Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday 30 March 2015

இது எலி-பூனை கதை அல்ல...! - சிறுகதை...


(ஐ.சி.யு சிறுகதையோட இரண்டாம் பாகம்னும் சொல்லலாம்... தனிக்கதையாக கூட நினைத்துப்படிக்கலாம்)

“இப்ப எதுக்கு தேவையில்லாம கால் டாக்சியல்லாம்?... பைக்லையே போகலாம்ல? வீட்டிலிருந்து கிளம்பி கால் டாக்சியில் பயணித்துக்கொண்டிருக்கும் இந்த இருபது நிமிடங்களில், திலீபனுடைய பன்னிரெண்டாவது கேள்வி இது....

“நீ பேசாம இருடா... ஹாஸ்பிட்டல்லேந்து டிஸ்சார்ஜ் ஆகி ஒருமாசம்தான் ஆகுது, அதுக்குள்ள உன்ன பைக்ல கூட்டிட்டு போகவேண்டாம்னுதான்... கொஞ்சம் பொறுமையாகவே பதிலை சொன்னேன்...

“விட்டா என்னைய பன்றி காய்ச்சல் வந்த ரேஞ்சுக்கு ட்ரீட் பண்ணுவ போல!... சரி, அட்லீஸ்ட் இப்போ எங்க போறோம்னாவது சொல்லலாம்ல?அடுத்த கேள்வி...

“இன்னும் பத்து நிமிஷத்துல உனக்கே தெரியப்போகுது, அதுக்குள்ள என்ன அவசரம்?.. சத்தம் போடாம, பேசாம வா.. அவன் வாயை என் கையால் மூடினேன்... பதிலுக்கு அவனோ என்னை மல்லுக்கட்ட முயல, நடப்பவற்றை கண்ணாடியின் ஊடாக கவனித்த ஓட்டுனரின் குதர்க்க சிரிப்பால் இருவரும் அமைதியானோம்...

போகும்வழியில் பழமுதிர்சோலையில் பழங்கள் வாங்க மறக்கவில்லை... “யாருக்கு வாங்குறோம்னு சொன்னின்னா, அதுக்கு ஏத்த மாதிரி பழங்கள் வாங்கலாம்ல? பழக்கடையிலும் திலீபன் போட்டுப்பார்த்தான்... மெல்லிய அசட்டுசிரிப்பை மட்டுமே பதிலாக உதிர்த்துவிட்டு, “ஆரஞ்சு ரெண்டு டசன் போடுங்க! என்று கடைக்காரரை நோக்கி நகர்ந்துவிட்டேன்...

பைகள் நிறைய பழங்களுடன் டாக்சியில் ஏறும்போதும் என்னை முறைத்துக்கொண்டே ஏறினான்... “நீ ஜூஸ் ஏதும் குடிக்கிறியா? அக்கறையோடுதான் கேட்டேன், அவன் முறுக்கிக்கொண்டு வேறுபக்கம் திரும்பி கதவை படாரென சாத்திக்கொண்டான்...

வாகனம் மீண்டும் புறப்பட்டது... “அந்த கோவில் தெரியுது பாருங்க, அதுக்கு பக்கத்துல்ல இருக்குற அப்பார்ட்மெண்ட்கிட்ட நிறுத்துங்க ஓட்டுனரிடம் அடையாளத்தை சொல்லிவிட்டு, பணம் எடுத்து எண்ணிக்கொண்டிருந்தேன்.. குறிப்பிட்ட இடம் வந்ததும், எனக்கு முன்பாகவே திலீபன் இறங்கிவிட்டான்... ஆளுயர நின்ற கட்டிடத்தை கீழிருந்து மேலாக நோட்டமிட்டான், இன்னும் அவன் கண்களில் ஆயிரம் கேள்விகள் நிலைகொண்டுள்ளதை உணரமுடிகிறது...

அவன் கையை பிடித்து, “மூணாவது ப்ளோர் போகணும், வா என்று இழுத்தேன்... உதடு வரை வெடித்த கேள்விகள், வெளிவர முடியாமல் அவன் தவிப்பதும்கூட வேடிக்கையாகவே இருக்கிறது... எதையும் கண்டுகொள்ளாது அவனை அழைத்து, முருகன் படம் ஒட்டிய ஒரு வீட்டுக்கதவின் முன் நின்றேன்...

அழைப்பு மணியை அடிக்க, கதவை திறந்தார் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி... முகமெல்லாம் வியர்வையும், சேலையில் படிந்திருந்த தூசியும் அவர் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்ததாக சொன்னது... சேலையின் முனையில் வியர்வையை துடைத்தபடியே எங்களை நோக்கியவராக, “யார் வேணும் உங்களுக்கு? என்றார்... அது கேள்வியாக இல்லாமல், “நீங்க அட்ரஸ் மாறி வந்திருக்கிங்கன்னு நினைக்குறேன்! என்று அவர் அடுத்துசொல்லப்போகும் பதிலுக்கான முன்னோட்டம் போல தெரிந்தது...

“சாரதாம்மாதான நீங்க?... உங்களைதான் பாக்கணும் சொன்னபடி சிரித்தேன்...

“என்னையா?... நீங்க யாருன்னு தெரியலையே தம்பி... புருவத்தை சுருக்கிக்கொண்டே யோசிக்கத்தொடங்கினார்...

“ராமநாதன் சார் இல்லிங்களா?... அவரை கேளுங்க, தெரியும் என்று கூறிக்கொண்டே இடைப்பட்ட சந்தில் புகுந்து வீட்டிற்குள் நுழைந்தேன்... 

