“சந்தேகம்” என்ற ஒற்றை மந்திரத்தால்தான் என்னைப்போன்ற
தனியார் புலனாய்வு நிறுவனங்கள் நடத்துபவர்கள் சிரமமின்றி மேற்தட்டு வாழ்க்கையை
வாழமுடிகிறது என்பதுதான் நிதர்சனம்... போலீசுக்கு திருடன் மீது, முதலாளிக்கு
ஊழியர் மீது, கணவனுக்கு மனைவி மீது, அவ்வளவு ஏன், காதலனுக்கு காதலி மீதுன்னுகூட
மிளிரும் சந்தேகங்கள் எல்லாம் எனக்கு ஒளிரும் பொற்காசுகளாக தெரிகின்றன... இப்போ
என் அலுவலகத்தில் பதிக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களும், வாசலில் நிற்கும் ஸ்கோடா
காரும் கூட சமீபத்திய ‘சந்தேக’ வரவுகள்தான்....
அறுபத்தாறு வயது மனைவி, தன் எழுபது வயது கணவனை
சந்தேகப்பட்டு என்னை நாடியதல்லாம் என் புலனாய்வு அனுபவங்களில் பெட்டி செய்திகள்...
அந்த எழுபது வயது தாத்தாவால் அப்படி என்ன செய்திட முடியும் என்று அந்த பாட்டி
என்னை ஆராய சொன்னார்? என்றல்லாம் நான் யோசிக்கவில்லை... பொய்யான சாட்சிகளை ஜோடிக்க
சொல்லி, என் பணியை வழிதவற சொன்ன காவல்துறை எஸ்.ஐ முதலாக, அதே ஜோடிக்கப்பட்டு
குற்றவாளியாக ஆக்கப்பட்ட நபர் என்னை நடுசாலையில் முதுகில் ஓங்கி மிதித்ததல்லாம்
அதே அனுபவங்களில் என்னைத்தவிர வேற யாருக்கும் தெரிந்திடாத கருப்புப்பக்கங்கள்... புலனாய்வு செய்பவர்கள் எல்லாம் கருப்பு கோட்
அணிந்து, தலையில் “அம்பயர்” தொப்பி அணிந்து, பில்லா படத்தோடு அஜித் மறந்த கருப்பு
கண்ணாடியோடு வலம் வருவதாய் பலரும் நினைப்பதுண்டு... ஆனால், அதோ... உங்கள்
பின்னால், நீங்கள் கணினி திரையை மேயும்போது, இரண்டு கண்கள் வேவு பார்க்கிறதே,
அதுகூட உங்கள் பெற்றோர் ஏற்பாடு செய்த புலனாய்வு வேலையாக இருக்கலாம்....
சரி... நான் விஷயத்துக்கு வரேன்... இந்த சந்தேகப்பேய்
கார்த்தியை போன்ற “டேக் இட் ஈஸி” ஆசாமிகளையும் ஆட்டுவிக்கும் என்பதை அதுநாள் வரை
அறிந்திடவில்லை... கார்த்தி எனது உயிர் நண்பன்... நண்பன் என்றால் ‘எனது பேஸ்புக்
நண்பர்கள் பட்டியலில் இருக்கும் ஆயிரத்து சொச்சம் நண்பர்களுள் அவனும் ஒருவன்
என்பதால் இல்லை, எனது பேஸ்புக் கடவுச்சொல் தெரிந்துவைத்திருக்கும் அளவிற்கு நெருக்கமான நண்பன் அவன்...’
“அஞ்சு வருஷமா பழகிட்டு இப்ப என்னடா அவன்மேல சந்தேகம்?”
நேரடியாகவே கேட்டுவிட்டேன்...
“சந்தேகம்ன்னல்லாம் பெருசா ஒண்ணுமில்ல... எல்லாம் ஒரு
முன்னெச்சரிக்கைதான்...” என் மேசை மீது அடுக்கப்பட்டிருந்த கோப்புகளை ஆராயந்தபடியே
பதில் சொன்னான்....
“பின்ன எதுக்கு அவனை டெஸ்ட் பண்ண சொல்ற?... எனக்கு வேற கேஸ்
எதுவும் கிடைக்கலைன்னு யாராச்சும் சொன்னாங்களா?”
