாக அமுதாவையும் தமிழையும் ஒருசேர சமாளித்து
நாட்களை தள்ளிட கொஞ்சம் அதிக சிரமம் அடைந்தான் அகிலன்... இப்படி ஒருபக்கம் ஒவ்வொரு
நாளையும் நிதானித்த சிரமத்துடன் அகிலன் நகர்த்த, அமுதாவோ எதிர்பார்த்திராத
மகிழ்ச்சியில் நாட்களை கழித்தாள்....
இப்படிப்பட்ட
சொந்தங்கள், அவர்களின் அன்பான கவனிப்புகள், ‘மனைவி’ என்கிற கூடுதல் பொறுப்பு என்று
எல்லாமும் அவளை பொறுத்தவரை வித்தியாசமான அனுபவமாக பட்டது... அவளின் குடும்பம்,
திருமணம் பற்றிய எண்ணமெல்லாம் இந்த நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டன...
ஆனால்,
நாட்கள் நகர அவளை நோக்கி இன்னொரு கேள்வி பலராலும் கேட்கப்பட்டது....
“அமுதா,
நாள் எதுவும் தள்ளிப்போச்சாம்மா?”
“இல்லையே...”
“குழந்தைய
தள்ளிப்போடாதிங்க... ஏற்கனவே உங்க ரெண்டு பேருக்கும் வயசை கடந்துதான் கல்யாணம்
ஆகிருக்கு... இன்னும் லேட் ஆக்க வேணாம்மா...”
அமுதா
இதைப்பற்றி நிறைய யோசித்தாள்... இதைப்பற்றி ஒருநாள் அகிலனிடமும்
கேட்டுவிட்டாள்....
“அகி,
நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்... அதுக்கு உன்னோட சம்மதமும், பங்களிப்பும்
வேணும்....” இதை கேட்டது ஒரு நள்ளிரவு நாளில், மொட்டை மாடியில்.... சுற்றிலும்
மரம் அசையும் காற்றின் சத்தத்தை தவிர, பூரண நிசப்தம் நிலவிய சூழல்...
“சொல்லு
அமுதா... எனக்காக எவ்ளவோ பண்ணிருக்க, நீ என்ன கேட்டாலும் நிச்சயம் செய்றேன்...”
“நான்
குழந்தை பெத்துக்கலாம்னு இருக்கேன்... அதுக்கு உன் சம்மதமும், செயற்கை முறையில்
கருத்தரிக்க உன்னோட உயிர் அணுவும் வேணும்...” சட்டென சொல்லிவிட்டாள்... எதையும்
கண்ணாடியை உடைப்பது போல பட்டென சொல்லிவிடுபவளுக்கு, உயிர் அணு கேட்பதில் கூட
இயல்பான தயக்கம் இல்லாதது அகிலனுக்கு ஆச்சரியமாக இருந்தது...
அகிலன்
சில வினாடிகள் மெளனமாக இருந்தான், அந்த மௌனத்தின் வெற்றிடத்தையும் வார்த்தைகளால்
நிரப்பிவிட்டாள் அமுதா “உன்கிட்ட அட்வான்ட்டேஜ் எடுத்துக்கறதா நினைக்காத அகி...
செயற்கை முறையில யாரோட உயிர் அணுவையோ கருவா சுமக்க எனக்கு விருப்பமில்ல... இந்த
உலகத்துல நான் நம்புற ரொம்ப சில ஆண்கள்ல நீயும் ஒருத்தன்... அந்த சில ஆண்கள்கிட்ட
இதை நான் கேட்க முடியாது, அதனாலதான் உன்கிட்ட கேட்குறேன்... இவ்வளவு நாள்
தனிமையையும், இந்த சில நாள் உறவுகள் மறக்க வச்சிடுச்சு... இன்னும் ஒரு
வருசத்துக்கு பிறகு அதே பழைய தனிமை என்னை நோக்கி வர்றப்போ நான் எப்டி அதை எதிர்கொள்ள
போறேன்னு தெரியல.... நான் வாழறதுக்கு பிடிமானமா ஒரு குழந்தை இருக்கணும்னு
ஆசைப்படுறேன்... அது உன்மூலமா கிடைக்கணும்னு ஆசைப்படுறேன்... செய்வியா அகி?”
ஒவ்வொரு வார்த்தையுமே உள்ளத்திலிருந்து வருவதாக பட்டது....
இனி
மௌனிக்க மனமில்லாத அகிலன், “நிச்சயம் செய்றேன் அமுதா... இவ்ளோ நாள் நானே பயந்தேன்,
அடுத்த ஒரு வருஷத்துக்கு அப்புறம் நீ தனிமைல சிக்கிடுவியோன்னு... இப்போ அந்த ஒரு
கவலையும் தீர இதை நல்ல வாய்ப்பா பயன்படுத்திக்கறேன்... நாளைக்கே டாக்டர் கிட்ட
போகலாம்...” முழுமனதுடன் சொன்னான்....
நீண்ட
நேர அமுதாவின் முக இறுக்கம் சற்றே இளகியது... வானில் ஒளிர்ந்த முழுநிலவை
காட்டிலும், அமுதாவின் முகம் அதிக பிரகாசித்தது... அந்த நிமிடமே அவள் தாய்மை
அடைவதன் ஆனந்தத்தை அனுபவிக்க தொடங்கினாள்...
******************
“எங்க
அகி நாள் பூரா போன?.. கால் பண்ணா கூட அட்டன்ட் பண்ணல?” வழக்கமான அதே கோபமான
வார்த்தைகள் தமிழிடமிருந்து....
“தமிழ்,
இப்போதானே வந்திருக்கேன்.... வந்தவுடனேயே ஆரமிக்கனுமா?” ஆசுவாசப்படுத்தும் விதமாக
சோபாவில் சாய்ந்து சட்டையின் முதலிரண்டு பொத்தான்களை கழற்றினான்... மார்பில்
வழிந்திருந்த வியர்வை துளிகள், காற்றின் வேகத்தில் சில்லிட்டதை ரசித்தபடி கண்களை
மூடினான் அகிலன்....
“இப்போலாம்
நான் பேசுறதே உனக்கு பிரச்சினையா தோணுதுல்ல?... இன்னிக்கு என் அப்பாவோட நினைவு
நாள்... மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, உன்கூட பேசனும் போல இருந்ததால்தான்
கால் பண்ணேன்.... தப்பா இருந்தா மன்னிச்சிடு அகி....” சொல்லிவிட்டு எழுந்து
அறைக்குள் சென்றுவிட்டான் தமிழ்...
சட்டென
எழுந்து அமர்ந்த அகிலன், தலையில் கை வைத்தபடி “ச்ச... எப்டி மறந்தேன் அதை?..”
யோசித்தபடியே அறைக்குள் சென்றான்.... தமிழின் ஒரே வீக்னஸ் அவன் “அப்பா
பாசம்”தான்... எந்த அளவு கடுமையான துயரம் வந்தபோதிலும் கூட, கொஞ்சமும்
கலங்காதவனிடம் “அப்பா” பற்றிய நினைவுகள் அடிக்கடி கண்களை கலங்க செய்திடும்...
ஐந்து வயதில் தந்தையை இழந்த தமிழுக்கு, அப்பா இறந்த போது தன் சொந்தங்கள் எல்லோரும்
அழுததற்கான காரணம் புரியவில்லை.... அந்த காரணத்தை உணர்வதற்கான பக்குவத்தை அடைந்த
நாள் முதலாக, அந்த அழுகாத நாளை பற்றிய அழுகையை அவனால் தவிர்க்க முடிவதில்லை...
மேலும் அதன்பிறகு தமிழின் ஒரே ஆதரவான அம்மாவும் கூட தனக்கென வாழ்வை விரும்பி,
வேறொரு துணையை நாடிவிட்டார்.... அந்த குழந்தை பருவத்தில் தமிழுக்கான இரண்டு
அடையாளங்கள், “ஆக்சிடென்ட்’ல செத்தாருல்ல மோகன் ,அவரு பையன்தான்”, “வாத்தியார் கூட
ஓடிப்போனாள்ல லட்சுமி, அவ மகன்தான்” என்பதாக ஆகிவிட்டதை தமிழால் மறுக்க
முடிந்ததில்லை... அப்போது முதலாக தமிழை பொருத்தவரை “பெண்கள் எல்லோரும்
சுயநலவாதிகள், ஆண்கள் எல்லோரும் அப்பாவின் நகல்கள்”தான்...
கண்கள்
காற்றாடியை வெறித்து பார்த்திருக்க, சிந்தனைகள் சிதறியபடி படுத்திருக்கும் தமிழின்
அருகாமையில் அமர்ந்தான் அகிலன்...
தலையை
மெல்ல வருடினான், ஆனாலும் உணர்ச்சியற்ற மரம் போலவே இன்னும் படுத்திருக்கிறான்
தமிழ்.... விழியோரம் கசிந்த நீர்த்துளிகளை அகிலனின் விரல் துடைத்துவிட்டது....
“சாரி
தமிழ்... தப்பு என்னோடதுதான், நான் இதை மறந்திருக்கக்கூடாது” இன்னும் நெருக்கமாக
அமர்ந்து அவன் தலையை கோதிவிட்டான்.....
எச்சிலை
விழுங்கிய தமிழுக்கு பேச்சு வரவில்லை... இன்னும் அதிகமாக வழியத்தொடங்கிய கண்ணீர்
தாரைகளை துடைக்கும் பணியில் தீவிரமாக இயங்கின அவன் கைகள்...
“எங்கயாச்சும்
வெளில போகலாமா?” கன்னங்களில் கைவைத்து, தன்னை நோக்கி தமிழின் தலையை திருப்பி
வைத்தபடி கேட்டான் அகிலன்....
“இல்லடா.....
