ஆடி
மாதம் தான் என்றாலும், சித்திரையின் உக்கிரத்துக்கு சற்றும் குறைவில்லாமல்
இருந்தது அன்றைக்கு வெயில்... செம்மண் சாலையின் இருபுறத்திலும், ஆடிப்பட்டத்து
விதைப்பிற்காக வானத்தை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்த வயல் வெளிகள், மரங்களில்
ஆணி அடித்து ஒட்டப்பட்டிருந்த “டூமாக்ஸ் பூச்சி மருந்துகள்” விளம்பரம்,
சோமாலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டதை போன்ற வயிறே இல்லாத மாடுகள் தாண்டி, முருகன் அந்த வீட்டு வாசலை அடையும்போது சூரியன்
உச்சியை நோக்கி நகர்ந்துகொண்டு இருந்தது....
வாசல்
கதவு தள்ளப்பட்டு திறந்த சத்தம், மூன்றாம் வீட்டில் சமையல் செய்துகொண்டிருக்கும்
முத்தம்மா அக்கா வரை கேட்டிருக்கும்... வீட்டிற்கு வெளியே மூன்று பக்க சுவராலும்,
ஒரு பக்க “முதல்வருக்கு நன்றி!” விளம்பர தட்டியாலும் மூடப்பட்டிருக்கும் அந்த அறை
போன்ற ஒன்றிற்குள் தண்ணீர் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது.... கதவு திறந்த சத்தம்
கேட்ட நொடி, தண்ணீர் ஊற்றும் சத்தம் நிறுத்தப்பட்டு “யாரு?... யாருங்க?” என்றது
ஒரு வசீகர குரல்....
“நான்தான்க்கா
முருகன்.... வர சொன்னிங்களாமே?”
“உக்காருப்பா...
குளிச்சுட்டு வந்திடுறேன்....”
திண்ணையில்
கிடந்த பாதி கிழிந்த இருக்கையில் அமர்ந்தான் முருகன்.... பல்வேறு நுணுக்கமான
வேலைப்பாடுகளால் நிறைந்த தேக்கு மர கதவு (பர்மாக்காரன் வீட்டுல எல்லா கதவும் பர்மா
தேக்குதானாமே?), வெள்ளை சுவற்றின் வெண்மையை கபளீகரம் செய்த கரும்பச்சை பாசி, சில
இடங்களில் நளினமாக வரையப்பட்ட ஓவியம் போல விரிசல் கோடுகள், “இதோ இப்போ
விழப்போறேன்!” என்று வருவோரை மிரட்டிக்கொண்டிருக்கும் விட்டத்து சாரங்கள்...
சுவரில் மாட்டப்பட்ட பல படங்களிலும் பர்மாக்காரர் “எம்.ஜி.ஆர், அண்ணா, காமராசர்”
போன்றோருடன் நிற்கும், அமர்ந்து காதுக்குள் ரகசியம் பேசும், கை பிடித்து கிண்டல்
செய்யும் புகைப்படங்கள்... அண்ணாவுடனான புகைப்படத்தில் தெரித்திருக்கும் கண்ணாடி
கூட கவனிக்கப்படாமல் சுவற்றில் சிரித்துக்கொண்டு நிற்கிறது....
“வாழ்ந்து
கெட்ட வீடுகள்” இப்படித்தான் இருக்கும்! என்ற ஒரு பிம்பத்தை அந்த வீடு எளிதாக
பார்ப்போர் மனதில் ஏற்படுத்திவிடும்.... உலகின் பல நாடுகளுக்கும் பர்மா தேக்கு
ஏற்றுமதி, இறக்குமதி செய்த மிகப்பெரிய பணக்காரராக இருந்த “பர்மாக்காரர்” வீடு,
இன்றைக்கு இழுத்து பிடித்து விற்றால் கூட லட்சத்தை தொடுவது கஷ்டம் தான்....
குளித்து
முடித்து லட்சுமி அக்கா, தலையில் சுற்றிய துண்டோடு வெளியே வந்தாள்... கதவை திறந்த
வேகத்தில் அக்காவை தாண்டி வெளியே வந்த சோப் வாசனை, முருகனின் நாசிகளில்
நடனமாடியது.... இது லட்சுமி அக்காவுக்கே உரிய வாசம்... சிறுவயதில் லட்சுமி அக்கா
வீட்டு பக்கத்தில் இருந்த பாலை மர நிழலில் (பாலை மரத்தை அந்த பர்மாக்காரன் வெட்டுனான்ல,
பாலை முனி சும்மா விடுமா?.... குடும்பத்தையே செதச்சிருச்சு) விளையாடிய நாட்களில்,
இந்த வாசனையை நுகர்வதற்காகவே முருகன் பல லிட்டர் தண்ணீர் வாங்கி
குடித்திருக்கிறான் அந்த வீட்டில்.... ஆனால், அப்போது அக்கா குளித்துவிட்டு முகம்
முழுக்க மஞ்சள் பூசிய பொலிவோடு, காதருகே காணப்படும் சுருள் முடிகளோடு வெளியே வருவது
கண்களின் தவத்தின் பலனாகவே அவனுக்கு தோன்றும்... இப்போதும் அழகாகத்தான்
இருக்கிறாள், ஆனாலும் பழைய பொலிவை இணைத்து பார்க்கும்போது, “அடக்கொடுமையே!” அழகு
தான் இப்போது தெரிகிறது....
“என்ன
முருகா, ஆச்சரியமா பாக்குற?”
“ஒண்ணுமில்லக்கா....
தாகமா இருக்கு, தண்ணி தாங்களே!” இப்போது தண்ணீர் கேட்கும்போது பழைய முருகனாகவே
மாறிவிட்டான், ஆனால் கையில் தண்ணீருடன் வரும் லட்சுமி அக்கா மட்டும்
அப்படியேத்தான் இருக்கிறாள்....
“எதுக்குக்கா
வர சொன்னிய?”
“ஒத்திக்கு
வச்ச நெலத்த மீட்டுக்கத்தான் முருகா... உங்கப்பாகிட்ட பேசிட்டேன், பணத்தை
உனக்கிட்ட கொடுத்துவிட சொன்னாரு... அதான்...” எழுந்து சென்று கண்ணாடியின்
பின்புறத்திலிருந்து ஒரு கவரை எடுத்து, அதை பிரித்து முருகன் கையில்
கொடுத்தாள்....
“இந்த
வருஷம் வெவசாயம் பண்ணலாம்னு இருக்கோம்... நெல்லு விலை ஏறிப்போச்சுல்ல... இன்னும்
எவ்வளவு நாள்தான் இப்டியே இருக்கிறது!” அக்கா இப்படி புலம்பி முருகன்
பார்த்ததில்லை... மனம் வலித்தது.... மந்தை நிறைந்த மாடுகள் இப்போது இரண்டு
மட்டும்தான் மிச்சம், நிலங்கள் அனைத்தும் ஒத்திக்கு வைக்கப்பட்டாகிவிட்டது, வீட்டு
பத்திரம் கூட செட்டியார் வசம் அடகு வைக்கப்பட்டு இருக்கிறது.... “பின்பு எப்படி
இந்த பணம்?” கேட்க யோசித்துக்கொண்டிருந்த முருகனின் கண்களில், லட்சுமி அக்காவின்
கைகளில் குலுங்கிய பிளாஸ்டிக் வளையல்கள் பட்டது.... முருகனுக்கு புரிந்தது,
இந்நேரம் அந்த தங்க வளையல்கள் செட்டியாரின் கண்ணாடி குடுவைக்குள் காட்சிப்பொருளாக
இருக்கும்....
“சாயந்திரம்
தம்பிய வர சொல்றேன் முருகா.... பத்திரத்த கொடுத்துவிடு”
விடைபெற்றுக்கொண்டு,
பணத்தை சட்டைக்குள் திணித்து வெளியே வந்தான் முருகன்.... வீடு வந்து சேரும்வரை,
ஏனோ அந்த குடும்பத்தின் நிலைமை அவனுள் உறுத்தியது....
வீட்டை
நெருங்கும் முன்பே, வாசலில் படுத்திருந்த நாய் வேகமாக ஓடி வந்து முருகனின் மீது
தாவியது.... அவன் கைகளை நாவால் ஈரப்படுத்தியது.... வீட்டு வாசல் திட்டில்
அமர்ந்தபடி, அந்த நாயின் கழுத்தை தடவிக்கொடுத்தான்... வாலை ஆட்டியபடியே, அவன்
காலருகே படுத்தது நாய்....
“என்னடா
பணத்த வாங்கிட்டியா?” வீட்டிற்குள் தலையணையை சுருட்டி வைத்தவாறே படுத்தபடி,
விஜயகாந்த் படம் பார்த்துக்கொண்டிருக்கும் அப்பாவின் குரல்....
“வாங்கிட்டேன்...
இந்தா” என்றவாறே கவரோடு இருந்த பணத்தை அப்பாவின் முன் நீட்டினான்...
“பர்மாக்காரன்
மகளுக்கு நல்ல வாழ்வு வந்துருச்சு போல.... நெலத்த மீட்டுட்டா... எல்லாம் நூறு
ரூபாய் தாளா இருக்கு!” சொல்லிக்கொண்டே பணத்தை எண்ணி முடித்து, பீரோவுக்குள் வைத்து
பூட்டினார்....
