Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday, 25 March 2014

"ஓரினச்சேர்க்கைக்கு எதிரான வன்முறைகளும், ஏமாற்றுதல்களும்...." - தீர்வை நோக்கி....


இதுவரைக்கும் ஓரினச்சேர்க்கை செயல்களில் ஈடுபடுவோர் சமூக வலைதளங்களில் சந்தித்த நபர்களினால் அடைந்த துன்பங்களை பற்றியும், இழந்த உடைமைகள் பற்றியும் நிறைய எழுதியாகிவிட்டது... நாம் ரொம்ப நாளாக பேசிவரும் இந்த மோசடி கும்பல் பற்றி இப்போது கேலக்ஸி (gaylaxy) இணையம் வரை செய்தி வெளியிட்டு வருவதை காணமுடிகிறது... இதன்மூலம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ஓரினச்சேர்க்கைக்கு எதிராகவும், ஒருபால் ஈர்ப்பினரை மையமாக வைத்தும் சில மோசடி கும்பல் இந்தியாவில் தீவிரமாக இயங்கி பணம் பறித்து வருவதை நாம் அறியமுடிகிறது....
அதுமட்டுமல்லாமல் எனக்கு மின்னஞ்சல் மூலமாகவும், தனி செய்திகள் மூலமாகவும் தாங்களும் பிளானட் ரோமியோ மூலம் மோசடி கும்பலிடம் சிக்கியதாகவும், பேஸ்புக் சாட் மூலம் பணம் இழந்ததாகவும் கிட்டத்தட்ட இருபதிற்கும் மேற்பட்ட நபர்கள் புலம்புவதை பார்க்கிறேன்.... “என் அனுபவத்தையும் எழுதுங்க விஜய்... இதன் மூலம் மற்றவர்கள் எச்சரிக்கையாக இருக்கட்டும்!” என்று அத்தகைய நபர்கள் சொல்வது வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது....
அப்படி சமீபத்தில் என்னிடம் தான் பணம் இழந்ததை பற்றி புலம்பிய நபரிடம் கொஞ்சம் கடுமையாகவே வாதம் செய்துவிட்டேன்....
“என்னோட இந்த அனுபவத்தை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க விஜய்...” என்றார் அந்த நண்பர்....
“இல்லைங்க... இனி இப்படிப்பட்ட செய்திகளை நான் வலைப்பூவில் பதியப்போறதில்லை.... நம்ம மக்களுக்கு நான் ரொம்ப அதிகமாகவே எச்சரிக்கைக்கான பதிவுகளை பதிந்துவிட்டேன்.... இனியும் நான் பிரச்சினைகளை பற்றி பேசிடாமல், அதற்கான தீர்வை பற்றித்தான் பேசப்போறேன்... அந்த தீர்வுக்கு நீங்க தயாரா?” என்றேன் நான்....
“என்ன தீர்வு விஜய்?... என் பணம், பொருட்கள் எல்லாம் போயாச்சு, இனி எனக்கு என்ன தீர்வு கிடைக்கும்?”
“இருக்குங்க.... ஏன் நீங்க அந்த திருட்டுப்பய மேல கேஸ் கொடுக்கக்கூடாது.... உங்களுக்கு சட்ட ரீதியான எல்லா உதவிகளையும் ஓரினம் போன்ற அமைப்பின் மூலம் நான் ஏற்படுத்தி தரேன்... நீங்க துணிஞ்சு காவல்துறையில் புகார் கொடுப்பிங்களா?”
“இது எனக்கு மேலும் அதிகமான பிரச்சினையைத்தான் உண்டாக்கும்... நான் வெளிப்படையா வந்து புகார் கொடுக்க முடியாது... என் குடும்பம், வேலை எல்லாத்தையும் நான் பார்க்கனும்ல?” என்றார் நண்பர்...
“இப்டி பாதிக்கப்பட்ட எல்லாருமே ஏதோ ஒரு காரணத்தை சொல்லி ஒதுங்கிட்டிங்கன்னா யாருதான் தீர்வுக்கு வழிவகுக்கிறது?... உங்களோட இந்த குடும்பம் வேலை போன்ற பயம்தான் அந்த திருடன்களுக்கு மூலதனம்.... குனிய குனிய குட்டத்தான் செய்வாணுக, கொஞ்சம் ஒருதடவை நிமிர்ந்து நின்னுதான் பாருங்களேன்” என்று கிட்டத்தட்ட இரண்டு பக்கங்களுக்கு வசனம் பேசி ஒருவழியாக அவரை புகார் கொடுக்க வைக்க சம்மதிக்கவும் வைத்தேன்... ஆனால், எல்லாம் முடிந்தபோது அவர் கடைசியாக கேட்ட கேள்விக்கு மட்டும் என்னால் பதில் சொல்ல முடியாமல் கொஞ்சம் திணறித்தான் போனேன்....
