Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday, 5 October 2014

"என் மகனும் மாப்பிள்ளையும்...!" - சிறுகதை...
“டிங் டாங்.... டிங் டாங்...” படித்துக்கொண்டிருந்த நாளிதழை மேசை மீது வைத்துவிட்டு, வேஷ்டியை சரிசெய்துகொண்டு கதவை திறப்பதற்குள் மூன்றாவது முறை அழைப்பு மணி அடித்துவிட்டது...
கதவை திறந்தேன்... கையில் கோப்புகள் சிலவற்றுடன், மூடியின்றி திறந்த பேனாவை விரல்களுக்கு நடுவில் சொருகியபடி நின்றிருந்தாள் ஒரு மத்திம வயது பெண்... என்னை பார்த்ததும் சம்பிரதாய சிரிப்பை இறைத்துவிட்டு, பேச்சை தொடங்கினாள்...
“வணக்கம் சார்... நான் சென்சஸ் கணக்கு எடுக்க வந்திருக்கேன்... உங்க குடும்பத்த பத்திய டீட்டைல்ஸ் வேணும்!”
அவளை உள்ளே அழைத்து ஹாலின் இருக்கையில் அமரவைத்தேன்... அப்பெண் தனது கோப்புகளை ஆராயந்துகொண்டிருந்த கணப்பொழுதில், சமையலறைக்குள் சென்று சுந்தரியிடம் இரண்டு காபி போடுமாறு சொல்லிவிட்டு வந்தேன்...
“உங்க பெயர், வயசு சொல்லுங்க சார்...”
“என் பேரு ரங்கராஜன், வயசு 67ம்மா...” சொல்லி முடிப்பதற்குள் காபி தம்ளர்களை எடுத்துவந்த சுந்தரி, “அவருக்கு 68 ஆகுது.... கிழவருக்கு வயசை குறைச்சு சொல்ற பழக்கம் இன்னும் போகல!” சொல்லிவிட்டு மீண்டும் சமையலறைக்குள் சென்றுவிட்டாள்...
என்னை பார்த்து சிரித்த சென்சஸ் பெண், “அவங்க யாரு உங்க மனைவியா?” என்றாள்...
சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படங்களை பார்த்தபிறகும், அந்த வயதை பற்றியதான குதர்க்க வார்த்தைகளின் அடிப்படையிலும் அப்படியோர் முடிவுக்கு வந்திருக்கலாம்...
“ஆமா... அவ பேரு சுந்தரி, வயசு 63” சொல்லும்போது என் விரல்களால் ஒருமுறை வருடங்களை கணக்கிட்டுக்கொண்டேன்... இல்லையென்றால் மீண்டும் “கிழவருக்கு என் வயசை கூட்டி சொல்லலைன்னா தூக்கமே வராது!”ன்னு சுந்தரி சொன்னாலும் சொல்லுவா... நல்லவேளையாக இம்முறை சரியாக சொல்லிவிட்டேன்...
“உங்களுக்கு எத்தன பசங்க சார்?”
“ஒரே பையன்... பேரு பிரவீன் ரங்கராஜன்... வயசு 31
“அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சா?”
“ஹ்ம்ம்... ஆறு மாதத்துக்கு முன்னதான் ஆச்சும்மா....”
“அவங்க மனைவி பேரு?”
“மனைவி.... மனைவி...” தடுமாறினேன்... இப்படியோர் கேள்வியை நான் எதிர்பார்த்திடவில்லை... என்ன சொல்வதென்று தெரியாமல் குழம்பி நின்றேன்...
சென்சஸ் பெண்ணோ தன் கைக்கடிகாரத்தை பார்த்தபடியே, “நேரமாச்சு சார், சீக்கிரம் சொல்லுங்க.... இன்னும் அறுபத்தி நாலு வீட்டுக்கு இன்னிக்குள்ள போகணும்!” நொந்துகொண்டாள்....
இந்த களேபரத்தை சமையலறைக்குள் இருந்தவாறே கண்கானித்துக்கொண்டிருந்த சுந்தரி, துலக்கிய பாத்திரத்தை கையில் ஏந்தியவாறே ஹாலிற்கு வந்துவிட்டாள்....
