Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Wednesday 28 January 2015

செருப்படி - சிறுகதை...

“இன்னைக்கு இலக்கணத்த முடிச்சாதான், அடுத்த வாரத்துக்குள்ள செய்யுளை முடிக்கமுடியும்... தேர்வும் நெருங்கிடுச்சு, பசங்கள ஒருமாசத்துக்கு முன்னமே தயார்படுத்தணும்” நினைத்தபடியே சாப்பிட்டு முடிப்பதற்கும், வகுப்பிற்கான மணி அடிப்பதற்கும் சரியாக இருந்தது... தன் கடிகாரத்தை கவனித்தார், மூன்று நிமிடத்திற்கு முன்னதாகவே மணி அடித்துவிட்டதை பொருட்படுத்த விரும்பாமல் சாப்பாட்டை நிறைவுசெய்தார் தமிழ்... பெயரில் மட்டுமல்ல, படிப்பு, தொழில் என எல்லாவற்றிலுமே இவர் தமிழ்தான்... அறிவியல் அப்பளத்தை கடித்தபடியே, கணக்கிடம் கடலை போட்டுக்கொண்டிருந்தது... மனதிற்குள் சிரித்தபடியே மெள்ள எழுந்து வெளியே சென்று கைகழுவிக்கொண்டிருந்தபோதுதான், அந்த நாற்பது வயது மதிக்கத்தக்க நபரை கவனித்தார் தமிழ்... 

எங்கோ பார்த்து பரிச்சயமான முகம் போலவே தோன்றியது... ஆனாலும், அந்த முகத்தில் குடிகொண்டிருக்கும் கலவரமும், பதற்றமும் தமிழை சட்டென இறுக்கமுற செய்தது... தமிழை கடந்துபோனபோது மட்டும், அந்த கவலையை மறைத்து சிரிப்பதை போல பாவனை செய்தபடி நகர்ந்தார்... அந்த நபர் விளையாட்டு திடலை தாண்டி, நுழைவு வாயிலை கடக்கும்வரை வைத்த கண் விலகாமல் உற்றுநோக்கியபடியே பார்த்தும் பயனில்லை, யாரென்று பிடிபடவே இல்லை... மீண்டும் ஆசிரியர்கள் அறைக்குள் நுழைந்தார் தமிழ்... கடலை தீய்ந்தபோதிலும் வறுப்பதை நிறுத்திடாத இருவரையும் தொந்தரவு செய்ய மனமில்லாமல் மெல்ல அடியெடுத்துவைத்து, தன் பன்னிரெண்டாம் வகுப்பு புத்தகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு வகுப்பறையை நோக்கி நகர்ந்தார்..

வகுப்பறைக்குள் நுழைந்தபிறகும் அந்த முகம் மின்னல்போல தோன்றி மறைந்து மனதை படுத்தியது... சில நிமிட ஆசுவாசம் தேவைப்பட்டதால் இருக்கையில் அமர்ந்து, மூச்சை ஆழமாக இழுத்துவிட்டார்... மாணவர்கள் தமிழையே நோக்கிக்கொண்டிருந்ததால், மேற்கொண்டு தன் குழப்பமான மனநிலையை வெளிப்படுத்த விரும்பாமல், எழுந்து கரும்பலகையை நோக்கி நகர்ந்தார்...

கரும்பலகையில் ‘திணை’ என்று எழுதிவிட்டு, மாணவர்களை நோக்கி திரும்பி, “இன்னிக்கு திணைகள் பற்றி பார்ப்போம்... திணைகள் பன்னிரண்டு வகைப்படும்... அவை..” என்று இழுத்தபடி மாணவர்களுக்கு மத்தியில் யாரையோ அவர் கண்கள் தேடியது... இரண்டாம் வரிசையின் மூன்றாம் நபருக்கான இடம் காலியாக இருந்தது... ரகுவை அந்த இடத்தில் காணவில்லை... அவன் இருந்திருந்தால், தமிழ் வாக்கியத்தை நிறைப்பதற்கு முன்பே, வெட்சி, கரந்தை தொடங்கி பெருந்திணை வரைக்கும் சொல்லி முடித்திருப்பான்...

“ரகு இன்னிக்கும் வரலையா?” மாணவர்கள் அருகில் வந்துநின்று கேட்டார்...

“இல்ல சார்...”

“நாலஞ்சு நாளா வரலையே, லீவ் லெட்டர் எதுவும் கொடுத்தானா?”

“இல்ல சார்.. இனி வரமாட்டான்... அவங்க அப்பா இப்பதான் டிசி வாங்கிட்டு போறாரு...”

“என்னது?... ஏன்?” அதிர்ச்சி, கேள்விக்குறியை தாண்டியும் சிதறியது...

மாணவர்கள் அவரவருக்குள் கிசுகிசுத்தபடி பேசிக்கொண்டு சிரித்தனர், இதுவரை பதில் சொல்லிக்கொண்டிருந்த மாணவன், எதை சொல்வதென்று புரியாமல் தடுமாறினான்...

“சரி சரி... உட்காரு.... பாடத்துக்கு வரலாம்... வெட்சித்திணை என்றால் ஆநிரை கவர்தல்... அதாவது ஒருநாட்டின் கள்ளர்கள் பகைநாட்டு பசுக்கூட்டங்களை திருடிக்கொண்டு வருவது... இதை அந்த நாட்டினர் மிகப்பெரிய அவமானமாக கருதுவார்கள்... ஒரு போர், தொடங்கும் புள்ளி இதுதான்... அப்படி பசுக்களை களவாடப்போகும் கள்ளர்கள், வெட்சிப்பூவை மாலையாக சூடிக்கொண்டு போவார்கள்...” இதை சொல்லிமுடிப்பதற்குள் தமிழுக்கு மூச்சு வாங்கியது, வார்த்தைகள் கூட கோர்வையாக வரமறுத்தது... தண்ணீர் புட்டியை எடுத்து, சிறிது குடித்துக்கொண்டார்... அடுத்து என்ன?... கரந்தைத்திணை... ஆனால், அதை விளக்குவதற்கான வலு உடலில் இல்லை...

“நேத்து நடத்தின செய்யுளை படிச்சுகிட்டு இருங்க பசங்களா, தலை வலிக்கிற மாதிரி இருக்கு” சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்துகொண்டார்...

தன்னை நினைத்து தமிழுக்கே எரிச்சலாக தோன்றியது... இதென்ன முட்டாள்த்தனம்?.. ரகு இங்கிருக்கும் அறுபது மாணவர்களில் ஒருவன்தான்... இதுவரை ஏழாண்டுகள் அனுபவத்தில் ரகுவை போன்று ஆயிரக்கணக்கான மாணவர்களை கடந்துவந்தவர்தான் தமிழ்.. இப்படி பள்ளியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட பலமாணவர்களை பார்த்து வந்திருந்தும், ரகு பள்ளியை விட்டு விலக்கப்பட்டது கொஞ்சமும் எதிர்பாராதது என்பதால் தமிழுக்கு கூடுதல் கவலையாக இருக்கலாம்... அதற்காக பாடத்தை இடைநிறுத்தி கவலை கொள்ளும் அளவிற்கு போவது தன் மீதே கோபத்தை ஏற்படுத்தியது... இன்னுமே இதயம் அதிவேக பாய்ச்சலில் துடித்துக்கொண்டுதான் இருக்கிறது...

ரகு மிகச்சிறந்த அறிவாளிதான்... அறிவாளி என்றால், மெக்காலே கல்வியில் படித்ததை சிறப்பாக வாந்தி எடுத்து, நூறு மதிப்பெண்கள் பெறுபவன் இல்லை... பாடங்களை தாண்டிய பல்துறை அறிவு பெற்றவன்... எல்லோரிடத்திலும் இயல்பாக பழகுவான், சக மாணவர்களுக்கு நிறைய உதுவுவான், கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமானவன் என்று ரகுவை தரம் உயர்த்த ஆயிரம் விஷயங்கள் உண்டு...