வேணாம்... என்கூட கொஞ்ச நேரம் இரு, அதுபோதும்...” என்றபடி மெள்ள நிமிர்ந்து
அகிலனின் தோள் மீது தலைவைத்து சாய்ந்து, விரல்களை விரல்களோடு பிணைத்தபடி அகிலனின்
அரவணைப்பில் தன்னை புகுத்திக்கொண்டான் தமிழ்....
அமுதா
உடன் மருத்துவமனை சென்ற விஷயம் பற்றியும், செயற்கை முறை கருத்தரித்தல் முடிவு
பற்றியும் தமிழிடம் சொல்வதற்கான சூழல் அது இல்லை என்பதை அகிலன் நன்கு அறிவான்....
அதனாலேயே கத்தரி வெயிலில் கம்பளியை போர்த்த விரும்பாதவனாக அந்த பேச்சை முழுமையாக
தவிர்த்துவிட்டான், எதிர்காலத்தில் இதனால் உண்டாகப்போகும் பூகம்பத்தின் அறிகுறியை
அறியாமல்!....
***************
“என்னம்மா
ஆளே சோர்ந்து போய் தெரியுற?... காலைல வாந்தி எடுத்தியாம், இப்ப எப்புடி இருக்கு?”
சுகந்தி சித்தி அமுதாவிடம் கேட்ட இந்த கேள்வியில், கரிசனத்தை தாண்டிய வேறொரு
எதிர்பார்ப்பும் அப்பட்டமாய் தெரிந்தது.....
“இப்போ
பரவால்ல ஆண்ட்டி, கொஞ்சம் டயர்டா இருக்கு... அவ்ளோதான்...” அமுதா அடுத்த கேள்வியை
எதிர்கொள்ள தயார் ஆனாள்....
“நாள்
எதுவும் தள்ளிப்போச்சாம்மா?” மெல்லிய குரலில் அமுதாவிற்கு மட்டும் கேட்கும்படி சுகந்தி
கேட்டாலும், அந்த “மெல்லிய குரலில்” ஒளிந்திருக்கும் ரகசியத்தை அறியும்பொருட்டு
அறைக்குள் நுழைந்தாள் இந்து....
“என்னக்கா?
என்னாச்சு?.... அத்தை என்னமோ ரகசியமல்லாம் பேசுறாங்க?...” படபடப்பாக தனக்கே உரிய
பாணியில் கேட்டபடி அமுதாவின் அருகில் அமர்ந்தாள் இந்து....
“நீ
பேசாம இருடி வாயாடி.....” என்று இந்துவை பார்த்து சொல்லிவிட்டு, அமுதாவை நோக்கி
திரும்பிய சுகந்தி சித்தி, “சொல்லும்மா.... தள்ளிப்போச்சா?” என்றாள் இன்னும் அதிக
ஆர்வத்துடன்....
“ஆமா
ஆண்ட்டி.... ஆனால், இன்னும் உறுதிப்படுத்தல.... அதுக்குத்தான் இன்னிக்கு
ஹாஸ்பிட்டல் போறோம்...” என்ற அமுதாவின் முகத்தில் வெட்கம் பரவி, உடலை
சிலிர்ப்பூட்டியது....
“இதுல
என்னம்மா உறுதிப்படுத்தனும்?.... எல்லாம் நல்ல சேதியாத்தான் இருக்கும்...”
என்றபடியே உணர்ச்சி மிகுந்தவளாக அமுதாவை கட்டி அணைத்தாள் அவள் சுகந்தி....
“அக்கா...
கை குடுங்க... நம்ம கூட்டணிக்கு புதுக்கட்சி வரப்போகுதா?.... இன்னிக்கு இந்த
ஸ்டேட்டஸ்’க்கு நூறு லைக்ஸ் அள்ளப்போகுது....” என்றபடியே அறையை விட்டு வெளியே
ஓடினாள் இந்து....
“இவளுக்கு
வேற வேலையே இல்ல....” சிரித்த சுகந்தி, அமுதாவை வாஞ்சையுடன் பார்த்துவிட்டு,
“ஹாஸ்பிட்டல் போயிட்டு, வர்ற வழில முருகன் கோவிலுக்கு போயிட்டு வாம்மா....”
என்றாள்... அதை ஆமோதிக்கும் வண்ணம் தலையை அசைத்துவிட்டு, தன் மகிழ்ச்சியை அறிவியல்
பூர்வமாக உறுதிப்படுத்துவதற்காக அகிலனுடன் மருத்துவமனை கிளம்பினாள் அமுதா....
“ஹாஸ்பிட்டல்
போய் ஒரு மணி நேரமாச்சு, என்னதான் இன்னும் பண்றாங்களோ?” ஏழாவது முறையாக வாசலை
நோக்கி எட்டிப்பார்த்த சுகந்தி சித்தி புலம்பியபடியே மீண்டும் வீட்டிற்குள்
நுழைந்தாள்....
“லூசா
அத்தை நீங்க?... நீங்கதானே வரும்போது கோவிலுக்கு போயிட்டு வரசொன்னிங்க, அங்கல்லாம்
போயிட்டு வரவேணாமா?” தொலைக்காட்சியின் நூறு சேனல்களிலும் உடன்பாடு எட்டப்படாததன்
விளைவாக அணைத்துவிட்டு அத்தையின் பதிலை நோக்கி கவனத்தை திருப்பினாள் இந்து....
“ஆமாம்டி,
நான்தான் லூசு.... கோவிலுக்கும் ஹாஸ்பிட்டலுக்கும் போறவங்க போன்ல ஒருவார்த்தை
சொன்னாத்தான் என்னவாம்?... நானும் கிட்டத்தட்ட அம்பது தடவை கால் பண்ணிருப்பேன்,
நாட் ரீச்சபில்’னே வருது.... என்ன சொன்னாங்கன்னு தெரியாம நான் பதர்றது உனக்கு
லூசுத்தனமாத்தான் தெரியும்....” சுகந்தி சித்தி இன்னும் பதற்றத்திற்கு இடையில்தான்
பேசிக்கொண்டிருக்கிறாள்..... “சரி விடுங்க அத்தை.... கொஞ்சம் அமைதியா இங்க வந்து
உக்காருங்க, எல்லாம் நல்லபடியா நடக்கும்... இன்னும் கொஞ்ச நேரத்துல
வந்திடுவாங்க...” எழுந்து சென்று அவள் அத்தையை கையோடு இழுத்து வந்து இருக்கையில்
அமரசெய்தாள்... ஒருவழியாக “சீட்” கிடைக்காத தமிழக காங்கிரஸ் தலைவர்களை போல கொஞ்சம்
ஆசுவாசமாக அமர்ந்தாள் சுகந்தி...
சில
நிமிடங்களில் வாசலில் மகிழுந்து நிற்கும் சத்தம் கேட்க, அந்த நிமிடம் சுகந்தி
சித்தியின் இடுப்பு வலி காணாமல் போனதை போன்று, துள்ளிக்குதித்து வாசலை நோக்கி
ஓடியதை இந்து அதிசயமாகவே பார்த்தாள்....
அவரின்
பருமனான உடல்வாகில் நடையும் ஓட்டமுமாக வாசலை அடைவதற்குள் மூச்சு இறைத்ததை அகிலனும்
ஆச்சரியமாகத்தான் பார்த்தான்.... மருத்துவர் என்ன சொன்னார்? என்று அவள் கேட்கும்
முன்பே, அமுதாவின் நெற்றியில் காணப்பட்ட கோவில் குங்குமமும், புதிதாக பூத்திருந்த
அவளுடைய வெட்க சிரிப்பும் ஒருவாராக யூகத்திற்கு வழிவகுத்தது.... மேலும், அகிலன்
கையில் வைத்திருந்த “அடையார் ஆனந்த பவன்” ஸ்வீட் பாக்ஸ் சுகந்தி சித்தியின்
யூகத்தை இன்னும் அதிகமாக உறுதி செய்தது என்றுதான் சொல்ல வேண்டும்....
ஆனாலும்,
அந்த வார்த்தையை செவிவழியாக கேட்க சித்தி மெனக்கடுவதை பார்த்த அகிலன், “கன்பார்ம்
பண்ணிட்டாங்க சித்தி...” என்றான் சிரிப்போடு...
இருவரையும்
உள்ளே அழைத்து அமரசெய்த சித்தி, ஏற்கனவே தயார் செய்யப்பட்ட பால் பாயாசத்தை
குவளையில் ஊற்றி இருவரின் கைகளிலும் கொடுத்தாள்.... இல்லை இல்லை, திணித்தாள்...
“கை
குடுங்க மாமா.... உங்க கல்யாணம் வரைக்கும் நீங்க எல்லாமே ஸ்லோ தான், ஆனால்
இப்பவல்லாம் ஜெட் வேகம் தான் நீங்க....” அகிலனின் கையை பிடித்தபடி சிரித்தாள்
இந்து....
“உன்ன
காலேஜ் படிக்குறதுக்காக மாமாவும் அத்தையும் இங்க அனுப்புனா, நீ அதைத்தவிர
எல்லாமும் பண்றடி.... ஒழுங்கா போய் படிக்குற வேலைய பாரு...” தலையில் செல்லமாக
கொட்டினான் அகிலன்...
“நாலு
அரியர் வச்ச நீங்க எனக்கு படிக்குறத பத்தி சொல்றீங்களா?.... சுயேச்சை வேட்பாளரை
பார்த்து சிரிச்சானாம் காங்கிரஸ் வேட்பாளர், அந்த கதையால்ல இருக்கு இது....”
சொல்லிவிட்டு அதற்கடுத்த அகிலனின் துரத்தலை எதிர்பார்த்தபடி அறைக்குள் ஓடிவிட்டாள்
இந்து....
