இன்னும் முழுமையாக பரபரப்பில் சிக்கிடாத அந்த காலை
நேரப்பொழுதில்,சென்னை புரசைவாக்கத்தின் கடைக்கோடி பகுதியில் இருக்கும் அந்த
பிரம்மாண்ட வீடு கலகலப்பாக காட்சி அளிக்கிறது... வீட்டின் வாசலில் தங்க முலாம்
பூசப்பட்ட பெயர் பலகையில், “அ.தர்மன், தர்மா ரியல் எஸ்டேட் அதிபர்” பெயர்
தகதகத்தது... வீட்டு வாசலில் ஏழெட்டு நடுத்தர வர்க்க ஆசாமிகள் கையில் மாலையோடும்,
பூக்களோடும் காத்திருந்தனர்... அவர்களை பார்த்து வெகுநேரம் குறைத்துக்கொண்டே
இருந்தது சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த ‘லாப்ரடார்’ வகை நாய் ஒன்று... உள்ளே
ஹாலில், குஷன் சோபாக்களில், மாலையில் இருந்த பூக்களை ஒன்று படுத்தி அடுக்கி வைத்து
“பொக்கேக்கள்”ஆக வைத்திருந்தனர் சில கோட் சூட் ஆசாமிகள்...
அமர்ந்திருந்த கண்கள் அவ்வப்போது அருகிலிருந்த அறை வாசலையும்,
தங்கள் கைக்கடிகாரத்தையும் பார்த்துக்கொண்டிருந்தன... ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ்
என்று சகல நாளிதழ்களையும் புரட்டிய அசதியில் ஒருவர் கண் அசந்துவிட்டார்.... சில
நிமிடங்களில் அறைக்குள்ளிருந்து வெளிப்பட்டார் ஒரு முப்பது வயது ஆசாமி... இடது கை
ராடோ வாட்ச், விரலில் மின்னிய பிளாட்டினம் மோதிரம், கழுத்தை நெருக்கிய மைனர்
செயின், டிப் டாப் உடை போன்ற செயற்கை அழகை நாம் சட்டென கவனிக்க முடியாத அளவிலான
இயற்கை அழகு அவனை அதிகம் மிளிர வைத்தது....
“கண்கள் திராட்சை பழம், உதடு செர்ரி பழம்” என்று நம் வர்ணனைகளுக்கு
அப்பாற்பட்ட ஒரு ஈர்ப்பு அவனை பார்த்த மாத்திரத்தில் நம்மை ஆட்கொண்டுவிடும்....
அவன்தான் தர்மன்.. பெயர் பழசானாலும், ஒவ்வொரு நாளும் தன் அழகை
புதுமைப்படுத்திக்கொண்டு இருக்கும் அழகன்... உதடு பிரிபடாத புன்னகையுடன், ஹாலில்
அமர்ந்திருந்தவர்களை பார்த்து வணங்கினான்...
“பிறந்தநாள் வாழ்த்துகள் தர்மா சார்...”
“ஹாப்பி பர்த்டே தர்மா ஜி...”
“வாழ்த்துக்கள் சார்” பொக்கேக்களை வாங்க இரண்டு கைகள் போதவில்லை,
உதவிக்கு அருகில் நின்ற உதவியாளரின் இரண்டு கைகளும் பொக்கேக்களை வாங்கி சோபாவில்
வைத்தது.... கை குலுக்கி எல்லோருக்கும் நன்றி சொல்லி கொண்டிருந்த நேரத்தில் திடீர்
பரபரப்பை உண்டாக்கும் வண்ணம், வெள்ளை ஆடைகள் படை சூழ ஒரு முரட்டு ஆசாமி கை கூப்பி
வணக்கம் சொல்லியவாறே உள்ளே வந்தார்....
தன்னை சூழ்ந்து நின்ற கோட் சூட் ஆசாமிகளை அவசரமாக விலக்கிய தர்மன்,
வெள்ளை வேஷ்டி முரட்டு ஆசாமியை நோக்கி வேகமாக விரைந்து கை கூப்பி வணங்கினான்....
“என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா....” சொல்லிக்கொண்டே வணங்கிய வேகத்தில், காலில்
விழுந்து எழுந்தான்...
உரத்த சிரிப்போடு, தர்மனை எழுப்பிவிட்டு கைகூப்பி வாழ்த்திய
முரட்டு ஆசாமி, “காப்பி பர்த்ரேட்” என்றார்.... சூழ்ந்து நின்றவர்கள், தத்தமது
முகங்களை மறைத்து சிரித்திட, முரட்டு ஆசாமியின் உதவியாளர் மட்டும், “பர்த் ரேட்
இல்லிங்கய்யா, பர்த் டே” என்று திருத்தினான்.... அதை பொருட்படுத்தாத ஆசாமி,
தர்மனின் கைகளில் ஒரு சாவியை கொடுத்து, “என்னோட பரிசு மாப்ள!” என்றார்...
சிரித்துக்கொண்டே அதை வாங்கிய தர்மன், சாவியை உற்றுப்பார்க்க,
தொடர்ந்த மாமனார், “ஆடி காரு மாப்ள.... சுஜா சொன்னா, அது வாங்கனும்னு சொல்லிகிட்டே
இருந்தியளாம்ல!” சிரித்தார்.... ‘ஆடி’ என்று சொல்லும்போது மட்டும் ஒருமுறை
உதவியாளனை பார்த்து, தான் சொல்வது சரிதானா? என்பதை உறுதி செய்துகொண்டார் மாமா....
தர்மனுக்கு இது புதிதல்ல... எது வேண்டுமோ, அதை தான் வாங்க போவதாக மனைவியிடம்
சொன்னால், அடுத்த ஒரு வாரத்துக்குள் அந்த பொருள் வீட்டு வாசலில் வந்து நிற்கும்...
வெளியில் கட்டியிருக்கும் நாய் முதல், கையில் கட்டியிருக்கும் வாட்ச் வரை அதன்
பட்டியல் நீளும்....
அவசரமாக சாப்பிட கூட மறுத்த மாமா, “பொதுக்குழு மீட்டிங் இருக்கு
மாப்ள... த்தா, அந்த மாவட்டம் என்னையவே சீண்டி பாக்குறான்... அவன் வேட்டிய
கிழிச்சு கச்சி பேனர் கட்டுனாத்தான் எனக்கு தூக்கம் வரும்” கோபமாக பேசினாலும்,
இறுதியில் சிரித்தார்... இறுதி சிரிப்பிற்காக காத்துக்கொண்டிருந்த நான்கைந்து
வெள்ளை வேஷ்டிகளும், காரணம் புரியாமல் சிரிக்க, மாமா அங்கிருந்து கிளம்பினார்....
