Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday, 25 December 2012

"வசைபாடுபவர்களுக்கு ஒரு விளக்கம்"....

-->
“கே அமைப்புகள்” தொடர்பாக நான் பதிவிட்ட கட்டுரைக்கு பலரும் மின்னஞ்சல் மூலம் தங்கள் கருத்துகளையும், ஆதரவையும் தெரிவித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி...... சில அமைப்பை சார்ந்தவர்கள் என்னை தொடர்பு கொண்டு, தங்கள் சுய விளக்கத்தை கொடுத்தனர்.... நிஜமாகவே அவர்களின் பெருந்தன்மையும், கருத்துக்களை மதிக்கும் பக்குவத்துக்கும் நன்றிகள்.... ஆனால்,அந்த கட்டுரை வெளியான பிறகு ஒருசில நபர்கள் என்னை ஏளனமாக பேசுவதும், எள்ளி நகையாடுவதும் சமூக வலைதளங்களில் காணமுடிகிறது...... சில அமைப்பை சேர்ந்த நபர்கள் நேரடியாகவே என்னை தனிநபர் விமர்சனம் செய்ததும் நடக்கிறது...... எதற்கும் நான் கவலையோ, வருத்தமோ படவில்லை.... அந்த கட்டுரை பதிவிட்டபோதே அத்தகைய கலவையான விமர்சனங்களை நான் எதிர்பார்த்தேன்....

ஆனால், தனிநபர் விமர்சனம் தொடருமானால், நானும் என் நிலையிலிருந்து கீழிறங்கி வந்து பேச வேண்டி வரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்...



முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்..... நான் எந்த அமைப்பையும் சாராதவன்.... ஒரு எழுத்தாளன், சமூக விமர்சகன்.... இதுமட்டுமே என் அடையாளம்..... கேள்வி கேட்கும் தளத்தில் நான் இருக்கிறேன், அதற்கு பதில் சொல்லும் பொறுப்பில் அந்த அமைப்புகள் இருக்கின்றன......

இதுநாள் வரை உங்கள் செயல்களை “கை நீட்டி” விமர்சிக்க எவரும் முன்வரவில்லை..... இன்று  நீங்கள் எதிர்பாராத கேள்விகளை நான் கேட்டதன் விளைவாக அத்தகைய நபர்களின் கோபம் வெளிப்படுகிறது.....



அவர்களுக்கான என் பதில்களும், அடுத்தகட்ட கேள்விகளும் இதோ......



என்னை நான் வெளிப்படுத்திக்கொள்ளாததுதான் உங்கள் பிரச்சினையா?.... விஜய் என்பவன் யார்? என்கிற தகவல் உங்களுக்கு முக்கியமா? அல்லது அவன் சொல்லும் விஷயங்கள் முக்கியமா?..... என் கருத்துகளுக்கு பதில் சொல்ல அஞ்சி, என்னை வெளிப்படுத்த சொல்வது நகைப்பைத்தான் உண்டாக்குகிறது..... நான் எவ்விதமான கற்பனை உலகிலும் இதை காணவில்லை.... பல அமைப்புகளை சேர்ந்த நண்பர்களிடம், இந்த சமூகத்து பலவிதமான நண்பர்களுடன், ஊடக நண்பர்களுடன் என்று கலந்து பேசியே எழுதியது இந்த கட்டுரை...... என்னை ஒட்டுமொத்த கே இளைஞர்களின் பிரதிநிதியாக நான் கூறவில்லை, இந்த கே சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் ஒருவனாகவே இவற்றை கூறுகிறேன்....

மறுக்கப்பட்ட கே சமூகத்துக்குள் மறைக்கப்பட்ட மக்களில் ஒருவனாகத்தான் என் கேள்விகளை முன்வைத்தேன்.....



முதலில் நான் நட்சத்திர விடுதிகளில் நடக்கும் கூட்டங்களை பற்றி கூறியதற்கு அவர்கள் கேள்விக்கான என் பதில்.... எல்லா கூட்டங்களும் அப்படி நடப்பதாக நான் கூறவில்லை.... ஆனால் பெரும்பாலான கூட்டங்கள் (அதிலும் கேளிக்கை தொடர்பான கூட்டங்கள்தான் அதிகம்) பொதுமக்கள் எளிதில் அணுகமுடியாத இடங்களில் தான் நடக்கிறது.... பொதுமக்கள் எளிதில் அணுகும் இடம் என்றால் எதை கூறுகிறார்கள்? என்று தெரியவில்லை.... ஸ்பென்சர் பிளாசா, சிட்டி சென்டரிலும் கூட்டம் கூடுகிறது, ரங்கநாதன் தெருவிலும் கூட்டம் கூடுகிறது, மெரீனா கடற்கரையிலும் கூட்டம் கூடுகிறது... நீங்கள் எந்த மக்களை பொதுமக்களாக பார்க்குறீங்க?... நடுத்தர வர்க்க மக்கள் பற்றி இன்னமும் நீங்கள் யோசிக்கவே இல்லை...  இந்த ஒரு வருடத்தில் நடந்த கூட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை பற்றி விளக்கமான வெள்ளை அறிக்கை தாருங்கள், நிச்சயம் அதையும் நான் வலைப்பூவில் பதிகிறேன்.... அதன்பின்பு, முடிவை நம் சமூக மக்களிடமே விட்டுவிடலாம்....



