காமம் தப்பில்லைங்க... ஆமாம், ஏனோ
நான் காமத்திற்கு எதிரானவன்குற மாதிரி பலரும் நினைக்குறாங்க... அப்டி ஒரு பிம்பம்
எப்படி உருவாச்சுன்னு எனக்கு தெரியல.... காமத்துப்பால் அருளிய வள்ளுவனும், நரி
விருத்தம் பாடிய திருத்தக்கத்தேவரும் சொன்ன கருத்துகளுக்கு முரணானவனாகவா நான்
இருக்கப்போறேன்?... நிச்சயமா இல்லைங்க....
பசி தூக்கம் போலவே காமும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது.. அந்த இயல்பான
உணர்வை “இருக்கக்கூடாது”ன்னு சொல்றதுக்கு எனக்கு எந்த உரிமையும் இல்ல...
அப்படிப்பட்ட நம் அன்பர்களோட காமத்தின் தேவைகளை பற்றித்தான் இப்போ பேசப்போறேன்...
அதைப்பற்றி பேசுறதுக்கு முன்பு ஒருவிஷயத்தை நான் தெளிவுபடுத்திடுறேன்... எத்தகைய
காமத்திற்கு நான் ஆதரவானவன்?ன்னு ஒரு கேள்விக்கு பதில்தான் இங்கே முக்கியம்...
காலை எழுந்தவுடன் “இன்னிக்கு தனியா
இருக்கேன், போர் அடிக்குது... யாராச்சும் கம்பெனி தரீங்களா?” என்ற வாசகத்தை
பேஸ்புக் ஸ்டேட்டஸ்’ஆக போட்டு, மதியம் வரை “கம்பெனி” எதிர்பார்த்து காத்திருந்து,
மதியத்தில் “பிளானட் ரோமியோ” கடலுக்குள் இறங்கி சிதறிக்கிடக்கும் கோடிக்கணக்கான
மீன்களில் ஒன்றை “பிக்கப்” செய்து, மாலை முதல் இரவு வரை பேருந்து நிலையத்திலோ,
ரயில்களிலோ “உரசல், தடவல், அதையும் தாண்டிய முனகல்” எல்லாம் கடந்து படுக்கப்போகும்
போதும் கூட, அருகில் படுத்திருக்கும் நண்பனின் மீது காமப்பார்வையை செலுத்தும்
எத்தனையோ “ஒருபால் ஈர்ப்பு நபர்களின்” காமத்திற்கு சத்தியமாக நான் எதிரானவன்தான்...
காமத்தை உங்கள் கட்டுப்பாட்டிற்குள்
வைத்திருப்பதற்கும், காமம் உங்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் வித்தியாசம்
உங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும்...
1)உங்கள் அன்றாட பணிகளில் காமம்
இம்சித்து பிரச்சினை செய்கிறதா?
2)சதா சர்வகாலமும் காம எண்ணங்கள்
மேலோங்கி, உங்கள்
மனதை அதிகம் குழப்புகிறதா?
3)பார்க்கும் அனைத்து மனிதர்களும்
போகப்பொருள் போலவே காட்சி தருகிறார்களா?
மேல்சொன்ன மூன்றுக்கும் பதில் “ஆம்!”
என்றால், காமத்தின் பிடியில் நீங்கள் கிடக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்...
சீக்கிரம் வெளிவர முயலுங்கள் என்பது மட்டுமே என் ஆலோசனை.... அப்போ எப்படிப்பட்ட
காமம் சரியானது?... இதற்கு என் நண்பர் ஒருவரின் வாழ்க்கையை பற்றி சொன்னால் தெளிவாக
புரியவைக்கமுடியும்னு நினைக்குறேன்... அந்த நண்பர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில்
பணிபுரிகிறார்... வாரநாட்களில் அவர் இயல்பாக பணிபுரிவார், மாலை வேளைகளில் வீட்டில்
குடும்பத்தாருடனும், வெளியில் நண்பர்களுடன் வாழ்க்கையை மகிழ்வாக கழிப்பார்...
வாரம் ஐந்து நாட்களும் இப்படித்தான் இருக்கும்... சனிக்கிழமை பொதுவான ஒருபால் ஈர்ப்பு
இளைஞர்களை போல பிளானட் ரோமியோவில் தூண்டில் போடுவார், ஞாயிறுகளில் நாள் குறித்து
பூஜையும் செய்திடுவார்.... அவ்வளவுதான்... மீண்டும் திங்கட்கிழமை வழக்கமான தன்
பணிகளில் ஈடுபட தொடங்கிடுவார்...
அவர் பேச்சில் ஒரு தெளிவிருக்கும்,
கொஞ்சமும் குழப்பமில்லாத மனநிலையோட இருப்பார்... எந்த தருணத்திலும் அவருடைய காம
எண்ணங்கள் அவரின் சராசரி வாழ்க்கையில் குறிக்கிட்டு குழப்பியதே இல்லை... “அப்படி
உணவில் உப்பாக காமம் இருக்கும்வரை, வாழ்க்கையில் தப்பாக எதுவும் நடந்திடாது...”
(அட! பஞ்ச் நல்லா இருக்கே...!).
சரி, இனி அத்தியாவசிய காமத்தின்
அவசியம் பற்றி இப்போ பார்க்கலாம்...
பொதுவாகவே ஒருபால் ஈர்ப்பு நபர்கள்
மீது வெகுஜன சமூகம் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டே, பொது இடங்களில்
அநாகரிகமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான்... அவங்க சொல்றது சரிதான், அதே
நேரத்தில் இன்னொரு விஷயத்தை அவங்க யோசிக்க வேண்டும்... பெற்றோர்களும் உறவினர்களும்
ஒன்று சேர்ந்து பெண் பார்த்து, திருமணம் என்கிற ஒரு சடங்கின் வழியாக ஒரு ஆணும்
பெண்ணும் உறவில் ஈடுபட நம் சமுதாயங்களும், சடங்குகளும் ரொம்பவே பாடுபடுகின்றன...
எதிர்பால் ஈர்ப்பு நபர்கள் தங்கள் காம இச்சைகளை தீர்க்க இப்படிப்பட்ட கலாச்சார
வழிமுறைகள் வாய்ப்பாக இருக்கும் தருணத்தில், சட்ட மற்றும் சமூக ரீதியான அங்கீகாரம்
இல்லாத நிலையில் ஒருபால் ஈர்ப்பாளர்கள் தங்கள் காம உணர்வுகளை எப்படி கட்டுப்படுத்த
முடியும்? என்கிற நேரடி கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு யார் வேண்டுமானாலும் பொது
இடங்களில் அநாகரிகமாக செயல்படும் ஒருபால் ஈர்ப்பு நபர்கள் மீது குற்றம்
சுமத்தட்டும்...
படித்த, ஓரளவு கல்வி அறிவு பெற்ற
ஒருபால் ஈர்ப்பு நபர்கள் கூட கொட்டிக்கிடக்கும் இணைய உலகின் வாய்ப்புகளை
வெகுஜனங்களின் கண்களுக்கு அகப்படாமல் பயன்படுத்தி காம இச்சைகளை தீர்க்க
முடிகிறது... ஆனால், கல்வி அறிவில்லாத ஒருபால் ஈர்ப்பாளர்கள் எங்கே சென்று காம
உணர்வுகளை தணிக்க வேண்டும்? என்கிற நியாயமான கேள்விக்கு எந்த சமூக
பொறுப்புள்ளவர்களுக்கும் பதில் தெரியாது...
நடக்க பாதை உருவாக்காமல், “நடக்கும்
நபர்கள் யாரும் முறையாக பாதையில் நடப்பதில்லை!” என்று குற்றம்ச்சாட்டுவது எப்படி
முட்டாள்த்தனமான கருத்தோ, அப்படிப்பட்ட மூடத்தனமான குற்றச்சாட்டுதான் பொது
இடங்களில் அநாகரிகமாக ஈடுபடுவதாக பாமர ஒருபால் ஈர்ப்பினர் மீதான குற்றம்
சுமத்துவதும்...
மற்ற நாடுகளில் நிலைமை இப்படி
இல்லை...
ஒருபால் ஈர்ப்பை ஒருகாலத்தில்
குற்றமாக கருதிய மேற்குலக நாடுகளில் கூட, அப்போதைக்கு ஒருபால் ஈர்ப்பாளர்கள்
ஒன்றாக சந்தித்துக்கொள்ள மதுபான அரங்குகள் (bar), நீராவி குளியல் அறைகள்
(sauna), கூடலகங்கள் (clubs) என்று எத்தனையோ
வடிகால் வழிமுறைகள் செயல்பட்டன...