அப்படி பாராட்டியே பழக்கப்பட்ட ஒருவனை, அதே வாய்களால் அவ்வளவு எளிதாக தூற்றவும் முடியும் என்பதை கடந்த மாதத்தின் ஒருநாளில்தான் உணர்ந்தார் தமிழ்...
பள்ளி முழுவதிலும் எங்குபார்த்தாலும், ரகுவைப்பற்றிய பேச்சுகள்... கிசுகிசுப்பாகவும், ரகசியங்களாகவும், சந்தேகங்களாகவும் பேச்சுகள் பல ரூபங்களில் ஒலித்துக்கொண்டிருந்தன...

ஆசிரியர்கள் அறையிலும் அதே பேச்சு, மெல்லிய அதிர்ச்சி, அதனை தொடர்ந்த சிரிப்பலைகள்...

“என்ன சார் விஷயம்?... நம்ம ப்ளஸ் டூ ரகு பற்றி என்னென்னமோ பேசிக்கறாங்க... என்னாச்சு?” ஆர்வத்தில்தான் கேட்டார் தமிழ்...

கணக்கு ஆசிரியையின் காதில் விழாதபடி தமிழின் காதருகே வந்த ஆங்கில ஆசிரியர், “நம்ம ரகு ஹோமோசெக்ஸ் பையனாம்ங்க...” என்றார்...

“என்னது?” முகம் சுளித்து அதிர்ச்சியாக கேட்டார் தமிழ்...

“அட ஆமா சார்.. ஆம்பளையும் ஆம்பளையும் ஒன்னு சேருவாங்கள்ல அதாங்க ஹோமோசெக்ஸ்”

“அது தெரியும் சார்... அவன் அப்டி பையன்குறது வெளில எப்டி தெரிஞ்சுது?”

“அவனே நம்ம பயாலஜி சார் கிட்ட சொல்லிருக்கான்... அதுக்கு சயின்ஸ் ரீதியா என்ன காரணம்னு துணிச்சலா கேட்ருக்கான் சார்...”

இந்த நாள் தொடங்கி இன்றுவரையான ஒருமாத காலமும், அந்த பள்ளியின் பிரதான பேச்சே ரகுவின் பாலீர்ப்பு பற்றிதான்... 

அதற்குமேல் வகுப்பறையில் அமர்ந்துகொண்டு இதைப்பற்றி சிந்திக்க மனமில்லாமல், எழுந்து ஆசிரியர்களின் ஓய்வறைக்கு சென்றார்... ஏற்கனவே அங்கு அறிவியல் ஆசிரியர் விடைத்தாள்களை திருத்திக்கொண்டிருந்தார்...

தமிழின் துவண்ட நடயைக்கண்டு, “என்ன தமிழ் சார், தள்ளாடி வர்ற மாதிரி இருக்கு?” நலம் விசாரித்தார்...

“தமிழைத்தான் எல்லாம் சேர்ந்து தடுமாற வச்சிட்டிங்களே!” சிலேடையாக பதில் சொல்ல, அறிவியல் சிரித்துக்கொண்டார்...

“ஒண்ணுமில்ல சார், இன்னும் மூணு மாசத்துல எக்ஸாம்... தமிழுக்குன்னு இருந்த வகுப்பெல்லாம் கட் ஆப் மார்க்கை காரணம் காட்டி, நீங்கல்லாம் புடுங்கிட்டிங்க... அதான் கடைசி நேரத்துல சிலபஸ்  முடிக்கிற டென்ஷன், அதனால லேசா தலை வலிக்குற மாதிரி இருக்கு...” காரணத்தையும் சில நொடிகள் இடைவெளியில் தமிழே சொல்லிவிட்டார்...

“விடுங்க சார், இதுக்கல்லாம் எதுக்கு டென்ஷன்? கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க சார்... ப்ளஸ் டூ பசங்கன்னாலே தலைவலிதான்... இன்னிக்குதான் ஒரு தலைவலிய தலைமுழுகியாச்சே, இனி நமக்கும் டென்ஷன் குறையும்” மீண்டும் விடைத்தாள்களில் சிவப்பு மையால் மதிப்பெண்ணிட்டபடியே சொன்னார் அறிவியல்...

“யாரை சொல்றீங்க?”

“அந்த ரகுன்னு ஒரு பையன் இருந்தான்ல, அவன்தான்...”

“நம்ம ரகுவரனா?”

“அந்த ஹோமோசெக்ஸ் பார்ட்டி சார், அவன்தான்... இப்போதான் அவனுக்கு டிசி கொடுத்து அனுப்பிருக்கார் நம்ம பிரின்சிபால்...” சிரித்தார்...

“நிறுத்துங்க சார்... அதென்ன சார் ஹோமோசெக்ஸ் பார்ட்டி?.. அவனை அடையாளப்படுத்த உங்களுக்கு வேற விஷயமே இல்லையா?... பயாலாஜி டீச்சரா இருந்துட்டு, எப்டி சார் உங்களால இப்டியல்லாம் பேசமுடியுது?” பேச்சில் கொஞ்சம் கடுமை வெளிப்பட்டது...

“என்ன தமிழ் ஓவரா பேசுறீங்க?... இல்லாத விஷயத்தை ஒன்னும் நான் சொல்லலையே?... அவன் ஹோமோசெக்ஸ்’னு அவனே என்கிட்டே சொன்னதுதானே சார்...”

“எதுக்கு சார் சொன்னான்?... அவனுக்கு ஏதோ குழப்பம் இருந்ததால சொன்னான், நியாயமா என்ன பண்ணிருக்கணும் நீங்க?... அவன்கிட்ட பேசி, என்ன பிரச்சினைன்னு விசாரிச்சு தீர்த்திருக்கணும்.... ஆனா நீங்க பண்ணது என்ன?... அவன் சொன்ன அந்த விஷயத்த அப்டியே ஸ்கூல் முழுக்க பரவவிட்டிங்க, இன்னிக்கு அவன் வாழ்க்கையே நிர்மூலமா ஆகுற அளவுக்கு ஆனதுக்கு நீங்கதான் காரணம்...”

“அவன் ஒழுக்கமான ஆளா இருந்தா நான் ஏன் வெளில சொல்லப்போறேன்?... அந்த கருமத்த எல்லார்கிட்டயும் சொன்னது தப்பில்ல சார்...”

“அவன் ஒழுக்கமில்லாதவனா?... ஏன், உங்க கைய புடிச்சு இழுத்தானா?... யாரும் இல்லாதப்பா கணக்கு டீச்சரை கண்ட இடத்துல தொட்டு விளையாடுறீங்களே, அந்த மாதிரி எதாச்சும் பண்ணானா?... முதல்ல உங்க அழுக்க கழுவிட்டு, அடுத்தவன குற்றம் சொல்லுங்க சார்...” தமிழின் கண்கள் நெருப்பை கக்கின....

“இதான் சார் உங்க லிமிட்.... இதுக்கு மேல எதாச்சும் பேசுனா, உங்க மேல கம்ப்ளெயின்ட் கொடுக்குற மாதிரி ஆகிடும்” அறிவியல் பதற்றமும் கோபமும் கலந்த பாவனையை வெளிப்படுத்தினார்...

“புகார் கொடுங்க சார்... என்னையும் வேலைய விட்டு துரத்துங்க.... நீங்களும், இப்டி அடுத்தவங்க மனசை புரிஞ்சுக்காம கஷ்டப்படுத்துறவங்களும் மட்டும் நிம்மதியா இருங்க...”