“வீட்டை சுத்தம் பண்ணிங்களா?... ஏன்மா இதல்லாம், ஆள் வச்சு பண்ணக்கூடாதா?... ஹாஸ்பிட்டல்லேந்து டிஸ்சார்ஜ் ஆகி ஒருமாசம்தான ஆச்சு?... இந்தாங்க பழங்கள், இத சாப்ட்டு ரெஸ்ட் எடுங்க பழங்கள் நிறைந்த பையை அந்தம்மாவின் முன் நீட்டினேன்... அதை வாங்குவதா? கூடாதா? என்கிற குழப்பம் நீடித்தபடியே தயக்கத்துடன் வாங்கிக்கொண்டார்... அந்தநேரம் பார்த்து அவர் அலைபேசி அழைக்க, அந்த சத்தம் கூட கேட்காததவராக குழப்பத்தில் நின்றுகொண்டிருந்தார்...

“அம்மா, உங்க மொபைல் அடிக்குது பாருங்க...சொன்னபிறகுதான் அலைபேசியை நோக்கி நகர்ந்தார்...

“உங்க பொண்ணாதான் இருப்பாங்க, சாப்டாச்சா?ன்னு கேட்கவா இருக்கும்?னு சிரித்தேன்...

இன்னும் அதிக குழப்பத்துடன் அலைபேசியை காதில்வைத்துக்கொண்டே என்னை பார்த்தார்... “ஹ்ம்ம்... சாப்ட்டேன்மா...சொல்லும்போது குழப்பங்கள் அதிர்ச்சியாக உருமாறியிருந்தன... “உனக்கு அப்புறம் பேசுறேன்மா என்றபடி அழைப்பை துண்டித்தபடி மீண்டும் எங்களை உற்று நோக்கினார்...

“அடச்ச!... கண்டுபிடிக்க முடியலையே.. என்கிற விரக்தி அவர் ஏமாற்ற பார்வையில் புரிந்தது...

“என்னால கண்டுபிடிக்க முடியல தம்பி, நீங்களே யாருன்னு சொல்லிடுங்களே! வாய்விட்டே கேட்டுவிட்டார்....

“சார்கிட்ட கேளுங்கம்மா.., விளக்கமா சொல்வார்... எங்க அவர ஆளையே காணும்?பார்வையை வீட்டின் இடுக்குகள் வரை படரவிட்டேன்...

“அந்த மனுஷன் இன்னிக்குன்னு பார்த்துதான் இவ்ளோநேரம் குளிக்கிறார்... முனகிக்கொண்டே குளியலறையை நோக்கி விரைந்தார்...

நான் சோபாவில் அமர்ந்தபடி வீட்டை கண்களால் ஸ்கேன் செய்தேன்... ரசனையோடு அலங்கரிக்கப்பட்ட வீடு... மகன், மகள்களின் புகைப்படங்கள் அந்த வீட்டின் சுவற்றை வண்ணமயமாக்கியிருந்தன... குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், காட்சிப்பொருளாக மட்டுமே கண்ணாடி அடுக்குகளுக்குள் சிறைபட்டு கிடந்தன, குழந்தைகள் புழங்காத வீட்டின் சாயல் அப்பட்டமாய் தெரிந்தது.. டீப்பாயில் பாலகுமாரனும், சுஜாதாவும் காற்றில் தடதடத்துக்கொண்டிருந்தார்கள், இவர்கள் மட்டும்தான் இருவரின் தனிமையை போக்கிக்கொண்டிருக்கிறார்கள் போலும்!...

“டேய், என்னடா நடக்குது இங்க?.. யார் வீட்டுக்கு வந்திருக்கோம்னு எனக்கும் புரியல, யார் வந்திருக்கோம்னு வீட்டுக்காரங்களுக்கும் தெரியல... நீ நார்மலாதான் இருக்கியா? என் தலையை ஒருமுறை தொட்டுப்பார்த்தான்...

“ஹ ஹா... நான் நார்மல்தான்... கொஞ்சநேரத்துல எல்லாமே நார்மலாகிடும், பொறுமையா இரு! என்று அவன் தலையை தட்டினேன்...

“உன்ன திருத்தவே முடியாது! என்று முனுமுனுத்தபடி தலையில் லேசாக அடித்துக்கொண்டான்...
அறைக்குள் இன்னொரு கலவரம் வெடித்துக்கொண்டிருந்தது....

“எனக்கெப்டி தெரியும்?... பதட்டப்படாத, இரு நான் யாருன்னு பார்க்குறேன்! என்று மனைவியை சமாதானப்படுத்திக்கொண்டே ஹாலுக்கு வந்தார் ராமநாதன்...

என்னை பார்த்ததும் ஓரிரு வினாடிகள் புருவத்தை சுருக்கிவிட்டு, சட்டென நினைவில் வந்தவராக, முகமலர்ச்சியோடு என்னருகே வந்து கையைபிடித்துக்கொண்டு நலம் விசாரிக்கத்தொடங்கிவிட்டார்...

“எப்டி இருக்க?... என்னப்பா ஆள் இளைச்ச மாதிரி தெரியிற?... ஜாப் எப்டி போகுது? சரமாரி விசாரிப்புகள் திலீபனையும், சாரதாம்மாளையும் இன்னும் அதிக குழப்பமுற செய்தது...

“யாரு இவங்க? காதை கடித்தார் சாரதாம்மாள்...

“இது... இந்த தம்பி.. இவர் பேரு... என்று தடுமாறியபடி, “ஆமா உன் பேரு என்ன? என்று என்னை நோக்கினார்...

சிரித்தபடி, “கௌதம் என்றேன்...

“ஆமா... கௌதம்.. என்று மனைவியிடம் எதிரொலித்தார்...

