“உன்கூட நான் எப்பவும்
இருப்பேன்டா....” – சிறுகதை....
வீட்டின் வெளி கேட்டை திறந்து உள்ளே செல்லும் விஷ்வாவின் முகத்தில்,
அடுத்தவர் வீட்டிற்குள் செல்கிறோமே! என்கிற தயக்கம் சிறிதும் இல்லை... வாசலின்
அருகே ஒரு கம்பியில், சங்கிலி மூலம் பிணைக்கப்பட்டிருந்த நாய், வழக்கமான தன் “வால்
ஆட்டுதல்” மூலம் விசுவாசத்தை காட்டியது... அதன் நெற்றியை மெல்ல வருடியவாறே
மேற்கொண்டு நகர, காய்ந்த இலைகள் தொக்கியபடி நின்ற குரோட்டன்ஸ் செடி அவன் கண்களில்
பட்டது, இலைகளை பிய்த்து கீழே போட்டு கொஞ்சம் தண்ணீரும் அதற்கு ஊற்றிவிட்டு
வீட்டிற்குள் நுழைந்தான்...
ஹாலில்
இருந்த தொலைக்காட்சியில் “குஜால் பிரமோட்டர்ஸ் உங்களுக்காக மிக குறைந்த விலையில்
வீட்டுமனை கொடுக்குறாங்க.... சென்னைக்கு மிக அருகில், உளுந்தூர்பேட்டையில்
அமைந்திருக்கும் இந்த இடத்தில் மனை ஒன்று வாங்கினால், உங்களுக்கு பொங்கல் பரிசாக
ஒரு கிலோ நாமக்கட்டி பரிசாக வழங்கப்படும்” மாலை நேரங்களில் அழுதே பல குடும்பங்களை
சிதைத்த அந்த சீரியல் மங்கை, காலைப்பொழுதில் சிரித்தே பல குடும்பங்களை சீரழிக்கும்
முனைப்பில் தீவிரமாக இயங்கிக்கொண்டு இருக்கிறாள், அவசரமாக அந்த ஆபத்தான
அபத்தக்குரலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம், தொலைக்காட்சியை அணைத்தான்
விஷ்வா...
இன்னும்
வீட்டில் யாரையும் அவன் காணவில்லை... சமையலறைக்குள் மட்டும், ஆட்கள் நடமாட்டம்
இருப்பதற்கான சில பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்க, மெல்ல உள்ளே நுழைந்தான்...
நடுத்தர வயது பெண், வழக்கமான காலை நேரத்து பரபரப்பில் பம்பரமாக சுழன்று
கொண்டிருந்தார்... விசிலடித்த குக்கரை ஒரு கையால் மண்டையில் தட்டி “நிசப்தம்”
ஆக்கினார், அப்பாவி கோழி ஒன்றை துண்டுகளாக்கி மசாலா தடவினார், பாத்திரத்தில்
கொதித்துக்கொண்டிருந்த தண்ணீருக்குள் நறுக்கிய காய்கறிகளை லாவகமாக போட்டார்...
இதற்கு மத்தியில், தன்னை சில நிமிடங்களாக கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கும்
விஷ்வாவையும் கவனிக்க மறக்கவில்லை....
“என்ன
விச்சு, அப்டி பாக்குற?... உங்களுக்குத்தான் செமஸ்டர் லீவல்லாம், எங்களுக்கு
நித்தமும் வொர்க்கிங் டே’தான்....” வாய்தான் பேசிக்கொண்டிருந்ததே தவிர, கைகள்
வெங்காயத்தை சீரான அளவில் துண்டுகளாக்கிக்கொண்டுதான் இருந்தது....
“இன்னிக்கு
என்ன ஸ்பெஷல் ஆண்ட்டி?... நிறைய ஐட்டம் செய்றீங்க போல?”
“நம்ம
ஜனனி லீவ்’க்கு வர்றா இன்னிக்கு, அவளுக்கும் ஒரு வாரம் லீவாம்... அதான்... சரி, நீ
எங்கடா போன நேத்து, ஆளே பாக்க முடியல?” நெற்றியில் வழிந்த வியர்வையை தன் சேலை
முனையில் துடைத்தபடி கேட்டார்...