“ஹலோ தமிழ்... அந்த பையனை நான் ஒன்னும் டிசி கொடுத்து அனுப்பல, மேற்கொண்டு அதைப்பற்றி கேட்க, துணிச்சலிருந்தா பிரின்சிபல போய் பாருங்க...” சொல்லிவிட்டு சட்டென எழுந்து கோபமாக அந்த அறையைவிட்டு வெளியேறினார் அறிவியல்... 

தமிழ் கோபத்தின் உச்சியில் இருந்தார்... கோபம் மட்டுமல்லாது அதன் வழித்துணைக்கு ஆற்றாமையும், கவலையும் இணைந்துகொண்டது... ஓய்வெடுக்க விருப்பமில்லை, எவரிடத்திலாவது கோபத்தை வெளிப்படுத்தணும்... அதுதான் சரி, ஏன் ப்ரின்சிப்பால்’இடம் இதைப்பற்றி கேட்கக்கூடாது... பள்ளியை விட்டு விலக்கிய அவரிடமே, அந்த செயலுக்கான நியாயத்தை கேட்பதுதான் முறை...

சட்டென முதல்வர் அறையை நோக்கி விரைந்தார்.. வாசலில் பள்ளி முதல்வரின் உதவியாளர் நின்றிருந்தார்...

“உள்ள மீட்டிங்ல சார் இருக்கார்... கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க சார்” என்று கனிவோடு கூற, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார் தமிழ்... 

நினைவுகள் ரகுவை சுற்றியே சுழன்றுகொண்டிருந்தன...

பல நாட்கள் ரகு வகுப்பறையில் தனியே அமர்ந்து அழுதுகொண்டிருப்பதை எதேச்சையாக தமிழ் பார்த்ததுண்டு... ஆனால், இதைப்பற்றி அவனிடம் நேரில் கேட்டிட தயக்கம், நாட்கள் நகர இந்த பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையும் கூட தமிழை பேசவிடாமல் தடுத்தது...

அன்றொருநாள் பள்ளி வகுப்பின் இடைவெளியில் கூட, மாணவர்கள் சிலர் ரெஸ்ட் ரூம் உள்ளே செல்லாமல், வாசலிலேயே நின்று பேசிக்கொண்டிருப்பதை கவனித்தார் தமிழ்... தமிழை பார்த்ததும் பேச்சை நிறுத்திவிட்டு, வணக்கம் வைத்தனர்...

“என்னடா டாய்லட் போகாம வெளில நின்னு பேசிட்டு இருக்கீங்க?..”

“உள்ள ரகு இருக்கான் சார்...” சிரித்துக்கொண்டே சொன்னான் ஒரு மாணவன்...

“அவன் இருந்தா என்ன?... நீங்கபாட்டுக்கு போயிட்டு வரவேண்டியதுதான?”

“ஐயோ பயமா இருக்கு சார்...”

தமிழ் இடிந்துபோனார்... எப்படி இப்படியல்லாம் இவர்களால் கற்பனை செய்திட முடிகிறது?.. இந்த வயதிலேயே இவ்வளவு குரூரமாக சிந்திக்க முடிகிறது... இந்த கற்பனைகள் பள்ளியில் பலநாட்களாக கட்டுக்கதைகளாக கூட வெளிவருவதுண்டு...

“ப்ளஸ் டூ ரகுவரன், யாரோ டென்த் பையன்கிட்ட என்னமோ அசிங்கமா பண்ணானாம்!”

“ரகு நம்ம ஸ்கூல் பஸ் டிரைவர் கூட ரூம்குள்ள தனியா போனான்!”

“ரகு பக்கத்துல யார் உக்காந்தாலும், கைய வச்சு தடவுறானாம்!”

இந்த கதைகளில் சம்மந்தப்பட்ட டென்த் பையன், பஸ் டிரைவர் எல்லாமும் கூட கற்பனையாகத்தான் இருக்கும்... ஆனால், உண்மையைவிட அதிவேகமாக பள்ளிக்குள் பவனி வந்தன இந்த கதைகள்... ரகுவின் தனிமை அழுகைகள் கூட இதன் தொடர்ச்சிதான் என்று எனக்கு தெரியும்... சில நேரங்களில் வகுப்பறை கரும்பலகை முதல் கழிவறை வரை ‘ரகு ஹோமோ’ என்ற வாசகம் எழுதப்பட்டிருப்பதுண்டு... இதை செய்வதல்லாம் யார்? ஒரு தனி மனிதனை கஷ்டப்படுத்தி, அதன்மூலம் அவங்க அடையப்போகும் லாபம் என்ன? எந்த கேள்விக்கும் விடையில்லை...

“தமிழ் சார்... பிரின்சிபால் சார் உங்கள கூப்பிடுறார்!” உதவியாளர் அழைக்க, நினைவை மீட்டார்...

அறையின் கதவை திறக்கும்முன்பே அவசரமாக வெளியேறிய ஏசி குளிர்க்காற்று, தமிழை சில்லிட்டது... அந்த அறைக்குள் அபூர்வமாகத்தான் தமிழ் நுழைந்ததுண்டு... நுழையும்போதே ஒருவித பதற்றம் இயல்பாகவே அவரை தொற்றிக்கொண்டது... குஷன் இருக்கையில் அமர்ந்து ஏதோ கோப்பு ஒன்றை புரட்டிக்கொண்டிருந்தார் முதல்வர்... மிகவும் கண்டிப்பானவர், நேர்மையானவர், பொறுப்பானவர் என்று ‘பாசிட்டிவ்’ இமேஜ்களை மட்டுமே சுமக்கும் அதிசய மனிதர்களுள் ஒருவர்... தும்பைப்பூ வெள்ளை நிற சட்டையும், பழுப்பு நிற பேன்ட்டும், பாக்கெட்டில் சொருகியிருக்கும் பார்க்கர் பேனா, லேசான முன்வழுக்கை... கொஞ்சமும் மாறாமல் அப்படியே இருந்தார், அந்த பலவருடங்களாக நாற்பது வயது மதிக்கத்தக்க பள்ளி முதல்வர்...

“வாங்க தமிழ்.... என்ன விஷயம்?.. க்லாஸ் நேரத்துல பொதுவா வரமாட்டிங்களே?” கைக்கடிகாரத்தை பார்த்தபடி கேட்டார் முதல்வர்...

“ஒண்ணுமில்ல சார்.. ஒரு விஷயம் கேட்கணும்...” தயங்கினார் தமிழ்...

“என்ன விஷயம்?... ஏன் தயங்குறீங்க?... பொங்கல் போனஸ் பத்தி எதுவுமா?... அதல்லாம் கேட்காம கவர் உங்கள தேடி வரும் சார்...”

“ஐயோ அதல்லாம் ஒண்ணுமில்ல சார்... இது நம்ம ப்ளஸ் டூ ஸ்டூடன்ட் பத்தி...”

“சொல்லுங்க... எந்த ஸ்டூடன்ட்?”

“ரகுவரன்னு ஒரு பையன்...”

“ஓஹ்... இப்பதான் அவங்க அப்பாகிட்ட டிசி கொடுத்துவிட்டேன், அவனைப்பத்தியா?...”

“ஆமா சார்...”

“அவனப்பத்தி பேச என்ன இருக்கு?.. அதான் ஒரு மாசமா நம்ம ஸ்கூலே பேசவேண்டிய அளவு பேசிடுச்சே?”

“அதுக்கில்ல சார்... இன்னும் மூணு மாசத்துல எக்ஸாம் வரப்போகுது, இந்த நேரத்துல டிசி கொடுத்திட்டா அவன் வாழ்க்கை ஸ்பாயில் ஆகிடும்!” வார்த்தைகளை மென்று விழுங்கினார் தமிழ்..

