Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday 23 June 2014

2014 Gay Pride அவசியமா?... ஆக்கப்பூர்வமாய் மாற்றலாம் நண்பர்களே...!




ஜூன் மாதம் வந்தாலும் வந்தாச்சு, நம்ம மக்களுக்கு கே ப்ரைடுகள் பற்றித்தான் ஒரே பேச்சு... ஒருவழியா சென்னை ப்ரைடுக்கும் தேதி குறிப்பிட்டாகிவிட்டதால், பலரும் தங்களது பங்கேற்பை உறுதிசெய்துகொண்டிருப்பதை காணமுடிகிறது...
1970கள் முதல் அமெரிக்காவின் ஸ்டோன்வால் கலவரத்தின் நினைவாக இன்றுவரை உலகின் பல்வேறு நாடுகளில், ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தன் சக்திக்கு உட்பட்ட வகையில் பேரணிகள் நடத்தப்படுவதை வெகு இயல்பாக பார்க்க முடிகிறது....
சான் பிரான்சிஸ்கோ முதல் நம்ம சென்னை வரை காரணிகள் புரியாவிட்டாலும், பேரணிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது... கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில்தான், பேரணிகளுக்கு எதிராக காரசாரமான ஒரு கட்டுரை எழுதி உங்களுக்கெல்லாம் பகிர்ந்தேன்.... அந்த கட்டுரையின் விளைவாக பல்வேறு அமைப்பினரிடமிருந்தும், பலதரப்பட்ட விமர்சனங்கள்... என்னை தனிப்பட்ட முறையில் வசைபாடிய நபர்களுக்கென விளக்க கட்டுரை கூட கொடுக்க வேண்டிய அளவுக்கு, மிகப்பெரிய பிரளயத்தை உண்டாக்கியது அந்த கட்டுரைகள்....

