சகாதேவன்
கொடுத்த காபி குவளையை கையில் வைத்தபடியே களுக்கென்று சிரித்தான் ஆதித்யா... சிரித்தபோது
உண்டான அதிர்வில் கோப்பையிலிருந்து கொஞ்சம் காபி தரையில் ஊற்றிவிட்டது... அதனை மேசை
மீது வைத்துவிட்டு, சாய்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்தபிறகு இன்னும் வேகமாக சிரித்தான்....
“இப்ப
என்ன சொல்ல வர்ற?... இந்த வீட்ல பேய் இருக்குன்னு சொல்றியா? ஹ ஹ ஹா...” தொடர்ந்து
சிரித்தான்...
“ஏய்,
முதல்ல சிரிப்ப நிறுத்து.... இங்க என்ன இருக்குனல்லாம் தெரியல, ஆனால் ஏதோ நம்ம
அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒருவிஷயம் ஒன்னு இருக்குன்னு மட்டும் தெரியுது...”
சொல்லிவிட்டு கோபமாக பால்கனிக்கு சென்றுவிட்டான்...
தனது
சிரிப்பை மெல்ல மறைத்தவாறு அவன் பின்னாலேயே சென்றான் ஆதியும்... பால்கனியிலிருந்து
வெளியே நீண்டிருந்த சாலையை வெறித்து பார்த்தபடி நின்றான் சகா... அவன் முகம்
ஒருவிதமான குழப்பத்தில் ஆழ்ந்திருந்ததை கவனித்தான்...
மெல்ல
சகாவின் தோள் மீது கைவைத்த ஆதி, “இங்க பார் சகா, உன்ன ஹர்ட் பண்ணிருந்தா சாரி...
நீ படிச்சவன், பெரிய கம்பெனி ஒண்ணுல நல்ல வேலைல இருக்க, நீ போயி இப்டி ஆவி,
பேயல்லாம் நம்பலாமா?... முதல்ல நீ ஏதோ விளையாடுறன்னு நினச்சேன், உன் முகம் நிஜமாவே
பேய் அறைஞ்சா மாதிரிதான் இருக்கு... இதல்லாம் சைக்கியாட்ரிக் ப்ராப்ளம், ஒரு
கவுன்சிலிங் கொடுத்தா சரியாகிடும்...” பொறுமையாக சொன்னான்...
தன்
மீதிருந்த ஆதியின் கைகளை சட்டென உதறிவிட்டு, அவன் முகத்தை இன்னும் அதிக
உக்கிரத்துடன் நோக்கினான்... “இன்னும் நீ என்ன நம்பலைல்ல?... என்னை நீ
பைத்தியக்காரன் ஆக்கிடுவன்னுதான் மூணு மாசமா எதுவும் சொல்லல, ஆனா இப்போ நிலைமை
என்னை மீறி போயிட்டதால மட்டும்தான் நண்பன்னு உன்கிட்ட சொல்றேன்...”
“சரி
நான் புரிஞ்சுக்கறேன்.... ஆனால் நீ சொல்றது சயின்ஸ்க்கு அப்பாற்பட்ட விஷயம்டா...
இவ்ளோ நாளா இங்க இல்லாத ஆவி, மூணு மாசமா எப்டி வந்துச்சாம்?... நீ மனசளவுல ஏதோ
பாதிப்படஞ்சிருக்க சகா...” சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்தான் சகா....
“உன்கிட்ட
நான் பாடம் நடத்த சொல்லல, என்னோட உணர்வுகள புரிஞ்சுக்க சொன்னேன்... அவ்ளோதான்”
“சரி,
சொல்லு.... ஆவியை நீ பாத்தியா?....”
“இல்ல...
பாக்கல... ஆனா உணருறேன்...”
“கொஞ்சம்
புரியுற மாதிரி சொல்லுடா...”
“இந்த
மூணு மாசமா, இந்த வீட்ல என்னை தாண்டி இன்னொரு ஆளும் இருக்குறதா உணருறேன்...
என்னோடவே ஒரு ஆத்மாவும் உறவாடுற மாதிரி தோணுது...”
“எதாவது
உன்னை கஷ்டப்படுத்துற மாதிரி தோணுதா?”
“இல்ல....
எனக்கு ஒத்தாசையா சில வேலைகளை செய்யுது...”சகாவின் தொண்டை, எச்சிலை
விழுங்கிகொண்டது.... ஆதியின் முகத்தை கவனித்தான், இன்னும் அவன் எதையும் முழுமையாக
நம்பவில்லை... சகாவை பற்றிய கவலை மட்டுமே அவன் முகத்தில் தென்பட்டதாக தோன்றியது...
“சரி
வா.... முதல்ல தண்ணி குடி...” ஹாலிற்கு சகாவை அழைத்து சென்றான் ஆதி....
முன்பு
காபி கோப்பை வைக்கப்பட்டிருந்த மேசையில், இப்போது ஒரு கிளாசில் தண்ணீர்
இருந்தது... காபி குவளை கழுவி சமையலறையில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது...
தரையில் ஊற்றியிருந்த காபி சுத்தமாக துடைத்து எடுக்கப்பட்டிருந்தது.... கதவை
கவனித்தான்... உள்தாழ்ப்பால் போட்டிருக்கிறது, யாரும் புதிய மனிதர் அந்த சில
நிமிடத்திற்குள் வந்திருக்க வாய்ப்பே இல்லை....
முதல்
முறையாக ஆதிக்கு பயத்தில் வியர்த்தது.... சட்டென காற்றாடியும் சுழலத்தொடங்கியது....
தண்ணீரை
எடுத்து மட மடவென்று குடித்தான் ஆதி...
“ஆதி,
அதுமட்டுமில்ல... இங்க எனக்கு வேறவிதமான உணர்வுகளும்....”
சொல்லிக்கொண்டிருக்கும்போதே சகாவின் வெகு அருகாமையில் நெருங்கி அமர்ந்தான் ஆதி...
“போதும்...
எனக்கு எல்லாம் புரியுது... என்னடா நடக்குது இங்க?... நிஜமாவே இங்க வேற யாரும்
இல்லையா?”
“ஹ்ம்ம்...
இப்போ புரியுதா நான் என்ன சொல்ல வந்தேன்னு...”
“அடப்பாவி...
மூணு மாசமா எப்டிடா பயமில்லாம இங்க தனியா இருக்க?”
“முதல்ல
பயந்தேன்... ஆனால், அது தேவையில்லாத பயம்னு தோணுச்சு.. என்னை எந்தவிதத்திலும் அந்த
ஆத்மா தொந்தரவு பண்ணல... ஏன் இதல்லாம் நடக்குதுன்னு ஒரு ஆர்வம்தான் என்னைய இங்கயே
இருக்க வச்சுச்சு...”
