Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Saturday 31 May 2014

மோடி சர்க்காருக்கு ஒரு கோரிக்கை கடிதம்....

மோடி சர்க்காருக்கு ஒரு கோரிக்கை கடிதம்....



புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசுக்கு முதல்ல வாழ்த்துகளை சொல்லிவிட்டு, எங்களோட நசுக்கப்பட்ட உரிமைகளை கோரிக்கையா உங்க முன் வைக்கிறோம்...
இந்த கடிதத்தை நீங்க பார்ப்பீர்களோ? படிப்பீர்களோ? எனக்கு தெரியாது.... கடிதம் எழுதி உங்ககிட்ட கேட்குற அளவுக்கு நாங்க பெரிய ஆட்களல்லாம் இல்ல, ஆனால் கடிதத்தை தவிற உங்களோட தொடர்புகொள்ள வேற வழி எதுவும் எங்களுக்கு இல்லை என்பதுதான் நிதர்சனம்...
“வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பானை உடைஞ்சா மாதிரி”ன்னு எங்க ஊர்கள்ல பழமொழி சொல்வாங்க... நிஜத்தில், நான்கு மாதங்களுக்கு முன்ன எங்களுக்கும் அப்படி ஒரு வெண்ணை திரண்டு வந்ததாதான் நினைச்சோம், இடையில் தேர்தல் அறிவிப்பு வந்ததால் அது உடைஞ்சு போயிட்டதா நினைக்குறோம்.... சட்டப்பிரிவு 377ஐ நீக்குவது தொடர்பாக கடந்த காங்கிரஸ் அரசாங்கம் எடுத்த முன்னெடுப்புகளைத்தான் நாங்க வெண்ணையா பார்க்கிறோம்... உச்சநீதிமன்றம் அந்த சட்டப்பிரிவை நீக்க முடியாதுன்னு சொன்ன பிறகு, இந்தியாவை சேர்ந்த பல அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவாக நின்று பேசியது எங்களை ஆச்சரியப்படுத்திய பேரானந்தம்.... அதே காங்கிரஸ் அரசாங்கம் மறுசீராய்வு மனு போட்டு, அது தள்ளுபடியாகி.... மீண்டும் நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக தீர்மானமோ, சட்ட முன்வரைவோ கொண்டுவரப்படும்! என்று எதிர்பார்த்து காத்திருந்த வேளையில்தான், தேர்தல் அறிவிப்பு வந்து, எங்க பிரச்சினைகளை நாங்களே பேசமுடியாத சூழல் உருவாகிடுச்சு.....
உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு, நம்ம நாட்டின் பெரும்பான்மையான கட்சிகள் எங்களுக்கு ஆதரவாத்தான் நிலைப்பாட்டை எடுத்தாங்க.... ஏனோ பாஜக மட்டும், சில அரசியல் காரணங்களால் தீர்ப்பை வரவேற்றார்கள்... அதனால், கொஞ்சம் மனம் துவண்டது என்னமோ உண்மைதான்...  ஆனால், சமீபத்தைய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அறிக்கை ஒன்றில், “சட்டப்பிரிவு 377 நீக்கம் என்பது பேசி எடுக்கப்பட வேண்டிய முடிவு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.... அந்த அமைப்பின் நிலைப்பாடு இப்போ எங்கள் பக்கம் கொஞ்சம் தளர்ந்திருப்பதாகவே இதன்மூலம் தெரிகிறது... மேலும், எங்கள் உரிமைகளை பற்றி பாஜகவின் எத்தனையோ தலைவர்கள் எதிர்மறையாக கருத்துகளை சொன்னபோதிலும், இன்றைக்கு பிரதமராக வீற்றிருக்கும் நரேந்திர மோடி அவர்கள் அமைதியாகவே இருந்தார்... அந்த அமைதிக்கு பின், எங்கள் மீதான கரிசனம் கொஞ்சம் இருப்பதாகவே நாங்கள் நினைக்கிறோம்...
காந்தி பிறந்த மண்ணின் மைந்தனாக இன்றைக்கு ஆட்சியை பிடித்திருக்கும் மோடி அவர்கள், காந்தியின் பாலீர்ப்பை பற்றியும் நிச்சயம் அறிந்திருப்பார்.... காந்தியின் பாலீர்ப்பை மறைக்க கடந்த காலத்து அரசாங்கங்கள், அவருடைய கடிதங்களையும், மற்ற தடையங்களையும் அழித்த நிகழ்வுகளும் நீங்கள் அறியாதது அல்ல...
மேலும், இந்தியா எப்போதுமே ஒருபால் ஈர்ப்பை அந்நியமாக பார்த்த வரலாறு கிடையாது... இன்றைக்கும் நம் இந்தியாவின் கலாச்சாரங்களின் பிறப்பிடமாக கருதப்படும் கோவில்களின் சிற்பங்களை ஆய்வு செய்தாலே அந்த உண்மை நமக்கு புரியவரும்... கஜுஹரோ சிற்பங்களும், உலகிற்கே களவியல் கல்வியை கற்றுக்கொடுத்த “காமசூத்திரத்தையும்” பார்த்தாலே ஒருபால் ஈர்ப்பு இயற்கையான ஒன்றுதான் என்பதை உங்களால் எளிதாக உணரமுடியும்....
ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கூட இந்து மதத்தில் எந்த இடத்திலாவது ஒருபால் ஈர்ப்பு குற்றம் என்று சொல்லப்பட்டிருக்கிறதா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.... “ஒருபால் ஈர்ப்பை கொடுமையான குற்றமாக” கருதும் எத்தனையோ மதங்களுக்கு மத்தியில், இந்து மதக்கடவுள்களை கூட ஒருபால் ஈர்ப்புள்ளவர்களாக எதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் உன்னத கருத்துகளை உள்வாங்கிய மதத்தை, அதன் கருத்துகளை ஏற்க மறுப்பது ஏன்?... ஐயப்பன், விநாயகர், முருகன் என்று எத்தனையோ பிரதான கடவுள்களின் பிறப்பின் வரலாற்றை அறியாதவர்களா நாம்?...
நிஜத்தில் இப்போ இந்தியர்களாகிய நம்மீது திணிக்கப்பட்டது தான் இந்த ஹோமோபோபிக் எண்ணங்கள்.... 1860ஆம் ஆண்டு காலனிய ஆதிக்கத்தில், பிரித்தானிய அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட அந்த “ஒருபால் ஈர்ப்புக்கு எதிரான மனநிலையை” கொஞ்சம் உதறித்தள்ளிவிட்டு, உண்மையை நாம் இனி உணர்ந்துதான் ஆகணும்...
காலனிய தாக்கத்திலிருந்து கொஞ்சம் விலகி, நிதர்சனத்தை நீங்க ஏற்றாலே, எங்கள் மீதுள்ள நிலைப்பாட்டை நிச்சயம் மாற்றிக்கொள்வீர்கள்...
மோடி அரசாங்கத்தின் மீது எவ்வளவோ எதிர்பார்ப்புகள் மக்களுக்கு கொட்டிக்கிடக்கிறது, அதில் எங்களோட இந்த “பாலீர்ப்பு ஏற்பு” எதிர்பார்ப்பும் பிரதானம் என்பதை உணரனும்....
இந்த உலகத்தில் இன்னும் ஒருபால் ஈர்ப்பை குற்றமாக கருதும் நாடுகள் வெறும் 77 மட்டும்தான்... ஏறத்தாழ நூற்றியிருபது நாடுகள் நிதர்சனத்தை உணர்ந்து, எங்கள் பாலீர்ப்பை ஏற்றுள்ளார்கள்.... உலகில் நம்மைவிட பொருளாதாரத்திலும், கல்வி அறிவிலும் பின்தங்கிய நாடுகள் பலவற்றிலும் கூட பாலீர்ப்பு பிரச்சினைகள் இருந்திடவில்லை.... மோடியின் தலைமையில் வல்லரசை நோக்கி நகரும் இந்தியா, இந்த விஷயத்தில் மட்டும் பிற்போக்குத்தனமான முரண்களை கொண்டிருப்பது முறையா? என்பதை உணருங்கள்....
நம் நாட்டில் ஏறத்தாழ 8% மக்கள் ஒருபால் ஈர்ப்புள்ளவர்களாக இருப்பதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது... நிச்சயம் இந்த சதவிகிதம் கூடுதலாக இருக்கவே வாய்ப்பிருக்கு.... இந்தியாவின் வளர்ச்சி என்பது இந்த எட்டு சதவிகித குடிமகன்களின் பங்களிப்பிலும், உழைப்பிலும் கூட இருக்கிறது என்பதை நீங்கள் உணரனும்.... அந்த எட்டு சதவிகிதத்தில் அரசியல்வாதி முதல் அணு விஞ்ஞானி வரை, தொழிலதிபர் முதல் விவசாயி வரை எல்லோரும் இருப்பார்கள் என்பதும் நிதர்சனம்தான்.... சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, “இந்தியாவில் ஆண்டொன்றுக்கு முப்பாதாயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் பணம் ‘ஹோமோபோபியா’வால் இழப்பாகிறதாம்...”... இவ்வளவு தொகை ஒரு ஆண்டுக்கு இழப்பாகிறது என்றால், நம் நாடு எவ்வளவு பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டு வருகிறது என்பதையும் நீங்கள் உணரனும்....
நாங்கள் “உரிமை, உரிமை” என்று சொல்வதல்லாம், எங்களுக்கான திருமண உரிமையோ, தம்பதிகளாக குழந்தை தத்தெடுக்கும் உரிமையோ இல்லை.... இப்போ எங்களுக்கு தேவை என்பது, ஒரு சாதாரண குடிமகனுக்கு அந்த நாடு கொடுக்கப்பட வேண்டிய அடிப்படை பாதுகாப்பு மட்டுமே எங்கள் கோரிக்கை.... ஒவ்வொரு நாளும் பாலீர்ப்பு காரணங்களால் நம் நாட்டில் எத்தனையோ தற்கொலைகள் நிகழ்கின்றன, “யார் வேண்டுமானாலும் ஒரு ஒருபால் ஈர்ப்பு நபரை அடித்து, துன்புறுத்தி, திருடலாம்” என்கிற பாதுகாப்பற்ற சூழல்தான் நிலவுகிறது.... ஆகையால் மோடி அரசாங்கத்திடமிருந்து நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், அது எங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான “சட்டப்பிரிவு 377 நீக்கம்” என்பதுதான்.... அதை தாண்டிய உரிமைகளை பிற்காலத்தில் பெற்றுக்கொள்வதில் பொறுமையாக காத்திருப்போம்...