“இங்க பாரும்மா, உனக்கு இதல்லாம் தேவையில்லாத விஷயம்.... எங்க பையன் பேரு பிரவீன்.... அவன் இப்போ கனடால இருக்கான், அங்க அவன் சிட்டிசனாவும் ஆகிட்டான்... இந்தியாவில எடுக்குற சென்சஸ்’க்கு அவனைப்பற்றிய டீட்டைல்ஸ் சொல்லனும்னு அவசியம் இல்ல... எங்கள பத்தி மேல எதுவும் கேக்குறதுன்னா கேளு, இல்லைன்னா நல்லநேரத்துல இடத்த காலி பண்ணு” பொறிந்து தள்ளிவிட்டாள்... எனக்கே சங்கடமாகத்தான் இருந்தது... அந்த பெண் சப்த நாடியும் ஒடுங்கியவளாக அமர்ந்திருந்தாள்.. அவள் கண்களில் அதுவரை படிந்திருந்த துறுதுறுப்பு கரைந்துபோய், மிரட்சி மேலிட்டது... இன்னும் ஓரிரு வார்த்தைகளை சுந்தரி உதிர்த்திருந்தால் அவள் அங்கேயே அழுதிருக்கக்கூடும்.....
கோப்புகளிலிருந்து பறந்த இரண்டு வெற்றுத்தாள்களை எடுக்கக்கூட விரும்பாமல் கதவை திறந்துகொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள்... அநேகமாக மீதமிருப்பதாக சொன்ன அறுபத்தி சொச்சம் வீடுகளுக்கும் அவள் செல்லமாட்டாள் என்றே தோன்றியது...
கதவை சாத்தி தாழிட்டபிறகு சமையலறைக்குள் வந்தேன், நடந்த நிகழ்வின் எவ்வித சுவடுமே அறியாததை போல சுந்தரி அவித்த இட்லிக்களை லாவகமாக எடுத்து ஹாட்பேக்கில் அடுக்கிக்கொண்டிருந்தாள்.....
“ஏன்மா இப்டிலாம் பண்ற?... பாவம் சின்ன பொண்ணு, அவளுக்கு என்ன தெரியும் நம்ம நிலைமை?”
“நீங்க சும்மா இருங்க... ஒரு நாளைல இதுமாதிரி எத்தனை பேர்கிட்ட பொறுமையா பதில் சொல்லமுடியும்?... சொன்னாலும், நம்ம நியாயத்த எத்தன பேரால சரியா புரிஞ்சுக்க முடியும்?... இன்னும் நாம இருக்கப்போறது கொஞ்ச வருஷம்தான், அதுவரைக்கும் இப்படி கேள்விகளை தவிர்க்கனும்னா இந்த கடுமை அவசியம்ங்க...” சட்னியை அடுப்பிலிருந்து இறக்கியபடியே சொல்லிமுடித்தாள்... சுந்தரியுடன் வாதம் புரிய நான் விரும்பவில்லை... அவள் பக்கமும் நியாயம் இருக்கவே செய்கிறது, அந்த நியாயம் கொஞ்சம் கடுமையான வழியில் வெளியாகும்போது என் மெல்லிய சுபாவத்தால் அதனை கிரகிக்க முடியவில்லை...
ஹாலில் சென்று அமர்ந்து பாதியில் விட்ட தினமணி’யை மீண்டும் தொடர்ந்தேன்... பத்து நிமிடங்களில் மேசை மீது இட்லியும், சட்னியும் அதனதன் பாத்திரங்களில் வைக்கப்பட்டாகிவிட்டது...
“மார்க்கெட் போயி மீன் வாங்கிட்டு வரேன், நீங்க நேரம் ஆக்காம சாப்ட்டு மறக்காம மாத்திரைகளை சாப்பிட்டிருங்க” கையில் கட்டைப்பை மற்றும் ஒயர் கூடை சகிதமாக நின்றுகொண்டு தன் தலைமுடியை இறுக்கி கொண்டையாக முடிந்தவாறு சொன்னாள் சுந்தரி...
