“அக்கா” இந்த வார்த்தையை அழுத்தி சொன்னால், “அம்மா” என்பது போல
பிரதிபலிக்கும்... வார்த்தை மட்டுமல்ல, அந்த உறவே கூட அப்படித்தான் என்பதை நான்
உணர எனக்கு பல காலம் ஆகிவிட்டது... அக்காவுக்கும் எனக்கும் ஐந்து வருட இடைவெளி...
நாங்கள் இருவரும் வளர வளர, இரண்டு விஷயங்களை கடைபிடிக்க கற்றுக்கொண்டோம்....
“பிடிவாதம்” பிடிக்க நானும், “விட்டுக்கொடுக்க” அக்காவும் கற்றுக்கொண்டோம்... இந்த
பேதத்தை நியாயப்படுத்த எங்கள் பெற்றோருக்கும் கூட ஒரு காரணம் இருந்தது.... நான்
“இளையவன்” என்ற காரணத்தை அதற்கு வெளியில் அவர்கள் சொன்னாலும், உள்ளூற
புதைந்திருந்த “ஆண் பிள்ளை” என்ற காரணத்தை யாரும் அறியாமல் இருக்கவில்லை...
கேரம்
போர்டில் குறிபார்த்து “மைனஸ்” போடவும், சதுரங்கத்தில் ராணியை காரணமில்லாமல்
நகர்த்தி என் சிப்பாயிடம் வெட்டுப்படவும் கூட அவள் பழக்கப்பட்டுவிட்டாள்... ரம்மி
விளையாடும்போது கூட, மறந்தது போல மறக்காமல் ஜோக்கரை போடுவாள்.... அதை ஏதோ அவள்
தெரியாமல் நடந்த நிகழ்வாக, பொய் அழுகை அழுவதையும் கூட நான் அறிந்துகொள்ள பலகாலம்
ஆகிவிட்டது...
நான்
வெல்லவேண்டும் என்பதற்காகவே பல சண்டைகளை தொடங்குவாள்... நான் வெற்றி முழக்கம்
இடுவதையும், சந்தோஷ சிரிப்பு சிரிப்பதையும் வெளியில் வருத்தப்படுவதாய்
காட்டிக்கொண்டு, உள்ளூற ரசித்து சிரிப்பாள்.... அம்மாவுக்கு கூட புரியாது அக்காவின் இந்த ரசனைகள்... இவ்வளவு பாசமும்
எனக்கு புரிந்தும் கூட , பிரியமாக பேசிட இதுவரை தோன்றியதில்லை... விவரம் தெரிந்த
பின்புதான் நான் கூட அவளுக்காக கிரிக்கெட்டை மறந்து சீரியல் பிடிப்பதாக
பார்க்க தொடங்கினேன், அவளுக்கு பிடித்த
ஜாங்கிரியை எனக்கும் பிடித்ததாக சுவைக்க தொடங்கினேன்....
இந்த
புரிதல்களை பரஸ்பரம் நாங்கள் புரிந்துகொள்வதற்குள், அவள் திருமணம் எங்கள்
இருவருக்குள்ளும் ஒரு இடைவெளியை இடைபுகுத்திவிட்டது... உளவியல் ரீதியாக
மட்டுமல்லாமல், புவியியல் ரீதியாகவும் அந்த தூரம் அமைந்துவிட்டது... நாங்கள்
இருக்கும் திருச்சியை விட்டுவிட்டு, மாமாவுடன் அக்கா சென்னைக்கு குடியேறிய நாள்
முதலாய் அதை உணரமுடிந்தது....
மாதம்
ஒரு காரணம் கூறி அவள் திருச்சிக்கு வந்துவிடுவதால், அந்த ஐந்து வருடங்களில்
அக்காவின் சென்னை வீட்டுக்கு போக எனக்கு வேறு காரணங்கள் கிடைக்கவில்லை... முதல்
முறையாக ஒரு வேலை விஷயமாக சென்னை செல்லவேண்டி இருந்தது, அக்காவின் வீட்டில்தான்
தங்கினேன்....
