“ஹங்கேரி நாட்டை சேர்ந்த மூவர், பாலியல்
தொழிலில் இளைஞர்களை அடிமைகளாக ஈடுபடவைத்ததற்காக அமெரிக்க காவல்துறையால் கைதுசெய்யப்பட்டனர்”
என்ற செய்தியை கடந்த வாரத்தில் மேலோட்டமாக படித்தபோது, அது பெரிய அளவில்
கவனிக்கத்தக்க நிகழ்வாக எனக்கு தோன்றவில்லை... ஆனால், அந்த நிகழ்வின்
முழுப்பின்னனியையும் நண்பர் ஒருவர் மூலம் அறிந்து, மீண்டும் அந்த முழுத்தகவலை
கேள்வியுற்றபோது அதிர்ச்சியானேன்....
ஹங்கேரி நாட்டை சேர்ந்த அந்த நபர்கள்
இளைஞர்களை இணையம் வழி (பிளானட் ரோமியோ, பேஸ்புக்) கண்டுபிடித்து, அவர்களிடம் நயமாக
பேசி பாலியல் தொழிலுக்குள் இழுத்து வந்திருக்கிறார்கள்... வழக்கமான “male
escort required” விளம்பரம் தாங்கிய நிறுவனம் ஒன்றை தொடங்கி, அந்த
இளைஞர்களை அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் பாலியல் தொழிலில் மிரட்டி
ஈடுபடவைத்துள்ளனர்....
முதலில் ஆயிரக்கணக்கான டாலர்கள் பணத்திற்கு
ஆசைப்பட்டு ஒப்புக்கொண்ட இளைஞர்கள், ஒருகட்டத்தில் அந்த ஹங்கேரிய
நிறுவனத்திடமிருந்து வெளிவர நினைத்திருக்கிறார்கள், ஆனால் கடத்தல் கும்பல் அவர்களை
மிரட்டி அமைதியாக்கியுள்ளனர்.... பின்னர் அந்த இளைஞர்கள் சிறை போலவே ஒரு
வீட்டிற்குள் அடைத்துவைக்கப்பட்டு, வெளி நபர்கள் தொடர்பே இல்லாமல் இரண்டு
வருடங்கள் பாலியல் தொழிலுக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்... ஒரு நாளைக்கு
கிட்டத்தட்ட இருபது மணி நேரங்கள் அந்த இளைஞர்களை செக்ஸில் ஈடுபடவைத்து, அதை கேமரா
மூலம் படம் பிடித்து பணம் ஈட்டியிருக்கிறார்கள்.... தாங்கள் எங்கே இருக்கிறோம்,
தங்களை சுற்றி என்ன நடக்கிறது? என்ற எவ்வித கேள்விக்கும் விடைபுரியாமல்
மிரட்டலுக்கு அடிபணிந்து இரண்டு வருடங்கள் நரகத்தில் கழித்திருக்கிறார்கள் அந்த
இளைஞர்கள்... மியாமி, ப்ளோரிடா, நியூயார்க் போன்ற பல மாகாணங்களிலும் இந்த நிறுவனம்
இரண்டு ஆண்டுகளில் இந்த சேவையை தொடர்ந்திருக்கிறது... சரியாக ஆங்கிலம் கூட
பேசமுடியாமல் தவிக்கும் அந்த இளைஞர்களை அமெரிக்க காவல்துறை அவர்கள் சார்ந்த
நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடுகளை செய்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது...
சில மாதங்களுக்கு முன்பு அதிர்ச்சியூட்டும் கால் கே நெட்வர்க்...என்கிற தலைப்பில் நான் ஒரு கட்டுரை எழுதியது நண்பர்களுக்கு
நினைவிருக்கலாம்... அந்த நெட்வர்க்கின் நீட்சிதான் இப்படிப்பட்ட நிகழ்வுகள்...
இன்னும் இதனைப்போன்ற எத்தனையோ நிறுவனங்கள் அப்பாவி இளைஞர்களை மிரட்டி தங்கள்
தொழிலை நடத்தி வரும் வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது...
அமெரிக்கா போன்ற நாட்டில் பாதிக்கப்பட்ட
அப்பாவிகளுக்கு நியாயம் கிடைத்திருப்பதில் ஆச்சர்யமில்லை, காரணம் அங்கே ஒருபால்
ஈர்ப்பு சட்டப்படியும் சமுதாய ரீதியாகவும் தவறாக பலராலும் பார்க்கப்படவில்லை.... கடந்த
வாரம்தான் அமெரிக்காவில் மேலும் ஆறு மாகாணங்களில் ஒருபால் ஈர்ப்பு திருமணங்கள்
சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது... இதன்மூலம் விரைவில் முப்பது மாகாணங்கள்
அமெரிக்காவில் ஒருபால் ஈர்ப்பு திருமணங்களை அங்கீகரிக்கும் மாகாணங்கள் பட்டியலில்
இணைய இருக்கிறது... ஆக, சட்டம் சமூகம் எல்லாம் அமெரிக்காவில் இதை சாத்தியப்படுத்தி
உள்ளது... ஒருவேளை அந்த நிகழ்வு இங்கே நடந்திருந்தால், என்ன ஆகியிருக்கும்?...
