Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Thursday, 31 October 2013

"இனி நானும் நடிப்பேன்....!" - சிறுகதை...


“அக்கா” இந்த வார்த்தையை அழுத்தி சொன்னால், “அம்மா” என்பது போல பிரதிபலிக்கும்... வார்த்தை மட்டுமல்ல, அந்த உறவே கூட அப்படித்தான் என்பதை நான் உணர எனக்கு பல காலம் ஆகிவிட்டது... அக்காவுக்கும் எனக்கும் ஐந்து வருட இடைவெளி... நாங்கள் இருவரும் வளர வளர, இரண்டு விஷயங்களை கடைபிடிக்க கற்றுக்கொண்டோம்.... “பிடிவாதம்” பிடிக்க நானும், “விட்டுக்கொடுக்க” அக்காவும் கற்றுக்கொண்டோம்... இந்த பேதத்தை நியாயப்படுத்த எங்கள் பெற்றோருக்கும் கூட ஒரு காரணம் இருந்தது.... நான் “இளையவன்” என்ற காரணத்தை அதற்கு வெளியில் அவர்கள் சொன்னாலும், உள்ளூற புதைந்திருந்த “ஆண் பிள்ளை” என்ற காரணத்தை யாரும் அறியாமல் இருக்கவில்லை...
கேரம் போர்டில் குறிபார்த்து “மைனஸ்” போடவும், சதுரங்கத்தில் ராணியை காரணமில்லாமல் நகர்த்தி என் சிப்பாயிடம் வெட்டுப்படவும் கூட அவள் பழக்கப்பட்டுவிட்டாள்... ரம்மி விளையாடும்போது கூட, மறந்தது போல மறக்காமல் ஜோக்கரை போடுவாள்.... அதை ஏதோ அவள் தெரியாமல் நடந்த நிகழ்வாக, பொய் அழுகை அழுவதையும் கூட நான் அறிந்துகொள்ள பலகாலம் ஆகிவிட்டது...
நான் வெல்லவேண்டும் என்பதற்காகவே பல சண்டைகளை தொடங்குவாள்... நான் வெற்றி முழக்கம் இடுவதையும், சந்தோஷ சிரிப்பு சிரிப்பதையும் வெளியில் வருத்தப்படுவதாய் காட்டிக்கொண்டு, உள்ளூற ரசித்து சிரிப்பாள்.... அம்மாவுக்கு கூட புரியாது  அக்காவின் இந்த ரசனைகள்... இவ்வளவு பாசமும் எனக்கு புரிந்தும் கூட , பிரியமாக பேசிட இதுவரை தோன்றியதில்லை... விவரம் தெரிந்த பின்புதான் நான் கூட அவளுக்காக கிரிக்கெட்டை மறந்து சீரியல் பிடிப்பதாக பார்க்க  தொடங்கினேன், அவளுக்கு பிடித்த ஜாங்கிரியை எனக்கும் பிடித்ததாக சுவைக்க தொடங்கினேன்....
இந்த புரிதல்களை பரஸ்பரம் நாங்கள் புரிந்துகொள்வதற்குள், அவள் திருமணம் எங்கள் இருவருக்குள்ளும் ஒரு இடைவெளியை இடைபுகுத்திவிட்டது... உளவியல் ரீதியாக மட்டுமல்லாமல், புவியியல் ரீதியாகவும் அந்த தூரம் அமைந்துவிட்டது... நாங்கள் இருக்கும் திருச்சியை விட்டுவிட்டு, மாமாவுடன் அக்கா சென்னைக்கு குடியேறிய நாள் முதலாய் அதை உணரமுடிந்தது....
மாதம் ஒரு காரணம் கூறி அவள் திருச்சிக்கு வந்துவிடுவதால், அந்த ஐந்து வருடங்களில் அக்காவின் சென்னை வீட்டுக்கு போக எனக்கு வேறு காரணங்கள் கிடைக்கவில்லை... முதல் முறையாக ஒரு வேலை விஷயமாக சென்னை செல்லவேண்டி இருந்தது, அக்காவின் வீட்டில்தான் தங்கினேன்....
அன்று நான் செல்லும்போது அவள் முகத்தில் பூரித்த சந்தோஷமும், ததும்பி வழிந்த உற்சாகமும் என்னுள்ளும் கூட உற்சாகத்தை மிதக்க வைத்தது... அவளின் கல்லூரி கால சிரிப்பை நான் மீட்டுத்தந்ததாக எனக்குள் பெருமைப்பட்டுக்கொண்டேன்.... நிறைய பேசினோம்... என் பேச்சில் இடையிடையே இடைசெருகிய “அக்கா” என்ற வார்த்தை கூட அவளுக்கு அந்நியமாக தோன்றியிருக்கும்... குளித்து முடித்து நான் வருவதை பார்த்து, “தலையில் தண்ணி சொட்டுது, துவட்டிக்கோடா” என்றாள்.... பழைய ஆதவனாய் “எனக்கு தெரியும்... உன் வேலைய பாருடி!” என்று பதில் சொல்லிடாமல், தலையை துவட்டிக்கொண்டேன்.... எனக்கு பிடித்தாற் போல தோசையில் நெய் ஊற்றி முறுகலாக வார்த்துக்கொடுத்தாள்... அருகில் இருக்கையை போட்டு அமர்ந்தவாறே, அந்த ஒரு மாத நிகழ்வுகளையும் வரிசை தவறாமல் சொல்லி முடித்தாள்.... சரியாக அந்த நேரத்தில்தான் மாமாவும் வீட்டிற்கு வந்தார், என்னை பார்த்ததும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில் நலம் விசாரித்தார்.... நானோ வழக்கமான ஒரு தடுமாற்றத்தில், நெளிந்தபடி நின்று பதில் சொன்னேன்.... அதை பார்த்த அக்கா, “நீ உக்காருடா...” என்று என்னை தோள் பிடித்து அழுத்தி இருக்கையில் அமரவைத்தாள்....
மாமாவும், “உக்காருங்க மச்சான்... இல்லன்னா அதுக்கும் எனக்குத்தான் திட்டு விழும்” சிரித்தபடியே என் பக்கத்தில் அமர்ந்து நான் செல்ல இருக்கும் நேர்காணலை பற்றி விசாரித்தார்.... அவர் கேட்டபோதுதான் எனக்கே நான் அங்கு வந்ததன் நோக்கம் நினைவுக்கு வந்தது...
பத்து மணிக்கு செல்ல வேண்டிய நேர்காணல் ஒன்பதரை மணிக்குத்தான் என் நினைவுக்கே வந்தது... அவசர அவசரமாக கிளம்பி செல்லும் முன்பு மாமா என்னிடம், “எந்த  கம்பெனி மச்சான்?” என்றார்... பதிலை பதட்டத்தில் சொல்லிவிட்டு, பதறியபடியே அலுவலகத்தில் நுழையும்போது பத்து மணி ஆகிவிட்டது....
பதட்டத்தில் பயிற்சி செய்து வைத்திருந்த எல்லாவற்றையும் மறந்தேன்... உள்ளே சென்றபோது ‘டை’கட்டிய ஆசாமி என்னிடம் கேட்ட ஒரே கேள்வி, “ரமேஷ் உங்க ரிலேஷனா?” என்பதுதான்... “ஆமா... என் அக்கா ஹஸ்பண்ட்” என்ற பதிலோடு எனக்கான நேர்காணல் முடிந்து, கையோடு வேலை உறுதி கடிதமும் கொடுக்கப்பட்டது.... “எந்த கம்பெனி மச்சான்?” என்ற ஒரு கேள்விக்கு பின்னால் இவ்வளவு இருப்பதாய் எனக்கு அப்போதான் புரிந்தது.... நான் அலுவலகம் வரும் முன்பே ஏதோ ஒருவழியில், மாமாவின் மூலம் பரிந்துரை வந்ததில் எனக்கு ஆச்சரியம்தான்...