பூட்டிவிட்டு
மீண்டும் வந்து சுருட்டிய தலையணையில் தலையை வைத்து, விஜயகாந்த் படத்தை தொடர்ந்தார்....
இன்னொரு
தலையணையை எடுத்துப்போட்டு, முருகனும் படுத்தான்... விஜயகாந்த் காலால் நான்கு பேரை
அடிப்பதையும், துப்பாக்கி குண்டு பாய்வதற்கு ஏதுவாக உடலை வளைப்பதையும் பார்த்திட
கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது... கடந்து வந்த வெயிலின் உக்கிரமே பரவாயில்லை...
மேலே விட்டத்தை பார்த்தான், புதிதாக மாற்றிய கூரை கீற்றுகள் இன்னும் வெயிலை
கட்டுப்படுத்த பக்குவப்படவில்லை... வேய்ந்தபோது இன்னும் கொஞ்சம் நெருக்கமாக
வேய்ந்திருக்கலாம், “கலக்க வேயிடா.... ஒரு கீத்து மட்டை அஞ்சு ரூவா” அப்பாதான்
சொன்னார்...
அம்மாவின்
சாப்பாட்டு அழைப்பை நிராகரித்து, கண்ணயர்ந்தான்...
யாரோ
“முருகா!” என்று அழைப்பதை போல கேட்கிறது.... கண்ணை திறந்தான், திறக்கப்பட்டிருந்த
கதவின் வழியாக ஊடுருவிய அந்தி வெயில் முருகனின் கண்களை திறக்க சிரமப்பட
வைத்தது.... கொஞ்சம் சிரமப்பட்டு கண்களை திறக்க, வாசலில் நிற்பது லட்சுமி அக்கா
போல இருக்கிறது.... லட்சுமி அக்காவா?.... முகத்தில் மஞ்சள் பூசியது போல
இருக்கிறது, பழைய சிரிப்பு அவர் முகத்தில்... ஆனால், “பேன்ட், சட்டை, கிராப்பு
தலை” எல்லாம் அக்கா, ஆண் வேடத்தில் நிற்பது போலல்லவா இருக்கிறது!....
இது
கனவா?.... ஐயோ சித்தெறும்பு கடிக்குது.... அட! வலிக்குது.... அப்போ கனவு இல்ல,
நிஜம் தான்.... தூக்க கலக்கத்திலிருந்து விடுபட்டு, யோசித்து சுதாரிப்பதற்குள்
அப்பாவே அந்த யோசனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்....
“இந்தாப்பா
பத்திரம்... நெலத்த மீட்டாச்சு, நல்லா விளையுற பூமி, பக்குவமா விதைக்க சொல்லுப்பா”
வெளியில் நின்று அப்பா பேசியபோதுதான் முருகனுக்கு எல்லாம் புரிந்தது.... மாலையில்
தம்பியை வரசொல்வதாக அக்கா சொன்னது இவனைத்தானா?... லட்சுமி அக்கா தம்பி எங்கயோ
வெளியூர்ல சொந்தக்காரவுக கடையில வேலைக்கு இருக்குறதா கேள்விப்பட்டதுண்டு, ஆனால்
இப்படி “கும்”முனு கண் முன் வந்து நிற்பான் என்று முருகன் நினைத்துக்கூட
பார்க்கவில்லை.... ஐந்து வயதில் பார்த்ததுதான், அப்போதிருந்த முகம் கூட நினைவில்
இல்லை...
“நான்
வரேன் முருகா..” வெளியில் நின்றவன் புன்னகைத்தபடியே சொன்னபோதுதான், முருகன்
நினைவுக்கு வந்தான்...
எச்சிலை
விழுங்கிவிட்டு, தலையை மட்டும் அசைத்துவிட்டு விடைகொடுத்தான்.... அழகாக ஒரு
சிரிப்பை உதிர்த்துவிட்டு, அவன் செல்லும் அழகு கண்களுக்கு இதமாக இருந்தது....
முகத்தில் விழுந்த அந்தி வெயிலின் சிதறலை, மஞ்சள் பூச்சாக நினைத்தது முருகனின்
கற்பனைகளின் உச்சம் தான்....
அவனை
அறியாமலேயே முருகனின் கால்கள், சென்றவன் பின்னாலே செல்ல தொடங்கியது... இன்னும் சில
அடிகள் வேகமாக எடுத்து வைத்தால் அவனை பிடித்துவிடலாம்... கால்கள் வேகமெடுக்க
தொடங்கிய நேரத்தில், அவன் முன்பு “நுங்கு சக்கரம் வண்டி” செய்து ஓட்டிகொண்டிருந்த
சிறுவனின் மீது மோதினான் முருகன்....
சுதாரித்து
மீண்டும் நடக்க தொடங்குவதை கவனித்த அந்த சிறுவன், “ஏய் சித்தப்பா, வண்டி போறது
கண்ணுக்கு தெரியலையா?.... நீ பாட்டுக்கு வந்து மோதுற?... கண்ட பக்கமும் பராக்கு பாக்காம
ரோட்ல ஒழுங்கா போ...” ஏழு வயது சிறுவன் தான் இவ்வளவும் பேசினான்....
குழப்பத்திலும்,
கோபத்திலும், அந்த இளைஞன் கண்ணை விட்டு மறையும் ஆதங்கத்திலும் சிறுவனின் தலையில்
“நச்” என கொட்டு வைத்த முருகன், “எத்தன தடவடா சொல்றது உன்கிட்ட, சித்தப்பான்னு கூப்புடாதன்னு?....
அண்ணன்னு கூப்புடு... ஒன்னால எல்லாம் போச்சு!” மீண்டும் ஒரு கொட்டு வைத்துவிட்டு
சாலையை பார்த்தான் முருகன்... கண்களுக்கு அவன் புலப்படவில்லை...
அந்த
சிறுவன் அழவில்லை, வழக்கமாக வாங்கும் கொட்டுதான் போலும்.... சில அடி தூரம் சென்ற
பிறகு, முருகன் யாரையோ தேடுவதை பார்த்த சிறுவன், “போடா லூசு சித்தப்பா....
என்னிக்கோ என் லாரி’லதான் உனக்கு சங்கு” என்று சொல்லிவிட்டு புழுதி பறக்க வண்டியை ஓட்டினான்....
முருகன் அதைப்பற்றியல்லாம் கண்டுகொள்ளவில்லை, அவனுக்கு யோசனையல்லாம் லட்சுமி
அக்காவின் தம்பி பற்றிதான்...
“வரேன்
முருகா...”னு சொன்ன அந்த ஒரு வார்த்தை, தேனில் கலந்த சக்கரைப்பாகு போல அப்படி ஒரு
தித்திப்பு.... கால் போன போக்கிலேயே முருகன் யோசித்துக்கொண்டே நடந்தான்....
மேய்ச்சலுக்கு போன மாடுகள், தத்தமது வீடுகளை நோக்கி நடந்துகொண்டு இருக்கிறது....
பள்ளிக்கூடம் முடிந்து வரப்போகிற பத்தாம் வகுப்புக்கு மேற்ப்பட்ட பெண்களை
எதிர்நோக்கி, சாலையின் ஓரத்தில் “இளைஞர்களின் காத்திருப்புக்காகவே” வளர்க்கப்பட்ட
வாகை மரத்தினடியில் ஐந்தாறு இளைஞர்கள்.... எல்லோரும் முருகனின் நண்பர்கள் தான்...
முருகனை பார்த்ததும், “வாடா மாப்ள!... என்ன ஆச்சரியமா இன்னிக்கு நீயும் படம் பாக்க
வந்திருக்க?” சிரித்தார்கள்...
“இல்லடா...
சும்மாதான் வந்தேன்... எதையும் பாக்கவல்லாம் நான் வரல”...
“சரி
சரி.... நீ பாக்கலைனா எங்கள தொந்தரவு பண்ணாத... இப்பதான், மல்லிகாவுக்கு மாம்பழம்
கொடுக்குற அளவுக்கு பழகிருக்கேன், அவள மாங்காய் கடிக்க வக்கிற அளவுக்கு பழகுற
வரைக்கும் ஊடால பூந்து கெடுத்துடாத” இது செல்வம்...
வேறு
பக்கம் திரும்பி அமர்ந்தபடி முருகன், “என்னமோ பண்ணு... இது எல்லாம் நம்ம சொந்தக்கார புள்ளயலுவ....
நாளக்கி பிரச்சினைன்னு வந்தா, நம்ம மாமனும் சித்தப்பனும்தான் நம்மள வெட்டுவாணுக...
அதுனால யோசிச்சு பண்ணு” வழக்கமான பல்லவியை இப்போதும் பாட, மற்ற நண்பர்கள் ஒன்றாக
“உச்சு” கொட்டினர்....
மல்லிகா
வந்ததையோ, செல்வம் பேசினதயோ, அதற்கு பின் வேறு பிள்ளைகள் அவர்களை கடந்து சென்றதையோ
முருகன் கவனிக்கவில்லை.... மரத்தில் சாய்ந்தபடி, கண்களை மூடிக்கொண்டான்... எல்லாம்
முடிந்து நண்பர்கள் முருகனை அழைத்தபோதுதான், கண்களை விழித்து அவர்களுடன்
நடந்தான்....
“டேய்
மாப்ள, இன்னிக்கு முள்ளூர்’ல கரகாட்டம்... புதுக்கோட்டை திலகவதி குரூப்பு....
