Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Showing posts with label ஐ.லெஸ்பியன். Show all posts
Showing posts with label ஐ.லெஸ்பியன். Show all posts

Wednesday, 12 November 2014

"அந்த மூன்று நாட்கள்....!" - சிறுகதை...






கொல்லைப்புற வாசலில் கதவின் விளிம்பில் தலை சாய்த்தபடி மரங்களை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள் ராஜேஸ்வரி... வழக்கமான அதே வேப்ப மரம்தான், அதில் வழக்கம்போலவே சில குருவிகள் விளையாடிக்கொண்டிருந்தன... இப்படி வெறித்துப்பார்க்கும் அளவிற்கு ஏதும் அதிசயமல்லாம் மரத்தில் நிகழவில்லை...
“ஏய் ராஜி, எவ்வளவு நேரம் கூப்பிடுறேன்..  காதுல வாங்காத மாதிரியே உக்காந்திருக்க?” இதுவும் வழக்கமான அம்மாவின் அரட்டல்தான்....
“இப்ப உனக்கு என்னம்மா வேணும்?... ஏன் இப்டி கத்துற?”
“ஏண்டி மூஞ்சியல்லாம் ஒரு மாதிரி இருக்கு?... கண்ணு முழியல்லாம் அசந்திருக்கு?” கணப்பொழுதில் அம்மா முகத்தின் அத்தனை மாற்றங்களையும் கவனித்துவிட்டாள்...
“அதல்லாம் ஒண்ணுமில்ல... நீ சும்மா போ...”
“எதுக்குடி என்மேல எரிஞ்சு விழற?... தலைக்கு குளிச்சியா?”
“ஆமா... உடம்பல்லாம் வலிக்குதும்மா... நிக்கவே முடியாத அளவுக்கு இடுப்பு கடுக்குது... அசதியா இருக்கு...” பேசக்கூட திராணி அற்றவளாக மீண்டும் கதவின் விளிம்பில் தலையை சாய்த்தாள் ராஜி...
அவள் தலையை தன் தோளோடு அணைத்துக்கொண்ட அம்மா, “என்னமோ நேத்திக்கு வயசுக்கு வந்தா மாதிரி சொல்றியேடி... இதான் பத்து வருஷமா மாசா மாசம் வருதே... இன்னும் சின்ன பிள்ளையாட்டம் அழுத்துக்கற?... போய் தலைக்கு குளிச்சுட்டு வா, வெந்தயக்கஞ்சி காய்ச்சி தரேன்...” பரிவாக பேசினாள்....
“ஹ்ம்ம்... மாசத்துல இந்த மூணு நாள் மட்டும் இல்லைன்னா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்!... எரிச்சலா இருக்கும்மா...” சொல்லும்போதே அவள் கண்கள் கலங்கிவிட்டது... மகளை ஆசுவாசப்படுத்தி குளியலறைக்குள் விட்டுவிட்டு, தன் வழக்கமான சமையலறை வேலைகளுக்குள் தன்னை ஆட்படுத்திக்கொண்டாள் அம்மா...
குளித்துக்கொண்டிருக்கும்போதே ராஜிக்கு சமையலறை வாசனை ஒருவித குழப்பத்தை உண்டாக்கியது...
ரவையை வறுக்கும் வாசம்தான் முதல் சந்தேகத்தின் வித்து.... கேசரி செய்ய ரவையை வறுக்கிறார், உளுந்து ஊறவைத்து அரைத்தது கூட வடைக்காகத்தான் இருக்கும், காலையில் அப்பா வாங்கி வந்த பஜ்ஜி மாவு பாக்கெட் கூட இதனுடன் தொடர்புபடுத்த வேண்டிய விஷயம்தான்....
அவசர அவசரமாக குளித்து முடித்துவிட்டு சமையலறைக்குள் வந்தாள் ராஜி...
அம்மா பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தாள்...
“என்னம்மா பண்ணிட்டு இருக்க?”
“குளிச்சுட்டியா?... பேடு இருக்குதான?... இல்லைன்னா சொல்லு, மெடிக்கல்ல வாங்கிட்டு வரேன்... இந்த மாசம் உனக்கு பதினெட்டு நாள்லயே வந்திடுச்சாடி?” காய்கறிகளை நறுக்கியபடியே அம்மா கேள்விகளை தொகுத்துக்கொண்டிருந்தாள்...
“அதல்லாம் இருக்கட்டும்... என்ன இன்னிக்கு விசேஷம்?... பலகாரமல்லாம் செய்றதுக்கு ரெடி பண்ற?” நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டாள் ராஜி...
“ஓ அதுவா?.... அத சொல்லத்தான் காலைல உன்ன தேடினேன்... பெரம்பலூர் மாப்பிள்ளை பத்தி அப்பா சொன்னார்ல, அவங்க வீட்லேந்து உன்ன பொண்ணு பாக்க வராங்களாம்... சாயந்திரம்தான் வராங்க, அதுவரைக்கும் நீ தூங்கி ரெஸ்ட் எடுத்துக்க...”
“என்னம்மா இதல்லாம்?... நான் இப்ப என்ன கண்டிஷன்ல இருக்கேன், இப்போ போயி...” வார்த்தைகளில் வெளிப்படுத்தமுடியாத எரிச்சலை முகச்சுளிப்பு பளிச்சென விளக்கியது...
“இப்பவல்லாம் என்னென்னமோ நாப்கின் விளம்பரமல்லாம் போடுராணுக, அதை வச்சுட்டு ஓட்டப்பந்தயமே பொண்ணுங்க ஓடலாமாம்... நீ ஓடவல்லாம் வேணாம், நடந்து வந்து உக்காந்தா போதும்!” சிரித்தபடி சொன்னாள் அம்மா... சீரியஸாக பதில் சொன்னால் நிச்சயம் ராஜி சண்டைக்கு வருவாள் என்பது அவளுக்கு தெரியும்....
“இருக்குற கடுப்புல மாப்பிள்ளை மூஞ்சில அறைஞ்சா நீயும் அப்பாவும் எதுவும் சொல்லக்கூடாது பார்த்துக்க...”