அன்று
நான் செல்லும்போது அவள் முகத்தில் பூரித்த சந்தோஷமும், ததும்பி வழிந்த உற்சாகமும்
என்னுள்ளும் கூட உற்சாகத்தை மிதக்க வைத்தது... அவளின் கல்லூரி கால சிரிப்பை நான்
மீட்டுத்தந்ததாக எனக்குள் பெருமைப்பட்டுக்கொண்டேன்.... நிறைய பேசினோம்... என்
பேச்சில் இடையிடையே இடைசெருகிய “அக்கா” என்ற வார்த்தை கூட அவளுக்கு அந்நியமாக
தோன்றியிருக்கும்... குளித்து முடித்து நான் வருவதை பார்த்து, “தலையில் தண்ணி
சொட்டுது, துவட்டிக்கோடா” என்றாள்.... பழைய ஆதவனாய் “எனக்கு தெரியும்... உன் வேலைய
பாருடி!” என்று பதில் சொல்லிடாமல், தலையை துவட்டிக்கொண்டேன்.... எனக்கு பிடித்தாற்
போல தோசையில் நெய் ஊற்றி முறுகலாக வார்த்துக்கொடுத்தாள்... அருகில் இருக்கையை
போட்டு அமர்ந்தவாறே, அந்த ஒரு மாத நிகழ்வுகளையும் வரிசை தவறாமல் சொல்லி
முடித்தாள்.... சரியாக அந்த நேரத்தில்தான் மாமாவும் வீட்டிற்கு வந்தார், என்னை
பார்த்ததும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில் நலம் விசாரித்தார்.... நானோ வழக்கமான
ஒரு தடுமாற்றத்தில், நெளிந்தபடி நின்று பதில் சொன்னேன்.... அதை பார்த்த அக்கா, “நீ
உக்காருடா...” என்று என்னை தோள் பிடித்து அழுத்தி இருக்கையில் அமரவைத்தாள்....
மாமாவும்,
“உக்காருங்க மச்சான்... இல்லன்னா அதுக்கும் எனக்குத்தான் திட்டு விழும்”
சிரித்தபடியே என் பக்கத்தில் அமர்ந்து நான் செல்ல இருக்கும் நேர்காணலை பற்றி
விசாரித்தார்.... அவர் கேட்டபோதுதான் எனக்கே நான் அங்கு வந்ததன் நோக்கம்
நினைவுக்கு வந்தது...
பத்து
மணிக்கு செல்ல வேண்டிய நேர்காணல் ஒன்பதரை மணிக்குத்தான் என் நினைவுக்கே வந்தது... அவசர
அவசரமாக கிளம்பி செல்லும் முன்பு மாமா என்னிடம், “எந்த கம்பெனி மச்சான்?” என்றார்... பதிலை பதட்டத்தில்
சொல்லிவிட்டு, பதறியபடியே அலுவலகத்தில் நுழையும்போது பத்து மணி ஆகிவிட்டது....
பதட்டத்தில்
பயிற்சி செய்து வைத்திருந்த எல்லாவற்றையும் மறந்தேன்... உள்ளே சென்றபோது ‘டை’கட்டிய
ஆசாமி என்னிடம் கேட்ட ஒரே கேள்வி, “ரமேஷ் உங்க ரிலேஷனா?” என்பதுதான்... “ஆமா...
என் அக்கா ஹஸ்பண்ட்” என்ற பதிலோடு எனக்கான நேர்காணல் முடிந்து, கையோடு வேலை உறுதி
கடிதமும் கொடுக்கப்பட்டது.... “எந்த கம்பெனி மச்சான்?” என்ற ஒரு கேள்விக்கு
பின்னால் இவ்வளவு இருப்பதாய் எனக்கு அப்போதான் புரிந்தது.... நான் அலுவலகம் வரும்
முன்பே ஏதோ ஒருவழியில், மாமாவின் மூலம் பரிந்துரை வந்ததில் எனக்கு
ஆச்சரியம்தான்...
