Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Friday, 17 November 2017

ஆம்பள.. - சிறுகதை...
“எப்டி மயக்கம் போட்டு விழுந்தாங்க?

“தெரியல... நான் காலேஜ் போயிட்டு வந்து பார்த்தப்போ, கிச்சன்ல விழுந்து கிடந்தாங்க...

“காலைல சாப்டாங்களா?

“தெரியல...
 
“பளட் பிரஷர், சுகர் எதுவும் இருக்கா?

“தெரியல

“வேற எதுக்காச்சும் ட்ரீட்மெண்ட் எடுக்குறாங்களா?

“அதுபத்திலாம் ஒன்னும் தெரியாது சிஸ்டர்..

“அவங்களுக்கு நீங்க என்ன வேணும்?

“டாட்டர்

ஏற இறங்க என்னை பார்த்துவிட்டு, ஒரு புழுவைப் பார்ப்பது போல என்னை கடந்து சென்றாள் அந்த செவிலிப்பெண்.. அவளை சொல்லி குறையில்லை.. அவள் இடத்தில் யாராக இருந்தாலும், இதைவிட அருவருப்பான பார்வையோடுதான் என்னை கடந்திருப்பார்கள்...

ஒரு தாய் மயக்கம்போட்டு விழுந்து, தலையில் ரத்தம் வழிந்தபடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்... மகளாக என் கண்களிலிருந்து இதுவரை ஒருசொட்டு கண்ணீர் கூட அரும்பவில்லை... ஏறக்குறைய அங்கே கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் எனது பதில் “தெரியாது என்பது மட்டும்தான்...

எதை தெரிந்துவைத்திருப்பது.. எப்படி தெரிந்துவைத்திருப்பது?... அவள் சொல்லியிருந்தால்தானே தெரியும்... சரி நான் கேட்கவில்லை என்பது அவளின் வாதமாக இருக்கலாம்... கேட்கக்கூடிய சூழலை உருவாகாததற்கும் கூட அவளின் அழுத்தமான பிடிவாதம்தானே காரணம்..

“சுகர் லெவல் நானூறுக்கு மேல போயிருக்கு... ஹைப்பர்டென்ஷன்... மைல்ட் ஹார்ட் அட்டாக்... கிட்னியும் சரியா பங்க்சன் ஆகல... அசைட்டிஸ் வேற... மல்டி ஆர்கன் பெய்லியர்மா.. எதை முதல்ல சரி பண்றதுன்னு பார்க்குறோம்... எங்களோட பெஸ்ட் நாங்க ட்ரை பண்றோம்மா

வரிசையாக நோய்களை அடுக்கிவிட்டு சென்றார் மருத்துவர்.. இது எனக்கு புதிய அனுபவம்தான்.. மருத்துவர் அப்படி சொல்லும்போதுகூட, கல் போலத்தான் நின்று கேட்டுக்கொண்டிருக்கிறேன்... ஒரு சீரியல் வசனத்தைப்போல, ஒரு சிறுகதையின் வரிகள் போலத்தான் அவற்றை என்னால் கடந்துசெல்ல முடிகிறது...

எல்லோரும் எதிர்பார்க்கும் அந்த உணர்வு என்னிடத்தில் அரும்பக்கூட இல்லையே ஏன்?... அம்மாவைப்பற்றி எனக்குள் பதிந்த பிம்பம்தான் அதற்கெல்லாம் காரணம்... அம்மா என்றால் எல்லோருக்குமே பொதுவான ஒரு பிம்பம் உண்டு... அன்பானவள், ஆதரவானவள், அரவணைப்பவள்... ஆனால் இவளோடு நான் முகம்கொடுத்துப்பேசி பல வருடங்கள் ஆகிவிட்டது... ‘அம்மா என்ற வார்த்தையைக் கூட நினைவு தெரிந்த நாள் முதலாய் உச்சரித்ததாக நினைவில்லை..

முதன்முதலாக எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் எனக்குள் தீப்பொறியாய் உதித்த கேள்வி , “அப்பா எங்கே? பல ஆயிரம் முறை கேட்டிருக்கிறேன்... கேள்வியை திசைதிருப்புவது, பேச்சை மடைமாற்றுவது, கேள்வியை புறக்கணித்து கடந்து செல்வதென ஒவ்வொருமுறையும் அவற்றை புறந்தள்ளி, அந்த மெல்லிய தீப்பொறியை நெருப்புக்குழம்பாக என் மனதிற்குள் வார்த்தது அந்த நிராகரிப்புதான்...

இனிஷியலுக்காகவும், சான்றிதழில் இடத்தை நிரப்புவதற்காகவுமான ஒரு கருவியாய் மட்டும்தான் அந்த நபரின் பெயர் இருந்திருக்கிறது... அவர் எங்கே? எதனால் இருவரும் பிரிந்தார்கள்? என்று எனக்குள் கேள்வி எழுவது இயல்புதானே...

முறையாக பதில்சொல்ல வேண்டிய கடமையை அவள் புறந்தள்ளியதால், முறைதவறிய பல கற்பனைகள்தான் என் காதுகளுக்கு எட்டின...

“உங்க அம்மாவுக்கும் வேற ஒருத்தருக்கும் தொடர்பு இருந்தது தெரிஞ்சு, கோவிச்சுக்கிட்டு போயிட்டாரு

“உங்கப்பா தங்கமானவரு பாப்பா... உங்காத்தாக்காரிதான் லம்பாடி கணக்கா திரியுவா.. கல்யாணத்துக்கு முன்னமே பழக்கவழக்கம் சரியில்லாதது தெரிஞ்சு அந்தாளு எங்கயோ வெளிநாட்டுக்கு போயிட்டாராம்...

“கல்யாணமான ஆறு மாசத்துல வயித்துல புள்ளையோட, தாலிய கழட்டிகுடுத்துட்டு வந்து நின்னா உங்கம்மா... உங்க தாத்தாவுக்கு அன்னியோட முடியாமப்போய், செத்தே போனாரு... குடும்பம் நடத்தவே லாயக்கில்லாதவ

என் அம்மாவா இப்படியல்லாம்?... இப்படிப்பட்ட எந்த வதந்திகளுக்குமே பதில் சொல்லவில்லை அவள்... பலநாள் அழுதபடி கேட்டிருக்கிறேன், “அசிங்கமா இருக்கும்மா அவங்கல்லாம் பேசுறது... ஏம்மா அவரு போனாரு கடைசியாக அந்த பிஞ்சு வயதில் மடியில் முகம் பதித்து, தேம்பி அழுது கேட்டபோதும் அந்த அழுத்தக்காரி மனம் நெகிழவில்லை...

