“யாரு நம்ம முருகனா வர்றேன்னான்?...
வீட்டைவிட்டு போயி எப்புடியும் பதினஞ்சு வருஷம் இருக்கும்ல?” சண்முகம் ஆச்சர்யமடைந்தவராய் கேட்டார்...
“இருக்கும் மாமா... எனக்கு கல்யாணம் ஆனதுக்கு
முன்னமே போனவன், இப்பதான் எம்மூத்தவனுக்கே பதிமூணு வயசுல்ல!” அருகிலிருந்த மூத்த
மகனை வாஞ்சையோடு வருடியபடி சொன்னான் செல்வம்...
“நல்ல பையன்தான், சவகாசம் சரியில்லாம
கெட்டுப்போனவன்... ஹோமோ செயல்கள் செஞ்சு, வீட்டுல பிரச்சினை பண்ணி... அப்பப்பா..
அந்த நாட்கள மறக்கவே முடியாது... இப்போ திருந்திருப்பானா?.. என்ன பண்றானாம்?” சண்முகம் மாமா சில நிமிடம் கால எந்திரத்தில்
பயணித்துவந்ததை போல காணப்பட்டார்...
“தெரியல மாமா, அதல்லாம் கேட்கல... போன் பண்ணி
வரப்போறதா சொன்னான், அம்மாவப்பத்தி விசாரிச்சான்.. மத்தபடி நானும் எதுவும்
கேட்டுக்கல...” காபி கோப்பையுடன்
வந்த மனைவியை பார்த்ததும் குரலைக்குறைத்து ரகசியம் போல சொல்லிமுடித்தான்
செல்வம்...
சண்முகத்தின் கையில் கோப்பையை கொடுத்த
செல்வத்தின் மனைவி, அந்த நாற்காலிக்கு அருகேயே சுவற்றில் சாய்ந்தபடி
அமர்ந்துகொண்டாள்...
“இங்க பாருங்கப்பா, உங்க மாப்புள செய்றது
சுத்தமா சரியில்ல... பதினஞ்சு வருஷத்துக்கு முன்ன வீட்டைவிட்டு ஓடிப்போன தம்பி
இப்போ வர்றதா சொல்வாராம், இவரும் அமைதியா ‘வாடா தம்பி’னு பாசத்துல தாங்குவாராம்... இத்தன வருஷத்துல இல்லாத
தாய்ப்பாசம் இப்ப எங்கேருந்து பொங்கிட்டு வந்துச்சாம்?... அதல்லாம் சுத்த
நடிப்பு.. கெழவி சாகக்கெடக்கு, சொத்த பங்குபோடலாம்னு வர்றாரு போல... அவரு நாயா
ஒழச்சு, நான் பேயா காபந்து பண்ணி வச்சிருக்குற சொத்த, பொத்துனாப்ல கொண்டுபோகலாம்னு
பாக்குறார் போல... எனக்கும் ரெண்டு புள்ளைக இருக்கு, அதுகளுக்கும் எதாச்சும்
வழிபண்ணிடனும்.. இப்ப வரப்போற தம்பி, சொத்துல பங்கு கேட்குற பேச்சு எதாச்சும்
வந்துச்சுன்னா, நான் மனுஷியா இருக்கமாட்டேன்...” கொழுந்தனிடமிருந்து அழைப்பு வந்ததிலிருந்து இந்த புலம்பலை
நிறுத்தவே இல்லை... உடனே தகப்பனுக்கு தகவல் சொல்லி வீட்டிற்கும்
வரவழைத்துவிட்டாள்...
“இதே பேச்சுதான் மாமா காலைலேந்து... நான் என்ன
வெவரம் கெட்டவனா அப்டியே தூக்கிக்கொடுக்க?.. சொன்னாலும் புரிஞ்சுக்கமாட்டுரா...” அறைக்குள் உறங்கிக்கொண்டிருந்த அம்மாவின் காதுகளுக்கு
கேட்டிடக்கூடாது என்கிற கவனத்தோடு ஆற்றாமையை வெளிப்படுத்தினான்...
“உங்க வெவரம் எனக்கு தெரியாது பாருங்க... போன்
வந்தப்பவே காறாரா நீங்க பேசிருந்தா, அந்தாளு ஏன் இங்க வரப்போறார்?” சளைக்காமல் பேசினாள் மனைவியும்...