“லுக் மிஸ்டர் தமிழ்... அவன் இன்னும் ஒரு மாசம் இங்கிருந்திருந்தா நம்ம ஸ்கூல் பேரு ஸ்பாயில் ஆகிருக்கும்... உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்ல, இப்போ சிட்டிய பொருத்தவரைக்கும் நாமதான் நம்பர் ஒன்... நம்ம காலை வாரிவிட எதாச்சும் சான்ஸ் கிடைக்காதா?ன்னு பல ஸ்கூல்ஸ் காத்திட்டு இருக்காங்க... இந்த நேரத்துல நம்ம ஸ்கூல் பேரு ஒரு அசிங்கமான விஷயத்துல வெளில பேசப்பட்டா, அது நம்ம எதிர்காலத்த ரொம்ப பாதிக்கும்... நாலஞ்சு பேரன்ட்ஸ் கூட இதுபற்றி என்கிட்டே சொல்லிட்டாங்க... அவ்வளவு ஏன், நம்ம டீச்சர்ஸ் பலரே கூட சொன்னபிறகுதான் இந்த முடிவை நான் எடுத்தேன்...” மிகத்தெளிவாக தன் தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தினார் முதல்வர்...

சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு தமிழ், “எல்லாம் எனக்கு புரியாம இல்ல சார்... அவன் கே’ன்ற ஒரு காரணத்துக்காக ஸ்கூலை விட்டு நீக்குறது சரியா?” கேட்டார்...

“அவனைப்பத்தி நிறைய விஷயங்கள் நம்ம டீச்சர்ஸ் சொன்னாங்க தமிழ்”

“எதுக்காவது அவங்ககிட்ட ஆதாரம் இருந்துச்சா?... சம்மந்தப்பட்ட வேற யாராச்சும் புகார் கொடுத்தாங்களா?”

“இல்ல தமிழ்... ரீசண்ட்டா நம்ம தமிழ்நாட்லகூட ஒரு ஹோமோசெக்சுவல் பையன் ஸ்கூல்லயே இன்னொரு ஸ்டூடண்ட்ட கொலை பண்ணினத எல்லாரும் ஸ்ட்ரெஸ் பண்ணி சொல்றாங்க... அந்த மாதிரி எதுவும் நடந்தா...” இழுத்தார்...

“தினமும் நம்ம தமிழ்நாட்ல பொண்ணுகள ரேப் பண்ற ஆண்கள் பத்தி செய்தி பார்த்துட்டுதானே இருக்கோம்... அதனால, ஹெட்ரோசெக்சுவல்ஸ் ஸ்டூடண்ட்ஸ் எல்லாரையும் அனுப்பிட முடியுமா சார்?”

“உங்க லாஜிக் சரி தமிழ்... ஆனாலும், இதைப்பத்தி என் ஒருத்தனால முடிவு எடுக்க முடியாது... எனக்கும் கூட அந்த பையனை அனுப்புறதுக்கு மனசு இல்ல... அனேகமா நம்ம ரெண்டு பேர் மட்டும்தான் இந்த விஷயத்தில அந்த பையன் தரப்புல இருக்கோம், மத்த எல்லாருமே எதிர்தரப்புல இருக்காங்க... ரொம்ப சாரி...” எழுந்து வந்து தமிழின் முதுகில் கைவைத்தபடி தன் இயலாமையை வெளிப்படுத்தினார் முதல்வர்...

“அந்த பையன் பாவம் சார்... இதுவரைக்கும் ஒரு தப்பும் பண்ணாமலேயே நிறைய தண்டனை கெடச்சிடுச்சு...”

“ஒருவேள இன்னொரு தடவை தப்பு நடந்திருந்தா, தண்டனை நமக்குதான் கிடைச்சிருக்கும் தமிழ்”

“நீங்க சொல்றபடி நாளைக்கு அப்டி எதாச்சும் தப்பு நடந்துச்சுன்னா, நம்ம ஸ்கூல் ஆடிட்டோரியம்ல நிக்க வச்சு தப்பு செஞ்சவனை செருப்பால அடிக்கிறேன் சார்... அந்த அளவுக்கு எனக்கு அவன்மேல நம்பிக்கை இருக்கு, அவனுக்காக உங்ககிட்ட நான் பொறுப்பு ஏத்துக்கறேன் சார்...” உணர்ச்சி பெருக்கோடு சொன்னார் தமிழ்...

“ஓகே ஓகே கூல் தமிழ்... நீங்க இவ்வளவு கேட்பதால என்னால முடிஞ்ச அதிகபட்ச உதவி ஒன்னு பண்றேன்... அவன்கிட்டேந்து ஒரு அபாலாஜி லெட்டர் வாங்கிட்டுவாங்க, மறுபடியும் சேத்துக்கறதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்... அந்த மன்னிப்புக்கடிதம் கூட, நம்ம மத்த டீச்சர்ஸ்’ஐ கன்வின்ஸ் பண்ணத்தான்... ஓகேதான தமிழ்?” சிரித்துக்கொண்டே சொன்னார் முதல்வர்...

முதல்வரின் கையைப்பிடித்து அழுத்தி, கண்கள் கலங்க நெகிழ்ந்துபோய் நன்றி சொன்னபடி அங்கிருந்து வெளியேறினார் தமிழ்... இன்னும் ஒருமணி நேரத்தில் பள்ளி முடிந்தபிறகு ரகுவின் வீட்டுக்கு செல்வதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தார்... அதைநினைத்தபோது ஒருபுறம் தான் சாதித்துவிட்டதை போன்ற மகிழ்ச்சியும், மறுபுறமோ இதைப்பற்றி ரகுவிடம் பேசப்போவதை எண்ணி பதற்றமும் ஒருசேர உதறல் உண்டாக்கியது....

ஒருவழியாக மணியும் அடிக்க, பள்ளி மாணவர்களை காட்டிலும் அதிவேக பாய்ச்சலில் நடக்கத்தொடங்கினார்... அருகிலிருக்கும் குடியிருப்பிலிருந்துதான் ரகு பள்ளிக்கு வருவதை பார்த்ததுண்டு, மதிய சாப்பாட்டிற்கு கூட தினமும் கேட்டை தாண்டி செல்வதை தமிழ் கவனித்திருக்கிறார்....

ஆனால், குறிப்பாக யாரிடம் விலாசம் கேட்பது?.. தயங்கி நின்றபோது அவரைக்கடந்த ஒரு எட்டாம் வகுப்பு மாணவன் வணக்கம் வைத்து நகர்ந்தான்...

“ஏய் தம்பி, இங்க ரகுவரன் வீடு எங்க இருக்கு?”

“அந்த பிளஸ் டூ படிக்குறவரா சார்?” கேள்வியை முடிக்கும் முன்பே ஒரு அனத்தல் சிரிப்பு..

“ஹ்ம்ம்...”
 
“அந்த பச்சை கலர் பெயின்ட் அடிச்சிருக்குற வீடு, ஆனா இப்போ அங்க இருக்கமாட்டார்... அந்த காலனிக்கு பின்னாடி கிரவுண்ட் இருக்கு சார், அங்கதான் வேடிக்கை பார்த்துட்டு இருப்பார்” சொல்லிவிட்டு நகர்ந்தான்...

வீட்டுக்குபோய் பெற்றோரை பார்த்து மேலும் குழப்ப தமிழுக்கு விருப்பமில்லை, ரகுவிடமே இதுபற்றி பேசிப்பார்க்கலாம்... விளையாட்டுத்திடலை நோக்கி நடந்தார்...

பள்ளி மாணவர்கள் பலரும் வீட்டிற்கு செல்லாமல் அங்கு பலதரப்பட்ட விளையாட்டுகளை விளையாடிக்கொண்டிருந்தனர்... அருகிலிருக்கும் கல்லூரியில் பயிலும் மாணவர்களும் தனித்தனி இடங்களில் விளையாடினர்... வானத்தை நோக்கி பறந்த பந்துகள் எந்த குழுவினுடையது? என்ற சலசலப்பு அடிக்கடி எழுந்துகொண்டுதான் இருந்தது...

