Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday, 10 February 2014

"முதல் இரவுப்பயணம்..." - சிறுகதை...


ப்படி ஒரு தருணத்தில் அகிலனை பார்ப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை... திருச்சியிலிருந்து சென்னை கிளம்பும் அந்த சொகுசு பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வெளிக்காட்சிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, என் பக்கத்தில் காலியாக இருக்கின்ற இருக்கையில் அமரப்போவது அகிலன்தான் என்பது அந்த நிமிடம்வரை என் கற்பனைகளுக்கு கூட அப்பாற்பட்ட ஒரு விஷயம்... பத்து வருடங்களுக்கு முன்னால் பார்த்த அதே உடல் தோற்றம் தான் என்றாலும், இப்போது அங்கங்கள் மட்டும் தன் இலகுத்தன்மையை இழந்து, முறுக்கேறி இருப்பதாக பார்த்தவுடன் தோன்றியது...
அவனை முதலில் பார்த்த அந்த நாளை என்னால் மறக்க முடியாது....
பன்னிரண்டாம் வகுப்பில் படித்த வயதில், சென்னையில் ஒரு அறிவியல் கண்காட்சியில்தான் அகிலனை நான் முதலில் சந்தித்தேன்... நூற்றுக்கணக்கான பள்ளிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மத்தியில் தொடர்பே இல்லாத நானும் அவனும் சந்தித்து, பேசி, உடலால் உள்ளத்தால் கலக்க வேண்டும் என்பது ஏற்கனவே எழுதப்பட்ட விதியா? என்பது எனக்கு புரியவில்லை...
“வணக்கம் சொல்லும் ரோபோ, மகிழுந்துக்கான நவீன சென்சார் கருவி, பணம் வைத்து பூட்டப்பட லேசர் பணப்பொட்டி” என்று அறிவியலை மேற்தட்டு மனோபாவத்தோடு மட்டுமே அணுகி, ஆராய்ந்து, நாட்டுக்கு அற்பனித்துக்கொண்டிருந்த மாணவர்களுக்கு மத்தியில், “புகை வராமல் சமைக்க பயன்படும் விறகு அடுப்பு” செய்துவைத்த அகிலனின் வித்தியாசமான பார்வைதான், அவன் மீதான என் முதல் காதல் பார்வைக்கு அடித்தளம்!...
“உங்க படைப்பு நல்லா இருக்கு...” என்று தொடங்கிய எங்கள் பேச்சு, கண்காட்சி நடந்த மூன்று நாட்களும், “உசேன் போல்ட்”இன் ஓட்டத்தை போல நிற்காமல் ஓடியது.... நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வார்த்தைகளை பரிமாறிக்கொள்ளவில்லை, “ஐ லவ் யூ... நீ இல்லாம நான் வாழ முடியாது” என்கிற சினிமா வசனங்கள் பேசிடவில்லை, மடியில் படுக்கவைத்து “கண்ணே, மணியே, புஜ்ஜி, குட்டி...” செயற்கை வர்ணனைகளால், வார்த்தைகளுக்கு வண்ணம் சேர்க்கவில்லை.... ஆனால், உளமார இருவரும் அந்த உறவை உணர்ந்தோம், ஓரிரவில் ஒன்றாகவும் கலந்தோம்....
நாங்கள் இருவரும் சந்தித்தது “விதி” என்றால், எங்கள் பிரிவுக்கான காரணமும் விதிதான் என்பதில் ஐயமில்லை... மூன்று நாட்களுக்கு பிறகு எங்கள் பள்ளிகளை நோக்கி நாங்கள் நகர்வதற்கான நேரமும் வந்தது, பரிமாற்ற அலைபேசி அப்போதில்லை, துண்டுக்காகிதத்தில் எழுதப்பட்ட அகிலனின் முகவரி கூட, நான் ஊர் வந்து சேர்வதற்கு முன்பு கசக்கி எறியப்பட்டது... ஆனால், அதற்கு காரணம் விதியில்லை, என் நண்பனொருவனின் சதி... என் சட்டைப்பைக்குள் பத்திரமாக வைத்திருந்த அந்த காகித சுருளை கசக்கி எரிந்து, உள்ளே துழாவி ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்துவிட்டான்.... அந்த அற்ப “ஐந்த ரூபாயில்” அகிலனுடனான அனைத்து தொடர்புகளையும் நான் இழந்தேன்....
அதன் பிறகு எத்தனையோ நாட்கள் அவன் நினைவுகள் என்னை ஆக்கிரமிக்கும்... அகிலன் எனக்காகவே படைக்கப்பட்ட ஒருவன் என்பதான நினைப்பு எனக்குள் எப்போதும் நிலைபெற்றிருக்கும்... ஆனாலும், தேடிக்கிடைக்காத புதையலாகத்தான் அவன் இத்தனை வருடங்களும் இருந்துவிட்டான்... மனப்பசியை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு, உடற்பசியை தீர்த்துக்கொள்ள “பிளானட் ரோமியோ” வசமெல்லாம் வாசம் செய்தேன்.... சிற்சில அழகன்களையும் சந்தித்து, உடலால் உறவாடினேன்....
