இரவில் தனியாக நடந்து போய்க்கொண்டிருக்கிறேன்..
தெருவிளக்குகள் டிஸ்கோத்தே லைட்டுகளை போல விட்டுவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது...
கண்ணுக்கு எட்டியதூரம் வரையில் ஆள்நடமாட்டமே இல்லை... நாய்கள் எங்கோ ஊளையிட்டு,
தாங்கள் நரியின் பரிணாம வளர்ச்சியென அறிவியல் பேசிக்கொண்டிருக்கிறது...
கும்மிருட்டு, பாதையில் தடுமாறியபடியே நடந்துசென்றேன்... என்னெதிரே மின்னல்
வேகத்தில் ஒரு உருவம் வந்து நின்றது, உடல் முழுவதும் காயங்களுடன்... தலையிலிருந்து
ரத்தம் வழிய, கோரப்பற்கள் வெளிப்பட்டது... என்ன நடக்கிறது? என்று சுதாரிப்பதற்குள்,
அதன் கைகள் என் கழுத்தை நோக்கி வந்துவிட்டது....
‘க்ளிக்... க்லாக்... க்ளிக்... க்லாக்..’ இன்றைக்கும் சரியாக 2.13 மணிக்கு அந்த
கைக்கடிகாரத்தில் அலார்ம் அடித்தது... திடுக்கிட்டு விழித்தேன், கனவுதான்...
அலாரம் அடிப்பது கனவல்ல, அதுவும் தொடர்ந்து ஒருவாரமாக, இதே நேரத்தில்
அடிக்கிறது... இனி தூக்கம்வரப்போவதில்லை... அருகில் என் எந்த கவலையும் தெரியாமல்
நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கிறான் அறை நண்பன்... அவன் தூக்கத்தை தடுக்க
விரும்பாமல், சிகரெட்டையும் லைட்டரையும் எடுத்துக்கொண்டு பால்கனிக்கு சென்றேன்...
சிகரெட்டை பற்றவைத்தபடி சாலையை
வெறித்துப்பார்த்தேன்... நான் கனவில் நடந்து சென்ற அதே சாலைதான், ஆனால்
தெருவிளக்குகள் வெளிச்சத்தை பரப்பிக்கொண்டுதான் நிற்கிறது... அருகிலிருந்த
அடுக்குமாடி குடியிருப்பில், இரண்டு வீடுகளில் வெளிச்சம் தெரிகிறது... என்னை போல
தூக்கம் வராமலோ அல்லது, தூக்கத்தை விரும்பாமலோ யாரேனும் விழித்திருக்கக்கூடும்...
அந்த சத்தம் இன்றைக்கும் கேட்கிறது, ஒருவித அழுகை சத்தம் அது... அலாரம்
அடிப்பதும், நான் வெளியே வந்து நிற்பதும், அந்த மெல்லிய அழுகை சத்தம் கேட்பதும்
ஒருவாரத்தின் தொடர் நிகழ்வுதான்... எங்கிருந்து அந்த அழுகை வருகிறது? என்று
இதுநாள் வரை புலப்படவில்லை... காற்றோடு கலந்துவருவது போல தெரிகிறது, விசும்பலும்
அழுகையுமாக கலந்த ஓலம் போல கேட்கிறது...
இன்று எப்படியாவது அழுகை சத்தம் வரும்
இடத்தையாவது கண்டுபிடிக்கவேண்டும்... மெள்ள கதவை திறந்து, சத்தம் வராமல் அழுத்தி
சாத்திவிட்டு வெளியே சென்றேன்... குடியிருப்புகளின் கீழ் தளத்தை அடைந்துவிட்டேன்,
செக்யூரிட்டி ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்திருக்கிறார்... அவரை கடந்து சற்று வெளியே
வந்தேன்... அருகருகே இருக்கின்ற இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளையும்
கவனித்தேன், இன்னும் எங்கிருந்தோ அந்த ஓலம் ஒலித்துக்கொண்டிருக்கிறது... ஒருசமயம்
கிழக்கு பக்கமாகவும், மறுபக்கம் மேற்கு பக்கமாகவும் என்னால் ஒலி வரும் திசையை கூட
அனுமானிக்கமுடியவில்லை...
கீழிருந்து மேலாக என் குடியிருப்பை, அழுகையின்
பின்னணி சத்தத்துடன் பார்க்கவே கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது... என் தோளை ஒரு
கை தொட, திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தேன்... குடியிருப்பின் காவலாளிதான், கையில்
தடியோடு நிற்கிறார்... மூச்சு நின்று, மீண்டும் வந்தது...
“நீங்கதானா?” பதற்றம் என் கேள்வியில் தெரிந்திருக்கும்...
“என்ன சார் இந்த நேரத்துல?” மெலிதான சந்தேகமும் அந்த கேள்வியில் கலந்திருந்தது...
“தூக்கம் வரல, அதான்...”
“நீங்க ரிப்போர்ட்டர்தானே?...”
“ஆமா... அதெப்டி உங்களுக்கு தெரியும்?”
“அதான் உங்க பைக்ல கொட்டை எழுத்துல ப்ரஸ்னு
எழுதிருக்கத பார்த்திருக்கேனே... ஏதும் நியூஸ் கவர் பண்ண போறிங்களோ?”
“அப்டிலாம் ஒன்னும் இல்லைங்க... தூக்கம் வரல,
அதான் வந்தேன்... தீப்பெட்டி இருக்கா?” என்றபடி சிகரெட்டை
கையில் எடுத்தேன்.. சட்டைப்பைக்குள்லிருந்து பெட்டியை எடுத்து கொடுத்தார், இன்னொரு
சிகரெட்டை அவரிடம் நீட்டினேன்... சிரித்துக்கொண்டே வாங்கினார், இப்போது
தொக்கியிருந்த சந்தேகங்கள் அவரைவிட்டு போய்விட்டதை போல தெரிகிறது...
ஊர், தொழில், அக்கம்பக்கத்தினர் என்று பத்து
நிமிடங்கள் பேசி, ஓரளவு தோழமையாக்கிவிட்டேன்...
“உங்களுக்கு அழுகை சத்தம் கேட்குதா?” தயக்கத்தோடு கேட்டுவிட்டேன்...
“அழுகையா?... ரெண்டாவது ப்ளோர்’ல ஒரு குழந்தை இருக்கு சார், அந்த அழுகைய சொல்றீங்களா?”
“இல்லங்க... ஏதோ ஒருவிதமான ஓலம் மாதிரியான
சத்தம்...”
“ஓலமா?” முகம் அஷ்டகோணலாய் மாறியது...
“ஆமா.. அது ஒரு சோகமான அழுகை மாதிரி சத்தம்...”
“சோகமா இருந்தாதான சார் அழுவாங்க?”
“இல்லங்க... இது காத்தோட கலந்து வர்ற மாதிரி
சத்தம்... அதுவும் தெனமும் இதேநேரம்..”
