Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Thursday 7 November 2013

"காகித உணர்வுகள்....." - சிறுகதை...


(இது முழுவதும் கற்பனைக்கதைதான்... வாசகர்கள் தாங்களாக எதையும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம்...)
 
“அன்பிற்குரிய எழுத்தாளர் இளவழகன் அவர்களுக்கு,
உங்களின் மிகப்பெரிய ரசிகன் எழுதும் கடிதம் இது... சமீபத்தில் உங்களின் ‘அலைக்கழிப்பு’ நாவல் வாசித்தேன்... ஒருபால் ஈர்ப்பு நபரின் வாழ்க்கையை அவ்வளவு நுணுக்கமாகவும், தத்ரூபமாகவும் வெளிக்காட்டியிருந்தீர்கள்... நானும் ஒருபால் ஈர்ப்புள்ள நபர் என்பதால், அந்த உணர்வுகளை ரொம்ப எளிதா என்னால் கிரகிக்க முடிந்தது... மேலும், அந்த புத்தக வெளியீட்டு விழாவில் தாங்களும் ஒருபால் ஈர்ப்புள்ள நபர் என்பதை அப்பட்டமாக அறிவித்தீர்கள்... அந்த துணிச்சலுக்கும், உங்களின் தொடர் வெற்றிக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள்.....
                                                                                அன்புடன்,
                                    உங்கள் வாசகன்,
                                  மதன்...”
இதுதான் ‘இளா’விற்கு நான் எழுதிய முதல் கடிதம்... ஊரறிந்த இளவழகன், என் ‘இளா’ஆன கதையைத்தான் இப்போ சொல்லப்போகிறேன்....
மிதமான காற்று வீசிக்கொண்டிருக்கும்போது ஒரு திடீர் புயல் உருவானால் எப்படி இருக்கும்?.. அப்படி, இலக்கிய உலகத்தில் அவ்வப்போது வானிலை முன்னறிவிப்பு கூட இல்லாமல், உருவாகும் சில புயல்களின் வரிசையில் கடைசி புயல் “இளவழகன்”... அவர் பயணிக்கும் இடமெல்லாம், நிழல் போல தொடரும் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை... புகழ், பாராட்டு, விருதுகளுக்கு மத்தியில் இத்தகைய சர்ச்சைகளும் வஞ்சனை இல்லாமல் அவரை சூழ்ந்துகொண்டது... அப்படி சமீபத்திய சர்ச்சைக்கு காரணம், ஒருபால் ஈர்ப்பு பற்றிய கதை எழுதியதோடு, தானும் ஒருபால் ஈர்ப்புள்ள நபர் என்று பட்டவர்த்தனமாக அறிவித்து பத்திரிகைகளின் செய்திப்பசிக்கு தீனி போட்டதுதான்....
பல செய்தி சேனல்களிலும் ஒன்பது மணி நாயகனாக சமீப காலமாக வலம் வருபவர்... இருபதுகளின் இறுதியை தாண்டாத வயதில், அவர் தாண்டிய உயரங்கள் என்னவோ நிறைய உண்டு....
மேற்சொன்ன கடிதத்துக்கு பிறகு, ஒரு நான்கைந்து கடிதம் அவ்வப்போது அனுப்பினேன்... நான்காவதாக அனுப்பிய கடிதத்துக்கு மட்டும் “நன்றி மதன்” என்ற வார்த்தைகள் அடங்கிய ஒரு அஞ்சல் அட்டை பதிலாக வந்தது... அந்த அட்டையை வைத்துக்கொண்டு நான் குதித்த குதியை வீட்டில் இருந்தவர்கள் விசித்திரமாக பார்த்திருக்கக்கூடும்... நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் எல்லோரிடமும் காட்டினேன்... “இதுக்குத்தான் இந்த ஆட்டமா?” என்று சிலர் எரிச்சலானதை கூட நான் பொருட்படுத்தவில்லை... கழுதைகளுக்கு நான் கற்பூர வாசனையை உணரவைக்க விரும்பவில்லை....
