Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday 17 June 2013

"பெருமதிப்பிற்குரிய படைப்புலக பிரம்மாக்களே....." - ஒரு கோரிக்கை கடிதம்...



பெருமதிப்பிற்குரிய கலை, இலக்கிய, சமூகம் சார்ந்த போராளிகளே,
வணக்கம்... முதல்முறையா இந்த சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒருவன், எங்க சமூகத்தின் பிரதிநிதியா இப்போ உங்ககிட்ட பேசுறேன்.... சமூகம், சமூகம்னு சொல்றேனே, அது என்ன சமூகம்னு கேக்குறீங்களா?.... இந்த பாழாய்ப்போன ஒருபால் ஈர்ப்பு சமூகம் பற்றித்தான் (அதாவது gay, lesbians)சொல்றேன்... “கத்தி முனையை விட, பேனாவின் முனை அதிக கூர்மை”னு எப்போவோ, எங்கயோ படிச்ச ஞாபகம் இருக்கு... அதை பல நேரத்துல நான் உணர்ந்திருக்கேன்... மின்சாரமே இல்லாமல் நொந்து போன நாட்களில், “கூடங்குளம் அணு உலையை திறந்தால்தான் என்ன?”னு பல நேரம் அப்போ யோசிச்சிருக்கேன்... ஆனால், உங்களை போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கட்டுரைகளை படிச்ச பிறகுதான், “மின்சாரமே இல்லைனாலும், உயிருக்கு ஆபத்தான அணு உலை இருக்கவே கூடாது”னு நான் முழுசா அந்த போராடும் மக்களுக்கு ஆதரவாக பலரிடத்திலும் பேசினேன்... இது ஒரு சின்ன உதாரணம் தான்... உங்களோட எழுத்துகள் எவ்வளவு பெரிய சமூக மாற்றங்களை உருவாக்கி இருக்குன்னு நான் சொல்லி உங்களுக்கு தெரியணும்னு இல்ல....
இப்போ எனக்கு என்ன பிரச்சினை?னு நீங்க கேட்பது எனக்கு புரியுது... மரக்காணம் சாதிக்கலவரம் தொடங்கி, தமிழக மீனவர்கள் சுடப்படுவது வரை “எங்கல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ, அங்கல்லாம் அவதாரம் வருதோ இல்லையோ, உங்களோட போராட்டக்குரல்கள் சத்தமாக ஒலிப்பதுண்டு”... நான் சொல்வதல்லாம் ஒன்றுதான், சாதிக்கொடுமைகளும், அரசுகளின் ஆதிக்க மனப்பான்மையும் மட்டுமேதான் நீங்கள் போராடும் களமா?... ஏன் எங்க ஒருபால் ஈர்ப்பு சமூகத்துக்கு ஆதரவான கருத்துகளை நீங்க முன்வைப்பதே இல்ல?...
சாதி ரீதியாக தாழ்த்தப்பட்ட மனிதன் மட்டும் தாழ்த்தப்பட்டவன் அல்ல, பாலீர்ப்பு காரணமாக புறக்கனிக்கப்பட்டவன் கூட தாழ்த்தப்பட்டவன்தான்... இலங்கை போரால் பாதிக்கப்பட்டு இங்கே வருபவர்கள் மட்டும் அகதிகள் இல்லை, பாலீர்ப்பு காரணமாக மேற்குலக நாடுகளை நோக்கி ஓடுகின்ற எங்கள் சமூகத்து இளைஞர்கள் கூட “அகதிகள்” தான்...
எங்களை பற்றி உங்களுக்கு நிஜமாவே தெரியலையா? அல்லது, தெரிஞ்சுக்க மறுக்குறீங்களா?... நாங்களாக நீங்க இருந்து பார்த்தால்தான், எங்க உணர்வுகளை உங்களுக்கு நாங்க உணர்த்த முடியும்.... ஒரே ஒரு உதாரணம் சொல்றேன்... உங்களால ஒரு ஆணை திருமணம் செஞ்சுட்டு, வாழ்க்கை முழுக்க நிம்மதியா வாழ முடியுமா?... கொஞ்சம் கற்பனை செஞ்சு பாருங்க!.... அதே கொடுமையைதான் இங்கே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் ஒவ்வொரு “gay” ஆணும் அனுபவிக்கிறான்.... உங்களால் கற்பனை செய்ய முடியாத ஒரு வாழ்க்கையை, இங்கே சமூக நிற்பந்தத்தால் பெரும்பாலான “கே” ஆண்கள் வாழ்கிறார்கள்....
இப்படிப்பட்ட கொடுமையான வாழ்க்கையை வாழ முடியாமல் எத்தனை இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் தெரியுமா?... “இளைஞன் தற்கொலை”, “வாலிபர் விஷம் குடித்தார்”, “இளம்பெண் தூக்கிலிட்டுக்கொண்டார்” இப்படிப்பட்ட பல செய்திகள், நம்மால் தினமும் செய்தித்தாள்களில் கடக்கப்படுகிறது.... அந்த தற்கொலைகளுக்கு பத்திரிகைகள் பல விளக்கங்கள், காரணங்கள் சொல்லியிருக்கும்... ஆனால், அப்படி நிகழும் பல தற்கொலைகளுக்கு காரணம் பாலீர்ப்பு என்பதை நீங்கள் அறிந்ததுண்டா?.... எங்க சமூகத்து இளைஞர்கள் பெரும்பாலானவர்கள் தற்கொலை எண்ணங்கள் கொண்டு இருப்பதாகவும், பலர் அப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பதாகவும் ஆய்வுகள் கூட சொல்கிறது...