“இங்க பாரு ரஞ்சித், உன்னால முடியலைன்னா சொல்லிடு... வேற
ஏஜன்சியை பாத்துக்கறேன்....” பொய்யாக இருக்கையை விட்டு எழ முயன்றான்.... நான்
தடுப்பேன் என்று நினைத்திருக்கக்கூடும்.... சிரித்தபடியே நானோ மௌனம் காத்தேன்...
என் சிரிப்பின் சம்மதத்தை புரிந்தவனாக, “சரி, எப்போ உன்
வேலையை ஆரமிக்கப்போற?” என்றான்....
“என்னோட ஒரு கேள்விக்கு பதில் கிடச்ச உடனேயே ஸ்டார்ட்
பண்ணிடலாம்...”
“என்ன கேள்வி?”
“இதல்லாம் எதுக்கு?”
“ஐயோ நீ இம்சைடா.... சரி சொல்றேன்.... நான் நவீனை லவ்
பண்றது உண்மைதான்... ஆனால், சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அவனை காதலிக்குற அளவுக்கு
அவன் ஒன்னும் சீசரின் மனைவி இல்லையே!... அதுமட்டுமில்லாம இவ்ளோ நாளா அவனை
சந்தேகப்படுறதுக்கான அவசியம் எனக்கு ஏற்படல... ஆனால், இப்போ என்னோட பாலீர்ப்பை
பற்றி வீட்ல ஓப்பனா சொல்லிட்டு, அவன் கூட தனியா வாழப்போறதா நானும் அவனும் முடிவு
பண்ணிருக்கோம்... இன்னும் ஒன்னு ரெண்டு வருஷத்துல கனடா, கல்யாணம், குழந்தை’னு
அடுத்தடுத்த பிளான் எல்லாம் பக்காவா போட்டாச்சு...” சொல்லியபடி
இடைநிறுத்தினான்....
“சரிடா... நல்லாத்தானே போகுது... பின்ன என்ன?” ஆர்வ
மிகுதியில் கேட்டேன்...
“ஆமா.... இப்போ நிக்குற இடத்திலேந்து அந்த கனவுகளை
பாக்குறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு.... கொஞ்சம் பயமாவும் இருக்கு.... அவன் என்னை
லவ் பண்றான்னு எனக்கு நல்லாத்தெரியும்.... ஆனால், என்னை மட்டும்தான் லவ் பண்றானா?
நாளைக்கே இன்னொருத்தன பாக்குறப்போ என்னை வெறுப்பானா? வேற நபர்கள் அவனை அப்ரோச்
பண்றப்போ அவன் அதை எப்டி எடுத்துப்பான்?ன்னு பல கேள்விகள் என்னை இம்சை பண்ணுது....
இங்க யாருமே ராமனில்ல ரஞ்சித்” தன்னை மிகவும் நேசிக்கும் ஒருவனை சந்தேகிப்பது கூட
இப்போதல்லாம் ‘எதார்த்தம்’ என்ற எல்லைக்குள் அடக்கிவிடுகிறார்கள் இந்த
எதார்த்தவாதிகள்...
“சரி... நான் இப்போ என்ன செய்யனும்னு நினைக்குற?”
“இந்த மாதிரி முட்டாள்த்தனமா கேள்வி கேட்காம, நவீனை பற்றி ஆராய்ஞ்சு சொல்லுன்னு சொல்றேன்” கார்த்தி
பிடிவாதக்காரன்... என்னால் அவன் சொல்வதை ஏற்கமுடியவில்லை என்றாலும், மறுத்து
பயனில்லை... நான் மறுத்தாலும், இன்னொரு டிடெக்டிவ் ஏஜென்சியை அனுகியாவது அந்த
அர்த்தமற்ற சந்தேகத்திற்கு, விடை தேடி அலைவான்... இன்னும் இரண்டு நாட்கள்தான்
எனக்கு கெடு கொடுத்திருக்கிறான், அவனால் 1800 நாட்களாக கண்டுபிடிக்க முடியாத விஷயத்தை, நான் இரண்டு
நாட்களுக்குள் கண்டுபிடிக்கனுமாம்....