“எதாவது குடும்ப பிரச்சினைல யாரும்
அழுதிருப்பாங்க சார்... இப்டி எதாச்சும் சொல்லி என்னை கதிகலங்க வச்சிடாதிங்க!” சட்டைப்பைக்குள் வைத்திருந்த முருகன் படத்தை எடுத்து
கண்களில் ஒற்றிக்கொண்டார்... இதற்குமேல் இதனைப்பற்றி கேட்டு பலனில்லை...
மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தேன்... பால்கனி
கதவை அழுத்தி சாத்திவிட்டு, காதுகளுக்குள் பஞ்சை திணித்துக்கொண்டு, போர்வையை
இறுக்க போர்த்திக்கொண்டு உறங்க எத்தனித்தேன்... இன்னமும் அந்த அழுகை சத்தம்
நின்றபாடில்லை... ஒருவழியாக பிரயத்தனப்பட்டு உறங்கிப்போனேன்...
விழித்தபோது விடிந்து வெகுநேரம் ஆகியிருந்தது...
“பரவால்ல தூங்கு திரு... இன்னிக்கு சண்டேதான்...” நாளிதழை புரட்டிக்கொண்டே சொன்னான் ஹரி...
நேரத்தை பார்த்தேன், ஒன்பதை கடந்திருந்தது...
லேசாக தலைவலிப்பது போல இருக்கிறது.. ஆனாலும் தூங்க விரும்பவில்லை, அதுவே
பழக்கமாகிவிடக்கூடாது...
தலையை பிடித்துக்கொண்டே எழுந்தேன்...
“என்ன தலைவலியா?” ஹரி கேட்டான்...
பதிலெதுவும் சொல்லாமல் தலையை மட்டும் ஆமோதிப்பதை
போல அசைத்தேன்...
“நைட்டு முழுக்க தூங்காம சுத்திகிட்டு இருந்தா,
இப்போ தலைவலிக்கத்தான் செய்யும்...”
இவனுக்கு எப்படி தெரியும்?... ஒருவேளை
பார்த்திருப்பானோ? குழப்பத்துடன் ஹரியை பார்த்தேன்...
“அந்த செக்யூரிட்டிகிட்ட என்னதான் சொன்ன?...
பித்துபிடிச்சா மாதிரி ஆகிட்டார்...”
“அப்டிலாம் ஒன்னும் சொல்லல... சும்மா
பேசிட்டுதான் இருந்தேன்...” சமாளித்தேன்...
“அழுகை சத்தம், ஓலம், சோகம் கலந்துன்னு என்னென்னமோ
சொன்னியாம்... எதாச்சும் நல்ல டாக்டர்கிட்ட காட்டுங்க சார்னு அந்தாளு அட்வைஸ்
பண்றார்...”
கொடுத்த சிகரெட் நன்றி கூட இல்லாமல்
எல்லாவற்றையும் உளறியிருக்கிறார்... இருக்கட்டும், கவனித்துக்கொள்கிறேன்...
“உனக்கு என்னதான் ப்ராப்ளம் திரு?... ஓப்பனாதான்
சொல்லேன்”
தனியொருவனாக இந்த பிரச்சினையை இனியும் சமாளிக்க
முடியுமென தோன்றவில்லை, சொல்லிவிடலாம் என்று தீர்மானித்துவிட்டேன்...
“தினமும் சரியா 2.13 மணிக்கு இந்த வாட்ச்’ல அலாரம் அடிக்குது, அதை தொடர்ந்து எங்கிருந்தோ ஒரு அழுகை
சத்தம் கேட்டுகிட்டே இருக்கு... ஒருவாரமா இது ரொட்டினா நடக்குது... என்ன
பண்றதுன்னே புரியல...” முகத்தை கழுவி,
துண்டால் துடைத்துக்கொண்டேன்...
“ஹ ஹா... இதான் ப்ராப்ளமா?.. அப்டின்னா நைட்
படுக்குறப்போ வாட்ச்சை ஆப் பண்ணிடு, ப்ராப்ளம் சால்வ்டு” சிரித்தான்...
“நேத்து நைட் அதோட பேட்டரிய கூட கழட்டிவச்சேன்,
அப்பவும் அலாரம் அடிச்சுது...”
ஹரியின் முகம் கொஞ்சம் இறுக்கமானது...
“அப்போ இது எதுவும் புது மாடல் வாட்ச்சோ
என்னவோ...”
“2.12 வரைக்கும் கேட்காத
அழுகை, இந்த அலாரம் அடிச்சதும் சரியா 2.13 மணிக்கு கேட்குறது
எப்டி?”
“என்னடா என்னென்னமோ சொல்ற?... அப்டி குழப்புற
இந்த கருமம் பிடிச்ச வாட்ச்சைத்தான் எங்கயாவது தூக்கி போட்டிடே...”
“இல்ல ஹரி... இதுவரை நம்ம சிகரம் மேகசின்ல
சினிமா செக்சன்ல இருந்தேன்.. பொலிட்டிகல் செக்சன்ல அதுவும் சீனியர் ரிப்போர்ட்டரா
ப்ரமோஷனோட, பத்தாயிரம் கூடுதல் சம்பளத்தோட வேலை கிடைக்கும்னு நெனச்சுக்கூட பார்க்கல...
ஊர்ல பூர்விக சொத்து சம்மந்தமா கேஸ்லகூட எனக்கு சாதகமா தீர்ப்பு வந்துச்சு...
தங்கச்சிக்கு நல்ல வரன் இப்போதான் அமைஞ்சிருக்கு... இதல்லாம் நடந்தது இந்த
ஒருவாரத்துல... அதாவது இந்த வாட்ச் என் கைக்கு வந்த பிறகு...”
“ஓஹ்.. சென்டிமென்ட்டா?... எங்க வாங்கின? இல்ல,
யாரும் கொடுத்தாங்களா?”
“போனவாரம் பீச்’க்கு போனப்போ கீழ கிடந்து எடுத்தேன்...”
“இப்டியல்லாம் நடக்குமா?ங்குறது ஆச்சர்யமா
இருக்கு, நீ சொல்றதை நம்பாமலும் இருக்கமுடியல... சரி, இன்னிக்கு நைட் இந்த
வாட்ச்சை நான் கட்டிக்கிட்டு தூங்குறேன்... என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்...” என்றான் ஹரி, நானும் ஒரு சவாலை ஏற்பது போல
ஒப்புக்கொண்டேன்... எப்படியோ என் சிக்கலுக்கான தீர்வு கிடைத்துவிட்டால் போதும்
என்கிற மனநிலைக்கு வந்துவிட்டேன்...
அன்றைய பொழுது முழுவதும் ஹரி அந்த வாட்ச்சையே
ஆராய்ந்துகொண்டிருந்தான்... பேட்டரி கழற்றினாலும் கைக்கடிகாரத்தில் அலாரம்
அடிக்குமா? என்று கூகுளில் தேடினான்... சில நேரங்களில் ஏதோ கணக்கு போடுவதை போல
தனியாக தனக்குள் பேசிக்கொண்டான்...
ஒருவாரம் இந்நிலை நீடித்தால் அநேகமாக முழு
பைத்தியமாக ஆகிவிடுவான்...