“வர்றவன் அப்டி ஒன்னும் ஆண்டிப்பண்டாரமா
வரமாட்டான்... நிச்சயம் ஓரளவு நல்ல நெலமைலதான் இருப்பான்...”
“ஆமாமா... அப்டியே அம்பானியா வந்து
நிக்கப்போறான், உங்களுக்கு அள்ளிக்கொடுத்திட்டாலும்...”
“அட என்னம்மா சண்டை தேவையில்லாம?... முதல்ல
முருகன் வரட்டும், அப்புறம் பாத்துக்கலாம்... கூட்டுரோட்ல இருக்குற ப்ளாட்
எப்டியும் ஒரு இருபது லட்சம் போகும், ஊருல இருக்குற நெலம் சந்தை மதிப்புக்கு பத்து
லெட்சம் போகலாம்... அப்புறம் இந்த வீடு, இன்னிக்கு தேதிக்கு கண்டிப்பா இருபது லட்சத்துக்காவது
போகும்... மொத்தமா கூட்டிக்கழிச்சா உங்க சொத்துமதிப்பு அம்பது லட்சம்... ஒருவேள
சொத்துக்கு எதுவும் வர்ற ஆளு பிரச்சினை பண்ணினா, ஒரு அஞ்சாறு லட்சத்த கொடுத்து
சமாளிச்சிடலாம்...” விரலாலேயே
கணக்குப்போட்டு, தீர்வும் சொல்லிவிட்டார் சண்முகம்...
“என்னது அஞ்சாறு லட்சமா?... விட்டா நீங்களே
தூக்கிக்கொடுத்திருவீங்க போல?... என்னப்பா இதல்லாம்?” சட்டென எழுந்து அப்பாவின் முகத்திற்கு நேராகவே முகம்
கடுகடுக்க பேசத்தொடங்கிவிட்டாள் மாலதி...
“உன்னோட இந்த பதட்டம்தான் எல்லா காரியத்தையும்
கெடுக்கப்போவுது... வர்ற ஆளு உன் புருஷனோட சொந்த தம்பி... இப்ப நான் கணக்குல சொன்ன
எல்லாமே உம்புருஷனோட பூர்விக சொத்து... நம்ம பிரச்சினை பண்ணி, அவன் கோர்ட்
கேசுன்னு போய்ட்டா இருக்குறதுல சரிபாதி அவனுக்குதான் போகும்... அதனாலதான் ஏதோ
இருக்குறத கொடுத்து, சொத்துக்கும் அவனுக்கும் சம்மந்தம் இல்லைன்னு
எழுதிவாங்கிட்டா, ஒரு பிரச்சினையும் வராது... சட்டப்படி நம்ம பக்கம் ஸ்ட்ராங்கா
இருக்கலாம்..” மிகத்தெளிவாக விளக்கினார்
சண்முகம்...
சில நொடிகள் யோசிப்பில் ஆழ்ந்தவள், மெள்ள விஷயம்
புரிந்தவளாக, “சரி என்னமோ பண்ணுங்க... அந்தாளு வரட்டும், பேசட்டும்.. ஆனா அதுக்கப்புறம்
அடிக்கடியல்லாம் இங்க வரக்கூடாது... ஆம்பள சவகாசத்துல ஓடிப்போன கொழுந்தன்
வீட்டுக்கு வந்துட்டான்னு தெரிஞ்சா அக்கம்பக்கத்துல நான் தலைகாட்ட முடியாது...
அதேபோல எம்புள்ளைகள அவரு பாக்கவோ, பேசவோ கூடாது... வந்துபோற வரைக்கும் அதுகள சின்ன
ரூம்குள்ள இருக்க வச்சுக்கறேன், அந்த கன்றாவிப்பழக்கம் உள்ள ஆளு மூச்சுக்காத்துகூட
அதுக மேல படக்கூடாது...” வெறுப்பை முடிந்த
அளவிற்கு வார்த்தைகளில் கொட்டிட எத்தனித்தாள்... காகத்தின் எச்சம் ஆடையில்
பட்டபோது, முகம் சுளித்துக்கொண்டே அதை சுத்தம் செய்ததைப்போல, முருகனின் வரவையும்
சகித்துக்கொண்டே அப்புறப்படுத்த அவள் ஆயத்தமானாள்...