அக்காவை மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தையே மாமா தன் குடும்பம் போல பாவிப்பவர்... அவர்தான் இந்த ஐந்து வருடங்களும் எனக்கு வழிகாட்டியும் கூட... அக்காவும் கூட இதுவரை ஒருமுறை கூட மாமாவை பற்றி குறை சொன்னதே கிடையாது.... “குறையே இல்லாத மாப்பிள்ளைனு என் மாப்பிள்ளைக்கு விருதே கொடுக்கலாம்”னு அப்பாவும் அடிக்கடி சொல்வார்.... “நீ இல்லாததால எனக்கு சண்டை போட ஆளே இல்லடா”னு அக்கா சொல்லும்போது, “ஏன்? மாமாவோட சண்டை போடுவே” என்று கிண்டலாக சொல்வேன்.... அதற்கு அவளோ, “ஆமா... அவர் போட்டுட்டாலும்.... என்ன சொன்னாலும் தலையை ஆட்டுற பூம்பூம் மாடுகிட்ட நான் என்னடா சண்டை போடுறது” என்பாள்..... எங்கள் குடும்ப நல்லவிஷயங்களுக்கு முதல் ஆளாக நிற்பவரும் அவர்தான்.... அதனால், எப்போதும் என் குடும்பத்தில் யாராவது ஒருவர் மாமாவின் புராணம் பாடாத நாளே இருக்காது, இனி நானும் அதிகம் பாடுவேன் போல!....,
வீட்டிற்கு வந்ததும் சாப்பிட்டு, ஒரு குட்டித்தூக்கம் போட்டேன்... எழுந்து பார்த்தேன், ஹாலில் யாருமில்லை... மதியம் ஏதோ பக்கத்து வீட்டுக்கு போகப்போவதாய் அக்கா சொல்லிக்கொண்டிருந்தாள், அநேகமாக போயிருக்கலாம்... வாசலில் அவள் செருப்பும் இல்லை என்பதால், அவள் வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டேன்... பைக்குள் பதுக்கி வைத்திருந்த கிங்க்ஸ் சிகரெட்டை எடுத்தேன், பற்றவைக்க சமையலறைக்குள் சென்று தீப்பெட்டியும் எடுத்துவிட்டேன்.... புகைவிட தோதான இடம் மட்டும் வெகுநேரம் தேடியும் கிடைக்கவில்லை... வீட்டிற்கும், மதில் சுவருக்கும் இடையே ஒரு குறுகிய பாதை... ஒரு ஆள் கூட சிரமப்பட்டுத்தான் உள்ளே அதற்குள் செல்லமுடியும்... கொஞ்சம் பருமனான ஆளாக இருந்தால், உள்ளே சென்றுவிட்டு திரும்பிட முடியாது... அதுதான் சரியான இடமென்று உள்ளே நகர்ந்தேன்...
பல காலமாய் அந்த இடத்திற்குள் யாரும் செல்லவில்லை என்பதை அங்கு கிடந்த குப்பைகளை பார்த்தாலே தெரிந்துவிடும்... சிகரெட் பற்றவைத்து, புகைவிட்டபடியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.... காற்று கொஞ்சம் பலமாக வீசிய அந்த கனப்பொழுதில், நான் நின்றுகொண்டிருந்த இடத்தில் இருந்த ஜன்னல் படாரென்று திறந்தது... சட்டென சிகரெட்டை கீழே போட்டு காலால் மிதித்து நிமிர்ந்தபோது, நான் கண்ட காட்சி என்னை நிலைகுழைய வைத்தது....
ஆமா.... அது மாமாவின் படுக்கை அறை... உள்ளே அவருடன், வேறொரு பையன் கட்டிப்பிடித்த நிலையில்..... அடச்ச!!!.... என்ன கண்றாவி அது!.... கட்டிப்பிடித்து மட்டுமல்ல, இன்னும்..... அதை சொல்லவே எனக்கு வாய் வரல.... இதுவரை கோபுரத்தில் வைத்து நான் கொண்டாடிய மாமா, இப்போ குப்பையில் கிடக்கும் ஜந்து போல தெரிகிறார்.... எனக்கு வந்த கோபத்தில், ஓடி சென்று மாமாவை மனம் அமைதியாகும் வரை திட்டணும் போலவும், அந்த இன்னொருவனை என் கை வலிக்க அடிக்கணும் போலவும் இருந்துச்சு.... உடல் முழுக்க வியர்த்து கொட்டியது, அதற்கு மேலும் அந்த கண்றாவியை பார்க்க மனமில்லாமல் வேகமாக வீட்டிற்குள் சென்று, கட்டிலில் அமர்ந்தேன்....
என்ன செய்யலாம்?... அப்பா’க்கு போன் பண்ணி சொல்லலாமா?.... இல்ல, அது சரியா வராது... என்னன்னு சொல்றது?... மாமாவும் இன்னொரு ஆம்பளையும் தொடர்பு வச்சிருக்காங்கன்னா?... என்னைய பைத்தியம்னு சொல்வார்....
மாமா கிட்டயே, “இது சரியா?... என் அக்கா உங்கள எவ்வளவு உயர்த்தி  நினைக்கிறா?”னு பேசிப்பார்க்கலாமா?.... நிச்சயம் அதை புரிஞ்சுக்க அவரால முடியாது, ஐந்து வருடம் அக்காவோட வாழ்ந்தவருக்கு நான் என்ன புதுசா அவளை பற்றி ஐந்து நிமிடத்தில் புரியவைக்க முடியும்?...
இதை சொன்னால், அக்கா ஒருத்தியிடம் மட்டும்தான் சொல்லணும்.... அவளிடம் சொல்லலாமா?ன்னும் புரியல....
நான் குழம்பிக்கொண்டிருந்த அந்த அரை மணி நேர இடைவெளிக்குள் அந்த இன்னொரு இளைஞன் வெளியே சென்றுவிட்டான்... வெளியே சென்ற அக்காவும் வீட்டிற்கு வந்துவிட்டாள்....

“என்னடா எந்திரிச்சாச்சா?.... நல்ல தூக்கமா?... இரு, காபி போட்டுட்டு வரேன்” சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்றாள்... அத்தானின் இயல்பான பேச்சு காதில் கேட்டது.... “‘ராஜா ராணி’ படத்துக்கு போகலாமா?... மச்சானுக்கும் சேர்த்து டிக்கெட் சொல்லட்டுமா?”
“வேணாங்க.... அவன் அதல்லாம் முதல் நாளே பார்த்திருப்பான், இன்னும் நாங்க ரெண்டு பேரும் சண்டை போடவே ஆரமிக்கல, நிறைய வேலை இருக்குல்ல!...” அக்காவும் சிரிக்கிறாள்.... இவ்வளவு அப்பாவியா இருக்காளே அக்கா!... அத்தானை பற்றி இந்த விஷயம் தெரிஞ்சா, துடிச்சிடுவா!... இப்படி ஒரு மனைவியை ஏமாற்ற அந்த மனுஷனுக்கும் எப்படித்தான் மனசு வருதோ?... அதைவிட, எதுவுமே நடக்காதது போல இப்படி நல்லவன் போல பேச அந்தாளுக்கு எப்படித்தான் துணிச்சல் வருதோ?....
அதற்குள் அக்கா காபி கொண்டுவந்து விட்டாள்....
இன்னும் குழப்பம் என்னை உறுத்திக்கொண்டே தான் இருந்தது.... என்னால் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்கமுடியவில்லை, இதை எப்படி அணுகுவது? என்றும் எனக்கு புரியவில்லை....
“இங்க பக்கத்துல ஒரு கோவில் இருக்கு.... போயிட்டு வருவோமாடா?” அக்கா கேட்டாள்... அதுவும் சரிதான்... ஆண்டவனால் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்ல முடியுமா? பார்க்கலாம்....
இருவரும் கோவிலுக்கு சென்றோம்...