வாழ்த்தியவர்களை வழி அனுப்பிவிட்டு, அவசரமாக சுஜா செய்த சுமார் ரக
கேசரியை நான்கு முறை “சூப்பர்” சொல்லி சாப்பிட்டுவிட்டு வேகமாக காரை நோக்கி
விரைந்தான் தர்மா.... யப்பா!... என்னா காரு!.... ரன்வீர் கபூர் சட்டை போடாமல்
சாய்ந்து நிற்பது போல, அப்படி ஒரு அழகு.... இரண்டு முறை சுற்றிப்பார்த்த தர்மன்,
இனி தனக்கே உரியதான அந்த சொகுசு மகிழுந்தில் ஏறி அமர்ந்தான்....
ஏசி உடலை சிலிர்ப்பாக்க, ரகுமான் இசை மனதை சிலிர்ப்பாக்கிக்கொண்டு
இருந்தது... வழியில் செல்வோர் தான் செல்லும் வாகனத்தை வேடிக்கை பார்ப்பதில்
உள்ளுக்குள் ஒரு அலாதி இன்பம்... நேரம் புரியாமல் அலைபேசி சினுங்கியது... எடுத்து
பார்த்தான், புது எண்... பாடலின் ஒலி அளவை குறைத்துவிட்டு, ப்ளூடூத் ஹெட்செட்டை
காதில் பொருத்தினான்....
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் தர்மன் சார்...”
“நன்றி.... நீங்க யாரு?”
“மாமனார் கிட்ட புடுங்குனதல்லாம் பத்தாதுன்னு, இப்போ புதுசா
புடுங்குன காரையும் ரசிச்சு ஓட்டிட்டு இருக்கீங்க போல!.... இந்த நூற்றாண்டின்
சிறந்த ‘புடுங்கி’னு உங்களுக்கு பட்டம் கொடுக்கலாம் சார்...” பேச்சில் ஒரு
நிதானமும், ஒரு அசாத்திய திமிரும் தெரிந்தது....
எரிச்சலான தர்மன், “ஏய்!... நீ யாருன்னு கேட்குறேன்’ல?...”
உறுமினான்....
“இதுக்கல்லாம் கோபப்பட்டா எப்டி சார்... பிறந்தநாள் அன்னிக்கு
உங்கள இன்னும் நெறைய சந்தோஷப்படுத்த நான் விரும்புறேன்....”
“நீ யாருன்னு சொல்றதா இருந்தா பேசு... இல்லைனா கட் பண்ண போறேன்
காலை...”
“உங்களுக்கு கட் பண்ண வேண்டியதை முன்னாடியே கட் பண்ணிருந்தா, இந்த
அளவுக்கு ஆகிருக்காது... இனி கால் கட் பண்ணி என்னசார் புண்ணியம்?... நான் யார்னு
தெரியனுமா?.... உங்க நலம் விரும்பி சார்.... உடனே நீங்க கார்லேந்து இறங்கி, காரை
ஒருதடவை கவனிச்சு பாருங்க.... இல்லைனா உங்களுக்கு தேவை இல்லாத அசிங்கம்...”
கோபத்தில் அழைப்பை துண்டித்த தர்மன், அந்த எண்ணை உற்று
நோக்கினான்.... உடனே இதை எஸ்.ஐ ரகு’கிட்ட கொடுத்து, ட்ரேஸ் பண்ண சொல்லணும்....
கண்டுபிடிச்சு அவனை..... பிறந்தநாள் அதுவுமா, எரிச்சலாக்கிட்டான், யூஸ்லஸ்....
சென்று கொண்டிருந்த மகிழுந்தை வேகமாக பின்தொடர்ந்து வந்து வழி
மறித்த போலிஸ் வாகனம் ஒன்றிலிருந்து, இரண்டு காவலர்கள் இறங்கினர்... காருக்குள்
இருந்த தர்மனை இறங்குமாறு சைகை செய்ய, ஏற்கனவே கடுப்பில் இருந்த தர்மன் இன்னும்
கோபமானான்... இறங்கிய வேகத்தில், “என்ன வேணும்?... லைசன்ஸ், ஆர்.சி புக்
இதல்லாமா?... எஸ்.பி ராஜ ரத்தினம் கிட்ட பேசுறீங்களா?.... நான் யார் தெரியுமா?...
எக்ஸ் எம்.எல்.ஏ அறிவு செல்வனோட மாப்பிள்ளை... இந்த கார் கூட அவர் பேர்’லதான்
இருக்கு...” பொறிந்து தள்ளிய தர்மனை, இடை நிறுத்த செய்த காவலர், “நீங்க யாரா
வேணாலும் இருங்க சார்.... அதுக்காக, நம்பர் ப்ளேட்’ல இப்டியா எழுதி ஒட்டுறது?....
பப்ளிக் நியூசன்ஸ் பாத்துட்டு சும்மா இருக்க முடியாது சார்” என்றார்....
தர்மன் ஒன்றும் புரியாதவனாக, எண் பலகையை நோக்கி நகர்ந்தான்... அதை
பார்த்த தர்மன் அதிர்ச்சியில் உறைந்து போனான்... எச்சிலை விழுங்கியவனாக, அதில்
ஒட்டப்பட்டிருந்த, “ஆமா... நான் ஒரு gay” என்ற பேப்பரை கிழித்தான்
அவசரமாக... எரிச்சல், கோபம், பயம், விரக்தி, குழப்பம் என்று சகலமும் சூரியனை
சுற்றிய கோள்களை போல தர்மனை சுற்றி வலம் வந்தது....
தலையிலடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினர் காவலர்கள்... “அது
ஒரு தேசிய கட்சி... அதுல ஒருதடவை எம்.எல்.ஏ’வா இருந்ததுக்கே அந்தாளு ஆட்டம் தாங்க
முடியல... இதுல அவன் சொந்தக்காரனல்லாம் இப்டி இம்சை பண்ணினா நாம எங்க போறது?....
