திருச்சி
நகரின் வழக்கமான காலைப்பொழுதுதான்... எனக்குத்தான் அன்று வழக்கத்திற்கு
மாறாக தெரிந்தது.... உறையூரில் என் வீட்டு மாடியில் இருந்து பார்த்தபோது
ஒருபக்கம் மலைக்கோட்டை மேகத்தோடு மிதப்பது போல இருந்தது, மறுபக்கம்
திருவரங்கம் வானை நோக்கி விஸ்வரூப கோபுரமாக நின்றது.... காவிரியின்
செழிப்பால் நகர வீதிகள் கூட பசுமை சூழ்ந்தே இருந்தது.... தமிழகத்தின் எந்த
மாநகரும் திருச்சி அளவுக்கு பசுமையாக இருக்காது என்று தோன்றியது..... நான்
என் இருபத்திரண்டு ஆண்டுகளாக பார்க்கும் விஷயங்கள் தான் இவை என்றாலும்,
அன்று மட்டும் ஏனோ இந்த காட்சிகள் என் மனதிற்குள் சொல்ல முடியாத துயரத்தை
உண்டாக்கியது.... நான் பாலாஜி... பிறந்தது, வளர்ந்தது, வாழ்வது, படித்தது,
பிடித்தது, நேசிப்பது என்று எல்லாமே திருச்சியை சுற்றித்தான்.... பிறந்தது
முதல் திருச்சியிலேயே இருந்துவிட்டதால், ஏதோ ஒரு இனம் புரியாத உறவு
எனக்கும் திருச்சிக்கும் உண்டாகிவிட்டது....
எந்த
அளவிற்கு என்னை திருச்சி கவர்ந்ததோ, அந்த அளவிற்கு சென்னை என்னை வெறுக்க
வைத்தது.... என்ன காரணம்? என்று தெரியவில்லை.... ஆனாலும், சென்னை வாழ்க்கை
என்றாலே எனக்குள் ஒரு வெறுப்பு, பயம் எல்லாம் உண்டு..... ஒரு விஷயத்தின்
மீது விருப்பும் வெறுப்பும் வர காரணங்கள் தேவைப்படுவதில்லை.....
வெறுப்பும் விருப்பும் உண்டானபிறகு அத்தகைய காரணங்களை
உருவாக்கிக்கொள்கிறோம்.... பன்னிரண்டாம் வகுப்பு முடிந்து பொறியியல்
கலந்தாய்வில் எனக்கு சென்னையில் பிரபல கல்லூரியில் இடம் கிடைத்தும், அது
சென்னையில் இருக்கும் ஒரே காரணத்தால் அந்த வாய்ப்பை மறுத்தேன்....
இன்றுவரை என் அப்பா என்னை திட்டும்போது, “இந்நேரம் அந்த காலேஜ்ல
படிச்சிருந்தா, கேம்பஸ்’ல அள்ளிட்டு போயிருப்பாணுக” என்ற வார்த்தையை
மறக்காமல் சொல்லிவிடுவார்... இப்போது என் படிப்பு முடிந்துவிட்டது, நான்
படித்த கல்லூரி சுமாரான கல்லூரி என்பதால் பெரிய நிறுவனங்கள் அங்கு
வேலைக்கு ஆள் எடுக்க மாட்டார்கள்... அதனால் வேலையையும் திருச்சியில்
தேடிக்கொள்ளலாம் என்று தேடினேன், தேடினேன் திருச்சியின் எல்லை வரை
தேடினேன்.....
சொல்லிக்கொள்ளும்படி
வேலைகள் எதுவும் இல்லை.... அந்த நேரத்தில் வந்து சேர்ந்தார் என் உறவினர்
ஒருவர்.... “சென்னைல தேனாம்பேட்டைல ஒரு கம்பெனி..... ஒரு மாசம் ட்ரைனிங்
கொடுத்து, அப்புறம் அவங்களுக்கு பிடிச்சிருந்தா வேலைக்கு
எடுத்துக்கறாங்க.... என் ப்ரெண்ட் சொன்னா அந்த வேலை நிச்சயம்
கெடைக்கும்... பாலாஜிய போகசொல்லுங்களே.... நல்ல சம்பளம், நல்லா டெவலப்
ஆகிட்டு வர்ற கம்பெனி” இது போதாதா அப்பாவுக்கு?.... இதோ இன்று இரவு நான்
சென்னைக்கு புறப்பட அப்பா எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்....
சென்னையை தவிர வேறு எந்த ஊருக்கு போவதாக இருந்தாலும் அவ்வளவாக நான்
கவலைப்பட்டிருக்க மாட்டேன்.... இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால், அங்கு
நான் என் மாமா வீட்டில் தங்க வேண்டும்.... மாமாவுக்கு திருமணமாகி இரண்டு
வருடங்கள் ஆகிறது, ஒரு கைக்குழந்தை வேறு.... அத்தைக்கும் எனக்கும் ஏழாம்
பொருத்தம் வேறு.... அங்கு தங்கிருந்து நான் வேலைக்கு போகவேண்டுமாம்....
சூரியன் இப்போதுதான் என் கதை கேட்க மேலே எழும்பி வருகிறான், கதிர்கள் என்
முகத்தில் பட்டு என்னை மீண்டும் சுயநினைவுக்கு கொண்டு வந்தது....
மாடிப்படி இறங்கி கீழே வரும்போது பக்கத்து வீட்டு அக்கா, “என்ன பாலா,
சென்னைக்கு போறியாமே?.... அங்க போனப்புறம் எங்களயெல்லாம் மறந்துடாத....
அப்பப்போ திருச்சி பக்கமும் வந்துட்டு போ” ஏற்கனவே வெந்த மனதில் வேலை
பாய்ச்சினார்.... உதடுகளை அகட்டி, சிரிப்பதை போல பாவ்லா செய்துவிட்டு கீழே
வந்தேன்.... வீட்டு முகப்பில் அமர்ந்து தினசரியை எடுத்து பிரித்தேன்....
“பாலா, டிரெஸ்’லாம் எடுத்து வச்சிட்டேன்....பிரஷ், சோப் எல்லாம் எடுத்து வச்சிடு.... “
சமையலறையில் இருந்தவாறே அம்மா பட்டியல் போட்டுக்கொண்டிருந்தார்...
“ஆமாடா.... பேஸ்ட், ஷாம்பூ எல்லாத்தையும் தனியா எடுத்துக்க.... இல்லைனா, அதுக்கும் உங்க மாமா கணக்கு பாப்பான்”
“என்
தம்பிய சொல்லலைனா உங்களுக்கு இருக்க முடியாதே.... பாலா மெட்ராஸ் போறான்னு
தெரிஞ்சதும், ரொம்ப சந்தோஷப்பட்டான் என் தம்பி.... நான் சொல்றதுக்கு
முன்னாடியே அவன் வீட்லதான் தங்கனும்னு தீர்மானமா சொல்லிட்டான் தெரியுமா?”
“சொல்லாமலா இருப்பான்..... கடைக்கு போக, புள்ளைய பாத்துக்கனு ஒரு ஆள் கிடச்சா சந்தோஷப்பட மாட்டானா?”
“என்ன சொல்றீங்க?.... அப்டி நெனச்சுட்டிங்களா அவனை?.... இப்போ வரைக்கும் நம்ம சொந்தபந்தத்துல பாசத்தோட இருக்கிறது அவன் மட்டும்தான்”
நாளிதழை மடித்துவைத்துவிட்டு வீட்டிற்கு வெளியே வந்துவிட்டேன்....
வழக்கமாக நடக்கும் சண்டைதான் இது..... வெளியே சென்று வாசற்படியில்
அமர்ந்தேன்.... வழக்கமாக வரும் பால்காரர் முதல், காய்கறி விற்கும்
பாட்டிவரை எல்லோரும் இன்று அழுகையை உண்டாக்கும் விதமாக தெரிந்தனர்.....
பின்பு சாப்பிட்டுவிட்டு என் அறையில் எதையோ யோசித்துக்கொண்டிருந்தேன்,
நண்பர்கள் உள்ளே வந்தனர்....
“டேய் மச்சான், மெட்ராஸ் போறியா?.... செம்ம வாழ்க்கடா”
“செம கூத்தா இருக்கும்டா..... பொண்ணுங்கல்லாம் பயங்கரமா இருப்பாளுங்கடா”
“பப், டிஸ்கோத்தே’னு ஒரு சொர்க்கம்டா..... அங்க போயி எனக்கும் எதாச்சும் வேலை இருந்தா பாருடா, நானும் செட்டில் ஆகிடுறேன்”
நண்பர்கள் அவரவரும் தங்கள் கண்ணோட்டத்தில் சென்னையை வர்ணிக்கிறார்கள்....
எப்போதுமே சென்னை தூரத்தில் இருந்து ரசிக்கும் நிலவை போன்றுதான்.....
அருகில் சென்றால் ஆக்சிஜன் இல்லாமல் ஒரு நிமிடம் கூட அங்கே இருக்க
முடியாது என்பது என் எண்ணம்.... அன்றைய பொழுது மட்டும் அவ்வளவு சீக்கிரமாக
முடிவுக்கு வந்தது.... இதோ சென்னை செல்லும் தனியார் பேருந்தில் ஏறி
அமர்ந்துவிட்டேன்.... அப்பாவுடன் என் நண்பர்கள் சிலரும் ஜன்னல் வழியே
கடைசி கட்ட ஆலோசனைகளை சொல்லிக்கொண்டு இருந்தனர்....
பேருந்து புறப்பட்டது, அங்கு நின்றவர்கள் எல்லோரும் பின்னோக்கி செல்வதை
பார்த்துக்கொண்டே இருந்தேன்..... கண்களை இறுக்கி மூடிக்கொண்டு, கவலைகளை
அடக்க முற்பட்டேன்..... எப்படியோ தூங்கியும் விட்டேன்..... இடையில்
விழுப்புரத்தில் பேருந்து நின்றபோதுகூட நான் அரை தூக்கத்தில்
இருந்தேன்......
“தாம்பரம்
பல்லாவரம்.... தாம்பரம் பல்லாவரம்..... யாரும் இருக்கிங்களா?” பேருந்தில்
இருந்த நபர் குரல் கொடுத்தபோதுதான் விழித்தேன்..... சென்னையை
அடைந்துவிட்டேன்.... பாரதிக்கு கண்டதெல்லாம் கண்ணனின் கருமை நிறம்
தெரிந்ததை போல, நான் பார்க்கும் சென்னையின் எல்லாமே கவலையின் உருவமாக
எனக்கு தெரிந்தது.....
இதுதான் சென்னை போலும்! என்று நினைத்துக்கொண்டே கண்களை நோட்டமிட்டேன்....
மாமாவின் கிழிசலான பனியன்கள் ஒரு வீட்டு பால்கனியில் காயப்போட்டிருந்தது..... கண்டுபிடித்துவிட்டேன்....
“சாரிடா.... பாத்ரூம்ல இருந்தேன்... அதான் கால் அட்டன்ட் பண்ண முடியல.... அக்கா அத்தான்லாம் நல்லா இருக்காங்களா?” மாமா விசாரித்தார்....
அத்தையின் பார்வையே ஆயிரம் எரிச்சலை கொட்டியது.....
பரஸ்பர விசாரிப்புகளுக்கு பிறகு நான் என் உறவினர் சொன்ன நிறுவனத்திற்கு கிளம்பினேன்.....
சென்னையில் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு செல்வதற்கு நடந்து சென்றால் ஆகும் நேரத்தைவிட, பேருந்தில் சென்றால் அதிக நேரம் ஆவதைப்போல உணர செய்தது அன்றைய பேருந்து பயணமும், வாகன நெரிசலும்... நீண்ட பயணத்திற்கு பிறகு தேனாம்பேட்டை வந்து சேர்ந்தேன்.... தேனாம்பேட்டையில் அந்த நிறுவனத்தில் முகவரியை கண்டுபிடிக்க அவ்வளவு கடினமாக இல்லை... அந்த குறிப்பிட்ட முகவரிக்கு வந்தடைந்ததும், அங்கு பல நிறுவனங்கள் இருப்பதை பார்த்து விலாசத்தில் இருந்த “கே கே எக்ஸ்போர்ட் கம்பெனி”யை தேடினேன்....
சுற்றி முற்றி பார்த்தபோது, சுற்றியும் இருந்த அத்தனையும் என் கண்ணைவிட்டு மறைந்து அருகில் இருந்த டீக்கடையின் அருகே நின்றுகொண்டு புகைப்பிடித்துக்கொண்டிருந்த வாலிபன் என் கண்களை ஈர்க்கத்தொடங்கினான்..... பார்த்ததும் சில உருவங்கள் மனதில் பசையைப்போல ஒட்டிக்கொள்ளும்.... அவன் பேரழகன் இல்லை என்றாலும், பேரழகாய் எனக்கு தோன்றினான்.... என் அனுமதி இல்லாமலே என் கால்கள் அவனை நோக்கி நடந்தது.... இப்போது எனக்கும் அவனுக்கும் இடையில் ஒரு அடி தூரம்தான்.... அவன் விடும் புகை என் நாசியில் மணம் வீசியது....
இப்போ அவன் என்னை பார்த்து, அழகான புருவத்தை உயர்த்தி “என்ன வேணும்?” என்பதுபோல கையை உயர்த்தி கேட்டான்....
இப்போதான் நான் என் சுய உணர்வுக்கு வந்தேன்.... இதுவரை மறைந்திருந்த அத்தனை சுற்றுப்புற விஷயங்களும் இப்போது மெல்ல மெல்ல தெளிவாக புலப்பட தொடங்கியது.....
அவன் “என்ன வேணும்?” என்று கேட்ட கேள்விக்கு நான் என்ன சொல்வதென்று புரியாமல், “அது.... அது....... “ என்று உளறியபடி என்னை அறியாமல் என் கையில் இருந்த அந்த முகவரி அட்டையை அவனிடம் காண்பித்தேன்.....
“ஓ இந்த அட்ரஸா?.... மாடில சக்கென்ட் ப்ளோர்’ல இருக்கு” கையை மேலே உயர்த்தி காண்பித்தபோது, அவன் சென்ட் வாசம் இன்னும் நிலைகுழைய செய்தது.....
“தாங்க்ஸ்” என்று கூறிவிட்டு எப்படியாவது அவனுடன் பேச்சை தொடர முடியுமா? என்று யோசித்தேன்....
நான் அங்கு தயங்கி நிற்பதை பார்த்த அவன், “என்ன சார்?.... அதான் சொல்லிட்டேன்ல, போங்க” என்று கூறிவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்....
ஏனோ அவ்வளவு அவன் என்னை விரட்டும் தொனியில் பேசினாலும், மனதிற்குள் வேறு வழியின்றிதான் அவனைவிட்டு விலகி அவன் சொன்ன இடம் நோக்கி சென்றேன்.... இப்படி சிலரை பார்த்ததும் ஒரு ஈர்ப்பு தோன்றுவது அதிசயமான நிகழ்வு..... ஆனால், அப்படி கைக்கு எட்டிய தூரம் ஒருவன் இருந்தும், ஏனோ அவனை விலகி செல்லும் நிலைக்கு போனது மனதை வருத்தியது.....
“கே கே எக்ஸ்போர்ட் கம்பெனி” க்குள் நுழைந்தேன்.... சிறிய நிறுவனம் தான்....
உள்ளே நுழைந்ததும் விஷயத்தை கூறியதும், அடுத்த ஐந்து நிமிடத்தில் மேலாளர் அறைக்கு அனுப்பப்பட்டேன்.....
“வாங்க மிஸ்டர் பாலாஜி.... டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் உங்களுக்கு தெரியும்ல?”
“தெரியும் சார்..... ஒன் மன்த் ட்ரைனிங், அப்புறம் தான் ஜாப்”
“ஆமா.... உங்களைப்போலவே இன்னொரு ட்ரைனியும் இங்க இருக்காங்க.... அவங்க நேம் நந்தினி தேவி.... உங்க ரெண்டு பேருக்கும் ட்ரைனர் நந்த குமார்.... ஒன் மன்த் அவங்ககூடத்தான் நீங்க வொர்க் பண்ணனும்”
“ஓகே சார்”
அருகில் இருந்த அலைபேசியை எடுத்து, “நந்தா, ஒரு நிமிஷம் உள்ள வாங்க” அழைப்பை துண்டித்துவிட்டு என்னை பார்த்து , “மிஸ்டர் நந்த குமார்தான் உங்க ட்ரைனர்... ஒன் மன்த் ட்ரைனிங்க்கு பிறகு அவர்தான் உங்க ஜாப் பற்றி எனக்கு ரெக்கமண்ட் பண்ணனும்” சொல்லி முடிக்கும்போது அறையின் கதவு திறக்கப்பட்டு உள்ளே வந்தவனை பார்த்து நான் அதிசயித்து நின்றேன்...
சில மணித்துளிகளுக்கு முன்னால் நான் திகைத்து நின்று ரசித்த அழகன்தான் நந்த குமாரா?.... அடடடடா..... சென்னையின் இந்த ஒரு மாதமும் எனக்கு சொர்க்கம் தான்.... அறையின் சுவரில் மாட்டியிருந்த முருகன் படத்தை பார்த்து, யாரும் அறியாமல் வணங்கி நன்றி சொன்னேன்.... இப்போதான் அவன் மேனேஜரை பார்த்து சிரிக்கிறான்.... ஆகா.... சிரிக்கும்போது கன்னத்தின் ஓரத்தில் விழும் குழிக்கு வாழ்க்கை முழுவதும் இந்த கம்பெனி’லேயே ட்ரைனி’யாக இருந்திடலாம்.....
மேலாளரும் அவனும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர், எனக்குத்தான் ஒன்றும் காதில் விழாமல் அவன் முகத்தை பார்த்தவாறே ரசித்துக்கொண்டிருந்தேன்......
“ஓகே பாலாஜி, இப்போ நந்தாவோட போங்க.... அவர் என்னென்ன செய்யனும்னு சொல்வார்” மேலாளருக்கு நன்றி கூட சொல்ல மறந்தவனாக, ஹட்ச் நாய்க்குட்டியை போல நந்தாவின் பின் சென்றேன்.....
அவனுக்கென ஒரு தனி அறையும் இருந்தது.... அங்கு ஏற்கனவே ஒரு பெண்ணொருத்தி அமர்ந்திருந்தாள்....நவீன சென்னை நாகரிகத்தில் அந்த பெண் வித்தியாசமாக எங்கள் ஊர் பெண்ணை போல இருந்தாள்.... கையில் வளையல், காதில் தொங்கும் தோடு, நெற்றியில் அழகான பொட்டு..... அழகாகவே இருந்தாள்.... அவள்தான் மேனேஜர் சொன்ன நந்தினி தேவி என்று நான் கண்டுபிடிக்க பெரிய யோசனை எனக்கு தேவைப்படவில்லை..... ஒருவேளை நந்தாவை பார்ப்பதற்கு முன்பு அவளை பார்த்திருந்தால், அவளை நோக்கி மனம் அலைபாய்ந்திருக்கலாம்.... ஆனால், இப்போது அதற்கு வழியே இல்லை, என் கண் முதல் சகலமும் நந்தாவை சுற்றியே வட்டமடித்தன.....
“உக்காருங்க பாலாஜி, இவங்கதான் நந்தினி தேவி.... உங்க ரெண்டு பேருக்கும் இந்த ஒருமாசம் நான்தான் ட்ரெயின் பண்ண போறேன்.... ஓகே, என் பேர் நந்த குமார்....” அழகாக பேசினான்... வார்த்தைகள் ஒவ்வொன்றும் முத்து முத்தாக உதிர்ந்தது.... உதடுகளை சுழித்து அவன் பேசும் அழகே ஒரு தனி அழகுதான்.....
