Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday, 19 May 2015

பிரதமரின் கே (gay) திருமணம், வாழ்த்திய மக்கள் - கதையல்ல நிஜம்!






இந்த செய்தி, “உலக அரசியல் வரலாற்றில் என்ற முன்னோட்டத்தோடு கூட சொல்லும் அளவிற்கு ஆச்சர்யமான செய்திதான்... லக்ஸம்பர்க் நாட்டின் பிரதமர், கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் செய்துகொண்ட நிகழ்வுதான் அந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த வைரல் செய்தி... லக்ஸம்பர்க் நாட்டின் பிரதமர் சேவியர் பெட்டேல், தனது காதலரான கவுதியர் டெஸ்டினி என்பவரை கரம் பிடித்துள்ளார்... ஒரு நாட்டின் பிரதமர், கே திருமணம் செய்துகொள்வது என்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுதானே?...

சேவியர் பெட்டேலின் அரசியல் நுகர்வு குறித்து ஏற்கனவே "வெளிப்படையான கே பிரதமர்" என்கிற கட்டுரையில் பார்த்துவிட்டதனால், இவருடைய பாலீர்ப்பு வாழ்க்கைக்குள் கொஞ்சம் நுழைந்து பார்க்கலாம்...

2010ஆம் ஆண்டு முதல் இணைந்து வாழும் இந்த இணை, அந்நாடு கடந்த ஆண்டில் “சமபால் திருமணம் அங்கீகரிப்பு சட்டம் இயற்றிய பிறகு, அதிகாரப்பூர்வமான தம்பதியாக இணைந்துவாழ முடிவெடுத்து திருமணம் செய்துகொண்டுள்ளனர்... இந்த திருமணம் மிகவும் எளிமையான முறையில், ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் நடந்து முடிந்துள்ளது... வெள்ளிக்கிழமை காலையிலேயே திருமணம் நடக்க இருக்கிற சிட்டி ஹாலுக்கு, தன் காதலனுடன் வந்துவிட்டார் பெட்டேல்... தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை, எல்லோருக்கும் வெளிச்சம் போட்டு காண்பிக்க விரும்பவில்லை என்பதால் ஊடகங்களுக்கு ‘தடா போட்டுவிட்டார் பிரதமர்...

என்றாலும் கூட தங்கள் நாட்டு பிரதமரின் முக்கிய வாழ்க்கை நிகழ்வை பார்த்திட சிட்டி ஹாலுக்கு எதிரே மக்கள் குவிந்துவிட்டனர்... மதியம் நடந்த திருமண நிகழ்வில் நெருக்கமான நண்பர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது... பெல்ஜியம் நாட்டின் பிரதமர் சார்லஸ் மைக்கேல் முக்கிய விருந்தினராக நிகழ்வில் கலந்துகொண்டார்... “எனது நண்பரின் திருமணத்திற்காக வந்துள்ளேன்... இந்த திருமணம் மிகப்பெரிய சமூக நிகழ்வு... ஐரோப்பியாவில் காணப்படுகிற சமபால் ஈர்ப்புக்கு எதிரான ஹோமோபோபியாவை குறைக்கும் வல்லமை பெற்ற நிகழ்வு... சமூக முன்னேற்றங்களுக்கு வித்திடும் நிகழ்வு என்று கூறுகிறார் சார்லஸ்...

திருமணம் முடிந்து வெளியே வந்த பெட்டேல், குழுமியிருந்த கூட்டத்தை பார்த்து, “ரொம்ப நன்றி லக்ஸம்பர்க்வாசிகளே! என்று கூற, மக்கள் அனைவரும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்...

மிக எளிமையான முறையில் ஒரு நாட்டில் பிரதமருடைய திருமணம் நடந்தேறியுள்ளது, பலரையும் வியந்துபார்க்க வைத்துள்ளது... ஜூலை முதல்வாரம்தான் இவர்களின் தேன் நிலவும் கூட...

 இவர் வாழ்க்கையிலிருந்து ஒவ்வொரு சமபால் ஈர்ப்பு நபர்களும் கற்றுக்கொள்வதற்கான ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது என்பதுதான் உண்மை...

2013ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த நேரம், பெட்டேல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான சூழல் உருவாகிய தருணத்தில், தன் காதலன் டெஸ்டினியை அழைத்து, “நான் பிரதமர் ஆவதில் உனக்கு விருப்பமா? எப்போதும் போல எனக்கு உறுதுணையாக நிற்பாயா? என்று கேட்டிருக்கிறார்... ஒருவேளை அன்றைக்கு டெஸ்டினி மறுத்திருந்தால், இந்த கட்டுரைக்கு அவசியம் இருந்திருக்காது... ஆம், “அவன் மறுத்திருந்தால் நான் முடிவை மறுபரிசீலனை செய்திருப்பேன், எக்காரணத்தை முன்னிட்டும் காதலனோடு பிரிவைப்பற்றி மட்டும் யோசித்திருக்கவே மாட்டேன் என்கிறார்...