பாதிக்கப்பட்ட அந்த இளைஞர்கள் மீதுதான் அநேகமாக முதலில் சட்டப்பிரிவு 377 பாய்ச்சப்பட்டிருக்கும்... ஒருபால் ஈர்ப்பு திருமணங்கள், குழந்தைகள்
தத்தெடுப்பு உரிமைகள் எல்லாம் அப்புறம் இருக்கட்டும், முதலில் ஒரு ஒருபால் ஈர்ப்பு
நபர் இங்கே அச்சமின்றி வாழும் சூழல் இருக்கிறதா?... உயிர் பயமின்றி வாழ
உத்திரவாதம் இருக்கிறதா?... நம் உயிர் மீது இந்த நாட்டிற்கு அக்கறையில்லை என்பதை
சமீபத்தில் நிகழ்ந்த இன்னொரு நிகழ்வின் மூலம் நாம் எளிதாக அறியமுடியும்...
“பாலீர்ப்பு வேறுபாடு காரணத்திற்காகவும்,
பாலின அடையாளத்தின் காரணமாகவும் மக்கள் வெறுத்து ஒதுக்கப்படுவதை கண்டித்தும்,
அவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும்” ஐநாவின் மனித உரிமை ஆணையம் கொண்டு வந்த
தீர்மானத்தை இந்தியா புறக்கணித்து வெளிநடப்பு செய்துவிட்டது... இந்தியா
வாக்களிக்காததால் தீர்மானம் நிறைவேறாமல் இல்லை... நம் உரிமைகளுக்கு ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்து அந்த தீர்மானத்தை வெற்றிபெற வைத்தார்கள்...
அதேவேளையில் அந்த தீர்மானத்திற்கு எதிராக 14 நாடுகளும்,
இந்தியாவை போன்று வாக்களிக்காமல் ஒதுங்கிக்கொண்ட 7 நாடுகளும் இன்னமும் நமது
உரிமைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றே பொருள்...
முதலில் அந்த தீர்மானத்தின் முன்வரைவு தாக்கல்
செய்யப்பட்டபோது பாலீர்ப்பு சிறுபான்மையினரின் நலனில் அக்கறை கொள்ளாத நாடுகளை கடுமையாக
கண்டித்து கூட வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது... ஆனால், பல கலாச்சார காவலர்களின்
புண்ணியத்தில் சம்பிரதாய தீர்மானம் என்கிற அளவுக்கு பல வார்த்தைகள் நீக்கப்பட்டு,
நீர்த்துப்போன பின்பே இறுதி வடிவமாக வெளியாகி வாக்கெடுப்பிற்கு வந்தது... இந்த
நீர்த்துப்போன தீர்மானத்தை ஆதரிக்கக்கூட இந்தியாவிற்கு மனமில்லை என்னும் நிலையை
பார்க்கும்போது, மனம் வலிக்கத்தான் செய்கிறது... இதில் இன்னொரு நகைப்பும்
இருக்கிறது... ஆம், இந்த தீர்மானத்தை கடுமையாக எதிர்த்த நாடுகளில் முக்கியமான நாடு
பாகிஸ்தான்.... பாலீர்ப்பு சிறுபான்மையினர் நலனை ஒடுக்கும் விஷயத்தில் இந்தியாவும்
பாகிஸ்தானும் ஒற்றுமையாக ஒரே கருத்தை கொண்டுள்ளது எனும்போது சிரிக்கத்தான்
முடிகிறது....
சட்டப்பிரிவு 377வை நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மறுசீராய்வு
மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது நாம் எல்லோரும் அறிந்த விஷயமே... இந்த
மறுசீராய்வு மனுவினை ஏற்பதும், தள்ளுபடி செய்வதும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியில்
கைகளில்தான் இருக்கிறது.... சமீபத்தில் புதிதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக
பொறுப்பேற்றிருக்கும் நீதியரசர் எச்.எல்.டத்து அவர்கள்தான் இதைப்பற்றிய முடிவை
அறிவிக்கக்கூடும்... எதற்காக திடீரென இவரைப்பற்றி சொல்கிறேன் என்று நீங்கள்
நினைக்கலாம்... கடந்த டிசம்பர் மாதம் “ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமே!”
என்ற தீர்ப்பை அறிவித்து மீண்டும் நம்மை எல்லாம் குற்றவாளியாக்கிய அந்த தீர்ப்பை
அறிவித்த இரண்டு நீதிபதிகளுள் ஒருவர்தான் இந்த டத்து அவர்கள்.... மீண்டும் அதே
நீதியரசர் கையில் நமது மறுசீராய்வு மனு தீர்ப்பிற்காக காத்திருக்கிறது எனும்போது,
சட்டம் நம்மை ஏற்க இன்னும் பல காலம் ஆகும் என்றே தோன்றுகிறது....
ஆகையால், இனி வரும் காலங்களில் குறைந்தபட்சம் சமுதாய
அங்கீகாரம் கிடைக்கவாவது நாம் முன்னை விட உக்கிரமாக போராடவேண்டும்....
எனக்கும் உங்கள் எல்லோரிடமும் “ஒரு நல்ல செய்தி!... ஒரு
கெட்ட செய்தி!”ன்னு சொல்ல ஆசைதான்... என்ன செய்வது, நம்மை சுற்றி நடப்பது எல்லாமே
கெட்டவையாக இருக்கும்போது, உண்மையைத்தானே சொல்ல வேண்டி இருக்கிறது.... அடுத்த முறை
நல்ல செய்தியோடு உங்களை சந்திக்க, ஆண்டவன் வழிசெய்கிறானா? என்பதை பொறுத்திருந்து
பார்ப்போம்!... நன்றி!
No comments:
Post a Comment