“உங்க நேட்டிவ் எந்த ஊர் நந்தா?” சம்மந்தமே இல்லாமல் உளறினேன்.....
“வந்த முதல்நாளே வெட்டிப்பேச்சு வேணாம் பாலாஜி, ஜாப் பற்றி பார்க்கலாமா?”
என்ன மனுஷன் இவன்?.... இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா?.... இவ்வளவு உதாசீனப்படுத்தினாலும் அவன் மீது கோபமே வரவில்லையே, ஏன்?.... இப்போது அவன் தன் இருக்கையில் அமர்ந்தவாறு தன் கணினியை இயக்கி எங்கள் இருவருக்கும் வேலையை பற்றி விளக்கிக்கொண்டு இருந்தான்.... நானும் நந்தினி தேவியும் அவன் இரண்டு பக்கங்களிலும் நின்று அவன் சொன்னதை கவனித்துக்கொண்டு இருந்தோம்....
அவன் அழகான கை விரல்கள் கணினியின் விசைப்பலகையை தட்டச்சு செய்வது ஏதோ ஒரு மேற்க்கத்திய நடனம் ஆடும் கால்களை போல தெரிந்தது.... இடது கையின் மோதிர விரலில் போட்டிருந்த ஒரு ராசிக்கல் மோதிரம், அவன் கை விரல்களை இன்னும் செழுமையாக காட்டியது.... அவன் விரல்களின் தட்டச்சு இசைக்கு ஏற்றவாறு என் உடலுக்குள் அட்ரினலின் ஆட்டம் போட்டது.... ஒருவனுடைய கை விரல்கள் கூட எனக்குள் இவ்வளவு கிளர்ச்சியை உண்டாக்குவதை என்னால் கூட என்னை நம்பமுடியவில்லை....
“இதுதான் நம்ம கம்பனியோட ப்ரொசியூஜர்..... ஷிப்பிங் டேட் சரியா கொடுக்கணும், சரக்கல்லாம் ஷிப்பிங் செஞ்சு, கிளியரன்ஸ் ஆகுற வரைக்கும் எல்லாம் நம்ம பொறுப்புதான்” அவன் கடைசியாக சொன்ன இது மட்டும்தான் எனக்கு புரிந்தது....
இன்னும் அவன் என்னென்னமோ சொல்கிறான், அதை கவனிக்கும் மனநிலையில் தான் நான் இல்லை.... அவனை அங்குலம் அங்குலமாக ரசித்துக்கொண்டு இருந்தேன்.... திடீரென்று “வாலி” படத்தில் சிம்ரனை பார்க்கும்போது அஜித்’க்கு பின்னணி இசையாக கேட்கும் இசை எனக்கும் கேட்டது..... என்ன இது? ஹாலுசினேஷன்’ஆக இருக்குமோ?.... சத்தம் அதிகமாகிக்கொண்டே இருந்தது....
இப்போது நந்தா என்னை நோக்கி திரும்பி, “பாலாஜி, உங்க மொபைலை சுவிட்ச் ஆப் பண்ணலாமே?” என்றான்....
இப்போதுதான் எனக்கு தெரிந்தது, அந்த சத்தம் என் கைப்பேசியில் இருந்து எழுந்தது என்று..... அதற்குள் நான் “ஹாலுசினேஷன்” பற்றியல்லாம் சிந்திக்க தொடங்கிவிட்டேன்.....
அவன் சொன்னதை அரைகுறையாக புரிந்துகொண்டு, அவன் சொன்னவற்றுக்கு தலையை மட்டும் அசைத்தேன்....
“ஓகே.... உங்க டேபிள்’ல சில புக்ஸ் இருக்கும்.... ஷிப்பிங் டீட்டைல்ஸ் பற்றி அதில் இருக்கும், அதை படிச்சு பாருங்க” எங்கள் இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு அவன் கடமையில் தீவிரமானான்....
வெளியே வந்து எனக்கும் தேவிக்கும் ஒதுக்கப்பட்ட இடத்தில் நந்தா சொன்ன புத்தகங்களை எடுத்து விருப்பமின்றி புரட்டினேன்....
“என்ன பாலாஜி, சிட்டி ரோபோவை’விட இவ்வளவு வேகமா படிக்கிறீங்க?” காதுகளின் அந்த தொங்கும் தோடுகள் சிலிர்க்க சிரித்தாள்....
அசடு வழிய சிரித்து, “இல்ல சும்மா பார்த்தேன்..... ஏன் இந்த ஆள் இப்படி இருக்கார்?” என்றேன்....
“எந்த ஆள் எப்டி இருக்கார்?... இந்த ஆபிஸ்’ல கிட்டத்தட்ட ஏழெட்டு ஆள் இருக்காங்களே?”
“நந்தாவைத்தான் சொல்றேன்.... வந்த முதல்நாளே மூட் அவுட் ஆக்குறார்.... ஜோவியலா பழகலாம்ல?” என் ஏமாற்றத்தை வேறு வடிவத்தில் அவளிடம் சொன்னேன்....
“அப்டி இல்ல பாலாஜி... இன்னும் ஒன் மன்த் ட்ரெயினிங்க்கு பிறகு அவர் நம்மள செலக்ட் பண்ணனும், அதுவரைக்கும் இப்டி டிஸ்டன்ஸ் மெய்ண்டயின் பண்றதுதான் அவருக்கும் நல்லது... தன்னோட விருப்பு வெறுப்பு இல்லாம அவர் செலக்ட் பண்ணனும்னா இந்த அளவுக்கு அவர் ஒதுங்கி இருக்குறதுதான் அவருக்கு சேப்” தேவி சொல்வதிலும் ஒரு நியாயமான அர்த்தம் இருக்கிறது.... எப்போதுமே ஒரு பெண் யோசிக்கும் கோணத்தில் ஆண்கள் யோசிப்பதே இல்லை...
தேவி ஒருத்தி இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் குழம்பி போயிருப்பேன்.... அன்றைய பொழுது ஓடி முடிந்தது.... அலுவலகம் முடிந்து ஐந்து மணிக்கு வெளியே வந்து, வேளச்சேரிக்கு செல்லும்போது ஏழரை ஆகிவிட்டது.... சென்னை வாழ்க்கையின் பாதி நேரத்தை இதுபோல பயண நேரமே விழுங்க போகிறதோ? என்று பயந்தேன்.... வீட்டிற்கு சென்றபிறகும், நிம்மதியாக ஓய்வு எடுக்க முடியாமல் அருகில் இருந்த மளிகை கடைக்கு நான்கு முறை அலையைவைத்தார் அத்தை...
ஒரு மாதம்தான், எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள முடிவெடுத்தேன்.... இரவு படுக்கும்போது பத்தரை ஆகிவிட்டது.... இப்போது மீண்டும் நந்தா என் நினைவில் நிழலாடினான்... இதுவரை எந்த ஆணிடமும் நான் இப்படி வசியப்பட்டு போனதில்லை.... ஏதோ ஒன்று அவனை நோக்கி என்னை செலுத்துகிறது.... சென்னையில் இந்த ஒரு மாதம் இருக்க வேண்டும் என்கிற கவலையை நந்தாவின் நினைவு அறவே அகற்றியது....
அன்றைய பயணக்களைப்பும், நந்தாவின் நினைவுகளும் என்னை அதற்கு மேல் முழித்திருக்க விடவில்லை.... ஆழ்ந்து உறங்கினேன்.... மீண்டும் காலை அதே அவசரம், அதே பேருந்து.... தேனாம்பேட்டை வந்தடைந்ததும், பேருந்து நிறுத்தத்திலிருந்து நூறு அடி தூரம் நடக்க வேண்டும்.... அப்போது தன் பைக்கில் அந்த வழியே அலுவலகம் நோக்கி சென்றான் நந்தா....
என்னை பார்த்ததும் நிறுத்துவான் என்று நினைத்தேன், ஆனால் ஒரு சிறு புன்னகையோடு அவன் என்னை கடந்து சென்றுவிட்டான்..... ஒரு பக்கம் கோபம் என்றாலும், மறுபக்கம் ஒரு சிறிய சந்தோசம்....
நேற்றைவிட இன்றைக்கு ஒரு நல்ல முன்னேற்றம்.... ஆம், நேற்று அவன் கோபமும், கடுப்புமாக என்னிடம் நடந்துகொண்டான்... இன்றைக்கு, ஒரு சிரிப்பை பார்த்தேனே..... அது போதும் இன்றைக்கு என்று எண்ணியவாறே அலுவலகத்தை நோக்கி உற்சாக நடை நடந்தேன்.....
அடுத்த இரண்டு நாட்களும் சென்னை வாழ்க்கை ஒரு வித்தியாசத்தையும் தரவில்லை.... நந்தாவும் அலுவலக பேச்சு தவிர வேறு பேச்சு பேசவில்லை.... வறண்ட பாலைவனத்தில் தாகத்தோடு நாட்களை கழிப்பது போல சென்னை நாட்களை இரண்டு நாட்களாக கழித்தேன்....
இன்று அலுவலகம் முடிந்து பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தேன்.... என் அருகில் ஒரு பைக் வந்து நின்றது.... ஆம், அது நந்தாவேதான்.... அலுவலக சம்மந்தமாக எதாவது சொல்லப்போகிறான் என்ற கடுப்பில், அவ்வளவாக ஆர்வம் காட்டாமல், “என்ன நந்தா?” என்றேன்.....
“பஸ் ஸ்டாப் தானே போற?.... வா ஏறிக்கோ..... அங்க இறக்கி விடுறேன்”
என் காதுகளை என்னால் நம்பமுடியவில்லை.....
“என்ன...? என்னது?....” புரியாமல் கேட்டேன்....
“பஸ் ஸ்டாப்ல இறக்கி விடுறேன்னு சொன்னேன்” என்று சத்தமாக சொன்னான்....
இனி மறுபேச்சு பேசணுமா என்ன?.... உடனே ஏறிக்கொண்டு, ஏறிய வேகத்தில் அவன் இடுப்பை பிடித்தேன்.... அவன் என்னை ஓரக்கண்ணால் திரும்பி பார்க்க, பதறியபடி கைகளை விலக்கினேன்......
பைக்கில் ஏறிவிட்டாலும் கூட எதுவும் பேச தயக்கமாக இருந்தது.... காரணம், இதுவரை அவனிடம் பேசிய பேச்சுகள் எப்போதும், கசப்பான பதில்களையே கொடுத்திருக்கிறது என்கிற பயம்...
சரி, கேட்டுவிடலாம்... என்ன கேட்பது?.... எந்த ஊர்?.... வேண்டாம் வேண்டாம்.... பைக்குக்கு மைலேஜ் என்னனு பொதுவா பேச்சை தொடங்கலாமா?.... இது முட்டாள்தனமா இருக்கும்... உங்க வீடு எங்க இருக்கு?னு கேட்கலாம் என்று முடிவெடுத்து நான் அதை கேட்க வாயெடுக்கும் முன் அவன் அதை கேட்டுவிட்டான்....
“நீ எங்க தங்கி இருக்க பாலாஜி?” ஆஹா.... எவ்வளவு இனிமையான குரல்....
“வேளச்சேரில மாமா வீட்ல தங்கிருக்கேன்”
“ஓ.! அவ்வளவு தூரத்துலேந்து வரியா?.... சரி சரி”
அதற்குள் பேருந்து நிறுத்தம் வந்துவிட்டது.... வழக்கமாக வாகன நெரிசலால் ஸ்தம்பிக்கும் சாலை அன்று மட்டும் நெரிசல் இல்லாமல் இருந்தது... என் விதியை நொந்துகொண்டு, பைக்கிலிருந்து இறங்கினேன்....
“பாய்” என்று சொல்லிவிட்டு ஒரு புன்னகை சிந்தினான்.... அது போதும் என் வாழ்வின் மோட்சத்திற்கு.... அந்த புன்னகைகை நினைத்துக்கொண்டிருந்ததில் பேருந்தை விட்டுவிட்டேன்.... அடுத்த பேருந்தில் செல்லலாம், சீக்கிரம் வீட்டிற்கு போனால் கூட அத்தையின் பாரா முகத்தை பார்த்து எரிச்சலாக வேண்டுமே... இன்றாவது தாமதமாக செல்லலாம்....
பேருந்தின் ஜன்னலோரம் அமர்ந்தவாறே, நந்தாவை நினைத்துக்கொண்டேன்....
ஏன் நான் இப்படி அவன் மீது பைத்தியமானேன் என்று தெரியவில்லை... அவனுக்கு கே உறவில் விருப்பம் உண்டா? என்ற அடிப்படை கேள்விக்கு கூட எனக்கு பதில் தெரியாது... ஆனாலும், அந்த காதல்.... இப்போதான் அந்த உறவுக்கு “காதல்” என்று பெயர் வைத்திருக்கிறேன்....
ஏனோ என் உள்ளுணர்வு சொன்னது, “அவன் உனக்குத்தாண்டா..... நீ விடாம முயற்சி பண்ணு” என்று....
அறிவை மழுங்கடித்து பலநேரம் இந்த மனம் செய்யும் சித்து விளையாட்டுகளுக்கு அளவே இல்லை, அப்படி ஒரு திருவிளையாடல்தான் இதுவும் போல....
மாமாவின் வீட்டிற்கு வந்துவிட்டேன்.... வாசல் வரை கேட்கிறது அத்தையின் குரல்... ஏதோ சண்டை போல... கூர்ந்து கவனித்தேன், என் பெயரும் அடிபட்டது... நான் அடிபட போவதற்கு முன்னால் என் பெயர் அடிபடுதோ? என்று நினைத்தேன்....
உள்ளே நுழையும்போதே மாமா, “என்ன பாலா இவ்ளோ லேட்?”
“பஸ் லேட் மாமா”
“மொபைல் வேற அணைத்து வச்சிருக்குற?... எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா?” மொபைலை எடுத்து பார்த்தேன், சார்ஜ் இல்லாமல் அணைந்துவிட்டது.... நந்தாவின் நினைவில் எல்லாமே மறந்துவிட்ட எனக்கு மொபைல் மட்டும் என்ன நினைவிலா இருந்திருக்கும்....
“சார்ஜ் இல்ல போல மாமா”
“பாத்திங்களா உங்க அக்கா மகன் பேசுற பேச்ச?... நம்ம இவ்ளோ பதறி போயிருக்கோம், அவரு ரொம்ப சாதாரணமா சொல்றதை பாத்திங்களா?... மெட்ராஸ்ல ஏதோ ஒன்னு ஆச்சுன்னா, அவங்க அப்பா அம்மாவுக்கு யார் பதில் சொல்றதாம்?” என் மீது அத்தைக்கு என்னதான் கோபமோ தெரியவில்லை...
எப்போதும் இப்படி எறிந்தே விழுவாள்.... அத்தையை பெண் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த நான் மாமாவிடம், “பொண்ணு மூஞ்சுறு மாதிரி இருக்கு மாமா.... குரலும் எலி கத்துற மாதிரியே இருக்கு” என்றேன்....
இதை மாமா எப்போதோ அவளிடம் விளையாட்டாக கூறப்போக, அன்றுமுதல் இப்படி மறைமுக தாக்குதல் என் மீது விழுவது வாடிக்கையாகி விட்டது....
“என்ன பேசுற நீ?... அதான் நான் பேசிட்டு இருக்கேன்ல.... நீ போயி சாப்பாட்டை எடுத்து வை” தடுமாறி அத்தையை திட்டுவது போல காட்டிக்கொண்டார்....
“ஆமா... அது ஒண்ணுதானே என் வேலை.... இதுக்கு எங்கயாச்சும் சத்திரத்துல சமைச்சு போட்டாலும் புண்ணியமாவது கிடைக்கும்”
இந்த நொடி முதல் அந்த வீட்டில் தண்ணீர் கூட குடிக்கக்கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டேன்..... மாமா எவ்வளவோ கூறியும் சாப்பிடாமல் அறைக்கு சென்று படுத்துவிட்டேன்....
“பச்சை தண்ணி கூட குடிக்க மாட்டேன்” என்கிற சபதத்தை கொஞ்சம் தளர்த்திவிட்டு, கொஞ்சம் தண்ணீர் மட்டும் குடித்து பசியை ஆற்றிவிட்டு படுத்தேன்....
காலையில் எழுந்து பால் வாங்கும் வேலையை நான் அன்று செய்யவில்லை... குளித்து கிளம்பிவிட்டு அன்று கொஞ்சம் முன்னதாகவே அலுவலகம் சென்றுவிட்டேன்.... அலுவலகத்திற்கு அருகே இருக்கும் ஒரு சிறிய உணவகத்தில் புளித்த மாவில் ஊற்றிய தோசையும், கடலை மாவு கலவை போல காணப்பட்ட சாம்பாரையும் சம்பிரதாயத்துக்கு சாப்பிட்டுவிட்டு அலுவலகம் சென்றேன்....
வழக்கம்போல தேவி எனக்கு முன்பாகவே அங்கு வந்துவிட்டாள்....
“என்ன பாலா, இன்னைக்கு உங்க மாமா வீட்ல சாப்பாடு போடலையா?” நேரில் பார்த்தது போல சொன்னாள்...
“இல்ல தேவி... லேட் ஆச்சுன்னு வந்துட்டேன்.... உங்களுக்கு எப்டி தெரியும்?”
“அதான் அந்த ஹோட்டல்ல நீங்க சாப்டதை பார்த்தேனே.... இனி சாப்பிடுறதா இருந்தா பஸ் ஸ்டாப்க்கு பக்கத்துலையே ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு, அங்க சாப்டுங்க”
“சரி தேவி”
அலுவலகத்தில் ஒவ்வொருவராக வந்துவிட்டனர்.... வழக்கம்போல புகைபிடித்துவிட்டு வாயில் ஆர்பிட் போட்டு மென்றவாரே நந்தாவும் வந்தான்...
தன் அறைக்கு சென்று திரும்பிய வேகத்தில் வெளியே வந்த நந்தா என்னை பார்த்து, “பாலா, அந்த வினய் கெமிக்கல்ஸ் கஸ்டம்ஸ் க்ளியரன்ஸ் சர்டிபிகேட்டை எடுத்துட்டு வாங்க.... அவங்க ஆபிஸ்ல போய் கொடுத்துட்டு ஹார்பார்ல சில பார்மாலிட்டிஸ் இருக்கு, அதையும் முடிச்சுட்டு வந்திடலாம்” என்றான்....
இந்த வார்த்தை போதுமே.... ஆபிஸ் போய், ஹார்பர் போய் முடிச்சிட்டு வர்றதுக்கு எப்டியும் மதியம் ஆகிடும்.... அதுவரை அவனோடு சுற்றப்போகிறேன்.... ரொம்பவும் மகிழ்ச்சியோடு எல்லா கோப்புகளையும் எடுத்துக்கொண்டு அவனோடு பைக்கில் கிளம்பினேன்.... வினய் கெமிக்கல்ஸ் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் நிறுவனம்தான் என்பதால் அந்த வேலை ஐந்து நிமிடத்தில் முடிந்துவிட்டது.... இப்போது ஹார்பர் செல்லவேண்டும்... ஆனால், நந்தாவோ தேனாம்பேட்டையின் ஒரு குறுக்கு சந்துக்குள் வண்டியை செலுத்தினான்... எனக்கு சென்னை சாலைகள், இடங்கள் பரிச்சயம் இல்லை என்பதால், அவன் உடல் வாசனையை ரசித்தவாறே, பைக் குலுங்கும்போது நடைபெறும் தழுவல்களை ரசித்தவாறும் அமர்ந்திருந்தேன்....