இருவரின் வாத பிரதிவாதங்களை கண்ட செல்வம்,
மௌனமாகவே இருந்தான்... பதினைந்து வருடங்களுக்கு முன்பு முருகன், தான் ஒரு சமபால்
ஈர்ப்புள்ளவன் என்பதை வீட்டில்
வெளிப்படுத்தியபோது, இந்த அமைதி செல்வத்திடம் இல்லை... கொதிக்கும்
எண்ணெயில் போட்ட கடுகு போல வெடித்தான், விவாதம் முற்றிய சமயத்தில் கையில் கிடைத்த
பொருட்களால் அடிக்கவும் செய்தான்... அம்மாதான் எதுவும் பேசவில்லை, அழவும் இல்லை...
“இனி ஜென்மத்துக்கும் என் மூஞ்சில முழிக்காத... வயத்துல புள்ளைக்கு பதிலா, பத்து
மாசமும் நரகள சுமந்ததா நினச்சுக்கறேன்... என்னிக்காச்சும் ஒருநாள் உன் தப்பை
உணர்ந்து, நாயைவிட கேவலமான நெலமைல வந்து திருந்திட்டேன்னு சொல்லுவ... அந்த
சீரழிஞ்ச நெலமைல பாக்குறப்ப என் கோவத்த காட்டிக்கறேன்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்று கதவை
தாழிட்டுக்கொண்டாள்... தான் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லையோ? என்கிற ஆற்றாமை
அவளுக்குள்.. தகப்பன் இல்லாத பிள்ளை தறிகெட்டு போய்விட்டதாக ஊரார்
சிரித்துவிடுவார்களோ? என்கிற பயமும் கூட... முருகன் வெகுநேரம் அந்த அறைக்கு வெளியே
அமர்ந்தபடி அழுதான், புலம்பினான்.. கதவு திறந்தபாடில்லை.. விடிந்தபோது முருகனை
காணவில்லை.. வீட்டினர் யாரும் பெரிதாக தேடவுமில்லை... இரவில் நடந்த சண்டையில்
விழுந்த ஒருசில வார்த்தைகளை கோர்த்து அக்கம் பக்கத்தினர் முருகனைப்பற்றி,
அவர்களாகவே கற்பனை செய்து கதைகளை கட்டிவிட்டனர்...
இத்தனை வருடங்களுக்கு பிறகு, முருகனைப்பற்றிய
பேச்சு இன்றைக்குத்தான் மீண்டும் ஒலிக்கிறது... கோபமல்லாம் மறந்து ஒருவகையில்
செல்வத்திற்கு தம்பி மீது மெல்லிய பாசம் படர்ந்திருந்தது என்னவோ உண்மைதான், ஆனால்
அதை வெளிப்படுத்திகொள்ளும் சூழல்தான் இல்லை...
வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்க,
சண்முகம்தான் முதலில் எழுந்து வாசலை நோக்கி நகர்ந்தார்...
உயர் ரக மகிழுந்துகள் மூன்று, புழுதியை
பரப்பியபடி வாசலில் வந்து நின்றன.. ஆறேழு சபாரி சூட் ஆட்களுக்கு மத்தியில்,
மிடுக்கான வெள்ளை உடையுடன் இறங்கினான் முருகன்.. சபாரி ஆசாமிகளுக்கு சமிக்கை
காண்பித்ததும், அவர்கள் வாசலை தாண்டி உள்ளே வரவில்லை... முருகன் மட்டும் மெல்லிய
தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான்... தடுமாற்றத்தோடு நின்ற அண்ணனின் கைகளை பிடித்து
நலம் விசாரித்தான்...
“எப்டிண்ணே இருக்க?... அம்மா எப்டி இருக்கு?” குரலில் பாசம் ததும்பியது...
“ஹ்ம்ம்... இருக்கோம்...” மனைவியின் முகத்தை பார்த்தபடியே தடுமாறி சொன்னான்
செல்வம்.. அவளோ வெடுக்கென திரும்பிக்கொண்டு, சமையலறைக்குள் நுழைந்துவிட்டாள்...
“அம்மா எங்க?” ஆர்வத்தோடு கேட்டான்...
“அக்கா தூங்குது, எழுந்திருக்குறவரைக்கும் நீ உக்காருப்பா..” ஒரு நாற்காலியை நோக்கி கையை நீட்டினார் சண்முகம்...