இன்றைக்கும்கூட ஒருபால் ஈர்ப்பை
குற்றமாக கருதும் எத்தனையோ நாடுகளில், இப்படிப்பட்ட sauna’க்கள்,
barகள் என்று இயல்பாக செயல்பட்டு வருகின்றன... அத்தகைய
நாட்டின் அரசுகளுக்கும், பொதுமக்களுக்கும் கூட அந்த இடங்களில் நடக்கும்
விஷயங்கள் பற்றி தெரியும், என்றாலும் கூட
அடுத்தவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வண்ணம் அவர்கள் யாரும் அதை
எதிர்ப்பதில்லை...
ஒருபால் ஈர்ப்பு நபர்களுக்கான
தனிப்பட்ட விடுதிகளில் சந்திப்புகளும், அதனை தாண்டிய “இத்யாதிகளும்” இயல்பாக
நிகழ்வதை நாம் பார்க்க முடியும்... அப்படிப்பட்ட இடங்களில் சிலநேரங்களில்
வெளிப்படையாகவே “வானவில் கொடி”யை அடையாளமாக கட்டியிருப்பார்கள், சிலர் நாளிதழ்
மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களிலும்கூட “ஒருபால் ஈர்ப்பு நபர்களுக்கானது”
என்கிற நேரடியான வாசகத்தை முன்வைத்திருப்பார்கள்... சில குளியல் கூடங்களில் இலவச
ஆணுறைகள் கூட தனிமனித பாதுகாப்பு கருதி வழங்கப்படுகிறது என்பதும் கூடுதல் ஆச்சரியமான
விஷயம்... இதைத்தாண்டிய மேலதிகமான தகவல்களை சொன்னால் வலைப்பூவிற்கு “18
வயதிற்கு மேற்ப்பட்டோருக்கு மட்டுமே அனுமதி” என்கிற எச்சரிக்கை வகையான வலைப்பூவாக
மாறிவிடும்... “அதனால மாப்பு, sauna பற்றிய விஷயத்துக்கு
இத்தோட ஸ்டாப்பு...”
நம்மைவிட சட்டங்களை கடுமையாக கையாளும்
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கூட இதே நிலைமைதான் எனும்போது, இந்தியாவில் என்ன
நிலை? என்று நான் சொல்லி உங்களுக்கு புரியவேண்டியதில்லை....
இங்கே ஒருபால் ஈர்ப்பு நபர்கள்
காதலித்து இணைந்து வாழ்வதற்கான தெளிவான சூழல் இல்லை, திருமணங்கள் என்கிற
பேச்சிற்கே வழியில்லை... அப்படி ஒரு நிலையில் குறைந்தபட்சம், ஒரு மனிதனுக்கு
இயல்பாக எழும் காம உணர்வுகளை தீர்க்கக்கூட வழியில்லாத கொடுமையான நிலைமையில் எப்படி
இந்த சமூகம் அவர்களிடம் “நளினமான, நாகரிகமான” காம அணுகுமுறைகளை எதிர்பார்க்க
முடியும்?...
இளைஞர்களுக்கு கூட பரவால்லங்க... வேறு
வழியின்றி குடும்ப நிர்பந்தத்தின் காரணமாக பெண்ணை திருமணம் செய்துகொண்ட எத்தனையோ
நடுத்தர வயது, ஐம்பது அறுபதுகளை நெருங்கும் வயதினர் எந்த வகையில் வடிகால்களை
பெறமுடியும்?... பொதுக்கழிப்பிடங்களிலும், மூன்றாம் தர திரையரங்கங்களிலும் மற்ற
ஆண்களை ஏக்கத்தோடு பார்த்து, ஒருவித தயக்கத்தில் எச்சிலை மட்டும் விழுங்கிவிட்டு
உங்களை கடந்திட்ட எத்தனையோ நடுத்தர வயதினரை நீங்கள் பார்த்திருக்கலாம்... சில
சமயம் எரிச்சலும், பல சமயம் அருவருப்பும் பட்டிருப்பீர்கள்... அவர்களுக்குள்ளும்
புதைந்துகிடக்கும் அந்த உணர்வுகளை பற்றி என்றைக்காவது யோசித்திருப்போமா?... நான்
அந்த உணர்வுகளை நியாயப்படுத்தவில்லை, அவர்களின் செயலுக்கு வக்காலத்து
வாங்கவில்லை.... அதேநேரத்தில் அவர்கள் பக்கம் இருந்திடும் ஒரு சிறு இயலாமையை
உங்களுக்கு சுட்டிக்காட்டத்தான் இவ்வளவையும் சொல்கிறேன்.... கட்டிய மனைவியின் மாதத்தின்
மூன்று நாட்கள் “விலக்கின்” போதும், கருவுற்ற பத்து மாதங்களின் போதும்கூட காம
உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத வெகுஜன கணவன்மார்கள் நிறைந்திருக்கும்
சமூகத்தில், வாழ்க்கை முழுவதும் உணர்வுகளை வெளிப்படுத்த தயங்கியே வாழ்க்கையை
கழிக்கும் பெரும்பாலான ஒருபால் ஈர்ப்பு நபர்களின் குறைந்தபட்ச உணர்வுகளுக்காவது
நாம் எப்போது மதிப்பளிக்க போகிறோம்? என்பதை குற்றம்சாட்டும் முன்பு வெகுஜன சமூகம்
புரிந்துகொள்ள வேண்டும்...
சட்டம் மற்றும் சமுதாய அங்கீகாரம்
கிடைப்பது ஒருபக்கம் கிடக்கட்டும்... முதலில் இப்படிப்பட்ட மனிதர்களின் உணர்வுகளுக்கு
மதிப்பளிக்க நம் நாடு பழகவேண்டும்... அப்படி வடிகால்களாக வாய்ப்புகள்
உருவாகியபிறகும் அவர்கள் சொல்லும் “பொது இடங்களில் அநாகரிகம்” தொடருமானால்,
நிச்சயம் எல்லோருமாக சேர்ந்து அதை எதிர்ப்போம்... அதுவரை, குறைந்தபட்சம் அந்த
பாவப்பட்டவர்களின் இயலாமையை மட்டுமாவது எண்ணிப்பாருங்கள்.... அதனால் இனி
குறைசொல்வதை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு, ஆக்கப்பூர்வமான வடிகால்களை உருவாக்கிட
என்ன செய்ய வேண்டும்? என்று கொஞ்சம் யோசிக்க தொடங்குவோம்...
வடிகாலுக்கு வழிவகுக்காமல் குற்றம்
மட்டுமே சுமத்துவதுதான் அவர்கள் நோக்கம் என்றால், எம் குருநாதர் சுஜாதா சொல்வதை
போல, “புரியாதவர்களை பசித்த புலி தின்னட்டும்....”
தலைப்பை
பார்த்ததும் பயந்துடாதிங்க... நீங்க பயப்படற அளவுக்கு தேர்தல்லஎல்லாம் நான்
குதிக்கல... அப்புறம் இது என்ன தலைப்பு?...
நாடாளுமன்ற
தேர்தல் நம்ம நாட்டுல களைகட்ட தொடங்கிடுச்சு.... கூட்டணி பேரங்கள் பெரும்பாலும் முடிஞ்சாச்சு,
அடுத்த மாசம் தேர்தல் தேதியும் அறிவிக்க போறாங்க... அப்புறம் என்ன?... இன்னும்
மிச்சம் இருக்கிறது “தேர்தல் அறிக்கைகள்” தானே?... சமீப காலங்களாக
அரசியல்வாதிகளின் முக்கிய விவாத பொருளாக இருக்கும், “ஓரினச்சேர்க்கை குற்றமா?”
விஷயத்தையும் நம்ம கட்சிகள் தேர்தல் அறிக்கையில் இணைக்கும் வாய்ப்பிருக்கு....
“ஓரினச்சேர்க்கை குற்றமே, அதை நம் நாட்டில் அனுமதிக்கக்கூடாது...”ன்னு சொல்லும்
கட்சிகளுக்காக, ஏதோ என்னால் முடிஞ்ச “ஓரினச்சேர்க்கை தடுப்பு யோசனைகள்”... இந்த
யோசனைகளை அந்தந்த கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இணைப்பதன் மூலம், இந்திய
கலாச்சாரத்தை காக்க போராடும் கட்சியாக உங்களை மக்களிடம்
வெளிப்படுத்திக்கொள்ளலாம்...
1.ஒவ்வொரு வீட்டின் படுக்கை அறையிலும் வெப்
கேமரா பொருத்தப்படும்... ஒவ்வொரு தெருவிலும், அந்த வெப் கேமராக்களை கண்காணிக்கும்
கண்காணிப்பகங்கள் அமைக்கப்படும்... இதன்மூலம் படுக்கை அறைகளில் நிகழும்
ஓரினச்சேர்க்கை குற்றங்களை நாங்கள் தடுப்போம்... (அப்போ குளியலறை, சமையலறை
இங்கல்லாம் நடந்தா என்ன பண்றது?ன்னு கேட்காதிங்க.... அது தொடர்பான அடுத்தக்கட்ட
திட்டம் இதன் வெற்றியை தொடர்ந்து தொடரும்...)