“தஞ்சாவூருக்கு
போயிருந்தேன் ஆண்ட்டி... கோவில் திருவிழாவாம், நான் வரணும்னு அம்மா
வேண்டிகிட்டாங்களாம்...”
“அடடே...
அவ்வளவு நல்லவனா ஆகிட்டியா நீ, கோவிலுக்கல்லாம் போற?.... என்ன வேண்டுன சாமிகிட்ட?”
“அடுத்த
தடவை நான் கோவிலுக்கு வர்றதா அம்மா எந்த சாமிகிட்டயும் வேண்டிக்கக்கூடாதுன்னு
வேண்டிகிட்டேன்... அம்மா அங்க ஒருவாரம் இருக்கணுமாம், தப்பிச்சா போதும்னு நான்
பஸ்’ல வந்துட்டேன்....” மெளனமாக சிரித்தான் விஷ்வா....
“அடப்பாவி!...
உன்ன போயி நல்லவன்னு ஒரு நிமிஷம் நான் நம்பிட்டேன் தெரியுமா?.. நீ மதன் எல்லாம்
ஒரே குட்டைல ஊறுன மட்டைதான்...”
“ஹ்ம்ம்...ஆமா,
எங்க அந்த இன்னொரு மட்டையை காணும்?”
சிரித்த
அம்மா, “வாய் தான் உனக்கல்லாம்... அவன் நேத்து நைட் எங்கயோ போயிட்டு லேட்டாதான்
வந்தான், தூங்கிட்டு இருக்கான்... பூஸ்ட் போட்டு தரேன், குடிச்சுட்டு போய் பாரு”
சொல்லிக்கொண்டே, பாலை குவளையில் ஊற்றத்தொடங்கிவிட்டார்.... சில நிமிடங்களில்
அம்மாவிடமிருந்து விடைபெற்று, மதனின் அறையை அடைந்தான் விஷ்வா...
படுக்கையில்
அட்டைப்பூச்சி போல தன் உடலை சுழற்றியபடி, போர்வையின் முழு ஆக்கிரமிப்போடு
உறங்கிக்கொண்டிருக்கிறான் மதன்... விடுமுறை நாள்தான் என்றாலும், எட்டு மணி வரை
தூங்கும் வழக்கமுடையவன் இல்லை மதன்... ஆனால், இன்றோ கடிகாரத்தின் முள் எட்டினை
கடந்து சில நிமிடங்கள் ஆகிவிட்டது...
தூங்குபவனை
தொந்தரவு செய்யக்கூடாது என்ற எண்ணத்தில், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தபடி விகடனை
புரட்டிக்கொண்டிருந்தான் விஷ்வா... அருகில் கிடந்த மதனின் அலைபேசி, குறுந்தகவல்
வந்ததற்கான “பீப்” ஒலிக்க, தயக்கமே இல்லாமல் அதை கையில் எடுத்தான் விஷ்வா...
எடுத்த வேகத்தில் அந்த குறுந்தகவல் திறந்துகொள்ள, குறுஞ்செய்தியாக “நன்றி.. நேற்று
இரவை என்னால் மறக்க முடியாது... இன்னைக்கும் சந்திக்கலாமா?” என்ற
கேள்விக்குறியோடு, முத்த குறியீடாக ஒரு “ஸ்மைலி”யும் அதில் இலவச இணைப்பாக
தொக்கிக்கொண்டு வந்தது... புது எண், யாராக இருக்கும்?... முத்தம் கொடுக்கும்
அளவிற்கான ஒரு உறவு,ஓர் இரவுக்குள் எப்படி பூத்திருக்க முடியும்?
வழக்கமாக
அருகில் இருக்கும் பெட்டிக்கடைக்கு செல்வதைக்கூட குறுந்தகவல் மூலம் சொல்லிவிட்டு
செல்லும் மதன், நேற்று இரவு எங்கோ சென்றதை மட்டும் ஏன் சொல்லவில்லை?... இந்த
குறுந்தகவலுக்கு என்ன அர்த்தம்?... எந்த கேள்விக்கும் விடை புரியாமல், எடுத்த
இடத்திலேயே அலைபேசியை வைத்துவிட்டான் விஷ்வா...