“உன் பேர்தான் தெரியாது... இது திலீபன்தான?... இவர் பேரு நல்லா தெரியும்.. சிரித்துக்கொண்டார்...
திலீபன் திகைத்தான்... “என் பேர் எப்டி?

“இந்த பையன் திலீபன் அட்டண்டர்னா, நீ திலீபன்தான?குதர்க்க விளக்கம் கொடுத்தார் ராமநாதன்...
“நான் புரியுற மாதிரி சொல்றேன்... நீங்க ரெண்டு பேரும் ஐசியூல இருந்தப்போ, நாங்க பழக்கமானோம்... சார்தான் நிறைய அறிவுரைகள் சொன்னார்... சார் பற்றி நிறைய திலீ கிட்ட சொல்லிருக்கேன், ஆனா அதல்லாம் இப்பதான் அவனுக்கு ஞாபகம் வரும்... அனேகமா என்னைப்பத்தியும் உங்ககிட்ட சொல்லிருப்பார்னு நினைக்குறேன் என்று இழுத்தபடி அந்தம்மாவை பார்த்தேன்...

“ஐயோ நீதானாப்பா அது?... இந்த ஒரு மாசமும், உன்னப்பத்திதான் நிறைய பேசிட்டே இருந்தார்... முதல்ல உட்காருங்க ரெண்டு பேரும் சோபாவை நோக்கி கைநீட்டினார்...

“நீங்களும் உட்காருங்கம்மா... இப்போ உங்க உடம்பு எப்டி இருக்கு, நல்லா சாப்பிடுறீங்களா?
 
“ஒன்னும் ப்ராப்ளம் இல்லப்பா... ஆமா, எப்டி எங்க அட்ரஸ் உனக்கு தெரியும்?

“சார்தான் சொன்னார்... உங்க சொந்த ஊர் நாமகிரிபேட்டைல இருக்குற பூர்விக வீடு வரைக்கும் எல்லாத்தையும் சொல்லிட்டார் சிரித்தேன்...

“அவரு ஓட்டவாய்ப்பா, ஆனா அதிலயும் நல்லதுதானே இப்ப நடந்திருக்கு!... சிரித்தபடியே அவர் கணவரை பார்க்க, அவர் தலை துவட்டிய துண்டினை சோபாவில் போட்டிருந்ததை முகத்தை சுளித்தபடியே கவனிக்க மறக்கவில்லை...

“ஈரத்துண்டை இப்டியா போடுவீங்க?... அதை கொடில காயப்போடுங்க, பாத்ரூம்ல தண்ணி சொட்டுற சத்தம் கேட்குது, பைப்பை ஒழுங்கா அடைக்கலையா? நாங்கள் இருப்பதைக்கூட மறந்து, கணவனிடம் கண்டிப்பு காட்டினார்.. என்னைப்பார்த்து சிரித்தபடியே, துண்டை எடுத்துக்கொண்டு கொடியில் விரித்து காயப்போட்டார் ராமநாதன்...

நானும் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன், திலீபனை பார்த்தேன்... அவனாக இருந்திருந்தால், “துண்டை ஒழுங்கா உதறி காயப்போடு கௌதம், அங்க பாரு சுருக்கமா இருக்குன்னு காயப்போடக்கூட கிளாஸ் எடுத்திருப்பான், அந்த அம்மா கொஞ்சம் பரவாயில்லை என்றுதான் தோனுச்சு...

“நீ இப்டியே பேசிட்டு இருக்கியே, வந்தவங்களுக்கு குடிக்க எதாச்சும் கொடுத்தியா?.. ப்ரிட்ஜ்ல கோக் இருந்துச்சு, அதை க்ளாஸ்ல ஊத்திட்டு வா மனைவியிடம் உத்தரவு போட்டார் ராமநாதன்...

“ஐயோ சாரிப்பா... பேச்சுல அத சுத்தமா மறந்துட்டேன்... கோக்கல்லாம் வேணாம்ங்க, உடம்புக்கு கெடுதல்தான் அதல்லாம்... உங்க சொந்தக்காரங்க யாராச்சும் வந்தா அதை கொடுத்துக்கலாம், உங்களுக்கு ப்ரெஷ் ஜூஸ் போட்டுட்டு வரேன்!ன்னு சொல்லி எழுந்து போனார்... உடல்நிலையை கருத்தில்கொண்டு நாங்கள் மறுத்தும், அவர் கேட்பதாக இல்லை...

“சாரதா ஒருதடவ முடிவு பண்ணிட்டா, அவ பேச்ச அவளே கேட்கமாட்டா... இதுல என் சொந்தக்காரங்கள இடைல வாரவும் மறக்கமாட்டா..ன்னு சிரித்துக்கொண்டே சொன்னார்...

இடைப்பட்ட நேரத்தில் திலீபனிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார்... ஓரளவு பதற்றம் குறைந்து, இயல்பு நிலைக்கு வந்துவிட்டான் அவனும்... 

“ஹாஸ்பிட்டல்ல அவ்ளோ பேசுனீங்க, இங்க ரொம்ப அமைதியா இருக்கிங்களே? வந்தது முதலாக கேட்க நினைத்த கேள்வி, அவர் மனைவி இல்லாதபோது கேட்டால்தான் அரைகுறை பதிலாவது வரும்!

“இங்க ஏதும் பேசமுடியாததாலதான், வெளில நான்ஸ்டாப்பா பேசியே மத்தவங்கள கொல்றேன்... இவகிட்ட எதாச்சும் பேசி, அதுல குழப்பம் வந்து, எதுக்கு ப்ராப்ளம்?... சிரித்தார்....

