Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday, 30 June 2015

மாங்கல்யம் தந்துனானேனா...! - என் இறுதி சிறுகதை...





நிரம்பி வழிந்துகொண்டிருந்த வாட்சப் மெசேஜ்களுக்கு ஒருவழியாக பதில்களை தட்டிவிட்டு, சோம்பல் முறித்து படுக்கையைவிட்டு எழுவதற்கு எட்டு மணி ஆகிவிட்டது... இன்று கல்லூரிக்கு அணியவேண்டிய ஆடையை தேர்வுசெய்வது அடுத்தகட்ட சிக்கல்... பலநேரங்களில் அந்த சிக்கலை அம்மாதான், “பொம்பள பிள்ளைக்கு ட்ரஸ்கூட செலெக்ட் பண்ணத்தெரியலைன்னா கேட்குறவங்க சிரிப்பாங்கடி! என்று தலையில் செல்லமாக கொட்டுவைத்துவிட்டு தீர்த்துவைப்பாள்... ஆனால், கடந்த ஒருமாதமாக வீடே ஒருவித நிசப்த நிலைக்குள் ஆட்பட்டுவிட்டதால் இப்போதல்லாம் அதற்கும் வாய்ப்பில்லை... பேசவிரும்புவதை வெளிப்படையாக பேசிடாமல், சொல்ல விரும்பியதை நேரடியாக சொல்லமுடியாமல், தத்தித்தடுமாறிய வார்த்தைகளுக்கு மத்தியில் குடும்பம் சுழன்றுகொண்டிருக்கிறது....

குடும்பத்தோடு அமர்ந்து ‘நீயா நானா பார்த்துக்கொண்டிருந்தபோதுதான், அப்படியொரு குண்டை தூக்கிப்போட்டான் அண்ணன்...

“அப்பா ரொம்பநாளா சொல்லனும்னு தடுமாறிக்கிட்டிருந்த ஒருவிஷயத்தை சொல்லணும், நான் ஒரு கே! தொலைக்காட்சியை ம்யூட்டில் வைத்துவிட்டு இப்படி சொன்னபிறகு, வீடே சில நொடிகள் ‘ம்யூட் ஆனது... 

எச்சில் என் தொண்டைக்குழிக்குள் இறங்காமல் சில நாழிகைகள் இடைநின்றது... அவன் ‘கேன்னுதான் சொன்னானா? அல்லது என் காதுகளுக்கு அப்படி கேட்டதா? என்கிற குழப்பம்கூட மனதிற்குள் அலைபாய்ந்தது...

அரைமணிநேர காரசார விவாதத்துக்கு பிறகு, “சரி இன்பா... நீ அப்டிதான்னா அதை நாங்க தடுக்கமுடியாது... நீ நீயாவே இரு! என்று சொன்னார் அப்பா... அப்பாவை கட்டியணைத்து அழுதான் இன்பா... அதுவரை தயங்கிக்கொண்டிருந்த அம்மாவை, அந்த அழுகை கரைத்திருக்கக்கூடும்... இன்பாவின் முடிவு எப்போதும் தவறானதில்லை என்று எல்லோர் மனதிலும் ஏற்கனவே பதிந்திருந்ததும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்...

நாம எந்த நாட்டில் இருக்கோம்? நாம் சார்ந்துள்ள கலாச்சாரம் இதற்கு சரிபட்டு வருமா? என்றல்லாம் கொஞ்சமும் யோசித்திடாமல், அண்ணனின் பாலீர்ப்பை ஏற்ற அப்பாவின் மீது கொஞ்சம் கோபம் துளிர்விட்டது என்னவோ உண்மைதான்... ஒருவேளை இன்பாவிற்கு பதிலாக, அவனிடத்தில் நானிருந்து, என்னை லெஸ்பியனாக வெளிப்படுத்தியிருந்தால் இதே அளவிலான அரவணைப்பை கொடுத்திருப்பார்களா? என்பது சந்தேகம்தான்...