“சரிடி, ரொம்பதான் பண்ணுவ... மூஞ்சி இன்னும் அசதியா இருக்க மாதிரி தெரியுது... பப்பாளி பழத்த பாலோட கலந்து மூஞ்சில போட்டா அப்டியே புத்துணர்ச்சியா இருக்குமாம்... சன் மியூசிக்’ல டிப்ஸ் சொன்னாங்க, செஞ்சு பாருடி...” வெந்தயக்கஞ்சியை காய்ச்சி ராஜி கையில் கொடுத்தபடி சொன்னாள் அம்மா...
அதை பிடிங்கிக்கொண்ட ராஜி, “வர்ற மாப்பிள்ளைக்கு இந்த மொகரக்கட்டை போதும், தேவைப்பட்டா நீ செந்தட்டிய அரைச்சு மூஞ்சில தேய்ச்சுக்க!” சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள்....
எதிர்பார்த்த பூகம்பம், சிறு நில அதிர்வோடு நின்றதை நினைத்து பெருமூச்சுவிட்டுக்கொண்டாள் அம்மா.... இன்னும் நிறைய வேலைகள் இருக்கு, மாலைக்குள் முடித்தாக வேண்டும்... சோபாவில் இருக்கும் தூசியை தட்டச்சொன்னால் கூட , “பலகாரம் திங்க வர்ற கூட்டத்துக்கு இந்த சோபா போதும்!” என்று ராஜி அதற்கும் குதர்க்கம் பேசுவாள்... அம்மாதான் அனைத்தையும் செய்தாக வேண்டும்.... வழிந்த வியர்வையை முந்தானையில் துடைத்தபடி, வேலைகளில் தீவிரமானாள்...
அறைக்குள் சென்ற ராஜி, குழப்பமும் கோபமும் கலந்த கலவையாக காணப்பட்டாள்....
27 வயதாகிவிட்ட மகளுக்கு திருமணம் செய்தாக வேண்டிய பெற்றோரின் நிர்பந்தத்தை அவள் அறியாமல் இல்லை.. நான்கு வருடங்களாகவே இவளுக்கு பார்க்கப்பட்டு, ஏதோ சில காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட வரன்களின் எண்ணிக்கை மட்டும் அரை சதத்தை எட்டியிருக்கும்...
இவ்வளவு பேர் நிராகரித்தனர் என்றவுடன் ராஜியின் அழகிலோ, உடல் அங்கங்களிலோ ஏதேனும் குறைபாடாக நினைத்துவிட வேண்டாம்... ராஜி ஒன்றும் தினமும் பத்து பேர் பின்தொடர்ந்து காதல் கடிதம் கொடுக்கும் அளவிற்கு பேரழகி இல்லை... ஆனாலும், உங்கள் தெருக்களில் நித்தமும் நீங்கள் கடக்கும் இயல்பான  தமிழ்பெண்களின் சாயல்தான் அவள்... பிறகு ஏன் இத்தனை நிராகரிப்புகள்?... அது ராஜியே விரும்பி ஏற்றுக்கொண்ட நிராகரிப்புகள்....
ஆம், ராஜிக்கு திருமணத்தில் விருப்பமில்லை... இதற்கான காரணத்தை கதையின் தொடர்ச்சியில் அவள் வார்த்தைகளிலே கேட்போம், இப்போ தன்னை பிறர் நிராகரிக்க அவள் மேற்கொண்ட பிரயத்தனங்களை பார்ப்போம்...
வழக்கமான திருமண வயதை எட்டிய பெண்களை போல அடங்கி ஒடுங்கி வீட்டில் இருக்கமாட்டாள்... மற்ற பெண்களுடன் பல்லாங்குழி, தாயம் விளையாண்டதை எவரும் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை... தெரு முக்கில் பள்ளி மாணவர்களுடன் அவள் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்கும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் முகம் சுளித்தபடியே  அவளை கடப்பதுண்டு... நிமிர்ந்த தலை குனிந்ததில்லை, வீட்டு வாசலில் அமர்ந்துகொண்டு போவோர் வருவோரிடம் அரசியல் பேசுவது அவளின் பொழுதுபோக்கு, மறந்தும் சமையலறை பக்கம் எட்டியே பார்த்ததில்லை என்று எந்தெந்த விஷயங்களெல்லாம் இந்த சமூகத்தில் ஒரு பெண்ணை குறைத்து மதிப்பிட வைக்குமோ, அத்தனை விஷயங்களையும் விரும்பி செய்தாள்...
இதன்மூலம் அக்கம் பக்கத்துக்கு வரன்கள் மற்றும் உறவினர்களின் வாயிலாக வரும் வரன்களை எளிதாக அவளால் தடுக்க முடிந்தது...
“யாரு ராஜியா?... அது குடும்பத்துக்கு செட் ஆகுற பொண்ணு இல்லைங்க.... வேற நல்ல பொண்ணா பாருங்க!” என்ற சான்றிதழை இந்த ‘குறை மட்டுமே சொல்லும் சமூகத்திடம்’ எளிதாக பெற்றுவிட்டாள்.... ஆகையால் பெண்ணை பற்றி விசாரிக்க வரும் மாப்பிள்ளை வீட்டார் பலரும் மறுமுறை அந்த ஊர்ப்பக்கம் தலைவைத்தே படுத்ததில்லை....
அதையும் மீறி ஒன்றிரண்டு வரன்கள் இவளை ஏற்க முன்வந்ததும் கூட நடந்தது... வேறுவழியின்றி ராஜியே தன்னை பற்றி தப்பும் தவறுமாக செய்திகளை தொகுத்து ஒரு கடிதமாக எழுதி மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பிவிட்டாள்...
ஆரம்ப காலத்தில் இத்தகைய புறக்கணிப்புகள் அவள் குடும்பத்தை தடுமாற வைத்தாலும், எப்படியாவது திருமணத்தை முடித்தே விடவேண்டும் என்கிற அவள் அப்பாவின் குறிக்கோளை கொஞ்சமும் குறைத்துவிடவில்லை....
படுக்கையில் ஒருக்களித்து சாய்ந்தபடி அன்றைய மாலை பற்றிய குழப்பத்தில் எண்ணங்களை சிதறவிட்டுக்கொண்டு இருந்தாள் ராஜி....
தன் எண்ணங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள கூட முடியாதபடி, மனதை சிறைபடுத்தி வைத்திருப்பது அவளுக்கே எரிச்சலாக பட்டது... ஒருமுறை இதுபற்றி தன் தோழி அன்பரசியிடம் சொல்ல எத்தனித்து, அதில் தோல்வி அடைந்தாள்... காரணம், அன்பரசி எப்போதுமே மிகச்சரியாக நாம் சொல்ல வரும் விஷயத்தின் தவறான பொருளை உணர்பவள்...