சென்னையில் நடந்த புத்தக கண்காட்சியில்தான் இளவழகனை  முதன்முதலாக நேரில் சந்தித்தேன்... எதேச்சையாக ஒரு பதிப்பகத்தின் ஸ்டாலுக்கு வெளியே இருக்கையில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை புரட்டிக்கொண்டு இருந்தார்... ஒரு சாதாரண கல்லூரி மாணவனை போல, எவ்வித அங்கலாய்ப்பும் இல்லாமல், அமர்ந்திருந்த அவரை என்னை போல ஒருசிலர் அடையாளம் கண்டு, புத்தகங்களில் கையெழுத்து வாங்குவதை கண்ட என் உள்ளமும் அவரருகே செல்ல உந்தியது... என் கையில் கூட அவரின் “புரட்சி புடலங்காய்” நாவல்தான், இன்னும் பிரிக்கப்படாமல் இருந்தது...
இளாவின் அருகே செல்ல நான் வைத்த அந்த பதினேழு அடிகளும் என் கால்கள் முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனோன்னு நினைத்துக்கொண்டேன்... அவரின் மிக அருகில் சென்று நின்றேன், கட்டிப்பிடித்தால் என் கைகள் இரண்டும் அவர் முதுகோடு இணையும் அளவிற்கு “மிக அருகில்” என்று வைத்துக்கொள்ளலாம்.... அருகாமையில் நான் நிற்பதை உணர்ந்து, என்னை நிமிர்ந்து பார்த்து ஒரு சிறு புன்னகையை சிந்தினார்... அந்த புன்னகையில் என் கால்கள் தடுமாறியதை அவர் இயல்பான தடுமாற்றமாக நினைத்திருக்கக்கூடும், ஆனால் அது அவர் உதிர்த்த புன்னகையின் அதிர்வு என்பதை நான் மட்டுமே அறிவேன்....
உடலும் மனமும் மரத்துப்போய், வாய் குழறியது நிச்சயமாக நரம்பியல் பிரச்சினையாக யாரும் கருதவேண்டாம்... ஒருவழியாக தடுமாறியபடியே அந்த புத்தகத்தை அவர் கண் முன் நீட்டினேன்... கையில் மூடப்படாமல் வைத்திருந்த பேனாவால், தன் கையை அழகாக அசைத்து முத்தாய், பவளமாய் மதிப்பிலடங்காத அந்த கையெழுத்தை தீட்டிக்கொடுத்தார்... ஏனோ அதை வாங்கிய பிறகு நுகர்ந்து பார்த்தேன், புதுத்தாளின் வாசனையோடு அந்த பேனாவின் மையும் ஒரு கலவையான இலக்கிய வாசனையை என் நாசிகளுக்குள் செலுத்தி, என்னை நிலைகுழைய வைத்தது...
இத்தகைய தடுமாற்றங்களில் இருந்து என்னை மீட்டு, நான் இயல்பான பிறகு மெல்ல பேச்சை தொடங்கினேன்....
“நான்தான்  மதன் சார்...”
“மதன்?” புருவத்தை உயர்த்தி புரியாதவர் போல கேட்டார்....
அவருக்கு நான் அனுப்பிய கடிதங்கள் பற்றியும், பதிலாக அவர் அனுப்பிய “நன்றி” அட்டையை பற்றியும் மேற்கொண்டு சொன்னேன்... “ஓ சரி சரி” என்று நினைவில் வந்ததை போல தலை அசைத்தார், ஆனால் கண்களோ இன்னும் “எந்த மதன்?” என்ற தேடுதலில் தீவிரமாகவே இருந்ததாய் எனக்கு தோன்றியது...
சில நிமிடங்கள் நான் பேசிக்கொண்டே இருந்தேன்.... அவரை பற்றி நான் இதுவரை படித்த துணுக்கு செய்தி முதல் கவர் ஸ்டோரி வரை ஒன்றுவிடாமல் சொல்லி, அவரின் அபிமானத்தை பெற்றிட கடும் பிராயத்தனம் செய்தேன்... பெரும்பாலும் தலையசைத்தார், சில நேரங்களில் புன்னகை சிந்தினார்... ஆச்சரியத்தை விழிக்காத கண்களும், உற்சாகத்தை உமிழாத வார்த்தைகளும் என்னை ஏமாற்றமுறத்தான் செய்தது... “உளியின் ஒரு அடியில் மலை சிதறும்” என்று நினைத்தால் அது முட்டாள்த்தனம் இல்லையா?...
