Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday 16 November 2014

நம்மை நாமே வெறுக்கிறோமா? - அப்படியும் சொல்லுது அறிவியல்...









“ஒரு பத்து பேர் கூடியிருக்கும் பொதுவிடத்தில், ஒருபால் ஈர்ப்பை பற்றி விவாதம் உண்டாகுதுன்னு வச்சுக்கோங்க... அந்த விவாதத்தில் ஒருபால் ஈர்ப்பை பற்றி முதல் வெறுப்பான வார்த்தையை உமிழ்வது ஓரினச்சேர்க்கையில் நாட்டமுள்ள ஒரு நபராகத்தான் இருப்பார்” இப்படி நண்பர் ஒருவர் வேடிக்கையாக சொன்ன ஒருவிஷயம், உள்ளார்ந்து யோசிக்கும்போது அறிவியலும் அதை ஆமோதிக்கிறது... 

பெரும்பாலான சமபால் ஈர்ப்பு நபர்கள் தங்கள் வாழ்க்கையின் நடைமுறையில் தங்களது பாலீர்ப்பை எதிர்கொள்வதில் ஏற்படும் சிக்கல்களால், ஒருகட்டத்தில் தமது பாலீர்ப்பின் மீதே வெறுப்பு அவர்களுக்கு உண்டாகிவிடுகிறது... இதனை அறிவியல் வழியாக  Internalized Homophobia என்று குறிப்பிடுகிறார்கள்... இந்த வகையான ஹோமோபோபியா ஒருபால்/இருபால் ஈர்ப்பினர் என்று இரண்டு தரப்பினருக்குமே பொதுவானதாக காணப்படுகிறது...

தமது பாலீர்ப்பின் மீதான வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக தம்மீது எதிர்மறை எண்ணங்களை விதைத்து, அதனை பெருக்கி, ஒருகட்டத்தில் தன்னையே ஏற்கமுடியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது... இதன் விளைவுகள் நபருக்கு நபர் மாறுபடும்... தன்னையே இழிவாக நினைத்துக்கொள்வது, தனது பாலீர்ப்பை ஏற்க மறுத்து மாற்றுவழி யோசிப்பது, தன்னை காயப்படுத்திக்கொள்வது (சில நேரங்களில் தற்கொலையில் கூட முடியலாம்!), பிற கே நபர்களை காணும்போது வெறுத்து ஒதுக்குவது போன்ற விளைவுகள் தன்னை மட்டுமல்லாது இந்த சமூகத்தையும் பாதிக்கும் ஆபத்தான விளைவுகளுள் சில...

எந்தெந்த காரணங்களால் ஒரு ஸ்ட்ரைட் நபர், ஒருபால் ஈர்ப்பை வெறுக்கிறானோ, அந்த அத்தனை காரணங்களும்தான் இந்த உள்ளார்ந்த வெறுப்பிற்கான காரணமுமாகும்... ஒருபால் ஈர்ப்பை பற்றி முழுமையான தெளிவில்லாமல், கே பற்றி சமூகத்தில் நிலவும் மூடத்தனமான கருத்துகள், தம்மை சுற்றி பெரும்பான்மையான ஆட்கள்  எதிர்பால் ஈர்ப்போடு இருப்பது போன்ற காரணங்கள் பரவலாக கூறப்பட்டாலும், இவை எல்லாவற்றையும்விட முக்கியமான காரணம் “மதம்”...

மதத்தில் ஒருபால் ஈர்ப்புக்கு எதிரான கருத்து கூறப்பட்டிருக்க, தனக்கு இருக்கும் பாலீர்ப்பு இறைவனுக்கு எதிரான ஒன்றாக கருதும் பெரும்பாலான நபர்கள், தமது பாலீர்ப்பை வெறுத்து ஒதுக்க முயல்கிறார்கள்... இந்தியா போன்ற நாடுகளில் கலாச்சாரம் என்கிற விஷயம் பாலீர்ப்பை ஏற்க மறுக்கும் காரணியாக நிற்கிறது... கலாச்சாரம், பண்பாடு, மத நம்பிக்கை என காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவை போதிப்பது என்னவோ ஒருபால் ஈர்ப்புக்கு எதிரான கருத்துகளைத்தான்... 