ஐயோ மணி ஒன்பதை நெருங்கிவிட்டது... குளித்து, உடைமாற்றி கிளம்பி அதே பரபரப்புடன் ஹாலுக்கு சென்றேன்.. தக்காளி நறுக்கிக்கொண்டே தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாள் பாட்டி... சுவரோரம் அரை நிர்வாணமாக அமர்ந்திருக்கும் வடிவேலு, பத்திரிகையாளனை பார்த்து “அவனா நீ! என சொல்லும் காட்சி... புயலாக பாய்ந்து தொலைக்காட்சியை நிறுத்தினேன்... ஊரே பற்றிஎரிந்த போது, பிடில் வாசித்த நீரோ மன்னனை போல குழப்பங்கள் புரியாத பாட்டி, என் வேகத்தைக்கண்டு பதறியிருக்கக்கூடும்... நறுக்கிய தக்காளியின் ஊடே சாறு வழிந்துகொண்டிருக்க என்னை அதிசயமாக பார்த்துக்கொண்டிருக்கிறாள்...

“காலங்காத்தாலேயே டிவியா?... வேலைய ஒழுங்கா பாரு பாட்டி, அங்கபாரு தக்காளி தரையில கொட்டுது! பாட்டியின் பார்வை இன்னும் கூர்மையானது, எனது பொறுப்புணர்வு அவளுக்கு புதியதாய் தெரிந்திருக்கலாம்...

என் சத்தம் கேட்டு சமையலறைக்குள்லிருந்து வெளிவந்த அம்மா, “தோசை ஊத்திட்டேன் சாப்ட்டு போடி! என்றாள்...

“இல்லம்மா நேரமாச்சு... நான் கேண்டீன்ல சாப்ட்டுக்கறேன்... சொல்லிவிட்டு நடையும் ஓட்டமுமாக வாசலை அடைந்துவிட்டேன்... ஸ்கூட்டியில் புத்தகங்களை வைத்துவிட்டு பார்த்தபோதுதான், பின் சக்கரத்தில் காற்றில்லை என்பது தெரிந்தது...

அட ஆண்டவா... மணி இப்போவே ஒன்பதரை... தலையில் அடித்துக்கொண்டேன்...

வேறுவழியின்றி ஆட்டோவில் பயணத்தை தொடங்கினேன்... “எத்திராஜ்க்கு போங்கண்ணா என்று ஆட்டோ டிரைவருடன் பேரம்பேச நேரமில்லாமல் இடத்தை மட்டும் சொல்லிவிட்டு அமர்ந்துகொண்டேன்...

பழைய சூழல் நிலவியிருந்தால், “டேய் இன்பா, காலேஜ்ல டிராப் பண்ணிடுன்னு சொன்னால் போதும், அடுத்த பத்தாவது நிமிடத்தில் கல்லூரி வளாகத்துக்குள் நான் இருந்திருப்பேன்... இப்போ அதற்கான சூழலும் இல்லை... அவனோடு சரிவர பேசக்கூட மனம் ஒப்பவில்லை... முன்பின் தெரியாத ஆட்டோ டிரைவரை சிநேகமாக ‘அண்ணன் உறவு சொல்லி அழைக்கும் என்னால் இந்த ஒருமாதத்தில் ஒருமுறைக்கூட இன்பாவை ‘அண்ணா என அழைக்கமுடியவில்லை...

அதற்காக ‘கே தப்புன்னும், அப்டிபட்ட நபர்கள் தவறானவர்கள்னும் நான் நினைக்கல... அவங்களும் மனிதர்கள்தான், அவங்களுக்கும் உரிமைகள் கிடைக்கனும்னு “சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் ஆமிர்கானுடன் அமர்ந்துபேச வாய்ப்பு கிடைத்திருந்தால்கூட  பேசியிருப்பேன்... ஆனால் இது ரியாலிட்டி ஷோ இல்லை, வாழ்க்கையாச்சே... இருபது வருடங்களாக நான் பார்த்த என் அண்ணனை, ஒரு மாதத்தில் வேறொரு கோணத்தில் பார்க்க மனம் பக்குவப்படவில்லை... அதனால் எழுந்த ஒருதயக்கம், மெள்ள அவன் மீதான வெறுப்பாய் கூட உருமாறிவிட்டது...

