முதல் பாகத்தை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...
கொடைக்கானல் பயணம் முடிந்து சென்னை
வீட்டிற்குள் நுழைந்தான் அபி... வெள்ளிக்கிழமை மாலை வீட்டை நோக்கி ஓடி வரும் பள்ளி
மாணவனை போன்ற உற்சாகம் அவன் முகத்தில் பளிச்சிட்டது.... வீட்டிற்குள் நுழைந்த
வேகத்தில், பையை தூக்கி கீழே போட்டவாறே ஹாலில் அபியின் அமர்வுக்காக காத்திருந்த
வெல்வெட் சோபாவில் அமர்ந்தான்...
அருகில்தான் பாஸ்கரும் அமர்ந்திருக்கிறான்....
அதிகாலை நேரம்தான் என்றாலும், பாஸ்கரின் அலைபேசிக்கு மட்டும் எப்போதும்
ஓய்வில்லை...
“பாண்டிச்சேரியா?... ஓகே.... அபியா?... இருங்க ஒரு நிமிஷம்”
அலைபேசியிலிருந்து கவனத்தை கலைத்து அபியை பார்த்து, “நாளைக்கு ஈவ்னிங்
பாண்டிச்சேரி ஓகேவா?” என்றான் பாஸ்கர்....
தலையை இடதும் வலதுமாக ஆட்டி, தலைக்கு
மேல் கைகூப்பி சிரித்தவாறே, “ஒன் வீக் எந்த கமிட்மென்ட்டும் வேணாம்”
மறுத்துவிட்டான் அபி....
“சாரி சார்.... அபி ப்ரீ இல்ல, ஷ்யாம்
ஓகேவா?”
“....”
“ஓகே சார்.... வர சொல்லிடுறேன்”
அழைப்பை துண்டித்துவிட்டு அபியை பார்த்தான்....
“என்னாச்சு அபி?...”
“என்ன என்னாச்சு?”
“என்ன திடீர்னு ஒன் வீக் லீவ்
போடுற?... இது வெக்கேசன் டைம்... நல்ல சீசன் வேற.... காசு இருக்குறவங்களுக்கு மூடு
இருக்குற வரைக்கும்தான் நம்ம பொழப்பு... ஒன் வீக் இப்டி மட்டம் போட்டின்னா
என்னாகுறது?”
“ஐயோ போதும் பாஸ்... நீ என்னாச்சுன்னு
கேட்டப்போ என் உடம்பு, மனசு பத்தி கேக்குறியோன்னு நெனச்சேன்.... காசு, காசு
காசுதானா உனக்கு எப்பவும்?.... எனக்கு ரெஸ்ட் வேணும், மனசளவுக்கு...
அதுமட்டுமில்லாம, ராயல் பிக்சர்ஸ்’லேந்து நாளைக்கு ஸ்க்ரீன் டெஸ்ட் வர
சொல்லிருக்காங்க... இனி ஒருத்தனுக்கு நடிக்குற பொழப்பை விட்டுட்டு, ஊருக்கே
நடிச்சு காட்ட போறேன்... ஹ ஹா” பொய்யாக சிரித்தான்... அந்த சிரிப்பின்
உண்மைத்தன்மையை பாஸ்கரால் நிச்சயம் ஆராய முடியாது...
“ஓ அப்டியா?... ஓகே நல்ல விஷயம்தான்
அபி.... நாளைக்கு ஸ்க்ரீன் டெஸ்ட் போகணும்னா, இன்னிக்கு நீ முழுசா ரெஸ்ட் எடு...
உன் கண்ணல்லாம் வீங்கிருக்கு, முகத்துல வழக்கமான ஷைன் இல்ல...”
“அடடே!... என் அருமை மெஷின்
நண்பனுக்கு, இதல்லாம் கூட கண்ணுக்கு தெரியுதா?....” சிரித்துக்கொண்டே சட்டையை
கழற்றிவிட்டு, உடைகளை மாற்றினான் அபி... அபியின் அந்த நிர்வாணத்தை ரசிக்க ஆயிரம்
பேர் தவம் கிடக்க, அதை கண்டுகொள்ளாதவனை போல அலைபேசியை காதில் வைத்தவாறே
அங்கிருந்து தன்னை விடுவித்துக்கொண்டான் பாஸ்கர்....
அறைக்குள் சென்று படுத்தான் அபி...
முந்தைய நாள் இரவு தூக்கமின்மை, பயணக்களைப்பு, நாளைய சினிமா அப்பாயிண்ட்மெண்ட்
இவ்வளவு காரணங்கள் தூங்குவதற்காக இருந்தும், தூக்கம் மட்டும் வரவில்லை... கவலைகள்
அபிக்கு புதிதல்ல, ஏமாற்றம் அவனுக்கு பழகிய ஒன்றுதான் என்றாலும், காதல் என்ற
பெயரால் ஒருவன் ஏமாற்றியது தாங்கிக்கொள்ள முடியாத விஷயமாக பட்டது... கண்களை இறுக்க
மூடிக்கொண்டு, தன் நினைவுகளை திசை திருப்ப பிராயத்தனம் செய்தான்.... ஒருவழியாக
நித்திரை தேவன் அபிக்கு அருள் பாவித்தான்....
மறுநாள் காலை, வழக்கத்தை விட விரைவாக
எழுந்து தன்னை தயார் படுத்த தொடங்கினான் அபி... இரவில் மட்டுமே பயன்படுத்தும்
ஷைனர், பூச்சுகள், பவுடர்கள் எல்லாமும் இனி பகலில் அபியின் அங்கங்களுக்கு
பழக்கப்படுத்திக்கொள்ள பயிற்சி எடுத்தன.... கருப்பு நிற டீ ஷர்ட், ஊதா நிற
ஜீன்ஸ்... இந்த ஆடைகள்தான் எப்போதும் அபியை இன்னும் அழகாக வெளிக்காட்டும் மந்திர
துணிகள்...
கிளம்பி தயாரான அபி, ஹாலில் வந்து
அங்கிருந்த ஒரு ஆளுயர கண்ணாடியில் தன்னை மீண்டும் ஒருமுறை சரி
பார்த்துக்கொண்டான்... உதடுகளை எச்சில்களால் ஈரப்படுத்திக்கொண்டு, இளம் சிவப்பு
இதழ்களாக்கினான்....
ஹாலின் இருக்கையில் அமர்ந்து இதை
பார்த்துக்கொண்டிருந்த பாஸ்கர், “ஒரு நாயகன்.... உதயமாகிறான்...” ராகம் தாளம் தப்பி, சுருதி பிசகி, ஏதோ பாடல் என்று சொல்லிக்கொள்வதற்கான
அறிகுறிகளை மட்டும் தாங்கிய வார்த்தைகள் பாஸ்கரின் வாயிலிருந்து வெளியில் வந்து
விழுந்தன....
“ஏய்!... என்ன கிண்டலா?”
“கிண்டலல்லாம் இல்லீங்க ஆபிசர்....
டைமிங் பாட்டுதான்ங்க....” சிரித்தான் பாஸ்கர்....
“உன்ன மைன்ட்’ல வச்சுக்கறேன்.... நான்
பெரிய ஸ்டார் ஆனப்புறம், உன்ன பக்கத்துல காமடியனா வச்சுக்கறேன்... இந்த கொடுமையான
வாய்ஸ்’க்கு பாடுறதுக்கும் சான்ஸ் தரேன்” அபியும் சிரித்தவாறே, தன் அலைபேசியை
எடுத்துக்கொண்டு கிளம்ப ஆயத்தமானான்...
“ஓகே அபி... ஆல் தி பெஸ்ட்....”
“தாங்க்ஸ்டா... கொஞ்சம் பயமா இருக்கு...”
“உனக்கு பயமா?... ஊருக்குள்ள
சொல்லிடாத, சிரிச்சிடுவாங்க...”
“இல்ல... புது இடம்... புது ஆளுங்க...
புது விஷயம்... அதான்...”
“இங்க பாரு அபி... நீ மத்தவங்க மாதிரி
புது ஆளு கிடையாது... நீ அல்ரெடி ஒரு மாடல், சில விளம்பரங்கள்ல நடிச்சிருக்க...
அதைவிட முக்கியமா நீ தயாரிப்பாளரோட சிபாரிசுல போற... உனக்கு அங்க ராஜ மரியாதைதான்
கிடைக்கும்... தைரியமா போ, சக்சஸ்’ஓட திரும்பி வா” பணக்கணக்கு மட்டுமே
போடத்தெரிந்த பாஸ்கர், சில நேரங்களில் இப்படி அசத்தும் வகையில் மனக்கணக்கு
போடுவதும் உண்டு.... உண்மைதான்... அபி ஒன்றும், சினிமா வாய்ப்புக்காக இயக்குனர்கள்
வீட்டு வாசலில் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுள் ஒருவன் இல்லை... ஏற்கனவே
அவனுக்கான அடையாளங்கள் நிறைய இருக்கிறது... விசிட்டிங் கார்டு இல்லாமலேயே தன்னை
அடையாளப்படுத்தி காட்டிக்கொள்ளும் அளவிற்கான அடையாளம் அபியின் பின்னணியில்
இருப்பது என்னவோ உண்மைதான்...
கால் டாக்சி ஒன்றில், ராயல் பிக்சர்ஸ்
வாசலை அடையும்வரை அபியின் மனம் லேசான படபடப்புடனே துடித்தது....
“ராயல் பிக்சர்ஸ்” பிரம்மாண்ட
எழுத்துக்கள் அந்த கட்டிடத்தின் நடுவில், சிவப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு
இருந்தன.... புதிய தயாரிப்பு நிறுவனம், இரண்டு குறைந்த பட்ஜெட் படங்கள் மட்டுமே
இதுவரை தயாரித்துள்ளார்கள்... அந்த கட்டிடத்துக்கு எதிரே இருந்த தேநீர் கடையில்
வருங்கால எழுச்சி நாயகன்களும், புரட்சி புயல்களும் தேநீர் அருந்திக்கொண்டே,
சிகரெட்டில் சக்கர வியூகங்கள் உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்... கேட் வாசலில்
முறைப்பும் விரைப்புமாக வருவோரை எல்லாம் விரட்டிக்கொண்டு இருக்கும் காவலாளி
மட்டும் கொஞ்சம் கலவரப்படுத்துகிறார்...