இந்த கூட்டத்தில் ரகுவை எங்கிருந்து தேடுவது? களைப்பாக போய் அங்கிருந்த மரத்தினடியில் அமர்ந்தார்.. பனிக்காலம் என்பதால் ஐந்து மணிக்கே சூரியன் அஸ்தமிக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தது... “அங்கதான் வேடிக்கை பார்த்திட்டு இருப்பார்!” எட்டாம் வகுப்பு மாணவன் சொன்னது தமிழின் காதுகளுக்குள் மீண்டும் ஒலித்தது...

திடலின் சுற்றுப்புறத்தை கண்களால் அளவெடுத்தார்... மெல்ல எழுந்து திடல் ஓரத்திலேயே நடக்கத்தொடங்கினார்... அங்கிருந்த வாகை மரம் ஒன்றின் அடியில் தனியாக ஒரு உருவம் அமர்ந்து நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது... அந்த மரத்தை நோக்கி தன் நடையை வேகப்படுத்தினார்... மரத்தின் அருகே சென்றபோது, அமர்ந்திருப்பது ரகுதான் என்பதை ஊர்சிதப்படுத்திக்கொண்டார்...

தமிழை பார்த்ததும் சட்டென எழுந்தான்.. வணக்கம் வைத்த கைகள் தடுமாறியது, கண்கள் தமிழை நேரப்பார்க்க தயங்கி அலைபாய்ந்தது...

“ரகு, எப்டி இருக்க?” தோள் தட்டி இயல்பாக பேச்சை தொடங்கினார் தமிழ்...

“இருக்கேன் சார்... என்ன இங்க?” இழுத்தான்...

புன்முறுவல் உதிர்த்தபடி அந்த நிழலில் அமர்ந்தார் தமிழ், தன் அருகில் அமருமாறு ரகுவையும் சைகை செய்தார்... ஒருசில அடிகள் தள்ளி ரகு அமர்ந்துகொண்டான், அந்த தூரத்தில் ‘புதிய கட்டுக்கதை உருவாகிவிடக்கூடாது!’ என்கிற எச்சரிக்கை உணர்வு பளிச்சென விளங்கியது...

“ஒண்ணுமில்ல சும்மாதான்... ஏன் நான் விளயாடக்கூடாதா?” சிரித்தார் தமிழ்...


சூழலின் இறுக்கத்தை தளர்த்த முயன்ற தமிழின் அஸ்திரம் வீணாகிப்போனது... ரகு இன்னும் அதே இறுக்கம் கலையாமல் அமர்ந்திருந்தான்...“நான் ஸ்கூல்ல பேசிட்டேன் ரகு... நீ ஒரு மன்னிப்புக்கடிதம் மட்டும் கொடுத்திட்டா, மறுபடியும் சேர்ந்திடலாம்” சுற்றிவளைக்க விரும்பாமல் நேரடியாகவே விஷயத்தை போட்டு உடைத்தார் தமிழ்...

“எதுக்கு சார் மன்னிப்பு? நான் என்ன தப்பு பண்ணினேன்?”

“இந்த லாஜிக் பத்தி எவ்வளவோ பேசிட்டேன் ரகு, வேற வழியில்ல... மூணு மாசம் நீ பல்லை கடிச்சுகிட்டு சகிச்சுக்கனும்... எக்ஸாம் முடிஞ்சதும், போங்கடா!ன்னு போய்கிட்டே இருடா”

“இன்னும் ஒருநாள் அங்க இருந்திருந்தா கூட எல்லாரும் சேர்ந்து என்ன கொன்னிருப்பாங்க சார்... அப்பாவையும் இன்னிக்கு விடல, என்னென்னமோ சொல்லி அழவச்சிட்டாங்க... உடைஞ்சு போய் வீட்ல படுத்திருக்கார் சார்” சொல்லும்போதே அவன் கண்கள் கலங்கியது...

“புரியுது ரகு.. நீ ஒரு தப்பும் பண்ணலைன்னு அப்பாகிட்ட நான் பேசுறேன்...”

“இது அப்பா ஒருத்தருக்கு மட்டும் புரியவைக்குற விஷயம் இல்ல சார்”

“எக்ஸாம்ஸ் முக்கியம் ரகு, அதை நினச்சுப்பாரு”

“அடுத்த வருஷம் ப்ரைவேட்ல எழுதிக்கறேன் சார், ஒரு வருஷத்துல ஒன்னும் உலகம் அழிஞ்சிடாது”

“இப்டி விதண்டாவாதம் பேசுறது அர்த்தமில்லாததுடா... நீ இப்போ வரலைன்னா, உன்னப்பத்தி இவ்ளோ நாள் தப்பா பேசுனவங்க ஜெய்ச்ச மாதிரி ஆகிடும்!”

“இல்ல சார்... அவங்கள எல்லாம் சகிச்சுகிட்டு இன்னும் உயிரோட நிக்குறதே, அவங்க தோத்துட்டாங்கன்னுதான் அர்த்தம்... ஒரு புழுவைப்போல பார்த்தாங்க, வாய்ப்பு கிடச்சா நசுக்கி கொல்லலாம்னு காத்துகிட்டு இருந்தாங்க... அவங்ககிட்டேந்து தப்பிச்சு வந்ததா நினச்சுக்கறேன் சார்” வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டான்...

“சயின்ஸ் சார் மாதிரி ஆளுங்கதான் அப்டி ரகு, உன் நல்லதை நினச்சு பிரின்சிபால் மாதிரி சிலரும் அங்க இருக்கோம்டா...”

“ஹ ஹ ஹா... நல்லத நினச்சா? அந்த பிரின்சிபாலா?” சலிப்போடு சிரித்தான்...

“ஆமா ரகு... அவ்ளோ பேரோட எதிர்ப்பையும் மீறி உன்ன சேர்த்துக்கிறதா உத்தரவாதம் கொடுத்திருக்கார்”

“அந்த உத்திரவாதம் கொடுத்த உத்தமப்புத்திரன் அதைமட்டும்தான் சொன்னாரா?”

“உனக்கு கோபத்துல பாரைப்பத்தி பேசுறோம்னு புரியாம பேசுற!”

“புரியுது சார்... உங்களுக்குதான் அவரைப்பத்தி முழுசா புரியல... அந்தாளுனாலதான் நான் ஸ்கூலுக்கு வாராமலே நின்னது”

தமிழுக்கு குழப்பம் தலைக்கு மேல் நிரம்பி வழிந்தது... “என்ன சொல்ற?.. அவரென்ன பண்ணாரு?”

“ஆமா சார்... என்மேல நிறைய கம்ப்ளைன்ட் வந்திருக்கதாவும், அதுக்கு வார்ன் பண்றதுக்காக ரூம்க்கு வர சொல்லி, அந்தாளு என்னைய சக் பண்ண சொன்னார் சார்...” கொஞ்சமும் சலனமில்லாமல் சொல்லிமுடித்தான்...

“என்னது?... என்ன சொன்னார்?” தமிழ் அதிர்ந்தார்... ஒருவேளை வார்த்தை உச்சரிப்புகளில் ஏதேனும் பிழை இருக்குமோ? என்று மீண்டும் கேட்டார்...

“மண்டி போட்டு சப்புடா’ன்னு சொன்னார் சார்... முடியாதுன்னு புடிச்சு தள்ளிவிட்டு வீட்டுக்கு ஓடிட்டேன் சார்... அப்புறம் ஸ்கூல் பக்கமே வரல.. எங்க நான் உண்மைய யாருக்கும் சொல்லிருவனோன்னு பயந்து இப்போ தூது விட்டிருக்கான்.... அவன் எனக்கு மன்னிப்பு கொடுக்குறானா? வேடிக்கையா இருக்கு சார்!” சொன்னபடி வழிந்த கண்ணீரை பொருட்படுத்தாமல் அங்கிருந்து நகர்ந்தான் ரகு...