இது
நிச்சயம் விஷ்வாவிற்கு வித்தியாசமான மதனின் அணுகுமுறையாகத்தான் பட்டது... பள்ளி
காலம் தொட்டு இணை பிரியாத நண்பர்கள், கல்லூரி காலம் வரை தொடரும் இந்த நட்பில்
இதுவரை ஒரு விஷயத்தை கூட இருவரும் பரஸ்பரம் மறைத்ததில்லை... அப்படிப்பட்ட நட்பில்,
தனக்கு தெரியாமல் ஏதோ ஒரு விஷயத்தை மதன் ரகசியம் காக்கிறான் என்பதை உணர்ந்ததும்,
விஷ்வாவிற்கு ஏமாற்றமும் எரிச்சலும் மேலிட்டது...
எதையும்
காட்டிக்கொள்ளாமல் மதன் விழிக்கும்வரை காத்திருந்தான்... சரியாக ஒன்பது மணிக்கு,
சோம்பல் முறித்து கண் விழித்தான் மதன்....
விஷ்வாவை
பார்த்ததும் வழக்கமான தன் சிரிப்பை உதிர்த்துவிட்டு, “ஹாய்டா... என்ன சொன்னார்
சாமி?” மெல்ல படுக்கையில் எழுந்து அமர்ந்தான்....
“எந்த
சாமிய சொல்ற?.. சுப்ரமணிய சாமியா? நாராயண சாமியா?”
“காலங்காத்தால
அரசியல் வேண்டாமே... அதுவும் இந்த ரெண்டு சாமிகளும் இதுவரை நல்லதை சொன்னதா வரலாறே
இல்லையே?” எழுந்து முகம் கழுவிக்கொண்டு மீண்டும் கட்டிலில் அமர்ந்தான் மதன்...
மனதிற்குள்
அறித்துக்கொண்டிருந்த கேள்விகளை மெல்ல தூண்டில் போட்டான் விஷ்வா... அதில் சிறு
மீன்கள் மாட்டப்போகிறதா? சுறா மீன் மாட்டப்போகிறதா? என்பதில்தான் எதிர்பார்த்து
காத்திருந்தான்...
“நேத்து
எங்க போன மதன்?”
“நேத்து
போர்’டா... வீட்லதான் இருந்தேன்... இன்னிக்கு எங்கயாச்சும் போகலாமா?”
“அது
இல்லடா... நைட் எங்கயோ போனதா அம்மா சொன்னாங்களே?”
இந்த
கேள்வியை கேட்டு முடித்தபோது மதனின் முகத்தில் பளிச்சென வெளிப்பட்ட ஒரு பதற்றமான
முக மாற்றத்தை விஷ்வா கவனிக்க தவறவில்லை...
“அது...
சதீஷ் இருக்கான்ல, அவனை பார்க்க போனேன்...”
“எந்த
சதீஷ்?... நம்ம பஜ்ஜி சதீஷா?”
“ஆமா...”
“ஓஹோ...
ஒரே நைட்’ல நீ பூனே போயிட்டு வந்துட்டியா?”
“என்ன?...
என்ன சொல்ற?” வார்த்தைகள் தடுமாற கேட்டான் மதன்... கண்ணோடு கண் நோக்க தயங்கி, கீழே
குனிந்தபடியே பேசினான்...
“இல்ல...
சதீஷ் பூனே போய் ரெண்டு நாள் ஆச்சு, நேத்து நைட் கூட என்கிட்ட பேசுனான்... உன்ட்ட
சொல்ல மறந்துட்டதா சொன்னான், கோவிச்சுக்க வேணாம்னும் சொன்னான்... அதான்
கேட்டேன்...”
தூண்டிலில்
சிக்கியது சுறா தான்... மதன் எதுவும் பேசவில்லை.. மின்விசிறி சுழலும் வேகத்தால்
கூட, அவன் வியர்வையை கட்டுப்படுத்த முடியவில்லை... எச்சிலை பலமுறை
விழுங்கிக்கொண்டு, மேற்கொண்டு செய்வதறியாமல் திகைத்தபடி அமர்ந்திருந்தான்...
விஷ்வாவோ எதையும் கண்டுகொள்ளாதவனை போல விகடனை புரட்டிக்கொண்டிருந்தான்...
புத்தகத்தின் பக்கங்களை புரட்டும் வேகத்தில், மனதிற்குள் படிந்திருந்த கோபம்
தெரிந்தது...
சில
நிமிட கனத்த மௌனத்திற்கு பிறகு மதன் தொடங்கினான்....