“ஊருக்காரங்க ஆயிரம் பேசுவாங்க கண்ணு... நீ ஏன் கலங்குற

முதலில் வதந்திகளை கண்டு அவமானப்பட்டு கூனிக்குறுகினேன், பிறகு வருத்தப்பட்டு அழுதேன், ஒருகட்டத்தில் மனம் வேறு வழியில்லாது அதை நம்பவும் தொடங்கியது...

“நெருப்பில்லாமல் புகையாது... அம்மாவின் மேல் தவறில்லை என்றால், உண்மையை சொல்லியிருக்கலாமே... குறைந்தபட்சம் என்னிடமாவது

மெல்ல மெல்ல அவளை மனம் வெறுக்கத்தொடங்கியது... ஏதோ சொல்லத்தகாத தவறினை அவள் இழைத்துவிட்டதாக நம்பியபிறகு, அவளோடு முகம்கொடுத்தே பேசியதில்லை..

வெறுப்புணர்வு மேலோங்க, என்னை கட்டுப்படுத்தும் திறனும் அவள் இழந்துபோனாள்... அவளுமே பேச்சை குறைத்துக்கொண்டாள்... எதாவது அத்தியாவசிய கேள்விகள் கேட்கும்போது கூட, முகத்தை வெறுப்பாய் வைத்துக்கொண்டு, வார்த்தைகளில் நெருப்பை கொட்டுவது வாடிக்கையான நிகழ்வாகவே மாறிப்போனது... ஒரே வீட்டிற்குள் தனித்தனி தீவுகளுக்குள் இருக்கும் தனிமை அங்கே நிலவியது...

அவள் கிடத்தப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தேன்.. ஏதேதோ கருவிகள் உடலோடு இணைக்கப்பட்டு, ‘பீப்... பீப் என ஒருவித அச்சமான சூழலை அந்த அறைக்குள் உருவாக்கியிருந்தது... மெதுவாக நகர்ந்து கட்டிலுக்கு அருகாமையிலிருந்த இருக்கையில் அமர்ந்தேன்.. உறங்குகிறாளா? மயக்கத்தில் கிடக்கிறாளா? தெரியவில்லை.. வெகுகாலத்திற்கு பிறகு இவ்வளவு அருகாமையில் அவள் முகத்தை இப்போதுதான் பார்க்கிறேன்... இந்த உடலுக்குள்தான் எத்தனை வியாதிகள்!... எதையுமே அவள் வெளிக்காட்டிக்கொண்டதே இல்லை.. இப்படி ஒருநாள் மயங்கி விழுவாளென கற்பனை செய்திடகூட முடியாத அளவுக்குத்தான் நேற்றுவரைக்கும்கூட உழைத்துக்கொண்டிருந்தாள்... எனக்காக... எனக்காக மட்டுமே...

ஆறு மாத கருவை சுமந்துகொண்டு, கணவனை பிரிந்து, பிறந்த வீட்டோடு பிரிவை எதிர்கொண்டு தனியொரு மனுஷியாய் இந்த பதினெட்டு வருடங்களும் அவள் வாழ்க்கை மிகப்பெரிய ஒரு போராட்டக்களம்தான்... தையல் மெஷினை முன்னும் பின்னும் அசைத்துக்கொண்டிருந்த இந்த கால்கள் ஓய்வெடுத்து நான் பார்த்ததே இல்லை.. 

எவ்வளவோ அவளை நான் வெறுத்து ஒதுக்கிய காலத்திலும் எனக்கான வேலைகளை அவள் புறந்தள்ளியதே இல்லை.. ஆனால், இந்த எவ்விதமான போற்றத்தகுந்த விஷயங்களையும் கிரகித்து அவளோடு அன்பு பாராட்ட என் மனம் ஒப்பியதில்லை.. இப்போதும் மனதிற்குள் உறுத்திக்கொண்டிருக்கும் அந்த கேள்விக்கு, அவளின் மௌனம்தான் பதிலாக இருக்கக்கூடும்... “அப்பா ஏன்மா போனாரு?...

மெலிதாய் கண்களை திறந்தாள்... அருகில் நான் அமர்ந்திருப்பதைப்பார்த்து அவளுக்குள் உண்டான திகைப்பை, அந்த கண்களில் பார்த்தேன்... சுற்றிமுற்றி பார்த்தாள்... மருத்துவமனையில் இருப்பதை உணர்கிறாள்... அச்ச ரேகை முகத்தில் படரத்தொடங்கியது...

“ஒன்னும் பயப்படவேணாம்... சுகர் கூடிடுச்சாம், மயக்கம் போட்டுட்ட... சரியாகிடும்னு டாக்டர் சொல்லிருக்காங்க

என்னை ஏறிட்டுப்பார்த்தாள்... நான்தான் பேசுகிறேன் என்பதை ஒருமுறை உறுதிசெய்துகொண்டாள்...
“தண்ணி ஏதும் வேணுமா?

அவளை நிமிர்த்தி என் தோளோடு சாய்த்துவைத்து, தண்ணீர் கொஞ்சம் குடிக்கக்கொடுத்தேன்... மூச்சு அதிகமாக திணறியது... மீண்டும் படுத்துக்கொண்டாள்... 

பயமாக இருக்கிறது... எப்படியாவது பிழைத்துவிட வேண்டும் கடவுளே!...

அவள் கையை பிடித்துக்கொண்டேன்... கண்ணீர் விழியோரம் அவளுக்கு கசியத்தொடங்கியது...

“இப்ப ஏன் அழற?... பயப்படவல்லாம் ஒண்ணுமில்ல... பேசாம தூங்கு தலையை கோதிவிட்டேன்....

“அம்மா மேல கோபமில்லையா கண்ணு வார்த்தைகளை முடிப்பதற்குள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது...

“அதல்லாம் ஒண்ணுமில்ல... இப்ப எதையும் பேசவேணாம்...என் கையை எடுத்து அவள் முகத்தோடு ஒற்றி அழத்தொடங்கினாள்... சிலபல சமாதான வார்த்தைகள் சொல்லி அவளை சற்று ஆசுவாசப்படுத்தி நிதானிக்க செய்தேன்...

“அப்பாவோட பிரிஞ்சதுக்கு, நான் எதுவும் தப்பு பண்ணல கண்ணு... மத்தவங்க ஆயிரம் சொல்லட்டும், எம்பொண்ணு நீ நம்புடா என்னைய...

“.... மெளனமாக அமர்ந்திருந்தேன்... அழுதுவிடுவேன் போலிருக்கிறது... தொண்டையை சரிசெய்து என்னை இயல்பாக இருப்பதாய் காட்டிக்கொண்டேன்...

