Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Wednesday 25 February 2015

"ஐ.சி.யு..." - சிறுகதை...







அந்த கண்ணாடிக்கதவிற்கு முன்பு எவ்வளவு நேரமாக நின்றுகொண்டிருக்கிறேன் என்றுகூட எனக்கு புரியவில்லை... கால்கள் தரையில் ஊன்றப்பட்ட உணர்வுகூட இல்லாமல், கதவு திறக்கப்பட்டு வெளிவரும் ஒவ்வொருவரையும் சற்றே கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.. கதவின் மேற்புறத்தில் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்த “ஐ.சி.யு என்ற எழுத்துகள், அனிச்சையாகவே என்னுள் அட்ரினலினை சுரக்கச்செய்தது....

“கதவுகிட்ட நிக்காதிங்க சார்... டாக்டர் ரவுண்ட்ஸ் வர்ற நேரம், அந்த பக்கம் போயி உக்காருங்க... எதாச்சும் தகவல்னா கூப்பிடுவாங்க! செவிலிப்பெண் ஒருத்தி கொஞ்சம் கடுமையாகவே சத்தமிட்டாள்... காலை முதல் இப்படி சொல்வது அவளுக்கு ஆறாவது முறை என்பதால், அவளுடைய கோபத்தில் நிறையவே நியாயம் இருக்கிறது...

அந்த கதவின் இடப்புறத்தில் வரிசைபடுத்தப்பட்ட இருக்கைகள் பெரும்பாலும் பல சோக முகங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது... ஐசியு வாசல் கண்களுக்கு படும்படியான இருக்கை ஒன்றில் அமர்ந்தேன், நெருப்பின் மீது அமர்வது போல பட்டும் படாமல் அமர்ந்தபடியே கடிகாரத்தை பார்த்தேன், பத்தென காட்டியது...

அருகிலிருந்த முதியவர் ஒருவர் என் தோளை தொட்டு “ரிலாக்ஸா இரு தம்பி... ராத்திரிலேந்து உன்ன பார்த்துட்டுதான் இருக்கேன்... ப்லட் பாங்குக்கும் ஐசியுக்கும் அலைஞ்ச அலைச்சல் பாக்கவே பாவமா இருந்துச்சு... கனிவாக பேசினார்...

அறுபது வயதிருக்கலாம்... வழுக்கைத்தலையில் ஆங்காங்கே வெள்ளை மயிர்கள், கண்களில் மெல்லிய கவலை, கைகளில் ஒரு பையும், தண்ணீர் பாட்டிலும்...

“ஒன்னும் சாப்பிடக்கூட இல்ல போல... கண்ணல்லாம் சோர்ந்து போயிருக்கு... இந்த தண்ணியாவது குடி! தண்ணீர் பாட்டிலை என் கைகளுக்குள் திணித்தார்... தொண்டை வரண்டுதான் இருந்தது என்றாலும், தண்ணீர் குடிக்கவல்லாம் தோன்றவில்லை...

“ஒன்னும் கவலைப்படாத... அந்த பையனுக்கு ஒன்னும் ஆவாது, கையில என்னமோ காயம்னு சொன்னாங்க... ரத்தம் மட்டும்தான போயிருக்கும், ப்லட் ஏத்திட்டா சரியாகிடும்... இந்த முருகன் கோவில் திருநீற, உள்ள அவன பாக்கும்போது பூசிவிடு... எல்லாம் சரியாகிடும்! ஒரு திருநீர் பொட்டலத்தை என் சட்டைப்பைக்குள் திணித்தார்... ஆனால், அவர் சொல்லும் எதுவுமே என் காதுகளை தாண்டி மூளையை அடையவில்லை... நினைவுகள் முழுக்க உள்ளே படுத்திருக்கும் திலீபனால், ஆங்காங்கே ஸ்தம்பித்து நின்றது... பேசவோ, உணரவோ, உண்ணவோ முடியாத ஒரு எந்திரம் போலத்தான் நடமாடுகிறேன்... இன்னும் சொல்லப்போனால், இன்னும் அழக்கூட என்னால் முடியவில்லை...

“திலீபன் அட்டண்டர் யாரு இருக்கீங்க? செவிலிப்பெண் ஒருத்தி அவசரமாக அழைத்தாள்...
கையில் திணிக்கப்பட்ட தண்ணீர் புட்டி தடுமாறி கீழே விழ, வேகமாக விரைந்து ஐ.சி.யுக்குள் நுழைந்தேன்...

கதவை திறந்த வேகத்தில் முகத்தில் அறைந்த மருந்துகள் நெடி இயல்பாகவே பதற்றத்தை உண்டாக்கியது... நிசப்தமான சூழலும், ஆங்காங்கே ஒலித்த ‘பீப் சத்தங்களும், தொண்டைக்குழியின் எச்சிலைக்கூட இறங்கவிடவில்லை... கடந்து சென்ற ஒவ்வொரு படுக்கையிலும் மூக்கிலும் வாயிலுமாக குழாய்கள் சொருகப்பட்டு, உடலின் பல்வேறு பாகங்களோடு ஒயர்கள் இணைக்கப்பட்டு... போதும் போதும்... அதோ, அந்த கடைசி படுக்கையில் திலீபன்... அவனருகே நின்று கண்களை தொட்டு ஆராய்ந்துகொண்டிருந்தார் மருத்துவர்... அவர் பின்னாலேயே இரண்டு பயிற்சி மருத்தவர்கள் எதையோ எழுதிக்கொண்டே நின்றனர்...