“இப்ப என்ன உங்களுக்கு ப்ராப்ளம்? என்றபடி பழச்சாறு கோப்பைகளை எங்கள் முன் வரிசைப்படுத்தி வைத்தார் சாரதாம்மா... அந்த வரிசையில் கூட ஒரு நேர்த்தி இருந்ததை கொஞ்சம் பதட்டத்தோடுதான் கவனித்தேன்... எங்கள் பேச்சு அரைகுறையாக அவர் காதுகளில் விழுந்திருக்கக்கூடும், அதை முழுமையாக அறிந்துகொள்ளும் வண்ணம் கணவனை குதர்க்கமாக பார்த்தார்...

“ஒண்ணுமில்லம்மா... அவங்க குடும்பத்துல எதுவும் ப்ராப்ளம் இல்லையே?ன்னு விசாரிச்சுட்டு இருந்தேன் ஒருவழியாக சமாளித்து, அதன்மூலம் எங்களை கோர்த்துவிட்டார்...

“ஆமா.. நான் அப்போவே கேட்கனும்னு நினச்சேன், நீங்க ரெண்டுபேரும் நண்பர்களா?... இந்த பையன் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிருந்தப்போ கூட, அவங்க பேரன்ட்ஸ் வரலைன்னு சொன்னார்... என்னாச்சு? பழச்சாறு தொண்டையை நனைப்பதற்குள், அம்பாய் பறந்த கேள்விகள் அமிலச்சுரப்பை அதிகமாக்கிவிட்டிருந்தது...

“அது.... அது.. வீட்ல ஒரு பிரச்சினைம்மா... மென்று விழுங்கினேன்...

“ரெண்டு பேர் வீட்லையுமா?... அப்டி என்ன பிரச்சின?

“ஒரு சண்டைம்மா... எங்கள அவங்க ஏத்துக்கல... அரும்பாடுபட்டு வார்த்தைகளை தேடி கோர்த்தேன், இப்படி ஒரு கேள்வியை இங்கு எதிர்நோக்குவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை... திலீபன், இந்த கேள்விகளுக்கும் அவனுக்கும் சம்மந்தமே இல்லாதவனை போல, ஜூஸை ரசித்து சுவைத்துக்கொண்டிருந்தான்... “கொஞ்சம் இனிப்பு பத்தல!ன்னு சுவைப்பற்றிய சிந்தனையில் இருக்கிறான் போலும்....

“அப்டியா?... கொலை, கொள்ளைனு எதாச்சும் தப்பு பண்ணிட்டிங்களா என்ன?.. அப்டி என்னதான் வெறுப்பு? அந்தம்மாவும் விடுவதாக இல்லை...

“இல்லம்மா... அது தப்பில்ல... ஆனா, அவங்க... அது என்னன்னா? ஆண்டவா! வார்த்தைகள் கூட சிக்க மறுக்கிறதே!...

“நாங்க ரெண்டு பேரும் கே, அதாவது சமபால் ஈர்ப்பு உள்ளவங்க... நாங்க காதலர்களும் கூட! இதான் காரணம்.. திலீபன்தான் இப்படி போட்டு உடைத்தான்... வார்த்தைகளை நான் தமிழுக்குள் தேடிக்கொண்டிருக்கும் கணப்பொழுதில், இப்படி உளறிவிட்டான்... இப்படி பட்டென அவன் சொல்லிவிட்டதில், என்னையே அதிர்ச்சி ரேகைகள் ஆட்படுத்திக்கொண்டுவிட, மெள்ள திரும்பி மற்ற இருவரையும் பார்த்தேன்...

மெல்லிய ஆச்சர்யம் மட்டுமே அவர்கள் முகத்தில், அதைத்தாண்டி வழக்கமான அதே புன்னகை இன்னும் மாறவில்லை... என்னை ஒருமுறை தொட்டுப்பார்த்துக்கொண்டேன், கனவு கூட இல்லை... எப்படி இவர்களால் இந்த விஷயத்தை இவ்வளவு எளிதாக அணுகமுடிகிறது? இன்னும் எச்சில் கூட எனக்கு தொண்டைக்குள் இறங்கவில்லை...

“கெளதம், ஜூஸை குடிப்பா... அப்டியே வச்சிருக்க? சாரதாம்மா கொஞ்சமும் பதட்டமில்லாமல் சொன்னார்....

“அது... அது... இப்ப திலீபன் என்ன சொன்னான்னு புரிஞ்சுதா உங்களுக்கு? சந்தேகத்துடன்தான் கேட்டேன்...

“எங்கள அவ்ளோ முட்டாள்ன்னா நினச்ச?... அவன்தான் தமிழ், இங்க்லீஷ்னு ரெண்டு மொழிலையும் தெளிவா சொல்லிட்டானே? ராமநாதன் சொன்னார்...

“இப்ப நீங்க கேங்குறதால எங்களுக்கு என்ன பிரச்சின வரப்போகுது?... ஒருவேள முன்ன சொன்னது போல நீங்க கொலையோ, கொள்ளையோ செஞ்சிருந்தா, உங்கமேல கோபம் வர்றது நியாயம்... இதுக்கல்லாம் எங்ககிட்டேந்து வேற எப்டிப்பட்ட ரியாக்ஷன எதிர்பார்க்குற? தன் பங்கிற்கு சாரதாம்மாவும் தெளிவாகவே குட்டையை குழப்பினார்...

“இவன் அப்டிதான்மா... பழமைவாதி, உங்க அளவுக்கு யூத் மனசு இவனுக்கு இல்ல என்று திலீபனும் இடைபுகுந்தான்...