“பாலா, இறங்குங்க” அதுக்குள்ளையும் ஹார்பர் வந்திடுச்சா?... இல்லையே, ஒரு கப்பலையும் காணுமே?....
“இதுவா ஹார்பர்?” அப்பாவியாக கேட்டேன் நான்....
“ஹ ஹ ஹா.... இல்ல இல்ல.... இங்க என் அப்பார்ட்மென்ட் இருக்கு, அங்க ஒரு பைல் இருக்கு, அதை எடுத்துட்டு போய்டலாம்”
ஒருசில நாட்களுக்குள் அவன் வீடுவரை வந்ததுகூட ஏதோ தெய்வ கடாட்சமாக தோன்றியது எனக்கு....
நடுத்தரமான ஒரு வீடுதான்... இரண்டு அறைகள்... ஒன்று மிக சிறியது.... அங்கு அவனுடைய புத்தகங்கள், கணினி மற்றும் அலுவலக பொருட்கள் இருந்தது... இன்னொன்று நல்ல பெரிய அறை.... அவனைப்போலவே அவன் அறையும் அழகாக இருந்தது... நிச்சயமாக குறைந்தது ஐந்தாயிரமாவது வாடகை இருக்கும் என்று தோன்றியது எனக்கு....
“இந்த அப்பார்ட்மென்ட்க்கு என்ன ரெண்ட் நந்தா?”
“இரண்டாயிரம்.... ஏன் கேட்குற?”
“அவ்ளோதானா?... ஆச்சரியமா இருக்கே.... இதே மாதிரி இன்னொரு பிளாட் வாடகைக்கு கிடைக்குமா?”
“இது என் ப்ரெண்ட்’ஓட பிளாட்..... அதான், எனக்காக குறைச்ச வாடகைக்கு விட்டான்.... வேற பிளாட் எதுவும் இப்போ காலியா இல்ல.... இருந்தா சொல்றேன்.... ஏன், மாமா வீடு பிடிக்கலையா?”
“இல்ல.... ரொம்ப டிஸ்டன்ஸ் அதான்.... உங்க குடும்பம் எங்க இருக்காங்க?”
“அவங்க புரசைவாக்கத்துல இருக்காங்க.... எனக்கு பிரைவசி வேணும்னு இங்க வந்துட்டேன்... வீக்லி ஒன்ஸ் வீட்டுக்கு போவேன்”
இவ்வளவு பேசியது எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.... ஆனாலும் ஒரு சிறு கவலை, இவன் ஒரு ஆள் மட்டும்தான் தங்கி இருக்கான், என்னையும் தங்கிக்க சொல்லிருந்தா இன்னும் நான் சந்தோஷப்பட்டிருப்பேன்....
பரவால்ல, இந்த அளவுக்கு அவனுடனான உறவில் முன்னேற்றம் வந்திருப்பதே இப்போதைக்கு எனக்கு போதுமானதாக இருந்தது....
இப்போ ஹார்பர் செல்லும் வழியெல்லாம் சகஜமாக பேசினான், செல்லும் வழியில் ஒரு கடையில் குளிர் பானம் குடித்தோம்....
இந்த அந்நியனுக்குள்ள இப்படி ஒரு ரெமோவா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அன்பாகவும், அக்கறையாகவும் பலவும் பேசினான்.... ஹார்பர் சென்றபிறகும் அங்கு செய்ய வேண்டிய வேலைகளை பற்றியும், சரக்குகள் ஏற்றி கப்பல் வெளிநாடு செல்வது வரை உண்டான வழக்கங்களை பற்றியும் தெளிவாக கூறினான்....
மீண்டும் அலுவலகம் வர மாலை ஆகிவிட்டது.... இந்த ஒருநாளை என்னால் நிச்சயம் மறக்க முடியாது.... வாழ்நாள் முழுவதும் நினைக்காமலும் இருக்க முடியாது....
இன்று நான் வேண்டுமென்றே இரண்டு பேருந்துகளை தவறவிட்டு, தாமதமாகவே வீட்டிற்கு சென்றேன்....
“இங்க பாருங்க... இங்க தங்கிகிட்டு இந்த மாதிரி அந்த பையன் இஷ்டப்படி வரக்கூடாதுன்னு சொல்லுங்க.... சரிபடலைனா வேற எடத்தை பாத்துக்க சொல்லுங்க.... ஒவ்வொருநாளும் பயந்துகிட்டு என்னால இருக்க முடியாது”
நல்ல வேளையாக அத்தையாகவே இந்த பேச்சை இன்று தொடங்கினாள்....
“இன்னும் நாலஞ்சு நாளுக்குள்ள நான் ஆபிஸ் பக்கத்துலையே ரூம் பாத்துக்கறேன்.... அதனால என்னைப்பற்றி நீங்க கவலைப்பட வேணாம்.... அம்மா சொன்னதுக்காகத்தான் இங்க தங்க நான் ஒத்துக்கிட்டேன், இனி உங்களுக்கு அந்த கஷ்டத்தை நான் கொடுக்க மாட்டேன்” காட்டமாகவே பேசிவிட்டேன்.... இதை அத்தையே எதிர்பார்த்திருக்க மாட்டாள்....
மாமாவோ யாரை சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் வழக்கம்போல தடுமாறி நின்றார்... அவருக்கு அந்த வாய்ப்பையே கொடுக்காமல் நான் அறைக்குள் சென்று படுத்துவிட்டேன்....
நல்ல வேலையாக வேறு அறையில் தங்குவதற்கு காரணம் எனக்கு கிடைத்துவிட்டது.... நந்தாவின் அறைக்கு பக்கத்திலேயே நல்ல அறை ஒன்று பார்க்க வேண்டும்... சிந்தித்தபடியே உறங்கினேன்....
மறுநாள் வழக்கம் போல அலுவலகம்..... இன்றைக்கும் ஹார்பர் விசிட் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்?....
தேவி இன்று வழக்கத்தைவிட அழகாக தெரிந்தாள்.... வெள்ளிக்கிழமை என்பதால், நெற்றியில் குங்குமமும், தலையில் மல்லிகை பூவும்தான் அந்த எக்ஸ்ட்ரா அழகுக்கு காரணம் என்று எனக்கு புரிந்தது....
தேவியை கூர்ந்து கவனித்ததை அவள் பார்த்துவிட்டாள்....
“என்ன பாலா?.... என்ன பயங்கர யோசனைல இருக்கீங்க?”
“ஒண்ணுமில்ல தேவி.... டெய்லி வேளச்சேரி போயிட்டு வர்றதுல டயர்ட் ஆகிடுறேன்.... அதான், ஆபிஸ் பக்கத்துலேயே தங்கிடலாம்னு இருக்கேன்... எனக்கு சென்னை புதுசு.... ஒரு மாசம் தங்குறதுக்கு வீடு தேடுறது கஷ்டம்....” என்னென்னமோ உளறினேன் அவளிடம்....
“இதானா ப்ராப்ளம்?.... நம்ம நந்தாவோடவே தங்கிடுங்களே?.... அவர் தனியாதான் தங்கிருக்கார்.... ஒன் மன்த் தானே?”
“நல்ல ஐடியாதான்.... பட், அவரை பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே, எந்த நேரத்துல எப்டி பேசுறாருன்னே தெரியாது... இதை கேட்டு, அதுக்கு டென்சன் ஆகிட்டார்னா, வேண்டாம் பிரச்சினையே” நானும் சிரிக்க, அவளும் சிரித்தாள்....
நந்தா அறையை விட்டு வெளியே வந்து, நாங்கள் அமர்ந்திருந்த இடத்தை பார்த்து, “ஹார்பர் போகலாமா?.... ராஜ் பார்மா கம்பெனியோட சர்ட்டிபிகேட் எடுத்துட்டு வாங்க” என்றான்.....
அடடடடா.... ஒரு மனுஷனுக்கு இப்படியுமா யோகம் தொடர்ந்து அடிக்கும்?.... உற்சாகமாக அந்த கோப்புகளை எடுத்துக்கொண்டு எழுந்தேன்....
அதை பார்த்த நந்தா, “உன்ன சொல்லல பாலா.... இன்னைக்கு தேவி வரட்டும்.... அவங்களும் இதை கத்துக்கணும் இல்ல” என்றான்....
இடிந்து போய் அந்த கோப்புகளை தேவியிடம் கொடுத்தேன்....
மறுபேச்சு பேசாமல், அதை வாங்கிக்கொண்டு நந்தாவின் பின் சென்றாள்....
எனக்கோ மனது படபடத்தது.... எழுந்து சென்று ஜன்னல் வழியே அவர்கள் செல்வதை பார்த்தேன்... நந்தாவின் பைக்கில் ஏறிய தேவி, அவன் தோளில் கை வைத்துக்கொள்ள, நந்தாவின் பைக் வழக்கத்தைவிட வேகமாக தெருமுனையில் மறைந்தது....
எனக்கு கோபமும், ஏமாற்றமும் காரணமில்லாமல் வந்தது....
ஹார்பர் செல்லும் பாதைகளில் எவ்வளவு மேடு பள்ளங்கள்?.... அதுவும் இந்த வேகத்தில் சென்றால் குழுக்கங்கள் அதிகமாகத்தான் இருக்கும்...
தேவியும் வழக்கத்தைவிட இன்று அழகாக இருக்கிறாள்....
பலவாறும் யோசித்தபடி என் இருக்கையில் அமர்ந்திருந்தேன்....
மணி அண்ணன் டீயும், வடையும் வழக்கம்போல என் மேசையில் வைத்தார்.... மணி அண்ணன் தான் இந்த நிறுவனத்தின் ஆல் இன் ஆல்.... மேனேஜர் பிள்ளைகளை பள்ளியில் விடுவது முதல், நந்தாவின் பைக்கை சர்வீஸ் விடுவது வரை எல்லாமும் செய்வார்.... அவ்வப்போது வாங்கும் சம்பளத்திற்கு அலுவலக வேலைகளையும் இடையிடையே செய்வார்....
டீயை வைத்துவிட்டு என்னை பார்த்த மணி அண்ணன், “இன்னா சார், ஒரு மாறியா கீற?....உடம்பு எதுவும் நோவா?” என்றார்....
“ஒண்ணுமில்ல அண்ணே.... லேசா தலை வலிக்குது, அவ்ளோதான்”
“புர்யுது சார்.... நந்தா சார் கைல தேவி மேடம் மாட்டிக்கின்னத பத்தி மெர்சல் ஆவுறியா?.... எப்பவுமே அவரு அப்டிதான்.... எங்கயோ பெரிய மச்சம் இருக்கு அவருக்கு... பொண்ணுக பொத்துன்னு அவர் கைல விழுவாங்க சார்...
ஆளும், சும்மா ஆர்யா கணக்கா ஜோரா கிறாரா?... அதான்.... ஆபிஸ்ல இந்த மேறி விஷயத்துக்கு போகச்சொல்ல கார் இருக்கு.... அத வுட்டுட்டு இந்த ஆளு பைக்ல இட்டுட்டு போயிருக்காரு பாத்தியா சார்?..... அதான்... நீயும் தேவி மேடத்துக்கு என்னல்லாமோ ரூட்டு போட்ட.... ஆனால், எல்லாம் வேஸ்ட்டு.... சரி வுடு சார், நீ கொஞ்சம் வேற மேறி தின்க் பண்ணு, சோக்கா உன் கைல விழும்” சொல்லிவிட்டு நகர்ந்தார் மணி....
அவர் சொன்ன விஷயங்களைவிட, அவர் தமிழ் என்னை இன்னும் வெறுப்பாக்கியது.... நேற்று போல இன்றும் நந்தா வீட்டுக்கு அழைத்து செல்வானோ?... வீட்டில் வேறு யாரும் இருக்க மாட்டார்களே?.... தேவியும் ரொம்ப அப்பாவி பொண்ணு, எதையாவது பேசி எதாவது நடந்திடுமோ?... அப்போ, இனிமே நந்தாவை நெனைக்க கூட முடியாதா?...
“நந்தாவை அடையளாம்” என்று எனக்கிருந்த ஒரு சிறு நம்பிக்கையும் தளர்ந்து போனது எனக்கு.... அரை மணிக்கு ஒரு முறை, ஜன்னல் வழியே எட்டிப்பார்த்துக்கொண்டு இருந்தேன்....
அன்று மதியம் சாப்பாடு இறங்கவில்லை.... நிஜமாகவே ஹார்பர்தான் சென்றிருப்பார்களா?... பக்கத்தில் இருக்கும் திரையரங்கில் நல்ல காதல் படம் ஓடுவதை நேற்று பார்த்தேன், அங்கு மேட்னி எதுவும் போயிருப்பாங்களோ?
இந்த முட்டாள் மேனேஜர் இதையல்லாம் கேட்க மாட்டானா?... இவ்வளவு நேரம் ஏன் லேட்டுன்னு கேட்டா என்னவாம்?... குறைஞ்சது ஒரு கால் பண்ணியாச்சும் கேக்கலாம்ல....
ஆம்.... அதான் அவங்க ரெண்டு பேரும் மொபைல் வச்சிருக்காங்களே....
நந்தாவை அழைக்கலாமா?... வேண்டாம்.... சிடுமூஞ்சி, திடீர்னு எரிஞ்சு விழுவான்....
தேவியின் எண்ணை எடுத்து டயல் செய்ய போகும்போது, தேவியே அலுவலகம் வந்துவிட்டாள்.... பின்னாலேயே ஏதோ சொல்லி சிரித்தவாறு பாலாவும் வந்தான்...
எதையோ நினைத்து நினைத்து சிரித்த தேவி, என் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.... இன்னும் பாலா சொன்ன எதையோ நினைத்து சிரித்தாள்..... எனக்கு கோபம்தான் வந்தது...
நான் எதையும் அவளிடம் கேட்கவில்லை.... கேட்டு மனம் நோக விரும்பவில்லை...
இப்போதான் அவள் முகத்தை கவனித்தேன்.... தலை முடிகள் களைந்து, நெற்றியின் குங்குமம் அழிந்தும், பூக்கள் சிதறியும் இருந்தது....
பல தமிழ்ப்படங்களை பார்த்து நான் ரொம்பவே கெட்டு போய்ட்டேன்.... பைக்கில் போனால் இப்படித்தான் இருக்கும் என்ற அடிப்படை விஷயத்தை கூட என் மனம் ஏற்க மறுத்தது...
“என்ன பாலா ஒரு மாதிரி இருக்கீங்க?”
“லேசா தலை வலி தேவி.... ஏன் இவ்ளோ நேரம் ஆச்சு ஹார்பர் போயிட்டு வர?”
“அங்க நிறைய பார்மாலிட்டிஸ் இருந்துச்சு.... வர்ற வழில நந்தா செலவுல ஒரு நான்-வெஜ் ஹோட்டல்ல ஒரு புடி புடிச்சேன்... வெள்ளிக்கிழமைன்னு கூட மறந்துட்டு நெறைய சாப்டுட்டேன்” சிரித்தாள்....
அடப்பாவி, எனக்கு ஒரு கூல் டிரிங்க்ஸ்’ஓட நிறுத்திட்டு, இவளுக்கு புள் மீல்சா?....
அன்று மாலை விரக்தியோடு பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தேன்... பின்னால் நந்தாவின் பைக் வருவதை உணர்ந்தேன்... ஆனாலும், அதை கண்டுகொள்ளாமல் நடந்தேன்...
என் அருகில் வண்டியை நிறுத்திய நந்தா, “வா பாலா... நான் டிராப் பண்றேன்” என்றான்...
“பரவால்ல நந்தா.... இந்தா பக்கத்துலதானே இருக்கு பஸ் ஸ்டாப், நான் போய்க்கறேன்”
“நான் ஒருவேலையா வேளச்சேரிதான் போறேன்.... உன்ன அங்கேயே டிராப் பண்றேன்...” அவன் இன்று கொஞ்சம் அதிகமாகவே வற்புறுத்தினான்....
அதற்கு மேல் என்னவனை நான் இம்சிக்க விரும்பாமல், வண்டியில் ஏறினேன்....
எவ்வளவு கோபங்கள் அவன் மீது இருந்தாலும்... அவன் முகத்தை பார்த்தாலும், அவன் பேச்சை கேட்டாலும், அவன் தொடுதலை உணர்ந்தாலோ எல்லாம் மாயமாகிவிடுகிறது.... இவன் பெரிய மந்திரக்காரன் தான்....
அதற்குள் வேளச்சேரி வந்துவிட்டது.... இவனோடு இருக்கும் நேரங்கள் மட்டும் யுகங்கள் கூட நொடிகளாக கரைந்துவிடுகிறது....
“இவ்ளோ தூரம் டெய்லி வர்றது ரொம்ப கஷ்டமா இருக்கும்ல?”
“ஆமா நந்தா.... ரொம்ப களைப்பா ஆகிடுது... அதான் நம்ம ஆபிஸ் பக்கத்துலேயே ரூம் பாக்கலாம்னு இருக்கேன்”
“ஒன் மன்த் தானே.... நீ என் கூடவே தங்கிக்கோ.... அதுக்கு பிறகு ஜாப் பெர்மனன்ட் ஆனபிறகு நீ வேற பிளேஸ் பாத்துக்கலாம்ல?”
“நெஜமாவா சொல்ற?”
“ஆமா... அதை நேற்றே சொல்லிருப்பேன்.... நீ அங்க தங்குவியான்னு தெரியல, அதான் கேக்கல.... இன்னைக்கு தேவி சொன்னாள்... அப்போதான் உனக்கும் இது ஓகேன்னு தெரிஞ்சுது”
“தாங்க்ஸ் நந்தா....”
“பரவால்ல.... நீ நாளைக்கே உன் பொருட்களை எடுத்துட்டு அங்க வந்துடு... நாளைக்கு சனிக்கிழமை, ஆபிஸ் லீவ்.... அதனால ப்ரீயாதான் இருப்பேன்”
“கண்டிப்பா வந்திடுறேன்... ரொம்ப தேங்க்ஸ் நந்தா”
“அட போதும்பா... நான் கெளம்புறேன்”
“வேளச்சேரில ஏதோ வேலை இருக்குன்னு சொன்னியே?”
“அதான் அந்த வேலை முடிஞ்சிடுச்சே”
“எப்போ?... உன்கூடத்தானே நான் வந்தேன், நீ வேற எங்கயும் போகலையே?”
“உன்னை டிராப் பண்றதுதான் அந்த வேலை, அதான் முடிஞ்சிடுச்சே” கண்ணடித்து சிரித்துவிட்டு பைக்கில் கிளம்பிவிட்டான் நந்தா....
மன்மதன்கள் பைக்கிலும் வருவார்கள் என்று இப்போதுதான் உணர்ந்தேன்....
இன்றைய முற்பொழுது முழுக்க சோகத்திலும், பிற்பொழுது முழுக்க மோகத்திலும் கழிந்தது....
வழக்கம் போல அத்தை மாமாவுடன் சண்டை போட்டது, குழந்தை “வீல்” என்று கத்தியது, எதிர் வீட்டு நாய் விடாமல் குரைத்தது என்று எதுவும் என்னை தொந்தரவு செய்யவில்லை.... என் நினைவெல்லாம் நந்தா, என் கனவெல்லாம் நந்தா.... அவ்வளவுதான்....
அன்றைய இரவு மட்டும்தான் நான் மாமா வீட்டில் இருக்கப்போகும் கடைசி நாள் என்பதால் எந்த பேச்சும் நான் யாருடனும் வைத்துக்கொள்ளவில்லை....