“நீ இரு, சாப்ட்டு நானே போயிட்டு வரேன்” என்றேன்...
“ஏற்கனவே பிரஷர் கூடிருச்சுன்னு நேத்துதான் டாக்டர்கிட்ட போனோம், இதுல இந்த வெயில்ல போயி மேற்கொண்டு எதுவும் இழுத்துக்க வேணாம்... நானே போறேன், மறக்காம நீங்க மாத்திரைய சாப்பிட்டிருங்க” கண்டிப்பாக சொல்லிவிட்டு சுந்தரி வாசலிலிருந்து மறைந்துவிட்டாள்...
பசியில்லை... தனிமையில் அமர்ந்து எதையாவது யோசித்தால் மேற்கொண்டு உடலுக்கும் மனசுக்கும்தான் கேடு... வாசலுக்கு சென்று, ஒரு திட்டில் அமர்ந்து சாலையை வேடிக்கை பார்க்கத்தொடங்கினேன்.... காலை நேரம் என்பதால், பள்ளிக்குழந்தைகள் அதிகம் உலாவும் நேரம்... பல வண்ண சீருடைகளில் கண்களில் மிரட்சியோடு சாலையில் ஊர்ந்துகொண்டிருக்கின்றன குழந்தைகள்...
பிரவீன் சிறுவயது முதலாகவே பள்ளிக்கு செல்ல அழுததில்லை... படிப்பை அவன் மீது நாங்கள் திணித்ததில்லை என்பதுகூட அதற்கொரு காரணமாக இருந்திருக்கலாம்... அவன் வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளும் அவன் எண்ணத்தின்படியே நடந்தேறிவிட்டது, பலவிதமான முரண்பாடுகளை எனக்களித்த அவனது திருமண வாழ்க்கை வரை அதற்கு விதிவிலக்கு அல்ல...
“ரங்கராஜன்.... ஹலோ...” யாரோ என் பெயரை உச்சரிப்பதை ஓரிரு வினாடிகள் கழித்துதான் உணரத்தொடங்கினேன்.... அது எங்கள் பக்கத்து வீட்டு ஆசாமி பார்த்தசாரதிதான்... அவரைப்பற்றிய அடையாள விளக்கங்களோ, அறிமுக வசனங்களோ இங்கே அவசியமில்லை என்பதால் “உங்க இயல்பான பக்கத்து வீட்டு நண்பர்” என்ற அளவில் அவரை நினைத்துக்கொள்ளுங்கள்!...
“என்ன சார் வாசல்ல உக்காந்து கனவு காணுறீங்க போல...” சிரித்தபடி கேட்டார் பார்த்தசாரதி...
“அப்டிலாம் ஒன்னும் இல்ல... உங்களைத்தான் நாலஞ்சு நாளா ஆளே பார்க்க முடியல... வாக்கிங் கூட வர்றதில்ல போல” அவ்வப்போது சில கவலைகளை பகிர்ந்துகொள்ளும் நபர் இவர்தான்... அறுபதை கடந்த வயதென்பது புலம்புவதற்கென்றே நிர்ணயிக்கப்பட்டது போல ஹைப்பர்டென்ஷன் முதல் அடுத்த தெருவில் நடந்த ஆக்ஸிடன்ட் வரை இழப்புகளை பற்றியே நான் அதிகம் பகிர்ந்துகொள்ளும் நபர்....
“நல்லா சொன்னிங்க போங்க.... காலைல எழுந்தது முதலா பால் பாக்கெட் வாங்குறது தொடங்கி பேரப்பிள்ளைகள ஸ்கூல்ல கொண்டுபோய் விடுற வரைக்கும் உக்கார நேரமில்ல... இதுக்கெடைல மருமக அவ பங்குக்கு எதாவது வேலை சொல்லிகிட்டே இருப்பா... முகத்தை சுளிக்காம வேலைய பார்த்தாதான் சாப்புட பழைய சோறாவது மிச்சம்.... எல்லாருக்கும் உங்கள மாதிரி வாழ்க்கை அமஞ்சிடுமா சொல்லுங்க?” பெருமூச்சு விட்டுக்கொண்டார்...