வெளிநாட்டு நிதிகள் பற்றி அடுத்து சொல்கிறேன்.... சில அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதிகள் வருவதாக அமைப்பினை சார்ந்தவர்களே கூறினார்கள்.... மேலும், அப்படி இல்லாத அமைப்புகளிடமும் நான் சொல்லும் விஷயம் “முறையாக செலவிடுங்கள்” என்பதுதான்....  நான் பதிவில் சொன்னது போல, நன்கொடையாளர்கள் நிதியாக இருந்தாலும் அதை தவறாக பயன்படுத்துகிறீர்கள் என்று சொல்லவில்லை, முறையாக பயன்படுத்தவில்லை என்றுதான் சொல்கிறேன்..... இரண்டுக்கும் வித்தியாசம் தெரியுமென நினைக்கிறேன்.... ஆக்கப்பூர்வமாக, அதை பலரிடத்திலும் கொண்டு செல்லும் விதமாக செலவழியுங்கள் என்றுதான் சொல்கிறேன்....









ப்ரைடுகள் நடப்பதை நாம் தவறென்று சொல்லவில்லை.... அதை தாண்டிய நடவடிக்கைகள் பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை என்பதைத்தான் நான் குற்றமாக சொல்கிறேன்.... மற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளோடு, ப்ரைடு நடப்பதை நான் தவறென்று கூறவில்லை....  நான் இப்போதும் சொல்கிறேன், இது எந்த தனிப்பட்ட அமைப்பை பற்றியும் நான் கூறவில்லை.... ஒட்டுமொத்தமாக அனைத்து அமைப்புகளையும் நான் கேட்கும் கேள்வி....





அமெரிக்காவில் இப்போது போராட்டங்கள் நடப்பது ஒருபால் ஈர்ப்பு திருமனங்களுக்காக... இங்கே நடப்பதோ ஒருபால் ஈர்ப்பு அடிப்படை உரிமைக்காக.... அவர்கள் நம்மைவிட பலகட்ட வளர்ச்சியில் உயரத்தில் போராடுகிறார்கள்..... மேலும், இந்தியாவைப்போல அங்கு ஒரு நாட்டுக்கு ஒரு சட்டம் இல்லை.... ஒவ்வொரு மாகாணத்துக்கும் வேறுபடும்.... பல மாகாணங்களும் இன்று ஒருபால் திருமணத்தை அங்கீகரிக்கும் மனநிலைக்கு கூட வந்துவிட்டார்கள், வந்துகொண்டும் இருக்கிறார்கள்..... இதையெல்லாம் விட நாம் அங்கு சமூக ரீதியான அங்கீகாரத்தை பார்க்க வேண்டும்.... அவர்கள் சமூக அங்கீகாரத்தை எப்போதோ அடைந்துவிட்டார்கள்..... நம் மக்களோ, இந்த சமூகத்தை சார்ந்தவர்களோ அடிப்படை விழிப்புணர்வு கூட பெறவில்லை என்பதுதான் என் முக்கிய வாதம்.....

சட்டம் அங்கீகரிப்பது வேறு சமூகம் அங்கீகரிப்பது என்பது வேறு..... அவர்கள் சமூக ரீதியிலான விழிப்புணர்வை அடைந்துவிட்டார்கள் என்பதை நாம் அறிவோம்.... அமெரிக்க மாற்றம் ஒருநாளில் வந்துவிடவில்லை.... ஸ்டோன்வால் நிகழ்வுக்கு பிறகு, புலி பாய்ச்சலில் போராடிய அந்த மக்களுக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகே சொல்லும்படியான வெற்றி கிடைத்தது.... ஆனால், ஆமை வேகத்தில் செல்லும் நம் அமைப்புகளால் இந்த மாற்றத்தை கொண்டுவர முடியாது என்றுதான் சொல்கிறேன்.... உங்கள் வேகத்தை அதிகப்படுத்துங்கள் என்றுதான் சொல்கிறேன்.....\



மற்றபடி நான் கேட்ட பல கேள்விகளுக்கும் பதில் இல்லையே????

#சென்னையை தாண்டிய உங்கள் பங்களிப்பு என்ன? அமைப்புகளின் சென்னை தாண்டிய பங்களிப்புகள் என்னென்ன?



#தமிழ் இலக்கிய வட்டத்தில் இதுவரை ஒரு மாத இதழ் கூட தொடங்காதது ஏன்?... பல இலக்கிய வட்ட எழுத்தாளர்களை ஒன்றிணைத்து அவர்கள் வாயிலாக ஏன் விழிப்புணர்வை ஏற்படுத்த முயலவில்லை?

பிரிட்டனில் ஒருபால் ஈர்ப்பு ஆதரவு அமைப்புகளின் பங்களிப்பு இலக்கிய வட்டத்தில் வெகுவாக பிரதிபலித்தது...... .... புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர்களான ஈ.எம் போர்ஸ்டர், ஜேம்ஸ் பால்ட்வின், கிறிஸ்டோபர் ஐஷர்வுட், எட்மண்ட் வைட், நோபல் பரிசு வென்ற ஆண்ட்ரே கைடே போன்றவர்கள் தங்கள் இயல்பான கதைகளுக்கு மத்தியில் ஒருபால் ஈர்ப்பு கதைகளையும் நிறைய எழுத அந்நாட்டு அமைப்புகள் ஊக்குவிப்பும், வழிவகையும் செய்துகொடுத்தனர்...... லாம்டா இலக்கிய விருது, ஸ்டோன்வால் புத்தக விருது போன்ற உலக புகழ்மிக்க பல விருதுகள் ஒருபால் ஈர்ப்பு கதைகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.....

