Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday, 26 October 2014

"மணமேடையில் கலக்கிய மணப்பெண்கள்" - களைகட்டிய லெஸ்பியன் திருமணங்கள்...


அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் அரையிறுதி ஆட்டம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது... டென்னிஸ் ரசிகர்கள் ஆர்வமாக ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தனர்.... ஆட்டத்தின் இடைவேளையில் ஸ்டேடியத்தின் பிரம்மாண்ட திரையில் ஒரு நேரடி காட்சி ஒளிபரப்பாகியது...

அரங்கத்தின் சூட் அறையில் ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் மலர்களை நீட்டி, “என்னை திருமணம் செய்துகொள்கிறாயா?” என்று கேட்கிறார்... ஆச்சர்யத்தில் பூக்களை வாங்கிய பெண் வெட்க சிரிப்புடன் “சரி” என்கிறாள்... உடனே, தன் கையில் தயாராக வைத்திருந்த வைர மோதிரத்தை எடுத்து, தன் காதலிக்கு அணிவிக்கிறார் அந்த பெண்.... அரங்கத்தில் அமர்ந்திருக்கும் அத்தனை டென்னிஸ் ரசிகர்களும் உற்சாக கைத்தட்டுகளை தங்கள் வாழ்த்துகளாக அள்ளி தெளித்தனர்... அரங்கத்தின் கரவோசை நிற்க சில நிமிடங்கள் ஆனது...

செரீனா பட்டத்தை வென்ற நிகழ்வைவிட, ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட நிகழ்வு நான் மேற்குறிப்பிட்ட நிகழ்வுதான்... இப்படியோர் நிகழ்வு நடந்த இடம் அமெரிக்காவின் ஆர்தர் ஆஷே ஸ்டேடியம்... இவ்வளவு பரபரப்பான செய்திக்கு வித்திட்ட பெண் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனையான மார்ட்டினா நவரத்திலோவா...

செக்கசுகோவக்கியாவில் பிறந்து அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் குடியேறி வசித்து வருபவர் முன்னாள் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை மார்டினா நவரத்திலோவா... 57 வயதான மார்டினா 18 தனிநபர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுக்கு சொந்தக்காரர்... பல வருடங்களுக்கு முன்பே தன்னை லெஸ்பியன் என்று வெளிப்படுத்திக்கொண்ட நவரத்திலோவா ஜூடி நெல்சன் என்ற பெண்ணுடன் 7 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து விட்டு கடந்த 1991–ம் ஆண்டில் பிரிந்தார்.

தற்போது 57 வயதான நவரத்திலோவா, 42 வயதான ரஷிய முன்னாள் அழகியும், தொழில் அதிபருமான ஜூலியா லெமிகோவாவுடன் கடந்த 6 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருகிறார். இவர்களது நிச்சயதார்த்தம்தான் நான் மேற்சொன்னபடி அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் அரை இறுதி ஆட்டத்தின் போது ஸ்டேடியத்தில் நடந்தது.


இப்படி விளையாட்டு அரங்கில் காதலை வெளிப்படுத்தி, நிச்சயம் செய்துகொள்ளும் முதல் லெஸ்பியன் தம்பதிகள் இவர்கள்தான்... நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நவரத்திலோவா நோயிலிருந்து குணமடைந்த பின்பு வாழ்க்கையை புதிதாக தொடங்கியிருக்கிறார்.....

“இப்படி புதுமையான முறையில் காதலை வெளிப்படுத்துவது முதலில் பதற்றமாக இருந்தது... என் காதலிக்கே கூட இந்த சர்ப்ரைஸ் தெரியாது... பூக்களை நான் நீட்டியபோது அவள் ஆச்சர்யத்தில் அசந்துவிட்டாள்... டென்னிஸ் ரசிகர்களின் வாழ்த்துகளுக்கு இடையே எங்கள் நிச்சயதார்த்தம் நடந்தேறிவிட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தனது புதுமையான காதல் பரிமாற்றத்தை பற்றி உற்சாகத்துடன் கூறினார் நவரத்திலோவா....