“அப்டி நான் என்ன பெருசா வாழ்ந்தத கண்டீங்க?...” சிரித்தபடியே இயல்பாகத்தான் கேட்டேன்...
“ஆமா... உங்களுக்கு இருக்குற ஒரே பையனுக்கும் இன்னொரு பையனையே கட்டிவச்சுட்டிங்க... மருமக இம்சை இல்ல... அவங்க ரெண்டு பேரும் வெளிநாட்டுல கைநெறைய சம்பாதிச்சு உங்களுக்கு பணம் அனுப்ப, அதை வச்சு ஜாலியா என்ஜாய் பண்ணுறீங்க.... ஹ ஹா...” என் முகம் சுருங்கியதையும் கூட கவனிக்காமல் தொடர்ந்து சிரித்தார் பார்த்தசாரதி.... எல்லோருடைய மனதிலும் படிந்துள்ள வன்ம எண்ணங்கள், இப்படி சிலரிடத்திலிருந்து மட்டும் வார்த்தைகளாக வெளிவருகின்றன...
சிலர் என் முகத்திற்கு நேராக இயல்பாக பேசியும், என் முகம் மறைந்தபிறகு, “இந்தா போறாரே ரங்கராஜன்.... இவரு பையன் இன்னொரு பையனை கல்யாணம் பண்ணிகிட்டானாம்!” னு ஒரு இயல்பான செய்திக்கு கண், காது, மூக்கெல்லாம் வைத்து நிறைய கதைகள் கட்டிவிடுவதுண்டு... சிலர் ஏனோ நான் கலாச்சாரத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டதாக எண்ணி, பேசக்கூட மாட்டார்கள்...
இந்த ஆறு மாதங்களில் இத்தகைய கலவையான புறக்கணிப்புகள் இயல்பான ஒன்றுதான்... ஒருவழியாக பார்த்தசாரதியை வழியனுப்பி வைத்துவிட்டு, கதவை தாழிட்டபடி மீண்டும் வீட்டிற்குள் அமர்ந்துவிட்டேன்...
இவர்கள் எல்லோரும் சொல்வதைப்போல பிரவீன் ஒரு கே தான்... ஆனால், கே பற்றி இவர்கள் எல்லோரும் நினைப்பது போல அது அவ்வளவு பெரிய குற்றமாக எனக்கு தோன்றவில்லை...
“உன் பிள்ளைன்னு நீ சால்ஜாப்பு சொல்ற... இதல்லாம் தப்புதான், நம்ம கலாச்சாரத்துக்கு துளியும் ஒத்துவராது!” என் விளக்கங்களுக்கு பலவிதமான பதில்கள் வந்தாலும், அது அனைத்தின் சாராம்சமும் இதுதான்...
இந்த சமூகத்தின் அங்கம்தான் நானும் என் மனைவியும் கூட... பிறகெப்படி இதற்கு நாங்கள் சம்மதித்தோம்?... மறுபேச்சு பேசாமல் பிரவீனின் பாலீர்ப்பை ஏற்றுக்கொள்ள காரணம், அவன் தன்னை வெளிப்படுத்திய சூழல்...
ஐசியூ அறைக்குள் உடல் முழுக்க ஒயர்கள் சூழப்பட்டு, பலவிதமான பீப் சத்தங்களுக்கு இடையில், “அப்பா, நான் ஒரு கே... ஒரு பையனை லவ் பண்றேன்...” என்று சொல்லும்போது, அதை மறுத்து பேசவல்லாம் என் மனசுக்கு தோன்றவில்லை...

தூக்கமாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்து, ஏதோ ஆண்டவன் அருளால் ஐசியூ’வோடு தப்பித்தான்... அது முதல் முறை கூட இல்லை, அதற்கு முன்பு இரண்டு முறைகள் இதே போல தற்கொலை முயற்சிகள் மேற்கொண்டுள்ளான்... அந்த இரண்டு முறைகளும் நாங்கள் எவ்வளவோ வற்புறுத்தி காரணம் கேட்டும், உதட்டை கூட அசைத்ததில்லை அவன்... ஆனால், இந்த மூன்றாம் முறை அவனாகவே என்னை அழைத்து தன்னைப்பற்றி எல்லாவற்றையும் சொன்னான்...
