Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Showing posts with label ஏ.உண்மைகள். Show all posts
Showing posts with label ஏ.உண்மைகள். Show all posts

Tuesday, 2 June 2015

நெய்ல் பாட்ரிக் ஹாரிஸ் - கதைகளை விஞ்சிய காதல் நாயகன்!






 “கே காதல், திருமணமல்லாம் சாத்தியம் இல்லைங்க... ஏதோ அப்போதைய தேவைக்காக ஒன்னு சேருவாங்க, போர் அடிச்சதும் ப்ரேக்கப் செஞ்சுப்பாங்க... இதுல எங்க இருக்கு காதல்? இப்டி வெளிப்படையா பேசுற எத்தனையோ ஆட்களை நான் பார்த்திருக்கேன்... ஒருவேளை நெய்ல் பாட்ரிக் ஹாரிஸ் (Neil Patrick Harris) பற்றி அவர்கள் அறிந்திருந்தால், அத்தகைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருப்பார்கள் என்று இப்போ தோணுது... அந்த அளவுக்கு கே பிரபலங்களின் வரிசையில் என்னை மிகவும் வசீகரித்த பிரபலம் ஹாரிஸ்தான்...

1973ஆம் ஆண்டு பிறந்த இந்த கலைஞனுக்கு நடிகர், எழுத்தாளர், இயக்குனர், நகைச்சுவை நடிகர், மாயாஜால வித்தகர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற பன்முக அடையாளம்  உண்டு.. சமீபத்தில் நிகழ்ந்த ஆஸ்கார் விருது விழாவை தொகுத்து வழங்கியவர் நம்ம ஹாரிஸ்தான் என்பது கூடுதல் தகவல்... எமி விருதுகள், அகாடமி விருதுகள், டோனி விருதுகள்னு இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகளே இல்லைன்னு சொல்லலாம் (நம்ம ஊர் டிடி மாதிரின்னு வச்சுக்கலாம்)... இந்த விருதுகளை தொகுத்து வழங்கிய முதல் வெளிப்படையான சமபால் ஈர்ப்பு நபர் இவர்தான் என்கிற கூடுதல் பெருமையும் ஹாரிஸ்க்கு உண்டு...  இதன்மூலம் 2010ஆம் ஆண்டின் தாக்கத்தை ஏற்படுத்திய நூறு நபர்களில் ஒருவராக இவரை பிரபல டைம் இதழ் பெருமைப்படுத்தியது...

நம்ம ஊர் கமலஹாசன் போல குழந்தை நட்சத்திரமாகத்தான் ஹாரிஸ் அறிமுகமானார், பின்பு தொலைக்காட்சி நெடுந்தொடர்களின் மூலம் பிரபலமாகி, வெள்ளித்திரையில் பல்வேறு விருதுகளை வாங்கும் அளவிற்கு உயர்ந்தவர்... சரி, எதற்காக இவருடைய வரலாற்றை அதிகம் புரட்டிப்பார்க்கனும்?னு நீங்க நினைக்கலாம்... இனி சொல்லப்போகும் விஷயங்களுக்கு முன்னுரையாக மேற்குறிப்பிட்டுள்ள சிறுகுறிப்பு அவசியம்...

ஆம், கிட்டத்தட்ட 11 வருடங்கள் (2004 முதல் இன்றுவரை) டேவிட் பர்க்கா என்ற நபருடன் சமபால் இல்லறம் நடத்திக்கொண்டிருக்கும் ஹாரிஸ் நிச்சயம் போற்றிப்புகழவேண்டிய நபர்தானே?... “ஒருவனுக்கு ஒருத்தன் கான்சப்ட் வழி வாழ எத்தனிக்கும் நம்மவர்களாலேயே எட்டித்தொட கொஞ்சம் கஷ்டமான இலக்கை, மேற்கத்திய நாட்டை சேர்ந்த அந்த தம்பதி வாழ்ந்து காட்டுவது நமக்கெல்லாம் ஒரு பாடம்தான்... அதுமட்டுமில்லை இந்த ஹாரிஸ் – டேவிட் தம்பதிக்கு கிடியன் மற்றும் ஹார்ப்பர் என்ற இரட்டைக்குழந்தைகளும் உண்டு... இப்படி குடும்பம் குழந்தைகளோடு இன்றைக்கு நமக்கெல்லாம் முன்னுதாரணமாக வாழ்கின்ற ஹாரிஸ் உடைய கடந்த காலங்கள் ரொம்பவே கசப்பானவை...