வீட்டினை சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டே
இருக்கையில் அமர்ந்தான் முருகன்.. பதினைந்து வருடங்களில் கொஞ்சமும் மாற்றமில்லாத
வீடு... சுவர்களில் மட்டும் குழந்தைகளின் பென்சில் கிறுக்கல்கள், இல்லை இல்லை சித்திரங்கள்... சிறுவயதில் முருகன்
பெயர்த்த கதவோர சிமென்ட் தரைக்கூட இன்னும் பூசப்படாமல், நினைவுகளை
சுமந்துகொண்டுதான் இருக்கிறது...
“எப்டி மாமா இருக்கீங்க?... மாலதி
அத்தாச்சியதான் அண்ணனுக்கு கட்டிருக்கா?” சண்முகத்தை பார்த்து இயல்பாக பேசினான் முருகன்...
“ஹ்ம்ம்.. ஆமாமா.... என் பொண்ணதான்
கட்டிகிட்டாரு, பையனை இல்ல” குத்தலான பதில்...
முருகன் பதில் சொல்லவில்லை, வெறுப்பின்
விளிம்பில் உதிரும் பேச்சுகளுக்கு பதில் சொல்லி பயனில்லை என்பதை அவன் அறிவான்...
முருகனை உற்றுக்கவனித்தார் சண்முகம்...
கணக்குப்படி பார்த்தால் நாற்பது வயதிருக்கணும், ஆனால் தோற்றமோ முப்பதை மீறி
கணிக்கவிடவில்லை... மிடுக்கான உடை, உயர்ரக கைக்கடிகாரம், கழுத்தில் மின்னிய சங்கிலி... நல்ல வளமாகத்தான் இருக்கிறான்
போலும்!...
“ஆமா... எங்க வேலை பார்க்குற?” பதிலை விரும்பாததைப்போல அலட்சியமாக கேள்வியைக்கேட்டார்
சண்முகம்...
“எஸ்.எம் க்ரூப் ஆப் கம்பெனி’ஸ் இருக்குல்ல?”
“ஆமா... பெரிய கம்பெனி ஆச்சே,
கேள்விப்பட்டிருக்கேன்... அங்கதான் வேலை பார்க்குறியா?”
“இல்ல... அந்த எஸ்.எம்’ல இருக்குற ‘எம்’ நான்தான், அதான் முருகன்...”
“அப்டின்னா?” இருக்கையில் கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்துகொண்டு
ஆர்வமிகுதியில் கேட்டார் சண்முகம்...
“அப்டின்னா அது என்னோட கம்பெனின்னு அர்த்தம்
மாமா...” மெலிதாக
சிரித்தான்...
இருக்கையை முருகனுக்கு அருகாமையில்
நகர்த்திப்போட்டபடி, அவன் தோள்களை பற்றிக்கொண்டே பேசத்தொடங்கினார் சண்முகம்..
“அடடே... நான் அப்பவே நினச்சேன் மாப்ள... இப்ப டிவி சேனல் கூட ஆரமிக்கப்போறதா
செய்தி படிச்சேன், ரொம்ப பெரிய விஷயம் மாப்ள...”
சமையலறைக்குள் பாத்திரம் உருண்டது...
“இவவேற நேரங்காலம் புரியாம...” மனதிற்குள் புலம்பியபடியே அவசரமாக எழுந்து சமையலறைக்குள்
சென்றார் சண்முகம்...
காளி சிலைக்கு அரிதாரம் பூசியதைப்போல ஆக்ரோஷமான
பார்வையுடன் நின்றுகொண்டிருந்தாள் மாலதி... அப்பா உள்ளே நுழைந்தவேகத்தில், அவரை
அடிக்காத குறையாக திட்டத்தொடங்கினாள்...
“என்னப்பா நடக்குது இங்க?... அந்தாள வந்ததும்
பேசி அனுப்புவீங்கன்னு பார்த்தா, மாப்புள்ளன்னு உறவு கொண்டாடுறீங்க?.. விட்டா
இன்னொரு பொண்ணையும் கட்டிவச்சிருவீங்க போல?”
“இல்ல... பையன் இருந்திருந்தா கட்டிவச்சாலும்
வச்சிருப்பேன்... அட லூசு மகளே, உன் கொழுந்தன் பெரிய லெவல் ஆளும்மா...”
“என்ன சொல்றீங்க?... அம்பானி ரேஞ்சுக்குல்ல
சொல்றீங்க... அம்பது லட்ச சொத்துல ஒரு பைசா போகக்கூடாது, அதுதான் எனக்கு இப்ப
அவசியம்...”