“அன்பு, எனக்கு கல்யாணத்துல விருப்பமே இல்லடி....”
“எனக்கும்தான்... கல்யாணம் பண்ணிட்டு போறப்போ மாமியார்க்காரி ரொம்ப தொல்லை கொடுப்பாளுகளாம்... தெய்வ மகள் நாடகத்துல கூட அப்டிதான்....”
“அது இல்லடி.... எனக்கு இந்த ஆம்பிளைங்கல கல்யாணம் பண்றதே பிடிக்கல.... ஆண் பையனோட என்னால சந்தோஷமா இருக்க முடியாதுடி”
“ஆமாடி... இந்த பசங்களே இப்டிதான்... கஷ்டப்பட்டு நாம எதை சமைச்சாலும் அதுல ஒரு குறை கண்டுபிடிப்பானுகளாம்.... கல்யாணத்துக்கு பிறகு அதை பண்ணாத, இதை பண்ணாதன்னு அம்புட்டு கட்டுப்பாடு போடுவாங்களாம்...”
“அடப்போடி.... உன்கிட்ட சொல்ல வந்தேன் பாரு....”
“ஏண்டி? என்னாச்சு?... என்ன பிரச்சினை இப்ப?”
“ஹ்ம்ம்... சுரைக்காய்க்கு உப்பில்லையாம்?”
“ஹ ஹா... இதான் பிரச்சினையா?... கொஞ்சம் உப்பை தண்ணில கரைச்சு ஊத்திட்டா சரி ஆகிடும்டி....”
இதற்குமேல் அன்பரசியிடம் இன்னொருமுறை தன்னைப்பற்றி சொல்ல நினைத்ததே இல்லை.... காலம் வரும்போது, சொல்ல வேண்டிய நிர்பந்தம் வந்தால் சொல்லலாம் என்கிற மனநிலையோடு நாட்களை நகர்த்தினாள்..... மீண்டும் இன்றைய மாலை “பெண் பார்க்கும் படலம்” பற்றிய சிந்தனையோடு அயர்ந்து தூங்கியும்விட்டாள்....

“ஏய் ராஜி.... ராஜி.... எந்திருடி” அம்மா அவள் தோளை உலுக்கியபடி எழுப்பினாள்....
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ராஜி, மெல்ல தன் உறக்கத்திலிருந்து விடுபட்டவளாக எழுந்து அமர்ந்து, அம்மாவை எரிச்சலுடன் ஏறிட்டுப்பார்த்தாள்....
“என்னடி ரொம்ப நேரம் தூங்கிட்ட?... மணி ரெண்டு ஆகிடுச்சு... எழுந்து வா, சாப்பிடு... அஞ்சு மணிக்கு அவுக வந்திருவாக....” பரபரத்தாள் அம்மா...
அம்மாவுடன் மீண்டும் வாக்குவாதம் செய்ய அவளுக்கு உடல் வலுவும் இல்லை.. இன்னும் அசதி முழுமையாக அவளை ஆட்கொண்டிருந்தது... கட்டிலின் விளிம்பை பிடித்தபடி தடுமாறி எழுந்து நின்றாள்... இன்றைய பொழுது முழுவதும் உறங்கினால் மட்டுமே அவளால் அசதியிலிருந்து விடுபட முடியும் போல தோன்றியது... முதுகை அழுத்தி வலியை குறைக்க முயன்றபடியே ஹாலை நோக்கி நகர்ந்தாள் ராஜி....
வீடே துவைத்து காயப்போட்டது போன்ற சுத்தம் பளிச்சிட்டது.... நாளிதழ்களை அடுக்கிவைத்துக்கொண்டிருந்த அப்பா ராஜியை பார்த்து, “ராஜிம்மா.... இப்போ உடம்புக்கு பரவால்லையா?” என்றார்... அம்மா சொல்லியிருக்கக்கூடும்.... ஆண்களால் நிச்சயம் இந்த மூன்று நாள் வலியை உணரமுடியாது.... அப்பாவாக இருப்பதால் மட்டுமே ஓரளவாவது ராஜியின் வலியை இவரால் ஊகித்து உணரமுடிகிறது....
“பரவால்லப்பா...” மேற்கொண்டு எதையும் சொல்லிக்கொள்ளவில்லை...
தட்டில் சோறு போட்டு எடுத்துவந்தாள் அம்மா...
“உக்காந்து சாப்பிடுடி.... சாப்பிட்டு மூஞ்சிக்கு எதாச்சும் பழம் வையுடி... முட்டை வெள்ளைக்கரு கூட போடலாமாம்...”
“சன் மியூசிக்’ல சொன்னாங்களா?” அலட்சியமாக கேட்டாள் ராஜி...
“இல்லடி... பக்கத்து வீட்டு பானு அக்கா சொன்னுச்சு....”
“ஓஹோ... சன் நியூஸா?... ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல...” சிரித்தபடி சாப்பிட்டாள் ராஜி....
“உன்ன திருத்தவே முடியாது!” வழக்கம்போலவே தலையில் அடித்துக்கொண்டு சமையலறைக்குள் தன்னை உட்புகுத்தினாள் அம்மா....
மாலை ஐந்து மணி....
அம்மாவும் அப்பாவும் அவர்களுக்கே உரிய பரபரப்பில் சுழன்றனர்...
“ஏண்டி இந்த சேலைய கட்டுன?... கோபி மாமா கல்யாணத்துக்கு எடுத்த பிங்க் கலர் புடவையை கட்டிருக்கலாம்ல?... பச்சை புடவைக்கு மேட்சாவே இல்ல உன் சிகப்பு கல் தோடு, அதையாச்சும் மாத்திக்கடி...” கிட்டத்தட்ட கெஞ்சியே கேட்டாள் அம்மா... ஆனால், அனைத்து கேள்விகளுக்கும் ராஜியின் பதில் வார்த்தைகளில் வெளிப்படாமல், எளிய கோபமான முறைப்பில் மூலம் வெளிப்பட்டது... வாயிலிருந்து சத்தம் வராதபடி முணுமுணுத்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார் அம்மா...