பெட்டேல் அரசியலில் நுழைந்த காலம் என்பது மிகவும் பழமைவாத கருத்துகள் நிறைந்து காணப்பட்ட காலகட்டம்... “இன்றைக்கு இருப்பது போல புரிதல்கள் இல்லாத நாட்கள் அவை... என்னுடைய பாலீர்ப்பை காரணம் காட்டி, நிறைய எதிர்மறை விமர்சனங்கள் வைக்கப்பட்டது... எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் என் பணியை செய்தேன்... என்னுடைய வாழ்க்கையை நான்தான் முடிவுசெய்யவேண்டும், அதில் அடுத்தவர்களுக்கு என்ன பங்கு இருக்கிறது?... 

 அரசியல்வாதி என்றால் மனைவி, குழந்தைகளோடு இருக்க வேண்டும் என்று படிந்திருந்த மக்களின் மனநிலை கூட தொடக்கத்தில் என்னை பாதித்தது... ஆனால், காலப்போக்கில் கடுமையாக போராடி என்னை நிலைநிறுத்திக்கொண்டேன் என்கிறார் பெட்டேல்...

வெறும் ஐந்தரை லட்சம் மக்கள் தொகையை கொண்ட ஒருநாட்டில், அதுவும் கத்தோலிக்க கிறித்துவ மதத்தின் மீது தீவிர பிடிப்புள்ள நாட்டில், பெட்டேல் போன்ற வெளிப்படையான கே தலைவர்கள் பட்டிருக்கக்கூடிய சிரமங்கள் நம்மால் எளிதாக யூகிக்க முடிந்ததுதான்...

பதின் வயது முதலாகவே தன் பாலீர்ப்பை பெட்டேல் எவரிடமும் மறைக்க விழைந்ததில்லை... தன்னுடைய சுயத்தை அவர் பொய்யான பிம்பம் நிறைத்து வெளிப்படுத்த விரும்பவில்லை... 

“என் நண்பர்களிடம் எனது பாலீர்ப்பை மறைத்ததில்லை... உங்கள் பாலீர்ப்பை காரணம் காட்டி, உங்களை விலகும் நண்பர் நிச்சயம் நண்பனே இல்லை... அந்தவகையில் பெரும்பாலான எனது நண்பர்கள் என்னை முழுமையாக ஏற்றனர்... எனக்கு இருக்கிற ஒரே வாழ்க்கையை, அடுத்தவர்களுக்காக என் சுயத்தை மறைத்து ஏன் வாழவேண்டும்?...

கடுமையான சிக்கலை தாண்டி, அதுவரை அங்கு ஆதிக்கம் செலுத்திவந்த கத்தோலிக்க மதக்கட்சியை தோற்கடித்து, வெற்றிபெற்ற பெட்டேல் ஆட்சிப்பொறுப்பேற்ற 2013ஆம் ஆண்டு ஒரு அறிவிப்பை அறிவித்தார்... “நம் நாட்டில் மாற்றப்பட வேண்டிய பழமைவாத சட்டங்கள் நிறைய இருக்கிறது... அதில் முக்கியமானது சமபால் ஈர்ப்பு நபர்களுக்கான திருமணத்தடை... மற்ற அரசியல் தலைவர்களை போல அடுத்த ஐந்தாண்டுகளில் இவற்றை சரி செய்வேன் என்று சொல்லமாட்டேன்... இன்னும் ஒரே ஆண்டில் இந்த குறைகளை நிவர்த்தி செய்து காட்டுகிறேன் என்றார்...

சொன்னதை அடுத்த ஒரே ஆண்டில் செய்தும் காட்டினார்... கடந்த ஜூன் மாதத்தில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர் ஆதரவுடன் “சமபால் ஈர்ப்பு திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டது...

“நான் கே பிரதமர் என்று அடையாளப்படுத்துவதை விரும்பவில்லை... நான் லக்ஸம்பர்க் நாட்டின் பிரதமர், அவ்வளவுதான்... மற்ற நாட்டு பிரதமர்களை, “ஸ்ட்ரைட் பிரதமர் என்று அழைக்காதபோது, என்னை மட்டும் பாலீர்ப்பு அடையாளத்தை முன்னிறுத்தி அழைப்பது இன்னும் சமபால் ஈர்ப்பை உங்கள் மனங்கள் இயல்பாக பார்த்திடாத பாரபட்சம்தான் காரணம்.. இனி இந்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவது பற்றிய திட்டங்கள் போடவேண்டும், அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!

பெட்டேல் சொல்வதும் சரிதான்... ஆனால், இந்தியா போன்ற நாட்டில், குறைந்தபட்சம் நம்மவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகப்படுத்தவாவது, அவரை “கே பிரதமர் என்று அழைப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்...