“என்ன திவ்யா, இப்போலாம் ஆளே அமைதியாகிட்ட?ன்னு ஒருநாள் கேட்டேவிட்டான்...

“அப்டிலாம் இல்ல என்று மட்டும் சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்துவிட்டேன்...

அந்த புறக்கணிப்பு அவனுக்கு புரிந்திருக்கும், கவலைகொள்ளக்கூட செய்திருக்கும்... ஆனால், என்னால் அவனோடு இயல்பாக இருக்கமுடியாததற்கு நான் பொறுப்பாக முடியாதே...

ஒருவழியாக குலுங்கி குலுங்கி கல்லூரியை அடைந்தபோது சாப்பிடவல்லாம் நேரமில்லை, நேராக வகுப்பறைக்கு ஓடினேன்... வழிந்த வியர்வையை துடைக்கும்போதே, நாளைக்கு அரும்பப்போகும் முகப்பரு மனதில் பயத்தை ஏற்படுத்தியது...

‘மாலை வீட்டுக்கு போனதும் முகத்தை க்ளென்சிங் செய்து, பேஸ்பேக் போடணும்... இனிமே சன்ஸ்க்ரீன் போடாம வெளில வரவேகூடாது... மனதிற்குள் இப்படி அதிமுக்கிய எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது, அப்பாவியாக ஒரு ஆசிரியை ‘ஜி.டி.பியைப்பற்றி தனியாக புலம்பிக்கொண்டிருந்தாள்....

மதிய உணவு இடைவேளையில் அளவாக சாப்பிட்டுவிட்டு, வகுப்பறையில் நான் மட்டும் அமர்ந்து கேண்டி க்ரஷ் விளையாண்டுக்கொண்டிருந்தேன்... அப்போதுதான் ப்ரியா என் பக்கத்தில்வந்து அமர்ந்தாள்... ப்ரியா என் தூரத்து நட்புவட்டம், பெரிய அளவில் நெருக்கமல்லாம் இல்லை... ஆனால், இவளிடம் சொல்லப்படும் ரகசியம்தான், மறுநாளைய கல்லூரியின் தலைப்பு செய்தி...

“ஏண்டி இப்போலாம் தனியாவே இருக்க? தூண்டிலை போட்டாள்...

“அப்டிலாம் இல்லையே... சீக்கிரம் சாப்ட்டதால இங்க வந்தேன்..

“வீட்ல ஏதும் ப்ராப்ளமா என்ன? ஒருமுடிவோடு வந்திருக்கிறாள் போலும்...

“இல்லடி... ஏன் சம்மந்தமே இல்லாம கேட்குற?

“உங்க அண்ணனைப்பத்தி ஒருவிஷயம் கேள்விப்பட்டேன், அதான்... சொன்னா தப்பா நினைக்கமாட்டியே?

“சொல்லு... பரவால்ல...

“உங்க அண்ணன் கேயா?

“இல்லையே... யார் சொன்னது? கேள்வியை முடிக்கும்முன்பே பதற்றத்தோடு பதில் சொல்லிமுடித்தேன்...

“அவர் கே ப்ரைடுல கலந்துகிட்ட போட்டோவ பேஸ்புக்ல பார்த்தேன், அதான்... கைல ரெயின்போ கொடியோட சூப்பரா இருந்தார்டி...

இதற்கு நான் என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை... அவள் என் பதிலையும் எதிர்பார்க்கவில்லை... அடுத்தடுத்து வகுப்பறைக்குள் ஆட்கள் நிறைய, எனது மனதில் குழப்பங்களும் நிறைந்தது...

மாலை கல்லூரி முடிந்ததும் யாருடனும் பேசவில்லை, அவசரமாக ஆட்டோ பிடித்து வீட்டை நோக்கி விரைந்தேன்... இன்பாவை ஒருவழி பண்ணனும்... அவன் என்னவாகவோ இருந்துட்டு போகட்டும், எதற்காக அந்த விஷயம் என் வாழ்க்கையில் சலனத்தை ஏற்படுத்த நான் அனுமதிக்கணும்?...