“நீங்கதான் இந்த பேஷண்டோட அட்டண்டரா? கனீர் குரலில் கேட்டார் மருத்துவர்...

“ஆமா... சிரமப்பட்டு சொன்னேன்...

“எப்டி ஆச்சு?

“கம்பி கிழிச்சிடுச்சு... அதான்...

“நீங்க பார்த்திங்களா?

“இல்ல... தலையை இடமும் வலமுமாக அசைத்தேன்...

“பின்ன எப்டி கம்பி கிழுச்சதா சொல்றீங்க?.. இது ஆக்சிடன்ட் மாதிரி தெரியல... ஷார்ப் கட் இஞ்சுரி, கத்தியால கீறினது போல தெரியுது... வெயின் கட்டாகி, மணிக்கணக்கா ப்லட் லாஸ் ஆகிருக்கு... இது சியூசைட் அட்டம்ப்டா இருக்குமோன்னு தோணுது... உயிருக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லங்குறதால ஓகே, எதாச்சும் ஆகிருந்தா?.. யாரு போலிஸ், கேஸ்ன்னு போறது? பட்டாசு போல பொரிந்து தள்ளினார்... ஆனால், என் காதுகளை தாண்டி மூளைக்குள் அவர் சொன்ன ஒரே ஒரு செய்தி மட்டும்தான் நுழைந்தது ‘உயிருக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லங்குறதால!... அப்டின்னா, திலீபன் பிழைச்சுட்டானா?...

“உயிருக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லைதானே சார்? நேரடியாகவே கேட்டுவிட்டேன்... அவர் முகம் சுருங்கியது, இவ்வளவு நேரம் போலிஸ், கேஸ்னு பினாத்திய நபரிடம், அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் இப்படி கேட்டால் வேறு என்ன செய்வார்!...

“எல்லாம் உங்கள சொல்லணும்... நேத்து கேஷுவாலிட்டில யாரு டியூட்டி டாக்டர்?... இப்டி எதையும் விசாரிக்காம அட்மிட் செஞ்சு, கடைசில நம்ம உயிரை வாங்குவாங்க... நான் அவர்கிட்ட பேசிக்கறேன்! அருகிலிருந்த மருத்துவமனை ஊழியர்களை பார்த்து முனகிக்கொண்டே, சற்றே கோபமாக அங்கிருந்து நகர்ந்தார் மருத்துவர்...

அதையும் அலட்சியப்படுத்துவதை போல, அங்கு நின்ற செவிலிப்பெண்ணிடம் வேகமாய் சென்று, “உயிருக்கு ஒன்னும் பிரச்சின இல்லையே சிஸ்டர்? என்றேன்...

“பேஷன்ட் உயிருக்கு ஒன்னும் பிரச்சின இல்ல... நேத்து கேஷுவாலிட்டில டியூட்டி பார்த்த டாக்டருக்கு எதாச்சும் பிரச்சின ஆகலாம்! சிரித்தபடியே ஒரு காகிதத்தில் என்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார் செவிலியர்...

“எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவீங்க? பரபரப்பாக கேட்டேன்...

“விட்டா இப்போவே பெட்டோட தள்ளிட்டு போயிருவீங்க போல?... இன்னும் அவர் கண்ணு முழிக்கல, ப்ளட் கடைசி யூனிட் போய்கிட்டு இருக்கு... ஒரு நாலஞ்சு மணி நேரம் மானிட்டர் பண்ணிட்டு, வார்டுக்கு மாத்துவாங்க... நாளைக்குதான் டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க... இவருக்கு நீங்க என்ன வேணும்? கோப்புகளில் எதையோ எழுதிக்கொண்டே கேட்டார்...

“அது... அது.. ப்ரென்ட் மாதிரி இழுத்தபடி சொன்னேன்...

“அச்சச்சோ... நீங்க ப்லட் ரிலேஷன் இல்லையா?... இது தெரிஞ்சா, இப்போ போன டாக்டர் மறுபடியும் முருங்கமரத்துல ஏறிடுவார்!... இவர் அப்பா, அம்மா யாரும் வரலையா? பதறினார்...

“இல்ல

“உங்கள அவரோட கசின்னு ரெஜிஸ்டர் பண்ணிக்கறேன், யாராச்சும் கேட்டா அப்டியே மெய்ண்டைன் பண்ணிக்கோங்க! பரிதாபமாக கேட்டார்... பரவாயில்லை, கசின் தானே?... இருந்துட்டு போகட்டும், ப்ரதர்னு சொல்லி பதறவைக்காத வரைக்கும் சந்தோஷம்தான்...

செவிலியரை கடந்து திலீபனின் அருகில் நகர்ந்து நின்றேன்...
முகமல்லாம் வெளிறிப்போய் படுத்திருக்கிறான்... ரத்தம் ஒவ்வொரு சொட்டாக உடலுக்குள் கலந்துகொண்டிருந்தது... இன்னும் கண் விழிக்கவில்லை... விழித்துவிடுவான், மூச்சல்லாம் நல்லாத்தான் விடுறான்.. உடலும் கூட மெல்லிய அசைவை அவ்வப்போது வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது...

