Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Showing posts with label அ.முகப்பு. Show all posts
Showing posts with label அ.முகப்பு. Show all posts

Sunday, 7 December 2014

இருநூறாவது பதிவு....! - கடந்துவந்த பாதைகள்...





இருநூறாவது பதிவு... மூன்று வருட பயணத்தில் இரட்டை சதத்தை எட்டியிருக்கும் “உங்கள் விஜய் பேசுகிறேன்...” வலைப்பூவின் பயணத்தில் தொடர்ந்து உடன்வந்து, ஊக்குவித்து, வெற்றிக்கு வித்திட்ட நல்ல உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...
இந்த சமயத்தில் சில மகிழ்வான தருணங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.... 

அதில் முதல் விஷயமாக, என்னுடைய நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த பாலீர்ப்பு தொடர்பான புத்தகம்... “மறைக்கப்பட்ட பக்கங்கள்” என்கிற தலைப்போடு சிருஷ்டி அமைப்பின் சார்பாக வெளிவந்துள்ள அந்த புத்தகத்தின் இணை ஆசிரியராக பணியாற்றி புத்தக உருவாக்கத்தில் எனது பங்களிப்பும் இருந்ததில் நிச்சயம் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.... பாலீர்ப்பு தொடர்பாக இந்திய பிராந்திய மொழிகளில் வெளியாகும் முதல் புத்தகம் இதுதான்... புத்தகத்தின் ஆசிரியர் அன்பிற்குரிய நண்பர் கோபி ஷங்கர் அவர்களுடன் பல மாதங்கள் ஒன்றாக ஆலோசித்து, நிறைய விவாதித்து, பற்பல சிரமங்களுக்கு மத்தியில் வெளியான அந்த புத்தகம் குழந்தையை பிரசிவித்த தாயின் மனநிறைவை தருகிறது... 

http://pothi.com/pothi/preview?pFile=44755#preview-top (அந்த புத்தகத்தை இணையம் வழி வாங்கிக்கொள்ள இந்த இணைப்பை சொடுக்கவும்)... 

இந்த புத்தகத்தை வெளியிட்டவர் தமிழக பாஜகவின் துணைத்தலைவர் மதிப்பிற்குரிய வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள், முதல் பிரதியை எழுத்தாளர் திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் பெற்றுக்கொண்டார் ...

பாலீர்ப்பு தொடர்பாக தமிழில் தொடர்ந்து எழுதிவந்ததால் சிருஷ்டி அமைப்பின் சார்பாக சமீபத்தில் கோவையில் நிகழ்ந்த விழா ஒன்றில், “Tamil Literary Lambda Award” கொடுத்து என்னை ஊக்குவித்த சிருஷ்டி அமைப்பிற்கும், எழுத்தாளர் லீனா மணிமேகலை போன்ற நிகழ்வில் பங்குபெற்றவர்களுக்கும் எனது நன்றிகள்....

                                       
அதே போல எனது இன்னொரு நீண்டநாள் ஆசையாக ஒருபால் ஈர்ப்பு பற்றிய குறும்படம் உருவாக்க வேண்டும் என்ற கனவை, சமீபத்தில் மும்பையை சேர்ந்த குறும்பட இயக்குனர் பொன்.தமிழ்செல்வன் அவர்களின் மூலமாக நிறைவேற்றிக்கொண்டேன்... எனது சிறுகதையான “377”  அந்த நண்பரின் முயற்சியால் குறும்படமாக உருவாகியுள்ளது... பாலீர்ப்பை மையப்படுத்தி ஒரு குறும்படம் எடுப்பதில் இருக்கும் அத்தனை சிக்கல்களையும் தமிழ் அவர்களும் சந்தித்தபோதிலும், காவியா பிலிம்ஸ் தயாரிப்பாளர் மும்பை வினோத் அவர்களின் உதவியோடு அந்த சிக்கல்களை உடைத்து படத்தை உருவாக்கியுள்ளார்... எனது எழுத்து, திரையில் காட்சியாக உருவானதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி... ஒருசில திரைப்பட விழாக்களில் திரையிட இருப்பதால், இன்னும் அந்த குறும்படம் பொதுத்தளத்திற்கு வரவில்லை, வெளியாகும்போது நிச்சயம் அதை உங்களுடன் பகிர்கிறேன்... 
                           