இதைப்பற்றி தயங்கியபடியே சுந்தரியிடம் சொன்னேன்... ஆச்சர்யமாக அவளோ, “என்னவாகவோ இருக்கட்டும்... அவன் உசுரோட இருந்தா அதுபோதும்” என்று சொன்னாள்... என் மனதில் எழுந்த மெல்லிய சலனம் கூட அவள் முகத்தில் நான் பார்த்திடவில்லை...
அதன்பிறகு அவன் கனடா சென்று, அங்கு தன் காதலனோடு திருமண வாழ்க்கை மேற்கொண்டு எல்லாம் சுபமாகவே முடிந்தது... ஏதோ ஒரு வகையில் அந்த செய்தி எங்கள் சுற்றம் முதல் சொந்தங்கள் வரை காட்டுத்தீயாக பரவிவிட்டது... என்றைக்காவது ஒருநாள் தெரிய வேண்டிய விஷயம்தான் என்பதால், அதை நானும் இயல்பாகவே எதிர்கொண்டேன்.... ஓரளவு வரை நிலைமையை எதிர்கொண்டுவிட்டாலும், உடலும் மனமும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் நிராகரிப்புகளை தாங்குவதில்லை.... பெரும்பாலும் பிறரது வசவுகளை நான் கண்டுகொள்வதில்லை, சில நேரங்களில் அவை எல்லை மீறும் தருணங்களில் மனம் வருந்தினாலும் அதை வெளிக்காட்டிக்கொள்வதில்லை...
கதவு தட்டப்பட்டது.... அழைப்பு மணியை அடிக்காமல் கதவை தட்டுவது சுந்தரி மட்டும்தான்... எழுந்து சென்று கதவை திறந்தேன்....
வலது கையின் பிளாஸ்டிக் பையில் மீன்களும், இடது கை ஒயர் கூடையில் கொஞ்சம் காய்கறிகளையும் ஏந்தியபடி உள்ளே வந்தாள் சுந்தரி... வெயிலின் வெளிப்பாடாக வியர்வையால் குளிப்பாட்டப்பட்டிருந்தாள்.. களைப்பையும் தாண்டி அவள் முகம் ஏதோ ஒருவித கோபத்தினால் சிவந்து காணப்பட்டது...
கொதிக்கும் எண்ணெயில் போடப்பட்ட கடுகு போல அவள் வாய் அவ்வப்போது யாரையோ முனுமுனுத்தபடி திட்டிக்கொண்டிருந்தது...
“எல்லாத்துக்கும் ஒருநாள் நேரம் வரட்டும், அவள பார்த்துக்கறேன்” சொன்னபடியே காற்றாடிக்கு கீழ் அமர்ந்தாள்... ஒரு துண்டை எடுத்து அவன் காதோரத்தில் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டேன்... சில நிமிட ஆசுவாசத்திற்கு பிறகு நானே தொடங்கினேன்...
“என்னாச்சு?... யார் மேல இவ்வளவு கோவம்?”
“மேட்டுத்தெரு பாக்கியத்த மார்க்கெட்ல பாத்தேன்...”
“யாரு?... நம்ம பழனியப்பன் பொண்டாட்டியவா சொல்ற? பழனியப்பன் நல்லா இருக்கானான்னு கேட்டியா?”
“ஆமா... அதுக நலம் ரொம்ப முக்கியம் பாருங்க!... அந்த நன்றி மறந்த குடும்பம் இனி எக்கேடு கெட்டாலும் கண்டுக்கவே கூடாது...அவள் வார்த்தைகளில் அனல் தெறித்தது....
“அவ மேல என்ன இவ்வளவு கோபம்?... கொஞ்சம் தெளிவாத்தான் சொல்லேன்...”