மாலைப்பொழுதின் இருள் மங்க, ஹரியின் முகம்
பரபரப்பாய் தெரிந்தது...
ஒருவழியாக சீக்கிரமே சாப்பிட்டு உறங்கவும்
ஆயத்தமாகிவிட்டோம்...
உறங்கும் முன்பு மறந்திடாமல் கைக்கடிகாரத்தை
ஹரியின் கையினில் நானே கட்டிவிட்டேன்... பலிகொடுக்கப்போகும் ஆட்டின் கழுத்தில்
மாலை போடுவதை போல அவன் உணர்ந்திருக்கக்கூடும்...
கண்களை மூடி உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன்... என்
கவலைகள் அனைத்தையும் ஹரியிடம் ஒப்படைத்துவிட்டதாக ஒரு உணர்வு, ஒருவாரத்திற்கு
பிறகு கொஞ்சம் ஆழமான தூக்கத்தில் ஆழ்ந்தேன்...
கோரப்பற்களுடன் என் கழுத்தைத்தொட்ட அந்த கைகள்,
பலவீனமானதை போல சட்டென விலகிக்கொண்டன... கோரப்பற்களும், ரத்தக்காயங்களும்
மறைந்துவிட்டன... ஒரு பதினெட்டு வயது இளைஞனைப்போல அந்த உருவம் உருமாறியிருந்தது...
ஓரிரு நிமிடங்களுக்கு முன்பு ஆக்ரோஷமாக காணப்பட்ட அந்த முகத்தில் இப்போது மெல்லிய
சோகம் படர்ந்திருந்தது... அழுகிறான், தினமும் நான் கேட்கும் அதே ஓலம்...
சுற்றிமுற்றி பார்க்கிறேன், ஒருவரையும் காணவில்லை... தப்பித்து ஓடவும் முடியாமல்
திகைத்து நிற்கிறேன்... அந்த இளைஞன் இரு கைகளையும் குவித்து வணக்கம் சொல்கிறான்...
அது வணக்கம் போல தெரியவில்லை, ஏதோ ஒரு வேண்டுகோளை வைக்கிறான்... இன்னதென்று
புரியாமல் அவனை பார்த்தபோதுதான் அவன் இடது கையில் மாட்டியிருந்த அந்த கைக்கடிகாரம்
என் கண்களில் பட்டது... ஒருவாரகாலமாக என் தூக்கத்தை கெடுத்த அதே கடிகாரம்...
என் தோளை யாரோ உலுக்குவது போல தெரிகிறது... மிக
ஆக்ரோஷமாக, பதட்டமாக உலுக்குகிறது ஒரு கை... திடுக்கிட்டு விழித்தேன்... என்
படுக்கைக்கு அருகே வந்து நிற்கும் ஹரி, பதட்டத்துடன் என்னை
எழுப்பிக்கொண்டிருக்கிறான்... ஷப்பா... அந்த உருவம், பற்கள், அழுகை, வேண்டுகோள்
எல்லாம் கனவுதான்.. புதைகுழியிலிருந்து தப்பித்துவந்ததாக உணர்கிறேன்... ஆனால்,
ஹரியின் முகத்தினுடைய கலவரத்தை பார்க்கும்போது, இன்னொரு புதைகுழி தயாராக
இருப்பதாய் தோன்றுகிறது... முகத்திலிருந்து வியர்வை சொட்டிக்கொண்டிருக்கிறது,
கண்களில் மிரட்சியும், கைகளில் நடுக்கமும் ஆபத்தின் அறிகுறிகளாக தெரிகிறது...
“என்னடா?.. பாத்ரூம்லேந்து பாதில வந்தமாதிரி
நிக்குற, என்னாச்சு?” சிரித்தேன்...
“டேய் பாவி... அலாரம் அடிச்சுருச்சுடா...” சிரமப்பட்டு எச்சிலை விழுங்கினான்...
“அலாரம் அடிச்சா குளிச்சுட்டு ஆபிஸ் கிளம்பு...”
“டேய் பாவி... என் கைல கட்டிருந்த உன் வாட்ச்
அலாரம் அடிச்சிடுச்சு... பேட்டரிலேந்து எல்லாத்தையும் கழட்டி வச்சிட்டேன்,
அப்டியும் சரியா நீ சொன்ன 2.13க்கு அடிச்சிருக்கு... எப்டிடா?” பதறினான்...
“இதுக்கே டென்ஷன் ஆகிட்டா எப்டி?.. இது
ட்ரைலர்தான், மெய்ன் பிக்சர் பால்கனில இருக்கு... வந்து பாரு...” என்று வழக்கம்போல சிகரெட்டையும் லைட்டரையும்
எடுத்துக்கொண்டு பால்கனி சென்றேன்.. மேசையிலிருந்த சாமி படத்தை எடுத்துக்கொண்டு
என் பின்னாலேயே வந்தான்...
சிகரெட்டை பற்றவைத்து முதல் புகையை
விடுவதற்கும், அந்த அழுகை சத்தம் கேட்பதற்கும் சரியாக இருந்தது.... அதேவிதமான
அழுகைதான்... ஆனால் இன்றைக்கு இன்னும் கூடுதல் சத்தத்துடன், கிழக்கு
பக்கத்திலிருந்து வருவதாக தெரிகிறது...
“சத்தம் கேட்குதா?” ஹரியிடம் கேட்டேன்...
“இல்லையே... உனக்கு கேட்குதா?”
“ஹ்ம்ம்... கேட்குது... நல்லா கவனிச்சு கேளு...”
கண்களை மூடி, காதுகளை கூர்தீட்டி கேட்பதை போல
தெரிகிறது... “இல்லடா... ஒன்னும் கேட்கல... எனக்கென்னவோ பயமா இருக்கு” என்று என் கையை
இறுக்கப்பிடித்துக்கொண்டான்....
“கூல் கூல்டா...” அவனை சாந்தமாக்கினேன்...
“ஐயோ இப்போ கேட்குது... யாரோ அழறாங்க... உன்
கையை பிடிச்சதும் அந்த அழுகை சத்தம் கேட்குதுடா...” என்று என்னை தொட்டும், விலக்கியும் சோதித்துப்பார்த்தபடி
சொன்னான்...
“சரி வா... இன்னிக்கு அந்த சத்தம் நல்லா
கேட்குது... எங்கிருந்து அந்த ஓலம் வருதுன்னு பார்க்கலாம்...” கதவை நோக்கி நடந்தேன்...
“அதெப்டி உன்னை தொட்டா அந்த சத்தம் கேட்குது?” கேள்வியை கேட்டான்... முடிச்சு அவிழாமல் ஆயிரம் கேள்விகள்
வரிசைகட்டி நிற்கையில், இந்த கேள்வி அப்படி அவசியமானதாக தெரியவில்லை... அவனை
பொருட்படுத்தாமல் கதவை திறந்தேன்...
“டேய் உனக்கென்ன ஜேம்ஸ் பாண்டுன்னு நினைப்பா?..
