Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday 1 September 2014

அட நாயே....!!! - சிறுகதை...அதிகாலை மணி 5 இருக்கலாம்... முந்தையநாள் இரவு கொட்டிய மழையின் தாக்கத்தால் காற்று சில்லிட்டது... சாலையின் பள்ளங்களை மழைநீர் ஆக்கிரமித்து, வெளித்தோற்றத்தில் ஒரு பொய்யான சமதள பரப்பை உருவாக்கியிருந்தது... இன்னும் முழுமையாக விடியாத காலை என்பதால், மெல்லிருட்டு சூழ்ந்து, வழியில் பாதசாரிகள் கவனத்துடனேயே அடிகளை எடுத்துவைத்தனர்...
நடைப்பயிற்சி செய்யும் ஆசையோடு வந்து, பாதையை தேடிக்கொண்டே நகரும் பயிற்சி செய்யவேண்டியதாக ஆகிவிட்டது பலருக்கும்... அதில் கையில் சங்கிலியுடன் பிணைக்கப்பட்டிருந்த லாப்ரடார் வகை நாயோடு நகர்ந்துகொண்டிருந்த அந்த இளைஞனை நீங்கள் கவனித்தீர்களா?... வஞ்சமில்லாமல் வளர்ந்திருந்த “கொழுக் மொழுக்” உடல்வாகு, பார்ப்பவர்கள் ஓடிவந்து கன்னங்களை பிடித்து “ஜூ ஜூ ஜுஜுஜூ...” என்று கொஞ்சும் அளவிலான அப்படியோர் அழகு, அந்த குளிரான வெப்பநிலையிலும் கொஞ்சமும் குறையாத சுறுசுறுப்பு அந்த நடையின் வேகத்தில் பிரதிபலித்தது, கழுத்தில் மாட்டியிருக்கும் செயினும், நடக்கும்போது குதித்த வாலும்.... ஆமா, நீங்க இவ்ளோநேரம் நாயைத்தானே பார்த்திட்டு இருந்திங்க?... நாயை அழைத்துவந்த அந்த இளைஞனை காலை தாண்டி கற்பனை செய்ய வேண்டாம்... நம்ம ஹீரோ நாய் தாங்க...
“நாய்”னு சொன்னா அவருக்கு ரொம்ப கோபம் வரும்.... “உர்ர்.... உர்ர்...”னு உரும ஆரமிச்சிடுவார்... “ஜிம்மி”னு செல்லமா கூப்பிடுவோம்... ஜிம்மியின் முகம் வழக்கத்தைவிட இன்றைக்கு கொஞ்சம் “டல்” அடித்திருந்தது... பூங்கா ஒன்றின் இருக்கையில் அமர்ந்த இளைஞன், தன் காலுக்கடியில் சங்கிலியை மிதித்தபடி ஜிம்மியின் கழுத்தை வருடிக்கொண்டிருந்தான்...
அப்போதுதான் அவன் அலைபேசி அடித்தது, “ஹலோ.... இன்னிக்கு லாப்ரடார் பீமேல் டாக் மேட்டிங்’க்கு வருதுன்னு சொன்னிங்கள்ல, என்னாச்சு?”
“ஹெவி சைஸ் லாப் தான?”
“போன தடவை மாதிரி மேட் ஆகாம இருந்தாலும் பணம் தரமுடியாதுன்னு பிரச்சினை பண்ணக்கூடாது... பணம் , இல்லைன்னா ரெண்டு குட்டி... ஓகேதான?...”
இதை கேட்டதும் ஜிம்மியின் முகம் இன்னும் இறுக்கமானது... காலையில் இன்னொரு சாப்பாடு பிளேட்டை எடுத்து முதலாளி வாசலில் வைக்கும்போதே, இன்றைக்கு யாரோ ஒருத்தியை இவன் கூட்டிட்டு வந்து தன்னை இம்சை செய்ய போகிறான்! என்பதை உணர்ந்துவிட்டான்... இப்போது நேரமும் குறித்துவிட்டதில், ஜிம்மியின் முகம் கவலைகளின் உச்சத்தை எட்டியது...