முதல் நாள் இன்று...
இடம் – தி நகர் பேருந்து நிறுத்தம்... மாலை 6 மணி...
கவச குண்டலத்தோடு பிறந்த கர்ணனை போல, நவீன் தன் பல்சர் பைக்
இன்றி நடைப்பயிற்சி கூட செல்வதில்லை... அப்படிப்பட்டவனை, பைக்கை பஞ்சர் ஆக்கி,
கார்த்தி மூலம் வேறு வாகனம் கிடைக்கப்பெறாமல் செய்து, இந்த பேருந்து நிறுத்தத்தில்
நிறுத்த கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் போனேன்... சனிக்கிழமை மாலை நேரம் என்பதால்,
மறுநாள் ஞாயிறின் நிம்மதி அவன் கண்களில் பளிச்சிட்டது... அலைபேசியை எடுத்து
பார்த்தவன் கண்களில், பீப் ஒலித்தபடி சிவப்பாய் மாறி மரணிக்கும் தருவாயில் இருந்த
பேட்டரி எரிச்சலாய் வெளிப்பட்டது...
அவனைப்போல இன்னும் பல ஜோடி கண்கள் சாலையின் விளிம்பு வரை
பேருந்தின் வருகையை எதிர்பார்த்து காத்துக்கிடந்தது... அத்தனை பொலிவிழந்த
முகத்திற்கு மத்தியிலும், பளிச்சிடும் பாண்ட்ஸ் பவுடர் மணக்க, ஜீன்ஸ் டிஷர்ட்
சகிதம் நிற்கும் ஒரு ஆடவன் உங்களுக்கு அந்நியமாக தோன்றலாம்... என் அலைபேசி
குறுஞ்செய்திக்கு பிறகுதான் அந்த ஆடவன், பூத்திருந்த தன் பவுடரை
துடைத்துக்கொண்டான்.... அவன் பெயரோ, அவனைப்பற்றிய மேற்கொண்டு தகவல்களோ தேவைப்படாத
அளவிற்கு, ஒரே வார்த்தையில் சொல்கிறேன்.... அவன்தான் நான் ஏற்பாடு செய்திருக்கும்
“ஏஜன்ட்”...
நவீன் எதிர்பார்த்த பேருந்து வந்து நின்றது...
நிறுத்தத்தில் நின்ற கால் பங்கு கூட்டத்தோடு நவீனும் ஏறினான்.. உதடுகளை ஒருமுறை
ஈரப்படுத்திக்கொண்டு நம் ஏஜன்ட்டும் அதே பேருந்தில் தொற்றினான்....
வழக்கம்போலவே பேருந்து, கூட்ட நெரிசலில் கங்காரு போல துள்ளி
துள்ளிதான் நகர்ந்தது... நம்ம ஏஜன்ட் பெரிய அழகனல்லாம் இல்லை என்றாலும், அவனை ஒரு
முறை பார்க்கும் கே, இன்னொரு முறை கண்டிப்பாக திரும்பி பார்க்கும் அளவிற்கு
வசீகரத்தவன்.... சில நிமிடங்கள் கண்களால் சமிக்ஞைகள் காட்டியும், நவீன் அவற்றை
கண்டு பொருட்படுத்துவதாக தெரியவில்லை... ஒருவேளை, சமிக்ஞை காட்டுபவனே அடுத்த
அத்தியாயத்தை தொடங்கட்டும் என்று காத்திருக்கிறானோ? என்ற சந்தேகம் என்னுள்
எழுந்தது.... தட்டினேன் ஒரு குறுஞ்செய்தியை, இப்போ நம்ம ஏஜன்ட் நவீனின்
பின்புறத்தில் நின்றபடி, பேருந்து குலுக்கத்திற்கு தொடர்பே இல்லாமல் அவன் மீது
உரசி, அவன் உடல் மீது கைகளை படரவிட்டான்... இரண்டொரு தழுவல்களுக்கு பிறகு நவீன்,
திரும்பி பார்த்து முறைத்தான்...