“அவன் அம்பானி இல்லைன்னாலும், அதுல பாதி
பணக்காரன்... அவன் சொத்து மட்டுமே அஞ்சாயிரம் கோடியைத்தொடும்... உங்க அம்பது
லட்சமல்லாம், வீட்டு வாசல்ல நிக்குற ஒரு காரோட மதிப்பு...” கடகடவென்று கணக்குகளை அள்ளிவிட்டார் சண்முகம்...
“நெஜமாவாப்பா?... எனக்கு ஒண்ணுமே புரியல, சரி
நான் இப்ப என்னதான் பண்ணட்டும்?”
“குடிக்குற மாதிரி ஒரு காபி போட்டு, சிரிச்ச
முகத்தோட கொண்டுவா... மத்தத அப்புறம் பாத்துக்கலாம்..” சொல்லிவிட்டு விருட்டென ஹாலுக்கு சென்று முருகனிடம் விட்ட
வியாக்கியானத்தை தொடர்ந்தார்...
“ஏர்லைன்ஸ் பிஸ்னஸ்’குள்ள போகலாம்ல மாப்ள?... மல்லய்யா, கலாநிதி மாறன்னு
எல்லாரும் கால் பதிச்சிட்டாங்க, இன்னும் உங்க கம்பெனி மட்டும்தான் நுழையல...”
“கொஞ்சம் கொஞ்சமாதான் மாமா அதல்லாம் பண்ணனும்,
அகலக்கால் வைக்க விரும்பல...”
“நான் எஸ்.எம் க்ரூப்ஸ், உங்க கம்பெனின்னே
தெரியாம பலபேர்கிட்டையும் பெருமையா பேசுவேன்... ஒரு தமிழன் பாருங்கடா உழைப்பால
உயர்ந்து நிக்குறான்னு... இப்ப நான் சின்னப்புள்ளைல தூக்கிவளர்த்த என் மாப்புளதான்
அந்த மனுஷன்னு தெரியுறப்போ, ரொம்ப பெருமையா இருக்கு” கையை பிடித்துக்கொண்டே பேசும்போது, ரேடோ வாட்ச்சையும்
தடவிப்பார்க்க மறக்கவில்லை...
கையில் காபி கோப்பையுடன் மாலதி, முருகனை
பார்த்து சிரித்தபடி கொடுத்தாள்...
“வாங்க தம்பி.. நல்லா இருக்கிங்களா?” நலம் விசாரித்தாள்...
“இருக்கேன் அத்தாச்சி... நீங்க எப்டி
இருக்கீங்க?.. புள்ளைங்க எங்க?” ஆர்வத்தோடு
கேட்டான்...
“எங்க போச்சு அதுங்க?... சித்தப்பா
வந்திருக்காரு, அவருகூட பேசிட்டு இருக்காம எங்க போச்சுங்க?” என்று கணவனை பார்த்து சத்தமிட, செல்வமோ பதறிப்போனான்...
“அது... அதுங்க... நீதான் காத்து படக்கூடாதுன்னு
ரூம்குள்ள...” உளறினான் செல்வம்...
இடைமறித்து சமாளித்தாள் மாலதி, “வெளில
வாடைக்காத்து அடிக்குதுன்னு உள்ள இருக்க சொன்னேன், அதுக்காக சித்தப்பாவ கூட
பாக்காமலா உள்ள இருக்குதுங்க?” என்று பிள்ளைகளை
அழைத்தாள்...
வரலாமா? வேண்டாமா? என்கிற குழப்பத்தோடு,
பிள்ளைகள் வெளியே வந்தனர்... இரண்டு மகன்கள்... இருவருமே அண்ணனை
உரித்துவைத்ததைப்போல... தோற்றத்தில் மட்டுமல்ல, மாலதிக்கு பயந்து
நடுங்குவதிலும்...
சின்னவனை தூக்கி மடியில் அமரவைத்து, பெரியவனை
தோளோடு அணைத்தபடி முத்தம் கொடுத்தான் முருகன்...
“சித்தப்பாவுக்கு முத்தம் கொடுங்க பசங்களா!” அம்மாவின் கட்டளைகள், இரண்டு கன்னத்தின் முத்தங்களாக
முற்றுப்பெற்றன...
தன் கழுத்தில் கிடந்த செயினை சின்னவன்
கழுத்திலும், கைக்கடிகாரத்தை பெரியவன் கைகளிலும் மாட்டிவிட்டான்...