விடிந்ததும் முதல் வேலையாக என் பொருட்களை எடுத்துக்கொண்டு மாமாவின் வீட்டைவிட்டு வெளியே வந்தேன்... சம்பிரதாயத்துக்கு மாமாவிடம் சொல்லிவிட்டு, குழந்தையின் கன்னத்தை வருடிவிட்டு வேளச்சேரிக்கு விடை கொடுத்தேன்....
வந்த ஒரு வாரத்தில் சென்னை என்னை நிறைய மாற்றிவிட்டது.... ஆகா, இன்று சென்னை எவ்வளவு அழகாக தெரிகிறது..... நம் ஊரை போல அடுத்தவரை பற்றி வெட்டிப்பேச்சு இல்லை, அவரவரும் அவரவர் வேலையை சரியாக பார்க்கிறார்கள்.... எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் மக்கள், கோடீஸ்வரனுக்கு எந்த அளவு பணக்கார சென்னை இருக்கிறதோ, அதே அளவு ஏழைகளுக்கும் உகந்த சென்னையாக இருக்கிறது....
அடப்பாவமே!... அந்த நந்தா ஒருவன் என்னை இப்படி சென்னைதாசனாக ஆக்கிவிட்டானே....
தேனாம்பேட்டை வந்தடைந்து நந்தாவின் வீட்டை அடைந்துவிட்டேன்....
கதவை தட்டினேன்... கதவை திறந்தான் ஒரு இளைஞன்.... அரும்பிய மீசை, ஷாட்ஸ் போட்டிருந்தான்.... பதின் வயதுதான் இருக்கும்....
“யார் நீங்க?” என்றான்...
“சாரி... வீடு மாத்தி வந்துட்டேன்னு நினைக்குறேன்.... நந்த குமார் வீடு எங்க இருக்கு?”
சிரித்தவாறே, “உள்ள வாங்க.... குளிச்சிட்டு இருக்காரு அவர்... நீங்கதான் திருச்சி ப்ரெண்டா?” என் கைகளில் இருந்த பையை வாங்கி உள்ளே கொண்டு சென்றான்....
என் மனம் இப்போது வேறு எண்ணத்தில் பதைபதைத்தது....
யார் இந்த பையன்?... இது என்ன கொடுமை?... அவனுடன் நான் ஒரு படி நெருங்கி பழகினால், பத்து படி விலகி செல்லும் நிலை உண்டாகிவிடுகிறதே?...
குளித்துவிட்டு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு வெளியே வந்தான் நந்தா....
செதுக்கிய உடம்பு அது.... ஒரு பந்தை போட்டால் கூட அழகாக சறுக்கி ஓடும் வளவளப்பான சருமம்.... ஆனால், இதை ரசிக்க கூட முடியாமல் அந்த இளைஞனின் இருப்பு என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டது....
“வா பாலா.... ரூம்ல உன் பொருளல்லாம் வச்சுட்டு, குளிச்சுட்டு வா...” என்றான்....
“சுரேஷ், இன்னும் விளையாடிட்டு இருக்கியா?.... உங்க அம்மா தேடுறாங்க பாரு.... போ... போய் படி” என்று சிறிய அறைக்கு வெளியே நின்று நந்தா கூறினான்....
“ஓகே அண்ணா... நான் கிளம்புறேன்.... பாய் திருச்சி அண்ணா” என்று கூறிவிட்டு சுரேஷ் வெளியே சென்றான்....
“அண்ணா”.... இது போதும் எனக்கு.... இப்போதான் என் முகத்தில் சிரிப்பு வந்தது.... நந்தாவின் உடலை இப்போதுதான் முழுமையாக ரசிக்க தொடங்கினேன்....
“யார் நந்தா அந்த பையன்?” என்றேன்....
“பக்கத்து வீட்டு பையன்... ப்ளஸ் டூ படிக்குறான்.... எப்போவாச்சும் இங்க வந்து கம்ப்யூட்டர்ல கேம்ஸ் விளையாட வருவான்... அவங்க வீட்ல இது தெரிஞ்சா திட்டுவாங்க... நானும் பாவம்னு கண்டுக்காம விட்ருவேன்....” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது அந்த அறைக்குள் இருந்து குதித்து ஓடியது ஒரு நாய்.... “லாப்ரடார்” வகை நாயின் குட்டி அது....
அதை பார்த்து சிரித்த நந்தா, “நீ இங்க ரொம்ப கேர்புல்லா இருக்க வேண்டியது இதுக்குத்தான்.... சுரேஷ் வீட்டு நாய்... ஆனால், அவங்க வீட்ல அது இருக்குறதை விட, மற்ற வீட்லதான் அதிகமா இருக்கும்.... யார் வீடு தொறந்து இருந்தாலும், சத்தமில்லாம போய் எதையாவது பண்ணிட்டு வந்திடும்.... அதுவா மறுபடியும் மனசு வந்து போற வரைக்கும், நாம எங்க தேடுனாலும் நம்ம கண்ணுல சிக்காது” அழகாக சிரித்தான் நந்தா....
ஒரே அறையில்தான் படுக்கை... இரண்டு கட்டிலுக்கும் இடையில் ஒரு அடிதான் இடைவெளி இருக்கும்.... அதை இன்னும் கொஞ்சம் நகர்த்தி, அரை அடி இடைவெளியாக குறைத்தேன் நான்...
குளித்துவிட்டு சாப்பிட்டு பல விஷயங்களையும் பேசினோம்... உலகமே நானும் அவனும்தான் என்று எனக்கு தோன்றியது.....
திங்கள் கிழமை அவனுடன்தான் ஒன்றாக அலுவலகம் சென்றேன்.... எங்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த தேவி சிரித்தாள்... அந்த சிரிப்பிற்கான அர்த்தம் எனக்கு புரிந்தாலும், அதை புரியாதது போல அவளிடம் கேட்டேன்...
“என்ன தேவி சிரிக்கிறீங்க?”
“உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பாத்ததாலதான்.... சிடு மூஞ்சி, அந்நியன், டெரர்’னு பலபேர் வச்சு கூப்பிடுவிங்களே, இப்போ மாற்றான் சூர்யா மாதிரி ஒண்ணா வந்திருக்கிங்க?”
“ஹ ஹ ஹா.... சரி, இன்னைக்கு ஹார்பர் விசிட் எதுவும் இருக்கா?”
“தினமும் ஹார்பர் விசிட் போகணும்னா நம்மதான் இனி புதுசா கப்பல் விலைக்கு வாங்கி விடனும்... மாசம் ரெண்டு, மூணு டீலிங் வர்றதே பெருசு பாலா”
வேட்டிப்பேச்சுகளுக்கு மத்தியில் கொஞ்சம் வேலையும் பார்த்தோம்....
மதியம் நான் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் வந்தேன்... தேவியை சீட்டில் காணவில்லை... சரி, அதுவரை நந்தாவிடம் பேசிக்கொண்டிருக்கலாம் என்று அவன் அறை கதவை திறந்த எனக்கு அதிர்ச்சி... தேவியின் அருகில் அமர்ந்திருந்த நந்தா, அவளிடம் ரொம்பவும் இயல்பாக விளையாடினான்... அவள் தலை முடியை இழுப்பது, கையை பிடிப்பது என்று ரொம்பவும் அன்யோன்யமாக இருந்தார்கள்... என்னை பார்த்ததும் கூட அதை பொருட்படுத்தாமல் “வா பாலா... உக்காரு.... சாப்டியா?” என்றான் நந்தா....
“ஹ்ம்ம் சாப்டேன்.... நீங்க பேசிட்டு இருங்க, இந்தா அஞ்சு நிமிஷத்துல வரேன்” சொல்லிவிட்டு அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் அறையை விட்டு வெளியேறினேன்...
நான் முகம் முழுக்க குழப்பத்தோடு நிற்பதை பார்த்த மணி அண்ணன், “இன்னாபா ஏதோ கொயப்பமா கீற?... அந்த ரூமாண்ட போனியா?... அது டெய்லி நீ சாப்புட போகசொல்லோ நடக்குற கலீஜ் தான்.... நீ உஷாரா இருக்கணும்னா, இங்கயே நீயும் சாப்புடு... நம்ம மிலிட்டரி கடையாண்ட நந்தா சாருக்கு சாப்பாடு வாங்கிட்டு வர சொல்ல உனக்கும் சேத்து வாங்கிட்டு வரேன்... டெய்லி பத்து ரூபா எஷ்டிராவா கொடுத்தீன்னா போதும் சார்” மணி சொல்வதில் நியாயம் இருக்கிறது....
நந்தாவை என் பக்கம் இழுப்பதற்கு முன்னால் தேவியை அவனிடமிருந்து பிரிக்க வேண்டும்.... மணிக்கு பத்து ரூபாய் அதிகம் கொடுத்தால், தேவியை எப்போதும் கண்காணிக்கலாம்.... இனி சத்திரியனா இருப்பதைவிட, சாணக்கியனாய் இருப்பது உத்தமம் என முடிவு செய்தேன்....
அன்று மாலை, தன் நண்பரை பார்க்க போவதாக கூறி வெளியே சென்றுவிட்டான் நந்தா... சிறிது நேரம் கதவு திறந்த இடைவெளியில் நான் குடிக்க வைத்திருந்த பாலை குடித்துவிட்டு போய்விட்டது பக்கத்து வீட்டு நாய்க்குட்டி... கதவை அழுத்தி சாத்திவிட்டு, நந்தாவின் கணினியை நோன்டினேன்.... இருக்கும் கோப்புகள் எல்லாம் “விமல் கார்மன்ட்ஸ், ராஜ் பார்மா, ஆர் கே லெதர்ஸ்” என்று அலுவலக சம்மந்தமாகவே இருந்தது...
இன்டர்னட் இணைப்பு கொடுத்திருந்தான்....
எதாவது ப்ரவ்சிங் செய்யலாம் என்று, ப்ரவ்சிங் ஹிஸ்டரி பார்த்தேன்....
அதிர்சியானேன்....
அதில் இருந்ததில் பாதி கே தளங்கள் தான்....
சந்தோஷத்தில் திக்கு முக்காடி போனேன்... எப்படியும் நந்தா எனக்குதான் என்று முடிவு கட்டிக்கொண்டேன்.... உடனே கணினியை நிறுத்திவிட்டு நல்ல பிள்ளையாக ஹாலில் வந்து அமர்ந்து தொலைக்காட்சி பார்த்தேன்....
“முருகா! ரொம்ப சந்தோசம்..... எப்டியோ சுத்தல்ல விடுறியோனு பாத்தேன், என்னைய சரியான இடத்துல கொண்டு வந்து சேத்துருக்க.... நீ கடவுள்டா” உரிமை எடுத்து முருகனுக்கு நன்றி சொன்னேன்....
ஆனால், தேவி விஷயம்?.... முடிவு செய்துவிட்டேன்.... இனிதான் ஆட்டம் ஆரம்பம் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.....
மறுநாள் அலுவலகம் சென்றபோது, வழிய சென்று நானாக அவளிடம் பேசினேன்....
நந்தாவின் அறைக்குள் இருந்து பார்த்தால் வெளியே நடப்பது தெரியும்... அதனால், அன்று தேவியிடம் வழிய சென்று வழிந்தேன்....
அவள் கைகளில் போட்டிருந்த மோதிரத்தை பார்ப்பது போல கையை பிடித்தேன், தலையில் தூசி இருப்பதாக சொல்லி தலையில் கை வைத்தேன், வடை சாப்பிட்டு கையில் ஒட்டியிருந்த எண்ணையை அவளுடைய சுடிதார் துப்பட்டாவில் துடைத்து வம்பு செய்தேன்....
அவள் எதையும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை.... சென்னை பெண்கள் அப்படித்தான் போல... இந்த ஒரு பரந்த மனதை இந்த ஊர் ஆண்கள் ரொம்பவே தவறாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று எனக்கு தோன்றியது...
அன்று மதியம் அவளை நந்தாவுடன் சாப்பிட விடாமல் என்னுடனே சாப்பிட வைத்தேன்....
சாப்பாடு எனக்கு தரும்போது, மணி அண்ணன் தன் கண் அடித்து, தலை அசைத்து, ஏதேதோ சொல்ல வந்தார்.... அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்கு புரிந்தது....
இன்று எப்படியோ தேவியை நந்தாவிடமிருந்து பிரித்தாச்சு.... இதை இனி தொடரவும் முடிவு செய்தேன்....
அந்த வாரநாட்கள் முழுவதும் தேவியுடன் நெருக்கமாகவே இருந்தேன்.... நந்தா இதை கண்டுகொள்ளாமல் இருப்பதை போல காட்டிக்கொண்டாலும், அவனுள் வருத்தம் இருந்ததை என்னால் உணரமுடிந்தது....
அன்று சனிக்கிழமை.....
“வெளில போகலாமா பாலா?”
“எங்க?”
“ஈ.சி.ஆர் ரோட்ல நம்ம கம்பெனி கெஸ்ட் ஹவுஸ் இருக்கு... பக்கத்துலேயே பீச்.... இன்னைக்கு முழுசும் ஜாலியா இருக்கலாம்”
“நெஜமாவா?.... ஆபிஸ்ல இதுக்கு ஒத்துப்பாங்களா?”
“அதுக்கல்லாம் நான் பர்மிசன் வாங்கிட்டேன்”
உடனே நான் கிளம்பினேன்.... இப்படி தனிமை கிடைப்பதை நான் பயன்படுத்த விரும்பினேன்... இன்று எப்படியாவது அவனை கவுத்துடனும்....
எப்படியோ தேவி மேல நான் உண்டாக்குன வெறுப்பு நல்லா வொர்க்கவுட் ஆகுது..... இந்த சூட்டோட சூட்டா அவனை இன்னைக்கு சூடாக்கணும்....
பைக் மின்னலாக பறந்தது..... பெரிய அளவில் வாகன நெரிசல் இல்லை....
அவன் பின்தலையில் வழிந்த வியர்வை துளிகளை ரசித்தேன்.... அவன் வியர்வை துளிகளில் ஒன்றிரண்டு என் பேண்ட்டில் பட்டது....
வியர்வையில் கூட இவ்வளவு சிலிர்ப்பு உண்டாகும் என்பது அப்போதுதான் எனக்கு புரிந்தது....
வெயிலின் தாக்கம் அன்று அதிகமாக காணப்பட்டாலும், அவனருகில் நான் இருக்கும்போது குளிரூட்டப்பட்டேன்.....
குறிப்பிட்ட கெஸ்ட் ஹவுஸ் வந்துவிட்டது.....
நான் எதிர்பார்த்ததைவிட அழகாகவும், அற்புதமாகவும் இருந்தது.....
அங்கிருந்த அறைக்கு சென்று, ஷாட்ஸ் அணிந்தோம் இருவரும்....
கடற்கரை நோக்கி சென்றோம்.... நான் எதிர்பாராத விதமாக அங்கு தேவி இருந்தாள்.....
எங்களை எதிர்பார்த்து காத்திருந்ததை போல, “என்னப்பா இவ்ளோ லேட் பண்ணிட்டிங்க?.... எவ்ளோ நேரம் வெயிட் பண்ணேன் தெரியுமா?”
அவள் எதற்காக காத்திருந்தாள்? என்பது புரியாமல் நான் நந்தாவை பார்த்தேன்....
“சாரி தேவி.... இவன்தான் லேட் பண்ணிட்டான்”
என்னை நோக்கி கையை காட்டினான் நந்தா...
“நானா?.... சரி, தேவி எப்டி இங்க?” புரியாமல் நந்தாவிடம் மெதுவாக கேட்டேன்....
“கம்பெனி மீட்டிங்னு சொல்லித்தான் பர்மிசன் கேட்டேன்.... மேனேஜரை பொருத்தவரை இங்க நாம ட்ரைனிங் செஷன்’ல இருக்கோம்.... அதான் தேவியையும் வர சொன்னேன்”
அடப்பாவி.... உன் போதைக்கு என்னை ஊறுகாயா ஆக்கிட்டியே!.....
அவளோடு ஆட்டம் போடத்தான் என்னை ஸ்டெப்னி;யாக அழைத்து வந்தானா?....
ரொம்ப எளிதா என்னை ஏமாத்திடுறாங்க..... இப்போ நந்தாவும், தேவியும் சிறு குழந்தைகள் போல கடலில் விளையாடினார்கள்.... ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை தெளித்து, சிரித்து விளையாடினர்.....
நானும் அவர்களுக்கு மத்தியில் போய் நின்றேன்.... ஆனால், அவர்கள் விளையாட்டில் தீவிரமாக இருந்தார்கள்...
நான் எவ்வளவு திட்டம் போட்டு, செயல்பட்டாலும், தேவி விஷயத்தில் நந்தா என்னை முந்திக்கொள்கிறான்.....
ஆனாலும், நந்தா சோர்ந்து அமர்ந்தபோது அவளுடன் விளையாடினேன்.... எத்தனை பேருடனும் அசராமல் விளையாடுகிறாள் தேவி.... இன்னும் சின்ன குழந்தையாக தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறாள்....
நான் தேவியின் கையை பிடித்து அவளை கடலுக்குள் மெல்ல அழைத்து செல்ல, கடல் அலையால் நாங்கள் மீண்டும் கடற்கரைக்கு தள்ளப்பட்டோம்.... நானும் இப்போது உற்சாகமாகவே விளையாட தொடங்கிவிட்டேன்.....
அன்றும் நந்தாவுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தேவியுடன் நான் நேரத்தை கழித்தேன்...
இனியும் தேவியை அவன் ஏறெடுத்து பார்க்க மாட்டான், என்றாலும் இன்னும் இந்த பிடியை இருக்க அவனே ஒரு வாய்ப்பை கொடுத்தான்,,,,,
அன்று இரவு நானும் அவனும் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது....
“இன்னைக்கு தேவியோட அவ்ளோ நேரம் என்ன பேசுன?” அவன் இப்போதுதான் தேவியை பற்றி என்னிடம் முதன்முறையாக கேட்கிறான்....
“நிறைய பேசுனோம், நிறைய பகிர்ந்துகிட்டோம்.... ரொம்ப நல்ல பொண்ணு.... அவளும் என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னாள்...”
“நெஜமாவா?..... ஹ்ம்ம்....” ஏதோ யோசித்தான்.....
மீண்டும் தொடர்ந்த நந்தா, “என்னை பற்றி எதாச்சும் சொன்னாளா?” என்றான்....
“ஹ்ம்ம் சொன்னாளே”
“என்ன?”
“வார்த்தைக்கு வார்த்தை நந்தா அண்ணா, நந்தா அண்ணான்னு ரொம்ப பாசமா பேசுறா... உங்க மேல நெறைய மதிப்பு வச்சிருக்கா”
பொய் தான் சொன்னேன்... அதை மறைப்பதற்காக நான் அவனை நேரடியாக பார்க்காமல், ஓரக்கண்ணால் பார்த்தேன்....
ஏதோ யோசித்தான்.... சில நிமிடம் கழித்து, இயல்பானவனை போல சிரித்தபடியே, “ஹ்ம்ம்.... சரிடா.... லேட் ஆச்சு... தூங்கலாம்....” என்று சொல்லிவிட்டு எழுந்தான் அவன்....
பரவால்லையே, இவ்வளவு எளிதா எடுத்துகிட்டான்..... சந்தோஷம்.... இனி தேவியின் பக்கம் தலை வைத்துக்கூட படுக்க மாட்டான்.... நானும் நிம்மதியாக அன்று உறங்கினேன்.... ஆனாலும், இவ்வளவு எளிதாக இதை விட்டுவிட்டது ஆச்சரியமாகவே இருந்தது.... ஆனாலும், அவன் அழகுக்கு ஆயிரம் பொண்ணுங்க மடிவாங்க, அதனால இதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை போலும் என்று தோன்றியது....