அவன் சந்தோஷமா வாழனும்னா எங்கயாச்சும் கண்காணாத இடத்துக்கு போய் வாழவேண்டியதுதானே?.... எல்லோரும் விந்தையாக பார்க்கும் ஒரு வாழ்க்கையை எங்கள் அருகில் இருந்தே வாழனுமா?... இது எல்லாத்துக்கும் முதல்ல அப்பாவ சொல்லணும்... அவர் முற்போக்கு சிந்தனையை காட்ட, நான்தான் பலிகடாவா?...

அவர் அலுவலகத்தில் சக நண்பர், “உங்க பையன் கேயா?ன்னு கேட்கும்போது அந்த வலி அவருக்கு புரியும்... அழுகையும் ஆத்திரமுமாக வந்தது... 

வீட்டை அடைந்தவேகத்தில் வாசலில் கிடந்த புதிய செருப்பு, நான் நிதானிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது... பக்கத்துவீட்டு ராஜம் அக்கா, அவர்கள் வீட்டு காம்பவுண்ட் சுவரில் சாய்ந்தபடி நின்று என்னை அழைத்தாள்... இவள் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காகவே நான் ஸ்பெஷல் வகுப்புகள் போகவேண்டியிருக்கும் போல...

“என்னடி கல்யாணப்பொண்ணு, அதுக்குள்ளையும் என்ன அவசரம்? சுஜாதா கதைகளை போல புரியாமல் தொடங்கினாள்...

“கல்யாணப்பொண்ணா?... நான் என்ன அவசரப்பட்டேன்?

“அதான் உன்னைய பொண்ணு பாக்க வந்திருக்காங்களாமே... தெரியாத மாதிரி பேசுற.. மாப்பிள்ளை ஜம்முன்னு இருக்கார்டி... ஆனா காலேஜ் முடிஞ்சப்புறம் பண்ணிருக்கலாம்ல? என்னதான் பேசுகிறாள்?.. அரைத்தூக்கத்தில் சீரியல் எதுவும் பார்த்திருப்பாளா?...

“புரியுற மாதிரி சொல்லுங்கக்கா... என்னைய பொண்ணு பார்க்க வந்திருக்காங்கன்னு யார் சொன்னது உங்ககிட்ட?

“உங்க பாட்டிதான்...

“கிழவி என்ன சொன்னுச்சு?

“பையன் யாருன்னு கேட்டேன்... வீட்டுக்கு வரப்போற மாப்பிள்ளைன்னு சொன்னுச்சு... எனக்கு தலையே சுற்றியது... இதென்ன புதுக்குழப்பம்?... எனக்கு கல்யாணமா?... இதைப்பற்றி யாரும் ஒருவார்த்தைகூட சொல்லவில்லையே... இன்பாவின் காய்ச்சலுக்கு நான் மருந்து சாப்பிடனுமா?... தலையே சுற்றுகிறது, நேரடியாகவே பார்த்துக்கொள்கிறேன்... ராஜத்துக்கு பதிலெதுவும் சொல்ல விரும்பிடாமல் வீட்டை நோக்கி நடந்தேன்...

ஆழமாக மூச்சை உள்ளிழுத்துவிட்டேன்... முகத்தை துடைத்துக்கொண்டு, தலைமுடிகளை சரிசெய்தவாறே உள்ளே நுழைந்தேன்...

ஹாலின் இருக்கைகளை அப்பா, இன்பா மற்றும் இன்னொரு புதியவன் என மூவரும் ஆக்கிரமித்திருந்தார்கள்... மற்றொரு இருக்கையின் முனையை பற்றியபடி அம்மா நின்றுகொண்டிருக்கிறாள்... மேசையில் பலகாரங்களும், காபியும் அலங்கரிக்கப்பட்டிருந்தது... நிஜமாகவே பெண் பார்க்கத்தான் வந்திருக்கிறார்களா? என்கிற சந்தேகம் வலுத்தது...