2.கல்லூரிகள், விடுதிகள், சிறைச்சாலைகள் போன்ற
ஒரு பாலினத்தவர் ஒன்றாக இணைந்து வாழும் இடங்களில் “ஓரினச்சேர்க்கை தடுப்பு
முகாம்கள்” அமைக்கப்படும்... அங்கு வசிக்கும் ஒவ்வொரு ஆண்களின் இடுப்பையும் சுற்றி
இரும்பு ஆடைகள் அணிவிக்கப்பட்டு, அதில் திண்டுக்கல் பூட்டு பூட்டப்படும்...
விடியும்வரை எந்த நபருடைய பூட்டும் திறக்கப்பட மாட்டாது... (அவசரத்துக்கு என்னங்க
பண்றது?ன்னு குழம்பாதிங்க... டையபர் அணிந்த பிறகே அந்த இரும்பு ஆடை
அணிவிக்கப்படும்.... இதன்மூலம் அவசரங்களை பற்றிய கவலைகள் தேவையில்லை)...
3.ஓரினச்சேர்க்கையை கட்டுப்படுத்தும் நோக்கில்,
அதற்கென தனியே ஒரு துறை ஒதுக்கப்பட்டு, ஒரு அமைச்சரும் நியமிக்கப்படுவர்... அந்த
துறை “ஓரினச்சேர்க்கை விடுவிப்பு துறை” என்ற பெயரில் செயல்படும்... ஒரு அமைச்சர்,
இரண்டு இணை அமைச்சர், மாவட்ட வாரியான அமைப்பாளர் என்று மிகப்பெரிய துறையாக அது உருவாக்கப்பட்டு 2020இல் “ஓரினச்சேர்க்கை இல்லாத ஒளிரும்
இந்தியா” உருவாக போராடுவோம்...
4.மாவட்டம் தோறும் ஓரினச்சேர்க்கையிலிருந்து
மக்களை மீட்க, விழிப்புணர்வு முகாம்கள் அமைக்கப்படும்.... அந்த முகாம்களில்
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தவறை உணரும் விதமாக கலை நிகழ்ச்சிகள் வழியாக
விழிப்புணர்வுகள் கொண்டுசேர்க்கப்படும்... அதில் முக்கிய நிகழ்வாக விஜய
டீ.ராஜேந்தர் அவர்களின் சொற்பொழிவு, பவர் ஸ்டார் அவர்களின் நடனம், இயக்குனர்
பேரரசு அவர்களின் “பஞ்ச்” வசனங்கள் வழியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரை
வழங்கப்படும்... (இதன்மூலம் ஆண்டிற்கு ஒரு லட்சம் ஓரினச்சேர்க்கையாளர்கள் கதறக்கதற
திருந்துவார்கள் என்று எங்கள் பதினேழு பேர் கொண்ட குழு ஒருமனதாக நம்புகிறது)...
5.(மேற்சொன்ன யோசனைகளில் இருந்தெல்லாம்
தப்பிப்பவர்கள், இப்போ நான் சொல்லப்போற ஒரு அதிமுக்கிய யோசனையின் மூலம் நிச்சயம்
மாட்டுவார்கள்...)ஒவ்வொரு
மனிதனின் அந்தரங்க இடத்திலும் ஒரு “சென்ஸார் சிப்” பதிக்கப்படும்... ஆணுக்கு தனி
விதமான “சிப்”பும், பெண்ணுக்கு வேறுவிதமான “சிப்”பும் பதிக்கப்படும்... ஆணும் பெண்ணும்
இல்லறத்தில் இணையும்போது அந்த சிப் ஒன்றும் செய்யாது... அதே நேரத்தில் ஆணும் ஆணும்
இணையும் போது, அந்த “ஆண்களின் சிப்” இரண்டும் மிக நெருக்கமாக வந்திட்டால், உடனே
அதிபயங்கர “சைரன் ஒலி” எழுப்பும்... இதன்மூலம் அந்தந்த தெருவில் செயல்படும் எங்கள்
“ஓரினச்சேர்க்கை தடுப்பு முகாம்”களின் அதிகாரிகள் அதிவிரைவாக செயல்பட்டு
சம்மந்தப்பட்ட இருவரையும் கைது செய்வார்கள்....
6.அப்படி கைதாகும் நபர்களை ஹோபா (HOmosexual Prevention Act)சட்டத்தின்
மூலம் எவ்வித விசாரணையுமின்றி கைது செய்யப்பட்டு, அடுத்த ஏழே நாட்களில் தண்டனையும்
வழங்கப்படும்... அந்த நபர்களின் தண்டனையாக
“விளம்பர இடைவேளையே இல்லாமல் இளவரசி முதல் இந்தி தமிழாக்க சீரியல் வரை அத்தனை
மெகாத்தொடர்களையும் ஆறு நாட்கள் தொடர்ந்து காண்பிக்கப்படும்”... அநேகமாக ஏழாவது
நாள் அவர்களை கீழ்ப்பாக்கத்திலோ, குணசீலத்திலோ சேர்க்கும் நிலை வந்தாலும், அதற்கான
முழு செலவையும் எங்கள் அரசே ஏற்கும்... (ஆமா... அந்த ‘முல்லைப்பூ’ நாடகத்துல வர்ற
குணவதியை இப்போ ரமேசு தானே வச்சிருக்கான்???)...
இப்படி கலாச்சாரம் காக்கும் பொருட்டு, நம் தேசநலன் சார்ந்து
சிந்திக்கும் எங்கள் கட்சிக்கு வாக்களித்து, எதிர்கால இந்தியா “ஓரினச்சேர்க்கையற்ற
ஒளிரும் இந்தியா”வாக உருவாகிட எங்களுக்கு வாக்களியுங்கள்....
(விலையில்லா இன்பம் முதல் மற்றும் இரண்டாம்
பாகங்களின் அபார வெற்றியை தொடர்ந்து, உங்கள் ஆதரவோடு மூன்றாம் பாகம் வெளியிடுவதில்
மகிழ்வடைகிறேன்.... முதல் இரண்டு பாகங்களையும் படிக்காதவர்களும் கூட, இதனை
தனிக்கதையாக படிக்கும் வண்ணம் காட்சியமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன....)
சென்னையில்
பிரம்மச்சாரிகளுக்காகவே நிர்மாணிக்கப்பட்ட பகுதியான திருவல்லிக்கேணியின் வழக்கமான
குடியிருப்பின் ஒரு அறையில்தான் நாற்காலியில் அமர்ந்து இரானிய திரைப்படங்களின்
வரலாற்றை எச்சில்தொட்டு புரட்டிக்கொண்டிருக்கிறான் அமானுஷ்யன்... அவன்
அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகில் ஆளுயர நின்ற அலமாரியில் கம்யூனிச மூலதனம்
முதல் முதலாளித்துவ சிந்தனை வரை கருத்துக்குவியல்களை தாள்களில் நிரப்பப்பட்ட
புத்தகங்கள் காற்று கூட புகமுடியாத அளவிற்கு ஒன்றோடொன்று நெருக்கமாக அடுக்கப்பட்டு
நிற்கிறது... சுவர்களில் கிமுவில் பூசப்பட்டிருந்ததை போல சுண்ணாம்பு பட்டிகள்
பெயர்ந்து, சுவற்றோடு வாழ விரும்பாமல் தொக்கிக்கொண்டு நின்றன... வழவழப்பை இழந்த
மொசைக் கற்களும், துருஏறி கிடந்த ஜன்னல் கம்பிகளும் கொஞ்சம் கவனிக்கும்போது நம்
கண்களை உறுத்தலாம்.... உடைந்த குழாயில் துணியை சுற்றி கட்டுப்படுத்த முயன்றும், அதையும்
மீறி குளியலறையில் சொட்டிக்கொண்டிருக்கும் தண்ணீர் சத்தம் மட்டுமே அந்த அறையின்
ஒலியாய் “டொக்.. டொக்..” சத்தத்தை ஒலித்துக்கொண்டிருந்தது....
இரானிய தெருக்களிலிருந்து தன் கவனத்தை சற்றே கலைத்த அமானுஷ்யன்,
புத்தகத்தை மூடி வைத்துவிட்டு படுக்கையை நோக்கி நகர்ந்தான்... ஜன்னல் வழியாக
ஊடுருவிய ஒளிக்கீற்று ஒன்று படுக்கையில் படுத்திருந்த தன் நெற்றியில் குவிந்து
சூடேற்றுவதை கூட உணரமுடியாத அளவிற்கு ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறான் அபி...
