Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday 23 February 2014

"ஓரினச்சேர்க்கை - ஒருபால் ஈர்ப்பு".... இரண்டும் ஒன்றில்லை, வெவ்வேறானவை...!


“உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் ஓரினச்சேர்க்கை எண்ணம் புதைந்திருக்கும்.... அதற்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும்போது மட்டுமே அது வெளிப்படும்” என்ற சிக்மண்ட் ப்ராயிட் (sigmond freud) கருத்தும், “பெரும்பாலான ஆண்கள் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டவர்கள்” என்று தன் ஆய்வின் முடிவில் கின்சே (Alfred kinse) வெளிப்படுத்திய கருத்தும் நாம் ஆழமாக கவனிக்க வேண்டிய கருத்துகள்.... நூற்றாண்டுகள் கடந்தும் அவர்கள் சொன்ன இந்த கருத்துகளின் உண்மைத்தன்மையை நம்மில் நிறைய பேர் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனம்.... வெளிப்படையாக பார்க்கும்போது இரண்டு கருத்துகளுமே “இது என்ன முட்டாள்த்தனமான கருத்து!” என்றே சிந்திக்க தோணும்.... ஆனால், அந்த முட்டாள்த்தனமான கருத்துக்குள் ஆழப்புதைந்திருக்கும் ஒருசில அறிவியல் உண்மையையும் நாம் பேசுவதற்காகத்தான் இந்த கட்டுரை...
அதற்கு முன்பு “ஒருபால் ஈர்ப்பு” என்பதையும் “ஓரினச்சேர்க்கை” என்பதையும் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியமும் இங்கே உள்ளது.... ஓரினச்சேர்க்கை என்பது ஒரு செயல் சார்ந்த விஷயம்... ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் எவ்வித உணர்வு ரீதியிலான தொடர்புமின்றி, நிகழ்கால காம எண்ணத்தின் வடிகாலாக உடலுறவு கொள்ளும் அந்த செய்கைக்கு பெயர்தான் ஓரினச்சேர்க்கை... இந்த செய்கையில் கே, ஸ்ட்ரைட், பைசெக்சுவல் போன்ற பாகுபாடுகள் கிடையாது... அதே நேரத்தில் ஒருபால் ஈர்ப்பு என்பது உணர்வு சார்ந்த விஷயம்... உடலுறவுக்கு அப்பாற்பட்டு, தன் பாலினத்தை சேர்ந்த நபருடன் உணர்வுப்பூர்வமாக வாழ எத்தனிக்கும் நபர்கள்தான் ஒருபால் ஈர்ப்பாளர்கள்.... முன்னது சூழலின் விளைவு, பின்னது மரபணு சார்ந்த வெளிப்பாடு... பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு ஆணுடன் இன்னொரு ஆணின் உடல் ரீதியான தொடர்புக்கு பெயராக “ஓரினச்சேர்க்கை” என்ற பெயரை சூட்டினர்... ஆனால், அப்போது அந்த சேர்க்கைக்கு பின்னால் ஒரு மரபணு சார்ந்த விஷயம் இருப்பதை அறிவியல் கண்டுபிடிக்கவில்லை... ஆனால், இரண்டு ஒருபாலினத்தவரின் உறவுக்கு பின்னால் அறிவியலும், மரபணுவும் இருப்பதை உணர்ந்தபிறகும் பழைய “ஓரினச்சேர்க்கை” பதத்தையே அந்த ஈர்ப்புக்கு இன்றும் பயன்படுத்துவது முறையல்ல என்ற கருத்தின் விளைவாகவே, இப்படி “ஓரினச்சேர்க்கை, ஒருபால் ஈர்ப்பு” என்ற இரண்டு பதத்தையும் வெவ்வேறாக இங்கே நான் சுட்டிக்காட்டியுள்ளேன்....
இப்போ ப்ராயிட் மற்றும் கின்சே சொன்ன கருத்துகள் உங்களுக்கு புரிந்திருக்கலாம்... பெரும்பாலான பள்ளி கல்லூரி விடுதிகள், ஆண்கள் மட்டும் தங்கும் விடுதிகள், சிறைச்சாலைகள் போன்ற இடங்களில் நிறைய ஓரினச்சேர்க்கை நிகழ்வுகளை நாம் கண்டிருக்கலாம், கேட்டிருக்கலாம்... அவைகளுள் பெரும்பாலானவை ஓரினச்சேர்க்கை தானே தவிர, ஒருபால் ஈர்ப்பு என்பது அங்கு குறைவுதான்.... இந்தியா போன்ற கலாச்சாரம் காக்கும் நாடுகளில் இன்னும் பதின்ம வயது ஆண்களோடு பெண்கள் பேசுவதை கூட கலாச்சார சீர்கேடாக பார்க்கிறார்கள்... பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆண்களோடு பெண்கள் பேசக்கூட வாய்ப்புகள் குறைவாக உள்ளன.... இப்படிப்பட்ட சூழலில் இயற்கையாக ஒரு பதின் வயது ஆணின் உடலுக்குள் நிகழும் ஹார்மோன் மாற்றத்தின் விளைவான உடல் தேவைகளை பூர்த்தி செய்ய இன்னொரு பெண்ணால் முடியாது.... அப்போ, அந்த காமத்தீயை அணைக்க, தன் பாலினத்தை சேர்ந்த நபரை அணைக்கிறான்... இப்படிப்பட்ட வடிகால்களின் வெளிப்பாடான ஓரினச்சேர்க்கை, பின்னாளில் ஒரு பெண்ணுடனான உறவை அனுபவிக்க தொடங்கிய பிறகு, ஆண்களின் மீதான காம எண்ணம் தொடராமல் நிறுத்தப்பட்டும் விடுகிறது.... அதனால், ஓரினச்சேர்க்கை செய்கையில் ஈடுபடும் எல்லா மனிதர்களும் ஒருபால் ஈர்ப்பு நபர்கள் கிடையாது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்....