காரிலிருந்து இறங்கி கேட் நோக்கி
நடந்தான்... காவலாளியின் முறைப்பான பார்வை இப்போது கண்களை சுருக்கி யோசிப்பதை போல
தோன்றியது... மனதில் கொஞ்சம் தெம்பு பிறந்தது அபிக்கு.... அவரை தாண்டி அந்த
கட்டிடத்துக்குள் செல்வது அபிக்கு சிரமமாக இல்லை... அபியின் முக பரிச்சயம் பல
நேரங்களில் அவனுக்கு கைகொடுப்பதுண்டு... பிரம்மாண்ட கட்டிடமானாலும், அதில்
படத்திற்கான ஆட்களை தேர்வு செய்யும் இடம் கண்டுபிடிக்க அவ்வளவல்லாம் கஷ்டமும்
இல்லை..
“வெய்ட்டிங் ஹால்” குளிரூட்டப்பட்ட
அறை என்றாலும், உள்ளே நுழைந்தும் அபிக்கு வியர்வை நிற்கவில்லை... அந்த அறைக்குள்
ஏற்கனவே அமர்ந்திருந்த ஆறு இளைஞர்களும் கையில் சிலபல கோப்புகளோடும், கண்களில்
நிறைய கனவுகளோடும் காத்திருக்கிறார்கள்... அவர்களுள் யாரும் நிச்சயம் அபிக்கு
போட்டியாக வரும் அளவிற்கு இருப்பதாக தெரியவில்லை... மெல்ல சென்று ஒரு இருக்கையில்
அமர்ந்தான், அனைவரின் பார்வையும் அபியை சுற்றி வட்டமடித்ததில் அபிக்கு ஒருவித
தயக்கம் இருப்பது அவன் கூனிக்குறுகி அமர்ந்திருப்பதில் கண்டுபிடிக்க முடியும்....
அறைக்குள் இருந்த இன்னொரு
அறைக்குள்ளிருந்து ஒரு ஆசாமி அந்த இருப்பிடத்துக்கு வந்தார்... அந்த நபர்
அணிந்திருக்கும் சபாரி உடையல்லாம், இன்னும் ஆட்கள் அணிகிறார்கள் என்பதே அவரை
பார்த்துதான் அபிக்கு புரிந்தது.... நெற்றியின் இடமிருந்து வலமாக நீண்ட திருநீர்
பூச்சு, அதன் நடுவில் வட்ட வடிவ குங்கும பொட்டு... அமர்ந்திருக்கும் நபர்களை பார்த்து, “ஸ்க்ரீன்
டெஸ்ட்’க்கு வந்தவங்க தானே எல்லாரும்?...”
“ஹ்ம்ம்.. எஸ்... ஆமா...” கலவையான
பதில்கள்...
“ஆல்பம் வச்சிருக்கிங்களா?”
அவரவரும் கோப்புகளுக்கு நடுவில்
வைத்திருந்த புகைப்பட தொகுப்புகளை கையில் எடுத்துக்கொண்டனர்... அபி மட்டும்
அமைதியாக இருந்தான்...
“உங்ககிட்ட இல்லையா?” அபியிடம்
கேட்டார்....
“இல்ல சார்... ப்ரொட்யூசர் சார்
அனுப்பினார்...” காதுக்கு அருகே வந்து மெல்ல ரகசியமாக சொன்னான்....
“முதலாளி சொன்னாரா?... அவர் டெல்லி’ல
இருக்காரே... பூஜைக்கு மட்டும் வந்தாரு, அப்டியே கிளம்பிட்டாரே?... எப்போ
சொன்னார்?”
அபி கலவரமானான்.. தயங்கியபடியே, “கே.எம்
சார்....” என்றான்...
அந்த பெயரை கேட்டதும் சபாரி மனிதர்
முகம் சுருங்கியது, ஒரு அலட்சிய பார்வை தொனித்தது... “காத்தமுத்துவா?.... முதலாளி
மச்சான்’ன்னு சொல்லு... இந்த விஷயத்துல எல்லாம் ஏன் அவரு தலையிடுறாரு’ன்னு
தெரியல...” முனகிய பிறகு அபியை பார்த்தவர், “சரி, உங்க நம்பர் கொடுத்திட்டு நீங்க
போகலாம், தகவல் சொல்றோம்...” வார்த்தைகளில் பிடிப்பு இல்லை...
கண்களில் இருந்து அந்த சபாரி
மறையும்வரை திகைத்து நின்றான் அபி.... பின்பு தன்னை சுதாரித்தவனாக உடனே அலைபேசியை
எடுத்து பரபரப்பாக எண்களை அழுத்தினான்...
“ஹலோ... கே.எம். சார்?”
“சொல்லு அபி... ஆபிஸ் போனியா?”
“அங்கதான் இருக்கேன்... ப்ரட்யூசர்
நீங்க இல்லன்னு சொல்றாங்களே?” குரலில் ஏமாற்றம் தெரிந்தது...
“எவன் சொன்னான்?... எங்க மாமாதான்
தயாரிப்பாளர், அதுவும் என் அக்கா பேர்ல தான் மொத்த விஷயமும் நடக்கும்... இங்க
நான்தான் எல்லாமும்...”
அபிக்கு நம்பிக்கை வந்தாலும், இன்னும்
அகலாத குழப்பம் அவன் வார்த்தைகளில் வெளிப்பட்டது, “இங்க ஒருத்தர் பிடிகொடுக்காம
பேசுறார்... ஸ்க்ரீன் டெஸ்ட் எடுக்காமலே, போக சொல்றார்....”.
“அந்த பைபாஸ் மண்டையன சொல்றியா?...
அவன் சும்மா வெத்துவேட்டு.... கம்பெனி பீ.ஆர்.ஓ... நான்தான் முடிவு எடுக்குறவன்...
அதையல்லாம் கண்டுக்காம உடனே நீ ஹோட்டல் பார்க்’குக்கு வா....”
அபியால் மேற்கொண்டு எதுவும்
பேசமுடியவில்லை... தயங்கியபடியே அலுவலகத்தை விட்டு வெளியே வந்து, மீண்டும் ஒருமுறை
உயர்ந்து நின்ற கட்டிடத்தை பார்த்தான்... முந்தைய படத்தின் நாயகன், கட் அவுட்
வடிவில் சிரித்துக்கொண்டு நிற்கிறான்... மனதிற்குள் படர்ந்த மெல்லிய சோகத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல்
அங்கிருந்து வெளியேறினான்....
ஹோட்டல் பார்க்.... பல முறை தொழில்
(?) நிமித்தமாக வந்துபோகும் இடம்தான்... பரிச்சயமான முகங்கள் தான் வரவேற்பில்
நின்றிருந்தார்கள்...
அவர்கள் அருகே சென்று சம்பிரதாய
சிரிப்பை உதிர்த்துவிட்டு, “கே.எம். சார்....?” என்று கேட்டு முடிப்பதற்குள், “ரூம்
நம்பர் 106” என்ற
பதில் வந்தது...
அறைக்கதவை தட்டினான்... உள்ளே கே.எம்
என்கிற காத்தமுத்து கையில் மதுக்கோப்பையுடன் காத்திருக்கிறார்... அரை நிர்வாண
கோலத்தில், ஆஜானுபாகுவான கே.எம் சாருக்கு பொருத்தமான பெயர் “காத்தமுத்து” தான்...
கோப்பையை அருகில் வைத்து, மெல்ல அபியை அருகில் அமர்த்தி அவன் அழகை ரசித்தார்
காத்தமுத்து...
“என்ன அபி ஒரு மாதிரி இருக்க?”
“ஒண்ணுமில்ல சார்...” நிறைய
இருப்பதாய் சொல்கிறது அந்த பதில்...
“நீ ஒன்னும் கவலைப்படாத... இந்த
படத்துல நீதான் ஹீரோ’க்கு ப்ரெண்ட்.... என்னைய நம்பு...” சொல்லிக்கொண்டே அபியை
கட்டி அணைத்தார்... அபியோ உணர்ச்சியற்ற உடலாய் அமர்ந்திருக்கிறான்...
“இந்த கன்னத்துக்காக மட்டுமே படம்
நூறு நாள் ஓடும்...” கன்னத்தை கடித்தார், மஞ்சள் நிற தோலினை ரத்த சிவப்பு
ஆக்கிரமித்தன...
“உதட்டை படத்துல பாக்குற அத்தனை ப்ரொட்யூசரும்
உன் கால்ஷீட்’க்காக தவம் கெடக்க போறான்” செந்நிற ரோஜா இதழ்களை தன்வசப்படுத்தி, அதை
அடர் சிவப்பு நிறமாக்கினார்...
உடைகளை களைந்து, சில நிமிட நிர்வாண
ரசனைக்கு பிறகு முழு உடலையும் கபளீகரம் செய்தார் காத்தமுத்து.... அரை மணி நேர
நரகத்தின் வாசம் அபியை கொஞ்சம் அதிகமான வலிகளுக்கு உட்படுத்தியது....
*****************
“ஹலோ அபி, திருச்சி போயிட்டியா?”
“வந்தாச்சு பாஸ்...”
“முதல்நாள் ஷூட்டிங்’ல கலக்கிடனும்...
எந்த இடத்துல ஷூட்டிங்?”
“இப்ராஹீம் பார்க்’ல.... இன்னும்
கொஞ்ச நேரத்துல ஷூட் ஆரமிச்சிடுவாங்க.... முடிஞ்சதும் பேசுறேன்...” அழைப்பை
துண்டித்த அபி, படப்பிடிப்பு இடத்திற்குள் ஐக்கியமானான்...
இதுவும் மினிமம் பட்ஜெட் படம் தான்...
ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேரும் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்... மலரும் காதல், மிரட்டும்
காதலியின் பெற்றோர், பதிவு திருமணம், நண்பர்கள் ஆதரவு, இறுதியில் பன்ச் வசனத்தோடு
படம் நிறைவாகிறது.... எங்கோ கேட்ட கதையா இருக்கா?... நூற்றாண்டு காணும் தென்இந்திய
சினிமாவில் அதிகமாக சொல்லப்பட்டது இந்த கதை தான்... கதையின் நாயகன் “கேலக்ஸி
ஸ்டார்” கிரீஷ், இயக்குனர் “தமிழகத்தின் அகிரா குரோசாவா” முல்லை நாயகன்....
