“ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு எதிரானது..!”
எவ்வளவுதான் அறிவியல்பூர்வமான ஆதாரங்களை நாம காட்டினாலும் கூட பழமைவாதிகள் திரும்ப
திரும்ப சொல்லும் கருத்து இதுதான்... அப்படி ஆத்மார்த்தமாக நம்மை “இயற்கைக்கு
முரணான” பட்டியலில் இணைக்க துடிக்கும் கலாச்சார காவலர்கள் தான் மேற்கொண்டு
கட்டுரையை அவசியம் படிக்கணும்....
நம் நாட்டில் ஓரினச்சேர்க்கையை குற்றமாக
கருதும் சட்டப்பிரிவு 377க்கு எதிராக நீதிமன்றத்தில் நடந்த வழக்கை நாம்
அறிவோம்... நம் நாட்டில் மட்டுமல்ல, முற்போக்கு எண்ணங்களால் நிறைக்கப்பட்ட
அமெரிக்காவிலும் கூட நீதிமன்றத்தின் வழியே தான் ஒருபால் ஈர்ப்புக்கான அங்கீகாரம்
நடைமுறைக்கு வந்தது... அப்போது ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு முரணான விஷயம் இல்லை
என்று வாதிட வழக்கறிஞர்கள் முக்கியமாக பயன்படுத்திய வாதம், “ஓரினச்சேர்க்கை பல
விலங்குகளிலும் இயல்பாக காணப்படுவதை ஆய்வாளர்கள் ஆதாரத்துடன் கண்டறிந்துள்ளனர்”
என்பதுதான்.... ஒருவகையில் அப்போ அங்கே பதினான்கு மாகாணங்களில் ஒருபால் ஈர்ப்பு
அங்கீகரிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் அந்த வாதம் தான்...
1999ஆம் ஆண்டு வரையிலான ஒரு ஆய்வில் கிட்டத்தட்ட 1500 வகையிலான உயிரினங்களில் ஓரினச்சேர்க்கை என்னும் உறவு வெகு இயல்பாக
காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்... ஓரினச்சேர்க்கை என்கிற உடல் ரீதியிலான
தொடர்பை தாண்டி, அன்யோன்யம், ஒன்றாக இரை தேடுவது, தங்கள் பிள்ளைகளை இணைந்தே
வளர்ப்பது போன்ற பலவிதமான “உணர்வு சார்ந்த பிணைப்பும்” கூட பல உயிரினங்களில்
காணப்பட்டதாக சொல்லும் ஆய்வாளர்கள், இது வெறும் ஓரினச்சேர்க்கை இல்லை, அதை தாண்டிய
உணர்வு ரீதியிலான “ஒருபால் ஈர்ப்பு” என்கின்றனர்...
அதிலும் குறிப்பாக நாம் சகஜமாக பார்க்கும்
வீட்டில் வளர்க்கக்கூடிய செம்மறி ஆடுகளில் ஓரினச்சேர்க்கை என்பது பத்து
சதவிகிதத்திற்கும் அதிகமாக காணப்படுகிறதாம்...
இதை ஆய்வு செய்தவர்கள் இன்னொரு முக்கியமான
விஷயத்தையும் கண்டறிந்துள்ளார்கள்... அந்த குறிப்பிட்ட பத்து சதவிகித ஆடுகளை
தனித்தனியாக பிரித்து, பெண் ஆடுகளுடன் ஒன்றாக அடைத்து வைத்துள்ளனர்... அதாவது,
உடல் சுகம் தேவைப்பட்டால் அவை பெண் ஆடுகளைத்தான் நாடவேண்டும் என்கிற நிலைக்கு
தள்ளியுள்ளனர்.... கிட்டத்தட்ட நம் நாட்டில், ஒருபால் ஈர்ப்பு ஆண்களுக்கு பெண்களை
திருமணம் செய்து வைப்பது மாதிரின்னு வச்சுக்கோங்க.... ஆனால், பல நாட்களாகியும் கூட
அந்த பிரிக்கப்பட்ட ஆண் ஆடுகள் பெண் ஆடுகளுடன் இணையவே இல்லையாம்... சில பெண் ஆடுகளும்
கூட என்னென்னமோ சில்மிஷம் செய்து பார்த்தனவாம், ஆனால் அசைந்து கொடுக்காமல்
அப்படியே நின்றனவாம் ஆண் ஆடுகள்.... மீண்டும் பிரிக்கப்பட்ட ஆண் ஆடுகள் ஒன்றாக
சேர்க்கப்பட்ட மறுநிமிடம்..... சொல்லவா வேணும்?... அதுக்கப்புறம் “கஜகஜா....
ஜல்சா... கில்பான்ஸ்...” தான்...
ஆடுகள் மட்டுமல்ல வீடுகளில் வளர்க்கக்கூடிய
நாய்கள், மாடுகள், பூனைகள் என்று நம்மை சுற்றியுள்ள விலங்குகளிலும் கூட நீங்கள்
ஓரினச்சேர்க்கையை பார்க்கலாம்...