ஒவ்வொன்றும் எப்படியும் ஒருலட்சம் பெறுமானம்
உள்ளவை... சண்முகம் ஆச்சர்யத்தோடு பார்த்தார்... இப்படி அள்ளிப்போடுவான் என்று
தெரிந்திருந்தால், மாலதி இன்னும் நான்கு பிள்ளைகள் கூட பெற்றிருப்பாள்... மகளை
நினைத்து பெருமிதப்பட்டுக்கொண்டார் சண்முகம்...
“அம்மாவுக்கு என்ன பிரச்சினை அண்ணே?... ரொம்ப
செலவாகிடுச்சோ?” செல்வத்தை
பார்த்துக்கேட்டான்...
“ஒன்னும் பெருசா இல்ல முருகா... சின்ன...” செல்வம் தொடர்வதற்குள் இடைமறித்தாள் மாலதி...
“ஏன் மறைக்குறீங்க?... உங்க தம்பிதான?
வெளிப்படையா சொல்லுங்க... பிரஷர் ரொம்ப கூடி, இப்ப கிட்னிலையும் ஏதோ
பிரச்சினையாம்... பெரிய பெரிய ஆஸ்பத்திரியில நிறைய செலவு பண்ணித்தான் பார்த்துட்டு
இருக்கோம்... எப்புடியும் நாலஞ்சு லட்சம் கரைஞ்சிருக்கும்” உடல் நலத்தை தாண்டி, பொருளாதாரத்தில் விவாதத்தை
முற்றுப்பெறசெய்தாள்..
அண்ணியின் பேச்சின் பொருள் முருகனுக்கு நன்றாகவே
புரிந்தது.. அவளின் பேச்சில் உண்மைத்தன்மையை ஆராயவல்லாம் விரும்பவில்லை... செக்
புத்தகத்தை எடுத்து, சரசரவென ஏதோ எழுதி செல்வத்திடம் நீட்டினான் முருகன்...
“ஏதோ என்னால முடிஞ்சுதுண்ணே... மறுக்காம
வச்சுக்கோ” என்று கைகளில்
திணித்தான்...
மெள்ள அந்த காகிதத்தை எட்டிப்பார்த்தாள்
மாலதி... ஐந்துக்கு பக்கத்தில் நிறைய சைபர்கள்... எத்தனை? எண்ணினாள்... ஆறு
பூஜ்யங்கள்... அப்படின்னா அம்பது லட்சமா?... “யம்மாடி!” என்று வாயை பிழந்தாள்... அவள் மொத்த குடும்பத்தின் சொத்து
மதிப்பு, கனவுலகத்தில் மிதக்கத்தொடங்கினாள் மாலதி...
“ஏங்க உடனே எந்திருச்சு, நல்ல கறியா வாங்கிட்டு
வாங்க... என் கொழுந்தனுக்கு இன்னிக்கு விருந்து வைக்கணும்” என்று ஒரு கூடையை செல்வத்தின் கைகளில் திணித்தாள்...
“இல்ல பரவால்ல அத்தாச்சி... அம்மாவ பார்த்துட்டு
நான் கிளம்பனும், ஆறு மணிக்கு மெட்ராஸ் போயாகனும்...” சொல்லிவிட்டு எழுந்தான்... கட்டாயப்படுத்த மாலதி
விரும்பவில்லை, அவள் எண்ணங்கள் முழுக்க கணவனின் கையிலிருக்கும் காகிதத்தின்
மீதல்லவா இருக்கிறது... அவளே மாமியாரின் அறைக்கு அழைத்து சென்றாள்...
இன்னும் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறார்
அம்மா...
“அத்த... அத்த... யாரு வந்திருக்கதுன்னு கொஞ்சம்
பாருங்க!” என்று எழுப்பினாள்
மாலதி... கண்விழித்து பார்த்த அம்மா, முருகனை பார்த்ததும் கொஞ்சமும்
அலட்டிக்கொள்ளாமல் மீண்டும் கண்களை மூடிக்கொண்டார்...
“அடிக்கடி நினைவும் தப்பிடுது... நீங்க வேணா
பேசிப்பாருங்க” என்று
விலகிக்கொண்டாள்...
“ஒரு பத்து நிமிஷம் தனியா பேசிக்கறேன், நீங்க” என்று மாலதியை பார்த்து இழுக்க, மறு நொடியே அங்கிருந்து
பணியாளைப்போல வெளியேறிவிட்டாள் மாலதி...