இந்த தம்பதி இன்னும் நூறாண்டுகள், சிறப்போடு வாழ உலக ஒருபால் ஈர்ப்பு தமிழர்களின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்... 

“மதவாத கருத்துகளால் பழமைவாத சிந்தனை படிந்திருந்த ஒருநாடு, இப்போது தன்னை முதிர்ச்சியான சிந்தனையால் புதுப்பித்துக்கொண்டது ஆச்சர்யமான வளர்ச்சி என்று லக்சம்பர்க் நாட்டின் புரிதலை வர்ணிக்கிறார் பிரபல பிரெஞ்ச் நடிகர் ஸ்டீபன் பெம்...

ஐரோப்பிய ஒன்றியத்தில் இப்படி திருமணம் செய்துகொண்ட முதல் பிரதமர் என்கிற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது என்றாலும், முதல் வெளிப்படையான சமபால் ஈர்ப்பு பிரதமர் என்கிற புகழை பெல்ஜியம் நாட்டினை சேர்ந்த முன்னாள் பிரதமர் எலியோ டி ருபோ (2009 – 2013) ஏற்கனவே பெற்றுவிட்டார்... ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் ஜோஹன்னா (2010), தன் காதலியை திருமணம் செய்துகொண்ட நிகழ்வுதான் ‘உலக வரலாற்றில் முதல் முறையாக! என்பதால், பெட்டேல் திருமணம் ‘இரண்டாவது இடத்தைதான் பெற்றுள்ளது (ஐஸ்லாந்து நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை)... லக்ஸம்பர்க் நாடு நாம் மகிழும் அளவிற்கான இன்னொரு சிறப்பையும் பெற்றுள்ளது, அந்நாட்டின் துணை பிரதமர் எடின்னே ஷ்னைடர் என்பவரும் சமபால் ஈர்ப்பு நபர்தான்.. இன்னும் 377 என்கிற நெளிந்த சொம்பை வைத்துக்கொண்டு பஞ்சாயத்து பேசிக்கொண்டிருக்கும் நம்மவர்களை பார்க்கும்போது, சிரிப்பதா? அழுவதா? என்றுகூட புரியவில்லை...

Tuesday, 12 May 2015

க்ளைமாக்ஸ் - சிறுகதை









வழக்கம்போலவே இன்றைக்கும் அவசரகதியில்தான் ரயிலை பிடிக்க ஓடினான் வசந்தன்... ஒவ்வொருமுறையும் அதற்கான காரணங்கள் மாறுபட்டாலும், சக்திமான் பார்ப்பதற்காக சனிக்கிழமை விடுப்பெடுத்த பள்ளிக்கூட மாணவர்கள் சொல்லும் காரணங்கள் போல, அவசியமான அவசரங்கள் எதுவும் இருந்ததில்லை... இன்றைக்கும் கூட அப்படித்தான், ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்ததுதான் இவ்வளவு தாமதத்திற்கு காரணம்...

“மணி இப்பவே மூணு வசந்தன், இன்னும் முக்கால் மணி நேரத்துல ட்ரைன்... ட்ராவலிங் கண்டிப்பா அரை மணி நேரம் ஆகிடும் அறைத்தோழன் மணிகண்டன், அரை மணி நேரமாக மணி அடித்துக்கொண்டுதான் இருந்தான்..

அந்த பிரபல மூன் டிவியின், தமிழகத்தின் பிரம்மாண்ட குரல் தேடும் “செம்ம சிங்கர் நிகழ்ச்சியைதான் அவ்வளவு ஆர்வமாக பார்த்துக்கொண்டிருக்கிறான்... இவ்வளவு ஆர்வத்தை பார்த்தவுடன் வசந்தனின் இசை ஞானத்தை அதீதமாக கற்பனை செய்துவிடவேண்டாம்... ஒரு பாடலின் பல்லவிக்கும் சரணத்துக்கும் கூட இன்னும் வித்தியாசம் தெரியாத சாமானியன்தான் அவன்... குழந்தைகள் எலிமினேட் செய்யப்படும்போது அழுவதை ரசித்து பார்க்கும் வக்கிர குணம் கொண்டவனும் கூட அவனில்லை என்றாலும், கிட்டத்தட்ட ஒரு வருடமாக ஒரு எபிசோட் விடாமல் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ரசிக்கிறான்...

அந்த உடும்புப்பிடி ரசனைக்கு காரணங்கள் கண்டிப்பாக அதில் பாடும் சிறுவர்களோ, ‘மார்க் போடும் நடுவர்களோ, ‘வழவழ கொழகொழ தொகுப்பாளர்களோ, சல்வார் கம்மீஸ் போல உடை அணிந்துவரும் வாய்ஸ் ட்ரைனரோ சத்தியமாக இல்லை.. பாடகர்கள் பாடும்போது, இடையிடையே சில நொடித்துளிகள் திரையில் காட்டப்படும் இசைக்கலைஞர்களை எப்போதாவது நீங்கள் பார்த்திருப்பீர்கள்... அதில் கீ போர்ட் வாசிக்கும் ஒரு இளைஞனை எதேச்சையாக உங்கள் கண்கள் கடந்து வந்திருக்கக்கூடும்.. ஆனால் அந்த இளைஞனைத்தான் வசந்தனின் கண்கள் மட்டும் கடக்காமல் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறது...

