Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Thursday 21 June 2012

அழகின் சிரிப்பு.....


வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை காலைத்தூக்கம் இன்றைக்கும் சுகமாகவே இருந்தது சரணுக்கு.... பத்து மணி ஆனபோதிலும் படுக்கை சுகம் இன்னும் அவனை எழவிடாமல் படுக்கையில் கிடத்தி வைத்திருந்தது.... சரணின் அலைபேசி ரிங்டோனான "சொட்ட சொட்ட நனையவைத்தாய்....." பாடல் ஒலிக்க எப்போதையும்விட இப்போது அதிக ஆர்வத்தில் எடுத்து பார்த்தான்..... அலைபேசி திரை "அம்மா" என்று காட்டியது.... கொஞ்சம் ஏமாற்றத்துடன், அழைப்பை ஆன் செய்த சரணிடம், "என்னப்பா இன்னும் எழுந்திருக்கலையா?.... மணி பத்தாகிடுச்சு.... சாப்பிடலையா இன்னும்?" என்ற தொடர்விசாரிப்புகள் அம்மாவிடமிருந்து வந்தது.... கொஞ்சம் எரிச்சலான சரண், "ஐயோ அம்மா, காலைலேயே ஆரமிச்சுட்டியா?.... நான் உனக்கு அப்புறமா பேசுறேன்... வை போனை" என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.... அலைபேசியை கையில் வைத்தவாறே ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான் சரண்..... மீண்டும் "சொட்ட சொட்ட நனையவைத்தாய்...." பாடல் ஒலிக்கவே, எரிச்சலுடன் அலைபேசியின் திரையை பார்த்த சரணின் முகம் பிரகாசமாக மிளிர்ந்தது.... படபடப்புடன் படுக்கையில் எழுந்து அமர்ந்தவன், முகத்தை அருகில் இருந்த துண்டால் துடைத்துக்கொண்டுவிட்டு அழைப்பை ஆன் செய்தான்.... "என்ன சரண்?.... இப்போதான் எழுந்திருக்கிரியா?.... சாப்டியா?" என்று மறுமுனையில் பேசிய ஒரு வசீகரிக்கும் ஆண்குரல் கேட்டது.... அம்மா கேட்ட அதே கேள்விகள் ஆனாலும் கூட, சரணிடமிருந்து பதில்கள் வேறுவிதமாக வந்தன.... "ஆமா விவேக்.... இப்போதான் எந்திருச்சேன்.... நேத்து நைட் கொஞ்சம் தண்ணி ஓவராகிடுச்சு .... பிரண்ட்ஸ் கம்பல் பண்ணதால... அதான்... இனிமேல்தான் சாப்பிடனும் .... நீ சாப்பிட்டியா ?" என்ற பரஸ்பர விசாரிப்புகளுக்கு பிறகு விவேக், "இன்னைக்கு ஈவ்னிங்  வரேன்.... கரக்டா எங்க வரணும்னு சொல்லு..." என்றான்.... "தில்லைநகர் சவந்த் க்ராஸ்... ராஜ் வீடியோஸ்கு பக்கத்துல இருக்குற ரூம்..." என்று விலாசம் கூறினான் சரண்.... சிரித்த விவேக், "ஐயோ எனக்கு திருச்சி புதுசுப்பா.... இவ்வளவெல்லாம் தெரியாது" என்றான்... "சாரிடா... நீ சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வந்திடு, நான் கூட்டிட்டுப்போறேன்" என்று கூறிவிட்டு இருவரும் அலைபேசியை துண்டித்தனர்.... இன்று நிச்சயமாக வழக்கமான ஞாயிறாக சரணுக்கு நினைக்க முடியவில்லை.... தன் வாழ்வின் இந்த நாள் நிச்சயம் மறக்க முடியாத நாளாக இருக்கும் என்று நம்பினான்...  காலை உணவை சாப்பிட்டுவிட்டு தன் அறையை ஒரு சுற்று பார்த்தான்.... திருடர்கள் திருடிவிட்டு சென்ற வீட்டைப்போல எல்லாமும் திசைக்கொன்றாக, இடம் மாறி இருந்தது.... ஒவ்வொன்றாக எடுத்து வைத்து தன் அறையை சுத்தம் செய்தான்.... இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஓரளவு முடிந்த அளவிற்கு அறையை சுத்தமாக்கினான்.... முதல்நாளே வாங்கிவைத்த முகத்திற்கான பல கலவை கொண்ட பூச்சுகளை முகத்தில் பூசியவாறே படுக்கையில் படுத்தான்.... விவேக் சரணுக்கு ஐந்து நாட்களாகத்தான் பழக்கம்.... இதுவரை இருவரும் ஒருவருக்கொருவர் நேரிலோ, புகைப்படத்திலோ பார்த்ததுகூட இல்லை.... முகநூல் முகம் அறிமுகமான விவேக், ஒரு கே க்ரூப்பில்தான் சரணுக்கு அறிமுகம்.... சாட்டில் அறிமுகமான இருவருமே தங்களுக்கு வாழ்க்கை முழுவதும் உறவை தொடர காதலன் வேண்டும் என்ற ஒற்றை கருத்தில் உடன்பட்டதால் இருவரும் நண்பர்களாகினர்.... இருவருமே கல்லூரி மாணவர்கள்... இருவருமே நேரில் பார்க்கும்வரை புகைப்பட பரிமாற்றம் வேண்டாம்  என்று முடிவு செய்ததால் இப்போதுவரை இருவரும் புகைப்படம் பற்றி