Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday, 15 October 2013

"அவனா நீ....!!!" - சிறுகதை...


மேற்கே சூரியன் உதிக்கும்போது அந்த ஊருக்குள் அரும்பும் ஒரு செய்தி, அந்தி பொழுதாகி சூரியன் கிழக்கில் மறையும்போது, காட்டுத்தீ போல மூலை முடுக்குகள் எங்கும் பேசப்படும் அளவிற்கான அதிமுக்கிய ஹாட் டாப்பிக்காக மாறிவிடுவது வழக்கமான ஒன்று... “அண்டப்புளுகூர்” ஊரில் வசிக்கும் முன்னூறு தலைக்கட்டிற்கும் ‘அவனோட இவனுக்கு தொடர்பாமே?’, ‘அவளோட இவளை ஆத்தங்கரை பக்கம் பாத்தாகலாமே?’ போன்ற அதிமுக்கியமான தேசநலம் வாய்ந்த பிரச்சினைகள் பற்றி பேசுவதுதான் பொழுதுபோக்கே.... இப்படி செவிக்கு “கிசுகிசு” கிடைக்காத நேரங்களில் தான், வயிற்றுக்கே உணவு எடுக்கும் அளவிற்கு வள்ளுவனின் முரட்டு பக்தர்கள் இவர்கள்....
அப்படி இன்றைக்கு குழாயடியில் குடத்தில் நீர் நிரப்ப மறந்தவர்களாகவும், ரேஷன் கடையில் சக்கரை வாங்க மறந்தவர்களாகவும் மக்கள் பேசிக்கொண்டிருக்கும் பேச்சு “தங்கராசு மவன் பாண்டிக்கும், சரோஜா மகள் செல்விக்கும் என்னமோ கசமுசாவாம்....”.
“என்னக்கா சொல்றீய?... ஆம்பளை எப்புடி பொம்பளையோட.... ச்சி ச்சி... இருக்காது”
“நெசமாத்தான் சொல்றேன்... வெள்ளக்காரன் கணக்கா இந்த கூத்தல்லாம் இப்ப நம்ம ஊர்லயும் நடக்க ஆரமிச்சுடுச்சு.... நம்ம கலாச்சாரமல்லாம் சவுக்காரம் போட்டு வெளுக்குற அளவுக்கு அழுக்காகிப்போச்சு”...
இதுதாங்க இப்போ இன்னைய அளவுல நம்ம அண்டப்புளுகூரின் மொத்த பரப்பளவிலும் பரபரப்பிற்கு காரணமே... பாண்டியையும் செல்வியையும் அரசல் புரசலாக ஆங்காங்கே பார்த்தபோது கிசுகிசுக்கப்பட்ட விஷயம், இன்னைக்கு ஆலமரத்து நிழலுல, வெற்றிலையை குதப்பிக்கொண்டே பேசப்படும் அளவிற்கு வெளிப்படையான பேச்சாகிவிட்டது... ஆலம்பழத்தை வயிறு முட்ட தின்ன காக்கைகள், சாவுகாசமாக மரத்தடியில் பேசிக்கொண்டிருந்தவர்களின் உடல் மேலே எச்சத்தை கழிந்ததை கூட கவனிக்க மறந்து புரணியில் ஐக்கியமாகி கிடந்தார்கள் மக்கள்... புல் வயல்களில் புதராய் மண்டிக்கிடந்த நெற் செடிகளை களையெடுக்க குனிந்தவர்கள், தன்னை மறந்து புற்களை பறித்துவிடும் அளவிற்கு அந்த பேச்சின் சுவாரசியம் அதிகமாக ஆண்களை கவர்ந்திருந்தது...
அந்தி சாய்ந்த நேரம் ஆகிவிட்டது, ஊரே அது பற்றி பேசி ஓய்ந்து போய், மூன் தொலைக்காட்சியில் “திருமதி செல்வி” நாடகத்தில் செல்வியின் மனைவியின் கஷ்டங்களை ரசிக்க தொடங்கிவிட்டது.... ஒரே ஒரு வீட்டில் மட்டும்தான் ‘ஹை டெசிபல்’ பேச்சு சத்தம் வாசல் வரை எதிரொலித்துகொண்டு இருந்தது...
பாண்டியின் வீட்டு வாசலில் அக்கம் பக்கத்து பெருசுகள் சிலர், அடுத்தநாள் பொழுதை கழிக்க அவல் போல மெல்லுவதற்காக, வீட்டிற்குள் பேசப்படும் வார்த்தைகளை ஒவ்வொன்றாக சேகரித்துக்கொண்டு, செய்திகளுக்கு அவரவரும் புது உருவம் கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர்... இயற்கையாய் வந்த தும்மலை கூட அடக்கிக்கொண்டு, ஒட்டுக்கேட்பதில் தாங்கள் உளவுத்துறையை மிஞ்சியவர்கள் என்பதை நொடிக்கு நொடி நிரூபித்துக்கொண்டு நின்றார்கள்...