மனித இனத்துடன் நெருங்கிய மரபணு ஒற்றுமையோடு
திகழும் சிம்பன்ஸி, மனித குரங்கு போன்ற குரங்கினங்கள் பெரும்பாலானவற்றில்
ஓரினச்சேர்க்கை உறவும் எவ்வித பாகுபாடுமின்றி பார்க்கப்படுவது அறிவியல் பூர்வமாக
நிரூபிக்கப்பட்ட உண்மை...
இந்த விலங்குகளிடம் காணப்படும் ஒருபால்
ஈர்ப்புக்கான காரணத்தை பலரும் ஆராய்ந்து வருகிறார்கள்... ஆனால், மனிதர்களை போலவே
மற்ற உயிரினங்களிலும் காணப்படும் இந்த ஈர்ப்பிற்கான முழுமையான, அனைவரும்
ஏற்கக்கூடிய முடிவை இன்னும் எவரும் கண்டுபிடிக்கவில்லை....
25%க்கும் மேற்பட்ட கருப்பு அன்னப்பறவைகளில் ஒருபால்
ஈர்ப்பு இயல்பாக காணப்படுகிறதாம்... அந்த அன்னப்பறவைகள் இன்னொரு வன்முறையிலும்
ஈடுபடுவது வேடிக்கையான ஒன்றுங்க.... பெண் அன்னப்பறவைகள் கஷ்டப்பட்டு முட்டையிட்டு,
தன் கூட்டில் அடைகாத்துக்கொண்டிருக்குமாம்... நம்ம ஒருபால் ஈர்ப்பு ஆண் அன்னப்பறவை
ஜோடி ஒன்றாக இணைந்து, பெண் பறவையை விரட்டிவிட்டு முட்டையை இரண்டு ஆண் பறவைகளும்
அடைகாத்து குஞ்சு பொறிக்குமாம்... பின்பு குடும்பம், பிள்ளைகள் என்று அந்த ஒருபால்
ஈர்ப்பு ஜோடிகள் சுற்றித்திரியுமாம்...
அன்னப்பறவை மட்டுமல்லாமல் நம்ம நெய்தல் நிலப்பறவையான
கடற்காகம், குளிர் பிரதேச பெண் குயின்கள், வல்லூறுகள், வீட்டில் வளர்க்கும்
புறாக்கள் போன்ற பறவைகள் ஓரினச்சேர்க்கையை தாண்டி ஒன்றாக கூடுகட்டி வாழ்வது,
முட்டைகளை திருடி அடை காத்து குஞ்சு பொறிப்பது போன்ற “திருமண” பந்தத்திலும்
ஈடுபடுவதை ஆதாரப்பூர்வமாக கண்டறிந்துள்ளனர்...
காட்டில் வாழும் மிருகங்களான காட்டெருமை, யானை, ஒட்டகசிவிங்கி
என்று பலதரப்பட்ட விலங்குகளில் ஓரினச்சேர்க்கை இயல்பாக காணப்படுகிறதாம்...
காட்டின் ராஜாவான சிங்க இனத்தில் கூட உறவில் ஈடுபடும் மொத்த
எண்ணிக்கையில் 8% உறவு ஓரினச்சேர்க்கைதான் என்று கண்டறிந்துள்ளனர்...
யானைகளில் இந்த உறவு உடலை தாண்டிய உணர்வுப்பூர்வமான ஒன்றாக
தெரிகிறதாம்... அதாவது ஒரு ஆண் யானை பெண் யானையுடன் இணைந்து வாழும்
காலகட்டத்தைவிட, ஒருபால் ஈர்ப்பு உறவில் ஈடுபடும் யானைகள் அதிக நாட்கள் இணைந்து
ஒன்றாக வாழ்கின்றனவாம்... இரண்டு ஆண் யானைகளும் ஒரு முழுமையான புரிதலோடு,
ஒன்றுக்கொன்று ஒத்தாசை செய்தும் வாழ்கின்றனவாம்...
பல்லிகள், பூச்சிகள், வண்டுகள் என்று பல இனத்திலும்
ஓரினச்சேர்க்கை உறவு காணப்படுகிறது...
ஒருசில பூச்சிகளில் 85% ஓரினச்சேர்க்கை உறவுதான் காணப்படுவதாக அந்த
ஆய்வுகள் மிகப்பெரிய அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்கள்...
20%
- 80% தட்டான் பூச்சிகளிலும், பெரும்பாலான ஈ’க்களிலும் கூட
ஓரினச்சேர்க்கை பிரதானமான உறவாக காணப்படுகிறது... இனி ஒருபால் உறவிலும் கூட காதலன்
இறந்தால், மறுபிறவியில் ஒருபால் ஈர்ப்புள்ள ஈ’யாக பிறந்து காதல் வாழ்க்கையை
தொடரலாம்னு நம்பலாம்...