கண்விழித்து எழுந்ததும், அவன் கன்னங்கள் பழுக்க ரெண்டு அறை விடனும்... ஏன் இந்த முடிவுக்கு போனான்?.. சண்டை நடந்து, ஒருசில மணி நேரங்கள் கடந்து அறைக்கதவை திறந்த கணமே என்னை அதிர்ச்சியால் கொன்றுவிட்டான்... ஒரு கையில் கத்தி, மறுகையில் வெட்டப்பட்ட காயத்திலிருந்து ஆறாக பெருகும் ரத்தம்... ஒருநிமிடம் எனக்கு தலைசுற்றி மயக்கமே வந்துவிட்டது... ஆனாலும் சுதாரித்து, அவனைத்தூக்கி மருத்துவமனையில் சேர்ப்பதற்குள்... அப்பப்பா... எனது வாழ்வின் அதிபயங்கர நிமிடங்கள் அவைதான்...

தற்கொலைக்கு முயலும் அளவுக்கு அது அவ்வளவு பெரிய சண்டையல்லாம் இல்லை... சண்டையின் முதல் புள்ளி எங்கே தொடங்கியது என்று கூட நினைவில் இல்லாத அளவிற்கு நான்கு நாட்களாக ஒரு பனிப்போர்... பரஸ்பர ஈகோ மோதல்தான்...

“நீ வந்ததுலேந்தே என்ன கொஞ்சம் கொஞ்சமா கொன்னுக்கிட்டுதான் இருக்க! கடைசியாக அவனிடம் சொன்ன, சொல்லக்கூடாத வார்த்தை இதுதான்.. இது ரொம்பவே தவறான வார்த்தை என்பதில் சந்தேகமே இல்லை... ஆனால் அதற்காகவல்லாம் உயிரை விடணும்னா, நான் இந்நேரம் நூறுதடவைக்கு மேல செத்திருக்கணும்... பாவி, கத்தியால் வெட்டியிருக்கும்போது எவ்வளவு வலித்திருக்கும்!.. வலியால் சத்தம்போட்டிருந்தால்கூட வந்து பார்த்திருப்பேன், அழுத்தக்காரன் அதில் கூட பிடிவாதமாக வலியை பொருத்துக்கொண்டிருக்கிறான்!... இதனை விடப்போவதில்லை, கண்விழித்த மறுகணமே அவனோடு நிச்சயம் சண்டைபோடுவேன்... எழட்டும்... எழுந்து என் சண்டைக்கு உடல் பலத்தை பெற்றுவரட்டும்!...

என் சட்டைப்பையில் ஏதோ உறுத்துவது போல தெரிந்தது... கைவைத்தேன், அந்த பெரியவர் கொடுத்த திருநீர் பொட்டலம்... நொடி கூட தாமதிக்காமல் அதைபிரித்து, திலீபனின் நெற்றியில் பூசிவிட்டேன்... கண் இன்னும் திறக்கவில்லை என்றாலும், அந்த திருநீர் கண்ணுக்குள் விழுந்திடக்கூடாதுன்னு நெற்றியில் ஊதிவிட்டேன்... கடவுள் நம்பிக்கை எனக்கில்லை என்றாலும், அவனுக்கு நிறையவே இருக்கு...  இது நாத்திகம் பேசுவதற்கான தருணம் இல்லை, கடவுள் இருக்கிறாரோ இல்லையோ ஒரு நிமிடம் கண்களை மூடி பிராத்தித்துக்கொண்டேன்.... ஏதோ ஒரு மனநிறைவு, பொறுப்பை அந்த கடவுளிடமும் பகிர்ந்துகொண்டதை போன்ற ஆழ்மன நிம்மதி... அவன் நெற்றியை வருடிவிட்டேன்...

“ஹலோ சார், எவ்ளோ நேரம் இப்டி பாத்துகிட்டே நிக்கப்போறிங்க?... இது ஐசியூ, வெளில போங்க சார்! செவிலிப்பெண் கட்டளையிட்டார்...

சரிதான்.. நானும் மெல்ல ஒவ்வொரு படுக்கையாக கடந்து, அந்த அறையைவிட்டு வெளியேறினேன்... காத்திருப்போர் இடத்தில் கூட்டம் குறைந்திருந்தது... என் கண்கள் அந்த இடத்தை அலசியது... அங்கதான் நிற்கிறார், யாரிடமோ அலைபேசியில் பேசிக்கொண்டு நிற்கிறார்... மெல்ல அவரை நோக்கி நகர்ந்தேன்...

“ஒன்னும் ப்ராப்ளம் இல்லம்மா... இன்னும் ரெண்டு நாள்ல வீட்டுக்கு போய்டுவோம்!... அவ எழுந்ததும் பேச சொல்றேன் பேசிக்கொண்டே என்னை பார்த்தார், மெலிதாக புன்னகைத்தார்.... பதிலுக்கு நானும் புன்னகைத்து அவருக்கு காத்திருப்பது போல அருகிலேயே நின்றேன்... அலைபேசியை துண்டித்துவிட்டு என்னருகே வந்தார்...

“அந்த பையனுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டார் போல? சிரித்தார்...

“ஆமா... அதெப்டி உங்களுக்கு தெரியும்?

