சில
நாட்களுக்கு முன்பு ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் சொன்ன விஷயம்
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.... என் கருத்துகள் சிலவற்றில் முரண்பாடு உள்ளதாக
கூறிய அவர், முரண்பட்ட கருத்துகளில் முதன்மையானதாக “உங்களை போன்ற கதை எழுதும்
நபர்கள், காதலை மையமாக வைத்தே கதைகளை எழுதுறீங்க... அப்படி நிலை தொடர்வதால்,
காதலிக்காத நபர்கள் தாழ்வுமனப்பான்மையில் சிக்கிடுறாங்க... காதலித்தால் தான்
வாழ்க்கையோ? என்கிற ஒரு காதலிக்க வேண்டிய கட்டாயத்துக்குள் அவர்கள்
தள்ளிவிடப்படுகிறார்கள்” என்று கூறினார்....
ரொம்ப
நேரம் இதை பற்றி யோசித்தேன்... அவர் சொல்வது முற்றிலும் உண்மைதான்... நான் கதை
எழுத தொடங்கிய காலகட்டத்தில் “காமக்கதைகள்” மட்டும்தான் ஓரினசேர்க்கை என்கிற
சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கதைகளாக வலம் வந்தன... மெல்ல மெல்ல காதல் கதைகள் தலை
தூக்க தொடங்கிய அந்த காலகட்டத்தில், நீரோட்டத்தில் படகாக நானும் அதன் வழியை
பின்பற்றி வந்தேன்.... “காமம்” மட்டுமே ஓரினசேர்க்கையாக இருந்த காலகட்டத்தில்,
“காதல்” ஒருபால் ஈர்ப்பாக மாறியது....
அதனை
தொடர்ந்து நம் சமூக மக்களிடமும் நல்ல மாற்றத்தை நான் உணர்ந்தேன்....
பெரும்பாலானவர்கள் காதல் தேடும் படலத்தை தொடங்கினார்கள்.... காதல் கதைகளோடு
அழுதார்கள், சிரித்தார்கள், யோசித்தார்கள்... அது நல்ல மாற்றமாகத்தான்
தெரிந்தது....
ஆனால்,
சமீப காலங்களில் நான் பார்க்கும் சில விஷயங்கள், மேலே நண்பர் சொல்லும் விஷயத்தில்
உண்மை இருப்பதையும் எனக்கு உணர்த்தியது...
“காதலிக்கவில்லை”
என்றால் அதை ஒரு சபிக்கப்பட்ட வாழ்க்கை போல சிலர் பார்க்குறாங்க.... தான் ஒருவனை
காதலிக்கிறேன் என்று சொல்வதை பெருமைக்குரிய விஷயமாக பார்க்கிறார்கள்... அதனால்,
பார்க்கும் நபர்கள் எல்லோரையும் காதல் கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள்... “இவன்
நம்ம காதலனா இருப்பானா?” என்கிற எண்ணத்தோடுதான் நிறையபேர், அடுத்த நபர்களிடம் முதல்
பேச்சையே பேசுறாங்க... ஒரு கட்டத்தில் நான் பார்த்த பலபேர் “மூன்று முறை காதல்
தோல்வி, நான்கு முறை காதல் தோல்வி” என்று எண்ணிக்கையை பட்டியலிட்டு கொண்டிருப்பதை
காணமுடிந்தது....
இங்கே
நட்புக்கே சாத்தியமில்லையோ? என்கிற கேள்வி எழும் அளவிற்கு நிலைமை ஆகிவிட்டதை போல
தெரிகிறது...
அது
மட்டுமில்லை, இப்போதெல்லாம் இந்த காதலின் பெயரால் ஏமாற்றப்படுவதும் நடக்கிறது....