செல்லும் வழியில் கூட மாமாவை பற்றியே பேசிக்கொண்டு வந்தாள் அக்கா.... “சர்வீஸ் எக்ஸாம் எழுதலாமான்னு நினைக்குறேன்னு அவர்கிட்ட சொன்னேன்டா.... உடனே, எங்ககங்கயோ தேடி புடிச்சு, புக்ஸ் வாங்கிட்டு வந்துட்டாரு.... வாய் தவறி ஒன்னு சொன்னா கூட அதை செஞ்சுடுறார்... இப்பல்லாம் அவர்கிட்ட எதுவும் பேசவே பயமா இருக்கு.... அப்டியே அப்பா மாதிரிடா” சொல்லும்போது அவள் முகத்தில் மிதந்த பெருமிதமும், உற்சாகமும் என் மனதை முள்ளாய் குத்தின.... தலை அசைத்து, பொய்யாய் சிரித்து அக்காவின் பேச்சுக்கு வழிமொழிந்தேன்....
வழக்கம்போல மாமாவின் பெயரில் அர்ச்சனை செய்தாள் அக்கா, இருக்கும் வசவு வார்த்தைகளால் மாமாவை என் மனதிற்குள் அர்ச்சனை செய்துகொண்டிருந்தேன் நான்.. கடவுளை கூட ஒருநிலையோடு வணங்க முடியாதபடி, குழப்பங்களும் கேள்விகளும் என்னை தடுமாற வைத்தது....
கடவுளை வணங்கிய மன நிறைவில் பிரகாரத்தில் அமர்ந்த அக்கா தேங்காயை லேசாக உடைத்து, ஒரு சில்லை பெயர்த்து என்னிடம் கொடுத்தாள்... இன்னும் என்னை அவள் சிறுவயது ஆதவனாகவே நினைத்திருக்கிறாள், மறுக்காமல் வாங்கி வாயில் போட்டு மென்று கொண்டே அக்காவை சில நொடிகள் பார்த்தேன்... சொல்லலாமா?....
“என்னடா ஒரு மாதிரி பாக்குற?” அக்காவே பேச்சை தொடங்கினாள்....
“நீ சந்தோஷமா இருக்கியா?... எந்த குறையும் இல்லாம நிம்மதியா இருக்கியா?”
“என்னடா பெரிய மனுஷன் மாதிரி பேசுற?... எனக்கென்னடா குறை.... உங்க மாமா, நீ, அப்பா, அம்மா எல்லாரும் இருக்கைல எனக்கு என்ன கவலை இருக்க போகுது?”
“அதை சொல்லலக்கா.... கல்யாணத்துக்கு பிறகு நீ சந்தோஷமா இருக்கியா?... உன்னோட மணவாழ்க்கை நல்லபடியா இருக்கா?னு கேக்குறேன்”
“அடடே!... என் தம்பிக்கு கோவிலுக்கு வந்ததும் பொறுப்பு வந்திடுச்சு போல...  கல்யாணம் ஆகி அஞ்சு வருஷத்துக்கு பிறகு கேட்குற கேள்வியா இது?... என்னடா பிரச்சின உனக்கு?... நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... சுருக்கமா சொல்லனும்னா, நம்ம வீட்ல நான் ராணி மாதிரி இருந்தேன்... உங்க மாமா என்னைய ராணியாவே ஆக்கிட்டார்... அவ்ளோதான்...” சிரித்தாள் அக்கா... அவள் சிரிப்பில் கொஞ்சமும் பொய் இல்லை, கண்களில் கூட மகிழ்ச்சியின் ஒளி மிளிர்ந்தது....
அதுவரை சொல்லலாமா?னு யோசித்த நான், இப்போ சொல்லனுமா?னு யோசிக்க தொடங்கினேன்... இப்போ மாமாவை பற்றி அக்காவிடம் சொன்னால் விளைவுகள் என்னவா இருக்கும்?...
அக்காவுக்கும் மாமாவுக்கும் சண்டை வரும், அக்கா கோபித்துக்கொண்டு எங்க வீட்டுக்கு வருவா, குடும்ப நிம்மதி பாழாப்போகும், அக்கா வாழ்க்கை கேள்விக்குறியாகும்.... இந்த ஒருவிஷயத்தை தவிர மாமா அக்காவை ஒரு ராணி போலத்தான் நடத்துகிறார்... ஒரு சின்ன சண்டை கூட போட்டதில்லை என்று அக்கா பலநாள் புளகாங்கிதம் அடைந்திருக்கிறாள்... திருமணமான ஐந்து ஆண்டுகளும் அக்காவை அதிகமான சந்தோஷத்திற்குத்தான் ஆளாக்கியிருப்பதை பார்த்தாலே புரிகிறது.... இது ஒரு குறையை தவிர, மற்ற எல்லாமும் நிறைதான்....
என் யோசிப்புகள் தன் வழியே நகர்ந்துகொண்டிருக்க, நாங்களும் கோவிலின் வாசலை அடைந்துவிட்டோம்.... இன்னும் என் குழப்பங்கள் அகன்றபாடில்லை..... ஒருவேளை இதை நல்லது கருது அக்காவிடம் சொல்லாமல் விட்டுவிட்டால், அது மாமாவின் குற்றத்துக்கு நானும் உடந்தையாக ஆகிவிட்டதாக ஆகிடுமே.... மேலும், அக்காவை நானும் ஏமாற்றுவது போலல்லவா ஆகிடும்!....
வீட்டை நோக்கி நடந்துகொண்டிருக்கும்போதும் என் மனம் மத்தளமாய் இருபுறமும் அடிவாங்கிக்கொண்டுதான் வந்தது... அந்த ஆண்டவனால் கூட இதற்கு தீர்வு கொடுக்கமுடியவில்லையே? கடவுளை மட்டுமே நொந்துகொண்டேன்...  திடீரென்று அக்காவின் நடவடிக்கைகளில் ஒரு பதற்றம் தெரிந்தது... கையில் வைத்திருந்த அர்ச்சனை பொருட்களை தெரிந்தே கீழே போட்டாள், அதை கை தவறி விழுந்ததாய் என்னை நம்பவைக்க முனைந்தாள்... அவள் நடவடிக்கை ஒவ்வொன்றிலும், என் கவனத்தை திசைதிருப்பும் முனைப்பு தெரிந்தது....
அர்ச்சனை பொருட்களை அள்ளியபடியே அவள் அறியாமல் நிமிர்ந்து பார்த்தேன்... அக்காவின் வீட்டிற்குள்ளிருந்து ஒரு இளைஞன் வெளியே சென்றான்... நான் மதியம் பார்த்த அதே இளைஞன்... அதை நானும் கண்டுகொள்ளாதது போல, மீண்டும் பார்வையை தரை நோக்கி குனிந்துகொண்டேன்.... சில நிமிடங்களில் அக்காவின் முகத்தில் நிம்மதி தெரிந்தது, இறுக்கம் மறைந்து பழையபடி புன்னகை தவழ்ந்தது.... எதையும் கண்டுகொள்ளாதவனாக அழகாகவே நடித்தேன் நானும், அக்காவின் வயிற்றில் ஆறு மாத கருவாக வளர்ந்துகொண்டிருக்கும் என் மருமகனுக்காக! (முற்றும்)

Monday, 28 October 2013

"சமூக விரோதிகளின் களமாகிறதா "கே தளங்கள்?" (Gay Sites)...

              டந்த வாரம் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட சென்னையில் நடந்த இரண்டு கொலை சம்பவங்களை பற்றி படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்... பரவலாகவே பலருக்கும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ள அந்த கொலைகளை பற்றிய ஒரு சின்ன முன்னுரையை இப்போ பாருங்கள்....
வேளச்சேரியை சேர்ந்த கூட்டுறவு வங்கி மேலாளர் நாகராஜன் (வயது 57), வெளியிலிருந்து பார்ப்பவர்களை பொருத்தவரை நிறைவான குடும்பத்தின் தலைவர் அவர்... வெளிநாட்டில் குடியேறிய மகளை பார்க்க, மனைவி சென்றிருந்த நேரம் கொலைசெய்யப்பட்டிருக்கிறார் நாகராஜன்... காசிமேடு பகுதியில் இருக்கும் சில இளைஞர்களுடன் இவருக்கு ஓரினசேர்க்கை தொடர்பு இருந்துள்ளது... அந்த இளைஞர்களுக்கு பணமும், மதுவும் கொடுத்து தன் இச்சைகளை அதுவரை எவ்வித சிக்கலும் இல்லாமல் தீர்த்து வந்தார்... அப்படி வழக்கம்போல சில இளைஞர்களை வீட்டிற்கு அழைத்து, மது அருந்திய சமயத்தில்தான் அந்த இளைஞர்களால் நாகராஜன் கொலை செய்யப்பட்டிருக்கிறார்... கொலை செய்த நான்கு நபர்களில் மூவர் பதினெட்டு வயதை தாண்டாத சிறுவர்கள் என்பது இங்கு மேலும் அதிர்ச்சிக்குரிய விஷயம்... பணம், நகை, இருசக்கர வாகனம் என எல்லாவற்றையும் திருடிக்கொண்டு தலைமறைவான அந்த நால்வரும், இப்போது காவல் துறையின் கைது வளையத்திற்குள்....