அதன்பிறகான
நான்கு மாதங்களும் அமுதா தன் தாய்மையை எண்ணி பூரித்தாள்... ஆனாலும் அவள்
மனதிற்குள் எப்போதும் ஒரு விஷயம் உறுத்திக்கொண்டே இருந்தது, அது அகிலனின்
“கண்டுகொள்ளாமை”தான்... அமுதாவை அங்கிருக்கும் அனைத்து கைகளும் அரவணைத்து
மகிழ்கையில், இரண்டு கைகள் மட்டும் அவளை பொருட்படுத்தாது விலகி நிற்பது அவளை
மெல்லிய சோகத்திற்குள் நுழைய வைத்தது... அவள் எதிர்பார்ப்பில் நியாயம் இல்லை
என்றாலும், எதிர்பார்ப்பதை மட்டும் தவிர்க்க முடியாமல் தவித்தாள்.... ஆம்,
“ஒப்பந்த கணவனிடம்” ஷரத்துகளை மீறிய கனிவுகளை எதிர்பார்ப்பது தர்க்கரீதியில்
நியாயம் இல்லைதானே?...
கடுமையான
வாந்தியின் விளைவால் சோர்வுற்று அவள் படுத்திருக்கும் நாட்களில் அகிலன், “இப்போ எப்டி இருக்கு அமுதா?” என்று
கேட்பான்... ஆனால், அந்த நலம் விசாரிப்பில் அமுதாவின் நலம் மட்டுமே பிரதானமாக
தெரிந்தது, கருவில் வளரும் அவன் பிள்ளையை இன்னும் அவன் கவனிக்கவே தொடங்கவில்லை...
“என்ன
அகிலா, அமுதா கற்பமா இருக்கா... அதுப்பத்தி உன் முகத்துல கொஞ்சம் கூட சந்தோஷத்தை
காணும்?” சித்தி நேரடியாகவே கேட்டுவிட்டாள் ஒருமுறை...
“என்ன
சித்தி பிரச்சினை உங்களுக்கெல்லாம்?... இந்த உலகத்துலேயே அவமட்டும்தான் கற்பமா
இருக்காளா?... அமுதாவே சாதாரணமாத்தான் இருக்கா, உங்களுக்கெல்லாம் ஏன் இவ்ளோ
பில்டப்” என்ற அகிலனின் பதிலை கேட்டு உதட்டளவில் சிரிப்பதை போல அமுதா
காட்டிக்கொண்டாலும், உள்ளங்கள் துயரத்தில் துவண்டதை யாராலும் புரிந்துகொள்ள
முடியவில்லை....
அகிலனின்
சொத்து பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக சட்ட ரீதியிலான வெற்றிகளை பெற்றிட, அமுதாவோ
தான் தனிமையாக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை உணர்ந்து உள்ளூற
வருந்தத்தொடங்கினாள்...
“இது
முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதானே? இதுக்கு ஏன் தேவையில்லாத வருத்தம்?” என்று
பகுத்தறிவு பாடம் சொன்னாலும்,
“மனிதன்
பிறக்கும்போதே இறப்பும் தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதான் என்பதால், இறப்பை எளிமையாக
நம்மால் அணுக முடியுமா?” என்று தத்துவார்த்தமான பதிலை சொன்னது அவள் மனம்....
“அகிலன்
மூலம் உன் நெடுநாள் கனவான பள்ளி நிறுவனராக போகிறாய்!... உன் எதிர்கால துணைக்காக
ஒரு பிள்ளையை பெறப்போகிறாய்!... பிறகென்ன எதிர்கால பயம் உனக்கு?” என்று அவளிடம்
இருக்கும் விஷயங்களை விஸ்தரித்து சொன்னது அறிவு....
“கோடி
பணமும், அளவில்லாத சொத்துகளும் நம் கையில் கொடுத்து, மனிதனே இல்லாத உலகத்தில்
வாழசொன்னால், அதை யார் ஏற்பார்கள்?... அதுபோலத்தான் உறவுகளின் அரவணைப்பும்,
அன்பும் இன்றி மீண்டும் தனிமையை நோக்கி என்னை தள்ளுவதும்” என்று மனம் மறுதலித்து
சொன்னது...
இது
காலம் கடந்த ஞானம்?.. இப்போது யோசித்து நிகழவிருக்கும் நிகழ்வுகளை மாற்ற
முடியாது... “அகிலனோடு வாழவேண்டும், அவன் உறவுகளோடு வாழவேண்டும், தன்னை போல
அல்லாமல் தன் குழந்தை சுற்றம் சூழ தன் வாழ்க்கையை தொடங்க வேண்டும்” போன்ற ஆசைகள்
அவள் மனங்களை நிறைத்தாலும் கூட, அவள் வாழ்க்கையில் ஆசை பட்டு நிறைவேறாமல் போன
எண்ணற்ற கனவுகளில் ஒன்றாகத்தான் இந்த ஆசையும் இருக்கப்போகிறது!...
இருவருக்கும்
இடையிலான “திருமண முறிவு” ஒப்பந்தத்தில் அவள் கையெழுத்து இட்டபோது, அவள் மனதின்
வலி வகைப்படுத்த முடியாத அளவில் உச்சத்தை எட்டியது....
“இன்னும்
ஆறு மாசத்துல உங்களுக்கு கோர்ட் டைவர்ஸ் கொடுத்திடும்” என்று குடும்பநல நீதிபதி
சொன்னபோது கூட, அந்த வழக்கு மன்றத்தில் அமர்ந்தே வாய் விட்டு அழவேண்டும் போல
இருந்தது அவளுக்கு... ஆனால், அழக்கூட உரிமைகள் மறுக்கப்பட்டவளாக, கண்களுக்குள்
நீரை அடக்கிக்கொண்டாள் அமுதா...
இப்படிப்பட்ட
திருமண முறிவு வழக்கு பற்றியல்லாம் இதுவரைக்கும் அந்த குடும்பத்தினர் எவருக்கும்
தெரியாது.... “பூரண திருமண முறிவை” எதிர்கொள்ளும் அந்த ஆறு மாதத்திற்கு பிறகான
நாளில், எல்லோரிடமும் சொல்லிக்கொள்ளலாம் என்பதாக இருவரும் பேசி முடிவெடுத்தனர்....
ஆனால், இங்கு பேசியதும், முடிவெடுத்ததும் என்னமோ அகிலன் மட்டும்தான், தலையை
அசைத்து இசைவு தெரிவித்தது மட்டும்தான் அமுதா...
நகரப்பேருந்தாக
மெதுவாக நடை போட்டது நாட்கள்.... ஐந்தாம் மாதத்திற்கான வழக்கமான மருத்துவ பரிசோதனை....
அமுதாவை மருத்துவரின் அறைக்குள் அனுப்பிவிட்டு, வழக்கம்போலவே வெளியே அமர்ந்து விகடனை
புரட்டிக்கொண்டிருந்தான் அகிலன்....
விஸ்தாரமான
ஹாலில் சுற்றிலும் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களில் சிரித்துக்கொண்டு காட்சி
அளித்தன பல வண்ண குழந்தைகள்... அருகில் அமர்ந்திருக்கும் பெண்னின் கைகளில்
வைத்திருந்த குழந்தை, விரல்களால் அகிலனை வருடியபோதும் கூட, விகடனின் சுவாரஸ்யம்
அவனை கவனம் சிதற வைக்கவில்லை...
சில
நிமிடங்களில் மருத்துவரின் அறையிலிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி பாதியாக
காட்சி அளித்த செவிலிப்பெண் ஒருத்தி, “மிஸ்டர் அகிலன், டாக்டர் உங்கள உள்ள
வரசொல்றாங்க” என்றபடி ஓட்டுக்குள் தலையை மறைத்துக்கொள்ளும் ஆமையை போல மீண்டும்
அறைக்குள் காணாமல் போய்விட்டாள்...
“ம்ச்ச்...”
என்று எரிச்சலை வெளிப்படுத்தியபடி அறைக்குள் நுழைந்தான் அகிலன்....
குளிரூட்டப்பட்ட அறையின் குளிர்காற்று அவன் உடலை சிலிர்ப்படைய செய்தது...
அறைக்குள் ஓரமாக போடப்பட்டிருந்த ஒரு மெத்தையில் படுத்திருக்கும் அமுதாவின்
வயிற்றுப்பகுதி மட்டும் வெளியே தெரிய, கையில் ஒரு சிறு பிளாஸ்டிக் உருளையை
உருட்டிக்கொண்டு அமர்ந்திருந்த அந்த மருத்துவர் அகிலனை பார்த்ததும், அருகில்
வருமாறு சமிக்ஞை செய்தாள்...
“என்ன
சார், எப்பவுமே செக்கப் வரும்போது இதுல எதுவும் உங்களுக்கும் சம்மந்தம் இல்லாத
மாதிரி வெளியேயே இருந்திடுறீங்களே, இதுல உங்களுக்கும் நிறைய பங்கு இருக்கு சார்”
என்று மருத்துவர் சொல்லும்போது அது வார்த்தைகளை தாண்டிய ஒரு கண்டிப்பாகவே
வெளிப்பட்டது....
அகிலன்
அதற்கு சிரித்தே மழுப்பினான்.... “உங்க குழந்தைய பாருங்க, என்ன பண்றார்’னு” என்று
சொன்னபடியே கையில் வைத்திருந்த உருளையை முன்னும் பின்னும் நகர்த்த, கணினி திரையில்
கருவாக காட்சி அளித்தது அவன் குழந்தை... சட்டென ஒரு மின்னல் பாய்ந்ததை போல ஒரு
உணர்வு அவனுக்குள்... ஆம், அது அகிலனின் குழந்தை... அது அவனின் உயிர்.... இந்த
ஞானோதயத்தை அவன் குழந்தையை பார்க்கும்வரை எவராலும் அவனுள் உணர்த்தமுடியவில்லை...