என்னை பார்த்ததும் வேகமாய் எழுந்துவந்த இன்பா, என் தோளை பிடித்தபடி நின்று, “இவதான் என் ஸ்வீட் சிஸ்டர் திவ்யா... என்று அறிமுகப்படுத்தினான்...

புதியவன் சிநேகமான புன்னகையுடன், “ஹலோ திவ்யா... உங்களைப்பத்தி இன்பா நிறைய சொல்லிருக்கான்.... இயல்பாக பேசினான்...

அப்பா செயற்கையான புன்னகையுடனும், அம்மா மெல்லிய பதற்றத்துடனும் நின்றுகொண்டிருந்தாள்... 

“இது... இவங்க யாரு? சத்தம் வராதபடி இன்பாவின் காதுகளில் கிசுகிசுத்தேன்...

“சொல்லவே இல்லைல்ல... இவன்தான் என் பாய் ப்ரென்ட் திவ்யா... பேரு அகிலன்... சொல்லிமுடித்தபோது எனது கோபத்தின் அளவு சிலபல செல்சியஸ்கள் உயர்ந்துவிட்டது...

பட்டவர்த்தனமாக எதையும் காட்டிக்கொள்ளமுடியாத சூழல்... “சரி நீங்க பேசிட்டு இருங்க... நான் ரெப்ரஷ் பண்ணிட்டு வரேன் சொல்லிவிட்டு என் அறைக்குள் ஐக்கியமானேன்...

கதவை அழுத்தி சாத்திவிட்டு, படுக்கையில் படாரென விழுந்தேன்... அதுவரை இன்பாவின் மீது மட்டுமிருந்த கோபம், இப்போது அப்பா அம்மாவின் மீதும் படர்ந்துவிட்டது... அவன் எல்லா செயலுக்கும் வாய்மூடி ஆமோதிக்கும் அவர்களுக்கு, நானும் அவர்களின் மகள்தான் என்கிற நினைவு வரவே இல்லாதது ஆச்சர்யம்... என்னுடைய எதிர்காலத்தைப்பற்றி எப்போதாவது யோசித்தார்களா? என்பது புரியவில்லை... இன்பாவின் பாலீர்ப்பு, என்னுடைய எதிர்காலத்தை எந்த விதத்தில் பாதிக்கும் என்று புரியாத அளவிற்கு உலக அறிவு இல்லாதவர்களா அவர்கள்?...

அதிகபட்சம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் எனக்கு வரன் தேடும்போது, “உங்க பையனுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? என்ற கேள்வியையோ, “உங்க பையன் கேவாமே? என்கிற முகச்சுளிப்பையோ எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள்? என்றும் புரியவில்லை... இந்த குழப்பத்துக்கு நடுவில் எனக்கு மாப்பிள்ளை வேறு வந்திருப்பதாக பாட்டி ஊரெல்லாம் சொல்லி வருகிறாள்...

இல்லை... வீட்டுக்கு மாப்பிள்ளை என்றுதானே சொன்னாள், அப்படியானால் அவள் தெளிவாகத்தான் சொல்லியிருக்கிறாள்... ராஜத்தை போல நானும் அதன் அர்த்தத்தை தவறாக உள்வாங்கிக்கொண்டேன் போலும்... 

காற்றாடியின் இரைச்சல் என்னை மேலும் எரிச்சலூட்டியது... வேகமாக எழுந்து அதனை அணைத்தேன், கதவின் இடுக்குகள் வழியே ஹாலில் பேசிக்கொண்டிருப்பது இப்போது தெளிவாக கேட்டது...

“வர்ற வெள்ளிக்கிழமை நானும் அகிலனும் கோவில்ல மோதிரம் மாத்திக்கலாம்னு இருக்கோம்பா... அகிலனின் வரவு ஹிரோஷிமா என்றால், இப்போ சொல்வது நாகாசாகி....