அன்று ஞாயிற்றுக்கிழமை.... எப்போதும் ஞாயிறுகளில் அவன் ஞாயிறை உச்சி வெயிலாக பார்த்துதான் வழக்கம்....
அன்று நான் போர் அடித்ததனால் தொலைக்காட்சி பெட்டியின் முன்பு அமர்ந்து ஏதேதோ சேனல்களை மாற்றினேன்....
தூக்கத்திலிருந்து அவசரமாக ஓடி வந்து, இருக்கையில் அமர்ந்திருந்த எனக்கு கீழ் தரையில் அமர்ந்து ரிமோட்டை வாங்கி கிரிக்கெட் சேனல் மாற்றினான்....
கிரிக்கெட் பித்தன் அவன்.... எனக்கோ கிரிக்கெட் மீது பெரிய ஈடுபாடு இல்லை.... அதனால் என்ன?... அவன் மீது உள்ள ஈடுபாடு, கிரிக்கெட் மீதும் ஈடுபாடாக அன்று முதல் தொடங்கியது....
அறைக்கு சென்று இன்னொரு நாற்காலியை எடுத்து வரக்கூட அவன் விரும்பாதவனாக, என் இருக்கையின் கீழ் தரையில் அமர்ந்தான்....
என் வலது பக்க முட்டிக்காலின் மீது அவன் கையை வைத்து, நாற்காலியின் மீது சாய்ந்தவாறு அமர்ந்திருந்தான்....
இந்தியா இங்கிலாந்து ஒருநாள் போட்டி இறுதிகட்டத்தை எட்டியிருந்த நேரம் அது.... கோலியின் அதிரடி ஆட்டம் என்னை மயங்கடித்தது... என் மயக்கத்திற்கு காரணம் கோலியின் அடி அல்ல, நந்தாவின் பிடி...
ஆம், கோலி அடிக்கும் ஒவ்வொரு நான்கு, ஆறுகளுக்கும் உணர்ச்சிவசப்பட்ட நந்தா என் தொடைகளில் லேசாக தட்டுவான்....
அந்த “தட்டு”களுக்காகவே கோலி இன்னும் பல பவுண்டரிகளை விலாச வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்....
எதிர்பார்த்ததை போலவே இந்தியா வென்றது, நான் எதிர்பாராத நேரத்தில் அவன் அந்த சந்தோஷத்தில் என்னை கட்டிப்பிடித்தான்....
ஒருநிமிடம் என்னை நானே மறந்தேன்..... அவன் சந்தோஷத்தில் இன்னும் குதிக்க, அவன் அந்த செயல் என் ஹார்மோன்களை “தகதிமிதா” ஆட வைத்தது....
அன்று முழுவதும் அந்த ஒருசில நொடிகளின் அணைப்பை எண்ணியே மனம் பூரித்து மகிழ்ந்தது.....
மறுநாள் காலை வழக்கம்போல அலுவலகம் செல்லும்போது, வழியில் இடை மறித்தார் மணி அண்ணன்....
“குட் மானிங் அண்ணே.... என்ன விஷயம்?”
“கை குடு சார்... நீ பலே கில்லாடி சார்” வலுக்கட்டாயமாக என் கைகளை குழுக்கினார்....
எதுவும் புரியாமல் அவரை பார்த்த நான், “என்ன மணி அண்ணே? எதுக்கு இவ்ளோ உற்சாகமா இருக்கீங்க?”
“இன்னா சார் ஒன்னியும் தெரியாத மாதிரி பேசுற.... பாக்க பச்ச புள்ள கணக்கா இருந்துகினு, அந்த நந்தாவுக்கே பாச்சா காட்டிட்டியே” எதை சொல்கிறார் என்று புரியவில்லை...
“ஐயோ குழப்பாம தெளிவா சொல்லுங்க அண்ணே”
“அதான் சார்... அந்த தேவி மேடத்தோட நீ ஈ.சி.ஆர் பிச்சாண்ட செம்ம ஜாலியாமே?... நந்தாவுக்கு மூஞ்சில ஈ ஆடலயாமே?”
நல்ல விஷயங்களைவிட, இதுபோன்ற வதந்திகள் மட்டும் காட்டுதீயைப்போல வெகு வேகமாக பரவிவிடுகிறது....
“உங்களுக்கு எப்டி தெரியும்?”
“அதல்லாம் கம்பெனி சீக்ரட் சார்... நந்தா சாருக்கு செம்ம பல்பு கொடுத்துட்ட சார்... நீ மட்டும் இன்னும் கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி வந்திருந்தா, பூஜாவையும் மடக்கிருக்கலாம் சார்”
“பூஜா” இந்த பெயரை அலுவலகத்தில் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.... அதுவும் நந்தாவுடன் இணைத்து பலமுறை அந்த பெண்ணை கேள்விப்பட்டிருக்கிறேன்....
“யார் அந்த பூஜா?”
“அதுவும் ட்ரைனியா வந்த பொண்ணுதான் சார்.... அது காண்டியும் சினிமாக்கு போயிருந்தா, அனுஷ்காலாம் அப்பீட்டு ஆகிருக்கணும் சார், அப்டி ஒரு அழகு... ஜோரா ஸ்கெட்ச் போட்டு, பக்காவா கரக்ட் பண்ணிட்டார் நந்தா”
“இப்போ அவங்க எங்க?”
“அது இப்போ ஒருமாசம் கான்பரன்ஸ் விஷயமா கல்கத்தா போயிருக்கு சார்.... கூடவே நந்தாவும் போறதா இருந்துச்சு, உங்களுக்கு ட்ரைனிங் ஆள் இல்லைன்னு மேனேஜர் நந்தாவை இருக்க சொல்லிட்டாரு”
நந்தா, நான் வந்த முதல் நாளில் என்னை வெறுத்ததற்கான காரணம் புரிந்தது...
“இன்னும் ஒரு வாரத்துல வந்துடும் சார்.... அதையும் எதுனா செஞ்சு மடக்கிடு சார்”
மணி சொன்னது காதுகளில் இன்னும் ஒலித்துக்கொண்டே இருந்தது.... என் இருக்கையில் அமர்ந்து “பூஜா”வை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன்....
இப்படி நந்தா பார்க்கும், மடக்க நினைக்கும் பெண்களை திசை திருப்பி அவனை அடைவது என்பது நடக்காத காரியம்... அதுவும் அவன் “பை” என்று நினைக்கிறேன்... அப்படியானால், அவன் எளிதாக பெண்ணிடம் ஈர்க்கப்படுவது உறுதி.... அதனால், இன்னும் ஒருவாரத்திற்குள், நந்தாவிடம் நான் நெருங்கவேண்டும் என்று முடிவு செய்தேன்.... ஒவ்வொரு பெண்ணாக அவன் மாற்றும் போதல்லாம், அதை திசை திருப்புவதை விட்டுவிட்டு, அவனை என் வசமாக்க முடிவு செய்தேன்....
ஓட்டை பாத்திரத்தில் நீர் ஒழுக ஒழுக நீரை நிரப்புவது முட்டாள் தனம்... பாத்திரத்தின் ஓட்டையை அடைத்துவிட்டால், மறுபடியும் நீர் நிரப்ப அவசியம் இல்லை அல்லவா?.... இவ்வளவு தத்துவமெல்லாம் காதல் வந்தால் தானாக வருகிறது....
என் கையை யாரோ தொடுவதை போல உணர்ந்தேன்.... அப்போதுதான் அங்கு வந்து தேவி அமர்ந்திருப்பதை உணர்ந்தேன்.... எப்போது வந்தாள்? என்று தெரியவில்லை... அப்போது என் கைகளுக்கு கீழ் இருந்த ஒரு வெள்ளைத்தாளை பிடுங்குவதை போல இழுத்தாள்.... எதற்காக அந்த தாளை எடுத்தாள் என்பது எனக்கு புரியவில்லை...
“நான் வந்தது கூட கவனிக்காம அப்டி என்ன பயங்கரமா யோசிச்சு எழுதிட்டு இருக்கீங்க?” என்று கூறியவாறே அந்த தாளை பார்த்த தேவியின் முகம் மாறுவதை உணர்ந்தேன்.... எனக்குள்ள ஒரு கெட்ட பழக்கம் இதுதான்... என்னை அறியாமல் எதையாவது தோன்றியதை எழுதிவிடுவேன்....
“யார் பூஜா?” என்று அந்த தாளை நீட்டினாள்... அதில், பூஜா என்று எழுதி இருந்தேன்... நல்லவேளையாக அதற்கு மேல் எதுவும் அதில் எழுதவில்லை...
“சொல்லுங்க.... யார் அந்த பூஜா?”
“அது.... அது.... ஆயுத பூஜா, சரஸ்வதி பூஜா, நடிகை பூஜா....”
“என்ன சொல்றீங்க?”
“கொஞ்சம் உளறுறேனா?”
“கொஞ்சம் இல்ல, நெறையவே.... சரி, சொல்லுங்க”
“அது இன்னைக்கு சாயந்திரம் கோவிலுக்கு போய் பூஜை பண்ணனும்னு நெனச்சிட்டு இருந்தேன், அந்த ஞாபகத்துல எழுதிட்டேன்...”
“என்ன திடீர்னு கோவில், பூஜையல்லாம்?” அவள் விடுவதாக தெரியல....
“அது.... எங்க தாத்தாவுக்கு இன்னைக்கு திவசம்... அதான்”
“ஓஹோ... திவசத்துக்கு கோவில்ல பூஜை பண்ண மாட்டாங்களே?”
“எங்க பக்கம் பண்ணுவாங்க.... நான் தாத்தா நினைவுல ரொம்ப கவலையா இருக்குறேன், அதை உன்கிட்ட சொல்லி உன்னையும் கஷ்டப்படுத்த வேணாம்னு நினச்சேன்.... அதான் சொல்லல...” கண்களை கசக்கினேன்....
“ஓஹ் சாரி சாரி..... நான் தப்பா நினச்சுட்டேன்.... ஏதோ பொண்ணு பேர் மாதிரி தெரிஞ்சதால கேட்டேன்”
“உனக்கு அப்டி யாரையும் தெரியுமா?”
“தெரியுமே”
“யார்?”
“எங்க வீட்லயே ரெண்டு பூஜா இருக்காங்க.... எங்க அத்தை அம்புஜா... நான் பூஜான்னுதான் கூப்பிடுவேன்.... அப்புறம் எங்க அண்ணி பூஜா”
“அவ்வளவுதானா.... சரி விடு.... “
தேவிக்கு பூஜாவை தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.... நானும் அதைப்பற்றி சொல்லி வேறு குழப்பங்களுக்கு வித்திட விரும்பவில்லை.....
அடுத்த இரண்டு நாட்களும், நந்தாவுடன் நெருங்குவதற்கான சந்தர்ப்பத்தை தேடினேன்.... இரண்டு நாட்களுக்கு பிறகு மறுபடியும் கிரிக்கெட் உருவில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது....
ஆம், அன்று அதே “இந்தியா-இங்கிலாந்து” தொடரின் இறுதி ஆட்டம்... இரு அணிகளும் சரிசம வெற்றிகளை பெற்றிருப்பதால், கோப்பையை வெல்லும் அதிமுக்கிய போட்டி அது.....
கிரிக்கெட் மைதானம் தயார் செய்யப்பட்ட அதே நேரத்தில், அந்த வீட்டு மைதானத்தை நான் தயார் செய்தேன்.... அன்று போலவே இன்றும், அந்த ஹாலில் ஒரு இருக்கையை தவிர மற்ற இருக்கைகளை எடுத்து கண்ணுக்கு மறைவான இடத்தில் வைத்துவிட்டேன்...
எங்கோ வெளியில் சென்ற நந்தா, சரியாக ஆட்டம் தொடங்கும் நேரத்தில் வீட்டிற்கு வந்தான்.....
வேகமாக உள்ளே வந்த நந்தா, “மேட்ச் ஆரமிச்சாச்சா?.....” என்றான்....
“இப்போதான் ஸ்டார்ட் ஆகப்போகுது.... இங்கிலாந்து தான் முதல்ல பேட்டிங்”
சுற்றியும் முற்றியும் பார்த்த அவன், “இந்த சேர் எல்லாம் எங்கதான் போகுமோ தெரியல” என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று ஒரு தலையணையை எடுத்து வந்து தரையில் போட்டு படுத்தவாறே ஆட்டத்தை பார்த்தான்....
இதுதான் விதியா?.... என்ன கொடுமை இது?....
அந்த தழுவல்கள், தொடுதல்கள் இன்று இல்லையா?....
ரொம்பவே ஏமாந்து போனேன்....
கொஞ்சம் எரிச்சலோடு தண்ணீர் குடிக்க அறைக்கு சென்றேன்.... வந்து பார்த்தால் நான் அமர்ந்திருந்த நாற்காலியில் அவன் அமர்ந்திருந்தான்....
என்னை பார்த்து சிரித்துவிட்டு, “வேற சேர் எடுத்து வந்து உக்காரு பாலா” என்றான்....
எனக்கு ஒரு யோசனை தோன்றியது.... ஆம், இது தானாக அமர்ந்த சந்தர்ப்பம்.....
அன்று அவன் அமர்ந்ததை போல, இன்று அவனுக்கு கீழ் நான் அமர்ந்து, என் தலையை அவன் முட்டிக்கால் மீது வைத்தவாறு அமர்ந்தேன்....
தன் விரல்களால் என் முடிகளை சுழற்றினான்.... ஆகா, அவ்வளவு சுகம்....
ஆட்டத்தின் சுவாரசியத்தில் அவன் கைகள் என் கன்னங்களை அடைந்தது.... கன்னங்களை வருடிய அவன், என் ட்ரிம் செய்த மீசையின் மீது தன் விரல்களை வைத்து உரசினான்... அது எதிர்பாராத விதமாக என் உதட்டில் பட, சிலிர்த்தது என் உடல்....
அவன் இதையல்லாம் தெரிந்து செய்கிறானா? அல்லது, தன்னை மறந்து செய்கிறானா? என்பது எனக்கு புரியவில்லை....
என் சுயநினைவு அற்றுப்போய் கிடந்தேன் அந்த தழுவல்களில்....
அதற்குள் இந்தியா பேட்டிங் செய்துகொண்டிருந்ததை அதிர்ச்சியுடன் பார்த்தேன்.... இன்றும் நான்கு, ஆறுகளுக்கு என் கன்னங்கள் சிவக்க அவன் கிள்ளினான்....
ஒருவழியாக இன்றும் இந்தியா வென்றது,.... இன்று முன்னைவிட அதிக உற்சாகத்தில் திளைத்த அவன், என்னை கட்டி அனைத்து சில மணித்துளிகள் குதித்தான்... அந்த குதித்தலில் என் பல அங்கங்கள் அவனோடு உரசின....
தினமும் கிரிக்கெட்டும், தினமும் இந்தியா வெற்றியும் இருந்தால் எவ்வளவு சுகமாக இருக்கும்? என்று தோன்றியது....
அந்த மயக்கத்தில் இருந்து மீண்ட நான், நந்தா ஒரு பையை எடுத்து வருவதை உணர்ந்தேன்....
அதற்குள் இருந்து மதுபான ஐட்டங்களை எடுத்து ஹாலில் கடை பரப்பினான்....
என்னை பார்த்து,
“நீ என்ன குடிப்ப?”
“நான் குடிக்க மாட்டேன்”
“இதுவரைக்கும் குடிச்சதே இல்லையா?”
“ஒரே ஒரு தடவை ப்ரெண்ட்ஸ் கம்பல் பண்ணதால பீர் மட்டும் குடிச்சேன்.... அவ்ளோதான்”
“அப்போ இன்னைக்கும் பீர் மட்டும் ட்ரை பண்ணுடா”
“ஐயோ வேணாம் நந்தா.... நீ குடி”
“எனக்கு குடிக்க தெரியும்.... உன் ப்ரெண்ட்ஸ் சொன்னா குடிப்ப, நான் சொன்னா குடிக்க மாட்டியா?” பொய்யான கோபத்தில் கேட்டான்....
கொஞ்சம் தயக்கத்துடன், “இல்ல நந்தா, எனக்கு பிடிக்கல...” என்றேன்....
என் அருகில் வந்து, என் தாடையை பிடித்து, “ப்ளீஸ்டா.... இன்னைக்கு ஒருநாள் மட்டும், கொஞ்சமா குடி” என்றான்....
அவன் அப்படி கேட்ட விதத்துக்காகவே, விஷத்தை கூட குடிக்கலாம் என்று தோன்றியது.... உடனே ஒப்புக்கொண்டேன்....
அவன் வோட்கா குடித்தான்... நான் பீர் மட்டும், அதுவும் அளவாக குடித்தேன்...
“இந்தியா ஜெய்ச்சதுக்கு இந்த செலப்ரேசன் கூட இல்லைனா எப்டி?” என்றான்...
“நந்தா, உன் தேசப்பற்றுல அன்னா அசாராவே தோத்திடுவாரு.... சரி, இந்தியா தோத்திருந்தா இதல்லாம் வேஸ்ட் ஆகிருக்கும்ல?... இந்தியா மேல அவ்வளவு நம்பிக்கையா உனக்கு?”
சிரித்த நந்தா, “அப்டிலாம் இல்ல.... இந்தியா தோத்திருந்தா வருத்தத்துல குடிச்சிருப்பேன், ஜெய்ச்சதால சந்தோஷத்துல குடிக்குறேன்” நானும் சிரித்தேன்...
பேச்சு பல பக்கமும் திசை மாறி, “பாலா, உனக்கு தேவியை பிடிக்குமா?”
“ஹ்ம்ம்... நல்ல பொண்ணு.... எனக்கு ரொம்ப பிடிக்கும்”
“அவகிட்டையும் கேட்டேன், உன்னைய பிடிக்கும்னு சொன்னா”
“ஹ்ம்ம்... உன் மேல கூட அண்ணா, அண்ணான்னு ரொம்ப பாசமா இருக்கா”
அவன் ஏதோ யோசித்தான்.... இன்னும் அவன் தேவி விஷயத்தில் குழப்பமாக இருந்தான்... நான் தவறு செய்துவிட்டேனோ? என்று தோன்றியது... இருந்தாலும், எனக்கு பிறகுதானே அடுத்தவங்க பத்தி நான் யோசிக்கணும்...
“ஆனாலும் நந்தா, உனக்கு பிறகுதான் வேற யாருமே.... உனக்கு பிடிக்காத எந்த விஷயத்தையும் நான் செய்ய மாட்டேன்.... நீ எனக்கு ரொம்ப முக்கியம், உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்”
“எனக்கும் உன்னைய ரொம்ப பிடிக்கும் மச்சான்...” என்று கட்டிப்பிடித்தான்....
அந்த “பிடிக்கும்”க்கு என்ன அர்த்தம் என்று எனக்கு புரியவில்லை.... ஆனாலும், நான் இப்போ “மச்சான்” என்ற உயரத்திற்கு வந்துவிட்டேன் என்ற சந்தோசம் எனக்குள்....
போதை தலைக்கேறியது அவனுக்கு.... நிலை குழைந்தான்.... மெல்ல அவனை தூக்கி அவன் கட்டிலில் கிடத்தினேன்....
எனக்கும் கொஞ்சம் போதை தலைக்கேறியதால் அவனை படுக்க வைத்துவிட்டு, என் படுக்கையில் படுக்க போனபோது நந்தா வாந்தி எடுத்துவிட்டான்.....