இந்த வேளச்சேரி சம்பவம் நிகழ்ந்து இரண்டொரு நாட்களில் இன்னொரு கொலை சம்பவம் தாம்பரம் அருகே நிகழ்ந்தது.... கணினி நிறுவனம் ஒன்றில் வடிவமைப்பாளராக பணிபுரிந்து வந்த விஜயகுமார் (24 வயது), தன் பிளானட் ரோமியோ தளத்தின் மூலம் உருவான நண்பர்கள் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார்... வழக்கமாக பிளானட் ரோமியோ மூலம் படுக்கைக்கு நாள் குறிக்கும் எண்ணற்ற நபர்களை போலத்தான் விஜயகுமாரும், அந்த பரிச்சயம் இல்லாத மூன்று நபர்களை வீட்டுக்கு அழைத்துள்ளார்... அழைத்த நண்பர்கள், பணம் மற்றும் பொருளுக்காக கொலைகாரர்களாக மாறிவிட்டதுதான் அதிர்ச்சியின் உச்சம்....
நிச்சயம் இந்த இரண்டு சம்பவங்களும் அதிர்ச்சியை பலருக்கும் ஏற்படுத்தியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது... முன்பின் பரிச்சயம் இல்லாத நபர்களை, வெறும் “asl” மூலம் நம்பி, படுக்கை அறை வரை அழைத்து செல்லும் அத்தனை நபர்களுக்கும் இந்த கொலைகள் அடித்திருப்பது ஒரு “அபாய அலாரம்”...
இதுவரை பணம், நகைகள், செல்போன், ஏடிஎம் கார்டுகள், இரு சக்கர வாகனம் என்று மட்டுமே தன் எல்லைகளை கட்டுப்படுத்தியிருந்த ஆபத்துகள், இப்போது கொலை மூலம் அடுத்த பரிணாம வளர்ச்சியை எட்டி இருக்கிறது...
உண்மையை சொல்லனும்னா இப்படி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் பெரும்பாலானவர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் இல்லை.. பிளானட் ரோமியோ போன்ற ஓரின சேர்க்கை தளங்களில், தங்களை உறுப்பினர்களாக இணைத்து புகைப்பட பரிமாற்றம் மூலம் ஒருபால் ஈர்ப்பு நபர்களின் வீட்டுக்கு சென்று கொள்ளைகளில் ஈடுபடுவது என்பது “திருடர்களின் விஞ்ஞான வளர்ச்சி”...
இது அப்படி சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ரொம்ப எளிதான முறையாகிவிட்டது... வழக்கமாக நம் வீட்டிற்கு பால் பாக்கெட் போடும் நபரை நம்பாமல் வாசலோடு பேசி அனுப்பும் நாம், வீட்டிற்கு தேவையான விற்பனை பொருட்களை கொண்டுவரும் பிரதிநிதிகளை வாசலில் கூட அனுமதிக்க தயங்கும் நாம் எவ்வித முன் யோசனையும் இல்லாமல், வெறும் “asl, likes, ur number” மூலம் மட்டுமே ஒருவரை படுக்கை அறை வரை அழைத்து செல்வதுதான் அந்த சமூக விரோதிகளுக்கு வசதியான அம்சமாகிவிட்டது... அதுமட்டுமில்லாமல், அப்படி வீட்டிற்கு வரும் நபர்கள் நம்மை மிரட்டி நம் உடமைகளை கொள்ளை அடிக்கும்போதும் கூட, பலராலும் காவல்துறையை நாடமுடிவதில்லை... காரணம், அந்த விஷயம் பூமராங் மாதிரி ஆபத்து நம்மையே திருப்பி தாக்கும் என்பதால்தான்... அதாவது, நம் பாலீர்ப்பு வெளியே தெரிந்துவிடும் என்கிற பெரும்பாலானோரின் அச்சம்தான் அதற்கு காரணம்....
இந்த எளிமையான அணுகுமுறைகளும், நம் அச்சமும் மேலும் மேலும் இந்த சமூக விரோத நபர்களை நம்மை நோக்கி நகர்த்துகிறது.... இதன்மூலம் இதுவரை ஒருபால் ஈர்ப்பு நபர்களுக்காக மட்டுமே செயல்பட்டு வந்த பிளானட் ரோமியோ போன்ற சமூக தளங்கள், இப்போது கொலை மற்றும் கொள்ளைகளில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு புகுந்த வீடாக மாறிவருகிறது....
ஊடகங்கள் இதை ஓரின சேர்க்கையால் விளையும் சமூக குற்றங்கள் என்று வர்ணிக்கிறது... அது தவறான வாதம்... இந்த ஓரின சேர்க்கையை தங்களுக்கு வசதியான களமாக பிடித்துள்ள சமூக விரோதிகளின் செயல்களை வைத்து, இந்த கொலைகளுக்கு மொத்தமாக “ஓரின சேர்க்கை சமூக விரோத செயல்கள்” என்கிற சாயத்தை பூசிவிடாதீர்கள்....
கடந்த ஆண்டு இதே போல நிகழ்ந்த இரண்டு கொலைகளையும் நண்பர் ஒருவர் மூலம் அறிந்தேன்....
சென்னை பழவந்தாங்கலில் கொலைசெய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் ராமசுந்தர மணியின் இறப்பும் அதே போன்ற ஒரு ஆபத்தின் விளைவுதான்... தன் நண்பரை மது மூலம், மதியிழக்க வைத்து உறவில் ஈடுபட வைக்க முடியும் என்று நம்பிய எண்ணற்ற நபர்களை போலத்தான் அந்த ஆசிரியரும்... மதுவை கொடுத்து அத்துமீற முயன்ற ஆசிரியரின் தலையில், அந்த மது புட்டியின் மூலமே ஓங்கி அடித்து பதில் தந்துவிட்டார் அவர் நண்பர் முத்துக்குமார்....
அதே போல, தனியார் நிறுவன மேலாளராக பணியாற்றிய சசி குமார் என்ற வாலிபரை, சமூக வலைத்தளம் மூலம் பொது இடத்திற்கு வரசொல்லிய  செந்தில் என்கிற நபர்,  சசிகுமாரை கொலை செய்து, நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றுவிட்டார்.... இந்த சம்பவத்தை மிக சாதுர்யமாக சிசி டிவி காமிரா மூலம் கண்டுபிடித்து, கடந்த வருடம் செந்திலை கைது செய்தது காவல்துறை....
நாம் முன்பு பார்த்த இரண்டு கொலைகளுக்கும், இந்த இரண்டு கொலைகளுக்கும் நிறைய வித்யாசம் உண்டு... “ஸ்ட்ரைட் நண்பனை” செட்யூஸ் செய்ய ஐடியாக்கள் தேடிக்கொண்டிருக்கும் அத்தனை நபர்களுக்கும், பழவந்தாங்கல் பள்ளி ஆசிரியரின் கொலை ஒரு பாடம்....
அதே போல புத்திசாலித்தனமாக பொது இடத்தில் சந்தித்து, தங்கள் உறவை படுக்கை அறையை நோக்கி நகர்த்தலாம் என்கிற எண்ணத்தில் இருப்பவர்கள் பலருக்கும் சசிகுமாரின் கொலை ஒரு பாடம்....
அப்போ என்னதான் செய்ய சொல்றீங்க?.. “வீட்டுக்கு அழைக்கக்கூடாது, அவங்க சொல்லும் இடத்துக்கு போகக்கூடாது, நம் நண்பர்களை செட்யூஸ் செய்யக்கூடாதுன்னு வரிசையா சொன்னா, காமத்தை முழுசா விட்டுவிட சொல்றீங்களா?”னு சிலர் கேட்பீர்கள்....