அங்கும் இப்படிப்பட்ட அமைப்புகள்தான் இதை முன்னெடுத்தது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.... சமூக மாற்றம் ஏற்பட, வெகுஜன மக்களையும் சென்றடைந்திட இலக்கிய வட்டம் ஒரு முக்கிய பங்காற்றுகிறது என்பதை உணருங்கள்.....

ஆனால், இங்கு எவ்வளவோ தரமான எழுத்துகள் ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவாக எழுதப்பட்டாலும், அதை அங்கீகரிக்க, மக்களை சென்றடைந்திட நீங்கள் நிற்கவில்லை என்பது என் முக்கிய குற்றச்சாட்டு.....

மேலும், விகடனில் ஒரு “இன்பாக்ஸ்” செய்தி சமூக மாற்றத்தை உண்டாக்கிவிடாது..... “சல்மானின் அடுத்த காதல்”, “நமீதாவின் அடுத்த படம்” போன்ற கிசுகிசுப்புகளுக்கு மத்தியில் வரும் இந்த ஒரு செய்தி எந்த அளவில் மாற்றத்தை உண்டாக்கும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.....

தமிழில் இதுவரை நீங்கள் ஒருபால் ஈர்ப்புக்கான ஒரு களத்தை உருவாக்கவில்லை என்பது அப்பட்டமான உண்மை..... இதை சமாளிப்பதை  விட்டுவிட்டு, இனியாவது எம் தமிழர்களை சென்றடைய அவர்கள் மொழியில் ஒருபால் ஈர்ப்பு விஷயங்களை கொண்டு சேருங்கள்....



#தேடி வருபவர்களுக்கு கலந்தாய்வு கொடுப்பது என்பது உண்மையான விழிப்புணர்வு இல்லை, எத்தனை பேரை தேடி சென்று கலந்தாய்வு கொடுத்தீர்கள்?

#நடுத்தர வர்க்க மக்களை உங்கள் அமைப்புகள் எந்த விதத்தில் சென்றடைந்திருக்கிறது?....



அடுத்தது இன்னுமொரு முக்கியமான குற்றச்சாட்டு......

ஊடகங்களில் ஒருபால் ஈர்ப்பை பற்றி தவறான, கீழ்த்தரமான பிம்பம் உருவாக நீங்கள் ஏன் வழி விட்டீர்கள்?...... ஒருபால் ஈர்ப்பு நபர்களை ஏதோ “காம மிருகம்” போலவும், கேவலமான மனிதர்களாகவும் சித்தரித்த திரைத்துறையை எதிர்த்து குரல் கொடுக்காதது ஏன்?.....

ஒரு சாதி தொடர்பான வசனமோ, மத ரீதியிலான காட்சியோ அந்த மக்களை கொஞ்சம் தவறாக சித்தரிப்பதாக இருந்தாலும், அந்த சாதி, மத அமைப்புகள் போராடி அந்த காட்சிகளை நீக்க போராடி, வெற்றியும் கண்டார்கள்....

அவ்வளவு ஏன்?.... பிரபல நகைச்சுவை நடிகர், ஒரு நேர்காணலில் திருநங்கைகளை பற்றிய  தவறான கருத்தை சொன்னதற்கு, அந்த நடிகர் மன்னிப்பு கேட்கும் வரை போராடினார்களே திருநங்கைகள்... அப்படி ஒரு சிறு போராட்டத்தை முன்வைத்திருந்தால், இன்றைக்கு ஒருபால் ஈர்ப்பு நபர்களை பற்றிய கேவலமான மனநிலை ஊடகங்கள் மூலம்  நடுத்தர, கிராமத்து மக்களை சென்றடைந்திருக்காது.....



ஒருபக்கம் நித்தமும் கே பற்றிய விழிப்புணர்வின்மையாலும், சமூக நிர்பந்தத்தாலும் பலர் இறந்துகொண்டிருக்கும்போது, சமூக விழிப்புணர்வை அடைந்துவிட்டதாக ப்ரைட் நடத்துவதும், கேளிக்கை விருந்துகளில் ஈடுபடுவதும் ஏன்? என்றுதான் கேட்கிறேன்.....



ப்ரைடுகள் நடத்தி நீங்கள் ஆங்கில பத்திரிகைகளில் போடும் செய்தியால், தமிழகத்தை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு “கே பற்றிய முழுமையான வளர்ச்சியை தமிழகம்” பெற்றிருப்பதாக தவறான பிம்பம் உருவாக்க முயல்கிறீர்கள்....

இப்போதும் சொல்கிறேன், இது பல தமிழக ஒருபால் ஈர்ப்பு நபர்களின் கண்ணீரால் எழுதப்பட்ட கட்டுரை... அவர்கள் மனசாட்சியின் குரலாகத்தான் நான் இதை இங்கே முன்வைத்தேன்.....

உங்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகள், எங்களை வந்தடையவில்லை என்பதுதான் இந்த மக்களின் ஆற்றாமை..... என்னை ஏளனப்படுத்தியும், என் கட்டுரையை தரக்குறைவாக விமர்சித்தும் நீங்கள் இதற்கு பதில் சொல்வீர்களானால் நிச்சயம் ஒருநாள் இதே கேள்வியை பலரும் உங்கள் முன்பு வைப்பார்கள்.... இது நீங்கள் கோபப்படுவதற்கான கேள்விகள் இல்லை, உங்களை சுய பரிசோதனை செய்ய இதை களமாக வைத்து யோசியுங்கள்.... ஒட்டுமொத்த உலகும் எங்கள் பிரதிநிதியாக உங்களைத்தான் பார்க்கிறார்கள், அந்த உரிமையிலும், ஏமாற்றத்திலும் தான் அந்த கட்டுரை எழுதினேன்....