சரி, ஒரு வருஷம் ஆச்சு... இப்போ எல்லா அமைப்பை சேர்ந்த நண்பர்களுடனும் இணக்கமான சூழல் நிலவும் வேளையில், எனது நிலைப்பாட்டை நண்பர்கள் சிலர் கேட்டதன் விளைவாகத்தான் இந்த கட்டுரை... உண்மையில் சொல்லவேண்டுமானால், இந்த ஒரு வருடம் ஒன்னும் என்னை பெரிதாக திருப்திபடுத்தவில்லை... இப்போதும் எனக்கு பேரணிகள் மீது அதே அளவிலான முரண்பட்ட கருத்துதான் நிலவுகிறது...
இப்படி பேரணிகளை குறை சொல்வதால் நான் தனிமைப்படுவதாய் நினைக்கவேண்டாம்... பிரபல அமெரிக்க தத்துவவாதியும், பாலீர்ப்பு பற்றிய மிகச்சிறந்த சித்தாந்தங்களை உருவாக்கிய ஜூடித் பட்லரும் கூட பேரணிகள் வணிகமயமாகி வருவதை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்... பாலீர்ப்பு சிறுபான்மையினர் சந்திக்கும் ஏற்றத்தாழ்வுகளை புறந்தள்ளிவிட்டு, வணிக நோக்கோடு இந்த பேரணிகள் நடத்தப்படுவதாக கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்... ஜூடித் பட்லர் உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் இப்படிப்பட்ட பேரணிக்கு எதிராக பலரும் குரல் கொடுக்கின்ற நிலையில் நான் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதை நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும்...
சரி, நம்ம விஷயத்துக்கு வரலாம்....
இந்த ஜூன் மாத பேரணியில் என்ன நடக்கப்போகிறதுன்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க....   
முகத்தில் சாயம் பூசி, கையில் வானவில் கொடி ஏந்தி பேரணியாக நடந்து செல்வீர்கள்.... மறுநாள் பலரும் பேஸ்புக் ஸ்டேட்டஸ்’இல் அதன் புகைப்படங்களை பகிர்ந்துகொள்வீர்கள்.... ஒருசில ஆங்கில பத்திரிகைகளின் “சென்னை” பகுதியில், பெட்டி செய்தியாக பேரணி இடம்பெறும்.... “ஓரினச்சேர்க்கையாளர் பேரணி” என்று கொச்சையான வார்த்தைகளோடு ஏதோ ஒரு தமிழ் நாளிதழ் குட்டி செய்தி வெளியிடும்...
அவ்ளோதானே?... மனசாட்சியை தொட்டு சொல்லுங்க, இதைத்தாண்டி எதுவும் நடந்திடுமா?....
ஒருபால் ஈர்ப்பு சமூகத்தை பொருத்தவரை உச்சநீதி மன்ற தீர்ப்பு, மத்தியில் ஆட்சி மாற்றம் என்று மிகப்பெரிய அதிமுக்கிய நிகழ்வுகள் நடந்த ஆண்டைத்தான் இப்போது நாம் கடந்து வந்திருக்கிறோம்.... இப்போதுவரை நம் அமைப்புகள் எந்த விஷயத்திலும் ஒற்றுமையாக செயல்படவில்லை... உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, தேர்தல் நெருங்கும் வேளையில் இந்தியாவில் பல கட்சிகளும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்திவந்தன... அப்படியோர் சூழலில் நம் அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழக அரசியல் கட்சிகளை சந்தித்து நம் நிலைப்பாட்டை விளக்கியிருக்கலாம்.... சின்னஞ்சிறிய சாதி கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் கூட தேர்தலை வாய்ப்பாக கருதி, அரசியல் கட்சிகளிடம் தங்கள் தேவைகளை கேட்கும்போது, நம் உரிமைகள் மட்டும் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட கூட இல்லாதது எவ்வளவு கொடுமையான விஷயம்... விடுதலை சிறுத்தை கட்சியை தவிர வேறு எந்த கட்சியினரிடமும் நம் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை...
இலக்கிய உலகிலும் நமது அங்கீகாரம் பெறப்படவில்லை, எளிய மக்களை நமது விழிப்புணர்வு போய்சேரவில்லை... சமீபத்தில் அஜய் என்னும் ஒருபால் ஈர்ப்பு செயற்பாட்டாளர் காவல் துறையால் தாக்கப்பட்ட விஷயத்தில் கூட, எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாக அந்த நிகழ்வை கண்டித்து அறிக்கை வெளியிட்டதாக தெரியவில்லை... சட்டப்பிரிவு 377ன் கீழ் கைதுசெய்யப்பட்ட பெங்களூரு மருத்துவரின் நீட்சி நம்மையும் பாதிக்கும் என்பதை யாரும் உணரவில்லை..... நித்தமும் இறுகும் நமது பாதுகாப்பற்ற சூழலை தளர்த்தும் வகையில் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை...
இப்படி செய்தாக வேண்டிய எல்லா விஷயங்களையும், ஒரு ப்ரைடு மூலம் செய்திட முடியும் என்கிற நம்பிக்கையை நாம் என்னவென்று சொல்வது?..
ஆனாலும், இப்படியோர் சூழலில் “எதுவுமே இல்லாததை விட, எதாவது இருப்பது சிறந்தது” என்கிற கோட்பாட்டின்படி பேரணிகள் நடப்பதை ஏற்பது தான் புத்திசாலித்தனம்... குறைந்தபட்சம் நம் இருப்பை இந்த உலகிற்கு உணர்த்தவாவது இந்த பேரணிகள் அவசியம்...
ஆனால், இந்த வருடம் பேரணி என்பது வெற்றிபேரணியாக இருக்கக்கூடாது... அது நமது எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில் துக்கப்பேரணியாக இருக்க வேண்டும்... 377ஐ எதிர்த்து கடுமையான நமது எதிர்ப்பை பதிவு செய்வதற்கு இந்த பேரணியை நாம் பயன்படுத்த வேண்டும்... நமது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான கொள்கை முழக்கத்தோடு, பேரணியில் ஈடுபட வேண்டும்....
இரண்டு வருடங்களுக்கு முன்பு இப்படிப்பட்ட பேரணியை பற்றி ஒரு பொதுத்தள நண்பர் தன் பேஸ்புக்கில் “கைல கொடி புடிச்சுட்டு, மூஞ்சியல்லாம் பெயின்ட் அப்பிட்டு, வித்தியாசமான டிரெஸ் போட்டுட்டு கே உரிமை கேட்குறாங்க... அவங்கள பாக்கும்போதே ஏலியன் போல தெரியுறாங்க, அதனால அந்த உரிமைகளை வேற கிரகத்துல போய் கேட்கலாம்..” என்று ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்....
அதை பார்க்கும்போது நமக்கு கோபம் ஏற்பட்டாலும், அதுதான் ஒரு பொதுஜனத்தின் பார்வை... அவங்கள நாம குறை சொல்லக்கூடாது... நாமும் அவர்களில் ஒருவர்தான் என்பதை உணர்த்த அவர்களுக்கு அந்நியமான தோற்றத்தில் அவர்கள் முன் நிற்பது முறையாகாது.... பொதுமக்களுக்கு ஏலியனாக தெரிவதை குறைத்து, எளியனாக நம்மை காட்டிக்கொள்ளனும்.... மேலும், தன் கணவனுடன் ஒரு ஆண், அல்லது தங்கள் குழந்தையுடன் ஒருபால் ஈர்ப்பு தம்பதி என்று முழு உரிமை பெற்று பேரணியில் ஈடுபடுவதை வெற்றிப்பேரணி என்று நான் வரையறுக்கலாம்.... எந்த நேரத்தில் யார் பார்ப்பார்களோ? போட்டோ எடுத்திடுவாங்களோ?ன்னு பயத்தோட கலந்துக்குற சூழலில் நாம  துக்க பேரணிதான் நடத்தனும்....
அதனால், உங்களிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறேன் தோழர்களே....
·        வித்தியாசமான ஆடைகளை தவிர்த்து, இயல்பான உடைகளை உடுத்துங்கள்... ஷாட்ஸ் அரைகுறை ஆடை போன்று அணியாமல், பேன்ட் ஷர்ட் அணியுங்கள், அதுபோதும்.... முடிந்தால் முழுமையான எதிர்ப்பை காட்ட, கருப்பு உடைகள் அணியவும்...
·        முகத்தில் வண்ணத்திற்கு பதிலாக, வாயில் கருப்பு துணி கட்டிக்கொள்ளுங்கள்... (உங்க அடையாளமும் மறைக்கப்படும், அதே வேளையில் எதிர்ப்பும் பதிவுசெய்யப்படும்)
·        கையில் பதாகைகளில் “377”க்கு எதிரான வாசகங்களை கடுமையாக முன்வையுங்கள்....
·        செல்லும் வழியெல்லாம், நமது பாதுகாப்பு மற்றும் உரிமைகளை வலியுறுத்தி அச்சிடப்பட்ட துண்டு சீட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்கவும்.... வழவழா கொழகொழா இல்லாமல், நச்சுன்னு நாலு வார்த்தையில் பொட்டில் அடித்தாற்போல் வாசகங்கள் அதில் இருந்தால் சிறப்பு....
·        பேரணி முடிந்ததும், ஆளாளுக்கு தனித்தனியாக பேட்டிகள் கொடுக்காமல், மொத்தமாக அனைத்து அமைப்பினரும் ஒன்றாக இணைந்து பிரஸ் நண்பர்களை சந்தித்து, பேட்டி கொடுக்கவும்...
இவற்றை ஒரு சக ஒருபால் ஈர்ப்பு நபராக உங்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்... இதனை ஏற்பதும், ஏற்காததும் உங்கள் விருப்பம்....
“இந்த வருடமும் நாங்கள் வழக்கம் போல மகிழ்ச்சி பேரணிகள் தான் நடத்துவோம்!” என்று திண்ணமாக இருப்பீர்கள் என்றால், ஆண்டாண்டு காலம் இப்படி பேரணிகள் மட்டுமே நம்மால் நடத்திக்கொண்டிருக்க முடியும்....
இறுதியாக ஒற்றை வரியில் சொல்வதானால், “இந்த பேரணி எங்கள் பாதுகாப்பையும், உங்கள் ஒற்றுமையையும் பறைசாற்றும் விதமாக அமையவேண்டும்”...