1989ஆம் ஆண்டு அமெரிக்க சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில், “எதிர்பால் ஈர்ப்பு நபர்களைவிட ஒருபால் ஈர்ப்பு நபர்கள் மூன்று மடங்கு அதிகம் தற்கொலை செய்கிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது... இந்தியாவை போன்ற சட்ட மற்றும் சமூக அங்கீகாரமும், விழிப்புணர்வும் இல்லாத நாட்டில் நிச்சயம் அது பல மடங்கு அதிகமாகவே வாய்ப்பிருக்கு.... மேலும், உலகில் முப்பது சதவிகிதம் தற்கொலைகள் பாலீர்ப்பு மற்றும் பாலின அடையாள குழப்பத்தால் நிகழ்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது... இந்தியா போன்ற ஒருநாடு முதலில் தன்னாட்டு குடிமகன்களின் இத்தகைய தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.... திறம்பட மக்கள் வளம் பெற்றிருக்கும் நாடு, இத்தகைய காரணங்களால் தான் இன்னும் பல துறைகளிலும் பின்தங்கி இருக்கிறது...
மாவீரன் அலெக்சாண்டர், தத்துவ ஞானிகள் சாக்ரட்டிஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ, புகழ்பெற்ற சிற்பி மைக்கேல் ஏஞ்சலோ, கணினி அறிவியலின் தந்தை ஆலன் தூரிங், பிரபல இலக்கியவாதி சேக்ஸ்பியர்.... இந்த பட்டியலில் இருக்க வேண்டிய எத்தனையோ இந்தியர்கள் பட்டை தீட்டப்படாத வைரங்களாகவே மண்ணுக்குள் புதைந்துவிட்டார்கள்.... எங்கள் பிள்ளைகளை “தன் சுயபாலீர்ப்பை பற்றியே யோசிக்கும் நிலையை மாற்றி, தன்னம்பிக்கை வளர செய்து பாருங்கள்....” நிச்சயம் அப்போதே அவர்களின் உள்புதைந்துள்ள திறமைகள் வெளிவந்து, நாட்டிற்காக அவர்களும் உழைக்க வெளிவருவார்கள்...
ஒன்றை மட்டும் தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன்.... “ஒருபால் ஈர்ப்பை ஏற்றால், நாளைக்கே இங்க ஒருபால் ஈர்ப்பு நபர்கள் அதிகமாகிடுவாங்க.... இதை பரப்பிடுவாங்க”ன்னு நினைச்சுட வேண்டாம்.... இது குணப்படுத்த வேண்டிய மனநோயும் இல்லை, பரப்பப்படும் அளவிற்கு மத நம்பிக்கையும் இல்லை.... எங்கள் சுயத்தை நாங்கள் ஏற்கவும், அதை நீங்கள் ஏற்கவும் மட்டுமே எங்கள் போராட்டம்.... மேலும், இதன்மூலம் கட்டுப்பாடற்ற காமம் கரைபுரண்டு ஓடும்னும் நினைக்க வேணாம்.... ஒரு பொது இடத்தில் எங்க சமூகத்து மக்களே அநாகரிகமாக நடந்துகொண்டால், தாராளமாக தண்டியுங்கள்... ஒருவன் மீது மற்றொருவன் பாலியல் குற்றச்சாட்டு சுமத்துகிறான் என்றால், அதையும் விசாரித்து தாராளமாக தண்டனை வழங்குங்கள்.... ஆனால், “எதிர்பால் ஈர்ப்பினருக்கு பின்பற்றப்பட வேண்டிய அதே வழிமுறைகள் தான் எங்கள் மீதும் பின்பற்றப்பட வேண்டும்” என்பதுதான் எங்கள் கோரிக்கை.... கட்டுப்பாடற்ற காமத்துக்கு நாங்கள் உரிமை கேட்கவில்லை, கட்டுக்கோப்பான எங்களின் உறவுக்குத்தான் அனுமதி கேட்கிறோம்.... இதை எங்களுக்கான சலுகைகளாக நினைக்க வேண்டாம், ஒரு குடிமகனுக்கு நாட்டின் தலைமை கொடுக்க வேண்டிய அடிப்படை உரிமையாக நினைத்து தரவேண்டும்...
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படும் சட்டப்பிரிவு 370ஐ போக்க நீங்க தீவிரமாக களமிறங்கியுள்ளது தெரிகிறது... ஆனால், “370 நீக்க”த்திற்கு கொடுக்கப்படுகிற முக்கியத்துவத்தை, “377 நீக்க”த்திற்கு தாருங்கள் என்பதுதான் எங்கள் கோரிக்கை... நாட்டின் வளர்ச்சியை பிரதானமாக கருதும் நீங்கள், அந்த வளர்ச்சிக்கு எல்லா தரப்பு மக்களின் ஆதரவும், பங்களிப்பும் அவசியம் என்பதை நிச்சயம் உணர்ந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறோம்... அந்த வகையில் எங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், எங்களுக்கான ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை நீங்கள் மேற்கொள்வீர்கள் என்கிற நம்பிக்கையோடு.....