அடக்கடவுளே! இது என்ன கொடுமை?.... அவன் படுக்கையில் வேறு எடுத்துவிட்டான்... அவன் சட்டை முழுவதும் பட்டுவிட்டது...
பொதுவாகவே வாந்தி என்றால் நான் அந்த பக்கமே போகமாட்டேன்....
உடல் நிலை சரி இல்லாத தாத்தா ஒருமுறை வாந்தி எடுத்ததனால், அந்த அறை பக்கமே ஒருவாரம் செல்லவில்லை.... அப்படி ஒரு பிடிக்காத விஷயம் அது....
ஆனால் இப்போது?... வேறு வழி இல்லை....
எழுந்து சென்று அவனை மெல்ல அழைத்து குளியலறையில் அவன் முகம் கழுவிவிட்டேன்.... இருக்கையில் அமரவைத்து எலுமிச்சம்பழம் பிழிந்து அவன் வாயில் ஊற்றினேன்..... சட்டையை கழற்றி அவன் உடலை ஒரு ஈரத்துணியால் துடைத்துவிட்டேன்.... கொஞ்சம் ஆசுவாசமான பிறகு, குடிக்க தண்ணீர் கொடுத்துவிட்டு படுக்கை அறை வந்தேன்....
அவன் படுக்கை முழுவதும் அசிங்கமாக கிடந்தது.... அவற்றை லேசாக தண்ணீரில் அலசி காயவைத்துவிட்டு, தரையையும் சுத்தப்படுத்தி விட்டு, அவனை மெல்ல அழைத்து வந்து என் படுக்கையில் படுக்க வைத்தேன்....
அவன் இன்னும் தெளிவான மனநிலைக்கு வரவில்லை...
திடீரென்று உளற தொடங்கினான்....
“டேய் அவன கொல்லாம விடமாட்டேன்”
“யாரை நந்தா?”
“அந்த செல்வ குமாரை”
“யார் அவன்? அவன் என்ன பண்ணான்?”
“அஞ்சாவது படிக்குறப்போ என் பென்சிலை திருடிட்டான்..... அவனை கொல்லனும்.... அருவா எடு”
அப்பப்பா.... இப்போதான் ஐந்தாவது நினைவுக்கு வந்திருக்கிறான்.....
திடீரென அழ தொடங்கினான்....
“என்னாச்சு? ஏன் அழுற?”
“என்னைய அவ ஏமாத்திட்டா?”
யாரை சொல்கிறான் என்று புரியவில்லை... ஒருவேளை பூஜாவையோ, நந்தினியயோ சொல்கிறானோ?
“யாரை சொல்ற நந்தா?”
“எய்த் படிச்சப்போ அந்த ஜெயா என்னைய ஏமாத்திட்டு வேற ஸ்கூல் போய்ட்டா”
அப்பப்பா..... என்னால் முடியல..... அதற்கு மேல் அவனை பேசவிட்டால், அவன் பள்ளி வாழ்க்கை ஏமாற்றங்களை பழிவாங்கவே இன்று பொழுது விடிந்துவிடும் என்பதால் அவனை அமைதியாக்கி படுக்க வைத்தேன்....
அதே படுக்கையில் அவனுக்கு அருகில் நானும் படுத்துவிட்டேன்.... வேறு தவறான நோக்கத்தில் இல்லை, அது ஒரு அக்கறையின் பேரில்....
எலுமிச்சம்பழம் சாறு குடிக்காமலே எனக்கு போதை இறங்கி தெளிவாகிவிட்டேன்.....
நான் நெருங்க வேண்டும் என்று நினைத்த என் காதலன் இப்போது என் அருகில், கைக்கு எட்டிய தூரத்தில் படுத்திருக்கிறான்.... வெற்று உடம்பில், அழுக்காகவும், அதைவிட அழகாகவும் படுத்திருந்தான்..... அப்போதுதான் அவன் மீது எனக்கு வேறுவித எண்ணங்கள் உருவாக தொடங்கியது... ஒரு சிறிய ஷாட்ஸ் மட்டும் போட்டிருந்தான், அதுவும் ஆங்காங்கே தண்ணீர் பட்டு அவன் உடலோடு ஒட்டி இருந்தது....
மார்பின் துளிர்விட்ட ரோமங்கள், அதற்கு மத்தியில் அவன் “இத்யாதி இத்யாதி” அம்சங்கள் என்று என்னை பலவாறும் யோசிக்க தோன்றியது.... அவன் மீது கை வைக்கலாமா? என்று யோசித்தேன்.... அப்போது எதேச்சையாக அவனே என் மீது கையையும், போனஸாக ஒரு காலையும் போட்டான்....
அதற்கு மேல் என்னையும், என் உணர்வுகளையும் என்னால் அடக்க முடியவில்லை....
அவன் உடல் முழுக்க மதுவின் நெடி, மல்லிகை மணத்தைவிட அதிக நறுமணத்தை உணர்ந்தேன்...
அவன் உதடுகளில் மதுவின் கசப்பு, மலைத்தேனின் இனிப்பை விட சுவையாக இருந்தது....
மொத்தத்தில் என் வாழ்நாள் பிறவிப்பயனை அன்று இரவு அடைந்ததை போல, இது பேரின்ப அனுபவத்தை எனக்கு கொடுத்தது....
இதுவரை இப்படி ஒரு சுகத்தை நான் அனுபவித்ததும் இல்லை, இனி இவனை தவிர வேறு எவரிடத்திலும் இந்த சுகம் கிடைக்கப்போவதில்லை என்று ஒரே இரவில் என்னை உணரவைத்தான்....
காலை விடிந்தது... மெல்ல மெல்ல இரவு நடந்த நிகழ்வுகள் எனக்கு நினைவுக்கு வந்தது.... எவ்வளவு கேவலமாக நடந்துவிட்டேன்? என்று என்னையே நான் நொந்துகொண்டேன்.... அவன் முகத்தில் இனி எப்படி விழிப்பேன்?... அவன் என்னை இனி மனிதனாக கூட மதிக்க மாட்டானே?... போதையில் இருந்த ஒருவனிடம் இப்படி செய்திருக்க கூடாது என்று தலையை பிடித்தவாறே படுக்கையில் அமர்ந்தேன்....
“என்னடா தலை வலியா?... இந்தா காபி குடி” என்று என் முகத்திற்கு நேராக காபியை நீட்டினான் நந்தா....
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.....
அவன் முகத்தை பார்க்காமல், அதை வாங்கினேன்....
“சாரிடா... நைட் கொஞ்சம் ஓவரா ஆகிடுச்சு.... எதுவுமே ஞாபகம் இல்லை... வாமிட் பண்ணிட்டேன் போல, இப்போ காலைல டிரெஸ் பார்த்தப்போ தான் புரிஞ்சுது.... ரொம்ப சாரிடா” கைகளை பிடித்தவாறு என் அருகில் அமர்ந்தான்...
எனக்கு ஒன்றும் புரியவில்லை... அப்படியானால் , இரவு நடந்த அந்த விஷயமும் அவன் நினைவில் இல்லாமல் நடந்ததா?... அல்லது, அதை காட்டிக்கொள்ளாமல் மறைக்கிறானா?.... எனக்கு தெளிவாக புரியாமல் குழம்பினேன்....
“சரி, ஆபிஸ்’க்கு லேட் ஆச்சு.... கிளம்பு” கூறிவிட்டு அவன் குளிக்க சென்றுவிட்டான்.....
அவன் அதை தெரிந்தோ, தெரியாமலோ இருந்தாலும், எனக்குள் இருந்த குற்ற உணர்வால் அவனுடன் எதுவும் இயல்பாக பேசமுடியவில்லை....
அன்று முழுவதும், அதிலிருந்து நான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டேன்.... மாலை அவனுடன் சகஜமாக ஆகிவிட்டேன்....
இன்னும் இரண்டு நாட்களில் எனக்கான பயிற்சி காலம் முடியப்போகிறது....
அதற்குள் அவனிடம் என்னை பற்றியும், என் காதலை பற்றியும் விளக்கிவிட முடிவு செய்தேன்.... அதற்கும் சந்தர்ப்பம் அமையும் என்று காத்திருந்தேன்....
அன்று இரவு ஒரு குழப்பத்துடனே படுத்தேன்....
“நந்தா என் அருகில் வந்தான்.... என் கையை பிடித்து அவன் கன்னத்தில் ஒட்டிக்கொண்டான்.... இன்னும் அருகில் வந்து என்னை கட்டி அணைத்தான்.... மெல்ல என் கன்னத்தில் ஒரு முத்தம் ஆழமாக பதித்தான்” திடுக்கிட்டு விழித்தேன்.....
இது கனவா?.... அடக்கடவுளே.....
மற்றவை கனவாக இருந்தாலும், என் கன்னத்தில் ஏதோ தொடு உணர்வை உணர்ந்ததால்தானே நான் விழித்தேன்....
பின்னர் எப்படி இது கனவாக இருக்க முடியும்?...
என் கன்னத்தை தொட்டு பார்த்தேன்.... எச்சில் இருந்தது....
ஆம், நிச்சயம் இது கனவு இல்லை...
மற்றவை கனவாக இருந்தாலும், இந்த கன்னத்தில் நான் உணர்ந்த தொடு உணர்வும், இந்த எச்சிலும் நிச்சயம் கனவில்லை.... மெல்ல எழுந்தேன்... வெளியே ஹாலில் இருந்த இருக்கையில் அமர்ந்து நந்தா பேப்பர் படித்துக்கொண்டு இருந்தான்...
என்னிடம் கண்ணாமூச்சி ஆடுகிறான் இவன்.... தூங்கும்போது முத்தம் கொடுத்துவிட்டு, விழிக்கும் முன்பு ஓடிவிட்டான்.... அப்படியானால் என்னை போலவே அவனும் என்னை காதலிக்கிறான் என்று உணர்ந்தேன்....
இப்போதே அவனை கட்டிப்பிடித்து “ஐ லவ் யூ” சொல்ல ஆசை தான்... ஆனால், இன்னும் அவனுக்கொரு கடைசி பரீட்சை இருக்கிறது.... அதில் அவன் தேர்வானால்தான் என் காதலை அவனிடம் சொல்ல முடிவெடுத்தேன்.... நாளை நடை பெற இருக்கும் ஆள் தேர்வில் என்னையோ, தேவியையோ, என்று யாரோ ஒருவரைத்தான் அவன் தேர்ந்தெடுத்து மேலாளரிடம் பரிந்துரைக்க முடியும்....
புத்திசாலித்தனம், வேலைக்கான தகுதி, பொறுமை என்று என்னைவிட எல்லா தகுதியுமே முழுமையாக பெற்றவள் தேவி.... அவளை ஒதுக்கிவிட்டு அவன் என்னை தேர்ந்தெடுத்தால், நிச்சயம் இந்த உலகையே ஒதுக்கிவிட்டு நான் அவனை வாழ்க்கை துணைவனாக தேர்ந்தெடுப்பேன்....
இது லாஜிக் இல்லாத விஷயம் தான்... காதல் என்கிற மேஜிக்கில் லாஜிக் பார்ப்பது தவறு.... வேலை, தர்மம் என்று எல்லாவற்றையும்விட அவன் என்னை முக்கியமானவனாக பார்த்தால் , அந்த காதலை நான் என்னைவிட உயர்வானதாக நினைப்பேன்....
அதுவரை என் உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவனிடம் வழக்கம்போல பழகினேன்....
அன்று அலுவலகத்தில் உள்ளே சென்றபோதே வழக்கம்போல வழிமறித்தார் மணி அண்ணன்.... இப்போது என்ன கொளுத்தி போடப்போகிறாரோ? என்ற மெல்லிய அச்சத்தில் அவர் அருகில் சென்று வழக்கம்போல வணக்கம் வைத்தேன்....
“இன்னா சார், நாளைலேந்து உன்னிய பாக்க முடியாது.... எதுனா கவனிச்சிட்டு போ சார்” என்று தலையை சொறிந்தார்...
என்ன சொல்கிறார்? என்று புரியாமல், “என்னண்ணே சொல்றீங்க?... நாளைக்கு ஜாபை ரிசைன் பண்ண போறிங்களா?” என்றேன்....
“கலாய்க்காத சார்... நான் இன்னாத்துக்கு போவனும்.... உனக்குதான் நாளக்கி ட்ரைனிங் முடியுது... நீ போகச்சொல்ல எதுனா கவனி சார்”
சிரித்த நான், “கவலைப்படாதிங்க மணி அண்ணே.... நான்தான் பெர்மனன்ட் ஆவேன்... அதப்பத்தி கவலைப்படாதிங்க.... நாளைக்கு அந்த செய்தி வந்ததும் உங்களை செமையா கவனிக்குறேன்” சொல்லிவிட்டு என் மேசைக்கு சென்றேன்....
ஏதோ முனங்கியபடி என்னைவிட்டு விலகி சென்றார் மணி அண்ணன்....
ஆனாலும் என் அதீத நம்பிக்கை எனக்கே கொஞ்சம் பயத்தை உண்டாக்கியது.... அதுவும் மேசையில் எனக்கு முன்பே வந்து வேலைகளை சிரத்தையுடன் பார்த்துக்கொண்டிருந்த தேவியை பார்க்கும்போது என் பயம் இன்னும் அதிகமானது...
“ஹாய் தேவி.... குட் மானிங்”
“குட் மானிங் பாலா... இன்னைக்கு உங்க முகத்துல ஒரு வித்தியாசம் தெரியுதே?... எப்பவும் இருக்குறதைவிட கொஞ்சம் அதிக சந்தோஷமா இருக்கீங்க போல?”
கண்டுபிடித்துவிட்டாள் தேவி.... ஆனாலும், அதை நான் வெளியில் சொல்ல முடியாதே,,,,
“அப்டிலாம் ஒண்ணுமில்ல தேவி... சும்மாதான்”
“சரி... இன்னைக்கு ஈவ்னிங் எங்கயாச்சும் வெளில போகலாமா?”
“என்ன விஷயம் தேவி?... எதுவும் ஸ்பெஷலா?”
“இல்லப்பா.... நாளைக்கு இந்த ஆபிஸ்ல ஒன்னு நந்தினி தேவி, இல்லைனா பாலாஜி... யாரோ ஒருத்தர்தான் தொடரப்போறோம்.... அது தெரியுறதுக்கு முன்னாடி ஒரு சின்ன அவுட்டிங்.... ரொம்ப தூரம் இல்லை... பீச் போயிட்டு, அப்டியே நைட் டின்னர் ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட்ல சாப்டுட்டு அவங்கவங்க போய்டலாம்”
எனக்கும் அது சரி என்று பட்டது... என்னை ஒரு போட்டியாளனாக பார்த்திடாமல், ஒரு நல்ல நண்பனாக இந்த ஒருமாதமும் வழிநடத்தியவள்....
ஒருமாதமும் இவள் கூட இருந்திடாமல் இருந்திருந்தால், பல குழப்பங்களுக்கு ஆளாகி இருந்திருப்பேன்....
நானே அவளை எங்காவது அழைத்து சென்றிருக்க வேண்டும்... அவளே அழைத்தது சந்தோஷமாக இருந்தது,,, உடனே ஒப்புக்கொண்டேன்...
அன்று மாலை கடற்கரை சென்று பல விஷயங்களையும் பகிர்ந்துகொண்டோம்.... நட்பு என்ற எல்லையை தாண்டினாலும், அந்த உறவு காதல் என்ற எல்லையை தொட்டுவிடாமல் தெரிந்தது....
இரவு உணவை ஒரு நல்ல உணவகத்தில் முடித்துவிட்டு, அவளை வழி அனுப்பிவிட்டு நானும் வீடு வந்து சேர்ந்தேன்....
ஹாலில் அமர்ந்து நந்தா ஒவ்வொரு சேனல்களாக டிவியில் மாற்றிக்கொண்டிருந்தான்....
உள்ளே சென்று கதவை தாழிட்டு, முகம் கழுவி புத்துணர்ச்சி ஆனபிறகு ஹாலுக்கு வந்தேன்....
“என்ன இவ்ளோ நேரம் இன்னைக்கு?” அவன் கேள்வியில் ஒரு உரிமை தெரிந்தது.... எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி....
ஆனால், நான் உண்மையை சொன்னால் அவன் நிச்சயம் சங்கடப்படுவான்... இனியும் அவனை நந்தினியின் பெயரால் இம்சிக்க விரும்பவில்லை...
“இல்ல.... என் ப்ரெண்ட் ஒருத்தனை பார்க்க டீநகர் போனேன், அங்க லேட் ஆகிடுச்சு”
“ஓஹோ.... டீ நகர்ல புதுசா பீச் வந்திருக்கா?” சொல்லிவிட்டு அவன் எதையும் கண்டுகொள்ளாமல் அறைக்கு சென்று படுத்துவிட்டான்....
டீ நகர்ல பீச்சா?.... என்ன சொல்ல வரான் அவன்?.... குழப்பத்தில் யோசித்தபோது எதேச்சையாக நான் கழட்டிவிட்ட ஷூவை கவனித்தேன்.... அதிலிருந்து கடற்கரை மணல் சிதறி இருந்தது....
எனக்கு புரிந்தது.... இந்த மணலை வைத்துதான் நான் பீச் போனதை கண்டுபிடித்துருக்கிறான்.... ஐயோ! இப்படியா மாட்டுவேன் நான்?....
அறைக்கு சென்று அவன் அருகில் அமர்ந்தேன், “சாரி நந்தா..... நந்தினியோட வெளில போனேன்.... நீ சங்கடப்படுவியோன்னு மறச்சேன்.... ரொம்ப சாரி” என்றேன்....
“என்கிட்ட சொல்ல கூடாத அளவுக்கு ஒரு விஷயம், அது தப்புன்னு உனக்கு தெரியலையா?.... இனி எதையும் மறைக்காத”
இவ்வளவு உரிமையோடு என்னிடம் அவன் பேசுகிறான்.... இந்த நிமிடமே அவனை கட்டிப்பிடித்து “ஐ லவ் யூ நந்தா” என்று சொல்ல மனம் துடித்தது.... ஆனாலும், நாளை அவன் என்னை பெர்மனன்ட் செய்யும்வரை இதை அவனிடம் சொல்ல மாட்டேன்....
சந்தோஷத்திலும், பல வண்ண கனவுகளிலும் படுத்தேன்....
அநேகமாக நாளைய இரவில் அவனும் நானும் ஒரே படுக்கையில் படுத்திருப்போம்..... “ஏய் தனிமையே! இன்றுடன் உனக்கு விடுதலை.... நாளை முதல் என்னவனுடன் மட்டுமே இந்த இரவுகள் கழியப்போகிறது” என்னென்னமோ தோன்றியது....
காதல் நிஜமாகவே ஒரு அற்புதமான உணர்வு, உலகின் உச்சபட்ச மகிழ்ச்சியை கொடுக்கும் ஒரு உன்னதமான உணர்வு....
கண் அயர்ந்தேன்.... விடிந்தது.... கண் விழித்தேன்....
இன்று நான் கண்விழித்ததே நந்தாவின் முகத்தில்தான்.... அறையின் அலமாரியில் எதையோ எடுத்துக்கொண்டிருந்தான், கண் விழித்த நான் அவனது அழகான கண்களைத்தான் முதலில் பார்த்தேன்.... நிச்சயம் இன்றைய பொழுது எனக்கான பொழுதாக அமையும் என்ற நம்பிக்கையில் மிகவும் உற்சாகமாக கிளம்பினேன்....
எனக்கு ராசியான கருப்பு நிற சட்டை, பாக்கெட்டில் நான் வணங்கும் பழனி முருகனின் படம்.... செண்டிமெண்ட் ஐட்டங்களை ஒவ்வொன்றாக யோசித்து செய்தேன்.... அலுவலகம் சென்றேன்.... இன்றும் வழக்கம்போல தேவி எனக்கு முன்பே வந்துவிட்டாள்.....