ஜன்னல் கதவுகளை மூடிவிட்டு அபியின் அருகில் அமர்ந்தான் அமானுஷ்யன்.... ஒரு
குழந்தையை போல கைகளையும் கால்களையும் குவித்து படுத்திருக்கும் அபியின்
முகத்திலும் அதே குழந்தைத்தனம்... உறங்கும்போது காதலனை ரசிப்பது காதலின் உன்னத
நிலையை அடைகிறபோது மட்டுமே உணரக்கூடிய உயர்நிலை... அப்படித்தான்
ரசித்துக்கொண்டிருக்கும்போது எதேச்சையாக அமானுஷ்யனின் கண்களில் பட்டது அபியின்
கன்னத்தில் சிவந்திருந்த கொசு கடித்த தழும்பு.... மாசுமருகளற்ற அந்த செம்மஞ்சள்
நிற முகத்தில் ஏனோ அந்நியமாக தெரிந்த அந்த கொசுக்கடியின் தழும்பு, ஆயிரம் கவலைகளை
அமானுஷ்யனின் மனதிற்குள் புகுத்தியது....
தங்கியிருந்த வீடு முதல் பயணித்த மகிழுந்து வரை ஏசியின்
அரவணைப்பிலேயே சொகுசு வாழ்க்கையை வாழ்ந்திட்ட அபி, இப்படி புழுக்கத்திலும்,
கொசுக்கடிகளுக்கு மத்தியிலும் வாழவேண்டி வந்தது தன்னால், தன் காதலால் என்று
நினைக்கும்போது அமானுஷ்யனுக்கு மனம் வலித்தது... அபியின் நெற்றியை நிறைத்திருந்த
முடியை தன் விரல்களால் ஊடுருவினான்... இருளை கிழித்து உதிக்கும் சூரியன் போல,
முகம் இன்னும் அதிக பொலிவானது போல தோன்றியது... அந்த முகத்தில் ஏனோ அந்நியமாக
தோன்றியுள்ள அந்த செந்தழும்பு கூட அவன் முகத்தில் இருக்கும்போது அழகாகத்தான்
தெரிகிறது... மெல்ல தன் உதடுகளால் அந்த கன்னங்களை ஈரமாக்கினான்... அந்த ஈரம் பட்டு
நயாகரா நீர்வீழ்ச்சியில் டூயட் பாடிக்கொண்டிருந்த அபி விழித்துவிட்டான்...
அமானுஷ்யன் நெடுநேரமாக தன்னருகில் அமர்ந்திருப்பதை உணர்ந்து, தன்
கன்னத்தை தொட்டு ஈரத்தை விரலால் உணர்ந்தான் அபி...
“டேய் டைரக்டர்.... என்ன காலங்காத்தாலே ரொமான்ஸா?... கடிச்சு
வச்சிருவேன் பாரு...” கடிப்பதை போல பாவனை செய்து சிரித்தான் அபி....
“காதலுக்கு நேரம் காலம் உண்டோ?”
“அடடா!... தெலுங்கு படம் டைட்டில் மாதிரி இருக்கே?... உன்னோட மூடை
கொஞ்சம் கட்டுப்படுத்து...” அழகாய் சிரித்தான்...
“மனதிற்குள் அடக்க முடிந்த அளவு இருந்தால் அடக்கலாம்... என்னோட
காதல் மனசை மீறி வழியுதே, அதனால என்னால அடக்க முடியல...”
காதல் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக காமப்பார்வையாக உருமாருவதை உணர்ந்த
அபி, “இருக்கட்டும்... காதலை மட்டுமில்ல, அடக்க முடியாத இன்னொரு விஷயம் கூட
இருக்கு... அதை என்னால இனி அடக்க முடியாது....” சொல்லிவிட்டு வேகமாக டாய்லட்டை
நோக்கி ஓடினான்...
சிரித்தவாறே அதையும் ரசித்தான் அமானுஷ்யன்...
*******
“உடும்பு மார்க் பனியன் போட்டால், நீங்கதான் நிஜ ஹீரோ...” பனியன்
ஜட்டியுடன் அபி நிற்க, அவன் மார்பை தடவியபடி இந்த வாசகத்தை சொன்னாள் மாடல்
ஒருத்தி....
“கட்... கட்... கட்.... இன்னும் கொஞ்சம் க்ளோஸா நில்லும்மா,
‘ஹீரோ’ன்னு சொல்லும்போது அவர் பனியனை கொஞ்சம் மேல தூக்கிடு, அதான் செக்ஸி லுக்கா
தெரியும்.... அப்டியே உதட்டை கடிச்சபடி சொல்லும்மா...” விளம்பர பட இயக்குனர் தன்னை
மணிரத்னம் அளவுக்கு பில்டப் செய்ய, யூனிட் அதை வேறு வழியின்றி
சகித்துக்கொண்டிருந்தது....
“சார் ஒன் மினிட்...” மாடல் பெண் ஏதோ குழப்பத்துடன் டைரக்டரை
அழைத்தாள்....
“என்னம்மா?” இப்படி சொல்லும்போது அவர் விரல்கள் அனிச்சையாக அவள்
தோள் முதல் தன் பயணத்தை பக்கவாட்டு வழியாக தொடர்ந்தது...
“உதட்டை கடிக்கனுமா சார்?”
“ஆமா... அதான் சொன்னேனே?”
“அது சென்ஸார் ப்ராப்ளம் வராதா சார்?”
“அதுல என்ன சென்ஸார் ப்ராப்ளம்?... உன் உதட்டை நீ கடிக்குறதுல
என்னம்மா ப்ராப்ளம்?”
“ஓ... என் உதட்டையா?” அவள் முகம் வாடி ஏமாந்ததை போல தெரிந்தது....
டைரக்டர் தன் தலையில் அடித்தபடி டேக் போக, மற்றவர்கள் உதடு விரியாமல்
சிரித்துக்கொண்டனர்....
“உடும்பு மார்க் பனியன் போட்டால், நீங்கதான் நிஜஹீரோ...” தன்
உதட்டை கடித்து சுழித்து வசனத்தை பேசியபடி, அபியின் பனியனை மெல்ல தூக்க,
இயக்குனர் சொன்னபடியே ரொம்ப “ஹாட்”டாக இருந்தது அந்த டேக்...
“டேக் ஓகே.... அப்டியே பாம்பு பிராண்ட் ஜட்டி விளம்பரத்தையும்
எடுத்திடலாம்... பேக்ரவுண்ட்’ல காடு மாதிரி செட் போடுங்க...” சொல்லிவிட்டு
டைரக்டர் அருகிலிருந்த அறைக்குள் சென்றுவிட்டார்... அதில் தனக்கு என்ன கெட்டப்?
என்பதை அறியும் ஆர்வத்தில் மாடலும் அந்த அறைக்குள் செல்ல, அபி அந்த உள்ளாடைகளுடன்
எவ்விதமான உறுத்தலுமின்றி அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தான்...
அபியின் தொடைகளையும், அதற்கு “மேற்பட்ட” இடங்களையும் சில கண்கள்
காணாதது போல கவனித்துக்கொண்டிருப்பதை அறிந்தும் அறியாமலே ஏதோ ஒரு புத்தகத்தை
புரட்டிக்கொண்டிருந்தான்...
சில இலைதழைகளை கொண்டு “காடு” போன்ற அமைப்பை உருவாக்க
முயன்றுகொண்டிருந்தனர் யூனிட் ஆட்கள்... தனக்கு என்ன ஆடை? என்று கேட்கப்போன மாடல்
பதினைந்து நிமிடமாக அறைக்குள்லிருந்து வெளிவராததை கொஞ்சம் பெருமூச்சுடன்
கவனித்துக்கொண்டிருந்தனர் சிலர்... சரியாக அந்த நேரத்தில் அங்கு வந்தான்
அமானுஷ்யன்...
“உள்ளாடை விளம்பரம்டா... ஏற்கனவே உடும்பு மார்க் பனியன் ஓவர், இப்போ
பாம்பு பிரான்ட் ஜட்டியாம்... இதான் காஸ்ட்யூம்... இன்னும் பல்லி மார்க்
ப்ரா’வும், காக்கா மார்க் காண்டமும்தான் மிச்சம்...” சிரித்தான் அபி...
“அதுமட்டுமில்ல... அந்த பனியன் விளம்பரத்துல ஒரு பொண்ணு வந்து
உரசிகிட்டு டயலாக் பேசனுமாம்... என் பனியனை மேல தூக்கி செக்ஸி லுக்
கொடுக்கணுமாம்... பனியன் விளம்பரத்துக்கு மேல தூக்க சொன்ன மாதிரி, ஜட்டி
விளம்பரத்துக்கு கீழ இறக்க சொல்லாம இருந்தா சரி...” அபி சிரித்தபடி சொன்னாலும்,
அமானுஷ்யன் மனதளவில் கொஞ்சம் வருந்தவே செய்தான்... தன் இயலாமையை கிரகிக்க
முடியாமல் அவன் தவித்த தருணத்தில், “டேக் ரெடி” ஆனது....