இது மனிதர்களில் மட்டுமல்ல, விலங்குகளில் கூட சாதாரணமான ஒன்றுதான்.... ஒருபால் ஈர்ப்பு விலங்குகளுக்கு அப்பாற்பட்டு, நாம் நிறைய நேரங்களில் ஓரினச்சேர்க்கை செயல்களில் ஈடுபடும் விலங்குகளை பார்த்திருப்போம்.... ஒரு ஆண் நாய் இன்னொரு ஆண் மீது படர்வதையும், ஒரு காளை மாடு இன்னொரு காளை மீது பின்னேறுவதையும் நாம் கவனித்திருக்கலாம்.... அவை பெரும்பாலான நேரங்களில் ஓரினச்சேர்க்கை மட்டுமே தவிர, ஒருபால் ஈர்ப்பு கிடையாது... நான் மேலே மனிதர்களுக்கு குறிப்பிட்ட “வடிகால்” காரணம் தவிர்த்து, “இதை முயற்சி செஞ்சு பார்ப்போமே!... நல்லாத்தான் இருக்கும்!” என்ற ஒரு ஆர்வத்தின் வெளிப்பாடாக கூட அந்த செய்கைகள் விலங்குகளுக்குள் நிறைந்திருக்கும்....
மதங்கள் உருவாகுவதற்கு முன்பு காணப்படும் பண்டைய கிரேக்க, ரோமானிய, எகிப்து கலாச்சாரங்களில் இப்படிப்பட்ட பாலீர்ப்பு வேறுபாடுகள் நிலவியதில்லை.... இப்போது கலாச்சார ரீதியாக கட்டப்பட்டிருக்கும் ஹோமோபோபிக் நிலைமையின் விளைவால்தான் நம் நாட்டில் கூட தன் பாலீர்ப்பை தானே ஏற்க மறுக்கும் நிறைய நபர்கள் வாழ்கிறார்கள்.... தன் வாழ்வில் வடிகால்களுக்காக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட எண்ணற்ற ஸ்ட்ரைட் நபர்கள்தான், இங்கே “ஒருபால் ஈர்ப்பை” தவறென்று கை நீட்டுகிறார்கள்...
சமீபத்தில் ஒரு ஸ்ட்ரைட் நபரின் வெளிப்படையான, ஓரினச்சேர்க்கை ஆசை பற்றி ஒரு தளத்தில் படித்ததன் விளைவாகத்தான் இந்த கட்டுரை எழுதினேன்.... அந்த நபர் தன்னை ஸ்ட்ரைட் என்று சொல்லிக்கொள்பவர்... திருமணமாகி மனைவியுடன் இனிதாக வாழ்பவர்... ஆனால், அவருக்கு உடலுறவில் ஒரே ஒரு குறை... வாய்வழி புணர்ச்சியில் அந்த நபருக்கு அதிக ஈடுபாடு உண்டு, ஆனால் மனைவிக்கோ அதில் விருப்பமில்லை... ஓரிரு முறை நிர்பந்திக்க, மனைவியுடன் சண்டை வந்துவிட்டதாம்.... அப்போது யோசித்தபோதுதான், இணைய அறிவின் மூலம் “கே தளங்களை” அறிந்தார்... அந்த தளங்களில் இணைந்து தன்னை “ப்யூர் டாப்” என பிரகடனப்படுத்திக்கொண்டு, மற்ற ஆண்கள் மூலம் வாய் வழி புணர்ச்சியை ரசிக்கிறாராம்.... பெரும்பாலும் கட்டிப்பிடித்தல்களை கூட மறுக்கும் அந்த நபரின் ஒரே எண்ணம் வாய்வழி புணர்ச்சி மட்டுமே....
“ஓரல் செக்ஸ் தான் உங்களுக்கு விருப்பம்னா நீங்க உங்க மனைவியை தாண்டி வேற பெண்களை தேடி இருக்கலாமே?” என்றேன் நான்....
“பெண்களோட டேட் போறது ரொம்ப ரிஸ்க் சார்... வெளில தெரிஞ்சா வேற விதமான ப்ராப்லம்ஸ் வரலாம்... இங்க எவ்வளவோ பசங்க இருக்குறப்போ நான் ஏன் பெண்களோட போய் ரிஸ்க் எடுக்கணும்?” என்றார் அவர்....
இப்படி நீங்கள் கடக்கும் எத்தனையோ “ப்யூர் டாப்”களுக்கு பின்னால் இதுபோன்ற ஒரு வித்தியாசமான மனநிலை இருந்திருக்கலாம்...
ஆக, நான் இங்கே தெளிவாக கூற வருவது, “ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் எல்லோரும் ஒருபால் ஈர்ப்பாளர்கள் இல்லை” என்பதுதான்...
