Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday, 15 September 2013

அரசியலில் கலக்கும் “GAY” அரசியல்வாதி – ரியல் ஹீரோ “சுனில்”....41 வயதான சுனில் பாபு பான்ட் (sunil babu pant) என்ற இந்த நடுத்தர வயது அரசியல்வாதிதான் இப்போதைக்கு நேபாள அரசியலின் மிகப்பெரிய பேச்சுகளுக்கு சொந்தக்காரர்.... இன்னும் இரண்டு மாதத்தில் நடக்க இருக்கின்ற நேபாள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கின்ற சுனில் பாபு,மிகப்பெரிய புரட்சியாளன் என்று சொன்னால் அது மிகையில்லை... அவர் செய்த புரட்சி, பல நூற்றாண்டு பிற்போக்கு எண்ணங்களை தவிடு பொடி ஆக்கியது.... அப்படி என்னதான் புரட்சி செய்தார் இந்த நபர்?.... ஒருபால் ஈர்ப்பை சட்ட ரீதியாக அங்கீகரிக்கவும், ஒருபால் ஈர்ப்பு திருமணங்களை சட்ட பூர்வமாக்கவும் நேபாள நாடு விரைவில் சட்ட திருத்தங்கள் கொண்டுவர இருக்கிறது.... அதற்கான விதையை விதைத்து, இன்றைக்கு மிகப்பெரிய சமூக விழிப்புணர்வை (நேபாளம் இந்து மத சமூக கட்டமைப்புக்குள் அடங்கிய நாடு.... இந்தியாவை போலவே அங்கும் ஒருபால் ஈர்ப்பை தவறாக பார்க்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க!)உண்டாக்கிய இந்த நபர் செய்தது புரட்சி தானே?.....
நேபாளத்தின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த சுனில், தனக்கு இருக்கின்ற வித்தியாசமான ஈர்ப்புக்கு பெயர் “ஒருபால் ஈர்ப்பு” என்பதையே பெலாரசில் கல்வி கற்க போனபோதுதான் அறிந்துகொண்டார்.... அங்கு அந்த ஒருபால் ஈர்ப்புக்கு எதிரான மக்களின் வெறுப்பை கண்டு மணம் நொந்தார், சட்டமும் சமூகமும் அந்த ஈர்ப்பை பாவ செயலாக எண்ணுவதை கண்டு வருத்தப்பட்டார்..... இந்த வருத்தத்தின் வேகத்தின் விளைவாகத்தான் 2001ஆம் ஆண்டு “நீல வைர அமைப்பு” (Blue diamond society) என்கிற ஒரு அமைப்பை தொடங்கினார்... ஒருபால் ஈர்ப்பு, திருநங்கைகள், எயிட்ஸ் போன்ற விஷயங்களை உள்ளடக்கிய இந்த அமைப்பை,  அடிப்படையில் சுனில் ஒரு கணினி பொறியாளர் என்பதால் டெக்னிக்கல் ரீதியாக மக்களிடம் கொண்டு சேர்த்தார்.... கொஞ்சம் கொஞ்சமாக அந்த அமைப்பை வலுப்படுத்தியதன் பலனாக, அந்த அமைப்பின் அலுவலகம் இருபது மாவட்டங்களில், ஒன்றரை லட்சம் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களோடு இயங்கிக்கொண்டு இருக்கிறது...... அமைப்பின் முக்கிய நோக்கமே, பாலீர்ப்பின் காரணமாக வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதை தடுப்பதும், மக்களின் மனநிலையை ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவாக மாற்றுவதும்தான்.... அந்த அமைப்பின் சார்பாக 2007ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குதான், அந்த நாட்டின் சட்ட திருத்த எண்ணம் வரை வழிவகுத்தது....
அந்த வழக்கின் தீர்ப்பு அந்த அமைப்புக்கு மட்டும் கிடைத்த வெற்றியாக இல்லாமல், ஒட்டுமொத்த ஒருபால் ஈர்ப்பு சமூகத்துக்கும் கிடைத்த “மைல் கல்” வெற்றியாக மாறியது.... ஆம், “ஒருபால் ஈர்ப்பு என்பது இயற்கையான ஒன்றுதான்... ஒருபால் ஈர்ப்பு திருமணங்களை சட்ட ரீதியாக அங்கீகரித்திட அரசு குழு அமைக்கவும் சிபாரிசு செய்யப்படுகிறது” என்பதுதான் அந்த தீர்ப்பு....
இவ்வளவுக்கும் பிறகுதான் அரசியலில் இணைந்தார் சுனில்.... நேபாளத்தில் சிறிய கட்சியான ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக 2008ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார்.... தேர்தல் முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது... ஆம், அந்த கட்சி போட்டியிட்ட தொகுதிகளில், வெறும் ஐந்தில் மட்டும்தான் கட்சி வேட்பாளர்கள் வென்றார்கள்.... அவர்களுள் நம் சுனில் பாபுவும் ஒருவர் என்பதுதான் நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்....
“ஒருபால் ஈர்ப்பு என்பது முதலாளித்துவத்தின் விளைவு” என்று ஒரு நாட்டின் அதிபர் சொல்லும் அளவிற்கு, ஒருபால் ஈர்ப்பு விஷயத்தில் நேபாளம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது... அந்த நிலைமையில், சட்ட மன்றத்துக்குள் நுழைந்த சுனில் மிகப்பெரிய சமூக மாற்றத்துக்கு வழிவகுத்தார்.... தன் அமைப்பு மூலம் ஏற்கனவே சட்ட ரீதியாக சாதித்த சுனில், சமுதாய விழிப்புணர்வை உண்டாக்க தன் தேர்தல் வெற்றியை பயன்படுத்திக்கொண்டார்...
தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களை அறிவிக்கும்போது, ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கணேஷ் ஷா அவர்கள், “சுனில் அவர்களை ஒட்டுமொத்த கே உலகத்தின் பிரதிநிதியாகத்தான் களம் இறக்குகிறோம்.... அந்த சிறுபான்மை இனத்துக்காக அவர் போராடுவார்” என்ற அறிவிக்கையோடு அறிவித்தபோது சொந்த கட்சிக்குள் கூட சிறு சலசலப்பு உண்டானது....
“நான் ஒரு ஒருபால் ஈர்ப்பாளன்.... பாலின சிறுபான்மையினரின் உரிமைக்காகவும், நலனுக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் உழைப்பதில் நான் என்றும் முனைப்போடு இருப்பேன்” என்று தன்னை ஒரு கே என்ற அடையாளத்தோடு களத்தில் இறங்கிய சுனிலின் வெற்றி, இந்த ஐந்தாண்டுகளை பார்க்கும்போது ஒட்டுமொத்த ஒருபால் ஈர்ப்பு சமூகத்துக்கான வெற்றியாகத்தான் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது....
சட்ட மன்றத்துக்குள், தன்னுடன் தேர்வான சக உறுப்பினர்கள் முன்னிலையில் கூட முதலில் சில வெறுப்புகளை பெற வேண்டி இருந்தது சுனிலுக்கு....  அந்த வெறுப்புகளை, வெறும் சிரிப்பால் சமாளித்த சுனில், ஒரு கட்டத்தில் அந்த உறுப்பினர்களில் பலரும் ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவான மனநிலை கொண்டவர்களாக மாறிட வழி செய்தார்.... சட்ட மன்றத்தின் ஓய்வு நேரங்களில், தன் லேப்டாப்பில் பதிவு செய்து வைத்திருந்த வரலாற்று உண்மைகளையும், அறிவியல் உண்மைகளையும், மற்ற நாடுகளின் ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவான மனநிலையையும் சக உறுப்பினர்களுக்கு அவர்கள் விரும்பும் வண்ணம் எடுத்துரைப்பாராம்.... முதலில், அதை கண்டு ஒதுங்கிய உறுப்பினர்கள், ஒரு கட்டத்தில் கூட்டமாக அமர்ந்து சுனிலின் பதிவேற்றங்களை பார்த்து உணர்ந்தார்களாம்....
நம் ஊரில் சொல்வது போல அவர், “ஆடுற மாட்டை ஆடி கறந்தார், பாடுற மாட்டினை பாடி கறந்தார்” என்பதுதான் உண்மை...
ஒரு கட்டத்தில் ஓய்வு நேரத்தை உறுப்பினர்கள் ஆவலோடு எதிர்பார்த்ததே, சுனிலின் பேச்சை கேட்கத்தான் என்கிற நிலை உண்டானது....
இப்படி யாரோ பல நபர்களிடம் எளிதாக உண்மையை உணர்த்த முடிந்த சுனிலால் ஒருத்தரிடம் தன் நிலையை விளக்கத்தான் அதிக கஷ்டமாக இருந்ததாக கூறினார்... அந்த ஒருவர்தான், சுனிலின் தாய்.... “என் மகன் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கு ஏதோ காரணம் சொல்றான், அது என்னவென தெரியவில்லை, ஏன்? என புரியவில்லை” என்பதுதான் முதலில் அம்மாவின் குழப்பம்... பின்னர் மெல்ல தன் தாய்க்கு பாலீர்ப்பு பற்றி விளக்கி, புரியவைத்து இப்போது காத்மாண்டுவில் தன் தாயுடன் வாழ்ந்து வருகிறார் சுனில்...
இவ்வளவு சமூக மாற்றத்துக்கு வழிவகுத்த சுனில் அவர்களை ஒரு பிரிவினர் ஹீரோ போல பாவிக்கும் அதே நேபாளத்தில் தான், சில பிற்போக்குவாதிகள் சுனிலின் மீது அவதூறுகளையும், கோபக்கனல் நிறைந்த வார்த்தைகளையும் அள்ளி வீசுகின்றனர்....
ஆனால், அதை எதையும் பொருட்படுத்தாமல், இன்றளவும் தன் கொள்கைகளில் இருந்து பின்வாங்காத சுனில் இதோ அடுத்த தேர்தலுக்கும் தயார் ஆகிவிட்டார்.... ஆம், அதே ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தேர்தலில் நிற்கும் சுனில், வரும் நவம்பர் மாதத்தில் இன்னும் அதிக வாக்குகள் வித்தியாசத்தோடு, இன்னும் அதிக பொறுப்புகளோடு சட்ட மன்றத்திற்குள் நுழைய இருக்கிறார்.... அந்த நுழைவு நிச்சயம் நேபாளம் தாண்டியும் ஒரு மாற்றத்தை ஒருபால் ஈர்ப்பு சமூகத்துக்கு கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு, அவரை வாழ்த்துவோம்....
எப்போதும் அமெரிக்காவை மட்டுமே சாட்சிக்கு அழைப்பதாக ஒருபால் ஈர்ப்பு நபர்கள் மீது பொதுத்தள மக்கள் ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்கள்... இப்போ நான் சொன்ன சுனில் வாழும் நேபாளம், இந்து மதத்தில் நம்மைவிட அதிக கலாச்சார நடைமுறையை பின்பற்றும் நாடு.... சுனில் போல, துணிந்த இதயங்கள் இருந்தால் நேபாளம் மட்டுமல்ல, இன்னும் பல நாடுகளை மாற்றிவிடலாம்.... “இந்தியாவில் இதல்லாம் நடக்காதுப்பா...”னு சொல்ற மக்கள், நேபாளத்தை மாற்றிய சுனில் பாபுவை பார்த்த பிறகாவது, தன் எண்ணங்களை மாற்றிக்கொல்வார்களா? என்பதுதான் என் கேள்வி.......
இனி நேபாளத்தின் ஹீரோ மட்டுமல்ல, என் ஹீரோவும் “சுனில் பாபு பான்ட்” தான்.....

