Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Thursday 20 December 2012

"கே அமைப்புகளே!.... ஒரு நிமிஷம் இதை கேளுங்க......."




“கே” பற்றிய விழிப்புணர்வு சமீப காலங்களில் அதிகரித்து வருவதாக பலரும் சொல்கிறார்கள்.... அதற்கு முக்கிய காரணமாக சிலர் சொல்வது கே தொடர்பான அமைப்புகள் நடத்தும் “கே ப்ரைடு”கள் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள்.... நான் கேட்பது ஒன்றுதான்.... ப்ரைட் என்பதின் நோக்கம் என்ன?.... நீண்டகாலமாக முடக்கப்பட்ட ஒரு விஷயம், சமூக விழிப்புணர்வோடு அனைவரும் ஏற்கும் நிலை வந்ததும், அதனை பெருமைப்படுத்தும் விதமாக ஊர்வலம் செல்வதுதான் இயல்பு.... இத்தகைய ஒரு விஷயத்தால் ஊர்வலங்களில் கலந்துகொள்ளும் மக்கள் தங்கள் மீது பெருமையும், தன்னம்பிக்கையும் அடைவார்கள்.... ஆனால், நம் தமிழகத்தில் நடப்பது என்ன?.... முகத்தில் முகமூடி அணிந்தும், சாயங்கள் பூசியும் தங்கள் சுயஅடையாளத்தை மறைத்து வானவில் கொடிபிடித்து “கே உரிமை” பற்றி பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?..... இதைப்போன்ற ப்ரைடுகளை நான் தவறென சொல்லவில்லை, சமூக விழிப்புணர்வுக்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுடன் இணைந்து இத்தகைய ப்ரைட் நடத்தப்பட்டால் அது நிஜமான ஆக்கப்பூர்வ விஷயம்..... அதைவிட்டுவிட்டு வருடாவருடம் ப்ரைட் நடத்துவதை மட்டுமே கே விழிப்புணர்வுக்கான களமாக நாம் கருதினால், இன்னும் நூறு ஆண்டுகள் இப்படி ப்ரைட் மட்டுமே நடத்திக்கொண்டு இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.....

நம் உடலில் எல்லா உறுப்புகளும் வளர்ச்சி அடைந்தால் அது வளர்ச்சி..... உடலில் கால் பகுதி மட்டும் வளர்ச்சி அடைந்தால் அது வீக்கம், அது யானைக்கால் நோய்.... வளர்ச்சிக்கும், வீக்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு இதுதான்.... காலம் முழுக்க ப்ரைட் மட்டுமே நடத்திக்கொண்டிருப்பது நம் சமூகத்தின் வீக்கமாக அமையும், அது நோயாக உருமாறும் வாய்ப்பு இருக்கிறது.... நீங்கள் கே என்பதை ஒரு நோயாக உருவாக்கிக்கொண்டு இருப்பதை உணருங்கள்....
அப்போ என்ன செய்யலாம்?...... முதலில் சமூக விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும், சமூக விழிப்புணர்வு அடைந்து கே மக்கள் முழு தன்னம்பிக்கை அடையும் நாளில் நம் முகமூடிகளை கழற்றி வீசி எறிந்துவிட்டு பெருமிதத்துடன் கை கோர்த்து வெற்றிப்பேரணி செல்வோம்.....