அப்போ, “ஒப்பீடு ரீதியாக எதிரின சேர்க்கையை விட, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் நபர்களுக்கு பாலியல் நோய்கள் தாக்கும் ஆபத்து அதிகம்” என்று சிலர் கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த ஆபத்து ஒருபால் ஈர்ப்பு நபர்களால் அல்ல என்பதையும், அது பெரும்பாலும் ஓரினச்சேர்க்கையால் விளையும் ஆபத்து என்பதையும் பொதுத்தளங்கள் உணரவேண்டும்....... அதுமட்டுமல்லாமல், இப்படி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெரும்பாலான ஸ்ட்ரைட் நபர்கள், தங்களுக்கு தோன்றியது போலவே மற்றவர்களுக்கும் ஓரினச்சேர்க்கை ஒரு வடிகால் தேவைதான், அதற்கு எதற்காக உரிமை? சட்டம்? என்றல்லாம் கேட்கிறார்கள்... ஆனால், ஒருபால் ஈர்ப்பு என்பது மரபணு சார்ந்த விஷயம் என்பதையும், அது பிறக்கும்போதே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்றும், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஸ்ட்ரைட் நபர்களுக்கான வடிகால்கலாக இல்லாமல் இது அவர்களின் (கே & லெஸ்பியன்) வாழ்க்கைக்கான அவசியம் என்பதையும் ஒவ்வொரு ஸ்ட்ரைட் நபரும் புரிந்துகொள்ள வேண்டும்...
இன்னொரு விஷயத்தையும் நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்... இப்போது நாம் சட்டரீதியான உரிமைகள் வேண்டும்! என்று போராடுகிறோமே, அந்த போராட்டமெல்லாம் ஓரினச்சேர்க்கை என்கிற செயலுக்கான முன் அனுமதி மட்டுமே...
ஒருபால் ஈர்ப்பாளர்களின் திருமணத்தை ஏற்கும் சட்டம் உருவாக்கப்படும்போது மட்டுமே, அது ஒருபால் ஈர்ப்பு நபர்களுக்கான உரிமை என்று கருதப்பட வேண்டும்....
அதுவரை சட்டப்பிரிவு 377 நீக்கம் என்பதுகூட படுக்கைக்கான உரிமையை கொடுக்குமே ஒழிய, வாழ்வதற்கான உரிமைகள் தொடர்ந்து நசுக்கப்படத்தான் போகிறது... ஆனால், அது நிச்சயம் ஒரு தொடக்கமாக இருக்கும் என்று நீங்கள் எல்லோரும் நம்புவதை போல நானும் நம்புகிறேன்...
“ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் எல்லோரும் ஒருபால் ஈர்ப்பு நபர்கள் இல்லை...!” என்கிற ஆணித்தரமான உண்மையை இன்னொரு முறை அடித்து கூறுவதோடு, கட்டுரையை நிறைவு செய்கிறேன் நண்பர்களே....!

Monday 17 February 2014

"திடீர் காதல்" வலை விரிக்கும், "டீசன்ட்" திருடர்கள்....


“Looking for a Decent, good looking, well educated & talented guy” என்று ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் வரும் ராதிகாவை போல கண்ட இடத்திலும் காதலன்/காமலன் தேடி விளம்பரம் செய்பவரா நீங்கள்?.. அப்போ உங்களுக்கான எச்சரிக்கை பதிவுதான் இது...
என் நண்பரின் நெருங்கிய நண்பரின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு காதல் பயணம் எப்படி விபத்தை நோக்கி சென்றது? என்று சொல்லத்தான் இந்த பதிவு... அந்த நண்பரின் நண்பர் பெயர் சிவா (வழக்கம்போல பெயரை மாற்றித்தான் போட்டுள்ளேன்)... வேறு மாநிலத்தை பூர்விகமாக கொண்ட சிவா, திருச்சியில் பிரபல பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்...
கல்லூரி விடுதியில் தங்கிப்படிக்கும் சிவாவின் ஒரே பொழுதுபோக்கு “காதலன் தேடுவது”.... வழக்கமான கே தளங்களில் வெகுநாட்களாக காதலன் தேடி அலைந்துகொண்டிருந்த சிவாவின் கண்களில் அப்போது பட்டவர் மகேஷ் (இது அந்த நபரின் பிளானட் ரோமியோ பெயர்)... புகைப்பட பரிமாற்றம் சுபமாக நிகழ்ந்ததை தொடர்ந்து அலைபேசி எண்கள் அன்பாக பரிமாறப்பட்டன... நான் மேல் சொன்னதை போல மகேஷ் Decent, good looking, well educated & talented guy தான்... தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி என்று பன்மொழி திறமை பெற்றவர் என்பது நம்ம சிவாவுக்கு கூடுதல் மதிப்பை மகேஷ் மீது ஏற்படுத்திவிட்டது...
நித்தமும் காதல் மொழி திகட்டும் அளவிற்கு தேன் போல பரிமாறப்பட்டதன் விளைவாக மகேஷை முழுமையாக நம்பத்தொடங்கினார் சிவா...
“நாளைக்கு நான் திருச்சி வரேன் சிவா... ஹோட்டல் **********லதான் தங்கப்போறேன்... உன்னை நாளைக்கு சந்திக்கப்போறத நினச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு டியர்...” இப்படி மகேஷ் சொன்ன நாளில் சிவாவிற்கு தூக்கம், பசி எதுவும் தேவைப்படவில்லை.... நாளைய பொழுதிற்கான கற்பனைகளை இன்றே அவர் மனம் உதிர்க்க தொடங்கியது...