“அடப்பாவி,
உன் ஆர்வத்துல கொள்ளிவைக்க.... அதுக்காக ஆவி கூட குடித்தனம் நடத்துறியா?” மெல்ல
சகாவின் காதருகே ரகசியம் போல கிசுகிசுத்தான்...
சமையலறைக்குள்
பாத்திரங்கள் உருட்டும் சத்தம் கேட்டது.... ஆதி திடுக்கிட்டு, நிதானமானான்...
“இப்ப
என்னடா நடக்குது?”
“தெரியல...
சில நேரம் டிபன் கூட செஞ்சு தந்திடும்...” சகா அவ்வளவு எளிதாக சொன்னதன்
பின்னணியில், மூன்று மாத அனுபவம் தெரிந்தது...
“டிபன்
செய்யுதா?... என் தலையே சுத்துதுடா சாமி...” தலையை பிடித்துக்கொண்டான்...
“ஏய்... இப்போ நான் உன்கிட்ட சொல்ல வந்தது இந்த
விஷயம் பத்தி மட்டுமில்ல... இதுல இன்னொரு பெரிய சிக்கலும் இப்போ கொஞ்ச நாளா
வந்திருக்கு...”
“இதுக்கு
மேலயும் இன்னொரு சிக்கலா?... என்னடா அது?... இன்னொரு ஆவி லஞ்ச் செஞ்சு தருதா?”
“அது
இல்லடா... மூணு நாளைக்கு முன்னாடி பிளானட் ரோமியோல ஒரு பையன்ட்ட சாட் செஞ்சு
வீட்டுக்கு வரசொன்னேன்...”
“எதுக்குடா?”
ஆர்வத்தில் கேட்டான் ஆதி...
“வீட்டுக்கு
வெள்ளை அடிக்க.... கேக்குறான் பாரு கேனத்தனமா கேள்வி... பிளானட் ரோமியோலேந்து
பெயின்ட் அடிக்கவா வருவானுக, எல்லாம் அதுக்குத்தான்...”
“வீட்டுக்குள்ள
ஆவிய குடித்தனம் வச்சுகிட்டு, இந்த கூத்தும் நடக்குதா?”
“அதாண்டா
பிரச்சினையே!... இதோ பாரு, இவன்தான் நான் சொன்ன பிளானட் ரோமியோ பார்ட்டி..”
சொல்லிவிட்டு முந்தையநாள் நாளிதழை விரித்து அதில் வந்திருந்த ஒரு செய்திக்கு
கீழிருந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தை காட்டினான்... ஆள் ஆதி எதிர்பார்த்ததை விட
அழகாகவே தெரிந்தான்... கண், காது, மூக்கு என்று அளவெடுத்த பிறகு, எதேச்சையாக அந்த
படத்திற்கு மேலிருந்த செய்தியை கவனித்தான்...
“லாரியில்
மோதி இளைஞர் பலி! – பாரதியார் நகரில் பரிதாபம்...”
“என்னடா
இது?... இவன் இறந்துட்டானா?” ஆதி அதிர்ச்சியில் கேட்டான்...
“ஆமா...
இவன் மட்டுமில்ல... இந்த வீட்டுக்கு என்ஜாய் பண்றதுக்காக நான் கூட்டிட்டு வந்த
மூணு பேர் இதுவரைக்கும் அடுத்த நாளே இறந்திருக்காங்க... முதல்ல இதை எதேச்சையான
நிகழ்வா நினச்சேன்... ஆனால், மூணு பேருமே இந்த தெருவை தாண்டி போகல.... நான் என்ன சொல்ல
வரேன்னு உனக்கு புரியும்னு நினைக்குறேன்” சகாவின் கண்கள் மிரட்சியில்
மிளிர்ந்தது....
அந்த
நொடிவரை சகாவின் வெகு அருகாமையில் அமர்ந்திருந்த ஆதி, சட்டென விலகி அமர்ந்தான்...
மெல்ல எழுந்து சுற்றிலும், முற்றிலும் கவனித்தான்...
தனது
இரண்டு கைகளையும் ஒருங்கே இணைத்து கைகூப்பியவாறே, “நீங்க ஆவியா என்னன்னு எனக்கு
தெரியல.... ஆனால், ஒருவிஷயத்த மட்டும் தெளிவா சொல்லிக்கறேன்.... சகாதேவன் என்னுடைய
நண்பன் மட்டும்தான்... இன்னும் சொல்லனும்னா எனக்கு அவன் அண்ணன் மாதிரி....”
சொல்லிவிட்டு சகாவை பார்த்து, “சரி சகா அண்ணா, நான் கிளம்புறேன்.... உங்களுக்கு
நான் அப்புறமா போன்ல பேசுறேன்....” என்றபடியே மெல்ல ஒவ்வொரு அடியையும் நிதானமாக
எடுத்துவைத்து அங்கிருந்து வெளியேறினான் ஆதி...
லிப்டில்
போக அஞ்சி, நான்கு மாடிகளையும் படிகளில் இறங்கி கடந்தான்... அந்த தெருவை கடக்க
மட்டும் அவன் எடுத்துக்கொண்ட நேரம், ஒரு மணி நேரத்திற்கு மேல்.... ஒருவழியாக தனது
வீட்டை அடைந்தபிறகுதான் அவனுக்கு உயிரே மீண்டதாக உணர்வு...
***************
ஆதி
சென்றபின் கதவை தாழிட்டபிறகு இருக்கையில் அமர்ந்தான் சகா... ஆதியின் பதற்றத்தை
நினைத்து தனக்குள் சிரித்துக்கொண்டான்... தன்னை சுற்றி ஆவி உலாவிக்கொண்டிருக்கிறதை
அறிந்தும் சகாதேவனால் சிரிக்க முடிவதற்கு காரணம், அது மூன்று மாத கால அனுபவத்தின்
வெளிப்பாடுதான் எனலாம்...
இன்றைக்கு
போல முதன்முதலில் ஏதோ ஒரு அமானுஷ்யம் தன்னை சுற்றி நிகழ்வதாக உணர்ந்தபோது,
பயத்தில் மயக்கமே வந்துவிட்டது சகாவிற்கு...
இந்த
மூன்று மாதங்களும், தான் செய்ய வேண்டிய வேலைகள் ஏற்கனவே
முடித்துவைக்கப்பட்டிருப்பதை கண்டு குழம்பினான்... தூக்கம் களைந்து எழுந்து
வரும்போதே ஹாலில் ஆவி (?) பறக்க காபி தயாராக வைக்கப்பட்டிருந்ததுதான் முதல்
குழப்பம் அவனுக்குள்....