தன் சுயசரிதை புத்தகத்தில் ஒளிவுமறைவின்றி அவர் சொன்ன சில விஷயங்களை இப்போ பார்க்கலாம்...

தன் 13வது வயதில்தான் (1986) முதன்முதலில் தன்னுடைய பாலீர்ப்பை, தன் தாயிடம் வெளிப்படுத்தியுள்ளார் ஹாரிஸ்...

“அம்மா, நான் கேவாக இருப்பனோன்னு பயமா இருக்கு! வழக்கமான பதின்ம வயது குழப்பத்தைதான் வெளிப்படுத்தினார்...

அதற்கு அம்மாவோ, “அதனாலென்ன?.. நீ கேவா இருப்பதால உன் மேல நான் வச்சிருக்கிற அன்பு குறஞ்சிடுமா என்ன? என்று அன்போடு அணைத்து பயத்தை போக்கியுள்ளார்... பள்ளியின் இசை வாத்திய குழுவின் ட்ரம்ப்பட் கலைஞர்தான் முதன்முதலில் ஈர்ப்பை உண்டாக்கி, நம்ம ஹாரிஸை குழப்பியவர்... பேர், ஊர் தெரியாத அந்த இசைக்கலைஞரையும் வரலாறு ஹாரிசோடு இணைத்தே கொண்டுவருவது ஆச்சர்யம்தான்..

பின்பு தன் இருபது வயதுகளில் திரைத்துறையில் நுழைந்தபிறகு, தன்னுடன் நடித்த நடிகர் ஆண்டி என்பவருடன் அடுத்த ஈர்ப்பு உண்டானது.. உடல் ரீதியான தொடர்பு பல மாதங்கள் தொடர்ந்தது... ஆனால் ஹாரிஸ்இன் உடல் தேவையை, ஆண்டி ஒருவரால் மட்டுமே பூர்த்திசெய்யமுடியவில்லை.. பின்புதான் இணைய வளர்ச்சியின் காரணமாக கொட்டிக்கிடந்த சாட் ரூம்களில் பொழுதை கழிக்கத்தொடங்கினார்... 

முன்பின் தெரியாத ஆட்களிடம் புகைப்படங்களை பகிர்ந்துகொண்டு, அடுத்தவர்களின் அங்கத்தின் புகைப்படங்களை ரசித்து, அவர்களுடன் படுக்கைக்கு செல்லும் ஒருவித த்ரில் அனுபவம் ஹாரிஸை அதிகப்படியாகவே ஈர்த்திருந்தது... அந்த த்ரில் அனுபவத்திற்கு ஒருகட்டத்தில் அடிமையாகவே ஆகிவிட்டார்... திரை வாய்ப்புகளை கூட மறந்துவிட்டு, இணையக்கடலில் மூழ்கிவிட்டார்... அதுதான் ஹாரிஸ் உடைய கருப்பு பக்கங்கள் நிறைந்த நாட்கள் என்று சொல்லலாம்...

2003ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் நடந்த அந்த நட்சத்திர பார்ட்டிதான் ஹாரிஸ் உடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை உண்டாக்கியது... தன்னுடன் நடித்த சகநடிகை கேட், ஹாரிஸை சந்தித்து நலம் விசாரித்தபோதுதான் அந்த ஆச்சர்யம் நிகழ்ந்தது... ஆம், கேட் உடன் வந்திருந்த டீஷர்ட் அணிந்து, முடிகளுக்கு சாம்பல் நிற டை அடித்திருந்த அந்த இளைஞனை பார்த்தபோது ஹாரிஸ் மண்டைக்குள் மணி அடித்து, பல்பு எரிந்தது... வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா சொல்வதைப்போல, “இந்த உலகத்துல யாரும் இப்டி ஒரு அழகை இதுக்கு முன்ன பாத்திருக்கமாட்டாங்க! என்ற ரீதியில் வைத்த கண் விலகாமல், அந்த இளைஞனை வெறித்துப்பார்த்தார் ஹாரிஸ்...