அக்காவை
மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தையே மாமா தன் குடும்பம் போல பாவிப்பவர்... அவர்தான்
இந்த ஐந்து வருடங்களும் எனக்கு வழிகாட்டியும் கூட... அக்காவும் கூட இதுவரை ஒருமுறை
கூட மாமாவை பற்றி குறை சொன்னதே கிடையாது.... “குறையே இல்லாத மாப்பிள்ளைனு என்
மாப்பிள்ளைக்கு விருதே கொடுக்கலாம்”னு அப்பாவும் அடிக்கடி சொல்வார்.... “நீ
இல்லாததால எனக்கு சண்டை போட ஆளே இல்லடா”னு அக்கா சொல்லும்போது, “ஏன்? மாமாவோட
சண்டை போடுவே” என்று கிண்டலாக சொல்வேன்.... அதற்கு அவளோ, “ஆமா... அவர்
போட்டுட்டாலும்.... என்ன சொன்னாலும் தலையை ஆட்டுற பூம்பூம் மாடுகிட்ட நான் என்னடா
சண்டை போடுறது” என்பாள்..... எங்கள் குடும்ப நல்லவிஷயங்களுக்கு முதல் ஆளாக
நிற்பவரும் அவர்தான்.... அதனால், எப்போதும் என் குடும்பத்தில் யாராவது ஒருவர்
மாமாவின் புராணம் பாடாத நாளே இருக்காது, இனி நானும் அதிகம் பாடுவேன் போல!....,
வீட்டிற்கு
வந்ததும் சாப்பிட்டு, ஒரு குட்டித்தூக்கம் போட்டேன்... எழுந்து பார்த்தேன், ஹாலில்
யாருமில்லை... மதியம் ஏதோ பக்கத்து வீட்டுக்கு போகப்போவதாய் அக்கா
சொல்லிக்கொண்டிருந்தாள், அநேகமாக போயிருக்கலாம்... வாசலில் அவள் செருப்பும் இல்லை
என்பதால், அவள் வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டேன்... பைக்குள் பதுக்கி
வைத்திருந்த கிங்க்ஸ் சிகரெட்டை எடுத்தேன், பற்றவைக்க சமையலறைக்குள் சென்று
தீப்பெட்டியும் எடுத்துவிட்டேன்.... புகைவிட தோதான இடம் மட்டும் வெகுநேரம்
தேடியும் கிடைக்கவில்லை... வீட்டிற்கும், மதில் சுவருக்கும் இடையே ஒரு குறுகிய
பாதை... ஒரு ஆள் கூட சிரமப்பட்டுத்தான் உள்ளே அதற்குள் செல்லமுடியும்... கொஞ்சம்
பருமனான ஆளாக இருந்தால், உள்ளே சென்றுவிட்டு திரும்பிட முடியாது... அதுதான் சரியான
இடமென்று உள்ளே நகர்ந்தேன்...
பல
காலமாய் அந்த இடத்திற்குள் யாரும் செல்லவில்லை என்பதை அங்கு கிடந்த குப்பைகளை
பார்த்தாலே தெரிந்துவிடும்... சிகரெட் பற்றவைத்து, புகைவிட்டபடியே வேடிக்கை
பார்த்துக்கொண்டிருந்தேன்.... காற்று கொஞ்சம் பலமாக வீசிய அந்த கனப்பொழுதில், நான்
நின்றுகொண்டிருந்த இடத்தில் இருந்த ஜன்னல் படாரென்று திறந்தது... சட்டென சிகரெட்டை
கீழே போட்டு காலால் மிதித்து நிமிர்ந்தபோது, நான் கண்ட காட்சி என்னை நிலைகுழைய
வைத்தது....