கொஞ்சம் கொஞ்சமாக உளியாக இயங்க தொடங்கி, அந்த மாமலையை நான் சாய்த்ததை நிச்சயம் வரலாறு பேசிடும்... அந்த பேச்சு என்னை பற்றிய ஒரு அடையாளத்தை அவருக்குள் ஏற்படுத்தியது.... இனி அவரை பார்க்கும்போது “நான்தான் மதன் சார்” என்ற அறிமுகம் தேவையிருக்காது, என்னை யாரென்று குழப்பிக்கொள்ளும் பார்வை இருக்காது... அதனால், கொள்கை ரீதியாக இந்த முதல் சந்திப்பு, மாபெரும் வெற்றிதான் எனக்கு....
பிரபலமான எழுத்தாளரின் வீட்டை கண்டுபிடிக்க ஏனோ எனக்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது... அதை கண்டுபிடிக்க நான் ஒன்பது நாட்கள் எடுத்துக்கொண்டதால் என்னை சோம்பேறியாக நினைத்திட வேண்டாம்... “ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்” பத்மநாபனுக்கு கூட இளவழகனை தெரியவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களே!.... இது யார் புது கதாப்பாத்திரம்?னு நினைக்க வேண்டாம்... இளாவின் பக்கத்து வீட்டில் பதினேழு வருடங்களாக வசிக்கும் ஒரு இயல்பான சென்னைவாசி...
“ஓ அந்த பையனா?... அவர் எழுத்தாளரா?... பாலகுமாரன், சுஜாதா’க்கு பிறகு நான் யாரையும் படிக்கிறதில்ல” என்று தன் பெரிய வயிறு குழுங்க சிரித்துக்கொண்டார்.... ஒருவழியாக பத்துவை கடந்து, இளாவின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன்...
சில நிமிட காத்திருப்புக்கு பிறகு, திறக்கப்பட்ட கதவுக்கு மறுபுறம் நின்றுகொண்டிருந்தார் இளா... “அட நீயா?... எப்டி என் வீட்டை கண்டுபிடிச்ச?... நிஜமாவே பெரிய சர்ப்ரைஸ் இது” இப்படியல்லாம் சொல்வார்’னு எதிர்பார்த்து வாசலில் நின்றுகொண்டிருந்த நான் முட்டாளா’ன்னு எனக்கு தெரியல....  ஆமாங்க, எந்த ஆச்சரியத்தையும் அவர் கண்கள் வெளிப்படுத்தவில்லை... “வா... உள்ள வா” என்ற வார்த்தைகளோடு என் எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்...
வீடும் ஒன்றும் பெரிய அளவிலான ஆச்சரியத்தை எனக்கு ஏற்படுத்தவில்லை... தூசி நிறைந்த தரையும், இரவு சாப்பிட்டு சிதறிய ஒரு சிக்கன் துண்டும், கிழிக்கப்படாத காலண்டர் ஷீட்டும் என் கண்களை உறுத்தின... “இவன் பெரிய நக்கீரர் பரம்பரை!.. வந்தவுடன் குற்றத்தை கண்டுபிடிக்குறான்”னு யாரும் நினைச்சிட வேண்டாம்... வீட்டிற்குள் நுழைந்ததும் என் கண்களில் தெரிவதைத்தானே உங்களிடம் சொல்ல முடியும்!...
ஆனால், அந்த வீட்டிலும் கூட எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் ஒன்னு இருக்கு.... “படுக்கை அறையா?”னு நினைத்தால், உங்கள் நினைப்புகளில் பிழை இருப்பதாக அர்த்தம்.... அது இல்ல... ஜன்னல் அருகே போடப்பட்டிருக்கும் ஒரு மேசையும், குஷன் இருக்கையும்தான் அந்த இடம்... சுத்தமாக துடைக்கப்பட்டிருந்த அந்த மேசையில் இரண்டு நோட்டுகளும், நான்கைந்து பேனாக்களும் மட்டும்தான் இருந்தன... என்னை போல இன்னும் எத்தனையோ உள்ளங்களை பிழிந்து, சிரிக்கவும் அழவும் வைத்து, வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிய பல பாத்திரங்களை படைத்து உருவாக்கப்பட்ட எத்தனையோ கதைகளின் பிறப்பிடமல்லவா அந்த இடம்!... மேசைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த குப்பை கூடையில், குறை பிரசவத்தில் சில கதைகள் கசக்கி கிடந்தன...