இப்படி நீங்கள் அறியாத பல நிகழ்வுகள் நித்தமும் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது.... வடநாட்டில் காணப்படும் ஒரு புரிதல் கூட, எங்களை பற்றி நம் தமிழ்நாட்டில் இல்லை... சில படைப்பாளிகள், எங்கள் ஒருபால் ஈர்ப்பு அமைப்புகள் நடத்தும் நிகழ்வுகளுக்கு வந்து தங்களோட ஆதரவையும், கருத்துகளையும் முன்வைக்குறாங்க.... அது மிக சொற்ப அளவே என்றாலும் கூட, அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.... அதே நேரத்தில், அவங்க தங்களோட கருத்துகளை முன்வைக்கவேண்டிய இடம் பொது ஊடகங்கள் தான்... நான் கலந்துகொள்கிற ஒருபால் ஈர்ப்பு நிகழ்வில் உங்கள் கருத்து வலியுறுத்துவதை காட்டிலும், என் அம்மா படிக்கும் ஒரு வார இதழில் உங்கள் கருத்தை முன்வைக்கணும், என் அப்பா பார்க்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உங்க வாதத்தை நீங்க முன்வைக்கணும்.... அப்போதான் நான் என்னை வெளிப்படுத்திக்கொள்ளும் போது, என் வீடும் அதை புரிந்துகொள்ளும் நிலைமை உண்டாகும்....
திருநங்கைகளை பற்றி இன்னைக்கு சமூகம் எவ்வளவோ நல்ல மனமாற்றத்தை கொண்டு வந்திருக்கு... திரைப்படங்கள் கூட அவர்களை பற்றிய ஒரு ஆக்கப்பூர்வமான விஷயங்களை முன்வைக்கின்றன.... ஆனால், இன்றைக்கும் ஒருபால் ஈர்ப்பை பற்றிய மக்கள் மனநிலையை இந்த திரைப்படங்கள் எந்த அளவு மாற்றி வைத்திருக்கிறது தெரியுமா?.... “அவனா நீ?”, “கொரில்லா செல்” போன்று மிகவும் தரக்குறைவாக எங்களை பற்றி இந்த மக்கள் மனதில் எண்ணத்தை விதைத்து வைத்திருக்காங்க...
தான் ஒருபால் ஈர்ப்பாளன் என்று பிறருக்கு தெரிய வரும்போது, ஒவ்வொரு “கே”யும் சந்திக்கும் வார்த்தை “அவனா நீ?”.... அதை ஒவ்வொரு முறை கேட்கும்போதும், நாங்க ஒவ்வொரு முறையும் சாகுறோம்....
சாதி ரீதியா ஒருத்தன் தாக்கப்படும்போது, துடித்தெழும் உங்களை பார்க்கும்போது பெருமையா இருக்கு... அதே நேரத்தில் பாலீர்ப்பு காரணங்களால் எவ்வளவு வன்முறைகளுக்கு எங்க மக்கள் ஆளாகுறாங்க’னு உங்களுக்கு தெரியுமா?... வழக்குகள் கூட பதிய முடியாத நிலையில், இன்னும் மிரட்டப்பட்டுக்கொண்டிருக்கும் எத்தனை நபர்கள் இந்த சமூகத்தில் இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா?... இது எல்லாவற்றையும் என்னால் ஆதாரத்தோடு உங்களுக்கு சொல்ல முடியும்....
எதுக்கு இதல்லாம் உங்ககிட்ட சொல்றேன்?னு நீங்க நினைக்கலாம்... எவ்வளவோ போராடிட்டோம், எவ்வளவோ எங்க நியாயத்தை முன்வைத்து விட்டோம்.... ஆனால், அதை கேட்கவோ, எங்க உணர்வுகளை புரிந்துகொள்ளவோ யாருமே முன்வரவில்லை... விரக்தியின் விளிம்பு’னு சொல்வாங்கல்ல, அந்த இடத்தில் நாங்க இருக்கோம்... முற்போக்கு எழுத்தாளர்கள்’னு சொல்ற பலரோட முற்போக்கு எண்ணம் எங்கள் விஷயத்தில் மட்டும் காணாமல் போய்டுது, சமூக ஆர்வலர்கள்’னு சொல்ற பலரோட ஆர்வங்கள் எங்க விஷயத்துல மட்டும் இல்லாமல் போயிடுது... எங்க கோபத்தை, ஆற்றாமையை நாங்க அரசிடமோ, வேறு பிரபலங்களிடமோ நாங்கள் முன்வைக்கவில்லை... உணர்வுகளை அதிகம் புரிந்துகொள்ளும் உங்களிடம் நாங்கள் இதை முன்வைக்க காரணமே, நிச்சயம் எங்கள் உணர்வுகளை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையால் தான்....