“என்னப்பா திடீர்னு முடிவு? அப்பாதான் கேட்கிறார்... திடீர்னு சொன்னதால அவர் மறுக்கப்போவதுமில்லை என்பது எல்லோரும் அறிந்ததுதான்....

“கொஞ்சம் குடும்ப பிரச்சினைகள்லாம் முடிஞ்சவுடன் வச்சுக்கலாம்ல இன்பா? திவ்யாவுக்கு கூட வரன் பாக்கணும்!... சரியான பாதையில் அம்மா பேச்சை தொடங்குகிறாள்... ஆனால், இன்பா அழுவதைப்போல பாவனை செய்தால் உடனே, “இப்போவே பண்ணிக்கோங்க! என்று அந்தர்பல்டி அடிப்பாள்...

ஆனால், இப்போ நான் விடப்போவதில்லை... என் வாழ்க்கைப்பற்றிய பயம் எனக்குண்டு... குறைந்தபட்சம் என் பயத்தையும், கவலையயுமாவது அவர்களுக்கு சுட்டிக்காட்டிடவேண்டும்... “நீ வாயை மூடு!ன்னு அப்பாவும், “என்னடி பேசுற?ன்னு அம்மாவும் என்னை மௌனிக்க கட்டளையிடக்கூடும்....

வெளியில் வேறு ஏதோ பேசும் குரல்களும் கேட்கிறது....

“ஒன்னும் ப்ராப்ளம் இல்லப்பா... நாங்க எங்க மன திருப்திக்குதான் இப்போ கல்யாணம் பண்ணிக்கப்போறோம்... நீங்கள்லாம் அதுக்கு வரணும்னுகூட அவசியம் இல்ல... திவ்யாவுக்கு கல்யாணம் முடிஞ்சு செட்டில் ஆகுறவரைக்கும், என்னப்பத்தி யார்கிட்டயும் வெளிப்படுத்தக்கூட மாட்டேன்... அதுக்கப்புறம் நானும் அகிலனும் அப்ராட் போறதா ப்ளான் பண்ணிருக்கோம்... உங்களுக்கு விருப்பம் இருந்தா நீங்களும் எங்ககூட வரலாம், இல்லைன்னாலும் தொந்தரவு பண்ணமாட்டேன்...வரிசையாக சொல்லிமுடித்தான் இன்பா...

“ஐயோ.. என்னப்பா வெளிநாடுவரைக்கும் சொல்ற? அம்மாவின் பயம் வார்த்தைகளில் ஒலித்தது...

“இல்லம்மா... உங்க பையன்குறதால நீங்க புரிஞ்சுக்கலாம்... மத்தவங்களும் அதேமாதிரி புரிஞ்சுப்பாங்கன்னு சொல்லமுடியாது பாருங்க...  அதனால எதுக்கு சங்கடங்கள்னுதான் இந்த முடிவு...

ஓரளவு எனக்கு உடன்பாடான விஷயத்தைதான் சொல்லியிருக்கிறான்... இந்த அளவு அவன் அடக்கிவாசித்தாலே இப்போதைக்கு எனக்கு போதும்... மனம் குழப்பங்கள் கரைந்து, இலகுவானதை போல உணர்ந்தேன்....



                                   **********

வழக்கமான காலைப்பொழுதுதான்... கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்பி, அம்மாவின் தோசையை பதம்பார்த்துக்கொண்டிருந்தேன்.... அதிசயமாக அவ்வளவு சீக்கிரமாக குளித்துமுடித்து, பட்டு சேலை அணிந்துகொண்டிருந்தாள் பாட்டி... பூகம்பமே வந்தாலும் அது தொலைக்காட்சி பார்க்கும் நேரமாச்சே, இந்த நேரத்தில் எங்கே கிளம்புது?....

“எங்க பாட்டி கிளம்பிருக்க?... அதுவும் திருவிழாவுக்கு போறமாதிரி, பட்டுசேலையல்லாம் கட்டிக்கிட்டு?

