Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday 28 September 2014

"பைசெக்சுவல் நபர்கள் பச்சோந்திகளா?" - விடை சொல்லும் விழிப்புணர்வு வாரம்!
கடந்த வாரம் பைசெக்சுவாலிட்டி நாளான செப்டம்பர் 23ஐ முன்னிட்டு இருபால் ஈர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் உலகம் முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்பட்டது, அதன் ஒரு பகுதியாகத்தான் நம்மவர்களுக்கும் அத்தகைய ஈர்ப்பினர் பற்றிய ஒருசிறு விழிப்புணர்வு கட்டுரை...... பாலீர்ப்பு சிறுபான்மையினர்களின் பட்டியலில் அதிகம் கண்டுகொள்ளப்படாத, அதே நேரத்தில் மிக அதிக அளவில் விமர்சிக்கப்படும் வகையினர்தான் பைசெக்சுவல் எனப்படும் இருபால் ஈர்ப்பு நபர்கள்... பைசெக்சுவல் நபர்கள் என்றால் யார்? என்ற கேள்விக்கே அவசியமில்லாத அளவிற்கு அந்த பெயரிலேயே அதற்கான முழு அர்த்தமும் வெளிப்படையாக நமக்கு புரிகிறது... ஆம், ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டு பாலினத்தை சேர்ந்தவர்கள் மீதும் ஈர்ப்பு கொள்ளும் வகையினர்தான் இந்த இருபால் ஈர்ப்பு நபர்கள்...

ஒருபால் மற்றும் எதிர்பால் ஈர்ப்பு போல இந்த ஈர்ப்புக்கும் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்று பின்புலம் இருக்கிறது... ஆம், கிரேக்க மற்றும் ரோமானிய கலாச்சாரத்தில் இருபால் ஈர்ப்பு மிக சாதாரண விஷயமாக பார்க்கப்பட்டதை பல வரலாற்றுப்பதிவு ஆதாரங்கள் வழியே நாம் அறியமுடிகிறது... 

இன்றைக்கும்கூட பாலீர்ப்பு சிறுபான்மையினர் கணக்கெடுப்பில் கணிசமாக இருபால் ஈர்ப்பு நபர்கள் நிறைந்துள்ளதாக பல ஆய்வு முடிவுகளும் கூறுகிறது....

 2002 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் தேசிய சுகாதார புள்ளியியல் நடுவம் எடுத்த கணக்கெடுப்பின்படி 1.8 % ஆண்கள் இத்தகைய இருபால் ஈர்ப்பினர் பட்டியலுக்குள் வகைப்படுத்தப்படுகிறார்கள் எனவும், தான் பைசெக்சுவல்தானா? என்கிற குழப்பத்தில் 3.9% ஆண்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது... இந்த சதவிகிதம் ஒப்பீட்டளவில் ஒருபால் ஈர்ப்பினரைவிட அதிகம் என்பதையும் நாம் கணக்கில்கொள்ளவேண்டும்... அதுமட்டுமல்லாமல் இருபால் ஈர்ப்பு ஆண்களை காட்டிலும் பெண்களுக்குத்தான் அதிகம் காணப்படுவதாகவும் ஆய்வுகள் ஆச்சர்ய முடிவுகளை தெரிவிக்கின்றன...

இனி இவர்களைப்பற்றி பொதுத்தளத்திலும், ஒருபால் ஈர்ப்பு சமூகத்தில் நிலவும் தவறான பிம்பங்களை பற்றிய விளக்கங்களுக்கு வருவோம்!...

·        பெண்ணை திருமணம் செய்துகொண்ட ஆண்கள் எல்லோரும் பைசெக்சுவலா?
பரவலாகவே இப்படி ஒரு தவறான பார்வை நம் சமூகத்தில் நிலவுகிறது... ஒரு முழுமையான கே, குடும்ப மற்றும் சமூக நிர்பந்தம் காரணமாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் பலராலும் அவன் பைசெக்சுவல் நபராக பார்க்கப்படுகிறான்.... நிச்சயமாக அது தவறான பார்வை... எத்தனையோ கே நபர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களுடைய ஒருபால் ஈர்ப்பு காரணமாக மனைவியுடன் இல்லற இன்பத்தை உணரமுடியாமல் இருப்பதை பல இடங்களிலும் பார்க்கமுடிகிறது.... திருமணம் ஆனபின்பு ஒரு நபரின் பாலீர்ப்பு மாறிவிடும் என்றால், இவ்வளவு காலமும் உரிமைக்காக போராடும் ஒருபால் ஈர்ப்பினரின் போராட்டங்கள் தேவையே இருக்காதே.... திருமணம் என்பது ஒரு சம்பிரதாய நிகழ்வு... அந்த நிகழ்வால் ஒரு மனிதனின் பாலீர்ப்பை எந்த காலத்திலும் மாற்றிடமுடியாது....