பணத்திற்காக, உடல் தேவைக்காக, வேறுசில உதவிகளுக்காக “காதல்” என்கிற வார்த்தையை
பயன்படுத்தும் நபர்கள் நிரம்பி இருக்கிறார்கள்... அப்படி ஏமாந்த நண்பர்கள்
பலரையும் நான் பார்த்திருக்கிறேன்.... “அவனாகத்தான் காதலிப்பதா சொன்னான்.... என்
வீட்லயே தங்க சொன்னேன், ரொம்ப க்லோசா பழகினோம்... நிறைய விஷயங்களை ஷேர் செஞ்சோம்,
என் ஏ.டி.எம். கார்டு கடவுச்சொல் உட்பட.... அவனுக்காக நண்பர் ஒருவர் மூலம் நல்ல
வேலை வாங்கிக்கொடுத்தேன்.... அதுக்கு பிறகு கொஞ்ச நாள்லயே என்னோட தொடர்புகளை
கொஞ்சம் கொஞ்சமா நிறுத்தினான்... இப்போ மொத்தமா நிறுத்திட்டான்” என்று சொல்லும்
ஒரு நபர், மிகப்பெரிய ஐடி நிறுவனத்தில் “லகரங்களை” ஈட்டிக்கொண்டிருக்கும் நண்பர்...
அதற்காக
நான் இங்கு காணப்படும் எல்லா காதல்களையும் தவறானதுன்னும், ஆபத்தானதுன்னும் சொல்ல
வரல.... நானேதான் இங்கு சந்தித்த ஒரு காதல் ஜோடியை பற்றிய விவரமான நேர்காணலை
பதிவுசெஞ்சேன்... அப்படி தெளிவான காதல்கள் நிறைய இருக்கு... ஆனால், ஆபத்தான
விஷயங்களை நோக்கி நம்மை நகர்த்தும், தவறான காதல்களும் இங்கே இருக்கு என்றுதான்
சொல்லவரேன்....
நிறைய
பேரின் அவசரம்தான் இந்த ஆபத்துகளுக்கு முதன்மை காரணமா விளங்குது.... “எப்படியாவது
அவசர அவசரமா ஒரு காதலனை கண்டுபிடிக்கனும்” என்கிற அவசரம் தான் உங்களை ஆபத்தான
வழியில் இழுத்து செல்லுது... நாளைக்கே உலகம் அழியப்போவது போலவும், அதற்காக
இன்றைக்கே அவர்கள் காதலனை கண்டுபிடிக்கும் அவசரத்தில் இருப்பது போல தெரிகிறது.... பொதுவாழ்க்கையில்
தத்துவம் பேசும் என் பல நண்பர்கள் கூட இதற்கு விதிவிலக்கு இல்ல... இதில் நான்
எழுதும் கதைகளின் வசனங்களை சிலர் மேற்கோள் காட்டி, அவங்க தரப்பை
நியாயப்படுத்துறாங்க.....
இப்படி
சமீபத்தில் “ஸ்ட்ரைட் நண்பனை காதலிப்பதாக கூறிய நண்பர்” ஒருவர் என்னிடம் யோசனை
கேட்டார்... அது தவறுன்னு ஒரு நான்கு பக்க கட்டுரை எழுதி, அவருக்கு பதில்
அனுப்பினேன்... அதற்கு நான்கே வரிகளில் அவர் பதில் சொல்லிவிட்டார்... “உங்க கதை
‘ஓரினமும் ஓரினம்தான்’ல வர்ற பாலா கூட கே’ன்னு நீங்க எந்த இடத்திலும் சொல்லல...
ஆனால், உண்மையான காதல் ஜெய்க்கும் என்று சொல்லி, பாலாவுக்காக காத்திருக்குற விக்கி
போலத்தான் நானும்... என் உண்மையான காதலுக்காக காத்திருக்கேன்” என்பதுதான் அந்த நண்பர்
அனுப்பிய பதில்.... எத்தனையோ கதைகளில் “ஸ்ட்ரைட்” நபரை காதலித்து துன்பப்படும்
எத்தனையோ கதாபாத்திரங்களை நான் உருவாக்கி இருக்கேன்.... அதல்லாம் விட்டுட்டு,
அவருக்கு தேவையான ஒரு வசனத்தை மட்டும் பிடுச்சிகிட்டு அவர் வாழ்க்கையை வாழப்போறதா
சொன்னா, நான் என்ன பண்ண முடியும்?....
சில
விஷயங்களை நீங்க புரிஞ்சுக்கணும்.... இங்க காதலிக்காதது ஒன்னும் “தெய்வக்குற்றம்”
இல்லை... உங்க எண்ணங்களை பகிர்ந்துகொள்ள ஒரு மனிதன் வேணும், அதுதான் இப்போதைக்கு
உங்களுக்கான அவசிய தேவை.... அந்த மனிதன் காதலனாக இருக்கணும்னு அவசியம் இல்ல, நல்ல
நண்பனாக கூட இருக்கலாம்... உங்கள் மனம் ஓரளவு தெளிவான பிறகு, உங்களுக்கு
உரியவனுடன் சில நாள் பழகி, ஒரு முழுமையான நம்பிக்கை வந்ததும் காதல் அத்தியாயத்தை
தொடங்கலாம்....