“இது உங்கப்பன் கல்யாணத்துக்கு வாங்குன சேலடி, இப்பத்தான் இதுக்கு வேல வந்திருக்கு

“ஏன் எங்கப்பா இன்னொரு கல்யாணம் பண்ணப்போறதா சொன்னாரா? சிரித்தேன்...

“ஒன்னு பண்ணதுக்கே அவன் தலையால தண்ணி குடிக்கிறான், இதுல இன்னொன்னு வேறயா? அம்மாவின் காதுகளுக்கு எட்டாத குரலில் சொன்னாள்...

“அப்போ எங்கதான் போற?

“இன்னிக்கு வெள்ளிக்கிழமை... என் பேரன் கல்யாணம் பண்ணிக்கப்போறான்ல, அதுக்குதான்... எனக்கு கோபம் தலைக்கு மேல் சுர்ரென்றது...

“உனக்கென்ன கிறுக்கா புடிச்சுச்சு?... அவனே காதும் காதும் வச்சா மாதிரி கல்யாணம் பண்ணப்போறான்... இதுல வாத்தியம் வாசிக்க உன்ன கூப்டானாக்கும்?... உன் வேலைய பாரு சற்று கோபமாகவே பேசினேன்...

“உங்கள மாதிரியல்லாம் என்னால இருக்கமுடியாது... ஊருக்கு பயந்தும், வரப்போற புருசனுக்கு பயந்தும் நீ, உங்க அப்பாம்மாவல்லாம் போகாம இருக்கலாம்... என்னால அப்டியல்லாம் கல்லு மாதிரி இருக்கமுடியல...

“ஆமாமா நாங்கல்லாம் மோசமானவங்கதான் பாரு... இதுவே மத்த வீடுகள்ல ஒரு புள்ளை இப்டி சொல்லிருந்தா, கொன்னே போட்டிருப்பாங்க... அமைதியா இருந்த நாங்க உனக்கு கெட்டவங்களா தெரியுறோமா?

“மத்த வீட்டு புள்ளைகளா இருந்தா உன்னப்பத்தி கவலைப்படாம கல்யாணம் பண்ணி இந்நேரம் வெளிநாடு போயிருப்பான்... உன் எதிர்காலத்த பத்தியும், உங்க அப்பாம்மா கௌரவம் பத்தியல்லாம் கவலைப்பட்டிருக்க மாட்டான்... அவன் சந்தோஷத்த கூட உங்களுக்காகவல்லாம் வெளிக்காட்டிக்காம மறச்சுவச்சுதான் வாழறான்... ஒவ்வொரு விஷயத்துக்கு பின்னாடியும் உங்களைப்பத்தியும் யோசிக்கிறான்... ஆனா நீங்க யாரும் அப்டி இல்ல... நீங்க யாரும் அவன் சந்தோஷத்துக்காக எதையும் செய்யல... அவன்தான் உங்க நிம்மதி கெட்டுடக்கூடாதுன்னு ஒவ்வொன்னையும் பாத்து பாத்து செய்றான்... அதை நல்லா யோசிச்சு பார்த்தா உங்களுக்கே புரியும்... என் பேரன் கல்யாணத்துக்கு போறத எவனும் கேள்விகேட்கமுடியாது.. தலைமுடியை அள்ளிமுடிந்துகொண்டு வாசலை நோக்கி நகர்ந்துவிட்டாள்....

என்ன சொல்கிறாள் பாட்டி?... அவள் சொல்வதில் நியாயம் இருக்கிறதோ?... இன்னிக்கு இன்பாவோட வாழ்க்கைல ஒரு மைல்கல், அவனுக்கு கல்யாணம்... ஒவ்வொரு மனிதனுக்கும் அவங்க கல்யாணத்தப்பத்தி எவ்வளவோ கனவுகள் இருக்கும்... பெரிய மண்டபத்துல, ஊரையே கூட்டிவச்சு விருந்து கொடுத்து, எங்கபாத்தாலும் சிரிப்புசத்தம்... அன்னிக்கு ஒருநாள் அவங்கதான் ஹீரோங்குற நினைப்பு... ஆனால், இது எல்லாமே இன்பாவுக்கு கானல் நீர்தான்... குடும்ப உறுப்பினர்கள் கூட இல்லாம கல்யாணம், மனசு என்ன பாடுபட்டிருக்கும்?... அப்பாவையும் அம்மாவையும் அங்க வந்துதான் ஆகணும்னு அவன் சொல்லிருந்தா, இவங்க மறுக்கப்போறதுமில்ல... ஆனால், என்னோட வாழ்க்கையை மனசுல வச்சுதான், யாருமே இல்லாதது மாதிரி தனியா கல்யாணம் பண்ணிக்கப்போறான்...