மிஷன் தோல்வி அடைந்ததாக நான் நினைத்து தலையில்
கைவைத்திருக்க, என் ஏஜன்ட்டோ மேற்கொண்டும் நவீனுக்கு கண் ஜாடை, உதட்டு
சுழிப்பு காட்டியதல்லாம் தேவையற்ற
பரிசோதனைகள்... அதன் விளைவாக சில “!@!#$#@%” வார்த்தைகளோடு நவீனை விடைபெற்று
என்னருகே வந்து நின்றான்...
“என்ன பாஸ் இப்டி திட்டுறான்?” ஒன்றும் தெரியாத அப்பாவியை
போல என்னிடம் கேட்டான்...
“நியாயமா அதைவிட மோசமா நான் உன்னை திட்டணும்....”
“பாஸ்....?”
“ஆமாடா... உன்ன நடிக்கத்தானே சொன்னேன்... நடந்த விஷயங்களை
பார்த்தா அவனை கரெக்ட் பண்ண உண்மையாவே நீ முயற்சி பண்ண மாதிரி இருந்துச்சு....
அவன் ஒத்துவந்திருந்தா ரூம் போட்டிருப்ப போல?”
“பாஸ், அவ்ளோ ரியாலிட்டியா நடிச்சதுக்கு பாராட்டுங்க....
இப்டி எல்லாத்துலயும் குற்றம் கண்டுபிடிக்காதிங்க....”
மேற்கொண்டு அவனிடம் பேசி பயனில்லை என்பதால், அவன் கையில்
சில நூறு நோட்டுகளை திணித்து கைகூப்பி வழியனுப்பி வைத்தேன்...
பொதுவாக அப்படி ஒரு பொது இடத்தில், கூட்ட நெரிசலில்
வேறொருவன் தம்மை அணுகும்போது, பெரும்பாலான கே’க்கள் மறுக்க மாட்டார்கள்... கீழே
கிடந்து ஒரு நூறு ரூபாய் தாளை எடுப்பது போன்றுதான் அப்படிப்பட்ட அதிர்ஷ்ட
வாய்ப்புகளும்... “தம் பெயர், ஊர் போன்ற சுயவிவரங்கள் சொல்ல வேண்டியதில்லை... இடம்
பொருளல்லாம் பார்க்க வேண்டியதில்லை, அதிகபட்சமாக ஒரு முட்டுச்சந்தோ, செடிகளின்
புதரோ கூட போதும்... என்ஜாய் பண்ணோமா, எந்திருச்சு வந்தோமா வகை சந்தர்ப்பங்கள்
அவை” என்பதால், கே’க்களில் பலர் அந்த வாய்ப்புகளை தவிர்க்கமாட்டார்கள்...
இரண்டாம் நாள் இன்று....
இடம் – நவீன் தங்கியிருக்கும் குடியிருப்பு... நேரம் காலை
ஒன்பது மணி...
நேற்று மாலை செய்த சோதனை என்பது, முதற்கட்ட சோதனைதான்....
இப்போ இரண்டாம் கட்ட சோதனைக்காக நம் புது ஏஜன்ட் ஒருவன்
தயார்படுத்தப்பட்டுவிட்டான்.... அரைக்கை பூப்போட்ட சட்டை, வெளுத்த பேன்ட் அணிந்து
கையில் சில மின் பரிசோதனை செய்யும் பொருட்கள் சகிதம் தயாராக என் முன் நின்றான்...
அவன் தலைமுடியை மேலும் கலைத்துவிட்டு, கையில் ஒரு கருப்பு கயிறையும்
கட்டிவிட்டேன்... ஏற்கனவே தயாராக வைத்திருந்த கேமரா ஒன்றை அவன் சட்டை பொத்தானில்
பொருத்தினேன்.... பார்க்க சாந்தமாகவும், அதேவேளையில் அவன் இயற்கை அழகு கொஞ்சமும்
குறைந்துவிடாமலும் தயார்படுத்தியபிறகு, அவனுக்கு சொல்ல வேண்டிய இறுதிகட்ட
ஆலோசனைகளையும் சொல்லிமுடித்தேன்....
“டிங் டாங்.... டிங் டாங்....” அவ்வையார் காலத்து அழைப்பு
மணியை அழுத்தினான் ஏஜன்ட்...