“விஜய்” என்ற நபரை விமர்சிக்காமல், இனியாவது அவன் சொன்ன விஷயங்களை யோசியுங்கள்....

7 comments:

  1. # சென்னையை தாண்டிய உங்கள் பங்களிப்பு என்ன ? அமைப்புகளின் சென்னை தாண்டிய பங்களிப்புகள் என்னென்ன? Mikavum sariyaga keatirgal nanba. Thamizhagathil chennaiyai thavira pira districtsla irukkura ovvoru gayoda athangam ithu than. Intha gay communitiesku ottu moththa tamilnadum chennaikula adankittatha ninaipu. Yean matha districtsla irukkura gayslam ivangaluku theariyalaya? Ok ivanga chennaila irunthu arambikkatum ana ivalavu nazhkalil yeavalavu thurathuku ivanga makkal kitta gay patriya purithala yearpaduthi irukkanga. Innaikum chennaila namaku name yeanna "SOMBU/USSS/POTTA" Innum solla mudiyatha mathiri yeathanaiyo visayangal ithu than ivanga awarness create pannuna latchanama? Ithuku idaila pride oru keadu? .
    ஊடகங்களில் ஒருபால் ஈர்ப்பை பற்றி தவறான, கீழ்த்தரமான பிம்பம் உருவாக நீங்கள் ஏன் வழி விட்டீர்கள்?.. Ayiram pear pala natkal poradi yearpaduthum vilipunarvai oodagangal orea nazhil year paduthi vidukirathu! Athagaiya mapearum sakthiyai nam akkathirku payan paduthamal yean thavara vittargal ivargal. Indru ayal nadugalil gays patri padangalum, tv serialgalum velivarukindrana but inga "avana ne/korilla cell/" innum yeavalavu vithangalil keavala paduthukirargal ithai ivargal yean thatti ketka villai. Naam anaivarum arintha ondru samibathil mathiya arasu paadathittathil oru kuripitta samugathinar patri thavaraga kuriyatharkaga yeathanai kandana poratangalum aarpaatangalum nadanthana. Nan ivargalai aarpaatam seiya sollavillai atleast oru yeathirpu thearivithu arikaiyavathu velitrukalamea. Nan othukolkirean gay love, ri8s pathi niraiya kurumpadangal varukindrana aanal avatrai patri internet use pannuravanga yeathanai pearuku theariyum. Ipadi use pannuravangalukea theariyathapa mathavangaluku yeappadi theariyum. Nan ondru mattum keatkirean Indiavil uruvana muthal GAY LOVE pathina padathai inga yeathanai pear parthirupanga(gay people) atleast vealiyanathavathu theariyuma. But antha padam yeavalavu viruthugal vanguchu theariyuma. Ippadi nattin adipadai aanavargal kitta awarness create pannama pride nadathurathula yeanna use?

    ReplyDelete
  2. நன்றி பஷீர்.....
    என் கருத்துக்களை வழிமொழிந்தாலும், நான் சொன்னதைவிட இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கீங்க.... எனக்கு மிகவும் மனநிறைவாக இருக்கு.....

    ReplyDelete
  3. kaalam kadantha en entha karuthukuku muthalil mannipu korugiran vijay.

    hmmm

    ippo ethukaga ellarum koba paduranga......

    unmaya yaravthu sollathan saivanga athilirunthu eppidi namma nama merugathika muiumnu pakanuma thavira sanda podrathula arthama illa..
    na oru p.hd schlor ana nanaen vitla en thambiyala poyya nu tha avamanapadutha pattan, trichyla nariya avamanangala santhichu irukan.....padicha engaluka ippidi na oru kuk gramathula iruka payyanoda nalamaya yosichi pakanum.....avanala epidi chennaiku vara mudium.....supporters tha avana thadi poganum..........corprate parties,pride ithu mattum lgbt munatrathukana vaisayangal illa athaum thandi naraya irruku..........ella urlaum vilipunarvu pracharam pannunga.......tv la movies la vara ethavathu udagangallula lgbt patthi nakkal adichi thappa pasuna poratam pannunga kandipia nangalam atharavu tharivippom, unga kuda poraduvom atha vittu tu nalla karuthu solravangala sadathinga......vijay mapla go ahead machi........i am gay i always support u.
    valga valamudan

    ReplyDelete
  4. நண்பர் விஜய்க்கு..

    கே அமைப்புகள் மற்றும் நமது அமைப்பு சார்ந்த பணிகள் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு நான் நேரடியாகவே பதிலளிக்க விரும்பினதாலதான் இந்தக் கடிததத்தை எழுதுகிறேன். இதையும் நீங்கள் உங்கள் வலைப்பூவில் பதிவிட்டு அதன் மூலம் உங்கள் வாசகர்கள் இருதரப்பு கூற்றினையும் தெரிந்துகொள்ள உதவுவீங்கன்னு நம்பறேன்.