ஒழுங்கா வந்து படு, காலைல ஆபிஸ் போகணும்... சாயந்திரம் யாராச்சும் கோவில்
பூசாரிகிட்ட தகடு மந்திரிச்சு வீட்டுல மாட்டிக்கலாம்...” கையை பிடித்து இழுத்தான்...
“ஹரி, அது ஏதோ அமானுஷ்ய விஷயம்தான்... ஆனால்,
இதுவரை நம்மள அது கஷ்டப்படுத்தல... நம்மகிட்ட ஏதோ ஒருவிஷயம் அது
எதிர்பார்க்குது... அது என்னன்னுதான் தெரிஞ்சுப்போமே”
“நமக்கிட்ட பேய்களுக்கு என்னடா எதிர்பார்ப்பு
இருக்கப்போவுது?... எங்க ஊர்கள்ல குவாட்டரும், கோழிக்கறியும் வாங்கி படைச்சா, பேய்
ஓடிடும்னு சொல்வாங்க... அதவேணா செய்யலாம்...”
“இந்த வாட்ச், அழுகை சத்தம், கனவு இது எல்லாத்துக்கும்
ஒரு லிங்க் இருக்குன்னு தோணுது... அது என்னன்னு நான் பார்க்கத்தான் போறேன்...
சாயந்திரம் தகடு மந்திரிக்குறதுகுள்ள உன்னை அந்த ஆவி போட்டு தள்ளுச்சுன்னா என்ன
பண்ணுவ?”
“டேய் சதிகாரா... நீயே அதுக்கு ஐடியா கொடுப்ப
போல?... போய்த்தொல, நானும் வரேன்...” வாய்க்குள் என்னை
கரித்துக்கொண்டே என் பின்னால் வந்தான்...
சத்தம்வராதபடி படிகளில் மெள்ள இறங்கிப்போனோம்...
வழக்கம்போல கொசுவத்தி புகைக்கு மத்தியில் செக்யூரிட்டி கனத்த தூக்கத்தில்
ஆழ்ந்திருந்தார்... அவர் விழித்திடாதபடி நகர்ந்துபோய், ஒரு மறைவான இடத்தில்
நின்றோம்...
அழுகை சத்தம், அருகிலிருக்கும் அடுக்குமாடி
குடியிருப்பிலிருந்து வருவதைபோலத்தான் தெரிகிறது... சுவரேறி குதித்துதான் உள்ளே
நுழையமுடியும்... ஆனால், யாரேனும் பார்த்துவிட்டால் சிக்கலில் மாட்டிக்கொள்வோம்...
ஹரியின் கைகள் நடுங்கிக்கொண்டிருக்கிறது, வியர்த்து கொட்டிக்கொண்டிருக்கிறது...
சுற்றும்முற்றும் பார்த்தபடி சுவரேறி
குதித்துவிட்டேன்... தடுமாறியபடி என் பின்னாலேயே ஹரியும் விழுந்தான்... முட்டிக்காலில்
சிராய்வு ஏற்பட்டு ரத்தம் சொட்டத்தொடங்கியது...
“ஆண்டவா.. ரத்தக்காவல்லாம் வாங்குதே!” பயத்தில் பதைபதைத்தான்....
“எல்லாம் நல்லதுக்குதான்... பயமா இருந்தா என்
கைய பிடிச்சுக்கோ” கையை நீட்டினேன்...
“இப்பவே பயத்துல நாக்கு தள்ளுது... இதுல உன் கைய
பிடிச்சு, சத்தத்த வேற கேட்கனுமாக்கும்...”
சிரித்துக்கொண்டே ஓலம் கேட்கும் திசையை நோக்கி
நடக்கத்தொடங்கினேன்... மிகத்தெளிவாக அழுகும் குரல் கேட்டது... இலக்கை
எட்டிவிட்டதாக மனதிற்குள் தோன்றியது...
“என்னடா நடந்துபோய்கிட்டே இருக்க... இப்டியே
சுடுகாடு போய்டுவ போல?”
“போனாலும் நல்லதுதான்... நம்மள தூக்கிட்டு போற
செலவு மிச்சம் பாரு...”
“ஒரு முடிவோடதான் இருக்கபோல... பேயைவிட நீ
கொடூரமான ஆளா இருக்க...”
இரண்டாவது தளத்தில் நாங்கள் நிற்கும் அந்த
வீட்டிற்குள்லிருந்துதான் அழுகுரல் கேட்கிறது... கதவில் காதினை பொருத்திவைத்து
கேட்டேன், சத்தம் இன்னும் வீரியத்துடன் ஒலித்தது...
“இங்கதான்...” ஹரியிடம் கைகாட்டினேன்...
என்ன பதில் சொல்வதென்று புரியாமல் என்னையே
திகைத்துப்பார்த்தான்...
“காலிங் பெல் அழுத்தி பார்க்கலாமா?”
“ஏன் கதவையே ஒடச்சு பாக்கலாமே?” பற்கள் நெறுநெறுக்க என்னை பார்த்தான்...
“ஒருவழியா இங்க என்னதான் இருக்குன்னு
பார்க்கலாமே?” நான் ஹரியை
சமாளித்துக்கொண்டிருந்த நேரத்தில், எங்களை நோக்கி ஒரு உருவம் வேகமாக
நடந்துவந்தது...
அரை இருட்டில் அந்த உருவத்தை அடையாளம்
காண்பதற்குள் எங்களை நெருங்கிவிட்டது...
“அப்பவே நெனச்சேன்... சுவரேறி குதிச்சு திருடப்போறிங்களா?...
இதுல மீடியாக்காரங்கன்னு வேஷமா?” கையில் வைத்திருந்த
மூங்கில் கம்பை தரையில் தட்டிக்கொண்டே சொன்னது, நேற்று நான் சிகரெட் கொடுத்த
செக்யூரிட்டிதான்...
அவரை அடையாளம் கண்டபிறகுதான் உயிரேவந்தது...
அதிகபட்சம் எண்பது ரூபாய், குவாட்டருக்கு கொடுத்தால் சமாளித்துவிடலாம்...
“நீங்கதானா அண்ணே... நேத்து நான் சொன்ன சத்தம்
இந்த வீட்லருந்துதான் வருது...”
“உன் சத்தம், ஓலம் கதையல்லாம் நிறுத்துய்யா...
இந்த வீட்லேந்து சத்தம் வருதா?... மூணு மாசமா இந்த வீடு காலியாத்தான் இருக்கு, ஆளே
இன்னும் குடிவரல...”
“அப்புறம் எப்புடி சத்தம்?”
“அதைத்தான் உன்கிட்ட கேட்குறேன்...”
“அண்ணே நம்புங்க... சத்தியமா உள்ளருந்து
இப்பவும் அழுகை சத்தம் வருது...”
“எனக்கு கேட்கலையே?”
“நம்பலன்னா அவன் கைய பிடிச்சுப்பாருங்க” காவலாளியின் கையை என் கையோடு பொருத்தினான் ஹரி... ஓரிரு
வினாடிகளில் கையை படாரென விளக்கிக்கொண்ட செக்யூரிட்டியின் கண்கள் மிரட்சியானது...