ஐந்தரை மணிக்கு வாசலில் வந்து நின்ற சுமோ காரிலிருந்து, நான்கைந்து நபர்கள் இறங்கினார்கள்... முன் சீட்டில் மாப்பிள்ளை மிடுக்கோடு தலைமுடியை சரிசெய்துகொண்டிருந்தவர்தான் மாப்பிள்ளை என்று கண்டுபிடிக்க விசாரணை கமிஷனல்லாம் தேவையில்லை...
இரண்டு பெண்களும் தங்கள் மாங்காய் மாலையின் சுருக்கத்தை களைத்தபடி வாசலை அடைந்தனர்... அவர்களுள் ஒருத்தி மாப்பிள்ளையின் அக்காவாக இருக்க வேண்டும், மற்றொரு பெண் சந்தேகமே இல்லாமல் ராஜியின் எதிர்கால மாமியார் என்பதை அவர் வயதை கொண்டே யூகிக்க முடியும்...
இக்காட்சிகளை முகப்பில் நின்று வேடிக்கையாக கவனித்துக்கொண்டிருந்த ராஜியை பதட்டத்துடன் உலுக்கிய அம்மா, “ஏய், என்னடி இங்க நிக்குற?... ரூம்குள்ள போ” கிட்டத்தட்ட வலுக்கட்டாயமாக அறைக்குள் பிடித்துதள்ளி, கதவை சாத்திவிட்டு வெளியே வந்தார்...
மாப்பிள்ளையும் அவர் அப்பாவும் சோபாவில் அமர, விரித்துவைக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் அமர்ந்தனர் இரண்டு பெண்களும்...
மாப்பிள்ளையின் வரலாறு, அவர்கள் குடும்பத்தின் புவியியல் எல்லாம் கடந்து ஒருகட்டத்தில் அமர்ந்திருந்த மாப்பிள்ளையின் அம்மா, “நல்லநேரம் முடியறதுக்குள்ள பொண்ணை பாத்திடறோமே?... பொண்ணை போட்டோல எல்லாரும் பாத்தாச்சுன்னாலும், சம்பிரதாயம்னு ஒன்னு இருக்குல்ல...” நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டார்...
இதற்காகவே காத்திருந்தார் போல சட்டென எழுந்தார் அம்மா. “ஆமாமா.... இதோ கூட்டிட்டு வந்திடுறேன்...” அறைக்குள் சென்று சிலபல அட்வைஸ்களுக்கு பிறகு ஹாலிற்கு அழைத்துவரப்பட்டாள் ராஜி...
“காபி பலகாரமல்லாம் நான் கொடுக்க மாட்டேன், யார் காலிலும் விழுந்து கும்பிட மாட்டேன், கோபப்படுத்துற மாதிரி கேள்வி எதுவும் கேட்டால் சட்டுன்னு மூஞ்சில அடிச்சா மாதிரி பதில் சொல்லிடுவேன்” என்கிற நிபந்தனைகளுக்கு பிறகே வெளிவந்த ராஜி, எல்லோரையும் பார்த்து நின்றவாறே கைகூப்பி வணங்கினாள்....
“உக்காரும்மா...” மாப்பிள்ளை வீட்டு பெண்களின் அருகாமையில் அமர்ந்தாள் ராஜி... மாப்பிள்ளையின் அக்கா தாங்கள் கொண்டுவந்திருந்த பைக்குள்ளிருந்து எடுத்த மல்லிகை பூவினை ராஜியின் தலையில் சூட்டினாள்.... பூவை சூட்டும்போது முடியை அசைத்துப்பார்த்த அப்பெண்ணின் செயல் ராஜியின் முடி ஒரிஜினல்தானா? என்று சோதித்துப்பார்ப்பது போல தெரிந்தது...
அத்தோடு அப்பெண்ணின் சூசக ஆராய்ச்சி முடிந்தபாடில்லை... ராஜியின் சேலை முந்தானையை வருடிப்பார்த்து பட்டின் தரத்தையும், வளையலை தேய்த்துப்பார்த்து தங்கத்தின் சுத்தத்தையும் சோதித்துப்பார்த்தாள்... ராஜிக்கு ஏனோ இத்தகைய செயல்கள் கோபத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக சிரிப்பை வரவழைத்தது...
“பொண்ணுக்கு சமைக்க தெரியுமா?” என்ற மாமியாரின் கேள்விதான் முதன்முதலாக ராஜியை எரிச்சல்படுத்தியிருக்கக்கூடும்....
“அதல்லாம் பிரமாதமா சமைப்பா....” அம்மா இப்படி தொடங்கும்போதே இடைமறித்த ராஜி, “ரொம்ப சுமாராத்தான் சமைப்பேன், நான் வைக்கிற சாம்பார் கூட ரசம் மாதிரி இருக்கும்னு அம்மா திட்டுவாங்க!” என்று போட்டு உடைத்துவிட்டாள்....
சில நிமிடங்கள் அங்கு நிசப்தம் நிலவியது... மேற்கொண்டு யார் எதை பேசவேண்டும்? என்று புரியாமல் திகைத்திருந்த கணப்பொழுதில், அதுவரை அமைதியாக இருந்த மாப்பிள்ளை, “ஹ ஹா... அவங்க ஓப்பனா பேசுறது எனக்கு பிடிச்சிருக்கு... எனக்கு ஓகேதான், மற்ற பார்மாலிட்டிஸ் எல்லாம் பேசிட்டு வாங்க!” என்று சொல்லிவிட்டு காரை நோக்கி விரைந்துவிட்டார்...
அப்பா அம்மாவிற்கு அப்போதுதான் உயிர் மீண்டு வந்ததை போன்ற உணர்வு... வந்த பாவத்திற்கு அப்போதுதான் மாப்பிள்ளையின் தகப்பனார் வாயை திறந்தார், “உங்களுக்கு ஒரே பொண்ணு... இதைத்தான் நீங்க செய்யனும்னு எதையும் நாங்க கட்டாயப்படுத்தல... எப்போ செஞ்சாலும் உங்க பொண்ணுக்குதான் செய்ய போறீங்க... அதனால, மேற்கொண்டு இதுல பேச ஒண்ணுமில்ல... கல்யாணத்த வர்ற தை மாசத்துல வச்சிடனும், இது மட்டும்தான் எங்க பக்கத்துலேந்து நாங்க வைக்குற ஒரே டிமான்ட்...”.