“இதயம்”
முரளி போல வருடக்கணக்கில் பொறுமையா இருக்கணும்னு சொல்லல... “கண்டதும் காதல், பேசிய
நொடியில் காதல், காணாமலே காதல்” போன்ற அதிசய காதல்களில் கவனமாக இருக்க வேண்டும்
என்பதுதான் என் ஆலோசனை.... உங்கள் மனம் சொல்லும் அவசர முடிவை கொஞ்சம் தள்ளி
வைத்துவிட்டு, அறிவின் வழியாக யோசித்து பாருங்க.... மனம் விட்டு நிறைய பேசுங்க,
அதற்கு பிறகு காதலுக்கு போகலாம்....
நான்
மறுபடியும் சொல்றது ஒண்ணுதான், “காதலிக்காதது ஒன்னும் தெய்வக்குற்றம் இல்ல”...
(இன்னும் சொல்லனும்னா, ஒருதடவை காதலிச்சு பாருங்க, காதலிக்காம இருந்திருந்தா
சந்தோஷமா இருந்திருக்கலாமோன்னு தோணும்.)...
“பதறிய
காரியம் சிதறிப்போகும்” என்பார்கள்... உங்கள் வாழ்க்கை சிதறாமல் இருக்க, பதறாமல்
காதலை தேடுங்க.... தேடல் தோல்வி அடைந்தால் கூட விரக்தி ஆகாம நிம்மதியா இருங்க...
“கடவுள் உங்களை நிம்மதியா வச்சிருக்கத்தான் காதலை கொடுக்கவில்லை போலும்!” என்று
அதையும் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு வாழுங்கள்.... காதலிப்பது இனிமையான விஷயம்
தான்... ஆனால், அதைவிட இனிமையான விஷயங்களும் இந்த உலகில் எவ்வளவோ இருக்குன்னு
புரிஞ்சுகிட்டு, அந்த இனிமையை தேடி வாழ்க்கை பயணத்தை தொடருங்கள்...... அத்தகைய
இனிமை நிறைந்த வாழ்க்கை அமைந்திட எனது மனமார்ந்த வாழ்த்துகள்....
நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா.. சமூக வலைதளங்களில் பார்த்தால் கணிசமான அளவு, இந்த "காதலனைத் தேடும்" ப்ரொஃபைல்கள்தான் இருக்கின்றன.. ஆனால், தன்பாலீர்ப்பு கொண்டவர்கள்தான் அதிகம் காதலைத் தேடுகிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. ஸ்டிரைட் நபர்களும் சளைக்காமல் தங்கள் துணையைத் தேடிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், முடிவெடுக்கும்போது, நம் மக்கள் அவர்களை விட கொஞ்சம் அவசரப்பட்டு விடுகின்றனர் என்றே சொல்லலாம்.. ஒரு வகையில், அவர்களுக்கு இருக்கும் ஒரு அனுகூலம் நமக்கு இல்லை. தன் காதலைப் பற்றி நம் நண்பர்களிடம் கூறி, நம்மால் கருத்துக் கேட்க முடியாது. அதேபோல, நமக்கு நன்கு பரிச்சயமான ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் கிடையாது. முன்பின் தெரியாத, ஏதோ ஒரு சமூக வலைதளத்தில் அறிமுகமான ஒரு Stranger-ஐத் தான் நாம் நண்பராக, காதலனாக ஆக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது.
ReplyDeleteஇன்னொருபுறம், நம் மக்களுக்கு, ஒரு சராசரி ஸ்டிரைட் நபரை விட பிரச்சினைகளும், மனக்கஷ்டங்களும் அதிகம். அவற்றில் பெரும்பாலானவை, நம் நெருங்கிய நண்பனிடம்கூட சொல்ல முடியாத இரகமாகத்தான் இருக்கும். அந்த மனக்கவலைகளை பகிரவாயினும் ஒரு நபர் நமக்குத் தேவைப்படுகிறார். அந்த ஒரு நபர், நம் காதலராக இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் நமக்குப் பிரச்சினை.