“என்னய்யா நடக்குது?... அதெப்டி?.. கைய பிடிச்சா
சத்தம்?... முருகா...” மூச்சு வாங்கியபடி
கேட்டார்...
“சரி அதைவிடுங்க.. இந்த வீட்ல யாரு
இருந்தாங்க?... இப்போ யாரும் இல்லையா?” விஷயத்திற்கு
வந்தேன்...
“மூணு மாசத்துக்கு முன்ன ஒரு பையன் தற்கொலை
பண்ணிகிட்டான்... போலிஸ், கேஸ்’னு விஷயம் பரபரப்பா
இருந்துச்சு.. உங்க சிகரம் பத்திரிகைலகூட நியூஸ் வந்துச்சு... அதுக்கப்புறம் அந்த
பையனோட குடும்பம் வேற எங்கயோ போய்ட்டாங்க... வீடு காலியாத்தான் இருக்கு...” மனனமாக ஒப்பித்தார்...
எனக்கு சூழல் ஓரளவு புரிகிறது...
“அந்த பையனுக்கு ஒரு பதினேழு பதினெட்டு வயசு
இருக்குமா?.. ஏன் தற்கொலை செஞ்சான்”
“இருக்கும் சார்... ஏதோ பரிச்சையில பெயில்
ஆகிட்டதாலன்னு சொன்னாங்க...”
என்னுடைய ஊகங்கள் சரியாகத்தான் இருக்கும்... அலுவலகம்
சென்றபிறகு, அந்த செய்தியை துழாவி எடுக்கணும்... மேற்கொண்டு எதுவும்
பேசிக்கொள்ளாமல் வீட்டிற்கு வந்துவிட்டோம்...
***********
“என்ன திரு கண்ணல்லாம் வீங்கிருக்கு?... சரியா
தூங்கலையோ?” அலுவலகத்துக்குள்
நுழையும்போதே புகைப்பட நிருபர் பார்த்தி கேட்டுவிட்டார்... சிரிப்பை மட்டும்
பதிலாக்கிவிட்டு கணினி லே அவுட் அறைக்குள் நுழைந்தேன்.. கணினியை திறந்து
மூன்றுமாதத்திற்கு முன்பான இதழ்களை துழாவினேன்...
அரை மணிநேர தேடலுக்கு பிறகு கண்களில் சிக்கியது
அந்த கட்டுரை... அரை பக்க அளவிலான பெட்டி செய்தி போன்ற கட்டுரைதான்... “சென்னை
பாரதி நகரில், தேர்வில் தோல்வியுற்றதால் மாணவர் தற்கொலை...” என்ற அதிமுக்கியத்துவம் இல்லாத செய்திதான், பிறகு ஏன் இந்த
செய்தி என்னை இவ்வளவு துரத்தனும்?... செய்திக்கு இடதுபுறத்தில் இருந்த
புகைப்படத்தை எங்கோ பார்த்ததை போல ஒரு உணர்வு... கண்களை மூடி, மனதிற்குள் படத்தினை
ஓடவிட்டேன்... ஆங், கண்டுபிடித்துவிட்டேன்... அவன் அதுவேதான்... கனவில் ரத்தம்
சொட்ட, கோரப்பற்களுடன் நின்ற உருவம்.. பிறகு கைகூப்பி வணங்கியதும் அவனேதான்...
இவன் செய்த தற்கொலைக்கு என் உயிரை எதற்கு வாங்கணும்?.. அடச்ச... தலை லேசாக
வலிக்கத்தொடங்கியது....
காபி குடிக்கணும், நிறைய வேலைகள் வேற நிலுவையில்
இருக்கு... நேரத்தை பார்த்தபடி எழுந்து கேண்டீன் சென்றேன்...
நினைவுகள் முழுக்க நேற்றைய இரவே
ஆக்கிரமித்தது... அந்த முகமும் மனத்திரையில் வந்து வந்து போனது.. மிகவும் சாந்தமான
முகம், தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோழை போலவல்லாம் தெரியவில்லை.. நிஜமாகவே
தேர்வில் தோல்வியுற்றமைக்குதான் அந்த முடிவை எடுத்திருப்பானா?... ஒன்றும்
புரியவில்லை...
“என்ன திரு, இவ்ளோ தீவிரமா யோசிச்சிட்டு
இருக்கீங்க?” என் எதிரில் வந்து
அமர்ந்தார் குணா சார்... இவர் பார்த்துக்கொண்டிருந்த அரசியல் பிரிவு நிருபர்
பணிக்குத்தான் நான் மாற்றலாகியுள்ளேன்... ஆச்சர்யமான வகையில் இவர் சினிமா பிரிவை
தேடிப்பெற்றுள்ளார்...
“ஒண்ணுமில்ல சார், சும்மாதான்...” சம்பிரதாயமாக சிரித்தேன்...
“முகத்துல பழைய பொலிவை காணுமே?”
“வேலை டென்ஷன்தான் சார்...”
என் இடது கையை வெறித்துப்பார்க்கிறார்... கையில்
என்ன?.. நானும் நான்கைந்து முறை கையை திருப்பிப்பார்த்துக்கொண்டேன்... ஒன்றும்
இல்லை...
நான் என்ன?வென கேட்பதற்குள், அவராகவே
தொடங்கினார்.. “இந்த வாட்ச் உங்களுக்கு எப்டி கிடச்சுது?”
“வாங்குனதுதான் சார்... சிங்கப்பூர்ல அண்ணன்...” முடிப்பதற்குள் இடைமறித்தார் குணா, “உண்மைய சொல்லுங்க திரு” என்றார்...
சரி எதற்கு மறைக்கணும்? என்று, “பீச்ல கீழ
கிடந்து எடுத்தேன் சார்” என்றேன்...
“இதை எடுத்தப்புறம் எதாச்சும் வித்தியாசமா நடந்துச்சா?” பதற்றமாக கேட்டார்...
“என்னென்னமோ நடந்துச்சு... அதெப்டி உங்களுக்கு
தெரியும்?”
“எனக்கு ஒரு நண்பர் மூலமா கிடச்சுது இந்த
வாட்ச்... பாரதி நகர் சியூசைட் கேஸ் விஷயமா ஆர்ட்டிக்கல் பண்ண போனப்போ
கிடச்சுது... இது வந்தப்புறம் நான் தூங்குனதே இல்ல, ஏதோ ஒரு அமானுஷ்யமான விஷயம்
என்னை சுத்திகிட்டே இருந்துச்சு... நான் சினிமா செக்ஸன்க்கு மாறின பிறகுதான்
தொலஞ்சுது சனியன்...” மிரட்சியோடு
சொன்னார்...
எனக்கு நிகழ்கிற அதே விஷயம் அவருக்கும்
நடந்திருக்கக்கூடும்... “பாரதி நகர் தற்கொலை கட்டுரை உண்மைதானா சார்? இல்ல, வேற எதாச்சும் அதில சிக்கல் இருந்துச்சா?...”
“உண்மையா அது வேற விஷயம்பா...” மெதுவாக சொன்னார்...
“என்ன?” அவர் வெகு அருகாமையில் அமர்ந்துகொண்டேன்...