“உங்க அப்பாவுக்கு என்மேல விருப்பம் இல்லம்மா...

“...திகைப்போடு அவளை உற்று நோக்கினேன்..

“என்மேலன்னா, என்மேல மட்டுமில்ல.. அவருக்கு பொண்ணுங்க மேலேயே விருப்பம் இல்லையாம்... ஆம்பளைங்க மேலதான் விருப்பமாம்..

“அப்போ அப்பா கேவா? அதிர்ந்தேன்...

“ஆமா... அப்டிதான் ஏதோ சொன்னாரு... ரொம்ப கஷ்டமா இருக்கு, பிரிஞ்சிடலாம்னு சொன்னாரு... மத்தபடி தங்கமான மனுஷன்மா... அவரு என்ன சொல்றாருன்னு புரியல... ஆனா, நான் கூட இல்லாட்டி நிம்மதியா இருப்பேன்னு சொன்னாரு... சரின்னு ஒப்புக்கிட்டு நான் விலகிட்டேன் கண்ணு...

“இதை ஏன்மா யார்கிட்டயும் சொல்லல?... எல்லாரும் உன்னதான தப்பா பேசினாங்க?

“ஆம்பள ஆயிரம் தப்பு செஞ்சாலும் பொம்பளைய கொற சொல்ற உலகம்மா இது... நான் எப்புடி இத அவங்ககிட்ட சொல்றது... முக்கியமா உங்கப்பா சொன்ன விஷயம் எனக்கு முழுசா புரியவே பல காலம் ஆச்சும்மா...

“ஐயோ... சாரிம்மா இவ்ளோ நாள் நானும் உன்ன தப்பா புரிஞ்சிருந்தேன்... என்னை மன்னிச்சிடும்மா.... அவள் கைகளை என் முகத்தோடு ஒற்றி தேம்பி அழத்தொடங்கினேன்...

‘பீப்..... பீப்... பீப்... சற்று நீளமாக ஒலிக்கத்தொடங்கியது...

பரபரத்து ஓடிவந்த செவிலி ஒருத்தி, “கொஞ்சம் வெளில போம்மா என்னை வெளியே அனுப்பிவிட்டாள்... பின்னாலேயே நான்கைந்து செவிலிப்பெண்கள் சகிதம், மருத்துவர் நடையும் ஓட்டமுமாக உள்ளே நுழைந்தார்...

“பல்ஸ் டவுன் ஆகிடுச்சு சார்...

“ஈசிஜி உடனே எடுங்க... கார்டியாலஜிஸ்ட்க்கு இன்பார்ம் பண்ணுங்க...

“சிபிஆர் பண்ணுப்பா நீ

ஒருக்களித்து சாத்தியிருந்த கதவின் ஊடே திகைப்போடு இவற்றை பார்த்துக்கொண்டிருந்தேன்... மருந்து பாட்டில்கள் படார் படாரென உடைத்து ஊசியாக ஏற்றப்பட்டுக்கொண்டிருக்க, ஒரு மருத்துவர் அந்த படுக்கையின் மீதேறி அம்மாவின் நெஞ்சினை வேகமாக அழுத்திக்கொண்டிருக்கிறார்...

இன்னும் இரண்டு மருத்துவர்கள் அவசரமாக உள்ளே நுழைகின்றனர்...


“கொஞ்சநேரம் தூங்கு லக்ஷ்மி... சாப்புட எதாச்சும் செஞ்சு எடுத்துட்டு வரேன்..ரோஜாப்பூ மாலை போட்டிருந்த அம்மாவின் படத்திற்கு கீழே எரிந்துகொண்டிருந்த விளக்கிற்கு கூடுதல் எண்ணையை ஊற்றிவிட்டு கீழ் வீட்டு இந்திரா அக்காவும் வெளியே சென்றுவிட்டாள்...

வீட்டில் நிசப்தம் குடிகொண்டுவிட்டது... எப்போதும் நிலவும் அமைதிதான் என்றாலும், இது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய மயான அமைதி... ‘எனக்கென யாருமில்லை! என்று கடிகாரத்தின் நொடிமுட்கள் சத்தம்போட்டு சொல்லிக்கொண்டிருக்கும் நிசப்தம்..

அம்மாவின் புகைப்படத்தையே வெகுநேரம் வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன்...

யாரோ கதவு திறக்கும் சத்தம் கேட்க, கண்களை துடைத்துக்கொண்டு எழுந்து சென்றேன்...

குமார் மாமா யாரோ ஒரு வயதானவரை அழைத்து வந்திருக்கிறார்... துக்கம் விசாரிக்கவாகத்தான் இருக்கும்.. நாற்காலியை காட்டி அமரும்படி சொன்னேன்..

“இவரு யாருன்னு தெரியுமா? என்னருகில் வந்து கிசுகிசுத்தபடி வினவினார் மாமா...

“தெரியல.. இடமும் வலமுமாக தலையசைத்தேன்...

“உங்கப்பாம்மா... சமூகத்துல பெரிய அந்தஸ்துல இருக்கார் இப்போ... எஸ்கே க்ரூப் ஆப் கம்பெனிஸ்னு இருபத்திரண்டு ப்ராஞ்சஸ் இருக்காம்... வாய் பிழந்தார் மாமா..

எதையும் பொருட்படுத்தாது, அலட்சியமாக அவர்களை கடந்து மீண்டும் உள்ளே சென்றேன்...

வாங்கி வந்திருந்த மாலையை அம்மாவின் படத்தின் முன்பு வைத்துவிட்டு என்னருகில் வந்து நின்றார் அந்த ‘யாரோ நபர்.. நான் கண்டுகொள்ளவில்லை...

“கண்டிப்பா என்மேல உனக்கு கோபம் இருக்கும்னு தெரியும் எனக்கு... ஏன்னா உங்கம்மா என்னப்பத்தி எதுவும் நல்லவிதமா உன்கிட்ட சொல்லிருக்க வாய்ப்பே இல்ல..

“நல்லவிதமாவா?... அப்டி எதாச்சும் இருந்தா சொல்லுங்களே கேட்குறேன்.. பேசவைக்கிறார் பாதகன்...

“நான் கேதான்மா... குடும்ப சூழலால கல்யாணம் பண்ணினது தப்புதான்.. ஆனா நான் சொன்னதும் உங்கம்மா புரிஞ்சு விலகி போய்ட்டா... இதுதான் சரியான முடிவு... இப்ப நானும் நல்ல வசதியா இருக்கேன், அவளும் திருமண பந்தத்துல சிக்கி கஷ்டப்பட்டிருக்காம சுதந்திரமா இருந்தா...