ஆமா.... அது மாமாவின் படுக்கை அறை... உள்ளே
அவருடன், வேறொரு பையன் கட்டிப்பிடித்த நிலையில்..... அடச்ச!!!.... என்ன கண்றாவி
அது!.... கட்டிப்பிடித்து மட்டுமல்ல, இன்னும்..... அதை சொல்லவே எனக்கு வாய்
வரல.... இதுவரை கோபுரத்தில் வைத்து நான் கொண்டாடிய மாமா, இப்போ குப்பையில்
கிடக்கும் ஜந்து போல தெரிகிறார்.... எனக்கு வந்த கோபத்தில், ஓடி சென்று மாமாவை
மனம் அமைதியாகும் வரை திட்டணும் போலவும், அந்த இன்னொருவனை என் கை வலிக்க
அடிக்கணும் போலவும் இருந்துச்சு.... உடல் முழுக்க வியர்த்து கொட்டியது, அதற்கு
மேலும் அந்த கண்றாவியை பார்க்க மனமில்லாமல் வேகமாக வீட்டிற்குள் சென்று, கட்டிலில்
அமர்ந்தேன்....
என்ன செய்யலாம்?... அப்பா’க்கு போன் பண்ணி
சொல்லலாமா?.... இல்ல, அது சரியா வராது... என்னன்னு சொல்றது?... மாமாவும் இன்னொரு
ஆம்பளையும் தொடர்பு வச்சிருக்காங்கன்னா?... என்னைய பைத்தியம்னு சொல்வார்....
மாமா கிட்டயே, “இது சரியா?... என் அக்கா
உங்கள எவ்வளவு உயர்த்தி நினைக்கிறா?”னு
பேசிப்பார்க்கலாமா?.... நிச்சயம் அதை புரிஞ்சுக்க அவரால முடியாது, ஐந்து வருடம்
அக்காவோட வாழ்ந்தவருக்கு நான் என்ன புதுசா அவளை பற்றி ஐந்து நிமிடத்தில்
புரியவைக்க முடியும்?...
இதை சொன்னால், அக்கா ஒருத்தியிடம்
மட்டும்தான் சொல்லணும்.... அவளிடம் சொல்லலாமா?ன்னும் புரியல....
நான்
குழம்பிக்கொண்டிருந்த அந்த அரை மணி நேர இடைவெளிக்குள் அந்த இன்னொரு இளைஞன் வெளியே
சென்றுவிட்டான்... வெளியே சென்ற அக்காவும் வீட்டிற்கு வந்துவிட்டாள்....
“என்னடா எந்திரிச்சாச்சா?.... நல்ல
தூக்கமா?... இரு, காபி போட்டுட்டு வரேன்” சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்றாள்...
அத்தானின் இயல்பான பேச்சு காதில் கேட்டது.... “‘ராஜா ராணி’ படத்துக்கு போகலாமா?...
மச்சானுக்கும் சேர்த்து டிக்கெட் சொல்லட்டுமா?”
“வேணாங்க.... அவன் அதல்லாம் முதல் நாளே
பார்த்திருப்பான், இன்னும் நாங்க ரெண்டு பேரும் சண்டை போடவே ஆரமிக்கல, நிறைய வேலை
இருக்குல்ல!...” அக்காவும் சிரிக்கிறாள்.... இவ்வளவு அப்பாவியா இருக்காளே
அக்கா!... அத்தானை பற்றி இந்த விஷயம் தெரிஞ்சா, துடிச்சிடுவா!... இப்படி ஒரு
மனைவியை ஏமாற்ற அந்த மனுஷனுக்கும் எப்படித்தான் மனசு வருதோ?... அதைவிட, எதுவுமே
நடக்காதது போல இப்படி நல்லவன் போல பேச அந்தாளுக்கு எப்படித்தான் துணிச்சல்
வருதோ?....
அதற்குள் அக்கா காபி கொண்டுவந்து
விட்டாள்....
இன்னும் குழப்பம் என்னை உறுத்திக்கொண்டே
தான் இருந்தது.... என்னால் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்கமுடியவில்லை, இதை எப்படி
அணுகுவது? என்றும் எனக்கு புரியவில்லை....