“இப்போதான்
உறுப்புகள் டெவலப் ஆகிட்டு இருக்கு.... இப்போதிருந்தே இந்த குழந்தைக்கு அப்பாவோட
அரவணைப்பும் தேவை சார்... நீங்க பேசுறதை, தொடுறதை எல்லாம் இப்பவே குழந்தை
புரிஞ்சுக்க தொடங்கிடும்... உங்களுக்கும் உங்க மனைவிக்கும் எதுவும் பிரச்சினை
இருக்கான்னு தெரியல, ஆனால் எந்த பிரச்சினைலையும் அந்த குழந்தை பாதிக்கப்படாம
பார்த்துக்கோங்க...” என்று மருத்துவர் வரிசையாக அடுக்கிக்கொண்டே சென்ற எந்த
தகவலையும் அவன் காதில் வாங்கவில்லை, அவன் நினைவுகள் எல்லாம் கணினி திரையில்
வளர்ந்துகொண்டிருக்கும் தன் குழந்தையின் படத்தில் குவிந்து கிடந்தது....
“உங்க
வேலைகளை கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு, அமுதா கூடவும், உங்க குழந்தை கூடவும் அதிக
நேரத்தை ஸ்பென்ட் பண்ணுங்க அகிலன்...” கடைசியாக அந்த அறையை விட்டு செல்லும்போதும்
அகிலனை விடாமல் துரத்தியது அந்த கண்டிப்பான வார்த்தைகள்...
மருத்துவமனையிலிருந்து
வழக்கம் போலவே அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்றனர் இருவரும்... முன்பெல்லாம்
காதில் மாட்டப்பட்டிருக்கும் ஹெட்செட்டில் “அந்த டீலை முடிச்சிடுங்க... புது
ப்ராஜக்ட் வரும்போது பார்த்துக்கலாம்” என்று கோவிலின் வாசல்வரை வியாபாரம் பேசும்
அகிலன், இப்போதோ பலமுறை அடித்தும் ஓய்வில்லாமல் ஒலித்துக்கொண்டிருந்த அலைபேசியை ஒரு
பொருட்டாகவே மதிக்கவில்லை... ஏதோ நிகழ்வுகள் மறந்து, நினைவுகள் ஆக்கிரமித்தவனாக
வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த அகிலனை அமுதா ஆச்சரியம் விலகாமல்தான்
பார்த்துக்கொண்டிருந்தாள்....
கோவில்
வழக்கத்தைவிட அமைதியாகவே காணப்பட்டது.... வழக்கமான வழிபாடுகள் முடிந்து, வழக்கத்திற்கு
மாறாக ஓர் மரத்தினடியில் அமர்ந்தார்கள் இருவரும்...
“என்னாச்சு
அகி உனக்கு?... கோவிலுக்கு வந்தா உக்காந்துட்டு போகனும்னு நான் சொன்னாலும்,
எப்பவும் பறந்துட்டு இருப்ப... இப்போ, நீயாவே உட்காருற....” என்ற அமுதாவின்
கேள்வியை அவன் கவனிக்கவில்லை...
சில நிமிடத்தில்
அகிலனாகவே தொடர்ந்தான், “குழந்தை இருக்குறத உன்னால பீல் பண்ண முடியுதா அமுதா?”
அவள் வயிற்றை கவனித்தபடியே கேட்டான்....
“ஹ்ம்ம்...
அப்பப்போ உதையும், ஹார்ட் பீட்’லாம் கூட ஹாஸ்பிட்டல்ல கேட்டேன்... நல்ல ஹெல்த்தியா
இருக்குதாம்.... அத்தை கவனிக்குற கவனிப்புல அவங்க சைஸ்’லையே குழந்தை
பிறக்கப்போகுது பாரு...” சிரித்தாள்....
“என்ன
குழந்தையாம்?” ஆர்வம் மேலோங்க கேட்டான்....
“அதல்லாம்
சொல்ல மாட்டாங்கப்பா... ஆனால், எனக்கு ரொம்ப பிடிச்சது ஆண் குழந்தைதான்... நான்
உலகத்தில் ரொம்ப நம்பப்போற இரண்டாவது ஆண் அவனாத்தான் இருப்பான்....” வயிற்று
பகுதியை கையால் தழுவியவாறு பதில் சொன்னாள் அமுதா....
“எனக்கு
பெண் குழந்தைதான் பிடிக்கும் அமுதா... பெண் குழந்தைகள்தான் எமோஷனல்
அட்டாச்மென்ட்’ஓட இருப்பாங்க... அவளை நல்லா படிக்க வைக்கணும், துணிச்சலான பொண்ணா
வளர்க்கணும், அவளுக்கு நிறைய செலவு பண்ணனும்...” அகிலன் சொல்லிக்கொண்டே இருக்க,
மெல்ல எழுந்த அமுதா, “நம்ம அக்ரிமென்ட் முடியப்போற ஆறு மாசத்துக்குள்ள எல்லாம்
பண்ணிடுவியா அகி?.... எனக்கு டெலிவரி டேட் சொல்லிருக்குற அதே நாள்தான், நமக்கான
விவாகரத்தும் முடிவுக்கு வருது” என்றபோது அவள் முகத்தில் பொய் சிரிப்பு
தென்பட்டது....
அகிலன்
அப்போதுதான் சுயநினைவுக்கு வந்தான்.... “அடச்ச!.. எவ்வளவு கற்பனைகள்?...
நடக்காதுன்னு தெரிஞ்சும், இப்படிப்பட்ட கற்பனைகள் அபத்தமானதுன்னு இந்த மனசுக்கு
புரியல பாரு...” தன்னை நொந்தபடியே மகிழுந்தில் ஏறி வீட்டை அடைந்தனர்....
நாட்கள்
செல்ல செல்ல அகிலன் குழப்பத்தில் தன்னை ஆழ்த்திக்கொண்டான்... அவனுடைய லாஜிக்கல்
எண்ணங்களை பொருத்தவரை அவை முட்டாள்த்தனமான, அவசியமற்ற குழப்பம்தான் என்றாலும்,
“மருத்துவமனையில் பார்த்த குழந்தையின் படம், அது உதைப்பதாக அமுதா அவ்வப்போது
சொல்லும்போது அவள் முகத்தில் தென்பட்ட பரவச சிரிப்பும், அடுத்த முறை மருத்துவமனை
சென்றபோது ஒரு கருவி மூலம் அவன் கேட்ட கருவின் இதயத்துடிப்பும்” கல்
நெஞ்சங்களையும் கரையவைத்திடும் அம்சங்கள் என்பதால், அது அகிலனின் தசைகளாலான
இதயத்தை கொஞ்சம் அதிகமாகவே இளகவைத்தது...
ஆனாலும்
“நான் ஒரு கே... பெண்ணுடன் வாழ்றதெல்லாம் சரியா வராது... தமிழோட கனடா’ல
வாழ்றதுதான் சரியானது.... தேவையில்லாத எமோஷனல் விஷயங்களை மனசுக்குள் போட்டு உன்னை
குழப்பிக்காத” என்று நினைத்தபடியே தமிழுடனான கனடா செல்லும் பணியிலும் தீவிரமாக
இருந்தான்...
***************
“எந்த
அளவுக்கு போயிட்டு இருக்கு அகி டைவர்ஸ் விவகாரம்?” தமிழின் வார்த்தைகளில் கொஞ்சம்
பயமும் கலந்தே வெளிப்பட்டது...
“ஒன்னும்
ப்ராப்ளம் இல்லப்பா... இன்னும் ரெண்டு மாசத்துல சொத்து பிரச்சினை சால்வ் ஆகிடும்,
மூணு மாசத்துல டைவர்ஸ் கிடைச்சிடும், நாலே மாசத்துல நாம கனடால இருக்குறோம், அஞ்சே
மாசத்துல அங்க கல்யாணம் பண்ணிக்கறோம்.... ஆறே...” என்று அகிலன் தொடர்வதை
இடைநிறுத்திய தமிழ், “ஓகே ஓகே.... போதும்.... விட்டா இன்னும் பத்தே மாசத்துல
குழந்தையும் நமக்கு பிறந்திடும்னு சொல்லுவ போல!” தலையில் செல்லமாக கொட்டி
சிரித்தபடியே சொன்னான் தமிழ்....
“அதுக்கு
ஏன் பத்து மாசம் பொறுக்கணும்?... இன்னும் மூனே மாசத்துல பிறந்திடுமே தமிழ்” என்று
சொல்லும்போதே, சட்டென நாக்கை கடித்தபடி வாக்கியத்தை நிறுத்திவிட்டான் அகிலன்...
உளறிவிட்டான்!...
சில மாதங்களாகவே தமிழை வீட்டுக்கு வரவிடாமல் தவிர்த்து, மெதுவாக ஒருநாள்
இதைப்பற்றி பேசலாம்! என்று நினைத்து “இலவுகாத்த கிளி”யாக பாதுகாத்த ரகசியத்தை
கசியவிட்டுவிட்டான்.... அகிலன் பேசியதன் அர்த்தம் புரியாமல், “என்ன சொல்ற?... மூணு
மாசத்துலையா?” என்றான் தமிழ்...
சுனாமிக்கான
எச்சரிக்கை தமிழின் கேள்வியில் தென்பட்டது.... சில நொடிகள் அகிலனின் அமைதியை கண்ட
தமிழ், “என்ன விஷயம் அகி?... நீ ஒரு நாலஞ்சு மாசமாவே ஏதோ விஷயத்தை என்கிட்டருந்து மறைக்குற....
என்ன விஷயம்?” அலைகள் சீற்றத்தை வெளிப்படுத்தின....
இதற்கு
மேலும், இதை ரகசியமாகவே வைத்திடுவது மென்மேலும் அதிக பாதிப்பையே உண்டாக்கும்
என்பதை உணர்ந்த அகிலன், தத்தி தடுமாறி அமுதாவின் கர்ப்பம் பற்றி சொன்னான்...
சில
நிமிடங்கள் தமிழின் பேச்சு நிசப்த மொழிக்கு மாறியது.... தலையை தரை நோக்கி
குனிந்தபடியே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான்...
