“பூவலூர் – 2 கிமீ”
என்கிற அந்த மஞ்சள் நிற தகவல் பலகையை நான் அடைந்தபோது மணி பதினொன்று
இருந்திருக்கலாம்... தார் சாலையிலிருந்து பிரியும் அந்த செம்மண் சாலையில் இன்னும்
இரண்டு கிலோமீட்டர் தூரம் நடக்கணும்... அது அமாவாசை நாள் இல்லை என்றாலும் கூட,
கருமேக கூட்டங்கள் நிலவை மறைத்து செயற்கை அமாவாசையை உண்டாக்கி இருக்கிறது....
மழைக்காலத்தின் பிரதிபலிப்பாக மேற்கு பகுதியில் வானம் மின்னிக்கொண்டு
இருக்கிறது... தவளை “க்ர்ர்.... க்ர்ர்..” சத்தம் தவிர மருந்துக்கும் மனித
நடமாட்டமோ, குரல்களோ இல்லை... ஆனாலும், தயக்கம் களைந்து செம்மண் சாலையில் நடக்க
தொடங்கினேன்...
எச்சிலை விழுங்கிக்கொண்டு,
பெருமூச்சோடு நடையை வேகப்படுத்தினேன்.... இருளும், தனிமையும், அமானுஷ்ய அமைதியும்
என்னை கலவரப்படுத்தினாலும், எண்ணமல்லாம்
ஊருக்குள் இருக்கும் என் அமுதவனை பார்க்க வேண்டும் என்பதில்தான் உடும்புப்பிடியாக
இருந்ததால் நடையில் மட்டும் தடுமாற்றம் இல்லை....
இந்த இரண்டு கிலோமீட்டர் தூரமும்,
என்னுடன் எனக்கு துணையாக வரப்போவது அவனுடைய நினைவுகள் மட்டும்தான்.... பெயர்
மட்டுமல்ல, அவன் ஆளும் கூட அமுதத்தில் திளைத்ததை போலத்தான் இருப்பான்... ஒருவேளை
உங்கள் கண்களுக்கு அவன் பேரழகனாக தெரியாமல் இருக்கலாம், நான் அதிகப்படியாக
கூறுவதாக கூட நீங்கள் நினைக்கலாம்... ஆனால், அவன் என் குறிஞ்சி மலர்... குறிஞ்சி
மலரை நீங்க பார்த்திருக்கிங்களா?... நிஜத்தில் அதைவிட அழகான ஆயிரம் வகையான மலர்களை
நாம பார்த்திருப்போம்... ஆனால், அந்த ஆயிரம் மலர்களுக்கும் இல்லாத
முக்கியத்துவத்தை குறிஞ்சி மலர் எப்படி பெற்றது?.... பன்னிரண்டு ஆண்டுகளுக்கு
ஒருமுறை பூப்பதால், மலர்களுள் எல்லாம் சிறப்பானதானது... அப்படித்தான் அமுதவனும்...
அவனைவிட ஆயிரம் அழகான ஆண்களை பார்த்தாலும், அவனை பார்த்தபோது எனக்குள் உண்டான அந்த
“ஸ்பார்க்” வேற யார் மேலும் ஏற்படவில்லை....
பார்த்ததும் எனக்கு காதல் பத்திகிட்டாலும்,
எனக்கும் அவனுக்கும் ஒரு விஷயம் கூட ஒத்துவராது... ஜாதகத்தில் பத்து பொருத்தம்
சொல்வாங்கல்ல, அதுல பார்த்திருந்தா எங்களுக்கு ஒரு பொருத்தம் கூட ஒத்து
வந்திருக்காது.... ஆனால், இந்த ஆண்டவன் அப்படி ஆளுங்களா பார்த்துதான் சேர்த்து
வைப்பார் போல.... “நீ காதலிச்சுட்டு ஆண்டவன் மேல ஏண்டா தப்பு சொல்ற?”னு நீங்க
கேட்கிறது புரியுது, என்ன பண்றது?, எதை சொன்னாலும் கேட்டுட்டு அமைதியா இருக்குறவன்
ஆண்டவன் மட்டும்தானே!....