ஆனாலும் ஏனோ, முன்பின் அறிமுகமில்லாத யாரோ ஒருவரிடம் என் வெற்றுடலை காண்பிக்கவும், உடலால் இன்பம் துய்க்கவும் என் மனம் இடம்கொடுக்க மறுத்தது... யாரோ ஒரு தெரியாத நபர், என் உடலை தொடும்போது உடலில் “புழு நகர்வதாகவும், கம்பளிப்பூச்சி நெருடுவதாகவும்” உணர்வுகளை என் மூளை பிரதிபலிக்கும்... நாளடைவில், வேற்று ஆண்கள் என்னை தொட்ட மறுகணமே என் உடல் அறிப்பதை போல உணர்வுகள் மேலிட்டது....
என்ன செய்யலாம்? உடலின் பசியை தீர்க்க மனம் வழிவிட மறுக்கிறது... மனதின் பசியை தீர்க்க, காலம் பதில் சொல்ல தயங்குகிறது... என்னதான் செய்வது?....
இப்படி யோசித்துக்கொண்டிருந்த அப்படி ஒருநாளில்தான் என் அருகில் வெகு இயல்பாக வந்து அமர்ந்தான் அகிலனும்....
மன்மதன்’கள் எப்போதும் கையில் அம்புடன் வருவதில்லை, சில நேரங்களில் கையில் “வாட்டர் பாட்டிலுடன்” வந்தும் நம் பக்கத்தில் அமரலாம்.... அருகில் அமர்ந்த அதே வேகத்தில் என்னை முழுவதும் கபளீகரம் செய்வதை போன்ற ஒரு பார்வையை வீசினான்...
அகிலனுக்கு லேசான தெத்துப்பல், அதை வெளிக்காட்ட தயங்கியே எப்போதும் அந்த “அளவான புன்னகை” என்னும் அளவீட்டை வைத்திருப்பான்... இப்போதும் அந்த வழக்கமான உதடு பிரியாத புன்னகையை அவன் உதிர்க்க, என் மனதிற்குள் பட்டாம்பூச்சி சிறகடிக்க தொடங்கியது...
“பேச்சை எப்படி தொடங்கலாம்?” என்று நான் யோசித்து வியூகங்களை வகுத்துக்கொண்டிருந்த நேரத்தில், எவ்வித பதற்றமும் படபடப்பும் சிறிதும் இல்லாமல் அகிலனே பேச்சை தொடங்கிவிட்டான்....
“சென்னைல வேலை பாக்குறீங்களா?”
“இல்ல... திருச்சிலதான் வொர்க் பண்றேன், சென்னைக்கு ஒரு ப்ராஜெக்ட் விஷயமா போறேன்...” என் வார்த்தைகளில் தயக்கமும் தடுமாற்றமும் கலந்தே வெளிவந்தது....
அதன்பிறகு பேச்சுகள் ஏனோ திசையற்ற காற்றாடி போல எங்கெங்கோ பறந்தது...
“சென்னைல இப்போலாம் க்ளைமேட் ரொம்ப மோசம்...” புவியியலில் தொடங்கி,
“மின்வெட்டு நேரம் இப்போ அதிகமாக்கிட்டாங்க, சோலார் பவர் தான் இதுக்கல்லாம் ஒரே வழி....” இயற்பியலில் பயணித்து,
“வர்ற எலெக்சன்ல காங்கிரஸ் ரொம்ப மோசமா அடிவாங்கப்போகுது....” ஆபத்தான அரசியலில் அவன் பேச்சுகளை நிறைவுசெய்தபோது, பேருந்து பெரம்பலூரை நோக்கி பயனித்துக்கொண்டு இருக்கிறது..... அர்த்தமற்ற பேச்சுகள்தான் காதலின் மொழி என்று அப்போதுதான் நான் உணர்ந்தேன்...
மெல்ல பயணிகள் ஒவ்வொருவராக நித்திரையில் ஆழ்த்திக்கொள்ள தொடங்கிவிட்டனர்... பேருந்து விளக்குகள் அணைக்கப்பட்டு, மெல்லிய சிவப்பு விளக்கின் வெளிச்சம் மட்டும் பழுப்பாக பேருந்தில் படர்ந்திருந்தது....
இளைஞன் ஒருவன் அலைபேசியில் வெகுநேரமாக குறுஞ்செய்தி தட்டிக்கொண்டிருக்க, குழந்தை ஒன்று மெலிதான சிணுங்கலை சினுங்கிக்கொண்டு இருந்ததை தவிர மற்றவர்கள் எல்லாம் பெரும்பாலும் இந்நேரம் “ஆல்பா” நிலையில் தூக்கத்தை நோக்கி பயணித்திருக்கக்கூடும்....