செம்மையா இருக்கும், உன் சைக்கில எடுத்துட்டு வந்துரு”
“செல்வா,
நீ எதுக்கு அடிபோடுற’ன்னு தெரியுது.... அந்த மல்லிகா புள்ள அங்க வரப்போவுதுன்னு
எனக்கு தெரியும்... நீ மாட்டு கொட்டாயில மல்லாக்க படுக்க, நான் வந்து வெளக்கு
புடிக்க முடியாது... ஆளவிடுடா சாமி....” எகிறி குதித்து, அந்த நண்பர்கள்
வட்டத்தைவிட்டு விலகி சென்றான் முருகன்...
மணி ஒன்பது
ஆகிவிட்டது, வீட்டில் அப்பா அர்ஜுன் சண்டையை ரசித்துக்கொண்டு இருக்கிறார்... அவரை
கடந்து, அவனுக்காக அம்மா எடுத்து வைத்திருந்த சாப்பாட்டை சாப்பிட தொடங்கினான்
முருகன்....
விளம்பர
இடைவெளியில் முருகனை கவனித்த அப்பா, “முருகா, உன்னைய தேடி கொஞ்ச நேரத்துக்கு முன்ன,
பர்மாக்காரன் மவன் வந்துட்டு போனான்.... செத்த நேரம் இவுனதான் இருந்தான், அப்புறம்
நாளக்கி பாத்துக்கறதா சொல்லிட்டு போய்ட்டான்....” என்றார்...
முருகனால்
நம்ப முடியவில்லை, வாய்க்குள் அடைபட்டிருந்த சோறை மெல்ல மறந்தவனாக, யோசித்தான்....
“யாருப்பா?....
லட்சுமி அக்கா தம்பியா?”
“ஆமாடா...
பர்மாக்காரனுக்கு என்ன ஏழெட்டு வைப்பாட்டியா இருக்கு?... அந்த பையன்தான்”
“எதுக்குப்பா?”
“வெதநெல்லு
பத்தி கேக்க வந்தான்.... பர்மா’காரனாட்டம் அவன் மவனும் நல்ல காரியக்காரன்தான்...”
விதைநெல்
பற்றி விசாரிக்க, நாலு தெரு தாண்டி முருகன் வீட்டுக்கு ஏன் வரவேண்டும்? என்று
அப்பா யோசிக்கவில்லை.... பக்கத்து தெரு அரிசி மண்டி சாமிக்கண்ணுவிடம் கேட்டால்,
வீட்டுக்கே கொண்டுவந்து தந்துவிடுவான்.... இருந்தும், இவ்வளவு தூரம் வந்த காரணம்
என்னவாக இருக்கும்?....
விளம்பர
இடைவேளை முடிந்து, அர்ஜுனின் ஆக்சன் காட்சிகள் தொடங்கியதால், அப்பாவிடம் இனி பதில்
வராது.... சாப்பிட்டு முடித்துவிட்டு கடிகாரத்தை பார்த்தான், நேரம் பத்தை
கடந்துவிட்டது... இந்த நேரத்தில் அவனை போய் பார்ப்பதல்லாம், மற்றவர்களுக்கு
வித்தியாசமாக தெரியலாம்...
ஆனாலும்
யோசித்தான், உடனே உள்ளே சென்று “முள்ளூர்’ல திருவிழா... பயலுவல்லாம் போறாணுவ,
நானும் போயிட்டு வரேன்” என்றான் அப்பாவிடம்...
யோசித்த
அப்பா, “பாத்து போ, திலகவதி குரூப்பு கரகாட்டமாம்.... நல்லாத்தான் இருக்கும்...
ரோட்ட சுத்தியே போ, சுடுகாட்டு பாதை வேணாம்” என்றார்....
அப்பா
எதையும் மறுப்பதல்லாம் இல்லை, சில நேரங்களில் கொஞ்சம் திருத்தங்கள் சொல்வார்...
இப்போது கூட செல்லும் பாதையில் மட்டும் திருத்தங்களை சொல்லி இருக்கிறார், மற்றபடி
மறுக்கவல்லாம் இல்லை...
அப்பாவிற்கு
தெரியாமல் ஒரு ஐம்பது ரூபாய் தாளை, கசக்கி முருகனின் சட்டைப்பையில் வைத்து வழி
அனுப்பி வைத்தார் அம்மா....
சைக்கிளை
வேகமாக மிதித்த முருகன், வண்டியை நிறுத்திய இடம் செல்வத்தின் வீடு... செல்வம்
அதிசயமாக பேன்ட் சட்டையல்லாம் மாட்டி இருக்கிறான்.... ஐயப்பன் கோவிலுக்கு போகும் நபர்கள்
பூசும் ஜவ்வாது வாசம், நெடி போல மூக்கில் ஏறும் அளவிற்கு உடலில் பூசி இருக்கிறான்...
படிய வாறிய தலையும், திட்டு திட்டான பவுடர் பூச்சும் செல்வத்தை கொஞ்சம் அப்பாவியாக
காட்டிட முயற்சி செய்தது...
முருகனை
பார்த்த செல்வம், “என்னடா மாப்ள, வரமாட்டேன்னு சொன்ன?” சிரித்தான்....
“இல்லடா...
உனக்காக இதுகூட செய்யலைனா அப்புறம் என்ன மச்சான் நான்?” உரிமையோடு சொன்னான்
முருகன்....
“நீ
வரலைன்னு சொன்னதால, நம்ம பாண்டிய வர சொன்னேன்டா... ஒரு கோட்ருக்கு அவனும்
ஒத்துகிட்டான்... அவனை என்ன பண்றது?”
“அவனல்லாம்
காசுக்காக வர்ற ஆளுடா.... நட்புக்காக, சொந்தத்துக்காக நான் இருக்கைல
என்னத்துக்குடா அவனல்லாம்?”
“இம்புட்டு
பாசத்தையும் இவ்வளவு நாளா எவுனடா வச்சிருந்த.... நீ வண்டிய எடுடா, போவலாம்”
சைக்கிளின் பின்புறம் செல்வம் ஏறிக்கொள்ள, வண்டி மேடு பள்ளங்களை எல்லாம் சாதாரணமாக
கடந்து, பாதையில் பயணித்துக்கொண்டு இருந்தது... சுற்றிலும் கும்மிருட்டு,
ஆங்காங்கே அதிசயமாக வெளிச்சம் பரப்பிக்கொண்டிருந்த மின்விளக்குகளை தவிர,
பெரும்பாலும் காரிருள்தான்....
“கைல
என்னடா மச்சான் கவரு வச்சிருக்க?” சைக்கிளை மிதித்தபடியே, மூச்சிரைக்க கேட்டான்
முருகன்...
“அல்வா’டா...
மல்லிகாவுக்கு ரொம்ப புடிக்கும், அதுக்காக ஒரத்தநாடு போயி வாங்கிட்டு வந்தேன்...” சொல்லும்போதே
ஆயிரம் ஆசைகளும், வெட்கங்களும் அவன் வார்த்தைகளில் வடிந்தன....
“ஹ்ம்ம்...
மல்லியப்பூ வாங்கலையா?”
“அது
அவுனையே வாங்கிக்கலாம்.... ஆமா, நீ என்ன மடத்துக்கரை பாதையில போற?... இங்குட்டு
சுடுகாடு இருக்குடா... ஏற்கனவே அவட்டை அலையுதுன்னு சொல்றாக ஊருக்குள்ள...
நடுசாமத்துல, இங்குட்டு ஏண்டா போற?” அதிர்ச்சியில் கேட்டான் செல்வம்.... முருகன்
பதில் சொல்லவில்லை, சில நிமிடங்களில் ஒரு வீட்டினருகே சைக்கிளை நிறுத்தினான்...
வண்டி நின்ற வேகத்தில் குதித்த செல்வம், “என்னடா பண்ற?... கேக்குறதுக்கு பதில்
சொல்லு... இங்குட்டு ஏன் வந்த?” என்றான்....
“தாகமா
இருக்கு.... கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு போவமா?” என்று வீட்டை ஒருவித ஏக்கத்தில்
பார்த்தான் முருகன்...வெளியில் ஒரு மங்கிய விளக்கு மட்டும் எரிகிறது, உள்ளுக்குள்
ஆட்கள் விழித்திருப்பதற்கான அடையாளங்கள் எதுவும் தென்படவில்லை....
“டேய்,
மணி பதினொன்னு ஆவப்போவுது.... இந்த நேரத்துல தண்ணி கேக்க வீட்டு கதவை தட்ட
சொல்றியா?”
“தாகத்துக்கு
நேரங்காலம் தெரியாதுடா மச்சான்.... வா போகலாம்...” என்றபடியே செல்வத்தை
எதிர்பார்க்காமல், வீட்டை நோக்கி நகர்ந்தான் முருகன்.... சுற்றி முற்றி பார்த்த
செல்வம், எங்கோ கேட்கும் ஊளை சத்தத்தில் பயந்து, எச்சிலை விழுங்கியபடியே முருகனை
பின்தொடர்ந்தான்....