அடுத்தடுத்த நாட்களிலும்கூட அவர் எழுதும் பொழுதுகளில் சோபாவில் அமர்ந்தவாறு, அவர் கை அசைவையும், எழுதும்போது உண்டாகும் சில முக பாவனைகளையும் ரசித்துக்கொண்டிருப்பேன்... அநேகமாக அந்த சில தருணங்களில்தான், எழுத்தைத்தாண்டி இளாவின் மீதும் எனக்கு காதல் வந்ததோ’ன்னு தெரியல...
அப்போதெல்லாம் அவர் சோர்வை போக்குவதே என் பேச்சுதான் என்ற நிலைகூட இருந்தது... நன்றாக கவனிக்கவும் “என் பேச்சு” என்றுதான் நான் சொன்னேன்... இளா அதிகபட்சமாக “அப்டியா?... சரி... ஹ்ம்ம்...” இதைத்தாண்டி எதுவும் பேசமாட்டார்... ஆனால், நிறைய சிரிக்க மட்டும் கற்றுக்கொண்டார்.... அதற்கெல்லாம் பிரதிபலனாக எனக்கு கிடைத்தது அவரின் கதைகளை படிக்கும் வாய்ப்பு.... படிப்பதென்றால் சாதாரணமாக இல்லை... அவர் எழுதி முடித்து, அந்த தாளில் பேனாவின் மை காய்வதற்குள் அந்த கதைகளை படிக்கும் வாய்ப்பு எத்தனை வாசகருக்கு வாய்க்கும்?... இதில் என்ன சந்தோசம்?னு சிலர் நினைக்கலாம்... தாயின் கருப்பையிலிருந்து பிரசிவிக்கும் குழந்தையின் அந்த முதல் அழுகையை நீங்கள் கேட்டதுண்டா?... உடல் முழுக்க திரவங்கள் படர்ந்திருக்க, தொப்புள் கொடி துண்டிக்கப்பட்ட சில நொடிகளிலேயே அழும் குழந்தை, “நான் நலமுடன் பிறந்துவிட்டேன்”னு எல்லோருக்கும் சொல்லும் மழலை மொழி அது... அந்த அழுகையை கேட்கும் ஒவ்வொரு மனமும் உற்சாக மிகுதியில், ஒரு சொல்ல முடியாத உணர்வுக்குவியலை தனக்குள் சுமந்திருக்கும்.... அப்படி ஒரு உணர்வுதான், பிரசிவித்த அந்த கதையின் முதல் நகலை படிக்கும்போதும் எனக்கு கிடைத்தது....
தனக்கென்று எந்த கட்டுப்பாட்டையும் இளா வகுத்துக்கொள்வதில்லை.... அவரின் கதைகளை மட்டுமல்ல, அவருக்கு வரும் கடிதங்களை கூட நான் படிக்க அவர் தடை சொல்ல மாட்டார்... பெரும்பாலும் கடிதங்களை படிக்கும்போது எனக்கு கோபங்கள்தான் உண்டாகும்... உருகி உருகி சிலர் தீட்டியிருக்கும் பாராட்டுகள்,  கூடுதல் பக்கங்கள் இணைக்கப்பட்டு கொட்டித்தீர்க்கப்பட்ட உணர்வுகள், சில “ஐ லவ் யூ”க்கள் எல்லாம் என்னை எரிச்சல் படுத்தத்தானே செய்யும்?...
அப்படி ஒருநாள் என்னை இன்னும் கோபமாக்கிய கடிதம் ஒன்றை படித்தேன்... “நீயல்லாம் ஏண்டா எழுதுற?... இனி உன் கதைகளை பதிப்பகங்களுக்கு கொடுக்காதே, நேராக குப்பை தொட்டிகளில் போட்டிடு... அதுதான் உன் கதைகள் கிடக்க வேண்டிய சரியான இடம்” இப்படி நீளும் அந்த கடிதத்தை, அதற்கு மேல் நான் படிக்க விரும்பாமல், இளாவிடம் காண்பித்தேன்....
இப்போதும்கூட அவர் முகத்தில் கொஞ்சமும் சலனமில்லை, படித்து முடித்து என்னை பார்த்து மென்மையாக சிரித்தபடி, “இதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற?” என்றார்...
“உங்க கதையை பத்தி இப்டியல்லாம்....” என் வார்த்தைகள் குழறின....