அடுத்ததாக விழிப்புணர்வு கூட்டங்கள் நடப்பது பற்றி நான் பேசியே ஆகவேண்டும்.... இங்கே கே தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் பெரும்பாலும் நடக்கும் இடம் எது என்று தெரியுமா?... நட்சத்திர விடுதிகள்.... ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை செலவு செய்து, மது கோப்பைகளுக்கு மத்தியில் “கே தவறில்லை” என்று பத்து இருபது கார்ப்பரேட் இளைஞர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது விழிப்புணர்வு கூட்டங்களா?.... இந்த கூட்டங்கள் மூலம் எத்தனை நபர்களுக்கு அவர்கள் விழிப்புணர்வு கொடுத்தார்கள்?.... பல அமைப்புகளுக்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள் விழிப்புனர்வுக்கென நிதிகள் கொடுக்கிறார்கள்.... அதை முறையாக, ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு செலவளித்திருந்தால் நிச்சயம் இன்றைக்கு தமிழகம் பெரிய அளவுக்கு விழிப்புணர்வு அடைந்த மாநிலமாக உருவாகி இருக்கும்.... ஆனால், முறையான பாதையை வகுக்காமல், அகண்ட பார்வையில் நோக்காமல் இந்த நிதிகள் பயனற்று போய்விட்டது.... நிதிகளை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று நான் சொல்லவில்லை.... அதை முறையாக பயன்படுத்தவில்லை என்றுதான் சொல்கிறேன்.... சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் மேற்தட்டு மக்கள், கார்ப்பரேட் இளைஞர்கள் மத்தியில் மட்டுமே இது தொடர்பான விழிப்புணர்வு கொஞ்சமேனும் இருக்கிறது.... நான் உங்களுக்கு சொல்வதெல்லாம், தமிழகம் என்பது சென்னையை தாண்டி பல கோடி மக்களை கொண்ட மாநிலம்.... அங்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள், அங்கும் ஒருபால் ஈர்ப்பு கொண்ட நபர்கள் இருக்கிறார்கள்.... அவர்களையும் கவனத்தில் கொண்டு விழிப்புணர்வில் இறங்குங்கள் என்றுதான் சொல்கிறேன்.... சமீப காலங்களில் கே பற்றிய விழிப்புணர்வு படித்தவர்கள் மத்தியில் ஓரளவு உண்டாகி உள்ளது.... தத்தி தடுமாறி மெல்ல எழுந்து நிற்கும் குழந்தையை போல, கே சமூகம் நிற்க பார்க்கிறது.... அது நீங்கள் நடத்தும் ப்ரைட்’களாலோ, கூட்டங்களாலோ காரணம் இல்லை..... அறிவியல் வளர்ச்சியும், மருத்துவ அறிவும் வளர்கின்ற காரணத்தால் உண்டாகும் அனிச்சை நிகழ்வு அது... அது உங்களால் நடக்கிறது என்று நீங்கள் நினைத்தால், “குருவி உட்கார பனங்காய் விழுந்ததாக நினைத்து பெருமைப்பட்டுக்கொண்ட குருவியை போலத்தான் நீங்களும்”.....
கே உணர்வு என்பது மெட்ரோபொலிட்டன் நகர்களின் கார்ப்பரேட் இளைஞர்களுக்கு வரும் “பணக்கார” உணர்வு கிடையாது... அது டெல்டா மாவட்டத்து விவசாயிக்கும் வரலாம், தூத்துக்குடி மீனவனுக்கும் வரலாம்.... இதை பணக்கார நோயாக மாற்றிவிடாதீர்கள் என்றுதான் நான் சொல்கிறேன்....

“இவ்வளவு சொல்லும் நீ உன்னை வெளிப்படுத்தி கொள்ளாமல், குறை சொல்வது சரியா?.... முதலில் உன்னை சரிபடுத்திக்கொள்” என்று நீங்கள் என்னை பார்த்து சொல்லலாம்..... சாதாரண சாதி மாற்று திருமணத்தை கூட ஏற்காத லட்சக்கணக்கான தமிழக குடும்பங்களில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவன் நான்... தமிழகத்தின் மத்தியில் ஒரு மூலையில் இருக்கும் ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவன் நான்... நான் இப்போது கேட்பதெல்லாம் என்னைப்போன்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.... சென்னையின் நாகரிக வாழ்க்கையை தாண்டியும் கே உணர்வு கொண்ட லட்சக்கணக்கான நண்பர்கள் இருக்கிறார்கள்.... அவர்கள் அனைவருக்குமான ஒரு பிரதிநிதியாக மட்டுமே நான் பல அமைப்புகளை சேர்ந்தவர்களையும், சமூக ஆர்வலர்களையும் இந்த கேள்விகளை  கேட்கிறேன்..... என்னால் இப்போதைக்கு முடிந்தது, என் எழுத்து மூலம் என்னால் முடிந்த அளவுக்கான கே பற்றிய தகவல்களை தமிழுக்கு கொண்டுவர முடியும்.... அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாத நிலையில்தான் நானும் இருக்கிறேன்.... எனக்கான உரிமைக்கும் சேர்த்துதான் உங்களிடம் இதை கேட்கிறேன்...