“இங்க பக்கத்துல ஒரு கோவில் இருக்கு....
போயிட்டு வருவோமாடா?” அக்கா கேட்டாள்... அதுவும் சரிதான்... ஆண்டவனால் இந்த
பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்ல முடியுமா? பார்க்கலாம்....
இருவரும் கோவிலுக்கு சென்றோம்...
செல்லும்
வழியில் கூட மாமாவை பற்றியே பேசிக்கொண்டு வந்தாள் அக்கா.... “சர்வீஸ் எக்ஸாம்
எழுதலாமான்னு நினைக்குறேன்னு அவர்கிட்ட சொன்னேன்டா.... உடனே, எங்ககங்கயோ தேடி
புடிச்சு, புக்ஸ் வாங்கிட்டு வந்துட்டாரு.... வாய் தவறி ஒன்னு சொன்னா கூட அதை
செஞ்சுடுறார்... இப்பல்லாம் அவர்கிட்ட எதுவும் பேசவே பயமா இருக்கு.... அப்டியே
அப்பா மாதிரிடா” சொல்லும்போது அவள் முகத்தில் மிதந்த பெருமிதமும், உற்சாகமும் என்
மனதை முள்ளாய் குத்தின.... தலை அசைத்து, பொய்யாய் சிரித்து அக்காவின் பேச்சுக்கு
வழிமொழிந்தேன்....
வழக்கம்போல
மாமாவின் பெயரில் அர்ச்சனை செய்தாள் அக்கா, இருக்கும் வசவு வார்த்தைகளால் மாமாவை
என் மனதிற்குள் அர்ச்சனை செய்துகொண்டிருந்தேன் நான்.. கடவுளை கூட ஒருநிலையோடு
வணங்க முடியாதபடி, குழப்பங்களும் கேள்விகளும் என்னை தடுமாற வைத்தது....
கடவுளை
வணங்கிய மன நிறைவில் பிரகாரத்தில் அமர்ந்த அக்கா தேங்காயை லேசாக உடைத்து, ஒரு
சில்லை பெயர்த்து என்னிடம் கொடுத்தாள்... இன்னும் என்னை அவள் சிறுவயது ஆதவனாகவே
நினைத்திருக்கிறாள், மறுக்காமல் வாங்கி வாயில் போட்டு மென்று கொண்டே அக்காவை சில
நொடிகள் பார்த்தேன்... சொல்லலாமா?....
“என்னடா
ஒரு மாதிரி பாக்குற?” அக்காவே பேச்சை தொடங்கினாள்....
“நீ
சந்தோஷமா இருக்கியா?... எந்த குறையும் இல்லாம நிம்மதியா இருக்கியா?”
“என்னடா
பெரிய மனுஷன் மாதிரி பேசுற?... எனக்கென்னடா குறை.... உங்க மாமா, நீ, அப்பா, அம்மா
எல்லாரும் இருக்கைல எனக்கு என்ன கவலை இருக்க போகுது?”
“அதை
சொல்லலக்கா.... கல்யாணத்துக்கு பிறகு நீ சந்தோஷமா இருக்கியா?... உன்னோட மணவாழ்க்கை
நல்லபடியா இருக்கா?னு கேக்குறேன்”
“அடடே!...
என் தம்பிக்கு கோவிலுக்கு வந்ததும் பொறுப்பு வந்திடுச்சு போல... கல்யாணம் ஆகி அஞ்சு வருஷத்துக்கு பிறகு கேட்குற
கேள்வியா இது?... என்னடா பிரச்சின உனக்கு?... நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்...
சுருக்கமா சொல்லனும்னா, நம்ம வீட்ல நான் ராணி மாதிரி இருந்தேன்... உங்க மாமா
என்னைய ராணியாவே ஆக்கிட்டார்... அவ்ளோதான்...” சிரித்தாள் அக்கா... அவள்
சிரிப்பில் கொஞ்சமும் பொய் இல்லை, கண்களில் கூட மகிழ்ச்சியின் ஒளி மிளிர்ந்தது....
