“கே காதல்,
திருமணமல்லாம் சாத்தியம் இல்லைங்க... ஏதோ அப்போதைய தேவைக்காக ஒன்னு சேருவாங்க,
போர் அடிச்சதும் ப்ரேக்கப் செஞ்சுப்பாங்க... இதுல எங்க இருக்கு காதல்?” இப்டி வெளிப்படையா பேசுற எத்தனையோ ஆட்களை நான் பார்த்திருக்கேன்... ஒருவேளை
நெய்ல் பாட்ரிக் ஹாரிஸ் (Neil Patrick Harris) பற்றி அவர்கள் அறிந்திருந்தால், அத்தகைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருப்பார்கள்
என்று இப்போ தோணுது... அந்த அளவுக்கு கே பிரபலங்களின் வரிசையில் என்னை மிகவும்
வசீகரித்த பிரபலம் ஹாரிஸ்தான்...
1973ஆம் ஆண்டு பிறந்த இந்த கலைஞனுக்கு நடிகர், எழுத்தாளர், இயக்குனர், நகைச்சுவை
நடிகர், மாயாஜால வித்தகர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற பன்முக அடையாளம் உண்டு.. சமீபத்தில் நிகழ்ந்த ஆஸ்கார் விருது
விழாவை தொகுத்து வழங்கியவர் நம்ம ஹாரிஸ்தான் என்பது கூடுதல் தகவல்... எமி
விருதுகள், அகாடமி விருதுகள், டோனி விருதுகள்னு இவர் தொகுத்து வழங்காத
நிகழ்ச்சிகளே இல்லைன்னு சொல்லலாம் (நம்ம ஊர் டிடி மாதிரின்னு
வச்சுக்கலாம்)... இந்த விருதுகளை தொகுத்து வழங்கிய முதல் வெளிப்படையான சமபால்
ஈர்ப்பு நபர் இவர்தான் என்கிற கூடுதல் பெருமையும் ஹாரிஸ்’க்கு உண்டு... இதன்மூலம் 2010ஆம் ஆண்டின் தாக்கத்தை ஏற்படுத்திய நூறு
நபர்களில் ஒருவராக இவரை பிரபல டைம் இதழ் பெருமைப்படுத்தியது...
நம்ம ஊர் கமலஹாசன்
போல குழந்தை நட்சத்திரமாகத்தான் ஹாரிஸ் அறிமுகமானார், பின்பு தொலைக்காட்சி
நெடுந்தொடர்களின் மூலம் பிரபலமாகி, வெள்ளித்திரையில் பல்வேறு விருதுகளை வாங்கும்
அளவிற்கு உயர்ந்தவர்... சரி, எதற்காக இவருடைய வரலாற்றை அதிகம்
புரட்டிப்பார்க்கனும்?னு நீங்க நினைக்கலாம்... இனி சொல்லப்போகும் விஷயங்களுக்கு
முன்னுரையாக மேற்குறிப்பிட்டுள்ள சிறுகுறிப்பு அவசியம்...
ஆம், கிட்டத்தட்ட 11 வருடங்கள் (2004 முதல் இன்றுவரை) டேவிட் பர்க்கா என்ற நபருடன்
சமபால் இல்லறம் நடத்திக்கொண்டிருக்கும் ஹாரிஸ் நிச்சயம் போற்றிப்புகழவேண்டிய
நபர்தானே?... “ஒருவனுக்கு ஒருத்தன்” கான்சப்ட் வழி வாழ எத்தனிக்கும் நம்மவர்களாலேயே
எட்டித்தொட கொஞ்சம் கஷ்டமான இலக்கை, மேற்கத்திய நாட்டை சேர்ந்த அந்த தம்பதி வாழ்ந்து
காட்டுவது நமக்கெல்லாம் ஒரு பாடம்தான்... அதுமட்டுமில்லை இந்த ஹாரிஸ் – டேவிட்
தம்பதிக்கு கிடியன் மற்றும் ஹார்ப்பர் என்ற இரட்டைக்குழந்தைகளும் உண்டு... இப்படி
குடும்பம் குழந்தைகளோடு இன்றைக்கு நமக்கெல்லாம் முன்னுதாரணமாக வாழ்கின்ற ஹாரிஸ் உடைய கடந்த காலங்கள் ரொம்பவே கசப்பானவை...