“உன் சிரிப்புதான் உள்ள நடந்தத அப்டியே படம் போல காட்டுதே... இதைத்தான் நானும் சொன்னேன்... வெள்ளை கோட் போட்டுக்கிட்டு டாக்டர்ஸ் சொன்னாத்தான் எதையும் நம்புவீங்க போல! என் தோள் தட்டி சிரித்தார்...

“ரொம்ப தாங்க்ஸ் சார்... உருக்கத்துடன் சொன்னேன்...

“எதுக்கு?

“எதுக்குன்னு தெரியல... ஆனா தாங்க்ஸ்
 
“சும்மா தாங்க்ஸ் என்னத்துக்கு?... பக்கத்துலதான் கேண்டீன், ஒரு காபி குடிக்கலாமா?
மறுக்க மனமில்லை... தலையசைத்து சம்மதித்தேன்...

இருவரும் பேசிக்கொண்டே நடந்தோம்... இருவரும் பேசிக்கொண்டே என்பதைவிட, ‘அவர் மட்டும் பேசிக்கொண்டே, நான் கேட்டுக்கொண்டே என்று சொன்னால் பொருத்தமாக இருக்கலாம்... அவருடைய ஊர், தொழில், வசிப்பிடம், பிடிச்சது, பிடிக்காதது எல்லாமும் பேசினார்...

குழந்தைகள் வார்டை தாண்டும்போது ஒரு ஆறு வயது மதிக்கத்தக்க சிறுமி அவரை பார்த்து புன்னகைத்தாள்... மொட்டைத்தலையுடன்,  உடல் மெலிந்த தோற்றத்துடன், கையில் ஐவி இணைப்புடன் நின்றாள்...

“மீனு, சாப்டியா? என்று வாஞ்சையோடு அவள் தலையை வருடினார்... மழலை மொழியில் அவள் ஏதோ பதில் சொல்ல, ஓரிரு நிமிடங்கள் கழித்து என்னருகே வந்து பயணத்தை தொடர்ந்தார்...

“நாமல்லாம் காலுக்கு செருப்பில்லையேன்னு கவலைப்பட்டிட்டு இருக்கோம், ஆனா காலே இல்லாதவங்க கூட தன்னம்பிக்கையோட வாழ்றத பார்க்கறப்போ ஆச்சர்யமா இருக்கும்! என்னிடம்தான் சொன்னார்... ஆனால் எதற்காக சொன்னார்?... இதே குழப்பத்தோடு அவரை பார்த்தேன்...

“இப்போ பார்த்தோமே பொண்ணு, அவளுக்கு லுக்கீமியா... ரத்த புற்றுநோய்... இந்த ஆறு வயசுல நம்மளால ஒரு சின்ன ஊசியோட வலியை கூட தாங்கிருக்க முடியாது... ஆனா, கீமோத்தெரப்பி போல வலி மிகுந்த ட்ரீட்மெண்ட்  எடுக்குற இவ பெருசா அழுது நான் பார்த்ததே இல்ல... அழுத்தக்காரின்னு அவ அம்மா சொல்வாங்க, துணிச்சலான பொண்ணுன்னு நான் சொல்வேன்... பெரியாளா ஆனப்புறம் இவ ரொம்ப பெரிய உயரம் போவா பாரு!

ஒரு நிமிடம் நின்று அந்த சிறுமியை  மீண்டும் திரும்பி பார்த்தேன்.. சுவற்றில் கைவைத்து ஏதோ விளையாடிக்கொண்டிருக்கிறாள்... உண்மைதான், அவள் கண்களில் கொஞ்சமும் பயமில்லை... வலியோ, உயிர் பயமோ அவளுக்கு அறவேயில்லை... நேற்றைய இரவு முழுவதும் நான் எவ்வளவு கோழையாக இருந்திருக்கிறேன்! என்பதை அவளை பார்த்தபின்புதான் புரிந்துகொண்டேன்...

மீண்டும் நடையை தொடர்ந்து, ஒருவழியாக கேண்டீனை அடைந்துவிட்டோம்!... ஒரிசிலரை தவிர வேறு கூட்டம் அங்கில்லை.. இந்த முற்பகல் வேளையில் எங்களை போன்ற ஒருசிலர் மட்டும்தான் காபியை நாடி வந்திருக்கிறார்கள்... ஒரு சுத்தமான இருக்கையில் இருவரும் ஒருவரை ஒருவர் எதிரெதிர் பார்த்தபடி அமர்ந்தோம்...

அவருடைய அலைபேசி அடித்தது...

“கேண்டீன் வந்திருக்கேன்மா... அம்மா நல்லா இருக்கா... அவ எழுந்ததும் பேச சொல்றேன்! சொல்லிவிட்டு அலைபேசியை துண்டித்துவிட்டு என்னை பார்த்தார்...

“என் மகளுக... அவங்க அம்மாவப்பத்தி ரன்னிங் கமெண்ட்ரி கேட்டுகிட்டே இருக்காங்க! சிரித்தார்...
“உங்க வைப்க்கு என்ன ப்ராப்ளம்?