ஸ்ட்ரைட் நபர்கள் நம்பும் அதே காரணங்களால்தான் நம்மவர்களும் தமது பாலீர்ப்பை ஏற்க மறுக்கிறார்கள் என்ற ஆபத்தான பின்பற்றுதல், கடுமையான விளைவுகளை நமக்கு மட்டுமே கொண்டுவருகிறது... 

ஒரு நபர் எந்த அளவிற்கு ஹோமோபோபியா மனநிலை கொண்டவர் என்பதை தீர்மானிக்கும் ஒருவிதமான அளவீட்டு வழிமுறையை பற்றி இந்த இடத்தில் நான் குறிப்பிட்டாக வேண்டும்... அந்த வழிமுறையின் பெயர் IHP Scale… ஜான் மார்டின் மற்றும் லாரா டீன் என்ற இரண்டு ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வழிமுறை இன்றளவிலும் பொதுவாக பலராலும் பின்பற்றப்படும் அளவீட்டு முறை... ஒன்பது கேள்விகளை குறிப்பிட்ட நபரிடம் முன்வைத்து, அதற்கு அவர்கள் சொல்லும் பதில்களை வைத்து குறிப்பிட்ட நபரின் ஒருபால் ஈர்ப்புக்கு எதிரான மனநிலையை கண்டறிகிறார்கள்.... 

இந்த முறையை வைத்து ஆய்வுசெய்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆச்சர்யமான உண்மையையும் கண்டறிந்துள்ளார்கள்.... இந்த வகையான “உள்ளார்ந்த ஒருபால் ஈர்ப்புக்கு எதிரான மனநிலை” லெஸ்பியன் பெண்களை விட அதிகமாக கே ஆண்களுக்கு இருக்கிறதாக கண்டறிந்துள்ளனர்.... அதுமட்டுமல்லாமல், கே நபர்களைவிட பைசெக்சுவல் நபர்களுக்கு இந்த ஹோமோபோபியா அதிக அளவில் காணப்படுவதாகவும் கூறியுள்ளனர்... 

இந்த ஆச்சார்ய ஆய்வு முடிவுகளோடு, அந்த ஒன்பது கேள்விகளையும் உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ள இதோ அந்த ஒன்பது கேள்விகளும் உங்கள் பார்வைக்கு....

1.      பொதுவாகவே ஆண்களின் மீது உண்டாகும் ஈர்ப்பை நான் தவிர்க்க முயல்கிறேன்...

2.      யாராவது என்னுடைய சமபால் ஈர்ப்பை மாற்றிட வாய்ப்பு கொடுத்தால், உடனடியாக சம்மதித்து மாறிட நினைப்பேன்....

3.      ஆண்களின் மீது எனக்கு ஈர்ப்பு இருந்தாலும், நான் கே’வாக இருக்க மாட்டேனென நம்புகிறேன்....

4.      ஆண்களின் மீது எனக்கிருக்கும் ஈர்ப்பு கொஞ்ச நாளைக்குத்தான், நாளடைவில் அது மாறிவிடுமென நம்புகிறேன்...

5.      நான் ஸ்ட்ரைட்டாக மாறிட மருத்துவ உதவி தேவைப்படுகிறது...

6.      என்னை கொஞ்சம் கொஞ்சமாக பெண்களின் மீது ஈர்ப்புள்ள நபராக மாற்றிட முயன்று வருகிறேன்...

7.      மற்ற கே/லெஸ்பியன் நபர்களுடன் பழகுவது தவிர்க்கிறேன்... அவர்களுடன் பழகுவதால் என்னுடைய சமபால் ஈர்ப்பு அதிகரிக்குமென நினைக்கிறேன்...