நான்காவது அழுத்தத்தில்தான், சோம்பலை முறித்தவாறே கதவை
திறந்தான் நவீன்... கண்களை கசக்கி தேய்த்தபடியே, “என்ன வேணும்?” என்றான்...
“இன்வர்ட்டர் ரிப்பேர்’னு வர சொன்னாங்க சார்...” கையில்
வைத்திருந்த டூல்’களை தூக்கிக்காட்டினான்....
“ஓஹோ... சரி... உள்ள வாப்பா...” சொல்லிவிட்டு வாசலில்
கிடந்த நாளிதழை பற்றிக்கொண்டு நவீன் முன்னே செல்ல, நம்மவனும் பின்னே நகர்ந்தான்...
இன்வர்ட்டர் இருக்கும் இடத்தை நோக்கி கைகளை காட்டிய நவீன், “அதான்...!” என்று
சொல்லிவிட்டு முகம் கழுவ சென்றுவிட்டான்....
ஏற்கனவே ஏஜன்ட்டுக்கு சொல்லிக்கொடுத்தது போல, கார்த்தி
பிடுங்கிய பச்சை ஒயரையும், சிவப்பு ஒயரையும் ஒன்று சேர்த்தால் வேலை முடிந்தது
என்பதை அவன் அறிந்திருந்தாலும், அவசியமில்லாமல் ஸ்க்ரூ டிரைவை வைத்து எதையோ
நோன்டிக்கொண்டிருந்தான்....
முகம் கழுவியபிறகு, துண்டால் துடைத்தபடியே ஹாலின்
இருக்கையில் அமர்ந்த நவீன், தன் அலைபேசியை ஆராயந்துகொண்டிருந்தான்....
பேன்ட்டை கொஞ்சம் கீழே இறங்க செய்து, சில அங்கங்கள்
அரைகுறையாக தெரியும்படி உடைகளை கலைத்துவிட்டான் ஏஜன்ட்...
ஆனாலும், நவீன் கண்டுகொள்வதாக தெரியாததால், பேச்சை
தொடங்கினான்...
“நீங்க மட்டும்தான் தங்கி இருக்கிங்களா சார்?”
“இல்ல... ஒபாமாவும், மோடியும் என் கூட தங்கி இருக்காங்க....
உன் வேலை முடிஞ்சிடுச்சா இல்லையா?” பிடிகொடுக்காத பதில்...
“முடிச்சிடலாம்னுதான் பாக்குறேன், சிக்க மாட்டேங்குது
சார்... அது கைல கெடச்சா ஒரு சின்ன கடி, மேல உள்ளத நீக்கிட்டு ஒரே ஒரு சொருகு...
அவ்ளோதான்... வேலை முடிஞ்சிடும்....” கண்ணடித்து சிரித்தான் ஏஜன்ட்....
“ஏய்.... என்னத்த சொல்ற?” பதறியபடி கேட்டான்...
“ஒயரை சொன்னேன் சார்... மேல உள்ள பிளாஸ்டிக்கை கடிச்சு
துப்பிட்டு, அந்த காப்பர் கம்பியை இந்த இன்வர்ட்டர்’ல சொருகிட்டா முடிஞ்சிடும்
வேல.... ஆமா, நீங்க என்னத்த நினச்சிங்க?” இப்போதும் அதே குதர்க்க சிரிப்பை
உதிர்த்தான்...
“எதுவா இருந்தாலும் நான் பாத்துக்கறேன், நீ முதல்ல
கிளம்பு....” என்றபடி நம் ஏஜன்ட்டை வலுக்கட்டாயமாக வெளியேற்ற எத்தனித்தான்
நவீன்...
“சார்... சார்... இப்போ வேலை முடிஞ்சிடும்.... கரண்ட்
போச்சுன்னா இன்வர்ட்டர் இல்லாம கஷ்டப்படுவீங்க....” வாசலில் நின்றும் கூட ஒருமுறை
கேட்டுப்பார்த்த ஏஜன்ட்டை, கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை நவீன்...
“இனிமே கரண்ட் போகாதுன்னு அம்மா அறிக்கை
விட்டிருக்காங்க.... அப்டியே கரண்ட் போனாலும், நான் விசிறியை வச்சு
வீசிக்கறேன்.... நீ கிளம்பு...” என்றபடி கதவையும் இழுத்து சாத்திவிட்டான் நவீன்...