“நெஞ்சு வலி... அன்ஸ்டேபிள் ஆஞ்சைனான்னு சொன்னாங்க... தேவையில்லாத ஸ்ட்ரெஸ், குழப்பங்கள் இப்டி ஆக்கிடுச்சு... இப்போ பரவால்ல, அனேகமா இன்னிக்கு வார்டுக்கு மாத்திடுவாங்க... புள்ளைங்கதான் ரொம்ப பயப்படுறாங்க!

“உங்களுக்கு எத்தன பசங்க?

“மூணு பேர்... ஒரு பையன், ரெண்டு பொண்ணுங்க... எல்லாருமே அப்ராட்ல இருக்காங்க... கல்யாணம் செஞ்சு பிள்ளை குட்டிகளோட செட்டில் ஆகிட்டாங்க!

“அப்போ நீங்க?

“நாங்க தனியாத்தான் இருக்கோம்... வெளிநாடு போகவல்லாம் விருப்பமில்ல!... போனாலும் அவங்களோட ஒண்ணா இருந்து கஷ்டப்படுத்தவும் விரும்பல விரக்தியாக சிரித்தார்...

“சாரி சார்

“இது எதுக்கு?.. அட சும்மா விடுப்பா... காபி ஆறிடப்போகுது, எடுத்துக்குடி! காபி குவளையை கையில் திணித்தார்... அவர் கண்களில் பயமில்லை, உடலில் தளர்வு இல்லை, நாளைய பற்றிய கவலையே இல்லை... இந்த தருணத்தை ரசித்து வாழ்கிறார்!... இவரின் நம்பிக்கையான வார்த்தைகளே, அந்தம்மாவை குணப்படுத்திடும்னு தோனுச்சு....

“இவ்ளோ எதார்த்தவாதியா, டேக் இட் ஈசி ஆளா இருக்கீங்க.... உங்க மனைவிக்கு எப்டி நெஞ்சு வலி?

“ஹ ஹா... நான்தானே எதார்த்தவாதி, அவள் இல்லையே... எனக்கு நேரதிர் அவ... எல்லாத்தையும் போட்டு மனசுக்குள்ளயே குழப்பிப்பா... இப்போ காபி குடிச்சில்ல, வேற எதாச்சும் உனக்கு தோணுச்சா? என்னை பார்த்து கேட்டார்...

“இல்லையே... டேஸ்ட் நல்லா இருந்துச்சு, அவ்ளோதான்...

“ஹ்ம்ம்... இதுவே அவளா இருந்திருந்தா, இந்த கப் நல்லா கழுவிருப்பாங்களா?.. பாலுக்கு பதிலா பவுடர் கலந்திருப்பாங்களோ?, காபி பொடியில சிக்கரி அதிகம் சேர்த்திருப்பாங்களோ?ன்னு ஆயிரம் கேள்விகள் அவ மனசை குடஞ்சுகிட்டே இருக்கும்... மெல்ல அவ எண்ணங்களை திசைதிருப்பவே எனக்கு போதும், போதும்னு ஆகிடும்! கோப்பையை மேசை மீது வைத்தார்... என் கண்கள் அகல விரிந்தபடி அவர் வாயை உற்றுநோக்கியபடியே நின்றன...

“இவ்ளோ யோசிப்பாங்களா என்ன?

“இதையும் தாண்டி யோசிப்பா.... இவ கேரக்டர என்னைத்தவிர யாராலையும் அனுசரிச்சு போகமுடியாது, எங்க பிள்ளைகளால கூட... அதனாலதான் தனியாவே இருந்துட்டோம்... சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர் அலைபேசி அவசரமாக அழைக்க, என்னிடம் அனுமதி பெற்றுவிட்டு தனியே ஒதுங்கினார்... ஏதோ பணம் விஷயமாக யாரிடமோ பேசிக்கொண்டிருக்கிறார், மொத்த சுமைகளையும் என்னிடம் இறக்கிவைக்க அவருக்கு விருப்பமில்லை போலும்!... ஆனாலும் இவர் ஆச்சர்ய மனிதர்தான்...

கிட்டத்தட்ட அவர் மனைவியை பற்றி சொன்ன அதே சுபாவம் உடையவன்தான் திலீபனும்... தேவையில்லாத குழப்பங்கள், எதிர்மறை கற்பனைகள், வரம்பை மீறிய பயங்கள்னு என்னையும் இம்சிப்பவன்... சில நேரங்களில் அவனைப்போலவே நானும் பயப்படவில்லை, பதறவில்லைனு கோபித்துக்கொள்வான்... விளைவு இப்போ நடந்திருப்பதை போல விபரீதமாகத்தான் முடியும்!...

“நீ தேவையில்லாம பயப்படுற திலீபா...

“நம்ம எதிர்காலம் பற்றிய பேச்சு உனக்கு தேவையில்லாத விஷயமா?

“அதது நடக்குறப்போ பார்த்துக்கலாமே?

“எது?.. நம்ம பிரிவா?

“இப்ப என்ன நடந்துச்சுன்னு நம்ம பிரிவை பற்றியல்லாம் யோசிக்குற?

“எதுவும் நடந்திடகூடாதுன்னுதான்... இப்போவே உங்க அப்பாகிட்ட நம்ம விஷயத்த பத்தி பேசு!