“என்ன பாலா, இன்னைக்கு ரொம்ப ஹான்ட்சம்’ஆ இருக்கியே?.... எப்பவும் எதையோ யோசிச்சுகிட்டு பாண்டியராஜன் மாதிரி திரு திருன்னு முழிப்ப... இன்னைக்கு ரொம்பவே தெளிவா இருக்கியே?”
“ஹ்ம்ம்.... நெஜமாதான் தேவி.... அதுக்கு ஒரு காரணம் இருக்கு..... அதை நான் உனக்கு அப்புறமா சொல்றேன்”
பேசிக்கொண்டிருக்கும்போது நந்தா வந்தான்....
“ஓகே.... நான் ஹார்பர் போறேன்.... உங்க ரெண்டு பேர்ல யார் பெர்மனன்ட் ஆகப்போறிங்கன்னு மேனேஜர் சொல்லுவார்..... யாரா இருந்தாலும் வாழ்த்துக்களை இப்பவே சொல்லிடுறேன்..... ஆள் தி பெஸ்ட்” சொல்லிவிட்டு அவன் கிளம்பிவிட்டான்....
என் மனம் படபடக்க தொடங்கியது....
இது வேலைக்கான படபடப்பு இல்லை, வாழ்க்கைக்கான படபடப்பு....
தகுதி, திறமையின் அடிப்படையில் அவன் தேவியை செலெக்ட் செய்திருப்பானா?... அல்லது, காதல், வாழ்க்கை என்று என்னை தேர்ந்தெடுத்திருப்பானா?....
தேவி வழக்கம் போல எதையும் பற்றி கவலைப்படாமல் என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தாள்.... என் கண்கள் மேனேஜர் அறையை நோக்கியே வட்டமடித்தன....
எதிர்பாராத நேரம் மேனேஜர் வெளியே வந்தார்.... எங்களை நோக்கித்தான் வருகிறார்.... கையில் ஒரு காகிதத்துடன், அநேகமாக அது யாருக்கான வேலை உறுதி கடிதமாக இருக்கும் என்று நினைக்கிறேன்...
“குட் மானிங் ப்ரெண்ட்ஸ்..... நிஜமாவே நீங்க ரெண்டு பேருமே ரொம்ப நல்லா ட்ரைனிங் எடுத்துகிட்டிங்க.... உங்கள்ல யாரை செலக்ட் பண்றதுன்னு ஒரு போராட்டமே நடத்த வேண்டி இருந்துச்சு.... கடைசியா நந்தா சொன்னதன் பேர்ல, ஒருத்தரை பர்மனன்ட் பண்ணிருக்கேன்..... செலக்ட் ஆகாதவங்க கவலைப்படாதிங்க, அடுத்த வேக்கன்சி வர்றப்போ அவங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம்”
சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் தீர்ப்பு சொல்லும் முன்பு, அரை மணி நேரம் விளக்கம் கொடுப்பதை போல மொக்கை போட்டுக்கொண்டிருந்தார் மேனேஜர்...
நல்லவேளையாக ஒருவழியாக பேச்சை முடித்து, அந்த காகிதத்தை என்னிடம் கொடுத்து, “கங்கிராட்ஸ் பாலாஜி.... உங்களைத்தான் பர்மனன்ட் பண்ணிருக்கோம்.... வர்ற ஒன்னாம் தேதிலேந்து ஜாயின் பண்ணிக்கோங்க” என்று கூறிவிட்டு நகர்ந்தார்....
இன்ப அதிர்ச்சி இடிபோல என்னுள் இறங்கியது.... என் கண்களை என்னாலே நம்ப முடியவில்லை....
இந்த நேரத்தில் நந்தா இங்கு இல்லையே?.... அவனை கட்டிப்பிடித்து இப்போதே காதலை சொல்லி இருப்பேன்.... ஆண்டவா, என்னை நீ கைவிடவில்லை....
ஏதேதோ யோசித்த நான் அப்போது தேவியை கவனித்தேன்.... என் கைகளை பிடித்து குழுக்கி, தான் வாங்கி வைத்திருந்த இனிப்பை என் வாயில் திணித்தாள்.... அவள் கண்களில் துளி நடிப்பு கூட இல்லை..... இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா?....
“பாலா, இதுக்கு நீ பெரிய ட்ரீட் வைக்கணும் பாத்துக்கோ”
“சாரி தேவி... உனக்கு கஷ்டமா இல்லையா?”
“எதுக்கு கஷ்டம்.... நீதானே செலெக்ட் ஆகிருக்க, எனக்கு சந்தோஷம்தான்”
“ஒரு மாசம் நீ ரொம்ப எதிர்பார்த்திருப்ப.... என்னைவிட நீதானே இந்த வேலைக்கு தகுதியானவ”
“அப்டி இல்ல பாலா.... அவங்க சில விஷயங்களை எதிர்பார்த்திருக்கலாம், அது உன்கிட்ட இருந்திருக்கும்... அதான் நீ செலக்ட் ஆகிட்ட.... எனக்கு வருத்தமே இல்ல.... இது இல்லைனா என்ன, வேற வேலை நெறைய இருக்குப்பா” எவ்வளவு நம்பிக்கையான வார்த்தைகள்?.... ஒருவேளை அவள் தேர்ந்தெடுக்க பட்டிருந்தால், நிச்சயம் என்னால் இப்படி அதை எளிதாக எடுத்திருக்க முடியாது..... அப்படி அவளிடம் இல்லாத தகுதி என்னிடம் என்ன உள்ளது?.... இருக்கிறது, அதுதான் காதல்.... நந்தாவின் காதல்...
“சரி, பாலா.... ஒரே ஒரு ரெக்வெஸ்ட்”
“என்ன தேவி?”
“இன்னைக்கு ஈவ்னிங் எங்க வீட்டுக்கு வாயேன்.... “
“என்ன விஷயம்?”
“சும்மா தான்.... திருச்சி வந்தா உங்க வீட்டுக்கு நீ கூப்பிட்டிருக்க மாட்டியா என்ன?”
“எனக்கு சென்னைல அவ்வளவா ஏரியா தெரியாதே தேவி”
“நீ கிளம்புறப்போ சொல்லு, நான் வீட்லேந்து வண்டி அனுப்புறேன்”
சந்தோஷமாக ஒப்புக்கொண்டேன்.... இப்படி ஒரு பெண்ணின் நட்பு சென்னையில் நிச்சயம் நான் எதிர்பார்க்காத ஒன்று....
அவளிடம் விடைபெற்று வீடு வந்து சேர்ந்தேன்.... மிகவும் உற்சாகமாக இருந்தேன்....
மீண்டும் ஒருமுறை குளித்தேன்.... டீஷர்ட், ஜீன்ஸ் போட்டு நந்தாவுக்காக காத்திருந்தேன்....
அவன் வந்தவுடன் அவனை எங்காவது வெளியே அழைத்து சென்று, ரம்மியமான சூழலில் என் காதலை சொல்லிடனும்....
எப்படி சொல்லலாம்?... என் மனதிற்குள் வசனங்களையும், காட்சிகளையும் கற்பனை செய்துகொண்டிருந்தேன்....
ஒவ்வொரு நிமிடமும் அவன் வரவை எதிர்நோக்கி வாசலை பார்த்துக்கொண்டிருந்தேன்....
மனதில் படபடப்பு அதிகமானது, தாகம் நிறைய எடுத்து தண்ணீர் அடிக்கடி குடித்தேன்....
வயிற்றுக்குள் ஒருவித பயம் கலந்த உணர்வு ஒன்று லேசாக எட்டிப்பார்த்தது....
இதோ, நந்தா வந்துவிட்டான்.... உடல் முழுவதும் வியர்வையும், கண்களில் சோர்வோடும் உள்ளே நுழைந்தாலும், என்னை பார்த்ததும் பூரிப்பான முகத்துடன், “கங்கிராட்ஸ் பாலா..... கலக்கிட்ட” என்று கையை பிடித்து குழுக்க, அப்படியே நான் அவனை கட்டிக்கொண்டேன்....
வியர்வை வாசனை என்னை ஏதோ செய்தது... அவன் காதோரத்தில் வழிந்த வியர்வை துளி என் கன்னங்களில் பட்டு என் மெய் சிலிர்த்தது....
“டேய்.... ரொம்ப கசகசன்னு இருக்கு.... பாரு, உன்மேலையும் வியர்வை ஒட்டிருச்சு” அவன் கைக்குட்டையால் என் முகத்தில் ஒட்டியிருந்த அவனுடைய வியர்வை துளியை துடைத்துவிட்டான்....
“பரவால்ல நந்தா.... இது மேட்டரே இல்ல”
“சரி நான் போய் குளிச்சுட்டு வரேன்.... உன்ன ஒரு முக்கியமான எடத்துக்கு கூட்டிட்டு போறேன்... அங்க ஒரு முக்கியமான விஷயம் பற்றி பேசனும்”
நான் சொல்ல நினைத்ததை அவன் சொல்கிறான், எனக்குள் ஆர்வம் இன்னும் அதிகமானது....
“என்ன விஷயம் நந்தா?.... இப்பவே சொல்லிடேன்”
“நோ நோ..... அது சஸ்பென்ஸ்..... நான் குளிச்சிட்டு வரேன், அப்புறம் அங்க போனபிறகு சொல்றேன்”
சொல்லிவிட்டு, டவல் எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்றுவிட்டான்....
அப்போதுதான் தேவியின் நினைவு எனக்கு வந்தது.... நான் வருவதாக கூறினேனே?....
தேவியின் அலைபேசிக்கு அழைத்தேன்....
“சொல்லு பாலா.... கிளம்பிட்டியா?.... வண்டி வர சொல்லவா?”
“சாரி தேவி.... இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு.... நாளைக்கு வரட்டுமா?”
“ஓஹ் அப்படியா?.... சரி, நாளைக்கு வா” அவளின் பதிலில் ஒரு ஏமாற்றம் தெரிந்தது....
“சாரி தேவி.... தவிர்க்க முடியாத வேலை அது.... நாளைக்கு நிச்சயம் வரேன்”
“பரவால்ல பாலா.... நான் தப்பா எடுத்துக்கல, நாளைக்கே வா” சொலிவிட்டு அழைப்பை துண்டித்தேன்....
அடுத்ததாக நான் என்னை இன்னும் கொஞ்சம் அழகுபடுத்திக்கொண்டேன்... இப்போது அணிந்திருந்த சட்டை கொஞ்சம் கசங்கிவிட்டது, அடுத்து இன்னொரு சட்டை மாற்றினேன்.... இன்று மட்டுமே நான்கு சட்டைகளை மாற்றிவிட்டேன்... மனம் ஒரு நிலையில் இல்லை, எதை எதையோ என்னை அறியாமல் செய்துகொண்டிருந்தேன்....
குளித்துவிட்டு அவன் உடைகளை மாற்றினான்.... கச்சிதமான உடை, அவனுக்கே அளவெடுத்து தைத்தது போல அவ்வளவு சிற்பம் போல காணப்பட்டான்.....
புன்னகையை சிந்தியபடி, “போகலாமா பாலா?” என்றான்....
இருவரும் கிளம்பினோம்.... சென்னை வீதிகளின் பல சிக்னல்களை தாண்டி எங்கோ வண்டி சென்றுகொண்டிருந்தது.... எங்கு செல்கிறோம்? என்று எனக்கு தெரியவில்லை.... நானும் அதை பொருட்படுத்தாமல் அவனை ரசித்துக்கொண்டிருந்தேன்....
புரசைவாக்கத்தின் ஒரு வீதிக்குள் சென்று, ஒரு வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தினான்....
இப்போதுதான் புரிந்தது எனக்கு.... அவன் வீட்டிற்கு என்னை அழைத்து வந்திருக்கிறான்...
காதலை சொல்ல அழைத்து செல்கிறான் என்று பார்த்தால் இப்படி வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறானே!.... சரி, என்னதான் செய்கிறான் என்று பார்க்கலாம்....
வீட்டின் கதவில் பெருமாளின் படமும், நாமமும் போட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.... மாவிலை தோரணம், அரிசி மாவு கோலமும் என்னை வித்தியாசமாக பார்க்க வைத்தது...
இது எனக்குள் ஒரு பீதியை உண்டாக்கியது.... உள்ளே நுழையும்போது “நாமத்தை” பார்த்தால் பீதி வராமல் என்ன செய்யும்?....
கதவை தட்டினான் நந்தா... உள்ளிருந்து கதவை திறந்தார் ஒரு நபர்... வயது நாற்பதை கடந்திருக்கும்... கண், காது, மூக்கு என்று அடையாளம் தெரியாமல் வெள்ளை சாயம் பூசப்பட்ட அனுமார் போல இருந்தார்....
“வாங்கோ வாங்கோ....” என்னை அழைத்து சென்று ஹாலில் இருந்த சோபாவில் அமரவைத்தார் அந்த நபர்... சுற்றி முற்றி பார்த்தேன்....
வசதியான வீடு தான்... பெருமாளின் படங்கள் திசைக்கு நான்கு என்று மாட்டப்பட்டிருந்தது....
பிரதான இடத்தில் ஒரு தாத்தாவின் புகைப்படம் மாலையிட்டு, விளக்கு ஏற்றப்பட்டு, அதன் கீழே “ராமானுஜ ஐயங்கார்” என்று எழுதி இருந்தது....
“அவர்தான், நந்துவோட தாத்தா... ஜஸ்டிஸ் ராமானுஜ ஐயங்கார்... பெரிய ஜட்ஜ்” அந்த நபர் விளக்கினார்....
நான் வராத சிரிப்பை வரவழைத்து, “ஓஹோ.. சரி சரி” என்றேன்....
நந்தா இன்னும் எதுவும் பேசவில்லை... அவனை குழப்பத்துடன் பார்த்தேன்....
சிரித்த நந்தா, “இது எங்க வீடுதாண்டா..... இவர் என் மாமா....” என்றான்...
“நீங்கதான் பாலாஜியா?” என்றார் மாமா...
“ஆமா.... “
“நந்துவ உனக்கு பிடிச்சிருக்கில்ல?” என்றார்...
நான் ஒரு கனம் அதிர்ந்து நின்றேன்.... என்ன கேட்கிறார்?....
புரியாமல், “என்ன?.... என்ன கேட்குறீங்க?” என்றேன்....
“ நீ நந்துவை லவ் பண்றது உண்மைதானே?” என்றார்...
இவ்வளவு பெரிய விஷயத்தை, ரொம்ப சாதாரணமா கேட்குறாரே....
“ஆமா.... “ என்றேன் தயக்கத்துடன்....
“இதுக்கு ஏன் தயங்குற?.... லவ் பண்றது சாதாரண விஷயம் இப்போவல்லாம்”
நான் இந்தியாவில்தான் இருக்கிறேனா?... இது கனவில்லையே?.... எனக்கு ஒன்றும் புரியவில்லை.... காதலிப்பது சாதாரணம்தான், இது போன்ற காதல் இங்கு ரொம்ப அசாதாரணமா பார்ப்பாங்களே......
“என்னால நம்பவே முடியல.... இன்னும் நாங்க ரெண்டு பேரும் நேரடியா எங்க காதலை சொல்லிக்கவே இல்ல... அதுக்குள்ள இப்படி ஒரு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் எங்க காதலுக்கு வரும்னு நாங்க நினைக்கவே இல்ல.... நிச்சயமா இந்த சொசைட்டி இவ்வளவு மாறும்னு நான் நினைக்கவே இல்ல” என்றேன் அதிர்ச்சி விலகாமல்....
“காலம் போற வேகத்துக்கு நாமளும் போகணும்ல.... ஒரே ஒரு வருத்தம்தான்” என்றார் கொஞ்சம் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு....
“என்ன?” என்றேன்....
“நந்துவுக்கு என் பையனை கொடுக்கலாம்னு நெனச்சேன்.... இப்போ லண்டன்ல படிக்குறான்.... ஆனால், லவ் விஷயம் வந்துட்டதால, இப்போ அவனுக்கு வேற வரன் பார்க்க வேண்டி வந்திடுச்சு”
“உங்க பையனையா?” என்றேன் அதிர்ச்சியில்.....
நந்தாவுக்கு பையனை தான் திருமணம் செய்யனும் என்று முன்னரே முடிவெடுத்த விஷயமா?.... ஒருவேளை ஜாதகத்தில் எதுவும் அப்டி சொல்லப்பட்டிருக்குமோ?.... குழம்பினேன்....
“ஆமா.... பட், நந்து பேச்சுக்கு மறுபேச்சு நான் சொல்ல மாட்டேன்.... நந்து அப்பாவும் அம்மாவும் கோவிலுக்கு போயிருக்காங்க.... வந்ததும் அவங்ககிட்ட நான் பேசுறேன்” அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது கதவு திறக்கப்பட்டு உள்ளே நுழைந்தனர் இரண்டு பெண்கள்....
அவர்களில் ஒருத்தியை எங்கோ பார்த்தது போல இருந்தது.... அட தேவியேதான்..... இங்க எப்படி தேவி?.... இன்னொரு பெண் யார்?
“ஏய் தேவி, இங்க எப்டி நீ?” என்றேன்....
“அதை உன்கிட்ட நான் கேட்கணும்.... நான் கூப்பிட்டப்போ வேற ஏதோ வேலை இருக்குன்னு சொன்ன?” என்றாள்....
“ஆமா தேவி.... நந்தா கூப்பிட்டதால இங்க வந்துட்டேன்”
“நான் கூப்பிட்டா வரமாட்ட, அண்ணன் கூப்பிட்டதும் வந்துட்டியா?... இரு, நான் போய் குளிச்சிட்டு வரேன்” சொல்லிவிட்டு அவள் சென்றுவிட்டாள்.....
அண்ணனா?.... யாரை சொல்கிறாள்?.... எனக்கு புரியவில்லை, பயம் உண்டானது....
நந்தாவை பார்த்து, “தேவி எப்டி இங்க?” என்றேன்....
“என்ன கேட்குற?.... எங்க வீட்ல அவ இல்லாம, வேற எங்க இருப்பாளாம்?... கல்யாணம் ஆனபிறகுதான் அவ திருச்சிக்கு போவா” சிரித்தான்....
பெரிய வயிறு குழுங்க சிரித்த மாமா, “பாலாவுக்கு இப்பவே கல்யாண அவசரம் வந்திடுச்சு போல.... எல்லாம் பேசி முடியுற வரைக்கும், அவ வீடு இதுதானப்பா” என்றார்....
என் தலை சுற்றியது.... ஏதோ பெரிய தவறு நிகழ்ந்துவிட்டதை உணர்ந்தேன்....
“இப்போ யார் கல்யாணத்தை பற்றி பேசுறீங்க?” என்றேன்....
“என்ன புரியாத மாதிரி பேசுற?....உனக்கும் நந்துவுக்கும் கல்யாணம் பற்றித்தான்” என்றார் மாமா....
“நந்துனா யாரை சொல்றீங்க?”
“நந்தினி தேவி.... குமாரோட தங்கை”
எல்லாம் புரிந்தது எனக்கு....
இவ்வளவு நேரம் நந்து என்று பேசியது தேவியை பற்றித்தான்.... நந்தாவை வீட்டில் குமார் என்று அழைக்கிறார்கள்.... என் தலையில் இடி விழுந்ததை உணர்ந்தேன்.... படபடப்பு அதிகமானது, வாய் குழறியது....