“சாப்ட்டு கை கழுவாம சுவத்த என்னடி வெறிச்சு பார்த்துகிட்டு நிக்குற? தலையை தட்டினாள் அம்மா...

“நான் நிக்குறது இருக்கட்டும்... நீ இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க?

“நான் எங்க கிளம்பனும்?

“அண்ணன் கல்யாணத்துக்கு

“எந்த அண்ணன்டி?

“எனக்கென்ன டசன் கணக்குலயா அண்ணன் இருக்காங்க?... என் அண்ணன் கல்யாணத்துக்குதான்... கொஞ்சமாச்சும் பெத்த பாசம் இருக்கா உனக்கு?...

அம்மா அதிசயித்து என்னை பார்த்துக்கொண்டிருக்கிறாள்... முகூர்த்தத்துக்கு நேரமாச்சு, நான் போய் சேலை செலக்ட் பண்ணனும்.... மாப்பிள்ளையோட தங்கச்சிக்கு என்னன்ன சடங்குகள் இருக்குன்னு பாட்டிகிட்ட கேட்டுக்கணும்!...

12 comments:

  1. பத்திரிக்க வைக்கலன்னாலும் பரவால்ல... நானும் ஆஜர் தானுங்கோ... :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணாச்சி,,,

      Delete
  2. Replies
    1. நன்றி சகோ...
      உங்க கேள்விக்கான பதிலை இன்னும் இரண்டு நாட்களில் வெளிப்படுத்திவிட்டுத்தான் விலகுவேன் நண்பரே...

      Delete
  3. காலம் மாறுகிறதே... சுப்ரீம் கோர்ட் கூட ஓ'கே'ன்னுடுச்சு.....!

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹா... சுப்ரீம் கோர்ட் அமெரிக்காவுலதான் சகோ, ஓ"கே" சொல்லிருக்கு... இங்க நோ"கே" ன்னுதான் சொல்லிருக்கு...

      Delete
  4. ஏன் அண்ணா போறீங்க ,,,,,,,,,,,,, சரி உங்கள நான் தடுக்கேல ஆனா கவலையா இருக்கு அண்ணா '''''''''''''''''''''''''''''''''''''

    ReplyDelete
    Replies
    1. கவலை வேண்டாம் தம்பி... நிச்சயம் புதிய பல நல்ல எழுத்தாளர்கள் இங்கு உருவாகுவார்கள்... உங்கள் அன்பிற்கு என்றைக்கும் எனது நன்றிகள் சகோ..

      Delete
  5. HI, you are an outstanding writer. I like your way of writing. I am as a straight man, I have changed my vision in a positive way about LGBT. My humble request for you is, do not stop writing, I expect you to write in several areas beyond this. one day you will get your recognition.
    ( i have a question - Where is your vijay now?? - answer if you wish only)

    ReplyDelete
    Replies
    1. உங்களை போன்ற பொதுத்தள அன்பர்கள் கொடுக்கும் ஆதரவு மனதை நெகிழச்செய்கிறது.... எங்கள் உணர்வுகளை புரிந்துகொண்ட உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி...
      இப்போ விஜய்க்கு திருமணமாகிவிட்டது சகோ...

      Delete
  6. Vijay anna intha gay life pathi enakkulla1000 kelvigal iruju. Kekkathan yaarumilla +94779307689 ithu en whatsapp viber num.. neram iruntha enkoodayum konjam pesungalen

    ReplyDelete