நண்பர்களா நாங்க பழகுனப்பவே, ஆயிரம்
கருத்து வேறுபாடுகள் எங்களுக்குள் வருவது உண்டு... அப்போ காதல்னு வந்தப்போ, எப்டி
இருந்திருக்கும்?னு சொல்லவே தேவையில்ல.... நான் காதலை அவன்கிட்ட சொன்னதே பெரிய
கலவரம் தாங்க... நண்பர்கள் எல்லாரும்
ஊருக்கு போயிருந்த சமயம்... அறையில் நானும் அவனும் மட்டும்தான்... வங்கக்கடலில்
ஏற்ப்பட்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் (நன்றி ரமணன் சார்) மழை
‘ஜோ’ன்னு வெளியில் பேஞ்சுட்டு இருந்தது.... அறைக்குள் என் கவலைகளை மறந்து, காதல்
மூடுக்கு ஏற்றது போன்ற வெப்பநிலை, யாருமற்ற தனிமை, ஹோம் தியேட்டரில் “வசீகரா....
என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்....” பாடல்.... இந்த
ரம்மியமான சூழலுக்கு நானா பொறுப்பு?... என் காதலை சொல்லியும் விட்டேன்ங்க... அவன்
என்னை பார்த்தான் பாருங்க ஒரு பார்வை... அப்பப்பா!!!.... சுயேச்சை வேட்பாளரை
வாக்காளர்கள் பார்த்திடும் ஒரு ஏளன பார்வை அது....
தலையை தொங்கப்போட்டுக்கொண்டு,
மேற்கொண்டு நடக்கப்போகும் விளைவுகளை எதிர்நோக்கி காத்திருந்தேன்.....
ஒரு நிமிஷம் இருங்க.... எனக்கு
பின்னால யாரோ வர்ற மாதிரி தெரியுது... இந்த இருட்டுல இந்த ரோட்’ல நடக்குற ஆளு
யாரு?னு பார்க்குறேன்...
இப்போ மேகக்கூட்டங்கள் நிலவுக்கு
வழிவிட்டு, சாலை ஓரளவு தெளிவாக தெரிந்ததால் என்னை நோக்கி நடந்து
வந்துகொண்டிருக்கும் மனிதரை என்னால் பார்க்க முடிகிறது.... என்னை பார்த்ததும்
அவருக்குள்ளும் ஒரு ஆச்சரியம்....
“என்ன தம்பி, இந்த நேரத்துல இங்குட்டு
போறிய?” முகம் தெரியாத நபராக இருந்தாலும் கூட, அந்த தனிமை எங்க ரெண்டு பேரையும்
ரொம்ப நெருக்கமா ஆக்கிடுச்சு....
“பிரென்ட்ட பார்க்க போறேன்.... நீங்க
இந்த ஊர் காரரா?”
“நானா?... இல்லப்பா... எனக்கு யாதும்
ஊரே யாவரும் கேளிர்” சிரித்தார்.... மென்மையாக சிரித்தாலும் கூட, அந்த இடத்தில்
அது கொஞ்சம் வன்மையாகத்தான் தெரிந்தது.... அவர் காணாத விதமாக, என் விரல் மோதிரத்தை
எடுத்து பேன்ட் பைக்குள் போட்டுக்கொண்டேன்....
ஆனாலும், அது அவர் மீதான தேவையற்ற
பயம் என்பதை இன்னும் கொஞ்ச தூரம் நடந்து சென்றபொழுதே அறிந்துகொண்டேன்....
“இந்த நேரத்துல நீங்க ஏன் போறீங்க?”
என்றேன்....
“நான் நாடோடி’ப்பா... எனக்கு நேரம்,
காலமல்லாம் கெடயாது.... இதுதான் ஊருன்னும் கிடையாது.... வட்டத்துக்குள்ள சிக்காத
பறவை மாதிரி” சிரித்தார்... அந்த சிரிப்பு இப்போ எனக்கு பழகிப்போச்சு....
சாலையோரங்களில் செழித்து வளர்ந்திருந்தாலும், செம்மண் சாலையையும் தன் ஆளுகைக்குள்
கொண்டுவர காத்திருக்கும் சூராமுள் செடி
படாமல், சாலையின் நடுவிலேயே நடந்தோம்...
அவர் குடும்ப கதைகளை தாண்டி, நடக்கும்
களைப்பு தெரியாமல் இருக்க பாட்டு பாட தொடங்கினார்.... “அச்சம் என்பது மடமையடா!....
அஞ்சாமை திராவிடர் உடமையடா.....”னு அவர் பாடும்போது, கண்களை மூடிக்கொண்டால்
இசைக்கருவிகள் இல்லாமல் டீ.எம்.எஸ் பாடுவது போலவே இருந்தது....