“எங்கம்மா நல்லா இருந்தாளா?... நீங்க பார்த்திங்களா சார்?... அவங்கள விட்டுப்பிரிஞ்ச இத்தன வருஷத்துல ஒருதடவயாச்சும் வந்து பார்த்திருந்தா, எவ்ளோ சந்தோஷமா வாழ்ந்தாங்கன்னு பூரிச்சு போயிருப்பிங்க சார்....

“சார்னு சொல்லாதம்மா... நான் உன் அப்பா.. நாங்க அப்போ எடுத்த அந்த முடிவு, எங்க ரெண்டுபேரோட எதிர்காலமும் நல்லா இருக்கணும்னுதான்மா

“ஒரு கணவனை பிரிஞ்ச பொண்ணு இந்த சொசைட்டில சந்திக்கக்கூடிய அத்தனை கஷ்டங்களையும் எங்கம்மா அனுபவிச்சா... உனக்கென்ன எல்லாம் மயிரா போச்சுன்னு போய்ட்ட... நீ ஆம்பளைன்னு நிரூபிக்க ஒரு பொண்டாட்டியும் ஆச்சு, உன் ஆண்மைய நிரூபிக்க ஒரு புள்ளையும் ஆச்சு... நீ சரியானவன்னு இந்த சமூகத்துக்கு காட்டினதுக்கு பிறகு எச்சில் இலை போல எங்கம்மாவ தூக்கி போட்டுட்டு போய்ட்ட... இப்ப நான் அனாதையா நிக்குறதுதான் மிச்சம்... 
கோபம் தலைக்கு மேல் ஏறி கண்களில் நீர் கொட்டத்தொடங்கியது... எப்படி இந்த மனிதனால் தான் செய்த தவறை, இந்த சூழலிலும் நியாயப்படுத்தமுடிகிறது!

“நீ அனாதை இல்லம்மா... என் பொண்ணு... நடந்த எல்லா தப்புக்கும் மன்னிப்பு கேட்டுக்கறேன்... என்கூட வந்திடு... என்னோட எல்லா சொத்துகளுக்கும் நீதான்மா ஒரே வாரிசு...

“த்தூ... உன் பணத்துல ஒரு ரூபாய் நான் வாங்கினாலும், எங்கம்மாவுக்கு நான் செஞ்ச மிகப்பெரிய துரோகம் அது... இவ்ளோ நாள் எங்கம்மாவுக்கு நான் செஞ்ச பாவத்துக்கு கொஞ்ச காலம் நான் அனுபவிக்கனும்னு இருக்கு... தயவுசெஞ்சு நீ போய்டு... தையல் மெஷினின் அடிப்பகுதியில் முகத்தை புதைத்து அழத்தொடங்கினேன்... ‘அம்மா... அம்மா... அம்மா புலம்பிக்கொண்டே இருக்கிறேன்... எதாவது ஒரு ரூபத்தில் அவள் காதுகளுக்கு என் குரல் எட்டுமென்ற நம்பிக்கையில்!

Thursday, 9 November 2017

"அக்காவின் திருமணம்!" - சிறுகதை...
ஒன்பது மணிக்கு பேருந்தை பிடிக்கவேண்டியவன், ஏழரை மணிக்கு அவன் அறைக்கு வருவதாய் ஒப்புக்கொண்டிருக்கக்கூடாது... எப்போதுமே காமம் திரவமாய் வெளியேறிய பிறகுதான் இதுபோன்ற ஜென் நிலை மனதிற்குள் தோன்றுகிறது... என்ன செய்து தொலைக்க... கிளம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் பல கோணத்தில் எடுக்கப்பட்ட போட்டாக்களை அனுப்பி, “பிளேஸ் இருக்கு என்று அவன் சொன்னபோது, காந்தத்தை கண்ட இரும்புத்துகளாய் மனம் பரிதவிக்கத்தொடங்கிவிட்டது...
இப்போது அவசர அவசரமாக உடைகளை சரிசெய்துகொண்டு, ஒரு கேப் பிடித்து, சாப்பிடக்கூட நேரமில்லாதவனாக, பேருந்தை அடைவதற்கும், அது நகர்ந்து கொண்டிருப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது...

முதலில் இந்த பிளானட் ரோமியோவ அன்இன்ஸ்டால் பண்ணனும்... அநேகமாக இது ஆயிரத்து எட்டாவது முறையாக நான் எடுத்திருக்கும் தீர்மானமாக இருக்கலாம்... என்ன செய்வது, எல்லாம் அந்த ஹார்மோன் செய்யும் வேலை... 

செமிஸ்லீப்பர் இருக்கையில் சாவுகாசமாக சாய்ந்துகொண்டபோதுதான் ஆசுவாசமாக நிம்மதி பெருமூச்சு வெளியானது... பக்கத்து இருக்கையில் நாற்பது வயதுகளை கடந்த ஒரு முன்வழுக்கை ஆசாமி... ஒருவேளை அங்கு யாரோ ஒரு இளைஞன் அமர்ந்திருந்தால், விடியும்வரை ஏதோ ஒரு தொடுதலுக்காக இந்த பாழாய்ப்போன மனம் காத்திருந்து என் தூக்கத்தை கெடுத்திருக்கும்... இனி நிம்மதியாக உறங்கலாம், மனக்குறங்கும் கொட்டாவி விட்டுக்கொண்டது...

ஐந்து மணிக்கே திருச்சியை அடைந்துவிட்டேன்... டோல்கேட்டில் இறங்கியபோது மெல்லிய இருட்டு சுற்றிலும் படர்ந்திருந்தது... இந்த நேரத்தில் சிட்டி பஸ் வருவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை... பேரம் பேசாமல் ஒரு ஆட்டோவில் ஏறி, கேகே நகரை அடைந்தபோது வாசலில் அம்மா கோலமிட்டுக்கொண்டிருந்தாள்... என்னை பார்த்ததும் சில புள்ளிகளை அழித்துவிட்டு, அவசர கதியில் கோடுகளை மட்டும் அங்குமிங்குமாக இணைத்துவிட்டு எழுந்து வந்தாள்...

அருகில் வந்து, “என்னடா ஆளே இப்டி இலச்சுபோய்ட்ட.. என்றபோது, “நீங்க கொஞ்சம் சப்பியா இருக்கீங்க, நாட் இன்ட்ரஸ்ட்டட் எவனோ ஒருவனின் நிராகரிப்பு கண்முன் வந்துபோனது...

“அதல்லாம் ஒண்ணுமில்லம்மா... கடந்து உள்ளே நுழைந்தேன்...