அப்பா வார்த்தைகளை தேடி அலைந்து ஒருவாறு சுதாரித்தபிறகு, “என்ன சொல்றதுன்னே தெரியல... ரொம்ப சந்தோசம்...  நிச்சயம் தை மாசத்துல நல்ல நாளா பார்த்து கல்யாணத்த வச்சுக்கலாம்... நிச்சயதார்த்தம் எப்பன்னு தேதி பாத்துட்டு முடிவு பண்ணிக்கலாம்...” என்றார்...
“அதல்லாம் ஒன்னும் வேணாம்.. கல்யாணத்த நல்லா விமர்சையா பண்ணுவோம்... இப்பவே வெற்றிலை பாக்க மாத்திட்டு நிச்சயத்த முடிச்சுக்கலாம்... வளர்பிறை முகூர்த்த நாள்தான் இன்னிக்கு கூட” மாமியார் பரபரத்தார்....
சில நிமிடங்களில் ராஜியின் நிச்சயதார்த்தம் அவள் கண்முன்னே இனிதே நடைபெற்று முடிந்தது....
நிச்சயம் அவள் எதிர்பார்த்திடாத நிகழ்வாகிவிட்டது... இந்த திருமணத்தை நிறுத்த நிறைய கால அவகாசத்தை அவள் எதிர்பார்த்திருந்தாள்... ஆனால், சில நிமிடங்களில் முடிந்த நிச்சயதார்த்தமும், இரண்டு மாதத்தில் தேதி முடிவாகிவிட்ட திருமணம் பற்றியும் அவள் யூகித்திருக்கவில்லை....
அன்றைய இரவு...
வழக்கத்தைவிட அம்மாவும் அப்பாவும் ஹாலில் அமர்ந்து உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தனர்....
“ரெண்டு மாசம்தான் இருக்கு... நாளைக்கே முக்கிய உறவுக்காரங்க எல்லாருக்கும் இந்த தகவலை போன்ல சொல்லிடனும்... இல்லைன்னா அதை ஒரு குத்தமா சொல்லுவாங்க ...” அம்மாதான் தொடங்கினார்...
“ஆமாமா.... முதல்ல மண்டபம் புக் பண்ணிடனும்... பாங்க்’ல இருக்கிற பணத்தை நாளைக்கே எடுத்து வேலைகள ஆரமிக்கணும்...” நிதித்துறை ஆலோசனையில் ஆழ்ந்தார் அப்பா....
இந்த நேரத்தில் ராஜி குறிக்கிடுவாள் என்று இருவருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்...
“சொந்தக்காரங்களுக்கு சொல்றது இருக்கட்டும், என்கிட்ட முதல்ல கேட்டிங்களா?”
“உன்கிட்ட என்னடி கேட்கணும்?... கேட்டா அப்டியே சந்தோஷமா ஒத்துக்கபோற பாரு!” அம்மா சீறினாள்....
“நான் ஒத்துக்கமாட்டேன்னு தெரிஞ்சும் இவ்ளோ பிளான் போடுறீங்களா?”
“ஏன்மா மாப்பிள்ளைய பிடிக்கலையா?” ராஜியின் அருகே சென்ற அப்பா பரிவுடன் கேட்டார்...
“மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சலாம்?... ஜம்முன்னு சூர்யா மாதிரில்ல இருக்கார்” இடைபுகுந்த அம்மாவை முறைத்தார் அப்பா...
“ஆர்யா மாதிரி மாப்பிள்ளை  இருந்தா கூட வேணாம்பா...” கண்கலங்கினாள் ராஜி...
“ஏன்மா?... என்னம்மா காரணம்?” அப்பாவும் உருகினார்....
“அது வேணாம்பா....”
“பயப்படாம சொல்லும்மா...”
“எனக்கு விருப்பமில்ல, பயமா இருக்கு”
“அடக்கழுத... கல்யாணத்துக்கு யாராச்சும் பயப்படுவாங்களா?... எல்லாம் நாலே நாளுல சரி ஆகிடும்.... எதையும் போட்டு குழப்பிக்காம போய் தூங்கும்மா...” அப்பாவின் கனிவு அவளை மேற்கொண்டு பேசவிடவில்லை....
மெல்ல நகர்ந்து அறைக்குள் ஐக்கியமானாள்....
தடுமாற்றத்துடன் கட்டிலில் அமர்ந்த ராஜி, குழப்பத்தின் மொத்த உருவமாக மாறியிருந்தாள்....
பெண்களை பொருத்தவரை பிறக்கும்போதே திருமணத்திற்கு தயாராக்கப்பட்டுவிடும் ஒரு வியாபாரப்பொருள்தான் நம் நாட்டில், ராஜியும் அதற்கு விதிவிலக்கு அல்ல... அவள் பிறந்தபோது பார்க்க வந்திருந்த சுற்றங்கள் கூட அதையே அழுத்தமாக பதிவுசெய்தார்கள்....
“பெண்குழந்தை கொஞ்சம் கருப்பா இருக்கே, மாப்பிள்ளை தேடுறது உமக்கு கொஞ்சம் கஷ்டம்தான் ஓய்” அப்பாவுடன் பணிபுரியும் யாரோ ஒரு ராமானுஜம் இப்படித்தான் சொன்னாராம்...
“பொண்ணு பொறந்திருக்கு, இப்போலேந்தே அதுக்கு சேர்க்க வேண்டிய நகைகள சேர்க்க ஆரமிச்சிடு!” அம்மாவின் காதை கடித்தது தூரத்து உறவு அத்தைதான்...
இப்படி பிறந்தது முதலாகவே திருமணம் நோக்கியே ராஜியின் வாழ்க்கை தள்ளப்பட்டு வந்தாலும், அது தன்னை நோக்கி திணிக்கப்படும் செயற்கை அழுத்தமென அவள் நினைக்க பதின்வயது பருவம் ஆகிவிட்டது... பள்ளி இறுதி ஆண்டுகளில் தன்னுடன் படித்த கவிதா, சாந்தி, அமுதா என எல்லாரும் அஜித், விஜய் என்று சிலாகிக்க, ராஜியால் சிம்ரனையும், ரம்பாவையும்தான் ரசிக்க முடிந்தது.... ஏதோ பருவக்கோளாறு, நாளடைவில் சரியாகிவிடும் என்ற நினைப்பில் நாட்களை நகர்த்தினாள்....