இந்நேரம் எவன் வேட்டி கட்சி ஆபிசுல கிழிஞ்சுதோ தெரியல... வாய்யா போகலாம்”
சொல்லிக்கொண்டே காவல் வாகனத்தில் ஏறி புறப்பட்டனர் காவலர்கள்... சில நிமிடங்கள்
தன்னை மறந்து அங்கேயே நின்ற தர்மன், சூரியனின் கதிர்கள் உடலை சூட்டினால் பதம்
பார்க்க தொடங்கிய நேரத்தில்தான், தன்னை உணர்ந்தவனாக அவசரமாக மகிழுந்திற்குள்
ஏறினான்....
குளிரூட்டப்பட்ட வாகனத்தால் தர்மனின் வியர்வையை காயவைத்திட
முடியவில்லை... உடலின் வியர்வை, அமர்ந்திருந்த இருக்கையை பதம் பார்த்தது....
ஆனாலும் தனக்குள் ஒரு சமாதானம் செய்துகொண்டான்... “எவனோ ஒருத்தன்
இப்டி ஒட்டுனதால என்னை கே’ன்னு கண்டு பிடிச்சிடுவாங்களா?... இப்டி அவதூறு
கிளப்புறதல்லாம் சாதாரணம் தானே... முகத்தை மறைச்சு இப்டி ஒட்டுறவனுக்கு ஏன்
பயப்படனும்?” ஓரளவு பெருமூச்சுடன் சமாதானம் ஆனாலும், இன்னும் விடை தெரியாத பல
கேள்விகள் அவனுள் எழுந்தன....
“ஒட்டினது யார்? எங்க ஒட்டிருப்பாணுக? தன்னை பற்றிய விஷயம்
தெரிந்தவனா? தெரிந்திருந்தாலும் ஆதாரம் வைத்திருப்பவனா? இந்த விஷயத்தால்
மேற்கொண்டு எதுவும் பிரச்சினை வருமா?” எதுவும் புரியவில்லை....
மீண்டும் அலைபேசி அலறியது....
“ஹலோ தர்மா சார்....”
“யாரு?” குரலில் உயிர் இல்லை...
“உங்க நலம் விரும்பி தான் சார்.... நான்தான் அப்பவே சொன்னேன்ல,
காரை ஒருதடவை கவனிச்சு பாருங்கன்னு.... அப்பவே நான் சொன்னத கேட்டிருந்தா இந்த
அசிங்கம் உங்களுக்கு தேவையா?” சிரித்தான்....
“ஏய்... யார் நீ?... நீதான் அதை ஒட்டுனதா?... இன்னும் ஒரு மணி
நேரத்துல உன் ஜாதகத்தையே கண்டு பிடிச்சு, உன்னை என்ன பண்றேன் பாரு.... நீ பொய்யான
விஷயத்தை எழுதினா, அதை இந்த உலகம் நம்பிடும்னு உனக்கு நம்பிக்கையா?” பதட்டத்தில்
வார்த்தைகள் குழறினாலும், அதை சமாளித்து தனக்கு பயம் இல்லை என்பது போல பேசினான்
தர்மன்....
“ஹ ஹ ஹா.... எனக்கு ஒரு மணி நேரம் டைம் தரீங்களா?... உங்களுக்கு
நான் அஞ்சு நிமிஷம் டைம் தரேன்.... அஞ்சு நிமிஷத்துல ஒரு அசர வைக்கும் போட்டோ
ஒன்னு உங்க மனைவியோட ஈ.மெயில் ஐடி’க்கு போகப்போகுது.... முடிஞ்சா தப்பிச்சுக்கோங்க...
அவங்க மெயில் ஐடி suja*****@gmail.comதானே?... உங்க டைம்
ஸ்டார்ட்ஸ் நவ்...” மீண்டும் சிரித்தான்.....
அலைபேசி துண்டிக்கப்பட்டது.... வழிந்த வியர்வையை அவசரமாக
கைக்குட்டையில் துடைத்தான் தர்மன்.... என்ன புகைப்படம் அது? நிஜமாகவே
அனுப்பிடுவானா?... சற்று நேரம் யோசித்ததில் ஒரு நிமிடம் கடந்துவிட்டது... இன்னும்
நான்கு நிமிடங்கள்தான், யோசிக்க இனி நேரமில்லை....
அவசரமாக வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி, அலைபேசியில் தன்
மனைவியின் மின்னஞ்சல் முகவரியை இணையத்தில் பதிந்தான், கடவுச்சொல் தெரியாது....
கடவுச்சொல் என்னவாக இருக்கும்?....
“t h a r m a n” கடவுச்சொல் தவறென்று காட்டியது....
“a
r i v u s e l v a n” இதுவும் இல்லை.... அப்படியானால் என்னவாக
இருக்கும்?....
கண்களை மூடி யோசித்தான், இன்னும் ஒரு நிமிடம் தான் மீதி
இருக்கிறது.... ஒருவேளை சுஜா ஆன்லைனில் இருந்தால், இன்னும் ஒரு நிமிடத்தில் தான்
ஏதோ பிரச்சினையில் சிக்கும் நிலை.... அவளிடம் கடவுச்சொல் கேட்டால், அதற்கு ஆயிரம்
கேள்விகள் கேட்பாள்... அவளே திறந்து பார்த்திடும் ஆபத்தும் உள்ளது...
பதறினான்.....
சட்டென அவன் மனதிற்குள் தோன்றியது, “ஜூலி குட்டி.....
சாப்பிடிட்டிங்களா” சுஜா அதிகம் பேசும் நபர், வீட்டில் இருக்கும் நாய் தான்....
அந்த நாய்’க்காக பல நாள் சண்டை வந்ததல்லாம் வீட்டு வரலாறு.... நாயை “நாய்” என்று
சொன்னதுக்கு ஒரு நாள் உலகப்போர் வந்ததல்லாம் நான்கு சுவர்களுக்குள் நடந்த ரகசிய
உண்மைகள்...
உடனே அழுத்தினான், “j u l i e k u t t y” திறந்து
கொண்டது.....
சரியாக அடுத்த இருபத்தி ஏழு நொடிகளில், ஒரு புகைப்படம் மின்னஞ்சலாக
வந்தது.... நலம் விரும்பி என்கிற பெயரில்...
திறந்தான்... அதிர்ச்சியில் மேலும் உறையவைத்தது அந்த புகைப்படம்...
அரை நிர்வாணத்தில் தர்மனும், இன்னொரு இளைஞனும் கட்டிப்பிடித்திருக்கும் காட்சி....
