Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday 1 October 2013

"கொலைகளின் பங்குதாரர்கள் கவனத்திற்கு....." - ஆதங்கம்..


இது கற்பனை கதையோ, விழிப்புணர்வு கட்டுரையோ நிச்சயம் கிடையாது.... கடந்த ஒரு வார நிகழ்வின் ஆற்றாமையின் வெளிப்பாடுதான் இந்த பதிவு... வாசகராய், நண்பராய், சக எழுத்தாளராய் இத்தனை நாட்களும் இருந்த இரண்டு நண்பர்களின் உயிர் போனதை கண்ட ஆற்றாமை.... ஒரு கண்ணீர் அஞ்சலியாகவோ, ஒரு செய்தியாகவோ இந்த நிகழ்வை பதிவிட நான் விரும்பவில்லை.... காரணம், அந்த இறப்பு ஒரு அப்பட்டமான சமூக புறக்கணிப்பின் விளைவு....
அரசு மற்றும் ரவி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது)... ஒருபால் ஈர்ப்பு உலகத்தில் காதல் பறவைகளாக வலம் வந்த இணை இவர்கள்.... ஒருபால் ஈர்ப்பு எண்ணம் கொண்டவர்களாக நம் நாட்டில் பிறந்ததை தவிர ஒரு பாவமும் செய்யாத அப்பாவிகள்... முறையற்ற காமம் தவிர்த்து, காதல் வளர்த்தவர்கள்... இரண்டு வாரங்களுக்கு முன்பு அரசு தற்கொலை செய்துகொண்டார், அந்த இறப்பின் வலி மிகுந்த ரவி அடுத்த எட்டாம் நாளில் தன் உயிரையும் மாய்த்துக்கொண்டார்.... இந்த இரண்டு தற்கொலைகளும், நிச்சயம் தற்கொலைகளாக வரையறுக்க முடியாதவை.... அந்த இளம் தளிர்கள் மீது திணிக்கப்பட்ட வன்கொடுமைகளின் விளைவால் உண்டான கொலை.... அந்த கொலைக்கான பங்குதாரர்கள் பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும்...
இறக்கும் முந்தைய நாள்வரை, மின்னஞ்சல் வழியாக சோகத்தை பகிர்ந்துகொண்ட ரவி, மறுநாள் காலை இறந்த செய்தி அறிந்தபோது வார்த்தைகள் வராமல் ஸ்தம்பித்து போனேன்.... இப்படி ஒருபால்  ஈர்ப்பு நபர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகளை அவ்வப்போது கேள்விப்பட்டதுண்டு... அந்த இறப்புகள் வேறு காரணங்களால் நிரப்பப்பட்டு, ஒரு நாளிதழின் பெட்டி செய்தியாக வருவதோடு அந்த இறப்புகள் மறக்கப்படுவது வாடிக்கை.... ஒருவேளை அப்படிப்பட்ட இறப்புகளின்போதே உண்மையான காரணத்தை வெளிப்படுத்தி, விழிப்புணர்வை ஊடகங்கள் ஏற்படுத்தி இருந்தால் நிச்சயம் இன்றைக்கு “அரசு மற்றும் ரவி”யின் இறப்பை தவிர்த்திருக்கலாமோ என்னவோ!....
குடும்பத்தில் ஒருவர் இறந்தபோதும் கூட, குடும்ப கெளரவம் கருதி காரணத்தை திரிக்கும் குடும்பத்தினர், அந்த காரணத்தின் உண்மை தன்மையை கூட ஆராயாமல் பக்கங்களை நிரப்பும் ஊடகங்கள், எத்தனையோ நபர்கள் இறந்தாலும் கூட ஒருபால் ஈர்ப்பை அங்கீகரிக்க மறுக்கும் சமூகம்... இப்படி இந்த இறப்புகளுக்கு யாரை எல்லாம் காரணமாக சொல்வது? என்று எனக்கு புரியவில்லை....
இதில் விழிப்புணர்வை ஏற்படுத்த மறந்த ஊடகங்களில் பங்கைத்தான் நான் பிரதானமாக கூறுவேன்.... ஆம், அவர்களுக்கு பத்திரிகையின் விற்பனையை அதிகரிக்க ஏதுவான இறப்புகளை மட்டுமே ஊடகவியலாளர்கள் “ஸ்பெஷல்” இறப்பாக பார்ப்பார்கள்.... இளவரசனின் இறப்புக்கு ஊதா மையால் கண்ணீர் வடித்த எந்த ஊடகமும் இந்த விஷயங்களை கண்டுகொள்ள மாட்டார்கள்.... ஒருவேளை இந்த இறப்புகளுக்கான உண்மை காரணத்தை, ஒருபால் ஈர்ப்பை பத்திரிகையில் பதிவு செய்தால் கூட, அதனை “மஞ்சள்” சாயம் பூசித்தான் செய்தியாக வெளியிடுவார்கள்....
இந்த பத்திரிகை தீண்டாமையை நாம் இனியும் கண்டுகொள்ளாமல் இருப்போமேயானால், இப்படிப்பட்ட இறப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும்.... மற்ற இறப்புகளை கவர் ஸ்டோரியாகவும், பாலோ அப்’களாகவும் போட்டு செய்திகளை காட்டுத்தீயாக்குவதை நான் தவிர்க்க சொல்லவில்லை... அது பத்திரிகை சுதந்திரம்.... சாதி ரீதியாக காதல் புறக்கணிக்கப்பட்டு, தற்கொலை செய்த இளவரசனின் இறப்பு நிச்சயமாக இந்த சமூகத்தில் பேசப்பட வேண்டிய விஷயம் தான்... ஆனால், அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்த இப்படிப்பட்ட இறப்புகளுக்கும் நீங்கள் ஏன் இத்தகைய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை? என்பதுதான் எங்கள் ஆதங்கம்.... அங்கே ஒரு பெண் காதலிக்கப்பட்டாள், இங்கே ஒரு ஆண் காதலிக்கப்பட்டான் என்பதை தவிர இரண்டு நிகழ்வுகளுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் எனக்கு தெரியவில்லை...