அந்த
அமைதியான சூழல் அகிலனை இன்னும் அதிக கலவரப்படுத்தியது... “புயலுக்கு முன் அமைதி”
என்பதை அறியாதவன் இல்லை அகிலன்... அதனால், புயலை எதிர்கொள்ள தன் நினைவிற்கு
அப்பாற்பட்ட அத்தனை கடவுள்களையும் ஒருசேர வணங்கிக்கொண்டான்...
நிசப்தம்
கலைத்த தமிழின் பேச்சு பதமாகவே வெளிப்பட்டது... “அகி, உனக்கு அமுதாவோட வாழற
வாழ்க்கைதான் பிடிச்சிருக்குன்னா இப்பவே சொல்லிடு... இன்னும் என்னை அதிகம்
எதிர்பார்க்க வச்சு ஏமாத்திடாத....”
“லூசா
தமிழ் நீ?... உன் மேல எவ்ளோ பாசம் வச்சிருக்கேன்னு உனக்கு தெரியாதா?”
“அதே
அளவு பாசத்தை அமுதா மேலையும் வச்சிருக்கியோன்னுதான் எனக்கு பயமா இருக்கு?”
“அப்டின்னா
என்னை நீ நம்பலையா?”
“ரொம்ப
அதிகமா நம்பினது தப்போன்னு நினைக்குறேன்.... முதல்ல கல்யாணம் பற்றி நீ
சொன்னப்பவும் என்னோட முழு எதிர்ப்பையும் காட்டினேன்.... நீ என்னை சமாளிச்சு உன்
காரியத்தை சாதிச்சுகிட்ட... இப்போ, குழந்தை... இதுக்கு மேல உன் வாழ்க்கைல எனக்கான
இடம் எங்க இருக்குன்னு தெரியல....” தமிழின் வார்த்தைகளில் இயலாமை மட்டுமே
வெளிப்பட்டது...
“நீ
நினைக்குற மாதிரி இல்ல தமிழ்... இந்த உலகத்துல உனக்கு அப்புறம் தான் வேற யாருமே
எனக்கு... என் கஷ்டத்துல கைகொடுத்த அமுதாவோட ஆசைக்காகத்தான் அந்த குழந்தை கூட...
அதையும் உன்கிட்ட நான் மறைக்கவல்லாம் நினைக்கல, சொல்றதுக்கான சந்தர்ப்பம் அமையல...
அவ்ளோதான்..” தமிழின் வெகு அருகாமையில் அமர்ந்து பேசினான் அகிலன்...
“எப்டி
அகி இவ்ளோ பெரிய விஷயத்தை ரொம்ப சாதாரணமா சமாளிக்க முடியுது உன்னால?... இப்பவும்
என்னோட முட்டாள் மனசுக்கு உன்னை வெறுக்க முடியல... பயமா இருக்கு....” தலையில்
கைவைத்தபடி மீண்டும் தரையை நோக்கி குனிந்துகொண்டான்....
அதற்கு
பிறகு பல “சாரி”க்களும், “நீ என் உயிர்டா...” வசனங்களும் தமிழுக்கான
சமாதானத்திற்கு தேவைப்பட்டது....
*****************
அகிலனின்
வீடு ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் களைகட்டி காணப்பட்டது...
“இந்து,
பூஜை அறைல விளக்கலாம் எடுத்து வைம்மா.... அத்தாச்சி, குமார் மாமாவுக்கு காபி
கொண்டுவர சொல்லுங்க... நவீனு, வர்றவங்கள எல்லாம் உக்கார சொல்லி காபி கொடுப்பா...”
சுகந்தி சித்திக்கு இறக்கைதான் இல்லையே தவிர, பறந்துகொண்டுதான் வேலை
பார்த்தாள்....
வாசலில்
மாவிலை தோரணம், ஹாலில் சுற்றமும் நட்பும் சூழ்ந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள்,
சமையலறைக்குள் சகல விதமான உணவின் மணமும் வாசலில் செல்வோரையும் “என்ன விஷேஷமாம்?”
என்று கேட்க வைத்தது... வழக்கத்தைவிட அமுதா கதாநாயகியாக சித்தரிக்கப்பட்டு முகம்
முழுக்க புன்னகையோடு காட்சி அளித்தாள்....
“என்ன
அகி இதல்லாம்....” தமிழ் வீட்டிற்குள் நுழைந்ததும் தான் அகிலனிடம் இதுபற்றி
கேட்டான்....
“இன்னிக்கு
அமுதாவுக்கு வளைகாப்புடா.... சித்தியோட ஸ்ட்ரிக்ட்டான ஆர்டர் இது.... இன்னும் ஒரு
மாசத்துல தனியா போகப்போற அவளுக்கு கடைசியா என் சொந்தங்கள் கொடுக்கும் சென்ட்
ஆப்’னும் சொல்லலாம்...” தமிழ் மீண்டும் குழப்பத்துடன் கேள்வி கேட்டிடாத அளவிற்கான
பதிலை சொன்னான் அகிலன்...
“அகி,
நல்ல நேரம் முடியப்போகுது.... நீயும் போய் கிளம்பிட்டு வா...” சித்தியின்
கட்டளை...
“ஆமா
மாமா.... உங்களுக்கும் இதுல நிறைய பங்கு இருக்குல்ல, அதனால நீங்களும் கூட
நிக்கணும்...” இந்து சூழ்நிலை தெரியாமல் வம்பிழுக்க, ஊரிலிருந்து வந்த தாத்தா தன்
பெரிய தொந்தி வைப்ரேட் ஆகும் அளவிற்கு சிரித்தார்...
முகம்
நிறைந்த மகிழ்ச்சியோடு கன்னங்களில் பூசப்பட்ட சந்தனம் இன்னும் அதிக அழகாக
காட்டியது அமுதாவை... கைகளின் வளையல்கள் அவள் நடைக்கு ஏற்ப இன்னிசை பாடியது...
கையை விரித்தாலும் அளக்க முடியாத அளவிலான வாழை இலையில், பதினொரு வகை சாதங்களுக்கு
ஈடு கொடுக்கும் வகையில் பலவிதமான உணவு பதார்த்தங்கள்.... அதை பார்த்ததுமே
அமுதாவின் பசி தீர்ந்து போனாதான உணர்வு அவளுக்குள்...
“நெறைய
சாப்பிடும்மா... கறி வைக்கவா?” சொந்தங்கள் சூழ்ந்து நின்று ஒரு “கட்டாய உணவு
திணிப்பு” சட்டத்தை அமல்படுத்துக்கொண்டிருந்தனர்...
அகிலன்
எல்லாவற்றையும் ரசித்தான்... தமிழை ஒருவழியாக வழி அனுப்பி வைத்தபிறகு நேரடியாகவே
ரசித்தான் அவற்றையெல்லாம்... இன்னும் ஒரு மாதத்தில் பிறக்க இருக்கும் குழந்தையை
பற்றிய மகிழ்வை முந்திக்கொண்டு நின்றது, அதே நாளில் பிரிக்கப்போகும் விவாகரத்து
வழக்கின் வருத்தம்...
அகிலன்
தமிழுடன் வாழ்வதையே விரும்பினான் என்றாலும் கூட, ஏதோ ஒரு உள்ளுணர்வு அவனை
அமுதாவிடமிருந்து பிரிவதை கொஞ்சம் வருத்தமுற செய்தது... ஒரு வருடமாக மனைவியாக
வாழ்ந்த ஒருத்தியை, தன்னலம் ஒன்றை மட்டுமே கருதி ஒரு குழந்தையோடு தனியே அனுப்ப
இருக்கின்ற குற்ற உணர்ச்சியால் கூட அந்த உணர்வு மேலிட்டிருக்கலாம்....
அன்றைய
இரவு... தன் வேடம் கலைத்து படுக்கையில் படுக்கப்போன அமுதாவை தன்னருகில் அழைத்தான்
அகிலன்...
தன்
முன்நெற்றியில் வழிந்த முடிகளை விலக்கியபடி அகிலனின் அருகில் அமர்ந்தாள்...
‘என்ன?’ என்பதை போல தலையை அசைத்து கேட்டாள்....
“இன்னிக்கு
சந்தோஷமா இருந்தியா?”
“ஹ்ம்ம்...
இப்போவரை சந்தோஷமாத்தான் இருக்கேன்.... ஏன்?”
“இப்போ
கல்யாணம் பற்றியும், ஆண்களை பற்றியும் உன்னோட எண்ணம் மாறிடுச்சு தானே?... அப்போ
ஏன் நம்ம டைவர்ஸ்’க்கு அப்புறம் நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கக்கூடாது?”
தடுமாறியபடி கேட்டான் அகிலன்....
“ஹ
ஹா... அகி, உன் ஒருத்தனை வச்சு ஒட்டுமொத்த ஆண்களையும் மதிப்பீடு செய்ய நான்
விரும்பல... உன் குடும்பத்து உறவுகளை மட்டும் வச்சு திருமண பந்தம் பற்றியான என்
முழு எண்ணத்தையும் மாற்றிட முடியாது... இப்போதைக்கு ஆண்கள்ல நல்லவங்களும்
இருக்காங்கன்னும், திருமண உறவு சந்தோஷமா கூட இருக்கும்னும் ஓரளவு என் மனசு
நம்புது.... இந்த நம்பிக்கையோட நான் தனியா என் குழந்தையோட வாழ்ந்திடுறேன்....
இன்னொரு புது திருமணம் செஞ்சு, அதனால சிக்கல் ஏற்பட்டு நான் பட்ட கஷ்டத்தை என்
பிள்ளையும் படவேணாம் அகி.... ஆனால், என்னைப்பத்தி ஒரு வருஷத்துக்கு அப்புறமாச்சும்
இப்டி ஒரு அக்கறை உனக்கு தோனுனது எனக்கு சந்தோஷமாத்தான் இருக்குப்பா...” அமுதா
எப்போதும் போல இப்போதும் மனதில் பட்டதை பட்டென உடைத்துவிட்டாள்.... அகிலனுக்கோ
தர்மசங்கடமான நிலையில் தான் தள்ளப்பட்டதாக ஒரு உணர்வு மேலிட்டது....