கண்டுகொள்ளவில்லை.... ஞாயிற்றுக்கிழமையான இன்றுதான் இருவரும் நேரில் பார்த்துக்கொள்ள போகிறார்கள்.... ஆனால் ஐந்து நாட்களாகவே விவேக்கின் வருகையை பற்றி சிந்திக்காத நிமிடம் இல்லை... ஐந்து நாட்களும் நாளொன்றுக்கு பத்து முறையாவது இருவரும் அலைபேசியில் பேசிக்கொள்வார்கள்.... பல விஷயங்களையும், தங்கள் மனதிற்குள் இத்தனை காலம் புதைத்துவைக்கப்பட்ட பல உண்மைகளை பகிர்ந்துகொண்டனர்.... பொதுவாக நண்பர்கள் வட்டம் சரணுக்கு மிகக்குறைவு.... யாரிடமும் அவ்வளவாக எதையும் பகிர்ந்துகொள்ளாமல் தனியாகவே தன்னை வாழ பழகிக்கொண்டான்..... இந்த ஐந்து நாட்கள் சரணை அவன் நண்பர்களிடம் கூட ஆச்சரியப்பட வைத்தது.... எப்போதும் எதையோ இழந்தவனைப்போல காணப்படும் சரணின் முகத்தில் புத்துணர்வு , பொலிவு காணப்படுவது அனைவருக்கும் வித்தியாசமாக தெரிந்தது.... இவ்வளவு காலமும் கே வாழ்க்கை அவனை மற்றவர்களிடமிருந்து சகஜமாக பழக விடாமல் தனித்து இயங்க வைத்துவிட்டது.... ஒருசில நல்ல நண்பர்களை இழந்ததன் காரணமாக தன்னை தானே மாற்றிக்கொண்டுவிட்டான்.... சில உடன் படிக்கும் மாணவர்களுக்கு இவன் கே என்பது தெரியும்.... இவன் அறியாமல் இவனைப்பற்றி தரக்குறைவாக பேசிய பல பேச்சுகள் இவன் காதுகளில் விழுந்து மனதை புண்ணாக்கின.... இதற்கெல்லாம் தனிமை ஒன்றே தீர்வாக பட்டதால் இப்படி வாழ்ந்தான் சரண்.... ஐந்து நாட்களாக விவேக்கின் வருகைக்கான ஆயத்தப்பணிகளை சிரத்தையோடு செய்தான் சரண்.... படுக்கையில் படுத்திருந்த படுக்கையை ஒருமுறை தடவி பார்த்தான்... இன்று இரவுதான் இந்த படுக்கைக்கு கூட வெட்கம் வரப்போவதாக நினைத்து சிரித்தான் ... விவேக்கிடம் பேசியபோது சரண் ஒருமுறை, "விவேக், நம்ம பேஸ்புக்ல நம்மள மாதிரி கே ப்ரெண்ட்ஸ் பலர் கமிட்டட் னு போட்டிருக்குரத பார்க்குறப்போலாம் என்னைக்காச்சும் நானும் அப்படி போடணும்னு நினைப்பேன்.... உன்னால இப்போ நான் கமிட்டட் ஆகிட்டேன்.... இனி எனக்கும் ஒரு ஆள் இருக்கான்னு நான் அங்க பலபேர்கிட்ட திமிரா சொல்லுவேன்" என்று சிரிப்பான்.... உண்மையில் பேஸ்புக் கணக்கு தொடங்கியது முதல் சரணின் லட்சியமாகவே இருப்பது இந்த எண்ணம்.... இப்படி ஒருவனிடம் தான் பேசுவேன், பழகுவேன் என்று சரண் நினைத்துக்கூட பார்க்கவில்லை.... ஆறு மணிக்கு சத்திரம் வருவதாக விவேக் கூறி இருந்தாலும் கூட , சரண் அங்கு நின்றபோது மணி ஐந்துதான் ஆனது.... நிமிடத்திற்கு ஒருமுறை அங்கு வந்து நிற்கும் பேருந்தையும் தன் கடிகாரத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான் சரண்.... ஐந்தரை மணிக்கு விவேக் கால் செய்தான்.... "நான் பஸ் ஏறிட்டேன் சரண், இன்னும் அரை மணி நேரத்துல வந்திடுவேன்" என்று அழைப்பை துண்டித்தான் விவேக்.... ஐந்து நாட்கள் பொருத்திருந்த சரணுக்கு அந்த அரை மணி நேரம் யுகம் போல இருந்தது.... சத்திரம் வந்து சேர எப்படியும் அரைமணி நேரம் ஆகிடும் என்று அவன் அறிவு சொன்னாலும், மனம் ஏனோ ஒவ்வொரு நிமிடமும் அங்கு வரும் பேருந்துகளையே நோட்டமிட்டது.... இன்னும் ஐந்து நிமிடத்தில் விவேக் வந்துவிடுவான் என்கிற பதட்டமான கடைசி கட்ட நிமிடத்தில், சரணின் பின்னால் ஒரு கை அவனின் தோளை தொட்டது... கொஞ்சம் பதட்டமும், நிறைய ஆர்வத்தோடும் திரும்பி பார்த்த சரணுக்கு அதைவிட அதிகமான ஏமாற்றமே மிஞ்சியது... காரணம், சரணை அழைத்தது அவன் நண்பன் பிரபு....  ஏழு வார்த்தைகளை கொண்ட திருக்குறள் கேட்டால் கூட அதை எழுபது வார்த்தைகளாக கூறும் அளவிற்கு பேசுவதில் ரம்பம்...  இவனை எப்படி கழட்டி விடுவது என்கிற குழப்பத்தில், "என்னடா?.... இங்க என்ன பண்ற?" என்றான் சரண்.... "அதுவா.... நான் காலைல துறையூர்ல  இருக்குற மாமா வீட்டுக்கு போனேன், அங்க அத்தைக்கு உடம்பு சரி இல்லைன்னு மாமா ஆஸ்பத்திரி கூட்டிட்டு போனதால, மதியம் நான் ஸ்ரீரங்கத்துல இருக்குற சித்தப்பா வீட்டுக்கு போனேன்... அங்க கோவில் திருவிழா மாதிரி கூட்டம்டா ..... காவிரி ஆத்துல தண்ணி அவ்வளவு அழகா வருதுடா....." என்று துறையூரில் தொடங்கி காவிரி கல்லணை என்று நீண்ட பிரபுவின் விளக்கங்கள் நிமிடங்களை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கியது....  