அந்த இளைஞனை பற்றிய ஆயிரம் கேள்விகள் அவருக்குள் எழ, சட்டென ஒரு யோசனைக்கு வந்த ஹாரிஸ், கேட்டை கட்டி அணைத்து, கையை பிடித்து, “இவர் உன் காதலரா?.. நல்ல ஜோடிப்பொருத்தம்... வாழ்த்துகள்!னு சொல்லிட்டார்...

உடனே பதறிய கேட், “ஐயோ இல்ல ஹாரிஸ்,,, இவர் என் நண்பர்... அதுமட்டுமில்லாம இவர் ஒரு கே என்று உண்மைகளை உளறிவிட்டார்...

கோடு போட்டால் ரோடு போடும் நம்ம பசங்ககிட்ட, ரோடு போட்டுக்கொடுத்தா சும்மாவா விடுவாங்க?... எப்படியோ, பேசிப்பழகி டேட்டிங்கிற்கு நாளும் குறித்துவிட்டார்... ஆரம்பத்தில் என்னவோ அந்த இளைஞன் மீது வெறும் ஈர்ப்புதான் இருந்தது, ஆனால் அந்த டேட்டிங்க்கு பிறகு அது மெள்ள காதலாக உருமாறியது...

“அந்த முதல் சந்திப்பு எனக்கு ரொம்ப இயற்கையாவும், சவுகர்யமாவும் இருந்துச்சு... புது நபருடன் டேட்டிங் செல்வதாக எண்ணமே ஏற்படவில்லை... எனக்குள் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி உருவானது... அப்போ எனக்கு புரிஞ்சுச்சு, நான் சரியான நேரத்துல சரியான ஆளை பார்த்திருக்கிறேன் என்று இப்படித்தான் வர்ணிக்கிறார் அந்த முதல் சந்திப்பை... அந்த இளைஞன்தான் இன்றைக்கு வாழ்க்கைத்துணைவனான டேவிட் பர்க்கா... 

2004 முதல் இருவரும் காதலர்களாக இணைந்து வாழ்கிறார்கள்... 2006ஆம் ஆண்டுதான்  தன்னை வெளிப்படையாக சமபால் ஈர்ப்பு நபராக ஊடகங்களுக்கு வெளிக்காட்டினார் ஹாரிஸ்...

“என்னை சூழ்ந்துள்ள வதந்திகளுக்கு இதன்மூலம் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்.. ரொம்ப பெருமையாவும், முழு மனநிறைவோடும் என்னை கே என உங்கள் எல்லோரிடமும் வெளிப்படுத்திக்கொள்கிறேன்... என்று ரத்தினச்சுருக்கமாக வெளிப்படுத்திவிட்டார் ஹாரிஸ்... 

2007ஆம் ஆண்டு நடைபெற்ற எமி விருதுகள் வழங்கும் விழாவிற்கு தன் காதலன் டேவிட் உடன் வந்தபோதுதான், தனது காதலையும் வெளி உலகிற்கு வெளிப்படுத்தினார் ஹாரிஸ்... 

2010 ஆம் ஆண்டு, அக்டோபர் 12ம் நாள்தான் இந்த ஆதர்ச தம்பதிக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டைக்குழந்தை பிறந்தது... கிடியன் ஸ்காட் மற்றும் ஹெர்பர் கிரேஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த குழந்தைகளுக்கு இப்போ ஐந்து வயது... 

ஜூன் 24, 2011ஆம் நாள்தான் இவர்கள் திருமணம் நியூயார்க் நகரில் நடைபெற்றது (அந்த வருடம்தான் நியூயார்க் மாகாணத்தில் சமபால் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டது!)...

இப்போ குழந்தைகள் மற்றும் துணைவர் டேவிட் உடன் இனிதான இல்லறத்தை வாழ்ந்துவருகிறார் ஹாரிஸ்...
 