பெரும்பாலும் ஏதேனும் பாடலினூடே அவன் இரண்டு கைகளையும்தான் பார்த்திருக்க முடியும்... இடது கை மோதிர விரலில் வெள்ளி மோதிரமும், வலது கையில் நான்கைந்து வண்ணநிற கயிறுகளும் அணிந்திருப்பான்... அந்த விரல்கள் இடமும் வலமும் நகரும்போது, அவன் உடலை வருடுவதைப்போல சிலாகிப்பான் வசந்தன்... எப்போதும் கருப்பு உடை மட்டுமே அணிந்திருப்பான்... முழுக்கை சட்டையை முழங்கைக்கு கீழ்வரை மடித்திருக்கும் அழகை பலநாள் கண்ணாடி முன்பு வசந்தனும் செய்து பார்த்ததுண்டு, ஆனாலும் அவன் அளவிற்கு அழகு வந்ததில்லை... நான்கைந்து முறை அவன் முகத்தை பார்த்திருக்கிறான்... அந்த கருப்பு நிற தேகத்தவன்தான், அதுவரை வெள்ளைதான் அழகு என்ற வசந்தனின் எண்ணத்தினை அடியோடு மாற்றியவன்... அவன் அளவாய் சிரித்தபோது கன்னத்தில் விழுந்த குழி இன்னும் அழகு... போதும் போதும்... இதற்கு மேல் அவனை வர்ணித்தால், இனி நீங்களும் அந்த நிகழ்ச்சியில் அவனை தேடத்தொடங்கிவிடுவீர்கள்...

“அப்டி என்னடா அவன் பேரழகன்?... எனக்கென்னவோ சுமாராத்தான் தெரியுறான்! ஒருமுறை மணிகண்டன்தான் மறுத்துப்பேசினான்...

“தேவதூதன்களோட அழகு, கண்ட தேவாங்குகளுக்கு தெரியாது! என்று அலட்சியப்பார்வையோடு கடந்துவிடுவான்...

ஒருவழியாக இன்றைக்கும் அவன் விரல்களை ரசித்துவிட்டு ரயில் நிலையம் செல்வதற்குத்தான் அவ்வளவு தாமதம் ஆனது... நல்லவேளையாக இன்றைக்கு தொடர்வண்டி பத்து நிமிடங்கள் தாமதமாம், அப்படியும்கூட மெள்ள நகரும்போதுதான் வசந்தனால் ட்ரெயினில் ஏறமுடிந்தது...

மூச்சிரைக்க ஏறியபின், தண்ணீரை குடித்துவிட்டு தனது இருக்கையை தேடினான்... 13, 14 கடந்து 15.. அதுதான்.. பையை இருக்கைக்கு கீழே வைத்துவிட்டு, அதிலிருந்த விகடனை எடுத்து வேகமாக விசிறத்தொடங்கினான்...

சட்டையின் மேலிரண்டு பட்டன்களை கழற்றி, வியர்வையின் கசகசப்பை போக்க முயன்றான்... ஜன்னல் காற்று சில்லிட்டு, உடலோடு சேர்ந்து மனதையும் குளிர்வித்தது.. அப்போதுதான் , எதேச்சையாக தன் எதிரில் அமர்ந்திருக்கும் நபரை கவனித்தான் வசந்தன்...

அது நிஜமா? அல்லது, வழக்கம்போல கனவா?... கனவாக இருந்தால், காற்று சில்லிடுவதை உணர்ந்திருக்கமுடியாது... நிஜம்தான், அவனேதான்... வசந்தனின் எதிரில், சுஜாதாவின் ‘கனவு தொழிற்சாலை புத்தகத்தில் கண்களை புதைத்துக்கொண்டிருப்பவன் அந்த கீ போர்ட் இளைஞனேதான்... எதிர்க்காற்றில் துள்ளிக்குதித்த முடிகள், அவ்வப்போது அவன் கண்களின் மீது விழுந்தபோது, அந்த மென்மையான விரல்களால் அதை விலக்கிவிடும்போது அவன் உதடு குவிக்கும் அழகை வேறு எந்த அழகோடும் ஒப்பீடு செய்யமுடியாது... ஆச்சர்யமாக இன்றைக்கு வழக்கமான கருப்பு உடை இல்லாமல் சிவப்பு நிற சட்டை, அதனை அழகின் இன்னொரு பரிமாணம் என்றுகூட சொல்லலாம்..