அப்பா இன்னும் எழவில்லை... சமயலறையில் பால் காய்ச்சிக்கொண்டிருந்த அக்கா, பரபரப்பாக ஓடிவந்தாள்.... 

முப்பது வயது நெருங்கிவிட்டது... முகத்தில் சுருக்கங்களுக்கு பஞ்சமில்லை, போதாக்குறைக்கு தடியான லென்ஸ் கண்ணாடி வேறு...  ஏதேதோ எண்ணைகள் தேய்த்து, முடியும் கழுத்தோடு சுருண்டுகொண்டிருக்கிறது... பாவம், எவ்வளவு நிராகரிப்புகளை கடந்து வந்திருப்பாள்...

ஒருவழியாக திருமணம் கைகூடி, இதோ இன்னும் பதினைந்து நாட்களில் மணமேடையில் வெட்கத்தோடு அமர்ந்திருக்கப்போகிறாள்... மிகப்பெரிய சுமையை இறக்கிவைக்கப்போவதன் மகிழ்ச்சி உள்ளுக்குள் அரும்பியது..

“என்னடி புதுப்பொண்ணு, கல்யாணத்துக்கு ரெடி ஆயிட்டியா?

“புதுப்பொண்ணா?... இருபத்தெட்டு வருஷமா நான் பொண்ணுதான்... சிரிக்கிறாள்...

“பார்மாலிட்டிக்காகவாச்சும் கொஞ்சம் வெட்கப்படுடி...

கலகலப்பானது சூழல்... எப்படி வெட்கப்படுவாள்?... எத்தனையோ கோணங்களில் வெட்கப்பட்டு, எல்லாம் வேதனையில் முடிந்த தருணங்கள் ஆயிற்றே... 

காபி ஆற்றிக்கொடுத்துக்கொண்டே, மாப்பிள்ளை புராணம் பாடத்தொடங்கினாள் அம்மா... 

“பெரிய இடம்டா தம்பி... பையன் ஏதோ ஐடி கம்பெனில பெங்களூர்ல இருக்காராம்... குடும்பத்துல எல்லாருமே தங்கமானவங்க... கருமண்டபத்துல சொந்த வீடு இருக்கு... இந்துவ பாக்கனும்னு நெனச்சா ஒரு எட்டுல போயிட்டு வந்துடலாம்... அடுத்த மாசத்தோட மாப்பிள்ளைக்கு கல்யாண கெரகம் முடியுதாம்... அதான் ஐப்பசிலையே நல்ல நாளா பார்த்து பேசியாச்சு

நாங்கள் யாருமே எதிர்ப்பார்த்திடாத மிகப்பெரிய சம்மந்தம் இது... காலதாமதமாக இருந்தாலும், கடவுள் கண்ணை திறந்ததே புண்ணியம்தான்...

சற்றுநேரம் தூங்கி எழுந்தேன்...

ஹாலில் அப்பா ஏதோ கணக்கு வழக்குகளை புரட்டிக்கொண்டிருந்தார்... ஒற்றை ஆளாய் பரபரத்துக்கிடந்திருப்பார், இனி நானும் பொறுப்புகளை ஏற்கவேண்டும்... கம்பெனியில் முன்பணமாக வாங்கியது, சேமித்து வைத்திருந்தது என்று மூன்று லட்சம் ரூபாய்களை எடுத்துக்கொண்டு அப்பாவின் முன்பு அமர்ந்தேன்...

என்னைப்பார்த்ததும் மெலிதாய் சிரித்துக்கொண்டே, அந்த நோட்டினை மூடிவைத்தார்.. இதுநாள் வரை பார்த்திடாத ஒரு நிறைவை அவர் கண்களில் பார்க்கிறேன்... டயபெட்டிஸ், ப்லட் பிரஷர் என்று எப்போதுமே அரை மயக்கத்தில் ஈசி சேரில் சாய்ந்திருக்கும் அப்பாவா இது?, இவ்வளவு உற்சாகத்தோடு ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு பார்த்ததாய் ஞாபகம்... 

அவர் முன்பிருந்த டீப்பாயின் மீது அந்த பணக்கட்டினை வைத்தேன்... “என்ன? என்பது போல புருவத்தை உயர்த்தி என்னை ஏறிட்டார்...

“எதாச்சும் செலவுக்கு ஆகும்லப்பா..

“கடனா வாங்குனியா?

“இல்லப்பா... என்னோட சேவிங்க்ஸ்தான்..

விசித்திரமாக என்னை ஏறிட்டார்... இவ்வளவு காலமாக பொறுப்புகள் உணராது சுற்றித்திரிந்த தன் மகனா, இப்போது கையில் சில லட்சங்களோடு அக்காவின் திருமணத்தை எடுத்து நடத்த வந்திருக்கிறான்?... அதனை கிரகிக்கவே அவருக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது...

“மண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுத்தாச்சாப்பா? நானே பேச்சினை மடைமாற்றினேன்...

“குடுத்தாச்சுப்பா... அவசரத்துல வைக்குறதால எதிர்பார்த்த மண்டபம் எதுவும் அமையல... மணப்பாறை ரோட்ல வசந்தம்னு ஒரு மண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுத்தாச்சு.. சமையலுக்கு நம்ம காரைக்குடி பக்கமே பேசிராலாம்னு ராசு மாமா சொன்னாரு...

மண்டபம், சமையல், உறவினர்களுக்கான தங்குமிடம் தொடங்கி திருமணத்திற்கு வந்து செல்பவர்களுக்காக கொடுக்கப்படும் தேங்காய் பழம் வரைக்கும் அப்பாவே ஏறக்குறைய எல்லாவற்றையும் செய்துமுடித்துவிட்டார்..

“ஆர்க்கெஸ்ட்ரா எதுனாச்சும் வைக்கலாம்ப்பா

“எதுக்குடா அனாவசிய செலவு

“என்னங்க அனாவசிய செலவு?... அடுத்து நம்ம அரவிந்து கல்யாணத்துக்கு எப்டியும் மூணு நாலு வருஷமாகும்... கொஞ்சம் சிறப்பா செய்யலாம்ல இப்ப

“சூப்பர் சிங்கர் யாராச்சும்...

“அவங்கல்லாம் காஸ்ட்லிம்மா... லோக்கல் ட்ரூப் ஒன்னு இருக்கு, நல்லா பாடுவாங்க... ரேட் விசாரிக்கிறேன்...

ஒவ்வொரு விஷயங்களுக்கும் ஒரு வாத பிரதிவாதம் முடிந்து, இறுதியில் பெரும்பான்மையினரின் கருத்து எங்களுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டது...