இரண்டாம் முயற்சியும் தோல்வி, மேற்கொண்டு யோசிக்கணும்....
சில வகை கே’க்கள் தனக்கு கீழ் நிலையிலுள்ள நபர்களுடன்
உறவாடுவதை விரும்புவார்கள்... பெரிய எதிர்ப்பு அவர்களிடத்திலிருந்து வராது என்கிற
ஒரு முதலாளித்துவ சிந்தனை கூட அதற்கு காரணமாக இருக்கலாம்... அதுவும் வீட்டிற்கே
வந்து ஒருவன் வலை வீசும்போது, நவீன் என்கிற மீன் அதில் சிக்காமல் தப்பியதை நான்
இன்னும் ஆச்சரியம் விலகாமல்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்...
இறுதிக்கட்ட சோதனை...
முதல் முறை பொது இடத்தில் இன்னொருவனோடு குழாவிட நவீனுக்கு
தயக்கம் இருந்திருக்கலாம்... இரண்டாவது முயற்சியில், தனக்கு கீழுள்ள ஒருவனோடு
உறவாட அவன் ஈகோ தடுத்திருக்கலாம்... இப்படிப்பட்ட யூகங்களின் விளைவாகத்தான் இப்போ
மூன்றாவது முயற்சி... இம்முறை, சராசரி ஆண்களைவிட கொஞ்சம் அழகு மிகுந்த ஒரு ஆடவனை
களத்தில் இறக்கப்போகிறேன்... நவீனின் அத்தனை ரசனைகளையும் ரசிக்கும் ஒத்த ரசனையுடைய
ஒருவன் நேரடியாகவே நவீனை அணுகும்போது, அதை மறுக்கும் அளவிற்கு நவீன் உத்தமனா?
என்பதை அலசத்தான் இம்முயற்சி...
இடம் – நவீன் வழக்கமாக மாலை வேளையில் உலாவும் குடியிருப்பு
மொட்டை மாடி... நேரம் – அந்தி மாலை ஆறு மணி...
காதில் ஹெட்செட்டில் இளையராஜாவின் இன்னிசையை கேட்டபடி,
மேற்கில் அஸ்தமிக்கும் சூரியனை அதிசயித்து பார்த்துக்கொண்டிருந்தான் நவீன்...
செம்மஞ்சள் ஒளிக்கீற்று ரம்மியமான சூழலை
உருவாக்கிக்கொண்டிருந்தது... பள்ளி முடிந்தபின் வீட்டை நோக்கி விரையும் குழந்தைகளை
போல, பறவைகள் பலவும் தத்தம் கூடுகளை நோக்கி விரைந்துகொண்டிருந்தது... அந்த
பறத்தலில் தன் குஞ்சுகள், கூடுகள் பற்றிய கவலைகள் கூட அப்பட்டமாக தெரிந்தது...
அப்போதுதான் நவீனின் தோளை ஒரு கை தொட, திடுக்கிட்டு
திரும்பினான்...
ஆறடி உயரம், மஞ்சள் நிறம்,திருத்தமான அங்கங்கள்... செந்நிற
உதடு, அது அசைந்துகொண்டிருப்பதை சில நொடிகள் கழித்துதான் உணர்ந்தான் நவீன்....
அவன் ஏதோ பேசுகிறான், அவசரமாக ஹெட்செட்டை கழற்றி கவனிக்க தொடங்கினான் நவீன்....
“என்ன சார், தனியா நின்னு எதையோ வெறிச்சு பார்க்குறீங்க?”
சிரித்தான் புதியவன்...
தன்னிலை மீண்ட நவீன், “இல்ல.... சும்மாதான்...”
தடுமாறினான்...
“எவ்ளோ நல்லா இருக்குல்ல.... லேசான தென்றல் காற்று, சூரியன்
மறையுற அந்த சிவப்பு நிற வானம்... அப்புறம் இந்த தனிமை.... அனேகமா அந்த தனிமையை
ஒன்ன மட்டும் நான் கெடுத்திட்டேன்னு நினைக்குறேன்...” சிரித்தான்...
“ச்ச... ச்ச... அப்டிலாம் இல்ல... ஆமா, நீங்க யாரு?...