“நீங்க லவ்வர்ஸ்ஆதான் இருப்பிங்கன்னு அப்பவே சொன்னார்... திலீபன் பெட்ல இருந்தப்போ நீ அழுத அழுகையை பார்த்தப்போ, உன் காதல் அப்டியே தெரிஞ்சுதாம்... ரொம்ப சிலாகிச்சு சொன்னாரு... ஆனாலும் எதுவும் கேட்டுக்கலையாம், ஒருவேள அவர் கெஸ் தப்பாகிருந்தா சிக்கல்தான?... அதனால, எங்க சந்தேகம் தீர்ந்தது மட்டும்தான் இப்ப நடந்துச்சு... இதுல ஆச்சர்யமல்லாம் கூட பெருசா எங்களுக்கு இல்ல.. சாரதாம்மா சொல்ல, அந்த ஒவ்வொரு வார்த்தையையும் தலையசைத்து ஆமோதித்தார் ராமநாதன் சாரும்...

ஆனால், எனக்கு இன்னும் குழப்பம் தீர்ந்தபாடில்லை.... ஆயிரம் கேள்விகள் மனதை குடைந்துகொண்டிருக்கிறது... வழக்கமான இப்படி குடைச்சல்கள் திலீபனின் வேலை, அவனோ ஆச்சர்யமாக தெளிவாக காணப்படுகிறான்...

“அது சரிம்மா... ஆனால், கே போல விஷயங்கள எப்டி உங்களால இவ்ளோ சாதாரணமா எடுத்துக்கமுடியுது?... இதே விஷயத்த எங்க அப்பா அம்மாகிட்ட சொன்னப்போ, அவங்க குதிச்ச குதி இருக்கே... அப்பப்பா... திட்டு, அடி, மிரட்டல், பயமுறுத்தல், செண்டிமெண்ட் வசனங்கள்னு நிறைய நடந்து, இப்போ தனியாவே வந்துட்டோம்... எங்க அப்பாம்மா வயசுதான் உங்களுக்கும், உங்களால மட்டும் எப்டி இவ்ளோ சாதாரணமா எடுத்துக்க முடியுது? மூச்சுக்கூட விடாமல் மொத்த சந்தேகத்தையும் கொட்டிவிட்டேன்...

“நீ சொல்ற அதே அடி, திட்டு, மிரட்டல், கெஞ்சல் எல்லாம் எங்க வாழ்க்கைலயும் ஒரு நாலு வருஷத்துக்கு முன்னமே நடந்து முடிஞ்சாச்சு... இப்போ செக்சுவல் ஓரியன்ட்டேசன் பற்றி ஒரு தெளிவான பார்வை வந்திடுச்சுப்பா... பிடிவாதத்த விட்டுட்டு நிதர்சனத்த புரிஞ்சுகிட்டோம்னுதான் சொல்லணும் ராமநாதன் சொல்லும்போது, வார்த்தைகளில் ஒரு வலியும் இணைந்தே வெளிப்பட்டது...

“அப்டின்னா... உங்க பையன்....? இழுத்தேன்...

“பையன் இல்ல... பொண்ணு... அம்மா அமைதியாக சொன்னார்...

“என்ன சொல்றீங்க? இப்போ திலீபன் பதற்றமாகி கேட்டான்...

“ஆமா... எங்க ரெண்டாவது பொண்ணு ஒரு லெஸ்பியன்... அவ எங்ககிட்ட வந்து, தான் ஒரு பொண்ணை காதலிக்கிறதா சொன்னப்போ, உங்க அப்பா அம்மா செஞ்ச அதே தவறுகளதான் நாங்களும்  செஞ்சோம்... அடிச்சு, மிரட்டி, கெஞ்சி, தற்கொலை மிரட்டல் கூட பண்ணி.... ஒரு புண்ணியமும் இல்ல... விஷம் குடிச்சு தற்கொலை வரைக்கும் அவ போய்ட்டா, எங்க மனசு அதுக்குக்கூட இரங்கல... திடீர்னு ஒருநாள் காணாம போய்ட்டா, சனியன் தொலஞ்சுதுனு அவள தேடக்கூட இல்ல... சம்பிரதாயத்துக்கு போலிஸ் கம்ப்ளைன்ட் மட்டும் கொடுத்தோம்... சொன்னா நம்பமாட்ட, நாலு வருஷம் அவளப்பத்தி ஒரு தகவலும் இல்ல... மனசுக்குள்ள மகளைப்பற்றிய வருத்தம் அப்போதான் வந்துச்சு... எங்க மூணு பிள்ளைகள்ல அவதான் ரொம்ப பாசக்காரி... அவ எங்ககூட இருந்து புரியவைக்கமுடியாத விஷயத்த, எங்களைவிட்டு தூரப்போய் புரியவைச்சா.... ராமநாதன் சொல்லிமுடிக்கும்போது, அவர் கண்களும் கலங்கியே இருந்தது...

“எப்போ அவங்களப்பத்தி தகவல் தெரிஞ்சுச்சு?.. நாலு வருஷமா அவங்க எங்க இருந்தாங்க? திலீ ஆர்வத்துடன் கேட்டான்...

“நாலு வருஷம் கழிச்சு ஒரு போன் கால் வந்துச்சு, ‘ஹலோனு சொன்ன ஒருவார்த்தைலையே அவதான்னு தெரிஞ்சிடுச்சு... அத்தனநாளும் தேக்கி வச்சிருந்த கண்ணீரை மொத்தமா அப்போதான் அழுதேன்... அவளும் ஒரு நூறு ‘சாரி கேட்டிருப்பா... அப்புறம்தான் அவ பார்ட்னரோட யுஎஸ்ல இருக்குறதா சொன்னா... அவ வீசா, டிக்கெட்னு திரிஞ்சத டைவர்ட் பண்ணதான் அந்த தற்கொலை நாடகம்னும் புரிஞ்சுச்சு.... கலிபோர்னியா மாகாணத்துல இப்போ கல்யாணம் கூட ஆகிடுச்சாம், தினமும் இப்போ மருமக கூடவும் நாங்க ஸ்கைப்ல பேசறோம் அந்தம்மாவின் கண்ணீருடன் கலந்த சிரிப்பு சூழலை அழகியலாய் மாற்றிவிட்டது...