[“முல்லை நாயகன் சார், உங்களுக்கு ஒரு
பட்டம் சூட்டிருக்கோம்”
“என்ன பட்டம்”
“தமிழகத்தின் அகிரா குரோசாவா”
“என்னது காராசேவா?”]
இன்னும் தனக்கென தனி கேரவன்
வைத்துக்கொள்ளும் அளவிற்கு பிரபலமாகவில்லை என்பதால், உதவியாளரால் பிடிக்கப்பட்ட
குடையின் கீழ் அமர்ந்து அலைபேசியில் அலட்டிக்கொண்டு இருக்கிறான் கேலக்ஸி
ஸ்டார்....
இயக்குனரை அலேக்காக தூக்கும் கிரேன்
கூட இல்லாத அளவுக்கான மினிமம் பட்ஜெட் படம்தான்... இன்னும் சூரியக்கதிர்களை தன்
பிடிக்குள் வைத்திருக்கும் மேகக்கூட்டங்கள் களைவதற்காக காத்திருக்கிறார்
ஒளிப்பதிவாளர்.... சைனிங் ஸ்டார் உதட்டு சாயத்தை ஒன்பதாவது முறையாக பூசிக்கொண்டு
இருக்கிறான்... முல்லை நாயகன் வழக்கமான இயக்குனருக்கே உரிய பரபரப்புடன்
காத்திருந்தார்...
“ஹீரோவும் அவர் ப்ரெண்ட்ஸ்’உம்
வராங்க.... ஜாலியா பேசிட்டு இருக்காங்க.... ஹீரோயின் க்ராஸ் ஆகுறப்போ ஹீரோயினை
ஹீரோவோட நண்பர்கள் செம்மையா கலாய்க்குறாங்க.... ஹீரோ மட்டும் அமைதியா நிக்குறார்,
அவர் கண்ணில் காதல் தீ பத்திக்குது.... இதான் இப்போ சீன்... அந்த ப்ரெண்ட்ஸ் ரெடி
தானே?” தன் உதவியாளரை சந்தேக பார்வையில் பார்க்க, வழிந்த வியர்வையை
துடைத்துக்கொண்டே “ரெடி சார்” என்றார் துணை இயக்குனர்....
ஒருவழியாக மேகங்களின் மெகா
ஆக்கிரமிப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, சோம்பல் முறித்து எட்டிப்பார்த்த
சூரியனை பார்த்ததும் ஒளிப்பதிவாளர், “ஓகே.... டேக் போய்டலாம்...” என்றார்...
சில்லிட்ட புல்தரையில், அழகு
செடிகளுக்கு மத்தியில் ஹீரோவை சுற்றி பதினைந்து பேர் நின்றனர்....
இயக்குனர் அதிர்ந்தார்... “யோவ்!...
என்னய்யா ஹீரோவா சுத்தி கிரவுடு?... கிளியர் பண்ணுங்க... டேக் போகணும்...”...
மெல்ல தயங்கியபடியே வந்த துணை
இயக்குனர், “அவங்கதான் சார் ஹீரோவுக்கு ப்ரெண்ட்ஸ்... மொத்தம் பதினஞ்சு பேர்...”
“யோவ்... ஹீரோ என்ன பொதுக்கூட்டமா
பேசப்போறார்?.... அவங்கள கிளியர் பண்ணிட்டு, நாலு நண்பர்களை மட்டும் நிக்க வை...”
“சார்.... அவங்கள்ள பாதி பேர், கே.எம்
சார் சிபாரிசு” மெல்ல காதருகே வந்து சொன்னான் துணை இயக்குனர்...
“என்ன எழவுடா இது!.... சரி டேக் போய்
தொலைங்க...”
ஹீரோவுக்கு வலது புறத்தில் அபி
உரசிக்கொண்டு நின்றான்.... முதல் படம், அதுவும் ஹீரோவுக்கு இவ்வளவு நெருக்கமான
நண்பனாக.... முதல் காட்சியிலேயே “ஆமா.... நல்லா இருக்கால்ல?” என்கிற மூன்று
வார்த்தை வசனம் வேறு அபிக்கு.... கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும், அதுக்கு
முன்னாடி கே.எம்.சாருக்கு தான் சொல்லணும்...
“காதல் கேன்சர்.... சீன் ஒன், டேக்
ஒன் ஆக்சன்” க்லாப் அடிக்க, ஹீரோ தட்டி தடுமாறி வசனத்தை பேசினார்....
“கட்... கட்... கட்...” இயக்குனர் இடை
நிறுத்தினார்.....
ஓடி வந்து இயக்குனரின் அருகில் நின்ற துணை
இயக்குனர், காரணத்தை கண்களால் கேட்க, “யாருய்யா அது ஹீரோவுக்கு ரைட் சைட்’ல?”
என்றார் இயக்குனர்...
“அவரு மாடல் சார்... கே.எம்.சார்
ஆளுதான்....”
“அவன் பக்கத்துல நிக்குறதால ஹீரோ டல்
அடிக்குறார்.... அந்தாள பின்னாடி நிக்க சொல்லிட்டு, சுமாரான ஆளுங்க யாரையாவது ஹீரோ
பக்கத்துல நிக்க வை...”
சில நிமிடங்களில் அடுத்த டேக்....
“காதல் கேன்சர்.... சீன் ஒன், டேக்
டூ... ஆக்சன்...”
அதே வசனம் ஹீரோ பேச, அபி பேசிய பதிலை (ஆமா,
நல்லா இருக்கால்ல?) வேறு ஒரு சுமார் ஆசாமி பேசிக்கொண்டு இருக்கிறான்.... கடைசி
வரிசையில் அபி, தன் முகத்தையாவது திரையில் காட்டிவிடலாமா? என்கிற ஏக்கத்தோடு
எட்டிப்பார்த்துக்கொண்டு இருக்கிறான்... அநேகமாக சில வினாடிகள் முகம்
தெரிந்திருக்கலாம், அதுவும் எடிட்டிங்கில் துண்டிக்கப்படாமல் இருந்தால் மட்டுமே
திரையில் முகம் தெரியும்...
ஒருவழியாக எட்டாவது டேக்கில்,
பதினைந்து வரி வசனத்தை ஓரளவு சரியாக ஹீரோ பேச, அடுத்த காட்சிக்கு
ஆயத்தமாகிக்கொண்டு இருக்கிறது யூனிட்.... அபி மட்டும் பூங்காவின் கல் இருக்கையில்
சாய்ந்தபடி, தன் விதியை நொந்துகொண்டு இருந்தான்....
அவன் அருகில் யாரோ வந்து
அமர்ந்ததையும், இரண்டு முறை அபியின் பெயர் சொல்லி அழைத்ததையும் கூட அவன் கவனிக்காத
அளவுக்கு நினைவுகள் கடல் கடந்து போய்விட்டது... ஒருவழியாக வந்த நபர், அபியின் தோளை
தொட, திடுக்கிட்டு விழித்தான் அபி... அருகில் அமர்ந்திருப்பவன் துணை இயக்குனர்....
செட்டில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தவன், நிச்சயம் அவன் சுறுசுறுப்பு
பார்ப்பவர்களை பல நேரங்களில் பொறாமை கொள்ள கூட வைக்கும்.... கூண்டில்
அடைபட்டிருக்கும் சிங்கத்துக்கு எறும்பின் சுதந்திரமும், சுறுசுறுப்பும்
ஆச்சரியமான ஒன்றாகத்தான் தெரியும்... அப்படி ஒருவன்தான் இவனும்...
“என்ன அபி இங்க உட்காந்துட்டிங்க?....
சாப்பிடலையா?”
பொய்யான சிரிப்புடன் அபி, “இல்லங்க...
பசி இல்ல...”
“பசி இருக்குதோ இல்லையோ, சாப்பாடு
கிடைக்குறப்போ சாப்பிட்டுடனும்... நமக்கு பசிக்குறப்போ நிச்சயம் சாப்பாடு
கிடைக்காது... நம்ம யூனிட்’ல சாப்பாடு ஒன்னுதான் நல்லா இருக்கும்... வாங்க
சாப்பிடலாம்...” கை பிடித்து உரிமையோடு அழைத்தான் துணை இயக்குனர்.....
அதுவும் அபிக்கு சரியாகத்தான்
பட்டது...
கையில் வைத்திருக்கும் பிளேட்டில்,
முந்திரி பருப்பும் நெய்யும் மிதமிஞ்சி வார்க்கப்பட்டு, அரை வட்ட வடிவத்தில்
தட்டில் வெண்பொங்கல் கவிழ்த்திருக்க, அதன் அருகில் சாம்பார் குளமாகி கமகமத்துக்கொண்டு
இருந்தது.... அதுவரை சாம்பாருடன் ஐக்கியமாகியிருந்த வெங்காயமும், தக்காளியும்,
தேர்தலில் வெற்றிபெற்ற பின்பு ஒதுக்கிவிடப்படும் உதிரி கட்சிகளை போல ஓரமாக
ஒதுக்கப்பட்டன.... நிஜமாகவே சுவையான
சாப்பாடுதான், ஒரு வாய் வைத்த பிறகுதான் அபிக்கு பசியே வந்தது....
சாப்பிட்டுக்கொண்டே பேசினர் இருவரும்...
“ஏன் ரொம்ப டல்லா இருக்கீங்க?” துணை
இயக்குனர் கேட்டார்....
“இல்ல... அப்டிலாம் ஒண்ணுமில்ல...”
“புரியுது.... ஹீரோ பக்கத்துல நிக்க
முடியலைன்னா?... இந்த படத்துல உங்க முகம் தெரியாம இருக்குறதே நல்லது.... மொக்க
படம் பாஸ், எப்டியும் பத்து நாள் கூட தாக்குப்பிடிக்காது... படத்தோட பேர்
பாத்திங்களா காதல் கேன்சராம்....” சிரித்தான் புதியவன்.... அபியின் முகத்திலும்,
சோகத்தை ஒதுக்கிவிட்டு மெல்லிய சிரிப்பு எட்டிப்பார்த்தது....