“அவ மகனுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சாம், போன வாரம்தான்.... நமக்கு ஒரு வார்த்தை கூட அதப்பத்தி சொல்லல... ஏன் பாக்கியம் எங்கள மறந்துட்டியா?ன்னு கேட்டதுக்கு, நம்மள கூப்ட்டா அவுக சொந்தக்காரங்க எல்லாம் ஒரு மாதிரி பேசுவாங்களாம்... என்கிட்டயே இத சங்கடப்படாம சொல்றா.... அந்த பழனியப்பன் முடியாம ஆஸ்பத்திரியில கெடந்தப்போ எந்த சொந்தம் அவளுக்கு உதவி செஞ்சுச்சுன்னு தெரியல... நீங்க பணம் கொடுத்து உதவி பண்ணலைன்னா இந்நேரம் அந்த மனுஷன் உயிரு தங்கியிருக்குமா?... எனக்கு வந்த கோவத்துக்கு மார்க்கெட்’னு கூட பார்க்காம அவள கண்டபடி திட்டிருப்பேன், என்னமோ ஒரு நெனப்புல அமைதியா வந்துட்டேன்” விரல்களில் நெட்டியை நெரித்தவாறே சொன்னாள்... சொல்லும்போதும் கண்களில் லேசாக நீர் அரும்பவே செய்தது...
“சரி விடும்மா... இதல்லாம் நாம எதிர்பாக்க முடியாது... போன மாசம் உன் சொந்த பெரியப்பா மகன் வச்ச தேவைக்கு நம்மள கூப்டாங்களா?.. சொந்தங்களே நம்மள ஒதுக்கினப்புறம், யாரோ ஒரு பழகின ஆள்கிட்ட நாம இதல்லாம் எதிர்பார்க்க முடியாது...”
நானும் ஆறுதலாக சொன்னாலும், என் மனமும் இப்படிப்பட்ட புறக்கணிப்புகளை எண்ணி நோகவே செய்தது... எத்தகைய கோபத்தையும் சுந்தரி கொட்டி தீர்த்துவிடுவாள், நானோ மனதிற்குள் அடக்கிக்கொண்டு வெளிக்காட்ட மாட்டேன்... அது ப்ளட் ப்ரெஷர், படபடப்பு போன்ற உடல்நல கேடுகளாக என்றைக்காவது வெளிவருவதுண்டு....
ஒருவழியாக அவளை சமாளித்து, கோபத்தை குறைக்க முயற்சித்தேன்...
“இன்னும் சாப்பிடலையா நீங்க?... அப்டி என்னதான் பண்ணிங்க?... எந்திருச்சு முதல்ல சாப்பிடுங்க... நான் மீனை சுத்தம் பண்ணிட்டு வந்திடுறேன்” என்றவாறு எழுந்து சமையலறைக்குள் சென்றுவிட்டாள்...
இன்னும் எனக்கு பசியில்லை...
அலைபேசி அழைத்தது.... பிரவீன்தான் அழைக்கிறான்...
என் சோகத்தை மீறி, புன்னகையை தாங்கியது உதடுகள்...
“அப்பா, எப்டி இருக்கீங்க?”
“நேத்து நைட் தான் சொன்னேனே.... ஒருநாள் ராத்திரில ஒன்னும் பெருசா மாறிடல பிரவீ....” சிரித்தேன்...
“அடபோங்கப்பா... நேத்து டாக்டர் கிட்ட போனதா சொன்னிங்களே, இப்போ மயக்கம் எதுவும் வரலைல்ல?”
“இல்லப்பா... ஒன்னும் ப்ராப்ளம் இல்ல...”
“உங்களையும் கனடா வாங்க, வாங்கன்னு தினமும் சொல்றேன்... எங்களோட வந்து இருந்திருங்கப்பா”
“நானும் தினமும் சொல்ற அதே பதிலை சொல்லனுமா பிரவீ?... எங்களுக்கு இங்கதான்பா ஒத்துவரும்... இந்த வயசுல புதுசா ஒரு நாட்டுக்கு வந்து அந்த நாட்டுக்கு ஏத்த மாதிரி எங்கள அடாப்ட் பண்றதல்லாம் கஷ்டம்... இங்க நாங்க சந்தோஷமா இருக்கோம்பா, நீ எங்கள பற்றிய கவலை இல்லாம சந்தோஷமா இருந்தாவே அது போதும் எங்களுக்கு...” வார்த்தைகள் என்னை அறியாமல் வந்து விழுந்தது....