உங்களை வெளிப்படுத்திக்கொண்டு, கே பற்றிய விழிப்புணர்வுக்காக அமைப்புகளை உருவாக்கி இருக்கும் உங்கள் நோக்கங்கள் சரிதான்... உங்கள் நோக்கங்களுக்கு நீங்கள் செலுத்தும் செயல்பாடுதான் தவறு..... சமீபத்தில் என் நண்பர் சொன்ன ஒரு தகவல் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது....
“கரூருக்கு அருகில் இருக்கும் கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் சென்னை கல்லூரிக்கு படிக்க சென்றான்.... அவன் ஒரு கே... அங்கு அவனுக்கு உண்டான தொடர்புகள் மூலம், ஒரு கே பற்றிய நட்சத்திர விடுதியில் நடந்த கூட்டத்திற்கு சென்றான்..... அங்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிய அந்த இளைஞன் சில நாட்களில் தற்கொலை செய்திருக்கிறான்”....

அந்த தற்கொலைக்கு முன்பு என் நண்பரிடம் பேசிய அந்த இளைஞன் “கே பணக்கார இளைஞர்கள் சம்மந்தப்பட்டதா?... அழகா இருந்தாத்தான் கே’யா இருக்க முடியுமா?... என்னை மாதிரி ஆளுங்க கே’யா இருக்க கூடாது.... நான் தப்பு பண்ணிட்டேன்” என்று கூறி இருக்கிறான்.... நண்பரின் சமாதானம் சில நாட்கள் கூட அவனை தாக்குப்பிடிக்க வைக்கவில்லை, ஓரிரு வாரங்களில் அந்த இளைஞன் தூக்கு கயிற்றில் தொங்கினான்.....
ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கூட்டம், அந்த இளைஞனின் தாழ்வு மனப்பான்மையை அதிகப்படுத்தி, அவனை மரணத்தின் குழியில் தள்ளிவிட்டது... அந்த இளைஞன் ஒரு சிறு சாம்பிள்.....
ஒருபக்கம் இளைஞர்களை இறக்கும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டு, மறுபுறம் காதலன் தேடுவதற்கு களம் அமைத்துக்கொடுப்பது முட்டாள்த்தனம்..... ஒருவனின் பிணற்றின் மீது அமர்ந்து, ஒருவனுடைய திருமணம் நடைபெற்றால் அது எவ்வளவு முட்டாள்த்தனமோ, அப்படிப்பட்ட விஷயம் இதுவும்....
எங்களுக்கான விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கத்துடன் அமைப்புகள் நடத்தி, அதை சுய லாபத்துக்கு பயன்படுத்தாதீர்கள்.... நித்தமும் சாவை நோக்கி செல்லும் எம் சமூகத்து இளைஞர்களின் பெயரால் நீங்கள் நாகரிக வாழ்க்கை வாழாதீர்கள்..... ஒவ்வொரு நாளும் கே இளைஞர்கள் மரணத்தின் பிடியில் ஊசலாடிக்கொண்டு இருக்கும் நேரத்தில், நீங்கள் “கே உரிமையை” மீட்டுவிட்டதாக ஆனந்த தாண்டவம் ஆடுகிறீர்கள், வெற்றி பேரணிகள், கொண்டாட்டங்கள் என்று உங்களை வளமாக்கி கொண்டிருக்கிறீர்கள்....