“நெஜமாதான் சொல்றேன்... இன்னிக்கு
இன்டஸ்ட்ரிய கலக்கிகிட்டு இருக்குற நிறைய ஹீரோக்கள், இப்டி முகம் தெரியாத முதல்
படத்துல நடிச்சவங்கதான்.... கண்டிப்பா இந்த படம் முடியுறதுக்குள்ள உங்களுக்கு நல்ல
வாய்ப்பு கிடைக்கும்.... ஆனால், ஒரே ஒரு விஷயம் மட்டும் நீங்க செய்யனும்...”
“என்ன?”
“இப்டி உம்முன்னு இருக்க கூடாது....
எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும்....” சொல்லிவிட்டு புதியவன் சிரித்தான்....
ரோஜா இதழ்களை விரிக்க, தேன் சொட்டுவதை
போல, அபி சிரித்தபடியே பேசிய வார்த்தைகளும் தேன் போல இனித்தன, “உங்க பேர் என்ன?”
“நான் அமானுஷ்யன்.... பேரை கேட்டதும்
அதிர்ச்சி ஆகிடாதிங்க.... சினிமாவுக்காக நான் வச்சுகிட்ட பேர்.... வித்தியாசமா
இருக்குல்ல, அதுக்குத்தான்... இது எனக்கு மூணாவது படம், துணை இயக்குனரா.... ஒரு
பெரிய இயக்குனரா ஆகணும், அதான் என் ஆசை....” அழகாக சிரித்தான் அமானுஷ்யன்....
ஏனோ இந்த சில நிமிட உரையாடல்,
அபிக்குள் ஆயிரம் வாட் உற்சாக மின்சாரத்தை பாய்ச்சியது.... அவ்வளவு கவலைகளையும்,
இருந்த இடம் தெரியாமல் தொலைத்தது..... கணக்கு பாடம் எழுதாமல்
விழித்துக்கொண்டிருந்த மாணவனுக்கு, மழையால் பள்ளி விடுமுறைனு சொன்னதும், அதுவரை
இருந்த அத்தனை பயமும் சோகமும் பறந்தோடி, பட்டாம்பூச்சியாக மகிழ்ச்சி சிறகடித்து
வருவது போல அபியின் மனதிலும் அந்த மகிழ்ச்சி பட்டாம்பூச்சி மென்மையாக
அமர்ந்தது.... தன்னை மறந்து இன்னும் சிரித்துக்கொண்டு இருக்கிறான்...
“அடுத்த சீன்’க்கு லேட் ஆச்சு...
அப்புறம் பாக்கலாம்...” சொல்லிவிட்டு அமானுஷ்யன் கிளம்பியது முதல், கண்களை விட்டு
மறையும்வரை கண் சிமிட்டாமல் அவனையே ஆச்சரிய பார்வை பார்த்துக்கொண்டு இருக்கிறான்
அபி....
முதல்நாள் படப்பிடிப்பு முடிந்தது...
நான்கு காட்சிகள் எடுத்தாகிவிட்டது.... அவ்வப்போது கூட்டத்தோடு சிரிப்பது,
நடப்பது, நிற்பது மட்டும்தான் அபிக்கு ஒதுக்கப்பட்ட நடிப்பு காட்சிகள்... வசனம்
பேச தெரியாத நாயகனால், ஒவ்வொரு காட்சியும் சராசரியாக பதினோரு முறை “ரீடேக்”
எடுக்கப்பட்டது.... களைப்பின் மிகுதியில், தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில்
வந்து படுக்கையில் விழுந்தான் அபி... ஏசி இல்லாத அறையில் உறங்கி நெடுநாள்
ஆகிவிட்டது... ஆனாலும், இந்த தனிமை அபிக்குள் மகிழ்வைத்தான் ஏற்படுத்தியது....
எவனோ ஒருவனின் சுகத்திற்காக ஏசி அறையில் நெருப்பில் படுப்பதற்கு பதிலாக, இப்படி
வெக்கை வீசும் அறையில் தனக்கான உறக்கத்தை நாடுவதில் அதிக இன்பம்தான்
அவனுக்குள்....
கண் அயர்ந்து, ஆழமான உறக்கத்திற்கு
சென்ற நடுநிசி நேரத்தில், அறையின் கதவு தட்டப்பட்டது.... முதல் “டக்... டக்...
டக்...” கனவில் கேட்பதை போல தோன்ற, இரண்டாவது “டக்... டக்... டக்”கில் கண்
விழித்தான்... அலைபேசியில் நேரம் பார்த்தான், பன்னிரண்டை நெருங்கிக்கொண்டு
இருக்கிறது...
“இந்த நேரத்தில் யார்?” என்ற
குழப்பத்தோடு, கதவை திறக்க, வாய் முழுக்க பல்லாக வாயிலில் நின்றான் அமானுஷ்யன்...
தன்னை நிதானப்படுத்திய பிறகு,
வந்திருக்கும் அமானுஷ்யனையும் கிரகித்த பிறகு உள்ளே சென்றனர் இருவரும்... வழக்கமான
ஞாபகத்தில் அபி, கதவை தாழிட்டான்...
“உங்க பேருக்கு ஏத்தமாறியே அமானுஷ்ய
நேரத்துல வந்திருக்கிங்க... என்ன விஷயம்?” சிரித்தபடியே கேட்டான் அபி....
“ஒண்ணுமில்ல... இப்போதான் அந்த
டைரக்டர் கதை பத்தி பேசிட்டு என்னைய விட்டான்.... உங்க ரூம் இதுன்னு சொன்னாங்க,
அதான் சும்மா பார்த்துட்டு போகலாம்னு....” இழுத்தான்...
“என்னைய சும்மாவல்லாம் இதுவரைக்கும்
யாரும் பாத்ததில்ல...” சிரித்தான் அபி...
எந்த அர்த்தத்தில் சொல்கிறான்? என்று
புரியவில்லை என்றாலும், புதிதாக அர்த்தத்தை உருவாக்க விரும்பாத அமானுஷ்யன், “என்ன
சொல்றீங்கன்னு புரியல!” என்றான்...
“சில நேரங்கள்ல சில விஷயங்கள் புரியாம
இருக்குறதுதான் நல்லது.... நேரம் வர்றப்போ நீங்களே புரிஞ்சுப்பீங்க...”
“புரியுது... உங்களைப்பத்தி யூனிட்’ல
அரசல் புரசலா பேசிக்கிட்டாங்க... ஆனால், நான் அதை நம்பல... உங்களுக்கும்
காத்தமுத்து சாருக்கும் ஏதோ..... அதனாலதான் அவர் சிபாரிசு செஞ்சதாவும் ஒரு....”
வாக்கியங்களுக்கு முற்றாக வார்த்தைகளை வைத்திடாமல், வாக்கியங்களையே எச்சமாய்
முடித்தான்...
“ஹ்ம்ம்... இதுல மறைக்க என்ன
இருக்கு?... அதான் உங்களுக்கு தெரிஞ்சிருக்கே.... ஆமா, நீங்க நினைக்குற
அதேதான்...” அபியின் கண்கள் தூக்கத்தை மறந்து, சோகத்தை தனதாக்கிக்கொண்டது....
அமானுஷ்யன், தான் ஏன் இந்த பேச்சை
தொடங்கினோம்? என்று நொந்துபோகும் அளவிற்கு அபியின் முகமாற்றம் அப்பட்டமாக சோகத்தை
வெளிக்காட்டியது...
“உங்களுக்கு ஒன்னு தெரியுமா?... இந்த
யூனிட்’ல நடிக்குற பாதிக்கு மேல ஆளுக காத்தமுத்து சிபாரிசு தான்.... நம்ம ஹீரோ கூட
அப்டிதான்... சிலருக்கு பணம், சிலருக்கு அரசியல் செல்வாக்கு, சிலருக்கு பொருள்...
உங்களுக்கு....” இழுத்து நிறுத்தினான் அமானுஷ்யன்.... அந்த “உங்களுக்கு” சொல்லி
இருக்க தேவை இல்லைதான்....
ஆனால், அபி அதை கண்டுகொள்ளாமல்,
“அதனாலதான் அந்த ஹீரோவுக்கு நாலு வரி வசனம் கூட பேச வரலையா?... ‘உன்ன பாக்காத
வரைக்கும் காதல்ன்றது பாலைவனம்னு நினச்சேன், பார்த்த மறு நொடியே காதல் ஒரு
சோலைவனம்னு புரிஞ்சுகிட்டேன்’ இந்த வசனத்தை பேச மட்டும் அந்த ஹீரோ பதினாறு டேக்
வாங்குனார்.... சும்மா வேடிக்கை பார்த்ததுக்கே நான் டயர்ட் ஆகிட்டேன்...”
சிரித்தான் அபி....
அமானுஷ்யனும் தன்னை மறந்து
சிரித்தபடியே, “ஒருவேளை அந்த ஹீரோயினை பாக்குறப்போ நம்ம ஹீரோவுக்கு காதல் வரலையோ
என்னவோ....” சொல்லிவிட்டு, சில நொடிகள் இடைவெளிக்கு பிறகு அமானுஷ்யனே தொடர்ந்தான்,
“உங்களுக்கு கண்டதும் காதல் மேலயல்லாம் நம்பிக்கை இருக்கா?”....
அபிக்கு இந்த கேள்வி யுவராஜை
நியாபகப்படுத்தியது... ஒரு நொடியில் அந்த ஏமாற்றம், வலி எல்லாம் தன் நெஞ்சத்தில்
பாய்ந்ததாய் உணர்ந்தான்... தன்னை நிலைப்படுத்திக்கொண்ட பிறகு, “இல்ல அமானுஷ்யன்...
எனக்கு கண்டதும் காதல்ல சுத்தமா நம்பிக்கை இல்ல.... அனுபவத்தாலையும்
உணர்ந்திருக்கிறேன்... குறைஞ்சது ஒரு மாசமாவது பழகின பிறகு வர்ற காதல்தான், அந்த
காதலுக்குரிய அர்த்தத்தை கொண்டு இருக்குறதா நான் நினைக்கிறேன்...” என்றான்...