கதவு
தட்டப்பட, சில சத்தங்களுக்கு பிறகு வீட்டினுள் விளக்கு போடும் சத்தமும்,
வெளிச்சமும் தெரிந்தது.... சாவி துவாரம் நிரப்பப்பட்டு, கதவை திறந்து தூக்கம்
களைந்த கண்களுடன் வெளியே வந்தான் லட்சுமி அக்காவின் தம்பி.... முருகனை பார்த்ததும்
ஆச்சரியம் கலந்த ஆனந்தம் அவன் கண்களில்.... ஆனாலும், அதை காட்டிக்கொள்ளாமல், “வா
முருகா.... என்ன இந்த நேரத்துல?” என்றான்....
“இல்ல....
சும்மாதான்.... வெதநெல்லு பத்தி கேக்க வந்திங்களாம், அப்பா சொன்னாரு.... அதான்....
இப்ப நல்ல ரக நெல்லு நெறைய வந்திருக்கு.... அதிசய பொன்னி, ஆந்திரா பொன்னி,
டீலக்ஸ், கல்சர்.... எது வேணாலும் சொல்லி வரவைக்கலாம்....” மூச்சிரைக்க சொல்லி
முடித்தான் முருகன்....
கதவில்
சாய்ந்தபடியே முருகனை அதிசயித்து பார்த்த அந்த இளைஞன், “ஹ்ம்ம்... இத சொல்லவா இந்த
நேரம் வந்த?” என்றான்....
தடுமாறிய
முருகன், “இல்ல.... கொஞ்சம் தண்ணி வேணும், தாகமா இருக்கு...”
“இதுக்கு
முதல்ல சொன்ன காரணமே பரவால்ல...” சிரித்தபடியே தண்ணீர் எடுக்க உள்ளே சென்றான்
இளைஞன்....
முருகனை
கனல் கக்கும் பார்வையோடு நோக்கிய செல்வம், “டேய் பாவி, நெல்லு வியாவாரம் பண்ணவா,
நடுசாமத்துல என்னைய சுடுகாட்டு பக்கம் கூட்டியாந்த?... பாவி”
சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தண்ணீர் குவளையுடன் இடைபுகுந்தான் அந்த இளைஞன்....
குவளையை
தலைகுப்புற கவிழ்த்து, ஒரே மூச்சில் தண்ணீரை தன் இரைப்பைக்குள் நிரப்பினான்....
கொஞ்சம் தடுமாறியபடி நின்ற முருகனை பார்த்த அந்த இளைஞன், “ரொம்ப நேரமாச்சுன்னு
நெனக்கிறேன்.... வேணும்னா ரவக்கி இங்க இருந்துட்டு காலைல போங்களே.... அக்காவும்
வீட்ல இல்ல....” என்றான்....
இதற்கு
மேல் சொல்லவா வேண்டும் முருகனுக்கு, கையில் அல்வாவுடன் நின்ற செல்வத்தை
பொருட்டாகவே மதிக்காமல் வீட்டிற்குள் நுழைந்தான்....
“உங்க
பேரு என்ன?” முருகன் தயங்கியபடியே கேட்டான்....
“அடப்பாவி
முருகா, என்னைய முழுசா மறந்துட்டியா?.... சின்ன வயசுல ஒன்னாதானே விளயாண்டோம்....
பேர் கூட ஞாபகம் இல்லையா?”
முருகன்
யோசித்தான், பெயரோ முகமோ எதுவும் நினைவில்லை... அப்படி விஷயங்களை நினைவில்
வைக்கும் பழக்கமும் அவனுக்கில்லை.... தடுமாறி யோசித்த முருகனை பார்த்த இளைஞன், “அன்பழகன்...
அன்பு.... அதான் என் பேர்” என்றான்....
“அன்பு....
அழகன்... அன்பழகன்...” தனக்குள் சொல்லிப்பார்த்தான்.... அவனை போலவே அவன் பெயரும்
அழகாகத்தான் இருந்தது... உண்மையில் அன்பு தன் பெயரை “முள்ளம்பன்றி” என்று சொன்னால்
கூட அது முருகனுக்கு அழகாகத்தான் தெரிந்திருக்கும்....
முருகனை
தன் பக்கம் இழுத்து, காதருகே பேசிய செல்வம், “அடப்பாவி!... பேரே இப்பதான்
தெரிஞ்சுக்கறியா?.... உன் நெல்லு வியாவரத்த காலைல வச்சுக்கடா, இப்ப
கரகாட்டத்துக்கு போயிட்டு வந்திரலாம்டா” என்றான்....
அதை
பொருட்டாக கூட மதிக்காத முருகன், அன்புவுடன் அடுத்தடுத்த பேச்சுக்களில் தன்னை
மறக்க தொடங்கினான்.... விடிய விடிய பேசினர் இருவரும், தூக்கம் வந்த நேரத்தில் கூட,
அதை மறக்க செல்வத்தின் அல்வா உதவி செய்தது.... விடிந்தபோது, கண்களை விழித்த
செல்வம், இன்னும் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து எரிச்சலானான்.... ஆனால்
எதையும் காட்டிக்கொள்ளவில்லை... மெல்ல எழுந்து வீட்டை நோக்கி நடக்க
தொடங்கினான்....
பேசிமுடித்து
முருகன் அங்கிருந்து கிளம்பும்போது நன்றாக விடிந்துவிட்டது.... இரவின் தூக்கமின்மை
அவனை கொஞ்சமும் அசதியாக்கவில்லை, கண்கள் இன்னும் உற்சாகமாகத்தான் ஒளிர்ந்தது....
வாயில் “இளையராஜாவின் காதல் மெட்டுக்களை” முணுமுணுத்தபடியே சைக்கிளில் வீடு வந்து
சேர்ந்தான்...
அப்பா
வயலுக்கு செல்ல ஆயத்தமாகிக்கொண்டு நிற்பதை கவனித்த முருகன், பாட்டை நிறுத்தி நல்ல
பிள்ளையாக வீட்டை நோக்கி நடந்தான்...
“முருகா!...
தட்டான் தாழப்பறக்குது... இன்னும் ரெண்டு நாளைக்குள்ள மழை வந்துரும்,
வெதைக்கணும்.... எல்லாத்தையும் தயார் பண்ணிடு” சொல்லிவிட்டு அப்பா
சென்றுவிட்டார்.....
நேற்று
மாலை விதைத்த ஒரு விதைதான், இன்று அவனுக்குள் விருட்சமாகி மகிழ்ச்சியை அள்ளி
தெளிக்கிறதே.... இனி வேறு விளைச்சல் பற்றி அவன் கவலைப்பட வேண்டுமா என்ன?....
தனக்குள் சிரித்தபடியே உள்ளே சென்று, காலை உணவை கடனுக்கு தின்றுவிட்டு வழக்கமான
“வருத்தப்படாத வாலிபர் சங்க” தலைமை அலுவலகமான பிள்ளையார் கோவில் ஊரணிக்கு
சென்றான்.... வழக்கம்போலவே நான்கைந்து நண்பர்கள் கலகலப்பாக பேசிக்கொண்டிருக்க,
மரத்தினடியில் துண்டை விரித்து படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறது ஒரு உருவம்....
அருகில் சென்றபோதுதான் கவனித்தான் முருகன், அது செல்வம் தான்....
செல்வத்தை
முருகன் பார்ப்பதை கவனித்த ராசு, “என்ன மச்சான் பாக்குற?.... நம்ம செல்வம்
தான்.... ரவக்கி முழுக்க கரகாட்டத்துக்கு சமமா இவன் ஆட்டம் போட்டிருக்கான் போல....
வந்ததுலேந்து ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறான்...” சிரித்தான்....
பதிலுக்கு
பொய்யாக சிரித்த முருகன், “ஓஹோ!... அப்டியா?” என்றான்...
“எனக்கு
ஒரு சந்தேகம் தான் மச்சான்.... முள்ளூரு செம்மண்ணு இவன் சட்டயல்லாம்
அப்பிருக்கும்’னு நெனச்சேன்... ஆனால், சட்டையல்லாம் செம்மண்ணு ஒட்டலையே?”
யோசித்தான்...
முருகன்
பதில் சொல்லவில்லை, அதற்கு முன் முந்திக்கொண்ட பாண்டி, “டேய் அவன் தரையில
படுத்திருந்தா மண்ணு ஒட்டிருக்கும்.... அவன்தான் மல்லிகா மேல...” சொல்லி
முடிப்பதற்குள் கூட்டம் மொத்தமாக சிரிக்க, அப்பாவியாக எழுந்த செல்வம், அனைவரையும்
ஒரு ஆற்றாமையோடு பார்த்தான்....
“பாரு
மச்சான், நம்ம செல்வத்து கண்ண.... ரவக்கி முழுக்க தூக்கம் முழிச்சதால, செவந்து
போயிருக்கு” இது பாண்டி....
எல்லோரையும்
ஏற இறங்க பார்த்த செல்வம், முருகனையும் பார்த்து மனதிற்குள், “அடப்பாவிகளா!....
தூக்கத்துல செவந்த கண்ணுக்கும், அழுது செவந்த கண்ணுக்கும் வித்தியாசம் கூட தெரியாத
மடசாம்புரானிகளா!” திட்டினான்.... ஆனால், எதையும் வெளிக்காட்டவில்லை, மீண்டும்
கண்களை மூடி தூங்கும் முயற்சியில் ஈடுபட்டான்.... அன்றைய பொழுது முழுவதும்,
அங்கிருக்கும் கூட்டத்திற்கு கிடைத்திருக்கும் டாபிக், “நடந்தது என்ன?..