ஒருவழியாக அகிலனும் தன் அர்த்தமற்ற பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, “குட்நைட்” சொல்லிவிட்டான்...
எனக்கோ படபடப்பு அதிகமானது.... அப்போதைய மூன்று நாட்களுக்கு இடையில் இருந்த “பத்து வருட” இடைவெளியின் தாக்கமே இல்லாமல் அவன் பேசுவது எனக்கு மகிழ்வாக இருந்தாலும், மறுபுறத்தில் அந்த “இயல்பில்” கொஞ்சம் பயமும் எனக்கிருந்தது... “நான் காதலாகவும், வாழ்க்கையாகவும் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு உறவை, அவன் சாதாரண ஒன்றாக கருதிவிடுவானோ? இப்போது அவனுக்கு என் மீது ஈர்ப்பு இல்லையோ?” போன்ற கேள்விகள் என் மனதை இன்னும் அதிகமான பயப்பதற்றத்தில் ஆழ்த்தியது....
புரியாத குழப்பத்தில் விரல் நகத்தை நான் கடித்துக்கொண்டிருக்க, அகிலனின் கை என் மீது எதேச்சையாக பட்டது... தூக்கக்கலக்கத்தில், வண்டியின் குலுக்கத்தில் இதெல்லாம் இயல்பான ஒன்றுதான் என்று கருதி, மேற்கொண்டு என் கடித்தலை நகம் தாண்டி, விரல் நோக்கி கொண்டுசென்றுவிட்டேன்....
எதேச்சையாக என் மீது பட்ட கை, வண்டியின் குலுக்களுக்கு எதிர்த்திசையில் பயணிக்க தொடங்கியது... அப்போதுதான் எனக்கு மண்டைக்கு மேலே பல்பு எறிந்தது, காதுகளுக்குள் மணி அடித்தது... மேற்கொண்டு நகரப்போகும் காட்சிகளை “மெளனமாக” கவனிக்க நானும் ஆயத்தமானேன்... என் எதிர்பார்ப்புகள் பொய்க்கவில்லை... கைகளை தாண்டி அவன் உடலும் என் மீது தன் தழுவுதலை தொடங்கியது... விழுப்புரம் செல்வதற்குள் அந்த உல்லாச பயணம் “உச்சக்கட்டத்துடன்” நிறைவுக்கும் வந்துது... பத்து வருட காத்திருப்பின் பலனை, அந்த பத்து நிமிடத்தில் நான் அடைந்துவிட்டேன்... நீண்ட நாட்களுக்கு பிறகு உடலால் மட்டுமல்லாது, மனதாலும் முழு நிறைவு பெற்ற ஒரு உறவாடல்.... வெகுகாலத்திற்கு பிறகு ஒரு உறவுக்கு பின்பு, என் உடல் “புழுவின் ஊறுதலையும், அரிப்பையும்” எதிர்கொள்ளவில்லை..... அவன் இன்னும் என் மீதான அந்த ஈர்ப்பினை துறக்கவில்லை என்பதை நான் உணர்ந்த தருணம் அது....
முழு மனநிறைவோடு, அவன் தோள் மீது சாய்ந்தபடி கண் அயர்ந்தேன்....
சென்னையின் புறநகரை நாங்கள் அடைந்தபோது, அதிகாலை நான்கு மணி... காரிருள் மெல்ல அகன்று, பழுப்பிருள் அப்பிக்கொண்டு நிற்கும் விடிகாலை பொழுது....
இருவரும் விழித்துவிட்டோம்... இரவின் உறவால் ஒருவித வெட்கத்தின் வெளிப்பாடாக தயக்கத்துடன் நான் அமர்ந்திருக்க, அகிலனோ எவ்வித நிகழ்வின் சுவடும் வெளிக்காட்டாதவனாக, “ஓகே.... இன்னிக்கு ஈவ்னிங் மீட் பண்ணலாமா?” என்றான்...
எனக்கோ மகிழ்ச்சியின் உச்சத்தில் என் மனம் துள்ளிக்குதித்தது... நான் “எப்படி கேட்பது?” என்று புரியாமல் தவித்துக்கொண்டிருந்த கேள்வியையும் அவனே கேட்டுவிட்டான்...
தொடக்கம் முதலே எங்கள் காதல் விளையாட்டில், பாய்ன்ட்’களை அவன்தான் அள்ளிக்கொண்டு இருக்கிறான்... முதன்முதலாக என் புள்ளிகள் கணக்கை துவக்க எண்ணி, அவன் முகத்தை நோக்கி என் தலையை நிமிர்த்தி, “உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க அகிலன்...” என்றேன்....