“அந்த பையன் ஒரு கே... அதாவது
ஹோமோசெக்சுவலாம்... அவன் படிக்குற காலேஜ்’ல அந்த விஷயம் தெரிஞ்சு, நிறைய அவமானப்பட்டிருக்கான்... பசங்க நிறைய கேலிபண்ணியிருக்காங்க...
வீட்ல பெத்தவங்களும், அதைப்பத்தியே சொல்லி கஷ்டப்படுத்திருக்காங்க... அதனாலதான்
அவன் அப்டி ஒரு முடிவை...”
“அப்புறம் ஏன் எக்ஸாம்ல பெயில்னு நியூஸ் கவர்
பண்ணிங்க?”
“நான் எழுதுறதுக்கு என்ன இருக்கு திரு?... அவன்
பேரன்ட்ஸ் அதைத்தான் சொல்றாங்க... எல்லாத்தையும் விசாரிச்ச எஸ்.ஐ கூட கேசை இப்டி
சொல்லித்தான் க்ளோஸ் பண்ணினார்... மத்த எல்லாரும் அவங்கவங்க சேப்டிய பாக்குறப்போ,
நானும் என் சேப்டிய பாக்குறதுல என்ன தப்பு?”
“இதுல என்ன சேப்டி இருக்கு?”
“அந்த பையனோட பெத்தவங்களுக்கு, குடும்ப மானம்
காப்பாத்தின நிறைவு... போலிஸ்’க்கு ஹோமோபோபியா’ங்குற விஷயம் இங்க இருக்குறத வெளிக்காட்டிடக்கூடாதுங்குற
அவசியம்... குடும்பத்துல எல்லாரும் படிக்குற ஒரு மேகசின்ல, கே பத்தியல்லாம்
போடவேணாம்னு என்னோட எக்கனாமிக் கால்குலேஷன்...” டாக்டர் பிரகாஷ் முதல் சிவகாசி ஜெயலட்சுமி வரைக்கும்
குடும்பநலன் சார்ந்த செய்திகளை குணா எழுதிய நிகழ்வு மனதில் தோன்றி மறைந்தது...
“சரி, அந்த பையனோட பேரன்ட்ஸ் இப்போ எங்க
இருக்காங்க?.. பழைய வீட்ல இல்லையே?”
“அவங்க நங்கநல்லூர்ல இருக்காங்க... அட்ரஸ்கூட
சிஸ்டம்ல இருக்கு... அந்த கேஸ் விஷயமா உள்ள இறங்காதிங்க திரு, ரொம்ப இம்சை”
“அல்ரெடி பாதி இறங்கியாச்சு சார்... வேற
வழியில்ல, முழுசா போய்த்தான் பார்க்கணும்” என்றபடி, ஒரு தீர்க்கமான முடிவோடு கிளம்பினேன்...
**************
நங்கநல்லூரில் அந்த வீட்டை கண்டுபிடிக்க அவ்வளவு
சிரமமல்லாம் இல்லை...
“சதீஷ் வீடு எங்க இருக்கு?”
“அந்த தற்கொலை பண்ணிட்ட பையனா?... அந்த மஞ்சள்
பெயின்ட் வீடுதான்”
அழைப்புமணியை அழுத்தினேன்... கதவை பாதி
திறந்ததோடு, விசாரித்தார் அந்த மத்திம வயது ஆண்... நரைத்தமுடிகள், மழித்திடாத
தாடி... துக்கம் நிகழ்ந்து மூன்று மாதங்கள் ஆகியும், அதன் சுவடுகள் இன்னும்
மறையவில்லை..
“யார் வேணும்?”
“சதீஷ் வீடு இதான?”
“ஆமா... என்ன விஷயம்?”
“நான் சதீஷோட காலேஜ் லெக்சரர்... அவன்
இறந்துட்டதா...” இழுத்தேன்.. அந்த
மனிதரின் முகமும் கவலையில் திளைத்ததை போல தெரிகிறது...
“உள்ள வாங்க...” துக்கம் விசாரிக்க வந்திருப்பதாக எண்ணி, வீட்டினுள்
அழைத்து அமரச்சொன்னார்... ஓரிரு நிமிடங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை, வீட்டை
நோட்டமிட்டேன்... சுவற்றில் சதீஷின் புகைப்படம் மாட்டப்பட்டு, அதற்கு மாலை
போடப்பட்டிருக்கிறது... கனவில் என்னை இம்சித்த அதே முகம்... சிரித்த முகத்தில்,
கண்களில் ஒரு கூர்மை தெரிகிறது... ஏதோ என் வீட்டினர் போல பட்டென மனதில் பதிந்து
போகும் தோற்றமது... இடதுகையை முட்டுவாயில் வைத்திருக்கும்படி போஸ்
கொடுத்திருக்கிறான்... இடது கை... ஐயோ.. அதே கைக்கடிகாரத்தைதான்
கட்டியிருக்கிறான்... அப்படியானால் இது அவனுடைய வாட்ச்தானா?... அந்த பெரியவர்
பார்க்கும் முன்பு, அதனை கழற்றி என் பேன்ட் பைக்குள் வைத்துக்கொண்டேன்...
“இந்த போட்டோ எப்போ எடுத்தது?... நேர்ல பாக்குற
மாதிரியே இருக்குறான்” நானாகத்தான்
தொடங்கினேன்...
“ஆறு மாசத்துக்கு முந்திதான்... அவன் பிறந்தநாள்
அன்னிக்கு எடுத்தது...”
“கைல அவனுக்கு வாட்ச் பொருத்தமா இருக்கு...
அதிகம் வாட்ச் போட்டு பார்த்ததில்லை”
“எப்பவும் அதை கழட்டவே மாட்டான்...
தூங்குறப்போகூட கழட்டினதில்ல... இறக்குறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடிதான்
காணாமப்போச்சுன்னு சொல்லி ரொம்ப பீல் பண்ணான்..”
அவர் மனைவி காபி கோப்பையை என் முன்னால்
வைத்தார்... அவரிடமும் ஒரு வணக்கத்தை வைத்தேன்...
“மூணு மாசமா ஆன்சைட் விஷயமா வெளிநாடு
போயிருந்தேன், வந்ததும்தான் விஷயம் கேள்விப்பட்டேன்...” அவசியமில்லாமல் விளக்கினேன்...
“ஓஹ்..” என்று தலையை மட்டும் அசைத்துக்கொண்டார்...
“என்ன காரணம்?... அப்டி ஒன்னும் அவசரமா
முடிவெடுக்குற ஆள் இல்லையே?” விஷயத்திற்கு
வந்தேன்...
“ஏதோ எக்ஸாம்ல பெயில் ஆகிட்டானாம்...” வழக்கமான பதில்...
“அப்டி ஒன்னும் எக்ஸாம் சமீபத்துல நடக்கலைன்னு
காலேஜ்ல சொல்றாங்களே?”
“ஒருவேள வேற எக்ஸாம் எதாச்சும் எழுதிருக்கலாம்” வழக்கமான பதிலுக்கு இப்படியோர் எதிர்கேள்வி வருமென்று
எதிர்பார்த்திருக்கமாட்டார்... மென்று முழுங்கி சமாளித்தார்...