·        பைசெக்சுவல் நபர்கள் யார்?... 
 
 தெளிவாக பலருக்கும் இதுபற்றிய புரிதல் இல்லையோ என்றெனக்கு தோன்றுவதுண்டு... அந்த புரிதலின்மைகளுக்கு காரணம் இந்த பாலீர்ப்பில் காணப்படும் சில குழப்பங்கள்... ஆண்கள் மற்றும் பெண்கள் என்று இருபாலினரின் மீதும் ஈர்ப்பு உண்டானால் அவர்கள் இருபால் ஈர்ப்பு நபர்களாக வகைப்படுத்தப்பட்டாலும், இதில் ஒருசில குழப்பங்கள் இருக்கிறது... எத்தனை சதவிகிதம் ஒருவன் ஆண்கள் மீது ஈர்ப்பு கொள்கிறான், அதே போல எத்தனை சதவிகிதம் பெண்கள் மீது ஈர்ப்புகொள்கிறான் என்பதை வைத்தும் சில உட்பிரிவுகளை பிரிக்கிறார்கள் (அதுபற்றிய கின்சே ஸ்கேல் பற்றி கட்டுரையின் தொடர்ச்சியில் பார்க்கலாம்)... அதுமட்டுமில்லாமல் அந்த சதவிகிதம் சிலருக்கு மாறும் வாய்ப்பு கூட உண்டென ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.... அதாவது, பதின்வயதுவரை எதிர்பால் ஈர்ப்பு மேலோங்கி இருக்கின்ற ஒருவனுக்கு, மத்திம வயதில் சமபாலினர் மீதான ஈர்ப்பு மேலோங்கியும் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு... அப்படி நிகழும் ஒருவர், “நான் ஸ்கூல் படிக்கிற வரைக்கும் ஸ்ட்ரை’ட்டாத்தான் இருந்தேன், காலேஜ் வந்தப்புறம் எப்டி கே’வா மாறுனேன்னு தெரியல!” என்ற குழப்பத்தில் திளைப்பது இயற்கைதான்... ஆனால், அத்தகைய நபர்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம், பாலீர்ப்பு அவர்களுக்கு மாறவில்லை, மாறாக இரண்டு பாலினத்தை சேர்ந்தவர்களிடம் அவர்களுக்கு உண்டான ஈர்ப்பின் சதவிகிதம் மட்டுமே மாறியிருக்கிறது... இத்தகைய வகைக்குள் வருபவர்கள் நிச்சயம் இருபால் ஈர்ப்பினர்கள்தான்...

·        கின்சே ஸ்கேல்....
புகழ்பெற்ற ஆய்வாளரான கின்சே “ஒரு மனிதனின் சமபால் – எதிர்பால் ஈர்ப்பின் சதவிகிதத்தை வைத்து, குறிப்பட்ட மனிதனின் பாலீர்ப்பை ஏழு வகைகளாக பிரிக்கிறார்”...
கின்சே போலவே பலரும் பலவிதமான அடிப்படைகளை வைத்து பாலீர்ப்பை பிரிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டாலும், காலம் கடந்தும் கின்சே ஸ்கேல் தனக்கென தனி இடத்தை பெற்று நிற்கிறது...
கின்சே ஸ்கேலின் முழுமையான விபரம் கீழே கொடுக்கப்படுகிறது....
........
0
முழுமையான எதிர்பால் ஈர்ப்பினர்...
1
எதிர்பால் ஈர்ப்பு மேலோங்கினாலும், அரிதாக சமபால் ஈர்ப்பில் நாட்டம் கொள்வோர்....
2
எதிர்பால் ஈர்ப்பு மேலோங்கினாலும், அவ்வப்போது சமபால் ஈர்ப்பிலும் நாட்டம் கொள்வோர்...
3
எதிர்பால் ஈர்ப்பும் சமபால் ஈர்ப்பும் சரிவிகிதம் பெற்றிருப்போர்...
4
சமபால் ஈர்ப்பு மேலோங்கினாலும், அவ்வப்போது எதிர்பால் ஈர்ப்பிலும் நாட்டம் கொள்வோர்...
5
சமபால் ஈர்ப்பு மேலோங்கினாலும், அரிதாக எதிர்பால் ஈர்ப்பில் நாட்டம்கொள்வோர்...
6
முழுமையான சமபால் ஈர்ப்பினர்...
X
எவ்வித ஈர்ப்பும் எத்தகைய பாலினத்தை சேர்ந்தவர்களிடமும் உண்டாகாதவர்கள்...