வலைப்பூவில் மட்டுமே இதுகாலமும் எழுதிவந்த என்னை, பொதுத்தள மக்களும் கணிசமாக வந்துபோகும் இணைய இதழ்களில் எழுதவைத்த இதழ்களின் நிர்வாகத்தினர் அத்தனை பேருக்கும் நன்றிகள்...

குறிப்பாக ஆழம், சிறகு, சொல்வனம் போன்ற தளங்கள் ஒருபால் ஈர்ப்பு தொடர்பான எனது கட்டுரைகளை கொஞ்சமும் தயக்கமின்றி வெளியிட்டார்கள்... 


அதுமட்டுமின்றி ஒருபால் ஈர்ப்பு தொடர்பான கருவைக்கொண்ட எனது ஒன்பது கதைகளை கொஞ்சமும் சலனமின்றி வெளியிட்டு, அதில் பல கதைகளுக்கு சிறப்புக்கதை தகுதி கொடுத்த சிறுகதைகள்.காம் தளத்திற்கும், அதன் நிர்வாகி கார்த்திக் அவர்களுக்கும் நன்றிகளை நிச்சயம் சொல்லியே ஆகவேண்டும்... 

http://www.sirukathaigal.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/ அதில் குறிப்பாக எனது கதை “அட நாயே...!” ஏறத்தாழ பதின்மூன்றாயிரம் வாசகர்களால் படிக்கப்பட்டு, பொதுத்தள மக்களை எமது கருத்துகள் சென்றடைய செய்த அந்த தளம் என்றைக்கும் நன்றிக்கு வித்தான ஒரு தளம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை...

நம்மவர்களுக்காக எழுதத்தொடங்கி, இன்றைக்கு ஓரளவு பொதுத்தளத்திலும் நமது கருத்துகளை எடுத்துச்செல்ல கிடைத்த வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக்கொண்டதற்கு இந்த வலைப்பூவினை தொடர்ந்து ஆதரித்துவரும் நீங்கள்தான் காரணம்...

எனது இன்னொரு ஆசையும் கூட இருக்கிறது... அதுமட்டும் நிறைவேறிவிட்டால் எனது மகிழ்ச்சி முற்றாக பூர்த்தியாகும் என்றே நினைக்கிறேன்... அது தமிழில் பாலீர்ப்பு தொடர்பான இதழ் வெளிவருவதுதான்... அது மாத இதழாகவோ, மாதமிருமுறை இதழாகவோ இருக்கலாம்... முதற்கட்டமாக மின்னிதழ் வடிவத்தில் இருந்தாலும் கூட பரவாயில்லை... அப்படியோர் இதழ் உருவாகவேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாகவே மனதை அழுத்துகிறது... இதற்காக நானும் முதலில் நண்பர்கள் சிலருடன் முயன்று, லே அவுட், ப்ரூப் ரீடிங் வரைக்கூட முதல் இதழ் சென்று, கடைசி நேரத்தில் சில காரணங்களால் அந்த முயற்சி கைவிடப்பட்டது... அதன்பின்னர் கூட சென்னை தோஸ்த், சிருஷ்டி போன்ற அமைப்புகளுடன் இதுபற்றி கலந்தாலோசித்து ஏனோ அது இன்னும் நிறைவேறவில்லை... இறுதியாக ஓரினம் அமைப்பிடம் கூட இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கிறேன்... விரைவில் அப்படியோர் உருவாக்கம் இங்கே நிகழவேண்டும் என்கிற ஆசையோடு காத்திருக்கிறேன்... 

இந்த கட்டுரையை படிக்கும் அமைப்பினரோ, அமைப்பு சாரா தன்னார்வு தொண்டாளர்களோ இதைப்பற்றி தங்களுக்கு இருக்கும் ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன்வைக்க அன்போடு வரவேற்கிறேன்...