இவர்கள் வசிக்கும் புளோரிடாவில் ஒருபால் ஈர்ப்பு திருமணத்துக்கு அனுமதி கிடையாது என்பதால், தங்கள் திருமணத்தை மியாமியில் விரைவில் நடத்தலாம் என்று முடிவு செய்து இருக்கின்றனர்.

இத்தனை வருடங்களுக்கு பிறகு, இந்த வயதில் திருமணம் அவசியம்தானா? என்று சிலருக்கு தோன்றலாம்... ஆனால், காதலுக்கு வயது உண்டா என்ன?... ஒருபால் ஈர்ப்பு திருமணங்கள் சமீப காலங்களாகத்தான் பல இடங்களிலும் சட்டப்பூர்வமாக்கப்பட்டு வருகிறது... ஆகையால், வயது தடை பாராமல் இத்தகைய திருமணங்கள் அரங்கேறுவது இயல்பான ஒன்றுதான்....

90 வயதுகளில் திருமணம் செய்துகொண்ட லெஸ்பியன் தம்பதிகள் இதற்கு ஒரு சான்றுதான்... 72 வருடங்களாக காதலர்களாக இணைந்து வாழ்ந்த லெஸ்பியன் தம்பதிகள், கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் லோவாவில் இருக்கின்ற டேவன்போர்ட் தேவாலயத்தில் தங்கள் திருமணத்தை பதிவுசெய்துகொண்டனர்... சர்க்கர நாற்காலியில் அருகருகே அமர்ந்தபடி திருமணம் செய்துகொண்ட அந்த தம்பதியின் பெயர் விவியன் போயாக் மற்றும் அலிஸ் ட்யூப்ஸ்…. இருவருமே 90 வயதுகளை கடந்தவர்கள் என்பதும், 1942 முதல் ஒன்றாக இணைந்து வாழ்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்...

இரண்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ இத்திருமணத்தை நடத்திவைத்த லிண்டா ஹன்சகர், “இது நீண்ட காலத்திற்கு பிறகு நடக்கும் கொண்டாட்டமான விழா!” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்....

இத்தகைய ஆச்சர்யமான நிகழ்வுகள் வெளிநாட்டினருக்கே சாத்தியம் என்பது பெரும்பாலும் உண்மைதான்... அதேநேரத்தில் ஒரு லெஸ்பியன் திருமணம் இந்திய முறைப்படி நடந்த நிகழ்வும் கடந்த ஆண்டு நடந்ததை நாம் நம்பித்தான் ஆகணும்...
கடந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஷன்னோன் மற்றும் சீமா என்னும் இரண்டு பெண்களின் திருமணம்தான் அந்த ஆச்சர்யத்திற்கு உரிய திருமணம்...  ஆறு வருடங்கள் இணைந்து வாழ்ந்த இந்த லெஸ்பியன் காதலர்களுக்கு தாங்களும் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்கிற ஆசை எழுந்தது இயற்கையான எண்ணம்தான்... அதுவும் இந்திய கலாச்சாரப்படி, இந்து முறைப்படி நடக்க வேண்டும் என்பது கூடுதல் ஆசை... அந்த ஆசை கடந்த ஆண்டின் ஒருநாளில் நடந்தேறியும்விட்டது... 

இரண்டு வீட்டாரும் கூடியிருக்க பட்டாடை சூட, இரண்டு பெண்களும் இந்தியமுறைப்படி அலங்காரம் செய்யப்பட்டு மணமேடையில் வீற்றிருந்தார்கள்.... இந்திய முறைப்படி நிகழும் எல்லா சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களும் ஒருகுறையும் இன்றி இனிதே மேற்கொள்ளப்பட்டு திருமணம் நடந்தது... 