சில நிமிடங்கள் வசந்தன் தன்னையே கவனித்ததை உணர்ந்த அவன், புத்தகத்திலிருந்து பார்வையை மேலே உயர்த்தினான்... சட்டென வசந்தன் வேறுபக்கம் திரும்பிக்கொள்ள, மீண்டும் புத்தகத்துக்குள் புகுந்துகொண்டான்...

அடச்ச! ஏன் திரும்பினேன்?.. அவனையே பார்த்திருந்தால் அவனாகவே பேச்சை தொடங்கியிருப்பான், நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்... சில நிமிடங்கள் கழித்து வசந்தனாகவே பேச்சை தொடங்கினான்...

“ஹாய்... நான் வசந்தன்... மெலிதாக புன்னகைத்தபடி கை நீட்டினான்...

“நான் கவின்... சில நொடிகள் யோசிப்புகளுக்கு பிறகு, சந்தேகத்துடனேயே கைகொடுத்தான் கவின்...

கவின்... அழகான பெயர்தான்.. அதிசயமாகத்தான் பெயரைப்போலவே அதற்குரிய ஆட்களும் அமைவதுண்டு....

“காகித தொழிற்சாலை நல்ல புக்ல?.. எனக்குக்கூட சுஜாதான்னா ரொம்ப பிடிக்கும் இந்த நேரத்தில் அவனோடு பேசுவதற்காக எதை சொல்லவும் தயங்கமாட்டான் வசந்தன்...

“ஹ ஹா... இது கனவு தொழிற்சாலை சார்... புத்தகத்தின் அட்டையை உயர்த்தி காட்டியபடி, அழகாய் சிரித்தான்...

தலையில் கொட்டிக்கொண்டு, “உங்கள பார்த்ததும் எல்லாமே மறந்துபோச்சு... பொய்யாக நொந்துகொண்டான்...

“என்னை பார்த்ததுமா? ஏன்?

“அது... அது வந்து... நீங்க எவ்ளோ பெரிய ம்யுசிசியன்... அதனாலதான்.. சமாளித்தான் வசந்தன்...
 
“அதெப்டி உங்களுக்கு தெரியும்?

“உங்கள நான் செம்ம சிங்கர்ல பார்த்திருக்கேன்... ரொம்ப அழகா வாசிப்பிங்க...புகழ் தூண்டிலை போட்டு, அதில் மாட்டாத மீன்கள் உண்டா என்ன?...

“ஓ... அந்த அளவுக்கு இசைப்பிரியரா நீங்க?... நிஜமாவே ஆச்சர்யமா இருக்கு சார்... ரொம்ப சந்தோஷமா இருக்கு... பழைய குழப்பங்கள், இறுக்கங்கள் தளர்ந்து இயல்பாக பேசினான் கவின்...

“சார்லாம் வேணாம்... ஜஸ்ட் வசந்தன்னே கூப்பிடுங்க...

“ஓகே ஜஸ்ட் வசந்தன்...

“ஹ ஹ ஹா... அளவுக்கு அதிகமாகவே சிரித்தான்... இதே ஜோக்கை அறை நண்பன் மணிகண்டன் சொல்லியிருந்தால், “டைம் கிடைக்குறப்போ சிரிக்கிறேன்! என்று பதிலுக்கு கலாய்த்திருப்பான்... ஆனால், கவின் சொன்னதை கேட்டு கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் இடைவிடாமல் சிரித்தான்...

“ஓகே ஓகே... கூல் வசந்தன்... நீங்க என்ன பண்றீங்க?

“நீங்க படிக்குற கனவு தொழிற்சாலைல இருக்கேன்...

“அப்டின்னா?

“அசிஸ்டென்ட் டைரக்டரா நாலு படம் வர்க் பண்ணிருக்கேன்... இப்போ ஒரு படம் டைரக்ட் பண்ண அக்ரீமன்ட் போட்டாச்சு... அது சம்மந்தமாத்தான் இப்போ திருச்சி போறேன்சிரித்துக்கொண்டே சொன்னான்...

“ஓ கிரேட் வசந்தன்... உங்க படம் சக்சஸ் ஆகிட வாழ்த்துகள்! சொல்லிவிட்டு கை கொடுத்தான்... மெத்தென இருந்தது உள்ளங்கை, வித்தைகள் காட்டும் விரல்கள் மட்டும் மெல்லிய கனமாக இருந்தது...

“தாங்க்ஸ் கவின்... படபூஜைக்கு உங்கள இன்வைட் பண்றேன், கண்டிப்பா வரணும்... நீங்க ஆள்கூட ஸ்மார்ட்டா இருக்கீங்க, விருப்பப்பட்டா எதாச்சும் ரோல் பண்ணுங்க...

“ஐயோ தாங்க்ஸ்... ஆனா எனக்கு நடிப்பல்லாம் சுட்டுபோட்டாலும் வராது... என்ன ஸ்டோரி? வெட்கப்பட்டு சிரித்தான்...