எதேச்சையாக அப்போது தன் கழுத்தில் சங்கிலியோடு பிணைக்கப்பட்டிருந்த பெல்ட், கழுத்தைவிட்டு நழுவுவதை உணர்ந்தான் ஜிம்மி... முதலாளியை நிமிர்ந்து பார்த்தான்... அவன் யாரிடமோ “மேட்டிங்” குறித்து தீவிர ஆலோசனையில் இருந்தான்... தன் முன்னங்காலால் பெல்ட்டை கழுத்தின் வெளிப்பக்கம் தள்ள.... அட! ஆச்சர்யமாக அந்த பெல்ட் நழுவி கீழே விழுந்தது.... சற்றும் யோசிக்காமல் ஜிம்மி எடுத்த ஓட்டத்தை அதுவரை ஜிம்மியே கூட தன்னால் ஓடமுடியுமென நினைத்ததில்லை....
அரைமணி நேர நிற்காத ஓட்டம்... தன் எல்லையை கடந்து வெகுதூரம் வந்துவிட்டதாக சுற்றுப்புறம் சொன்னது... ஓடிவந்ததில் வெண்மையான தோலில் ஆங்காங்கே சகதியின் ஆசிர்வாதம்... மூச்சு இரைச்சலையும் தாண்டி, ஒரு பெருமூச்சு மெலிதாக எட்டிப்பார்த்தது... 
தாகம் தொண்டையை வறண்டுபோக செய்தது... சாலையோரத்து அழுக்குநீரை குடிக்க மனம் ஒப்பவில்லை... மெல்ல நடந்து நடந்து அந்த நகரத்தின் எல்லையை அடைந்துவிட்டதை போன்று தோன்றியது.... அதிக ஆள்நடமாட்டம் இல்லை, வாகன நெரிசல் இல்லை, ஒவ்வொரு தெருவை கடக்கும்போது “எல்லை பிரச்சினை” செய்த தெருநாய்கள் இல்லை, இவ்வளவையும் தாண்டி தெளிவான ஒரு நன்னீர் கண்மாய் ஒன்று பறந்து விரிந்து தண்ணீரை தேக்கி வைத்திருந்தது.... வேகமாய் ஓடி, தாகம் தீர தண்ணீரை அருந்தினான்... தன் அங்கங்களின் சேற்றை கழுவும் பொருட்டு, தண்ணீருக்குள் நீச்சல் அடித்ததான் ... 
ஒருவழியாக குடித்து, குளித்து முடித்துவிட்டு கரையேறி மரத்தின் நிழல் ஒன்றில் தஞ்சம் புகுந்தான்... சுற்றிலும் பார்த்தான்... மரம், செடிகள், தண்ணீர், பறவை போல இப்போ தானும் ஒரு சுதந்திர விலங்கு... பெருமை அவனை நிலைகொள்ள வைக்கவில்லை.... இதுதான் தனக்கான இடமென்று உறுதிசெய்துவிட்டு, திரும்பிய மறுகணம் திடுக்கிட்டு நின்றான்...
உடல் முழுக்க சேற்றோடும், ஆங்காங்கே காயங்களோடும் அழுக்காய் நின்ற ஒரு நாய் ஜிம்மியை வெறித்து பார்த்தபடி நின்றது...
“ஐயோ சாரி!... இது உன் ஏரியாவா?... நான் போயிடுறேன்” பயத்தில் நான்கடிகள் பின்னோக்கி நகர்ந்தான் ஜிம்மி...
“பயப்படாத... உன்ன ஒன்னும் செய்யமாட்டேன்.... யார் நீ?” சினேகமாய் கேட்டான் புதியவன்...
“நான் வீட்டை விட்டு ஓடிவந்துட்டேன்... எங்க போறதுன்னு தெரியல, அதான்...”
“ஒன்னும் கவலைப்படாத, இது என் ஏரியா தான்.... இங்கயே நீ இருக்கலாம்... இனி நீயும் நானும் நண்பர்கள்... ஓகேவா?” புதியவன் வாலை ஆட்டினான்... பதிலுக்கு வாலை ஆட்டி, தன் நன்றியை சொல்லிக்கொண்டு இருவரும் பேசியபடியே மதிய சாப்பாட்டிற்கு இடம் தேடி போனார்கள்....
“எங்க சாப்பிட போறோம்?” ஜிம்மி ஆச்சர்யமாக கேட்டான்...
“இன்னிக்கு இங்க பக்கத்துல ஒரு கல்யாணம்... மண்டபத்துக்கு பின்னாடிதான் நமக்கு இன்னிக்கு விருந்து...”
“மத்தவங்க சாப்ட்ட எச்சில் சாப்பாடா?” முகம் சுளிக்க கேட்டான் ஜிம்மி...