சரணின் இதயத்துடிப்பு "லப் டப்" என்று இல்லாமல் "டம் டம் " என்று இடித்தது..... கொஞ்சம் யோசித்த சரண், "எனக்கு தலை வலிக்குது.... நான் ரூமுக்கு போறேண்டா" என்றான்.... "தலை வலிக்குதா?.... வாடா டீ சாப்பிடலாம்... டீ சாப்பிட்டுட்டு ஒரு பாராசிட்டமால் போட்டுக்கோ, தலை வலியெல்லாம் பறந்திடும்" என்று அதற்கும் நீண்ட விளக்கம் கொடுத்தான் பிரபு..... "வாலிபால் போட்டா கூட, அதையும் சிக்ஸ் அடிக்கிறானே" என்று நினைத்த சரண், "இல்லடா பரவால்ல.... இந்தா  ஐம்பது ரூபாய்.... நீ டீ சாப்பிட்டுட்டு ஹாஸ்டல் போய்க்கோ.... நான் ரூமுக்கு போறேன்" என்று பிரபுவின் கையில் ஐம்பது ரூபாயை திணித்துவிட்டு கிளம்ப தயாரானான் சரண்..... "நீ ஓடுறதை பார்த்தா தலைவலி மாதிரி தெரியலையே, வேற வலி மாதிரி தெரியுது" என்று பிரபு சொன்னதை கூட கவனிக்காதவனைப்போல ஓடிய சரண்,பிரபு அறியாதபடி ஒரு கடையில் மறைவில் நின்றான்.... சிரித்துக்கொண்டே பிரபு தன் விடுதி வழியே செல்லும் பேருந்தில் ஏறியதை கண்ட பிறகுதான் சரண் கொஞ்சம் நிம்மதியானான்.... சரியாக அந்த நேரத்தில் விவேக்கிடமிருந்து அழைப்பு வந்தது சரணுக்கு, "சரண், எங்க இருக்குற?.... நான் சத்திரம் வந்துட்டேன்" என்றான் விவேக்.... "ஹோட்டல் ஆரியபவன் இருக்குது பார்.... அங்கதான் நிக்குறேன்..... " என்றான் சரண்..... சுற்றி முற்றி பார்த்த விவேக் சரண் சொன்ன உணவகத்தை கண்டுபிடித்தான்.... "என்ன கலர் டிரெஸ் போட்டிருக்க சரண்?" என்றான் விவேக்....
"நான் ப்ளாக் ஷர்ட், க்ரே பான்ட் போட்டிருக்கேன்..... ஆரியபவன் ஜூஸ் ஸ்டால்ல  நிற்குறேன்" என்று கூறிய சரணின் கண்கள் அலைபாய்ந்தன... அங்கு நடந்துவரும் ஒவ்வொரு இளைஞர்களையும் உற்று கவனித்து ஏமாந்து போனான்.... தான் நிற்கும் இடத்தையும், அடையாளத்தையும் சொல்லி ஐந்து நிமிடங்கள் ஆனபிறகும்கூட விவேக் அங்கு வரவில்லை என்றதும் கொஞ்சம் ஏமாற்றமானான் சரண்.... ஏக்க பார்வைகள் இப்போது ஏமாற்ற பார்வைகளாக மாறியது.... இருந்தாலும் விவேக்கின் அலைபேசியை மீண்டும் தொடர்புகொண்டான் சரண்.... முழு  ரிங்கும் போனபோதும், எவ்வித பதிலும் இல்லாமல் அழைப்பு துண்டிக்கப்பட்டது..... உலகமே இருண்டதைப்போல உணர்ந்தான் சரண்.... மனம் முழுவதும் ரணமாகின.... ஐந்து, நிமிடம் பத்து நிமிடமாகியது..... இதற்கு மேலும் இங்கு நிற்பது பயனற்றது என்ற எண்ணத்தோடு அங்கிருந்து கிளம்ப முடிவெடுத்து நடந்தான் சரண்.... அப்போது அங்கு நின்ற இளைஞன் ஒருவன் கையில் டெயிரி மில்க் சாக்லேட்டை சரண் கையில் கொடுத்துவிட்டு, இன்னொரு கையை நீட்டி, "ஐயம் விவேக்..... சாரி ஒரு ப்ரெண்ட் வந்துட்டான்... அதான் லேட் ஆகிடுச்சு" என்றான்..... மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்ததை போல உணர்ந்தான் சரண்....... இருண்ட உலகம் இப்போது இன்னிசை மழை பொழிவதை போல உணர்ந்தான்.... திக்கற்று நின்றவனை கையை பிடித்த விவேக், "ஹல்லோ.... என்னப்பா ஆச்சு?" என்றான்.... விவேக்கின் விரல்கள் பட்டதும் சரணின் உடல் மெய் சிலிர்த்தது, .... சிறிது நேரத்திற்கு பிறகு சரண் , "சாரி விவேக்.... நல்லா இருக்கியா?" என்றான்..... "மதியம்தானே நல்லா இருக்கேன்னு சொன்னேன், அதுக்குள்ள எதுவும் பெருசா மாறல.... நல்லாதான் இருக்கேன்" என்று சிரித்தான் விவேக்..... என்ன சொல்கிறான் விவேக்? என்று புரிந்துகொள்ளும் பக்குவத்தில் இல்லாத சரண், புரியாமல் பதிலுக்கு சிரித்து வைத்தான்.... "சரி வா என் ரூமுக்கு போகலாம்" என்றான் சரண்....