சுறா மீன், டால்பின் மீன், நண்டு சிண்டு என்று நான் மொத்தமாக
ஆயிரத்துக்கும் மேற்பட்ட இனங்களின் இத்தகைய இயற்கையான ஓரினச்சேர்க்கை பற்றி
சொல்லனும்னா, அதுபற்றி தனி புத்தகம் தான் எழுதணும்... ஒரு காமத்தின் வடிகாலாக
ஓரினச்சேர்க்கை என்கிற ஒருமுறை உறவு முதல், வாழ்க்கை முழுவதும் துணையோடு ஒன்றாக காதல்
வாழ்க்கை வாழும் ஒருபால் ஈர்ப்பு உறவு வரை பல உயிரினங்களிலும் பட்டவர்த்தனமாக
காணப்படுவதை இதுவரை பார்த்தோம்....
நம் நாட்டிலும் “ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு
முரணானது, வெளிநாட்டு கலாச்சாரம், அது ஒரு காமத்திற்கான வடிகால் தேடும் விஷயம்...”
என்று வாய் இருக்கும் எல்லாரும் கண்டதையும் பேசும் நிலைதான் உள்ளது...
நான் அந்த காலச்சார காவலர்களிடம்
கேட்பதெல்லாம் ஒன்றுதான்.... மனிதன் தான் அறிவின் வளர்ச்சியால், அறிவியலின்
வளர்ச்சியால் தப்பு செய்றான்னு சொல்லும் நீங்க, இந்த உயிரினங்களின் ஒருபால்
ஈர்ப்பு உறவுக்கான காரணத்தை என்னன்னு சொல்வீங்க?...
மேற்க்கத்திய கலாச்சாரத்தை எங்கள் வீட்டு
செம்மறி ஆடு எப்போ கத்துக்கிச்சு?, யானையும் பூனையும் எந்த அறிவியல் வளர்ச்சியால்
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது?...
சார்லஸ் டார்வின் அவர்களின் “ஆரிஜின் ஆப்
ஸ்பீசிஸ்” தெரியும்தானே உங்களுக்கு?... ஒரு செல்லிலிருந்து பிரிந்து பிறந்தவர்கள்
தானே நாம்?... அப்போ மற்ற உயிரினங்களில் காணப்படும் இந்த உறவு இயற்கையானதுன்னா,
மனிதர்களுக்கு மட்டும் எப்படி இயற்கைக்கு முரணானது ஆகும்?...
எனக்கு ஒரு விஷயம் பயமா இருக்கு....
நான் பாட்டுக்கு செம்மறி ஆடுகளின் ஒருபால்
ஈர்ப்பு உறவு பற்றி நம்ம ஆளுங்ககிட்ட சொல்லிட்டேன்... கலாச்சாரத்தை காக்கும்
பொருட்டு அவங்கபாட்டுக்கு அத்தகைய ஆடுகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை
கொடுத்து, “மட்டன் பிரியாணி” செஞ்சு சாப்பிட்டுட போறாங்க...
“மட்டன் பிரியாணி” என்பது “மனித பிரியாணி”
ஆனாலும் கூட கலாச்சாரம் தான் உங்க முதல் மற்றும் முக்கிய நோக்கம்’னு இன்னும் நீங்க
பேசுறீங்கன்னா, “மிருகங்களுக்கு புரிந்த அந்த உண்மை கூட, பகுத்தறிவு படைக்கப்பட்ட
உங்களுக்கு புரியவில்லை என்றால், உங்கள் பகுத்தறிவு மீண்டும் பழுது பார்க்கப்பட
வேண்டிய நிலையில் உள்ளது” என்பதை உணருங்கள்....
“இயற்கைக்கு முரணான செயலை நாங்க
செய்யவில்லை, இயற்கைக்கு முரணான கருத்தைத்தான் நீங்க சொல்றீங்க....!” இயற்கைக்கு
எதிரான கருத்தை திணிக்கும் உங்கள் மேல எத்தகைய வழக்கை தொடுக்கலாம்?னு இனி
நாங்களும் யோசிக்கணும் போல...!
antha semmari aatin kariyayi thindraavadhu, semmariyaatin ( oru paal eerpu) gunam varatuum antha pazhamaivaadhigalukku
ReplyDeleteஅருமையான பதிவு...சக மனிதநேயம் குறைவே இதற்கு காரணமோ என்று எனக்கு அடிக்கடி தோன்றும்...எங்கும் எதுவும் வியாபார நோக்கம்தான்...தன் தேவைகள் தீர்க்க மற்றவர்களின் உடல் nd மனம் நோகடிக்கும் இவர்களை நாம் தான் ஒதுக்கித் தள்ள வேண்டும்...பெண் துணை இல்லாதவர்களே நம் புராணக்காலத்திலிருந்து இப்போது வரை சிறந்து விளங்குகிறார்கள்...
ReplyDelete