அமுதவனுக்கும் பாட்டுன்னா ரொம்ப
பிடிக்கும்.... இசைக்கு ஏற்ப தலையை அசைப்பவன் நான், ஆடாமல் அசையாமல் வரிகளை
கவனிச்சு ரசிப்பவன் அவன்.... சரி, நான் பாதியில விட்டதை சொல்றேன், அதுவரை அவர்
பாடிட்டு இருக்கட்டும்....
அந்த ஏளன பார்வைக்கு பிறகு அமுதவன்
என்ட்ட எதுவும் பேசல, மழையையும் பொருட்படுத்தாமல் கதவை திறந்து வெளியே
போய்விட்டான்.... “அமுது.... அமு....”னு நான் கூப்பிட்ட வார்த்தைகள் அவன் காது
மடலோடு எதிரொலித்து திரும்பிவிட்டன....
சோகமாக அமர்ந்தேன்.... சொல்லிருக்க
கூடாதோ?னு யோசிச்சேன்... சொன்ன பிறகு, அது என்ன “சொல்லி இருக்க கூடாதோ?”னு ஒரு
முட்டாள்த்தனமான எண்ணம்.... இனி ஆகுறதை பார்க்கணும்... அவனிடம் மன்னிப்பு
கேட்டிடலாம்’னு முடிவு பண்ணேன்.... எதுக்கு மன்னிப்பு? தெரியவில்லை... ஆனாலும்,
குறைந்தபட்சம் அவனுடனான நட்பையாவது தக்க வைத்துக்கொள்ள அந்த மன்னிப்பு தேவைப்படும்னு
நெனச்சேன்... அடுத்த அரைமணி நேரத்துல தொப்பலாக நனைந்தபடி அறைக்குள் வந்தான்...
தலையிலிருந்து நீர் சொட்ட சொட்ட, இருக்கையில் அமர்ந்தான்.... ஒரு துண்டை எடுத்து
அவன் கையில் கொடுத்தேன், அதை வாங்கி தூக்கி எறிந்தான்.... இவ்வளவு ஈரமும் கூட அவன்
கோபத்தை தணிக்கவில்லை என்பது புரிந்தது....
இனி “இம்சை அரசன்” வடிவேலு பாணியில்,
என் ஆயுதத்தை எடுத்தேன்.... வேற ஒண்ணுமில்ல, வெள்ளைக்கொடி தான்.... அவன் அருகே
சென்று, மெல்ல கைகளை பிடித்து (கோபத்தில் அடிச்சிடுவானோ’ன்னு பயத்துலதான் கையை
பிடிச்சேன்) “சாரிடா...” என்றேன்....
சட்டென என் மீது ஒரு கோபப்பார்வை....
இயற்கையாகவே அவனுக்கு பெரிய கண்கள், அதை விரித்து கோபமாக பார்த்தபோது, நிஜமா
கொஞ்சம் பயந்துதான் போனேன்....
“எதுக்கு சாரி?” அப்பாடா!
பேசிட்டான்....
“இல்ல... தப்பா பேசிட்டேன்...
அதுக்குத்தான்....”
“அது தப்பல்லாம் இல்ல.... எனக்கும்
உன் மேல அதுதான்...”
அவன் இப்படி சொல்லி இரண்டு நிமிடங்கள்
கழித்துதான், அவன் தானும் காதலிப்பதாய் சொல்கிறான் என்பதே எனக்கு புரிந்தது...
அநேகமாக இந்த உலகத்தில் இப்படி ஒரு கேவலமான விதத்தில் தன் காதலை வேற யாரும்
வெளிப்படுத்தியிருக்க மாட்டாங்க.... அப்புறம் எதுக்காக வெளில ஓடினான்?னு நான்
யோசிச்ச மறு நொடி, என் வாயில் டயரி மில்க் சாக்லேட்டை திணித்தான்.....
அதன்பிறகு, என் சந்தோஷத்தை சொல்லவா
வேணும்?.... பூகம்பம் வராமலேயே வீடு ஆடுவது போல இருந்துச்சு, சுனாமியில் சிக்கிய
சுண்டெலியாக மனம் பரபரத்தது... அடுத்து என்ன பேசனும்? எப்டி பேசனும்?னு ஒன்னும்
புரியல... முன்ன பின்ன காதலிச்சு அனுபவம் இல்லாததால ரொம்பவே தடுமாறினேன்....