இதைவிட மகிழ்வான வாழ்க்கை ஒரு சமபால் ஈர்ப்பு நபருக்கு உண்டா என்ன?... சில இடங்களில் பொறாமை வரவழைக்கும் அளவிற்கான வாழ்க்கை, மனதை நெகிழச்செய்கிறது... “கே திருமணமல்லாம் ரொம்பநாள் சாத்தியமில்லைங்க! என்று எவரேனும் இனி சொன்னால், நெய்ல் பாட்ரிக் ஹாரிஸ் பற்றி எடுத்துசொல்லுங்கள்... இவர் ஒரு சிறு உதாரணம்தான், உலகில் எத்தனையோ லட்ச தம்பதிகள் இப்படியோர் வாழ்க்கை வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்... நம் நாட்டில்தான் இது எட்டாக்கனியாக இருக்கிறது... எட்டிப்பிடிக்க எத்தனித்து தோல்வி அடைபவர்கள்தான் “ச்சீ... ச்சீ.. இந்த பழம் புளிக்கும்!னு சொல்லிட்டு ஒதுங்கிடுறாங்க... நிஜத்தில் அந்தப்பழங்கள் தித்திக்கும் இனிப்பானவை!... ஹாரிஸ் தம்பதி மற்றும் குழந்தைகள் இதே மகிழ்ச்சியோடு இன்னும் நூறாண்டுகள் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்!

Tuesday, 19 May 2015

பிரதமரின் கே (gay) திருமணம், வாழ்த்திய மக்கள் - கதையல்ல நிஜம்!






இந்த செய்தி, “உலக அரசியல் வரலாற்றில் என்ற முன்னோட்டத்தோடு கூட சொல்லும் அளவிற்கு ஆச்சர்யமான செய்திதான்... லக்ஸம்பர்க் நாட்டின் பிரதமர், கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் செய்துகொண்ட நிகழ்வுதான் அந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த வைரல் செய்தி... லக்ஸம்பர்க் நாட்டின் பிரதமர் சேவியர் பெட்டேல், தனது காதலரான கவுதியர் டெஸ்டினி என்பவரை கரம் பிடித்துள்ளார்... ஒரு நாட்டின் பிரதமர், கே திருமணம் செய்துகொள்வது என்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுதானே?...

சேவியர் பெட்டேலின் அரசியல் நுகர்வு குறித்து ஏற்கனவே "வெளிப்படையான கே பிரதமர்" என்கிற கட்டுரையில் பார்த்துவிட்டதனால், இவருடைய பாலீர்ப்பு வாழ்க்கைக்குள் கொஞ்சம் நுழைந்து பார்க்கலாம்...

2010ஆம் ஆண்டு முதல் இணைந்து வாழும் இந்த இணை, அந்நாடு கடந்த ஆண்டில் “சமபால் திருமணம் அங்கீகரிப்பு சட்டம் இயற்றிய பிறகு, அதிகாரப்பூர்வமான தம்பதியாக இணைந்துவாழ முடிவெடுத்து திருமணம் செய்துகொண்டுள்ளனர்... இந்த திருமணம் மிகவும் எளிமையான முறையில், ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் நடந்து முடிந்துள்ளது... வெள்ளிக்கிழமை காலையிலேயே திருமணம் நடக்க இருக்கிற சிட்டி ஹாலுக்கு, தன் காதலனுடன் வந்துவிட்டார் பெட்டேல்... தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை, எல்லோருக்கும் வெளிச்சம் போட்டு காண்பிக்க விரும்பவில்லை என்பதால் ஊடகங்களுக்கு ‘தடா போட்டுவிட்டார் பிரதமர்...

என்றாலும் கூட தங்கள் நாட்டு பிரதமரின் முக்கிய வாழ்க்கை நிகழ்வை பார்த்திட சிட்டி ஹாலுக்கு எதிரே மக்கள் குவிந்துவிட்டனர்... மதியம் நடந்த திருமண நிகழ்வில் நெருக்கமான நண்பர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது... பெல்ஜியம் நாட்டின் பிரதமர் சார்லஸ் மைக்கேல் முக்கிய விருந்தினராக நிகழ்வில் கலந்துகொண்டார்... “எனது நண்பரின் திருமணத்திற்காக வந்துள்ளேன்... இந்த திருமணம் மிகப்பெரிய சமூக நிகழ்வு... ஐரோப்பியாவில் காணப்படுகிற சமபால் ஈர்ப்புக்கு எதிரான ஹோமோபோபியாவை குறைக்கும் வல்லமை பெற்ற நிகழ்வு... சமூக முன்னேற்றங்களுக்கு வித்திடும் நிகழ்வு என்று கூறுகிறார் சார்லஸ்...