“எல்லாருக்கும் எல்லாருடைய கதையையும் பிடிக்கணும்னு அவசியம் இல்ல மதன்... என்னோட கதையை பிடிக்காதவன் யாரும் படிக்க மாட்டான், படிக்காதவன் எவனும் கடிதம் எழுத மாட்டான்... இது வயிற்றெரிச்சல் ஆசாமிகள் செய்ற வேலை... வேணும்னா பதிலுக்கு ஒரு ஜெலுசில் வாங்கி அனுப்பலாம்...” ரொம்ப இயல்பாக எடுத்துக்கொண்டார்... இது அவருக்கு பழகிய ஒன்றுபோல!.. எனக்குத்தான் கோபமும், வருத்தமும் பீறிட்டது....
“இருந்தாலும்.. குப்பைன்னு சொல்றதல்லாம் ஓவர் இல்லையா?”
“அதையும் பாசிட்டிவா எடுத்துக்கலாமே?... குப்பைகள்தானே இப்போலாம் இயற்கை உரமா விவசாயிகள் பயன்படுத்துறாங்க... இந்த நாட்டின் முற்போக்கு எண்ணங்களுக்கு உரமா என் கதை இருக்குதுன்னு அவன் சொல்றதா கூட வச்சுக்கலாம் இல்லையா?”
எனக்கு ரத்தத்தில் மட்டும்தான் “பீ பாசிட்டிவ்”, இளாவிற்கு வாழ்க்கையே அப்படித்தான் போல!...
இப்படி வாசகனாய், ரசிகனாய், நண்பனாய் இருந்த எங்கள் உறவு பரிணாம வளர்ச்சியின் விளைவாக காதலாக மலர்ந்தது.... ஒரு வளர்பிறை நன்னாளில், நிலவொளி ஜன்னல் வழியே ஊடுருவ, எங்கோ ஒலித்துக்கொண்டிருந்த இளையராஜாவின் இன்னிசை கானங்கள் பின்னணியாய் இசைக்கப்பட அந்த பரிணாம வளர்ச்சியின் பலனாய், படுக்கையிலும் கலந்தோம்....
அதன்பிறகு நான் ஏதோ எனக்கான ஒரு உலகத்தில் வாழ்வதாக நினைத்துக்கொண்டேன்.... நானும் இளாவும், அவர் கதைகளும் மட்டும் நிறைந்த உலகம் அது.... எப்போதாவது செய்தித்தாள் கடன் கேட்க வரும் பக்கத்து வீட்டு பத்மநாபனை தவிர, எங்கள் வாழ்க்கை எவருடைய குறுக்கீடும் இல்லாமல்தான் சென்றுகொண்டிருந்தது... இதுவரை என் உள்ளத்தை மட்டும் கலக்கியவர், இப்போது உடலோடும் கலந்தது என்னை அந்தரத்தில் மிதக்க செய்தார்... இனி “இளா” எனக்கு மட்டும்தான் என்று கற்பனைகளை கடிவாளம் போடாமல் ஓடவிட்டேன்...
இப்படிப்பட்ட கற்பனைகளே எனக்கு பின்னாட்களில் ஏமாற்றமாய் அமையுமென நினைத்துக்கூட பார்க்கவில்லை... “அதீத ஆசைகள், ஏமாற்றத்தின் முதல் படி” என்று யாரோ சொன்னதை நான் உணர்ந்திட, எனக்கு அந்த சில நாட்களே போதுமானதாக இருந்தது...
ஏமாற்றம் என்றால், அது இளாவின் நடவடிக்கைகளின் மாற்றத்தால் அல்ல... அது என் எதிர்பார்ப்புகளின் விளைவால் என்றுதான் சொல்லவேண்டும்... இளா அப்போதும், இப்போதும் ஒன்றுபோலவே இருக்கிறார்... அதுதான் எனக்கு பிரச்சினையே!.... ஒரு எழுத்தாளர்-வாசகர் உறவுக்கும், காதலர்கள் உறவுக்கும் வித்யாசம் இருப்பதாய் அவர் உணரவே இல்லை போலும்... காதலனிடம் இருக்கும் ஒரு சாமான்ய எதிர்பார்ப்புகள்தான் எனக்கு ஏமாற்றமாய் முடிந்தன...