வெகுநேரம், தன் கண்களை விட்டு மறைந்தபிறகும் ரகு சென்ற வழியை வைத்த கண் விலகாமல் பார்த்தபடியே நின்றார் தமிழ்... அவருடைய கண்களும் அவரறியாமல் கண்ணீர் சுரந்திருப்பதை சில நிமிடங்கள் கழித்துதான் உணர்ந்தார்...


மறுநாள் காலை,
பள்ளி மாணவர்கள் அணிவகுத்து காலை ப்ரேயருக்காக ஆயத்தமாகினர்... ஆடிட்டோரியம் நடுவில் நின்றபடி மாணவர்கள் சிலரை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார் முதல்வர்...

“நேரா நில்லுங்க பசங்களா... எங்க அந்த பிடி சார்?... நேரமாகுது, சீக்கிரம் அரேஞ் பண்ண சொல்லுங்க!” சத்தமிட்டபடி ஒழுங்குபடுத்தினார்...

“சார்....” யாரோ அழைக்க, திரும்பிப்பார்த்தார் முதல்வர்...

தமிழ்தான் அது... “என்ன தமிழ், அப்பாலஜி லெட்டர்...” வார்த்தைகளை சொல்லி முடிப்பதற்குள், தன வலது கையால் ஓங்கி அவர் கன்னத்தில் அறைந்தார் தமிழ்....

‘பளார்’ சத்தத்தால் ஆடிட்டோரியம் சில நொடிகள் நிசப்தமாகியது, எல்லோர் கண்களும் முதல்வரின் கன்னத்தை கவனித்துக்கொடிருந்தன...

முதல்வரின் காதருகே வந்த தமிழ், “சாரி சார், இன்னிக்கு செருப்பு போட்டுட்டு வரல!” சொன்னபடி அங்கிருந்து விலகினார்.... (முற்றும்)

Sunday 18 January 2015

"Coming Out of the Closet" - பாலீர்ப்பை வெளிப்படுத்துவது ஒரு உளவியல் பயணம்... !


2013ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த 200 மீட்டர் நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும்வரை டாம் லுஷிங்கர்’க்கு தன் பாலீர்ப்பை மறைத்துவாழ்வது அவ்வளவு சிரமமாக இல்லைதான்...  ஆனால், அதன்பிறகு ஒரு பிரபலமாக உருவானபின்பு, தம் ஒருபால் ஈர்ப்பை மறைத்துவாழ அதிக சிரமம் அடைந்தார் என்றுதான் சொல்லவேண்டும்... ஊடகங்களின் பார்வை, சமூக தளத்தில் பிரபலம் என்கிற பரிச்சயம், ரசிகர்களின் துரத்தல்கள் என்று டாம் லுஷிங்கர் சந்தித்த புதுவிதமான அழுத்தங்களால், அதன்பிறகு நடந்த ஒருசில போட்டிகளில் அதிர்ச்சி தோல்விகளை சந்தித்தார்... 2016ஆம் ஆண்டில் நடக்க இருக்கின்ற ஒலிம்பிக் போட்டிகளுக்காக தன்னை தயாற்படுத்தக்கூட முடியாத அளவிற்கு, முழுக்கவனமும் பாலீர்ப்பை மறைப்பதிலேயே சிதறிப்போய்விட்டது அவருக்கு... இந்த தருணத்தில்தான் சமீபத்தில் தன்னை சமபால் ஈர்ப்புள்ள நபராக பகிரங்கமாக வெளிப்படுத்திக்கொண்டார் டாம் லுஷிங்கர்... 

“என் கவனம் நீச்சல் பற்றி இருந்ததைவிட, நான் ஒரு கே என்று பிறர் கண்டுபிடித்துவிடுவார்களோ? என்றுதான் எப்போதும் இருந்தது... என்னால் மனதை ஒருமுகப்படுத்தி போட்டிகளில் பங்கேற்கமுடியாததால்தான், சில தோல்விகளை சந்தித்தேன்... சின்ன சின்ன விஷயங்களில் கூட நான் ஒரு கே’ன்னு தெரிஞ்சிடுமோன்னு பயந்தே நாட்களை நகர்த்தியது ரொம்ப மோசமான அனுபவங்கள்.. ஒரு தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தால் கூட அதை பத்து முறையாவது பார்த்தபிறகு, அந்த பேட்டியில் என் பாலீர்ப்பை வெளிப்படுத்தும்விதமாக எதுவும் பேசவில்லை என்பதை உறுதி செய்தபிறகுதான், அதை ஒளிபரப்ப அனுமதிப்பேன்.. அதே போல சமூக வலைதளங்களில் நான் போடும் ஸ்டேட்டஸ்களை ஒரு இருபது முறையாவது படித்துபார்த்துவிட்டுதான் பதிவிடுவேன்... இப்படி எல்லா விஷயங்களிலும் அதீத குழப்பம் உண்டாகி, எப்போதும் ஒருவித பதற்றத்திலேயே இருப்பதாக உணர்வேன்... இதே நிலை தொடர்ந்தால் என் ஒலிம்பிக் கனவும் கனவாகவே போய்விடும் என்பதால்தான் என்னை வெளிப்படுத்திக்கொண்டேன்... இப்போ ரொம்ப நிம்மதியா உணர்கிறேன், இனி இரட்டை வாழ்க்கை வாழவேண்டாம்... இப்போதான் ஏதோ புது உலகத்திற்கு வந்ததை போல உணர்கிறேன், இந்த உலகத்தில் குழப்பங்களுக்கு இடமே இல்லை... இனி ஒலிம்பிக் போட்டிகளை வெல்வது மட்டுமே என்னுடைய ஒரே குறிக்கோளாக இருக்கும்” என்று உற்சாகம் ததும்ப டாம் லுஷிங்கர் சொல்லி முடித்தார்...
தம்மை வெளிப்படுத்த நினைத்தபோது, முதலில் தான் ஒரு கே என அவருடைய அம்மாவிடம்தான் வெளிப்படுத்தினார்...

சோகங்கள் அத்தனையையும் கண்ணீராக வெளியேற்றி அழுதபடியே அந்த தாயிடம், “அம்மா, எனக்கு இதை சொல்றதுக்கு ரொம்ப பயமா இருக்கு... நான் ஒரு கே” என்றார்..

“நாங்க 23 வருஷங்களா வளர்த்த அதே பையன்தானே நீ?” என்றார் அம்மா...

“ஆமா...”

“அப்போ நீ என்னவாக இருந்தாலும் எங்க பிள்ளைதான் டாம், கவலைப்படாதே!” என்ற பதிலால் புது உத்வேகத்தையும் துணிச்சலையும் பெற்ற டாம், தன்னை வெளிப்படையாக சமபால் ஈர்ப்புள்ள நபராக ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்....

ஒரு பிரபலம், அதுவும் அமெரிக்கா போன்ற விழிப்புணர்வுமிக்க நாட்டில் தம்மை வெளிப்படுத்துவதில் இவ்வளவு குழப்பங்கள், தன்னை சமபால் ஈர்ப்பு நபராக மறைத்து வாழ்வதில் இவ்வளவு இடர்ப்பாடுகள் என்றால், “வெளிப்படுதல்” அவ்வளவு சிரமமான விஷயமா?... முதலில், இந்த வெளிப்படுதல் (Coming Out) என்றால் என்ன? என்பதை கொஞ்சம் விளக்கமாகவே பார்த்தால், அதனுள் இருக்கும் சிக்கல்களை நம்மால் உணரமுடியும்…

தனிச்சிற்றறையிலிருந்து வெளிப்படுதல் (Coming Out of the Closet) என்ற பதத்தின் சுருக்கமே “வெளிப்படுதல்” (Coming Out) என்று பரவலான பேச்சுவழக்கு சொல்லாகிவிட்டது... ஒரு நபர் தன்னுடைய நிஜமான பாலீர்ப்பை வெளிப்படுத்தும் நிகழ்வை இப்படி குறிப்பிடுகிறார்கள்... எதிர்பால் ஈர்ப்பே பெரும்பான்மை சமூகத்தின் ஈர்ப்பாக இருக்கின்ற சூழலில், ஏனைய சிறுபான்மை பாலீர்ப்புகளை (சமபால்/இருபால் ஈர்ப்புகள், ஏசெக்சுவாலிட்டி, பான்செக்சுவாலிட்டி) கொண்டவர்கள், சமூகத்தின் மாறுபட்ட மனப்போக்கையும் தாண்டி, தம்மை வெளிப்படுத்தும் அந்த நிகழ்வு சமீபகாலங்களில் அதிகரித்துவருகிறது...