“இதை
எப்டி உன்கிட்ட சொல்றதுன்னு தெரியல விஷ்வா... சொல்லலாமா? வேண்டாமா?ன்னு கூட
புரியல... ஆனால், ரொம்ப நாளாவே உன்கிட்ட அதை சொல்லாம இருக்குறதுல ரொம்ப உறுத்தலா
இருக்குடா... இதை நீ எப்டி எடுத்துப்பன்னு கூட எனக்கு தெரியல...” குனிந்தபடியே
சொல்லும்போது, வார்த்தைகளின் சத்தம் மட்டுமே கேட்டது... வார்த்தைகளை தடுமாற
வைத்திடும், விழித்திரையை மறைத்திருக்கும் கண்ணீரை விஷ்வா பார்த்திருக்க
வாய்ப்பில்லை...
“என்ன
மதன் இதல்லாம்?.. நீ எவ்ளோ பெரிய அதிர்ச்சிய என்கிட்ட சொல்லிருந்தாலும் நான் இவ்ளோ
கவலைப்பட்டிருக்க மாட்டேன்... ஆனால், என்கிட்ட நீ ஒரு விஷயத்தை மறைச்சதைத்தான்
என்னால தாங்கிக்க முடியல...”
“சொல்றேன்
விஷ்வா... நான் ஒரு கே...”
“என்னது?”
அகன்ற கண்கள் மேலும் விரிந்தபடி அதிர்ச்சியில் கேட்டான் விஷ்வா....
“ஆமா...
நான் ஒரு கே... நேத்து நைட் நான் மீட் பண்ணது ஒரு கே பையனை தான்... இப்போ
மட்டுமில்ல... உனக்கு தெரியாம கிட்டத்தட்ட ஒரு பத்து தடவை இப்டி நான் சிலரை மீட்
பண்ணிருக்கேன்... ஒவ்வொரு முறையும் உன்கிட்ட அந்த விஷயத்தை மறைக்கிரதுக்காக நான்
ரொம்ப கஷ்டப்படுவேன்... இப்போ சொல்லிட்டேன், இதுக்கப்புறம் அந்த உறுத்தல்
இருக்காது.... இனி நீதான் சொல்லணும்...” மெல்ல நிமிர்ந்து விஷ்வாவை பார்த்தான்..
இப்போது மதனின் கண்களில் பழைய குற்ற உணர்வு தெரியவில்லை....
விஷ்வாதான்
இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாதவனாக, குழப்பத்தில் அமர்ந்திருந்தான்...
“மதன்...
இது....” சொல்ல தொடங்கும் முன்பே இடைமறித்தான் மதன்...
“இது
தப்பு... இயற்கைக்கு புறம்பானது... அது இதுன்னு சொல்லி என்னை மாற்றலாம்னு
நினைக்காத... நான் இதுதான், பிறக்கும்போதே இது தீர்மானிக்கப்பட்டதுதான்...”
“ஒரு
மனநல மருத்துவரை....”
“ப்ளீஸ்
விஷ்வா... புரிஞ்சுக்க... நான் பைத்தியம் இல்ல... இது மனநோயும் இல்ல... மாத்திரை
கொடுத்தா மாறிட இது ஒன்னும் ஜலதோஷம் இல்ல, இது ஜீன் சம்மந்தப்பட்டது....” கண்கள்
நீரை ஊற்று போல சுரக்க செய்தது....
தலையில்
கைவைத்தபடி கீழே குனிந்து தன்னிலையை மறந்து எதையோ யோசித்துக்கொண்டிருந்தான் விஷ்வா...
சில நிமிடங்கள் மயான அமைதியை எதிர்கொண்டது அந்த அறை...
மெல்ல
நிமிர்ந்தான் விஷ்வா... “ஓகே மதன்... என்னால உன்ன புரிஞ்சுக்க முடியுது... உன்னை
மாற்ற நான் முயற்சி செய்ய மாட்டேன்... நீ நீயாவே இரு... கவலைப்படாத, உன்கூட நான்
எப்பவும் இருப்பேன்” வார்த்தைகளை வேகமாக உதிர்த்தான்....