மறுநாள் விடியலில் பரபரப்பும் படபடப்புமாக காணப்பட்டார் சிவா... மாலையில் சந்திக்கப்போகும் மகேஷிற்காக தன்னை காலை முதலே தயார் செய்ய தொடங்கிவிட்டார்... மகேஷை பார்த்ததும் ‘என்ன பேசனும்?, முக்கியமா என்ன செய்யனும்?’ என்கிற ஒத்திகையை பலமுறை தன் அறைக்குள் அரங்கேற்றிவிட்டார்....
அந்தி சாய்ந்த அந்த மாலைப்பொழுதில் வழக்கத்தைவிட தன்னை அதிகமாக தயார் செய்தவனாக குறிப்பிட்ட அந்த ஹோட்டலை அடைந்தார் சிவா... நெற்றியில் வழியும் வியர்வை கூட, முகத்தின் பூச்சுகளுக்கு இடையூறு செய்யாவண்ணம் கைக்குட்டையால் அடிக்கடி நெற்றியை ஒற்றிக்கொண்டார்...
அறைக்கதவை திறந்த மகேஷ் முகம் நிறைந்த புன்னகையுடன் சிவாவை உள்ளே வரவேற்றான்... புகைப்படத்தில் பார்த்ததை விட நிறம் மட்டும் கொஞ்சம் மாறியிருந்தது... எவ்வளவுதான் அலைபேசியில் பேசி இருந்தாலும், மகேஷை நேரில் பார்த்தபோது சிவாவிற்கு பேச்சு வரவில்லை... இருக்கையின் நுனியில் அமர்ந்தவாறே பரபரப்பாக காணப்பட்டார்....
“என்ன சிவா இவ்ளோ டென்ஷனா இருக்க?... கூலா இரு டியர்...” என்று சொன்னபடியே சிவாவின் தோளில் மெல்ல தட்டினான் (இதுதான் சிவாவிற்கும் மகேஷிற்கும் நிகழ்ந்த அதிகபட்ச உடல் தீண்டல்!)... அப்படியே அருகில் இருந்த மேசை மீது தயாராக வைக்கப்பட்டிருந்த குளிர்பானத்தை சிவாவின் கைகளில் திணித்து, “இதை குடி சிவா... கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு, அப்புறம் பேசலாம்... அதுக்கப்புறம்.......” என்று கண்ணடித்து சிரிக்க, சிவாவிற்கோ வெட்கம் மலர அவசரமாக குடித்து முடித்தார் அந்த பானத்தை.....
அதன் பிறகு ஐந்து நிமிடங்கள் மகேஷ் ஏனோ தன்னை பற்றியும், தன் திருச்சி வேலையை பற்றியும் தேவையில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தான்.... ஆனால், அந்த ஐந்து நிமிட இடைவெளியை நிரப்பத்தான் மகேஷ் இப்படி சம்மதமில்லாமல் பேசுகிறான்! என்பது சிவாவிற்கு புரிய மறுநாள் ஆகிவிட்டதுதான் கொடுமை....
“சரி, குளிர்பானத்தை குடித்த சிவா அப்புறம் என்ன செஞ்சார்?” னு நீங்க கேட்கிறது எனக்கு புரியுது.... பானத்தை குடித்த ஐந்தாவது நிமிடம் கண்கள் சொருக, மயங்கிய நிலையில் தன்னிலையை இழந்தார் சிவா....
மறுநாள் காலைதான் கண் விழித்தார்... அதுவும் அலைபேசி வெகுநேரம் அடித்த சத்தத்தின் விளைவாகவே கண் விழித்தார்... அறைக்குள் தன்னை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தார்...
“அப்போ மகேஷ்?”
“அவன் எப்பவோ அறையை காலி செய்துவிட்டு போய்ட்டான்...”
“அப்போ சிவாவுக்கு ஒன்னும் ஆகலைல்ல?”
சிவாவிற்கு மகேஷை காணவில்லை என்கிற அதிர்ச்சியைவிட, தன் கழுத்தில் மாட்டியிருந்த தங்க சங்கிலியும், மோதிரமும் காணவில்லை என்பதில்தான் கூடுதல் அதிர்ச்சி.... வழக்கமாக டேட்டிங் செல்லும்போது நகைகளை அணிந்துகொள்ளாத சிவா, காதலனை பார்க்கப்போகும் ஆர்வத்தில் இப்படி சில பவுன் நகைகளை அணிந்து சென்றார்...
மெல்ல தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை சிவா அப்போதுதான் உணர்ந்தார்...
ஆனாலும் கூட எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையோடு மகேஷின் அலைபேசி எண்ணை தொடர்புகொண்டார்.... இரண்டு முறை அழைப்பை எடுக்காதவன், மூன்றாவது முறையாக அந்த இணைப்பு “switch off” செய்யப்பட்டுள்ளதாக பதில் வந்தது...
“யாரிடம் விசாரிப்பது?... அவன் பெயர் கூட உண்மையான பெயரா? என்பது புரியவில்லை... அவனை பற்றி விசாரிக்கப்போய், இறுதியில் ஹோட்டல் நிர்வாகிகள் தன்னை பற்றி விசாரித்தால் என்னாவது?... பில் கூட கட்டினானா? என்பது தெரியவில்லை” என்று எண்ணியவாறே தலைக்கு வந்த ஆபத்து, தலைப்பாகையோடு போனதாக தன்னை தேற்றிக்கொண்டு வீட்டை நோக்கி நகர்ந்தார் சிவா....