//இன்னும் சொல்லனும்னா, ஒருதடவை காதலிச்சு பாருங்க, காதலிக்காம இருந்திருந்தா சந்தோஷமா இருந்திருக்கலாமோன்னு தோணும்//
உண்மையிலேயே (என்னைப்போன்ற?!) சிலருக்கு, இது பட்டபின்தான் தெரியவரும்.
காலம் மாறும்போது காட்சிகளும் மாறும் என்று நம்பலாம்..
உண்மைதான்... பல சிக்கல்கள் இருக்குறப்போ, கொஞ்சம் நம்ம ஆளுங்க பொறுமையா காதலை கையாள்வதில் ஏன் குழம்புறாங்க?னு எனக்கு தெரியல...
Delete"இன்னும் சொல்லனும்னா, ஒருதடவை காதலிச்சு பாருங்க, காதலிக்காம இருந்திருந்தா சந்தோஷமா இருந்திருக்கலாமோன்னு தோணும்.)... "
ReplyDeleteMe too really enjoyed these lines.
பட்ட பின்பும், இன்னமும் எனக்கு நம்பிக்கை இருக்கு. காதல் மேல தப்பு இல்லை, நாம காதலிக்கிறவங்க தான் தப்பானவங்க அப்படின்னு (இது ஓரினகாதலுக்கு மட்டும் இல்ல, எல்லாவகை காதலுக்கும் பொருந்தும்). என்ன தான் நாம பொறுமையா ஒருத்தர தேடினாலும், இங்க பல விஷயங்கள் நம்மள மீறி தான் நடக்குது. என்ன ஒருத்தர காதலிச்சோம்நா பல சந்தோஷங்களை பெறலாம், பிரிவை சந்திக்கும் போது சில சங்கடங்களையும் பெறுவோம் (இதுவும் எல்லாவகை காதலுக்கும் பொருந்தும்).
ஓரினக்காதலில், காதல் முறிவு விகிதம் மிக அதிகம். அதற்கு பல சமுதாய சிக்கல்களும் சுயநலமுமே காரணம். மற்ற காதலில் இவன்/இவள் என்னை ஏமாத்திட்டான்னு/ஏமாத்திட்டானு சொல்லி கதறி அழவாவது முடியும். ஓரினக்காதலில் அது முடியாது, மனதிற்குள்ளேயே அழுதுகொள்ளவேண்டியது தான்.
ஓரினக்காதலின் வெற்றி சமுதாய மாற்றத்தில் தான் உள்ளது. முன்காலத்தில் காதலித்து ஓடிப்போனார்கள், இன்று காதலித்து திருமணம் செய்வோர் அதிகம். சமுதாய மாற்றமான அங்கீகரிப்பின் விளைவினாலேயே இது சாத்தியமாயிற்று. அதே போல இந்த ஓரினக்காதலையும் அங்கீகரிக்கும் மாற்றம் இந்த சமுதாயத்தில் நிகழ்ந்தால் மட்டுமே அதன் வெற்றி சாத்தியமாகும்.
இந்த மாதிரி கதைகளோட தாக்கம் நிச்சயம் இருக்கும். அது சில நல்ல விஷயங்களை கொடுக்கும். உதாரணம்: ஒருத்தன் காதல் வயப்பட்டால் நிச்சயம் அந்த காதல் முறிவு வரை அந்த ஒருவருடன் தான் கலவி செய்வான். அந்த காதலின் மிகக் குறைந்த வாழ்நாள் நேரம் 1 வருடம் என்று வைத்துக்கொள்வோம். அதே நபர் காதலில் இல்லை என்றால் நிச்சயம் குறைந்தது பத்து நபர்களிடமாவது கலவி செய்திருப்பான். இது தான் இந்த காதலில் உள்ள ஒருவருக்கும் காதல் வயப்படாத ஒருவருக்கும் உள்ள வித்தியாசம். கலவி மூலம் பரவும் பல நோய்களை தடுக்க இது உதவுகிறது எனலாம். இது ஓரினக்காதலின் ஒரு சிறு சிறப்பம்சம்.