இதில் கடைசியாக நாம் பார்த்த “எந்த பாலீர்ப்பும் எவரிடத்திலும் ஏற்படாத நபர்கள் ஏசெக்சுவாலிட்டி (Asexuality) என்கிற வகைக்குள் வருகிறார்கள்...”..
இத்தகைய வகையினருக்கு முழுவதும் முரணான இன்னொரு பிரிவினர் பற்றி கின்சே குறிப்பிடவில்லை... அத்தகைய நபர்கள் “பான்செக்சுவாலிட்டி (pansexuality)” வகைக்குள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்...
இந்த பான்செக்சுவாலிட்டி வகை நபர்கள், பாலின பேதமின்றி எல்லா தரப்பு பாலினத்தை சேர்ந்தவர்களிடமும் ஈர்ப்பு கொள்வார்கள்.. அதாவது, ஆண், பெண், திருநங்கை, திருநம்பி என்று எல்லா தரப்பின் மீதும் ஈர்ப்புகொள்வார்கள்.... நாம் கட்டுரையின் முக்கிய நோக்கம் கருதி இதைப்பற்றிய செய்திகளை இத்தோடு முடித்துவிட்டு, மீண்டும் பைசெக்சுவாலிட்டி பக்கம் திரும்புவோம் ....

சரி, கின்சே ஸ்கேலில் உங்களுடைய பாலீர்ப்பு எந்த வகைக்குள் வருகிறதென்று தெரிந்துகொள்ள ஆசையா?... கீழே உள்ள இணைப்பில் இருக்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்க, உங்க பாலீர்ப்பை விளையாட்டாக தெரிந்துகொள்ளுங்க....


·        மன அழுத்தம்  பைசெக்சுவல் நபர்களுக்கு அதிகம்....

ஒப்பீட்டளவில் ஒருபால் ஈர்ப்பு நபர்களை காட்டிலும், இருபால் ஈர்ப்பு நபர்கள் மனதளவில் நிறைய பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்..  ஒருபால் ஈர்ப்பு நபர் ஒருவர், தனது பதின் வயதுகளில் குழம்பினாலும், பாலீர்ப்பு பற்றிய அடிப்படை புரிதல் அவருக்கு வந்தவுடன், குழப்பங்கள் நீங்கப்பெற்று ஓரளவு தெளிவான மனநிலைக்கு வந்துவிடுகிறான்... “தனக்கு ஆண்கள் மீதுதான் ஈர்ப்பு இருக்கிறது, தான் ஒரு கே” என்பதில் ஒருபால் ஈர்ப்பு நபர்கள் ஒருகட்டத்தில் தெளிவடைகிறார்கள்... ஆனால், இருபால் ஈர்ப்பு நபர்களால் அப்படி ஒரு தெளிவான மனநிலைக்கு எளிதில் வரமுடிவதில்லை... “ஆண்கள் மீது சில நேரமும், பெண்கள் மீது சிலநேரமும் எனக்கு ஈர்ப்பு உண்டாகுது... அப்படினா திருமணம் செய்துகொள்ளலாமா? துணிந்து ஒரு ஆணை காதலிக்கலாமா? திருமணம் செய்துகொண்டால், அதன்பிறகு பாலீர்ப்பு விகிதம் மாறும் பட்சத்தில் என்ன செய்வது?... நிஜமாகவே நான் இருபால் ஈர்ப்பு நபர்தானா?” என்ற கேள்விகள் அத்தகைய நபர்கள் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும், விளைவு மன அழுத்தம்.... இரண்டு வாழ்க்கையில் எதை தேர்ந்தெடுப்பது என்கிற குழப்பத்தில், தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையிலும் நிலையாக இருக்க முடியாமல், குழம்பித்தவிப்பது இந்த வகையினர்தான்...


·        செயற்கையான ஒருபால் ஈர்ப்பினர்....