உங்களை போன்ற சில நூறு நபர்களை தாண்டிய, லட்சக்கணக்கான இளைஞர்களின் மனநிலையை புரிந்துகொள்ள கூட நீங்கள் முன்வரவில்லை.... உங்கள் ஸ்டேட்டஸ், அந்தஸ்து, தகுதி, அழகு போன்ற எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத எந்த கே’யையும் நீங்கள் மனிதனாக கூட பார்ப்பதில்லை....
வெளி உலகம் உங்களைத்தான் எங்கள் ஒட்டுமொத்த பிரதிநிதியாக, காவலனாக நினைக்கிறார்கள், பார்க்கிறார்கள்... அவர்களுக்கு தெரியாது, நாங்கள் புறக்கணிக்கப்பட்ட இனத்திற்குள் புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள் என்பது......
நான் கிட்டத்தட்ட நூறு கே நபர்களிடம் பேசி இருக்கிறேன்.... செக்ஸ் அல்லாமல், இயல்பான நண்பனாக பேசி இருக்கிறேன்.... அத்தனை பேருக்குள்ளும் இருக்கும் ஒரு தாழ்வுமனப்பான்மை, அவர்களை பல தற்கொலை முயற்சிகளுக்கு ஆட்படுத்தி இருக்கிறது.... வெறும் “செக்ஸ் மெஷின்”களாக மட்டுமே தங்கள் கே வாழ்வை அவர்கள் வழிநடத்துகிறார்கள்.... அதிலிருந்து மீளவோ, முறையான விழிப்புணர்வு கொடுக்கவோ இங்கு யாருமில்லை.....
தமிழகத்தில் அதிகபட்சமாக இருநூறு நபர்கள் தங்களை கே’வாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்., அதில் சிலர் தங்கள் வாழ்க்கை துணைவனோடு வாழ்கிறார்கள்..... இவை எல்லாம் விதிவிலக்குகள்.... விதிவிலக்குகளை எப்போதும் உதாரணங்களாக கருதக்கூடாது..... சமீப காலங்களில் பேரணிகளில் சிலர் முகங்களை வெளிப்படுத்துவதை நாம் முறையான விழிப்புனர்வாக கருதக்கூடாது.... ஒரு இளைஞன் தன் பாலின உரிமைக்காக குடும்பத்தை விட்டு வெளியேறி, தன் பாலின ஈர்ப்பை அங்கீகரிப்பது வெற்றி கிடையாது.... அந்த இளைஞனின் குடும்பத்தினர் அவனை புரிந்துகொண்டு, இந்த சமூகம் அவன் அடையாளத்தை அங்கீகரிப்பதுதான் உண்மையான வெற்றியாக அமையும்.... 
குடும்பம் என்கிற கட்டமைப்பை உடைத்தெறிந்துவிட்டு வருவதற்கு எத்தனை பேரால் முடியும்?.... தன் மகனின் நியாயமான பாலின உணர்வை புரிந்துகொண்டு வழிவிடும் பெற்றோர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.....
“இவ்வளவு சொல்கிறாயே, இதை எந்த வகையில் விழிப்புணர்வு கொடுக்க முடியும்?” என்று நீங்கள் கேட்டால், அதற்கும் சில வழிமுறைகள் உண்டு....
நட்சத்திர விடுதிகளில் நடக்கும் கூட்டங்களை இனி சாதாரண மண்டபங்கள், கல்லூரி அரங்குகள், விழா அரங்குகள், மேடைகள் என்று நடத்துங்கள்... தெருவுக்கு வாருங்கள், வீடுகளை சந்தியுங்கள், ஊடகங்களை வலுவாக்குங்கள்.... பொதுமக்கள் எளிதாக அணுகும் நிலைக்கும் ஒருபால் ஈர்ப்பை கொண்டு செல்லுங்கள்.... நடுத்தர வர்க்க மக்களிடம் அதிக ஈடுபாடு காட்டுங்கள்... அத்தகைய நடுத்தர வர்க்கம் மட்டுமே எத்தகைய போராட்டங்களுக்கும், புரட்சிகளுக்கும் முதல் வித்துக்களை தூவும் இடங்களாக இருக்கிறது....