அந்த நிகழ்வு நடந்து பத்து நாள்தான் ஆகிறது... இன்றுவரை மகேஷின் அலைபேசி எண்ணுக்கு எத்தனையோ நூறு முறைகள் தொடர்புகொண்டும் பதில் இல்லை... பிளானட் ரோமியோ ப்ரோபைலின் அஞ்சலுக்கும் கூட பதில் இல்லை... மனம் நொந்து என் நண்பனிடம் இந்த விஷயம் சொல்லப்பட, குறைந்தபட்சம் இதை ஒரு விழிப்புணர்வாகவாவது நம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் எண்ணத்தோடு என்னிடம் சொன்னார் அந்த நண்பர்....
“அலைபேசி எண், பிளானட் ரோமியோ முகவரி, புகைப்படம்” என்று மொத்தமாக அனைத்து விவரங்களும் என்னிடம் வந்து சேர்ந்துவிட்டது... பிளானட் ரோமியோ ஐடிக்கு அவன் வந்தே சில நாட்கள் ஆகிறது, அலைபேசி எண்ணும் கூட இன்னும் தொடர்பு எல்லைக்கு வெளியில்தான் இருக்கிறது... புகைப்படத்தை வலைப்பூவில் வெளியிட எனக்கு விருப்பமில்லை என்பதால், விருப்பப்பட்டவர்களுக்கு விபரங்களை தனி செய்தியில் அனுப்புகிறேன்.... இதில் இன்னொரு கொடுமை என்ன தெரியுமா?... பாதிக்கப்பட்ட சிவா வேறு மாநிலத்தில் காவல் துறை அதிகாரியாக பணிபுரிகிறார்... “திருடனுக்கு தேள் கொட்டியதை போல” இந்த உண்மையை தன் குடும்பத்தில் கூட சொல்ல முடியாத சோகத்தில் திளைத்திருக்கிறார் சிவா...
இந்த விஷயத்தில் நீங்கள் கவனிக்கப்பட வேண்டிய சில அம்சங்கள் இருக்கிறது...
ஏமாற்றிய அந்த மகேஷ் உண்மையாகவே “கே”யா? என்பதில் பெரிய சந்தேகம் எழுகிறது... சிவாவுடனான உடல் ரீதியான தொடர்பில் அவன் ஆர்வமோ, ஈடுபடவோ இல்லை... மேலும், மகேஷின் பேச்சு மிகத்தேர்ந்த அனுபவசாலியை போல தெரிந்தது... அவன் குறிக்கோள் நகை மட்டுமே தவிர, அலைபேசி போன்ற தான் மாட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கும் பொருட்களை எடுக்கவில்லை... மிக நேர்த்தியான முறையில் மயக்கமுற செய்து அவன் திருடிய பாங்கு நிச்சயம் இது முதல் முறை அல்ல என்பதை நமக்கு உணர்த்துகிறது...
ஆசை வார்த்தை பேசி, முழுவதுமாக நம்ப செய்து இப்படி ஒருபால் ஈர்ப்பாளர்களை தன் வலைக்குள் சிக்க வைத்து திருடும் இந்த “ஹைட்டெக்” திருடர்கள், இப்போது சமூக வலைத்தளங்களின் பக்கம் தங்களின் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கிவிட்டனர்... அவர்களில் பெரும்பாலானோர் “கே” இல்லை...
முன்பொரு கட்டுரையில் நண்பரின் “பைக்”கை திருடிய விஷயத்தை உங்களோடு பகிர்ந்துகொண்டேன்... இப்போது நகை... இன்னும் உங்களிடம் பகிர்ந்திடாத இதனைப்போன்ற எத்தனையோ சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன... நீங்கள் ஒருவர் மீது முழு நம்பிக்கை வைப்பதற்கான காரணிகளாக “பேச்சு, உடல்மொழி, தோற்றம்” போன்றவைகளை அளவுகோலாக வைத்துள்ளீர்கள்... இப்போது அந்த அளவுகோலுக்குள் தான் இந்த ஆபத்தான நபர்கள் புகுந்துவிட்டார்கள்....
உங்களுக்கு தேவையான ஒரு கைக்குட்டை வாங்கக்கூட ஒன்றுக்கு நான்கு முறை யோசிச்சு முடிவெடுக்குறீங்க... இப்படி காதலை தேடுகிறேன் பேர்வழி என்று ஆபத்துகளில் சிக்கும் முன்னர், கொஞ்சம் யோசித்து நிதானித்து செயல்படுவதில் தப்பில்லை.... இப்போது திருச்சி வரை கிளை பரப்பிவிட்ட அந்த திருட்டுக்கூட்டம், இன்னும் வேரூன்ற வாய்ப்பிருக்கு...
அதற்காக நீங்க பயப்பட வேணாம்... உங்களை நீங்க தற்காத்துக்கொள்ள, முடிவுகளை கொஞ்சம் நிதானித்து எடுங்கள்...
1.      அப்படி முதல் முறையாக சந்திக்கப்போகும் நபர்களின் உண்மை தகவல்களை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்....
2.      உங்கள் முதல் சந்திப்பை விடாப்படியாக நான்கு சுவர்களுக்குள் வைப்பதை மறுத்திடுங்க... பொது இடங்களில் சந்தியுங்கள், பேசுங்கள், அவன் உண்மையை பேசுகிறானா? என்பதை கவனியுங்கள்....
3.      மனதிற்குள் பயம் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தைரியமாக உங்கள் முகத்தையும், உடல்மொழியையும் வெளிப்படுத்துங்கள்... உங்கள் பயம்தான் அவர்களின் மூலதனம்... நீங்க துணிச்சலா பேசுவதை அவர்கள் கவனித்தால், நிச்சயம் மேற்கொண்டு காரியத்தை நகர்த்த யோசிப்பார்கள்....