எங்க மக்களுக்கு உரிமைகள் வேண்டும்... எங்கள் போராட்டங்களுக்கு விடியல் வேண்டும்... எல்லா உரிமைகளையுமே முடக்கியே பழகிய நம் அரசு, எங்கள் உரிமைகளை மட்டும் செவி கொடுத்தா கேட்க்கப்போகுது?... இப்போதும் எங்களின் சட்டப்போராட்டத்தை, இந்த அரசு முடக்கத்தான் பார்க்குது.... ஆனால், எல்லா அடக்குமுறைகளையும் எதிர்த்து குரல் கொடுத்து பழகிய உங்களை போன்றவர்கள், எங்கள் விஷயத்தில் மட்டும் வாய் மூடி அமர்ந்திருக்கும் மர்மம எனக்கு புரியல.... எங்களை பற்றி பேசினால், உங்கள் பாலீர்ப்பை பற்றி அடுத்தவங்க தவறாக நினைப்பாங்கன்னு நினைக்குறீங்களா?.... “ஒரு வன்கொடுமையை எதிர்த்து பேச, அவன் தலித்தாக இருக்கன்முனு அவசியம் இல்ல.... அது போல, எங்கள் உரிமைகள் பற்றி பேச நீங்க, ஒருபால் ஈர்ப்பு நபரா நீங்க இருக்கனும்னு அவசியம் இல்ல” என்கிற ஒரு அடிப்படை உண்மை நீங்கள் அறியாததா என்ன?...
ஆனால், நிஜமாகவே இப்போ நான் ஏங்குவது ஒன்றிற்காக.... எங்கள் தந்தை பெரியார் அவர்கள் இப்போ இல்லையே’னு வருந்தும் நிலைக்கு நீங்க எங்களை ஆக்கிட்டிங்க... நிச்சயம் ஐயா இருந்திருந்தால், எங்களின் குரலாக நிச்சயம் ஒலித்திருப்பார்.... பெரியாரின் கொள்கைகளை பேசும் பலர் கூட, எங்கள் விஷயத்தில் மௌனியாகவே இருக்கிறார்கள்...
எங்களை நாங்க வெளிப்படுத்திக்காத நிலையை பலரும் விமர்சிக்கிறாங்க?... எந்த விதத்தில் நாங்க எங்களை வெளிப்படுத்துறது.... “நான் ஒரு கே”னு என் பெற்றோர்கள் கிட்ட சொன்னா, அதை புரிஞ்சுக்கற அளவுக்கு இந்த சமூகம் அவங்கள வைக்கவில்லையே... மாறாக, ரொம்ப தவறான அபிப்ராயத்தை அல்லவா அவங்க மனசுல புதைத்து வைத்திருக்கு!...
எங்கள் எண்ணங்கள் நிஜமாக உங்களால் மட்டும்தான் முடியும்.... தயவுசெய்து நீங்க பேசுங்க.... எங்களுக்காக நீங்க பேசுங்க.... உண்மையை பேசுங்க... எவ்வளவோ சமுதாய மாற்றங்களுக்கு முதற்புள்ளி வைப்பது நீங்கள்தான், எங்களை பற்றிய சமுதாய மாற்றத்துக்கும் நீங்கள் துவக்கமாக இருக்கணும்....
எவ்வளவோ ஏமாற்றங்களையும், கஷ்டங்களையும் கடந்து வந்துவிட்டோம்.... உங்களால இனி சமுதாய மாற்றங்கள் உண்டாகும்னு நம்பிக்கையில் காத்திருக்கோம்... நிச்சயம் நீங்க செய்வீங்கன்னு நம்பிக்கையில்....
                                                                உங்கள் விஜய் விக்கி....

10 comments:

  1. நியாயமான ஆதங்கம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணாச்சி....

      Delete
  2. சாதி கொடுமை, பெண்அடிமை, திருநங்கைகள்
    இந்த மூன்றுக்காகவும் பல வருடங்களாக பல தலைவர்கள் நிறைய போரட்டங்களோட இன்றைக்கு மக்கள் புரிந்து கொள்றமாதிரி பலமாற்றங்கள் வந்திருக்கு. இந்த மாற்றம் நம்மிணத்தவருக்கும் ஒருநாள் வரும் விக்கி.
    சேகர்.

    ReplyDelete
  3. hope in that, kalangal ellathayum mathum, so indha nilayum marum., nambuvom.,

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஜய்... மாறும்னு நம்புவோம்...

      Delete
  4. I consider this article as a voice of whole LGBT society of India.. Friends share your comments to strengthen this article..

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி குணால்....

      Delete
  5. Thanks vijay for ur excellent article!!

    Prasad

    ReplyDelete