கறி வாங்கி வந்து அம்மா சமையலில் ஐக்கியமாகிவிட்டாள்... அப்பாவும் நானும் திருமண அழைப்பிதழில் பெயர்களை எழுதிக்கொண்டிருந்தோம்... 

ஏதோ நினைவில் வந்தவராக அப்பா, “ஒரு எட்டு கருமண்டபம் வரைக்கும் போயிட்டு வந்திடேன் என்றார்...

“எதுக்குப்பா?

“இல்ல... மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள பார்த்து அறிமுகப்படுத்திக்கத்தான்... நல்ல மனுஷங்க... இப்ப நீ போய் பார்த்தா அவங்களுக்கு ஒரு மரியாதையா இருக்கும்... அதான்..

நான் மறுக்கவில்லை... மதியத்திற்கு மேல் சென்றுவர வேண்டும்... என் அக்கா வாழ்க்கைப்படப்போகிற குடும்பத்தை நானும் நேரில் பார்க்க வேண்டும்தான்... ‘எதற்காக வந்தாய்? என யாராவது கேட்டால்?.... மாப்பிள்ளைக்கு ட்ரெஸ் எடுக்குறதப்பத்தின்னு ஏதாவது சொல்லி சமாளித்துக்கொள்ளலாம்....

ஈரலும் கறியுமாய் அம்மாவின் அன்பு இலையில் அடுக்கப்பட்டது.. தொண்டை வழியே ஆடு கடத்துவதாக உணரும் அளவிற்கு வயிறு முட்ட சாப்பிட்டேன்... 

ஒரு குட்டித்தூக்கம் போட்டபிறகு, மாப்பிள்ளை வீட்டை நோக்கி பைக்கை செலுத்தினேன்...

கருமண்டபம் பகுதி எனக்கு ஓரளவு பரிச்சயமானதுதான்... எத்தனையோ முறை ஹரியை பார்க்க வந்திருக்கிறேன்... அந்த ‘வி நெக் கருப்பு டீஷர்ட் அணிந்து அவன் நடந்துவரும் அழகிற்கு தில்லை நகரையே தாரை வார்க்கலாம்... அழகாய் சிரித்தபடி, ‘ஹாய் அரவிந்த் என்று சொல்லும்போதே ஒட்டுமொத்தமாய் என் ஆறடி உடலும் சிலிர்த்துப்போகும்... இப்போது எங்கே இருப்பான்?... இது இப்போதைக்கு அனாவசியமான தேடல்... வந்த வேலையை முதலில் பார்க்கலாம்...

இதோ இதுதான் அந்த மூன்றாவது தெரு... பச்சை பெயின்ட் அடித்த வீடு, அதுதான்... வாசலில் ஸ்விப்ட் கார் நிற்கிறது.. “பெரிய இடம் என்று அம்மா அழுத்தி சொன்னதன் அர்த்தம் புரிந்தது... விசாலமான கேட்டின் வழியே உள்ளே எட்டிப்பார்க்க, விலையுர்ந்த மேல்நாட்டு நாய் ஒன்று குரைக்கத்தொடங்கியது... அக்காவிற்கு நாய் என்றாலே அலர்ஜி, அக்காவின் போராட்டம் வாசலிலேயே தொடங்கவேண்டும்!... காலிங் பெல்லை அழுத்தினேன்...

காதோரம் நரை வழிந்த ஒரு மத்திம வயது பெண்மணி, கதவை ஒருக்களித்து திறந்து எட்டிப்பார்த்தார்...

“யாருப்பா? கனிவாகத்தான் விசாரிக்கிறார்... மாப்பிள்ளையின் அம்மாதான் போலும்...

“நான் அரவிந்த்... இந்துவோட ப்ரதர்... இனி இப்படி சொல்லித்தான் அறிமுகமாகவேண்டும்...

“ஓ வாப்பா வாப்பா.... கதவை முழுதாய் திறந்து வாஞ்சையோடு உள்ளே அழைத்து சென்றார்...

கிரானைட் கற்கள் பதித்த ஹால், சுவற்றில் நாற்பது இன்ச் பிளாஸ்மா டிவி, துளியளவு தூசி படியாத வெல்வெட் சோபா, சுவற்றில் நாகரிகத்துக்கான அடையாளமென நினைத்துக்கொண்டு மாட்டப்பட்டிருக்கும் புரியாத மாடர்ன் ஆர்ட் சித்திரங்கள், ஷோ கேசில் அழகான காஸ்ட்லி பொம்மைகள்...

க்ளாசில் பழச்சாறு கொண்டுவந்து கொடுக்க ஒரு பணியாள், அநேகமாக மூன்று நான்கு அறைகள் இருக்கக்கூடும்...

“எதுக்கு தேவையில்லாம ரூம்ல லைட் எரியுது மின்சாரத்தைக்கூட அணு அணுவாக சிக்கனப்படுத்தி வாழ்ந்த எங்கள் குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய சம்மந்தம் என்பது இன்னுமே என்னால் நம்பமுடியாத புதிராய் மனக்கண் முன் நிற்கிறது...

“சென்னைல வேலை பார்க்குறதா சொன்னாங்க, எப்போப்பா வந்த? என் திகைப்பு சற்று இளைப்பாறியது...

“இன்னிக்குதான் வந்தேன்மா... லீவ் இப்பதான் கிடைச்சுது...

“சரிப்பா... கல்யாண வேலைலாம் எப்டி போகுது?... இன்விட்டேஷன் குடுக்க ஆரமிச்சாச்சா?

“அல்மோஸ்ட் எல்லா வேலையையும் அப்பாவே முடிச்சுட்டார்... இன்விட்டேஷன் நாளைலேந்து கொடுக்கணும்...

“வீடல்லாம் பிடிச்சிருக்கா தம்பி?.. ஒன்னும் கவலை வேணாம்... இந்துவ எங்க பொண்ணு மாதிரி பார்த்துப்போம்... என் பையனும் தங்கமானவன்ப்பா... ரொம்ப டேலன்ட் கூட என்று தொடங்கி கிட்டத்தட்ட எல்கேஜியில் ‘லெமன் இன் தி ஸ்பூன்இல் சோப்பு டப்பா பரிசாக வாங்கியது முதல் அத்தியாயங்களாக மகன் புராணம் பாடத்தொடங்கிவிட்டார்... 

கையில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட சில ஆல்பங்களை புரட்டியே ஆகவேண்டுமென நச்சரிப்புகள் வேறு... வேறுவழியின்றி சில ஆல்பங்களை கடனுக்கென திறக்க, அப்போதுதான் மாப்பிள்ளையின் கொஞ்சம் பழைய புகைப்படங்களை பார்த்து திடுக்கிட்டேன்...