இறுக்கம்
களைந்த அகிலன், முகத்தில் மலர்ந்த புன்னகையோடு, “உனக்கு ஒரு சந்தோஷமான செய்தி
சொல்லட்டுமா?” என்றபோது, அமுதாவின் கண்கள் எதிர்பார்ப்பில் ஏங்கிக்கிடந்தது...
“உன்
எதிர்கால வாழ்க்கை பற்றிய சந்தோசம் அமுதா அது?” என்ற அகிலனின் புதிர்களில்
ஒளிந்திருக்கும் உண்மைகளை யோசிக்க இயலாமல் தவித்தாள், அது ஒரு மகிழ்ச்சி கலந்த
தவிப்பும் கூட...
“சொத்து
பிரச்சினைகள் முடிஞ்ச அடுத்த நாள், உன் பேர்ல சிட்டில மையமான இடத்துல ஸ்கூல்
கட்டுறதுக்கான இடம் ரெஜிஸ்டர் செய்யப்படும், ஸ்கூல் கட்ட தேவையான மொத்த பணத்தையும்
ஒரே பேமண்ட்’ல கொடுக்கப்போறேன்...” அகிலன் ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே
பெருமிதத்தில் மகிழ, மறுபக்கம் அமுதாவின் முகத்தில் கயிறு அறுந்து விழுந்த பட்டம்
போல திக்கற்று உணர்வுகள் பறந்தது.... அதில் கொஞ்சமும் மகிழ்ச்சி இல்லை, அவள்
எதிர்பார்ப்புகளுக்கு தொடர்பே இல்லாத முரண்களை அல்லவா அவன் சொல்கிறான்....
ஆனாலும்,
தன் ஏமாற்றத்தை வெளிக்காட்டிக்கொள்ளாத அமுதா, “பரவால்ல...” என்ற ஒற்றை
வார்த்தையோடு அங்கிருந்து விலகிவிட்டாள்...
அகிலன்
இவ்வாறு யோசித்துக்கொண்டிருக்கையில், ஒருவாறாக படுக்க ஆயத்தமான அமுதா, “அகி,
இன்னொரு விஷயம் உன்கிட்ட சொல்லணும்... ஒருவேளை தமிழ்’னு ஒருத்தன் உன் வாழ்க்கையில்
இல்லாம இருந்திருந்தா நம்ம டைவர்ஸ்’க்கு கூட நான் ஒத்திருக்க மாட்டேன்.... அந்த
அளவுக்கு உன்னோட நான் வாழற இந்த நாட்கள் சந்தோஷமாத்தான் இருக்கு... அதனால, என்னை
நினச்சு நீ வருத்தப்படாத....” சொல்லிவிட்டு போர்வையை எடுத்து தன் முழு
அங்கங்களையும் மூடினாள்.... மூடப்பட்ட போர்வைக்குள் அதற்கு பிறகான தன் மொத்த
உணர்வுகளையும் மறைக்க முனைந்தாள்....
அகிலனுக்கும்
இப்போதுதான் அமுதாவின் ஆசைகள் புரிந்தது... அவளை குற்றம் சொல்ல அவன் மனம்
விரும்பவில்லை, இதைப்பற்றிய வீண் விவாதங்களையும் கூட அகிலன் விரும்பவில்லை...
“மனைவி,
குழந்தை, குடும்பம், திருமணம்” போன்ற சம்பிரதாய உணர்வுகளை, தமிழுடனான காதலோடு
இணைத்துப்பார்க்கவே அகிலனால் முடியவில்லை.... காதல் மற்ற எல்லாவற்றையும்
பின்னோக்கி தள்ளிவிட்டு, சிறுத்தை பாய்ச்சலில் முன்னோக்கி ஓடிக்கொண்டிருந்தது....
**************
நகரின்
பிரபல மகப்பேறு மருத்துவமனை.... அகிலனின் சொந்தங்கள் யாவும் ஒரு அறுவை சிகிச்சை
அரங்கின் வாசலை சூழ்ந்தபடி நின்றனர்....
“இங்க
யாரும் கூட்டம் போடாதிங்க, டாக்டர் பார்த்தா திட்டுவாங்க.... எல்லாரும் ரிசப்ஷன்’ல
போய் உட்காருங்க...” அழகான செவிலிப்பெண் ஒருத்தி அதட்டும் தொனியில் பேசிவிட்டு
அந்த அரங்கிற்குள் நுழைந்தாள்...
களைந்த
கூட்டம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இரைந்து அமர்ந்தனர்...
“ஏன்
நார்மல் டெலிவரி ஆகலையாம்?” உறவுக்கார பெண்ணொருத்தி சுகந்தி சித்தியிடம்
கேட்டாள்...
“கொடி
சுத்திருக்காம்... ஆபரேஷன் தான் பண்ணனும்னு சொல்லிட்டாங்க...” கவலையாக சொன்னாள்
சுகந்தி அத்தை...
“எல்லாம்
பணத்துக்காகவாத்தான் இருக்கும்... நாம நம்புறோம்னா கொடி மட்டுமில்ல, நம்ம காதுல
பூவையும் சேர்த்து சுத்துவாங்க” அர்த்தமில்லாத பதிலை சொல்லி அவள் சிரிக்க, சுகந்தி
சித்தியால் சிரிக்க முடியாமல் அங்கிருந்து எழுந்து சென்று மீண்டும் அறுவை சிகிச்சை
அரங்கின் வாசலை எட்டிப்பார்த்தாள்...
ரிசப்ஷனில்
அமர்ந்திருக்கும் அகிலன் முகத்தில் அர்த்தமில்லாத ‘ஒரு அப்பா’வின் பதற்றம்
படர்ந்திருந்தது... பதற்றம் தணித்து தன்னை இயல்பாக காட்டிக்கொள்ள கால்களை
ஆட்டியபடி நகத்தை கடித்துக்கொண்டிருந்தான்....
“க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” சட்டைப்பையில் கிடந்த அலைபேசி வைப்ரேஷனில் கதற, அது இதயத்துடிப்பை
இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியது... அலைபேசியின் திரையில் தமிழின் பெயர், அதன்
பங்கிற்கு இன்னும் அதிக கலவரத்தை உண்டாக்கியது...
“ஹலோ
அகி, சென்னை’ல தான் இருக்கேன்... எல்லா பார்மாலிட்டிஸ்’உம் முடிச்சாச்சு... விசா
வந்துடுச்சு, டிக்கெட் உடனே போட்டுடலாம்.... அமுதாவுக்கு செட்டில் பண்ண
வேண்டியதல்லாம் சீக்கிரம் செஞ்சிடு, கனடா கிளம்புறதுல எந்த குழப்பமும் இருக்கக்கூடாது...
புரியுதா?... ரெண்டு நாள்ல ஊருக்கு வந்ததும் உன்னை மீட் பண்றேன்...” தமிழ்
பரபரப்பாய் பேசினான்... கனேடிய மண்ணில் காலெடுத்து வைப்பது வரை அவனுடைய முழு
பரபரப்பும் நியாயமானதுதான்....
“சரி
தமிழ்.... செஞ்.... சிடலாம்” வாக்கியத்திற்கு இடையில் விழுங்கப்பட்ட எச்சிலில்
உடைந்த வார்த்தைக்குள் தென்பட்ட அகிலனின் பதற்றத்தை தமிழலால் எளிதாக ஊகிக்க
முடிந்தது...
“என்ன
அகி ஒரு மாதிரி பேசுற?... என்னாச்சு?... எங்க இருக்க இப்போ?” தொடர்ந்த
கேள்விகளுக்கு இடையில், நடந்தேறி இருக்கக்கூடிய நிகழ்வுகளை ஒருவாறாக
கணித்துவிட்டான் தமிழ்...
“அமுதாவுக்கு
பிரசவ வலி... ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்கோம்... சிசேரியன் பண்றதுக்காக
தியேட்டர்’குள்ள கூட்டிட்டு போயிருக்காங்க...” சொல்லும்போது அகிலனின் உதடுகள்
துடித்ததற்கான காரணம் அவனுக்கே புரியவில்லை...
“சரி
அகி... பார்த்துக்கோ” என்ற தமிழின் பதிலில், அமுதாவின் மீதான அக்கறையை விட,
அகிலனுடனான தன் எதிர்கால வாழ்க்கை பற்றிய பயம்தான் அதிகமாக தெரிந்தது....
அழைப்பு
துண்டிக்கப்பட்டது....
****************
“அப்புடியே
நம்ம அகிலனை உரிச்சு வச்சிருக்கான் பாருங்க....” குழந்தையை பார்க்க வந்த உறவுக்கார
பெண்ணிடம் சுகந்தி சித்திதான் சொல்லிக்கொண்டிருந்தாள்...
“ஆண்
குழந்தைதான்.... ரெண்டே முக்கால் கிலோ, ஆரோக்கியமா இருக்கான்... பிறந்தப்போ நல்லா
அழுதான்....” வந்துகொண்டிருந்த உறவுக்காரர்களிடம் வரிசை பிசகாமல்
சொல்லிக்கொண்டிருந்தார் சித்தப்பா....
கட்டிலில்
அமுதா படுத்திருக்க, குழந்தை அவள் அருகில் கைகளையும் கால்களையும் அசைத்தபடி
படுத்திருந்தது.... ரோஜா இதழை பாலில் நனைத்தது போன்ற ஒரு ‘பளிச்’ நிறம்... எல்லோரும்
சொன்னபடியே அகிலனின் மூக்கு, வாய், காது என்று அகிலனை அப்படியே உரித்து வைத்ததை
போலத்தான் படுத்திருக்கிறது குழந்தை...