“சரி விஜய், நீங்கசொல்றபடி நான் புகார் கொடுக்க தயார்.... அதேநேரத்துல இப்போ அமலில் இருக்குற சட்டப்பிரிவு 377 மூலம் காவல்துறை என் மேல நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்குதானே?” என்ற அந்த நண்பரின் இந்த கேள்விதான் என்னை வாயடைக்க வைத்தது....
நியாயமான அந்த கேள்விக்கு பின்னால் நாம் ஆழமாக யோசித்தால் நம்முடைய இயலாமை உங்களுக்கு புலப்படலாம்... அவர் கேட்ட கேள்வியில் நூறு சதவிகிதம் உண்மையான ஆபத்து இருக்கிறது....
இது தொடர்பாக தன்னிச்சையாக எனக்கு குழப்பங்கள் இருந்தாலும், சட்ட ரீதியிலான தெளிவான நிலைப்பாடு இல்லை என்பதால் சில அமைப்பினரை அணுகினேன்....
அவர்களும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் ஒருவர் தம் உடமைகளை இழந்ததாக புகார் பதிவு செய்யப்பட்டால் நிச்சயம், புகார் கொடுத்தவரின் பக்கமே சட்டம் தன் கோரமுகத்தை காட்டும் ஆபத்து இருக்கிறது... “ஒருபால் ஈர்ப்பு பற்றிய தெளிவான புரிதல் உயர் அதிகாரிகளிடம் இருந்தாலும் கூட, கடைநிலை காவலர்களிடம் இருப்பதற்கு வாய்ப்புகள் கிடையாது.... நம்மவர்கள் புகார் கொடுக்க போவது என்னவோ கடைநிலை காவலர்களிடம் தான்... அவர்களின் புரிதல் இன்மையால் ஒருபால் ஈர்ப்பு நபர்கள் கசப்பான அனுபவங்களை சந்திக்கவும் கூட வாய்ப்பிருக்கு..” என்று நம்மை மேலும் அச்சம் ஊட்டும் விதமாகவே சட்ட நுணுக்கங்களை அலசி பதில் சொன்னார்கள் சில அமைப்பினர்...
ஆனாலும் கூட பேச்சை முடிக்கப்போகும் தருணத்தில், “ஆனாலும், அப்படி பாதிக்கப்பட்டவர்கள் துணிந்து புகார் கொடுக்க முன்வந்தால் வரசொல்லுங்க விஜய், தாராளமாக அவர்களுக்கான வழிமுறைகளை ஆராய்ந்து, எந்த பாதிப்பும் வராம பிரச்சினையை சட்ட ரீதியாக கொண்டுசெல்வோம்... அதற்காக அவங்ககிட்ட நாங்க எதிர்பார்ப்பது அவர்களோட துணிச்சலும், முயற்சியில் பின் வாங்காத மன உறுதியும் மட்டும்தான்...” என்று சொன்ன ஓரினம் அமைப்பிற்கு நன்றிகளை சொல்லிவிட்டு கொஞ்சம் நிம்மதியானேன்....
சட்டம், சமூகம், அரசியல் சூழல் எல்லாமே நமக்கு எதிரான மனநிலையில் இருக்கும் நிலையில் பெரும்பாலானவர்கள் நிச்சயம் வெளிப்படையாக முன்வந்து புகார் கொடுக்க மாட்டார்கள்... அப்போ என்னதான் இதற்கு வழி?.... நமக்கான காலம் வரும் வரைக்கும் கொஞ்சம் அமைதியாத்தான் இருக்கணும்... அதேநேரத்தில் நம் அமைதி எதிராளிக்கு வசமான களத்தை உண்டாக்கிவிடக்கூடாது என்பதையும் நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்...
உங்களின் அனுபவங்கள் எல்லாவற்றையும் ஒரு இடத்தில் கொண்டு சேர்ப்பிக்க வேண்டும்.... நீங்கள் பாதிக்கப்பட்ட அனுபவத்தை “இடம், நாள், சூழல்” என்று இம்மி பிசகாமல் சொல்ல வேண்டும்... உங்களை ஏமாற்றியவனின் அடையாளங்களை வெளிப்படையாக சமூக தளங்களில் வெளியிட வேண்டும்.... அந்த கயவர்களின் புகைப்படம், அலைபேசி எண், முகவரி, அடையாளங்கள், சமூக தளங்களின் கணக்கு என்று உங்களிடம் இருக்கும் அத்தனை தகவல்களையும் அப்பட்டமாக வெளிப்படுத்த வேண்டும்....
இதன்மூலம் இந்த குற்றங்கள் முற்றாக நிறுத்தப்படும்! என்று நான் சொல்லவரவில்லை.... ஆனால், “தவறு செய்தால், அவன் தகவல்கள் மக்கள் முன் வெளிப்படுத்தப்படும்” என்கிற பயம் தவறு செய்யும் முன்பு அந்த கயவர்களுக்கு தோன்ற வேண்டும்.... அந்த கொஞ்சம் பயத்தை அவர்கள் மனதில் நாம் விதைத்தாலே, நம் மீதான இத்தகைய அத்துமீறல்கள் கணிசமாக குறையும் என்று நான் நம்புகிறேன்....