மல்லிகாவுடன் மஜா?” தான்... எல்லாவற்றுக்கும் சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்த
முருகனின் சிந்தனை இப்போது நேற்றைய இரவுக்கு சென்றுவிட்டது....
உதிய
மரத்தில் சாய்ந்தபடியே யோசித்துக்கொண்டிருந்த முருகனை சுற்றியும், ஆவாரம் பூக்கள்
செடிகளில் பூத்து குலுங்கியது....
மேய்ச்சலுக்காக ஒதுங்கிய நான்கைந்து மாடுகளை தவிர அந்த பகுதியில் சன நடமாட்டம்
எங்குமில்லை.... வருடம் ஒருமுறை நடக்கும் கோவில் விழாவை தவிர, அந்த பிள்ளையாருக்கு
தினமும் துணை இந்த இளைஞர்கள் மட்டும்தான்... கோவிலின் எதிரே இருக்கும் அந்த மிகப்பெரிய
குளமும், அதனை பச்சை பட்டாடையால் போர்த்தி இருந்த தாமரை இலை மற்றும் பூக்களும்,
குளத்தின் ஒரு கரையை ஆக்கிரமித்த எருமை மாடுகளும், மறுகரையை ஆக்கிரமித்த இந்த
கட்டிளம் காளைகளும் மட்டும்தான் அந்த பகுதியின் அன்றாட நிகழ்வுகளுக்கு
சொந்தக்காரர்கள்....
கோவில்
என்றால் கோபுரம் தரித்து, வானுயர நிற்பதாக நினைத்துக்கொள்ள வேண்டாம்.... நான்கு
பக்க குட்டி சுவர்களின், நடுவில் பீடத்தில் எளிமையாக அமர்ந்திருக்கும்
பிள்ளையார்.... பீடத்துக்கு கீழே, சுவர்களில் சாய்ந்தபடி அமர்ந்து, படுத்து
பேசிக்கொண்டிருக்கும் இளைஞர்கள்.... வெயில் குறைந்த நேரத்தில், கோவிலுக்கு வெளியே
நிற்கும் உதிய மரத்து நிழலில் கூட்டம் நடைபெறும்... கள்ளிசெடிகளே கருகும்
கத்தரிவெயில் காலத்தில் கூட, குளத்தின் நீரால் குளுமை நிறைந்து காணப்படும் அந்த
இடம் மட்டும்... அதனால்தான் இது அந்த இளைஞர்களின் மிகப்பிடித்த இடமாக
ஆகிப்போனது.....
உச்சி
வெயில் பொழுது தாண்டியும் யாரும் வீட்டிற்கு செல்ல நினைக்கவில்லை... தாமரைக்காயும்,
பனை நுங்கும் பல நாள் பசியாற்றிய அமுத சுரபிகள்... இன்றைக்கும் காலம் மறந்த
அவர்கள் பேச்சுக்கு பசியாற்றியவை அவைகள்தான்.... ஒருவழியாக அனைவரும் அங்கிருந்து
கிளம்பும்போது அந்தி சாயும் வேளையாகிவிட்டது.... பலர் சிலராகி, சிலர் மூவராகி,
முருகனின் தெருவிற்குள் செல்லும்போது முருகனும், பாண்டியும் மட்டுமே மிச்சம்....
முருகனை
பார்த்ததும் வேகமாக ஓடிவந்த ஒருசிறுவன், “சித்தப்பா... உன்னைய ஒரு ஆளு தேடி
வந்துச்சு...” என்றான்....
வழக்கம்போல
தலையில் கொட்டி, “சித்தப்பான்னு கூப்புடாதன்னு சொல்லிருக்கேன்ல... குட்டிச்சாத்தான்...”
காதை பிடித்து திருகினான்....
சிறுவனின்
காதிலிருந்து முருகனின் கையை விடுவித்த பாண்டி, “உங்க அண்ணன் மவன், வேற எப்டிடா
கூப்புடுவான் உன்னைய?” என்றான்....
“எம்
பெரியப்பா மவன், அவசரப்பட்டு புள்ளை பெத்ததுக்காக நான் சித்தப்பா ஆகிட
முடியாது.... சித்தப்பான்னு கூப்பிடுறது என்னமோ வயசானவன கூப்புடுற மாதிரியே
இருக்குடா....”
இருவரும்
சிரித்துக்கொண்டிருக்க, முருகனின் பார்வையில் படாமல் அவன் அருகிலேயே வந்து
நின்றுவிட்டான் அன்பழகன்....
“ஓ...
நீதானா என்னைய பாக்க வந்தது?” அசடுவழிய சிரித்தான் முருகன்....
சாலையில்
சென்ற பெண்ணை பார்த்து கண்களால் காதல் மொழி பேசியபடியே பாண்டி அங்கிருந்து
சென்றுவிட்டதால், இருவரின் பேச்சுக்கு இடையூறு இல்லாமல் போனது....
“ஆமா....
ரொம்ப நேரமா தேடுறேன்...”
“நாங்கல்லாம்
புள்ளையார் கோவில் ஊரணிகிட்ட தான் இருப்போம்... மத்த பயலுவ மாதிரி ஊருக்குள்ள தொல்லை
குடுக்காம நாங்க இருக்குறதால, ஊருக்குள்ள எங்களுக்கு ரொம்ப மரியாதை” கூனிக்குறுகி,
வளைந்து நெளிந்து ஒருவழியாக சொல்லி முடித்தான் முருகன்....
“டேய்...
போடா லூசு சித்தப்பா....” சொல்லிவிட்டு சிறுவன் ஓட, அந்த சிறுவனை கோபத்தோடு
முறைத்துக்கொண்டிருந்தான் முருகன்....
“ஆமாமா....
பாத்தாலே தெரியுது.... ஊருக்குள்ள உனக்கு ரொம்ப மரியாதைதான்” சீண்டினான் அன்பு...
“சரி,
என்ன விஷயமா வந்த?... வெதநெல்லுக்கு சொல்லிட்டேன், நாளக்கி கொண்டு
வந்திருவாணுக.... வேற என்ன?” பேச்சை திசை திருப்பினான்...
“ஒண்ணுமில்ல....
இன்னிக்கும் தண்ணி குடிக்க வீட்டுக்கு வந்திடாத.... அக்கா வந்திட்டாங்க.....”
வரவேண்டாம்
என்று சொல்லவா இவ்வளவு தூரம் வரவேண்டும்?... ஏமாற்றம் கலந்த முகத்தோடு, “சரி...
வரல...” என்றான் முருகன்....
“அதுமட்டுமில்ல....
நானும் முள்ளூர்’ல நடக்குற வள்ளி திருமணம் நாடகத்துக்கு போறேன்...”
“சரி....
அதான் நான் வரலன்னு சொல்லிட்டேன்’ல....” ஏமாற்றம் இப்போது எரிச்சலான வார்த்தைகளாக
வெளிப்பட்டது....
“புதுக்கோட்டை
அபிராமி’தான் வள்ளியாம்.... நாடகம் நல்லா இருக்கும்.... நான் அங்க பத்து மணிக்கு
போய்டுவேன்....”
அன்புவின்
கணக்கு இப்போதுதான் முருகனுக்கு புரிகிறது.... கண்களை சிமிட்டி, காதுவரை உதட்டை
இழுத்தபடி சிரித்த முருகன், “சரி சரி.... நான் கூட அங்க ஒன்பது மணிக்கே
வந்திடுவேன்....” என்றான்....
நேரம் பத்து மணி
ஆகிவிட்டது...
பனை
ஓலை பட்டை செய்து, அதில் கறிசோறு போடப்பட்டு வரிசை நெடுகிலும் அமர்ந்து மக்கள்
கூட்டம் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது..... வெட்டிய ஆடுகளின் தலை மற்றும் கால்களை
பிரித்துக்கொள்வதில் பூசாரிகளுக்குள் உண்டான வாக்குவாதம் கோவிலுக்கு பின்னால்
தொடர்ந்து கொண்டு இருக்கிறது... சாப்பிடவல்லாம் மனமில்லாமல் முருகன், கோவிலை
சுற்றி யாரையோ தேடிக்கொண்டு இருக்கிறான்....
“இன்னும்
சிறிது நேரத்தில் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும் வள்ளி திருமணம் நாடகம்
தொடங்க இருக்கிறது.... எல்லாரும் வாங்கப்பா....” ஒலிபெருக்கியில் ஊர்க்காரர்
விளம்பரம் செய்ய, கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மேடையை சுற்றி ஆக்கிரமிக்க
தொடங்கின....
பத்து
மணி நாடகத்திற்கு, மாலையே வந்து பாய் விரித்து இடம் போட்ட புத்திசாலிகள், கண்களை
இருட்டவைத்த போதையில் பக்கத்து பாயில் படுத்து புரள தொடங்கினர்.... இன்னும்
முருகனின் தேடல் ஓயவில்லை.... நாடக மேடை அருகே அன்புவை போல ஒரு உருவம் தெரிய,
அருகில் செல்ல விரைந்த அவன் கால்களை தடுக்கும் விதமாக ஒரு கை அவனை பிடித்து
நிறுத்தியது.... அந்த பிடிப்பிலேயே முருகன் உணர்ந்தான், அது அன்புதான் என்று.....
“வந்தனம்...
