Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Wednesday 25 September 2013

பாராளுமன்றத்தை கலக்கிய "முத்தப்போராட்டம்"....


ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவான எத்தனையோ வகையான போராட்டங்களை நாம் பார்த்திருப்போம்... பேரணிகள் செல்வது, போராட்டங்கள் நடத்துவது, விழிப்புணர்வு கூட்டங்கள் போடுவது போன்ற அஹிம்சாவழி போராட்டங்கள் முதல், தடையை மீறி வன்முறையில் ஈடுபடும் போராட்டம் வரை நிறைய பார்த்திருப்போம், படித்திருப்போம்....
ஆனால் “கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து” நடத்திய போராட்டம் ஒன்று , இன்றைக்கு உலக அளவில் பெரியதொரு போராட்டமாக மீடியாக்களை ஆக்கிரமித்துள்ளது உங்களுக்கு தெரியுமா?.... அப்படி நடந்த போராட்டம் ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில் என்பதால்தான் இவ்வளவு முக்கியத்துவமும், பங்களிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்...
ஆங்கில ஊடகங்களை அலங்கரித்த இந்த செய்தி, வழக்கம்போல தமிழ் ஊடகங்களால் கண்டுகொள்ளப்படவில்லை.... அநேகமாக தமிழ் நாளேடுகளில் ஏதோ ஒரு மூலையில், “காளைமாடு கருத்தரித்தது”, “காங்கோவில் கடலை வியாபாரம்” போன்ற துணுக்குகளுக்கு மத்தியில் இந்த செய்தியும் ஒரு நகைச்சுவை துணுக்கை போல பிரசுரம் ஆகியிருக்கலாம்....
சரி நாமாவது அந்த புதிய போராட்ட செய்தியை பற்றி தெரிந்துகொள்வோம்....
இந்த முத்த யுத்தம் நடந்த இடம் இத்தாலியின் பாராளுமன்றம்(கீழ் சபை).... கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில், “ஒருபால் ஈர்ப்புக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கான தண்டனையை உறுதிப்படுத்தும்” சட்ட முன்வரைவு அங்கு சமர்ப்பிக்கப்பட்டது.... ஒருபால் ஈர்ப்பு நபர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலான அந்த சட்டத்திருத்தத்தை வாக்கெடுப்பிற்கு முன்வைத்தது அரசு... மிகப்பெரிய பெரும்பான்மையில் (சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக 354 உறுப்பினர்களும், எதிராக 79  உறுப்பினர்களும் வாக்களித்தனர்) அந்த சட்டம் கீழ் சபையில் நிறைவேறியது....
அந்த சட்டத்திருத்தத்தினை பற்றிய விவாதம் நடந்துகொண்டிருந்தபோதுதான் நான் மேற்சொன்ன அந்த வித்தியாசமான “முத்தப்போராட்டம்” நிகழ்ந்தது.... பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும், பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்து தத்தமது வாதங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக பேசிக்கொண்டிருந்தபோதுதான், ஐந்து நட்சத்திர இயக்கம் (Five Star Movement – M5S) கட்சியின் உறுப்பினர்கள் சிலர் எழுந்து நின்று ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து, முத்தங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டு வித்தியாசமான முறையில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்....
“ஒரு ஆண் இன்னொரு ஆணை கட்டிப்பிடிப்பதோ, முத்தம் கொடுப்பதோ தவறில்லை என்பதை எங்கள் செய்கையால் உணர்த்தினோம்” என்று சொன்ன அந்த உறுப்பினர்களின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.... அந்த சட்டத்திற்கு ஆதரவாகவும், முத்தம் கொடுத்துக்கொண்டிருந்த உறுப்பினர்களுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாகவும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எழுந்து நின்று சத்தம் எழுப்பி ஆதரவுக்குரல் கொடுத்தனர்...
ஒரு பக்கம் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த சுதந்திர மக்கள் கட்சி உறுப்பினர்களோ, “இந்த சட்டம் கீழ் சபையில் மட்டும்தான் ஏற்கப்பட்டுள்ளது... இன்னும் இது செனட் சபையிலும் நிறைவேற்றப்பட்டால்தான் சட்டமாக உருவெடுக்கும்.... ஆனால், நிச்சயம் செனட் சபையில் இந்த சட்டத்தை தோற்கடிப்போம்” என்கிறார்கள் காட்டமாக....
ஆனால், அரசியல் வல்லுனர்கள் சொல்வதோ, “நிச்சயம் இந்த சட்டம் செனட் சபையிலும் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்கின்றனர்....
இன்னும் சில நாட்களில், யார் சொல்வது நடக்கப்போகிறது? என்று பார்க்கத்தான் போகிறோம்...
ஒருபால் ஈர்ப்பு அமைப்புகளை சார்ந்தவர்களோ, “இந்த சட்டம் ஒருபால் ஈர்ப்புக்கு எதிரான வன்முறைகளை தண்டிக்கும் இன்னும் அதிகமான அம்சங்களை கொண்டிருக்க வேண்டும்.... சில மாற்றங்களை உட்புகுத்தி, ஒருபால் ஈர்ப்பு நபர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும்” என்கிறார்கள்....
இப்படி அவரவரும் தங்களது யூகங்களை, கருத்துகளை வெளிப்படுத்தினாலும், இந்த முத்தப்போராட்டம் பெரிய அளவிலான தாக்கத்தை இத்தாலி அரசியலில் ஏற்படுத்தியுள்ளது.... இத்தாலியை தாண்டி உலக நாடுகளிலும் இந்த விஷயம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் உண்மை...
ஆட்சியாளர்கள் என்பவர்கள் மக்களின் சேவகர்கள் என்பதை இந்த வித்தியாசமான போராட்டங்களின் மூலம் நாம் உணரமுடிகிறது.... தங்கள் சுய அடையாளங்கள் அவமதிக்கப்பட்டாலும், சுய மரியாதை பாதிக்கப்பட்டாலும், தரக்குறைவான விமர்சனங்களுக்கு உட்பட்டாலும் கூட, மக்களின் பிரதிநிதியாக தங்கள் கருத்துக்களை இன்னும் ஆழமாக மக்கள் மன்றத்தில் முன்வைத்துள்ள அந்த கட்சியினரையும், கட்சியையும் தலைவணங்கி பாராட்ட வேண்டியது நம் கடமை...
இந்த செய்தியை நம் ஊர் அரசியல்வாதிகளும் பார்ப்பார்கள்....
நம் சட்டமன்றம், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதன்மூலம் ஒரு வேண்டுகோள் வைக்க வேண்டி இருக்கிறது... எங்களின் உரிமைக்காக மன்றங்களில் நீங்கள் “முத்தம்” கொடுக்கவல்லாம் வேண்டாம், கொஞ்சமாக “சத்தம்” கொடுக்கவாவது செய்யுங்கள்.... அந்த சத்தம் ஆட்சியாளர்கள் காதில் விழுந்து, எங்கள் உரிமைகளுக்கு உத்திரவாதமும், உயிர்களுக்கு பாதுகாப்பும் கொடுக்குமாயின் உங்கள் வாழ்வில் கோடி புண்ணியம் உண்டாகும்.... கொடுப்பார்களா?, சத்தத்தை......