காட்டுக்குள் அந்த மாடல் தனியே தவித்துக்கொண்டிருக்கும்போது,
சீறும் பாம்பு ஒன்று அவளை துரத்த, தக்க நேரத்தில் ஓடிசென்று காப்பாற்றுகிறார்
அபி... “படம் எடுக்கும் பாம்பையும் தடம் மறைக்கும் ஜட்டி, பாம்பு பிரான்ட் ஜட்டி”
பின்னணியில் கணீர் குரல் ஒலிக்க, விளம்பர படம் ஒரே டேக்கில் ஓகே ஆனது.... அந்த
வசனத்தில் மறைந்திருந்த இரட்டை அர்த்த பொருளை வெகுவாக ரசித்து பாராட்டினார் அந்த
“பாம்பு பிரான்ட்” ஜட்டி உரிமையாளர்...
உடைகளை மாற்றிக்கொண்டு, பேமென்ட் வாங்கிய பிறகு அங்கிருந்து
அமானுஷ்யனுடன் வெளியேறினான் அபி...
அந்தி சாயும் நேரமாகிவிட்டது, அறைக்கு செல்ல இருவருக்கும்
எண்ணமில்லை... கடற்கரையை நோக்கி கால்களை செலுத்தினார்கள் இருவரும்....
சூரியன் மேகக்கூட்டங்களுக்குள் மறைந்து செங்கதிர்களை உதிர்த்துக்கொண்டிருந்தது...
கடற்கரை மணலுக்குள் கால் பதித்த காதலர்கள் பலர் ஒதுங்க இடம்தேடி ஓடிக்கொண்டு
இருந்தனர்... கையில் கடலை பொட்டலத்தை வைத்தபடி இருவரும் சுற்றியும் நிகழும்
நிகழ்வுகளை வேடிக்கை பார்க்கத்தொடங்கினர்....
“இன்னிக்கு என்னாச்சு அமு உன் விஷயம்?” அபி தான் முதலில் பேச்சை
தொடங்கினான்...
“ஹ்ம்ம்... வழக்கம்போல அதே வசனம் தான், இன்று போய் நாளை வா... என்
கதையை அவங்க கேட்டு வேணாம்னு சொன்னாலும் பரவால்ல, கேட்கவே நேரம் இல்லைன்னு
சொல்றாங்க... நாளைக்கும் போகணும்....” அமானுஷ்யனின் பதிலில் விரக்தி தென்பட்டது...
சில நொடிகள் மௌனத்திற்கு பின் அவனே தொடர்ந்தான், “அபி, இனிமே இந்த
,மாதிரி ஜட்டி பனியன் போட்டு நடிக்குற விளம்பரம்’லாம் வேணாம்...”
“நீ சொல்றது சரிதான் அமு... ஆனால், ஜட்டி கூட இல்லாம நடிச்சா
நல்லாவா இருக்கும்?” உதடுகளுக்குள் சிரிப்பை மறைத்தபடி பேசினான் அபி....
“அபி, நான் சீரியஸா பேசுறேன்... விளையாடாத...”
“சீரியஸா பேச இதென்ன பார்லிமென்ட்டா? பீச்டா.... இன்னும்
சொல்லனும்னா பார்லிமென்ட்லேயே நம்ம ஆளுங்க விளயாடிட்டுதான் இருக்காங்க....”
சிரித்தான் அபி...
“போதும் அபி... உண்மைய சொல்லு, என்னால நீ ரொம்ப கஷ்டப்படுறல்ல?”
அபியின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து கேட்டான் அமானுஷ்யன்...
“முன்னெல்லாம் ஜாலியா, சந்தோஷமா, மகிழ்ச்சியா நீ இருந்த...”
குறுக்கிட்ட அபி, “மூனுக்கும் ஒரே அர்த்தம்தான்... விஷயத்துக்கு வா
முதல்ல...”
“இப்போ எந்த வசதியும் இல்லாம ரொம்ப கஷ்டப்படுற, எல்லாம் என்னாலதானே?”
பொறுமையாக இதைகேட்ட அபி, அதைவிட பொறுமையாக அதற்கு பதிலும் சொல்ல
தொடங்கினான்“ஓ.. இதான் உன் ப்ராப்ளமா?... ஜென்னி’னு ஒரு பெண் இருந்தா, அவ
காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டா... கல்யாணம் ஆன நாள் முதலா அவளுக்கு
கஷ்டம்தான்... வறுமை அவளை கொஞ்சம் கொஞ்சமா அழிச்சுது... அவளுக்கு பிறந்த நாலு
குழந்தைகள் வறுமையால இறந்துச்சு, அவளும் நரம்பு தளர்ச்சியால பாதிக்கப்பட்டா...
ஆனால் எந்த கஷ்டத்துலையும் தன்னோட கணவனை விட்டு அவ விலகல, அதுக்கு காரணம் கணவன்
மீது அவ வச்சிருந்த காதல்... அந்த கணவன் யார்னு உனக்கு தெரியும்தானே?”
“ஹ்ம்ம்... கார்ல் மார்க்ஸ்..”
“கம்யூனிஸ சிந்தனையை மூலதனமா எழுதுன மார்க்ஸ் வாழ்க்கையோட மூலதனமே
அந்த காதல் தான்... இது கூட நீ சொன்னதுதான்... ஒரு காகிதத்துல இருந்தா அதை
ரசிக்குற, உன் காதலன் கஷ்டப்படுறான்னு மட்டும் வருந்துறது நியாயமா அமு?...”
அமானுஷ்யனின் கையை பிடித்தபடி நடந்தான் அபி...
ஆனாலும் அமானுஷ்யனின் மனதிற்குள் உறுத்திய அபியின் நிலைமையை
இன்னும் அவனால் தவிர்க்கமுடியவில்லை... “ஆனால் நான் கால் மார்க்ஸ் இல்லையே!”
“நானும் ஜென்னி அளவுக்கு கஷ்டப்படலையே அமு?.. இங்க பாரு, நான்
நிஜமாவே சந்தோஷமாதான் இருக்கேன்... முன்னைவிட அதிகமான நிம்மதியாதான் இருக்கேன்...
என்னைய நினச்சு நீ கஷ்டப்படாத, நீ நல்ல நிலைமைக்கு வரணும்... அதான் எனக்கு
முக்கியம்...” கடலும் மணலும் இணையும் ஒரு இடத்தில் அமர்ந்து, அபியின் தோள் மீது
சாய்ந்தான் அமானுஷ்யன்....
“இப்டியே வாழ்க்கை முழுக்க இருந்தா போதும் அமு?” அபியின்
வார்த்தையில் உற்சாகம் கடலைவிட அதிகமாக புரண்டோடியது....
“இருந்திடலாம்... ஆனால், உன்னோட தோளும், என்னோட கழுத்தும்
வலிக்குமே?” சிரித்தான் அமானுஷ்யன்... அபிக்கு கோபத்திற்கு பதிலாக, சிரிப்புதான்
வந்தது.. நிலவின் ஆதிக்கம் நீலவானத்தை நிறைக்க, கடற் காற்று குளிர் காற்றாக
உருமாற, காதலை பரிமாற்ற அதைவிட சிறந்த தருணம் அமையுமா?... வெகுநேரம் அந்த சூழலை
இருவரும் ரசித்தபடி, நள்ளிரவை நோக்கிய நேரத்தில்தான் வீட்டை நோக்கி பயணித்தனர்...
மறுநாள் காலை, அமானுஷ்யனுக்கு முன்பே அபி எழுந்து
கிளம்பிவிட்டான்....
கண்களை தூக்கக்கலக்கத்திளிருந்து விடுவித்து அந்த காட்சியை பார்த்த
அமானுஷ்யனுக்கு ஆச்சரியம்... வழக்கமாக உச்சிப்பொழுது நேரத்தில் சோம்பல் முறித்து,
கொட்டாவியோடு எழும் அபி, இன்றைக்கு சூரியனோடு தானும் உதித்தது போல குளித்து
முடித்து கிளம்பி இருப்பது ஆச்சரியப்பட வைக்கத்தானே செய்யும்...
“அட மண்டு!... உனக்கு கம்பெனி கொடுக்கத்தான் நான் அங்க வரேன்,
இன்னிக்கு எனக்கு வேற வேலை எதுவும் இல்ல...” அமானுஷ்யனின் தலையில் செல்லமாக
கொட்டினான் அபி...
“அங்க கம்பெனி கொடுக்கிறது இருக்கட்டும், அப்டியே ஒரு பத்து
நிமிஷம் இங்க வந்து கம்பெனி கொடுடா...” கண்ணடித்து, உதட்டை குவித்து முத்தமிடுவதை
போல அமானுஷ்யன் செய்கை காட்டிட, அபி அவனை அடிக்க பாய்ந்தான்...
ஒருவழியாக படுக்கை அறை களேபரம் முடிந்து இருவரும் “எஸ்.எஸ்.