“உன்கூட
நான் எப்பவும் இருப்பேன்!” என்ற வார்த்தை உயிரற்று, வெறும் எழுத்துகளின்
கோர்வையாகத்தான் விஷ்வா வாயிலிருந்து வந்தது என்பதை அந்த பரபரப்பில் மதன்
கவனித்திருக்க வாய்ப்பில்லை.... வேகமாக எழுந்து அப்படியே விஷ்வாவை கட்டி அணைத்த
மதன், “தாங்க்ஸ்டா...” அதற்கு மேல் அவனால் எதுவும் பேசிடமுடியவில்லை... கண்ணீர்
வழிந்து விஷ்வாவின் தோள்பட்டையை ஈரமாக்கியது.... மதனின் பிடியிலிருந்து மெல்ல
தன்னை விடுவித்துக்கொண்ட விஷ்வா, “சரி மதன், அம்மா வர சொன்னாங்க, நான் கிளம்புறேன்...”
என்றபடி தயக்கத்துடன் அறையைவிட்டு வெளியேறினான்...
மதனின்
மனம் முழுக்க உற்சாகமும், தன் நண்பனை பற்றிய பெருமிதமும் கரைகொள்ளாத வெள்ளமாக
அலைமோதியது.... இத்தனை காலம் இந்த உண்மையை விஷ்வாவிடம் சொல்லாமல் விட்ட தன்
முட்டாள்த்தனத்தை எண்ணி நகைத்துக்கொண்டான்... இனி எல்லாம் இன்பம்தான், தன்
பாலீர்ப்பை அறிந்தபிறகும் நட்பு பாராட்டும் ஒரு நண்பன் வாய்த்திருப்பதில் கொஞ்சம்
கர்வமும் கொண்டான் என்றுதான் சொல்லணும்...
**************
தன்
ஈருருளியில் இருந்து வேகமாக இறங்கிய மதன், அதே வேகத்தோடு அந்த வீட்டின் அழைப்பு
மணியையும் அழுத்தினான்... சில அழுத்தங்களுக்கு பிறகு திறந்த கதவின் மறுபுறத்தில்
கொஞ்சம் குழப்பத்தோடு நின்றிருந்தான் விஷ்வா.... மதனை பார்த்ததும் குழப்பத்தோடு
இணைந்துகொண்ட ஒருவித பதற்றமும் அவன் முகத்தில் பளிச்சிட்டது....
“தஞ்சாவூர்ல
இருக்குற அம்மா உன்னைய இங்கதான் வர சொன்னாங்களா? ரெண்டு தடவை கால் செஞ்சும்
எடுக்கல நீ!... என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது” சிரித்துக்கொண்டே இப்படி
சொல்லியவாறே அந்த வீட்டிற்குள் நுழைந்தான் மதன்...
ஒரே
நேரத்தில் பல பொய்களை சொல்லிட சாமர்த்தியம் பத்தாத விஷ்வா கொஞ்சம் தடுமாறித்தான்
போனான், “இல்லடா... அது... அது வந்து...” வார்த்தைகளை கோர்க்க முடியவில்லை...
“சரி..
அதை அப்புறம் பேசிக்கலாம்... முதல்ல வீட்டுக்கு வா, சாப்பிடலாம்... நீ வந்தாதான்
எனக்கும் சாப்பாடுன்னு அம்மா தொரத்தி விட்டுட்டாங்க....”
“இல்ல...
இல்ல மதன்... எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, நீ போ” எப்படியோ ஒரு காரணத்தை
கடும் முயற்சிக்கு பின்னால் கண்டுபிடித்துவிட்டான் விஷ்வா...
ஆனால்,
இதை கேட்ட மதன்தான் பதறியபடி எழுந்து, “என்ன?... என்னாச்சுடா?” என்றபடி விஷ்வாவின்
நெற்றியில் கை வைத்தான், ஏனோ மதனின் கை பட்டதும் சட்டென அந்த கையை விலக்கிவிட்டு,
சில அடி தூரம் பின்னோக்கி நகர்ந்து நின்றான் விஷ்வா...
விஷ்வாவின்
இந்த செயல் மதனுக்கு புரியவில்லை... “இல்லடா... காய்ச்சல் இருக்கான்னு
தொட்டுப்பார்த்தேன்... என்னாச்சு உனக்கு?” மதன் குழப்பத்தில் கேட்டான்....
“காய்ச்சல்
இல்லடா.... தலைவலிதான்... ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்....” இப்போதுவரை மதனின்
கண்களை பார்த்து அவன் பேசவில்லை...