இருவரும் நெடுநேரம் பேசிக்கொண்டே
இருந்தனர்.... கண்களின் இமைகள் உறக்கத்தை எதிர்நோக்கி அப்பாவியாக காத்திருக்க,
தன்னை மீறி வந்த கொட்டாவியை தனக்குள்ளே பல முறை அடக்கிக்கொண்ட அபியின் நிலையை
புரிந்துகொண்ட அமானுஷ்யன் சில மணி நேர உரையாடலுக்கு பிறகு, விடைகொடுத்து தன்
அறைக்கு சென்றான்....
மறுநாள் வழக்கம் போல படப்பிடிப்பு
பரபரப்பாய் இயங்கிக்கொண்டு இருக்கிறது... இன்று தில்லை நகரில் ஒரு பாடல்
படப்பிடிப்பு.... வழக்கமாக மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு இடத்தில் ஷூட்டிங்
என்று முடிவு எடுத்தாலும் , கேமரா சகிதம் யூனிட் ஆட்கள் கூடுவதற்கு முன்பே,
ஜனத்திரள் சூழத்தொடங்கிவிட்டது.... வழக்கத்திற்கு மாறான கூட்டம் தான்.... ஹீரோவும்,
அவன் நண்பர்கள் நால்வரும் மட்டும் ஆடும் பாடல் அங்கு காட்சியாக்கப்பட இருக்கிறது....
அமானுஷ்யனின் தீவிர கேட்டலுக்கு பிறகு, அந்த நால்வரில் ஒருவனாக அபி நிற்கிறான்....
“மாஸ்டர், ஹீரோயின் வீட்டுக்கு எதிர்ல
ஹீரோவும் அவன் நண்பர்களும் ஜாலியா பாடி ஆடுற பாட்டு... டான்ஸ் ரொம்ப இயல்பா
இருக்கணும்... கோ டான்சர்ஸ் கூட கிடையாது, ஹீரோவும் அந்த நண்பர்களும்
மட்டும்தான்...” இயக்குனர் காட்சியை பற்றி நடன இயக்குனரிடம் கூற, வழிந்த வியர்வையை
கைக்குட்டையால் துடைத்துக்கொண்டே தலையை மட்டும் அசைத்தவாறே அதை
ஆமோதித்துகொண்டிருந்தார்....
படப்பிடிப்பு தொடங்கும்வரை அபியை
வைத்த கண் விலகாமல் கண்களால் அளவெடுத்துக்கொண்டிருந்தார் நடனம்...
“ஓகே... டேக் போகலாம்....” கை தட்டி
உற்சாகமானார் நடனம்...
“நீ பாக்குற பார்வையில நான்
பதறித்தான் போனேன்...
இந்த காதலு வந்ததாலே நான் முட்டாளா
ஆனேன்....” கவிஞர் களப்பிரரின் வரிகள் பின்னணியில் ஒலிக்க, நடன இயக்குனர்
சொல்லிக்கொடுத்த “1… 2…. 3…. 4…, 4…3….2….1”
ஆடிக்கொண்டிருந்தனர் ஐவரும்....
இடையில் நிறுத்திய நடன இயக்குனர்,
“அந்த மூணாவது பையன் ஆடுறது சிங்க் ஆகல...” சொன்னவாறே அபியின் அருகாமையில் சென்று,
“இடுப்பை இப்டி வளச்சு ஆடனும்” என்று இடுப்பை பிடித்த நடனத்தின் கைகள், செயற்கையாக
வழுக்கியபடியே தொடையை நோக்கி நகர்ந்தது....
“ஹ்ம்ம்... இப்டி வளச்சு ஆடனும்”
சொல்லிக்கொண்டே நடன இயக்குனரின் கைகள் நகரும் இடங்கள் அபியை குறுக வைத்தது....
சட்டென அவரின் கைகளை உதறிவிட்ட அபி,
“பரவால்ல சார், வேற யாரையாச்சும் டான்ஸ் ஆட சொல்லுங்க... எனக்கு ஆடத்தெரியாது”
விலகி நின்றான்...
“என்னமோ ராமன் மாதிரி பேசுற?... பணம்
கொடுக்குறவன் கிட்ட மட்டும் படுக்குறப்போ இனிச்சுச்சோ?” அபியின் காதருகே
யாருக்கும் கேட்டிடாதபடி கிசுகிசுப்பாய் கூறினான் நடனம்...
சில நிமிடங்களில், அபியின் இடத்தை
இன்னொரு புதியவன் நிரப்ப, நடன காட்சி படமாக்கப்பட்டுக்கொண்டு இருந்தது....
“நான் ராமன் இல்லை தான்... பலபேர்
கிட்ட படுத்தவன் தான்... அதுக்காக மானம் இருக்க கூடாதுன்னு எதுவும் இருக்கா?...
ஆயிரம் பேர் சுத்தி நிக்கும்போது, ஒருத்தன் அத்துமீறி தொடுறதை கூட வேடிக்கை
பார்த்துட்டு நிக்கனுமா என்ன?...” மனதிற்குள் புழுங்கியபடியே நகத்தை
கடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறான் அபி....
இடைவேளையில் அபியின் அருகில் வந்து
அமர்ந்தான் அமானுஷ்யன்....
“என்ன அபி, இதுக்கல்லாம் டென்ஷன்
ஆகுற?... சாரி, ஒரு விதத்துல நானும் உன் டென்ஷனுக்கு காரணம் ஆகிட்டேன்...
இந்தாளுதான் டான்ஸ் மாஸ்டர்’னு தெரிஞ்ச பிறகும், உன்ன நான் ஆடுறதுக்கு போக
சொல்லிருக்க கூடாது...”
அபிக்கு அந்த நிகழ்வை
நினைக்கும்போதெல்லாம் எரிச்சல் மிகையானது....
“அது என்னப்பா, ராமனா இருந்தா
மட்டும்தான் இவனுக செயலை மறுக்கனுமா?... ராமனை தவிர எல்லார் கூடவும் படுக்கத்தான்
நினைப்பானுகளா இவனுக?” வார்த்தைகளில் கோபம் வெடித்தது... அமானுஷ்யன் சூழலை
உணர்ந்து, பேச்சை திசை திருப்பினான்....
அபியின் அறைக்கதவு தட்டப்பட்டது...
அமானுஷ்யனின் பொறுமை இல்லாத தட்டுதான் அது... உயிர் போற காரியம் போல கதவை
தட்டுவான், திறந்து கேட்டால் “ஹேர் கட் பண்ண போறேன், வரியா?” என்பான்...
படப்பிடிப்பு தொடங்கி இன்றோடு பதினெட்டு நாள் ஆனதில் அபிக்கு அமானுஷ்யனை எளிதாக
யூகிக்க முடிகிறது....
ஆனால், இன்று அவன் சொல்லப்போவது
கொஞ்சம் முக்கியமான, அதே நேரத்தில் சந்தோஷமான செய்தியும் கூட....
“என்ன அமானுஷ்யன்?...
ஷூட்டிங்’க்குதான் இன்னும் நேரம் இருக்கே, அதுக்குள்ள என்ன அவசரம்?” கண்களில்
ஒளிர்ந்த தூக்கக்கலக்கத்தை மறைக்க விரும்பாமல் கேட்டான் அபி...
“அவசரம் தான்... ஆனால், இன்னிக்கு
ஷூட்டிங் இல்ல... நாம வேற இடத்துக்கு போறோம்”
“ஏன் ஷூட்டிங் இல்ல?”
“உனக்கு ஷூட்டிங் ஏன் இல்லனு
தெரிஞ்சுக்கனுமா? இல்லன்னா நாம எங்க போறோம்’னு தெரிஞ்சுக்கனுமா?”
“ஏன் நாம ஷூட்டிங் இல்லாம எங்க
போறோம்?” கேள்விக்குள் கேள்வியை போட்டாலும், வாக்கியம் முழுமையான அர்த்தம்
கொடுக்கவில்லை.... ஆனாலும், அதை பார்த்து சிரித்தான் அமானுஷ்யன்...
“சரி, சொல்றேன்... நூற்றாண்டு விழா
சென்னை’ல நடக்குறதால ஷூட்டிங் கேன்சல் பண்ண சொல்லி இருக்காங்க... இப்போ நாம
போகப்போறது தஞ்சாவூர்’க்கு... சில சீன்ஸ் தஞ்சாவூர்’ல வர்றதால அங்க ஸ்பாட்
பாக்குறதுக்கு என்னைய போக சொல்லிருக்கார் டைரக்டர்...” முகத்தில் நிரம்பி ததும்பிய
மகிழ்ச்சி மாறாமல் கூறி முடித்தான் அமானுஷ்யன்...
“நீ ஸ்பாட் பாக்க போற, நான் வந்து
என்ன பண்றதாம்?”
“ஹ்ம்ம்... தஞ்சாவூர்’ல லட்சக்கணக்கான
ஏக்கர் நிலம் இருக்காம், அதுல வந்து விவசாயம் பாரு”
“ஏய்!... என்ன கிண்டலா?”
“பின்ன என்ன இது கேள்வி?... ஜாலியா
சுத்தி பாக்கலாம்னு கூப்பிட்டா, நீ ஆயிரத்தெட்டு கேள்வி கேக்குற.... இன்னும் அஞ்சு
நிமிஷத்துல கிளம்பி நிக்குற, நாம கிளம்பறோம்” சொல்லிவிட்டு அபியின் பதிலை எதிர்பார்க்காமல்
தன் அறையை நோக்கி நகர்ந்தான் அமானுஷ்யன்...
தனக்குள்ளேயே சிரித்தவாறு கதவை
சாத்திவிட்டு கிளம்ப ஆயத்தமானான் அபி....
பைபாஸ் சாலையில் சீறிப்பாய்ந்த அந்த
மகிழுந்திற்குள் அமர்ந்திருந்த அபியையும், அமானுஷ்யனையும் தஞ்சாவூர் மாவட்டம்
அன்புடன் வரவேற்றது....