நிச்சயம் நான் அப்படி சொல்லவில்லைங்க... பசி, தூக்கம் போல காமமும் மனிதனுக்கு இருக்க வேண்டிய இயல்பான உணர்வுதான்... அதை முழுமையாக முடக்க நாம் ஒன்றும் ஞானிகள் இல்லை... அதே நேரத்தில், குறைத்துகொள்வதில் நமக்கு அதிகம் சிரமம் இருக்காதே!... பசியையும் தூக்கத்தையும் போல, அளவோடு காமத்தையும் அணுகுங்கள்னுதான் சொல்றேன்.... நான் மேற்சொன்ன நிகழ்வுகளின் ஆபத்தை நீங்கள் புரிந்துகொண்டாலே உங்களுக்கு நிச்சயம் ஒரு பயம் வரும், அந்த பயம் என்கிற விஷயம் தான் நமக்கான  “தற்காப்பு உணர்வு மூலம்” ஒரு எல்லையை வகுத்துக்கொடுக்கும்....
நாம் எவ்வளவுதான் சொன்னாலும் சிலரால் காம எண்ணங்களை தவிர்க்க முடியாது... அப்படிப்பட்டவர்களுக்கு சில பாதுகாப்பு வழிமுறைகளை சொல்கிறேன், குறைந்தபட்சம் அப்படிப்பட்டவர்களின் உயிரையும், உடமையையும் பாதுகாக்கவாவது இந்த வழிமுறைகள் பயன்படும் என்று நம்புகிறேன்...
·        வெறும் சில நிமிட சாட் மூலம் மட்டுமே ஒருவரை நம்பி படுக்கை அறை வரைக்கும் அழைத்து செல்ல வேண்டாம்... குறைந்தபட்சம் ஒரு சந்திப்புக்கு முன்பு நான்கு முறைகளாவது சம்மந்தப்பட்டவருடன் அலைபேசியில் பேசுங்கள்... பெரும்பாலும் சமூக விரோத நபர்கள் பொதுத்தொலைபேசி மூலமே பேசிடுவார்கள், காவல்துறையில் சிக்கிக்கொள்ள தயங்கி தங்கள் அலைபேசி மூலம் பேசுவதை தவிர்ப்பார்கள்....
·        முதல் சந்திப்பை மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள்... சமூக விரோதிகள், பொது மக்கள் மத்தியில் உங்களோடு இணைந்து பொது இடங்களில் செல்வதை விரும்பமாட்டார்கள்.....
·        ஒருவர் பார்வை மூலம், அவர் ஒருபால் ஈர்ப்பு நபரா? என்பதை உங்களால் ஓரளவு கணிக்க முடியும்... கொஞ்சம் சந்தேகம் வந்தாலும், மேற்கொண்டு அடுத்த கட்டம் செல்வதை தவிர்த்துவிடுங்கள்....
·        சமூக வலைத்தளம் மூலம் ஒருவரை சந்திக்க இருக்கிறீர்கள் என்றால், உங்களை மேலும் அழகுபடுத்திக்கொள்ள “செயின், மோதிரம், விலையுயர்ந்த வாட்ச், ஏடிஎம் அட்டைகள், கரன்சி நோட்டு கத்தைகள்” போன்றவற்றோடு சென்று சந்திக்காதீர்கள்...
·        உங்கள் வீட்டிற்கு வரும் நபர், அத்துமீறும் நிலைமை வந்தால், உங்கள் பயத்தை அவரிடம் காட்டிவிடாதீர்கள்... கொஞ்சம் எகிறி பாருங்கள், உடனே கதவை திறந்து வெளியே செல்ல இருப்பதாக அவனை நம்ப வையுங்கள்.... அவனை பயமுறுத்த முயற்சி செய்யுங்கள், உங்கள் பயத்தை வெளிக்காட்டி விடாதீர்கள்...
·        எக்காரணத்தை முன்னிட்டும் “க்ரூப் செக்ஸ்”இல் ஈடுபடுவதை தவிருங்கள்... பெரும்பாலான கொலைகள் மற்றும் கொள்ளைகளில் இந்த க்ரூப் செக்ஸ் விஷயம் அதிகம் அடிபடுகிறது என்பதால் இதை சொல்கிறேன்...
இப்படிப்பட்ட விஷயங்கள் மூலம் ஓரளவு ஆபத்துகளின் பிடியில் இருந்து நீங்கள் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.... என்றாலும், முன்பின் தெரியாத, அறிமுகமில்லாத நபர்களுடன் “இன்ஸ்டன்ட்” உறவுகளை தவிர்ப்பது மூலம் மட்டுமே நீங்கள் முழுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துவிட்டதாக அர்த்தம்... உங்களை ஆபத்துகள் சூழ்ந்திருக்கிறது என்பதையும், ஆபத்தானவர்கள் நோக்கிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து செயல்பட்டால் நிச்சயம், நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது மட்டும் உறுதி...
(சில தகவல்களை தந்து கட்டுரைக்கு உதவிய நண்பர்கள் திருப்பூர் நவீன் மற்றும் சரத் ஆகியோருக்கு நன்றிகள்!)

நன்றி,
உங்கள் விஜய் விக்கி...

Thursday, 24 October 2013

"பல்லி" - சிறுகதை...

 ஐந்தாவது முறையாக ஸ்னூஸ் பட்டனை அழுத்திவிட்டு, பத்து நிமிட ‘மினி’ தூக்கத்தில் தன்னை ஆழ்த்திக்கொண்ட சுரேஷை, எலியை துரத்தும் பூனை போல விடாமல் துரத்தி, ஆறாவது முறையாக “பழம் நீயப்பா... ஞானப்பழம் நீயப்பா...” கே.பி சுந்தராம்பாளை பாடவைத்து எழுப்பியது அலைபேசி அலாரம்.... அலாரத்தை கண்டுபிடித்தவன் புத்திசாலியாக இருந்தாலும், ஸ்னூஸ் பட்டனை கண்டுபிடித்தவன் சோம்பேறியாகத்தான் இருக்கணும்.... ஜன்னல் திரையின் ஓரத்தில் எட்டிப்பார்த்த சூரிய வெளிச்சம், சூரியன் உதித்து நீண்ட நேரம் ஆகிவிட்டதாய் ரகசியம் சொன்னது.... ஒருவழியாக எழ தீர்மானித்தவனாய், கண்களை மூடியபடியே அலைபேசி திரையை முகத்திற்கு நேரே கொண்டுவந்தான் சுரேஷ்.... தூக்கத்தை ஒத்திவைத்த கண்கள், மெல்ல திறந்து திரையை பார்த்த மறுநொடியில், சிவந்து போய் கோபத்தை கக்கியது..... பல்லை கடித்தவாறே, அருகில் அரை நிர்வாண கோலத்தில் படுத்திருந்த வினோத்தின் கையை கிள்ளினான்....
வலியால் துடித்து எழுந்த வினோத், “ஏய்... போதும் சுரேஷ்.... நாளைக்கு பாத்துக்கலாம்... எனக்கு தூக்கம் தூக்கமா வருது...” அப்படியே சுரேஷ் மீது சாய்ந்தான்...
இதில் இன்னும் அதிக கோபமான சுரேஷ், “எரும.. எரும... விடுஞ்சிடுச்சு.... எப்ப பார்த்தாலும் உனக்கு அந்த நெனப்புதானா?” வினோத்தின் தலையை நிமிர்த்தி நிறுத்தினான்....
கண்களை கசக்கியபடியே விழித்த வினோத், “என்னடா ப்ராப்ளம் காலைலயே?” இன்னும் ஒரு மணி நேர தூக்கம் கண்களில் இருக்கிறது....