கொஞ்சம் மருகிய விவேக், "நான் உன்கிட்ட சில விஷயம் பேசணும்... வா ஜூஸ் குடிச்சுகிட்டே பேசலாம்" என்று அருகில் இருந்த பழச்சாறு கடைக்கு அழைத்து சென்றான் விவேக்.... இருவரும் பழச்சாறை பருகிய பின்னர் விவேக் பேச்சை தொடங்கினான்....
"நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும், தப்பா நினைச்சுக்காத" என்று புதிர் போட்டான் விவேக்.... குழப்பம் மிகுந்த முகத்துடன் "தயங்காம சொல்லுடா..... எதாவது ப்ராப்ளமா?" என்றான் சரண்.... தொடர்ந்த விவேக், கொஞ்சம் தயங்கியபடியே, "நமக்குள்ள இப்போதைக்கு எதுவும் வேணாம்..... அப்புறமா பார்த்துக்கலாம்" என்று கூறிவிட்டு தலையை கவிழ்த்துக்கொண்டான்.... சிறிது மவுனத்திற்கு பிறகு, "எதுவா இருந்தாலும் ஓப்பனா சொல்லிடுடா... இப்படி மென்னு விழுங்காத...." என்று அதிர சொன்னான் சரண்....
"சாரிப்பா.... எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல...." என்று வார்த்தைகள் தடுமாறி விழுந்தன விவேக்கிடமிருந்து.... இப்போது இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.... சரண் முகத்தை வேறுபக்கம் திருப்பியவாறு, அரும்பிய கண்ணீர் துளியை யாரும் அறிவதற்கு முன்னால் காணாமல் போக செய்யும் வண்ணம் உதட்டை கடித்து, கண்களை சிமிட்டினான்... கண்ணீர் துளிகள் விழியோரம் கசிந்தன, அதை தன் கைகுட்டையால் துடைத்துவிட்டான்..... விவேக்கோ எதுவும் சொல்லாமல் சரணின் பதிலுக்காக அமைதியாக தலையை கவிழ்த்தியபடியே இருந்தான்.... அதற்கு மேலும் அங்கிருந்தால் தான் அழுதுவிடுவேனோ என்கிற அச்சத்தில் விவேக்கை பார்த்த சரண், "பரவால்ல விவேக்... நான் போறேன்..." என்றவாறு எழுந்தான்.... தயங்கியபடியே எச்சிலை விழுங்கியபடியே "சாரிப்பா.... தப்பா எடுத்துக்காத" என்றான் விவேக்.... எழுந்து நின்றவாறே விவேக்கை பார்த்த சரண், "பரவால்ல.... இது எனக்கு ஒன்னும் புதுசில்ல.... எத்தனையோ முறை பல பேர் இப்படி சொல்லி ஏமாற்றி இருக்காங்க..... நீயாச்சும் இவ்வளவு பக்குவமா இதை என்கிட்டே சொல்ற, பலபேர் என்னை பார்க்காத மாதிரியே எதுவும் சொல்லாமல், செல்லையும் ஆப் பண்ணிட்டு  போய்டுவாங்க.... இந்த ஏமாற்றம் எனக்கொன்னும் புதுசில்ல.... எல்லாம் பழகிடுச்சு.... அதனாலதான் கொஞ்சநாள் எந்த டேட்டிங்கும் இல்லாமல் இருந்தேன்.... உன்கிட்ட பேசுனப்போ ஒரு நம்பிக்கை வந்துச்சு.... தப்பு என்மேலதான்... நானாச்சும் என் போட்டோவ உன்கிட்ட கான்பிச்சிருக்கணும்..... பரவால்லடா.... பாய் " என்று சொல்லிவிட்டு விவேக்கின் பதிலை கூட எதிர்பார்க்காமல் சென்றுவிட்டான் சரண்.... தில்லைநகர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தவன், தன் அறைக்குள் செல்வதற்குள் அழுதுவிடக்கூடாது என்கிற எண்ணத்தில் தன் நினைவுகளை திசைதிருப்ப எவ்வளவோ முயன்றான்... நடத்துனரிடம் "தில்லைநகர்" என்ற இடத்தை கூறக்கூட வார்த்தைவராமல் தடுமாறினான்.... தன் மீது தனக்கே கோபம் வந்தது.... எப்படியோ ஒருவாறு தன் அறையை அடைந்தான் சரண்.... அறைக்கதவை திறந்ததும், காலை முதல் சுத்தப்படுத்தி பொளிவாக்கிய தன் அறை, மனமகனுக்காக மணமேடையில் முழு அலங்காரத்தோடு காத்திருக்கும் மணமகளை போல காணப்பட்டது.... உள்ளே நுழைந்த நொடியில், கதவின் தாழ்ப்பாளை போட்டுவிட்டு, அடுக்கிவைத்த அத்தனை பொருட்களையும் சரமாரியாக கலைத்துப்போட்டான்.... மேசை மீதிருந்த தன் புகைப்படத்தை தரையில் தூக்கி போட்டான்.... யார் மீது கோபப்படுவது?. என்ன செய்வது? என்று புரியாமல் பித்தனைப்போல ஏதேதோ செய்தான் சரண்... பின்னர் அருகிலிருந்த படுக்கையில் படுத்த சரண், தலையணையில் முகம் பதித்து கண்ணீர் வற்றும் அளவிற்கு அழுதான்.... காலையில் அந்த படுக்கையை சுத்தம் செய்தபோது உண்டான நினைவை எண்ணிப்பார்த்தான்.... ஆனால் இப்படிப்பட்ட நிலைமையில் விவேக்கின் நினைவுகளோடும், வலி