வந்தனம்.... வந்தனம்...” ஆர்மோனிய ஆசாமி பாடத்தொடங்கிய நேரத்தில், அன்புவின் கையேடு
முருகனின் கை பிணைக்கப்பட்டு இருந்தது.... அந்த கையை பிடித்து இழுத்து, ஒரு
மரத்தினருகே விரிக்கப்பட்ட போர்வைக்கு அழைத்து சென்றான்.... கூட்டம் அவ்வளவாக
இல்லாத இடம், “இவன் நாடகம் பாக்க வந்தானா? வேற எதுக்குமா?” என்று பார்ப்பவர்
கேள்வி கேட்கும் அளவிற்கான, ஒரு மறைவான இடம்....
பபூனும்,
நடன மங்கையும் கூட்டத்தில் சிரிப்பொலியை உண்டாக்கிக்கொண்டு இருக்கின்றனர்....
“ஆத்தாடி என்ன ஒடம்பு.... அங்கங்கே பச்ச நரம்பு....” உடல் நளினத்தோடு, முக
பாவனைகள் நிறைந்த நடன மங்கை ஆடியது, முருகனுக்கும் அன்புவிற்கும் வேறு விதமான
எண்ணங்களை துளிர்க்க செய்தது.... ஆனாலும், இருவருமே நாடகத்தில் கவனம்
கொண்டிருப்பதாக ஒருவொருக்கொருவர் ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றனர்....
நள்ளிரவை
தாண்டி, வள்ளியின் வரவு தூங்கிக்கொண்டிருந்தவர்களையும் எழ வைத்தது.... “ஆளேலம்
சோ... ஆளேலம் சோ....” வள்ளி பறவைகளை விரட்டிக்கொண்டிருக்கும் காட்சி....
பொறுத்துபார்த்த அன்பு, உறங்கிப்போய் விட்டான்....
முருகன் விழித்துதான் இருக்கிறான்.... நாடகம்
பார்த்த பல தலைகள் மண்ணில் சாய்ந்து ஐக்கியமாகிவிட்டன.... நாரதர் வரவு அவ்வளவாக
கதையில் சுவாரசியத்தை உண்டாக்கவில்லை போலும், பெரும்பாலானவர்கள்
உறங்கிவிட்டனர்.... முருகன் மெல்ல அன்புவின் தலைமுடியை கோதிவிட்டான்.... தொடுதல்
தழுவல்களாகின, தழுவல்கள் பல அன்யோன்ய அலுவல்களாகின... கும்மிருட்டும்,
கண்ணுக்கெட்டிய தூரத்தில் கண்ணுறங்காமல் மேடையில் நின்று பாடிக்கொண்டிருக்கும்
நாடக நடிகர்களும், அவ்வப்போது அவர்களை சுற்றி வட்டமடித்த ஒரு தெரு நாயும்
இருவருக்குள்ளும் நிகழ்ந்த அந்த “இத்யாதி இத்யாதி” விஷயங்களுக்கு தொந்தரவாக
தோன்றவில்லை....
அதிகாலை
நேரத்தில் விழுந்த மெல்லிய தூறல்தான் அன்புவை எழுப்பியது... கன்னங்களில் முருகன்
விட்டு சென்ற முத்த சுவடுகளை, தண்ணீரால் மறைக்க தொடங்கியது மழை.... அவசர அவசரமாக
எழுந்து போர்வையை மடித்து, கையில் வைத்தவாறே மழைக்கு ஒதுங்கியபோதுதான் கவனித்தான்,
முருகனை காணவில்லை... எழும்போதே அவனை காணவில்லை தான்... எங்கு சென்றிருப்பான்?...
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை முருகன் அகப்படவில்லை...
மழை
இன்னும் அழுத்தி பெய்ய தொடங்கியது, அருகில் நின்ற எல்லோர் கண்களும் மழையை பார்த்ததில்
மகிழ்ச்சி கடலில் நீந்த தொடங்கியது.... அன்பு மட்டும், மழை விடும் நேரத்தை
எதிர்நோக்கி வானத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறான்... மழை விட்ட வேகத்தில் முருகனை
தேடி ஓடினான்.... முந்தைய நாள் இரவின் எவ்விதமான தடயமும் தென்படாதவனாக, முருகன்
அவன் வயலில் நெல் விதைத்துக்கொண்டு இருக்கிறான்....
இடது
பக்கத்து இடுப்பில் இருக்கும் பொட்டியில் நிரப்பப்பட்டிருக்கிற நெல் விதையை, வலது
கையால் அள்ளி வீசியவாறே சீராக வயலில் நடந்த முருகனின் பார்வை, வரப்பில் நிற்கும்
அன்புவின் மீது விழுந்தது.... உற்சாக மிகுதியில் அன்பு சிரிக்க, அதை
கண்டுகொள்ளாதவனாக முருகன் மீண்டும் பார்வையை வேறு பக்கம் திருப்பினான்... வயலில்
இன்னும் சிலர் விதைத்துக்கொண்டிருப்பதால் இப்போது பேசுவது முடியாத காரியம் என்று
நினைத்தவாறே, அங்கிருந்து விலகி வீட்டுக்கு சென்றான் அன்பு....
அடுத்த
நான்கைந்து நாட்களுக்கும் அன்புவும் விதைப்பதில் தீவிரமாக இருந்தாலும், அவ்வப்போது
முருகனை தேடி வருவதும், முருகனின் கண்டுகொள்ளப்படாத பார்வையும்
வழக்கமாகிவிட்டது... அன்பு மனம் நொந்தே போனான்....
நான்கு
நாட்களுக்கு பிறகொரு நாள், மேய்ச்சலுக்கு மாடுகள் இரண்டை கயிற்றோடு
பிணைத்துக்கொண்டு, வயல்களை கடந்து முருகன் குளக்கரை ஓரம் சென்றுகொண்டிருந்தான்...
அங்கு எதிர்பாராத விதமாக, எதிரில் வந்து நின்றான் அன்பு.... சுற்றிலும் ஆள் அரவம்
எதுவுமில்லை, மாடுகள் இரண்டை தவிர வேறு ஜீவராசிகள் இருப்பதற்கான அடையாளம் கூட
இல்லை... அன்புவை பார்த்ததும், பதறிய முருகன் தலையை கவிழ்த்தியபடியே அவனை கடக்க
முயன்றான்....
“முருகா....
ஒரு நிமிஷம் நில்லு...”
“மாடு
மேய்க்க போவனும்.... நேரமாச்சு” பார்வையை கூட எதிர்கொள்ள மறுப்பவனாக, அன்புவை
கடக்க முயன்றான் முருகன்....
சட்டென
முருகனின் வலது கையை பிடித்து இழுத்து நிறுத்தினான் அன்பு... மறு கையில் மாடுகளின்
கயிறு முன்னோக்கி அவனை இழுக்க முயற்சித்தது....
“ஒரு
நிமிஷம் மேயாததால உன் மாடு ஒன்னும் இளைச்சு போகப்போறதில்ல”
“சரி...
சொல்லு....”
“நாலு
நாளா ஏன் என்னோட சரியா பேச மாட்டுற?... என்னைய நேரா கூட பாக்க மறுக்குற?.... என்ன
ஆச்சு உனக்கு?”
“அப்டி
ஒண்ணுமில்ல... வெதப்பு இருந்ததால கொஞ்சம் வேலை அதிகம்... அதான்....” வார்த்தைகளை
விழுங்கினான் முருகன்....
“பொய்
சொல்லாத முருகா... என் கண்ணை பாத்து பேசு.... அன்னிக்கு ரவக்கி நடந்தத
மறந்துட்டியா?” முருகனின் தலையை மேல்நோக்கி நகர்த்தி, கண்ணோடு கண் நோக்க செய்தான்...
முருகன்
கண்கள் தயக்கத்தில் மறுகின, “மன்னிச்சிடு அன்பு... அன்னிக்கு நான் தப்பு
பண்ணிட்டேன்” குறுகிப்போனான்....
“ஐயோ
முருகா... அது தப்பில்ல... புரிஞ்சுக்க...” முருகனின் கன்னத்தை தடவியபடியே
கூறினான் அன்பு...
“இல்ல
அன்பு... அது தப்பு... பெரிய தப்பு....” கண்கள் கலங்கிப்போய் விட்டது...
“ஆமா....
தப்புதான்... ஆனால், அந்த தப்புக்கு ஒரு பரிகாரம் இருக்கு தெரியுமா?... இப்பவே
அந்த பரிகாரத்த செஞ்சிடலாம்” என்று சொன்னவாறே முருகனை வேகமாக கட்டி அணைத்தான்
அன்பு.... அந்த பிடிப்பின் இறுக்கம் முருகனை நிலைகுழைய வைத்தது... கையில் இருந்த
மாட்டு கயிற்றின் பிடி நழுவி, மாடுகள் ஓட தொடங்கின...
முருகனின்
உடல் முழுக்க சூடு பரவியது... கண்களை மூடி அதை ரசிக்க தொடங்கினான்... மேட்டூர்
அணையின் பதினாறு கண் மதகு வழியாக திறந்துவிடப்படும் காவிரி நீரை போல, முருகனின்
உடல் முழுவதும் ரத்த நாளங்கள் தடுமாறும் அளவிற்கு வேகமாக பாய்ந்தது ரத்தம்....