பிக்சர்ஸ்” வாயிலை அடைந்தபோது சரியாக பத்து மணி... ஒரே வருடத்தில் மூன்று ‘ஹிட்’
படங்களை கொடுத்த நிறுவனம்... “எஸ்.எஸ். பிக்சர்ஸ் காரனுக கழுதைய கூட குதிரைன்னு
விளம்பரம் பண்ணி வித்திருவாணுக...” என்ற பேச்சு கோடம்பாக்கத்தை வலம் வரும்
அளவிற்கு, அவர்கள் தயாரிக்கும் அத்தனை படங்களும் குறைந்தபட்சம் ஐம்பது நாட்களுக்கு
திரையரங்கங்களை நிறைக்கும்...
அலுவலக வாசல் சனிக்கிழமை என்றாலும் கூட பரபரப்பாக காணப்பட்டது...
தனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் பன்னிரண்டு என்பதை தெரிந்துகொண்டு, வரிசைகளில்
அடுக்கப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தனர் இருவரும்... அந்த ஹாலில் அவர்களை தவிர
இன்னும் பத்து இருபது ஆட்கள் காத்திருக்கிறார்கள்... அத்தனை பேர் முகத்திலும் ‘கதை
ரேகைகள்’ குறுக்கு மறுக்காக ஓடியது... அனைவரது கண்களும் ஹாலின் சுவர் அருகே
வரிசையாக வைக்கப்பட்டிருந்த விருதுகளை நோட்டமிட்டது, அதில் இருந்த ஒரு தேசிய
விருது சான்றிதழ் உட்பட... அதை பார்த்ததும் அனிச்சையாக சுரந்த உமிழ்நீரை
விழுங்கிக்கொண்டான் அமானுஷ்யன்...
“முதலாளி வந்துட்டாராம்...” ரிசப்ஷனில் அமர்ந்திருந்த ஒரு நடுத்தர
வயது பெண்ணும், இளைஞனும் வாசலை நோக்கி நடையும் ஓட்டமுமாக நகர்ந்தனர்... அத்தனை
பேர் கண்களும் வாசலிலிருந்து உள்ளே வரும் வழியை உற்று கவனித்தது... ‘முதலாளி’
என்றதும் நடிகர் ஜெயப்ரகாஷ் போலவும், ராதாரவியை போலவும் கற்பனை செய்து
காத்துக்கொண்டிருந்த அத்தனை கண்களையும் தூசி விழுந்ததை போல உறுத்த செய்தது
ஹாலுக்குள் வந்துவிட்ட அந்த முதலாளி உருவம்...
அதிகபட்சம் முப்பது வயதுதான் இருக்கலாம்.. இயல்பான வெள்ளை
சட்டையும், ஊதா நிற ஜீன்ஸும் அணிந்து, பெயரளவுக்கு கழுத்தை இறுக்கிய மைனர்
செயினுடன் உள்ளே வந்த அந்த சின்ன பையனை ‘முதலாளி’ என்று சொல்வது அனைவருக்கும்
அந்நியமாகவே பட்டது... அவர் கண்களில் ஒரு உற்சாகம், கருவிழிகள் பரபரப்பாக
இயங்கியது... அனைவரையும் பார்த்து அவன் சிரிக்கையில், விரிந்த உதடுகள் ஆயிரம்
முத்தங்களை கடந்து வந்ததை போல தெரிந்தது...
நொடிப்பொழுதிற்குள் உள்ளே நுழைந்து, அவர்கள் அமர்ந்திருந்த
நேரெதிர் அறைக்குள் மறைந்துவிட்டார் முதலாளி...
“என்னடா இது?... முதலாளின்னு சொன்னதும் நான் கூட ஏதோ ஐம்பது வயசு
ஆளு வருவாருன்னு பார்த்தா, யாரோ ஒரு சின்ன பையன் வந்திருக்கான்...” அபிதான்
முதன்முதலில் ஆச்சரியத்தை விலக்கி கேட்டான்...
“இந்த பையன் தான் இப்போ இங்க எல்லாமும்... எஸ்.சதீஷ்’னு இவன்
பேர்தான் எஸ்.எஸ். பிக்சர்ஸ்... ஒரு காலத்துல மொக்கை படங்களா தயாரிச்ச இந்த
நிறுவனத்த, நாலே வருஷத்துல ரொம்ப உயரத்துக்கு கொண்டுபோனவன் இவன்... லண்டன்’ல
மார்கெட்டிங் படிச்சவன், அதனால விளம்பரம் பண்றதுல பெரிய ஆளு... இந்த கதையை மட்டும்
இவனை ஓகே பண்ண வச்சிட்டா, ஒரே படத்துல நாம எங்கயோ போய்டலாம் அபி...”
இவர்கள் பேசிக்கொண்டிருந்த அந்த ஐந்து நிமிட இடைவெளிக்குள் இரண்டு
இயக்குனர்கள் சோகமான முகத்துடன் அந்த அறையை விட்டு வெளியேறினர்...
“என்னடா இவன் கதை கேட்குறான்?.. பாட்டி வடை சுட்ட கதை கூட
சொல்றதுக்கு அஞ்சு நிமிஷம் ஆகிடுமே, அந்த நேரத்துக்குள்ள எப்டி ரெண்டு கதைகள்
கேட்டான்...” அமானுஷ்யன் குழப்பத்தில் நடப்பதை கவனித்துக்கொண்டிருந்தான்...
அதைகவனிப்பதற்குள் இன்னொரு இயக்குனரும்
நுழைந்த வேகத்தில், அறைக்குள்ளிருந்து வெளிப்பட்டான்... அவன் முகத்திலும் அதே
சோகம் அப்பிக்கொண்டிருந்தது....
“மிஸ்டர். அமானுஷ்யன், அடுத்து நீங்கதான்...” வரவேற்பில்
நின்றிருந்த அந்த பெண் அவன் பெயரை உச்சரித்தபோது அத்தனை கண்களும் அமானுஷ்யனை
ஊடுருவியது... ஆனாலும், அந்த பார்வை தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வண்ணம்,
அறைக்குள் நுழைந்தான் அமானுஷ்யன்... அபி அமைதியாக இருக்கையில் அமர்ந்தபடி,
மனதிற்குள் அத்தனை கடவுள்களையும் தன் துணைக்கு அழைத்துக்கொண்டிருந்தான்....
அறைக்குள் நுழைந்த வேகத்தில், வியர்வை துளிகளை சில்லிட வைத்தது
அந்த குளிரூட்டப்பட்ட அறை... கண்கள் அந்த அறையை சுற்றி வட்டமடித்தன, இருக்கையில்
அமர்ந்தவாறு கணினி திரையில் கவனத்தை பதித்திருந்தார் முதலாளி... கணினியில் இருந்து
கண்களை விலக்காமல், உட்காருமாறு கையால் சைகை காண்பித்தார்.. ஏனோ அரை மனதின் பிறை
நம்பிக்கையோடு அமர்ந்தான் அமானுஷ்யன்...
“நல்ல வித்யாசமான பேர் அமானுஷ்யன்... அதே வித்யாசம் கதைலையும்
இருக்குமா?” குரலில் பழுத்த அனுபவம் பதிந்திருந்தது....
“நிச்சயம் இருக்கும் சார்...” பவ்யமாக பதில் சொன்னான்
அமானுஷ்யன்...
“என்ன பட்ஜெட்?”
“அதை நீங்க சொல்லுங்க சார், எந்த பட்ஜெட்’க்கு ஏத்தமாதிரியும்
கதையை என்னால திரையில கொண்டுவர முடியும்...”
“உங்க மேல உங்களுக்கு இருக்குற நம்பிக்கை கூட உங்க கதை மேல
உங்களுக்கு இல்ல போல... அப்டி இருந்திருந்தா இந்நேரம் ‘இதான் பட்ஜெட்’னு நீங்க
தெளிவா சொல்லிருப்பிங்க... ஒரு இயக்குனருக்கே அவர் கதை மீது முழு நம்பிக்கை
இல்லாதபோது எதை வச்சு நான் பணம் போடமுடியும்....”
அறைக்குள் வந்த ஒவ்வொரு கதை சொல்லியின் முகத்திலும் படர்ந்த சோக
ரேகைகளுக்கான காரணம் அமானுஷ்யனுக்கு புரிந்தது... இனி எதை சொல்லியும் சமாளித்து
பயனில்லை என்று அமானுஷ்யன் உணர்ந்த மறுநொடியில், அந்த சோக ரேகை அவன் முகத்திலும்
படர்ந்திருந்தது... “நீங்க போகலாம்...” என்று தயாரிப்பாளர் சொல்வதற்காக
காத்திருந்ததை போல, எழத்தயாரானான்...
ஆனால், சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு தயாரிப்பாளரின் வாயிலிருந்து
வெளிப்பட்ட வார்த்தைகளுக்கான அர்த்தம் அவனுக்கு புரியவில்லை... “உங்க கூட
வந்திருக்கது அபி’தானே?” சொல்லிக்கொண்டே அந்த கணினியின் திரையை அமானுஷ்யனின்
பக்கம் திருப்பினான்... அதில் வரவேற்பறையில் அமர்ந்திருக்கும்அபியை அங்கிருந்த கேமரா ஒன்று படம் பிடித்து அந்த
கணினியில் சேர்த்திருப்பதை கவனித்தான்...