4.      “கண்ணே!... மணியே... கனியமுதே!...”னு அலைபேசியில் எவ்வளவுதான் காதல் மொழி பேசினாலும், முதல் முறை சந்திப்பில் ஒரு பித்தளை மோதிரத்தை கூட தவிருங்கள்....
5.      குளிர்பானமோ, மதுவோ உங்கள் முதல் சந்திப்பில் நிச்சயம் மறுத்துவிடுங்கள்....
மேற்சொன்ன தகவல்களுக்கு இணங்க மறுக்கும் நபர்களை, தயங்காமல் அந்த இடத்திலேயே விட்டுட்டு அடுத்த ஆளை தேட தொடங்குங்க நண்பர்களே!.... அதையும் தாண்டி “ரிஸ்க்” எடுத்துதான் நீங்க “காதல் ரஸ்க்”
சாப்பிடனும்னு நினைச்சா, மேற்கொண்டு நிகழவிருக்கும் ஆபத்துகளுக்கு நீங்களே முழு பொறுப்பு.....
சரிங்க.... சொல்றதை சொல்லியாச்சு, இனி நீங்களாச்சு, அந்த திருடனுகளாச்சு!...

Monday 10 February 2014

"முதல் இரவுப்பயணம்..." - சிறுகதை...


ப்படி ஒரு தருணத்தில் அகிலனை பார்ப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை... திருச்சியிலிருந்து சென்னை கிளம்பும் அந்த சொகுசு பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வெளிக்காட்சிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, என் பக்கத்தில் காலியாக இருக்கின்ற இருக்கையில் அமரப்போவது அகிலன்தான் என்பது அந்த நிமிடம்வரை என் கற்பனைகளுக்கு கூட அப்பாற்பட்ட ஒரு விஷயம்... பத்து வருடங்களுக்கு முன்னால் பார்த்த அதே உடல் தோற்றம் தான் என்றாலும், இப்போது அங்கங்கள் மட்டும் தன் இலகுத்தன்மையை இழந்து, முறுக்கேறி இருப்பதாக பார்த்தவுடன் தோன்றியது...
அவனை முதலில் பார்த்த அந்த நாளை என்னால் மறக்க முடியாது....
பன்னிரண்டாம் வகுப்பில் படித்த வயதில், சென்னையில் ஒரு அறிவியல் கண்காட்சியில்தான் அகிலனை நான் முதலில் சந்தித்தேன்... நூற்றுக்கணக்கான பள்ளிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மத்தியில் தொடர்பே இல்லாத நானும் அவனும் சந்தித்து, பேசி, உடலால் உள்ளத்தால் கலக்க வேண்டும் என்பது ஏற்கனவே எழுதப்பட்ட விதியா? என்பது எனக்கு புரியவில்லை...
“வணக்கம் சொல்லும் ரோபோ, மகிழுந்துக்கான நவீன சென்சார் கருவி, பணம் வைத்து பூட்டப்பட லேசர் பணப்பொட்டி” என்று அறிவியலை மேற்தட்டு மனோபாவத்தோடு மட்டுமே அணுகி, ஆராய்ந்து, நாட்டுக்கு அற்பனித்துக்கொண்டிருந்த மாணவர்களுக்கு மத்தியில், “புகை வராமல் சமைக்க பயன்படும் விறகு அடுப்பு” செய்துவைத்த அகிலனின் வித்தியாசமான பார்வைதான், அவன் மீதான என் முதல் காதல் பார்வைக்கு அடித்தளம்!...
“உங்க படைப்பு நல்லா இருக்கு...” என்று தொடங்கிய எங்கள் பேச்சு, கண்காட்சி நடந்த மூன்று நாட்களும், “உசேன் போல்ட்”இன் ஓட்டத்தை போல நிற்காமல் ஓடியது.... நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வார்த்தைகளை பரிமாறிக்கொள்ளவில்லை, “ஐ லவ் யூ... நீ இல்லாம நான் வாழ முடியாது” என்கிற சினிமா வசனங்கள் பேசிடவில்லை, மடியில் படுக்கவைத்து “கண்ணே, மணியே, புஜ்ஜி, குட்டி...” செயற்கை வர்ணனைகளால், வார்த்தைகளுக்கு வண்ணம் சேர்க்கவில்லை.... ஆனால், உளமார இருவரும் அந்த உறவை உணர்ந்தோம், ஓரிரவில் ஒன்றாகவும் கலந்தோம்....
நாங்கள் இருவரும் சந்தித்தது “விதி” என்றால், எங்கள் பிரிவுக்கான காரணமும் விதிதான் என்பதில் ஐயமில்லை... மூன்று நாட்களுக்கு பிறகு எங்கள் பள்ளிகளை நோக்கி நாங்கள் நகர்வதற்கான நேரமும் வந்தது, பரிமாற்ற அலைபேசி அப்போதில்லை, துண்டுக்காகிதத்தில் எழுதப்பட்ட அகிலனின் முகவரி கூட, நான் ஊர் வந்து சேர்வதற்கு முன்பு கசக்கி எறியப்பட்டது... ஆனால், அதற்கு காரணம் விதியில்லை, என் நண்பனொருவனின் சதி... என் சட்டைப்பைக்குள் பத்திரமாக வைத்திருந்த அந்த காகித சுருளை கசக்கி எரிந்து, உள்ளே துழாவி ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்துவிட்டான்.... அந்த அற்ப “ஐந்த ரூபாயில்” அகிலனுடனான அனைத்து தொடர்புகளையும் நான் இழந்தேன்....