ஆனால், அவன் முகமோ அதுவரை நிறைத்துவைத்திருந்த புன்னகையை சட்டென இழந்து, புருவங்கள் உயர்த்தப்பட்டு ஆச்சரிய குறியீடாய் என்னை பார்த்து,  “என் பெயர் உங்களுக்கு எப்டி தெரியும்?... என்னை முன்னாடியே தெரியுமா உங்களுக்கு?” எச்சிலை விழுங்கிவிட்டு கேள்வியை கேட்டான்....
அதிர்ச்சியில் உறைந்து நின்றேன் நான்.... அப்போதுதான் மெதுவாக என் உடலில் புழுக்கள் நகர்வதாகவும், கம்பளிபூச்சிகள் நெருடுவதாகவும் தோன்றியது... மெல்ல உடல் முழுக்க அரிப்பு பரவ தொடங்கியது.... (முற்றும்)

Saturday, 8 February 2014

"இது கூகுளின் டூடுள் புரட்சி..." - வல்லரசை சீண்டும் வலையரசு...






            “விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வது தனிநபர் உரிமை... அந்த உரிமைக்கு பங்கம் விளைவது போல சிலரை மட்டும் பாகுபடுத்தி ஒதுக்குவது முறையல்ல”
இந்த இரண்டு வரிகளோடு, மேற்குறியிட்ட படமும்தான் இந்த ஓரிரு நாட்களில் உலகத்தினர் பலராலும் விவாதிக்கப்பட்ட ஒரு முக்கியமான விஷயம் என்பதை நாம் நம்பித்தான் ஆகணும்... ஆம், இணைய உலகில் கொடிகட்டி பறக்கின்ற “கூகுள்” தளத்தின் முகப்பில்தான் இவை இரண்டும் இடம்பெற்றிருக்கிறது... “ஆயிரம் பக்கங்களை கொண்ட ஒரு புத்தகம் உண்டாக்காத தாக்கத்தை, கூகுள் போன்ற தளத்தின் இரண்டு வரிகள் உண்டாக்கும்” என்ற உண்மையை இன்றைக்கு உலகம் நம்புகிறது... உலகின் வல்லரசுகளே அஞ்சும் ஒரு ஆளுமை மிக்க நாட்டின் அதிபர் சொன்ன கருத்தை எதிர்த்து வெளியான இந்த கூகுளின் டூடுள் நிச்சயம் ஒரு சத்தமில்லாத சமதர்ம புரட்சிக்கு வழிவகுத்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை....
ரஷ்யாவின் சோச்சி நகரில் தொடங்கியுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக மிக பிரம்மாண்ட முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன... ஆனால், ஒருபால் ஈர்ப்பினருக்கு எதிரான ரஷிய அதிபர் புதினின் கருத்தும், அங்கே நிலவுகின்ற பாலீர்ப்பு சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலையும் ஒலிம்பிக் போட்டிகளின் பிரம்மாண்டத்தை தாண்டி, சர்ச்சைகளுக்குள் சிக்கிக்கிடக்கின்றன.... ஏறத்தாழ 80 நாடுகளுக்கும் மேற்ப்பட்ட மூவாயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டிகளில் பங்கேற்கும் ஒருபால் ஈர்ப்பு விளையாட்டு வீரர்களின் உயிருக்கும் கூட ரஷ்யாவின் இந்த பிற்போக்கான மனநிலையால் ஆபத்து உண்டாகியிருக்கிறது... (இதைப்பற்றி “ரஷ்யாவின் பிற்போக்கான ஹோமொபோபிக் சட்டம்” என்கிற கட்டுரையில் முன்பே குறிப்பிட்டுள்ளேன்)... இப்படி ஒரு சூழலில் கூகுள் போன்ற ஆளுமை மிக்க தளம் வெளியிட்டுள்ள இந்த படமும், வாக்கியமும், உண்மையை யோசிக்கும் நிலை உண்டாகியுள்ளது....
கூகுளுக்கு இது முதல் அனுபவம் இல்லை... எனக்கு தெரிந்து சில ஆண்டுகளாகவே கூகுள் ஒருபால் ஈர்ப்பினருக்கான ஆதரவான செயல்பாடுகளில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளது... மக்களுக்கான விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கங்கள் என்று உலகம் தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரங்களில் இறங்கியிருக்கும் கூகுள் மற்ற “பணம் மட்டுமே நோக்கம்” என உழைக்கும் நிறுவனங்களிலிருந்து மாறுபட்டு தெரிகிறது.... கூகுள் நிறுவனத்தின் பணிபுரியும் ஒருபால் ஈர்ப்பினருக்காக “gayglers” என்கிற அமைப்பும் கூட அந்த நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகிறது... தங்களின் பணியாளர்கள் எந்தவித காரணத்தாலும் ஏற்றத்தாழ்வோடு நடத்தப்படக்கூடாது என்கிற உயரிய கோட்பாட்டில் இயங்கும் அந்த நிறுவனம் நிச்சயம் ஆச்சரியத்தை உண்டாக்கும் வித்தியாசமான சக்திதான்.... கூகுளுக்கும் கூட ஒருபால் ஈர்ப்பினருக்கு ஆதரவாக செயல்படவேண்டிய அவசியம் இல்லை... பல நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து, “எல்லோருக்கும் நல்லவர்” என்கிற இமேஜை தவிர்த்து இப்படி அவர்கள் நமக்காக குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை... ஆனால், “இவர்களை போல நல்லவர்களும் இருக்கிறார்கள்!” என்று அடையாளம் காட்டவாவது சில நிறுவனங்கள் வேண்டுமே, அதற்காகவாவது இப்படி செய்யட்டும் அவர்கள்...