அதுவரை
சொல்லலாமா?னு யோசித்த நான், இப்போ சொல்லனுமா?னு யோசிக்க தொடங்கினேன்... இப்போ
மாமாவை பற்றி அக்காவிடம் சொன்னால் விளைவுகள் என்னவா இருக்கும்?...
அக்காவுக்கும்
மாமாவுக்கும் சண்டை வரும், அக்கா கோபித்துக்கொண்டு எங்க வீட்டுக்கு வருவா, குடும்ப
நிம்மதி பாழாப்போகும், அக்கா வாழ்க்கை கேள்விக்குறியாகும்.... இந்த ஒருவிஷயத்தை
தவிர மாமா அக்காவை ஒரு ராணி போலத்தான் நடத்துகிறார்... ஒரு சின்ன சண்டை கூட
போட்டதில்லை என்று அக்கா பலநாள் புளகாங்கிதம் அடைந்திருக்கிறாள்... திருமணமான
ஐந்து ஆண்டுகளும் அக்காவை அதிகமான சந்தோஷத்திற்குத்தான் ஆளாக்கியிருப்பதை பார்த்தாலே
புரிகிறது.... இது ஒரு குறையை தவிர, மற்ற எல்லாமும் நிறைதான்....
என்
யோசிப்புகள் தன் வழியே நகர்ந்துகொண்டிருக்க, நாங்களும் கோவிலின் வாசலை
அடைந்துவிட்டோம்.... இன்னும் என் குழப்பங்கள் அகன்றபாடில்லை..... ஒருவேளை இதை
நல்லது கருது அக்காவிடம் சொல்லாமல் விட்டுவிட்டால், அது மாமாவின் குற்றத்துக்கு
நானும் உடந்தையாக ஆகிவிட்டதாக ஆகிடுமே.... மேலும், அக்காவை நானும் ஏமாற்றுவது
போலல்லவா ஆகிடும்!....
வீட்டை
நோக்கி நடந்துகொண்டிருக்கும்போதும் என் மனம் மத்தளமாய் இருபுறமும்
அடிவாங்கிக்கொண்டுதான் வந்தது... அந்த ஆண்டவனால் கூட இதற்கு தீர்வு
கொடுக்கமுடியவில்லையே? கடவுளை மட்டுமே நொந்துகொண்டேன்... திடீரென்று அக்காவின் நடவடிக்கைகளில் ஒரு
பதற்றம் தெரிந்தது... கையில் வைத்திருந்த அர்ச்சனை பொருட்களை தெரிந்தே கீழே
போட்டாள், அதை கை தவறி விழுந்ததாய் என்னை நம்பவைக்க முனைந்தாள்... அவள் நடவடிக்கை
ஒவ்வொன்றிலும், என் கவனத்தை திசைதிருப்பும் முனைப்பு தெரிந்தது....
அர்ச்சனை
பொருட்களை அள்ளியபடியே அவள் அறியாமல் நிமிர்ந்து பார்த்தேன்... அக்காவின்
வீட்டிற்குள்ளிருந்து ஒரு இளைஞன் வெளியே சென்றான்... நான் மதியம் பார்த்த அதே
இளைஞன்... அதை நானும் கண்டுகொள்ளாதது போல, மீண்டும் பார்வையை தரை நோக்கி
குனிந்துகொண்டேன்.... சில நிமிடங்களில் அக்காவின் முகத்தில் நிம்மதி தெரிந்தது, இறுக்கம்
மறைந்து பழையபடி புன்னகை தவழ்ந்தது.... எதையும் கண்டுகொள்ளாதவனாக அழகாகவே
நடித்தேன் நானும், அக்காவின் வயிற்றில் ஆறு மாத கருவாக வளர்ந்துகொண்டிருக்கும் என்
மருமகனுக்காக! (முற்றும்)