“பிளானட் ரோமியோவில் செக்ஸ்’க்கு நாள் குறித்து, அந்த புதிய
நபரை சந்திக்க செல்கிறான் ராஜேஷ்..... ராஜேஷ் எதிர்பார்த்த அத்தனை அம்சங்களும்
நிறைந்த கட்டிளம் காளையாக இருந்தான் அந்த புதியவன்.... ராஜேஷின் பைக்கில் ஈ.சி.ஆர்
நோக்கி பறந்தார்கள் இருவரும்.... செல்லும் வழியெல்லாம் ராஜேஷ் மனம் குளிரும்
வண்ணம், புதியவன் தழுவல்களும், காதல் பேச்சுகளும் நிறைய உண்டாக்கினான்.....
புதியவனை முழுமையாக நம்பிய ராஜேஷ், அந்த இளைஞன் தன் நண்பனிடம் வீட்டு சாவி வாங்கி
வருவதாக கூற, தன் பைக்கையும் கொடுத்தான்.... பைக்கை வாங்கி சாவி கொண்டுவர போனவனை
அரை மணி நேரமாக காணவில்லை என்றதும்தான் ராஜேஷுக்கு சந்தேகம் வந்தது.... தேடி
சென்றான், காணவில்லை.... அவ்வளவு நம்பிக்கையாக பேசியவனின் அலைபேசி அணைக்க
வைக்கப்பட்டிருந்தது..... தான் ஏமாந்து போனதை உணர்ந்த ராஜேஷ், காவல் துறையில்
புகார் கொடுத்தான்..... உண்மையான காரணத்தை கூறமுடியாமல், பெயருக்கு புகார் கொடுத்த
ராஜேஷின் பைக் இன்றுவரை கிடைக்கவில்லை”
இது என் கதையில் வரும்
காட்சி இல்லை..... நான் இங்கு சொன்ன “ராஜேஷ்” (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்
நண்பர்.... பைக் தொலைந்து ஒரு மாதமாகியும், ஒரு தகவலும் இன்றுவரை இல்லை.... மனம்
உடைந்த என் நண்பர், இதை உங்கள் அனைவருக்கும் பகிர சொல்லி என்னிடம் கூறினார்....
இன்று ராஜேஷுக்கு நடந்தது புதிய விஷயம் இல்லை..... இது
நித்தமும் நம் தமிழகத்தில் ஏதோ ஒரு இடத்தில் நடந்துகொண்டிருக்கும் ஒரு
நிகழ்வுதான்...
ராஜேஷ் சொன்ன இந்த நிகழ்வுக்கு பிறகு எனக்கு பல நபர்கள்
மூலம் இப்படிப்பட்ட “கே டேட்ஸ் மூலம் நிகழ்ந்த வன்முறைகளை” தெரிந்துகொண்டேன்.....
1. சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான புதியவனை வீட்டிற்கு
அழைத்திருக்கிறார் ஒரு நண்பர்.... எல்லாம் முடிந்த பின்பு, நண்பரிடமிருந்த மொபைல்
போன், லேப்டாப், பணம் என்று எல்லாவற்றையும் கேட்க, நண்பரோ மறுத்து எதிர்த்து பேசி
இருக்கிறார்.... “ஒழுங்கா, எல்லாத்தையும் தரலைனா அக்கம் பக்கத்து வீட்ல
உள்ளவங்ககிட்ட, நீ ஹோமோ’னு சொல்லிடுவேன்” இப்படி மிரட்ட, வேறு வழியின்றி
எல்லாத்தையும் கொடுத்துவிட்டார்......
2. திருச்சியில் இருக்கும் நண்பர் ஒருவர், க்ரூப் செக்ஸ்
என்றதும் சந்தோஷமாக புதியவன் சொன்ன இடத்துக்கு செல்கிறார்.... அங்கே இருந்த மற்ற
இருவரும், நண்பரை மிரட்டி ஏ.டி.எம் கார்டை பிடுங்கி, அதில் பல்லாயிரம் ரூபாய்
பணத்தை எடுத்திருக்கிறார்கள்.....