“நாலு வருஷமும் அவளப்பத்தி நினைக்காத நாள் இல்ல, புலம்பாத பொழுதில்ல... ஆனா, நாங்க புலம்புறது கூட எங்க மத்த ரெண்டு பசங்களுக்கும் தெரியக்கூடாத சூழல்... அவங்க இன்னுமே அவள ஏத்துக்கல, அவங்களோட சொந்தக்காரங்க மத்தியில கெட்ட பேர் உண்டாகிடுமாம்... எங்களால அப்டி இருக்கமுடியாதே, பெத்த மகளாச்சே... ஆற்றாமையை வெளிப்படுத்திக்கொண்டார் ராமநாதன்....

 “இப்போகூட ஒருநாளைக்கு பத்து தடவை போன் பண்ணிடுவா... தினமும் அமெரிக்காவுக்கு  எங்களையும் வரச்சொல்லி கேப்பா.... எங்களுக்குதான் நம்ம ஊருகள விட்டுப்போக மனசு வரல... சாரதாம்மா கவலையோடு சொன்னார்...

“ஓ சாரிம்மா... இவ்ளோ விஷயங்கள நீங்களும் கடந்து வந்திருப்பிங்கன்னு நான் யோசிக்கக்கூட இல்ல... தேவையில்லாம உங்களையும் அழவச்சிட்டேன்... உருக்கமாக சொன்னேன்...

“பரவால்லப்பா... இதிலென்ன சங்கடம்?.. இத வேற யார்கிட்ட நாங்க ஷேர் பண்ணமுடியும்?... உண்மைய சொல்லனும்னா எங்க மனபாரம் குறைஞ்ச மாதிரி பீல் பண்றோம்... எதுக்காக நான் இவ்வளவும் சொல்றேன்னா, உங்க அப்பாம்மாவும் கண்டிப்பா உங்கள புரிஞ்சுப்பாங்க... உங்கமேல நிச்சயம் இப்போ கோபமும் வெறுப்பும் இருக்கத்தான் செய்யும், ஆனாலும் பாசம் விட்டுப்போகாதுல்ல... இந்த அறிவியல், ரிசர்ச் எல்லாத்தையும்விட பாசத்துக்கு அதிக வால்யூ இருக்கு... அது நிச்சயம் அவங்கள உங்களோட ஒருநாள் சேர்த்திடும்! நம்பிக்கையாக சொன்னார் ராமநாதன்...

“அது நடக்குதோ இல்லையோ, நீங்க சொல்றப்போ சந்தோஷமா இருக்கு சார்... திலீ கண்கள் கலங்க சொன்னான்...

“ஏன்பா நடக்காது?.. ஒரு பொண்ணு லெஸ்பியன்னு தெரிஞ்சுமே, அவ்ளோ வெறுப்பையும் தாண்டி நாங்க மாறலையா?... இன்னும் ஒன்னு ரெண்டு வருஷத்துல உங்களுக்கு உங்க அப்பாம்மாவை பத்தி நினைவுகள் குறஞ்சிடலாம்... ஆனால், அவங்களுக்கு ஒவ்வொரு நாளும் உங்களைப்பத்தி நினைவுகள் அதிகமாகத்தான் செய்யும்... அந்த பாசமே உங்கள தேடி வரவைக்கும் திலீபன் சாரதாம்மா மிக நேர்த்தியாக விளக்கினார்... 

 “சரி விடுங்க.. வந்ததுலேந்து ரொம்ப அழுகாச்சியா போய்டுச்சு, கௌதம் திலீபன் லவ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களே! ராமநாதன் சார், சூழலை இயல்பாக்க ஆயத்தமானார்...

“லவ் பத்தின்னா... அஞ்சு வருஷமா லவ் பண்றோம்... எங்க வீட்டுக்கு சமீபத்துலதான் சொன்னோம், எதிர்பார்த்தது போலவே ஏத்துக்கல... இப்போ மொத்தமாவே தனியா வந்துட்டோம்... வருத்தம் கலந்தே சொன்னேன்...

“அட என்னப்பா... ஜாலியா எதாச்சும் சொல்வீங்கன்னு பார்த்தா, அதே சோகம் கலந்த பதில்தானா?.. உங்க லவ் எப்டி உண்டாச்சு? யாரு ப்ரப்போஸ் பண்ணினா? இப்டி எதாச்சும் சொல்லுங்க... ராமநாதன் விடுவதாக இல்லை..

“அவன் அதல்லாம் சொல்லமாட்டான் சார்... ஏன்னா, என்கிட்டே ப்ரப்போஸ் பண்ணினது அவன்தான்.. கிட்டத்தட்ட ஒரு மாசம் கழிச்சுதான் ஓகே சொன்னேன் சிரித்தபடி சொன்னான் திலீபன்...

“அதுல மறைக்க என்ன சார் இருக்கு... அந்த ஒரு மாசமும் அவன் லவ்வை ஏத்துக்கலன்னு வருத்தப்பட்டேன், இப்போ இந்த அஞ்சு வருஷமா ஏத்துக்கிட்டத நினச்சு வருத்தப்படுறேன்... என்ன பண்றது, இந்த கேள்விக்கும், வார்த்தைக்கு வார்த்தை வருத்தம்தான் பதிலா வந்து நிக்குது! கவலைப்படுவதை போல பொய்யாக முகத்தை சுளித்தேன்... என் கையில் நறுக்கென கிள்ளிவிட்டு, எதையும் அறியாததை போல திரும்பிக்கொண்டான் திலீபன்...