“தூக்கத்துல
எழுந்து நடக்குறது ஓகே... இப்டி காபியல்லாம் நான் போடுறேனா?... எனக்கு என்னாச்சு?”
என்கிற ரீதியில் தனது மனநலத்தின் மீதுதான் அவனுக்கு சந்தேகம் எழுந்தது... அதன்
பிறகு சில நாட்கள் தூக்கத்தை மறந்தான், விடியும் வரை விழித்திருந்து ஹாலிற்கு
வந்தபோதும் அதே குவளை, அதே காபி... என்ன நடக்குது?... நிச்சயம் தன் மீது தவறில்லை
என்பதை உணர்ந்தபோது, எழுந்த கேள்வியான “அப்போ யார்?” தான் முதலில் பயமாக
வெளிவந்தது...
மெல்ல
மெல்ல ஒரு அமானுஷ்ய நிகழ்வு நிகழ்வதை ஊர்சித படுத்தியபிறகு, அதனை கண்காணிக்க
தொடங்கினான்... இணையத்தில் நிறைய தேடினான்... வெள்ளை சேலை கட்டிக்கொண்டு உருவம்
எதுவும் வரவில்லை, நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு ஜன்னல் தடதடக்க காற்று வீசவில்லை,
‘ஜல் ஜல்’ கொலுசொலி இல்லை, மல்லிகையின் மணம் இல்லை... ஆவிகளுக்கே உரிய எந்த
அம்சமும் வெளிப்படவில்லை, அப்போ என்னதான் இது?...
அது
என்னவாக இருந்தாலும், தன்னை தொந்தரவு செய்யவில்லை என்பது அவனுக்குள் உருவான ஒரு
நிம்மதி... ஆனால், அந்த நிம்மதி கடந்த சில நாட்களாக பழையபடி குழப்பமாக உருமாறியது,
அந்த குழப்பத்தில் ஒரு மெல்லிய பயமும் கூட படர்ந்திருந்தது...
சமூக
வலைத்தளம் வழியாக, உறவுக்கு அழைக்கப்பட்ட மூன்று நபர்கள், தன்னை சந்தித்த ஒரு மணி
நேரத்திற்குள், அந்த தெருவை தாண்டுவதற்கு முன்பே இறந்த சம்பவம் அதுவரை இருந்த
இயல்புத்தன்மையை மீறி, அவனுக்குள் பயத்தை உண்டாக்கியது...
அதுமட்டுமல்லாமல்
ஆதியிடம் சொல்லாமல் விட்ட ஒரு சம்பவமும் உண்டு... மூன்று முறை உறவுக்காக நபர்கள்
அழைக்கப்பட்டபோதும், அந்த ஆவியின் இருத்தலை கொஞ்சம் அதிகமாகவே உணர்ந்தான் சகா...
அன்றைய இரவு முழுவதும் ஒரு விசும்பல் சத்தமும், மெல்லிய அழுகையும் வீட்டின் ஏதோ
ஒரு பகுதியிலிருந்து ஒலித்தபடியே இருந்தது... மூச்சு விடும் சப்தம் கூட
ஆக்ரோஷமாகவே அவன் காதுகளில் ஒலித்தது.... தன் அறைக்குள் திடீரென நிலவிய குளிரான
தட்பவெட்பத்திற்கு காரணமும் கூட அவனுக்கு புரியவில்லை... இதற்கெல்லாம்
விடைதெரியாமல், அன்றைய நாளிதழை புரட்டியபோதுதான் முந்தைய நாள் தான் சந்தித்த அந்த
நபர் விபத்தில் இறந்ததாக செய்தி அச்சிடப்பட்டிருந்தது....
அப்படியானால்
முதல் இரண்டு முறை சந்தித்த நபர்கள் என்ன ஆனார்கள்?... அலைபேசி எண், முகவரியை
கொண்டு விசாரிக்க... அதிர்ச்சி மேலும் இரட்டிப்பானது... ஆம், அந்த இளைஞர்களும் அதே
தெருவில் ஒரு விபத்தில், தான் சந்தித்த அதே நாளில் கோரமாக அடிபட்டு இறந்ததாக
அறிந்தான்...
மூன்று
முறையும் அனுபவித்த அமானுஷ்ய சத்தங்களையும், இந்த மூன்று இறப்புகளையும் இணைத்து
பார்க்காமல் சகாவால் இருக்கமுடியவில்லை...
தன்னை
ஒன்றும் செய்திடாத அந்த சக்தி ஏன் தன்னுடன் இருந்தவர்களை கொல்லனும்?... இந்த
குழப்பம்தான் ஆதித்யாவை அழைக்க சொன்னது.... ஆதியும் முதலில் சிரித்து, பிறகு
பயந்து ஓடி, சகாவிற்கு எவ்விதமான ஆலோசனையும் கிடைக்கவில்லை என்பதுதான்
நிதர்சனம்....
மூன்று
நாட்கள், அந்த குழப்பத்தோடு கழிந்தது.....
நான்காம்
நாள், ஆதியிடமிருந்து அழைப்பு வந்தது....
“சொல்லு
ஆதி...”
“சகா
அண்ணா போனை லவுட் ஸ்பீக்கர்’ல எதுவும் போடலையே?”
“ஏய்
லூசு, என்னடா அண்ணான்னு.... ஒழுங்கா பேசு...”
“பரவால்லிங்க
அண்ணா.... இன்னிக்கு கண்டோன்மன்ட் பக்கம் நீங்க வரணும், ஒரு முக்கியமான ஆளை
பார்க்கப்போறோம்...”
“யாரடா?”
“நீங்க
வாங்கண்ணா, நேர்ல சொல்றேன்...”
இருவரும்
கண்டோன்மன்ட் அருகே சில வளைவு நெளிவுகளை தாண்டி ஒரு அடுக்குமாடி குடியிருப்பை
அடைந்தனர்....
“இங்க
யாரடா பார்க்கப்போறோம்?” குழப்பத்தில் கேட்டான் சகா....
“ரன்பீர்
கபூர் தங்கிருக்காராம், அவரைப்பார்க்க...”
“நெஜமாவா?”
அப்பாவியாக கேட்டான்...
“அடப்பாவி
எனக்கு இருக்குற பயம் கூட உனக்கில்லையா?... உன் பிரச்சினை சம்மந்தமாதான் ஆவி
பற்றிய ஆராய்ச்சி பண்றவர பாக்கப்போறோம்!”
“ஓஹோ....
சரி சரி... எப்டிடா மூனே நாள்ல இப்டி ஒரு ஆளை கண்டுபிடிச்ச?”