கட்டிலின் அருகே இருக்கையை போட்டு அருகில்
அமர்ந்துகொண்டான்... அம்மா, அம்மாவைப்போலவே இல்லை.... கணவனை இழந்தபோதும், தைரியம்
குறையாமல் பிள்ளைகளை போராடி வளர்த்த கம்பீரம் அவளைவிட்டு விலகிச்சென்றுவிட்டது...
முகத்தில் மட்டும் அதே பிடிவாதம், அழுத்தம் இன்னமும் மாறவில்லை...
தோல்கள் சுருங்கி, கண்கள் உள்வாங்கி,
நெஞ்சுக்கூடு வளைந்து என முதுமையின் கொடுமையான பிடியில் சிக்கியவளாக
படுத்திருக்கிறாள்...
“அம்மா... என்ன யாருன்னு தெரியுதா?” என்று கைகளை பிடித்தான், சட்டென உதறிவிட்டு கைகளை வேறுபக்கம்
பொருத்திக்கொண்டாள்...
“இன்னும் என் மேல உள்ள கோபம் போகலையா?... நீ
நினச்ச மாதிரி ஒம்புள்ள சீரழிஞ்சு போய்டலம்மா, நல்ல நெலமைல இருக்கேன்... சரியா
பதினஞ்சு வருஷத்துக்கு முன்ன இதேநாள்லதான், உன்னைவிட்டு போனேன்... அந்த கதவுக்கு
பின்னாடி நான் அழுத அழுகை இன்னும் மனச விட்டுப்போகல... இப்ப நான் நல்லபடியா
இருக்கேன்மா... இதல்லாம் உன்ன கஷ்டப்படுத்தனும்னு சொல்லல, என்னை நினச்சு இனி
கஷ்டப்படக்கூடாதுன்னுதான் சொல்றேன்... கண்ணைத்திறந்து பாரு, கோபமிருந்தா
அடிச்சிரு!” உருக்கமாக பேசினான்,
ஆனால் பதிலுக்கு எவ்விதமான எதிர்வினையும் எழவில்லை...
“நானும் என்னோட காதலனும்தான்மா ஒண்ணா வாழறோம்....
உன்ன மாதிரியே என்னை அவ்ளோ அக்கறையாவும், பாசமாவும் பாத்துக்கறான்... அவன்
இல்லைன்னா நான் இந்த நெலமைல இருந்திருக்க மாட்டேன்... நீ பக்கத்துல இல்லாதத தவிர,
ஒரு குறையும் இல்லாம பாத்துகிட்டான்மா... உங்களுக்கு பயந்து பொண்ணை கல்யாணம்
பண்ணிருந்தா, யாரும்மா சந்தோஷமா இருந்திருப்போம்?... இப்ப எல்லாரும் ஒருசில
குறைகளை தவிர, பொதுவா நல்லாத்தானே இருக்கோம்...” கால்களை தொட்டான்... அம்மா கோபத்தில் விலக்கிக்கொள்ளவில்லை...
முகத்தைப்பார்த்தான், மூடியிருந்த விழிகளின் ஓரம் கண்ணீர் கசிந்துகொண்டிருந்தது...
“இவ்ளோ வருஷம் கழிச்சும் என்கூட பேசக்கூடாத
அளவுக்கு என்னம்மா தப்பு பண்ணேன்?... புள்ளையா நினைக்க வேணாம், யாரோ ஒரு மூணாம்
மனுஷனா நினச்சாவது பேசலாம்ல!” கோபமும் ஆற்றாமையும்
கலக்க பேசினான்...
அந்த கால்களின் மீது தலையை பதித்தபடி, “நான்
தப்பு பண்ணிருந்ததா மன்னிச்சிரும்மா... தயவுசெஞ்சு பேசாம மட்டும் இருக்காத...” உடைந்து அழத்தொடங்கினான் முருகன்... அதற்குமேல் எப்படி
மன்னிப்பு கேட்பது? என்றும் புரியவில்லை... அவன் தலைமீது அப்போதுதான் அம்மாவின்
விரல்கள் பட்டது...
நிமிர்ந்து பார்த்தான்... கண்கள் கலங்கியபடி
முருகனையே பார்த்துக்கொண்டிருக்கிறார் அம்மா...
“அழுகாதம்மா... இனி நீ அழக்கூடாது, அதான் நான்
வந்துட்டேன்ல...” கண்களை
துடைத்துவிட்டு, அம்மாவின் நெற்றியில் முத்தமிட்டான்...