“தேவி உன் சிஸ்டர்னு நீ சொல்லவே இல்லையே நந்தா” என்றேன்....
“அதான் அவ சொன்னதா சொன்னியே?.... அவள் அண்ணா, அண்ணான்னு சொன்னதா சொன்னியே... எனக்கு அப்போ கடுப்பா ஆகிடுச்சு.... ஆபிஸ்ல யாருக்கும் நாங்க அண்ணன் தங்கைனு தெரிய கூடாதுன்னு அவகிட்ட சொன்னேன்... அவ உன்கிட்ட சொல்லிருக்கா...”
“ஏன் என்கிட்ட அதை சொல்ல வேணாம்னு சொன்ன?” எச்சிலை விழுங்கினேன்....
“இல்லடா... ஒருவேளை அவ ஜாப்ல பெர்மனன்ட் ஆகிருந்தா, நான் தங்கைனு காரணத்தால அப்டி செஞ்சதா சொல்லிருப்பாங்க... அதான்”
“அப்போ ஏன் என்னை செலக்ட் பண்ணின?”
“அதுக்கும் தேவிதான் காரணம்... அவதான் உன்ன செலக்ட் செய்ய சொல்லி என்கிட்ட சொன்னா”
அடக்கடவுளே! .... இது என்ன கொடுமை?.... இப்படியுமா கொடுமைகள் நடக்கும்....
குளித்துவிட்டு பாவாடை தாவணியில் வந்தாள் தேவி.... ஐயோ, நந்தினி.... இந்த பெயர் குழப்பம்தான் இவ்வளவுக்கும் காரணம்....
என்னை பார்த்து, “பாலா... இவதான் பூஜா... என் அண்ணி பேர் பூஜானு சொன்னேன்ல, இவதான்....” என்றாள்....
“அண்ணியா?... எந்த அண்ணனோட அண்ணி?”
“கொழுப்பா உனக்கு.... எனக்கிருக்கிறது ஒரே அண்ணன், நந்தா தான்... இந்த பூஜா கூட நம்ம ஆபிஸ்ல வேலை பார்த்தவங்கதான்”
ஆபீஸில் மணி அண்ணன் சொன்ன பூஜா இவள்தான் போல.... அண்ணியா?... அப்படியானால், நந்தாவுக்கு நிச்சயம் ஆகிவிட்டதா?
“என் லவ்க்கு தேவி ரொம்ப ஹெல்ப் பண்ணாடா.... அப்பாகிட்ட பேசி, சம்மதம் வாங்கி, ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் வரைக்கும் ஏற்பாடு பண்ணது அவதான்... அதனால அவ உன்னை லவ் பண்றதா சொன்னப்போ, நானும் மறுபேச்சு பேசாமல் உன்னை ஒத்துக்கிட்டேன்.... ஆனாலும் அவ சாய்ஸ் சூப்பர் சாய்ஸ்.... நாங்களே தேடிருந்தாலும் உன்ன மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைச்சிருக்க மாட்டான்”
எனக்கு அழுகை வந்தது....
“டேய் குமார், போதும்டா.... பாரு, பாலாவால வாய்பேச முடியாத அளவுக்கு சந்தோஷத்த.... நீ சிடுமூஞ்சி பையன்... உன்கிட்டயே ஒருத்தன் ஒரு மாசம் நிம்மதியா இருந்திட்டான்னு தெரிஞ்சப்பவே எனக்கு பாலாவ ரொம்ப பிடிச்சிடுச்சு” என்றார் மாமா...
“உண்மைதான் மாமா.... ஆரம்பத்துல நானும் அவனை ரொம்பவே கோபப்படுத்திட்டேன்... நந்தினி லவ் பண்றதா சொன்னதால்தான் அவனை வீட்ல தங்க வச்சேன்.... ஒரு அண்ணன் நான் முன்னாடி இருக்கும்போதே, இதுக ரெண்டும் பீச்’ல போட்ட ஆட்டம் இருக்கே.... அப்பப்பா....
அப்புறம் நேத்து கூட, நான் என் கோபத்தை அவன்கிட்ட சொல்லிட்டேன்.... கல்யாணம் முடியுற வரைக்கும் இனி அடிக்கடி வெளில போகாதிங்கன்னு தேவிகிட்டையும் சொல்லிட்டேன்”
இப்படி அவர்கள் பலவாறும் பேசிக்கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்தார்கள் ஒரு வயசான தம்பதிகள்...
பார்த்ததும் புரிந்தது அவர்கள் நந்தாவின் பெற்றோர் என்பது....
“என்ன சத்தம் வெளில கேக்குறது?” என்றார் அந்த முதியவர் கண்டிப்பான குரலுடன்....
“அந்த பாலாஜி பையனை அழைச்சிண்டு வந்திருக்கான் நம்ம குமார்” மாமா மெல்ல கூறினார்...
“இங்க எதுதான் நான் சொல்றது நடக்குறது?... எல்லாம் நீங்க முடிவு பண்றேள், நான் பார்த்துண்டு இருக்கேன்” கண்ணாடியை உயரப்பிடித்து என்னை பார்த்தார் நந்தாவின் அப்பா....
“முழியே சரி இல்லையே.... ஏண்டாப்பா, நீ வட கலையா? தென் கலையா?” என்னை பார்த்து கேட்டார்....
“யாரு அந்த கலை?” நந்தாவை பார்த்து கேட்க, அவன் சிரித்துவிட்டான்....
“நீ ஸ்ரீரங்கத்து பிள்ளைதானே?....”
“இல்ல... நான் உறையூர்”
நந்தாவை பார்த்து முறைத்த அவன் அப்பா, “ராஸ்கல், என்ன பண்ணிருக்கே தெரியுறதா?.... அப்போ இவன் நம்மவா இல்லையா?” என்றார்....
“இல்லப்பா... அவன்....” என்று சொல்லப்போக, இடைமறித்த அப்பா, “நம்மவா இல்லைன்னு ஆனபிறகு வேற எதுவும் நேக்கு தேவை இல்லை.... அவனை முதல்ல வெளில போக சொல்லு” என்று முகத்தில் அறைந்தார் போல கூறினார்....
“என்னப்பா சொல்றேள்....?... அண்ணாவுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா?... நான் பாலாவைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்” தேவியில் கன்னங்கள் பழுக்க அறைவிட்டார் அப்பா....
“நமக்குன்னு ஒரு ஆச்சாரம் இருக்கு.... பூஜாவை நான் ஏத்துன்டதே அவ நம்மவா’ன்னுதான்... இதுக்கு மேல எதுவும் பேசுனேல் கொன்னுடுவேன்” சொல்லிவிட்டு அவர் அறைக்கு செல்ல, நந்தாவின் அம்மா வீட்டில் நடக்கும் எதிலும் தனக்கு சம்மந்தம் இல்லாதவர் போல அவர் பின்னால் சென்றார்....
அங்கிருந்து நான் கிளம்பிவிட்டேன்..... வழி சரியாக தெரியாவிட்டாலும், ஏதோ ஆங்காங்கே விசாரித்து, தேனாம்பேட்டை வீட்டிற்கு வந்துவிட்டேன்....
கதவை திறந்து உள்ளே நுழைந்தபோதே பக்கத்துக்கு வீட்டு சுரேஷ் வந்தான்....
“நந்தா அண்ணா இல்லையா?”
“இல்ல... இன்னும் வரல”
“நான் கேம்ஸ் விளையாடிட்டு இருக்கேன், நந்தா அண்ணா வந்தா சொல்லுங்க”
“சரி விளையாடு.... எனக்கு தலை லேசா வலிக்குது... நான் பெட்ரூம்ல படுத்திருக்கேன்... யாரும் கதவை தட்டினா பார்த்துக்கோ” அவனிடம் சொல்லிவிட்டு நான் படுக்கை அறை சென்றுவிட்டேன்... அவன் இன்னொரு அறைக்கு சென்றுவிட்டான்....
இவ்வளவு நேரமும் நான் என்ன செய்கிறேன்? என்னை சுற்றி என்ன நடக்கிறது? என்று எதுவும் புரியாமல் கனவு உலகத்தில் இருப்பதை போல உணர்ந்தேன்.... ஆனால், இது கனவில்லை.... எல்லாம் நிஜம்....
படுக்கையில் படுத்து எல்லாவற்றையும் யோசித்தேன்....
அவன் தங்கைக்கு கிடைக்கும் வேலையை பங்குபோட வந்ததால் முதலில் என்னுடன் கோபப்பட்டிருக்கான்...
பின், தேவி என்னை காதலிப்பதாக தெரிந்ததனால் என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டான்....
தங்கையின் காதலுக்கு சப்போர்ட் செய்ய என்னிடம் நெருக்கமானான்....
“மச்சான்”னு சொன்னதை நான் என் மீதுள்ள காதலால் சொல்கிறான் என்று நினைத்தேன்... ஆனால், தங்கையின் காதலன் என்ற உரிமையால்தான் அவன் அப்படி கூப்பிட்டிருக்கான்....
ஒரு அண்ணனும் தங்கையும் பழகிய விதத்தை தவறாக நினைத்துக்கொண்டு என்னென்னமோ செய்தேன்... “அண்ணன்’’னு சொன்னதா நான் அவனிடம் சொன்னதால், அவனும் தேவியை தங்கை என்று என்னிடம் சொல்லவில்லை....
அவன் எல்லா நடவடிக்கையுமே, என்னையும் தேவியையும் இணைக்கவே யோசித்து செய்தான்....
அவனுடன் அன்று இரவு நடந்த சம்பவம் கூட அவன் போதையில் அவன் அறியாமல் நடந்ததாகத்தான் இருக்க வேண்டும்....
ஆனாலும், இப்படி யோசித்து பார்த்தால் புரியாத இரண்டு விஷயங்கள் இன்னும் இருக்கிறது.....
முதலில், அவன் கம்ப்யூட்டரில் ப்ரவ்சிங் ஹிஸ்டரியில் பார்த்த கே வெப்சைட்;கள் எப்படி?... அவன் ஒரு கே;யா?.... பின் எப்படி அவன் பூஜாவை காதலிக்க முடியும்?
அடுத்தது, நான் தூங்கியபோது என் கன்னத்தில் அவன் முத்தம் கொடுத்தது பிரம்மையா?.... அப்படியானால், என் கன்னத்தில் நான் உணர்ந்த அந்த தொடு உணர்வு எப்படி?... கன்னத்தில் ஒட்டியிருந்த எச்சில் எப்படி சாத்தியம்?....
இரண்டு விஷயங்களும் நிச்சயம் ஏதோ உறுத்துது....
அவன் என்னை காதலித்தான் என்று நான் நம்ப இன்னும் இந்த இரண்டு காரணங்களையும் நான் நம்புறேன்.... கண்களை மூடி யோசித்துக்கொண்டிருந்தேன்..... மீண்டும் என் கன்னத்தில் ஏதோ ஒரு உணர்வு.... முத்தம் கொடுப்பது போல உணர்கிறேன்..... தொட்டுப்பார்த்தால் எச்சில்.... திடிக்கிட்டு விழிக்கிறேன், பக்கத்து வீட்டு நாய் என் கன்னத்தை நக்கிவிட்டு அறையை விட்டு ஓடியது.....
அடக்கொடுமையே, அப்படியானால் இது நாய் நக்கியதாலா?.... நான் கூட இதற்கு நந்தாவை சந்தேகப்பட்டேன்.... அந்த நாயை இன்று அடிக்காமல் விடக்கூடாது....
எழுந்து அருகில் இருந்த ஹாக்கி ஸ்டிக்கை எடுத்துக்கொண்டு அதை துரத்தினேன்.... அருகில் இருந்த அறைக்குள் சென்றது.... கடுப்பில் அந்த கதவை வேகமாக தள்ளி திறந்தேன்.... உள்ளே சுரேஷ், கணினியில் ஒரு கே வீடியோ பார்த்துக்கொண்டிருந்தான்.... என்னை பார்த்ததும் அவசர அவசரமாக அதை நிறுத்த முயற்சி செய்ய, அது ஹாங் ஆகிவிட்டது.... தடுமாறி கணினியை நிறுத்திவிட்டு என்னைவிட்டு விலகி சென்றான்.... எதுவும் பேசவில்லை, தலையை கவிந்த படியே அவன் வீட்டிற்கு சென்றுவிட்டான்....
என் தலையில் கைவைத்து உட்கார்ந்தேன்....
கடவுளே!... நானாக எதையோ யோசித்துக்கொண்டு பல கற்பனைகளை செய்துவிட்டேன்.... இப்போதான் எனக்கு எல்லாம் புரியுது....
நந்தா கே இல்லை... முத்தம் கொடுத்தது நாய், கணினியில் கே சைட்’கள் பார்த்தது சுரேஷ்....
இதில் சம்மந்தம் இல்லாமல் பாதிக்கப்பட்டது தேவி.... அவளுக்கு என் முட்டாள்தனத்தால் பல ஆசைகளை வளர காரணமாக ஆகிவிட்டேன்....
இப்போ திருமண ஏற்பாடு செய்றாங்க.... அவளை திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு துளி கூட இல்லை... என் ஆசைகள் வேறு, எண்ணங்கள் வேறு, நடப்பது எல்லாம் வேறாக இருக்கு....
என்னுடைய கற்பனைகளால் இப்போது பல சிக்கல்கள் விரிந்து கிடக்கிறது....
உடனே ஒரு முடிவு செய்தேன்... இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்தணும்..... உண்மையான காரணங்களை யாரிடமும் சொல்ல முடியாது.... சொன்னாலும் அதன்மூலம் பல புது பிரச்சினைகள் உருவாகலாம்....
கதவு தட்டும் சத்தம் கேட்டது... திறந்தேன்....
நந்தாவும், அவன் மாமாவும் நின்றார்கள்....
என்ன சொல்லி திருமணத்தை நிறுத்தலாம்? என்று யோசித்தேன்....
மாமா பேச்சை தொடங்கினார், “பாலா, சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க.... அத்திம்பேர் ரொம்ப பிடிவாதமா இருக்கார்.... நாங்க எவ்வளவோ சொல்லி கம்பல் பண்றப்போ திடீர்னு மயங்கி விழுந்துட்டார்... ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம்.... ஹார்ட் அட்டாக்.... ரெண்டாவது அட்டாக்... எல்லாரும் ரொம்ப பயந்து போய்ட்டோம்.... இப்போ வேற வழி இல்ல.... தயவுசெஞ்சு நீங்க திருச்சி போய்டுங்க.... அவர் உயிர் எங்களுக்கு முக்கியம்.... நந்துவை சமாளிச்சிட்டோம்... அவ தோப்பனாருக்காக ஒத்துண்டா.... காதல் பெரிய விஷயம்தான்... அதைவிட ஒரு தகப்பன் உயிர் அவளுக்கு முக்கியம்.... உங்கள கையெடுத்து கும்பிடுறேன், தயவுசெஞ்சு எல்லாத்தையும் மறந்துட்டு திருச்சி போய்டுங்க... உங்களுக்கு அங்கேயே என் ப்ரெண்ட் மூலமா ஒரு நல்ல ஜாப் ஏற்பாடு பண்ணிடுறேன்” சொல்லிவிட்டு என் கைகளை பிடித்து அழுதார்....
நந்தா எதுவும் செல்ல முடியாத இயலாமையிலும், வருத்தத்திலும் தலை கவிழ்ந்தபடி நின்றான்...
அடுத்த இரண்டு மணி நேரத்தில்.....
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருச்சி செல்லும் பேருந்தில் நான் அமர்ந்திருந்தேன்....
நல்லவேளையாக கடவுளாக பார்த்து, நந்தாவின் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வர வச்சிருக்கார்.... ஏதேதோ கற்பனைகளை பண்ணிட்டு பல தவறுகளுக்கு காரணமாக இருந்திட இருந்தேன்....
ஒரு மாதம் சென்னை தன்னை எப்படியல்லாம் என்னிடம் வெளிப்படுத்திவிட்டது..... இப்படியுமா ஏமாறுவேன்?..... அடச்ச.... நந்தா மேல ரொம்பவும் ஆசை வச்சுட்டேன், இப்போதான் அது பெரிய தப்புன்னு புரிஞ்சுகிட்டேன்....
என்னோட முட்டாள்த்தனமான கற்பனைகள் எப்படி ஒரு காதலா ஆகிடும்?....
நந்தா ஒரு ஸ்ட்ரைட்’னு தெரிஞ்சதுமே அவனை நான் நினைக்கிறது என்னையே நான் எமாத்திக்கற விஷயம்....
காதல்னு நான் பண்ணின கற்பனைகளால ரெண்டு நட்பை இழக்க பார்த்தேன்... நந்தாவோட நான் பண்ணது நிச்சயம் காதல் இல்லை.... அது ஆசை.... அவனுக்கும் இருந்தாத்தானே அது காதல்.... அவனை மறப்பது கஷ்டம்தான், ஆனால் உலகத்தில் எல்லாரும் நினைக்குற எல்லா விஷயமும் நடந்திடாது....
என்னோட காதல் விஷயமும் அப்படித்தான்.... இனி நந்தாவை அப்படி நான் நினைக்க கூடாது....
இனியாச்சும் என் கற்பனைக்கு நான் பலியாகாமல் பாத்துக்கணும்....
பேருந்தில் ஏறிய ஒரு இளைஞன் என்னை பார்த்து, “நீங்க திருச்சியா?” என்றான்....
திருச்சி பேருந்தில் ஏறி இருக்கும் என்னை பார்த்து அவன் கேட்கும் இந்த கேள்வி எனக்கு அதிசயமாக பட்டது....
நான் பதிலுக்கு “ஆமா” என்றேன்....
வேறு இருக்கையில் அமர்ந்த அவன், அடிக்கடி என்னை பார்த்தான், நான் பார்க்கும்போது சிரித்தான்...
ஒருவேளை அவன் என்னை வேறு எண்ணத்தில் பார்க்கிறானோ?....
மீண்டும் “கற்பனை குதிரைகள்” உருவாக தொடங்கின....
nice one vicky.. wonderful narration and wonderful finishing.
ReplyDeleteஅன்புக்கும் காதலுக்கும் மயரிலை தான் வேறுபாடு. நல்ல கதை விஜய்.
ReplyDeleteசேகர்.
wow its very gud ..,nice narration kadaisi varaikum semah interesting i enjoyed most thanks for this ......., hats off ....
ReplyDeleteAwesome story.. Rombavae interesting irunthuchu..
ReplyDeleteநல்லதொரு கதை. அதுவாம் "நந்து , குமார்' பெயர் குழப்பத்தில், நந்தா வீட்டில் நடந்த சம்பாஷணைகளில் நானுமே குழம்பி போனேன். அதிலும் தன் மகனை நந்துவுக்கு மணம்முடித்து கொடுப்பதாக மாமா கூறுவது, என்னை இன்னும் குழப்பியது. நந்தா மீதான காதல் சாத்தியமற்றதை அவன் புரிந்து கொண்டதை வியக்கிறேன். மனதின் எண்ணங்கள் போய்த்துபோகும் வேளைகளில் பாலாவைபோல திடமான முவுகள் எடுக்க முடியுமாயின் எத்தனை நன்றாக இருக்கும்...
ReplyDeleteவாழ்த்துக்கள் விஜய்
epdi na tamil la type pandringa..?
Deleteenakum solli thanga na..
nan government laptop vachiruken.. idhula epdi type pandrathu..
Nice story dude
ReplyDeleteSemma story na..
ReplyDeleteMadhawa Dewanarayana sir sonna mathari, bala mathari thidamana mudivu eduka mudinthal evlo nalla irukum..?
Ethir parkadha matrum ethir parkum(gay marriage in india) thirupangal..