தெளிவற்ற புகைப்படம், ஆங்காங்கே பல புள்ளிகள்.... ஆனாலும், அது தர்மன் தான் என்பதை
யாரும் மறுக்க முடியாத அளவிலான படம்.... நெற்றி தழும்பு முதல், கழுத்து செயின் வரை
அப்பட்டமான தர்மனை தெளிவாக காட்டும் படம்.... இன்னொரு இளைஞன் யார்?... அது எப்போ
எடுத்த படம்? ஒன்றும் புரியவில்லை... சுற்றி இருக்கும் காட்சிகள், அது மலர் லாட்ஜ்
போல தெரிகிறது.....
உடனே அந்த படத்தை அழித்த தர்மன், இதனை செய்தது யாராக இருக்கும்?
என்று யோசிக்க தொடங்கினான்.... யோசிக்கவல்லாம் வேண்டாதவனாக மீண்டும் அலைபேசி
பதறியது....
“ஹலோ... யாருடா நீ?” கோபம் மேலோங்கிய குரலில் தர்மன்....
“என்ன தர்மா சார்?... ஏன் இவ்வளவு பதற்றம்?.... சுஜா மேடம்
பாக்குறதுக்கு முன்னாடி பாத்துட்டிங்க போல?” சிரித்தான்....
“யார் நீ?...உனக்கும் அந்த சஞ்சீவ்’க்கும் என்ன சம்மந்தம்?...
திருட்டு பசங்களா?”
“சஞ்சீவா?... ஓ! அந்த போட்டோல இருக்குற பையன் பேரு சஞ்சீவா?...
இதுல வேற யாருக்கும் சம்மந்தம் இல்ல, நான் ஒன் மேன் ஆர்மி சார்...”
“யார் நீ?... ஏன் இப்டிலாம் பண்ற?” இறைஞ்சும் குரலில் கேட்டான்
தர்மன்....
“நானா?... உன்னால பாதிக்கப்பட்டவன்’னு வச்சுக்கோ....”
“பாதிக்கப்பட்டவனா?” யோசிக்கும் தொனியில் இழுத்து சொன்னான்
தர்மன்....
“ஹ ஹ ஹா.... ஒன்னு ரெண்டு ஆளா இருந்தா ஞாபகம் இருக்கும்...
நூத்துக்கணக்கான ஆட்கள்ல என்னைய கண்டுபிடிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்...”
சிரித்தான்...
அந்த சிரிப்பு மீண்டும் தர்மனை வெறுப்பேற்றியது.... கோபத்தில்
கையால் ஓங்கி சீட்டில் அடித்தான், ஆடி கொஞ்சம் அசைந்து நின்றது....
“நீ ரொம்ப விளையாடுற.... நான் எதுக்கும் துணிஞ்சவன், இதை நீ
சீக்கிரம் புரிஞ்சுப்ப...” வார்த்தைகளில் அனல் பறந்தது....
“தப்பு பண்றீங்களே தர்மா சார்.... உங்க ஒவ்வொரு கோபமும்,
உங்களுக்கு அதிகமான டென்ஷன்’ஐ தான் கொடுக்க போகுது... ஓகே, அடுத்த விளையாட்டு
இப்போ ரெடி.... இப்போ நீங்க இருக்குற இடத்துலேந்து திருவல்லிக்கேணி போக அரை மணி
நேரம் ஆகும்... ஆனால், இன்னும் இருபது நிமிஷத்துல, அங்க கட்சி ஆபிஸ்’ல இருக்குற
உங்க மாமா’வோட செல்லுக்கு ஒரு அற்புதமான வீடியோ எம்.எம்.எஸ்’ஆ போகப்போகுது.....
யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்....” அலைபேசி அணைக்கப்பட்டது....
************
கிழிந்த வேட்டிகளுக்கும், உடைந்த மண்டைகளுக்கும் நடுவில் பெரிய வயிறு
குழுங்க சிரித்துக்கொண்டிருக்கிறார் அறிவு செல்வன் எக்ஸ்.எம்.எல்.ஏ.... நாற்பத்தி
ஏழு கோஷ்டிகளுக்கும் மத்தியில் மிகப்பெரிய போர் மூன்டதன் அடையாளமாக, கட்சியின்
தேர்தல் அறிக்கைகள் காகித குப்பைகளாக அலுவலக வாசலில் மிதந்தன....
“அவன அடுத்த தேர்தல்ல நிக்கவே விடக்கூடாது... பாத்துரலாம் நானா?
அவனா?ன்னு... என்கிட்டயே வால் ஆட்டுறான் அந்த *****பய” ஏனோ இதையும்
சிரித்துக்கொண்டே சொல்கிறார் அறிவு செல்வன்... இதற்கு சிரிப்பதா? ஆறுதல் சொல்வதா?
என்று புரியாமல் அவரை சுற்றி கலவையான முக பாவனையோடு நின்றுகொண்டு இருக்கின்றனர்
நான்கைந்து தொண்டர் படையினர்....
குழப்பங்களை தற்காலிகமாக நிறுத்தும் விதமாக, தலைவரின் அலைபேசி
அழைத்தது... “அலோ... யாரு?”
“வணக்கம் அறிவு செல்வன் சார்.... இன்னும் பத்து நிமிஷத்துல உங்க
செல்போனுக்கு ஒரு எம்.எம்.எஸ் வரப்போவுது... அதை பாருங்க, உங்க மாப்பிள்ளை
ஹோமோசெக்ஸ் ஆசாமி’ன்னு உங்களுக்கு தெரியும்....” அழைப்பு துண்டிக்கப்பட்டது....
அறிவு செல்வனுக்கு ஒன்றும் புரியவில்லை... மீண்டும் அதே எண்ணுக்கு
அழைக்க, அழைப்பு ஏற்கப்படவில்லை....
தன் உதவியாளனை அருகில் தனியாக அழைத்த அறிவு செல்வன், “யோவ்... நம்ம
மாப்பிள்ளைய பத்தி எவனோ ஒன்னு சொல்றான்.... ஹோமோ செக்சு’ன்னா என்னய்யா?” ரகசியமாக
கேட்டார்...
“அது... அது... ஹோம்’ன்னா வீடு, செக்ஸ் ன்னா...”
“அது எனக்கு தெரியும்யா... மொத்தமா என்ன அர்த்தம்....”
“வீட்டோட மாப்பிள்ளை’னு சொல்ல வர்றான்னு நெனக்கிறேன் ஐயா”
“எவனோ திமிரு புடிச்சவன் போல... அப்புறம் என் செல்போனுக்கு ஏதோ
டீ.எம்.எஸ் அனுப்புறேன்னு சொன்னானே? அப்டின்னா?” தலையை சொறிந்தபடியே கேட்டார்....
“ஹ ஹ ஹா.... அப்போ செல்போன் கம்பெனி காரனா இருக்கும்யா....
அவன்தான் எதாவது டீ.எம்.எஸ் பாட்டு ரிங்க்டோனா வைக்குறதுக்கு கேட்டிருப்பான்...
நீங்க இதுக்கு போயி பதறிட்டிங்க...” சிரித்தான் உதவியாளன்.... விரல்களால் கணக்கு
போட்டு யோசித்த அறிவு செல்வன், சிரித்தபடியே, “ஹ ஹ ஹா.... என்னென்னமோ பேசி பீதியா
கெளப்புறானுக... சரி வா, கிளம்புவோம்” அலைபேசியை எடுத்து சட்டைப்பையில் போட்டவாறே
அங்கிருந்து கிளம்ப முற்பட, காலையின் தன் மாப்பிள்ளைக்கு பரிசாக கொடுத்த மகிழுந்து
சீறிப்பாய்ந்தபடி அலுவலகத்திற்குள் ப்ரேக் அடித்து நின்றது...
குழப்பத்தில் ஆச்சரிய பார்வையோடு மகிழுந்தையே பார்த்துக்கொண்டு
நின்றார் அறிவு செல்வன்....
வாகனத்திலிருந்து பரபரப்பாக இறங்கிய தர்மன், வேகமாக மாமாவை நோக்கி
விரைந்து வந்தான்... அவ்வப்போது கடிகாரத்தில் நேரத்தை பார்த்தபடி, ஒரு கையில்
வைத்திருந்த கைக்குட்டையால் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டே
வந்தான்....
மாமாவும் மாப்பிள்ளையை நோக்கி முன்னேறியவாரே, “என்ன மாப்ள?... என்ன
இப்டி பதறி வர்ரீங்க?...” பதறினார்....
அருகில் வந்ததும் கொஞ்சம் தடுமாறிய தர்மன், “இல்ல மாமா.... ஆபிஸ்’ல
ஏதோ பிரச்சினை’ன்னு கேள்விப்பட்டேன்.... அதான் உங்களுக்கு எதுவும்....”
வார்த்தைகளை விழுங்கினான்....
பலமாக சிரித்த அறிவு செல்வன், “இது என்ன புதுசா மாப்ள?... எத்தன
மண்டை ஒடயுதுனு எண்ணிக்கை வேணும்னா மாறுமே தவிர, இங்க சண்டை என்னைக்கு ஓஞ்சுச்சு?”
அருகில் நின்ற கைத்தடிகளும் சிரித்தன....
அப்போது மாமாவின் அலைபேசி, குறுந்தகவளுக்கான பீப் ஒலியை
ஒலித்தது...
மாமாவின் கை அதை எடுத்து பார்க்க முனைந்தபோது, அவசரமாக அதை
மாமாவிடமிருந்து வாங்கினான்... புரியாமல் விழித்த மாமாவை பார்த்து, “ஒண்ணுமில்ல
மாமா... கார் ரெஜிஸ்டர் பண்ணப்போ உங்க நம்பர் கொடுத்திருப்பிங்க, அதுக்கு எதுவும்
மெசேஜ் அனுப்பிருப்பாணுக... அதான்....” ஏதோ சமாளித்தான்....
“அதல்லாம் தெரியாது மாப்ள... எந்த சத்தம் கேட்டாலும், உடனே செவப்பு
பட்டனை அழுத்துவேன்... அவ்ளோதான்...” மாமாவும் சிரித்தார்...
மாமாவின் சிரிப்பு சத்தங்களுக்கு நடுவில் வந்திருந்த காணொளி காட்சியை
திறந்தான்.... முன்பு மனைவிக்கு அனுப்பிய போட்டோவின் காணொளி பிரதி... அறைக்குள்
நுழைவது முதல், கட்டிலில் அந்த இளைஞனுடன் கட்டிப்பிடிக்கும்வரை பார்த்ததுக்கே
பதறியது தர்மனின் உடல்.... இன்னும் அரை மணி நேரம் பாக்கி இருக்கிறது... முழுவதும்
பார்க்கவல்லாம் அது தருணமில்லை, அவசரமாக அந்த காணொளியை நீக்கிவிட்டு மாமாவிடம்
அலைபேசியை கொடுத்தவாறே, அவரிடமிருந்து விலகி மகிழுந்துக்கு விரைந்தான்...
மாப்பிள்ளையை சிலாகித்து மாமனார் பேசியவாறே, அவரும்
கிளம்பினார்....
காருக்குள் ஏறிய மறு நிமிடம் தர்மனின் அலைபேசி மிரட்டியது....
“ஹலோ தர்மா சார்... இப்பவும் தப்பிச்சுட்டிங்க போல.... நீங்க செம்ம
ப்ரைட் சார்... எப்டி இருந்துச்சு வீடியோ? கொஞ்சம் தெளிவு குறைவா இருக்கும்னு
நெனக்கிறேன்.... அடுத்த தடவை சரி பண்ணிக்கலாம்....” சிரித்தான்....
“இதல்லாம் எப்போ எடுத்த?... உனக்கு எப்டி இதல்லாம் தெரியும்? நீ
யார் ஆளு?” வார்த்தைகளில் பயம் தெரிந்தது....
“என்ன சார் இது? என்னை பெரிய தாதா ரேஞ்சுக்கு பில்டப் பண்றீங்க?..
உங்க மெயில் ஐடியை ஹாக் செஞ்சு, உங்க டேட்டிங் விஷயத்தை தெரிஞ்சுக்க எனக்கு
ஒன்னும் ஐ.எஸ்.ஐ அமைப்போட லிங்க் இருக்கணும்னு அவசியம் இல்ல.... அதே போல, மலர்
லாட்ஜ்’ல வேலை பாக்குற ரூம் பாய்’க்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து உங்க ரூம்ல பென்
கேமராவ வைக்க நான் ஒன்னும் மாபியா கும்பலா இருக்கணும்னு அவசியம் இல்ல... ரூம்ல லைட்
அணைக்காம அசிங்கம் பண்ணதுக்கு நான் ஒன்னும் பொறுப்பில்ல.... இதுக்காக ஒரு வாரம்
களப்பணி செஞ்சது மட்டும்தான் என் பங்கு....” மீண்டும் சிரித்தான்...