3 comments:

 1. இதை கண்டறிந்து பதிவு செய்ததற்கு நண்றி விக்கி.
  உண்மையிலே இது வியக்கதக்க,சந்தோஸமான ஒரு நல்ல மாற்றம். நம்ம எல்லாத்துக்கும் ஒரு ஹுரோ தான். நம்மளபத்தி நம்ம சுற்றியிருக்கிறவர்களுக்கு முழுமையா தெரியபடுத்தனும். அதை சுனில் சரியா தெரியபடுதிற்காரு. அவருடைய முயற்ச்சிகள் இந்த சமுகத்தை சென்றடைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சேகர்..... ரீல் ஹீரோக்களை பார்த்து கை தட்டியதை நிறுத்திவிட்டு, சுனில் போன்ற ரியல் ஹீரோக்களை நாம தெரிஞ்சு பாராட்டனும்.... அதுதான் அவங்க உழைப்புக்கு நாம கொடுக்கும் மரியாதை...

   Delete
 2. நண்பா நேபாளம் இந்து நாடு தான். ஆனால் அங்கே புரட்சி பல வழிகளில் புகுந்திருக்கிறது, மாவோயிச ஆட்சி அங்கே வரும் அளவிற்கு புரட்சி வெடித்திருக்கிறது.இந்தியாவில் காவி ஆட்சி தான் கரை புரண்டு ஓடவிருக்கிறது. காவி நாயகன் மோடி தான் தேர்தலில் மீட்பராக களமிறக்கப்படுகிறார். அதையும் மீறி இப்படிப்பட்ட புரட்சி வெடிக்கவேண்டும் என்பதே என் அவா.

  ReplyDelete