அதன் பிறகு எத்தனையோ நாட்கள் அவன் நினைவுகள் என்னை ஆக்கிரமிக்கும்... அகிலன் எனக்காகவே படைக்கப்பட்ட ஒருவன் என்பதான நினைப்பு எனக்குள் எப்போதும் நிலைபெற்றிருக்கும்... ஆனாலும், தேடிக்கிடைக்காத புதையலாகத்தான் அவன் இத்தனை வருடங்களும் இருந்துவிட்டான்... மனப்பசியை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு, உடற்பசியை தீர்த்துக்கொள்ள “பிளானட் ரோமியோ” வசமெல்லாம் வாசம் செய்தேன்.... சிற்சில அழகன்களையும் சந்தித்து, உடலால் உறவாடினேன்....
ஆனாலும் ஏனோ, முன்பின் அறிமுகமில்லாத யாரோ ஒருவரிடம் என் வெற்றுடலை காண்பிக்கவும், உடலால் இன்பம் துய்க்கவும் என் மனம் இடம்கொடுக்க மறுத்தது... யாரோ ஒரு தெரியாத நபர், என் உடலை தொடும்போது உடலில் “புழு நகர்வதாகவும், கம்பளிப்பூச்சி நெருடுவதாகவும்” உணர்வுகளை என் மூளை பிரதிபலிக்கும்... நாளடைவில், வேற்று ஆண்கள் என்னை தொட்ட மறுகணமே என் உடல் அறிப்பதை போல உணர்வுகள் மேலிட்டது....
என்ன செய்யலாம்? உடலின் பசியை தீர்க்க மனம் வழிவிட மறுக்கிறது... மனதின் பசியை தீர்க்க, காலம் பதில் சொல்ல தயங்குகிறது... என்னதான் செய்வது?....
இப்படி யோசித்துக்கொண்டிருந்த அப்படி ஒருநாளில்தான் என் அருகில் வெகு இயல்பாக வந்து அமர்ந்தான் அகிலனும்....
மன்மதன்’கள் எப்போதும் கையில் அம்புடன் வருவதில்லை, சில நேரங்களில் கையில் “வாட்டர் பாட்டிலுடன்” வந்தும் நம் பக்கத்தில் அமரலாம்.... அருகில் அமர்ந்த அதே வேகத்தில் என்னை முழுவதும் கபளீகரம் செய்வதை போன்ற ஒரு பார்வையை வீசினான்...
அகிலனுக்கு லேசான தெத்துப்பல், அதை வெளிக்காட்ட தயங்கியே எப்போதும் அந்த “அளவான புன்னகை” என்னும் அளவீட்டை வைத்திருப்பான்... இப்போதும் அந்த வழக்கமான உதடு பிரியாத புன்னகையை அவன் உதிர்க்க, என் மனதிற்குள் பட்டாம்பூச்சி சிறகடிக்க தொடங்கியது...
“பேச்சை எப்படி தொடங்கலாம்?” என்று நான் யோசித்து வியூகங்களை வகுத்துக்கொண்டிருந்த நேரத்தில், எவ்வித பதற்றமும் படபடப்பும் சிறிதும் இல்லாமல் அகிலனே பேச்சை தொடங்கிவிட்டான்....
“சென்னைல வேலை பாக்குறீங்களா?”
“இல்ல... திருச்சிலதான் வொர்க் பண்றேன், சென்னைக்கு ஒரு ப்ராஜெக்ட் விஷயமா போறேன்...” என் வார்த்தைகளில் தயக்கமும் தடுமாற்றமும் கலந்தே வெளிவந்தது....
அதன்பிறகு பேச்சுகள் ஏனோ திசையற்ற காற்றாடி போல எங்கெங்கோ பறந்தது...
“சென்னைல இப்போலாம் க்ளைமேட் ரொம்ப மோசம்...” புவியியலில் தொடங்கி,
“மின்வெட்டு நேரம் இப்போ அதிகமாக்கிட்டாங்க, சோலார் பவர் தான் இதுக்கல்லாம் ஒரே வழி....” இயற்பியலில் பயணித்து,
“வர்ற எலெக்சன்ல காங்கிரஸ் ரொம்ப மோசமா அடிவாங்கப்போகுது....” ஆபத்தான அரசியலில் அவன் பேச்சுகளை நிறைவுசெய்தபோது, பேருந்து பெரம்பலூரை நோக்கி பயனித்துக்கொண்டு இருக்கிறது..... அர்த்தமற்ற பேச்சுகள்தான் காதலின் மொழி என்று அப்போதுதான் நான் உணர்ந்தேன்...
மெல்ல பயணிகள் ஒவ்வொருவராக நித்திரையில் ஆழ்த்திக்கொள்ள தொடங்கிவிட்டனர்... பேருந்து விளக்குகள் அணைக்கப்பட்டு, மெல்லிய சிவப்பு விளக்கின் வெளிச்சம் மட்டும் பழுப்பாக பேருந்தில் படர்ந்திருந்தது....
இளைஞன் ஒருவன் அலைபேசியில் வெகுநேரமாக குறுஞ்செய்தி தட்டிக்கொண்டிருக்க, குழந்தை ஒன்று மெலிதான சிணுங்கலை சினுங்கிக்கொண்டு இருந்ததை தவிர மற்றவர்கள் எல்லாம் பெரும்பாலும் இந்நேரம் “ஆல்பா” நிலையில் தூக்கத்தை நோக்கி பயணித்திருக்கக்கூடும்....