நாங்கள் பேசும் சத்தம் கேட்டு சமையலறைக்குள்லிருந்து வந்துவிட்டாள் சுந்தரி...
“இப்டி தினமும் பேசுனதையே பேசி போர் அடிக்கலையா?... குடுங்க போனை...” என் கைகளிலிருந்து வாங்கி, அவள் பேசத்தொடங்கினாள்....
“என்னப்பா சாப்ட்ட? க்ளைமேட் எப்டி?” அவளும் அதே கேள்விகளைத்தான் வரிசைகளை மாற்றி கேட்டுக்கொண்டிருக்கிறாள்....
பத்து நிமிடங்களுக்கு முன்பிருந்த மனநிலை எங்கள் இருவருக்குமே சுத்தமாக மாறிவிட்டது.... மனதிற்குள் இனம் புரியாத ஒரு பரவசம் இயல்பாகவே தொற்றிக்கொண்டது...
சமூகம், சொந்தம்னு வீம்பு பேசி அவன் இறந்த பிறகு, அவனுடைய புகைப்படத்திற்கு மாலை போட்டு, விளக்கு ஏற்றியபடி அழுதுகொண்டிருப்பதைவிட, எங்கோ சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கும் பிரவீனின் வாழ்க்கையை நினைத்தபடியே வாழ்வது நிம்மதியாகத்தான் தெரிகிறது.... அவன் வாழ்கிறான்! என்ற ஒரு மனநிறைவே, எனக்குள் அவ்வப்போது எழும் அத்தனை சோகங்களையும் காணாமல் போக செய்துவிடும்...
ஹ்ம்ம்... எனக்கு பசிக்குது, நான் சாப்பிட போறேன்.... (முற்றும்)

11 comments:

 1. Super super super
  Expecting a series of love story bro

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி சகோ... நிச்சயம் எழுதுறேன்...

   Delete
 2. கலக்குறீங்க விஜய்... அழகான கற்பனை ...
  யாராவது உங்களுக்கு த்ரிஷ்டி சுத்தி போட்டா தேவலை...

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு நன்றி சக்தி...
   சமூகத்தின் திருஷ்டிப்பொருள் போல நம்மை நினைக்கும் பொதுத்தள சமூகம் முதலில் மாறட்டும் நண்பா... மொத்தமா அப்போ எல்லாருக்கும் சுத்திப்போடுவோம்..

   Delete
 3. really nice vijay.. enaku orey oru doubt kekalamanu theriyala, namaoolada aasai kaga appa amma va ippadi kastapaduthurathu sari thana? Nammala than society avoid pannuthuna nammala petha paavathukaga, intha vayasuana kaalathula avangaluku ethuku intha punishment ? ???

  ReplyDelete
  Replies
  1. இந்த சமூகம் மாறும்வரை யாராவது ஒரு தரப்பு விட்டுக்கொடுத்துதான் ஆகணும் நண்பா... ஒரு முழுமையான கே , ஒரு பெண்ணுடன் வாழும்போது அடையும் கஷ்டத்தை கூட எந்த பெற்றோராலும் தாங்கிக்கொள்ள முடியாது பாலா... அதனால் சில விஷயங்களை பெற்றோர் தரப்பும் விட்டுக்கொடுக்குறாங்க... கருத்திற்கு மிக்க நன்றி நண்பா...

   Delete
 4. semma naa!!! Cha!! Karpanaila irukka vishayam laan neja vaalkai la nadakka vaaipu irundhaa naa laan evlo sandhosa paduven! :P idha vishayam "ellaar" kum purinja seri dhan...!! Story as usual Thaaru maar na!

  ReplyDelete