“அப்டி என்ன எக்ஸாம் எழுதினான்னே தெரியாத
அளவுக்கா இருந்திங்க?... போலிஸ் விசாரணைல எக்ஸாம் பற்றியல்லாம்
விசாரிச்சிருப்பாங்களே, எதாச்சும் துப்பு கிடைச்சுதா?”
“அதுப்பத்தி நாங்க கேட்டுக்கல”
“உண்மையா இருந்தாதானே கேட்கனும்னு
விட்டுட்டிங்களோ?”
“ஹலோ மிஸ்டர்... என்ன அவசியமில்லாத கேள்வி
இதல்லாம்?... உண்மைய சொல்லு, நீ அவன் காலேஜ் லெக்சரர் மாதிரி தெரியல... வெளில
போறியா, இல்ல போலிஸ்க்கு கூப்பிடவா?” அலைபேசியை எடுத்து
எண்களை அழுத்தத்தொடங்கினார்...
“கூப்பிடுங்க... நான் மீடியாக்காரன்தான்... உங்க
பையன் டெத்ல எனக்கு சந்தேகம் இருக்கு... என்னால கோர்ட்ல கேஸ் போட்டு, இந்த கேசை
மறுவிசாரணை பண்ணவைக்ககூட முடியும்... உண்மை நிரூபனமாகிட்டா, உண்மையை மறைச்ச
குற்றத்துக்கு நீங்ககூட ஜெயிலுக்கு போகவேண்டி இருக்கலாம்... மிரட்டுறதா
நினைக்காதிங்க, ஒரு பத்து நிமிஷம் நான் சொல்றத கேளுங்க... முதல்ல உட்காருங்க” அவரை ஆசுவாசப்படுத்தி அருகில் அமரவைத்தேன்...
மேசையிலிருந்த தண்ணீர் பாட்டிலை அவர் கைகளில் கொடுத்தேன்...
“உனக்கு என்னப்பா வேணும்?... பையன் இறந்த
துக்கமே இன்னும் குறையல... அதுக்குள்ள ஏன் இப்டி வேதனைய அதிகமாக்குற?” அழுவதை போல கேட்டார்...
“உங்க பையன் ஒரு கே’ன்னு உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?” சிலநேரங்களில் பரிதாபம் பார்த்திடாமல் செயல்பட்டால்தான்,
என் தொழிலுக்கு நான் நியாயம் கற்பிக்கமுடியும்... அதைவிட முக்கியமாக நான்
நிம்மதியாக உறங்கமுடியும்!...
மெளனமாக இருந்தார்... ஏதோ யோசிப்பதை போல
தெரிகிறது... யோசித்தால் எதாவது பொய்யை சொல்ல வாய்ப்புண்டு, அதற்கு வாய்ப்பை
உருவாக்கித்தரக்கூடாது...
“சொல்லுங்க சார்... என்ன யோசனை?... நானே போலிசை
கூப்பிடவா?..” அலைபேசியை கையில்
எடுத்தேன்...
சமையலறைக்குள் இருந்த பெண்மணி, பதட்டத்துடன்
வந்து அருகில் நின்றார்...
“அப்புடி எதுவும் பண்ணிடாதப்பா... நானே
சொல்றேன்... எங்க பையன் ஆம்பள பசங்க மேல ஈர்ப்போட இருந்தது தெரியும்... அதை அவனே
சொன்னான் ஒருமுறை... கொஞ்ச நாள்ல மாறிடும்னு நான் பெருசா அலட்டிக்கல... இந்த
மனுஷன்தான் தெனமும் அதைச்சொல்லியே குத்திக்காட்டினாரு... போதாக்கொறைக்கு
காலேஜ்லயும் இந்த விஷயம் தெரிஞ்சு, கூடப்படிக்குற பசங்களே அசிங்கமா
பேசிருக்காங்க... பாத்ரூம் செவத்துல அசிங்கமா எழுதுறது, மத்த பசங்ககூட இவனை
சேர்த்துவச்சு பேசுறதுன்னு ரொம்ப கஷ்டப்படுத்திருக்காங்க... காலேஜ்
வாத்தியாருங்ககூட அதைச்சொல்லியே அவமானப்படுத்தியிருக்காங்க... அதல்லாம் அடிக்கடி
சொல்லி அழுவான்... கூட சேர்ந்து அழுறதத்தவிர என்னால என்ன பண்ண முடியும்?... ஏதோ
ஆறுதலா எதாச்சும் அப்பப்ப சொல்லுவேன், ஆனா திடீர்னு இப்புடி ஒரு முடிவை
எடுப்பான்னு....” தலையில்
அடித்துக்கொண்டு அழுதார்... அவர் கணவரின் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருக்கெடுத்து
ஓடியது... அவசியமில்லாமல் மூக்கை நுழைத்துவிட்டேனோ? என்று ஒருமுறை எனக்கே
தோன்றியது...
“அழாதிங்கம்மா...உண்மையை தெரிஞ்சுக்கறதுக்காக
கொஞ்சம் கடுமையா பேசிட்டேன், என்னைய மன்னிச்சிடுங்க... ஆனா இதை நீங்க
அப்போவே மீடியால சொல்லிருக்கலாமே?”
“ஏற்கனவே எல்லாம் போச்சுன்னு இருக்கோம்... இதுல
இந்த உண்மையும் தெரிஞ்சா இருக்குற மானமும் போய்டும்னுதான்...” தடுமாறினார் கணவர்...
“அப்போ இன்னமும்கூட உங்க பையனோட ஈர்ப்பு
தப்புன்னுதான் நினைக்குறீங்களா?... இறந்தபின்னாடி கூட அவன் இறப்புக்கு நியாயம்
செய்யல பார்த்திங்களா?”
“அவனே இறந்துட்டான், அப்புறம் எதுக்கு இதை
சொல்லனும்னுதான்...” அந்தம்மா சொன்னார்...
“அதான்மா தப்பு... ஒருவேளை நீங்க வெளிப்படையா
நடந்தவிஷயங்கள சொல்லிருந்தா, உங்க பையனை போல தற்கொலை எண்ணத்துல இருக்குற நூறு
பசங்களயாச்சும் நீங்க வாழவச்சிருக்க முடியும்... ஆயிரம் பெத்தவங்களுக்கு, இப்படி
பாலீர்ப்பை புறக்கணிப்பதால உண்டாகுற ஆபத்தை எடுத்து சொல்லிருக்கலாம்... இறந்தும் ஆயிரம்
உயிர்களை சதீஷ் வாழவச்சிருப்பான்...”
“என்னப்பா சொல்ற?.. இதே காரணத்துக்காக நிறைய
பசங்க இறக்குறாங்களா?”
“ஆமா சார்... மீடியால இருக்குறதால நிறைய
பார்த்திருக்கேன்... ஆனா உங்களை மாதிரியே எல்லா பெத்தவங்களும் வேற காரணங்கள்
சொல்லி சமாளிப்பாங்க... அதனால, இதைப்பற்றிய உண்மைகள் வெளில வந்தது இல்லை..