இத்தகைய வகையினர் இந்தியாவை போன்ற பாலீர்ப்பு புரிதல் இல்லாத நாடுகளில் அதிகம் காணப்படுகிறார்கள்.... சிறுவயது முதலாகவே ஆண் என்றால் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற சமுதாய கட்டமைப்புக்குள் வளரும் ஒருவன், தன்னை ஸ்ட்ரைட் நபராகவே பாவித்து வாழ்கிறான்... பதின் வயதுகளில் அவன் நண்பர்கள் பெண்களை ரசிக்கும்போது, தனக்கெழும் ஆண்களின் மீதான ஈர்ப்பை வலுக்கட்டாயமாக ஒதுக்கி வைத்துவிட்டு பெண்ணை ரசிக்க முயல்கிறான்... அப்படியே நாட்கள் செல்ல, பெண்களை ரசிப்பது அவனைப்பொருத்தவரை கடமையாகவே ஆகிவிடுகிறது.... ஒருகட்டத்தில் அவனுக்குள் இருக்கின்ற ஒருபால் ஈர்ப்பு மேலெழும்போது, சமுதாய அழுத்தத்தால் தன்னை ஸ்ட்ரைட்டாக அதுகாலம் வரை நினைத்திருந்த அந்த நபர், தன்னை இருபால் ஈர்ப்பு நபராக சித்தரித்துக்கொள்கிறான்.... இயற்கையாகவே அவனுக்குள் இருந்த ஒருபால் ஈர்ப்பு எண்ணமும், செயற்கையாக இந்த சமூகத்தால் திணிக்கப்பட்ட எதிர்பால் ஈர்ப்பு எண்ணமும் அவனை பைசெக்சுவல் நபராக செயற்கையாக உருவாக்கும்போது, அவன் பலியாடாக ஆக்கப்படுகிறான்.... “நான் பைசெக்சுவல்தான்... இப்போ ஜாலிக்காக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுறேன்... கொஞ்ச நாள்ல பெண்ணை திருமணம் செஞ்சிட்டு சந்தோஷமா வாழ்வேன்!” என்று சுற்றித்திரியும் பலரும் இந்த பட்டியலுக்குள் வருவார்கள் என்றே தோணுது... இந்திய கலாச்சாரம், மதங்களின் பாலீர்ப்பு ஏற்காமை போன்ற காரணங்களால் இந்தியாவில் இத்தகைய நபர்கள் நிறைய இருக்கிறார்கள்... இவர்களுக்கு நிச்சயம் திருமணத்திற்கு முன்பு ஒரு கலந்தாய்வு அவசியமாவதை இதன்மூலம் அவர்கள் உணரவேண்டும்....


·        பைசெக்சுவல் நபர்கள் எல்லோரும் சந்தர்ப்பவாதிகள், பச்சோந்திகள், நம்பகத்தன்மை அற்றவர்கள்...

இப்படி ஒரு பிம்பம் இருபால் ஈர்ப்பு நபர்கள் மீது அதிகமாக திணிக்கப்படுகிறது.... பைசெக்சுவல் நபர்களால் இரண்டு பாலினத்தினர்மீதும் ஈர்ப்புகொள்ள முடிகிறது என்னும் காரணத்தால் இவர்களின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள்... ஒரே ஒரு பாலினத்தை சேர்ந்தவர்கள் மீதுதான் ஈர்ப்புகொள்ள வேண்டும் என்ற விதிமுறை நமக்கு இருக்கிறதா என்ன?... எனக்கு உயரமாக இருப்பவனை பிடிக்கிறது என்பதற்காக, உயரத்தை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் காதலை தேர்ந்தேடுப்பவனை நான் சந்தர்ப்பவாதியாக பார்ப்பது முறையாகுமா?...பல இருபால் ஈர்ப்பு நபர்களும் ஆண், பெண் என்று காதலை மாற்றுகிறார்கள் என்று ஒரு வாதம் நிலவுகிறது... நீங்களும் நானும் ஒரே காதலனுடன்தானா சாகும் வரை வாழ்கிறோம்?... நாம் நான்கைந்து ஆண்களை காதலித்தால் அதை பெரிய விஷயமாக நினைக்காத வேளையில், ஒரு பைசெக்சுவல் நபர் ஆண் பெண் என்று இரண்டு நபர்களை காதலித்ததை கொலைக்குற்றமாக பார்ப்பது தவறில்லையா?... கே நபர் தெளிவாக தன் பாலீர்ப்பை உணர நிறைய வாய்ப்பிருக்கு... ஆனால், பாலீர்ப்பு குழப்பத்தோடு சுழலும் இருபால் ஈர்ப்பு நபர்கள் அத்தகைய குழப்பத்தில் காதலில் தோல்வியுறுவது ஒன்றும் பெரிய நம்பகத்தன்மை அற்ற சூழலாக எனக்கு தோன்றவில்லை... உங்களுக்கு இனிப்பு பிடிக்கும், எனக்கு காரம் பிடிக்கும்.. இரண்டையும் பிடித்து சாப்பிடும் ஒருநபரை பச்சோந்தியாக பார்ப்பது சரிதானா? என்பதை நீங்கதான் முடிவுசெய்யனும்....