“சரி சரி சண்டை வேணாம்ப்பா.... உங்க அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சாரதாம்மா கேட்டார்...

“நீங்க லஞ்ச் செஞ்சு கொடுத்தா சாப்பிடுவோம்!

“அது கண்டிப்பா உண்டுப்பா, நான் கேட்கிறது உங்க எதிர்காலம் பற்றி... விளக்கம் கொடுத்தார்...

“எதை சொல்றீங்கன்னு புரியுதும்மா... இப்போதைக்கு இப்டியே போறத விட்டா வேற வழியில்ல... திலீபன் குறுக்கிட்டான்...

“உங்க கல்யாணத்த அங்கீகரிக்குற நாட்ல செட்டில் ஆகிடலாம்ல?... வேணும்னா எங்க பொண்ணுகிட்ட சொல்லி, யுஎஸ்ல செட்டில் ஆகுறதுக்கான ஏற்பாடுகள் பண்ண சொல்லட்டுமா? ராமநாதன் தன்மையாக கேட்டார்...

இருவரும் ஒன்றாக மறுத்தோம்...
“வேணாம் சார்... எங்களுக்கு வெளிநாடு போகவல்லாம் விருப்பமில்ல...

“இங்க உங்களுக்கு முறையான உரிமைகள் கிடைக்காதேப்பா...

“உரிமைகள் கிடைக்காதவங்கல்லாம் வெளிநாடு போகணும்னா, நாட்டுல பெரும்பாலான மக்கள் இங்க இருக்கமுடியாது சார்... அதுமட்டுமில்லாம உரிமை கிடைக்காத ஆட்கள் எல்லாரும் இப்டி வெளிநாடுன்னு போய்ட்டா, இங்க உரிமைக்குன்னு யாரு சார் போராடுறது?... எப்பவுமே எல்லாமே இப்டியே இருந்திடும்னு சொல்லமுடியாதுல்ல, அப்டி இதுவும் ஒருநாள் மாறும்னு நம்புறோம் சார்

“இங்க நிம்மதியா இருக்கமுடியும்னு நினைக்குறீங்களா?... மதம், கலாச்சாரம் அது இதுன்னு சொல்லி குறைசொல்லிகிட்டே உங்கள இந்த சமூகம் வாழவிடாது கௌதம்.. எங்க மகளும் கூட எங்க பக்கத்துல இருக்கனும்னுதான் ஆசைப்படுறோம், ஆனா அவங்கள இந்த மக்கள் அப்டி வாழவிடமாட்டாங்க... அதனால, தூரத்துல இருந்தாலும், அவங்கள புரிஞ்சுகிட்ட மக்கள் மத்தியில வாழட்டும்னு அங்கேயே இருக்க சொல்லிட்டோம்... அதைத்தான் ஒரு பிள்ளைபோல உங்ககிட்டயும் சொல்றோம்...

“புரியுது சார்... ஆனாலும், இந்த சமூகத்த நேரடியா எதிர்கொள்றதுன்னு முடிவு பண்ணிட்டோம்... கஷ்டம்தான்... ஆனா அவ்ளோ கஷ்டப்பட்டாதான், வாழ்க்கை பற்றியும் எங்களுக்கு ஒரு உத்வேகம் வரும்... உங்களைப்போல ஒருசில நல்லவங்க எங்ககூட இருந்தாவே போதும், எதையும் சமாளிச்சிடுவோம் சார்...

“ரொம்ப பெருமையா இருக்குப்பா... இப்டி ஒரு முடிவோட எங்க பொண்ணு இங்க வாழ்ந்திருந்தா, அவளுக்கு எங்களால முடிஞ்ச அளவுக்கு உறுதுணையா நின்னிருப்போம்னு இப்போ தோணுது.. அதுக்குதான் வாய்ப்பில்லாம போய்டுச்சு... சாரதாம்மா ஏக்கத்தோடு சொன்னார்...

எனக்கு வேறுவிதமான சிந்தனை அப்போதுதான் உதிர்த்தது... ஏன், இவர்களை எங்களோட இணைந்து வாழ சொல்லக்கூடாது?ன்னு யோசிச்சேன்.. அவங்க பிள்ளைகளை மிஸ் பண்றாங்க, நாங்க பெற்றோரை மிஸ் பண்றோம்... ஒருவேளை இந்த யோசனையை திலீபனிடம் சொன்னால், அவன் என்னை மிஸ் பண்ணிடுவான்... அதனால், இந்த பேச்சை தொடங்குவது பற்றி ஒரு ஸ்கெட்ச்சை மனதிற்குள் தீட்டிக்கொண்டிருந்தபோது....

“நீங்க ஏன் எங்களோட வந்திடக்கூடாது? என்று திலீபனே கேட்டுவிட்டான்... நியாயமாக இன்றைய பொழுதில் ஒரே ஒரு ஆச்சர்யத்தைதான் அவனுக்கு கொடுத்தேன், அதற்கு பிறகு சரசரன்னு அவன்தான் வரிசையாக எனக்கு ஆச்சர்யத்த உண்டாக்குறான்...

“என்ன சொல்றீங்க? ராமநாதன் திலீபன் சொன்னதற்கான விளக்கத்தை எதிர்பார்த்தார்...