(அமைப்பு சார்ந்த நண்பர்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்)

8 comments:

  1. 100% true statement!! I support you Vijay!

    ReplyDelete
  2. yan intha pride lam chennaila mattum athigama nadakuthu..........tamilnatla irukura ella mukiamana town/city laum nadakanum....anaga aattam paattam pootu koothadika koodathu.....ninga sonnathu pola nammaloda kurala pathivu saianum...atleast 2% public avathu puringukra matiri nadathanum.....i support vijay,s voice in this issue.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி வருண்...

      Delete
  3. Really good suggestions. Is anyone listening?

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜான்.... கவனிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் நிச்சயம் கவனத்தில் கொள்வார்கள் என நம்புறேன் நண்பா....

      Delete
  4. வணக்கம் விஜய், முகம் சுளிக்கும் தோற்றத்தில் இருந்தால் பொதுமக்களின் நல் மதிப்பை பெற முடியாது. மாஸ்கு ஏதும் இல்லாமலும் சிலபேர் செல்கிறார்கள்.
    gay என்றால் என்னவென்று இணையந்திலோ அல்லது மருத்துவரிடமோ சென்று பார்க்கவேண்டிய நிலைமையில் தான் ஒரு தன்பால் ஈர்ப்பாலன் இருக்கும் போது, பொது மக்கள் பெரும் பிரெயத்தனம் செய்து இது என்னவென்று பார்க்க மாட்டார்கள். ஆனா இந்த pride, ஏதோ ஒரு பேரணி அது என்ன னு தெரிஞ்சுக்க பலபேர் முயற்சி பண்ணுவாங்க.
    உடை, தோற்றம் நல்லவிதத்தில் இருக்கும் போது அது நல்ல வினைகளை தரும் என்பது 100% சரி.

    ReplyDelete
    Replies
    1. ஆக்கப்பூர்வமான கருத்துகளுக்கு மிக்க நன்றி இசை...

      Delete