தஞ்சை அருகே ஒரு கிராமத்தில்
படப்பிடிப்பிற்கான இடம் தேர்வு செய்ய வேண்டும்.... அதுவும் நெல் பயிர்கள்
ஜோடித்திருக்கும் அந்த கிராமங்களில் சோளக்காடு தேடவேண்டுமாம்....
“அதென்னவோ நம்ம டைரக்டர் சோளக்காட்டுல
வச்சுதான் ரேப் பண்ணனும்னு தீர்மானமா இருக்காரு” வாகனத்தை ஒதுக்கி ஓரமாக
நிறுத்தும்போது இப்படி கூறினான் அமானுஷ்யன்....
“என்ன சொல்ற நீ?... என்னிக்காவது
புரியுற மாதிரி பேசிருக்கியா?.... எப்பவும் தெலுங்கு படம் டப்பிங் வசனம் மாதிரி,
குழப்பமாத்தான் பேசுவியா?” மெல்லிய எரிச்சல் எட்டிப்பார்த்தபடி கூறினான் அபி....
“சரி சரி, கோபத்துல கடிச்சிடாத....
நம்ம ஹீரோவோட தங்கச்சியை வில்லன் ரேப் பண்ணணுமாம்.... அதுக்கு சோளக்காடுதான்
வேணுமாம்.... மாந்தோட்டம், தென்னந்தோப்பு மாதிரி இடங்கள்ல ரேப் பண்ணா அந்த
அளவுக்கு எபக்ட் இருக்காதாம்... இந்த விவசாய நேரத்துல தஞ்சாவூர் பகுதில நான் எங்க
போய் சோளக்காடு தேடுறதாம்..” தன்னை நொந்தவாறே வாகனத்தை விட்டு இறங்கி அக்கம்
பக்கத்தில் விசாரித்தான்....
வயல்வெளிகளில் விவசாய பெருமக்கள்
சிதறிய சேற்றை பொருட்படுத்தாமல், நெற்பயிருக்கு நடுவில் பாகிஸ்தான் தீவிரவாதி போல
ஊடுருவிய களைகளை எடுத்துக்கொண்டு கருமத்தில் கண்ணாக இருந்தனர்.... ஒரு நாளினது
பாதி பொழுதை குனிந்தே களைபறிக்கும் இந்த கிராமத்து பெண்களுக்கு மட்டும் அறுபது
வயது வரை முதுகு வலியோ, மூட்டு வலியோ எட்டிப்பார்ப்பதில்லை என்பது அபிக்கு
ஆச்சரியமாகத்தான் இருந்தது....
ஒருவழியாக மதியத்தை தொட்ட நேரத்தில்,
மூன்று ஏக்கரில் பயிரிடப்பட்ட சோளம் காற்றில் அசைந்தபடியே அமானுஷ்யனை அழைத்தது...
நிலத்தின் உரிமையார், அந்த ஊரின்
ஊராட்சி மன்ற தலைவர் எல்லாரிடமும் படப்பிடிப்பிற்கான அனுமதியை வாங்கிவிட்டு, அந்த
சோளக்காட்டினுள் நுழையும்போது சூரியன் செங்கதிர்களை கக்கிக்கொண்டிருந்த அந்திவேளை
ஆகிவிட்டது....
சோளக்கதிர் எட்டிப்பார்க்கும் பருவம்,
சில மீட்டர் தூரம் வரை அந்த பச்சை வாசம் நாசிகளை நிறைத்தது... மரமெல்லாம் சாமரமாக
மாறி தென்றல் காற்றை தெவிட்டாத அளவில் வீசி அந்த மாலைப்பொழுதின் சூழலை இன்னும்
அதிக ரம்மியமாக்கியது...
அந்த காற்றை ரசித்தவனாய், வாசத்தை
நுகர்ந்தவனாய், மூச்சை பலமாக இழுத்து வெளிவிட்டான் அமானுஷ்யன்... “டைரக்டர்
சொன்னது சரிதான் போல அபி”....
“என்ன சரி?”
“இந்த இடத்துக்கு சாதாரணமா வந்தாலே
மூடு வேற மாதிரி ஆகிடுது.... ரேப் பண்றதுக்குன்னே உருவாக்கப்பட்ட இடம் மாதிரி
தோணுது... ஹ ஹ ஹா” அழகாக சிரித்தான் அமானுஷ்யன்...
“டைரக்டர் சொன்ன இன்னொரு விஷயமும்
சரின்னு எனக்கு தோணுது”
“அது என்ன அபி?”
“உன்ன அடிக்கடி ‘முட்டாள்!’,
‘முட்டாள்’னு சொல்வாரே, அதைத்தான் சொல்றேன்... ஹ ஹ ஹா...” அபி பொய்யாகத்தான்
சிரித்தான்.... அமானுஷ்யன் முகத்தில் அரைகிலோ அசடு ததும்பி வழிந்தது....
சுற்றிலும் இப்படி பலவாறும்
பேசிக்கொண்டே நடந்தனர் இருவரும்....
“உன்னோட கனவுதான் என்னப்பா?” அபிதான்
கேட்டான்....
“கனவுன்னா அது நெறைய உண்டு....
விகடன்’ல என்னோட பேட்டி வரணும், விஜய் டிவி’ல ஏதோ ஒரு முக்கியமான பண்டிகை நாள்’ல
‘அமானுஷ்யனுடன் அரைமணி நேரம்’னு ஒரு நிகழ்ச்சி வரணும், ஒரு சிறப்பான விருதை கைல
வச்சுகிட்டு ‘எல்லா புகழும் தமிழுக்கே!’னு சொல்லணும்.... அந்த அளவுக்கு நான்
வளர்ந்தால் போதும்....” தன் ஆசைகளை சொல்லும்போது அமானுஷ்யனின் கண்களில் மகிழ்ச்சி
ஒளி ஒளிர்ந்தது....
“ஹ்ம்ம்.... நல்ல ரசனையான
ஆசைதான்....” மெல்ல சிரித்தபடி கூறினான் அபி....
“இது என் ரொம்பநாள் கனவு அபி.... அந்த
பேட்டியை பலமுறை எனக்கு நானே கண்ணாடில ரிகர்சல் பார்த்தது மட்டும் நூறு தடவைக்கு
மேல இருக்கும்...”
“அதுலயும் இவ்வளவு ரீடேக்
வாங்கிருக்கியா?” சிரித்தான் அபி....
அபியின் கையை வலிக்காமல் அமானுஷ்யன்
கிள்ள, அது வலி மிகுந்ததை போல அபி ‘ஆஹ்!’ சொல்லி கத்தி சிரித்தபடியே இன்னும்
தொடர்ந்து நடந்தனர் இருவரும்....
“உன் கனவு என்ன அபி?”
“ஹ்ம்ம்....(யோசித்தான்)....
அப்டிலாம் ஒன்னும் பெருசா இல்ல... பகல்ல வேலை பார்த்து, நைட் தூங்குற மாதிரி ஒரு
சாமான்யமான வேலைல எப்பவும் இருந்தா போதும், இப்போ இருக்குற மாதிரி....
காமப்பார்வையும், ஏளனப்பார்வையும் இல்லாமல் எல்லாரையும் பார்க்குற மாதிரி ஒரு
இயல்பான பார்வைல எல்லாரும் என்னைய பார்க்கணும்.... அவ்ளோதான்...” இயல்பாக
கூறியபடியே அபி நடந்துகொண்டு இருந்தாலும், அமானுஷ்யனின் நடை சில நொடிகள் தடைபெற்று
தொடர்ந்தது....
“சாரி அபி....”
“எதுக்கு சாரி?”
“தெரியல... சொல்லனும்னு தோனுச்சு,
சொன்னேன்.... இப்போ உன்ன கஷ்டப்படுத்துற மாதிரி கேள்வி கேட்டதுக்கு கூட இந்த
சாரியை வச்சுக்கலாம்...”
“ஓஹோ... பிளான்க் செக் மாதிரி, இது
பிளான்க் தாங்க்ஸ்’ஆஹ்?” சிரித்தான் அபி....
மேலும் அவனே தொடர்ந்தபடி, “இப்போ நான்
சந்தோஷமாத்தான் இருக்கேன் அமானுஷ்யன்... முன்னல்லாம் பணம், சொகுசான வாழ்க்கைதான்
நிம்மதின்னு நினச்சேன்.... நான், பாஸ்கர், ஒரு பெயர் தெரியாத கஸ்டமர்... இதுதான்
வாழ்க்கையா இருந்துச்சு.... இப்போதான் எனக்கு வாழ்க்கைனா என்னன்னே புரியுது....
நிம்மதியான இரவுகள் இப்போதான் எனக்கு கிடைச்சிருக்கு.... அதுக்கு ஒருவகைல நீயும்
காரணம்...” அமானுஷ்யனை நோக்கி பார்த்தபடி கூறினான் அபி...
“நானா?... என்ன சொல்ற?”
“ஆமா.... ஷூட்டிங் முதல் நாள் நான்
ரொம்ப வருத்தத்துல இருந்தேன்.... மறுபடியும் சென்னை போயிடலாம்னு தோனுச்சு.... நீ
வந்து பேசி குழப்பாம இருந்திருந்தா, என்னோட இன்னைக்கான இரவும் விற்பனை
செய்யப்பட்டிருக்கும்...” ஏனோ இதை சொல்லும்போது அமானுஷ்யனின் கையை அபி அனிச்சையாக
பிடித்தான்... அந்த பிடிப்பில் கொஞ்சமும் வேறு எண்ணங்கள் கலக்கவில்லை...
அந்தி சாய்ந்து, நிலவு தன் ஆதிக்கத்தை
நிலை நிறுத்தும் பொழுதாகவே, இருவரும் அப்போதுதான் காலத்தை உணர்ந்தனர்....
மகிழுந்து திருச்சியை நோக்கி
திரும்பிக்கொண்டு இருந்தது.... வரும்போது இருந்த கலகலப்பான பேச்சு இப்போது
நிசப்தமாக மாறியது.... அதிகம் பேசிக்கொள்ளவில்லை இருவரும், பேசுவதற்கான தேவையும்
இருவருக்கும் அப்போது இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.... பகல் முழுதும் மேய்ந்த
உணவை, இரவில் அசைபோடும் மாடுகளை போல, இருவரும் பகலின் நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டு
பயணமாகினர்.... பகலில் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும், அந்த அசைபோடுதலில் ஆயிரம்
அர்த்தங்களை கற்பனை செய்துகொண்டனர்.....