“என்ன பண்ணி வச்சிருக்க என் மொபைல்ல?... வால் பேப்பரா முருகன் படம் வச்சிருந்தேன், அதை ஏன் இப்டி மாத்துன?” வினோத்தின் முகத்திற்கு நேராக அலைபேசி திரையை நீட்டினான்.... அதில் குரங்கு ஒன்று வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறது... இதை பார்த்ததும் மனதிற்குள் சிரித்துக்கொண்ட வினோத், வெளிப்படையாக சிரித்தால் விளைவுகள் விபரீதமாகும் என்கிற சமயோசித யோசிப்புக்கு பிறகு, அதை அறியாதவனாக, “அட! போட்டோ நல்லா இருக்கே?... எப்போடா வாழைப்பழம் சாப்பிடுற மாதிரி போட்டோ எடுத்துகிட்ட?.... நல்லா இருக்கு... ஹால்ல ப்ரேம் போட்டு மாட்டிக்கலாம்...” பொறுமையாக சொன்னான்....
இதில் இன்னும் கோபமான சுரேஷ், “இது ஜோக் இல்ல வினோ... எத்தன தடவை சொல்லிருக்கேன், என் நம்பிக்கைகள்ல தலையிடாதன்னு?... காலைல எழுந்ததும் முருகன் படத்த முதல்ல பார்த்தாதான் என் மனசு சந்தோஷமா இருக்கும்னு உனக்கு தெரியாதா?” இப்போதுதான் குயில்கள் கூடுகளுக்கு திரும்பி, காக்கைகள் கரைந்து தங்கள் ஆளுகைக்குள் உலகை கொண்டு வரும் நேரம்.... அதற்குள் ஒரு பிரளயத்தின் வாசம் அடிக்கிறது அவர்கள் படுக்கை அறைக்குள்...
“குரங்கும் கடவுள்தானே?... அதையும் கோவில்ல கும்பிடுற தானே? அப்புறம் ஏன் கோபப்படுற?”
“நான் எதை கும்பிடனும்னு நான்தான் முடிவெடுக்கணும், நீ இல்ல.... இன்னிக்கு வழக்கமா நடக்காததாலதான் நமக்குள்ள இப்போ சண்டை, நிம்மதி இன்மை எல்லாம்.... புரியுதா?”
“அதுக்கு காரணம் நீ முழிச்ச போட்டோ இல்ல, உன் முட்டாள்த்தனமான மூடநம்பிக்கை.... உன் தவறை ஒரு பாவமும் அறியாத அந்த குரங்கு மேல திணிக்காத...” அதே கோபத்துடன் எழுந்த வினோ, அந்த அறையை விட்டு வெளியேறி ஹாலுக்கு சென்றான்...
சுரேஷ், சில நிமிட அமைதிக்குள் தன்னை ஐக்கியமாக்கினான்... மனதிற்குள் ஆண்டவனை தரிசித்தவனாக, அலுவலகத்திற்கு கிளம்ப ஆயத்தமானான்...
வழக்கமாக சிணுங்கல்கள், முனகல்கள், செல்ல திட்டுகள் என மூலை முடுக்குகளில் கூடலின் வாசம் நிறைந்திருக்கும் அந்த வீடு, இன்றைக்கு தியான வகுப்பு நடக்கும் அறை போல காட்சி அளிக்கிறது.... நேரம் புரியாமல் சன் மியூசிக் மட்டும் “காதல் கானங்களை” கக்கிக்கொண்டு இருக்கிறது....
பல் துலக்கும்போது “வசீகரா....”
குளிக்கும்போது “அய்யய்யய்யோ ஆனந்தமே...!”
சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது “யாரோ இவன்... யாரோ இவன்....” பாடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியை, கோபமாக சென்று அணைத்தான் சுரேஷ்... காரணம், அது காதல் நிரம்பி வழியும் போதல்லாம் சுரேஷை பார்த்து வினோ பாடும் பாடல்.... அந்த பாடலை பார்த்த வினோத், கமுக்கமாய் உதிர்த்த மெல்லிய சிரிப்புதான் அந்த பாடலை நிறுத்திய சுரேஷின் கோபத்திற்கு முக்கிய காரணம்...
ஒன்பது மணி ஆகிவிட்ட பரபரப்பில், இட்லிக்களை அவசரமாக கபளீகரம் செய்து தண்ணீரால் அதை வயிற்றுக்குள் தள்ளிவிட்டு, அவசரமாக எழுந்தான் வினோ.... கை கழுவிக்கொண்டிருந்த வினோ தலையில், அவ்வளவு நேரம் அதற்காகவே காத்திருந்ததை போல ஒரு பல்லி அவன் தலையில் விழுந்தது.... எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், எதிர்பாராத நேரத்தில் தன் மேல் விழும் பல்லியை கண்டு பதறாமல் இருக்க முடியுமா என்ன?.... பதறினான் வினோவும், அந்த சில நொடிகள் மட்டும்... அதன்பிறகு வழக்கமாக அலுவலகத்திற்கு கிளம்புவதில் மும்முரமானான்...
இதை பார்த்த சுரேஷ் தான் பதினைந்து நிமிடங்கள் ஆகியும் இன்னும் அந்த பதட்டத்தில் இருந்து மீளவில்லை.... ஓடிப்போய் சுவரில் மாட்டியிருந்த “செல்வ விநாயகர்” காலண்டரின் பின்புறத்தை ஆராய்ந்தான்.... ஆங்... கண்டுபிடித்துவிட்டான்....
“பல்லி விழும் பலன்....”
கை, கால், கழுத்து தாண்டி தலையில் விழுந்தால் உண்டாகும் பலனை நோக்கி நகர்ந்த சுரேஷ், மேலும் அதிர்ந்தான்.... பலனாக இருந்தால்தானே பயப்படாமல் இருக்க முடியும், தலையில் விழுந்தால் “மரணம்” என்றல்லவா அதில் இருக்கிறது.... அதை பார்த்த சுரேஷின் தலையில் பல்லிக்கு பதில் பாறாங்கல் விழுந்ததை போல “சுர்...” என்றது....
பத்து நிமிடத்தில் பதினைந்து பவர் ஸ்டார் படங்களை பார்த்த குழப்பம் அவன் தலைக்குள் சுழன்றது.... மனம் அதிகமாய் படபடத்தது, பூசியிருந்த பவுடரை பொருட்டாகவே மதிக்காமல் வியர்வை அவன் முகத்தை தாண்டி, கழுத்தை நோக்கி பை பாசில் வழிந்தது... என்ன செய்வது?... ஷூவிற்கு பாலிஷ் போட்டுக்கொண்டிருந்த வினோவின் அருகில் சென்றான்....
பேச்சை தொடங்க ஈகோ ஒரு பக்கம் தடுத்தது, பேச சொல்லி பயம் மறுபக்கம் தூண்டியது... இன்னும் தாமதித்தால், இரண்டொரு நிமிடங்களில் வீட்டை விட்டு வினோ கிளம்பிவிடுவான்....
“வினோ....”
பாலிஷ் போட்ட கைகள் நின்றன, கழுத்து மெல்ல மேல் நோக்கி நிமிர்ந்தது.... “என்ன?” என்பது போல புருவத்தை உயர்த்தி, தலையை அசைத்தான்.... காலை கோபத்தின் எச்சங்கள் முகத்தினில் இன்னும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது...
“இன்னிக்கு ஆபிஸ் போகனுமா?” தயங்கியபடியே கேட்டான் சுரேஷ்....
“இது என்ன கேள்வி? தினமும் ஆபிஸ் போகணும் தான்....” வார்த்தைகளில் பிடிப்பு இல்லை... விருப்பமின்றி தவறி விழுந்த வார்த்தைகள் சுரேஷை எரிச்சல் படுத்தியது....
“இல்ல... இன்னிக்கு வேணாமே!”
“ஏன்?”
“எனக்கென்னமோ ஏதோ தப்பு நடக்க போறதா தோணுது....”
“எதை வச்சு சொல்ற?”
“பல்லி தலைல விழுந்தா மரணம்’னு போட்டிருக்கு... அதான்...”
அலட்சியமாக சிரித்த வினோ, “பல்லி, கரப்பான் பூச்சி விழுந்ததுக்கெல்லாம் ஆபிஸ் லீவ் போட்டா, வருஷத்துல பாதி நாள் வீட்ல தான் இருக்கணும்.... பல்லி சாப்பாட்டுல விழுந்தா மட்டும்தான் கவலைப்படணும், அதனால நீ முதல்ல ஆபிஸ் கிளம்பு....”..