வெகுநேரம்
அருகில் அமர்ந்தபடியே குழந்தையை ரசித்துக்கொண்டிருந்தான் அகிலன்.... தன் கையின்
ஆள்காட்டி விரலை குழந்தையின் கையில் வைக்க, அந்த விரல்களை வேகமாக பற்றிக்கொண்டது
அந்த குழந்தை...
“பரணி
நட்சத்திரத்துல பிறந்திருக்கான், தரணிய ஆள்வான் பாருங்க...” சாத்துக்குடியை
பிழிந்தபடி சித்தி சொன்னதை கேட்டு அமுதா சிரித்தாள்... அப்போதுதான் அவள்
விழித்திருக்கிறாள்... வயிற்றில் போடப்பட்டிருந்த தையல் கொடுக்கும் வலி, களைப்பு
எல்லாவற்றையும் தாண்டி அகிலனின் விரலை பிடித்திருக்கும் தன் மகனின் கைகளை
பார்த்ததும், அவள் முகத்தில் அளவில்லாத மகிழ்ச்சி....
“அப்டியே
புடிச்சுக்கோ குட்டி, அப்பாவ விட்டுடாத...” என்று நகைச்சுவையாக அமுதா சொன்னாலும்,
அதில் மறைந்து கிடந்த ஏக்கத்தை அகிலன் அறியாதவன் இல்லை....
“இப்போ
எப்டி இருக்கு?” அமுதாவிடம் கேட்டான் அகிலன்...
“ஹ்ம்ம்....
சந்தோஷமா இருக்கு....”
“அதை
நான் கேட்கல, வலி எப்டி இருக்கு?”
“வலியல்லாம்
இல்ல அகி... இந்த உலகத்துல நான் நம்பப்போற இரண்டாவது ஆண், அவனும் உன்ன மாதிரியே
இருக்கான் பார்த்தியா.... என்ன சொல்றான் உன் பையன்?”
“ஹ
ஹா.... அம்மா இப்போவல்லாம் நிறைய டபுள் மீனிங்’ல பேசுறாங்கன்னு சொல்றான்....”
“அவ்ளோ
தூரம் ரெண்டு பேரும் பேசிக்கிட்டிங்களாக்கும்... நாம ரெண்டு பேரும் என்னமோ காதல்
மொழி பேசப்போற மாதிரி சுகந்தி அத்தை வெளில போய்ட்டாங்க பார்த்தியா அகி?”
சிரித்தாள் அமுதா...
இருவரும்
இயல்பான பேச்சுகளில் மகிழ, இனிப்பான வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்
விதமாக கதவை திறந்து உள்ளே நுழைந்தாள் சுகந்தி சித்தி....
“வாப்பா.....
வந்து குழந்தைய பாரு...” என்று அந்த அறைக்குள் சித்தி தமிழை அழைத்து வருவாள்
என்பதை அகிலன் நினைத்துப்பார்க்கவில்லை....
அகிலனை
பார்த்ததைவிட, அவன் கைகளில் வைத்தபடி நின்ற கோப்புகளை பார்த்தபோது அமுதாவின் முகம்
சுடுமணலில் தவிக்கும் சிறு புழுவாக மாறியது...
உள்ளே
நுழைந்த தமிழ், சம்பிரதாய “எப்டி இருக்கீங்க அமுதா?” என்பதோடு நிறுத்திக்கொண்டு,
அருகில் படுத்தபடி நெளிந்த குழந்தையை அதே சம்பிரதாயமாக கன்னத்தில் வருடினான்...
“அப்டியே
நம்ம அகிலன் மாதிரி இருக்கான்ல?” என்று அகிலனின் சித்தி சொன்னபிறகுதான்
குழந்தையின் அங்கங்களை கூர்மையாக நோட்டமிட்டான் தமிழ்....
ஆம்...
ஒரு இடத்தில் அவன் இருந்தாலும், பல இடத்திலும் பார்வையை படரவிட்டு பறக்கும் அதே
விழிகள்... மூக்கு, வாய், தாடை என்று மேற்கொண்டு நகரும் அத்தனை உறுப்புகளுமே
அகிலனின் க்ளோனிங் போலவே தெரிந்தது...
திடீரென
குழந்தை “வீல்...” என அலறிட, சூழல் அறிந்து தமிழ் வெளியே செல்ல, அகிலனும் பின்னே
தொடர்ந்தான்... அந்த அறையின் வெளிப்புற கதவிலும் பல குழந்தைகளின் புகைப்படங்கள்,
ஆச்சரியமாக அத்தனை படங்களையும் தமிழின் கண்கள் படம் பிடித்தது....
“எல்லா
பேப்பர்சும் ஓகேதானே தமிழ்.... நாளைக்கு அமுதாகிட்ட டைவர்ஸ் பேப்பர்’லையும்
கையெழுத்து வாங்கிடலாம்...” என்று சொன்னபடியே தமிழின் கையிலிருந்த கோப்புகளுக்குள்
ஒவ்வொரு தாளாக புரட்டினான் அகிலன்...
“எல்லாம்.....
எல்லாம் ஓகேதான் அகி... எனக்கு லேசா தலை வலிக்குது.... நான் இப்ப கிளம்புறேன்,
உன்ன அப்புறம் பார்க்குறேன்....” என்றபடி அகிலனின் பதிலை கூட எதிர்பார்க்காதவனாக
பட்டென கிளம்பிவிட்டான்...
“ஏய்...
ஏய்...” என்று மருத்துவமனை நாகரிகம் கூட மறந்து கத்திவிட்ட அகிலனை, அடுத்த அறையில்
படுத்திருந்த ஒரு அறுபது வயது அம்மா கூட எழுந்து வந்து ஆச்சரியமாக பார்த்தும், தமிழ்
அதை காதில் வாங்காதவனாக மாடிப்படிகளில் மறைந்துவிட்டான்...
தமிழ்
மீது இன்னும் அதிக எரிச்சல்தான் வந்தது அகிலனுக்கு...
“என்ன
மனுஷன் அவன்.... அமுதா கிட்ட நான் பேசுறதை கூட அவனால தாங்கிக்க முடியலைன்னா,
அவனோட எப்டிதான் நிம்மதியா வாழ்றது?.. ஒரு
குழந்தையை கூட அவன் எதிரியாத்தான் பார்க்குறான் போல.... ச்ச...” தமிழ் மீதான
கோபங்கள் அவனை வறுத்தியது....
மதியம்
வரை, “அவனா கால் பண்ணாத்தான் நான் பேசுவேன்...” என்ற அகிலனின் கோபம் சூரியனை போலவே
உச்சத்தில் தான் இருந்தது.... மெல்ல சூரியன் நகர நகர, தமிழ் தன்னை அழைப்பான் என்கிற
நம்பிக்கை அகிலனுக்கு தளர்ந்தது....
அந்தி
வேலை முதல் அலைபேசியின் திரை உணர்வற்று போகும் அளவிற்கு தமிழின் எண்களை
தட்டிக்கொண்டே இருந்தும், அகிலனின் அறுபது அழைப்புகளையும் தமிழ் பொருட்டாகவே
மதிக்கவில்லை....
“ச்ச...
மனுஷனா அவன்...” என்று வாய்விட்டு முனகியபடியே அறுபத்தி ஓராவது முறை தமிழை
அழைக்கும்போதுதான், அமுதா அகிலனை ஆச்சரியமாக கவனித்தாள்...
“என்ன
அகி?... என்ன ப்ராப்ளம்?... காலைலேந்தே ஏன் ஒரு மாதிரி இருக்க?” அமுதா
கேட்டுவிட்டாள்....
“தமிழ்தான்
ப்ராப்ளம்.... காலைல வந்தவன் ஒன்னும் பேசாம போய்ட்டான்... கால் பண்ணா கூட அட்டன்ட்
பண்ண மாட்றான்... அவன் ஏன் இப்டியல்லாம் பண்றான்னு கூட புரியல அமுதா....” அந்த
நேரத்தில் அமுதா ஒருத்தியிடம் தான் தன் கவலையை வெளிப்படையாக அவனால்
சொல்லமுடியும்...
“அப்புறம்
ஏன் அகி போன் பண்ணிட்டே இருக்க?... நேரடியா போய் தமிழை பார்க்க உனக்கு எவ்ளோ நேரம்
ஆகப்போகுது?...”
“சித்தப்பா
கூட ஊர்ல இல்ல... சித்தி ஒரு ஆளை வச்சுட்டு, உன்ன தனியா விட்டுட்டு போறது நல்லா
இருக்காது அமுதா... அதனாலதான் போகல....”
“ஹ
ஹா.... எப்டியும் இன்னும் கொஞ்ச நாள்ல தனியா விட்டுட்டுதானே அகி போகப்போற?...
இப்போலேந்தே நான் பழகிக்கறேன்.... காலைல எழுந்ததும் முதல் வேலையா நீ தமிழை பார்க்க
போ... மத்ததை நேர்ல பேசிக்கோ....” அமுதா வழக்கம்போலவே தன் இயலாமையையும் பேச்சில்
குத்திக்காட்ட இப்போதும் மறக்கவில்லை...
அதற்கு
பதிலெதுவும் பேசி, மேலும் குழப்பத்தை உண்டாக்க விரும்பாத அகிலன், நேரடியாக
நித்திரை தேவனை தழுவ தயாரானான்....
மறுநாள்
காலை....
குளித்து
முடித்து, உடைகளை மாற்றிய அகிலனை அவன் கிளம்ப ஆயத்தமாகும்போதுதான் கவனித்தாள்
அமுதா....
“குட்
மார்னிங் அகி... கிளம்பியாச்சா?... ஆல் தி பெஸ்ட்....” வாழ்த்தை சொன்ன
உதடுகளுக்குள் மறைந்திருந்த வெளிப்படாத சோகத்தை அகிலன் கவனிக்கவில்லை...