நாளுக்குநாள் இப்டி இறக்குரவங்க அதிகமாகிட்டுதான் இருக்காங்க... சதீஷ்க்கு முன்ன
இறந்த எந்த பையனோட பெத்தவங்களாவது உண்மையை சொல்லிருந்தா, அனேகமா சதீஷை நீங்க
அலட்சியபடுத்தியிருக்கமாட்டிங்க... அவனும் இறந்திருக்க மாட்டான்...” இவ்வளவும் நான்தான் பேசுகிறேன் என்கிற உணர்வே சில நொடிகள்
கழித்துதான் புரிந்தது...
“இப்ப என்ன பண்ணனும்னு சொல்றப்பா?... இனி எங்க
சதீஷ் போல ஒருபிள்ளை நாங்க உண்மையை சொல்றதுனால காப்பாத்தப்பட்டுச்சுன்னாகூட, எங்க
குற்ற உணர்வு நிச்சயம் குறையும்... நாங்க எங்கவேணாலும் உண்மையை சொல்றோம்பா...” கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தார் சதீஷின்
அப்பா....
*************
“என்னடா ஆபிஸ்ல இவ்ளோ நேரம் பண்ணின?” வழியில் எதேச்சையாக ஹரியை பார்த்தபோது கேட்டான்... பைக்கை
அருகில் நிறுத்திவிட்டு நடந்த எல்லாவிஷயத்தையும் சொன்னேன்...
குழப்பம் தீர்ந்ததை போல அவன் முகம்
காணப்பட்டது...
“அப்போ அந்த பேரன்ட்ஸ்’ஓட பேட்டி, ‘பாலோ அப்’பா நாளைக்கு வரப்போகுதா?”
“ஆமா எழுதி எடிட்டர்கிட்ட கொடுத்து சம்மதமும்
வாங்கிட்டேன்...”
“அதனால அந்த காலேஜ் பேரு கெட்டுப்போகாதா?”
“அது நம்ம கவலை இல்ல...”
“போலிஸ் விசாரணை பொய்னு ஆகிடுமே.. அவங்க
மறுபடியும் எப்டி விசாரிப்பாங்க?”
“இவ்ளோ தூரம் நடக்கும்னு நாம எதிர்பார்த்தோமா?
இல்லையே... அப்போ அதுவும் நடக்கும்னு நம்புவோம்” சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக்கொண்டு நான் கிளம்ப, என்
பின்னாலேயே ஹரியும் கிளம்பினான்...
நூறடியை தாண்டுவதற்குள் பாட்ரோல் வாகனம் என்னை
நிறுத்தியது... ஹரியும் நின்றான்... வாகனத்துக்குள்லிருந்து மூன்று காவலர்கள்
இறங்கினார்கள்...
“என்ன சார்?” நான்தான் தொடங்கினேன்...
“ஹெல்மெட் எங்கைய்யா?” சீறினார்...
“அதை ட்ராபிக் போலிஸ்ல கேட்கணும்... நீங்க ஏன்
கேட்குறீங்க?”
“விட்டா கமிஷனர் கேட்கனும்னு சொல்லுவ போல?, எவ்ளோ வச்சிருக்க?” என் சட்டைப்பையை துழாவினார்... ஒன்றும் சிக்கவில்லை...
“ஹலோ சார்... நாங்க யார்னு தெரியாம பேசுறீங்க” ஹரி முறுக்கினான்...
“யாரு?.. மினிஸ்டர் மாப்பிள்ளையா?... இப்புடித்தான் ஊருக்குள்ள பல மாப்பிள்ளைகள்
சுத்துறானுக... நீ போ... அதென்ன பைக்ல பிரஸ்னு எழுதிருக்க?... எல்லாரும் வந்து
உன்னைய அழுத்தனுமாக்கும்?” அலட்சியமாக
சிரித்தார்...
ஹரியை மேற்கொண்டு எதுவும் பேசவேண்டாமென சைகை
செய்தேன்...
“சரி, இருக்குறத கொடுத்துட்டு கிளம்புங்க...” கையை நீட்டினார்...
“அதான் எதுவும் இல்லையே, நீங்களே
பார்த்திங்கல்ல?” பொறுமையாக
சொன்னேன்...
“காசு இல்லைன்னா என்ன, அந்த வாட்ச்சை கழட்டு” சொல்லிவிட்டு என் கையில் அணிந்திருந்த வாட்ச்சை அவராகவே
கழற்றிக்கொண்டு வண்டியில் ஏறி கிளம்பிவிட்டார்...
சிரித்துக்கொண்டிருந்தேன் நான்.. ஹரி இன்னும்
கோபம் குறையாமல், “லூசா நீ?... உன் ஐடி கார்டை காட்டிருக்கலாம்ல?” என்றான்...
“தேவையில்லை... எல்லாம் நன்மைக்கே..”
“என்ன நன்மைக்கே?.. அதான் அந்த வாட்ச்
போச்சுல்ல?”
“அதோட வேலை இங்க முடிஞ்சிடுச்சு, அதனால அதுவாவே
அடுத்த எடத்துக்கு போய்டுச்சு... இனி நமக்கு அலாரம் அடிக்காது, அழுகை சத்தம்
கேட்காது”
“அப்டின்னா?”
“சதீஷ் தற்கொலை கேஸை விசாரிச்ச எஸ்.ஐ பரந்தாமன்’தான் இப்போ அந்த வாட்ச்சை வாங்கிட்டுப்போனவர்” இன்னும் சத்தமாக சிரித்தேன்... (முற்றும்)
:-) As always, nice... Uyirode irukure palar aasaiya aaviye vechu solli irukeenge...
ReplyDeleteரொம்ப நன்றி பிரபு...
Deletewow kathaiyin mudivu yenakku rombavum pidithirunthathu nanba
ReplyDeleteWell done!
ரொம்ப நன்றி சகோ...
DeleteAnna super na... thriller story... ipo trend ku puducha madhiri narrate pannirukeenga... really superb...
ReplyDeleteமிக்க நன்றி தம்பி... ஆமாம்பா, இப்போ பேய்க்கதை டிரென்ட் என்பதால்தான் இப்படியோர் முயற்சி...
Deleteசபாஷ். அருமையா சொல்லி வந்திருக்கீங்க. அருமையான முடிவு.
ReplyDeleteஒய்ஜா போர்ட் பற்றி பதிவு எழுதும்போது அது சம்பந்தமாக விவரங்களை 'நெட்'டில் தெரியபோது உங்கள் தளம் கண்ணில் பட்டது. அந்தப் பதிவும் சுவாரஸ்யமாக இருந்தது.
நன்றி நண்பரே..
ரொம்ப நன்றி நண்பரே.... உங்களைப்போன்ற வெகுஜன வலைப்பதிவர்களும் எங்கள் உணர்வுகளை பிரதிபளிக்கணும் என்பது எங்கள் ஆசை...
Deleteஅருமையான ப்ளாட்... அட்டகாசமான முடிவு.. :)
ReplyDeleteநன்றி அண்ணாச்சி...
Delete