    உங்கள் மூலமாக தான் நாங்கள் முதல்முறையாக விமர்சன்ங்களை எதிர்கொள்கிறோம் என்றும், அதனாலதான் அதை எங்களால் ஏற்க முடியவில்லையென்றும் குறிப்பிட்டிருக்கீங்க. நீங்கள் கூறுவதில் அல்லது கூறுவதாக எங்களுக்கு விளங்கியதில், உண்மை இருப்பதாய் கொள்ள முடியவில்லை. ஏனெனில் பூமிக்கு வந்த நாளிலிருந்து சமுதாயத்திடமிருந்தும், குடும்பத்தாரிடமிருந்தும் நாம் எதிர்ப்பை மட்டுமே பெற்று வருகிறோம். இன்னும் அது தொடர்கதையாத்தான் உள்ளது. அதையும் மீறி வெளியே வந்து இந்தப் பணிகளில் ஈடுபடுவதே உங்களைப் போன்ற நண்பர்களுக்கு நம்பிக்கை கொடுக்கத்தான். விமர்சனங்கள் எங்களுக்கு புதிதல்ல. 377 வழக்கு மற்றும் ப்ரைட் மார்ச்களுக்கு பிறகு தான் நம் நாட்டில் இந்த அளவுகேனும் ஊடகங்கள்லயும் இணையத்திலயும் தன்பால்ஈர்ப்பு பற்றி விவாதிக்க முடியுதுங்குறதை நீங்க கவனிக்கனும்.
    சில பழமைவாத அமைப்புக்கள்ல இருந்து உயிருக்கு அச்சுறுத்தல்கள், குடும்பத்தினரே வேறுபடுத்தி பார்க்கிறது போன்றவை மட்டுமில்லாம பல பேர் கிட்ட இருந்து நமக்கு கிடைச்சதெல்லாம் எதிர்மறையான கருத்துக்கள் மட்டும் தான். ஆனா இதையெல்லாம் மீறி ஊடகம், காவல்துறை, குடும்பங்கள், சுகாதார அமைப்புகள், அரசுன்னு எல்லோரோட கவனத்தையும் நம்ம பக்கம் திருப்பி அவர்களுக்கு தன்பால் ஈர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திக்கிட்டுதான் இருக்கோம்.. சமீபத்தில நாம நடத்துன ப்ரைடோட நோக்கமே பாலியல் சிறுபான்மையினர் நலச்சங்கம், Gay, Lesbian and Bisexual (Sexual minorities) Welfare Board-ஐ அரசாங்கம் அமைக்கணும்கிறது தான். இதற்கான பிரஸ் ரிலீஸ் கீழ உள்ள லிங்க்ல இருக்கு. தயவுசெஞ்சு அதை பாருங்க

    http://chennaidost.com/chennai-rainbow-pride-2012-2/

    ப்ரைட் ஊர்வலம் சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்கள்ல நடந்தது ஆனா அருப்புக்கோட்டை போன்ற சின்ன ஊர்கள்ல நடக்கலங்குறது உண்மை தான். ஆனா அது போன்ற ஊர்கள்ல நடத்தக் கூடாதுங்குறது எங்க எண்ணமில்ல. நடத்தும் அளவிற்கு காலம் இன்னும் கனியவில்லை என்பதுதான் உண்மை. உங்களுக்காக ஒரு சின்ன புள்ளிவிவரம்.. 2009 சென்னைல நடந்த ப்ரைட்ல ஏற்றத்தாழ்வு இல்லாம, மொழி, பாலின பாகுபாடு பார்க்காம 800 பேர் கலந்துக்கிட்டாங்க. ஆனா 2012ல மதுரைல நடந்த ப்ரைடோட நிலை என்ன தெரியுமா?!! 15 பேர் மட்டுமே கலந்துக்கிட்டாங்க. அதுலயும் 8 பேர் சென்னைலருந்து வந்தவங்க. அவங்கள நான் இங்க குறை சொல்லல. மாறாக, அந்த புலப்படாத நண்பர்களை நாம் சென்றடைய இன்னும் பொறுமையா இருக்கணும்னு சொல்றேன்.. அது ஒரே நாள்ல நிகழக்கூடிய மாற்றம் கிடையாது. அதே போல இந்த ப்ரைட் மார்ச் எல்லாம் எதோ பணம் படைச்சவங்களுக்கு மட்டுமேன்னும் நடுத்தர மக்களைப் போய் சேர்றதுயில்லைன்னும் சொல்லியிருக்கீங்க. அடுத்த ப்ரைடுல நீங்களே கலந்துகிட்டிங்கன்னா எவ்வளோ நடுத்தர மக்கள் இதுல கலந்துக்கறாங்கன்னு உங்களுக்கே தெரிய வரும்.

    அதே போல பத்திரிக்கை உட்பட தமிழ் ஊடகங்களை நாங்க அணுகுறதில்லைன்னும் ஏதோ ஒரு ‘இன்பாக்ஸ்’ செய்தியை கணக்குல எடுக்க முடியாதுன்னும் சொல்லிருக்கீங்க. திருநங்கை சமூகத்தோடும் நம்மை ஒப்பிட்டு இருக்கீங்க. அடுத்த பிரஸ் ரிலீஸின் போது உங்களையும் நான் கூப்பிடனும்னு நினைக்கிறேன். அப்போ உங்களுக்கு அவர்கள் மனப்பான்மை தெரியவரும். அவர்கள் எதிர்பார்க்கும் பரபரப்பு தகவல் எதுவுமே நம்மகிட்ட இருந்து வர்றதில்லைன்னு நினைக்கிறாங்க. அப்படியே எதுனா எழுதினாலும் திருநங்கை சமூகத்தின் செய்தி புகைப்படங்களுக்கிடையேத்தான் அவற்றை பிரசுரம் செய்யறாங்க. ஊடக நண்பர்களுக்கு தொடர்ந்து நம்மை பற்றிய விழிப்புணர்வு பயிற்சிமுகாம் நடத்தினாலும் தினமலர் போன்ற பத்திரிக்கைகள் நம்ம பத்தி தவறான கருத்துக்கள் மட்டும் தான் எழுதறாங்க. அப்படி இருந்தும் கூட சத்யம் டிவி, சன் செய்திகள் (டாக்டர் கமராஜுடன்), விஜய் டிவி, தினகரன், தினமணி போன்றவைகள்ல நாம் வந்துக்கிட்டு தான் இருக்கோம். அதை நீங்க கவனிக்க தவறியிருந்தீங்கன்னா அதுக்காக வருத்தப்படறேன். சத்யம் டிவில வந்த கலந்துரையாடலை பார்க்க கீழ லின்க் குடுத்துருக்கேன். இன்னொரு விஷயம் அதுல இருக்குறவரு மதுரை அமெரிக்கன் காலேஜ்ல படிச்சவரு. சென்னைல உள்ள சர்வதேச பள்ளிக்கூட்த்துல இல்ல.