“தாங்க்ஸ்
அமுதா...” என்றபடியே கதவை திறந்த அகிலன், கதவின் மறுபுறத்தில் நின்ற தமிழை
பார்த்ததும் திகைத்தபடி நின்றான்...
கதவை
மேலும் திறந்து, அகிலனை கொஞ்சம் விலக்கியபடி உள்ளே நுழைந்தான் தமிழ்....
“இப்போ
எப்டி இருக்கீங்க அமுதா?” என்ற தமிழின் நல விசாரிப்பு நேற்றைக்காட்டிலும் இன்று
ஒரு அக்கறை மிகுந்த வார்த்தையாக தோன்றியது அமுதாவிற்கு....
“ஹ்ம்ம்...
நல்லா இருக்கேன் தமிழ்...” அமுதா ஆச்சரியத்தோடுதான் பதில் சொன்னாள்....
“டிக்கெட்
போட்டாச்சு அகி...” என்று அகிலனை நோக்கி திரும்பியபடி சொன்னான் தமிழ்...
“ஓஹோ....
நல்லது... எப்போ போறோம் தமிழ்?”
“வர்ற
வெள்ளிக்கிழமை போறேன்...”
“என்ன?..
என்னது?... போறியா?... அப்டின்னா?” அகிலன் குழப்பம் மிகுந்த வார்த்தைகளில்
கேட்டான்....
“ஆமா....
போறேன்னா போறேன்னு தான் அர்த்தம்.... நான் மட்டும் போறேன், நீ வரலைன்னு அர்த்தம்....
இப்போ புரியுதா?” என்று தமிழ் சொல்லி முடிக்கும்போது சுற்றிலும் சுழன்ற அத்தனை
கண்களும், ஸ்தம்பித்து தமிழை நோக்கி ஆச்சரியத்தில் நின்றது....
“என்ன
உளறுர தமிழ்?... நீ ஏதோ கோபத்துல பேசுறன்னு நினைக்கிறேன்... எதுவா இருந்தாலும்
தெளிவா சொல்லு....”
“நான்
கோபத்திலையோ, அவசரப்பட்டோ இதை சொல்லல.... ஒருநாள் முழுக்க யோசிச்சேன், பல
கோணத்திலும் யோசிச்சுதான் இந்த முடிவை எடுத்திருக்கேன்... அந்த குழந்தை எவ்ளோ அழகா
இருக்கு பார்த்தியா?... நாளைக்கு நம்மளோட சுயநலத்துக்காக அந்த குழந்தை
தகப்பனில்லாத பையனா வளரனுமா?... இந்த உலகத்துல அது ரொம்ப கஷ்டம் அகி, அதை
அனுபவிச்சு பார்த்தாத்தான் புரியும்... அமுதாவோட உன் கல்யாணம், குழந்தை எல்லாமே
நம்மோட சுயநலத்துக்காக அவங்களை பலிகடா ஆக்குன மாதிரி இருக்கு.... இன்னும் எவ்வளவு
பாவமூட்டைகளை சுமந்து நாம சந்தோஷமா வாழமுடியும்? சொல்லு...” தமிழின் கண்களின் ஓரம்
நீர் கசிய, அதை உள்ளங்கையால் மறைத்தபடி வார்த்தைகளை நிறைத்தான்....
“ஐயோ
சாரி தமிழ்.... எல்லாம் என் தப்புதான்... கல்யாணம், குழந்தை எல்லாமே என்
தப்புதான்... வாழ்க்கை முழுசும் அவங்களுக்கு தேவையான எல்லாத்தையும் நாம
பண்ணலாம்... அமுதாவுக்கு தேவையான எல்லா உதவியையும் நாம பண்ணலாம்...” இழுத்தான்
அகிலன்....
“இப்போ
நீ செஞ்ச சரி, தவறுகளை ஆராய நேரமில்லை அகி....அதுக்கான நேரம் ரொம்பவே
கடந்திடுச்சு... அமுதாவுக்கும், அந்த குழந்தைக்கும் இனி தேவை பணமும், பொருளும்
இல்ல... உன்னோட குடும்பம், சொந்தம், சமூகத்து மரியாதை... இதல்லாம் உன் மனைவியா
இருக்குற வரைக்கும்தான் அவங்களுக்கு கிடைக்கும்.... அதனால, உங்க விவாகரத்து வழக்கை
வாபஸ் வாங்கிடு.... கனடா நான் மட்டும் போறேன், உன் குடும்ப வாழ்க்கையை இங்கயே நீ
தொடரு.... உன்ன கனடா கூட்டிட்டு போய் எல்லாருக்கும் நான் வில்லனா மாற
விரும்பல....”
இன்னும்
அகலாத குழப்பமும், குறையாத அதிர்ச்சியும் கலந்து நின்ற அகிலனிடம் மேலும்
நெருக்கமாக வந்து நின்ற தமிழ், “அதுக்காக நம்ம லவ்வும் அவ்ளோதான்னு நினைக்காத....
இன்னும் நாலு கல்யாணமும், நாற்பது பிள்ளைகளும் நீ பெற்றாலும் உன் மேல இருக்குற
காதல் எனக்கு குறையாது.... எந்த சம்பிரதாயமும், சடங்கும் நம்ம காதலை பிரிக்க
முடியாது.... வருஷத்துக்கு ஒருதடவை இங்க ஊருக்கு வருவேன், உன்னை பார்க்க
மட்டும்.... அந்த ஒரு பத்து நாளை மட்டும் எனக்காகவும், நம்ம காதலுக்காகவும் நீ
செலவு பண்ணினா போதும்... செய்வீல்ல அகி?” என்று அகிலனின் கைகளை அழுத்தமாக
பிடித்தான் தமிழ்....
ஆச்சரியமாக
அகிலனின் கண்களில் நீர் முட்டி வழிந்தது....
“கல்லுக்குள்
ஈரம் இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்.... என் காதலனோட கண்ணுக்குள்ளும் ஈரம்
இருந்ததை இப்போதான் பார்க்குறேன்...” என்று தமிழ் சிரிக்க, அகிலனும் கண்களை
துடைத்தபடி சிரிக்க முயன்றான்....
“உங்களுக்கு
சந்தோஷம்தானே அமுதா?” அமுதாவை நோக்கி திரும்பி கேட்டான் தமிழ்...
அவள்
கண்கள் கலக்கமுற்று, வழிந்த நீரின் ஈரத்தை கூட இன்னும் உணராதவளாக, “தாங்க்ஸ்
தமிழ்...” என்றாள் தழுதழுத்த குரலில்...
“நன்றியல்லாம்
சொல்லி உங்களோட கடமையை முடிச்சிடாதிங்க... இனிதான் உங்களோட முழுப்பொறுப்பும்
இருக்கு... குழந்தையை பத்திரமா பாத்துக்குங்க அமுதா... தமிழ் எல்லா விஷயத்தையும்
விளையாட்டா எடுத்துக்கறவன், நீங்கதான் அவனை பாத்துக்கணும்... இப்போ இனிக்குற இந்த
திருமண வாழ்க்கை நாளைக்கே உங்களுக்கு சலிச்சுடலாம்... ஆனால், எந்த
காரணத்துக்காகவும் அகிலனை வெறுத்துடாதிங்க... ஒரு பெண் கணவன் இல்லாம இருக்குறதை
விட, குழந்தை தகப்பன் இல்லாம வாழறது ரொம்ப கொடுமையான விஷயம்... அந்த கொடுமை என்
மூலமா ஒரு குழந்தைக்கு நடந்திடக்கூடாதுன்னுதான் நான் இப்போ போறேன்.... வேற என்ன
சொல்றதுன்னு தெரியல.... என்னென்னமோ பேசுறேன்... சரி விடுங்க...” கண்களை
துடைத்தபடி, அகிலனை பார்த்த தமிழ், “குழந்தைக்கு என்ன பேர் வைக்கப்போற அகி?”
என்றான்...
“பேர்...
பேரு... இன்னும்...” தடுமாறிய அகிலனை தடுத்து நிறுத்திய தமிழ், “தமிழ்னு மட்டும்
வச்சிடாத... ரொம்ப சினிமாத்தனமா இருக்கும்...” என்று சிரிக்க, சூழல் மறந்து
மூவருமே சிரித்தனர்... எந்த சிரிப்பிலும் கபடம் இருப்பதாய் எவருக்கும்
தோன்றவில்லை...
அப்போதுதான்
அறைக்கதவை திறந்து உள்ளே நுழைந்த சுகந்தி
சித்தி, “வாப்பா தமிழ், எப்ப வந்த?” தமிழை கேட்டபடியே, பதிலை
எதிர்பார்க்காமல் அமுதாவை நோக்கி திரும்பியபடி, “என்னம்மா அமுதா குட்டிப்பையன்
அழுதானா?... நேத்துலேந்தே தேவையில்லாம அழறான், என்ன காரனம்ன்னும் புரியல...” என்று
சொல்லிக்கொண்டே உறங்கிய குழந்தையை
வாஞ்சையுடன் பார்த்தாள்... குழந்தையின் அருகில் நகர்ந்து, அதன் கன்னங்களை
வருடியபடியே பதில் சொன்னான் தமிழ், “இனி எப்பவும் அவன் அழமாட்டான்மா... அவனுக்குதான்
இனி எல்லாமே கிடைக்கப்போகுதே...!” என்ற வார்த்தைகளில் பொதிந்திருந்த ஆயிரம்
அர்த்தங்களை அகிலனும் அமுதாவும் மட்டுமே அறிவார்கள்....
ஆம்,
அந்த குழந்தை இனி அழமாட்டான்....! (முற்றும்)
(கதையை
படித்த அன்பர்கள், இங்கேயே தங்கள் கருத்துகளை பகிருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....
இந்த
ஐம்பதாவது கதையை சிறப்பாக பயணிக்க செய்திட்ட அன்பு நண்பர் “அவிட்” அவர்களுக்கு
எனது தனிப்பட்ட நன்றிகள்!)