“ஆவிகள்
பற்றிய கதைன்னா இப்டி ஆவிகளை பற்றி ஆராய்ச்சி பண்றவர்கிட்ட கூட்டிட்டு
போறதுக்காகவே ஒரு நண்பன் இருப்பாண்டா, உன் கதைல அது நான்தான்... அதனால மேற்கொண்டு
பேசி இம்சை பண்ணாம காலிங் பெல்லை அழுத்து” பேசிக்கொண்டே அந்த வீட்டின் வாசல் வரை
வந்துவிட்டனர்...
அழைப்பு
மணியை அடித்த சில மணித்துளிகளில் கதவு திறக்கப்பட்டது... ஒரு வாட்ட சாட்டமான
இளைஞன் கதவை திறந்தான்... ஒரு சாயலில் ஆதி சொன்னதைப்போல ரன்பீர் கபூர் சாயலில்
இருப்பதுபோலவே சகாவிற்கு தோன்றியது...
“யார்
சார் வேணும்?”
“நான்தான்
ஆதித்யா, நேத்து போன்ல பேசுனேனே!!”
“ஓஹோ...
வாங்க வாங்க, உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்...” கதவை முழுமையாக
திறந்து இருவரையும் உள்ளே அழைத்தான்...
இருவரையும்
இருக்கையில் அமரவைத்துவிட்டு, “ஒரு நிமிஷம் இருங்க, குளிச்சுட்டு வந்திடுறேன்...”
சொல்லிவிட்டு புதியவன் உள்ளே சென்றுவிட்டான்...
“இந்த
பையன் யாருடா?... நாம பாக்க வந்த ஆளோட பையனா?”
“ஏய்
லூசு, இவன்தான் நாம பாக்க வந்த ஆளு... முகிலன்னு பேரு... ஆவிகள் பற்றிய ஆராய்ச்சிய
பத்து வருஷத்துக்கு மேல பண்ணிட்டு இருக்கான்... விகடன்ல கூட இவனைப்பற்றி
ஆர்டிக்கல் வந்ததே, பாக்கலையா?”
“ஓஹோ
அப்டியா?... நடக்க ஆரமிச்ச உடனேயே ஆவிகள பற்றி ஆராய்ச்சி பண்ண போய்ட்டான் போல...
ரொம்ப சின்ன பையனாட்டம் தெரியுது” சகா எதார்த்தமாகவே சொன்னான்... ஆவிகளை பற்றிய
ஆராய்ச்சி செய்பவர் எனும்போது, மார்பை நோக்கி வழியும் தாடியோடு, பெரிய கண்ணாடி
போட்டுக்கொண்டு, முன்வழுக்கை, நரைத்தமுடி சகிதம் ஜிப்பா போட்டுக்கொண்டு ஒரு
வயதானவரை கற்பனை செய்திருந்த சகாவிற்கு இப்படியோர் இளைஞனின் இருப்பு ஆச்சர்யத்தை
அளித்ததில் வியப்பொன்றும் இல்லை...
வீட்டை
சுற்றிலும் கவனித்தான்... அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது, எந்த இடத்திலும் தூசி
பெயரளவுக்கும் கூட இல்லை... எழுந்துசென்று புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த
ராக்கை நோட்டமிட்டான்...
பிபி
பாய்ன் எழுதிய “திஸ் வோர்ல்ட் அண்ட் தட்”, டிமான்ட் கார்னே’வின் “பான்ட்டம்ஸ் ஆப்
த லிவிங்” என்று வரிசைகட்டிய ஆவிகள் பற்றிய புத்தகங்களின் தலைப்புகளை
பார்க்கும்போதே சகாவிற்கு லப்டப் எகிறியது....
“இந்த
புக் பார்த்திங்களா, இது புகழ்பெற்ற நியூரோ சர்ஜன் டாக்டர் கென்னத் வாக்கர்
எழுதுனது....” ஒரு புத்தகத்தை எடுத்து நீட்டினான் முகிலன்.... சட்டென திடுக்கிட்டு
நிதானித்தான் சகா, “இல்ல பரவால்ல...” சொன்னபடியே வியர்வையை துடைத்துக்கொண்டு ஆதியின்
அருகில் சென்று அமர்ந்தான்...
“ஏன்
முகிலன் நீங்க வேற, ஏற்கனவே ஆவி பத்திய பயத்துல இருக்கான்... இதுல இன்னும் படிச்சு
இவன் குழம்பனுமா?” சிரித்தான் ஆதி...
“இல்ல...
புக்ஸ் எல்லாம் ரொம்ப ஆர்வமா பாத்திட்டு இருந்ததால, இதல்லாம் படிப்பாரோன்னுதான்
கொடுத்தேன்... ரிலாக்ஸ் சகா...” சினேகமாய் பேசினான்...
“சரி
விஷயத்துக்கு வரலாம் முகிலன்... நேத்து நான் சொன்ன விஷயங்கள்தான், அதைவச்சு நீங்க
என்ன முடிவுக்கு வந்திருக்கிங்க?” நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டான் ஆதி...
“நீங்களே
ஒரு முடிவுக்கு வந்ததால்தான என்னைய பாக்க வந்திங்க?... ஒருவேளை குழப்பம்
இருந்திருந்தா நீங்க ஒரு மனநல மருத்துவரை பார்க்க போயிருப்பிங்க”
“சரிதான்...
ஆனாலும், ஆவிகள நம்ப ஆறாவது அறிவு கொஞ்சம் கஷ்டப்படுது... பல வருஷங்களா சைன்சை
மட்டுமே நம்புறதால திடுதிப்புன்னு அறிவியலை மீறுன ஒரு விஷயத்தை நம்ப கஷ்டமா
இருக்கு முகிலன்...” வாயை திறந்து கேட்டுவிட்டான் சகா...
“உங்க
குழப்பம் நியாயமானதுதான்... சயின்ஸ் சொன்னதை மட்டுமேதான் ஏற்கனும்னா, அறிவியலுக்கு
அப்பாற்பட்டு நாம பாக்கும் பெர்முடா ட்ரையாங்கில், ப்ளாக் ஹோல் இதுக்கல்லாம்
காரணம் என்னன்னு சொல்வீங்க?.... காணாமல் போன மலேசிய விமானத்தை கூட இன்னும் நம்ம
அறிவியலால கண்டுபிடிக்க முடியலையே?”
“அப்போ
இதுக்கல்லாம் காரணமும் ஆவிகள், பேய்கள்னு சொல்றீங்களா?” ஆதி கேட்டான்...