நேரமின்மை காரணமாக வாரம் ஒருமுறையாக வலைப்பதிவுகள் குறைந்துவிட்டன... அந்த சிரமத்திற்காக வருந்துகிறேன்... நான் சொல்ல நினைத்து வலைப்பூ தொடங்கிய எண்ணங்கள் பெரும்பாலும் எழுத்துவடிவில், இந்த இருநூறு பதிவுகளில் வெளிப்படுத்திவிட்டேன்... இனி சொல்வதற்கான விஷயங்கள் கூட தேடித்தான் பார்க்கவேண்டும்.... ஆகையால் இனி பதிவுகள் கூட அதிக கால இடைவெளியில்தான் வெளிவருமென்று நினைக்கிறேன்.... அந்த தாமதத்தை பொருத்து, வழக்கம்போல உங்களின் ஆதரவை நல்கவேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்... வாசக நண்பர்கள் யாரும் வலைப்பதிவில் தங்கள் பதிவுகள் இடம்பெற வேண்டுமென விரும்பினால், எனது மின்னஞ்சல் முகவரியை தாராளமாக அணுகலாம்... பாலீர்ப்பு சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்த கட்டுரைகளுக்கு, தளம் என்றைக்கும் சிவப்பு கம்பளத்தோடு வரவேற்கும்... 

தொடர்ந்து இருநூறு பதிவுகளிலும் என்னோடு பயணித்து, என்னை ஊக்குவித்து எழுத வைத்த அத்தனை வாசக, நண்பர்கள், தம்பிகளுக்கு, சக எழுத்தாளர்களுக்கு  எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்... தொடர்ந்து உங்களின் ஆதரவு மட்டுமே என் எழுத்திற்கான பூஸ்ட், ஹார்லிக்ஸ், போன்விட்டா எல்லாமும்... அதை அவ்வப்போது சரியான சரிவிகிதத்தில் கலந்து கொடுத்து என்னை எழுதவைப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு, அன்பு முத்தங்களோடு விடைபெறுகிறேன்....
                                                                                                                          உங்கள் விஜய்...

Wednesday, 26 November 2014

பாலீர்ப்பு தொடர்பான அவசர கால தொடர்பு எண்கள் - Emergency Contacts...










நீண்ட நாட்களாகவே பாலீர்ப்பு ரீதியாக தமிழகத்தில் செயல்படுகின்ற  விழிப்புணர்வு மையங்கள், அவசர கால உதவி எண்கள், அமைப்புகளின் முகவரிகள் போன்றவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள எண்ணியிருந்தேன்... அதற்கான காலம் இப்போதுதான் கனிந்துள்ளது... சமீபத்தில் நண்பர் ஒருவர் மூலம் சென்னை அரசு மருத்துவமனையில், ஒருபால்/இருபால் ஈர்ப்பு நபர்களுக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்தேன்... ஆச்சர்யத்துடன் அதுபற்றி தகவல் சேகரித்தபோதுதான் அந்த மையத்தினை பற்றி முழுமையாக அறிந்து மகிழ்ந்தேன்....

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், Integrated Care Centre என்கிற பெயரில் பிரத்யேகமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் நபர்களுக்காக மட்டுமே செயல்படும் அந்த மையத்தில் பலவிதமான மருத்துவ ரீதியிலான ஆக்கங்களை அரசு முன்னெடுத்துள்ளது... எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்பட்டு, அன்றைய தினமே அதற்கான முடிவை தருகிறார்கள்.. மேலும், பாலினம் மற்றும் பாலீர்ப்பு இரண்டிற்குமான வேறுபாட்டின் அடிப்படை கலந்தாய்வு கொடுக்கிறார்கள்... பாலியல் சார்ந்த நோய்களிலிருந்து தங்களை காத்துக்கொள்ள ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது... கடந்த மாதம்தான் (அக்டோபர்) இந்த சேவை மையம் தொடங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது... இங்கு பாலீர்ப்பு சிறுபான்மையினர் சிறிதும் அலட்சியப்படுத்தப்படாமல், அன்போடு அணுகப்படுவது இதுவரை தமிழகம் கண்டிராத புதிய அணுகுமுறை என்றுதான் சொல்லவேண்டும்... இப்போது தொடக்க நிலையில் மட்டுமே இருக்கும் இந்த மையம், நமது ஆதரவினை தொடர்ந்து தனியொரு துறையாக விஸ்தரிக்கப்படும்... வாய்ப்புள்ள நண்பர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்....