இதுவா மாப்பிள்ளை?... அக்கா வாட்சப்பில் அனுப்பிய புகைப்படத்தில் மழித்த முகமாய், முன்நெற்றி வழுக்கையை மறைக்கும் முடியோடு கைகட்டி நிற்கும் ஒரு அம்மாஞ்சி மாப்பிள்ளையைதானே பார்த்தேன்...

இந்த புகைப்படத்தில் பிரெஞ்ச் பியர்ட் வைத்து, சற்று மாநிறமாய், கழுத்து வரை வழியும் முடியுமாக நிற்கும் இவனை நான் எங்கோ பார்த்திருக்கிறேனே...

“இது மூணு வருஷத்துக்கு முன்ன எடுத்ததுப்பா.... சென்னைல வர்க் பண்ணான் அப்போ... ரௌடி மாதிரி ஹேர்ஸ்டைல் பார்த்தியா... இப்போதான் எல்லாத்தையும் மாத்திருக்கான்...

கடவுளே!... இதென்ன புது சோதனை...

இவனை இதற்கு முன்பு பார்த்திருக்கிறேன்... பார்த்திருப்பது மட்டுமானால் இங்கே சிக்கல் இல்லையே, இவன் கூட படுத்திருக்கிறேனே... பெயர், விபரங்கள் எதுவும் நினைவிலில்லை.... ஆனால், இந்த பிரெஞ்ச் பியர்ட் என்னால் மறக்க முடியாது.. உடலில் சற்று கடுமையான வலியல்லாம் கூட உண்டானது இவன்கூட இருந்தபோதல்லவா!...

“மனுஷனே இல்லடா அவன்... இங்க பாரு இடம்பெல்லாம் சிவந்துபோய்... கடிச்சு வைக்கிறாண்டா
தலை சுற்றியது எனக்கு...

அவசரமாக அங்கிருந்து வெளியேறி, வீட்டை நோக்கி நகர்ந்தேன்...

எப்பாடுப்பட்டாவது இந்த திருமணத்தை நிறுத்தியாக வேண்டும்.... எப்படி?... அப்பாவிடம் உண்மையை சொல்லியா?... என் கழுத்தைத்திருகி, சுவற்றோடு அடித்து கொன்றே விடுவார்... அக்காவிடம் இதனையல்லாம் புரிந்துகொள்ளும் அளவிற்கு பக்குவம் இல்லை... உலகம் தெரியாத கிணற்றுத்தவளை அவள்!...

கடவுளே!.. இந்த திருமணத்தை என்ன செய்தாவது நான் நிறுத்தியே ஆகவேண்டும்... அதற்குண்டான மனவலிமையை எனக்குத்தா ஆண்டவா!...

எதிர்பார்த்தது போலவேதான் எதிர்வினைகளும் அமைந்தன...

“என்னடா ஆச்சு உனக்கு?... ஏன் கல்யாணத்த நிறுத்த சொல்ற? அம்மா பதறினாள்...

“பொறுப்பா பணம்லாம் குடுத்ததும் திருந்திட்டான் போலன்னு நம்பினேன்... இப்போ சொந்த அக்கா கல்யாணத்துக்கே குறுக்க நிக்குறான்... யூஸ்லஸ் அம்மா வழக்கம்போல உறுமினார்... 

அக்காவிற்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை... எல்லாம் சுபமாய் அமையும் வேளையில் நான் வந்து கெடுக்கப்போவதாய் என்மீது எரிச்சல் படுகிறாள் போலும்... 

“ஐயோ நான் சொன்னா உங்களுக்கு புரியாது... அந்த மாப்பிள்ளை வேணாம்ப்பா...

“ஏன் நீ எதுவும் மைசூர் மகாராஜா வீட்ல மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கியா?

“ஐயோ அவர் ஆள் ரொம்ப சுமாரா இருக்கார்... வழுக்கைத்தலை வேற

“உங்க அக்காவுக்கு முப்பது வயசு நெருங்குதே, அது தெரியுமா உனக்கு?

“வேலையும் நிரந்தரம் இல்லாததுப்பா... ஐடி... என்னிக்கு வேணாலும் வீட்டுக்கு அனுப்பிடலாம்...
 
“நீயும் ஐடி தான?... அதுமட்டுமில்ல... வேலையே இல்லைன்னாலும், நாலு தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடுற அளவுக்கு சொத்து இருக்கு

நான் இப்படி ஏதாவது முட்டாள்த்தனமான காரணங்களை அடுக்குவதும், அவர் அதற்கு விதண்டாவாதம் புரிவதுமாகவே அந்த யுத்தம் நீடித்துக்கொண்டிருந்தது... அப்பா ஒரு விடாக்கண்டன்... தடுக்கி இடறுவதை கூட, தானாக குனிந்ததாக தர்க்கம் செய்பவர்... எந்த காரணமும் அவரிடம் எடுபடாது, என் எந்த நோக்கமும் அங்கு பலிக்காது...

என்னதான் செய்வது!

“ஹலோ...

“சொல்லுங்க... யாரு?

“நான் இந்துவோட பிரதர்...

“ஓ நீங்களா?... சொல்லுங்க மச்சான்... வீட்டுக்கு வந்திங்களாம், அம்மா சொன்னாங்க... நான்தான் உங்கள மிஸ் பண்ணிட்டேன்...

“ஒரு முக்கியமான விஷயம் பேசணும்... இப்போ ப்ரீயா நீங்க?

“இப்போவேவா?... இன்விட்டேஷன் குடுக்க தஞ்சாவூர் கிளம்பிட்டு இருந்தேன்... சரி ஓகே... வீட்டுக்கு வரவா?

“இல்ல வேணாம்... கபே காபி டே வாங்க... கொஞ்சம் பெர்சனலா பேசணும்

ஐந்து நிமிடங்கள் கூட அங்கு என்னால் பொறுமையாக அமரமுடியவில்லை... கண்ணாடி திரையின் வழியே வாசலையே எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்... எப்படி அவனிடம் பேச்சை தொடங்குவது? என்ன பதில் சொல்லப்போகிறான்?... சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட, சண்டைக்காரன் காலில் விழுவதென முடிவு செய்தாகிவிட்டது... உதடு வரண்டது, ஏசி குளிரிலும் வியர்த்து கொட்டியது...