“அன்பின் மிகுதியால், உள்ளங்கள் உறவாடி களைத்து, இதயங்கள் இளைப்பாறும் புள்ளிதான் காதல்” இதுகூட அவர் கதையில் சொல்லப்பட்ட வரிகள்தான்... “காலை எழும்போதே ஒரு சீண்டல், குளிக்காத உடலோடு ஒரு தீண்டல், சின்ன சின்ன ஊடல்கள், சிலிர்க்க வைக்கும் கூடல்கள், எல்லை தாண்டாத பொசசிவ்னஸ், விரல்கள் விளையாடும் வருடல்கள், தோளில் தலை சாய்க்கும் அரவணைப்பு, மடியில் கிடத்திடும் கதகதப்பு, செல்லம் குட்டி புஜ்ஜி டார்லிங் போன்ற விளிப்புகள்” என எல்லாமும் இளாவின் கதையை படித்து எனக்குள் நிறைக்கப்பட்ட ஆசைகள்...
ஆனால், இப்படி எல்லா உணர்வுகளையும் கதைகளுக்குள் வாரியிறைத்ததாலோ என்னவோ, இளாவின் இயல்பு வாழ்க்கையில் இவைக்கெல்லாம் இடமின்றி போய்விட்டது... இப்படி ஒரு தருணத்தில்தான் இளா “ஒருபால் ஈர்ப்பு காதல் கதை” ஒன்று எழுதிக்கொண்டு இருக்கிறாராம், அதன் முடிவை நிர்ணயிக்கும் வாய்ப்பை எனக்கு தர இருக்கிறாராம், அந்த அளவு என் காதலை அவர் மதிப்பதே பெரிய மகிழ்ச்சி எனக்குள்...
அன்று எனக்கு பிறந்தநாள்... அதைப்பற்றி சூசகமாக இரண்டு நாட்களுக்கு முன்பே அவருக்கு தெரியப்படுத்திவிட்டதனால், ஒரு வாழ்த்தும், சின்ன பரிசும் நிச்சயம் கிடைக்குமென எதிர்பார்த்து நிமிடங்களை நகர்த்திக்கொண்டு இருந்தேன்... “காளை” போல காலை ஓடியது, “மான்” போல மதியம் மாயமானது, மாலையை கடந்து இரவும் இருளை நிரப்ப தொடங்கிவிட்டது, இன்னும் சம்பிரதாய வாழ்த்து கூட இல்லை...
என் இருபத்தி இரண்டு பிறந்த நாட்களில், அன்றுபோல என்றும் நான் துக்கத்தில் துவண்டதில்லை... மனம் மந்தியாய் தடுமாறியது... அவர் எழுதிய “காதல் சங்கீதம்” நாவலில் கூட, காதலியின் பிறந்தநாளுக்கு காதலன் சரியாக நள்ளிரவு  11.59க்குத்தான் வாழ்த்து சொல்வான்... “என் வாழ்த்தை எதிர்பார்த்து நீ காத்திருந்த அந்த இருபத்தி நான்கு மணி நேரங்களும் என் வாழ்வின் பொன்னான நிமிடங்கள்” என்று காரணம் சொல்லும் காதலனை கட்டி அணைத்து, கண்ணீர் வடிப்பாள் காதலி... ரொம்ப உணர்வுப்பூர்வமான காட்சி அது, எனக்கே கூட சிலிர்ப்பு உண்டானது....
நானும் அந்த “11.59”க்காக உறங்காமல் காத்திருந்தேன்.... அதுவும் கடந்து போய், என் ஒரு வயது கூடியதாய் பன்னிரண்டு மணி கடிகாரம் சத்தம் எழுப்பியது.... பொறுமை இழந்த நான், “இளா, நேத்து எனக்கு பிறந்தநாள்... மறந்துட்டீங்களா?” என்றேன்...
பெரிய அளவில் பொருட்படுத்தாமல், “ஓ அப்டியா?... belated wishes” என்று சொன்னதோடு, விட்ட கதையை தொடர தொடங்கினார்...
இப்படி ஒரு வாழ்த்து அவர் சொல்லாமலே இருந்திருக்கலாம், நானே கேட்டு  வாங்கிக்கொண்ட துக்கம் இது... என் எதிர்பார்ப்புகள், பொறுமைகள் எல்லாம் சுக்குநூறாக சிதைந்த தருணம் அது... கண்களை கட்டாயப்படுத்தி மூடி இரவை கழிக்க பெரும்பாடு பட்டேன்... காலையில் கண் விழித்தேன்... இளாவை காணவில்லை... “அமுதம் தொலைக்காட்சி” நேர்காணல், எட்டு மணிக்கு செல்ல இருப்பதாக சொன்னார், நேரமும் இப்போ எட்டுதான்...