    http://chennaidost.com/chennai-dost/

    ReplyDelete
  5. அடுத்து பெரும்பாலும் நம்ம நிகழ்ச்சிகள் எல்லாம் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள்ல நடக்குதுன்னும், அப்படி இல்லாம பொது இடங்கள்ல நடக்குதுன்னா அதுக்கான அத்தாட்சியையும் கேட்ருக்கீங்க. கீழ உள்ள லிங்க்கையும் அதில் உள்ள புகைப்படங்களையும் தயவு செய்து பார்க்கும்படி உங்களை கேட்டுக்குறோம். பெரும்பாலும் இந்த 2 அமைப்புக்களும் தான் முன்னின்று இதுபோன்ற நிகழ்வுகளை நடத்திட்ருக்காங்க. இவங்களுக்கு எங்கயிருந்தும் நிதியுதவியோ, நன்கொடையோ கிடைக்கிறதில்லைங்குறதையும், பெரும்பாலும் அமைப்புக்களுக்குள்ள இருக்கவங்களோட சொந்தப் பணம்ங்றதையும் தெரிவிச்சிக்க விரும்புறேன். அவர்களோட சொந்த பணத்தை எப்படி செலவிடனும்னு சொல்ற உரிமை உங்களுக்கு இருக்கிறதா எனக்குப்படலை. வெளிநாட்டுப் பணம் குறித்தோ, நன்கொடை பணம் குறித்தோ நீங்க குற்றம்சுமத்துறதா இருந்தா, ஆதாரத்தோட செய்ங்க இல்லைன்னா உங்க மீது வழக்குகளா கூட அவை முடியலாம்.

    http://orinam.net/events/
    http://chennaidost.com/category/gallery/

    அப்புறம் இது போன்ற பொது நிகழ்வுகளை நகரம்தவிர்த்த இடங்களில் நடத்தணும்னு சொல்லிருக்கீங்க. நல்ல விஷயம் தான். ஆனா அதுல எத்தனை பேர் கலந்துக்குவாங்கன்னு நினைக்கிறீங்க? இப்படி ஒரு நிகழ்ச்சியை நட்த்துறதுக்கு காவல்துறை கிட்ட அனுமதி வாங்குறது எப்படின்னு தெரியுமா? இதை நடத்துவதற்கான செலவின நிதி எங்க இருந்து வரும்? அதே போல பார்ட்டி நட்த்துறதால யாருக்கும் எந்த பயனுமில்லைன்னு சொல்லிருக்கீங்க.. 2012ல அநாதை இல்லங்களுக்கு எவ்ளோ பணம் நன்கொடையா குடுத்துருக்கோம்னு தெரியுமா?! ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான கற்பனை ஊக்குவிப்பு பயிற்சி முகாம் (Creative workshop) நடத்த எவ்ளோ தொகை செல்வாச்சுன்னு தெரியுமா? ப்ரைட் மார்ச்க்காக எவ்ளோ தொகை நன்கொடையா அளிக்கப்பட்ட்துன்னு தெரியுமா? தன்பால்சேர்க்கைவெறுப்பிற்கு எதிரான மனித சங்கலிப்போராட்டம், மெழுகேந்தல் போன்ற நிகழ்வுகளுக்கு எவ்வளவு செலவாகும் என்று தெரியுமா? எத்தனை தமிழ் துண்டுப் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு மொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்குன்னு தெரியுமா?!

    தமிழ் இலக்கியத்தோட ஆங்கில எழுத்துக்களை ஒப்பிட்ருக்கீங்க. யாராவது மாத இதழ் வெளியிட நிதியுதவி செய்யத் தயாரா இருந்தா நாங்க அவருக்கு உதவி செய்ய காத்துக்கிட்ருக்கோம். ஹிந்தியிலும் கூட இதுவரை ஒரு மாதஇதழோ வருட இதழோ பதிப்பிக்கப்படுவதில்லை என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்பிகிறேன்.

    நானும் உங்களோட பல கருத்துக்களை ஒத்துக்குறேன். பெருநகரங்கள் தவிர்த்து நாம் இன்னும் பரவலாக ஊடுருவவில்லை. தமிழ் திரைப்படத்துறையை நாம் நினைத்த அளவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை. ஆனால் நீங்கள் சில முக்கியமான விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும். திருநங்கை சமூகத்தைப் போலல்லாமல் நமக்கு அரசாங்கத்திடமிருந்தோ, பொதுமக்களிடமிருந்தோ நிதியோ வேறு உதவிகளோ இதுவரை கிடைக்கவில்லை. பொதுமக்களும், அரசாங்கமும் தன்பால்ஈர்ப்பை இன்னும் ஒரு சாதாரண பாலியல் நாட்டமாய் கருதவில்லை. நமக்கான ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்கவோ, போராட்டங்களில் பங்கு பெறவோ இன்னும், தங்களை வெளிஉலகிற்கு அறிவித்த பல தன்பால் ஈர்ப்பாளர்கள் இல்லை. நாம் பிரஸ்ரிலீஸ்களை வெளியிட்டாலும், ஆங்கில ஊடகங்கள் செய்வதுபோல தமிழ் ஊடகங்கள் தங்கள் முதல் பக்கத்தில் அவற்றை வெளியிடுவதில்லை.