காரிலிருந்து இறங்கி உள்ளே வருகிறான்... புகைப்படத்தைவிட இன்னும் சற்று சிவப்பாக தெரிகிறான்... பேசியலின் புண்ணியமாக இருக்கக்கூடும்... பார்க்க சாதுவாகத்தான் இருக்கிறான்... சொல்லிப்பார்க்கலாம், சரிவரவில்லை என்றால் மிரட்டினாலும் வழிக்கு வருவானா?...

நான் கை தூக்கி அடையாளம் காட்டினேன்... என்னை பார்த்ததும் சட்டென அவன் மனதிற்குள் ஒரு ஷாக்... கண்களில் ஒரு மிரட்சி... என்னை இன்னும் அடையாளம் வைத்திருக்கிறான்...தேவையற்ற விளக்கங்கள் அவசியமில்லை... 

என்னெதிரே அமர்ந்தான், பயத்தை மறைக்கும் பொருட்டு சிரித்தபடியே என்னை பார்த்தான்...

“சொல்லுங்க அரவிந்த்... என்ன விஷயம்? மிக இயல்பாக என்னிடம் எப்படி இவனால் பேசமுடிகிறது?...

“என்ன விஷயம்னு உங்களுக்கு தெரியாதா என்ன? சற்று வன்மையாக வார்த்தைகளை உதிர்த்தேன்...

“தெரியலையே... கல்யாண விஷயம் பத்தியா? நான் மறந்திருப்பேன் என்று நினைக்கிறானா?... அல்லது ஏமாற்றி மணம் முடிக்க துணிந்துவிட்டானா?...

“உனக்கு என்னய்யா நான் துரோகம் பண்ணேன்?... நீ இப்ப பண்ணிட்டு இருக்குற விஷயத்தால, என் குடும்பமே பாதிக்கப்படும்னு தெரியாதா?

“ஹலோ மிஸ்டர் அப்டி என்ன தப்பு பண்ணேன்?

“என்கூட செக்ஸ் வச்சுக்கிட்டதை மறந்துட்டியா?

“மியூட்சுவலா தானே வச்சுகிட்டோம், உன்ன ரேப் ஏதும் பண்ணலையே!

“நீ கேய்யா

“சோ வாட்?.... நம்ம நாட்ல கேஸ் பொண்ணுகள கல்யாணம் பண்ணிக்கர்றது புதுசா என்ன?... எங்க மனசாட்சிய தொட்டு சொல்லு, நீ கல்யாணம் பண்ணிக்கப்போறதில்லையா?

“உன்னோட ஓரியன்டேஷன் எனக்கு தெரிஞ்சும், உன்கூட செக்ஸ் வச்சுகிட்ட பிறகும் எப்டி என்னால இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியும்?... இது என் அக்காவோட கனவுடா... தயவுசெஞ்சு அதல்லாம் சிதச்சிடாத

“டிராமாட்டிக்கள் டயலாக்ஸ் வேணாம் அரவிந்த்... நான் எதையும் கலைக்கல... என்னைப்பத்தி எல்லாம் எங்க வீட்டுக்கு தெரியும்... இப்ப போர்ஸ் பண்ணித்தான் இந்த கல்யாணத்துக்கே ஒத்துக்க வச்சிருக்காங்க... இப்போ நானும் பொறிக்குள் மாட்டின எலிதான்... எனக்குன்னும் எவ்ளோ கனவுகள் இருந்துச்சு, அதல்லாம் மறந்துதான் இப்போ ப்ராக்டிக்கல் லைப்க்கு மாற கத்துட்டு இருக்கேன்...

எனக்கு தாழமாட்டாத கோபம் தலைக்கு ஏறியது.. என்னெதிரே கவிழ்க்கப்பட்டிருந்த அந்த கண்ணாடி குவளையால் அவன் தலையை பதம் பார்த்துவிடலாமா? என்று ஒருகணம் யோசித்து அடங்கினேன்... தவறை தெரியாமல் செய்பவனாக இருந்திடும் பட்சத்தில் காரண காரியங்கள் சொல்லி புரியவைக்கலாம், ஆனால் விளைவுகள் எல்லாம் தெரிந்துமே இவன் பிடிவாதமாக அந்த தவறை செய்வேன் என்கிறான்... என்ன செய்வது?..

“நீ ஆம்பளைன்னு இந்த ஊருக்கு நிரூபிக்க ஒரு கஷ்டப்படுற வீட்டுப்பொண்ணுதான் பகடையா உனக்கு?

“ப்ராக்டிக்கலி அதான் உண்மை... இதை ஓப்பனா ஒத்துக்கிட்டதால நான் திமிரா பேசுறேன்னு நினைக்காத... நான் என்னதான் பொய் சொல்லி மழுப்பினாலும், இந்த உலகம் அப்படிப்பட்ட நிரூபிப்பை உன்கிட்டயும் என்கிட்டயும் எதிர்பார்க்குது...

“உனக்கு ஒரு சிஸ்டர் இருந்தா எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஒத்துப்பியா?... மனசாட்சிய தொட்டு சொல்லு

“கண்டிப்பா மாட்டேன்... ஆனா, இப்டி உன்கிட்ட புலம்பிட்டு இருக்க மாட்டேன்... வீட்ல உண்மைய சொல்லி கல்யாணத்தை நிறுத்திருப்பேன்... உன்னோட ஆண்மையின் வீரியத்தை வீட்ல குறைச்சிக்கக்கூடாதுன்னுதான இப்ப என்கிட்ட புலம்புற!... முதல்ல உன்னோட அழுக்கை சரி பண்ணிக்க அரவிந்த், அப்புறமா அடுத்தவங்களை தேடி வந்து குறை சொல்லலாம்... சட்டென எழுந்து சென்றுவிட்டான்...

காபி கொண்டுவரப்பட்டு என்னெதிரே வைக்கப்பட்டது... அந்த குவளையின் விளிம்பில் அமர்ந்த ஈ, அதன் சுவையை ருசிக்க எட்டிப்பார்த்துக்கொண்டே இருக்கிறது... விழுந்தால் காபி கடல், ஆசை தீர குடித்துவிட்டு தத்தளித்து சாகலாம்... அல்லது, கீழே சிதறப்போகும் துளிக்காக எங்கோ ஒரு மூலையில் பொறுமையாக காத்திருக்கலாம்...

எழுந்து நடக்கத்தொடங்கினேன்...

‘பீப் பீப் பிளானட் ரோமியோ அவசர தகவல் அனுப்பியது... அருகில் யாரோ இருப்பதாக ஆசை தீட்டியது... ஆயிரத்து ஒன்பதாவது முறையாக எனது தீர்மானம் வெற்றிபெற்றது... அந்த ஆப்பை டீஆக்டிவேட் செய்தேன்!..(முற்றும்)