பயம் ஒரு பக்கம், பதட்டம் மறுபக்கம் நெருக்கி சுரேஷை இறுக்கியது....
“பல்லிக்காக வேண்டாம், எனக்காக லீவ் போடலாம்ல?” கிட்டத்தட்ட இறைஞ்சு பேசினான் சுரேஷ்...
“இங்க பார் சுரேஷ்.... உன் நம்பிக்கை’ல நான் எந்த அளவுக்கு தலையிடக்கூடாதுன்னு நீ நினைக்குறியோ, அந்த அளவுக்கு உன் நம்பிக்கைகள என் மேல நீ திணிக்கவும் கூடாது....” சொல்லிவிட்டு, வலது ஷூவில் அரைகுறை பாலிஷ் அப்பியதோடு அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டான் வினோ.... பைக்கில் ஏறிய வினோ வீட்டில் நடந்த எந்த நிகழ்வின் சுவடும் தெரியாதவனாக சீறிப்பாய்ந்தான்...  கண்களை விட்டு மறையும்வரை, ஜன்னல் வழியாக அவனை கண்களால் பின்தொடர்ந்தான் சுரேஷ்....
இனி வீட்டில் சுரேஷ் மட்டும் இருந்து என்ன செய்வது?... தனக்கு பெயர் தெரிந்த அத்தனை கடவுள்களையும் வாய்க்குள் முணுமுணுத்தான்.... சில நிமிட புகைப்பட கடவுள் தரிசனத்தை தொடர்ந்து வீட்டை விட்டு கிளம்பினான்...
குளிரூட்டப்பட்ட அலுவலகம்தான் என்றாலும் கூட, ஏதோ ஒருவித வெக்கை அடிப்பதாய் அவனுக்கு தோன்றியது... வழக்கமாக வாயில் காவலாளியிடம் வைக்கும் வணக்கம் மறந்தான், அலுவலக முகப்பில் அப்பாவியாக அமர்ந்திருக்கும் விநாயகரை ஒத்திக்கொள்ள மறந்தான், தன் கேபினுக்குள் நுழைவதற்கு முன் அடுத்த கேபினில் அமர்ந்திருக்கும் “வெங்கட்” அண்ணாவை பார்த்து சிரிக்க மறந்தான்.... இந்த பதட்டத்தில் அலுவலகத்தையும், அலுவலகத்தில் தன் கேபினையும் சுரேஷ் மறக்காமல் இருந்ததே ஆச்சரியம்தான்...
பதட்டத்திற்கான மற்ற புற காரணிகளை மறக்க, தன் கணினியை இயக்கினான்... கணினி முகப்பில் திருச்செந்தூர் ராஜ அலங்காரத்தில் முருகன் சிரிக்க, அவரை கடந்து அலுவலக கோப்புகளை ஆராய்ந்தான்.... வழக்கத்தைவிட அதிகமான வேலை இன்று, ஆனால் வழக்கம் போல கவனத்தை ஒருநிலைப்படுத்த முடியவில்லை... தட்டச்சு செய்வதில் கூட ஆயிரம் தடுமாற்றம்.... விசைப்பலகையில் வழக்கமாக நீண்டு நிமிர்ந்து படுத்திருக்கும் “ஸ்பேஸ் பார்”ஐ தட்டச்ச கூட சில நொடிகள் தேடல் அவனுக்கு அவசியமாய் பட்டது..... ஒருவழியாக கோப்பினை தயார் செய்து, மேலாளருக்கு அனுப்பியும் விட்டான்.... ஒரு மணி நேரம் கழித்து, பொறுமை இழந்தவராக எழுந்து வந்த வெங்கட் அண்ணா, தன் அருகில் நிற்பதை கூட சுரேஷ் இன்னும் கவனிக்கவில்லை....
வெங்கட் அண்ணா தான் சுரேஷின் ஆஸ்தான ஜோதிடர் என்று சொன்னால் கூட அது மிகையில்லை... இருவரும் அலுவலக விஷயங்களை விட, அதிகம் ஆன்மிக ஆராய்ச்சிதான் ஈடுபடுவார்கள்... ரேகை பார்த்து, “நீ சர்வீஸ் எக்ஸாம் எழுதிப்பாரு சுரேஷ்... உன் கைல கவர்ன்மன்ட் முத்திரை பக்காவா பதிஞ்சிருக்கு” என்று சொல்வது முதல், “நீ ரிஷப ராசி தானே?... உனக்கு இப்போ ராகு திசை நடக்குது... கும்பகோணம் பக்கத்துல ராகு பகவான் கோவில் இருக்கு, அங்க போயிட்டு வந்திடு” என்று பயணத்திற்கு வழி அனுப்புவது வரை எல்லா ஆன்மிக ஆலோசனைகளுக்கும் வெங்கட் அண்ணா ஒருவர்தான் மூலவர், அவருக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது!....
“என்ன சுரேஷ், ரொம்ப பிஸியா?”
இப்போதான் அவரை கவனிக்கிறான்... தன் கவனிப்பின்மையை உணர்ந்தவனாய், “ஐயோ இல்லண்ணா... ஸ்கூல்’களுக்கு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்றது தொடர்பா கொட்டேஷன் அனுப்ப சொன்னார் மேனேஜர், அதான்...” வார்த்தைகள் கூட பவ்யமாய் விழுந்தன...
“ஓஹோ.... உன் முகத்த வந்தப்பவே கவனிச்சேன், உடம்பு எதுவும் சரி இல்லையா?... ஏன் ஒரு மாதிரி இருக்க?”
“இல்லண்ணா... கொஞ்சம் தலைவலி...”
“கொஞ்சம் தலைவலிக்கே இப்டி சோர்ந்து கிடக்கு முகம்.... நிறைய தலைவலி இருந்திருந்தா?” சிரித்தார்.... சுரேஷும் சிரித்தாலும், மனதிற்குள், “அதான் வீட்டுல ஒரு பெரிய தலைவலி இருக்கே!” என்று நினைத்துக்கொண்டான்...
“பல்லி விழும் பலன்’ல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா அண்ணா?”
“என்ன இப்டி கேட்டுட்ட?... என் மாமா ஒருத்தரு, எல்லா தொழிலும் நஷ்டமாகி ஓட்டாண்டியா ஆகிட்டாரு... எதேச்சையா பல்லி ஒன்னு அவர் தோள்பட்டை’ல விழுந்துச்சு... அடுத்த நாளே, லட்சாதிபதி ஆகிட்டாரு”
எப்படி லட்சாதிபதி ஆனார்? யார் அந்த மாமா? இந்த கேள்விகள் எல்லாம் சுரேஷுக்கு அவசியமாய் தோன்றவில்லை... மனதிற்குள் இன்னும் அதிக படபடப்பு உண்டானது.... சில நம்பிக்கைகளில் அவனால் லாஜிக் பார்க்க முடிவதில்லை...
அஷ்டமி நவமிகளில் பயணம் செய்யாமல், நல்ல விஷயங்கள் தொடங்க வளர்பிறை வரை காத்திருந்து, ராகு கேது சனி என்று சகலத்தின் நடமாட்டத்தையும் ஜோதிடம் வழியாக கண்காணித்து, தனக்குள் இருக்கும் திறமைகளைவிட பாக்கெட்டில் வைத்திருக்கும் கடவுள் படத்தை நம்பும் சுரேஷ் போன்ற ஒருவன் பல்லி விழும் பலனை பார்ப்பதும், அதற்காக பயப்படுவதும் வியப்பொன்றும் இல்லைதானே!...
இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது இடைபுகுந்தார் மேலாளர்.... கையில் ஒரு தாள், முகத்தில் ஒரு எரிச்சல்... வழக்கமான புன்னகை கூட இல்லை, ஒருவேளை அவருக்கும் தலையில் எதுவும் விழுந்ததோ? தெரியவில்லை...