கதவின் விளிம்பின் அருகே அமர்ந்திருக்கும் பாண்டியின் அத்தை இன்னும் அழுகையை நிறுத்தவில்லை.... மாமா, சித்தப்பா, பெரியம்மா சகிதம் பாண்டியின் அப்பாக்கள் இருவரும் சோகம் ததும்பிய முகத்தோடு தலையில் கைவைத்து அமர்ந்திருந்தனர்...
“இப்டியே எவ்வளவு நேரம் உக்காந்திருக்கது?.... இதல்லாம் சரியா வராது... உடனே நம்ம பாண்டி பயலுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சிடலாம்” பெரியப்பாதான் முதலில் மௌனத்தை கலைத்து பேச்சை தொடங்கினார்....
“இருங்கண்ணே... கொஞ்சம் பொறுமையா இருங்க... இப்ப என்ன ஆகிப்போச்சு?... ஆம்புளைக பொம்பளைகள கல்யாணம் பண்ணிக்கறதல்லாம் இப்ப ஊர் ஒலகத்துல சர்வ சாதாரணம்...இன்னும் நாம பழைய பஞ்சாங்கத்தை புரட்டிக்கிட்டு இருந்தா சரிபட்டு வராது...” சித்தப்பாவின் இந்த முற்போக்கு பேச்சை வீட்டில் ஒருவரும் ரசிக்கவில்லை... கிழக்கே தலைவைத்து படுத்திருந்த நாய் கூட, எழுந்து ஒருமுறை சுற்றிக்கொண்டு மீண்டும் மேற்கே தலைவைத்து படுத்தது...
“ஏய் என்ன பேசுற?... வெள்ளக்காரன் செய்றதயல்லாம் நாம செய்ய முடியாது.... நமக்குன்னு ஒரு கலாச்சாரம், பண்பாடு எல்லாம் இருக்கு... ஆம்பளைனா ஆம்பளையத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்... அப்பத்தான் அவனுக்கு ஆம்பளத்தன்மை இருக்குறதா அர்த்தம்... இது வெறும் வயசுக்கோளாறு... சின்ன பய அவன், ஒரு நல்ல பயலா பாத்து கல்யாணம் பண்ணி வச்சுட்டா சரி ஆகிடுவான்”
அதுவரை அழுதுகொண்டு மட்டும் அமர்ந்திருந்த அத்தை, சேலையின் முனையில் கண்களை துடைத்துக்கொண்டு பேசுவதற்கு ஆயத்தமாவதை போல எச்சிலை விழுங்கியபடியே, “நல்ல பயலா பாக்குறீயளா?... எனக்கு மவன் பொறக்கயிலேயே, அவன் பாண்டிக்குத்தான்’னு கோயில்ல வச்சு சொன்னத மறந்துட்டியலா?... சொந்தத்த விட்டுக்கொடுக்க முடியாது, என் மவன் சதீஷுக்குத்தான் பாண்டிய கல்யாணம் பண்ணி வைக்கணும்” அத்தை கர்ச்சித்தார்....
“என்னம்மா நீயி?... இப்ப இருக்குற பிரச்சினைய முதல்ல முடிக்கட்டும்... அப்புறம் உன் பிரச்சினைக்கு வரலாம்....”
கொதித்தெழுந்த அத்தை, “எல்லாம் ஒரு பிரச்சினை தான்... இவ்வளவு பேச்சுக்கு பிறகும் பாண்டிய மருமவனா நான் ஏத்துக்கறதே, சொந்தம் விட்டுப்போக கூடாதுன்னுதான்... எதாவது குழப்புனீயன்னா நான் மனுஷியா இருக்க மாட்டேன் ஆமா...” சொல்லிவிட்டு சேலையை உதறி தன் மார்மேல் போட்டவாறு, மற்றவர்களின் பதிலைகூட எதிர்பார்க்காதவலாய் வீட்டை விட்டு வெளியே நடந்தாள்.... அத்தை அங்கிருந்து சென்ற சில நிமிடங்கள், புயலுக்கு பின் அமைதியை போல நிசப்தமாக வீடு காட்சி அளித்தது....