“வழக்கம்போல லவ் ஸ்டோரிதான்... கொஞ்சம் வித்தியாசமா ஹீரோ ஹீரோயின்கிட்ட படத்தோட க்ளைமாக்ஸ்லதான் ப்ரப்போஸ் பண்ணுவான்... க்ளைமாக்ஸ் விஷயத்துலதான் எனக்கும் ப்ரட்யூசருக்கும் சின்ன முரண்பாடு, அது சரிவந்துட்டா பூஜை போட்டுடலாம்...

“ஓ அதிலென்ன ப்ராப்ளம்?

“க்ளைமாக்ஸ்ல ப்ரப்போஸ் பண்றப்போ, அவங்க ஒன்னு சேரக்கூடாதாம்... அதேநேரத்துல யாரையும் கெட்டவங்களா காட்டக்கூடாது, யாரும் சாகக்கூடாதுன்னு ஆயிரம் கண்டிஷன்ஸ்... பின்ன எப்டி அவங்கள பிரிக்கமுடியும்?... அதைத்தான் தலைய பிச்சுகிட்டு யோசிச்சுட்டு இருக்கேன்... ஆர்டிஸ்ட் எல்லாம் கூட பிக்ஸ் பண்ணியாச்சு, லொக்கேஷன் பாக்கத்தான் திருச்சி கூட போறேன்... கருமம் பிடிச்ச க்ளைமாக்ஸ்தான்... தன்னிலையை நொந்துகொண்டான் வசந்தன்...

“அப்போ கஷ்டம்தான்... வேணும்னா ஹீரோ ப்ரப்போஸ் பண்றதோட படத்த முடிச்சிடுங்க, முடிவை ஆடியன்ஸ் கைல கொடுத்திடலாம்ல

“அதையும் சொல்லிப்பார்த்தேன்... ஆடியன்ஸ் முடிவு பண்றதா இருந்தா, நீ எதுக்கு டைரக்டர்னு இருக்க?ன்னு கேட்குறார்... முடிவு இதுவரை தமிழ்சினிமால காட்டப்படாத ஒண்ணா இருக்கனுமாம்... நான் என்னத்த பண்றது?

“ஹ ஹ ஹா... அப்போ ரொம்பவே கஷ்டம்தான்... எனக்கேகூட ஆர்வமாத்தான் இருக்கு, என்ன க்ளைமாக்ஸ் வைக்கப்போறிங்கன்னு... முடிவு பண்ணிட்டு சொல்லுங்க!

இருவரும் கதைப்பற்றிய விவாதங்களிலும், இசைப்பயணம் குறித்த நிகழ்வுகள் பற்றியும் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தனர்... நேரம் ஓடியதே தெரியவில்லை, தொடர்வண்டி திருச்சியை அடைந்தபோதும் கூட இருவரும் பகிர்ந்துகொள்ள ஆயிரம் விஷயங்கள் மிச்சம் இருந்தன..

இடைப்பட்ட பேச்சில் முக்கியமான அந்த கேள்வியையும் கேட்க மறக்கவில்லை வசந்தன்...
“உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா கவின்?

“இன்னும் இல்ல வசந்தன்... இப்போதான் கரியர்ல ஓரளவு நல்லா வந்துருக்கேன், இனிமேதான் அதல்லாம்

“அப்போ யாரையும் லவ் பண்றீங்களா?

“சந்தோஷமா சிரிச்சு பேசுறத பாத்துமா உங்களுக்கு அந்த சந்தேகம்... அதல்லாம் இல்லைங்க...
போதும்... இதுபோதும்... மனநிறைவோடு திருச்சியில் இறங்கினான் வசந்தன்...





                                     **************
“சார் என்ன இந்த நேரத்துல மேக்கப் போட்டுட்டு இருக்கார்? எங்கப்பா போற? வெங்காயம் நறுக்கிக்கொண்டே கேட்டான் மணிகண்டன்...

“நீயல்லாம் சின்னப்பையன்... ஓரமா போய் விளையாடு தம்பி... நான் என் லவ்வர பார்க்கப்போறேன்! மூன்றாம் முறையாக முகத்திற்கான பூச்சை அப்பியபடி சொன்னான் வசந்தன்...

“அந்த கொடுமயல்லாம் எப்போ நடந்துச்சு?

“கொழுப்பா உனக்கு?.. காண்டாமிருகத்துக்கு காஸ்ட்யூம் போட்ட மாதிரி இருக்க உனக்கே ஒரு பொண்ணு செட் ஆனப்போ, எனக்கு லவ்வர் செட் ஆகக்கூடாதா?... போன வாரம் ட்ரைன்ல பார்த்தேனே, அவனைப்பார்க்கத்தான்... தலை சீவிய சீப்பின் முனையை பல்லில் கடித்தவாறு வெட்கப்பட்டுக்கொண்டே சொன்னான்...