இடம் – சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிராக அமைந்துள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை...
துறை - Integrated Care Centre…
பணி நாட்கள் – திங்கள் முதல் சனிக்கிழமை வரை...
பணி நேரம் – காலை 8 மணி முதல், பிற்பகல் 3 மணி வரை...
மேலும் தகவல்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய நபர் – சகோதரி.கிருபா (98413 44137)

                                                 ****************************

இதுதவிர ஒருபால் ஈர்ப்பு தொடர்பான சில தனியார் அமைப்புகளின் சேவை மையங்கள் மற்றும் தகவல்களை கீழே தருகிறேன்... இந்த அமைப்புகள் தருகின்ற இலவச பாலீர்ப்பு தொடர்பான கலந்தாய்வு பற்றிய தகவல்கள் உங்களின் பார்வைக்காக...

·        ஓரினம் அமைப்பு – நீண்ட காலமாக பாலீர்ப்பு சிறுபான்மையினருக்காக செயல்படும் ஓரினம் அமைப்பின் கலந்தாய்வு பெற விரும்பினால் orinamwebber@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளலாம்... அல்லது, +91 98415 57983 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பலாம்... கூடிய விரைவில் அமைப்பினர் உங்களை தொடர்புகொள்வார்கள்...

·        சிருஷ்டி மதுரை – மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிருஷ்டி , நெடுங்காலமாகவே பாலீர்ப்பு தொடர்பான கலந்தாய்வு கொடுத்துவருகிறது... 24 மணி நேர சேவையை கொடுத்துவரும் அமைப்பின் நிறுவனர் திரு.கோபி ஷங்கர் அவர்களை தொடர்புகொள்ள 90922 82369 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்... மின்னஞ்சல் முகவரி - srishti.genderqueer@gmail.com


·        சென்னை தோஸ்த் - சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் சென்னை தோஸ்த்தின் கலந்தாய்வுக்காக 9003043442 என்ற அலைபேசி எண்ணையோ அல்லது மின்னஞ்சல் முகவரி pr@chennaidost.com என்ற முகவரியை தொடர்புகொண்டு கலந்தாய்வுக்கான முன்பதிவை செய்துகொள்ள அறிவுறுத்துகிறார்கள்...

·        நிறங்கள் – பாலீர்ப்பு சிறுபான்மையினர்/ திருநர் என்று இரு தரப்பிற்கும்  நிறங்கள் அமைப்பு அவசர கால கலந்தாய்வு கொடுக்கிறது... தொடர்புக்கு - +91 98406 99776..


·        சகோதரன் – பாலீர்ப்பு மற்றும் பாலியல் நோய்கள் தொடர்பான குழப்பங்களுக்கு  சகோதரன் அமைப்பு விழிப்புணர்வு கொடுக்கிறார்கள்... +91 44 2374 0486 என்ற எண்ணிற்கு பகல் நேரத்தில் மட்டும் நண்பர்கள் தொடர்புகொள்ளலாம்...


இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு தொலைபேசி எண்ணை இப்போது கொடுக்க இருக்கிறேன்... 

தற்கொலை எண்ணம் கொண்ட மாறுபட்ட பாலீர்ப்பை கொண்ட நபர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 24 மணி நேர தற்கொலை தடுப்பு மையமான ஸ்னேஹா தற்கொலை தடுப்பு சேவையை தொடர்புகொள்ள  +91 44 2464 0050 or +91 44 2464 0060...

உங்களுக்கான தேவைகள் இருப்பதை போலவே, நமது அமைப்புகளின் சேவைகளும் நிறையவே இருக்கிறது... மனதை குழப்பும் கேள்விகளுக்கு சற்றும் தாமதிக்காமல் இவற்றை பயன்படுத்திக்கொள்ளுங்கள்... உங்கள் நலனில் உங்களுக்கும் அக்கறை இருக்குமெனில் சற்றும் தாமதிக்க வேண்டாம்...

உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும், இந்த தகவல் தேவைப்படுவோருக்கும் நீங்கள் இந்த தகவல்களை பகிர்ந்துகொள்ளலாம்...

மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் என்னுடைய மின்னஞ்சல் முகவரியான vijayms.salem@gmail.com என்ற முகவரியை தொடர்புகொள்ளலாம்...

Thursday, 22 May 2014

மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் “உங்கள் விஜய் பேசுகிறேன்...”

மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் “உங்கள் விஜய் பேசுகிறேன்...”


 ஐந்தாண்டுகளாக கதைகள் எழுதும் உங்கள் விஜய், வலைப்பதிவராக மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறேன்....
தொடக்க காலங்களை போல, இப்போ எழுதுவதில் அதிகம் சிக்கல் ஏற்படுவதில்லை... நான் சரியான திசையில்தான் செல்வதாக உங்கள் தொடர் ஆதரவின் மூலம் அறிகிறேன்...
நம் ஒருபால் ஈர்ப்பு சமூகத்தினர் மட்டுமல்லாமல், நம்மை பற்றிய தகவல்களை பொதுத்தளத்து மக்களுக்கும் கொண்டுசேர்க்க வேண்டும் என்கிற ஆசை, ஓரளவு நிறைவேறிக்கொண்டு இருப்பதில் மகிழ்ச்சியே.... சிறுகதைகள் தளத்தில் என் சிறுகதைகள், ஆழம் மின்னிதழில் எனது கட்டுரை என்று வரிவடிவம் தாண்டி திரை வடிவில் என் சிறுகதையான “377” குறும்படமாகி வந்திருப்பது வரை பொதுத்தளத்து மக்கள் நம் உணர்வுகளை உணர என்னாலான சிறு பங்களிப்பு செய்திருப்பதில் மனநிறைவு....
84 நாடுகளை சேர்ந்த வருகையாளர்களின் ஒன்றரை லட்சத்தை தாண்டிய பார்வைகள், இருநூறை நெருங்கும் பின்தொடர்பவர்கள், 160 பதிவுகள், அது தொடர்பான 1500 கருத்துகள், சிறந்த LGBT தளமாக கடந்தாண்டு தேர்வு என்று உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு கிடைத்த அத்தனை பெருமையும், உங்கள் அத்தனை பேரையும் மட்டுமே சாரும்....
சமீப கால அரசியல் மற்றும் சட்டத்தின் மாற்றங்கள் நமக்கு எதிரான சூழலை உருவாக்கியுள்ளது... சோர்ந்து போகாமல் தொடர்ந்து இயங்கினால் மட்டுமே நம் இருப்பை இந்த உலகிற்கு உணர்த்த முடியும்... ஆக, தளர்வில்லாத நடையோடு இனி வரும் காலத்தை கடத்தினால் மட்டுமே சில ஆண்டுகளிலாவது நம் உரிமைகளை பெறமுடியும்... அது நமக்கான முழுமையான வெற்றிக்கு வழிவகுக்கும் உரிமையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை...
பொதுவாக நான் சர்வதேச விழிப்புணர்வு சார்ந்த பிரச்சினைகளை அதிகம் பேசுவதில்லை என்றும், சின்ன சின்ன லோக்கல் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்றும் சிலர் விமர்சிக்கிறார்கள்... அவர்கள் காண விரும்பும் சர்வதேச தரத்திலான நம் மாற்றம் என்பதற்கு, முதலில் நம் அடிப்படை கட்டமைப்பு பலமாக இருப்பது அவசியம் என்பதால்தான் நான் நம்மை சுற்றியுள்ள அடிப்படை, அடிமட்ட பிரச்சினைகள் பற்றியே அதிகம் பேசுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்....