கன்னத்தோடு கன்னம் உரச, ஈருடல் ஓருடலாய் ஒட்டிய நேரத்தில், “யாருட்டு மாடுடா
இது?... வயல்ல விட்டுட்டு எங்கடா போனிய?” என்று எங்கிருந்தோ குரல் வந்ததும்தான்
தடுமாறி, பதறியபடி அன்புவின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டான்
முருகன்....
சிரித்தபடி
அன்பு நிற்க, வெட்க மிகுதியால் அன்புவை பார்த்தபடியே ஓடிய முருகன், சில அடி
தூரங்கள் சென்ற பிறகு அன்புவை பார்த்து, “அது தப்புதான் அன்பு.... ஆனாலும், இனி
அப்பப்போ தப்பு பண்ணிட்டு, பரிகாரமும் பண்ணிக்கலாம்” சொல்லிவிட்டு ஓடினான்....
அன்புவும்
சிரித்தான்.... மெல்ல மண்ணுக்கு மேல் எழுந்துவந்த பச்சை பயிர்கள் கூட வெட்கத்தில்
மீண்டும் மண்ணுக்குள் புதைந்து போனது....
விதை முளைத்த நாள் முதலாய்
அவர்கள் காதலும், “இதுதான் காதல்” என்ற வரையறை இல்லாமல் வளர்ந்தது... இப்போது நெல்
பரியும் நேரத்தை பயிர் அடைந்துவிட்டது... அவர்கள் காதலும் கண்மாய்க்கரை,
ஆவாரங்காடு, பிள்ளையார் கோவில், வயல்வெளி என்று இட பேதம் பார்க்காமல் அது
முதிர்ந்துவிட்டது....
“எனக்கு
பயமாவே இருக்கு அன்பு....”
“மதியம்
ஒரு மணிக்கு என்னடா பயம் உனக்கு?” சிரித்தான் அன்பு....
பொய்யான
கோபப்பார்வையில் முறைத்த முருகன், “வெளையாடாதடா.... நாம ஒண்ணா சந்தோஷமா
சுத்தறப்பவல்லாம் ஒன்னும் தெரியல, இன்னும் இது எத்தனை நாளு நீடிக்கும்னு நெனச்சா
பயமா இருக்கு...” என்றான்...
“இதுல
என்ன பயம் உனக்கு.... நாம ரெண்டு பேருல ஒருத்தர் சாகுற வரைக்கும் இது நீடிக்கும்...
எதாவது நல்லதா நெனச்சு பாருடா.... நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சந்தோஷமா ஊரு
ஆளுகளுக்கு மத்தியில, கை கோர்த்து கோயிலுக்கு போறத நெனச்சு பாரு, உடம்பல்லாம்
புல்லரிக்குது” மெய் சிலிர்த்தான் அன்பு....
“அதை
நெனச்சாலே, அருவாள எடுத்துகிட்டு அந்த ஊராளுக நம்மள தொரத்துறதும் கண்ணுல
தெரியுதுடா.... ஆசைப்படலாம், இப்புடி அநியாயத்துக்கு ஆசைப்படாதடா...” அன்புவின்
கன்னத்தை கிள்ளி சிரித்தான் முருகன்....
“ஏண்டா
கண்டதையும் யோசிக்குற?... இந்த ஒலகத்துல ஆசைப்படாத ஆளே கெடயாது தெரியுமா?...
புத்தர் கூட ‘எதுக்கும் ஆசைப்பட கூடாது’ன்னுதான் ஆசைப்பட்டாரு.... இதுல நாம
ஆசைப்பட கூடாதா?”
“யாரு
அந்த புத்தரு?” அப்பாவியாக கேட்டான் முருகன்....
தலையில்
அடித்தபடி, “அவரு தஞ்சாவூருல அரிசி மண்டி வச்சிருக்குறவரு...” என்றான் அன்பு....
அதன் பிறகு, வளர்ந்து நின்ற பயிர்கள் எல்லாம் இருவரின் அந்தரங்கங்களை கண்டிட கண்
கூசியவாறே, வேறு பக்கம் தலையை திருப்ப காற்றை எதிர்நோக்கி காத்திருந்தன...
மாலை
நேரத்தில் வயல்வெளிகளை கடந்து வீட்டுக்கு போகையில், முகத்தில் உற்சாகம் பீறிட்டது
முருகனுக்கு... ஓடி வரும் வேகத்தை பார்த்து, தானியங்கள் கொரித்துக்கொண்டிருந்த
மயில்கள் அகவியவாறே பறக்க தொடங்கின... ஒற்றைக்காலில் தவம் செய்த கொக்குகள், மீன்
வருவதை கூட கவனிக்காமல் ஆச்சரிய பார்வை பூத்தன... இந்த உற்சாகம் எல்லாம்
வீட்டிற்குள் நுழையும்வரை தான் முருகனை ஆட்கொண்டிருந்தது....
அம்மாவின்
வழக்கத்திற்கு மாறான முகத்தின் கடுகடுப்பு, முருகனை குழப்பிட செய்தது... ஆனாலும்,
அதை கண்டுகொள்ளாதவனாக மாட்டினை கட்டிவிட்டு, அவைகளுக்கு உண்ண வைக்கோல்
போட்டுவிட்டு மெல்ல அமர்ந்தான்... இன்னும் அம்மா எதுவும் பேசவில்லை....
“என்னம்மா
ஒரு மாதிரி இருக்க?... ஒடம்பு எதுவும் சரி இல்லையா?” அமர்ந்தபடியே நகர்ந்து
அம்மாவின் அருகாமைக்கு சென்றுவிட்டான்...
விறகை
அடுப்பில் வைத்துவிட்டு, முருகனின் பக்கம் திரும்பிய அம்மா, “ஒண்ணுமில்ல....”
என்றாள்.... ஆனால், அந்த “ஒன்றுமில்லை”யில் ஆயிரம் விஷயங்கள் புதைந்திருக்கிறது
என்பதை அம்மாவின் பார்வை சொல்கிறது....
சில
நிமிடங்கள் கழித்து அம்மாவே மீண்டும் தொடர்ந்தாள், “கருது அறுத்தோன, வர்ற தை
மாசத்துலயே ஒனக்கு கல்யாணம் பண்ண சொல்லிட்டாக உங்கப்பா.... பொண்ணு எங்க அண்ணன் மவ
தான்....”....
முருகனுக்கு
பேச்சு வரவில்லை, அதிர்ச்சியில் உறைந்தான்....
“இப்ப
என்னம்மா எனக்கு அவசரம்?.... இன்னும் கொஞ்ச நாளு போவலாம்ல”
“நாங்க
ஒன்னும் குருட்டு முண்டங்க கெடயாதுடா.... ஊருக்குள்ள அப்பப்ப அரசல் புரசலா
கேள்விப்பட்டப்பவே கண்டுக்காம விட்டது எங்க தப்புதான்... இன்னிக்கு உங்கப்பாவே
பாத்தப்புறம் சும்மா இருந்தா அது இன்னும் பெரிய அசிங்கத்த கொண்டு வந்து
சேர்த்திரும்... ஆவாரங்காட்டுல நீயும் அந்த பர்மாக்காரன் மவனும்.... அடச்ச!...
கருமம்....” தலையிலடித்துக்கொண்டாள்.... அம்மா இவ்வளவு கோபமாகவும், தடித்த
வார்த்தைகளாலும் இதுவரை பேசியதில்லை.... அம்மாவுக்கு கோபமாக பேசத்தெரியும் என்பதே
முருகனுக்கு இப்போதுதான் தெரிகிறது....
முருகனுக்கு
நாக்கு வறண்டது, எச்சிலை விழுங்கியபடி, “அது சும்மாம்மா.... நீ நெனக்கிற மாதிரி
ஒண்ணுமில்ல....” என்றான்...
“அப்புடின்னா
கல்யாணத்த பண்ணிக்க.... இந்த கருமம் ஊருக்குள்ள தெரிஞ்சு உங்கப்பாவும் நானும்
நாண்டுகிட்டு சாவுறதுக்கு முன்னாடி, இந்த கல்யாணத்த நடத்திடனும்.... இனி
வயக்காட்டு பக்கமல்லாம் போவ வேணாம், வீட்டுலேயே ஒழுங்கா இரு....” சேலையின்
முனையால் கண்ணீரை துடைத்தபடியே எழுந்து போனாள் அம்மா.... முருகன் பேச்சு வர
மறந்தவனாய் சிலை போல அமர்ந்திருக்கிறான்.... உடல் முழுக்க வியர்வை அருவியாக
கொட்டி, ஆறாக பாய்ந்தது....
மீண்டும்
வீட்டிற்குள் நுழைந்த அம்மா, “இப்ப உங்கப்பா அந்த பர்மாக்காரர் வீட்டுக்குத்தான்
போயிருக்காரு... வீட்டோட அக்காளையும் தம்பியையும் கொளுத்தத்தான் போனாரு... விஷயம்
வெளில தெரிஞ்சிரும்’ன்னு நான்தான் கண்டிச்சுட்டு மட்டும் வர சொன்னேன்...”
என்றாள்....
முருகனுக்கு
சப்த நாடிகளும் நொறுங்கி போகின.... அன்புவும், லட்சுமி அக்காவும் சத்தமா கூட பேச
தெரியாதவங்க.... அப்பா போய் என்ன பேசுவார்?... அடக்கடவுளே!!!....