“லூசா நீ?... நான் பேசுறேன்னுதான சொல்றேன், அவசியம் உண்டாகுறப்போ எனக்கு பேசத்தெரியும்

“ஆமா நான் லூசுதான்... உன்ன மடத்தனமா நம்புற நான் லூசுதான்... பேசாம என்னைய கொன்னுட்டு, வேற நல்ல லைப் பார்ட்னர் தேடிக்கோ...

“நானா உன்னை கொல்லனும்?... நீதான் வந்ததுலேந்து என்னை கொன்னுகிட்டு இருக்க! இதுதான் எனக்கும் அவனுக்கும் இடையில் நிகழ்ந்த கடைசி உரையாடல்... எப்போதாவது ஒருநாள் இப்படி நடந்திருந்தால் சமாளிச்சிருக்கலாம், எப்பவுமே இதுதான் பிரச்சினைன்னா என்ன பண்ணமுடியும்?...
அந்த பெரியவரே அலைபேசி முடித்து என்னருகில் மீண்டும் வந்து அமர்ந்துவிட்டார்... இம்முறை நானே என் சந்தேகத்தை கேட்கத்தொடங்கினேன்...

“உங்க வைப் பண்றதல்லாம் தப்புன்னு சொல்லி அவங்களுக்கு புரியவைக்க முடியலையா?

“அதுதான் அவளோட சுபாவம்... நான் அட்வைஸ் பண்ணினா ஒருநாள் ரெண்டுநாள் சாதாரணமா இருக்குற மாதிரி காட்டிக்க முயற்சி பண்ணுவா... ஆனா அது நடிப்புதான, அப்புறம் மறுபடியும் பழைய கதைதான்... அதனால, அவள மாத்த முயற்சி பண்ணாம என்னை மாத்திக்க ஆரமிச்சுட்டேன்...

“நீங்க ஏதோ தியாகம் பண்ற மாதிரில்ல இருக்கு?... விட்டுக்கொடுக்குறது தப்பில்ல, அதுக்காக உங்க மொத்த சுபாவத்தையும் இழக்கனுமா?

“இல்லப்பா... எனக்கும் சில குறைகள் இருக்கத்தான் செய்யும்... ஆனா அதல்லாம் குறைகள்னு நான் உணராத அளவுக்கு அவ எதையும் பொருட்படுத்துறதில்ல... எதையும் யோசிச்சு செய்ற பழக்கம் எனக்கில்ல, அதிகமான மறதி, எதையும் எடுத்த இடத்தில் வைக்காம தேடிட்டே இருப்பேன், முட்டாள்த்தனமா யாரையும் நம்பி பணத்தை ஏமாறுவேன்... இப்டி நிறைய என் குறைகள சொல்லிகிட்டே போகலாம்... அவளோட குறைகள பூதாகரமாக்குற நான் நல்லவனா? என்னோட குறைகள கண்டுக்கவே கண்டுக்காத அவ நல்லவளா சொல்லு?... நியாயமான கேள்வி... திலீபன் கூட இதுவரைக்கும் என் குறைகளை முன்னிறுத்தி சண்டை போட்டதில்லை... என் குறைகளை அப்படியே ஏற்றுக்கொண்ட ஒருவனை இதுகாலமும் குறைகளை மட்டுமே சொல்லி காயப்படுத்திய நான் எவ்வளவு பெரிய முட்டாள்!...

அவரே தொடர்ந்தார் “ஒருவேள நம்ம ரசனை, குணம், பழக்கவழக்கம் போலவே இருக்குற ஒருநபர் நம்ம வாழ்க்கைத்துணையா அமைஞ்சிட்டா நல்லா இருக்கும்னா நினைக்குற?... கொஞ்ச நாள்ல வாழ்க்க போர் அடிச்சிடும்... இப்டி முரண்பட்ட நபர்களா இருப்பதாலதான் ஒவ்வொருநாளும் சுவாரஸ்யமா போகுது, ஒவ்வொரு நிமிஷத்தையும் ரசிச்சும் வாழமுடியுது!... அவளுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து செய்றது ரொம்பவே த்ரில்லிங்கா கூட இருக்கு...

“அப்போ உங்களுக்குள்ள நடக்குற சண்டைகளை எப்டி பேசி தீர்ப்பிங்க?

“நிறைய நேரம் பேசாமல் இருந்தாலே பிரச்சினை தீர்ந்திடும்... இப்போ ஏதோ சண்டை வருதுன்னு வச்சுக்கோ, ஒரு மணி நேரம் அவ கண்ணுலேயே படமாட்டேன்... எங்க ரெண்டு பேரோட தவறுகளையும் தனித்தனியா யோசிக்க அந்த ஒருமணி நேரம் போதும்... அப்புறம் வீட்டுக்கு வந்ததும் நடந்த சண்டையைப்பற்றி எதுவும் பேசாமல், சாதாரணமா பேசுவேன்... அவளும் எதையும் காட்டிக்காம பேசுவா... அந்த சண்டை அத்தோட முடிஞ்சிடும்... ஒருவேளை பேசித்தீர்க்க அவளோட உக்காந்து வாதம் பண்ணேன்னு வச்சுக்க, பத்து வருஷத்துக்கு முன்ன நடந்த சண்டைலேந்து அவ தொடங்குவா... என் கண்ணு முழியல்லாம் பிதுங்குற அளவுக்கு பேசுவா... அதனாலதான் அதுக்கு நான் வாய்ப்பு கொடுக்குறதில்ல... அந்த ஒரு மணி நேர அமைதி எப்பேர்பட்ட சண்டையையும் காணாமல் ஆக்கிடும்!... ஒரே விஷயம்தான் சந்தோஷத்தை வாழ்க்கை முழுக்க பேசலாம், சண்டையை பத்தி ஒருதடவ கூட பேசக்கூடாது... நிதர்சனமான வார்த்தைகள்... இனியும் அவனோட நடந்த பிரச்சினைகளை பற்றி பேசக்கூடாது, நல்ல விஷயங்கள் ஆயிரம் இருக்க, எதற்காக கவலைகளை உண்டாக்கும் பிரச்சினைகளை பற்றியே பேசணும்!...