மலர் அலங்காரம் முதல் உணவு வகைகள் வரை, அம்மாவின் கண்ணீர் உட்பட எல்லாமே ஒரு நிதர்சன இந்தி சினிமா திருமணம் போலவே அரங்கேறியது...
 
 இருவரும் மாலை மாற்றிக்கொண்டு ஒருவர் நெற்றியில் மற்றொருவர் குங்குமம் இட்டு, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதோடு திருமண சம்பிரதாயம் முடிவுற்றது...
ஒருபால் ஈர்ப்பு தவறல்ல என்று சமீப காலங்களில் பலதரப்பிலும் பேசப்பட்டு வருகின்ற நிலையில், இந்த நிகழ்வுகள் ஆச்சர்யத்திற்கு அப்பாற்பட்ட விஷயமாகத்தான் நமக்கு தோன்றவேண்டும்... ஆனால், ஒருபால் ஈர்ப்பு என்றாலே அது “கே” (gay) நபர்களுக்கான உரிமை போலவே சூழல் உருவாகிவிட்டது... ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவான பேரணிகள் சென்னை வரை சாத்தியம் என்றாலும் கூட, மருந்துக்கும் அங்கு பெண்களை காணமுடியவில்லை... லெஸ்பியன் உறவுகள் இன்னும் பண்பாட்டிற்கு விரோதமான உறவாகவே மேற்குலக நாடுகளில் கூட பரவலாக கருத்து நிலவுகிறது... ஆக இப்படிப்பட்ட திருமணங்கள் அத்திபூத்தார் போல நடப்பதை நாம் ஆச்சர்யமாக பார்க்கத்தான் வேண்டி உள்ளது...

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் அவ்வப்போது லெஸ்பியன் தம்பதிகள் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வருவதை பார்த்திருப்போம்... இறந்தபின்புதான் இந்தியாவில் ஒரு பெண்ணின் பாலீர்ப்பை இந்த சமூகம் அடையாளம் காணக்கூடிய நிலைமைதான் இங்கே நிலவுகிறது... இருக்கும்போதே அந்த பெண்களின் குரலை கேட்க இந்த சமூகம் எப்போது எத்தனிக்குமோ, அதுவரைக்கும் அத்தகைய பெண்களின் பிணங்கள் வழியேதான் இந்த சமூகம் பாலீர்ப்பை அடையாளம் காணும்!...

பெண்ணுரிமை போராட்டங்கள் கூட பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் வழங்கவே இன்னும் நடந்துகொண்டு இருக்கிறது... ஒரு விஷயத்தை நாம் தீர்க்கமாக நம்பவேண்டும், பெண்ணுரிமை என்பதின் உச்சம் அவர்களின் பாலீர்ப்பு உரிமைதான்... எல்லா பெண்களும் தங்களுக்கு உகந்த பாலீர்ப்பை தேர்ந்தெடுக்கும் உரிமை கிடைக்கும் நாளில்தான் பெண்ணுரிமை முழுமை பெறுவதாக பொருள்... அதை தவிர்த்து பெண்களின் உரிமைக்காக போராடும் நிலை என்பது, முழுமை பெறாத பெண்ணுரிமை என்கிற அளவில் மட்டுமே இருக்கும்!...
(சிறகு மின்னிதழில் வெளியான எனது கட்டுரை)

2 comments:

 1. Great people!! Namma country la epo indha madhiri ellam nadakum!!:-( i m eagerly waiting fr tat moment na..
  And my best wishes to those jodis....
  Neenga solradhu correct dha na... Namma naadu freedom irukara naadu nu peruku dha soldrom but namaku puduchavangala kuda nammanala choose panna mudilaye!!:-(:-( I am really sad about tat..

  ReplyDelete
  Replies
  1. நமது ஆதங்கம் ஒருநாள் நிச்சயம் நிஜமாகும் தம்பி... அதுவரை காத்திருப்போம்... கருத்துக்கு ரொம்ப நன்றிப்பா...

   Delete