மிகுந்த ஏமாற்றத்தோடும் தான் மட்டும் இந்த படுக்கையில் அழுவான் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.... "இது ஒன்னும் புதுசில்ல.... பலதடவை இப்படி ஏமாறி இருக்கேன்" என்று எவ்வளவு எளிதாக விவேக்கிடம் சொல்லிவிட்டான்.... பலமுறை ஏமாந்தது என்னவோ உண்மை... ஆனால் அப்போதெல்லாம் காமத்திர்காக ஏமாந்து போனதற்கும் , இப்போது காதலில் தோற்றதற்கும் மலைக்கும், மடுவிற்கும் உள்ள வித்தியாசம் உண்டு... "என்ன தவறு செய்தேன் கடவுளே..... தப்பு செஞ்சதெல்லாம் நீ.... முதல் தப்பு என்னைய கே'வா படச்சது, இரண்டாவது தப்பு என்னைய அழகில்லாம படச்சது.... தப்பெல்லாம் நீ பண்ணிட்டு தண்டனையை மட்டும் எனக்கு கொடுக்கிறது நியாயமா" என்று கடவுளை மட்டும்தான் இப்போதைக்கு சரனால் சாட முடிகிறது.... பல நாட்கள் தன்னை பயன்படுத்தி முடித்த எச்சை இலையாக தூக்கி எறிந்திருக்கிறார்கள் பலர், இன்னும் சிலர் தன்னை பயன்படுத்த தகுதி அற்ற கந்தல் இலையென ஒதுக்கி விட்டிருக்கிறார்கள்.... ஆனால், அப்போதெல்லாம் இல்லாத வலியும் வேதனையும் விவேக்கின் புறக்கணித்தலில் உண்டானது.... மற்ற எல்லோரும் உடலிற்கும், காமத்திற்கும், கலவியலுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த நேரத்தில் விவேக்கின் அன்பான வார்த்தைகள் சரனுக்குள் புது உணர்வை உண்டாக்கியது.... "இனி எல்லாமும் விவேக்தான்" என்று நினைத்த தருவாயில் வாழ்க்கை தொடங்குவதற்கு முன்னரே அழிந்துபோகும் என்று நினைக்கவே இல்லை.... தன் காதல் கருவிலேயே கலைக்கப்பட்டதை எண்ணி கலங்கிப்போனான்.... இத்தனை காலம் தன் புற அழகில் தாழ்வு மனப்பான்மையோடு தன்னை பாட்டமாக நினைத்து வந்த எண்ணங்களை விவேக்கின் பேச்சுகள் நம்பிக்கை கொடுத்தன... ஆனால் அதே விவேக்கால் தன் தாழ்வு மனப்பான்மை இன்னும் அதிகமானதை எண்ணி நொந்து அழுதான்.... எவ்வளவோ தன் வாழ்க்கையில் இழந்தபோதும், கஷ்டங்கள் உண்டானபோதும் இவ்வளவு மன வலி உண்டானதில்லை சரணுக்கு.... மனதை கசக்கி பிழிந்ததைப்போல உணர்ந்தான் சரண்.... இப்படியே அழுது அழுது தலையணையின் இலவம்பஞ்சுகள் ஈர துணிபோல ஆனது.... அந்த ஏமாற்றத்தையும், தோல்வியையும் மறக்க இரண்டு மாதங்கள் ஆனது சரணுக்கு.... முழுமையாக மறக்க முடியவில்லை என்றாலும்கூட, அதிலிருந்து ஒருவாராக தன்னை மீட்டிட கற்றுக்கொண்டான்.... மேலும் ஒரு மாத காலம் கொஞ்சம் நிம்மதியோடு கழிந்தது.... ஆனால் விவேக்கின் சந்திப்பிற்கு பின் சரண் வேறு யாரையும் சந்திக்கவில்லை.... பேஸ்புக்கயும் இந்த நாட்களில் அவன் பயன்படுத்தவில்லை.... வழக்கமான ஒரு ஞாயிறு காலை, வழக்கம்போல அம்மாவின் அழைப்பிற்கு பிறகு அலைபேசியை துண்டித்தபோது ஒரு குறுந்தகவல் வந்திருந்ததை கவனித்தான் சரண்.... அதிகாலை நான்கு மணிக்கு வந்திருந்தது அந்த குறுந்தகவல்..... திறந்து பார்த்த சரணுக்கு ஒரு அதிர்ச்சி.... காரணம். அந்த குறுந்தகவல் விவேக்கிடமிருந்து வந்திருந்தது.... அதில், "சரண், உன்கூட நான் நிறைய பேசணும்.... இன்னைக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு  சத்திரம் பஸ் ஸ்டாண்ட்ல இருக்குற அந்த ஜூஸ் ஸ்டாலுக்கு வா.... உனக்காக நான் காத்திருப்பேன்...." என்று இருந்தது.... இந்த மூன்று மாதங்களில் இப்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்பினான் சரண்.... இந்த நிலைமையில் இப்படி ஒரு தகவல் விவேக்கிடமிருந்து வந்தது சரணை மேலும் குழப்பியது..... இன்னொரு ஏமாற்றத்தை தன் மனம் தாங்காது என்று நினைத்த சரண், விவேக்கிற்கு "சாரி" என்று மட்டும் பதில் அளித்தான்.... மீண்டும் விவேக்கிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.... ஒரு ஞாயிறு மாலை தான் பட்ட கஷ்டமே போதும், இந்த ஞாயிறும் அதை தேடிப்பெற வேண்டாம் என்று நினைத்தான் சரண்....