எல்லா விஷயங்களிலும் கஷ்டங்களை பார்த்தால் சந்தோஷங்களை அனுபவிக்க முடியாது. சந்தோஷங்களை கணக்கில் வைத்துக்கொண்டு துன்பங்களை அனுபவிக்க தயாராகுங்கள். இது காதலுக்கும் கலவிக்கு மட்டுமல்ல வாழ்க்கையின் அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும்.
ஹ்ம்ம்.... காதல் தவறல்ல தான்... அதை நாம் கையாளும் முறைதான் தவறு நண்பா.... தங்கள் விளக்கத்துக்கும் எனது நன்றிகள்...
Deleteநான் மறுபடியும் சொல்றது ஒண்ணுதான், “காதலிக்காதது ஒன்னும் தெய்வக்குற்றம் இல்ல”... (இன்னும் சொல்லனும்னா, ஒருதடவை காதலிச்சு பாருங்க, காதலிக்காம இருந்திருந்தா சந்தோஷமா இருந்திருக்கலாமோன்னு தோணும்.)...
ReplyDeleteu r right vijay... well said
ரொம்ப நன்றி பாலா...
Deleteகாதல் என்பது உடல் சம்பந்தப்பட்டது அன்று. அது முழுக்க முழுக்க மனம் சம்பந்தப்பட்டது. இன்று பலரும் காதல் என்று வந்து விட்டால் அடுத்த நொடி படுக்கையறையைப் பற்றி நினைக்கிறார்கள். உண்மையில் சொன்னால் காதலித்த நபரை நம்மால் செக்ஸ் எண்ணத்திற்காக நினைத்து கற்பனை செய்து கொள்ளக் கூட முடியாது.அதற்கு காரணம் அங்கு காமம் பிரதானம் இல்லை. மனமே பிரதானம். மனம் இரண்டும் நெருங்கு ஒத்த சிந்தனையுடன் தினம் கூடிக் களித்திடுமாயின் இருவருக்கும் இடையில் நல்ல கெமிஸ்ட்ரி ஏற்பட்டு காதல் அதிகமாகி அன்பு ஊற்றாகி அதன் பின்னரே அங்கு காதலால் உண்டான கூடல் ஏற்படும். எடுத்த மாத்திரமே காதலிக்கிறென் எனச் சொல்லி அடுத்த நாளே படுக்கையறைக்கு அழைத்துச் சென்றால் அதற்கு பெயர் காதலே இல்லை. மனம் ஒன்றான பின்னரே மனம் போன போக்கில் அன்பு பெருக்கில் உடலும் இணைய வேண்டும்.அப்போதுதான் அந்த காதல்லுக்கும் மரியாதை. இது எல்லா விதமான காதலுக்கும் பொருந்தும். பெரும்பாலான கே நபர்கள் அழகான ஆண்களைப் பார்த்தால் அவர்களை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதனை நிறைவேற்றிட காதல் என்ற கபட நாடகம் ஆடி பின்னர் அந்த உடல் சலித்துப்போன பின் வேறு உடலைத் தேடுகிறார்கள். இதற்கு பெயர்தான் காதலா?? சிந்திக்க வேண்டும். உண்மையில் காமத்தை அடக்க முடியாவிட்டால் நாம் ஆசைப்படும் நபருக்கும் அதே மாதிரியான எண்ணம் இருந்தால் காதல் என்று அதனைக் கொச்சைப்படுத்தாமல் உங்கள் இருவரது எண்ணத்தையும் நடத்திக் கொள்ளுங்கள். அதற்கு தடையில்லை. காதல் என்ற பெயர் அங்கு வேண்டாம். காதல் தெய்வீகமானது. அது உடல் இன்பத்தையெல்லாம் கடந்தது. மனம் மட்டுமே அங்கு முக்கியம். காதலனுக்கு 6 பேக்ஸ் , அழகான தோற்றம், உடல்வாகு, நிறம் போன்ற எதுவும் காதலுக்கு அவசியமாவதில்லை. ஆனால் காமத்திற்கு இவையனைத்தும் தேவை. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இதற்காகத் தான் காதலிப்பதாக இருந்தால் தயவு செய்து காதலிக்காதீர்கள். உண்மை அன்பின் தேடல் தேவைப்பட்டால் மட்டுமே பொறுமையாக இருங்கள். உங்களது தேடல் ஒரு நாளில் நிறைவேற்றப்படும். நீங்கள் காதலுக்கு உண்மையாக இருக்கும் பட்சத்தில் காதலும் உங்களை ஏமாற்றிவிடாது. நன்றி.