இந்த இரண்டு சம்பவங்களும் சில மாதங்களில் நடந்த உண்மை
சம்பவங்கள்.....
பல சமூக வலைத்தளங்களிலும் “கே சந்திப்பு இடங்கள்” என்று
பட்டியலிடப்படும் இடங்களுக்கு குறிவைத்து, சில ரௌடிகள் பணம் பறிக்க
காத்திருப்பதும் நடக்கிறது.....
கடந்த வார “குமுதம் ரிப்போர்ட்டர்” இதழில் வெளியான ஒரு
செய்தி மூலம் நாம் இதை அறியலாம்..... காரைக்கால் பகுதியில், மீனவ மக்கள் அதிகம்
வசிக்கும் இடங்களுக்கு அருகில் இருக்கும் சவுக்கு தோப்பு “இப்படிப்பட்ட சந்திப்பு”
இடங்களில் முக்கியமான ஒன்றாக சிலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்..... அங்கு
‘ஒதுங்கும்’ ஒருபால் ஈர்ப்பு நபர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சமீபத்தில்
காவல் துறை கைது செய்திருக்கிறது..... சமீபத்தில் அப்படி ஒரு முக்கிய அரசியல்
பிரமுகர் அனுபவப்பட்டதன் விளைவாக, அவரின் அழுத்தத்தால் மட்டுமே இந்த கைது
நடவடிக்கை நடந்திருக்கிறது..... பல காதலர்களையும், ஒருபால் ஈர்ப்பு நபர்களையும்
மிரட்டி பணம் பறித்ததாக அந்த கும்பல் ஒப்புக்கொண்டாலும், இதுவரை அப்படி ஒருபால்
ஈர்ப்பு நபர்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.....
இப்படி நம் கவனத்துக்கு வரும் ஒருசில நிகழ்வுகளை தவிர,
ஒவ்வொரு நாளும் ஒருபால் ஈர்ப்பு நபர்களுக்கு எதிரான குற்றங்கள், வன்முறைகள்
அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.....
இதற்கு முக்கிய காரணங்கள் என்ன என்பதை உங்களால்
உணரமுடிகிறதா?
முதல் காரணம், அப்படி பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில்
புகார் கொடுப்பதில்லை.....
புகார் கொடுத்தாலும், உண்மையான காரணத்தை அவர்கள்
கூறுவதில்லை.... பொய்யான காரணம் கூறுவதால், காவல் துறையால் சரியான விசாரணை செய்து
கண்டுபிடிக்க முடிவதில்லை..... உதாரணமாக, நீங்கள் புகார் கொடுக்கும்போது உங்களிடம்
கேட்கும் கேள்விகள், “யார் அவன்?, அவனை எப்படி உனக்கு தெரியும்?, முன்பின்
அறிமுகம் இல்லாதவனை படுக்கைஅறை வரை எப்படி அழைத்து சென்றாய்?”.... இப்படி நீளும்
கேள்விப்பட்டியலில் நீங்கள் எப்படி பொய் சொல்லி சமாளிக்க முடியும்?
இத்தகைய காரணங்களால் ஒருபால் ஈர்ப்பு நபர்களை எளிதில்
வன்முறைக்கு ஆட்படுத்தும் ஒரு பிரிவாக சமூக விரோதிகள் பார்க்கிறார்கள்.....
நான்கு சுவர்களுக்கு மத்தியில், உளவியல் தொடர்பாக படிப்பினை
படித்து, அமைதியான சூழலில் நீங்கள் எவ்வளவு விளக்கினாலும் ஒருபால் ஈர்ப்பை பற்றி
ஒரு மருத்துவன் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத சூழலில், பரபரப்புகளுக்கு
மத்தியில், பல நபர்களுக்கு ஊடே நீங்கள் உண்மையை சொன்னால் கூட அவர்கள் அதை எப்படி
புரிந்து கையாளுவார்கள்? என்பதை யோசித்து பாருங்கள்....