    ஒருவரை உலகிற்கு தன்னை வெளிக்காட்டி கொள்ள சொல்வது அவரது தனிப்பட்ட உரிமை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் விமர்சிப்பவர்கள் பலர் இருபத்தைந்து வயதிற்குள், வலி, துயர், வேற்றுமைபடுத்தல், உயிர் சவால்கள், பணப்பிரச்சனைகள் போன்ற அனைத்தையும் கடந்து, தங்களை இவ்வுலகிற்கு வெளிப்படுத்தி, கே சமூகத்திற்காக போராடி, பலருக்கு நம்பிக்கையூட்டிவர்களே. அவர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உங்களால் உதவ முடியவில்லை என்றாலும்கூட, அவர்கள் குறைந்தபட்சம் இது போன்ற வலைப்பூ சாடல்களை எதிர்பார்ப்பதில்லை.

    ReplyDelete
  6. உலகுக்கே தெரிந்த ஒரு உண்மையை உங்களுக்கு உரக்க சொல்ல விரும்புகிறேன். சென்னையில் வாழும் அனைவருமே பணம்படைத்தவர்கள் அல்ல, யாரோ உங்களிடம் தவறாக புள்ளிவிவரம் சொல்லியிருக்கிறார்கள். இங்கே வாழ்பவரும் தமிழர்தான், இவர்கள் வேற்றுகிரக வாசிகள் அல்ல.

    எல்லா விவாதங்களும் இறுதியில் ஒரு நன்மையோடு முடிவடையும். அதே சமயத்தில் பொதுவாக நமது community-இல் பொத்தாம்பொதுவாக ஒரு விஷயத்தை விமர்சனம் செய்வதும், தவிர்க்கப்படவேண்டிய விஷயமாகும், இல்லையென்றால் பாதிக்கபடபோவது எங்கோ பயத்தில், அவமானத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு கே என்பதை நாம் உணரவேண்டும் . ஒரு இயக்கத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களை அவர்களின் செயல்பாடு அறியாமல் மேலோட்டமாக விமர்சனம் செய்வது அந்த இயக்கங்களின் செயல்பாடு அல்லது விழிப்புணர்ச்சி செய்திகள் ஒரு சாமானிய மனிதனை சென்றடையாமல் அவனை இதுபோன்ற விமர்சனங்கள் தடுத்துவிட கூடும். மிகுந்த வலியுடனும், போராட்டங்களுடனும் தொடர்ந்து இயக்கம் நடத்தி கொண்டிருக்கும் எங்களை போன்றவர்களை இது புண்படுத்தக் கூடும்.

    இப்படிக்கு
    விக்ராந்த் பிரசன்னா
    நிறுவனர் - சென்னை தோஸ்த்,மகிழ்வன் மன்றம்

    ReplyDelete
  7. அன்பு நண்பர் விஜய் அவர்களுக்கு,

    வணக்கம்! என் பெயர் HARD!!