ஆனாலும், அன்றைய இரவு நான் போட்ட அகரம், நாளுக்கு நாள் மெருகேறி எங்க காதலையும்
கல்வெட்டுல எழுதலாம்னு சொல்ற அளவுக்கு ஒண்ணுக்குள்ள ஒன்னாகிட்டோம்....
இப்போ அந்த நாடோடி நண்பர், நான்காவது
பாட்டை முடித்து, ஐந்தாவது பாட்டாக “உள்ளத்தில் நல்ல உள்ளம்... உறங்காதென்பது....”
பாடிக்கொண்டு இருக்கிறார்....
“இந்த பாட்டுல வார்த்தைகளை
கவனிச்சிருக்கிங்களா தம்பி?... அற்புதமா எழுதிருப்பார் கவிஞர்.... ‘செஞ்சோற்று
கடன் தீர சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா.... வருவதை
எதிர்கொள்ளடா....’ ரெண்டே வரில மொத்த மகாபாரதத்தையும் சொல்லிருப்பார்...” சில
விஷயங்கள் புரியவில்லை என்றாலும், அவர் சொன்னவைகளுக்கு “ஆமா.... ஓஹோ... அடடா...”
சொல்லிக்கொண்டே நானும் நடந்தேன்....
இப்படி அமுதவனிடமும் ஒருமுறை
மாட்டிருக்கேன்..... ராவணன் படத்தின் “கள்வரே... கள்வரே...” பாடல்
பார்த்துக்கொண்டிருந்தோம்.... அதில் ப்ரித்விராஜ் என்னமா இருப்பான்!... ஐஸ்வர்யாவும்
அவனும் அவ்வளவு நெருக்கமாக இருக்கும் தழுவல் காட்சிகள், ரசிக்கும்படியா இருந்துச்சு....
“நல்ல பாட்டுல்ல?” அவன் கேட்டான்....
“ஆமா... எனக்கு ரொம்ப பிடிச்ச
பாட்டு..”
“வரிகளை கவனிச்சியா?... வைரமுத்து
கலக்கிருக்கார்...”
“ஆமா....” நான் எங்கே வரிகளை கவனிச்சேன்?...
பிருத்வி ராஜ் போட்டிருந்த சட்டையில் இருந்த வரிகளை தவிர, வேற எந்த வரியையும்
கவனிக்கல....
“உனக்கு புரிஞ்சுதா?”
இல்லைன்னு சொன்னா, பாடம் நடத்தியே
டார்ச்சர் பண்ணுவான்.... “ஹ்ம்ம்... நல்லா...”
“வலி மிகு இடங்கள், வலி மிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே!... வலி மிகு இடங்கள் வலி மிகா இடங்கள் தங்களுக்கு
தெரிகின்றதா?’ வரி புரியுதுல்ல” என்றான்....
தமிழுக்கு வலி புரியுமா?... ஒன்னு
மட்டும் நல்லா புரிஞ்சுது, என்ன பதில் சொன்னாலும் வலி வரப்போறது என்னமோ எனக்கு
மட்டும்தான்.... என் அமைதி அவனை லேசான எரிச்சல் படுத்தி இருக்க கூடும்....
“புரியலையா?” இப்போ வார்த்தைகளில்
கொஞ்சம் வேகம் தெரிந்தது...
வழக்கம் போல சிரித்தபடியே பதில்
சொல்லவில்லை நான்....
“வலி மிகும் இடங்கள்’னா வல்லினம்
மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள்’னா வல்லினம் மிகாத இடங்கள்... தமிழில் எல்லா இடத்திலும் வல்லினம்
மிகுந்துவிடாது, அதுக்குன்னு சில விதிகள் இருக்கு... அதைத்தான் வைரமுத்து சிலேடையா
சொல்லிருப்பார்....”
“ஓஹோ...” இந்த இலக்கண வகுப்பு அவன்
எடுத்த போது மணி என்னவோ நள்ளிரவை தாண்டி இருந்தது.... இயந்திரங்கள் கூட கண்
அயர்ந்து உறங்கும் நேரத்தில், அவன் இலக்கணப்பாடம் என்னை கலவரப்படுத்தியது.... ஆனாலும்,
அந்த சிலேடை வரிகளை நான் லாவகமாக எனக்காக பயன்படுத்திக்கொண்டதுதான் நீங்க கவனிக்க
வேண்டிய விஷயம்...
“இப்போ உனக்கு நான் வலி மிகுந்த
இடங்களை காட்டப்போகிறேன்”னு சொல்லி, மெல்ல அவன் கன்னங்களை வருடினேன்.... அப்படியே மெல்ல....