முருகன்
சற்றும் யோசிக்காமல், வேகமாக எழுந்து சைக்கிளை மிதித்தான்.... சைக்கிள் சத்தம்
கேட்டு வெளியே வந்த அம்மா, முருகனை அழைத்தும் அவன் திரும்பி பார்க்காமல் வண்டியை
மிதித்தான்.... ஏற்கனவே உடல் முழுக்க நடுக்கம் பரவியிருக்க, பெடலை மிதிக்க கால்கள்
தடுமாறின.... நாவு வறண்டது, தாகம் மிகுந்தது, கண்கள் இருட்டியது.... கடவுளே!
அன்புவை பார்க்கும்வரை என்னை மயக்கமாக்கி விடாதே! வேண்டிக்கொண்டே சைக்கிளின்
வேகத்தை அதிகமாக்கினான்....
வீட்டை
அடைந்ததும், சைக்கிளை கீழே போட்டுவிட்டு வேகமாக உள்ளே ஓடினான் முருகன்... அப்பா
இல்லை, ஆனால் வந்து போனதற்கான தடையங்களாக சில புகைப்படங்கள் உடைக்கப்பட்டு
கிடந்தன, அலங்கார பொருட்கள் அலங்கோலமாய் கிடந்தன.... கடவுளே!.. அன்புவிற்கு
எதுவும் ஆகியிருக்க கூடாது.... வேகமாக உள்ளே ஓடி, ஒரு அறையின் கதவை திறந்தான்
முருகன்....
உள்ளே
அன்பு அமர்ந்திருக்கிறான், நல்லவேளையாக அவனுக்கு எதுவும் ஆகவில்லை... நன்றாகத்தான்
இருக்கிறான்.... ஆனால், கண்களில் கண்ணீர் காய்ந்து போய் இருக்கிறது... அது என்ன
அவனருகில் பாட்டில்?.... அடக்கடவுளே!... அது வயலுக்கு அடிக்கும் பூச்சி
மருந்து.... கதவை திறந்த சத்தத்தில், அதை மறைக்க பார்த்த அன்புவின் கைகள் பட்டு
அந்த பாட்டில் உருண்டது... வேகமாக ஓடி, அதை கையில் எடுத்தான்.... இன்னும்
குடிக்கவில்லை, இப்போதுதான் அதை திறக்க முயல்கிறான் போல....
“என்ன
அன்பு இதல்லாம்?” கீழே அமர்ந்து அன்புவின் கன்னத்தில் கைவைத்து கேட்டான்
முருகன்....
“இல்ல...
ஒண்ணுமில்ல முருகா...” தடுமாறினான் அன்பு... முருகனின் கண்களை எதிர்நோக்க தயங்கி,
தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கிறான்...
“தெரியும்
அன்பு... எங்கப்பா வந்திருக்காரு, வீடு அலங்கோலமா கெடக்குது, உன் கைல பூச்சி
மருந்து பாட்டில்... இங்க என்னன்ன நடந்திருக்கும்?னு என்னால கணிக்க முடியுது...
“மன்னிச்சுரு
முருகா.... அக்கா ஊருக்கு போயிருந்ததால அவங்களுக்கு இது தெரியாது... அவங்க
இருந்திருந்தா அந்த பேச்சை எல்லாம் தாங்கிருக்க மாட்டாங்க.... எல்லாத்தையும்
இழந்து நிக்குற அக்காவுக்கு மிஞ்சி இருக்கிறது மானம் மட்டும்தான், அதையும் நான்
பறிக்க விரும்பல.... அதுமட்டுமில்லாம நீயாவது நிம்மதியா வாழனும்னா, நான் இருக்குற
வரைக்கும் அது நடக்காது.... அதனாலதான்...” கண்களில் நீர் கட்டுக்கடங்காமல் கீழே
ஓடியது....
கண்களை
துடைத்துவிட்ட முருகன், “நீ செத்துப்போனா நான் மட்டும் எப்புடி நிம்மதியா
வாழ்வேன்’னா நெனச்ச?... அட முட்டாளே!.... இதுக்கு ஒரே வழிதான் இருக்கு....”
சொன்னவாறே அருகிலிருந்த பாட்டிலை எடுத்து மூடியை திறந்தான் முருகன்....
“ஹலோ ஹலோ... ஒரு நிமிஷம் விஜய்!... என்ன பண்ண போறீங்க எங்க ரெண்டு
பேரையும்?”
“வழக்கம்போல தற்கொலை தான்.... அப்போதானே முடிவு லாஜிக் மீறாம
இருக்கும்”
“உங்க லாஜிக்’க்காக எங்க ரெண்டு பேரையும் கொல்லனுமா?.... எங்க
பிரச்சினைகளை சமாளிச்சு வாழுற தைரியம் எங்களுக்கு இருக்கு... அவசரப்பட்டு
கொன்னுடாதிங்க. ப்ளீஸ்......”
“ஹ்ம்ம்... சரி.... கவலைப்படாதிங்க.... நீங்களே சொன்னப்புறம், நான்
உங்கள இறந்துபோக விடமாட்டேன்....”
திறந்த
பாட்டிலில் இருந்த விஷத்தை கீழே ஊற்றிவிட்டு, அன்புவை கட்டிப்பிடித்த முருகன்,
“சாகுறதுக்கு இவ்ளோ கஷ்டப்படுற நாம, வாழறதுக்கு கொஞ்சம் அதிகமா கஷ்டப்படுறது
தப்பில்லடா.... வா கஷ்டப்படலாம்” அன்புவின் கை பிடித்து மேலே உயர்த்தினான்.....
(முற்றும்)...
“ஹலோ ஹலோ... ஒரு நிமிஷம் விஜய்!... என்ன பண்ண போறீங்க எங்க ரெண்டு பேரையும்?”
ReplyDelete“வழக்கம்போல தற்கொலை தான்.... அப்போதானே முடிவு லாஜிக் மீறாம இருக்கும்”
“உங்க லாஜிக்’க்காக எங்க ரெண்டு பேரையும் கொல்லனுமா?.... எங்க பிரச்சினைகளை சமாளிச்சு வாழுற தைரியம் எங்களுக்கு இருக்கு... அவசரப்பட்டு கொன்னுடாதிங்க. ப்ளீஸ்......”
“ஹ்ம்ம்... சரி.... கவலைப்படாதிங்க.... நீங்களே சொன்னப்புறம், நான் உங்கள இறந்துபோக விடமாட்டேன்....”
I like this
thank u ajay
Deleteசிரித்தபடி அன்பு நிற்க, வெட்க மிகுதியால் அன்புவை பார்த்தபடியே ஓடிய முருகன், சில அடி தூரங்கள் சென்ற பிறகு அன்புவை பார்த்து, “அது தப்புதான் அன்பு.... ஆனாலும், இனி அப்பப்போ தப்பு பண்ணிட்டு, பரிகாரமும் பண்ணிக்கலாம்” சொல்லிவிட்டு ஓடினான்....அன்புவும் சிரித்தான்.... மெல்ல மண்ணுக்கு மேல் எழுந்துவந்த பச்சை பயிர்கள் கூட வெட்கத்தில் மீண்டும் மண்ணுக்குள் புதைந்து போனது....அழகு விக்கி.
ReplyDeleteநன்றி சேகர்....
DeleteThat was excellent Vijay ! I loved the pre-climax dialogue :)
ReplyDelete'maanam' 'maanam' nu solraangale adhukku enna artham ? yaaro kezhattu tharuthailanga potta rules-ai kaalangaalamaa follow panradhu dhaan maanama ?
Today is Periyar's birthday. I hope in a few decades people like us can hold hands and hold our heads high !
ரொம்ப நன்றி நண்பா.... உண்மைதான்.... அந்த வெண்தாடி கிழவர் இருந்திருந்தால் இந்நேரம் நமக்கான உரிமைக்குரல் இன்னும் சத்தமாக ஒலித்திருக்கும்..... நம் விதி, இல்லாமல் போய்விட்டார்....
Delete71 களில் திரைப்படங்களில் காட்டிய முடிவை சொல்ல வந்து ஹீரோக்களை சுதாரித்து உட்கார வைத்து 2013 முடிவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி !!!
ReplyDeleteHai anna, namma gay life la eppavum sogam, emarram than michama irukku, athaiye unka kathai kalilum kattamal oru nalla mudivai, athilum thideer thiruppamana climax-i thanthatharkku nanri!!! (enga murugan anba emathiduvanonu payanthen) ana namma city life laye gay love nirakarikka padum podhu, village la athu ethukka paduma??? remba kastam illaya...
ReplyDeleteகதை அருமை ! நல்ல கிளைமாக்ஸ் அண்ணா !
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNice story... Aanal nitharsanathil Murugan maman pennai katti iruupan. Anbu konjam bayanthavanathalal visham kudithu irandhu poi iruppan... :-)
ReplyDeleteVenthaadi kizhavare jeyikka mudiyathavargal nam munnorgal... innum nammooril kalachara kavalargal irukkirargal.
"Gay" is western influence-nu solravanai seruppala adikkanum... Sivanum Vishnuvum sernthu Dharma sastha (Ayyapan) uruvanar-nu sonna kannathila pottupange, nammale pole ullavangala asingapaduthuvange... wastrels
gud lines
ReplyDelete