தன் சுயசரிதை
புத்தகத்தில் ஒளிவுமறைவின்றி அவர் சொன்ன சில விஷயங்களை இப்போ பார்க்கலாம்...
தன் 13வது வயதில்தான் (1986) முதன்முதலில் தன்னுடைய பாலீர்ப்பை, தன் தாயிடம்
வெளிப்படுத்தியுள்ளார் ஹாரிஸ்...
“அம்மா, நான் கே’வாக இருப்பனோன்னு பயமா இருக்கு!” வழக்கமான பதின்ம வயது குழப்பத்தைதான்
வெளிப்படுத்தினார்...
அதற்கு அம்மாவோ,
“அதனாலென்ன?.. நீ கே’வா இருப்பதால உன் மேல நான் வச்சிருக்கிற அன்பு குறஞ்சிடுமா
என்ன?” என்று அன்போடு அணைத்து பயத்தை போக்கியுள்ளார்... பள்ளியின் இசை வாத்திய
குழுவின் ட்ரம்ப்பட் கலைஞர்தான் முதன்முதலில் ஈர்ப்பை உண்டாக்கி, நம்ம ஹாரிஸை
குழப்பியவர்... பேர், ஊர் தெரியாத அந்த இசைக்கலைஞரையும் வரலாறு ஹாரிசோடு இணைத்தே
கொண்டுவருவது ஆச்சர்யம்தான்..
பின்பு தன் இருபது
வயதுகளில் திரைத்துறையில் நுழைந்தபிறகு, தன்னுடன் நடித்த நடிகர் ஆண்டி என்பவருடன்
அடுத்த ஈர்ப்பு உண்டானது.. உடல் ரீதியான தொடர்பு பல மாதங்கள் தொடர்ந்தது... ஆனால்
ஹாரிஸ்’இன் உடல் தேவையை, ஆண்டி ஒருவரால் மட்டுமே பூர்த்திசெய்யமுடியவில்லை.. பின்புதான்
இணைய வளர்ச்சியின் காரணமாக கொட்டிக்கிடந்த சாட் ரூம்களில் பொழுதை
கழிக்கத்தொடங்கினார்...
முன்பின் தெரியாத
ஆட்களிடம் புகைப்படங்களை பகிர்ந்துகொண்டு, அடுத்தவர்களின் அங்கத்தின்
புகைப்படங்களை ரசித்து, அவர்களுடன் படுக்கைக்கு செல்லும் ஒருவித த்ரில் அனுபவம்
ஹாரிஸை அதிகப்படியாகவே ஈர்த்திருந்தது... அந்த த்ரில் அனுபவத்திற்கு ஒருகட்டத்தில்
அடிமையாகவே ஆகிவிட்டார்... திரை வாய்ப்புகளை கூட மறந்துவிட்டு, இணையக்கடலில்
மூழ்கிவிட்டார்... அதுதான் ஹாரிஸ் உடைய கருப்பு பக்கங்கள் நிறைந்த நாட்கள் என்று
சொல்லலாம்...
2003ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் நடந்த அந்த நட்சத்திர பார்ட்டிதான் ஹாரிஸ் உடைய
வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை உண்டாக்கியது... தன்னுடன் நடித்த சகநடிகை
கேட், ஹாரிஸை சந்தித்து நலம் விசாரித்தபோதுதான் அந்த ஆச்சர்யம் நிகழ்ந்தது... ஆம்,
கேட் உடன் வந்திருந்த டீஷர்ட் அணிந்து, முடிகளுக்கு சாம்பல் நிற டை அடித்திருந்த
அந்த இளைஞனை பார்த்தபோது ஹாரிஸ் மண்டைக்குள் மணி அடித்து, பல்பு எரிந்தது...
வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா சொல்வதைப்போல, “இந்த உலகத்துல யாரும் இப்டி ஒரு
அழகை இதுக்கு முன்ன பாத்திருக்கமாட்டாங்க!” என்ற ரீதியில் வைத்த கண் விலகாமல், அந்த இளைஞனை
வெறித்துப்பார்த்தார் ஹாரிஸ்...
அந்த இளைஞனை பற்றிய
ஆயிரம் கேள்விகள் அவருக்குள் எழ, சட்டென ஒரு யோசனைக்கு வந்த ஹாரிஸ், கேட்டை கட்டி
அணைத்து, கையை பிடித்து, “இவர் உன் காதலரா?.. நல்ல ஜோடிப்பொருத்தம்...
வாழ்த்துகள்!”னு சொல்லிட்டார்...
உடனே பதறிய கேட்,
“ஐயோ இல்ல ஹாரிஸ்,,, இவர் என் நண்பர்... அதுமட்டுமில்லாம இவர் ஒரு கே” என்று உண்மைகளை உளறிவிட்டார்...
கோடு போட்டால் ரோடு
போடும் நம்ம பசங்ககிட்ட, ரோடு போட்டுக்கொடுத்தா சும்மாவா விடுவாங்க?... எப்படியோ,
பேசிப்பழகி டேட்டிங்’கிற்கு நாளும் குறித்துவிட்டார்... ஆரம்பத்தில் என்னவோ அந்த
இளைஞன் மீது வெறும் ஈர்ப்புதான் இருந்தது, ஆனால் அந்த டேட்டிங்’க்கு பிறகு அது மெள்ள காதலாக உருமாறியது...
“அந்த முதல்
சந்திப்பு எனக்கு ரொம்ப இயற்கையாவும், சவுகர்யமாவும் இருந்துச்சு... புது நபருடன்
டேட்டிங் செல்வதாக எண்ணமே ஏற்படவில்லை... எனக்குள் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி
உருவானது... அப்போ எனக்கு புரிஞ்சுச்சு, நான் சரியான நேரத்துல சரியான ஆளை
பார்த்திருக்கிறேன் என்று” இப்படித்தான் வர்ணிக்கிறார் அந்த முதல் சந்திப்பை... அந்த
இளைஞன்தான் இன்றைக்கு வாழ்க்கைத்துணைவனான டேவிட் பர்க்கா...
2004 முதல் இருவரும் காதலர்களாக இணைந்து வாழ்கிறார்கள்... 2006ஆம் ஆண்டுதான் தன்னை வெளிப்படையாக சமபால் ஈர்ப்பு நபராக
ஊடகங்களுக்கு வெளிக்காட்டினார் ஹாரிஸ்...
“என்னை சூழ்ந்துள்ள
வதந்திகளுக்கு இதன்மூலம் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்.. ரொம்ப
பெருமையாவும், முழு மனநிறைவோடும் என்னை கே என உங்கள் எல்லோரிடமும்
வெளிப்படுத்திக்கொள்கிறேன்...” என்று ரத்தினச்சுருக்கமாக
வெளிப்படுத்திவிட்டார் ஹாரிஸ்...
2007ஆம் ஆண்டு நடைபெற்ற எமி விருதுகள் வழங்கும் விழாவிற்கு தன் காதலன் டேவிட் உடன்
வந்தபோதுதான், தனது காதலையும் வெளி உலகிற்கு வெளிப்படுத்தினார் ஹாரிஸ்...
2010 ஆம் ஆண்டு, அக்டோபர் 12ம் நாள்தான் இந்த ஆதர்ச தம்பதிக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டைக்குழந்தை
பிறந்தது... கிடியன் ஸ்காட் மற்றும் ஹெர்பர் கிரேஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள
அந்த குழந்தைகளுக்கு இப்போ ஐந்து வயது...
ஜூன் 24, 2011ஆம் நாள்தான் இவர்கள் திருமணம் நியூயார்க் நகரில் நடைபெற்றது (அந்த வருடம்தான்
நியூயார்க் மாகாணத்தில் சமபால் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டது!)...