பொருள், பணம், உடைமை என்று எல்லாவற்றையும் இழந்து, அதை தன்
நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் கூட கூறமுடியாமல் தவிக்கும் மனநிலை
மிகவும் கொடுமையாக இருப்பதாக இவர்கள் சொல்கிறார்கள்....
குற்றங்கள் அதிகம் நடக்கிறது.... இதற்கு யார் காரணம்?.....
முதல் காரணம் நீங்கள்தான்......
பிளானட் ரோமியோ மற்றும் இதர சமூக வலைத்தளங்கள் மூலம்
அறிமுகமாகும் ஒருவரை, எவ்வித அறிமுகமுமின்றி படுக்கை அறை வரைக்கும் அழைத்து
செல்லும் தைரியம், நம்பிக்கை உங்களுக்கு எப்படி வருகிறது?....
இப்படி சமூக விரோத செயலில் ஈடுபடும் பலரும் ஒருபால் ஈர்ப்பு
நபர்கள் மட்டுமே என்பதும் ஒரு முக்கியமான உண்மை.... பெரும்பாலும் ஆசை வார்த்தை
பேசி, பல பொய்களை கூறி நம்பிக்கையை பெற்ற பின்னரே இத்தகைய திருட்டுகள்
நடக்கிறது..... பார்க்க அழகாக இருப்பதால், எதைப்பற்றியும் யோசிக்காமல் நீங்கள்
செல்லும் பாதை, பல இன்னல்களுக்கு உங்களை கொண்டு சேர்க்கும் என்பதுதான் உண்மை.....
பெயர், சுய விவரங்கள், படிப்பு என்று எல்லாமே இத்தகைய
நபர்கள் சொல்லும் பொய்கள் மட்டுமே..... அதுவும் இப்போதெல்லாம் குரூப் செக்ஸ்,
த்ரீசம் போன்ற விதவித ஆபர்கள் வேறு இத்தகைய நபர்கள் கையாளும் யுத்திகள்..... ஆசை
வார்த்தைக்கு மதி மயங்கி, இருப்பதை இழந்துவிட்டு நிற்கத்தான் இத்தகைய வலைத்தளங்கள்
உதவுகின்றன.....
அதுமட்டுமல்ல, இத்தகைய நபர்கள் மூலம் பாலியல் நோய்களும்
தாக்கும் ஆபத்து இருக்கிறது......
எல்லாம் இழந்த பின்பு அழுது புலம்புவதைவிட, வரும் முன்
சுதாரிப்புடன் செயல்பட்டால் நிச்சயம் உங்களை நீங்கள் தற்காத்து கொள்ளலாம்.....
இன்னும் நம் சமூகமும், சட்டமும் ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவான
நிலைப்பாட்டை எடுக்கவில்லை.... இத்தகைய சூழலில், அதை சமூக விரோதிகள் அவர்களுக்கு
சாதமகாக இந்த சூழலை பயன்படுத்த நினைக்கிறார்கள்..... நம்மை நாமே
தற்காத்துக்கொள்வதை தவிர, வேறு ஒருவழியும் இல்லை என்பதுதான் உண்மை.....
பல காலங்களாக நான் சொல்வது ஒன்றுதான்..... “கே என்பது
செக்ஸ் மட்டும்” இல்லை..... அதை தாண்டிய உணர்வுகள் அதில் ஏராளம் இருக்கிறது.....
அதனால், செக்ஸ் என்ற போதையில் விழுந்து, வாழ்க்கையில் எழவே முடியாத இன்னல்களுக்கு
ஆளாகாதீர்கள் என்பதுதான் நான் உங்கள் “விஜயாக” உங்களுக்கு சொல்லும் ஒரே
ஆலோசனை.....
“அடக்கம் அமரருள் உய்க்கும்”.... நீங்கள் அடக்க வேண்டியது
எது என்பது நான் சொல்லாமல் புரியும் என்று நம்புகிறேன்......
Ellorum unara veandiya ondru!
ReplyDeleteyou are correct viky
ReplyDeleteand happy new year
Great words..
ReplyDelete