ஒருவழியாக அகிலனும் தன் அர்த்தமற்ற பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, “குட்நைட்” சொல்லிவிட்டான்...
எனக்கோ படபடப்பு அதிகமானது.... அப்போதைய மூன்று நாட்களுக்கு இடையில் இருந்த “பத்து வருட” இடைவெளியின் தாக்கமே இல்லாமல் அவன் பேசுவது எனக்கு மகிழ்வாக இருந்தாலும், மறுபுறத்தில் அந்த “இயல்பில்” கொஞ்சம் பயமும் எனக்கிருந்தது... “நான் காதலாகவும், வாழ்க்கையாகவும் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு உறவை, அவன் சாதாரண ஒன்றாக கருதிவிடுவானோ? இப்போது அவனுக்கு என் மீது ஈர்ப்பு இல்லையோ?” போன்ற கேள்விகள் என் மனதை இன்னும் அதிகமான பயப்பதற்றத்தில் ஆழ்த்தியது....
புரியாத குழப்பத்தில் விரல் நகத்தை நான் கடித்துக்கொண்டிருக்க, அகிலனின் கை என் மீது எதேச்சையாக பட்டது... தூக்கக்கலக்கத்தில், வண்டியின் குலுக்கத்தில் இதெல்லாம் இயல்பான ஒன்றுதான் என்று கருதி, மேற்கொண்டு என் கடித்தலை நகம் தாண்டி, விரல் நோக்கி கொண்டுசென்றுவிட்டேன்....
எதேச்சையாக என் மீது பட்ட கை, வண்டியின் குலுக்களுக்கு எதிர்த்திசையில் பயணிக்க தொடங்கியது... அப்போதுதான் எனக்கு மண்டைக்கு மேலே பல்பு எறிந்தது, காதுகளுக்குள் மணி அடித்தது... மேற்கொண்டு நகரப்போகும் காட்சிகளை “மெளனமாக” கவனிக்க நானும் ஆயத்தமானேன்... என் எதிர்பார்ப்புகள் பொய்க்கவில்லை... கைகளை தாண்டி அவன் உடலும் என் மீது தன் தழுவுதலை தொடங்கியது... விழுப்புரம் செல்வதற்குள் அந்த உல்லாச பயணம் “உச்சக்கட்டத்துடன்” நிறைவுக்கும் வந்துது... பத்து வருட காத்திருப்பின் பலனை, அந்த பத்து நிமிடத்தில் நான் அடைந்துவிட்டேன்... நீண்ட நாட்களுக்கு பிறகு உடலால் மட்டுமல்லாது, மனதாலும் முழு நிறைவு பெற்ற ஒரு உறவாடல்.... வெகுகாலத்திற்கு பிறகு ஒரு உறவுக்கு பின்பு, என் உடல் “புழுவின் ஊறுதலையும், அரிப்பையும்” எதிர்கொள்ளவில்லை..... அவன் இன்னும் என் மீதான அந்த ஈர்ப்பினை துறக்கவில்லை என்பதை நான் உணர்ந்த தருணம் அது....
முழு மனநிறைவோடு, அவன் தோள் மீது சாய்ந்தபடி கண் அயர்ந்தேன்....
சென்னையின் புறநகரை நாங்கள் அடைந்தபோது, அதிகாலை நான்கு மணி... காரிருள் மெல்ல அகன்று, பழுப்பிருள் அப்பிக்கொண்டு நிற்கும் விடிகாலை பொழுது....
இருவரும் விழித்துவிட்டோம்... இரவின் உறவால் ஒருவித வெட்கத்தின் வெளிப்பாடாக தயக்கத்துடன் நான் அமர்ந்திருக்க, அகிலனோ எவ்வித நிகழ்வின் சுவடும் வெளிக்காட்டாதவனாக, “ஓகே.... இன்னிக்கு ஈவ்னிங் மீட் பண்ணலாமா?” என்றான்...
எனக்கோ மகிழ்ச்சியின் உச்சத்தில் என் மனம் துள்ளிக்குதித்தது... நான் “எப்படி கேட்பது?” என்று புரியாமல் தவித்துக்கொண்டிருந்த கேள்வியையும் அவனே கேட்டுவிட்டான்...
தொடக்கம் முதலே எங்கள் காதல் விளையாட்டில், பாய்ன்ட்’களை அவன்தான் அள்ளிக்கொண்டு இருக்கிறான்... முதன்முதலாக என் புள்ளிகள் கணக்கை துவக்க எண்ணி, அவன் முகத்தை நோக்கி என் தலையை நிமிர்த்தி, “உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க அகிலன்...” என்றேன்....
ஆனால், அவன் முகமோ அதுவரை நிறைத்துவைத்திருந்த புன்னகையை சட்டென இழந்து, புருவங்கள் உயர்த்தப்பட்டு ஆச்சரிய குறியீடாய் என்னை பார்த்து,  “என் பெயர் உங்களுக்கு எப்டி தெரியும்?... என்னை முன்னாடியே தெரியுமா உங்களுக்கு?” எச்சிலை விழுங்கிவிட்டு கேள்வியை கேட்டான்....
அதிர்ச்சியில் உறைந்து நின்றேன் நான்.... அப்போதுதான் மெதுவாக என் உடலில் புழுக்கள் நகர்வதாகவும், கம்பளிபூச்சிகள் நெருடுவதாகவும் தோன்றியது... மெல்ல உடல் முழுக்க அரிப்பு பரவ தொடங்கியது.... (முற்றும்)