இரவின் நிகழ்வுகள் எதையும் நினைக்க மனமில்லாமல், வழக்கமான என் வேலைகளை தொடர்ந்தேன்... படுக்கையை சுத்தம் செய்தபோது என் கண்ணில் அகப்பட்டு, கைகளில் சிக்கிய அந்த காகிதம் அவர் எழுதிக்கொண்டு இருப்பதாக சொன்ன முற்றுப்பெறாத ஒருபால் ஈர்ப்பு காதல் கதை....
அதை படிக்க படிக்க நான் அதிர்ந்தபடியே நின்றேன்... என் கண்களை நம்பாத மனம், இன்னொரு முறை படிக்கவும் சொன்னது... இதுவரை மேலே எழுதப்பட்டிருந்த வரிகள்தான் அங்கு கதையாக காகிதத்தில் தகுதி உயர்வு பெற்றுள்ளது... இந்த காதலை கூட அவர் கதை எழுதும் களமாகத்தான் பயன்படுத்தி இருக்கிறார்... உறவுகள், உணர்வுகளின் வலிகள் கூட இளாவை பொருத்தவரை பாத்திர படைப்புகளுக்கு மட்டுமே பயன்படுகிறது.... உணர்வுகளை உறவில் எதிர்பார்க்கும் எனக்கு, நிச்சயம் இப்போ எழுதப்பட்ட காகித உணர்வுகள் கசப்பாகவே தெரிகிறது.... என் நா தழுதழுக்க, கைகள் தடுமாற இளா சொன்னதை போல கதைக்கான இறுதியை நானே எழுதினேன்....
“ஒரு எழுத்தாளனின் எழுத்தை காதலித்த நான், அந்த எழுத்துகளுக்கு சொந்தக்காரனை அடையவேண்டும் என்று நினைத்தது பேராசை தான்... படைக்கப்பட்ட பாத்திரங்களின் பிம்பத்தை படைப்பாளியிடம் எதிர்பார்த்ததும் என் குற்றம் தான்... இனியும் இங்கிருந்து அவர் எழுத்துகளுக்கு ஏதோ ஒரு வகையில் தடங்கலாக நான் இருக்க விரும்பவில்லை... இளாவை விட்டு எங்கோ செல்கிறேன்.... எங்கோ சென்றாலும், என்றைக்கும் அவர் வாசகனாக கதைகளை படிப்பேன், கடிதங்கள் எழுதுவேன்... எழுத்து வேறு, எழுதுபவர் வேறு என்ற உண்மையை இப்போதுதான் இளா புரியவைத்திருக்கிறார்... தொடர்ந்து காதலிப்பேன், அவர் எழுத்தை மட்டும்” (முற்றும்)

(கதையை படித்த நண்பர்கள், தங்கள் கருத்துகளை இந்த வலைப்பூவிலேயே பின்னூட்டமாக இட வேண்டுகிறேன்.... நன்றி!)

10 comments:

  1. vow! amazing story vijay.
    nice flow.
    and the climax is also very touching.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சஞ்சீவ்....

      Delete
  2. ஒரு கதையின் முதல் நகல் படிப்பதை அழகா compare பன்னியிருக்கங்க விக்கி.
    படைக்கப்பட்ட பாத்திரங்களின் பிம்பத்தை படைப்பாளியிடம் எதிர்பார்த்ததும் என் குற்றம் தான்..
    ஒரு எழுத்தாளனுக்கு காதல் அவரது எழுத்துக்கள் மீது தான்.
    நன்றி விக்கி.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சேகர்....

      Delete
  3. மிகவும் அருமையான படைப்பு தோழர்.
    அபார நடை, அசாத்திய கதையின் போக்கு.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி தோழர்...

      Delete
  4. really nice vijay....enna sollurathu nu theriyala.nalla different ana sinthanai...sooper boss...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நண்பா....

      Delete
  5. நல்ல சிறுகதை, ஆனால் இந்த கதையை எழுதியதற்கு காரணம் தான் புரியாத புதிராக இருக்கிறது விஜய்

    ReplyDelete
    Replies
    1. நீங்களா எதுவும் கற்பனை செஞ்சுகிட்டா, அதுக்கு நிர்வாகம் பொறுப்பில்லைப்பா...

      Delete