நம் நாட்டில் அரசியலை விளையாட்டாக எடுத்துக்கொள்கிறார்கள், ரஷ்யாவோ விளையாட்டிலும் அரசியல் செய்கிறது...
கூகுள் போன்ற தளங்களின் பங்களிப்பால் மட்டுமே, நம் உரிமைகளுக்கான குரல் பல கோடி மக்களை மிக எளிதாக சென்றடைகிறது.... இத்தகைய அதிகாரவர்க்கத்தின் பிரித்தாழும் சூழ்ச்சிக்கு எதிராக நமக்காக குரல் கொடுக்கும் கூகுளின் மகத்தான பங்குக்கு தலை வணங்குவோம்!...
திக்கெட்டும் சிறக்கட்டும் கூகுள்!....
                             புரட்சி மலர்களை தூவட்டும் அதன் “டூடுள்”!...

Monday, 3 February 2014

"ஊடலும் ஊடல் நிமித்தமும்..." - குட்டிக்கதை...







அலைபேசியை கையில் எடுத்து, அதன் திரையை அழுத்திய அகிலன்,  ஹெட்செட்டை காதில் வைத்துஹலோ தமிழ் இருக்காரா?... நான் இங்கிலீஷ் பேசுறேன்...என்றான்...
சாரி... சிரிப்பு வரல....
ஹலோ தமிழ்... ஒரு காதலன் ஜோக் சொன்னா அனுபவிக்கணும், இப்டி ஆராயக்கூடாது... இது எழுதப்படாத காதல் விதி தெரியுமா?”
தெரியாது...பிடிகொடுக்காத பதில்...
இன்னிக்கு என்னடா உனக்கு ப்ராப்ளம்?... நல்லாத்தானே இருந்த?”
நான் எப்பவும் ஒரு மாதிரி தான் இருக்கேன், உன் பார்வைதான் அடிக்கடி மாறிட்டு இருக்கு.... பத்திரிகைகாரன், அதான் வித்தியாசமா யோசிக்குற போல...
மறுமுனையில் மீண்டும் பிடிபடாத பேச்சு, மனதிற்குள் எரிச்சல் மேலோங்கியது அகிலனுக்கு....
தயவுசெஞ்சு என்னன்னு சொல்லு, இப்டி உயிரை வாங்காத....
நான் பேசுறது உயிரை வாங்குற மாதிரிதான் இருக்கும் உனக்கு... காலைல ஆறு மணிக்கு நீ ஒரத்தநாடு வந்துட்ட, இப்போ சாயந்திரம் மணி ஆறு... இப்போதான் என் ஞாபகம் வருதுல்ல உனக்கு?.. அதுவும் போன்ல பேசுற அளவுக்கு நான் அடுத்தவன் ஆகிட்டன்ல?”... எல்லாம் புரிந்தது அகிலனுக்கு... இதற்கு மேலும் அலைபேசியில் சமாதானம் பேசி பயனில்லை... அலைபேசியை துண்டித்துவிட்டு, கண்ணில் பட்ட ஒரு பேன்ட்டை எடுத்து மாட்டிக்கொண்டு அவசரமாக வீட்டிலிருந்து வெளியேறினான் அகிலன்...
என்ன மாப்ள, சர்க்கஸ்க்கு எதுவும் போறியா?... மஞ்சள் கலர் சட்டை, பச்சை கலர் பேன்ட்.... கலக்குறஹாலில் படுத்தபடியே அதிரசம் சாப்பிட்டுக்கொண்டிருந்த மாமாவின் கேள்விக்கு சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்துவிட்டு, வாசலை நோக்கி விரைந்தான்....
ஆத்தாடி... கைப்புள்ள கோவமா போறத பாத்தா, இன்னிக்கி எத்தன தல உருளப்போகுதோ?” மாமாவின் கிண்டல் வாசல் வரை தொடர, அவசரமாக பைக்கை ஸ்டார்ட் செய்ய தொடங்கினான் அகிலன்....