“என்ன தங்கராசு, உன் தங்கச்சி இப்புடி சொல்லிட்டு போறா?”
“அவ சொல்றதும் நியாயம்தானே அத்தான்!... பாண்டி அப்பா வெளிநாட்டுக்கு சம்பாதிக்க போனப்ப ஒத்தையா நான் பட்ட கஷ்டத்துல கூட நின்னவ அவ... எங்களுக்கு ஒண்ணுன்னா மொதல்ல நிக்குறவ அவதானே!... அவ பக்கத்துல நியாயம் இருக்குத்தான்....” தங்கராசு கண்களை துடைத்தவாறே சொன்னார்....
“சரிண்ணே... நம்ம பாண்டிக்கு இஷ்டமில்லாத கல்யாணத்தை பண்ணி வைக்கிறது நம்ம தலைல நாமலே மண்ணை வாறி போட்டுக்குற மாதிரிதானே?” முற்போக்கு சித்தப்பா தயங்கியபடியே கூறினார்....
“அவனுக்கு சதீஷை பிடிக்கலைன்னா வேற பையனை பாக்கலாம்.... அந்த கம்னாட்டிக்கு பையனை கல்யாணம் பண்ணிக்கவே பிடிக்கலைனா நாம என்னத்த பண்றது?... நம்ம பூதக்கோயில்ல மந்திரிக்க சொல்லிருக்கேன், எல்லாம் ரெண்டு நாள்ல சரி ஆகிடும்... அப்புடியும் சரி ஆகலைனா ஒரு பைத்தியக்கார டாக்டர் கிட்ட வைத்தியம் பண்ண வேண்டியதுதான்” பெரியப்பா சொன்னார்... எப்போதும் எல்லா விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பவர் அவர்தான்... பெரும்பாலும் அவர் பேச்சை யாரும் தட்டுவதில்லை... எல்லோரும் அமைதியாய் அமர்ந்திருக்க, அருகில் மாட்டப்பட்டிருந்த “புலாசுலாக்கி பைனான்ஸ்” காலண்டரை எடுத்து, நாட்களை புரட்டினார்....
“வர்ற புரட்டாசி மாசம் ஞாயித்து கிழமை... அஷ்டமி... நல்ல நாள்... அன்னிக்கே கல்யாணத்தை காதும் காதும் வச்சா மாதிரி முடிச்சிடலாம்... கல்யாணம் ஆனா எல்லாம் சரி ஆகிடும்” கடிகாரத்தை பார்த்தபடியே மனதிற்குள் ‘சொதப்பல் சிங்கர் போட்டிருப்பாணுக’ என்று நினைத்தபடியே பெரியப்பாவும் அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டார்....
அறைக்குள் தனிமையை மட்டும் துணையாய் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த பாண்டியின் காதில் மொத்த விவாதமும் பிசிறு தட்டாமல் விழுந்தது.... பாண்டி இயலாமையில் எல்லையில் இருக்கிறான்.... மருத்துவரால் கைவிடப்பட்ட புற்றுநோய் நோயாளியை போல, உள்ளம் உணர்ச்சியற்று கிடந்தது... செவிவழியாக நஞ்சை உள்வாங்கிக்கொண்டிருந்த பாண்டியின் கண்களில், கார்ப்பரேஷன் குழாய் போல தண்ணீர் ஊற்றியது... காலை முதல் காதல் பரிசாக வாங்கிய அடிகளின் காயங்களில் அந்த உப்புநீர் பட்டபோதெல்லாம், மனதினை போலவே உடலும் வலியை உணர்ந்தது.... இலவம்பஞ்சு தலையணையை கண்ணீரால் ஈரப்பதம் நிரப்ப செய்தான்.... ஒருவாராக கண்ணீர் வற்றிய கணப்பொழுதில், படுக்கைக்கு கீழே வைத்திருந்த ஒரு கத்தியை கையில் எடுத்தான்....
எச்சிலை விழுங்கிக்கொண்டு, கண்களை இறுக்க மூடிக்கொண்டு கைகளின் மணிக்கட்டை நோக்கி பாய்ச்ச.......
“டேய் பாண்டி..... எழுந்திருடா.... டேய்.... லேட் ஆச்சு....” திடுக்கிட்டு விழித்தான் பாண்டி... அப்பாவின் குரல்தான்....