“சரி...
சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்குறதுல தப்பில்ல.... முதல்ல வா, வீட்டுக்கு போகலாம்...”
விஷ்வா வராமல் தனியே செல்வதில்லை! என்கிற தீர்க்கமான முடிவோடு மதன்
அமர்ந்துவிட்டான்... சில நிமிடங்கள் யோசித்துவிட்டு, வேறு வழியில்லை என்று
புரிந்தபிறகு, “சரி... டிரெஸ் சேஞ் பண்ணிட்டு வரேன், அப்புறம் போகலாம்...” ஒரு
வழியாக சம்மதித்தான் விஷ்வா....
“சரி...
சீக்கிரம் டிரெஸ் மாத்து...”
“மதன்...
நீ போய் ஹால்ல உட்காரு, நான் டிரெஸ் மாத்திட்டு வரேன்...”
“ஏய்
லூசு... இதென்ன புதுசா?...”
“ஆமா...
இனி எல்லாம் புதுசுதான்... நீ போறவரைக்கும் நான் டிரெஸ் மாத்தப்போறதில்ல!”
கட்டிலில் அமர்ந்துவிட்டான் விஷ்வா....
கடிகாரத்தை
பார்த்தான் மதன், நேரமும் ஓடிக்கொண்டே இருக்கிறது... வயிற்றுக்குள் பசிப்பதற்கான
அறிகுறிகள் தெரிகிறது... இதைத்தாண்டி வீண் பிடிவாதம் செய்ய விரும்பாத மதன், மெல்ல
எழுந்து ஹாலுக்கு சென்றான்... விஷ்வாவின் ஒவ்வொரு செயலும் விசித்திரமாக
தெரிந்தாலும், அதைப்பற்றி யோசிக்கவல்லாம் மதனுக்கு தோன்றவில்லை... ஆனாலும், விஷ்வாவின்
மனமோ முழுவதும் மாசடைந்துவிட்டது... “மதன் ஒரு கே” என்பது தெரிந்தபிறகு, அவன்
தன்னையும் அந்த நோக்கத்தில்தான் பார்க்கிறானோ? என்கிற ஒரு குழப்பம் பூவை சுற்றும்
வண்டாக விஷ்வாவின் மனதை மையமாக வைத்து சுழன்றது... இது சரியா? தவறா? என்பதெல்லாம்
யோசிக்கக்கூட முடியாத அளவிற்கு குழப்பங்கள் குப்பைகளாக விஷ்வாவிற்குள்
நிறைந்துவிட்டது....
உடைகளை
மாற்றிவிட்டு, வீட்டை விட்டு இருவரும் கிளம்பினர்.... பைக்கில் அமரும்போது,
வழக்கமாக தன் தாடையை மதனின் தோள் மீது வைத்தவாறு பேசிக்கொண்டு செல்வது
விஷ்வாவிற்கு வழக்கம்... ஆனால் இன்றோ, இருவருக்கும் இடையில் இன்னொருவர் அமரும்
அளவிற்கான இடைவெளி.... செல்லும் வழியெல்லாம் சம்பிரதாய பேச்சுக்கூட இல்லை...
வீட்டை
அடைந்ததும், இருவருக்காகவும் காத்திருந்த அம்மா கதவினருகே நின்றுகொண்டிருந்தார்....
இருவரையும் பார்த்ததும்தான் அவருக்கு ஒரு நிம்மதி பெருமூச்சு!....
“என்னடா
விச்சு, எதுவும் சொல்லாம போய்ட்ட?” அம்மா உரிமையோடு கேட்டார்...
முந்திக்கொண்ட
மதன், “அவனுக்கு தலைவலியாம்... அதை நமகிட்ட சொல்லாம ஓடிட்டான்...” என்று சத்தமாக
சொல்லிவிட்டு, மெல்ல அம்மாவின் காதருகே வந்து, “தலைவலி வந்ததுல பைத்தியமாவே
ஆகிட்டான்!” என்று மெல்ல சிரித்தான்...
“ச்சி
போடா... போய் முதல்ல குளிச்சுட்டு வா, எல்லாரும் சாப்பிடலாம்..” மதனை பிடித்து
தள்ளிய அம்மா, விஷ்வாவின் பக்கம் திரும்பினார்... “என்ன திடீர்னு தலைவலி?...
சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்பா.... உள்ள வா”
“சரி
ஆண்ட்டி...”
இருவரும்
உள்ளே நகர்ந்து, ஹாலில் அமர்ந்தனர்.... வீட்டினில் ஜனனி வந்ததற்கான அடையாளமாக
கல்லூரி பைகள் சிதறடிக்கப்பட்டு கிடந்தன, ஒரு அறைக்குள் அலைபேசியில் அவள்
பேசிக்கொண்டிருக்கும் சத்தமும் கேட்டது....
“அம்மா
வர்ற வரைக்கும் இங்கயே தங்கிடு விச்சு... சாப்பிட்டு போய் டிரெஸ்’லாம் எடுத்துட்டு
வா...”
“இல்ல
ஆண்ட்டி பரவால்ல.... அது சரி வராது... முன்னாடின்னா ஓகே, இப்போ சரி வராது” விஷ்வா
தயங்கி தடுமாறினான்...
“ஏன்?
ஏன் சரிவராது?”
“இல்ல
ஆண்ட்டி... ஒரு வயசுப்பொண்ணு இருக்குற வீட்ல நான் தங்குறது சரியா இருக்காது...”
இதைமட்டும் கொஞ்சம் சத்தம் குறைவாக சொன்னான் விஷ்வா....
சத்தமாக
சிரித்த அம்மா, “எனக்கு அவ்ளோ வயசு குறைவா இருக்கும்னா நினைக்குற?” மேலும்
சிரித்தார்....
“ஐயோ...
நான் ஜனனிய சொன்னேன் ஆண்ட்டி....” பதறிவிட்டான்...
“ஐயோ லூசு....
ஜோக் சொன்னா கூட அதுக்கு சீரியஸ் பதில்தானா?... ஜனனி இருக்குறதுல உனக்கு என்ன
ப்ராப்ளம்?... அவள உனக்கு இன்னிக்குத்தான் தெரியுமா என்ன?... உன்னைப்பத்தி எனக்கு
நல்லா தெரியும் விச்சு... மத்த பசங்கள மாதிரி உன்னையும் நான் தவறா நினச்சா, உன்னோட
பழகுன இத்தன வருஷமும் உன்னைப்பத்தி நான் சரியா புரிஞ்சுக்கலன்னு அர்த்தம்....
உன்னைவிட அதிகமா நான் மதனுக்கும் உனக்குமான நட்பை மதிக்கிறேன்டா... இன்னொரு தடவை
இப்டி முட்டாள்த்தனமா பேசாத....” அம்மா சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, குளித்து
முடித்துவிட்டு மதன் வந்துவிட்டான்...
அம்மா
சாப்பாட்டை எடுத்து வைப்பதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட எழுந்து சென்றுவிட்டார்....
விஷ்வாவின் “தலைவலி” பசிக்கு தன்னை பலியாக்க விரும்பாத மதன், பேச்சுக்கொடுக்க
தயங்கியபடியே சோபாவில் கொஞ்சம் விலகியே அமர்ந்தான்....
மெல்ல
நகர்ந்து மதனின் வெகு அருகில் அமர்ந்த விஷ்வா, அவன் தோள் மீது தலைசாய்த்தான்...
இது வழக்கமாக இருவருக்குள்ளும் நிகழும் ஒரு அரவணைப்புதான் என்றாலும், சற்றுமுன்பு
வரை போர் விமானங்கள் குண்டுபோட்ட நிலையில், திடீரென அதே விமானங்கள் பூக்களை
தூவுவது போன்ற அந்த சூழல் மாற்றம் மதனை கொஞ்சம் குழப்பமுறத்தான் வைத்தது....
தோளில்
சாய்ந்த விஷ்வா, தன் தழுதழுத்த குரலில், “உன்கூட நான் எப்பவும் இருப்பேன்டா!”
என்று சொன்னபோது, அவன் கண்களில் சுரந்த நீரை மதன்
கவனித்திடவில்லை... இம்முறை இந்த வார்த்தை உயிர்ப்புடன் இருந்ததற்கான
வித்தியாசத்தைகூட மதன் அறிந்திருக்கவில்லை, அப்படி அறியாமல் இருப்பதுதான்
அவனுக்கும் நல்லது! (முற்றும்)