ஒவ்வொரு முறையும் அவன் சிரிக்கும்போது தர்மனுக்கு அனிச்சையாக
ஹைட்ரோக்லோரிக் அமிலம் சுரந்தது....
எச்சிலை விழுங்கியபடி யோசித்த தர்மன், “சரி... உனக்கு என்ன
வேணும்... தயவுசெஞ்சு சொல்லு....” இறைஞ்சினான்....
“இந்த பக்குவம் முதல்லயே வந்திருந்தா இவ்வளவு நேரம் அலைச்சல்
இருந்திருக்காது உங்களுக்கு.... வேற என்ன கேக்க போறேன்?... பத்து லட்சம் பணம் தான்
வேணும்....”
“பத்து லட்சமா?”
“உங்க தகுதிக்கு அது குறைவுதான்... என் தகுதிக்கு அது போதும்
சார்....”
“சரி... எங்க தரனும்?... பணத்தை வாங்கிட்டு மொத்த ஆதாரத்தையும்
கொடுத்திடனும்... ஓகே தானே?”
“ஓகே சார்... உங்கள மாதிரி பணக்கார ஆளுங்களுக்கு மட்டும்தான்
ரெட்டை நாக்கு, நாங்க எப்பவும் ஒரே பேச்சுதான்... அதே மலர் லாட்ஜ், அதே ரூம்
நம்பர் பதினெட்டு... இன்னும் அரை மணி நேரத்துல....” அழைப்பு துண்டிக்கப்பட்டது....
***************
மலர் லாட்ஜ் வாசலில் ஆடி நிற்பதை கவனித்த, வரவேற்பாளன், வாசல் வரை
வந்து தர்மனை வரவேற்றான்....
அவனை பார்த்து முறைத்த தர்மன், “லாட்ஜா நடத்துறிங்க?... உங்கள
அப்புறம் பார்த்துக்கறேன்...” வார்த்தைகளை முனுமுனுத்துவிட்டு, பதினெட்டாம் எண்
அறையை நோக்கி விரைந்தான்....
கதவு திறந்துதான் இருக்கிறது...
கட்டிலில் படுத்துக்கொண்டே தொலைக்காட்சியின் சேனல்களை
மாற்றிக்கொண்டு இருக்கிறான் அந்த நலம் விரும்பி... தர்மன் உள்ளே நுழையும்போது கூட,
கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு, தொடர்ந்து மீண்டும்
தொலைக்காட்சியில் கவனத்தை செலுத்த தொடங்கினான்.... அறைக்குள் சென்றதும், கதவை
சாத்திவிட்டு உள்ளே நடந்தான்.... தர்மன் கட்டிலில் அமருவதற்காக, மெத்தையில் இருந்த
நாளிதழ்களை அப்புறப்படுத்தினான் புதியவன்... ஆனால், அதை கண்டுகொள்ளாதவனாக சுவரோரம்
போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான் தர்மன்.... இன்னும்
தொலைக்காட்சியிலிருந்து கவனத்தை திருப்பவில்லை அந்த புதியவன்....
அவன் முகத்தை நன்றாக கவனித்தான் தர்மன்.... எங்கும் பார்த்த ஞாபகம்
இல்லை, குரல் கூட இதுவரை கேட்டிராத குரல்... இதுவரை பார்த்திடாத, பேசிடாத,
யாரென்றே புரிந்திடாத இவன்தான் “அச்சத்தின் உச்சத்தை” தர்மனுக்கு காட்டி
இருக்கிறான்.... சிறிய கண்கள், பெரிய மூக்கு, கருத்த உதடுகள் இதையல்லாம் தாண்டி
முகத்தை சிதைத்த பருக்களின் வடுக்கள்.... இதுதான் அந்த புதியவனின் மொத்த
அடையாளம்...
“என்ன தர்மா சார் யோசிக்கிறீங்க?.... கொஞ்சம் டிவி’ய பாருங்க,
உங்களுக்கு பொருத்தமான பாட்டு ஓடுது....” சிரித்தான் புதியவன்....
தொலைக்காட்சியில், தேர் சக்கரத்தில் தலை வைத்து, உடல் முழுக்க
அம்புகளை சுமந்தபடி படுத்திருக்கும் கர்ணனுக்கு பின்னணியாக கேட்கிறது பாடல்
வரிகள், “செஞ்சோற்றுக்கடன் தீர, சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா
கர்ணா....... வருவதை எதிர்கொள்ளடா....!” சீர்காழி கோவிந்தராஜனின் குரல் அநேகமாக
எட்டு, ஒன்பது என கட்டைகளில் எகிறிக்கொண்டு இருக்கிறது....
வேகமாக எழுந்து, அந்த தொலைக்காசியை அணைத்தான்... கோபத்தோடு
புதியவனை பார்த்தான்.....
“தர்மன்.... நல்ல பேர்...
தலைப்பு பொருந்தாத தமிழ்படத்தோட பேர் மாதிரி.... உங்கப்பா இப்டி பெயர்ல
குழப்புவாருன்னு தெரிஞ்சுதான், கடவுளே உங்களுக்கு இனிஷியலை பொருத்தமா வச்சிட்டார்
போல.... அ.தர்மன்... அதர்மன்.... ஹ ஹ ஹா....” சத்தமாக சிரித்தான்....
“லுக்... நீ கேட்ட பணம் இந்தா இருக்கு... முதல்ல அந்த
ஆதாரத்தயல்லாம் கொடு” என்றபடி கையில் வைத்திருந்த பையை தழைகீழாக கவிழ்க்க,
அதிலிருந்து ஆயிரம் ரூபாய் கட்டுகள் மெத்தையில் விழுந்தன... பணத்தின் வாசம், அறையை
நிரப்பியது....
புதியவனும் உதட்டை சிரித்தபடியே வைத்தபடி, மெமரி கார்ட், பென்
டிரைவ் போன்ற ஆதாரங்களை எடுத்து அருகில் வைத்தான்....
“அவ்வளவுதானா ஆதாரம்?” சந்தேகம் தர்மனின் குரலில் தெரிந்தது....
“ஹ்ம்ம்... அவ்ளோதான்...” கண் சிமிட்டி சிரித்தான் புதியவன்....