அபியை எப்படி அவனுக்கு தெரியும்? எதற்காக அபியை பற்றி இப்போது
விசாரிக்கிறான்? போன்ற கேள்விகளுக்கு விடைபுரியாமல் அமானுஷ்யன்
யோசித்துகொண்டிருக்க, சதீஷோ தொலைபேசியை காதில் வைத்து, “அங்க உட்கார்ந்திருக்குற
ப்ளாக் ஷர்ட் பையனை உள்ள வரசொல்லுங்க...” என்றான்... மீண்டும் அமானுஷ்யனை பார்த்து,
“நீங்க கொஞ்சம் வெளில போய் வெயிட் பண்ணுங்க” கதவை நோக்கி கையை நீட்டினான் சதீஷ்...
குழப்பத்தோடு வெளியேறினான் அமானுஷ்யன்...
சில நொடிகளில் அறைக்குள் ஐக்கியமான அபியின் முகத்தில் தன் காதலனை
பற்றிய கவலை ஒருபக்கம், தன்னை வரவழைத்ததன் காரணம் புரியாத குழப்பம் மறுபக்கம்...
“ஹாய் அபி, எப்டி இருக்க?” சதீஷின் முகத்தில் சிரிப்பை இப்போதுதான்
பார்க்க முடிந்தது...
“ஹ்ம்ம்... இருக்கேன்... நீங்க?” இன்னும் குழப்பம் அகலாதவனாக
சதீஷின் முகத்தை கூர்ந்து கவனித்தான் அபி... எங்கோ, எப்போதோ பார்த்த முகம்...
ஆனாலும், சட்டென புலப்படவில்லை....
“உன்னால ஞாபகம் வச்சுக்க முடியாதது ஒன்னும் ஆச்சரியமில்ல... தன்னோட
இதழ்கள்ல அமர்ந்து தேனை ருசிக்கும் எல்லா பட்டாம்பூச்சிகளையும் ரோஜாப்பூ ஞாபகம்
வச்சுக்கறது சாத்தியமில்லதான்... அப்படி தேன் தேடி வந்து ஏமாந்துபோன
பட்டாம்ப்பூச்சிகளில் நானும் ஒருவன்.... நிறைய கதைகளை கேட்டு கேட்டு நானும் இப்டி
பேச ஆரமிச்சுட்டேன் பார்த்தியா?” அழகாக சிரித்தான் சதீஷ்...
“இப்போ என்ன சொல்ல வரீங்க?” கண்களை சுருக்கி புருவத்தை உயர்த்தி
குழப்பமான முகத்துடன் கேட்டான் அபி...
“சில வருஷத்துக்கு முன்ன, நான் கல்லூரி படிச்ச சமயம்... பசங்களோட
கொடைக்கானல் டூர் போனப்போதான் யார்மூலமாவோ, எப்டியோ உன்னோட காண்டாக்ட் கிடச்சுது
எனக்கு... ரேட் எல்லாம் பேசி, ரூம் போடப்போன சமயத்துல உனக்கு விருப்பமில்லன்னு
சொல்லி பணத்தை திருப்பி கொடுத்திட்ட... அந்த ஒரு விஷயம் எனக்கு ஏமாற்றத்தை
மட்டுமில்ல, ரொம்ப அவமானத்தையும் உண்டாக்குச்சு... வாழ்க்கைல எவ்வளவோ விஷயத்துல
ஜெய்ச்சாலும், நீ புறக்கணிச்ச அந்த விஷயத்தை என்னால மறக்க முடியல...”
விரித்த இதழ்கள் இணைய மறந்து, பல இரவுகளையும் அசைபோட்டது அபியின்
நினைவுகள்... ஆனாலும், அந்த தேடுதல் அவசியமற்றது என்பதை உணர்ந்து, சட்டென நிறுத்தி
சதீஷை பார்த்து, “ஐயோ சாரி சதீஷ்.... பொதுவா நான் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சின்ன
பசங்களுக்கு ஓகே சொல்லமாட்டேன்... அதனால உங்கள மறுத்திருக்கலாம், ஆனால் அது நீங்க
இவ்ளோ கவலைப்படுற அளவுக்கு பெரிய விஷயம் இல்லையே?.... அதுமட்டுமில்லாம, அதல்லாம்
நான் விட்டு ரொம்ப நாள் ஆச்சு... இப்போதான் நான் நிம்மதியா இருக்கேன், பழச பத்தி
பேசவேணாமே ப்ளீஸ்....” வார்த்தைகளை யோசித்து பேசினான்...
“இல்ல அபி... நான் பேசித்தான் ஆகணும்... ரொம்ப ஆசையோட அந்த நாள்
காத்திருந்தேன்... நிறைய கனவுகளோட அந்த அறைக்குள்ள வந்தேன்.. ஆனால், எல்லாம் ஒரு
நிமிஷத்துல கானல் நீர் போல காணாம போய்டுச்சு... அப்புறம் நான் லண்டன் போய்ட்டேன்,
அங்கயும் அந்த ஏமாற்றம் என்னை துரத்துச்சு... இந்தியா வந்ததும் பேர், ஊர் எதுவும்
தெரியாத உன்னை தேட ஆரமிச்சேன்... ஒருவழியா நாலு நாளைக்கு முன்னதான் உன்ன
கண்டுபிடிச்சேன், நீ எல்லாத்தையும் விட்டுட்டு சினிமால ட்ரை பண்றதா தெரிஞ்சுட்டேன்...
அதுமட்டுமில்லாம உன் நண்பன் அமானுஷ்யனுக்காக நீ ரொம்ப கஷ்டப்படுறதா
கேள்விப்பட்டேன்... அப்புறம் தான் உன் நண்பருக்கு அப்பாயின்மென்ட்டே
கொடுத்தேன்...” அபியின் கண்களை பார்த்தபடி சொல்லிமுடித்தான் சதீஷ்...
எல்லாவற்றையும் ஆச்சரியத்துடன் கவனித்து கேட்ட அபி மெல்லிய
பயத்தோடு, “சரி, எதுக்காக என்னைய தேடுனீங்க?...” கேட்டான்....
“சரி அபி, நான் நேரடியா விஷயத்துக்கு வரேன்... எனக்கு நிஜமாவே
அமானுஷ்யனோட கதையை கேட்க கூட விருப்பமில்ல... ஆனால், உனக்காக அதை ஓகே பண்றேன்... அதுமட்டுமில்ல,
அந்த கதைல நீயே ஹீரோவாவும் நடிக்கலாம்... ஆனால், அதுக்கெல்லாம் எனக்காக நீ ஒன்னு
மட்டும் பண்ணனும்”
“என்ன பண்ணனும்?” தடுமாற்றத்துடன் கேட்டான் அபி...
“நீ முன்ன எந்த காரணத்துக்காக என்னை மறுத்தன்னு தெரியல...
அதைப்பற்றி இனி பேசவேண்டாம்... ஆனால், மூணு நாள் என்கூட அதே கொடைக்கானல் நீ வரணும்...
உன் வாழ்க்கை முழுக்க சந்தோஷம் நிரம்ப, என் வாழ்க்கையோட மூணு நாள் சந்தோஷத்துக்கு
நீ காரணமா இருக்கணும்...” சதீஷ்
சொல்லிக்கொண்டிருக்கும்போதே, கோபத்தில் எழுந்துவிட்டான் அபி...
“என்ன மிரட்டுறியா சதீஷ்?.. இப்டி படுத்துதான் பிழைக்கனும்னு
இருந்திருந்தா இந்நேரம் நான் எப்டியோ இருந்திருப்பேன்... இன்னும் எத்தனை பேர்தான்
என்னை படுக்க வச்சே படுகுழில தள்ள போறீங்கன்னு தெரியல...” இன்னும் அதிக கோபத்தோடு
அங்கிருந்து வெளியேற கதவை நோக்கி நடந்தான் அபி.... கதவருகே அபி சென்றபோதும்
கொஞ்சமும் கலங்காத சதீஷ், “அபி, நல்லா யோசிச்சு பாரு.... இதுல நம்ம மூணு பேர்
வாழ்க்கையும் அடங்கிருக்கு...” என்றான்... அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில்
இல்லாத அபி, கதவை படாரென திறந்து வெளியேறினான்... வெளியே காத்திருந்த அமானுஷ்யனின்
எண்ணாயிரம் கேள்விகளை ஒருவழியாக சமாளித்து அவனை வீட்டிற்கு கொண்டு சேர்த்தான்...
******************
“ஹலோ
அபி?”
“சொல்லு
பாஸ்கர்...”
“என்னடா
ஒரு மாதிரி பேசுற, உடம்புக்கு எதுவும் பிரச்சினையா?”