திருமணம் முடிந்து வெளியே வந்த பெட்டேல், குழுமியிருந்த கூட்டத்தை பார்த்து, “ரொம்ப நன்றி லக்ஸம்பர்க்வாசிகளே! என்று கூற, மக்கள் அனைவரும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்...

மிக எளிமையான முறையில் ஒரு நாட்டில் பிரதமருடைய திருமணம் நடந்தேறியுள்ளது, பலரையும் வியந்துபார்க்க வைத்துள்ளது... ஜூலை முதல்வாரம்தான் இவர்களின் தேன் நிலவும் கூட...

 இவர் வாழ்க்கையிலிருந்து ஒவ்வொரு சமபால் ஈர்ப்பு நபர்களும் கற்றுக்கொள்வதற்கான ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது என்பதுதான் உண்மை...

2013ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த நேரம், பெட்டேல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான சூழல் உருவாகிய தருணத்தில், தன் காதலன் டெஸ்டினியை அழைத்து, “நான் பிரதமர் ஆவதில் உனக்கு விருப்பமா? எப்போதும் போல எனக்கு உறுதுணையாக நிற்பாயா? என்று கேட்டிருக்கிறார்... ஒருவேளை அன்றைக்கு டெஸ்டினி மறுத்திருந்தால், இந்த கட்டுரைக்கு அவசியம் இருந்திருக்காது... ஆம், “அவன் மறுத்திருந்தால் நான் முடிவை மறுபரிசீலனை செய்திருப்பேன், எக்காரணத்தை முன்னிட்டும் காதலனோடு பிரிவைப்பற்றி மட்டும் யோசித்திருக்கவே மாட்டேன் என்கிறார்...

பெட்டேல் அரசியலில் நுழைந்த காலம் என்பது மிகவும் பழமைவாத கருத்துகள் நிறைந்து காணப்பட்ட காலகட்டம்... “இன்றைக்கு இருப்பது போல புரிதல்கள் இல்லாத நாட்கள் அவை... என்னுடைய பாலீர்ப்பை காரணம் காட்டி, நிறைய எதிர்மறை விமர்சனங்கள் வைக்கப்பட்டது... எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் என் பணியை செய்தேன்... என்னுடைய வாழ்க்கையை நான்தான் முடிவுசெய்யவேண்டும், அதில் அடுத்தவர்களுக்கு என்ன பங்கு இருக்கிறது?... 

 அரசியல்வாதி என்றால் மனைவி, குழந்தைகளோடு இருக்க வேண்டும் என்று படிந்திருந்த மக்களின் மனநிலை கூட தொடக்கத்தில் என்னை பாதித்தது... ஆனால், காலப்போக்கில் கடுமையாக போராடி என்னை நிலைநிறுத்திக்கொண்டேன் என்கிறார் பெட்டேல்...

வெறும் ஐந்தரை லட்சம் மக்கள் தொகையை கொண்ட ஒருநாட்டில், அதுவும் கத்தோலிக்க கிறித்துவ மதத்தின் மீது தீவிர பிடிப்புள்ள நாட்டில், பெட்டேல் போன்ற வெளிப்படையான கே தலைவர்கள் பட்டிருக்கக்கூடிய சிரமங்கள் நம்மால் எளிதாக யூகிக்க முடிந்ததுதான்...

பதின் வயது முதலாகவே தன் பாலீர்ப்பை பெட்டேல் எவரிடமும் மறைக்க விழைந்ததில்லை... தன்னுடைய சுயத்தை அவர் பொய்யான பிம்பம் நிறைத்து வெளிப்படுத்த விரும்பவில்லை... 

“என் நண்பர்களிடம் எனது பாலீர்ப்பை மறைத்ததில்லை... உங்கள் பாலீர்ப்பை காரணம் காட்டி, உங்களை விலகும் நண்பர் நிச்சயம் நண்பனே இல்லை... அந்தவகையில் பெரும்பாலான எனது நண்பர்கள் என்னை முழுமையாக ஏற்றனர்... எனக்கு இருக்கிற ஒரே வாழ்க்கையை, அடுத்தவர்களுக்காக என் சுயத்தை மறைத்து ஏன் வாழவேண்டும்?...