“இல்ல,
அப்டி சொல்லல... இன்னும் அறிவியலால நிரூபிக்க முடியாத விஷயங்கள் உலகத்தில் நிறைய
இருக்கு... அதில ஒண்ணுதான் ஆவின்னு சொல்றேன்... ஆவிகள ப்ரூவ் பண்ற அளவுக்கு
இன்னும் சயின்ஸ் டெக்னாலஜி வளரலன்னு சொல்லவரேன்...” தெளிவாக பேசினான் முகிலன்...
“அப்போ
இறந்தபிறகு எல்லாரும் ஆவியாவாங்கன்னு சொல்ல வரீங்களா?”
“எல்லாரும்
இல்ல... ஏதோ ஒரு நிறைவேறாத எண்ணம் நம்ம ஆத்மாவை அலையைவைக்கும்... ஆவிகளில் நிறைய
வகைகூட இருக்கு... live apparitionsன்னு
சொல்லப்படும் ஆவிகள் உயிரோட இருக்குறப்போவே ஆத்மா மட்டும் பிரிஞ்சு திரியும்
ஆவிகள், இறந்தபிறகு ஏதோ ஒரு நோக்கத்திற்காக ஒரு குறிப்பிட்ட
நபரை சுற்றி சுற்றி வருவது crisis apparitionsன்னு பேரு, குறிப்பிட்ட
இடங்களில் மட்டும் வாழற ஆவி, பாழடைந்த வீடுகளில் மட்டும் வசிக்கும் ஆவின்னு
ஜி.என்.எம் டைரல்னு ஒரு பிரபல ஆராய்ச்சியாளர் பக்கம் பக்கமா எழுதிருக்கார்...”
பாடம் நடத்தினான் முகிலன்...
“ஆனால்,
இதல்லாம் சைன்ஸ் நம்புதா?” இன்னும் அறிவியலின் வாலை பிடித்துக்கொண்டு தொங்கினான்
சகா....
“நான்
முன்னமே சொன்னது போல சயின்ஸ் கண்ணாடியை கழட்டிட்டு இதை பார்க்கணும்... ஒரு
அமானுஷ்ய உருவத்தை பார்த்தா அதை ஹாலுசினேஷன்னு மருத்துவ உலகம் சொல்லுது... ஆனால்,
ஹாலுசினேஷனை தாண்டிய உருவங்கள் பலருக்கும் தென்பட்டதுண்டு... அதை நம்ம சயின்ஸ்
கண்டுக்கறது இல்ல... அமுக்குவான்னு ஒரு ஆவி பற்றி கேள்விப்பட்டிருக்கிங்களா?”
“இல்ல”
இருவரும் ஒன்றாக சொன்னார்கள்...
“நாம
நல்லா தூங்கிட்டு இருக்குறப்போ யாரோ நம்ம மேல ஏறி அழுத்துற மாதிரி இருக்கும்,
கழுத்தை நெறிக்குற மாதிரி உணர்வு உண்டாகும்.... எல்லாத்தையும் நம்மால
உணரமுடியும்... ஆனால், வாய் பேசமுடியாது, கை கால்களை அசைக்க முடியாது... அப்டியே
ஜடம் மாதிரி கிடப்போம்... இந்த உணர்வு நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்...
நீங்க அனுபவிச்சிருக்கிங்களா?”
“ஹ்ம்ம்...”
என்றனர் இருவரும்...
“இதை
நாங்க அமுக்குவான் ஆவின்னு சொல்றோம், டாக்டர்ஸ் இதுக்கு பேரு ஸ்லீப் பாரலைசிஸ்ன்னு
சொல்றாங்க.... ஆனால், பலருக்கும் இந்த உணர்வு ஒருசில குறிப்பிட்ட இடத்தில்
தூங்குறப்போ மட்டும் உணரமுடியுது... அந்த இடங்களில் நான் ஆய்வு செஞ்சப்போ,
கட்டாயம் ஏதோ ஒரு ஆவி பற்றிய கதை அங்க எனக்கு கிடைச்சுருக்கு.... ஆக, சயின்ஸ் இதை
அமுக்குவான்னு ப்ரூவ் பண்றவரைக்கும், ஸ்லீப் பாரலைசிஸ்ன்னு மருத்துவம் சொல்றத நாம
ஏத்துதான் ஆகணும்... புரியுதா?” இருவரையும் பார்த்து சகஜமாக கேட்டான் முகிலன்...
தலையசைத்த
இருவரும் முன்பைவிட அதிக குழப்பத்தில் இருந்ததாக தெரிந்தது... குழப்பத்தை தாண்டிய
பயமும் அவர்கள் முகத்தில் பரவலாக தென்பட்டது....
“சரி,
உங்க விஷயத்துக்கு நான் வரேன்... ஆதித்யா சொன்னத வச்சு பாக்குறப்போ, உங்க கூட
இருக்குறது crisis apparition வகை
ஆவியாதான் இருக்கணும்... ஏதோ உங்ககிட்ட அது எதிர்பார்க்கனும் அல்லது அதனோட இருப்பு
உங்களுக்கு அவசியம்னு அது நினைக்கலாம்... இந்த வகை ஆவிகள்கிட்ட பேசுறது ரொம்ப
சுலபம்... அதுகிட்ட பேசிப்பாருங்க, அப்புறம் அதை என்ன பண்ணலாம்னு நாம முடிவு
பண்ணுவோம்!”
“பேசுறதா?...
அதை பாக்கவே முடியலையே?... ஓஜா போர்ட்’னு சொல்வாங்களே அது மூலம் பேசட்டுமா?”
“ஓஜா
போர்டல்லாம் பழைய ஆவிகளுக்கு ட்ரை பண்றது... அவ்ளோ சிரமப்படவல்லாம் வேணாம்... உங்க
வீட்ல எந்த நேரத்துல அந்த ஆவி உங்கள சுத்தி இருக்குன்னு நோட் பண்ணுங்க... பொதுவா ஆவிகள்
நம்ம பக்கத்துல இருக்குறப்போ சட்டுன்னு டெம்பரேச்சர் குறையும், கொஞ்சம் ஜில்லுன்னு
இருக்கும்.... அந்த நேரத்துல உங்க மனச ஒருநிலைபடுத்துங்க... அந்த ஆவியத்தவிர வேற
எந்த எண்ணமும் மனசுக்குள்ள இருக்கக்கூடாது.... அப்போ பேசிப்பாருங்க, நிச்சயம்
உங்களுக்கு எல்லா விடையும் கிடைக்கும்...” கை கொடுத்து வழியனுப்பி வைத்தான்
முகிலன்....
ஆவியுடன்
பேசணுமா? ஒருவித பயத்துடனே வீட்டை அடைந்தான் சகாதேவன்...