அதுக்கு மேல அங்க என்ன நடந்திருக்கும்?னு நீங்களே கற்பனை பண்ணிக்கோங்க....
ஊருக்குள் வந்தாச்சு.... ரொம்ப நேரம்
கழித்து, மரணிக்கும் தருவாயில் ஒளித்துக்கொண்டிருந்த தெருவிளக்கின் அருகே
சென்றுவிட்டோம் நானும் அந்த நாடோடி நண்பரும்.....
“தம்பி... ஊரு வந்தாச்சு.... நீ போயி
உன் நண்பனை பாரு... நான் என் வேலையை பார்க்கறேன்...” விடைபெற்றுவிட்டு அந்த நண்பர்
மேற்கு நோக்கி செல்ல, நான் அமுதவனின் வீட்டை நோக்கி நடந்தேன்.... இரண்டு
கிலோமீட்டர் தூரத்தையும் கடக்க அரை மணி நேரம் ஆகிருக்கு.... ஆனாலும், உங்ககூட
பேசிட்டே வந்ததுல, களைப்பு தெரியல.... அதோ அமுதவன் வீடு தெரியுது.... வீட்டு
மாடியில், அவன் அறையில் மட்டும் விளக்கு எரிந்துகொண்டு இருக்கிறது.... நாய்கள்
குரைப்பதை கூட கவனிக்காமல், என் கால்கள் நடையின் வேகத்தை அதிகமாக்கியது.....
வீட்டு வாசல் கேட்’டை சத்தம் வராமல்
மெல்ல திறந்தேன்.... வீட்டின் பிரதான கதவு சாத்தியிருந்தது.... வீட்டிற்குள்
செல்லாமலேயே மாடி அறைக்கு செல்ல, பக்கவாட்டில் மாடிப்படிகள் இருக்கிறது.... மெல்ல,
மற்றவர்களுக்கு சத்தம் வராதபடி அடி மேல் அடி வைத்து மாடிப்படிகளை கடந்தேன்....
அறைக்கதவு திறந்து இருக்கிறது, அறைக்குள் பேச்சு சத்தம் கேட்டுக்கொண்டு
இருந்தது.... மெல்ல, அறைக்குள் சென்றேன்....
கட்டிலில் அமுதவன் அமர்ந்திருக்க,
அருகில் அவன் அம்மா நின்றுகொண்டு அமுதவனின் தலைமுடியை கோதி விட்டுக்கொண்டு
இருக்கிறார்.... அவன் கைகள் முகத்தினை மூடிக்கொண்டு அழுததை போல தெரிகிறது...
“அமுதவா!... சொல்றத கேளு... நீ
சாப்புடாம தூங்காம அழறதால இறந்தவன் உயிரோட வரப்போறது இல்ல... அவன் இறந்ததா மதியம்
தகவல் வந்ததுலேந்து இப்டியே உக்காந்திருக்கிறது, எனக்கு பயமா இருக்குப்பா.... ஆண்டவன்
எல்லாத்துக்கும் ஒரு காரணம் வச்சிருப்பார்... தயவுசெஞ்சு இந்த பாலை குடிச்சுட்டு
தூங்கு” சொல்லிவிட்டு, முகம் முழுக்க கவலையோடு அம்மா என்னை கடந்து அறையை விட்டு
வெளியே போனார்.... போன வேகத்தில் கதவு சாத்திக்கொண்டது...
மெல்ல அமுதவனின் அருகில் நடந்தேன்...
அவன் கையில் இப்போது ஏதோ ஒரு புகைப்படம்... அதைபார்த்தபடியே அவன் அழுகை இன்னும்
அதிகமாவதை கவனித்தேன்.... அவன் பின்புறமாக எட்டிப்பார்த்தேன், அது என் புகைப்படம்
தான்....
ஒரு வேகத்தில் என் கையை அமுதவனின்
தோள் மேல் வைக்க முயன்றபோது, என் தோள் மீது வேறொரு கை பட்டதை உணர்ந்து
திரும்பினேன்.... அது, அந்த நாடோடி நண்பர்தான்....
“போதும் தம்பி... வந்திடு போகலாம்...
நீ மதியமே இறந்துட்டன்னு புரிஞ்சுக்க.... இப்போ நாமல்லாம் வெறும் ஆத்மாக்கள்...