“புள்ளை நாசமா போய்டனும்னு எந்த தாயும்
நெனைக்கமாட்டா முருகா... நீ தப்பான வழில போயி, கஷ்டப்படக்கூடாதுன்னுதான்
பயந்தேன்... அதுமட்டுமில்லாம உன்ன நாலு பேரு தப்பா பேசிட்டா, அதை என்னால தாங்கவும்
முடியாது... அன்னிக்கு திட்டுனதல்லாம் சாபம் இல்ல, என்னோட பயம்... இப்போ அது
தீர்ந்திடுச்சு.. எனக்கு கோபமல்லாம் கூட, இதை பதினஞ்சு வருஷம் கழிச்சுதான் நீ
வந்து சொல்லனுமான்னுதான்...” இத்தனை வருடங்களாக
சொல்ல நினைத்து, மனதிற்குள் அழுத்திக்கொண்டிருந்த வேதனைகள் வார்த்தைகளினூடே
வெளிப்பட்டன..
“நல்ல நெலமைக்கு வந்தபிறகு உங்கள பாக்கனும்னு
நினச்சேன், அதுக்குத்தான் இவ்ளோ நாள் ஆச்சு... இப்ப நான் பெரிய கம்பெனி...” என்று தொடர்வதற்கு முன்பு, இடை நிறுத்தினாள் அம்மா...
“நீங்க வெளில பேசிட்டு இருந்ததல்லாம்
கேட்டுட்டுதான் இருந்தேன் முருகா... நீ வர்றதுக்கு முன்னாடிலேந்து அவங்கல்லாம்
பேசிட்டு இருந்ததையும் கேட்டுக்கிட்டுதான் கிடந்தேன்...” ஆற்றாமையோடு சொன்னாள்...
“அவங்கல்லாம் கெடக்குறாங்க விடும்மா... நீ
யாருக்காகவல்லாம் பயந்தியோ, அவங்க எல்லாருக்கும் இப்ப என்னோட ஈர்ப்பு பெருசா
தெரியல, என் வசதிதான் கண்ணுக்கு தெரியுது.. இதுவே நான் பிச்சைக்காரனா வந்திருந்தா,
‘இவன் உருப்புடாம போயிடுவான்னுதான் அப்பவே தெரியுமே!’ன்னு சொல்றதுக்கு தயாராவே இருந்திருப்பாங்க...” விரக்தியில் சிரித்தான்..
“அப்டி நீ வந்திடக்கூடாதுன்னுதான் ஒவ்வொரு
நாளும் கடவுள வேண்டிகிட்டு இருந்தேன்... இனி நிம்மதியா போய்சேருவேன் முருகா...”
“உனக்கு ஒன்னும் ஆகாதும்மா... என்னோட வா, உனக்கு
வெளிநாட்ல கூட வைத்தியம் பண்ணி பழையபடி மாத்திடலாம்.. தெம்பா பழையபடி வந்து, என் மேல இருக்குற கோபத்த அடிச்சே
தீர்த்துக்கோ!” மகிழ்ச்சியில்
புன்னகைத்துக்கொண்டே சொன்னான் முருகன்...
“இல்லப்பா.. வேணாம்.. இங்கயே நான்
இருந்துக்கறேன்... நேரம் கிடைக்குறப்போ நீ வந்து பாரு, அதுபோதும்!”
“ஏன்மா, இன்னும் என் மேல உள்ள கோபம்
போகலையாக்கும்?” கோபத்தில்
கேட்டான்...
“அப்டி இல்லப்பா... இப்ப உன்கூட நான் வந்தா,
ரூமுக்கு வெளில இருக்குறவங்களுக்கும், உன்ன பெத்தவளுக்கும் வித்தியாசம் இல்லாம
போய்டும்பா... இது உனக்கு கொடுக்குற தண்டனை இல்ல, எனக்கு நானே கொடுத்துக்கற
தண்டனை!” பழையபடி கண்களை
மூடியபடி கூறினாள்... இப்போது கண்களை மூடியது முருகனை பார்ப்பதை தவிர்ப்பதற்காக
அல்ல, அவள் குற்ற உணர்ச்சியை மறைப்பதற்காகத்தான்... மூடிய விழிகளினூடே தாரை
தாரையாக கண்ணீர் கசிந்துகொண்டிருந்தது... (முற்றும்)