தொண்டை
வரண்டிருந்தது, தண்ணீரை எடுத்து மடக்கென்று வாயில் ஊற்றிக்கொண்டான்... இதயம் பலமாக
துடித்தது, வியர்வை காதோரம் வழிந்தது....
அதே
படபடப்புடன் தன் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டான்... படுக்கையில்
ஒருக்களித்து படுத்தவாறு கண்களை மூடிக்கொண்டு பயத்தை போக்க எத்தனித்தான்...
காற்றாடி சுழன்றபோதிலும், வியர்வை அருவி போல ஊற்றிக்கொண்டே இருந்தது....
பயத்தில்
இருமல் வந்துவிட்டது.... ஏதோ ஒரு சத்தம் கேட்க, திரும்பி பார்த்தான்... குவளையில்
தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது... வியர்வையை தாண்டி மெல்லிய சில்லிடல் அவன் மேனியை
தழுவியது... தன் வெகு அருகாமையில் தான் அந்த ஆவி இருக்கிறது....
முகிலன்
சொன்னது நினைவுக்கு வந்தது....
கண்களை
மூடிக்கொண்டு தன் எண்ணங்களை ஒருமுகப்படுத்த முயற்சித்தான்... முதலில் எண்ணங்கள்
சிதறினாலும், ஓரிரு நிமிடங்களில் எண்ணங்கள் ஒருங்கிணைந்தன....
“யார்
நீ?... உனக்கு என்ன வேணும்?” பயத்துடன் பதிலை எதிர்நோக்கி காத்திருந்தான்....
மெல்லிய
விசும்பலுக்கு பிறகு பதில் குரல் கேட்டது... கிணற்றுக்குள் இருந்துகொண்டு மண்
பானையை தலையில் கவிழ்த்துக்கொண்டு பேசுவது போல பேச்சின் குரல் ஒலித்தது....
“நான்தான்
மகேந்திரன் இளவரசே!... என்னை மறந்துவிட்டீர்களா?”
“மகேந்திரனா?...
எந்த மகேந்திரன்?”
“தங்கள்
அரசவைப்புலவரின் மைந்தன் மகேந்திரன்... என்னைப்பற்றிய எந்த நிகழ்வும் தங்களுக்கு
நினைவில்லையா?”
“ஏய்
யாருப்பா நீ?... அரசவை, புலவர், இளவரசுன்னு என்னென்னமோ சொல்ற?... எப்போ நாம மீட்
பண்ணோம்...”
“முற்பிறவியில்
நாம் இருவரும் காதலர்களாய் வாழ்ந்தோமே... தங்களின் தந்தையாரும் நம் மாமன்னருமான
வியவர்மர் நமது காதலை மறுதலித்துவிட்டு, தளபதியார் மாரப்பனிடம் நம் உயிரை
பறிக்கும்படி ஆணையிட்டாரே, நினைவில்லையா?... என் தலையை துண்டித்து துடிதுடிக்க
கொன்றபோது தாங்கள் கதறி அழுததை பிறவிகள் கடந்தும் என்னால் மறக்கமுடியவில்லை
இளவரசே!.. பின்னர் தாங்களும் அந்த தண்டனையிலிருந்து தப்பவில்லை என்றும்,
உங்களுக்கு விஷம் கலக்கப்பட்ட உணவு பரிமாறி கொன்றதாகவும் அறிந்தபோது
துடிதுடித்துப்போனேன்...” விசும்பல் சத்தம் அழுகையாக உருமாறியது....
அதுவரை
கண்களை மூடி நினைவுகளை ஒருங்கிணைத்த சகாதேவன், சட்டென கண்ணை திறந்தான்... தன் கண்
முன்னே பனி படர்ந்த உருவம் போல காற்றோடு அசைந்தாடியபடி நின்றது ஒரு உருவம்...
உற்றுநோக்கினான், காற்றில் அலைபாய்ந்த கண்கள் மெலிதாக கண்ணீர் சிந்துவதை போலவே
தெரிந்தது....
“சரி,
இப்போ ஏன் வந்த?... அது போன பிறவியோட முடிஞ்ச விஷயமாச்சே...”
“இல்லை
இளவரசே... நீங்களும் நானும் இணையவேண்டும் என்பது இறைவனின் சித்தம்.... அதை
இப்பிறவியிலும் நடக்க விடாமல் செய்தது யாரோ செய்த சதியாக தோன்றியது... மூன்று
மாதத்திற்கு முன்பு அகால மரணமடைந்தேன், அந்த விபத்தும் கூட ஏதோ வஞ்சக எண்ணத்தோடு
திட்டமிடப்பட்டது போலவே தோன்றியது.... நாம் இருவரும் சந்திக்கும் முன்பே நம்மை
கொல்ல ஏதோ சதி நடந்திருக்கிறது... அதனால்தான் தங்களுக்கும் ஏதேனும் ஆபத்து
நேருமென்ற அச்சத்தில் தங்களை ஆபத்துகளிலிருந்து மீட்க, உங்களுடனேயே
இருக்கிறேன்...”
“நீ
பண்றதல்லாம் பார்த்தா என்னை ஆபத்திலிருந்து மீட்க வந்தது போல தெரியல, ஆபத்தை
உருவாக்க வந்தது போல இருக்கு”
“நான்
என்ன செய்தேன் இளவரசே?”
“என்னோட
நெருக்கமா இருந்த மூணு பசங்கள கொன்னிருக்க, நாளைக்கே ஒரு கோபத்துல என்னையும்
கொல்லமாட்டன்னு என்ன நிச்சயம்?”
“வாய்
வார்த்தையாக கூட அப்படி சொல்லிவிடாதீர்கள்... தாங்கள் சொல்வதைப்போல் யாரையும் நான்
கொல்லவில்லை... மற்ற சிலருடன் தாங்கள் உறவாடும்போது நான் வருத்தமுறுவது
உண்மைதான்... ஆனால், உயிரை எடுக்கும் அளவிற்கல்லாம் எனது கோபம் இருந்ததில்லை...
என் ஆற்றாமையை நினைத்து அழுவதுண்டு, அதைத்தாண்டி நான் எதையும் செய்யவில்லை இளவரசே”
சட்டென
சகாவின் அலைபேசி அலற, அவன் நினைவு சிதறியது... எண்ணங்கள் திசைக்கொன்றாக களைய,
ஆவியை காணவில்லை, எந்த குரலும் ஒலிக்கவில்லை... அதுவரை தான் உணர்ந்த உணர்வுகள் வெறும்
பிம்பமா? கனவா? நிஜமா? என்று குழப்பம்
வரும் அளவிற்கு சூழல் மாறிவிட்டிருந்தது....