·        பைசெக்சுவல் நபர்கள் எல்லோரும் செக்ஸ் மேனியா’க்கள்....

இப்படி ஒரு வாதத்தை அதிகமாக திணிப்பவர்கள் நம் பாலீர்ப்பு சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்த ஒருபால் ஈர்ப்பு நபர்கள்தான்.... “அவன் ஆம்பிள கூடவும் படுப்பான், பொம்பளைங்க கூடவும் படுப்பான்... செக்ஸ்ன்னா அவனுக்கு அவ்ளோ வெறி” என்று பைசெக்சுவல் நபர்களை பற்றி பட்டவர்த்தனமாக ஒரு பிம்பத்தை உமிழ்பவர்கள் நிறைய இருக்கிறார்கள்... அது ரொம்ப தவறு நண்பர்களே... “பெண்கள் கூட படுக்க வாய்ப்பு கிடைக்காததால இவனுக ஆம்பளைங்க கூட படுக்குறாணுக... நாளைக்கு ஆம்பிளைகளும் கிடைக்கலைன்னா எதைத்தேடி போவாங்களோ!” என்று நம்மை காலம் காலமாக கரித்துக்கொட்டும் இந்த ஸ்ட்ரைட் சமூகத்தின் இத்தகைய கருத்திற்கும், மேலே நம்மவர்கள் சொன்ன இருபால் ஈர்ப்பு பற்றிய கருத்துக்கும் என்ன பெரிய வித்தியாசம்னு சொல்லுங்க... ஸ்ட்ரைட் நபர்கள் ஒரு கே’வை பற்றி சொன்னா கொதிச்சு போராடுறோம், அதே போன்ற ஒரு அமிலத்தன்மை வாய்ந்த கருத்துகளை இருபால் ஈர்ப்பு நபர்கள் மீது நாம வீசினால் அது எவ்வளவு பெரிய தவறுன்னு பாதிக்கப்பட்ட நமக்கு புரியலையே!....

நீங்க யாரோ ஒரு பைசெக்சுவல் நபரால் பாதிக்கப்பட்டிருக்கலாம், அல்லது யாரோ சிலர் செக்ஸ் மட்டுமே நோக்கமாக வாழலாம்... ஆனால், அந்த “யாரோ” சிலருக்காக ஒட்டுமொத்த இருபால் ஈர்ப்பு நபர்களையும் குற்றம் சுமத்தவேண்டாம் என்பதுதான் என் கருத்து... பேருந்து நிலைய கழிவறை வாசலில் நிற்கும் வெகுசில நபர்களின் செயலுக்கு இன்றைக்கும் நம் எல்லோரையும் செக்ஸ் மெஷின்களாக பாவிக்கும் இந்த பொதுத்தள சமூகம் செய்யும் அதே தவறை நாமும் செய்ய வேண்டாம் என்பதுதான் எனது இறுதி கோரிக்கை....

“விதிவிலக்குகள் எல்லாம் உதாரணங்கள் ஆகிவிடாது!” என்ற பொன்மொழியின் அர்த்தம் உங்களுக்கு புரிந்தால், கட்டுரையின் சாராம்சம் உங்கள் மனதினை ஓரளவு சார்ந்திருக்கும் என்று நம்புகிறேன்!....

அவர்களும் நம்மைப்போன்ற மனிதர்கள்தான்...
அவர்களை புரிந்துகொள்ளுங்கள்!..... புரியாமல் கொல்லாதீர்கள்!.....

Sunday 21 September 2014

"கே vs திருநங்கை" - குழப்பம் வேண்டாமே!!!....