8.      கே’வாக இருப்பதால் என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டேன்...

9.      என்னை முழுமையான ஸ்ட்ரைட்டாக மாற்றமுடியும் என உறுதியாக நம்புகிறேன்...

 (இது கே நபர்களுக்கான ஸ்கேல்.... லெஸ்பியன் பெண்களுக்கு “ஆண்கள்” என்று வருகிற இடத்தில் பெண்கள் என்று மாற்றிக்கொள்ளவும்!)

நீங்கள் இந்த ஒன்பது கேள்விகளில் எத்தனை கேள்விகளுக்கு பதிலை “ஆம்” என்று சொல்வீர்கள்?... முடிந்தால் அந்த பதிலை கூறவும்....
 

இந்தியாவை பொருத்தவரை சமூக சூழல் நமக்கு எதிரான மனநிலையில் இருப்பதால் பலருக்கும் இந்த கேள்விகளின் பல பதில்கள் “ஆம்” என்றுதான் இருக்குமென நினைக்கிறேன்.... இது மேற்கத்திய நாடுகளை வைத்து எடுக்கப்பட்ட ஆய்வு என்பதால், நம் சமூகத்திற்கு இது எந்த அளவிற்கு பொருந்தும் என்பது சந்தேகமே என்றாலும், உலகில் எங்கிருந்தாலும் பாலீர்ப்பு ஒன்றுதான்.... ஆதலால் இந்த ஒன்பது கேள்விகளுக்கும் ஒருவன் “இல்லை” என்று பதில் சொல்லும் நாளைத்தான் நாமும் எதிர்பார்க்கிறோம்....

இந்த ஒன்பது கேள்விகளை மையமாக வைத்து ஒவ்வொரு ஒருபால் ஈர்ப்பு நபரையும் ஆய்வாளர்கள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கிறார்கள்...

1.      முற்றிலும் வெறுப்பவர்கள் ... இந்த வகை நபர்கள் தமக்கு ஆண்கள் மீது மட்டுமே ஈர்ப்பு இருந்தாலும், தாங்கள் கே அல்ல என்பதை முழுமையாக நம்புபவர்கள்... எந்த இடத்திலும் தங்களது பாலீர்ப்பை வெளிக்காட்ட தயங்குவார்கள்... அந்த தயக்கம் பின்னாளில் ஒருபால் ஈர்ப்புக்கு எதிரான வெறுப்பாக மாறி, பல இடங்களிலும் கே பற்றி தரக்குறைவாக பேசி தம் மனதினை ஆற்றிக்கொள்வார்கள்.....

2.      ஓரளவு வெறுப்பவர்கள்... இந்த வகையினர் தன்னுடைய பாலீர்ப்பை மறைத்து ஸ்ட்ரைட் வாழ்க்கையை வாழ எத்தனிப்பவர்கள்.... குடும்பம், பிள்ளைகுட்டி என்று ஆனபிறகும் கூட ஆண்களுடனான உறவை தொடர்பவர்கள்... தமக்கு ஆண்களின் மீதுதான் ஈர்ப்பு உண்டாகும், பெண்களின் மீது ஈர்ப்பே இல்லை என்றாலும்கூட எந்த நிலையிலும் தம்மை மாற்றுபாலீர்ப்பு கொண்டவர்களாக வகைப்படுத்துவதை ஏற்கமாட்டார்கள்....

3.      மறைத்து வாழ்பவர்கள்.... இத்தகைய நபர்கள் தாம் கே என்பதை ஏற்றாலும், எந்த நிலையிலும் தங்களை வெளிப்படுத்த மாட்டார்கள்... குடும்பம், சமுதாயம், நண்பர்கள் எல்லாம் தம்மை ஒதுக்கிவிடுவார்களோ என்கிற வேலிக்கு பின்னால் நின்று தம் பாலீர்ப்பை மறைத்து வாழ்பவர்கள்...  இந்த வகையினர்தான் நம் நாட்டில் அதிகமென நினைக்கிறேன்...