“உடம்புதான்
பாஸ் பிரச்சினையே!...”
“ஏய்,
என்ன ஆச்சு?... புரியுற மாதிரி சொல்லு....”
எஸ்.எஸ்
பிக்ஸர்ஸ் போனது முதல், அங்கு சதீஷை சந்தித்து அவன் குழப்பியதுவரை எல்லாவற்றையும்
பாஸ்கரிடம் சொன்னான்... தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கையில் சொல்லவில்லை
என்றாலும், மனதின் சுமையை இறக்கி வைக்கும் வாய்ப்பாகவே அவற்றை
பகிர்ந்துகொண்டான்... எல்லாவற்றையும் கேட்ட பாஸ்கர், இரண்டொரு நிமிடத்து
மௌனத்திற்கு பிறகு பேசத்தொடங்கினான்....
“நல்ல
வாய்ப்பை மிஸ் பண்ணிட்ட அபி....”
“ஏய்,
என்ன பாஸ் லூசு மாதிரி பேசுற?... அமானுஷ்யன்கிட்ட இத சொன்னா பிரச்சினை ஆகிடும்னு
உன்கிட்ட சொன்னேன் பாரு, அதான் பெரிய தப்புடா.. பணத்தை தவிர வேற எதுவும் உனக்கு
பெருசில்ல....” பலரிடமிருந்த கோபத்தை பாஸ்கரிடம் வெளிப்படுத்தினான் அபி...
“கூல்
அபி.... நீ ஏதோ சீரியல் ஆர்டிஸ்ட் மாதிரி பேசுற.... கொஞ்சம் லாஜிக்கா யோசிச்சு
பாரு... கோடம்பாக்கத்துல வாய்ப்பு கிடைக்குறதெல்லாம் குதிரை கொம்பு மாதிரியான
விஷயம்... ஆனால் ஆண்டவனா பார்த்து நீ என்னைக்கோ மிச்சம் வச்ச ஒரு விதையை, உனக்கு
நிழல் தரப்போற மரமா வளர வச்சிருக்கார்... அந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாத... ஒன்னை
இழக்காம இன்னொன்னை பெறமுடியாது.... நல்லா யோசி, நல்ல விதமா யோசி....”
“உன்கிட்ட
இதை சொன்னது தப்புதான் பாஸ், தயவுசெஞ்சு போனை வச்சிடு....”
கோபமாக
அலைபேசியை அணைத்துவிட்டு அறைக்குள் நுழைந்தான் அபி, நடந்த எதுவும் தெரியாத அமானுஷ்யன்,
இயல்பாக அமர்ந்து புத்தகம் ஒன்றை புரட்டிக்கொண்டு இருக்கிறான்... அறையை முழுக்க
ஆக்கிரமித்திருந்த திரையுலக மேதைகள் சிரித்துக்கொண்டிருந்தனர், அந்த சிரிப்புக்கு
பின்னால் மறைந்திருக்கும் சோகம் அபியின் கண்களுக்கு புலப்பட்டது....
“ஒன்னை
இழக்காம இன்னொன்னை பெறமுடியாது....” பாஸ்கரின் வார்த்தைகள் மீண்டும் அவன்
சிந்தையில் ஒலித்தது...
************************
“மூங்கில்
தோட்டம் மூலிகை வாசம்...” அபியின் அலைபேசி மூன்றாவது முறையாக மூலிகை வாசத்தை
நுகர்ந்தபோதுதான், அதை அவசரமாக எடுத்தான் அபி... அலைபேசி திரையில் பளிச்சிட்ட
அமானுஷ்யனின் பெயரைவிட, அவன் பேசிய பேச்சு இன்னும் அதிகமாக பளிச்சிட்டது...
“ஹலோ
அபி, எவ்ளோ நேரமா உனக்கு கால் பண்றேன்... கொடைக்கானல் விளம்பர ஷூட்டிங் எப்டிடா
போகுது?”
“ஹ்ம்ம்...
நல்லா போகுது அமு.... இப்போதான் டேக் முடிஞ்சுது...”
“ஒரு
சந்தோஷமான விஷயம், என் கதை எஸ்.எஸ்.பிக்சர்ஸ்’ல ஓகே ஆகிடுச்சு.... அக்ரிமென்ட் கூட
போட்டாச்சு...” வார்த்தைகளில் அரை கிலோ உற்சாகமும், ஒரு லிட்டர் பரபரப்பும்
கலவையாக வெளிப்பட்டது...
“ஓ அப்டியா?...
ரொம்ப சந்தோசம்டா... ஊருக்கு வந்ததும் அதை கொண்டாடலாம்... இப்போ ப்ரொடக்ஷன்
மேனேஜர் கூப்பிடுறார்... உனக்கு அப்புறமா பேசுறேன்...” அழைப்பு
துண்டிக்கப்பட்டது....
அலைபேசியை
அருகில் வைத்த அபி, நேரத்தை பார்த்தான்... அவசர அவசரமாக ஷைனர்களை உடல் முழுக்க
பூசினான்... பல மாதங்களுக்கு பிறகு “செர்நோபில்” மாத்திரைக்கும் கூட வேலை வந்தது,
தண்ணீர் கூட இல்லாமல் அதையும் விழுங்கினான்.... கொடைக்கானலின் “கோடை ரெசிடென்சி”
ஹோட்டல் சுவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு அபியின் அரை நிர்வாணத்தை
ரசித்துக்கொண்டிருந்தன....
“டக்...
டக்... டக்...” கதவு தட்டப்படும் ஓசை கேட்க, இறுதியாக உடலை வாசனை திரவியத்தால்
தேய்த்து எடுத்த அபி, கதவை நோக்கி நகர்ந்தான்....
கதவு
திறக்கப்பட்ட வேகத்தில், உள்ளே நுழைந்தான் சதீஷ்....
“ரொம்ப
நேரம் காக்க வச்சுட்டேனா அபி?..... அமானுஷ்யன் பேசிருப்பானே, இப்போ ஹாப்பியா?... நான்
சொன்னதை செஞ்சுட்டேன், எல்லாம் உனக்காக....” கண்ணடித்து சதீஷ் சிரிக்க,
உணர்ச்சியற்ற பிண்டம் போல அபி நின்றான்...
“வருஷம்
இவ்ளோ ஆனாலும் உன் அழகு குறையவே இல்ல அபி... கொஞ்சம் சிரிச்சா இன்னும் அழகா இருப்ப
தெரியுமா?” அபியின் உதடுகளை தன் விரல்கள் கொண்டு விரிக்க முயன்றான் சதீஷ்... வேறு
வழியின்றி கடனுக்கு சிரித்தான் அபி, அதிலும் கொஞ்சமும் உயிர் இல்லை...
“இந்த
கதைல என்னை அறிமுகப்படுத்துன நேரத்துலேந்து ஒரு வில்லன் மாதிரியே உன் கண்ணுக்கு
தெரியுறேனா அபி?... சின்ன வயசுலேந்து பிடிவாதம் பிடிச்சே வளர்ந்துட்டேன் அபி, அது
என்னோட பிறவி குணம்... நான் நினைச்சது கிடைக்குற வரைக்கும் பைத்தியம் மாதிரி
அலைவேன், அதே விஷயம் கிடைச்சதும், மறுபடியும் அதை சீண்டக்கூட மாட்டேன்... உன்
விஷயத்துலயும் அப்டிதான் ஆகிடுச்சு... நீ என்னை மறுத்ததால மனசு வலிச்சுது, அதான்
என்ன செஞ்சாச்சும் உன்னை அடையனும்னு என்னென்னமோ பண்ணிட்டேன், உன்ன ஹர்ட்
பண்ணிருந்தா சாரி அபி... உண்மையை சொல்லனும்னா, உன்னோட கொடைக்கானல் வர்ற
வரைக்கும்தான் உன் மேல வெறியா இருந்தேன்... ஏனோ, இப்போ உன்னை விருப்பமில்லாம
தொடக்கூட மனசு வரல...” அபியின் கைகளை பிடித்து மென்மையாக சிரித்தான்...
ஆனால்,
அவன் சொல்ல வருவதை உணரமுடியாத அபி, இன்னும் குழப்பம் அகலாதவனாக, “அப்டின்னா...?”
என்றான்...
“அப்டின்னா
உனக்கு இன்னும் அரை மணி நேரத்துல ட்ரெயின்னு அர்த்தம்.... நீ சென்னை போகப்போறன்னு
அர்த்தம்...” அழகாக சிரித்தான் சதீஷ்....
அத்தனை
நேரமும் சோகத்தின் விளம்பில் நின்ற அபிக்கு, அப்போதுதான் உயிர் வந்தது... சில
நேரங்களில் ஒன்றை இழக்காமல் கூட இன்னொன்றை பெறமுடியும், உண்மையான அன்பு மட்டும்
இருக்குமானால்.... (முற்றும்)