உங்கள நான் இங்க பார்த்ததே இல்லையே?”
“இங்க இருக்குற அறுபத்தி எட்டு வீடுகள்ல, ஒரு வீட்டுக்கு
வந்த கெஸ்ட் நான்... அது எந்த வீடுன்னு சொன்னா கூட உங்களால புரிஞ்சுக்க
முடியாது... இந்த ஊர்ல பால் வாங்கவும், பேப்பர் எடுக்கவும் மட்டும்தானே கதவை
திறக்குறீங்க....” அழகாக சிரிக்கிறான்...
“ஹ்ம்ம்... அதுவும் உண்மைதான்.... எந்த ஊர் நீங்க?”
“இன்னும் நாம இங்க இருக்கப்போறது அதிகபட்சம் ஒரு மணி
நேரம்தான்... அதுல நம்ம பூர்வீகம் பற்றி பேசி நேரத்தை போக்கனுமா?... வேற எதாச்சும்
பேசுவோம்... சூரியனை அவ்ளோ நேரம் பாத்திங்க, அனேகமா கவிதை எழுதுவீங்க போல....
அதுப்பத்தி பேசலாம்....”
“கவிதையா?... அட ஏங்க நீங்க வேற!... அதல்லாம் வராதுங்க...”
“இழுத்தா வராம அடம்பிடிக்க அது என்ன கழுதையா?, கவிதைங்க....
முயற்சி பண்ணுங்க... இப்போ இல்ல, தனியா இருக்குறப்போ...”
இந்த அர்த்தமற்ற பேச்சுகள் அணைபோடப்படாமல், நேரத்தை
கடத்திக்கொண்டே இருந்தது.... கிட்டத்தட்ட நிலவு தன் ஆளுமையை செலுத்தப்போகும்
நேரமும் வந்துவிட்டது....
“உங்க கையை நீட்டுங்க...” நம்ம மாடல் ஆட்டத்தை
தொடங்கினான்....
“எனக்கு கை நீட்டி பழக்கமில்லைங்க....” டைமிங் நகைச்சுவையை
உதிர்த்தான் நவீன்....
“நல்ல ஜோக்... ஆனால், இது விஜயகாந்த் மாதிரி ஆளுங்க கண்ணை
உருட்டி பேசினாத்தான் பொருத்தமா இருக்கும்... உங்களுக்கு ஒத்துவரல” நம்மாளும்
பதிலுக்கு வாரினான்....
“ஓகே ஓகே.... இந்தாங்க.... என்ன பண்ண போறீங்க?” என்றபடி
கையை நீட்டினான்....
“ஒண்ணுமில்ல எனக்கு கொஞ்சம் அஸ்ட்ராலஜி தெரியும், அதான்
ஜோசியம் பாக்கலாம்னு...” என்றபடி அரைகுறை வெளிச்சத்தில் நவீன் கையிலுள்ள ரேகையை
மீட்டினான்... சில வினாடிகள் கழிய தந்திரத்தை தொடங்கினான் மாடல், “உங்க பூமத்திய
ரேகை பூடகமா ஒன்னு சொல்லுது...”
“ஹ ஹா... என்னத்த அப்டி சொல்லுது?” ரசித்தபடி கேட்டான்
நவீன்....
“சொல்றேன்.... ஆனால், நீங்க தப்பா நினைக்க மாட்டிங்களே?”
“தப்பா நினைக்குற அளவுக்கு எதுவும் சொல்லமாட்டிங்கன்னு
நம்புறேன், சொல்லுங்க...”
“நீங்க கே’வா?”
மெல்லிய அதிர்ச்சி சில நொடிகளில் மீளப்பட்டவனாக, “ஆமா....
எப்டி எப்டி?? நீங்க.... ஐயோ...” தடுமாற்றத்தில் உளறினான் நவீன்...
“கொஞ்சம் கூல் ஆகுங்க நவீன்....” தோளை தொட்டு வருடினான்...
“ஓகே ஓகே.... ரேகைல கண்டுபிடிக்க முடியுமா இந்த விஷயத்தை?”
பதற்றம் மிகுந்தவனாக தன் ரேகையை அதிர்ச்சியில் பார்த்தவாறே கேட்டான்...