ஒரு ஆண் இன்னொரு ஆணை காதலிப்பது என்ன அவ்வளவு பெரிய தேசக்குற்றமா?... காதலித்த ஒவ்வொரு நாளும் சுற்றத்தாலும், குடும்பத்தாலும், சமூகத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக புறக்கணிக்கப்பட்டு, உடலாலும் மனதாலும் பல காயங்களை சுமந்து, வருடங்கள் கடந்து “இனி எதுவும் முடியாது!” என்ற கட்டத்தில் இன்றைக்கு இறந்தே போன அந்த இரண்டு உயிர்களையும் இனி யாரால் திருப்பி தரமுடியும்?....
இங்கே அமைப்புகள் நடத்தும் அன்பர்களுக்கும் இதை பல காலமாக நான் சொல்லிக்கொண்டுதான் வருகிறேன்... சென்னை தாண்டி (சென்னையை பற்றி எனக்கு முழுசா தெரியல) ஒருபால் ஈர்ப்பு பற்றிய விழிப்புணர்வே மக்களிடத்தில் சுத்தமாக இல்லை என்பதுதான் இன்றைய நிலைமை.... அதுமட்டுமல்ல, தமிழகத்தில் ஒருபால் ஈர்ப்பு நபர்கள் 80%க்கும் மேற்பட்டோர் தற்கொலை எண்ணங்கள் கொண்டவர்களாகவும்,   40%க்கும் மேற்பட்டோர் ஒரு முறையாவது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதையும் என்னால் உறுதியாக கூறமுடியும்.... அந்த அளவிற்கு மனம் சார்ந்த மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் அந்த இளைஞர்களை, இறக்கும் வரையில் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் எல்லோருடைய எண்ணமுமா? என்பது எனக்கு புரியவில்லை.... நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால், சென்னை அல்லாத மாவட்டங்களில் ஒரு சர்வே எடுத்து பாருங்கள், முடிவுகள் உங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்....
ஓராண்டுக்கு மேலாகியும், இந்த விஷயம் பற்றி நம் அமைப்புகள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான காரணம் எனக்கு புரியல...
நித்தமும் ஏதோ ஒரு மூலையில், ஒரு இளைஞன் பாலீர்ப்பு புறக்கணிப்பால் இறந்துகொண்டுதான் இருக்கிறான்... கொஞ்சமும் அலட்டல் இல்லாமல், அந்த இறப்புகளுக்கு பொய் சாயம் பூசி இந்த சமூகம் உண்மைகளை மறைத்துக்கொண்டுதான் இருக்கிறது.... நிறைய இறப்புகள் அப்படி நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டது உண்டு என்றாலும், நம் நண்பர்கள் இறக்கும்போதுதான் அந்த உண்மைத்தன்மையும், வலியும் நமக்கு புரிய வருகிறது....
ஊடகத்தின் மீதும், அமைப்புகள் மீதிலும் நான் குற்றச்சாட்டுகளை சுமத்துவது சிலருக்கு நிச்சயம் எரிச்சலை ஏற்படுத்தலாம்.... தயவுசெய்து, அந்த எரிச்சல் அடங்குவதற்கு உள்ளாவது ஒரு ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு முயலுங்கள்.... பேரணி செல்வதில் பெருமை பேசுவது மட்டும் நம் பணி இல்லை, சவ ஊர்வலம் போவதை தடுப்பதும்தான் நம் முக்கிய பணியாக இருக்க வேண்டும்....
நிச்சயமாக அடுத்த கேள்வியாக “நீ என்ன செய்தாய்?” என்ற கேள்விக்கணை என் மீது தொடுக்கப்படும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.... அப்படி கேள்வி எழுப்பப்பட்டால், அதற்கு இன்னொரு பதிவில் நிச்சயம் பதில் தருகிறேன்.... இதை வாக்குவாத விஷயமாக்கி, இறுதியில் இறப்புக்கு “இரங்கல்” தெரிவித்ததோடு அமைப்புகள் தங்கள் பணியை நிறைத்துக்கொள்ளாமல் தயவுசெய்து ஆக்கங்களை உங்கள் செயல்களில் காட்டுங்கள்.... “உயிர் போற காரியம்” என்று பொதுவாக சொல்வார்கள்.... இது நிஜமாகவே உயிர் போகின்ற காரியம் தான், அதற்குரிய அவசரத்தையும், அவசியத்தையும் புரிந்துகொண்டு உங்கள் களப்பணிகளில் விளைவை காட்ட வேண்டும்.....
எல்லாரையும் சொல்லிவிட்டு, இந்த சமூகத்தை நான் ஒன்றும் சொல்லாததால், அவர்கள் நல்லவர்கள் என்று ஆகிவிடாது.... இன்னும் எத்தனை உயிர்களை தன் கலாச்சாரப்பசிக்கு பலியாக எடுத்துக்கொண்டு, எமக்கான அங்கீகாரத்தை இந்த சமூகம் கொடுக்கப்போகிறது என்பது எனக்கு புரியவில்லை....
காதலுக்காக உயிரையே கொடுத்ததாக வரலாற்றில் கேள்விப்பட்டுள்ளேன்.... என் கண் முன்னே இணைந்து வாழ்ந்து, இன்றைக்கு இறைவனை நாடி சென்ற அந்த இரண்டு உள்ளங்களையும் பார்த்தபிறகுதான், எனக்கே முழுமையாக ஒருபால் ஈர்ப்பின் உன்னதம் புரிகிறது.... நிச்சயம் அந்த ஆத்மாக்களின் காதல், வரலாற்றால் மறக்கப்படாமல் பதிவுசெய்ய நம்மால் முடிந்ததை செய்வோம்!...