மனுஷங்களை தொந்தரவு பண்ணக்கூடாது.... பாக்கலாம், தூரத்துல நின்னு அவங்க வாழ்றத
ரசிக்கலாம்.... அவ்ளோதான்.... அதுதான் நமக்கும் நல்லது, அவங்களுக்கும் நல்லது” என்
கைபிடித்து, இழுத்து சென்றார் அந்த நண்பர்.... அவனை பார்த்தபடியே பிரிய
மனமில்லாமல், மூடியிருந்த கதவை ஊடுருவி வெளியே சென்றேன் நானும், ஆவியாக!...
(முற்றும்)
super vijay., :)
ReplyDeleteநன்றி அஷ்வின்....
Deletereally awesome !!
ReplyDeleteநன்றி அபி...
Deleteeppa pei padam patha mathari irunthuchu.. Semma story na. NAAN EEE padathula vara mathari sethavana thirumbavum amuthanoda pesa vaikalamla. pavam pa rendu perum..
ReplyDeleteரொம்ப நன்றி தம்பி.... அடுத்த கதைல ஆவிய பேசவச்சிடலாம், கவலைப்படாதிங்க...
Deletenice vijay...seriously didnt expect the climax... u the oly person can write like this...but paavam amuthavan...
ReplyDeleteரொம்ப நன்றிப்பா.....
Deletevery nice story
ReplyDeleteநன்றி குமார்...
DeleteNo words.... Kudos.....
ReplyDeleteHow come u can write in all genre????
ரொம்ப நன்றி நண்பா... இப்போதான் பல பிரிவுகளில் எழுத கற்றுக்கொண்டு இருக்கிறேன்..... உங்களை போன்றோரின் ஆதரவே, என் முயற்சிகள் அனைத்துக்கும் உத்வேகம் அளிப்பவை...
Deleteசூப்பர் ....... உங்களின் ஒவ்வொரு கதையிலும் தனி சிறப்பு உள்ளது.
ReplyDeleteநாள் ஆக ஆக கதையின் ஓட்டமும், கதை சொல்லும் பாணியும் மெருகேறுகிறது .
வாழ்த்துக்கள் .....
ரொம்ப நன்றி ஸ்டாலின்.... ஆம், நிறைய கற்றுக்கொண்டு எழுதுறேன்.... இன்னும் நிறைய மெருகேற்றனும்...
Deleteவிஜய், இப்போதான் நான் அவன் அது கதையை படிச்சேன். ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ஆஆஆஆஆ எப்படி இந்த பேய் கதையை எழுதுனிங்க... சூப்பர்! ஆனா என்ன காரணத்தால அவர் இறந்தார் என்பதுதான் புரியல?
ReplyDeleteவிஜய், இப்போதான் நான் அவன் அது கதையை படிச்சேன். ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ஆஆஆஆஆ எப்படி இந்த பேய் கதையை எழுதுனிங்க... சூப்பர்! ஆனா என்ன காரணத்தால அவர் இறந்தார் என்பதுதான் புரியல?
ReplyDeleteரொம்ப நன்றி சக்தி.....
Deleteசிறுகதைகளில் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட முடியாது நண்பா.... அதனால்தான் இறப்பை பற்றி நான் சொல்லவில்லை
வார்த்தை ஜாலங்களும் அருமை...
ReplyDeleteவிக்கி , என்னை நியாபகம் இருக்கிறதா? எப்படி ஏறுகிறாய் நண்பா?
ReplyDeleteஉன் கதைகளுக்கு விமர்சனம் எழுதியே பல மதங்கள் ஆகிவிட்டன. இப்பொழுது தான் இத்தளத்திற்கு வர நேரம் கிடைத்தது.
பேய் கதை எல்லாம் சொல்லி அசத்துற . வாழ்த்துக்கள்.
விஜய் @ ராஜ்
ராஜ்..... எப்டி இருக்கீங்க?.... எவ்வளவு நாள் ஆச்சு!!!!......
Deleteநீஈஈஈஈண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை கண்டதில் மகிழ்ச்சி.. தொடர்ந்து கருத்துரையுங்கள்.... நன்றி....
பேய் கதை என்பதையும் தாண்டி ஒரு நல்ல காதலை கண்டன்
ReplyDeleteநன்றி நண்பா...
DeleteNo words to explanations really superb Vicky.
ReplyDeleteநீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை பார்க்குறேன் ஹாஷிம்.... ரொம்ப நன்றி நண்பா,,,
Delete