“உன்ட்ட ஒரு கேள்வி மட்டும் நான் கேக்கணும்... என்னைய ஏன் இவ்வளவு
டார்ச்சர் பண்ணின?... பணம் தான் வேணும்னா முதல்லயே கேட்டிருக்கலாம்ல.... என்னைய
கஷ்டப்படுத்தனும்னு தான் நீ இவ்வளவும் செஞ்சிருக்கன்னு எனக்கு தெரியுது.... என்னால
பாதிக்கப்பட்டவன்னு வேற சொன்ன, அப்டினா எந்த விதத்துல உனக்கு பாதிப்பு?...
தயவுசெஞ்சு இதை மட்டும் சொல்லு...” தன் மொத்த குழப்பங்களையும் வார்த்தைகளால்
வடித்து கேள்விகளாக தொடுத்து கொடுத்தான் தர்மன்....
“ஹ ஹ ஹா.... சொல்றேன்... ஆனால், என் வெயிட்டிங் சார்ஜ்
நிமிஷத்துக்கு பத்தாயிரம் ஆகும்... ஓகே’வா?” மீண்டும் சிரித்தான் புதியவன்...
“உனக்கு நிமிஷத்துக்கு இருபது ஆயிரம் வேணாலும் தரேன், தயவுசெஞ்சு
இந்த சிரிப்பை மட்டும் சிரிக்காம பதில் சொல்லு....”
“ஹ ஹ ஹா.... அது மட்டும் முடியாது சார்... இப்டி நான் சிரிச்சு பல
வருஷங்கள் ஆகுது.... உங்க லட்சங்களை தாண்டி, விலை மதிப்பில்லாதது இந்த
சிரிப்பு.... இப்போ ஒரு மாசமா நான் சுத்தமா சிரிப்பை மறந்ததுக்கு நீங்க ஒரு
காரணம்.... புரியலையா?.... என் முகம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” தர்மனின்
அருகில் முகத்தை கொண்டு சென்றான் புதியவன்....
தலையை பிய்த்து யோசித்தாலும், தர்மனுக்கு அந்த முகம்
புலப்படவில்லை... “இல்ல... தெரியல...” முகத்தை கவனித்தபடியே சொன்னான் தர்மன்....
“இருக்காது தான்... இருக்குறதுக்கு வாய்ப்பில்லை தான்....
கம்ப்யூட்டர் ஸ்க்ரீன்’ல தம்மாத்துண்டா பார்த்த போட்டோவ, இப்டி மனுஷனா பாக்குறப்போ
புடிபடாது.... அதுவும் உங்களுக்கு பிடிக்காத ஒரு முகம்’ங்குறதால ஞாபாகம்
வச்சிக்கிறது ரொம்ப கஷ்டம் தான்.... ஒரு மாசத்துக்கு முன்னாடி, பிளானட் ரோமியோவுல
நீங்க போட்டோ கேட்டு, நான் அனுப்பி ... நீங்க பதில் சொல்லாம போய்... ஞாபகம் வருதா
இப்போ?” உதட்டில் சிரிப்பு உதித்தாலும், புதியவனின் கண்களில் சோகம்
பளிச்சிட்டது.....
தர்மன், மீண்டும் நினைவு படுத்தினான்.... ஆனால், நினைவுக்கு
கொண்டுவர முடியவில்லை... “சரி, நடந்திருக்கலாம்.... அதுக்கு ஏன் இப்டி பண்ணின?...
பிடிக்கலைன்னு பதில் சொல்லாம இருந்திருப்பேன்... போட்டோ அனுப்பினா, கண்டிப்பா டேட்
பண்ணனுமா என்ன?” தன் நியாயத்தை நிலை நிறுத்த முயன்றான் தர்மன்....
“‘பிக்சர் கொடுக்கலைனா, பதில் சொல்ல மாட்டேன்’னு ஒரு வாக்கியம்
எழுதி வச்சிருப்பிங்க.... நல்லா பேசுன பிறகு, படத்தை அனுப்பினா பதில் சொல்ல
மாட்டிங்க... நான் பத்து தடவை ‘ப்ளீஸ்... ப்ளீஸ்... ப்ளீஸ்’னு கெஞ்சுன பிறகு,
பதினோராவது தடவைக்கு பதிலா ‘சாரி’னு பதில் சொல்வீங்க.... புடிக்கலைனா பக்குவமா,
உங்க விருப்பத்தை சொல்லலாம்ல?.... நாய் மாதிரி உங்ககிட்ட நான் கெஞ்சுன பின்னாடி,
எலும்பு துண்டு போடுற மாதிரி ஒரு ஒற்றை வரி பதில் ‘சாரி’னு வரும்.... உங்கள்ட்ட
இப்டி ‘சாரி, நாட் இன்ட்ரஸ்ட்டட், விருப்பமில்லை, பிடிக்கலை’னு நீங்க சொல்ற பதிலை
நாங்க கேட்க கூட, பத்து தடவை உங்ககிட்ட தொங்கனும்ல!... பிடிக்கலைனா உடனே சொல்லாம,
அப்டி என்ன உங்களுக்கு புடுங்குற அவசர வேலை வரும்?.... உங்க கம்ப்யூட்டர்
ஸ்க்ரீன்’க்கு பின்னாடி இருக்குறவனும் மனுஷன் தான்’னு ஏன் நீங்க புரிஞ்சுக்கறதே
இல்ல?” கண்களின் சோகம் மெல்லிய நீராய், கண்களின் ஓரத்தை நிரப்பிக்கொண்டு
இருக்கிறது....
“இதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா?.... இந்த விஷயத்துக்கு இவ்வளவு
பெரிய பழிவாங்கல் தேவையா?”
“ஹ்ம்ம்... சரிதான்...உங்கள பொருத்தவரை அந்த விஷயம் ஒரு சின்ன
விஷயம்... என்னை பொருத்தவரை அது மரண வலி... நிராகரிப்போட வலி உங்களுக்கு
தெரியுமா?... அனுபவிச்சுருந்தா தெரியும்.... முதல்ல புழு மாதிரி இந்த
நிராகரிப்புகளை பார்த்து துடிச்சேன், உங்களை போல சில குளவிகள் கொத்திக்கொத்தி
நானும் விஷ பூச்சி ஆகிட்டேன்.... அந்த வலியை உங்களுக்கு காட்டனும்னா, உங்களுக்கு
வலிக்குற மாதிரி நான் கொத்தனும்.... என்னோட வலியை உங்களுக்கு புரிய வைக்கணும்... அதான்
இந்த வழிய தேர்ந்தெடுத்தேன்.... உங்களை பழிவாங்கனும்னு நான் நினைச்சிருந்தா அந்த
வீடியோவ உங்க மனைவிக்கு அனுப்ப எனக்கு ரொம்ப நேரம் ஆகிருக்காது... உங்களுக்கு
தகவல் கொடுக்காம உங்க மாமா செல்லுக்கு போட்டோ அனுப்ப ரொம்ப நேரம் ஆகிருக்காது...