“என்ன கருமமோ பண்ணு, தயவுசெஞ்சு வெட்கப்படுறேங்குற பேர்ல சீப்பை கடிச்சு தின்னுடாத... திருந்தாத ஜென்மம் தலையில் அடித்துக்கொண்டான்...

“இதுல என்ன திருந்துறதுக்கு?... மயித்தக்கட்டி மலைய இழுக்குறேன்... வந்தா மலை, போனா...

“மயித்தக்கட்டி மலைய இழுக்குறதே முட்டாள்த்தனம் இல்லையா?.. அதுக்கு கல் குவாரில வேலைக்கு சேர்ந்தா கூட, காசாச்சும் கொடுப்பாணுக!

“பொறாம புடிச்ச பொங்கப்பானை, இதல்லாம் உனக்கு புரியாது... இப்போ சிங்கிளா போறேன், வரும்போது டபுள்ஸா வருவேன்...

“மொதல்ல உயிரோட வர்றியான்னு பார்க்கலாம்... ட்ரைன்ல பாத்து பேசிட்டதால உடனே லவ் ப்ரப்போஸ் பண்றதல்லாம் அடிமுட்டாள்த்தனம்... அவன் ஓரியன்டேசன் என்னன்னு முதல்ல தெரியுமா?

“டேய், இதல்லாம் நானா பண்ணல... கடவுள் பண்ண வைக்குறான்... எதுக்காக டீவில ஒரு வருஷமா அவன நான் பாக்கணும்? அன்னிக்குன்னு ஏன் ட்ரைன் பத்து நிமிஷம் லேட்டா கிளம்பனும்? அதே கோச்ல என் பக்கத்துல அவன் ஏன் ட்ராவல் பண்ணனும்?... இதல்லாத்தையும் சரியா லிங்க் பண்ண கடவுளுக்கு, அடுத்து என்ன பண்ணனும்னும் தெரியும்... கடவுள் காரணமில்லாம எதையும் செய்யமாட்டார்டா... சுவற்றில் மாட்டியிருந்த முருகன் படத்திற்கு ஒரு கும்பிடு போட்டுக்கொண்டான்...

வெங்காயத்தை சட்டியில் கொட்டி தாளித்துக்கொண்டே, “கடவுள் பண்றது இருக்கட்டும், நாளைக்குள்ல க்ளைமாக்ஸ் முடிவு பண்ணனும்னு தெரியும்ல?.. இல்லைன்னா ப்ரட்யூசர் பொட்டிய தூக்கிகிட்டு வேற பக்கம் போய்டுவான்... என்றான்...

“பண்ணிடலாம்.. பண்ணிடலாம்.. ... ஆடையை மீண்டும் ஒருமுறை சரிசெய்தபடி வீட்டைவிட்டு கிளம்பினான் வசந்தன்...

                                     **************
அந்த பிரபல ஸ்டூடியோவின், செம்ம சிங்கர் செட்டை அடைந்தபோதும் ஒருமுறை தலையை சரிசெய்துகொண்டான் வசந்தன்.. தொகுப்பாளர்கள் கடைசிகட்ட மேக்கப்பில் ஆழ்ந்திருந்தனர், இன்னொரு பக்கமோ குழந்தைகளின் பாட்டிகளுக்கு நடனமாட கற்றுக்கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது... இடமும் வலமுமாக வசந்தனின் கண்கள் கருப்பு சட்டையை நோக்கி அலைபாய்ந்தது....

“ஹலோ வசந்தன்... எப்டி இருக்கீங்க?... என்ன திடீர் சர்ப்ரைஸ்? வசந்தனை பார்த்ததும் வேகமாக எழுந்துவந்து கைகுழுக்கினான் கவின்...

“இல்ல... வேற வேலையா வந்தேன், அதான் உங்களையும் பார்க்கலாம்னு உதட்டினை  ஈரப்படுத்திக்கொண்டு பேசினான்...

“ரொம்ப சந்தோசம்... பொதுவா ரயில் சிநேகிதம், பிளாட்பாரத்தோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க... நம்ம விஷயத்துல ஷூட்டிங் ஸ்பாட் வரைக்கும் வந்திடுச்சு... ஆமா, க்ளைமாக்ஸ் பிக்ஸ் பண்ணிட்டிங்களா?

“இன்னும் இல்ல, சீக்கிரம் சரி பண்ணிடலாம்... உங்களுக்கு சூட் முடிஞ்சிடுச்சா?

“ஒரு ஷெட்யூல் ஓவர், அடுத்தது இன்னும் பத்து நிமிஷத்துல... நேரத்தை பார்த்துக்கொண்டான்...