“அவன் ஆண்கள் மீது ஈர்ப்புள்ளவனாம்...!”
“ஓஹோ... அப்படின்னா அவன் திருநங்கையா?”
நீண்ட நெடுங்காலமாக ஒருபால் ஈர்ப்போடு மூன்றாம் பாலினத்தை தொடர்புபடுத்தி குழப்பிக்கொள்வதும், பிறரை குழப்பியே கொல்வதும்தான் பெரும்பாலானவர்களின் அரைகுறை புரிதலின் வெளிப்பாடு... பல பதிவுகளில் மேலோட்டமாக சொல்லப்பட்ட இரண்டு தரப்பிற்குமான வேறுபாட்டை இங்கே கொஞ்சம் ஆழமாக விவாதிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது...
திருச்சியை சேர்ந்த ஒரு நபர், தன்னை ஒரு திருநங்கையாக நினைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, வேறு மாநிலத்தில் உள்ள திருநங்கைகளை நாடி சென்றுவிட்டார்... அங்கு சென்றபிறகு, அங்கிருந்த சில தெளிவான திருநங்கைகள், அந்த பதின்வயது இளைஞனுடன் பேசிய பிறகுதான், அவன் திருநங்கை இல்லை என்பதும், ஒருபால் ஈர்ப்புடையவன் என்பதும் அவர்களுக்கு தெரிய வந்திருக்கிறது... அதன்பிறகுதான் தன்னை பற்றிய தெளிவான ஒரு முடிவை அந்த இளைஞனால் எடுக்க முடிந்திருக்கிறது.... இது இப்போ மட்டுமில்ல, நிறைய முறை இப்படி பாலீர்ப்பு பற்றிய புரிதல் இல்லாமல், அரைகுறை புரிதலோடு குழப்பத்தில் சிக்கித்தவிப்போர் ஏராளமாக இருக்கின்றனராம்....
பாடப்புத்தகம் முதல் சமூக ஊடகங்கள் வரை “ஆண் என்றால் பெண் மீது ஈர்ப்புகொள்ள வேண்டும் என்பதும், பெண் என்றால் ஆண் மீது ஈர்ப்புகொள்ள வேண்டும் என்பதும்” எழுதப்படாத விதியாக வெளிப்படுத்தி வருகிறது... அதை தாண்டிய ஒரு மாற்றத்தை இந்த சமூகம் எதிர்கொள்ளும்போது, அதற்கான தெளிவைப்பெற கொஞ்சம் பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கிறது.... அதாவது, ஆண் பெண் தாண்டிய நம் சமூகத்திற்கு தெரிந்த ஒரே விஷயம் “திருநங்கை” மட்டுமே... ஆகையால் மட்டுமே, மாறுபட்ட பாலீர்ப்பை இந்த சமூகம் “திருநங்கை” என்ற ஒற்றை கண்ணாடியில் மட்டுமே கவனிக்கிறது...
திருநங்கை என்பவர் தன்னை முழுமையாகவே பெண்ணாக உணர்பவர், தன் ஆணுடலை அறவே வெறுப்பவர்... ஆனால், ஒருபால் ஈர்ப்பினர் (கே’க்கள்) தாங்கள் ஆணாகவே இருக்க விரும்புபவர்கள், தங்கள் ஆணுடலை அப்படியே விரும்பி ஏற்பவர்கள்...
ஒரு ஆண், சிறுவயது முதலே தன் ஆணுடலை வெறுத்து, தனக்குள் பெண்மையை உணர்ந்து, பெண்ணாகவே வாழவிரும்புவதுதான் திருநங்கை என அடையாளப்படுத்த வேண்டியவர்கள்... அவர்கள் ஆண் மீதுதான் ஈர்ப்புகொள்ள வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை... அதாவது, பெண்ணாக மாறிய திருநங்கை ஒருவர், வேறொரு பெண்ணின் மீது கூட ஈர்ப்பு கொள்ளலாம்.... அவர்களை ட்ரான்ஸ் லெஸ்பியன் (trans lesbian) என்று குறிப்பிடுகிறார்கள்.... அதேபோல, பெண்ணாக இருந்து ஆணாக மாறும் திருநம்பிகள், இன்னொரு ஆணின் மீது கூட ஈர்ப்பு கொள்ளலாம்.... அவர்களை, ட்ரான்ஸ்கே (trans gay) என்று குறிப்பிடுகிறார்கள்.... இதை எதற்காக நான் சொல்கிறேன் என்றால், திருநங்கைகளுக்கும் ஒருபால் ஈர்ப்புக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக உணரவைக்கத்தான்...