“உண்மைதான் சார்... நெறைய விஷயங்கள இப்போதான் புரியுது... இன்னிக்கு முழுக்க உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லிட்டே இருக்கேன், இருந்தாலும் இப்பவும் சொல்லித்தான் ஆகணும்... தாங்க்ஸ்... மனமுருக பேசினேன்...

“இப்டி பேசிட்டே இருந்தா ஐசியூல நம்மள யாரும் தேட ஆரமிச்சிடுவாங்க... அங்க போகலாம்... கடிகாரத்தை பார்த்தபடியே அவசரமாக எழுந்தார்... இரண்டு மணி நேரங்கள் பேசியிருக்கிறோம், அடேங்கப்பா... எனக்குமே அப்போதுதான் திலீபனின் இருப்பே நினைவுக்கு வந்து பதற்றமாக எழுந்து நடையும், ஓட்டமுமாக ஐசியூ நோக்கி விரைந்தோம்...

“திலீபன் அட்டண்டர் எங்க? என்று செவிலிப்பெண் ஒருத்தி கேட்பதற்கும், நாங்கள் அந்த இடத்தை அடைவதற்கும் அவ்வளவு சரியாக இருந்தது....

சற்று முன்னோக்கி நகர்ந்து, “சொல்லுங்க சிஸ்டர் என்றேன்...

“பேஷன்ட் கண் முழிச்சுட்டார்... பாக்குறதுன்னா பார்த்துட்டு, இன்னொரு பத்தாயிரம் டெபாசிட் பண்ணிடுங்க!

“அவனை பாக்க பத்தாயிரமா? சிரித்தேன்...

“இல்ல சார்... இது ஐசியூ சார்ஜ், மெடிசின் எல்லாத்துக்கும்... பதில் சொல்லிக்கொண்டே என்னை ஆச்சர்யமாக பார்த்தாள்... இவ்வளவு நேரமும் பதற்றமும், கவலையுமாக சூழப்பட்ட முகத்தில், ஆச்சர்யமாக வெளிவந்த சிரிப்பும் நக்கலும் அதிர்ச்சியை உண்டாக்குவதில் வியப்பென்ன?...

அவளை கடந்து அந்த அறைக்குள் நுழைந்தேன்... அதே மருந்து நெடியும், பீப் சத்தங்களும்.. ஆனால் இம்முறை எனக்கு பதற்றம் இல்லை.. இயல்பாக நடந்து அந்த கடைசி படுக்கையை நோக்கி நகர்ந்தேன்...

திருதிரு முழிகளுடன் திலீபன் என்னை உற்றுநோக்கிக்கொண்டிருந்தான்... அருகில் சென்று அவன் நெற்றியை வருடி, “இப்போ எப்டி இருக்கு? என்றேன்....

“ஹ்ம்ம்... மெல்ல தலையசைத்தான்... அந்த அசைவில் அவனுள் இருந்த குழப்பங்களும் வெளிப்பட்டன....

அந்த படுக்கையின் விளிம்பில் அமர்ந்து, காயப்பட்ட அவன் கைகளை வருடினேன்... கட்டுபோடப்பட்டிருந்தது, அதன் மீதுதான் விரல்களால் வருடினேன்... எவ்வளவு பெரிய காயம், வலியால் துடித்திருப்பான்... கண்கள் என்னை மீறி நீர்விட்டது...

“சாரி கௌதம்... பேச்சை தொடங்கியவனின் வாயை என் விரல்களால் மூடினேன்...

“எதுவும் பேசாத... இப்போ வலி இல்லையே? அவன் கண்களை பார்த்தேன், அது கலங்கி நீரினை திரட்டி உருட்டி வெளிவிட்டுக்கொண்டிருந்தது....

“வலியல்லாம் இல்ல... ஆனா, நான் ஏன் இப்டி செஞ்சேன்னா... மீண்டும் விட்ட இடத்தை தொடர்ந்தான், விடாக்கண்டன்...

“நடந்து முடிஞ்சத பேசவேணாம், அத்தோட அத விட்டுடலாம்...

“பேசுனாதானே பிரச்சினை தீரும்!
 
“பேசி தீர்க்க இதென்ன இந்தியா பாகிஸ்தான் பிரச்சினையா?... குடும்பம்டா, போட்டு குழப்பிக்காம ரெஸ்ட் எடு... அவன் கன்னங்களில் வழிந்திருந்த கண்ணீர் சுவட்டினை துடைத்தேன்...

“ஆனா, பேசித்தீர்த்தா நான் நிம்மதியாவேன்டா...
 