இப்போ குழந்தைகள்
மற்றும் துணைவர் டேவிட் உடன் இனிதான இல்லறத்தை வாழ்ந்துவருகிறார் ஹாரிஸ்...
இதைவிட மகிழ்வான
வாழ்க்கை ஒரு சமபால் ஈர்ப்பு நபருக்கு உண்டா என்ன?... சில இடங்களில் பொறாமை
வரவழைக்கும் அளவிற்கான வாழ்க்கை, மனதை நெகிழச்செய்கிறது... “கே திருமணமல்லாம்
ரொம்பநாள் சாத்தியமில்லைங்க!” என்று எவரேனும் இனி சொன்னால், நெய்ல் பாட்ரிக்
ஹாரிஸ் பற்றி எடுத்துசொல்லுங்கள்... இவர் ஒரு சிறு உதாரணம்தான், உலகில் எத்தனையோ
லட்ச தம்பதிகள் இப்படியோர் வாழ்க்கை வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்... நம்
நாட்டில்தான் இது எட்டாக்கனியாக இருக்கிறது... எட்டிப்பிடிக்க எத்தனித்து தோல்வி
அடைபவர்கள்தான் “ச்சீ... ச்சீ.. இந்த பழம் புளிக்கும்!”னு சொல்லிட்டு
ஒதுங்கிடுறாங்க... நிஜத்தில் அந்தப்பழங்கள் தித்திக்கும் இனிப்பானவை!... ஹாரிஸ் தம்பதி
மற்றும் குழந்தைகள் இதே மகிழ்ச்சியோடு இன்னும் நூறாண்டுகள் வாழ இறைவனை
பிராத்திக்கிறேன்!
நம்ம தமிழ் நாட்டிலும் இருக்கங்க விஜய் சமபால் தம்பதிகள் அதுவும் குழந்தைங்க பெதிதுகிட்டு(வாடகை தாய் / தத்து எடுத்து) நல்ல உள்ளங்கள் உதவியுடன் வாழ்ந்து வராங்க அதுவும் இங்கையே வெளி நாட்டுக்கு போகாம.
ReplyDeleteஹாரிஸின் தாய் உண்மையில் கடவுள் தான்.
என் அம்மாவும் என்ன புரிஞ்சிக ஆரம்பிச்சிடாங்க என்னை வெளிபடுத்து நேரம் பார்த்து காத்து இருக்குறேன் லிஜய்.
தாசன் கமல், ரொம்ப அருமை வாழ்த்துக்கள், உங்கள் வாழ்கை சிறப்பாக அமைய .................
Deleteஆம் கமல்... இங்கயும் இருக்காங்க... ஆனால் சட்டரீதியாக தம்பதிகளாக, சமுதாய அங்கீகாரத்தோட இங்கே வாழ வாய்ப்பில்லை... அதுவும் பிரபலங்கள் எனும்போது இன்னும் கூடுதல் மீடியா கவனம் இருக்கும்...
Deleteஉங்கள் வெளிப்படுதல் சிறப்பாக அமைய வாழ்த்துகள் நண்பா... கருத்திற்கு மிக்க நன்றி...
கட்டுரை ரொம்ப அருமை, உண்மைல இப்படி வாழ தான் எலோரும் ஆசை படுறாங்க...........
ReplyDeleteஉண்மைதான் ஸ்ரீதர்... நம் எல்லோருடைய கனவு வாழ்க்கையுமே இதுதானே....
Deleteகருத்திற்கு நன்றி நண்பா...
ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ராம் பிரசாத் - மஹாராஷ்டிரத்தை சேர்ந்த கிறிஸ்டபர் இருவரும் சமபாலீர்ப்பு தம்பதியர் ... வெற்றி கரமாக இந்தியாவில் லீடிங் ஆர்க்கி டெக்ட் ஆக புனே வில் வாழ்ந்து வருகிறார்கள்
ReplyDelete