விவேக்கை பார்க்க வேண்டாம் என்று தான் முடிவெடுத்துவிட்டாலும் கூட மனம் இன்னும் குழப்பமானது சரணுக்கு.... எதற்காக அழைக்கிறான்? என்ன சொல்வான்?..மூன்று மாதங்களுக்கு பிறகு என்ன திடீர் குறுந்தகவல்? என்றெல்லாம் ஆயிரம் கேள்விகள் மனதிற்குள் எழுந்தாலும் தான் எடுத்த முடிவில் மாற்றம் கூடாது என்ற உறுதியை அவன் மீற விரும்பவில்லை..... இப்போது மணி ஆறு.... விவேக் சொன்ன நேரம்.... மனம் முழுக்க குழப்பத்தொடும், படபடப்போடும் தன் அறையில் அமர்ந்திருந்தான் சரண்..... சத்திரம் பேருந்து நிலையத்தில் சரனுக்காக காத்திருந்தான் விவேக்.... "சாரி" என்று குறுஞ்செய்தி சரண் அனுப்பி இருந்தாலும் கூட, ஏதோ ஒரு நம்பிக்கையில் ஐந்து மணியிலிருந்து அங்கு காத்திருந்தான் விவேக்.... மணி ஆறு, ஆறரை, ஆர் முக்கால், இப்போது ஏழு ஆகிவிட்டது..... எக்கப்பார்வைகள் ஏமாற்றப்பார்வையாக மாறிய முகத்தோடு அங்கிருந்து கிளம்ப சென்றபோது, விவேக்கின் பின்னால் ஒரு குரல் அவனை அழைத்தது..... திரும்பி பார்த்த விவேக்கிற்கு ஆச்சரியம் கலந்த ஆனந்தம்... அங்கு நின்றது சரண்.... எவ்வளவோ விவேக்கின் அழைப்பை மறுக்கு அவன் நினைத்தாலும், மனம் ஏனோ அதை ஏற்கவில்லை..... தான் அனுப்பிய குறுந்தகவலை பார்த்துவிட்டு விவேக் அங்கு வருவானா? என்கிற சந்தேகம் அவன் மனதிற்குள் எழுந்தாலும் கொஞ்சம் தாமதமாக அந்த இடத்திற்கு வந்துவிட்டான் சரண்.... இருவரும் அந்த பழச்சாறு கடையில் அமர்ந்தவாறு பழச்சாறு குடித்துக்கொண்டிருன்தனர்..... இப்போதும் விவேக்கே தொடங்கினான்.... "தாங்க்ஸ் சரண்...." என்றான் விவேக்....
"எதுக்கு?"
"முதல்ல நீ வந்ததுக்கு, அப்புறமா என்னைய மன்னிச்சதுக்கு...."
"என்ன விஷயம் சொல்லு.... நேரமாச்சு"
"அவசரப்படாதப்பா... நிறைய பேசணும்..... நான் உன்னைய நிறைய ஹர்ட் பண்ணிட்டேன்.... ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா?"
"பழசெல்லாம் விடு.... இப்போ என்ன விஷயம்னு சொல்லு" என்று இன்னும் பிடிகொடுக்காமல் பேசினான் சரண்....
"நான் என்ன சொல்லப்போறேன்னு நீ எதிர்பார்த்து வந்த?" என்று கேட்டான் விவேக்....
"நான் எதையும் எதிர்பார்க்கல..... எதிர்பார்த்து இனியும் நான் ஏமாற முட்டாள் இல்ல...." என்றான் சரண்....
"சரி நானே சொல்லிடுறேன்.... உன்னைய பார்த்த அடுத்த நாள் பேஸ்புக்ல அறிமுகமானான் ராகேஷ்..... ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப பிடிச்சிருந்துது.... அப்போலேந்து ரெண்டு மாசம் அவ்வளவு சந்தோஷமா வாழ்க்கைய என்ஜாய் பண்ணோம்.... ஆனாலும், பழகுன ஒரு மாசத்துலயே அவன் நிறைய சண்டை போட்டான்... என் மேல சந்தேகப்படுவான், தேவை இல்லாமல் சண்டை போடுவான், செக்ஸ் மட்டுமே போதும் வேற எதுவும் வேணாம் அப்டிங்குற மாதிரி நடந்துக்க ஆரமிச்சுட்டான்.... ஆனாலும் நான் அவனுக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுத்தேன்.... எப்பவுமே நானே விட்டுக்கொடுத்து பழகிட்டேன்.... " என்று நிறுத்தினான் விவேக்....
"இதை சொல்லத்தான் கூப்டியா?.... சரி, ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க.... நான் கிளம்புறேன்" என்று எழ முயன்ற சரணை மீண்டும் உட்கார வைத்த விவேக், "நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கலப்பா.... கொஞ்சம் இரு" என்றான்.... தொடர்ந்த விவேக், "எப்படியோ ரெண்டு மாசமும் விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலும் சந்தோஷமா இருந்துச்சு..... ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு ஆக்ஸிடன்ட்ல கொஞ்சம் காயம் ஆகிடுச்சு.... முகத்துல சிராய்ப்பு காயங்களும், கையில லேசா அடியும் பட்டதால ஹாஸ்பிட்டல்ல இருந்தேன்.... அப்போ ஒருநாள் என்னைய பார்க்க வந்த ராகேஷ், நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆகுற வரைக்கும் வரவே இல்ல.... நான் போன் பண்ணா கூட அதை அட்டன்ட்  பண்றதில்ல அவன்.... ரெண்டு வாரம் ட்ரீட்மெண்ட்கு அப்புறமா டிஸ்சார்ஜ் ஆன பிறகு ராகேசுக்கு என்ன ஆச்சோன்னு பதட்டத்துல அவனை பார்க்க போனேன்.... அப்போ அவன் சொன்ன வார்த்தைகள் என்னைய கொன்னிடுச்சுப்பா..." என்று கண்களின் நீரை துடைத்தவாறு அருகில் இருந்த நீரை பருகி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.... அப்போது அவன் உடல் கொஞ்சம் நடுக்கம் கொண்டதை கவனித்தான் சரண்.... சிறிது நேரத்திற்கு பின் தொடர்ந்த விவேக், "நான் அவனை பார்க்கப்போனப்போ என் முகம் பார்த்துக்கூட அவன் பார்க்கல... எப்படி இருக்கேன்னு இரு வார்த்தை கூட கேட்கல.... இது எல்லாத்தையும்விட, என் முகத்துல இருக்குற காயம் சரியாகுற வரைக்கும் அவனை பார்க்க வேண்டாம்னு சொன்னதுதான் என் மனசை ஈட்டியால குத்துற மாதிரி இருந்துச்சு.... காதல், காதலன்னு இத்தனை நாள் அவன் பழகினதெல்லாம் என் அழகுக்காகவும், செக்ஸ் சுகத்துக்காகவும்தான் அப்டின்னு நான் உணர்ந்தப்போ என் மனசு நொறுங்கி போய்டுச்சு.... அவனை கொன்னுடலாமானு யோசிக்கிற அளவுக்கு அந்த புறக்கணிப்பு என்னை கொன்னுச்சு.... அப்புறம் நான் வீட்டுக்கு வந்த பின்னாடி யோசிச்ச்சப்போதான் நான் பண்ணின தப்பு எனக்கு புரிஞ்சுது.... அந்த ராகேஷ் நாய் பண்ண தப்பைத்தானே நானும் பண்ணிருக்கேன்.... அந்த குற்ற உணர்வே இல்லாம இவ்வளவு நாளா நான் இருக்கிறதை நினச்சு வேதனை பட்டேன்..... கடைசி ரெண்டு வாரமும் உன் நினைவாவே இருந்தேன்..... ஒரு மனுஷனோட முகத்தை லட்சக்கனக்குல பணம் செலவு பண்ணி அழகாக்கிடலாம்... ஆனால், அதே மனுசனோட குணத்தை கோடிக்கனக்குல கொடுத்தாலும் மாத்திட முடியாது..... காதலுக்கு நிச்சயம் அழகு முக்கியம்தான், ஆனால் அந்த அழகு வெளித்தோற்றத்தில் இல்ல, உள்மனசுல இருக்குங்குறதை உணர்ந்தேன்.....அப்படி விலை மதிக்க முடியாத நல்ல மனசை விட்டுட்டு நான் அவனை தேர்ந்தெடுத்தது என் தப்புதான்.... நேத்து நைட் அவன் என் ரூமுக்கு வந்தான்.... என் முக தழும்பெல்லாம் சரியானதை பார்த்த அவன், எந்த குற்ற உணர்ச்சியுமே இல்லாமல் என்னைய செக்ஸுக்கு கூப்டான்..... அவன் கன்னத்துல பளார்னு ஒரு அறை விட்டேன்.... என்னைய அவன் கால் பாய்னு நினச்சானா?.... அந்த ஒரு அறையோடு கன்னம் பழுக்க அந்த நாய் ஓடிடுச்சு..... இன்னும் சொல்லப்போனா அவன் செஞ்ச தப்பைத்தான் நானும் பண்ணிருக்கேன்..... ஆனால் அந்த தப்பை நா உணர்ந்திட்டேன்.....அவன் என் ரூம்லேந்து போன பின்னாடி அவன் நினைப்பும் அத்தோடு போய்டுச்சு....அதற்கப்புறம் உன்னைய பார்க்கணும், உன்கிட்ட பேசனும்னு மனசு துடிச்சுச்சு..... ஒரு கஷ்டம்னு வந்தப்போ எனக்கு உன் நினைப்புதான் வந்துச்சு..... நீ தப்பா நினைச்சாலும் பரவால்லன்னுதான் உனக்கு மெசேஜ் அனுப்பினேன்.... நீ என்னைய புரிஞ்சுப்பனு நம்புறேன்.... இனி கடைசி வரைக்கும் உன்கூட நான் இருக்கணும்னு ஆசைப்படுறேன்.... என் மேல கோபம் இருந்தா என்னைய அடிச்சிடு, ஆனால் என்னைய வேண்டாம்னு மட்டும் சொல்லிடாத.... இனியும் நான் உன்னை இழக்க விரும்பல சரண்.... எந்த முடிவா இருந்தாலும் இப்பவே சொல்லிடு" என்று சொல்லிவிட்டு அமைதியானான் விவேக்..... ஐந்து நிமிடம் அங்கு இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.... சரண் பலவாறும் யோசித்தான், விவேக்கோ சரண் யோசிக்க வழிவகுத்து அமைதியாக அமர்ந்திருந்தான்.... ஐந்து நிமிட அமைதிக்கு பிறகு எதுவும் சொல்லாமல் சரண் அங்கிருந்து எழுந்து செல்ல முயன்றான்.... பதறிய விவேக், "என்னாச்சு சரண்?.... எங்க போற?...ப்ளீஸ், எதுவா இருந்தாலும் சொல்லிட்டு போ" என்று கலவரத்தோடு கூறினான்.... "பேஸ்புக்ல கமிட்டட்'னு ஸ்டேட்டஸ் போட போறேன்" என்று சிரித்தான் சரண்.... சிறிது யோசிப்பதற்கு பிறகு அதன் அர்த்தத்தை உணர்ந்த விவேக்கும் சிரித்தான்....... (முற்றும்)...