தொடர்ந்து உங்களின் ஆதரவின் மூலம் நாம் இன்னும் பல உயரத்திற்கு செல்வோம் என்ற நம்பிக்கையில் தான் மூன்றாம் ஆண்டிலும் புத்தணர்வோடு களமிறங்க காத்திருக்கிறேன்....
கடந்த ஆண்டு வரை ஒரு கை ஓசையாக வெளியான பதிவுகள், சமீப காலங்களில் மிகத்தேர்ந்த பதிவர்களின் பதிவுகள் மூலம் மிகையான வெற்றியை பெற்றுள்ளது...
எனதருமை நண்பர் ஜான் பால், அருமை சகோதரி கண்ணகி இளமலர் மற்றும் அன்புத்தோழர் வெண்பா ஆகியோரது வருகை நிச்சயம் எனது கனவை இன்னும் வேகமாக நிறைவேற்றும் என்று நம்புகிறேன்... பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் உங்களுக்காக சமூக அக்கறையோடு பதிவுகளை பகிர்ந்திடும் அந்த தோழர்களுக்கு உங்கள் சிறப்பான ஆதரவை நல்கி, நல்ல உள்ளங்களுக்கு ஊக்கம் தாருங்கள்... இந்த வாய்ப்பை அந்த நண்பர் பெருமக்களுக்கு நன்றி கூறும் வாய்ப்பாக நான் பயன்படுத்திக்கொள்கிறேன்....
எனது பெரும்பாலான கதைகள் மற்றும் கட்டுரைகளுக்கு ஆலோசானைகள், தணிக்கைகள் மற்றும் மேலும் பல உதவிகளை செய்து, நான் எப்போ பதிவை அனுப்பினாலும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் என்னை தொடர்புகொண்டு திருத்தங்களை கூறிடும் ஆருயிர் நண்பர் அவிட் (ராஜு) மற்றும்  அண்ணன் ரோத்திஸ் அவர்களுக்கு எனது சிறப்பான நன்றிகளை உரித்தாக்க விரும்புகிறேன்....
அமைப்புகள் சார்ந்த எத்தனையோ விமர்சனங்களை நான் முன்வைத்திருந்தாலும், இன்றைக்கும் நல்ல நட்போடும், எவ்விதமான பிணக்கும் இன்றி நல்லாலோசனைகளை அளித்து வரும் ஓரினம் அமைப்பினருக்கும் (குறிப்பாக ராம்கி, சுந்தர் மற்றும் பிரவீன்), சிருஷ்டி அமைப்பின் கோபி மற்றும் சென்னை தோஸ்த் விக்ராந்த் பிரசன்னா அவர்களுக்கும் எனது முத்தான நன்றிகள்....
எங்கோ எனது நினைவுகள் கூட நெருங்க முடியாத தூரத்தில் வாழ்ந்தாலும், இன்றைக்கும் என்னை எழுத வைத்திடும் என் விஜய்க்கு நன்றிகள்...
தளராத மனதையும், சிதறாத சிந்தையையும் கொடுத்து என்னை எழுத வைக்கும் அந்த இறைவனுக்கு நன்றிகள்....
“அண்ணா...” என்று பாசத்தோடு விளித்து, என் கவனத்திற்கு பல உலகளாவிய செய்திகளை கொண்டு வந்து சேர்க்கும் எனதருமை தம்பிமார்கள் அனைவருக்கும் எனது முத்தாய்ப்பான நன்றிகள்...
தொடர்ந்து பல வேலை பளுவிற்கு இடையிலும், என்னை எழுத தூண்டிடும் எனதருமை வாசக நண்பர்கள் அத்தனை பேருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.... நிஜத்தில் என்னை தொடர்ந்து ஊக்குவிக்கும் வாசகர்களின் பெயர்களை குறிப்பிட எனக்கும் ஆசைதான்.... ஆரம்ப காலம் முதல் என்னை ஊக்குவித்த நண்பர்களின் பெயர்களை இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு கூர்ந்து எழுதி வருகிறேன்.... முடித்ததும் நிச்சயம் உங்கள் முன் அந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தனிப்பதிவில் உரித்தாக்குகிறேன்....
உங்கள் விஜயோடு தொடர்புடைய அத்தனை அன்பான உள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றி...! நன்றி...! நன்றி...!