கல்லூரி சென்றபிறகும் கூட அந்த பெண்கள் மீதான ஈர்ப்பு அவளுக்கு குறைந்தபாடில்லை.... தன்னுடன் பயிலும் பல பெண்களும் யாரோ சில ஆண்களை காதலிப்பதும், தங்கள் காதலை பெருமை பேசிக்கொள்வதும் ராஜிக்கு அந்நியமாகவே பட்டது... ஆனாலும், தான் ஒரு ஆணை காதலிக்கவில்லை என்றால் அழகில் குறைந்தவளாக சக தோழிகளுக்கு தெரிந்துவிடுவேனோ? என்கிற பயத்தில், தன் சீனியர் மாணவன் ஒருவனை காதலிக்கவும் தொடங்கினாள்...
எனினும், அந்த காதல் அவளுக்கு செயற்கையான ஒரு விஷயமாக தோன்றியது.... மிகுந்த தயக்கத்துடன் ஒருநாள் அந்த காதலன் ராஜியின் கைகளை தொட்டபோதும், எவ்வித உணர்ச்சியுமின்றி அவள் அமர்ந்திருந்ததை அவன் ஆச்சர்யமாகத்தான் பார்த்தான்... நாளடைவில் மெல்ல அவளாகவே அர்த்தமற்ற சண்டைகளை உருவாக்கி, ஒருகட்டத்தில் நிகழ்ந்த காதல் தோல்வியில் நிம்மதியானாள்...
ராஜிக்கு கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய பாலீர்ப்பு புரிந்த தருணங்கள் அவை... சக வகுப்பு தோழி ஒருத்தி மீது எழுந்த ஆசை கூட எந்த ஆண்களின் மீதும் அவளுக்கு ஏற்படவில்லை என்பது அழுத்தமாக அவளுடைய பாலீர்ப்பை பதிவுசெய்தது...
இந்த குழப்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகி அவள் தெளிவுபெற்ற காலகட்டத்தில் சரியாக அவள் திருமண வயதையும் எட்டிவிட்டாள்... ஒரு பெண்ணை திருமணம் செய்ய எப்படியும் இந்த சமூகம் ஒப்புக்கொள்ளாது, குறைந்தபட்சம் ஒரு ஆணை திருமணம் செய்யாமல் தவிர்க்க ஆகவேண்டிய நடைமுறைகளைத்தான் இதுகாலம் வரை செய்துகொண்டிருக்கிறாள்....
இப்போதைய நிலவரப்படி திருமணத்தை மறுக்க அவளிடம் சொல்லும்படியான காரணம் கூட இல்லை... நிஜமான காரணத்தை அப்பாவிடம் சொல்லவும் மனம் ஒப்பவில்லை... சொன்னாலும் அதை புரிந்துகொள்ளும் பக்குவமும், சூழலும் அவள் குடும்பத்தில் இல்லை...
ஒருவேளை, “நான் மேல படிக்கனும்பா!” என்று வழக்கமாக பெண்கள் சொல்லும் காரணத்தை சொல்ல நினைத்தாலும் யாரும் அதை ஏற்கமாட்டார்கள்... காரணம், அவள் படித்த கல்லூரியில் ராஜியின் அரியர்ஸ் சாதனையை இன்னும் எவரும் முறியடிக்கவில்லை என்னும் அளவிற்கு படிப்பின் மீது  அவ்வளவு பிடிப்பு!....
“உங்களயல்லாம் விட்டுட்டு என்னால தனியா போகமுடியாதும்மா!” என்று சொன்னால், அம்மாவே சிரித்துவிடுவாள்...
காரணங்களை நோக்கி ஓடியே அன்றைய இரவுப்பொழுதை ஒருவாறாக கழித்துவிட்டாள்....
விடியும்போதே அவள் காதுகளில் கேட்ட மாப்பிள்ளை புராணம் கொஞ்சம் எரிச்சலூட்டியது...
பகல் பொழுது முழுவதுமே வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் திருமணம் பற்றிய பேச்சுதான் பிரதானம்...
“கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு மாமியார் இம்சையும் இல்லடி.... மாப்பிள்ளை மெட்ராஸ்’ல வேலை பாக்குறாராம், அங்கேயே உன்னையும் கூட்டிட்டு போய்டுவாராம்...” ராஜி பதில் சொல்லவில்லை, இன்னும் இறுக்கமாகவே அமர்ந்திருந்தாள்....
“இவ்ளோ நாள் உனக்கு கல்யாணம் தள்ளிப்போறத நினச்சு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ராஜி, இப்போதான் அந்த தள்ளிப்போனதுக்கும் கடவுள் இப்டி ஒரு அருமையான காரணத்த வச்சிருக்குறது புரியுது...” அப்பாவின் நெகிழ்தல் ராஜியை மென்மேலும் துயரத்தில் ஆழ்த்தியது.... சட்டென எழுந்து அறைக்குள் சென்றுவிட்டாள்.....
“கல்யாண பதட்டம் அவளுக்கு, எல்லாம் போகப்போக சரியாகிடும்!” அம்மா அதற்கும் ஒரு காரணத்தை தானாகவே உருவாக்கிவிட்டாள்....
அதன்பிறகு நான்கைந்து நாட்கள் வீடு இன்னும் பரபரப்பில் ஆழ்ந்தது... உறவுக்காரர்கள் பலருக்கும் திருமணத்தகவல் புற்றீசலாய் பரவிவிட்டது... ராஜியின் அலைபேசியும் ஓய்வில்லாமல் வாழ்த்துகளை ஒலித்துக்கொண்டே இருந்தது....
ராஜி தான் முழுமையாக பொறிக்குள் சிக்கிவிட்டதை உணர்ந்தாள்... வழக்கம்போல கடைசி அஸ்திரமாக மொட்டை கடுதாசி எழுதலாமா? என யோசித்தாள்... ஆனால், மாப்பிள்ளை அதை பொருட்படுத்துவார் என்கிற நம்பிக்கை அவளுக்கு இல்லை, அந்த அளவிற்கு அவன் கொஞ்சம் நல்லவனாகவே தெரிந்தான்....