“ஆமா... அப்புறம் நம்மள என்ன மண்டபத்துக்குள்ள வச்சா சாப்பாடு போடுவாங்க?...”
“என்னைய என் முதலாளி, வீட்டுக்குள்ள வச்சுதான் சாப்பாடு கொடுப்பார்” சோகமாக சொன்னான் ஜிம்மி...
“அதல்லாம் வீட்டோட மட்டும்தான்... வெளில வந்துட்டா எல்லாம் இப்டிதான்... போகப்போக பழகிடும்...  இதுவரைக்கும் பால் சாதமும், பெடிக்ரீயும் மட்டும்தானே சாப்பிட்டிருப்ப?... இன்னிக்கு உனக்கு லெக் பீஸ் எடுத்துத்தறேன்”
“ஹ ஹா... சரி சரி... ஆமா, என் பேரு ஜிம்மி... உன் பேரு என்ன?”
“பேரா?... எனக்கு அதல்லாம் இல்ல...”
“பேர் கூடவா இல்ல?... அப்போ உன்னைய எல்லாரும் எப்டி கூப்பிடுவாங்க?” ஆச்சர்யத்தில் கேட்டான்...
“கூப்பிடத்தானே பேரு, என்னையதான் யாரும் கூப்பிடவே மாட்டாங்களே.... விரட்டுறதுக்கு வேணும்னா சனியன், மூதேவி, தோசி’ன்னு பல பேர்ல விரட்டுவாங்க...” சோகமாய் சொன்னான் புதியவன்...
“இதுக்கல்லாம் பீல் பண்ணாத... உனக்கு இப்போ நானே பேர் வைக்குறேன்... இனிமே உன்னைய நான் அப்டிதான் கூப்பிட போறேன்...”
“என்ன பேரு?”
“இனிமே உன் பேரு லைக்கா...”
“அய்யய்யோ... அது ரொம்ப பிரச்சினையான பேரு... ஊரே இப்போ அந்த பேரைத்தான் கிழிகிழின்னு கிழிக்குறாங்க...”
“ஏய், அது முதன்முதலா நிலாவுக்கு அனுப்பப்பட்ட நாயோட பேருப்பா...”
“ஆமா, இந்த தெருவ தாண்டவே வக்கில்லயாம், இதுல நிலாவுக்கு போன நாய் பேராம்.... வேணாம்பா....” இயலாமையோடு சொன்னான் புதியவன்...
“அப்போ, டைகர், டாமி... இப்டி எதாச்சும் பேரு?”
“நாய்க்கு போய் புலி, பூனையோட பேரை வச்சு ஏன்தான் குழப்பனும்?... எனக்கு பிடிச்ச ஹீரோ ஜாக்கி சான்.... அவரோட பேரான ஜாக்கியே வச்சுக்கவா?” ஆசையாக கேட்டான்....
“இந்த விஷயம் ஜாக்கி சானுக்கு தெரியாத வரைக்கும் ஓகேதான்.... படமல்லாம் கூட பாப்பியா நீ?”
“ஹ்ம்ம்... டீக்கடை, சலூன், ஷோரூம் இப்டி பல இடத்து வாசல்லையும் நின்னு பாப்பேன்... ராமநாராயணன் படம்னா ரொம்ப பிடிக்கும்... அவர்தான் நம்மள மாதிரி நாய்களை மதிச்சு படம் எடுத்திருப்பார்... இப்போவல்லாம் படமா எடுக்குறாணுக?..” அதற்கு பிறகு தொடர்ந்த வார்த்தைகளை அச்சேற்ற முடியாமைக்கு வருந்துகிறேன்....
“சரிவிடு... நீ சொன்ன மண்டபமும் வந்தாச்சு... உனக்கு போட்டியா நாலஞ்சு நாய்கள் நிக்குதே?” மண்டபத்தின் குப்பைத்தொட்டி அருகே விழ இருக்கும் இலைகளை ஆவலோடு எதிர்பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தன நான்கைந்து நாய்கள்...
“இந்த கட்டதொரைக்கு இதுவே வேலையா போச்சு... காலைலதான் சண்டை முடிஞ்சு, அடிச்சு தொரத்திவிட்டேன்... மறுபடியும் வந்துட்டாணுக...” கோபத்தில் உறுமினான் ஜாக்கி...
“உன் உடம்புல இருக்குற காயத்தல்லாம் பார்த்தா அடிச்ச மாதிரி தெரியலையே, யாரோ உன்னைய கடிச்ச மாதிரில்ல இருக்கு?” சிரித்தான் ஜிம்மி...