அப்படியானால் இன்னும் பத்து நிமிடங்களுக்குள் காதலை சொல்லிடனும்... நெஞ்சில் படபடப்பு அதிகமானது, அனிச்சையாக வியர்வையும் சுரந்து வழிந்தது... அடி வயிற்றுக்குள், உள்ளுறுப்புகளை யாரோ பிசைவதை போல உணர்ந்தான்...

அந்த யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில்தான், ஒரு பெண் கவினுடன் மிக நெருக்கமாக பேசிக்கொண்டிருந்தாள்... அவன் காதுகளுக்குள் ஏதோ சொல்வதும், அதற்கு அவள் செல்லமாக அடிப்பதுமாக காட்சிகள் அரங்கேறின... அட முருகா!.. இதென்ன புது சோதனை?...

ஒருவழியாக அவள் அங்கிருந்து விலகியபிறகு, “இவங்க யாரு கவின்? தயக்கத்துடன் கேட்டான்...

“நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுப்பா, உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன்...மிக இயல்பாக வெடிகுண்டை வீசினான்...

 “அன்னிக்கு யாரையும் லவ் பண்ணலன்னு சொன்னிங்க? அப்பாவியாக கேட்டான்...

“இன்னிக்கும் அதேதான் சொல்றேன்... திவ்யா என் பேமிலி ப்ரென்ட், அரேஞ்சிடு மேரேஜ்தான்... இனிமேதான் லவ் பண்ணனும்... ரோபோ மாதிரியே இருந்துட்டதால எப்டி லவ் பண்றதுன்னு கூட தெரியல.. சினிமாக்காரங்கதான் அந்த விஷயத்துல அசத்துவீங்களே, இனிமே உங்ககிட்டதான் அதுக்கு ஐடியா கேட்கணும்! சிரிப்பும் பேச்சுமாக சொல்லி முடித்தான்... அனைத்தையும் சோகத்தை சுமந்த முகத்துடன், அப்பாவியாக பார்த்துக்கொண்டிருந்தான் வசந்தன்...

‘டமால், டுமீல் வசந்தனின் இதயம் நொறுங்கியதாக நினைத்திட வேண்டாம்... செம்ம சிங்கர் செட்டில் சிறப்பு விருந்தினரின் வருகைக்கு வெடி வெடித்திருக்கிறார்கள்...

“ஓகே வசந்தன்.. சூட் ஸ்டாட் ஆகிடுச்சு, நான் கிளம்புறேன்! மீண்டும் கைகொடுத்தபடி விடைபெற்றான் கவின்...

ஸ்தம்பித்து நின்றான் வசந்தன்... ‘டமால், டுமீல்.. இது வசந்தனின் இதயம்தான்...

அலைபேசி அழைத்தது... அழைப்பில் மணிகண்டன்...

“என்னடா என்னாச்சு? பரபரப்பாக கேட்டான்...

“நாசமாபோச்சு... அவனுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சாம்...

“இதைத்தான் அப்பவே சொன்னேன்... இதல்லாம் தேவையா?.. ஸ்ட்ரைட் பையனை லவ் பண்றத இனியாச்சும் நிறுத்துங்கப்பா... பொறுமையாக சொன்னான் மணிகண்டன்...

“க்ளைமாக்ஸ்ல மெசேஜ் சொல்றியாக்கும்?... கதை முடியுறப்போ அதை நானே சொல்லிக்கறேன், உனக்கு வேற டயலாக் இருந்தா பேசு! மனமுடைந்து நிற்கும் நண்பனுக்கு ஆறுதல் சொல்லாமல் அட்வைஸ் செய்வதன் கோபம், வசந்தனின் வார்த்தைகளில் தெரிந்தது..

“அட லூசு அதுக்கு சொல்லலடா... ஓரியன்டேசன் தெரியாம ப்ரப்போஸ் பண்றதல்லாம் எவ்ளோ முட்டாள்த்தனம்... உன் முட்டாள்த்தனத்துக்கு கடவுளையும் சேர்த்துகிட்ட... என்னமோ கடவுள் எல்லாத்தையும் காரணமாத்தான் செய்வார்னு சொன்ன, எல்லாம் போச்சா? இதைத்தான் வசந்தன் சொல்வான் என்று ஏற்கனவே தயார் செய்யப்பட்ட உரைபோல கடகடவென்று பேசினான் மணி...

“இப்பவும் கூட கடவுள் காரணமாத்தான் செஞ்சிருக்கார்...

“இன்னும் நீ திருந்தலையா?.. என்ன காரணம்?

“என் கதைக்கு சூப்பர் க்ளைமாக்ஸ் கிடைச்சிடுச்சு...

“அப்டியா என்ன?

“ஆமா... ஹீரோ ப்ரப்போஸ் பண்ணப்போறப்போதான், ஹீரோயின் ஒரு லெஸ்பியன்னு அவனுக்கு தெரியவருது! நிதானமாய் சொல்லிமுடித்தான் வசந்தன்... (முற்றும்)