(ஒருபால் ஈர்ப்பு காதலர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் – எத்தகைய இன்னல்கள் வந்தாலும், தயவுசெய்து தற்கொலைக்கு முயலவேண்டாம்.... தவறு உங்கள் மீது அல்ல, புரையோடிக்கிடக்கும் இந்த முட்டாள் சமூகத்தின் மீதுதான்.... நீங்கள் துணிந்து வாழ்ந்துதான், அந்த சமூகத்தின் முகத்தில் அறைய வேண்டும்).

கனத்த மனதுடன்,
உங்கள் விஜய் விக்கி......

2 comments:

  1. The pie chart gives alarming figures. If it is true ,this is a serious matter for concern. media should look at it positively.
    aana kodumaya enna sollarthu. sameebathil coverpageil orina serkaiyaalargalai pattri oru vaaraidhalil katturai vanthathai aduththu antha vaaraidhal aluvalagam moodappattathu. ithu indiavil nadakavillai endraalum antha naatai aalbavarey orina serkaiyil naatam ullavar endru sollapadum naatil nadantha kodumai.

    ReplyDelete
    Replies
    1. அந்த சார்ட் எந்த அளவுக்கு உண்மை தன்மை வாய்ந்ததுன்னு தெரியல.... அது ஒரு அமைப்பு எடுத்த கணக்கெடுப்பு, உலக அளவில்.....
      உங்க கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அண்ணா.... கடைசிவரைக்கும் அது எந்த நாடு'ன்னு சொல்லாமலே போயிட்டிங்க...

      Delete