இன்று நாம் அமெரிக்காவில் காணும் புரட்சி, சமூக மாற்றம் எல்லாம் ஒருநாளில் நடந்தது அல்ல.... 1960களில் நடந்த ஸ்டோன்வால் கலவரம்தான் அதற்கு முதல் விதையை போட்டது.... அதன்பின்பு ஈசலை போல உருவானது பல அமைப்புகள்.... அந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் தேர்தல்களில் போட்டியிட்டனர்.... அதுவரை தங்கள் ஆசைகளையும், எண்ணங்களையும் புதைத்து வைத்த பல அமெரிக்கர்கள் அந்த கே பிரதிநிதிகளுக்கு மறைமுகமாக வாக்களித்தனர்.... பல பிரதிநிதிகள் வெற்றிபெற்றனர்.... பல அரசியல்வாதிகளும் மக்களுக்குள் புதைந்து கிடந்த ஒருபால் ஈர்ப்புக்கான ஆதரவான மனநிலையை புரிந்துகொண்டு, அடுத்தடுத்த மாற்றங்களுக்கு வழிவகுத்தனர்..... பல அமைப்புகளும் கே தொடர்பான இலக்கியங்களை வரவேற்றனர்..... ஒவ்வொரு வீட்டு ஹாலிலும் ஒருபால் ஈர்ப்பு தொடர்பாக விவாதிக்கும் அளவுக்கு மீடியா ஆதரவு கொடுத்தனர்..... சட்டத்துறையில் வழக்குகள் மூலம் இந்த அமைப்பு போராடி வெற்றி கண்டனர்.... இன்றைக்கு நாம் காணும் இந்த அமெரிக்க மாற்றத்திற்கு பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது.... இவ்வளவும் முடிந்த பிறகு அமெரிக்க தெருக்களில் வானவில் கொடிபிடித்து நடப்பது என்பது பெருமைப்படக்கூடிய விஷயமாக இருக்கும்.... ஆனால், வானவில் கொடிபிடித்து நடப்பதை மட்டுமே நான் பெருமையாக கருதினால், இன்னும் பல காலம் இப்படியே நாம் இருக்க வேண்டியதுதான்.... எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணமாக காட்டுவதை சிலர் அவ்வளவாக ரசிக்கவில்லை.... ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நம்மைவிட மத ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒருபால் ஈர்ப்பை வெறுத்த மக்கள் அமெரிக்க மக்கள்.... அந்த சமூகத்தில் தங்கள் போராட்டங்களின் மூலம் வலிமையான ஒரு மாற்றத்தை உண்டாக்கிய கே விழிப்புணர்வு அமைப்புகளை உங்களோடு இணைத்து பேசுவதே தவறு..... அவர்கள் போராட்டங்களில் வெறி இருந்தது, உரிமைக்கு வேட்கை இருந்தது, உண்மையை உரக்க சொல்லும் துணிவு இருந்தது... அவ்வளவாக தகவல் தொடர்பு வளர்ச்சி அடையாத அந்த காலகட்டங்களில் மக்களின் மனநிலையை மாற்ற அவர்கள் பகீரத பிராயத்தனம் மேற்கொண்டார்கள்.... அதில் வெற்றியும் கண்டார்கள்.... இங்கு நடப்பதை போல பகட்டு வாழ்க்கையை கே வாழ்க்கையாக அவர்கள் சித்தரிக்கவில்லை, நாகரிக ட்ரெண்டாக கே உரிமையை மாற்றவில்லை..... உண்மையாய் உழைத்தார்கள், உரிமைக்காக போராடினார்கள்.... 

நீங்கள் அப்படி என்ன செய்தீர்கள்?

இன்று தமிழகத்தின் இலக்கிய வட்டத்தின் பலரும் ஒருபால் ஈர்ப்புக்கான ஆதரவு நிலைப்பாடு உள்ளவர்கள்.... குறைந்தபட்சம் தமிழில் ஒரு மாத இதழ் தொடங்குங்கள்..... பல எழுத்தாளர்கள், முற்போக்குவாதிகள், சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரின் ஒருபால் ஈர்ப்புக்கான ஆதரவு கருத்துக்களையும் பரப்புங்கள்...
இலக்கிய வட்டத்தில் ஒருபால் ஈர்ப்பு நுழைந்துவிட்டால் நிச்சயம் படித்த இளைஞர்கள் மத்தியில் கே என்பது தவறல்ல என்ற மனநிலை உண்டாகும்....
தீண்டாமை பற்றிய போராட்டங்களை பெரியார் ஒரு கட்டிடத்துக்குள் மட்டுமே நடத்தி இருந்தால் இன்றைக்கு பெரியாரியம் பேசும் மக்கள் இருந்திருக்க மாட்டார்கள், இந்தி திணிப்பை எதிர்த்து அண்ணாதுரை  சாலைக்கு வந்திராமல் இருந்திருந்தால் இன்றைக்கு தமிழை நாம் இழந்திருப்போம்.... போராடாமல் கிடைப்பது வெற்றியே அல்ல.... போராடுவோம்.... ஹிலாரி கிளின்ட்டன் அவர்கள் சொன்னது போல “கே உரிமைகள் என்பது அடிப்படை மனித உரிமை” என்ற குரலை உரக்க சொல்ல களம் அமைய வேண்டும்..... ஒவ்வொரு தமிழரும் பால் உரிமையை அடிப்படை உரிமையாக நினைக்கும் நாள் வரும் அளவிற்கு போராட வேண்டும்..... 