கடுமையான சிக்கலை தாண்டி, அதுவரை அங்கு ஆதிக்கம் செலுத்திவந்த கத்தோலிக்க மதக்கட்சியை தோற்கடித்து, வெற்றிபெற்ற பெட்டேல் ஆட்சிப்பொறுப்பேற்ற 2013ஆம் ஆண்டு ஒரு அறிவிப்பை அறிவித்தார்... “நம் நாட்டில் மாற்றப்பட வேண்டிய பழமைவாத சட்டங்கள் நிறைய இருக்கிறது... அதில் முக்கியமானது சமபால் ஈர்ப்பு நபர்களுக்கான திருமணத்தடை... மற்ற அரசியல் தலைவர்களை போல அடுத்த ஐந்தாண்டுகளில் இவற்றை சரி செய்வேன் என்று சொல்லமாட்டேன்... இன்னும் ஒரே ஆண்டில் இந்த குறைகளை நிவர்த்தி செய்து காட்டுகிறேன் என்றார்...

சொன்னதை அடுத்த ஒரே ஆண்டில் செய்தும் காட்டினார்... கடந்த ஜூன் மாதத்தில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர் ஆதரவுடன் “சமபால் ஈர்ப்பு திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டது...

“நான் கே பிரதமர் என்று அடையாளப்படுத்துவதை விரும்பவில்லை... நான் லக்ஸம்பர்க் நாட்டின் பிரதமர், அவ்வளவுதான்... மற்ற நாட்டு பிரதமர்களை, “ஸ்ட்ரைட் பிரதமர் என்று அழைக்காதபோது, என்னை மட்டும் பாலீர்ப்பு அடையாளத்தை முன்னிறுத்தி அழைப்பது இன்னும் சமபால் ஈர்ப்பை உங்கள் மனங்கள் இயல்பாக பார்த்திடாத பாரபட்சம்தான் காரணம்.. இனி இந்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவது பற்றிய திட்டங்கள் போடவேண்டும், அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!

பெட்டேல் சொல்வதும் சரிதான்... ஆனால், இந்தியா போன்ற நாட்டில், குறைந்தபட்சம் நம்மவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகப்படுத்தவாவது, அவரை “கே பிரதமர் என்று அழைப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்...

இந்த தம்பதி இன்னும் நூறாண்டுகள், சிறப்போடு வாழ உலக ஒருபால் ஈர்ப்பு தமிழர்களின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்... 

“மதவாத கருத்துகளால் பழமைவாத சிந்தனை படிந்திருந்த ஒருநாடு, இப்போது தன்னை முதிர்ச்சியான சிந்தனையால் புதுப்பித்துக்கொண்டது ஆச்சர்யமான வளர்ச்சி என்று லக்சம்பர்க் நாட்டின் புரிதலை வர்ணிக்கிறார் பிரபல பிரெஞ்ச் நடிகர் ஸ்டீபன் பெம்...

ஐரோப்பிய ஒன்றியத்தில் இப்படி திருமணம் செய்துகொண்ட முதல் பிரதமர் என்கிற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது என்றாலும், முதல் வெளிப்படையான சமபால் ஈர்ப்பு பிரதமர் என்கிற புகழை பெல்ஜியம் நாட்டினை சேர்ந்த முன்னாள் பிரதமர் எலியோ டி ருபோ (2009 – 2013) ஏற்கனவே பெற்றுவிட்டார்... ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் ஜோஹன்னா (2010), தன் காதலியை திருமணம் செய்துகொண்ட நிகழ்வுதான் ‘உலக வரலாற்றில் முதல் முறையாக! என்பதால், பெட்டேல் திருமணம் ‘இரண்டாவது இடத்தைதான் பெற்றுள்ளது (ஐஸ்லாந்து நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை)... லக்ஸம்பர்க் நாடு நாம் மகிழும் அளவிற்கான இன்னொரு சிறப்பையும் பெற்றுள்ளது, அந்நாட்டின் துணை பிரதமர் எடின்னே ஷ்னைடர் என்பவரும் சமபால் ஈர்ப்பு நபர்தான்.. இன்னும் 377 என்கிற நெளிந்த சொம்பை வைத்துக்கொண்டு பஞ்சாயத்து பேசிக்கொண்டிருக்கும் நம்மவர்களை பார்க்கும்போது, சிரிப்பதா? அழுவதா? என்றுகூட புரியவில்லை...