வீட்டிற்குள்ளிருந்து வேகமாக வெளிவந்த அம்மா, “டேய், பலகாரம் எதாச்சும் சாப்புட்டு போடா.... மாமா, காரைக்குடி பலகாரம் வாங்கிட்டு வந்திருக்கு....பைக்கிற்கு அருகே வந்துவிட்டாள் அம்மா....
வந்து சாப்பிடுறேன்.... நான் நிலாவுக்கு போகலம்மா, இங்க பக்கத்துலதான் போறேன்....சொன்னபடியே வண்டியை எடுத்த அகிலன், வேகத்தில் பறந்தான்....
வயல்வெளிகளை கடந்து போனபோது, முன்பனி காலத்தின் பனிப்பொழிவை எதிர்கொள்ள பயந்ததை போல முற்றிய நெல் மணிகள், தலை குனிந்து நிற்கின்றது... அந்த குளிர் பொலிவையும் பொருட்டாக மதிக்காமல் இருட்டும் வரையில், தண்ணீருள் சூட்டினை தணித்துக்கொண்டிருக்கும் எருமைகள்... சில நேரம் ஊடல் உண்டாகும்போது நெல்மணியை போல சகிப்புத்தன்மையோடும், எருமையை போல பொறுமையாகவும் இருந்தால்தான் காதலில் வெல்ல முடியும்போல!...
செல்லும் வழியில் மருத மரத்தின் அருகில் கண்ணில் பட்ட இந்திரன் கூல்டரின்க்ஸ்கடையை பார்த்ததும், அங்கு நிற்காமல் போக அகிலனுக்கு மனம் வரவில்லை... வண்டியை அகிலன் நிறுத்தியதை பார்த்த கடைகாரர், “வாப்பா.... பாதாம் கீர் போடசொல்லவா?” என்றார்... தலையை ஆட்டிவிட்டு, “பார்சல்...என்று மட்டும் சொன்னான்... மின்னல் வேகத்தில் பார்சல் செய்யப்பட்டு, அதை வாங்கி வண்டியை எடுக்கப்போன அகிலனை நிறுத்தியது ஒரு கை...
வணக்கம் தம்பி... நல்லா இருக்கியளா?... போன மாசம் நம்மாழ்வாருக்கு இரங்கல் கட்டுரை எழுதிருந்திங்க... ரொம்ப அழகா இருந்துச்சு....
நன்றிங்க....
இனிமே இரங்கல் கட்டுரை எழுதுறப்போ, மறக்காம அவங்கள இழந்து வாடுற குடும்பம் பத்தியும் எழுதுங்க... அப்புறம், இறந்தவரோட நண்பர்கள் பத்தியும் எழுதுங்க....மணியை பார்த்தான் அகிலன், இருட்டிக்கொண்டு இருக்கிறது... கடிகாரத்தின் சிறிய முள், ஏழினை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது... பத்திரிகை வாசகர் விடுவதாக இல்லை...
எரிச்சலான அகிலன், “சரிங்க.... செஞ்சுடலாம்... அடுத்த தடவை உங்களுக்கு எழுதுறப்போ எல்லாத்தையும் சரியா செஞ்சிடுறேன்...என்று மட்டும் சொல்லிவிட்டு, அவர் யோசிக்க தொடங்கிய மணித்துளிகளில் வண்டியை விரைவாக செலுத்தி, தமிழின் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினான்... வாசலில் விதை நெல் காயப்போட்டிருக்க, காக்கைகள் சில அவற்றை கொத்திக்கொண்டு போவதில் ஆர்வம் காட்டிக்கொண்டு இருந்தன.... அகிலனை பார்த்ததும் அருகிலிருந்த மரத்தில் தற்காலிக தஞ்சம் அடைந்தன காக்கைகள்....
கதவை திறந்த தமிழின் அம்மா, வழக்கமான உற்சாக வரவேற்பை கொடுத்துவிட்டு, தமிழ் இருக்கும் அறை நோக்கி அகிலனை அனுப்பி வைத்தாள்... காலைலேந்து இஞ்சி தின்ன கொரங்காட்டம் இருக்கான்பா.... என்ன கேட்டாலும் எரிஞ்சு விழறான்...இந்த கூடுதல் தகவல் அகிலனை இன்னும் கலவரப்படுத்தியது.... ஆனாலும், மனதிற்குள் கடவுளை வணங்கிய அகிலன், “முருகா!... இன்னிக்கு கலவரம் எதுவும் நடக்காம நீதான் காப்பாத்தணும்....அறைக்குள் சென்றான்...
கட்டிலில் சாய்ந்தபடி பசுமை விகடனை புரட்டிக்கொண்டு இருந்தான் தமிழ்.... கண்களில் கனல் புகைந்தது, முகத்தின் சிவப்பு கடும் கோபத்தை பிரதிபலித்தது...