“ஆமா சார்.. எனக்குமே தோனுன விஷயம்தான்.. நாங்களும் பேரன்ட்ஸ்ஐ மிஸ் பண்றோம், நீங்களும் பிள்ளைகள மிஸ் பண்றீங்க... ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா ஒண்ணா இருக்கலாம்ல?... விளக்கத்தை நானே கூறினேன்... சட்டென இந்த விளக்கம் சொல்லிமுடிக்கப்பட்ட மறுகணம், அந்த இடத்திலிருந்து எழுந்து அறைக்குள் சென்றுவிட்டார் சாரதாம்மா... ராமநாதன் சாரின் முகம் வெளிறிப்போனது... தன் மனைவி எங்களை உதாசீனப்படுத்திவிட்டதாக ஒரு குற்ற உணர்வு அவருக்குள் சுடர்விட்டு எரிந்தது... எனக்குமேகூட, பேசிக்கொண்டிருக்கும்போது எதுவும் சொல்லிவிடாமல் எழுந்துபோனது, கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது...

“இல்லப்பா... அது சரி வராது... இழுத்தார்...

“ஏன் சார்?.. எங்களால உங்களுக்கு ஏதும் பிரச்சினை வரும்னு நினைக்குறீங்களா? திலீபனும் விடுவதாய் இல்லை...

“ஐயோ அப்டிலாம் எதுவுமில்லப்பா... உங்ககூட ஒண்ணா இருக்குறதுல சந்தோஷம்தான்.. நீங்களும் எங்க பிள்ளைக மாதிரிதான்... ஆனா... என்று இழுத்தார்...

“அப்புறம் என்னப்பா பிரச்சினை?... சிரித்தான் திலீபன்...

“சாரதாக்கு இதல்லாம் பிடிக்காது... அவ பெத்த பிள்ளைக வீட்ல கூட தங்க மறுக்குற ஆளு, அவளை சமாளிச்சு சம்மதிக்க வைக்க முடியாதுப்பா... என்று ராமநாதன் சொல்லிமுடிப்பதற்குள், இரண்டு பைகளை தூக்க முடியாமல் சுமந்தபடி அறைக்குள்ளிருந்து வெளிவந்தார் சாரதாம்மா...

“என்ன கௌதம், பாத்துகிட்டு நிக்குற?... இந்த பேக்கை எடு... திலீபன் ஒரு கால் டாக்சிக்கு கால் பண்ணுப்பா... இவர்கூட நின்னா, மசமசன்னு பேசிக்கிட்டுதான் நிப்பார்... பரபரத்தார் சாரதாம்மா...

“எங்க கிளம்புற?... இவ்ளோ துணிகளோட? மனைவியிடம் தயங்கிக்கிகொண்டே கேட்டார்...

“இதென்ன கேள்வி... நாம எல்லாரும்தான் போறோம்... நம்ம பிள்ளைக வீட்டுக்குதான்... இந்த பசங்க கேட்டு உங்களால மறுக்க முடியுமா என்ன?... அட்லீஸ்ட் ஒரு வாரமாச்சும் இவங்களோட இருந்துட்டு வரலாம்ங்க... அவங்க சொல்றமாதிரி நம்மளால மொத்தமா அங்க இருக்கமுடியாதுன்னாலும், ஒருவாரம் ஒரு மாற்றத்துக்காக இருந்துதான் பார்ப்போமே!..

நாங்கள் மூவருமே ஸ்தம்பித்து நின்றோம்... ஆச்சர்யம் விலகி, அதிர்ச்சிக்குள் அல்லவா ஆட்பட்டுவிட்டோம்!..

“என்னப்பா அப்டியே நிக்குறீங்க?... இன்னும் அஞ்சு நிமிஷத்தில ராகுகாலம் வந்திடும், சீக்கிரம் கிளம்புங்க என்று ஒரு பையை என் கைக்குள் திணித்தார் சாரதாம்மா... இல்லை இல்லை, என் இன்னொரு அம்மா... (முற்றும்)

11 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. Nice story Vijay, I can't explain how I feel. Kudus...

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி பிரபு...

   Delete
 3. எல்லாமே கற்பனை தானா விஜய்

  ReplyDelete
  Replies
  1. இப்போதைக்கு கற்பனை மட்டும்தான் பாபு, நிச்சயம் ஒருநாள் நிஜமாக மாறவேண்டும் என்பதுதான் நம் எல்லோர் விருப்பமும்...

   Delete
 4. இப்படி எல்லாம் நடக்குமா?????

  இப்படி நடந்தா மற்றவர்கள் போல நாமும் சந்தோசமாக இருக்கலாம். அந்த காலம் ரொம்ப தொலைவில் இல்லை என நம்புவோம். நம்பிக்கை தான் வாழ்கை

  ReplyDelete
 5. இப்படி எல்லாம் நடக்குமா?????

  இப்படி நடந்தா மற்றவர்கள் போல நாமும் சந்தோசமாக இருக்கலாம். அந்த காலம் ரொம்ப தொலைவில் இல்லை என நம்புவோம். நம்பிக்கை தான் வாழ்கை

  ReplyDelete
  Replies
  1. நம்பிக்கைதான் வாழ்க்கை ஸ்ரீதர்... நிச்சயம் ஒருகாலத்தில் அவை நடக்கும்னு நம்புவோம்... கருத்துக்கு மிக்க நன்றி சகோ...

   Delete
 6. அருமை அண்ணா உங்கள் கற்பனைக்கு அளவே இல்லை. ஒவ்வொரு படைப்பாளியும் இன்னொரு பிரம்மாவுக்கு சமம் என்டு நிரூபிச்சிட்டீங்க அண்ணா.

  ReplyDelete
 7. When you announced that you are going to pause writing in some days, (I cannot accept and believe that your are going to stop), I asked you to create every story in this period a master piece.. Thanks for honoring that request and creating one such!

  ReplyDelete