“பொறுமையா இருங்க பாஸ்.... உங்க ரேகையை பார்த்து நான்
கண்டுபிடிக்கல, ஒரு மணி நேரம் பேசுனத வச்சும், உங்க ரசனைகளை கவனிச்சும்
சொன்னேன்... உண்மையில் எனக்கு அஸ்ட்ராலஜி’லாம் தெரியாது, கொஞ்சம் சைக்காலஜி
தெரியும் அவ்ளோதான்...” அண்டப்புளுகையும் ஆகாச புளுகையும் அளந்துவிட்டான்
நம்மாளு....
“ஓஹ்!” அதற்கு மேல்
தன் அதிர்ச்சியை, ஆச்சரியத்தை எப்படி வெளிப்படுத்துவது! என்று புரியாமல்
தடுமாறினான் நவீன்....
“உங்ககிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும், அதையும் தப்பா
எடுத்துக்காதிங்க....”
“இன்னொரு விஷயமா?... ஒன்னுக்கே கை காலல்லாம் ஒதறுதுங்க....
சொல்லுங்க...” எச்சிலை விழுங்கியபடி கேட்டான் நவீன்....
“ஐ லவ் யூ....” எவ்வித சலனமும் இல்லாமல் சொல்லிவிட்டான்
புதியவன்...
சில நிமிட மௌனத்திற்கு பிறகு தொடங்கினான் நவீன்,
“சாரிங்க... நான் கமிட்டட்... என் லவ்வரும் நானும் இன்னும் கொஞ்ச நாள்ல கனடா
போகப்போறோம், அங்க கல்யாணம் குழந்தைன்னு செட்டில் ஆகப்போறோம்...” சொல்லிவிட்டு
மேற்கொண்டு எதையும் கேட்க விரும்பாதவனாக மாடிப்படிகளை நோக்கி விரைந்தான் நவீன்....
*****************************************
திங்கள் கிழமை காலை, சரியாக ஒன்பது மணிக்கே என் அலுவலகம்
வந்துவிட்டான் கார்த்தி.... அவன் கண்களில் ஆர்வம் அலை பாய்ந்தது.... என் மேசை
மீதிருந்த கோப்புகளில் கைகளை விட்டு துழாவினான்....
“ஏய்... பொறுமையா இரு....” அவன் கைகளை விலக்கி, என் அறை
நோக்கி அவனை அழைத்து சென்றேன்...
மூன்று சோதனைகள் பற்றியும், நவீன் நிச்சயமாக சந்தேகத்திற்கு
அப்பாற்பட்டவன் என்பதையும் கார்த்திக்கு தெளிவாக விளக்கினேன்....
“அப்போ அவனை முழுசா நம்பலாம்னு சொல்றியா?” இன்னும்
சிதறிக்கிடந்த சந்தேகங்களை பொறுக்கி எடுத்து கேட்டான் கார்த்தி....
“ஆமா....”
“அவனோட கனடால செட்டில் ஆகலாம்னு சொல்றியா?”
“ஆமா....”
“சரிடா... உன்னை நம்பித்தான் நான் களத்துல
குதிக்கபோறேன்.... அப்புறம் எதாச்சும் ப்ராப்ளம் வந்துச்சுன்னா உன்னைய
கொன்னுடுவேன்...”
“கத்தி, துப்பாக்கி வேணாலும் இப்பவே நான் தரேன்.... அவனை
முழுசா நம்பலாம்.... ஆனால்....” இழுத்தேன்...
“என்னடா ஆனான்னு இழுக்குற?”
“இதுவே நாம சந்திக்குற கடைசி சந்திப்பா இருக்கட்டும்
கார்த்தி...” என்று நான் சொன்னபோதுதான், அதுவரை என் வெற்றுடம்பில் தலை சாய்ந்து
படுத்திருந்த கார்த்தி, திடுக்கிட்டு எழுந்தான்...
என் கன்னங்களை நனைத்திருந்த அவன் எச்சில்களையும், பல வருட
உறவின் விளைவான துரோக எச்சங்களையும் கழுவிட குளியலறை நோக்கி நகர்ந்தேன்....
(முற்றும்)