“பேசாம தீர்க்க இன்னும் விஷயங்கள் நிறைய இருக்குடா... சொல்லிக்கொண்டே அவன் உதட்டினை என் விரலால் அழுத்தினேன், அவன் வலியால் ‘ஆஹ் என்றான்...

“ஐயோ, டேய் இது ஐசியூ... குளுகுளுன்னு இருந்தோன்ன வேற இடம்னு நினச்சுட்டியா? ஒருவழியாக அவனை கலகலப்பாக்கி, சோகங்களிலிருந்து மீட்டுவிட்டேன்... 

“சீக்கிரம் எழுந்து வா, வீட்டுக்கு போகலாம்... உன்ன மொத்தமா கவனிச்சுக்கறேன் கண்ணடித்து சிரித்தேன், அவனும் வெட்கத்தில் சிவந்தான்... கண்ணீர் துளிகள் காற்றில் கரைந்தது போலவே, அங்கே சூழ்ந்திருந்த கவலைகளும் காணாமல் போய்விட்டன!... வாழ்க்கையின் இன்னுமொரு பரிணாமம், சுகமாகத்தான் இருக்கிறது!...

14 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இன்று இந்த கதை என் குழபமான மனநிலைய ஒரு நிலைல நிறுத்திசி. இன்னைக்கு நா இருந்த மனநிலைக்கு என்னைய எங்கயோ கொண்டுபோயிருக்கும் . ரொம்ப ரொம்ப நன்றி விஜய்.

      கமல்தாசன் கு.

      Delete
    2. ரொம்ப நன்றி கமல்.... உங்களுக்குள் உண்டான மாற்றம், எல்லோர் மனதிலும் உண்டாகனும்னுதான் என் ஆசை...

      Delete
  3. சூப்பர் அண்ணா இப்பிடி சந்தோஷம் தர்ற கதைகள வாசிக்கேக என் கண்ணில் இருந்து கண்ணீர் கூட வந்துடுது. எப்பிடி அண்ணா உங்களால மட்டும் இப்பிடி எழுத முடிது. இரண்டு நாளைக்கு ஒருதடவ உங்க கதை வராதா எண்டு இணையத்த பாத்துக்கிட்டே இருப்பான். நீங்க காதல் தோல்விகளையும் பிரிவுகளையும் எழுதிய கதைகள விட இப்படி நேர்மறையான(positive) கதைகள் அன்பையும் புரிந்துணர்வையும் சொல்லும்போது ஏதோ நமக்கு நடப்பதைப்போல நானும் அந்த கதப்பத்திரமாகிவிடுக்கிறேன் கதைவாசிக்கும் போது,). உங்கள் இந்த உளவியல் ரீதியான .அணுகுமுறைகளை சொல்லும் இப்படி பட்ட கதைகள் gay வாழ்க்கைக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்த கூடியதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நீங்க இப்பிடி நிறைய கதைகள் எழுத வேணும் எண்டு கேட்டுக்கிறேன்.

    இப்படிக்கு
    உங்க கதைகளை எதிர்பார்க்கும் இலங்கை வாழ் உறவு
    நன்றி' அண்ணா

    ReplyDelete
    Replies
    1. உன் கருத்தால் என் மனமும் நெகிழ்ந்தது தம்பி... இக்கதை வெற்றிபெற்றால், இதனுடைய இரண்டாம் பாகம் எழுதுகிறேன்... மிக்க நன்றி தம்பி...

      Delete
  4. very nice... The way you narrated about being away for a while to solve the issues are correct. Keep it up!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி பிரபு...

      Delete
  5. A real nice story anna.. One of your best..
    I have always thought, perhaps feared, what will a gay couple do, in case of a medical emergency or something? Thanks for portraying the incedent in a story.. And a good message has also been delivered.. The most important of all is, the happy ending! Thank you so much for not killing one of them or both of them...

    ReplyDelete
    Replies
    1. அரவிந்த் உடைய கமென்ட் வந்திருப்பதா நோட்டிபிகேசன் வந்தப்போ, "ஆஹா... என்ன வில்லங்கமோ?"ன்னு நினைச்சுதான் உள்ள வந்தேன்... வந்து பார்த்ததும்தான் மூச்சே வந்துச்சு... இன்னொரு தடவை கதையில கொலை விழாததுக்கு நன்றி சொன்னின்னா,அடுத்த கொலை நீதான்... கொலைகள விட்டு நான் ரொம்ப நாளாச்சு... மறுபடியும் நினைவுபடுத்தி, முடிவெழுத வச்சிடாதப்பா... மேல இருக்குற கமென்ட்க்கு பதில்ல, இதோட இரண்டாம் பாகம் எழுதப்போறதா சொன்னேன்... அதோட முடிவை குழப்பிடாத... ஹ ஹா... ஆனாலும், நல்ல விரிவான தெளிவான பாசிடிவான கருத்துக்கு நன்றிகள் பல...

      Delete
  6. Superb story na.... unmaya pesama irundhave paadhi pbm solve aadium....:-)

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி தம்பி...

      Delete
  7. நச்சுன்னு இருந்துச்சு.. :)

    குறைவான எழுத்துக்களில் ஒரு நிறைவான கதை.. :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணாச்சி... உங்க கருத்தும் கூட "குறைவான எழுத்துகளில், நிறைவான கருத்து"

      Delete