ஹாய்டா.... இந்தா பாதாம் கீர், உனக்காக வாங்கிட்டு வந்தேன்...என்றவாறே தமிழின் ரியாக்சனை நோக்கினான்... தமிழின் கண்கள் அருகிலிருந்த மேசையை பார்க்க, அதை அகிலனும் பார்த்தான்... மேசை மேல் இருந்த குவளையில் பாதாம் கீர், ஆனால் அது புளித்த தயிர் போல இருக்கிறது... எறும்புகளும், ஈக்களும் போட்டி போட்டுக்கொண்டு அதை நுகர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தன....
புரிந்தது, அகிலனின் வரவுக்காக காலை முதல் காத்திருக்கிறது போல அதுவும்.... அகிலன் உள்மூச்சை இழுத்து விட்டான்... மிகப்பெரிய யுத்தத்திற்கு தயார் ஆகிவிட்டான் என்று பொருள்....
என்ன தமிழ் உனக்கு பிரச்சினை?”
இவ்வளவு நேரம் ஆகியும் உனக்கு புரியலையா?”
இல்லடா.... வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்திருந்தாங்க... அதான் வெளில வரவே முடியல... அதுவும் ஆறு மாசம் கழிச்சு ஊருக்கு வந்ததுல அவங்க ரொம்ப பிருசு பிடிச்சாங்க, அதான்...தமிழின் அருகிலேயே அமர்ந்தான் அகிலன்....
ஹ்ம்ம்... உனக்கு ஆயிரம் பேர் இருப்பாங்க... என்ன பாக்கவோ, பேசவோ கூட நேரமிருக்காது... ஆனால், சிரிக்கும்போது நான் சிரிக்கணும், நீ காதல் மொழி பேசுறப்போ நானும் பேசனும்ல?”
அப்டி இல்ல தமிழ்.... உனக்கப்புறம் தான் மத்த எல்லாரும் எனக்கு... புரிஞ்சுக்கோ...தமிழின் கைகளை பிடித்தான்... அந்த பிடிப்பிலிருந்து அவசரமாக தன்னை விடுவித்துக்கொண்டான் தமிழ்....
நான் முட்டாள் இல்ல அகி... உனக்கு உங்க மாமா பொண்ணை கல்யாணம் செஞ்சு வைக்க தீவிரமா வேலை நடந்துட்டு இருக்கிறது எனக்கு தெரியும்... உங்க ரெண்டு பேர் ஜாதகமும் கும்பகோணம் ஜோசியர் வரைக்கும் போய் பொருத்தம் பார்த்துட்டு வந்ததும் எனக்கு தெரியும்.... இது எந்த விஷயத்தையும் நீ என்கிட்ட சொல்லல... நடக்குற எந்த விஷயத்தையும் நீ வீட்ல எதிர்க்கல... அப்டின்னா என்ன அர்த்தம்?”
அகிலனுக்கு விஷயம் இப்போதான் புரிகிறது... இன்று காலைதான் ஜாதக விஷயம் அகிலனுக்கே தெரிந்தது, அதற்குள் விஷயம் தமிழ் காதுகளுக்கு வந்தது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.... அவசரப்பட்டு எதுவும் பேசினால், இது பெரிய விளைவை உண்டாக்கும் விஷயம் என்பதால் பொறுமையாக பேசத்தொடங்கினான் அகிலன்...
அவங்க ஜாதகம் பாத்த விஷயம் எனக்கு இன்னிக்கு தான் தெரியும்.... வந்ததும் சண்டை போட விரும்பாததால நான் அமைதியா இருந்தேன்... நிச்சயம் அம்மாகிட்ட பேசுறேன் தமிழ்... உன்னவிட்டுட்டு நான் வேற வாழ்க்கைய நினச்சு கூட பார்க்கல... இப்போ என்ன ஜாதகம் தானே பாத்தாங்க?... தேதியே வச்ச மாதிரி ஏன் டென்ஷன் ஆகுற?”
இன்னும் பத்து படிய தாண்டனும்லனு நீ சந்தோஷப்படுற.... அவங்க ஒரு படியை தாண்டிட்டாங்கன்னு நான் இங்க பயந்து போய் இருக்கேன் அகி... அப்பா, அம்மா, மாமா, அத்தைன்னு எதாச்சும் காரணம் சொல்லி நீ போய்டுவியோன்னு பயமா இருக்கு....கண்கள் கலங்கியது தமிழுக்கு....
ச்சி லூசு.... அப்டி ஒரு நிலைமை வந்தா, எல்லாரையும் தூக்கி போட்டுட்டு உன்கூடத்தான் நான் வருவேன்....
அப்டித்தான் நானும் நெனச்சேன்... ஆனால், இன்னிக்கு ஊர்லேந்து வந்ததும் நீ என்னை பார்க்க வராம, உன் சொந்தங்கள் தான் முக்கியம்னு அங்கேயே இருந்தத பாக்குறப்போ பயமா இருக்கு....