    ஆம்...அத்தகைய புனை பெயரில் ஆர்குட்டின் "Chennai guyss gay sex stories" வலை தளத்தில் பல கதைகளை பதிந்து இருக்கிறேன்!
    இப்போது பணிசுமையின் காரணமாய் என்னால் எனது பங்களிப்பை செய்ய இயலவில்லை!
    சென்னை தோஸ்த் அமைப்பின் பிரசன்னா மற்றும் உங்களை போன்றவர்கள் ஓரின ஈர்பாளர் சமூகத்தின் மேம்பாட்டிற்கு ஆற்றி வரும்
    பணி போற்றுதலுக்கு உரியதே! உங்களை போன்றோர் கதை, கட்டுரைகள், கூட்டங்கள், பேரணிகள், கலந்தாய்வுகள் என எவ்வளவு பங்களிப்பை
    செய்தாலும் அது சமூகத்தில் ஓரின உறவாலர்களின் மீதான பழமைவாத எண்ணத்தை சிறிதும் மாற்றிவிடாது! உங்களையே எடுத்து கொள்ளுங்கள்....கதைகளின் மூலம் இன்னும் பிற கட்டுரைகளின் மூலம் 'கே' சமூகத்தின் மீது நன்மதிப்பு ஏற்படும் வண்ணம் எழுதுகிறீர்கள்...ஆனால் உங்கள் எழுத்து யாரால் படிக்கப்படுகிறது என்று சிந்தித்து பாருங்கள்....இது 90% தன்பால் ஈர்ப்பு கொண்டவர்கள் பெரும்பாலும் உறுப்பினர்களாக கொண்ட வலை தளங்களிலேயே பதிய படுகிறது! ஓரின ஈர்ப்பு என்பது இயல்பானது என்பதை ஓரின சமூகம் எப்போதோ அறிந்து கொண்டு விட்டது! ஆகையால் உங்கள் எழுத்துக்கள் போய் சேர வேண்டிய இடம் தன்பால் ஈர்பற்ற (straight ) சமூகத்திடம் தான்!! ஏனெனில் அவர்களே இப்போது உங்கள் எழுத்துக்களை படித்து ஓரின ஈர்ப்புள்ள தங்கள் சக நண்பரை அல்லது உறவினரை ஏற்று கொள்ளும் மன நிலைக்கு வர வேண்டி உள்ளது! அப்படிப்பட்ட மனநிலையை சமூகத்தில் ஏற்படுத்தும் பட்சத்தில் நமக்கான அங்கிகாரம் கிடைக்க தொடங்கிவிடும்!! நாமும் நம் ஓரின பால் நாட்டத்தை சமூகத்திடம் தயக்கமின்றி வெளிபடுத்தலாம்! சென்னை தோஸ்த் பிரசன்னா போன்றவர்கள் இதில் ஓரளவு வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது!! ஒரு 'கே' வுக்கு அவன் இயல்பான மனிதன் என்று கலந்தாய்வு செய்வதை விட அவன் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தான் கலந்தாய்வு தேவை...ஏனெனில் இப்போது 'கே' நண்பர்களுக்கு உள்ள பிரச்சனை சமூகம் தங்களை ஏற்று கொள்ளவில்லையே என்ற கவலை தானே தவிர வேறில்லை...மற்றபடி அவர்கள் அவர்களின் ஒருபால் நாட்டத்தை இயல்பாக ஏற்று கொண்டுவிட்டனர்...அதற்கு காரணம் உங்களை போன்றோர் செய்யும் பங்களிப்பு! நான் சொல்ல முனைவதெல்லாம் உங்கள் பங்களிப்பு நம்மை போன்றரை இனி மையபடுத்தி இல்லாமல் சமூகத்தை மையபடுத்தி இருக்கட்டும்!! சமூகம் ஏன் நம்மை சிறுபான்மை இனமாக பார்க்கிறது?? ஏனெனில் நீங்களோ நானோ நான் 'கே' என்பதை வெளியில் சொல்லவில்லை...இப்படி ஒவ்வொரு 'கே' வும் நினைக்கும் பட்சத்தில் நம் இனம் எப்போதும் சமூகத்தில் சிறுபான்மை இனமாகவே இருக்கும்...சிறுபான்மை இனம் சமூகத்தில் ஒடுக்கப்படும் என்பது பொது விதி அன்றோ! :) :) அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஓரின திருமணத்திற்கு போராடுகிறார்கள் நாம் இன்னும் அடிப்படை உரிமைக்கே போராடி கொண்டிருக்கிறோம் என்று வருத்தம் கொள்கிறீர்கள்...அமெரிக்க நாட்டிலும் ஓரின விருப்பதை முதலில் யாரும் ஏற்று கொள்ளவில்லை தான்...ஆனால் அங்கே 'coming out' என்ற பெயரில் அமெரிக்க இளைஞர்கள் தங்களை சமூகத்திடம் ஒளிவு மறைவின்றி வெளிபடுதியதால் தான் 'கே' சிறுபான்மை இனம் அல்ல...பெரும்பான்மையான ஆண்கள் இந்த விருப்பத்தில் இருகிறார்கள் என்பதை ஏற்று கொண்டு அம்மக்கள் அதை ஏற்றனர்! நீங்களும் நானும் முகமூடியை கழற்றி எறியாதவரை சமூகமும் நம்மை ஏற்று கொள்ள போவதில்லை!! முகமூடி எதுவும் இன்றி எதையும் எதிர் கொள்ளும் திறந்த மனதுடன் சமூகத்தை எதிர் கொள்ளும் திறன் படைத்தவர்களுக்கு தான் எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்கும் தகுதியும் உரிமையும் இருக்கிறது!

    'கே' நண்பர்களுக்கு ஒரு செய்தி....உங்களை வெளிப்படுத்தி கொள்ளுங்கள் என்று சொல்வது உங்கள் படத்தை சமூக வலை தளங்களில் அல்லது பிற ஊடக வாயிலாக கொடுத்து என் உண்மையான விவரம் இன்னது...நான் ஒரு ஹோமோ....என்று விளம்பரபடுத்தி கொள்வதல்ல....மூன்றாம் நபருக்கு உங்கள் பாலின அடையளாத்தை வெளிபடுத்த வேண்டாம்....முதலில் உங்கள் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு வெளிபடுத்துங்கள் போதும்....இப்படி ஒவ்வொரு 'கே' வும் தன்னை வெளிப்படுத்தி கொண்டால் ஓரின பெரும்பான்மை ஏற்பட்டு மெல்ல சமூகம் அவற்றை ஏற்கும்!... ஆடவன் ஒருவனுடனான உங்கள் காதல் உண்மையாக இருக்கும் பட்சத்தில்....அந்த ஆடவனிடம் நீங்கள் காட்டும் அக்கறை,அன்பு,காதல் இவற்றை பார்த்து உங்கள் நெருங்கிய நண்பர்களும் பெற்றோர்களும் உங்கள் உறவு நிலையை ஆதரிப்பார்கள் என்பது நான் அனுபவப்பட்ட உண்மை! ஆம் நண்பர்களே...நான் என் ஓரின ஈர்ப்பு நிலையை என் நண்பர்களுக்கும் பெற்றோருக்கும் வெளிப்படுத்தி விட்டேன்!! இப்போது என் பத்து ஆண்டு கால காதலனுடன் உல்லாசமாக கொண்டாடிக்கொண்டு இருக்கிறேன்! ;)

    அன்புடன்,
    HARD.

    ReplyDelete