எழுத நினைத்தாலும் அனுப்பிட அவளுக்கு வழியுமில்லை... அப்பாவும்கூட மாப்பிள்ளை சென்னையில் ஏதோ மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறினார், எந்த ஐடி கம்பெனி என்பது அவருக்கே தடுமாற்றம்தான்... சொந்த ஊரும் கூட மதுரைக்கு பக்கத்தில் ஏதோ ஒரு பட்டி... இனி அவர்கள் முகவரியை கண்டுபிடித்து கடிதம் அனுப்பி, அதை நம்பி அவர்கள் திருமணத்தை நிறுத்துவதல்லாம் நடக்கிற காரியமாக தெரியவில்லை....
அறையின் மூலையில் சுவற்றில் தலைவைத்து விட்டத்தை பார்த்தபடியே யோசித்துக்கொண்டிருந்தாள் ராஜி...
“என்னடி இன்னுமா உனக்கு பீரியட் பிரச்சன?” அருகில் வந்து அமர்ந்த அம்மா கவலை தோய்ந்த முகத்துடன் கேட்டாள்....
“இல்லம்மா... அது ரெண்டு நாளைக்கு முன்னமே முடிஞ்சிடுச்சு...”
“அப்புறம் ஏண்டி இப்டியே இருக்க?... நீ இப்டி இருக்குறத பார்த்து உங்க அப்பாவும் ரெண்டு நாளா புலம்பிகிட்டு இருக்காரு... உன் நல்லதுக்குதான் ராஜி நாங்க எதையும் செய்வோம்... என்ன பிரச்சினையா இருந்தாலும் சொல்லுடி!” அம்மா தலையை வருடியபடி கேட்டாள்.... ராஜியால் அழுகையை கட்டுப்படுத்தமுடியவில்லை.... உடைந்து அழுதாள்...
இதனைக்கண்ட அம்மா வேகமாக எழுந்துசென்று அறைக்கதவை சாத்திவிட்டு, ராஜியின் அருகே அமர்ந்து, “என்னம்மா ஆச்சு?... அழுகாம சொல்லு” அம்மாவின் கண்களிலும் கண்ணீர் அரும்பியது.... ராஜி சமீப காலங்களில் அழுததே இல்லை, அந்த அளவுக்கு மனதிடம் படைத்தவளாக அம்மாவுக்கு தெரிபவள்... திடீரென அவள் இப்படி அழுதது ஏதோ நிலைமை விபரீதமாக இருப்பதாக அம்மாவுக்கு தோன்றியது...
ராஜியால் தன் மனதிற்குள் இருக்கும் காரணத்தை சொல்லமுடியவில்லை, ஆனால் இதை சொல்லாமல் விட்டால் எக்காலத்திலும் சொல்வதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும் என்பதை அவள் உணர்ந்திருந்தாள்....
“எனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லம்மா...” வாதத்தை தொடங்கினாள்....
“அதான் ஏன்னு கேட்குறேன்? லவ் எதுவும் பண்றியா?” காதலை பற்றி அம்மா கேட்கும்போது குரலை தணித்து கேட்டாள்....
அப்டியல்லாம் எதுவுமில்லம்மா...”
“அப்போ என்னதாண்டி பிரச்சன?... வாயை தொறந்து சொன்னாதானே தெரியும்!” அம்மா கடிந்தாள்...
“எனக்கு ஆம்பளப்பசங்க மேல ஈர்ப்பு வராதும்மா...” அழுகைக்கு இடையிடையே வார்த்தைகளை கோர்வையாக போட்டு வாக்கியத்தை முடித்தாள்....
“என்ன சொல்ற?... அப்டின்னா?” பாலீர்ப்பின் அடிநாதமே புரியாத அம்மாவுக்கு இப்படி கேள்விகள் எழுவது இயல்பானதுதான்...
“ஆமாம்மா... நான் ஒரு லெஸ்பியன்... எனக்கு பெண்கள் மேலதான் ஈர்ப்பு வரும்... ஆண்களோட என்னால வாழமுடியாது...” கண்களை துடைத்துக்கொண்டே சொன்னாள் ராஜி...
திகைத்தபடி பார்த்தார் அம்மா... பதட்டமும், குழப்பமும் கண்களில் கண்ணீராய் வெளிவந்தது, “ஐயோ ஆண்டவா!... என்னடி சொல்ற?... ஏண்டி இப்புடி ஆன?... இந்த விஷயம் வெளில தெரிஞ்சா காறித்துப்ப்புவாங்களே!... பத்திரிகை அச்சடிக்க குடுக்கப்போன அந்த மனுஷனுக்கு தெரிஞ்சா நொறுங்கி போய்டுவாரே!” தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்...
“எந்திருடி... யாராச்சும் டாக்டர் கிட்ட போவலாம்... எதாச்சும் பண்ணி சரிபண்ணிடலாம்” ராஜியின் கையை பிடித்து இழுக்க, இழுத்த கையை உதறிய ராஜியோ, “ஐயோ அம்மா, இது நோயல்லாம் இல்லம்மா... இதை ட்ரீட்மென்ட் கொடுத்தல்லாம் மாத்த முடியாது, நான் பிறக்கும்போதே இப்புடித்தான்” தேம்பியபடி சொன்னாள்...
“எனக்கு தலையே சுத்துதே... வேணாம்டி, என்னென்னமோ சொல்லி கல்யாணத்த கெடுத்திடாத... ஊரு ஒலகமே சொல்லியாச்சு, இப்போ கல்யாணம் நின்னா ஜென்மத்துக்கும் வெளில தலைகாட்ட முடியாது... வீட்டுக்குள்ளயே புழுங்கி புழுங்கி சாகத்தான் முடியும்... எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் சரியாகிடும், எதையும் போட்டு குழப்பாத ராஜி” அம்மா மன்றாடினாள்....
“அம்மா, ஏன்மா என் நெலம ஒனக்கு புரியல... என்னால ஒரு ஆம்புள கூட வாழமுடியாதும்மா... நான் வாழ்க்கை முழுக்க கஷ்டப்பட உனக்கு சம்மதமா?”
“எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் சரியாகிடும்.... நீ கல்யாணத்துல எதாச்சும் குழப்பம் பண்ணின்னா, அடுத்த நிமிஷமே நான் நாண்டுகிட்டு செத்துப்போவேன்... ஏதோ மிரட்டுறதா நினைக்காத, உன்ன பெத்தவ நான், உனக்கு இருக்குற வீம்பு எனக்கும் இருக்கு.... இந்த கல்யாணம் நடக்கலைன்னா நான் சாகுறது உறுதி, இது உன் மேல சத்தியம்!” சொல்லிவிட்டு முந்தானையை உதறி இடுப்பில் சொருகியபடியே அறையைவிட்டு வெளியேறினாள் அம்மா...