இதோ இந்த முகநூல் பக்கத்தில் தற்காலிகமாக உங்கள் அனுபவங்களை பகிருங்கள், குற்றம் செய்த கயவர்களை அப்பட்டமாக வெளிப்படுத்துங்கள்.... இந்த பக்கத்தின் வெற்றியை தொடர்ந்து சில அமைப்பினர் மற்றும் நண்பர்கள் மூலம் நிரந்தர “புகாருக்கான தளம்” உங்களுக்கு அமைத்துக்கொடுக்கப்படும்....
இந்த முயற்சியின் மூலம் மூன்று குறிக்கோள்கள் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்....
1.      தவறு செய்யும் நபர்கள், தங்கள் அடையாளம் பொதுத்தளத்தில் பகிரப்படும் என்று தவறு செய்வதற்கு முன்பு தயங்குவார்கள்....
2.      நீங்கள் புகார் கொடுப்பதை பார்த்து, நமக்காக யாரோ இருக்கிறார்கள்! என்கிற ஒரு மன தைரியத்தை நம்மை போன்றவர்கள் பெறுவார்கள்....
3.      உங்களின் விழிப்புணர்வு கொடுக்கும் புகார்களால் உங்களை போன்று எத்தனையோ ஆயிரக்கணக்கான நபர்கள் எச்சரிக்கையாக தங்களை காப்பாற்றிக்கொள்வார்கள்.....

ஆகையால் நண்பர்களே, ஒரு ஐந்து நிமிடங்களை செலவழித்து உங்களின் புகார்களை நம் தளத்தில் பதியுங்கள்.... சட்ட மன்றத்திலும், நீதி மன்றத்திலும் நம் உரிமைகள் மறுக்கப்பட்டாலும், மக்கள் மன்றத்தில் நம் உரிமைகளோடு உடமைகளும் பாதுகாக்கப்படும் என்று நம்புவோம்....
ஆனால், இந்த முயற்சி ஒரு தற்காலிக சிறு பலனைத்தான் கொடுக்கும் என்பது எனக்கும் தெரியும், ஆனால் “ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கு பதிலாக, இது ஒன்றாவது இருப்பது நல்ல தொடக்கம் தான்!” என்கிற எண்ணத்தில்தான் இந்த முயற்சி.... விரைவில் சட்டம் நமக்கான பாதையை தெளிவாக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது, அப்போதைக்கு இந்த புகார்களுக்கு ஆளானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது...
நமக்கு எதிரான அத்துமீறல் மற்றும் வன்முறைக்கு எதிராக நாம் எடுத்து வைக்கும் முதல் அடி, எதிரியின் தலையில் விழும் மரண அடியாக இருக்க தளத்திற்கு சென்று உங்கள் ஆதரவை வெளிப்படுத்துங்கள்....


நன்றி....!

3 comments:

 1. முதல் சந்திப்பு பொது இடத்துல இருக்கணும் னு இதுக்கு முன்னாடி சொல்லி இருக்கீங்க, இது ஒரு சரியான அணுகுமுறை. சமுக வலைதளங்கள்ள அதிக பட்சம் நடக்குற உரையாடல் இதுதான், where r u from
  ur age
  what ur likes
  send ur pic
  give ur number. நெறைய உரையாடல் மூலமா ஒருத்தர பத்தி தெரிஞ்சிக்கணும். நேரடி சந்திப்ப கொஞ்சம் தள்ளி போடணும்.

  ReplyDelete
 2. கே யா இருக்குற ஒருத்தரு ஒரு நண்பன் கெடச்சா அவங்க கூட பயணிக்கலாம், ஆனா, நெறைய பேர் ர சந்திக்கணும் னு எப்போதுமே தேடல் இருக்கு. அத கோரச்சிக்கலாம் இல்லையா ?
  நம்மள பத்தி புரிஞ்சிக்க, நம் மீது அன்பு செலுத்த, நாம் அவர் மீது அன்பு செலுத்த ஒருத்தரு வேணும், அது ஆணாக இருக்கணும். நா சொல்றது சரி தான?

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துகளுக்கு ரொம்ப நன்றி இசை..... நீங்க சொல்றது சரிதான்.... நிலையான காதல் ஒருவரிடத்தில் அமைவது சாத்தியம் என்றால், அதைவிட மகிழ்வான வாழ்க்கை பயணம் அமைந்திடாது.... நிச்சயமாக பலரை நாடும், திருப்தியற்ற மனம் கொஞ்சம் பலருக்கும் மாறவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை...

   Delete