அதை கண்டுகொள்ளாதவனை போல இன்னும் தனக்குள் வெறியேற்றிக்கொண்டான் ஜாக்கி.... முன்னங்காலை மணலில் கிளறி, தன் கோபத்தை வெளிக்காட்டியபடியே சத்தமாக குரைத்தான்... மண்டபத்தின் அருகே நின்ற நான்கு நாய்களும் அந்த சத்தத்தில் தெறித்து ஓடின... சில அடிகள் தூரம் வரை அவற்றை துரத்திக்கொண்டே ஓடி, தன் எல்லையை கடந்தவுடன் மீண்டும் மண்டபத்திற்கு அருகே வந்து நின்றான் ஜாக்கி...
“நிஜமாவே நீ பலசாலிதான்...” பெருமைகொண்டான் ஜிம்மி...
“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு... இன்னும் முதல் பந்தி முடியல போல... அதுவரைக்கும் உன் கதைய சொல்லு.... ஏன் நீ வீட்ட விட்டு வெளில வந்த?” ஆர்வத்தோடு கேட்டான் ஜாக்கி...
“என்னைய ஒரு பொண்ணு கூட க்ராஸ் பண்ண என் முதலாளி பிளான் பண்ணார், அதான்...”
“ஏன், உனக்கு அந்த பொண்ணை பிடிக்கலையா?”
“எனக்கு பொண்ணுகளையே பிடிக்காதுப்பா... நான் ஒரு கே”
“ஓஹோ... அப்டியா?... அப்புறம்?”
“ஏற்கனவே போன வாரம் பெங்களூர்’லேந்து ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்து மேட்டிங்க்கு விட்டார்... அவ கன்னடத்துல பேசிட்டே என் பக்கத்துல வந்து உரசுறா... எனக்கு உடம்பல்லாம் கூசுச்சு.... தமிழ்கூட தெரியாத பொண்ணுகிட்ட கன்னடம் தெரியாத நான் என்னத்த விளக்கி சொல்லமுடியும்?...
“ஏய், நாய்க்கு கன்னடம் தெரியாதுன்னு சொல்றதல்லாம் வாசகர்கள் நம்பமாட்டாங்க....”
“நாய் தமிழ் பேசுறத நம்புறப்போ, இதையும் நம்புவாங்க... நீ கூலா இரு ஜாக்கி...”
“சரி, அப்புறம்?”
“இன்னுமென்ன அப்புறம்?... இன்னிக்கும் அதே போல இன்னொரு பொண்ணை வரசொல்லி பேசிட்டு இருந்தான்... இனிமே என்னால சமாளிக்க முடியாதுன்னு நான் ஓடிவந்திட்டேன்....” சிரித்தான் ஜிம்மி...
“கே’லாம் தப்பில்லையா?” தயக்கத்துடனேயே கேட்டான்...
“மனுஷங்ககூட ரொம்ப பழகி உனக்கும் அவங்களோட முட்டாள்த்தனமான மூடப்பழக்கங்கள் பழகிடுச்சு.... இயற்கையோட நெருங்கி வாழற நாமே இதை தப்புன்னு நினைக்கலாமா சொல்லு?”
“இல்லப்பா... நியூஸ்’ல இதை தப்பு, தப்புன்னு எப்ப பார்த்தாலும் நாலு பேரு பேசிகிட்டே இருக்காங்களே, அதான் கேட்டேன்...”
“அவங்கள பொருத்தவரைக்கும் பெரும்பான்மையானவங்களுக்கு இருக்குறதுதான் இயற்கையான உணர்வுகள், மற்றதல்லாம் இயற்கைக்கு புறம்பானவை... நாம மனுஷங்ககூட படுத்தாதான் அது தப்பு ஜாக்கி...”
“ஒரு விஷயம் சொல்லட்டுமா?” தயங்கியபடியே கேட்டான் ஜாக்கி...
“என்ன?”
“நானும் கே தான்...” சிரித்துக்கொண்டே சொன்னான் ஜாக்கி...
“சரி... அதுக்கு?”
“இன்னொரு விஷயம் சொல்லட்டுமா?”
“ஒண்ணுதான சொல்றேன்னு சொன்ன, இப்போ என்ன இன்னொரு விஷயம்?”
“நான் உன்னைய லவ் பண்றேன்...”