ReplyDeleteநன்றி ஈஸ்வர்... உண்மைதான், காதல் உடல் சம்மந்தப்பட்டது அல்ல..... அது முழுக்க முழுக்க மனம் சம்மந்தப்பட்டதுதான்... அதனை உடலோடு பொருத்தி பார்ப்பதால்தான், பல காதல்கள் ஒரு நாள் படுக்கை அறை பகிர்தளோடு முடிந்து விடுகிறது...
DeleteI just accepted my ex's proposal after 2.5 years..! But no use..! He's also a fake..! So guys pls be patient and be aware..! 've a safe and happy life..! :-) :-) my heartly wishes to all who all're searching for true love..! :-) :-) :-D
ReplyDeleteஉங்க கருத்துக்கு ரொம்ப நன்றி நண்பா....
Deleteஉங்க எண்ணங்களை பகிர்ந்துகொள்ள ஒரு மனிதன் வேணும், அதுதான் இப்போதைக்கு உங்களுக்கான அவசிய தேவை.... அந்த மனிதன் காதலனாக இருக்கணும்னு அவசியம் இல்ல, நல்ல நண்பனாக கூட இருக்கலாம்... உண்மை தான் விக்கி. நண்பர்களா இருந்து புரிந்தபிண்பு இயற்கையா காதல் வந்தால் அது நல்லாயிருக்கும், இதில தாண் ஒரு புரிதலும் காமம் தாண்டிய ஒரு உணர்வயும் (காதலயும்)உணரமுடயும். தோல்வியடைந்தாலும் ஒரு சுகமாண வலி நம் மூச்சுள்ளவரையிருக்கும். பார்த்தவுடண் காதல் என்றாலோ, கண்டிப்பா காதலன் வேண்டும் எண்றாலோ ஏமற்றம் மட்டமே கிடைக்கும். காதல் எண்பது காமத்தையும் தாண்டிய ஒரு உணர்வு. நன்றி விக்கி.
ReplyDeleteசேகர்.
உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சேகர்...
Deleteஉண்மை, நானும் என் நண்பரும் அவசரபடல. நா வேலைக்கு விடுப்பு எடுத்து 4 இரவு 3 பகல் ஓன்றாக அவருடைய வீட்லதான் இருந்தேன், பதிலுக்கு அவரு விடுப்பு எடுத்துட்டாரு.வேலியில எங்கும் போல ஓரே முறை கோவிலுக்கு தவிர.
ReplyDeleteஅங்கு கலவிக்கு நாங்க முக்கியம் தரல. ஓன்ன விலையாடினோம், நடனம் ஆடினோம், பாட்டு பாடினோம், ஓன்ன சாப்பிட்டோம் உணவை ஊட்டிகோண்டோம், ஓன்ன உறங்கினோம், நா அவருடைய நெஞ்சில தலை வச்சி தூங்கிட்டேன். 4 இரவு 3 பகல் நா என் உள்ளாடையோடு மட்டும் தான் இருந்தேன் காரணம் நா அவரை சோதித்து பார்த்தேன் அவருடைய முதல் பார்வையே அன்பைதான் காட்டியது காமத்தை அல்ல.
உங்க கதைய பத்தி அப்பப்ப பேசுவேன் அவருக்கு ரோம்ப பிடிக்கும். என் சிரித்த முகம் அவருக்கு பிடிக்குமுன்னு சொன்னாறு. நா அழ வந்தாலும் சிரிப்பேன்னுதான் சொன்னேன்.
நா ஓரே ஓரு பகல் மட்டும் தான் இருக்கணுமுனு நினைச்சு தான் போனேன் . ஆனா 4 இரவு 3 பகல் இருப்பேனு நினைச்சே பாக்கல.
அவர விட்டுட்டு வந்த அடுத்த அரை மணி நேரத்துல என் கண்களில் கண்ணிர் தான வந்தது ஆனா அது வலியை தரல மாறா அவர் மேல மரியாதையதான் அதிகம் ஆக்குது. அப்ப என்னால சிரிக்க முடியல முதல் முறைய மனசார அழுதேன்.
வர வாரவிடுமுறைக்கு அவர மீண்டும் பாக்க போரேன்.