காற்றாடி சுற்றிக்கொண்டிருந்தும் உடல் முழுக்க வியர்வை, கையில் காயமில்லை.... முகத்திலும் கூட காயமோ, கண்ணீரின் பிம்பமோ இல்லை... வீட்டின் வேறொரு அறையில் இருந்து ஒரு பெண் குரல் கேட்டது....
“யாருப்பா அது?” எச்சிலை விழுங்கியபடியே கேட்டான்...
“என்னடா ஆச்சு உனக்கு?... உன் அம்மாதான்...”
“அம்மாவா? எனக்கா?” தனக்குள் கேட்டுக்கொண்டு குழப்பம் விலகாதவனாக எழுந்து ஹாலுக்கு சென்று இருக்கையில் அமர்ந்தான்... தொலைக்காட்சி பெட்டி “ஆதித்யாவில்” சிரித்துக்கொண்டு இருந்தது.... கண்ணாடி அலமாரிக்குள் அலங்கார பொருட்களின் அணிவகுப்பின் தொடர்ச்சியாக, அப்பா அம்மாவின் திருமண புகைப்படம்... அம்மாவின் முகத்தில் பூரிப்பும், அம்மாவின் முகத்தில் வெட்கமும் தேவைக்கு அதிகமாய் ஜோடிக்கப்பட்டு இருக்கிறது....
அலைபேசி குறுந்தகவலுக்கான “பீப்” ஒலித்தது.... திறந்து பார்த்தான், “குட் மார்னிங் புருஷா...” செல்வியிடமிருந்து காதல் மொழியில் காலை வணக்கம்....
“ச்ச... வெறும் கனவா?... ஐயோ சாமி!” சுவற்றில் மாட்டப்பட்டு, சிரித்துக்கொண்டிருந்த முருகனை நோக்கி வணங்கிக்கொண்டான்.... அருகில் வள்ளி தெய்வானையோடுதான் நிற்கிறார்... இது இயல்பான உலகம்தான்...
தொலைக்காட்சியில் வடிவேலு நிர்வாண கோலத்தில் அமர்ந்திருக்க, புகைப்படக்காரன் ஒருவன் ஒருவித காமப்பார்வையில் பார்க்க.... “அவனா நீ?” வடிவேலு சொல்லும் காட்சி.... எரிச்சல் மிகுந்து, தொலைகாட்சியை அணைத்தான்... நேற்றுவரை பாண்டி, ரசித்து சிரித்த காட்சி... ஏனோ இன்றைக்கு சிரிப்புக்கு பதில், எரிச்சல் வந்தது... “அவனவனுக்கும் வந்தாத்தான் தெரியும்!” மனதிற்குள் நினைத்துக்கொண்டான்....
கையில் குவளையோடு பாண்டியின் அருகில் வந்த அப்பா, “தண்ணிய குடிடா... முகமல்லாம் பேய் அறைஞ்ச மாதிரி இருக்கு.... குடிச்சுட்டு வேகமா கிளம்பு”
“எங்கப்பா?”
“மறந்துட்டியா?... உங்க அத்தை வீட்டுக்குத்தான்... நேத்தே சொன்னேனே?”
“ஹ்ம்ம்... ஆமா... மறந்துட்டேன்..... என்ன ஊர் சொன்னிங்க?” தண்ணீரை குடித்து தன் பதட்டத்தை தணித்துக்கொண்டான் ....
நாளிதழை புரட்டியபடியே அப்பா சொன்னார் “அண்டப்புளுகூர்...” (முற்றும்)

8 comments:

  1. Very nice Imagination.... Keep it up.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நேத்ரன்....

      Delete
  2. a totally different story but Vijay's touch was missing . Any how continue to bombard with short stories dude

    ReplyDelete
  3. vithiyasamana muyarchi................

    kanavil vanthathu neril nadanthal nandraga irrukum........................

    ReplyDelete
  4. Super excellent
    Eager to read about transgender stories

    ReplyDelete
  5. Super excellent
    Eager to read about transgender stories

    ReplyDelete