இது ஏதோ “காபி சாப்பிட போறேன்!” என்பது போல சர்வ சாதாரணமாக சொல்லிவிடக்கூடிய விஷயம் இல்லை, ஒருநபர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் நிகழ்வானது மிகப்பெரிய உளவியல் பயணத்தின் இறுதியில்தான் நிகழ்வதாக வல்லுனர்கள் கூறுகிறார்கள்...

19ம் நூற்றாண்டில், அதாவது 1869ஆம் ஆண்டே இத்தகைய வெளிப்படுதல் பற்றி “தன்னைத்தானே அடிமைப்படுத்திய நிலையிலிருந்து விடுதலை” என்று பிரபல சமூக ஆர்வலர் ‘கார்ல் என்ரிக்’ கூறியுள்ளார்...  மேலும், “சமபால் ஈர்ப்பு நபர்கள் தங்கள் பாலீர்ப்பை மறைத்து வாழ்வதுதான், சமூகத்தில் பாலீர்ப்பு பற்றிய விழிப்புணர்வுக்கு மிகப்பெரிய இடையூறாக இருக்கிறது... அதனால் அந்த அடிமைத்தளையிலிருந்து வெளிவர, முதலில் நம்மை நாம் வெளிப்படுத்துவோம்!” என்ற சிம்ம கர்ச்சனையை அப்போதே உதிர்த்து, இந்த வெளிப்படுதல் பற்றிய முதல் விதையை விதைத்தவர் அவரே... அந்த விதை ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகள் கழித்து இப்போது விருட்சமாக நிற்க மாக்னஸ் ஹர்ஷ்பீல்ட் தொடங்கி எத்தனையோ லட்சக்கணக்கானோர் உழைத்தனர் என்பதையும் நாம் நினைவில் நிறுத்த வேண்டும்...

சரி, முதலில் நாம் சொன்ன ஒருவிஷயத்தை அப்படியே விட்டுவிட்டோம்... அது என்ன வெளிப்படுதல் ஒரு உளவியல் பயணம்னு சொல்றாங்க? என்ற கேள்வி நமக்கு எழலாம்... எதிர்பால் ஈர்ப்பை இயல்பான ஈர்ப்பாக கருதுவதாலும், ‘ஹோமோபோபியா’ எனப்படுகிற சமபால் ஈர்ப்பு நபர்கள் மீதான வெறுப்புணர்வு மனநிலை உண்டாகிவிட்டதாலும், சமபால் ஈர்ப்பு நபர்களை ஒரு குழுவாக மட்டுமே இந்த உலகம் பார்க்கும் நிலை உண்டாகிவிட்டது...

தன் சுயபாலீர்ப்பையே அறியாத சமபால் ஈர்ப்பு நபர்களும் இன்னும் வாழ்கிறார்கள், தன் பாலீர்ப்பை பிறரிடம் வெளிப்படுத்தாத சமபால் ஈர்ப்பாளர்களும் நிறைய இருக்கிறார்கள்... இப்படி வெளியுலகத்திற்கு அடையாளம் தெரியாத பாலீர்ப்பு சிறுபான்மையினர்களின் இருப்பால், அப்படி சமபால் ஈர்ப்பு நபர்கள் சொற்ப அளவில் இருப்பதை போன்ற ஒரு மாயை உண்டாகிவிட்டது... 

ஆக, இத்தகைய எதிர்மறையான சமூக சூழலுக்கு மத்தியிலும், தம் குடும்பம், சுற்றம், நண்பர்கள் ஆகியோரது ‘இயல்பு’ உலகத்திலிருந்து தனியே இருப்பதை போன்ற உணர்வும் கண்டிப்பாக ஒருவரை வெளிப்படுத்த தடையாக இருக்கும்... தாம் வெளிப்பட்டால் தன்னை எல்லோரும் ஒதுக்கிவிடுவார்களோ என்கிற பய உணர்வு, பணியிடத்தில் சிக்கல் வருமோ? என்கிற தயக்கம், சட்டம் மற்றும் சமூக அழுத்தங்கள் சிக்கலாக உண்டாகுமோ? என்கிற குழப்பம், பிறரால் வெறுக்கப்படுவோமா? என்கிற அச்சம் என இன்னும் ஆயிரம் காரணங்கள் ஒருவர் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளாமைக்கு சொல்லிக்கொண்டே போகலாம்... இப்படியோர் சூழலிருந்து ஒருவர் தம்மை மீட்டு, வெளிப்படுத்திக்கொள்வது என்பது நிச்சயம் ஒரு உளவியல் பயணமாகத்தான் இருக்கும்...

அந்த பயணத்தின் முதல் புள்ளியே, “தம்மை தன்னிடமே வெளிப்படுத்திக்கொள்வது” (Coming Out to Oneself) எனப்படுகின்ற சுய ஏற்புதான்... ஆம், முதலில் நம்முடைய பாலீர்ப்பு பற்றிய சிறிதும் குழப்பமில்லாத, தெளிவான மனநிலை நமக்கு உண்டாக வேண்டும்... அந்த பாலீர்ப்பை நாம் முழுமையாக ஏற்கவேண்டும்.. இந்த சுய அங்கீகாரம் என்பது கண்டிப்பாக நம்மை உளவியல் ரீதியாக பலமாக்கும்... ஆகையால் முதலில் நம்மை நம்மிடம் வெளிப்படுத்திக்கொண்ட பிறகே, இந்த பயணத்தின் அடுத்தக்கட்ட நகர்வு நமக்கு சாத்தியம்...

ட்ரைடன் என்ற அறிவியலாளர் இந்த வெளிப்படும் நிகழ்வு ஆறு சிக்கலான புள்ளிகளை கடந்த பிறகே சாத்தியம் என்கிறார்... பல அறிஞர்களும் வெளிப்படுதல் பற்றிய பயணத்தின் படிநிலைகள் பற்றிய பலவிதமான ஆய்வுகளை வெளியிட்டாலும், பலராலும் ஏற்கப்பட்ட மாதிரி படிநிலை ஆய்வின் முடிவை ட்ரைடன்தான் கண்டுபிடித்தார்...

1)      பாலீர்ப்பு அடையாள குழப்பம்..
2)      பாலீர்ப்பு அடையாள ஒப்பீடு...
3)      பாலீர்ப்பு அடையாள சகிப்பு...
4)      பாலீர்ப்பு அடையாள அங்கீகரிப்பு...
5)      பாலீர்ப்பு அடையாள பெருமிதம்...
6)      கூட்டிணைந்து செயல்படுதல்...

என்கிற ஆறு படிநிலைகளின் முடிவில்தான்  எந்தவொரு நபரும் வெளிப்படுவது சாத்தியம் என்கிறார்கள்...