20 comments:

  1. there you are always.. very nice story again..

    with love
    STEVEN V

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்டீவன்.... மிக்க மகிழ்ச்சி....

      Delete
  2. Guru always ROCKS...

    Story was SHORT n SWEET...

    Expecting more such stories from you..

    With Best Regards,
    CUPID

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா..... நிச்சயம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதை போன்ற சிறுகதைகள் எழுதுவேன்.....

      Delete
  3. Nice story...
    Me expecting such a partner...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சஞ்சு.... உங்களுக்கு விரைவில் அப்படி ஒரு இணை கிடைத்திட வாழ்த்துகள்....

      Delete
  4. Its a real thing happening everywhere.
    Most of us faced this situation atleast once.

    Great! Great !! Great !!!!!!!!!!!!!!!!

    Regards
    Vijay @ Raj

    ReplyDelete
    Replies
    1. ஆம், நிறையபேர் வாழ்வில் அனுபவித்த விஷயம்தான் நண்பா..... அனைவருக்கும் இருதரப்பு நிலைமையும் புரியத்தான் இந்த கதை.... மிக்க மகிழ்ச்சி.... நன்றி விஜய்....

      Delete
  5. நீ ஏன் ஸ்பெஷல்னு இதை படிக்கிறவங்க சொல்லுவாங்க..

    கலக்கிட்டப்பா உண்மையிலயே நம்மில் பலருக்கும் இத்தகைய அவமானங்கள் ஏற்பட்டிருக்கும் அந்த தருணம் எத்தகைய கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும் மிக அருமையாக அந்த வலியை ஒரு சிறுகதை மூலம் கொண்டுவந்ததற்கு சபாஷ் வாழ்த்துக்கள்

    இந்த கதை உன்னுடைய மற்றுமொரு பரிமாணம்......

    தொடரட்டும் இந்த புதிய முயற்சி.....

    ReplyDelete
    Replies
    1. இது போதும் நண்பா..... நெடுங்கதைகளில் உங்களை முழுமையாக திருப்தி படுத்த
      முடியாத ஒரு சிறு கவலை இருந்தது.... இப்போ மகிழ்ச்சி.... நன்றி
      நண்பரே...... துளிகூட காமம் கலக்காத, அதிக காதலும் இல்லாமல் வெறும்
      உணர்வுகளை மட்டுமே எழுதியபோது, இது சரியாக வருமா என்ற ஐயம் இருந்தது,
      உங்கள் கருத்து என்னை நெகிழ்ச்சியாக்கிவிட்டது....நன்றி நண்பா...

      Delete
  6. அருமையான கதை!

    உனர்வுகளை ப்ரதிபலித்தது!

    தொடர்ந்து நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. beautiful story i need such partner

    ReplyDelete
  8. very nice story vicky
    me expecting such a partner

    ReplyDelete
  9. so nice , so cute , relay super .............

    ReplyDelete
  10. very nice bro ..super story ... i like it ..

    ReplyDelete
  11. Anna, onnu sonna thappa nenachikkathenga, nenga sarana pathi sonnathu ellam enakku appadiye match aguthu, nan evvalovo kasappana ninaivukalai santhisu iruthiya thanimai than enakku best nu ippa valnthuttu irukken...gay ellam saran mathiri than iruppangala? pls sollunga...

    ReplyDelete