“என்ன டைப் பண்ணிருக்க சுரேஷ்?... தமிழ் டைப் பண்ண தெரியாதா உனக்கு?” வந்த வேகத்தில் சீறினார்... நிலைமையை உணர்ந்து வெங்கட் அங்கிருந்து விலக, நடப்பதை இன்னும் கிரகிக்க முடியாமல் குழம்பி நின்றான் சுரேஷ்....
“பள்ளிக்கல்வி துறை’னு போடுறதுக்கு பதிலா, பல்லி கல்வித்துறை’னு போட்டிருக்க.... சாதாரண லகரம் புரியலையா உனக்கு?... இதை நான் அனுப்பிருந்தா என்ன நினச்சிருப்பாங்க நம்ம கம்பெனிய பத்தி?... அந்த கொட்டேஷன் நானே அனுப்பிக்கறேன், நீ உன் அரட்டையை கண்டின்யூ பண்ணு” சுரேஷின் கையில் அந்த தாளை திணித்துவிட்டு கோபமாக அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டார் மேலாளர்.... அதுவரை அமைதியாய் சுற்றிக்கொண்டிருந்த பல்லி ஒன்று, மின்விளக்கின் அருகே தலையை நிமிர்த்தி “ச்ச்...ச்ச்... ச்ச்...” சத்தம் போட்டது... பல்லி கூட தன்னை பரிகாசித்து சிரிப்பது போல தோன்றியது சுரேஷுக்கு... நிஜமாகவே தலைவலி அப்போது தான் எட்டிப்பார்க்கிறது அவனுக்குள்...
ஏனோ மனம் விரக்தியின் விளிம்பிற்கு சென்றது.... அரை நாள் விடுப்பு எடுத்தான், வீட்டை நோக்கி விரைந்தான்... செல்லும் வழியில் சில நிமிட கோவில் பிரவேசத்தை அவன் மறக்கவில்லை... அந்த உச்சி வெயில் நேரம், கோவில் அர்ச்சகர் கூட களைத்துப்போய் அமர்ந்திருக்கும் கடவுளுக்கு தொடர்பில்லாத நேரம்... வெயில் அவனுக்கு பொருட்டாக தோன்றவில்லை, முருகன் வழக்கம்போல அந்த நேரத்திலும் சிரித்துக்கொண்டுதான் இருக்கிறான்....
மனம் ஓரளவு நிதானமானதாய் உணர்ந்தான்.... அந்த நிதானத்துடன் வீட்டிற்கு வந்து ஒரு குட்டித்தூக்கம் போட்டான்.... கனவுகளில் கூட அவனை பல்லிகள் துரத்தியது..... யானை அளவிலுள்ள பல்லி ஒன்று ஆக்ரோஷமாய் அவனை துரத்துகிறது... பல்லிக்கு கனவில் மட்டும்தான் பற்களை பார்க்க முடிகிறது, அதுவும் கூர்மையாக கோரமாக... தன் உடலின் பாதியை பல்லி விழுங்கிக்கொண்டிருந்த நேரம், திடுக்கிட்டு விழித்தான்...
மணி ஐந்து... வழக்கமாக வினோ வந்துவிடும் நேரம்... எழுந்து சென்று ஜன்னல் வழியே சாலையை பார்த்தான்... சுவாரசியமில்லாத சாலை, வாகனங்களை தவிர அங்கு எந்த சுவாரசியத்தை எதிர்பார்க்க முடியும்?... அந்தி வெயிலின் உக்கிரத்தை எதிர்கொள்ள தயங்கியபடியே சாலையில் வலம் வரும் ஒருசிலரை தவிர, ஆள்நடமாட்டம் கூட அதிகம் பார்க்கமுடியவில்லை...
ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சியை இயக்கினான்... டிஸ்கவரி சேனலில், “உலகத்துல மொத்தம் 3800 வகை பல்லிகள் இருக்கு.... அதுல நாம பாக்குற இந்த பல்லி ரொம்ப அபூர்வமானது, அபாயமானது...” ஷாட்ஸ் போட்ட வெள்ளைக்காரன், தேமதுர தமிழில் பேசிக்கொண்டு இருக்கிறான்... இங்கயும் பல்லி தானா?... காலை முதல் மாலை வரை இந்த பல்லி விடாமல் அவனை துரத்துகிறது....
பல்லி மீதான கோபத்தை ரிமோட் பட்டனை அழுத்தி வெளிப்படுத்தினான்... அந்த அழுத்தத்தில், நான்கு சேனல்கள் கடந்து ஓடின...
புதிய தலைமுறை செய்தி சேனல்.... கீழே “சற்று முன்” செய்தி ஸ்க்ரோல் ஆகிக்கொண்டு இருந்தது.... “சென்னை தேனாம்பேட்டை சிக்னல் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் விபத்தில் மரணம்...” இந்த செய்தி சுரேஷை ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்தது... அதிர்ச்சியில் உறைந்து நின்றான்... யாரோ ஒரு இளைஞன் இறந்ததற்கா சுரேஷ் இவ்வளவு பயப்படனும்?.... வழக்கமான நாளில் அந்த செய்தி அவனை பாதித்திருக்காது, இன்றோ வழக்கத்தை மீறிய ஒரு பதட்டம் அவனை தொற்றிக்கொண்டிருக்கும் நாள், எப்படி பதறாமல் இருக்க முடியும்?... வழக்கமாக இந்த நேரத்தில் வினோ கடக்கும் சிக்னல் அல்லவா அது!... அட ஆண்டவா!.... முருகா!... உடனே வினோவின் அலைபேசியை அழைத்தான்... வழக்கம்போல “சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது” பெண் குரல் ஒலித்தது.... அடி வயிற்றுக்குள் ஒருவித பதட்ட உணர்வு மேலோங்கியது.... கைகளும், கால்களும் நடுக்கங்கள் கொண்டன.... எச்சில் கூட தொண்டைக்குள் இறங்க தயங்கி நின்றது.... மனதிற்குள் புலம்பியபடியே, இனி யோசிப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்து, அவசரமாக கிளம்பினான்.... பைக் சாவியை எடுத்துக்கொண்டு கதவை திறந்த கணப்பொழுதில், கண்களில் களைப்போடு வாயிலில் நின்றான் வினோ....
கண்களில் அரும்பிய நீரோடு கதவை திறந்த சுரேஷை ஆச்சரியமாக பார்த்தான்....
“என்னடா? என்னாச்சு?” வினோ கொஞ்சம் பதட்டத்துடனே கேட்டான்...
அதுவரை அடக்கி வைத்திருந்த அத்தனை சோகங்களையும் அழுகையாய் கொட்டித்தீர்த்தான் சுரேஷ்.... ஹாலிற்கு அவனை அழைத்து சென்று, குடிக்க தண்ணீர் கொடுத்து, நடந்தவற்றை கேட்டான் வினோ....
“அட லூசு... இதுக்கா பதறுவ?” சுரேஷை கட்டி அணைத்தான்... சுரேஷின் மனம் அந்த அணைப்புக்காக காத்திருந்ததை போல தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டது.... உடலும், மனமும் அந்த சில நிமிட அரவணைப்பில் சீராகின....
“சாரிடா.... நான் முட்டாள்த்தனமா நம்புற விஷயங்களுக்கு உன்னோட நிம்மதியையும் கெடுத்திடுறேன்.... பல்லி தலைல விழுந்தா யாராச்சும் இறப்பாங்களா?... நான் முட்டாள் வினோ...” அழுகை நின்று, தன்னிலை மீண்டவனாய் நிதானித்து சொன்னான் சுரேஷ்...
சுரேஷின் தலையை கோதிவிட்டு, தன்னோடு சேர்த்து அணைத்தபடியே, “இல்ல சுரேஷ்.... நீ சொன்னதுதான் இப்போ நடந்திருக்கு.... தலைல பல்லி விழுந்தா மரணம்னு சொன்ன, யாருக்குன்னு சொல்லலைல?.... அங்க பாரு....” என்று அவன் கை நீட்டிய இடத்தில், ஜன்னல் கம்பிகளுக்குள் தாறுமாறாக தன் தலையை நுழைத்து சிக்குண்ட பல்லி, நைந்து போய் இறந்து கிடந்தது... (முற்றும்)