4.      மறைத்து வாழ்ந்தாலும், வெளிப்பட்டாலும் கவலைப்படாதவர்கள்... இந்த வகையினர் சமீப காலங்களில் நம் நாட்டில் அதிகரித்து வருகிறார்கள்.... தம்மை கே என்று பிறரிடம் வெளிப்படுத்த மாட்டார்கள், ஆனாலும் வெளியே தெரிந்தாலும் அதை பொருட்படுத்த மாட்டார்கள்... துணிந்து ஒருபால் ஈர்ப்புக்கான வாழ்க்கையை வாழ்ந்தாலும், அதை எல்லோரிடமும் வெளிப்படுத்தும் அவசியமில்லை என்று நினைப்பவர்கள்...

5.      முழுமையான வெளிப்படுத்தல்... தமது பாலீர்ப்பை எல்லோரிடமும் வெளிப்படுத்தி, தம்மை எல்லோரும் ஏற்கும் நிலைக்கு தன்னை நிலைநிறுத்திக்கொள்பவர்கள்... எந்த நிலையிலும் தனது பாலீர்ப்பால் கொஞ்சமும் வருத்தமோ, கவலையோ படாதவர்கள்...

இந்த ஐந்து வகைக்குள் நீங்கள் எந்த வகையினர்? என்பதை அறிய உங்களுக்கு அதிக சிரமங்கள் இருக்காது... 

பொதுவான ஹோமோபோபியாவை விட இந்த Internalized Homophobia ஆபத்து அதிகமான ஒருவிஷயம்... நம்மை பிறர் வெறுப்பதற்கும், நம்மை நாமே வெறுப்பதற்கும் உள்ள வேறுபாடு நாம் அறியாதது அல்ல... பிறரின் வெறுப்பை நாம் பொருட்படுத்தாமல் நகர்ந்து வாழ்க்கையை பயணிக்க முடியும், ஆனால் நம்மை நாமே வெறுத்து வாழ்வதென்பது கொடிய நரகத்தில் வாழ்வதற்கு சமம்... ஒருபால் ஈர்ப்பு உங்களின் இயல்பு, அந்த இயல்பை வெறுத்து வாழ்வது அர்த்தமற்ற வாழ்க்கையில் நம்மை கொண்டுசேர்க்கும்... முதலில் நம்முடைய பாலீர்ப்பின் மீது உண்டாகும் வெறுப்பு, மெல்ல நம் சுயத்தையே வெறுக்க காரணியாகிவிடும்... மெல்ல உங்கள் உடலும் மனமும் சிதைந்துபோக இந்த மனநிலை வழிவகுக்கும்... 

மதத்தின்பால் பாலீர்ப்பை வெறுக்கும் அன்பர்களே, உங்களை ஒருபால் ஈர்ப்புள்ள நபராக படைத்தது அந்த கடவுள்தானே.... கடவுளின் படைப்பை குற்றம் சொல்ல நீங்களும், நானும் யார்?... முழுமையாக உங்களை ஏற்கும் தருணம்தான், கடவுளை நீங்கள் முழுமையாகவும், உண்மையாகவும் நம்புவதாக அர்த்தம்...

நாளுக்கு நாள் இங்கே பாலீர்ப்பு காரணத்தால் நிகழும் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது... நம் மீது நாமே உண்டாக்கிகொள்ளும் வெறுப்புதான் மன அழுத்தத்திற்கு நம்மை கொண்டுசேர்க்கும்... மன அழுத்தம் அதிகமாகும்போதுதான் தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கும்... விளைவு, நம்மையே அழித்துக்கொள்ள நேரும் அளவிற்கு இந்த வெறுப்பு நம்மை குற்றவாளியாக்கிவிடும்...