அந்த நிசப்தம் களைவது போல அபியின்
அலைபேசி அழைத்தது “மூங்கில் தோட்டம்... மூலிகை வாசம்....”
அடுத்த வார்த்தையை அமானுஷ்யன்
தொடர்ந்தான், “நெறஞ்ச மௌனம், நீ பாடும் பாட்டு....” இசை நுணுக்கங்கள் மாறாமல்
பாடினான்...
மேலும் தொடர்ந்தபடி, “யார் அபி போன்?”
“கே.எம்.... காத்தமுத்து” அபியின்
பேச்சில் உயிர் இல்லை....
அந்த பெயர் அமானுஷ்யனின் முகத்திலும்
பல மாற்றங்களை உண்டாக்கியது... இரண்டு முறை தானாகவே பாடி நின்ற அழைப்பை, மூன்றாவது
முறையாக எடுத்தான் அபி....
“ஹலோ அபி.... எங்க இருக்க?”
“திருச்சி வந்துட்டு இருக்கேன்...”
“என்ன ஒரு மாதிரி பேசுற?”
“இல்ல... கொஞ்சம் உடம்பு சரி இல்ல
சார்...”
“ஓகே... திருச்சில ஹோட்டல்
சஞ்சய்’க்கு போ... சினிமா டிஸ்ட்ரிபியூட்டர் பழசை ரவி அங்க இருக்கார்....”
“எதுக்கு சார் நான் அவரை
பார்க்கணும்?”
“இது என்ன கேள்வி?... அவரை கொஞ்சம்
அனுசரிச்சா, அவர் எடுக்குற அடுத்த மெகாபட்ஜட் படம் ஒன்னுக்கு நீதான் ஹீரோ.... உன்
போட்டோ பார்த்தார், பிடிச்சதால உன்ன பாக்கனும்னு வர சொன்னார்.... உன் நல்லதுக்குத்தான்
அபி....”
“....” அபி சில நொடிகள் பேசவில்லை...
யோசித்தான்... என்ன யோசிக்கிறான்? என்பது அவனுக்கே புரியவில்லை.... அவனை அறியாமல்
எரிச்சலும் கோபமும் அவன்மீதே வந்தது....
“என்ன அபி?... பேசு....”
“இல்ல சார்... வேணாம்...”
“என்ன வேணாம்?... அதிர்ஷ்ட தேவதை
திருச்சில டென்ட் அடிச்சு உக்காந்திருக்கா, மிஸ் பண்ணிடாத...” போலியாக சிரித்தார்
காத்தமுத்து....
“பரவால்ல சார்... எந்த விஷயமானாலும்
என் திறமையை பார்த்து வரட்டும்....படுத்து படுத்தே என் உடம்பல்லாம் மரத்து போச்சு
சார்... இனி நான் அந்த அசிங்கத்த செய்ய போறதில்ல.... நானும் மனுஷன் தான் சார்,
எனக்கு மனசுன்னும் ஒன்னு இருக்கு.... இன்னும் எத்தனை நாளைக்கு அடுத்தவனோட வெள்ளை
திரவம் வெளில வர்றதை பத்தியே யோசிச்சுட்டு இருக்கிறது.... நீங்க எனக்கு இதுவரைக்கும்
நல்லதுதான் பண்ணிருக்கிங்க.... அதுக்காக ரொம்ப நன்றி....” காத்தமுத்துவின் பதில்
வரும் முன்பே அழைப்பை துண்டித்தான் அபி....
அவ்வப்போது எதிர்புற வாகனங்களால்
உண்டான சிலநொடி வெளிச்சத்தில் அபியின் முகத்தில் ததும்பிய கண்ணீரை அமானுஷ்யன்
கவனித்தான்.... ஆறுதல் கூற விரும்பவில்லை, அது அனாவசியம் என்பதையும் அவன்
அறிவான்.... மெல்ல அபியின் கையை பிடித்தான், அதை வேகமாக அழுத்தினான்... அந்த
அழுத்தத்தில் “நான் உனக்கு இருக்கேன்” என்ற வார்த்தை சொல்லாமல் வெளிப்பட்டது.....
தஞ்சை பயணம் ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு
உறவின் அர்த்தத்தை இருவருக்குள்ளும் வெளிப்படுத்தியது.... அடுத்தடுத்த நாட்களின் படப்பிடிப்பும்
அந்த உறவின் உள்ளார்ந்த அர்த்தத்தை அப்பட்டமாக வெளிக்காட்டியது... இப்போதல்லாம்
இருவரும் அதிகம் பேசிக்கொண்டதில்லை, பேசிக்கொள்ளவேண்டிய அவசியமும் ஏற்படவில்லை...
முழுமையான புரிதல் உண்டானால், ஆயிரம் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத விஷயத்தை
கூட ஒரு சிரிப்பு வெளிப்படுத்திவிடும்... நத்தையாய் நகர்ந்த நாட்கள் கூட இப்போது
அரேபிய குதிரைகளாய் ஓட்டமெடுத்தன...
***********************************
அபி அப்போதுதான் எழுதிருக்கிறான்...
நேரம் ஏழரை என கடிகாரம் காட்டியது, அறையின் வெளிச்சம் இன்னும் விடியவில்லை போல
இருட்டிக்கிடக்கிறது... மழை வரலாம், லேசான இடி சத்தம் கூட கேட்கிறது...
படப்பிடிப்பு கூட இந்த மழையால்தான் இன்று ரத்தானது, ஏழரைக்கு எழுவது கூட
அவசியமற்றது என்று அபிக்கு தோன்றியது, ஆனாலும் தூக்கம் வராமல் பகலில் படுப்பது
அதைவிட அதிகமான அவசியமற்ற செயலாய் அவனுக்கு பட்டது....
“டும்... டம்... டும்...” இடியா?....
இல்லை, கதவைத்தான் இவ்வளவு வேகமாக யாரோ தட்டுகிறார்கள்... அமானுஷ்யனாக இருக்கலாம்,
ஆனால் வழக்கத்தைவிட வேகமாக தட்டுகிறான்....
கதவை திறக்க, பரபரப்பாக வெளியே நின்றான் அமானுஷ்யன்...
இன்றைக்கு வித்யாசமாக இருக்கிறான்... இந்த நேரத்திலேயே குளித்து முடித்து,
முகத்தில் பவுடர் பூத்திருக்க, புத்தாடை அணிந்து, முகமெல்லாம் பல்லாக நிற்பவனை
பார்த்ததும் அபிக்கு ஆச்சரியம் கலந்த ஆவல்....
“ஏய்!... என்ன இன்னிக்கு பயங்கரமா
இருக்க?... உனக்கு பிறந்தநாள் எதுவுமா?” ஆச்சரியம் விலகாத கண்களுடன் கேட்டான்
அபி...
“ஹ்ம்ம்.. அப்டியும் வச்சுக்கலாம்,
புதிதாக பிறந்தநாள்’னு வச்சுக்கவே...”
பேசிக்கொண்டே இருவரும் அறைக்குள்
வந்து அமர்ந்தனர்....
“என்ன சொல்ற?... தெளிவா சொல்லு”
“சொல்றேன்... சொல்றதுக்குதான்
வந்தேன்... ஆனால், இன்னும் அதுக்கு அரை மணி நேரம் நீ வெயிட் பண்ணனும்... எட்டு
மணிக்குத்தான் சொல்வேன்...” கை கடிகாரம், அறையின் சுவர் கடிகாரம், அலைபேசி என்று
மூன்றிலும் மாற்றி மாற்றி நேரத்தை சரிபார்த்துக்கொண்டான்.....
“அது என்ன எட்டு மணி கணக்கு?....
அதுவரைக்கும் ராகுகாலமா?”
“தெரியல... ஆனால், விஷயத்தை சொல்லி
முடிச்சப்புறம்தான் எனக்கு இன்னிக்கு நல்ல நேரமா? எம கண்டமா?னு தெரியும்...”
முகத்தில் இப்போது அதிக பதற்றம் எட்டிப்பார்த்தது....
“ஐயோ சாமி.... எனக்கு சஸ்பென்ஸ்
தாங்கல... என்ன விஷயம்னுதான் சொல்லேன்!”
“ஊஹூம்.... நோ வே.... ஒருதடவை நான்
முடிவெடுத்துட்டா, அது மொக்கை விஷயமா இருந்தாலும் நான் மாத்திக்க மாட்டேன்...
உனக்காக வேணும்னா எட்டு மணி வரைக்கும் பாட்டு பாடவா?” சொல்லிக்கொண்டே, அருகில்
இருந்த குவளையின் நீரை எடுத்து தண்ணீரை வாய்க்குள் கவிழ்த்துவிட்டு, தொண்டையை
சரிசெய்தவாறு, “ஒரு வார்த்த பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்....” பாடத்தொடங்கினான்
அமானுஷ்யன்....
“போதும்பா... நீ பாடியே டென்ஷனை
இன்னும் அதிகமாக்குற.... இன்னும் அஞ்சு நிமிஷம் தான் பாக்கி, நான் வெயிட் பண்ணி
விஷயத்தை தெரிஞ்சுக்கறேன்”....
நொடி முற்கள் ஒவ்வொரு முறை
நகரும்போதும், அமானுஷ்யனின் மனதிற்குள் இடி போல இடித்தன... வெளியில்
சிரித்துக்கொண்டாலும், உள்ளுக்குள் புரையோடி கிடந்த பதட்டத்தை அவ்வப்போது தண்ணீர்
குடித்து தணித்துக்கொள்ள முயற்சித்தான்....
அபி, முகம் கழுவி, பல் துலக்கி
மீண்டும் அமானுஷ்யன் அருகில் அமரும்போது நேரம் சரியாக 7.59ஆனது....
“என்ன விஷயம்பா... மணி எட்டா...” வார்த்தையை அபி சொல்லி முடிப்பதற்குள், அபியின்
கையை பிடித்த அமானுஷ்யன் கையில் ஒரு சிவப்பு ரோஜாவை திணித்து “ஐ லவ் யூ அபி” என்று
அபியின் கண்களை பார்த்து சொன்னான்....