அகலாத
குழப்பத்துடன் இரவை கழித்தான்....
விடிந்தது...
முகிலன் வீட்டிற்கு விரைந்தனர் இருவரும்...
எல்லாவற்றையும்
கேட்ட முகிலன், ஒரு மென்முறுவலை உதிர்த்துக்கொண்டு பேச்சை தொடங்கினான்...
“ரொம்ப
இன்ட்ரஸ்டிங்ல?”
“என்ன
சார் சொல்றிங்க?... இவன் பயத்துல அப்டியே ஆடிப்போய் நிக்குறான், உங்களுக்கு
இன்ட்ரஸ்ட்டா இருக்கா?”
“இல்ல
ஆதித்யா... போன பிறவியோட தொடர்பா ஆவிகள் வர்றதா கேள்விப்பட்டிருக்கேன், முதல்
முறையா பாக்குறேன்... அதான்...”
“சரி
சார்... இப்போ என்ன பண்ணலாம்?”
“ஆவி
பறக்க ஒரு டீ சாப்பிடலாமா?” சிரித்தான் முகிலன்...
“இப்டியே
போனா எங்க ஆவியும் கூடிய விரைவில் பறந்திடும்னு நினைக்குறேன்”
“கூல்
கூல்... ஒன்னும் கவலை வேணாம், அதை நான் விரட்டிடுறேன்....”
“அது
இருக்கட்டும் சார்... ஆவிகள் பொய் சொல்லுமா?... அந்த மூணு பேரை கொன்னது தான்
இல்லைன்னு சொல்லுதே ஆவி, அப்போ அது எப்டி நடந்திருக்கும்?” சகா இன்னும் குழப்பத்திலிருந்து
மீளவில்லை...
“மனிதர்களோட
எச்சம்தானே ஆவிகள், அவைகளும் பொய் சொல்ல வாய்ப்பிருக்கு... தான் நினைச்சத எந்த
எக்ஸ்ட்ரீம்’க்கும் போயி அதுக சாதிச்சிடும், மனிதர்களைவிட கொஞ்சம் உக்கிரமாவே அதை
செய்யும்... சோ, ஒரு கட்டத்துல உங்கள கொல்றதுக்கும் கூட வாய்ப்புகள் இருக்கு”
சகா
திடுக்கிட்டான்.... பேச்சே வரவில்லை... ஒருபுறம் ஆவியின் வார்த்தைகளில் உண்மை
இருப்பது போல தோன்றினாலும், மறுபுறம் அந்த உண்மைத்தன்மையை நிரூபிக்க தன் உயிரை
பணயம் வைக்க அவன் விரும்பவில்லை...
“எப்டி
சார் அதை துரத்துறது?” முடிவுக்கு வந்துவிட்டான்...
“நாளைக்கு
நான் உங்க வீட்டுக்கு வரேன், முகிலனா இல்ல... நீங்க வழக்கமா குஜாலா இருக்குறதுக்கு
கூப்பிடுற பையனா வரேன்... கொஞ்சம் சில்மிஷம் செய்றாப்ல நடிப்போம்... அந்த ஆவியோட
கான்சண்ட்ரேஷன், முழுசா என் பக்கம் திரும்புற வரைக்கும் அங்க இருப்பேன்... எப்போ
அது உங்களைப்பற்றிய எண்ணங்களை விட்டு என் மீது தன்னோட எண்ணங்களை படறவிடுதோ, அந்த
ஒரு புள்ளி போதும்.... அதைவச்சு மொத்தமா நான் எப்பேற்பட்ட ஆவியையும்
பிடிச்சிடுவேன்... ஆவிகளோட எண்ணத்த திசை திருப்புறதுதான் கொஞ்சம் கஷ்டம், உங்க
விஷயத்துல அந்த ஆவி ரொம்ப சீக்கிரம் என்னை கவனிக்கும்னு தோணுது.... அரை மணி நேரத்துல
ஆவிய புடிச்சு என் வீட்டுக்கு கொண்டுவந்திடுறேன், அப்புறம் அதுக்கு செய்ய வேண்டிய
விஷயங்களை செஞ்சு, மொத்தமா அதை இல்லாம செஞ்சிடுறேன்...” விளக்கமாக
சொல்லிமுடித்தான் முகிலன்...
ஆச்சர்யமாக
கவனித்தனர் இருவரும்...
“எப்டி
சார் ஆவியை பிடிப்பிங்க, அதை இல்லாம பண்ணுவீங்க?” ஆதி ஆர்வத்துடன் கேட்டான்....
“அது
உங்களுக்கு அவசியமில்லாத விஷயம்.... அதை முழுசா நீங்க புரிஞ்சுக்க பத்து வருஷம்
என்கூட ரிசர்ச் பண்ணனும், வரீங்களா?”
“ஆள
விடுங்க சாமி.... நாலு நாளைக்கே நாக்கு தள்ளுது, இதுல பத்து வருஷமாம்... சரி,
நாங்க கிளம்பறோம்.... நாளைக்கு வந்திடுங்க...” சொல்லிவிட்டு இருவரும்
புறப்பட்டனர்....
மறுநாள்
காலை, வழக்கத்தைவிட பதற்றமாக காணப்பட்டான் சகா...
வழக்கம்போல
காபி மேசை மீது இருந்தது... கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது... மூன்று மாதம்
பழகியதால், ஆவியை கூட விட்டுப்பிரிய மனம் வரவில்லை என்பது அவனுக்கே கொஞ்சம்
முட்டாள்த்தனமாகத்தான் பட்டது... ஆனாலும், வேறு வழியில்லை...
குளித்து
முடித்துவிட்டு, உடைகளை மாற்றி, அலங்கார அணிவகுப்புகளை உடல் முழுக்க பரவவிட்டு
முகிலனுக்காக காத்திருந்தான்....
அழைப்பு
மணி அடித்தது...
முகிலன்
தான்...
“உள்ள
வாங்க...” இருக்கையில் அமரவைத்தான்...
சொகுசாக
இருக்கையில் அமர்ந்த முகிலன், வீட்டை முழுவதும் நோட்டமிட்டான்... ஒருமாற்றமும்
தெரியவில்லை...
“காபி
சாப்பிடுறீங்களா?” சகா கேட்டான்...
“ஸ்வீட்
சாப்பிட போறப்போ காபி குடிக்க மாட்டேன்?” குறும்பாக சிரித்தான்...
“ஓஹ்...
அப்போ ஸ்வீட் எடுத்துட்டு வரேன்..” அப்பாவியாக நகர முயன்ற சகாவை தடுத்து, கையை
பிடித்து இழுத்தான் முகிலன்....