முதலில் நான் சொன்ன ஒரு கருத்தை மீண்டும் அழுத்தமாக பதிவுசெய்ய விரும்புகிறேன்... ஒரு ஸ்ட்ரைட் நபர் எந்தந்த காரணத்தால் கே நபர்களை வெறுக்கிறானோ, அதே காரணங்கள்தான் ஒரு கே தமது பாலீர்ப்பை வெறுக்க காரணமுமமாகும்... அப்படியானால் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?... 

“உன்னைப்பற்றி அவன் குறைசொல்கிறான்... உனது இயல்புத்தன்மையை குற்றம் சாட்டுகிறான்... அவனோடு சேர்ந்து நீயும் அதை நம்பி பழியை உன்மீதே சுமத்திக்கொண்டால், உன்னை நீ ஏற்கமுடியாத நிலைக்கு தள்ளப்படுவாய்.... விளைவு, தன்னம்பிக்கையை இழப்பாய், மன ரீதியிலான குழப்பங்களுக்கு ஆளாவாய்... ஆனால், இவை எந்த பாதிப்பும் குறைசொல்லி வேடிக்கை பார்க்கும் ஸ்ட்ரைட் நபர்களுக்கு ஏற்படுவதில்லை என்ற உண்மையை புரிந்துகொண்ட பிறகு, அவனை நீயும் பின்பற்று...”

சரி, சீரியஸாகவே கட்டுரை முழுவதும் பயணித்துவிட்டோம்... ஒரு நகைச்சுவையான ஆய்வு முடிவோடு கட்டுரையை நிறைவுசெய்கிறேன்...

ஜார்ஜியா பல்கலைகழகத்தின் பேராசிரியரும் பிரபல உளவியல் ஆராய்ச்சியாளருமான பேராசிரியர் ஆடம் அவர்கள் நிகழ்த்திய ஆய்வைத்தான் இங்கே குறிப்பிட இருக்கிறேன்... 

“நான் ஓரினச்சேர்க்கையை எதிர்க்கிறேன், அது இயற்கைக்கு புறம்பானதுதான்” என்று பிடிவாதம் பிடித்த நூறு ஹோமோபோபிக் ஸ்ட்ரைட் நபர்களை (தங்களை ஸ்ட்ரைட் என்று சொல்லிக்கொண்டார்கள்!) இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார் ஆடம்...

அந்த நூறு நபர்களையும் ஒரு அரங்கில் அமரவைத்து “ஓரினச்சேர்க்கை வீடியோ”க்கள் பார்க்க வைத்தார்... பத்து நிமிடங்களுக்கு பிறகு அந்த நூறு நபர்களையும் ஆய்வுசெய்த ஆடம் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தார்... ஆம், ஓரினச்சேர்க்கைக்கு எதிராக கடுமையாக பேசிய நூறு நபர்களில் என்பது பேருக்கு (80%) அந்த வீடியோவை பார்த்ததால் கிளர்ச்சி உண்டாகியிருக்கிறது.... அப்படியானால் அந்த என்பது நபர்களும் ஓரினச்சேர்க்கை படங்களால் ஈர்க்கப்பட்டுள்ளனர்...

இதை எதற்காக நான் சொல்கிறேன் என்றால்,
“இங்கே ஓரினச்சேர்க்கையை குற்றமெனவும், இயற்கைக்கு புறம்பான ஒன்றாகவும் கதறும் பெரும்பாலான ஹோமோபோபிக் நபர்களின் வாய்வழி கருத்துகளை, அவர்களின் மனமும் உறுப்புமே ஏற்கவில்லை!”...

5 comments:

  1. Replies
    1. மூன்றாம் வகைதான் நம்மவர்கள் அதிகம் இருப்பார்கள் என்று தோணுது பிரபு....

      Delete
  2. yes homophobia is a social disease... I am also into third category....:-)

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி தம்பி...

      Delete
  3. Me 4 th category...... Soon comming out officially

    ReplyDelete