உங்கள் நாட்டு ஒருபால் ஈர்ப்பு பிரஜைகள்.....             

                                                             

6 comments:

  1. Replies
    1. ஹ்ம்ம்... நம்பிக்கைதான் வாழ்க்கை... நம்புவோம் நண்பா...

      Delete
  2. super vijay...சரியாக சொல்லிருக்கீங்க...காமம் மட்டும்தான் என்றே பலர் நினைக்கிறார்கள்...சிலர் செய்யும் அநாகரிகமான செயல் இது போன்ற எண்ணங்களை தூண்டவும் செய்கிறது...நீங்கள் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் நடக்கும்...நீங்கள் சொல்வது போல் atleast பெண்ணுடன் கட்டாய திருமணம் குறையும்...கலக்குறீங்க விஜய்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சாம்...

      Delete
  3. Nice Vijay nechayam aintha letter modi. Avainga padikanum basically Muslim samukathukum RSS ikkum neriya sanda irruku nan matha rethiya peasa varala nambaloda uinrvukala mathikanum purinchikanu than yanoda assiyum. Pakalam 377 neka paduthanu but athu yana 370 yathu athu neekinainga atha soiluraingala

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய தனிப்பட்ட கருத்து என்பது "370" நீக்கப்படக்கூடாது....
      "377" நீக்கப்படவேண்டியது..... ஆனால், இங்கு அந்த கருத்து அரசியலாக்கப்படும் என்பதால் அதை வெளிப்படையா சொல்லவில்லை நண்பா.... தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழர்...

      Delete