எனக்கு தேவை என் வலியை உனக்கு புரியவைக்கணும்.... நான் பட்ட வலியை உனக்கு
உணர்த்தனும், அவ்வளவுதான்... சில நேரங்கள்ல சின்ன மன ஆறுதலுக்காக பெரிய கலவரம்
பண்ணினா கூட தப்பா தெரியல...”
“இவ்வளவு நல்லவன் மாதிரி பேசுற நீ, பணத்துக்காக தானே இவ்வளவும்
செஞ்ச?... அப்போ என்னைவிட நீ ரொம்ப கெட்டவன் ஆகிட்டல்ல?”
“ஹ ஹ ஹா... பணம்... பணம் எனக்கு முக்கியமா இருந்திருந்தா உங்ககிட்ட
ஒரு கோடி கேட்க எனக்கு ரொம்ப நேரம் ஆகிருக்காது.... அதை கொடுக்குறதும் உங்களுக்கு
கஷ்டமா இருந்திருக்காது.... உங்க மாமா கிட்டயோ, மீடியா கிட்டயோ பேரம் பேசிருந்தா
கூட பணம் எனக்கு கிடைச்சிருக்கும்.... ஒருவேளை உங்ககிட்ட நான் பணம் கேட்காம
இருந்திருந்தா, நீங்க இங்க வந்திருக்க மாட்டிங்க... பயத்துல வேற எதாச்சும்
யோசிச்சு, முட்டாள்த்தனமா எதாச்சும் பண்ணிருப்பிங்க... உங்கள இங்க வரவழைக்கனும்னு
தான் பணத்தை கேட்டேன்... இந்த காகிதங்கள் எனக்கு மன நிறைவை கொடுத்திடாது...
நீங்களே அதை எடுத்துக்கோங்க....” கண்களின் ஓரத்தில் வழிந்த நீரை துடைத்தபடியே
எழுந்தான் புதியவன்... தர்மனின் அருகில் வந்து, அவன் கையை பிடித்து “பிறந்தநாள்
வாழ்த்துக்கள் தர்மா சார்.... இதுதான் என் பிறந்தநாள் பரிசு உங்களுக்கு.... இனி
அடுத்த மனுஷனுக்கும் மனசு இருக்குன்னு தெரிஞ்சுக்கோங்க..” ஆதாரங்களை தர்மனின்
இன்னொரு கையில் திணித்தபடியே அறையை விட்டு வெளியே செல்ல நடந்தான் புதியவன்...
மெத்தையில் கொட்டப்பட்டிருந்த காகித கட்டுகள், காற்றில்
தடதடத்துக்கொண்டு இருந்தன... அந்த பணத்தையும், தன் கையில் திணிக்கப்பட்ட
ஆதாரங்களையும் பார்த்துவிட்டு, அந்த புதியவனையும் பார்த்தான் தர்மன்....
கதவருகே சென்றபோது, மீண்டும் திரும்பி தர்மனை பார்த்த புதியவன்,
“ரூம் பில் மட்டும் செட்டில் பண்ணிடுங்க....” வழக்கமான அதே சிரிப்பு, இம்முறை
மட்டும் ஏனோ தர்மனுக்கு எரிச்சலை ஏற்படுத்தவில்லை.... (முற்றும்)
wow that was excellent ! starting to end semma racy ! Seriously you should publish this in some mainstream magazine.
ReplyDeleteBut why do you portray homosexuality always as something dark, secretive and shameful ? Tamil Samudhayam nammai appadithaan parkiradhu. Adhanaal naamum adhai edho asingamana sollakoodatha vishayamaaga anuga vendumaa enna ?
In the early 20th century Britain homosexuality was very much a taboo (as in present day India)and was punishable by imprisonment.
In such a miserable period author E.M. Forster wrote a great book "Maurice" which was about homosexual love. Though the characters experience shame, guilt, agony in their lives they finally find love and the book has a happy ending.
Such works of literature will give us hope even in hopeless circumstances (like how most of us in India find ourselves in).
So please, inimel happy ending or 'hopeful' aaga, nambikkai tharum oru kadhayai, mudivai ezhudhungal.
Keep up the good work :)
niraagaraikkapadum ovvoru aanin araikoovl.
DeleteBut PR la reject panninadhuku exaggerated reaction pola theriyudhu
Delete@alan....
Deleteநன்றி நண்பா.... சில கதைகளில் நிஜத்தை பிரதிபலிக்க இப்படி எழுத வேண்டி உள்ளது... மற்றபடி நிறைய கதைகளில் ஒருபால் ஈர்ப்பின் உன்னதத்தை வரிக்கு வரி சொல்லி இருப்பேன்... இதுவும் கூட நம்மவர்களுக்கான ஒரு எச்ச்சரிக்கைக்காகத்தான்.....
@sundar...
நன்றி நண்பா....
@nirupan...
அப்படி இல்ல நண்பா... நாம் பார்க்கும் கண்ணோட்டம், சில நேரங்களில் மற்றவர்களை விட வேறுபட்டதாக தெரியும்.... நாம் எளிதா கடந்து போற விஷயம் , சிலருக்கு வாழ்க்கையை மாற்றும் நிகழ்வாக இருக்கும்... அப்படித்தான் இதுவும்...
விஜய் அற்புதம் !! சில திருநங்கைகள் சென்னையில் செய்யும் கூத்துகள் !இந்த மாதிரி ரவுடி களுக்கு பாடம் ஓகே ! ஆனால் சில நடுத்தர வர்கத்தினரை இதயே தொழிலாக கொண்டு எமற்றுவோர்கள் இருகின்றனர்!அவர்களின் வாழ்கை குடும்பம் எல்லாமே இந்த மாதிரி அச்சுறுத்தும் நபர்களால் படிக்க படுகிறது ! சில பேர் விவஹாரது வரை செல்லும் நிலை !!
ReplyDelete+
நன்றி ஜூலி.... உண்மைதான்.... இதில் மிரட்டப்படும் கொடுமைகள் நிறைய இருக்கு... அதைப்பற்றி நான் முன்பே சொல்லி இருக்கிறேன்.... அது மன்னிக்க முடியாத குற்றம் என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை..
Delete