தாழ்வு மனப்பான்மையால் மனம் உடைந்த மனநோயாளிகளையும், தற்கொலை செய்து கொண்டிருக்கும் இளைஞர்களையும் ஒரு கனம் யோசித்து பாருங்கள்.... சமூக விழிப்புணர்வு அடையும்வரை அவர்களால் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள முடியாது..... அத்தகைய சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டிய அமைப்புகளும், அந்த பொறுப்புகளிலும் நீங்கள் இருக்கிறீர்கள்....
நம் மக்கள் புத்திசாலிகள், அவர்களுக்கு அறிவார்ந்த கருத்துக்களை கூறினால் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்..... கூடங்குளம் அணு உலையை பற்றிய அறிவு இன்றைக்கு இயற்பியல் படித்தவனைவிட, நெல்லை மாவட்ட மீனவனுக்கு இருக்கிறது.... யாராலும் எந்த விஷயத்தையும் எளிதாக புரிந்துகொள்ள முடியும், நாம் முறையான வழிமுறையோடு கொண்டு சேர்த்தால்.... முதலில் கே என்றால் என்ன?... என்பதை நம் கே சமூகத்து மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.... “கே உரிமை என்றால், அது உடல் உறவுக்கான உரிமை” என்பதை போன்ற ஒரு முட்டாள்த்தனமான எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கிறது.... கே என்பது உடல் சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல, அது உணர்வு சம்மந்தப்பட்டது..... வெறும் செக்ஸ் மட்டுமே கே உரிமைக்கான களம் இல்லை.... அதை தாண்டிய பாசம், காதல் இவற்றால் உண்டாகும் உணர்வுக்கான உரிமை மட்டுமே கே உரிமை என்பதை எல்லோருக்கும் புரியும்வண்ணம் சொல்லுங்கள்..... முதலில் ஒருபால் ஈர்ப்புக்கான தெளிவான புரிதலை நீங்கள் உணருங்கள், உங்கள் சகாக்களுக்கு உணர்த்துங்கள்.... பின்பு அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுங்கள்.... 


அறிவியல், மருத்துவம், வரலாறு, மதம், கலாச்சாரம் போன்ற பல துறைகளிலும் ஒருபால் ஈர்ப்புக்கான ஆதரவான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதையுங்கள்..... நீங்கள் விதைத்த விதை நிச்சயம் ஒருநாள் விருட்சமாக வளரும் என்பதில் உங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.....

“மதுகோப்பைகளுக்கு நடுவில் நட்சத்திர விடுதி கூட்டங்களும், முகத்தில் சாயம் பூசி வானவில் கொடிபிடித்து சாலையில் செல்வதும்” கே உரிமைக்கான போராட்டங்கள் இல்லை, அதில் எந்த காலத்திலும் நமக்கு வெற்றியும் கிடைக்க போவதில்லை....
இந்த உண்மைகளை புரிந்து உங்கள் போராட்டங்கள் இனி வரும் காலங்களில் இருக்குமானால், லட்சக்கணக்கான மறைக்கப்பட்ட கே இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு ஒளி ஏற்றும் உன்னத நிலைக்கு நீங்கள் செல்வீர்கள்.... இல்லையென்றால், இன்னும் பல சில காலங்களுக்கு பிறகு உங்களின் உண்மை முகத்தையும் மக்கள் அறியும் நாள் வரும்....

2 comments:

  1. Vijay..You just wrote what I had in my mind about this groups..It's well written with each concepts to question about the groups.. First people in our community itself should understand what to be proud of to be Gay and why its so?..

    I like this lines very much..No gay man respect other man, if he is not equel to his status, money, beauty, etc.. It's discernible truth

    ReplyDelete