2 comments:

  1. வெளிநாட்ல இது சாத்தியம் ஆச்சு ஏன்? அங்க பெரும்பாலும் கே மற்றும் லெஸ்பியன் மலருக்கு மலர் தாண்டும் வண்டல்ல. ஓருவனுக்கு ஓருத்தன் / ஓருத்திக்கி ஓரித்தி என்னும் உணர்வு இருக்கு. அதனாலதான் இன்னிக்கு சாதிச்சாங்க.

    ஆனா இங்க இந்தியால எத்தனை பேர் உண்மையோட இருக்கோம்?. நூற்றுக்கு இரண்டு சதவிதம் இருப்போமா! அதே அதிகம் தான். எங்க பார்தாலும் காமம் காமம். நமக்கு தேவை ஓரு ஆணை புரிஞ்சிக்கிட்ட ஓரு ஆண் ஓரு பெண்ணை புரிஞ்சிக்கிட்ட ஓரு பெண் தான் அவர்களுடைய உடல் தேவையல்ல. இந்த உடலுக்கு வயசு ஆகும் அப்ப எதுவும் வேலை செய்யாது,அழகும் இருக்காது நமக்கு இது புரிஞ்சே ஆகனும்.

    என்ன பொருத்தவர, இந்த நிலமை நீடிச்சுதுனா நமக்கான உரிமை கிடைக்கவே கிடைக்காது நாமே அதற்கு தடையாக இருப்போம்.

    நாம பால்வினை நோய் / எச்.அய்.வி பரிசோதனை ஓரு முறையாவது செய்திருக்கோமா?. 98சதவீதம் இல்ல. நம்மல பற்றி நமக்கே கவலை இல்ல. இந்த இலட்சனத்துல உரிமைய பற்றி பேசுகிறோம்.எனக்கு சிரிப்புதான் வருது.

    நாம முதல் வேலையா அரியாமை என்னும் இந்த இரிட்டில் இருந்து வெளிவருவோம் இதற்கே பல வருடம் தேவைபடும்.அதன் பின்புதான் நம்ம உரிமைய பற்றி பேசுவே நமக்கு உரிமையுண்டு.

    ஓரு நாள் இது கண்டிப்பாக நடக்கும்.

    நன்றி

    கமல்தாசன் குமார்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பா..... இந்தியாவும் அப்படி ஒரு போராட்டத்தை எதிர்கொள்ளும் சூழல் வரும்னு நம்புவோம்....

      Delete