இப்போ நான் என்ன பண்ணினா நீ நம்புவ தமிழ்?... தீ குளிக்க சொல்றியா? மாடிலேந்து குதிக்க சொல்றியா? கோவில்ல பூ மிதிக்க சொல்றியா?” அகிலனின் வார்த்தைகளில் அவனை மீறிய கோபம் வெளிப்பட்டது....
அப்டி உன்ன கஷ்டப்படுத்தி என்னை நம்பவைக்கனும்னு அவசியம் இல்ல...  உங்க சொந்தக்காரங்க சந்தோஷத்துக்கே நீ வாழு... என்னைய விடு....வேகமாக எழுந்த தமிழ் மேசை மீது இருந்த குவளையை தட்டிவிட, கீழே கீர் ஆறுபாய்ந்தது..
அகிலனுக்கும் கோபம் மேலோங்க, வேகமாக அங்கிருந்து வெளியேறினான்... வீட்டிற்கு செல்ல மனமில்லை... வழியிலிருந்த பாலத்தின் திட்டினருகே வண்டியை நிறுத்தி, அங்கு அமர்ந்தான் அகிலன்... நிலவொளியை தவிர வேறு ஒளியில்லை, மெல்லிய காற்றில் வயல்களில் பயிர்கள் நளினமாக ஆடிக்கொண்டு இருக்கின்றன.... இந்த ரம்மியமான சூழல் அகிலனை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது... மன்னிப்பு கேட்டிடலாம் என்ற எண்ணத்தில், அலைபேசியை கையில் எடுத்த அகிலன், டயல் செய்ய எத்தனிக்கையில், “ஆனந்த யாழை மீட்டுகிறாய்... என்ற ரிங்டோன் ஒலித்தது.
தமிழிடமிருந்துதான்....
ஹலோ அகி....
ஹ்ம்ம்... சொல்லு...
சாரிடா...
ஹ்ம்ம்...
ஐ லவ் யூ டா...
ஹ்ம்ம்...
ஐ லவ் யூ சொன்னா திருப்பி ஐ லவ் யூ சொல்லனும்னு ஒரு அடிப்படை காதல் விதி உனக்கு தெரியாதா?” சிரித்தான் தமிழ்....
சிரித்தபடியே அழைப்பை துண்டித்தான் அகிலன்....
அழைப்பை துண்டித்த மறு நொடி, அவசர அவசரமாக ஒரு குவளையை எடுத்த தமிழ், அதில் பாதாம் கீரை ஊற்றி மேசை மீது வைத்தான்... வாசலில், பைக் வேகமாக நிறுத்தப்படும்க்ரீச்சத்தம் கேட்க, அம்மாவின் குரலில் வாப்பா அகிலா... எங்க போன திடீர்னுகுரலும் ஒலிக்க, மறு நிமிடத்தில் அறைக்குள் நுழைந்தான் அகிலன்.... நுழைந்தது அறைக்குள் மட்டுமல்ல, அவனுக்குள்ளும் தான்.... (முற்றும்/தொடரும்)
(இந்த கதை ஒரு வித்தியாசமான முயற்சிக்காக எழுதப்பட்டது... ஆழமாக பயின்றவர்கள் அதை கண்டுபிடித்திருக்கக்கூடும்... இந்த கதை முழுக்க “மருதம்” திணையை மையமாக வைத்து எழுதப்பட்டது... அதாவது அந்த திணைக்கே உரிய முதற்பொருள், உரிப்பொருள், கருப்பொருள் எல்லாமும் பெரும்பாலும் ஆங்காங்கே கதைகளுக்குள் தெளிக்கப்பட்டிருக்கும்.... இது வித்தியாசம் இல்லங்க.. நிஜமாகவே ஐந்து எழுத்தாளர்கள் இணைந்து, ஐந்து திணைகளிலும் இந்த கதை பயணிக்கும் வண்ணம் எழுதவே முயற்சித்தோம்... அதன் முதலாகவே என் பங்காக மருத நிலத்து பகுதிக்கான கதையை நான் எழுதினேன்... முறைப்படி இதன் அடுத்த தொடர்ச்சியாக முல்லை, நெய்தல், பாலை, குறிஞ்சி எல்லாம் அந்தந்த எழுத்தாளர்கள் எழுத வேண்டும்... ஏனோ இடையில் ஏற்ப்பட்ட தடங்களால் முழுப்பயணமும் மேற்கொள்வதில் சிக்கல் உண்டாகிவிட்டது.... அதன்பொருட்டே என் பகுதியை மட்டும் நான் இங்கே பதிந்துள்ளேன்.... ஒருவேளை மற்ற நால்வரும் அவரவர் பகுதியை எழுதி இதற்கு இறுதி வடிவம் கொடுக்கும் வாய்ப்பு உண்டானால், நிச்சயம் முழுக்கதையையும் இங்கு பதிகிறேன்.... அதுவரை இதை ஒரு தனியான சிறுகதை என்ற அளவிலேயே படித்து, பொறுத்தருள்க!)