“நீ
எடுத்துட்டு வரவேணாம், நானே எடுத்துக்கறேன்!” என்றவாறு சகாவின் முகம் நோக்கி தன்
முகத்தை மெல்ல நகர்த்தினான் முகிலன்...
மூக்குகள்
இரண்டும் உரசும் நெருக்கத்தில் நின்ற போது, “இப்போ வந்திடும்தானே?.. அதுவரைக்கும்
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ!” கிசுகிசுத்தான் முகிலன்...
நடப்பது
நாடகம் அல்லாமல் நிஜமாக நடந்தாலும் ஒருவிதத்தில் சகாவிற்கு மகிழ்ச்சிதான்...
நடக்கும் நிகழ்வுகளை அனுபவித்த சகா, “ஆவி இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு வந்தா
நல்லா இருக்குமே!” என்று நினைத்துக்கொண்டான்....
ஆனால்,
சில நொடிகளில் தட்பவெட்பம் குறைந்தது.... அந்த அறை சில்லிட்டது.... மெல்லிய
விசும்பல் சத்தம் அறையை ஆக்கிரமிக்க தொடங்கியது....
சகாவை
பார்த்து சிரித்த முகிலன், “சக்சஸ்... வந்துடுச்சு... இனி நான் பார்த்துக்கறேன்!”
காதோரம் ரகசியமாக சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டான்....
*******************
அன்றைய
தினத்தின் மாலை...
“ஹலோ....
ஹலோ சகா....” பதற்றமாக ஒலித்தது முகிலனின் குரல்...
“சொல்லுங்க
முகிலன்... என்ன பதற்றமா பேசுறீங்க?”
“எத்தன
தடவ உனக்கு கால் பண்றது?... எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகனும்”
“சொல்லுங்க....”
“நீ
சொன்ன ஆவியை நான் பிடிச்சுட்டேன்... ஆனால் இது வேற மாதிரி விஷயங்கள சொல்லுது...
அன்னிக்கு நீ இதுகூட பேசுனப்போ முழுசா அது சொன்னத கேட்டியா?” பரபரப்பாக பேசினான்
முகிலன்...
“கேட்டேன்...
கடைசியா போன் வந்துட்டதால நினைவுகள் சிதறிடுச்சு, ஆனால் அது சொல்ல வந்தத
சொல்லிடுச்சே... என்னாச்சு? எதுவும் ப்ராப்ளமா?”
“இல்ல,
அது சொல்ல வந்தத நீ முழுசா கேக்கல... அதுதான் இப்போ பிரச்சினையே.... இந்த ஆவி உன்ன
காப்பாத்த வந்த ஆவி... மூணு பசங்கள கொன்னது, உன்னை கொல்ல காத்திருக்காது எல்லாமே
வேற ஆவிகள்....”
“வேற
ஆவிகளா? என்ன உலருறீங்க?... கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க?” மெலிதான பயம்
வார்த்தைகளில் தென்பட்டது...
“விளக்கமா
சொல்லவல்லாம் இப்போ நேரமில்ல... முற்பிறவியின் தொடர்ச்சியா உன்ன கொல்றதுக்கு
ஆவிகள் உன்ன சுத்தி இருக்கு... அந்த ஆபத்துலேந்து உன்ன காப்பாத்த வந்த மகேந்திரன
நாம தவறுதலா பிடிச்சிட்டோம்... மகேந்திரனை
பிடிச்சதால உன்ன சுற்றி இருக்குற ஆவிகளால எந்த நேரத்திலும் உனக்கு ஆபத்து
வரலாம்... உடனே அங்கிருந்து வந்திடு...” வார்த்தைகளுக்கு இடைவெளியே இல்லாமல்
சொல்லி முடித்தான் முகிலன்...
“அப்டியா....
இதோ வ.....” சொல்லி முடிப்பதற்குள் “டாம் டோம்” சத்தம் கேட்டது... அழைப்பு
துண்டிக்கப்பட்டது.... (முற்றும்)
Sweet love can thaw everything
ReplyDeleteகருத்திற்கு நன்றி நண்பா....
DeleteHAAAAAAAAAAAAA!!!!!!! what happened ? suddenly into paranoramal field?
ReplyDeleteAnyhow nice story. As usual a flawless style but i differ on the content i did not expcet this story from Vijay!.
ரொம்ப நன்றி அண்ணா... எனக்கு திகில் அனுபவங்கள் படிப்பது ரொம்ப பிடிக்கும், குறிப்பா ஆவிகள் பற்றி... ரொம்ப நாளாக அதைப்பற்றி ஒரு கதை எழுதனும்னு ஆசை, அதை இப்போ நிறைவேற்றுனேன்.... வித்தியாசமா இருந்தாலும், உங்க எல்லோருக்கும் பிடிச்சாதானே கதைக்கு வெற்றி...
Deleteஇந்த கதைய படிக்கும் போது நானும் சகாவை போல் சில விநாடிகள் பயந்து போனேன்.. என்னோட கணினில ஸீடீ ட்ரைவ் கொஞ்சம் மக்கர் பண்ணும் என்பது தெரியும்.. ஆனாலும் அகிலன் ஆவிகள பத்தி விவரிக்கும் வரிகளா படிக்கும்போது தானாகவே ஒபெண் ஆகி க்லோஸ் ஆகும் ஸீடீ ட்ரைவ் வை பார்த்து ஒரு விநாடி அதிர்ந்தேன்...
ReplyDeleteஹ ஹா... மிக்க நன்றி நண்பா...
DeleteWow!! Really well try... First time horror story... Really gud nd nice narration...!! Superb!!!:-):-):-):-)
ReplyDeleteரொம்ப நன்றி தம்பி...
DeleteSemmmaya irunchi.... Bt... Idhu karpana dhana naa!? :P
ReplyDeleteEnnoda amma evlo dhan aavi pudichavanga thalai la aani adippanga nu solliyum ennaala innum namba mudila... :P bt.... Indha story la neraya scientific facts irukku....
Unga writings pathi sollave venaam.... As usual.... Thaaru maaru!! Naa ;)
இது கற்பனை மட்டுமே தம்பி,,, ஒன்னும் பயப்பட தேவையில்லை..... கருத்துகளுக்கு ரொம்ப நன்றிப்பா...
Deletesethappuram kooda lover-ah kaapathuthe aavi..nice thought... btw Mukilan character is good in this... Athi as well when he say Saga Anna... :-p
ReplyDeleteKeep it up....
என்ன அண்ணா திடிர்ன்னு பேய் கதை எழுத ஆரம்பிச்சிடிங்க நல்ல முயற்சி கதை ரொம்ப நல்லா இருக்கு ♥
ReplyDelete