இப்போதும் கூட பாலீர்ப்பு பற்றிய புரிதல் இல்லாத பல ஒருபால் ஈர்ப்பினரும் தங்களை திருநங்கையாகவே நினைத்து வாழ்கிறார்கள்... நிச்சயம் அவர்கள் தங்களை சுயமதிப்பீடு செய்வது அவசியம்...
மூன்றாம் பாலினத்தை நம் சட்டம் முழுமையாக அங்கீகரித்துள்ள நிலையில், ஒரு நபரை எந்த விதத்தில் அந்த பட்டியலுக்குள் இணைக்கிறார்கள்? என்கிற குழப்பம் வெகுநாட்களாக எனக்கு இருந்தது.... அதுபற்றி ஓரினம் அமைப்பின் சகோதரர் ராம்கி அவர்கள் என்னை தெளிவுபடுத்தியமைக்கு நன்றியை கூற கடமைப்பட்டுள்ளேன்...
ஒரு ஆண் தன்னை பெண்ணாக கருதி, திருநங்கையாக மாறவிரும்பும்போது முதலில் அவர்களுக்கு முழுமையாக உளவியல் கலந்தாய்வு கொடுக்கப்பட்டு, நிஜமாகவே அவர்கள் உடலும் மனமும் மாற்றத்தை விரும்புகிறதா? என்பதை சோதிக்கிறார்கள்.... பிறகு, ஒரு வருடங்கள் அந்த நபரை தொடர் உளவியல் கண்காணிப்பு செய்கிறார்கள், அதன்பிறகு மட்டுமே இறுதியான மருத்துவ சான்றிதழோடு, அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்...
மனநல கலந்தாய்வு, ஒருவருட உளவியல் தொடர் கண்காணிப்பு போன்ற விஷயங்கள் எல்லாம், திருநங்கையாக தங்களை பாவித்து குழம்பும் ஒருபால் ஈர்ப்பினரை தெளிவாக்கத்தான்...
நம் நாட்டை போன்ற பாலியல் கல்வியை “சரோஜா தேவி” புத்தகம் போல பாவிக்கும் ஒரு நாட்டில், சிறுவயது முதல் ஒரு மாறுபட்ட பாலீர்ப்பை சந்தித்து வாழும் எந்த ஒரு நபரும், இத்தகைய குழப்பத்தில் ஆழ்வது இயற்கையே... நீங்கள், நான் என பெரும்பாலோர் நம் பதின் வயதில், நம் பாலீர்ப்பை உணரும்போது “ஒருவேளை நான் திருநங்கையா?” என்று நம்மையே கேட்டுக்கொண்டிருப்போம்... அதன்பிறகு, பாலீர்ப்பை பற்றி அறிந்த பிறகு, நம்மை ஒருபால் ஈர்ப்பினராக நாமே அடையாளம் கண்டபிறகு அந்த குழப்பம் நம்மை விட்டு அகன்றிருக்கலாம்... ஆனால், அத்தகைய தெளிதல் அடையாத பலரும் கூட இங்கே வாழ்வது நாம் ஏற்றாக வேண்டிய கொடுமை, அவர்களை தெளிவாக இனம்கண்டு பிரிப்பது நம் முதல் மற்றும் முக்கிய பணியாக இருத்தல் வேண்டும்...
எனக்கு வெகுநாட்களாகவே இன்னொரு சந்தேகமும் இருக்கிறது...
பெண் தன்மை உடைய நபர்கள் எல்லோரும் கே அல்ல என்பதையும், அவர்களுள் ஏறக்குறைய சரிசமமான நபர்கள் ஸ்ட்ரைட் நபர்கள் தான் என்பதையும் நான் முன்பே உங்களுக்கு கூறியிருக்கிறேன்.... ஆனாலும், என்னுள் இப்போதும் உறுத்தும் ஒரு கேள்வி, “பெண் தன்மை உடைய ஆண்களில், ஸ்ட்ரைட் ஆண்களை விட கே  நபர்கள் ஒப்பீட்டளவில் கொஞ்சம் அதிகமா?” என்பதுதான் அந்த சந்தேகம்.... இது எந்த அளவுக்கு உண்மை? என்பது எனக்கும் இன்னும் முழுமையாக புரிபடவில்லை....
என் சந்தேகத்திற்கு ஒரு காரணம் இருக்கிறது...