                                      ***************
ஆறு மாதங்களுக்கு பிறகு....
சென்னை வெயிலின் உக்கிரத்தை தனிக்கும்போருட்டு தலையில் சேலையின் முந்தானையை போட்டபடி அந்த வீட்டை கண்டுபிடிக்க சிரமப்பட்டுப்போனாள் அம்மா...
ஒருவழியாக வீட்டை கண்டுபிடித்தபிறகு, முந்தானையால் தன் முகத்தை துடைத்தபடியே கதவை தட்டினாள்....
திறந்த கதவின் மறுபுறம் ராஜி நின்றாள், தலை குளித்து துண்டினால் முடியை சுற்றியிருந்தாள்... தாலியின் மஞ்சள் இன்னும் அதன் மங்களகரத்தை இழக்கவில்லை...
அம்மாவின் கையிலிருந்த பையை வாங்கியபடியே, உள்ளே அழைத்து அமரவைத்தாள்...
“ஏன்மா இவ்வளவு லேட்டு?... ஆறு மணிக்கே பஸ் வந்திடுமே, இப்ப மணி ஒன்பதாச்சு?”
“அட அதையேன் கேக்குற?... வந்த பஸ் வர்ற வழில ரிப்பேர் ஆச்சு, கட்டைல போறவனுக அதை சரி பண்ணவே ரெண்டு மணி நேரமாச்சு... வந்து தேனாம்பேட்டைல இறங்குனா, உன் வீட்டை கண்டுபிடிக்கவே ஒருமணி நேரமாச்சு...”
“அதான் ஏற்கனவே ஒருதடவ வந்திருக்கியேம்மா?”
“அடப்போடி... இந்த ஊருல எல்லா வீடும் ஒன்னுபோலத்தான் தெரியுது.... வீட்டை விசாரிச்சாகூட ஒருத்தனுக்கும் அட்ரஸ் தெரியல... உங்கப்பா ஏதோ வேலைன்னு கிண்டில இறங்கிட்டார், ஏற்கனவே வந்த வீடுதானேன்னு தனியா வந்தது தப்பா போச்சு” தண்ணீரை தாகம் தீரும்வரை குடித்துக்கொண்டே சொல்லிமுடித்தாள்...
சரியாக அந்த நேரத்தில் அறைக்குள்ளிருந்து மாப்பிள்ளை வர, சட்டென எழுந்து கொஞ்சம் தள்ளிப்போய் நின்றாள் அம்மா....
“வாங்க அத்தை!” சம்பிரதாய வரவேற்பை உதிர்த்துவிட்டு, ராஜியை பார்த்த அவள்  கணவன், “சாப்பிடலாமா?” என்றான்...
“உக்காருங்க... எல்லாம் ரெடி” சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் சென்று பாத்திரங்களை உருட்டினாள் ராஜி... சில நிமிடங்களில் வெளிவந்து, சரசரவென்று ஒவ்வொரு பாத்திரமாக எடுத்து மேசையில் அடுக்கினாள்...
கணவனின் மனம் அறிந்து உணவை பரிமாறிய ராஜியை அம்மா ஆச்சர்யமாக பார்த்தபடி நின்றாள்...
“மதியம் சாம்பார் சாதம், உருளைகிழங்கு செஞ்சு வச்சிருக்கேன்... முட்டை ஆம்லெட் போட்டு வச்சிருக்கேன்...” மதிய சாப்பாட்டை பற்றி கணவனிடம் விளக்கினாள்....
அவன் சாப்பிட்டு முடித்து கைகழுவியபோது துண்டை எடுத்து ராஜி கொடுத்ததையும், சாக்ஸ் மாட்டிக்கொண்டிருந்தபோது ஷூவை தட்டி தயாராக வைத்ததை பார்த்தபோதும் அம்மாவால் தன் கண்ணையே நம்பமுடியவில்லை...
சில நிமிடங்களில் கணவன் வீட்டை விட்டு வெளியேற, முகத்தை துடைத்தபடியே சோபாவில் சாய்ந்தாள் ராஜி...
“குளிச்சுட்டு வாம்மா சாப்பிடலாம்...”
தான் கொண்டுவந்த பைக்குள்ளிருந்து ஒரு சிறிய காகித மடிப்பை திறந்து, அதற்குள்ளிருந்த குங்குமத்தை எடுத்து ராஜியின் நெற்றியை நோக்கி கொண்டுசென்றாள் அம்மா...
கையை தடுத்த ராஜி, “கோவில் குங்குமமா?” கேட்டாள்....
“ஆமாம்மா... சமயபுரம் கோவில் குங்குமம்...”
“வேணாம்மா... வைக்கக்கூடாது...”
“ஓ.. தலைக்கு குளிச்சியா?...”
“ஆமா...”
இப்படிப்பட்ட நேரத்திலும் ராஜியின் வேலைகளை பார்த்த அம்மாவின் ஆச்சர்யம் ஒருவித ஆனந்தத்தையும் கொடுத்தது... தன் மகள் மாறிவிட்டாள் என்கிற மனநிறைவு அவளுக்குள் மேலிட்டது...
இருந்தாலும் தன் சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு அதை கேள்வியாகவும் முன்வைத்தாள் அம்மா...
“சந்தோஷமாதானே ராஜி இருக்க?” தலையை வருடிக்கொண்டே கேட்டாள்....
“இருக்கேன்மா.... மாசத்துல இந்த மூணு நாள் மட்டும் சந்தோஷமா இருக்கேன்!” உதடுகள் விரிந்த சிரிப்புகளுக்குள் மறைந்திருந்த சோகத்தை அம்மா அப்போதுதான் கவனித்தாள்... ராஜியின் இந்த பதிலால் உறைந்து நின்றாள்!... (முற்றும்)
(நீண்டகாலமாகவே ஓவியர் இளையராஜா அவர்களின் ஓவியங்களை என் கதையில் பயன்படுத்த ஆசை... இந்தக்கதையின் மூலமாக அந்த ஆசை நிறைவேறியுள்ளது)