“அதை அப்புறம் பண்ணிக்கலாம்... அந்தா குப்பைத்தொட்டில இலைகள கொட்டுறாங்க... வா போகலாம்...” சொல்லிக்கொண்டே ஜிம்மி முன்னே ஓட, தனக்கான பதில் கிடைக்காத குழப்பத்தில் அதன் பின்னே சென்றது ஜாக்கியும்...
இலைகளில் வந்து விழுந்த கரித்துண்டுகளை அவ்வப்போது தரம் பிரித்து ஜிம்மிக்கு கொடுத்தான் ஜாக்கி... எலும்புகளை கடித்து, அவை தெறித்த சத்தம் பல அடி தூரத்தை கடந்தும் கேட்டது... இலைகளை மேய்வதற்கு வந்த மாடுகளை குரைக்கும் சத்தத்திலேயே தெறித்து ஓடவைத்தான் ஜாக்கி.... வயிறு முட்ட தின்னதோடு, வாயை சுற்றி ஒட்டியிருந்த மசாலாக்களை நாவால் வருடியபடியே இருவரும் வெளியே நகர்ந்தார்கள்...
“ஹப்பா... நல்ல சாப்பாடு... தாங்க்ஸ்பா... அப்டியே ஒரு குட்டித்தூக்கம் போட்டா.....” என்று சொல்லியபடியே மண்டப வாசலிலிருந்து தன்னை நோக்கி வரும் ஒரு உருவத்தை கவனித்த ஜிம்மியின் உடல் நடுங்கத்தொடங்கியது....
“ஏய், என்னாச்சு?... ஏன் ஒரு மாதிரி ஆகிட்ட?” முகத்தை நுகர்ந்தபடியே கேட்டான் ஜாக்கி...
“அது.... அது... அங்க வர்றது என் முதலாளிதான்... கூட ரெண்டு பேரை கூட்டிட்டு வரார்... என்னைய மறுபடியும் கூட்டிட்டு போகப்போறார்னு நினைக்குறேன்...” கண்கள் கலங்க சொன்னான் ஜிம்மி...
“பொதுவா வில்லன் ஆரம்பத்துலையே வந்திடுவாங்க, நமக்கு வில்லன் க்ளைமாக்ஸ்’ல வர்றாரா?... வரட்டும்.... நீ என் பின்னாடி வந்து நில்லு, நான் பார்த்துக்கறேன்” சொல்லியபடியே உறுமத்தொடங்கினான் ஜாக்கி...
“ஏய்... தமிழ் சினிமா பார்த்து அநியாயத்துக்கு கெட்டுப்போய்ட்ட... வர்றவன் கைல கம்பு இருக்கு பாரு.... வேணாம், ஓடிடலாம்... ரொம்ப அடிப்பாணுக... இன்னிக்கு நமக்கு பர்ஸ்ட் நைட் வேறப்பா....”
“என்னது?... என்ன சொன்ன?” ஆச்சர்யத்தோடு மகிழ்ச்சியும் கலந்து வார்த்தைகளில் தெறித்தது....
“அட ஆமா ஜாக்கி, நானும் உன்னைய லவ் பண்றேன்.... அடி வாங்கி உனக்கு படாத எடத்துல பட்டுடப்போவுது... வா, ஓடிடலாம்....” சொன்னபோதே சில அடிகள் தூரத்தை நெருங்கிவிட்டான் முதலாளி....
அந்த ரணகளத்திலும் ஜிம்மியின் முகத்தை நாவால் வருடியபடியே ஓட்டம் எடுத்தனர் இருவரும்...
“அலைகள் ஓய்வதில்லை படத்துல கார்த்திக்கும் ராதாவும் இப்டிதானே க்ளைமாக்ஸ்’ல ஓடுவாங்க?” ஓடும்போதே மூச்சு இரைத்தபடி கேட்டான் ஜாக்கி...
“இப்டி சினிமா பைத்தியத்தோட எப்டி வாழப்போறனோ!” சிரித்தபடியே இருவரும் முதலாளியின் கண் பார்வையை விட்டு மறைந்தனர்... (முற்றும்)