Friday, 16 August 2013

சிறந்த LGBT வலைப்பூ விருது..... "India Blogger Award 2013".

Indian Blogger என்ற இந்திய வலைப்பூக்களுக்கான குழுமத்தின் சார்பாக 2013ஆம் ஆண்டிற்கான  LGBT பிரிவின் சிறந்த வலைப்பூவாக “உங்கள் விஜய் பேசுகிறேன்...” வலைப்பூ தேர்வாகி விருது பெற்றிருக்கும் விஷயத்தை என் அன்பு நண்பர்களுக்கும், வலைப்பூவின் வெற்றிக்கு வித்திட்ட அத்தனை நண்பர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.... பல்வேறு ஜாம்பவான் வலைப்பூக்கள் மற்றும் வலைத்தளங்களுக்கு மத்தியில் என் வலைப்பூவிற்கு பெருமைப்படுத்தும் விதமாக “சிறந்த வலைப்பூ விருது” கொடுத்திருக்கும் India Blogger தளத்திற்கும், தேர்ந்தெடுத்த நடுவர் குழுவுக்கும் எனது மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்....
(விருது பெற்ற வலைப்பூக்களின் விபரங்களை பார்க்க... http://www.indiblogger.in/iba/spotlight.php)
நிச்சயம் இந்த விருது என்னுள் இருந்த பல தாழ்வுமனப்பான்மைகளை விரட்டி இருக்கிறது என்பது உண்மை.... அப்படி என்ன தாழ்வு மனப்பான்மை?.... வலைப்பூ தொடங்கிய காலத்தில், நான் தேர்ந்தெடுத்த “ஒருபால் ஈர்ப்பு” பாதை சரிதானா? என்கிற குழப்பம் எனக்குள் நிறைய இருந்தது.... அடுத்ததாக, நான் சொல்லும் விஷயத்தை தமிழில் சொல்வதால் அதனை ஏற்பார்களா? அங்கீகரிப்பார்களா? என்கிற சந்தேகமும் எனக்கு இருந்தது.... ஆனாலும், ஏதோ ஒரு நம்பிக்கையில் எழுத தொடங்கினேன், இன்றைக்கு நான் செல்லும் பாதை சரிதானென கலங்கரை விளக்கமாக விருது வழிகாட்டி இருக்கிறது....
இதில் தாழ்வுமனப்பான்மை எங்கிருந்து வந்தது? என்று நீங்கள் நினைக்கலாம்.... யாரிடமோ அப்படி ஒரு எண்ணம் எனக்கு வந்ததில்லை, என் நண்பர்களிடமிருந்துதான் வந்தது.... ஒருபக்கம் தமிழார்வலர்கள், நான் சொல்லும் ஒருபால் ஈர்ப்பு பற்றிய கருத்தால் என்னை நிராகரித்தார்கள்... இன்னொரு பக்கம், ஒருபால் ஈர்ப்பு அமைப்பு மற்றும் ஆதரவாளர்கள், நான் எழுதும் மொழியால் என்னை புறக்கணித்தார்கள்.... நான் சொல்ல வேண்டிய விஷயம், சென்று சேரவேண்டிய இரண்டு பிரிவினரும் என் வலைப்பூவை கொஞ்சம் தள்ளி நின்றே வேடிக்கை பார்த்தனர்...
சில நேரங்களில் நண்பர்களால் பகிரப்படும் சில வலைதள பக்கங்களை நான் பார்த்திருக்கிறேன்... அதில் சில விஷயங்கள் என்றைக்கோ நான் எழுதிய விஷயத்தை ஒத்திருக்கும்... ஆனால், ஆங்கிலத்தில் போடப்பட்ட பதிவை பகிர்வதில்தான் அவர்களுக்கு பிடித்திருக்கிறது.... தமிழில் சொல்வதால் அவர்கள் நான் சொல்லும் விஷயங்களை படித்ததாக காட்டிக்கொள்ள கூட விரும்புவதில்லை, கருத்திடுவதை கூட கேவலமாக பார்த்தார்கள்....