அபி சில நொடிகள் ஸ்தம்பித்து
நின்றான்.... அமானுஷ்யனின் கண்களில் சிறிதும் பொய்மை இல்லை, உதட்டில் வழிந்த
வார்த்தைகளில் காதல் அப்பட்டமாக வெளிப்பட்டது.... ஆனாலும், அபியின் தயக்கம்
அவனுக்கே ஏன்? என்று புரியவில்லை...
அந்த மௌனத்தை பார்த்த அமானுஷ்யன்,
“உன்ன கட்டாயப்படுத்தல அபி... என் மனசுல இருக்குறத நான் சொன்னேன், அவ்ளோதான்...
உன்ன பார்த்த முதல் நாளே உன் மேல எனக்கு காதல் வந்திடுச்சு... அப்போவே
சொல்லிருப்பேன், ஆனால் கண்டதும் காதல்ல உனக்கு நம்பிக்கை இல்லன்னு நீ சொன்ன, ஒரு
மாசம் பழகினாத்தான் காதலுக்கு அர்த்தம் இருக்கும்னும் சொன்ன.... உன்ன முதல்ல நான்
பார்த்தது செப்டம்பர் 29ம்
தேதி காலை எட்டு மணி, இன்னிக்கு அக்டோபர் 29ம் தேதி... இப்போ மணி எட்டு,
சரியா ஒரு மாசம் ஆகிடுச்சு... இந்த ஒரு மாசமும் நாம ரெண்டு பேரும் ஒருத்தரை
ஒருத்தர் நல்லா புரிஞ்சுகிட்டோம்... அந்த புரிதல் நிச்சயம் காதலாகுறதுக்கான அத்தனை
தகுதியையும் கொண்டதுன்னு நான் நம்புறேன்...
நம்ம ரெண்டு பேரோட பழைய வாழ்க்கையை
இத்தோட நாம மறந்திடலாம், இனி நமக்கான புதிய வாழ்க்கைய வாழலாம்... இப்போலாம் என்
கனவுகள்ல நீயும் வர்ற... விகடன் பேட்டி’ல என் தோள் மேல கை போட்டு நீ போஸ்
கொடுக்குற, விஜய் டிவி நிகழ்ச்சில நீயும் என் பக்கத்துல உக்காந்திருக்க.... என்
கனவுகள்’ல கூட நீ நிறைஞ்சுட்ட அபி”
அபியின் மனதிற்குள் எழுந்த அத்தனை
கேள்விகளையும் அவ்வளவு எளிதாக யூகித்தவனாகவும், அதற்கு அபி ஏற்றுக்கொள்ளும்
அளவிற்கான பதிலையும் அமானுஷ்யன் சொன்னதில் ஆச்சரியம் எதுவும் இல்லைதான்... இந்த புரிதல்தானே,
இப்போது காதலாய் மலர்ந்து இருக்கிறது!....
சில நிமிடங்களுக்கு பிறகு மௌனம்
களைந்த அபி, “ஹ்ம்ம்.. நீ சொல்றது புரியுது.... பட், எனக்கும் கொஞ்சம் டைம்
வேணும்”...
இந்த பதில் அமானுஷ்யனுக்கு ஏமாற்றமாக
இருந்தாலும், “சரி அபி... எவ்ளோ நாள்?” கேட்டான்...
“நாள் இல்ல... பத்து நொடிகள்...”
10….9…8…7….6….5….4…3…2…1..
யுகங்களாக கடந்த அந்த பத்து நொடிகளை
கடந்த நேரத்தில், அபியின் வாயிலிருந்து வரப்போகும் பதிலுக்காக காத்திருந்தான்
அமானுஷ்யன்... ஆனால், எதிர்பார்த்தபடி பதில் வாயிலிருந்து வரவில்லை, மனதிலிருந்து
குதித்தது.... சரியாக அந்த பத்தாவது நொடியில் அமானுஷ்யனை கட்டி அணைத்தான் அபி....
இருவரும் ஒன்றாக கலந்தனர்.... உடலால் அல்ல, உள்ளத்தால்.... (முற்றும்)
(கதையை படித்து முடித்த
நண்பர்கள், தங்கள் கருத்துகளை இந்த வலைப்பூவிலேயே பின்னூட்டங்களாக இடவேண்டுமாய்
கேட்டுக்கொள்கிறேன்..... நன்றி...)
This comment has been removed by the author.
ReplyDeletesuperb story vicky. i love the climax. very interesting words have used.day by day you r improving ur story knowledge.wish u all sucess..............
ReplyDeleteரொம்ப நன்றி நண்பா... உங்களை போன்றோரின் தொடர் ஆதரவால்தான் இன்னும் நான் நிறைய புது முயற்சிகள் செய்ய முடிகிறது....
Deleteஇந்த கதையும் ஒரு துவீஸ்டோட இருக்கும் நெனச்சேன் ஆனா எதிர் பார்த்மாததிரியே கதைய முடிசேட்டீங்க...
ReplyDeleteமுன்னோகி கதைய கொண்டு சென்ற விதம் அருமை. (திரைக்கதை)
மேற்கொலாக சொன்ன பல சிறப்பாக இருந்தது.
படப்பிடிப்பில் நடந்த காட்சி இயற்கையா இருந்தது...
பாகம் ஒன்றுகாண இணைப்பு கொடுக்கலாம். :)
ரொம்ப நன்றி நண்பா.... ஆம், வழக்கமான ட்விஸ்ட் இந்த கதையில் வைக்கல... நீங்கள் சொன்னபடி இதில் உரையாடல்களுக்கும், திரைக்கதைக்கும் கொஞ்சம் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்க்றேன்....
Deleteதங்களின் ஆலோசனைப்படி முதல் பாகத்துக்கான இணைப்பையும் கொடுத்திட்டேன் நண்பா..... நன்றி....
really, awesome
ReplyDeleteநன்றி விஜய்....
Deleteஅந்த அபி முகத்தை பார்கனும் போல இருக்கு .....
ReplyDeleteகண்களை மூடிக்கொண்டு ஒரு உருவத்தை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்க ராஜ்...
Deleteசோகமான முடிவா இருக்குமோனு நினைச்சேன் ஆனா கடைசியில் மகிழ்ச்சியான முடிவு கொடுத்தமைக்கு நன்றி விஜய்...
ReplyDeleteரொம்ப நன்றி சக்தி....
Deleteநெற்பயிருக்கு நடுவில் பாகிஸ்தான் தீவிரவாதி போல ஊடுருவிய களைகளை எடுத்துக்கொண்டு கருமத்தில் கண்ணாக இருந்தனர்....
ReplyDeleteeppafinga ippadiyellam yosikka mudiudhu!!! ummmmmmmmmma!!!
நெற்பயிருக்கு நடுவில் பாகிஸ்தான் தீவிரவாதி போல ஊடுருவிய களைகளை எடுத்துக்கொண்டு கருமத்தில் கண்ணாக இருந்தனர்....
ReplyDeleteeppadiyaa ippadi yosikireenga!! Muaaaaaah!!
மிக்க நன்றி நண்பரே....
Deleteநன்றி க்ரிஷ்.... இது எதார்த்தமா நான் சொன்ன விஷயம்பா.... உள்க்குத்து எதுவும் இல்ல.... வாய்ப்பிருந்தால் இந்த கதையின் மூன்றாம் பாகத்தில் அதைப்பற்றி சொல்றேன்...
ReplyDeletekathaigalil mattum thaan gay relationship athigamaga saathiyam agindrathu.....oru silla nal ena udalai parkum pothu enake kovama varuthu viky.....athuku mattum thaan munnurimai kodukranga......enakum manasunu onnu iruku nu yarum purinjika matranga...abbi ku kidaitha valkai thunai pol enakum kidaithal piravi payanai adivan
ReplyDeletehi vijay,
ReplyDeletestory s really good. especially using of words for telling one thing s really good. I m a dieheart fan of u and ur stories. keep writing. my heartiest wishes to u.
கதை மிகவும் அழகு, நான் எதிர்பர்தது போலவே நல்ல முடிவு
ReplyDeleteரொம்ப பிடித்தது, நிஜ வாழ்க்கைலும் இது போல நடந்தால் ரொம்ப மகிழ்ச்சி .....................
கதை மிகவும் அழகு, நான் எதிர்பர்தது போலவே நல்ல முடிவு
ReplyDeleteரொம்ப பிடித்தது, நிஜ வாழ்க்கைலும் இது போல நடந்தால் ரொம்ப மகிழ்ச்சி
"முழுமையான புரிதல் உண்டானால், ஆயிரம் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத விஷயத்தை கூட ஒரு சிரிப்பு வெளிப்படுத்தி விடும்" மிகவும் அருமை.... உணர்வுபூர்வமான வார்த்தைகள்.. கதையை நீங்கள் நகர்த்தும் விதம் ஆஹா ஓஹோ....
ReplyDeleteஇந்நாவலின் முதல் பாகத்தின் சோகத்தை 2ம் பாகத்தில் தீர்த்தீர்கள். ஒரு இனம் புரியாத திருப்தி.
நான் என் பள்ளி வயதில் தான் முதல் கே-நாவலை வாசித்தேன். அது ஷ்யாம் செல்வதுரை என்பவரது Funny-boy என்னும் நாவல்... உணர்வுகளை மையப்படுத்திய உண்மை சம்பாவங்களின் திரட்டு. இப்போது பல ஆண்டுகளுக்கு பின்னர் நீங்கள்... உங்கள் எழுத்துக்களில் என்னை மறந்து அழுத க்ஷணங்கள் ஏராளம்..
வியக்கிறேன் உங்கள் எழுத்தாற்றலை. உங்கள் எழுக்களில் காமம் எட்டிப்பார்க்கவில்லை, மாறாக என்போன்றோரின் கனவுகளும் ஏக்கங்களுமே வியாபித்திருக்கின்றது. அன்னை சரஸ்வதி உங்கள் எழுத்துக்களில் என்றும் வாழட்டும். எனது வணக்கங்கள்.