“சிறுவயது முதலாக ஒரு ஆண், தான் இன்னொரு ஆண் மீது ஈர்ப்பு கொண்டிருப்பதை உணர்ந்து குழம்புகிறான்... அப்போது, தான் ஆண் இல்லையோ? என்கிற ஒரு சிறு குழப்பத்தில் ஆழ்கிறான்... அந்த பதின்வயது குழப்பம், அவனாகவே தெளிவு பெற கிட்டத்தட்ட சில வருடங்கள் ஆகிவிடுகிறது.... அந்த இடைப்பட்ட சில வருடங்கள், தான் ஆணா? தனக்குள் பெண்மை இருக்கிறதா? என்ற குழப்பத்தில் தன்னை அறியாமலேயே மெல்லிய பெண்மையை புகுத்திக்கொள்கிறான்.... ஆண் என்றால் பெண்ணின் மீதுதான் ஈர்ப்பு கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் தான் ஒரு பெண்ணாக உணரப்பட்டே ஆணின் மீது ஈர்ப்புகொள்ள வேண்டும் என்ற ஒரு அறியாமைக்குள் நம்மில் பலரும் வந்திருப்போம்... அது அவன் சார்ந்த நடை, பாவனை, நடவடிக்கைகளில் பிரதிபலிக்கும்போது, பெண்தன்மை மிக்கவனாக இந்த சமூகத்துக்கு வெளிப்படுகிறது.... சில வருடங்களில், தான் ஆண்தான் என்றும், தனக்கு இருப்பது சமபால் ஈர்ப்பு மட்டும்தான் என்பதை அவன் உணரும்போதும் மனதளவில் அவன் தெளிவானாலும், அவனுக்குள் ஏற்கனவே உள்புகுந்துவிட்ட அந்த பெண் தன்மை அவனுடனேயே நிலைபெற்று விடுகிறது.... இது எல்லா ஒருபால் ஈர்ப்பு ஆண்கள் வாழ்விலும் இருப்பதாக நான் கூறவில்லை... வெகுசில (அதாவது ஒரு பத்து சதவிகிதம்) ஒருபால் ஈர்ப்பு நபர்கள் இந்த பிரிவுக்குள் அடங்குவார்களா? என்ற குழப்பம் எனக்கிருக்கிறது”...
இந்த குழப்பம் பற்றியும் சகோ ராம்கி அவர்களிடம் கேட்டேன்....
“இதுபற்றி மேற்குலகில் ஒரு சர்வே எடுத்தாங்க விஜய்.... பெண் தன்மை மிக்க ஆண்களின் பாலீர்ப்பை பற்றி எடுத்தாங்க... ஆனால், அதில் நீங்க சொன்னபடி மாறுபாடல்லாம் வரவில்லை... எல்லா தரப்பை சார்ந்தவர்களும் சரிசமமாகவே பெண் தன்மை மிக்கவர்களில் இருந்தாங்க....” என்றார்....
ராம்கி சொல்வதை போலவே வைத்துக்கொண்டாலும் கூட, மேற்குலக நாடுகள் மாதிரி பாலியல் கல்வியை பதின்வயதுகளில் போதிக்கும் நாடுகளுக்கு அது சரியாக இருக்கலாம்... அவங்கள்லாம் பதின் வயதுகளிலேயே இதுபற்றியல்லாம் தெளிவா அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கு... ஆனால், நம் நாடு அப்படி இல்லையே... பாலீர்ப்பு பற்றிய குழப்பம் நிலவுவது இங்கதானே... அப்படிப்பட்ட சூழலில், சர்வே லாஜிக் இந்தியாவிற்கு பொருந்தாது என்பதையும் நாம் யோசிக்க வேண்டி இருக்கு....
சரி, இந்த லாஜிக் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகள் பற்றியல்லாம்விட, ஆராய்ச்சிக்கு உள்ளாக்கப்படும் பெண்ணிய தன்மை கொண்ட ஒருபால் ஈர்ப்பு நபர்களின் நிலைமை இங்கே “ஐயோ பாவம்!” ரகம்தான்...
இணைய டேட்டிங் தளங்கள் பலவற்றிலும் “வயதானவர்கள், பெண்ணிய தன்மை உடையவர்களுக்கு அனுமதி இல்லை” என்ற வாசகம் வாசலிலேயே இந்த நபர்களை ஒதுங்க சொல்கிறது.... இத்தகைய பெண்ணிய தன்மை உடைய ஒருபால் ஈர்ப்பு நபர்களின் உண்மையான விருப்பு, வெறுப்பு உண்மைகளை அறிவதற்கு முன்பே நம் மக்களே அவர்களை “பாட்டம்” வகையறாக்குள் இணைத்துவிட்டார்கள்....
 “ஒருபால் ஈர்ப்பு நபர் – பெண்ணிய தன்மை உடைய கே – திருநங்கை” என்று ஒன்றோடு ஒன்றை குழப்பி, மற்றவர்களையும் குழப்பாமல் கொஞ்சம் தெளிவாக்க முயன்றிருக்கிறேன்.... “ஒருவரை விட மற்றவர் உயர்வு” என கருதும் மனநிலை வந்தாலே, இந்த குழப்பங்களுக்கு அவசியம் இருக்காது....
எல்லோரையும் மனிதனாக நேசிப்போம்! மனிதத்தை காப்போம்!...