இதே India Blogger விருதுக்கான பரிந்துரைகள் அண்மையில் வாசகர்களிடமிருந்து பெறப்பட்டது.... இங்கிருக்கும் தமிழ் அமைப்புகள் மற்றும் நண்பர்களே கூட வேறுசில தளத்தினை ஆதரிக்கக்கோரி விளம்பரம் செய்தனர்.... விளம்பரம் செய்வது அவர்கள் உரிமை, நான் அதில் தலையை நுழைக்கக்கூடாது.... என் வலைப்பூ அவர்கள் விளம்பரம் செய்த தளத்தைவிட சிறந்த வலைப்பூ என்று நான் சொல்ல மாட்டேன்... அப்படி சொன்னால் அது என் கர்வம்... என்னைவிட நிறைய மற்ற தளங்களில் எழுதி இருக்காங்க, நிறைய மக்களை அந்த தளங்கள் சென்றடைந்திருக்கிறது... என்னோடு பரிந்துரைக்கப்பட்ட சில வலைப்பூவின் தீவிர வாசகன் நான்... இன்னும் சொல்லப்போனால், என் தளத்தைவிட சிறந்த தளமாகவே அவை இருக்கட்டுமே, பரிந்துரைகளில் கடைசியாக இருந்த இந்த விஜய் வலைப்பூவை பார்த்த நண்பர்கள் ஒரு சின்ன வாழ்த்து கூட ஏன் சொல்லவில்லை? என்று எனக்கு புரியவில்லை..... நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை...அப்படிப்பட்ட நிகழ்வுகள் மூலம் நான் நிச்சயம் தளர்ந்துவிடவில்லை, ஆனால் கொஞ்சம் சோர்வானேன்....
ஏதோ ஒரு நம்பிக்கையில் அமைதி காத்தேன், விருதும் கொடுத்திருக்கிறார்கள்.... LGBT பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட ஒரே பிராந்திய மொழி வலைப்பூ என்னுடையது மட்டும்தான்... ஏதோ ஒரு நம்பிக்கையில், ஒரு உத்தேசத்தில் இந்த வெற்றி சாத்தியமாகி இருக்கிறது.... இப்போ நான் என் தாழ்வுமனப்பான்மையை விரட்டிவிட்டேன்.... ஒன்று தெளிவாக புரிந்தும்கொண்டேன், தமிழால் இலக்கியம் மட்டும்தான் பேசமுடியும் என்று நான் நினைக்க மாட்டேன், தமிழால் முடியாதது வேறு எந்த மொழியாலும் முடியாது என்கிற நம்பிக்கை எனக்குள் உருவாகி இருக்கிறது.....
டெக்னிக்கல் விஷயங்கள் எனக்கு தெரியாது, வலைப்பூவின் முகப்பை நான் வண்ணங்களால் நிரப்பவில்லை, வாசனை திரவியங்களால் கககமக்கப்பட வைக்கவில்லை, கவர்ச்சி படங்களால் கிளுகிளுப்பை ஏற்படுத்தவில்லை... சொல்ல வரும் விஷயத்தை மட்டும்தான் சொல்கிறேன், அந்த விஷயங்களை மட்டுமே ஏற்று இத்தனை காலம் என்னுடன் பயணித்த அத்தனை வாசக நண்பர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.... இன்னும் பல தூரம் நாம் கடக்க வேண்டி உள்ளோம், பயணக்களைப்பை கண்டு நான் தயங்கவில்லை... உற்சாக பாணமாய் உங்கள் வழிநடத்தல்கள், ஆதரவு, கருத்துகள் என்று நிறைந்து இருக்கும் நான் ஏன் களைப்பை பற்றி யோசிக்க வேண்டும்....
நம் உரிமைக்குரல், ஒரு கிராமத்து கடைநிலை மனிதன் வரை சென்றடையும்வரை நான் சென்றுகொண்டே இருப்பேன், என்னோடு பயணிக்க நீங்களும் இருக்கிறீர்கள் என்ற ஒரே நம்பிக்கையோடு!...