(கதைக்கு ஏற்ப படங்களின் பங்களிப்பிற்கு உதவிய நண்பர் அவிட் அவர்களுக்கு நன்றிகள்!)

13 comments:

 1. லொள்... லொள்... லொள்...
  அவங்க முதலிரவு தெருப்பசங்க தொல்லயில்லாம நல்லபடியா நடக்கணுமேன்னு மனசு கிடந்து அடிச்சிக்குது.. :)

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் நல்லபடியா நடக்கும், கவலைப்படாதிங்க அண்ணாச்சி.... கருத்திற்கு நன்றிகள் பல...

   Delete
 2. நல்ல கற்பனை... மெல்லிய புன்னகையோடு முழு கதையையும் படிக்க முடிந்தது...
  கிளிமாக்ஸ்ல எங்க இவங்க ரெண்டு பேரையும் பிரிச்சு சோகமா முடிசிடுவிங்கலோனு நெனச்சேன்.. அவங்களை சேர்த்து வைத்தமைக்கு எனது நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நாயைக்கூட சேர்த்து வைக்கலைன்னா என்னை கொன்னே புடுவீங்கன்னு தெரியும்... அதனால்தான் சுபமான க்ளைமாக்ஸ்.... கருத்திற்கு நன்றி சக்தி...

   Delete
 3. Ada naikku irukkura sudhandhiram namkku illaey! Hmmmmm.

  ReplyDelete
  Replies
  1. ஆம் அண்ணா.... நம் நிலைமை அவ்வளவு மோசமாத்தான் இருக்கு...

   Delete
 4. :-) Nice story... laughed for a while....

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி பிரபு...

   Delete
 5. Nice story nala karpana rendu parayum sathu vachathu romba thanks Vijay

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி நண்பா.....

   Delete
 6. அந்த லைகா நாய் போகும் வழியிலேயே இறந்து விட்டது என்பது கூடுதல் தகவல் :(
  ரொம்ப நாள் நாயின் பார்வையில் ஒரு கதை எழுதவேண்டுமென்று நினைத்திருந்தேன். நல்ல கதை.

  ReplyDelete
  Replies
  1. அதனால்தான் நம்ம ஜாக்கி கூட அந்த பெயரை மறுத்ததுன்னு வச்சுக்கலாம் தம்பி.... கருத்திற்கு நன்றிப்பா...

   Delete
 7. Awesome boss. U stand out in ur writing skills. This is yet another example..

  ReplyDelete