சமீப காலங்களில் நம் நாட்டில் சமபால் ஈர்ப்பு நபர்கள், தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்துவருவதை பரவலாக காணமுடிகிறது... இதனை ஒரு வரவேற்கத்தக்க மாற்றம் என சொல்லலாம்... சட்டமும் சமூகமும் நமக்கு எதிராக இருக்கின்ற சூழலிலும் இத்தகைய வெளிப்படுத்தல்கள் நிச்சயம் நம்மவர்களின் மனவுறுதியை காட்டுவதாகவே இருக்கிறது... இனி வரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நிச்சயம் அதிகரிக்கும், அதன்வழியே கூட சமுதாய மாற்றத்திற்கான வழிபிறக்கும் என நினைக்கிறேன்..

நம்முடைய பாலீர்ப்பை வெளிப்படுத்திக்கொள்ளாமல், மறைத்து வாழும் அந்த இரட்டை வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது? என்பது நாம் எல்லோரும் அறிந்ததே... சிலர் இப்போது அதிலிருந்து விடுபட்டிருக்கலாம், பலர் இன்னும் அந்த வாழ்க்கையை தொடர்ந்துகொண்டுதான் இருக்கக்கூடும்... அந்த வலி, ஒவ்வொரு நிமிடமும் நம்மை சுற்றி இருக்கிறவர்களை ஏமாற்றிக்கொண்டு வாழ்கிறோமே! என்கிற விரக்தி, நம்மைப்பற்றி தெரிந்துவிடுமோ? என்கிற பயம் என்று எந்த நிலையிலும் ஒருவித பதற்றத்தை சுமந்த வாழ்க்கை நம்மில் பலருக்கு பழகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்...

சரி, வெளிப்படுதல் எல்லோருக்கும் சாத்தியமா? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்... கொஞ்சம் சிக்கலான கேள்விதான் என்றாலும், அதற்கு பதில் அவரவர் வாழும் சூழலை பொறுத்தே தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதுதான் என் கருத்து...

“அப்பா நான் ஒரு கே!” என்று சிலருக்கு காபி சாப்பிடுவதை போல, வெளிப்படுதலும் சாத்தியமாகலாம்... ஆனால், பலருக்கும் அப்படியான வாய்ப்புகள் இல்லைதான்... அதற்கு சிலவிஷயங்களை பரிசீலித்த பிறகு, இந்த வெளிப்படுத்தலை நடைமுறைப்படுத்துவது நல்லது... 

·        முதலில் யாரிடம் நம்மை வெளிப்படுத்தப்போகிறோம்? என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும்...
·        நீங்கள் வெளிப்படுத்த இருக்கின்ற நபருக்கு மாறுபட்ட பாலீர்ப்புகளை பற்றிய தெளிவு இருக்கிறதா? என்பதை முன்பே சோதித்து பார்த்திருக்கவேண்டும்...
·        உங்களை வெளிப்படுத்திக்கொள்ளும்போது, நீங்கள் வெளிப்படுத்தும் நபர் ஆயிரம் கேள்விகளை உங்கள் முன் வைக்கலாம்... அந்த ஆயிரம் கேள்விகளுக்கான பதில்களை பெற்றிருக்கும் அளவிற்கு, உங்களது பாலீர்ப்பை பற்றிய புரிதல் உங்களுக்கு இருக்கவேண்டும்...
·        நண்பர்களிடம் சிலநேரம் வெறுப்பை சந்திக்க வாய்ப்பிருக்கிறது, சிலருக்கு குடும்பத்தினரிடம் கடுமையான சொற்கள், தாக்குதல்கள்கூட பெற்றிட வாய்ப்பிருக்கிறது... இந்த எதிர்ப்புகளை சமாளிக்கும் அளவிற்கான மனவுறுதியை நீங்கள் பெற்றிருக்க வேண்டும்...
·        கோபமோ, பதட்டமோ பட்டிடாமல் உங்கள் தரப்பு நியாயங்களை அவர்கள் ஏற்கும் வண்ணம் நளினமாக வெளிப்படுத்தவேண்டும்... சில சென்டிமென்ட் வசனங்கள், ஒன்றிரண்டு துளிகள் கண்ணீரை கடைசி அஸ்திரமாக கையில் எப்போதும் வைத்திருங்கள்...

மேற்சொன்ன விஷயங்களை கணக்கில்கொண்ட பிறகே வெளிப்படுத்தும் எண்ணத்தினை செயல்வடிவமாக்குங்கள்... கண்டிப்பாக இது மிகப்பெரிய சவால்தான், என்றாலும் கூட நாம் நாமாக இருக்க சிலநேரங்களில் இந்த கடினமான பாதையில் பயணிக்க வேண்டியுள்ளது...

ஹம்சபார் ட்ரஸ்ட்டின் நிறுவனர் அசோக் ரா கவி மிகப்பிரபலமான, பாலீர்ப்பு சிறுபான்மையினருக்கான போராளி... இந்த வெளிப்படுத்தலை பற்றி அவர் கூறும்போது, “இந்தியாவை பொறுத்தவரையில் தமது பாலீர்ப்பை ஒருவர் வெளிப்படுத்துவது கொஞ்சம் சிக்கலான விஷயம்தான்.. அந்த நபர் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும், மிகச்சிறந்த விஞ்ஞானியாக இருந்தாலும் கூட தம்மை வெளிப்படுத்திய பிறகு, அவருக்கான பிரதான அடையாளமாக அவருடைய பாலீர்ப்பே இருந்துவிடும்... நம்மை பிடிக்காதவர்கள் நம்மைப்பற்றிய கற்பனை கதைகளை கட்டிவிட நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்... இவையல்லாம் சமாளித்து வாழ்வதென்பது கொஞ்சம் சிரமம்தான் என்றாலும், நாம் நாமாகவே வாழ்வது அந்த சிரமத்தை தாண்டிய மகிழ்ச்சியை நமக்கு உண்டாக்கும்” என்கிறார்...

அசோக் ரா கவி சொல்வது மிகச்சரியான பார்வை... இன்னும் முழுமையான பாலீர்ப்பு பற்றிய விழிப்புணர்வு இங்கே உண்டாகாத நிலையில், இத்தகைய சிக்கல்கள் எழுவது இயற்கைதான்... அதேநேரத்தில் சமீபத்தில் அதிகரித்துவரும் மாற்றுப்பாலீர்ப்புகள் தொடர்பான விழிப்புணர்வுகள் நிச்சயம் எதிர்வரும் காலங்களில் நிறைய நபர்களை வெளிப்படுத்த வைக்கும் என்று நம்பலாம்...

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 11ம் திகதியை “தேசிய வெளிப்படுத்தும் நாள்” என உலக அளவில் நம்மவர்கள் கடைபிடிக்கிறார்கள்... அந்நாளில் உலகின் பல்வேறு நாடுகளிலும் நம்மவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்வதும், பேரணிகளில் கலந்துகொள்வதும் அதிகரித்துவருகிறது... மதம், இனம், காதல், பாசம் என எல்லாவற்றையும் வெளிப்படுத்த ஒருநாள் கொண்டாடப்படும்போது, நமக்காக, நம்மை நாமாக வெளிப்படுத்திக்கொள்ள இந்த நாளை அனுசரிப்பதில் தவறில்லை...

முன்பு சொன்ன ஒருவிஷயத்தை மீண்டும் சொல்லி, கட்டுரையை நிறைவு செய்கிறேன்... ஒருவர் தம் பாலீர்ப்பை வெளிப்படுத்திக்கொள்வதென்பது ஒருவித உளவியல் பயணம்... அந்த பயணத்தில் நமக்கு மட்டுமல்லாது, நம்மை சார்ந்தவர்களுக்கும் பெரிய அளவில் விபத்துகள் ஏற்பட்டு, மனக்காயங்கள் உண்டாக்கிடாமல், சூழலை உணர்ந்து பயணியுங்கள் என்பதுதான் என் ஆலோசனை... அதை கவனத்துடன் நிறைவேற்றிவிட்டால் நிச்சயம் உங்கள் வாழ்க்கை ஒரு பசுமையான பாதையில் பயணிக்கும் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை...