Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Thursday 1 August 2013

"இதுவும் கடந்து போகும்....!" - சிறுகதை...



வழக்கம்போல இன்றும் சரியாக 4.50 மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது மதுராந்தகன் சாருக்கு... விழித்த நொடியில், அவருடைய வலது கை அலைபேசியை துழாவி எடுத்து, முகத்திற்கு நேராக கொண்டு வைத்து அதிலிருந்த திருச்செந்தூர் முருகன் முகத்தில் கண்களை விழிக்கும்படி செய்தது.... சில நிமிடங்கள் படுக்கையை விட்டு எழ மனமில்லாமல் படுத்தபடியே சிந்தனைகளை ஓடவிட்டார்... அரசாங்க உத்தியோகம், கை நிறைய சம்பளம், அதை தாண்டிய சலுகைகள் எல்லாமும் மது சாரை பார்க்கும் நபர்களுக்கு நிச்சயம் பொறாமை ஏற்படுத்தாமல் வைத்திடாது... ஆனால் ஏனோ இருபது வருடங்களாக ஒரே அலுவலகம், ஒரே கோப்புகள், ஒரே பிரச்சினைகள் என்று எல்லா “ஒரே”யும் சலிப்பை ஏற்படுத்திவிட்டது அவருக்கு.... இந்த “ஒரே” பட்டியலில் இன்னும் எவ்வளவையோ சேர்க்கலாம், அருகில் சப்தமில்லாமல் படுத்திருக்கும் மனைவியை கூட பலநேரம் அவர் அதில் சேர்த்ததுண்டு.....
மனைவியை தொந்தரவு செய்யக்கூடாது என்கிற எண்ணத்தில் மெல்ல போர்வையை விலக்கி, கட்டிலை விட்டு இறங்கியவர், செல்போன் வெளிச்சத்தில் பாத்ரூமை நோக்கி முன்னேறினார்... இடையில் ஒரு மேசை மீது வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில் கீழே விழ, அந்த சத்தம் நிசப்தமான சூழலை கொஞ்சம் கலவரப்படுத்தியது.... மனைவியின், “ப்ச்....” சத்தம் மதுவை முகம் சுருங்க வைத்தது... எப்படியோ பாத்ரூமை அடைந்து உள்ளே விளக்கை போட்டபிறகுதான் அவருக்கு கொஞ்சம் நிம்மதி....
முகத்தை கழுவி, துண்டால் துடைத்த மது, சிறிது நேரம் அங்கு வைக்கப்பட்டிருந்த ஆளுயர கண்ணாடியில் தன்னை உற்று நோக்கினார்... நிஜமான வயதென்னவோ, ஐம்பதுகளை தொட்டிட இன்னும் இரண்டு வருடங்களாக இருக்கக்கூடும்... ஆனால், நரையை நுரை போட்டு கருப்பாக்கி, முகத்தில் பல வண்ண பூச்சுகள் பூசி மாசு மருக்களை நீக்கி, சிகரட் பிடிக்காமல் உதட்டின் இளஞ்சிவப்பை பாதுகாத்து எப்படியோ பத்து வயதை குறைத்து காட்டிவிடுவார்.... ஆனாலும், அந்த நாற்பது வயது தோற்றத்தை, இந்த விஞ்ஞானத்தாலும், அலங்கார அறிவியலாலும் மாற்றிட முடியவில்லை... எவ்வளவோ உடற்பயிற்சி, சில கிலோமீட்டர்கள் நடைபயிற்சியை தாண்டியும் லேசாக எட்டிப்பார்த்த தொப்பையை அவரால் அகற்றமுடியவில்லை.... கண்ணாடி முன், தன்னை உற்றுப்பார்த்த மதுவிற்கு, தன்னுடைய முதுமை எரிச்சலை ஏற்படுத்தியது...
காரைக்கால் அம்மையாருக்கு கடவுள் அருளால் முதுமை வந்தது போல, முதுமை இவ்வளவு வேகமாக அவரையும் தொற்றிக்கொண்டதாக ஒரு எண்ணம் அவருக்குள்.... ஒருவழியாக உடையை மாற்றிக்கொண்டு, நடைபயிற்சிக்கு ஆயத்தமாகி வெளியே வந்தார்... இன்னும் வழக்கமாக தன்னுடன் பயிற்சிக்கு வரும் நாற்பது வயதுகளை தாண்டிய நண்பர்கள் இன்று வரவில்லை... அதுவும் நல்லதுதான்... நடைபயிற்ச்யில் கூட “பெண்ணின் திருமணம், பையனின் கல்லூரி, டையபெட்டிஸ், பென்ஷன்” போன்ற விஷயங்களை பற்றியே பேசி, முதுமையை அடிக்கடி உணரவைத்துக்கொண்டே இருப்பார்கள்... இன்றைய தனிமை ஒருவகையில் அவருக்கு ஒரு சுதந்திரத்தை கொடுத்தது என்றுதான் சொல்லவேண்டும்....
அவசர அவசரமாக அரை மணி நேரத்திற்குள் நடைபயிற்சியை முடித்துவிட்டு ஆறு மணிக்குள் வீட்டை அடைந்துவிட்டார்... மது வீட்டிற்குள் நுழைவதற்கும், வாசலில் “சார்... பால்” என்ற சத்தம் ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது... எல்லா வீட்டிலும், “அம்மா.... பால்” என்றே சொல்லும் அந்த நபர், இங்கு மட்டும் “சாரை” அழைப்பது மதுவின் மனதிற்கு இதமாகவே இருந்தது... முகத்தை ஒரு துண்டால் துடைத்துக்கொண்டு, கதவை திறந்து வெளியே போனார்... மதுவை பார்த்ததும் ஒரு இயல்பான புன்னகையை உதிர்த்தான் பால் போடும் இளைஞன்.... இருபதுகளில் வயதிருக்கலாம், கலையான முகம்.... அதிகாலை விழிப்பால் சிவந்து போன கண்களும், சைக்கிளில் போகும்போது எதிர்காற்றை எதிர்கொண்டதில் களைந்த முடியுமாக, கைலியுடன் கையில் பாலோடு நிற்கும் அந்த இளைஞன் ஒருசில வருடங்களாகவே மதுவின் மனதிற்குள் ஒரு சபலத்தை உண்டாக்குகிறான்....
பாலை வாங்கும்போது, லேசான அந்த “கை உரச”லுக்கு மேல் இதுவரை எதையும் முயற்சி செய்யாத மது, மனதிற்குள் ஆசைகளால் நிரம்பிய ஒரு கோட்டையையே கட்டி வைத்திருக்கிறார்.... அவ்வப்போது அவர் மனதிற்குள் ஒரு முட்டாள்த்தனமான கற்பனை எண்ணமும் உண்டாகும்.... திருமணமாகி முதல் இரவில், கையில் பால் குவளையுடன் அறைக்குள் வந்து நின்ற மனைவிக்கு பதிலாக, இந்த பால்கார இளைஞன் வந்து நின்றிருந்தால் எப்படி இருக்கும்? என்பதே அந்த ஒரு விபரீத கற்பனை.... நம்மை பொருத்தவரை அது ஒரு கற்பனை, மதுவை பொருத்தவரை அது பெருமூச்சு விடவைத்திடும் ஒரு நிறைவேறாத ஆசை...
அந்த ஆசையின் தொடர்ச்சியாக, துணை ஆசைகளாக நிறைய பகல் கனவுகளும் வருவது ஒரு சங்கிலித்தொடராக அமைவதுண்டு.... இப்போதும் கூட அடுப்பில் பாலை வைத்துவிட்டு, அந்த கனவுகளில் மூழ்கிவிட்டார் மது...
கையில் பால் குவளையுடன் நிற்கும் அந்த இளைஞனை, மலர்கள் நிரம்பிய கட்டிலில் கையால் அணைத்து உட்கார வைக்கிறார்.... அவன் வெட்கத்தால் சிரிக்கிறான்... ஆனால் ஏனோ இப்போதும் அவன் கண்கள் சிவந்தும், தலைமுடி கலைந்துமே இருக்கிறான்.... அப்படியே அவனை பார்த்து பழக்கப்பட்டதன் விளைவாக, கனவில் கூட அந்த தோற்றம் மாறாமல் தெரிகிறான்... அதற்காக முதல் இரவில் கூட அதே பச்சை நிற கோடு போட்ட கைலிதானா?....
அந்த இளைஞனின் தாடையை தன் விரல்களால் பிடித்து, முகத்தை மேலே உயர்த்தினார் மது... அவனோ இன்னும் வெட்க மிகுதியில், தலையை கவிழ்த்தான்.... அப்படியே அவனை, அந்த வெட்கத்தோடு கட்டி அணைத்து, முகத்தை மேலே உயர்த்தி, தன் முகத்தை அவன் அருகில் கொண்டு சென்ற நேரம்.....
“என்ன மரம் மாதிரி நிக்குறீங்க?” மனைவியின் குரல்.... அவள் எங்கே இந்த முதலிரவு அறைக்குள்?....
“ஐயோ... அட ஆண்டவா!.. இன்னிக்கும் பால் பொங்கி ஊத்திடுச்சே?” மனைவி பொங்கிய பால் சட்டியை தூக்கி வைத்தபோதுதான் மதுவிற்கு சுயநினைவே வந்தது... அடுப்பில் பாலை வைத்ததோடு, கனவுலகம் சென்றுவிட்ட மது, பால் பொங்கியதால் மனைவி சத்தம் போட்ட பிறகுதான் சுயநினைவை அடைகிறார்.... இது இன்று மட்டுமல்ல, பெரும்பாலான நாட்களில், அந்த பால்கார இளைஞனுக்கு முத்தம் கொடுக்கும் வேளையில் சரியாக “சிவபூஜை கரடி”யாக உள்ளே நுழைந்துவிடுவது மனைவியின் வாடிக்கையாகவே ஆகிவிட்டது...
“உங்கள யார் இதல்லாம் பண்ண சொல்றது?... சும்மா இருந்தாவே எனக்கு நீங்க செய்ற பெரிய உதவிதான்... உங்களுக்கு சும்மா இருக்குறதுதான் ரொம்ப பிடிக்குமே!”
மதுவின் இதயத்தில் ஊசியால் குத்தியதை போல ஒரு உணர்வு... அவரால் பதில் பேச முடியவில்லை.... “உங்களுக்கு சும்மா இருக்குறதுதான் ரொம்ப பிடிக்குமே!” இந்த வார்த்தைகளின் வீரியம் தெரியாமல் அவள் பேசுகிறாளா?.... ஆரம்ப காலத்தில் இப்படி வார்த்தைகளால் சுட்டிடும் மனைவியை எதிர்த்து மதுவும் பேசி, அது ஒரு மிகப்பெரிய உலகப்போர் அளவுக்கல்லாம் சென்றிருக்கிறது.... ஆனால், அதனால் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ மதுதான்...
ஆம்!... இப்போது அவர் அமைதியாகி விட்டதால், மனைவியும் அதோடு விட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்க தொடங்கிடுவார்... ஒருவேளை, “என்ன ரொம்ப பேசுற?... நான் சும்மா இருந்துதான் நீ இப்டி நகையும், பட்டு சேலையுமா மினுக்கிகிட்டு திரியுறியா?” என்று கேட்டுவிட்டால், அந்த பேச்சு இறுதியாக வந்து நிற்கும் இடம் எது தெரியுமா?...
“முதல்ல ஆம்புள மாதிரி நீங்க நடந்துக்க முயற்சி பண்ணுங்க, அப்புறமா இப்டி ஆளுமை பற்றி பேசலாம்.... பொம்பளைய தொட பயப்புடுறவனல்லாம் ஆம்புள மாதிரி பேசக்கூடாது”
இந்த இடத்தில் வந்து நிற்கும் அந்த விவாதத்தை தவிர்க்கும் பொருட்டே, மது அன்றைய நாளிதழை எடுத்து கையில் வைத்துக்கொண்டே பால்கனி சென்றுவிட்டார்... செய்திகளில் மனதை ஒருவழியாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்....
“தங்கம் விலை கிடுகிடு உயர்வு”.... ரொம்ப அவசியம்....
“பிரதமர் இன்று பீகார் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்....” .... அவருக்கு பேசவல்லாம் தெரியுமா?...
“லண்டனில் முட்டை வீசி எரியும் போட்டி கோலாகலமாக நடைபெற்றது...” ... இதுக்கு செந்திலோட டிக்கிலோனாவே நல்ல விளையாட்டு....
நாளிதழை மூடி வைத்துவிட்டு, குளித்து முடித்து அலுவலகத்திற்கு பரபரப்பாக கிளம்பினார் மது.... சரியாக அவர் அந்த அரசு அலுவலகத்தை அடைந்தபோது மணி 8.55.... நேரம் தவறாமைக்கு பலரும் உதாரணமாக காட்டுவது மதுவைத்தான்....
“மது சார் வந்தாச்சா?... அப்போ மணி ஒன்பது” “மது சார் சாப்பிடுறாரா?... அப்போ மணி ஒன்னு”, “மது சார் வீட்டுக்கு கிளம்பிட்டாரா?... அப்போ மணி ஆறு”... இப்படி கையில் கட்டியிருக்கும் கடிகாரத்தை நம்புவதைவிட, பலரும் நம்புவது மதுவின் நடவடிக்கைகளைத்தான்.... உள்ளே சென்று வழக்கமான கோப்புகளை சரிபார்த்து, கையொப்பமிட்டு வேலைகளில் மூழ்கினார்....
ஆனாலும், அவர் மனதிற்குள் ஒரு இனம் புரியாத குழப்பம் அவரை வாட்டி வதைத்தது.... “ஏன் என் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு?”.... அலுவலக பணியாளர் காபியை குவளையில் வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டான்....
“ஒரு கே’வான நான் பெண்ணை திருமணம் செஞ்சது அவ்வளவு பெரிய தப்பா?... ஒரு நல்ல கணவனா, ஒரு நல்ல தகப்பனா, ஒரு நல்ல குடும்ப தலைவனா நான் மத்த ஆண்களைவிட நிறைய செய்றேன்... ஆனால், அவளோட பருவத்து ஆசைகளை பூர்த்தி செய்ய முடியாததுக்கு இப்படி தினம் தினம் தண்டனையா?... திருமணமான ஒரே வருஷத்தில் அவசரமா ஒரு பிள்ளையும் பெத்தாச்சு, ஆனாலும் இப்போவரை மனைவியின் ஒருவித எரிச்சலுக்கு உட்படுபவனாகவே இருப்பது எதனால்?... குடும்பத்துக்காகவும், மனைவிக்காகவும் இந்த பத்து வருஷங்கள்ல மற்ற கே தொடர்புகளை கூட துண்டிச்சாச்சு, ஆனாலும் என் அக்கறையை இந்த குடும்பம் புரிஞ்சுக்க மறுக்குது” மேசையில் வைத்திருந்த காபி ஆவியாகிக்கொண்டு இருந்தது, மெல்லிய ஆடை படர்ந்து காபியின் நிர்வாணத்தை மறைத்துக்கொண்டு இருக்கிறது....
அறையின் சுவர்களில் ஒரு பக்கம் காந்தியும், மறுபக்கம் அம்பேத்கரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.... மேசை மீது வைக்கப்பட்டிருந்த கோப்புகள் பறக்காமல் இருந்திட, வைக்கப்பட்டிருந்த டேபிள் வெய்ட் அவர் கைகளுக்குள் மாட்டி பிசையப்பட்டுக்கொண்டு இருக்கிறது.... நிசப்தமான அந்த அறையின் சூழலில், தலைக்கு மேல் “க்ரீச்.... க்ரீச்” சத்தத்தோடு சுற்றும் மின்விசிறி மட்டும்தான், சத்தமாக தன் ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டு இருக்கிறது...
அறையின் கதவு லேசாக திறக்கப்பட்டு, வெளியிலிருந்து ஒரு தலை மட்டும் அறைக்குள் பிதுங்கியபடி, “மது சார், உள்ள வரலாமா?” என்றது....
“வாங்க ராகவன்...”
அந்த “வாங்க”வில் ஒரு “வந்துட்டாரா!” சலிப்பு ஒளிந்திருந்தது.....
நடுநெற்றியில் மூக்கின் பாலம் முதல், உச்சி வகிடு வரை நீண்டிருந்த செந்தூரம் அலுவலகத்தை பொருத்தவரை ராகவனின் ஸ்பெஷல் முத்திரை....
“என்னாச்சு மது?... காபி’ல ஆடை படர்ந்திடுத்து, கவனிக்கலையோ?”
அவசரமாக, அதை அப்படியே வாயில் கவிழ்த்து, காபி குடிக்கும் கடமையை நிறைவு செய்தார் மது... ரசித்து சாப்பிட்டல்லாம் அவரை பொருத்தவரை வருடக்கணக்கில் ஆகிவிட்டது...
“ஏன் ஒரு மாதுரி இருக்கேள்?... எப்பவும் அலங்காரம் பண்ணின அம்மன் சிலை மாதிரி பளிச்சுனு இருப்பேள், இன்னிக்கு கவனிக்காம விட்ட தலைவர் சிலை மாதிரி சோர்ந்து இருக்கேளே?”
இது என்ன சம்மந்தமே இல்லாத உவமை?.... எதுகை மோனை வருவதற்காக, இவர் உவமைகளை கொலை செய்வது வாடிக்கையான ஒன்றுதான்... ஆனாலும், இப்போ தன்னை விசாரிக்கவாவது ஒரு ஜீவன் இருப்பதில் மதுவிற்கு ஒரு மன நிம்மதி....
“வாழ்க்கையே வெறுத்திடுச்சு சார்... வாழ்றதில் ஒரு அர்த்தமே இல்லையோன்னு தோணுது!”
“என்ன மது, நீங்க இப்டி பேசலாமோ?.... நல்ல குடும்பம், பேஷான உத்தியோகம், நன்னா இருக்கேள், நோக்கு என்ன ப்ராப்ளம்?”
“அதான் சார்.... அதான் ப்ராப்ளமே... மத்தவங்களுக்காகவே வாழ்றது சரியா?... எனக்கான வாழ்க்கைய நான் வாழவே இல்லையே?... அதே நேரத்துல, அப்டி மத்தவங்களுக்காக வாழ்றப்போ கூட, அவங்களயும் திருப்தியா வாழவைக்க முடியலையே?”
முடிகளை மறந்த முன்வழுக்கையில் கையை வைத்து தடவியபடியே, “நீங்க என்ன சொல்ல வரேல்னு நேக்கு புரியல... ஆனால், ஒன்னு புரியுறது, நோக்கு நிம்மதி இல்லை... ஒன்னு தெரிஞ்சுக்கோங்கோ, உங்க வாழ்க்கை உங்க கைலதான் இருக்கு... இன்னிக்கு ஒருநாள் நீங்க உங்களுக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழ்ந்து பாருங்கோ.... உங்களுக்கு தோன்றத செய்யுங்கோ, உங்களுக்கு பிடிச்சத சாப்பிடுங்கோ.... மத்த எல்லாத்த பத்தியும் மறந்திடுங்கோ, நாளைக்கு வந்து இந்த மாற்றம் எப்டி இருந்துதுன்னு சொல்லுங்கோ” சிரித்தார் ராகவன்...
மதுவின் கண்களில் ஒரு தேஜஸ் தெரிந்தது.... ஏதோ யோசித்தார், சட்டென அவரை அறியாமல் அவர் முகத்தில் புன்னகை அரும்பியது....
மதுவின் முகமாற்றத்தை கவனித்த ராகவன், இதுதான் நேரமென்று, “இந்த சந்தோஷத்தில் அப்படியே இந்த பைல்’லையும் கையெழுத்து போட்ருங்கோ, நானும் சந்தோஷமா இருப்பேன்” பவ்யமாக அந்த கோப்பின் பிரதியை காண்பித்தார்....
அவர் கொடுத்த ஆலோசனைக்கு, விலை இந்த க்ளியரன்ஸ்’க்கான கையெழுத்து போல.... பலமுறை திருத்தப்பட்டு, பலநாட்கள் அலைக்கழிக்கப்பட்டு இறுதியாக ஒரு வாரம் கடந்து கிடைக்கவேண்டிய கோப்பு, இப்போது மதுவின் மன ஒப்புதலால், ஒரே நிமிடத்தில் கையெழுத்தாகிவிட்டது... ராகவனும் வாய் முழுக்க புன்னகையோடு, வெற்றிலை கரை மிகுந்த பற்கள் வெளியில் எட்டிப்பார்த்ததோடு அந்த அறையை விட்டு வெளியேறினார்....
மாலை ஆறு மணிக்கு, அலுவலக மகிழுந்தில் வீட்டை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்தார் மதுராந்தகன்...
வண்டி சிக்னலில் நின்றபோது, சட்டென அவருக்கு “இன்னிக்கு ஒருநாள் உங்களுக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழ்ந்து பாருங்களே!” ராகவன் சொன்னது நினைவுக்கு வந்தது....
“மகேஷ், வண்டிய கொஞ்சம் நிறுத்துங்க.... நான் இங்கயே இறங்கிக்கறேன், நீங்க வீட்டுக்கு போகலாம்”
ஓட்டுனர் கொஞ்சம் தயங்கியபடியே, “சார்.... மேடம்...” என்று பம்மினார்... உயரதிகாரியான மதுவே மனைவியை கண்டு நடுங்கும்போது, ஓட்டுனர் “மேடம்’’க்கு பயப்படுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை....
“நான் சொல்லிக்கறேன், நீங்க போங்க... இங்க ஒரு க்ளைன்ட்ட பாக்கத்தான் போறேன்... நீங்க போங்க” ஒருவழியாக மகேஷை அனுப்பிவிட்ட மது, நிம்மதியாக சுதந்திர காற்றை சுவாசித்தார்...
 
அவருக்கான வாழ்க்கையை வாழ்வது சரி, எங்கே எப்படி?.... காலம் காலமாக கே கூடல்கள் அதிகம் நிகழும் பேருந்து நிறுத்தத்தின் கழிவறை வாசலில் நின்றார்... அழுக்கு சட்டை மனிதர்களுக்கும், செம்மண் படர்ந்த வேட்டியினருக்கும், டாஸ்மாக் குடிமகன்களுக்கும் மத்தியில் ஏரோ ஷர்ட் அணிந்த டிப்டாப் மதுராந்தகன் கொஞ்சம் அந்நியமாகத்தான் தெரிந்தார்.... பேன்ட்’க்குள் நுழைத்திருந்த சட்டையை வெளியே எடுத்துவிட்டார், முழுக்கை சட்டையை முட்டிக்கை வரை மடித்துவிட்டார்....
கழிவறை சுவற்றில், “நாளைய இந்தியாவின் எதிர்காலம், இளைஞர்கள் கையில்... சிலநேரங்களில் அடுத்தவர்களின் கையிலும்...” என்று யாரோ ஒரு மது குடித்து, மதி மயங்கிய கண்ணதாசன் எழுதியிருக்கிறான்... உள்ளூற அதை படித்து சிரித்தார் மது....
கழிவறையின் சிறுநீர் நெடி, சிறுநீரகம் வரையில் நுழைந்து நிலைகுழைய வைத்தது... உள்ளே வெகுநேரமாக சிறுநீர் கழிக்கும் தோரணையில் நிற்கும் ஒரு ஆசாமி, மதுவை பார்க்கிறான்.... அவனுக்கும் நாற்பது வயதிருக்கலாம்.... சிறுநீர் நெடியை தாண்டியும், அவன் குடித்த சரக்கின் நெடியை அங்கிருந்தவர்களால் உணரமுடிந்தது... வரும் வழியில் எங்கோ கீழே விழுந்திருக்கக்கூடும், முட்டியில் சிராய்ப்பும், ரத்தத்துளிகளும் தெரிந்தது.... மது என்ற வயதான புலிக்கு, இந்த புல்லை தின்றிட மனமில்லை.... வேட்டைக்கு மான் கிடைக்காவிட்டாலும், ஆற்றில் கரை ஒதுங்கிய மீனாவது தேவைப்படுகிறது இந்த புலிக்கு.... அதனால் அவசர அவசரமாக அந்த இடத்தை விட்டு அகன்று, பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த மக்கள் கூட்டத்தில் கரைந்தார் மதுவும்....
அந்தி மாலையை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் காரிருள் பொழுது.... நகரம் மின்விளக்குகளின் வெளிச்சத்தில் இயங்கிக்கொண்டு இருக்கிறது.... தன்னோடு நிற்கும் யாவரும் ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்ந்திருப்பதை உணர முடிகிறது... சட்டைப்பைக்குள் வைத்திருக்கும் நான்கு நூறு ரூபாய் நோட்டுகளை, பதினெட்டாவது முறை எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு மிடில் கிளாஸ் மாதவன், பவர் சோப்புக்கு இனாமாய் வரவேண்டிய சோப்பு டப்பாவை காணாமல் பதறிக்கொண்டிருக்கும் ஒரு சிவப்பு சேலை பெண்மணி, செல்போனில் விரல்களால் நடனமாடியபடியே ஏதோ ஒரு உலகப்போரை தீர்க்கும் யோசனையில் நிற்கும் ஒரு கல்லூரி மாணவி.... இவர்களை பற்றிய எந்த ஒரு கவலையும் இல்லாமல், “அண்ணன் அழைக்கிறார்... அலைதிரண்டு வாரீர்” சுவர் விளம்பரத்தில் சவுகாசமாக ஒற்றை காலை தூக்கியபடி சிறுநீர் கழிக்கும் ஒரு “ஜெர்மன் செப்பர்ட்-நாட்டு நாய்” கிராஸ் வகை நாய்.... இந்த விஷயங்களுக்கு மத்தியில், சாலையில் செல்லும் அழகான வாலிபர்களை கண்களால் காதலித்துக்கொண்டிருக்கும் மதுராந்தகன் என்கிற அரசு உயர் அதிகாரி....
சரியாக அந்த நேரத்தில் பூரிப்பான மனதுடன் நின்ற மதுவின் முகத்தில், பூரிக்கட்டையால் அடித்த ரியாக்சனை ஏற்படுத்தியவர் அங்கு வந்த ராகவன்....
அதே முன்நெற்றியை ஆக்கிரமித்த செந்தூர நாமம், வெற்றிலை கரை நிரம்பிய பல் வரிசை... “என்ன மது சார், இங்க நின்னுட்டிருக்கேள்?... கார் என்னாச்சு?”
“ஒருவேலையா வந்தேன் சார்.... அதான்...” வார்த்தைகளில் எரிச்சல் தெறித்தது....
“சரி இருக்கட்டும்... இன்னொரு க்ளியரன்ஸ் விஷயமா உங்களான்ட்ட பேசனும்... இண்டஸ்ட்ரியல் ஆபிசர்ஸ் எல்லாம் கூட வர்றா... அவாளோட கலந்து பேசி இன்னொரு டீல் முடிச்சிட்டா பேஷா இருக்கும்... என்ன சொல்றேள்?”
அந்த நேரத்தில் ஒரு பேருந்து அங்கு வந்து நிற்க, ஜனத்திரள் முண்டி அடித்துக்கொண்டு அதில் ஏறியது.... சட்டென மதுவிற்கு ஒரு யோசனை வந்தது...
“ராகவன் சார், இந்த பஸ்’ல நீங்க போறிங்களா?”
“இல்லையே....”
“அப்போ நான் போறேன்...” என்று சொல்லிவிட்டு படக்கென்று ஓடும் பேருந்தில் தாவி ஏறிவிட்டார் மது.... கணப்பொழுதில் நடந்த அந்த நிகழ்வை சற்றும் எதிர்பார்க்காத ராகவன், முன்வழுக்கையில் தன் விரல்களால் கோடுபோட்டுக்கொண்டு நின்றார்....
பேருந்து ஏறியதில் மனம் நிம்மதியடைந்து பெருமூச்சு விட்டார் மது... இது என்ன பேருந்து? எங்கே போகுது? என்றல்லாம் தெரியாமல் ஏறிவிட்டாலும், பேருந்து முழுக்க கட்டிளம்காளைகள் சிதறிக்கிடந்தனர்...
எங்கே செல்லும் பேருந்து இது?... பேருந்தின் பக்கவாட்டில் வரிசையாக எழுதப்பட்டிருந்த இடங்களின் பெயர்கள், தலைகீழாக தெரிந்தது.... மெல்ல ஒவ்வொரு எழுத்தாக அடையாளம் கண்டார்... “ர்..க...ந..ஆர்...ஜி...எம்...”... கண்டுபிடித்தாச்சு, எம்.ஜி.ஆர் நகர்  செல்லும் பேருந்துதான் இது....
“எங்க போவனும்?” நடத்துனர் வியர்வை துளிகளுக்கு மத்தியில் கேட்டார்....
“எம்.ஜி.ஆர் நகர்” என்றபடி ஒரு நூறு ரூபாய் தாளை நீட்டினார்...
“ஏழு ரூபா டிக்கெட்டுக்கு நூறு ரூபாயா?... சில்லறையா கொடு சார்...”
சட்டைப்பைக்குள் துழாவினார்... 500, 1000 ரூபாய் தாள்கள் என்று அதைவிட பெரிய தாள்களாகத்தான் இருந்தன... சில்லறை பெயரளவில் கூட இல்லை, மனதில் மட்டும்தான் சில்லறை எண்ணங்கள் இருக்கிறது....
“இல்லப்பா.... இதான் இருக்கு” பவ்யமாக பதில் சொன்னார் மது...
“இப்டி வர்ற ஆளெல்லாம் அம்பானி மாதிரி நோட்டா கொடுத்தா, நாங்க சில்லறைக்கு எங்க போறது?” பேருந்து கூட்டத்தால் உண்டான கசகசப்பு, நடத்துனரின் வாயில் எரிச்சல் வார்த்தைகளாக வெளியாகின... இந்த நிகழ்வால் ஒட்டுமொத்த பேருந்து பயணிகளாலும் கவனிக்கப்பட்டவராகிவிட்டார் மது... கொஞ்சம் தலையை கவிழ்த்தபடி, அந்த சூழலை எதிர்கொள்ள தயங்கியபடி நின்றார்... அப்போது திரும்பி பார்த்த பேருந்து பயணிகளில் ஒருத்தன் முகம், சட்டென அவர் மனதில் தீப்பொறி பறக்க செய்தது...
அடடா!... என்ன முகம்.... சோர்ந்து போன முகமானாலும், பார்ப்பவர்களை உற்சாகமூட்டும் பொலிவான முகம்... அவனருகில் செல்ல மதுவின் மனம் துடித்தது.... நடத்துனரால் உண்டான ஒரு ,மன இறுக்கம் இப்போது, இளகிய நெய் போல வளவளப்பானது....  இன்றைக்கு விட்டால் இது போன்ற வாய்ப்பும் அரிது என்பதால் கூட்டத்திற்குள் புகுந்து மெல்ல அந்த இளைஞன் அருகில் செல்ல எத்தனித்தார்... இவர் கூட்டத்திற்குள் நசுங்கி நடக்கையில் தடுமாறுவதை கண்டு, இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு கல்லூரி மாணவி...
“இங்க உக்காருங்க சார்...” என்று எழுந்து இடம் கொடுத்தாள்...
மதுவிற்கு கோபம் உண்டானது?... இத்தனை பேருக்கு மத்தியில், என்னை எதற்காக உட்கார சொல்கிறாள் இந்த பெண்?.... நான் அவ்வளவு வயதானவனை போலவா இருக்கிறேன்?... இந்த வயதிற்கே உரிய மூட்டுவலி கூட இன்னும் எனக்கு வரவில்லை, அப்படி இருக்க  இவள் எந்த வகையில் என்னை வயதானவனாக எண்ணுகிறாள்?... இந்த வயதிலேயே அவள் கண்களுக்கு கீழே கருவளையம், உடல் வலுவிழந்ததை வெளிக்காட்டுகிறது... அரை மணி நேரம் அவளால் நிமிர்ந்து நிற்கவே முடியாத அந்த பெண் என்னை எப்படி உட்கார சொல்கிறாள்?.....
அந்த மாணவியை  கண்டுகொள்ளாதவரை போல, இன்னும் முன்னேறி அந்த அழகான இளைஞனின் அருகில் சென்று நின்றார் மது....
அவன் வெகு அருகில் நின்றபோது, “ஆக்ஸ்” பாடி ஸ்ப்ரேயும், அந்த இளைஞனின் வியர்வையும் கலந்த ஒரு வாசனை தெரிந்தது.... “ஹப்பா....!” நாசிகளை தாண்டி சென்ற அந்த வாசனை, மதுவை கிறங்கடிக்க செய்தது... அதுதான் ஆண்மையின் வாசனை போலும்!.... பெரிய கண்கள், அளவான மூக்கு, வரைந்ததை போன்ற உதடுகள்.... ஊதா நிற சட்டையை ஆங்காங்கே கருநீல நிறமாக்கும் அளவுக்கு வியர்வையின் ஈரம்... அவ்வப்போது, தன் கைக்குட்டையால் நெற்றியை துடைத்துக்கொண்டிருக்கும் அவன் கழுத்தில் ஒரு அடையாள அட்டை மாட்டி இருக்கிறது.... பிரபல மென்பொருள் நிறுவனத்தின் பணியாளர் போலும்!...
ஏதோ ஒரு குழப்பம் அந்த இளைஞனின்  கண்களில், அவ்வப்போது அலைபேசியை பார்த்துக்கொண்டு இருக்கிறான்... “நாளைக்குள்ள அந்த ப்ராஜகட்’ஐ எப்டி முடிக்கப்போறனோன்னு தெரியல... தலை வலி உயிர் போவுது... போற வழில மாத்திரை வாங்கணும்...” உடலாலும் மனதாலும் சோர்வின் விளம்பில் இருக்கிறான்....
அப்போதுதான் தன் பின்புறத்தில் யாரோ உரசுவதை போல உணர்கிறான்.... எதேச்சையான உரசலாக இருக்கும் என்று நினைத்தபடி, அரைபார்வையால் திரும்பி பார்த்தான்... சற்றுமுன் நடத்துனரிடம் வசவு வாங்கிய அதே “பெரியவர்”.... இப்படி அந்த இளைஞன் மதுவை “பெரியவர்” என்று நினைப்பது மட்டும் அவருக்கு தெரியவந்தால், நிச்சயம் கோபத்தில் சண்டைக்கே போயிருப்பார்....
பேருந்து குலுங்க குலுங்க அந்த “பெரியவரின்” உரசலும் அதிகமானது.... நிறுத்தத்தில் நின்ற சமயம் பிரேக் போட்டபோது, கிட்டத்தட்ட அந்த இளைஞனை கட்டியே பிடித்துவிட்டார் மது.... இப்போதுதான் அந்த பெரியவரிடம் ஏதோ தவறு இருப்பதை உணர்கிறான் அந்த இளைஞன்... நன்றாக கவனிக்க தொடங்கினான்.... லேசான குலுங்களுக்கு, அதைவிட அதிகமான “இடிப்பு” “பிடிப்பு” “உரசல்” “தழுவல்” எல்லாம் அப்பட்டமாக தெரிந்தது....
அவனுக்கு எல்லாம் புரிந்தது....
“பாக்க டீசன்ட்டா இருக்குறாரு, இந்த மாதிரி பண்றானே?... கெழட்டுக்.....” மனதிற்குள் பல விதமான கோபங்களையும் மதுவின் மீதான கோபமாக திசை திருப்பினான்....
“இன்னொருமுறை அந்த கிழவன் உரசட்டும், பஸ்’னு கூட பாக்காம அசிங்கப்படுத்திடுறேன்... சட்டைய பிடிச்சு இழுத்து, அந்த கன்னத்துல சப்புன்னு நாலு அறை கொடுக்குறேன்... இந்த மாதிரி ஆளுங்க அப்பதான் திருந்துவானுக.... எவ்வளவு எரிச்சலா இருக்கு, ச்ச!!!...” மதுவை அந்த பேருந்துக்குள் எப்படியல்லாம் அசிங்கப்படுத்தலாம்? என்று நினைத்தவாறே, அடுத்த உரசலுக்காக காத்திருந்தான் அந்த இளைஞன்....
சரியாக அந்த நேரத்தில், மதுவின் அலைபேசி அலறியது... திரையில், “டைனோசர்” என்று காட்டியது.... மனைவியின் பெயர்தான் அப்படி சேமிக்கப்பட்டு இருக்கிறது... என்றைக்கு இது தெரிந்து அதற்கு ஒரு பூகம்பம் கிளம்பப்போகிறதோ? தெரியவில்லை....
“சொல்லும்மா”
“என்ன பண்றீங்க இவ்ளோ நேரமா?.... மணி இப்போ ஏழரை ஆகப்போகுது”
மெல்லிய குரலில் பேசிய மது “இதோ வந்துட்டு இருக்கேன்.... ஒன்னும் பயப்படாத, உன் புருஷன் சின்ன வீடல்லாம் ஒன்னும் செட்டப் பண்ணிடல” சிரித்தார்....
“அந்த விஷயத்துல எனக்கு உங்க மேல முழு நம்பிக்கை இருக்கு.... அறுக்க தெரியாதவனுக்கு அம்பத்தி ரெண்டு அருவா கொடுத்தா மட்டும் என்ன கிழிக்கவா போறான்?” வார்த்தைகளில் அதே விஷம், அதே வன்மம்... மது இதற்கு பதில் சொல்லவில்லை....
“எட்டு மணிக்கு பங்க்ஷன் இருக்கு, மறந்துடாதிங்க”
“என்ன பங்க்ஷன்?”
“மறந்தாச்சா?.... சிறந்த குடும்ப தலைவர்’னு உங்களுக்கு அவார்ட் தராங்களே லயன்ஸ் க்ளப்’ல?... அதை வாங்குறதுக்காகவாவது ஒழுங்கா வந்துடுங்க...!”
சொல்லிவிட்டு மறுமுனையில் மதுவின் பதிலை கேட்கக்கூட மனமில்லாமல் அலைபேசியை துண்டித்தார்....
பேருந்து திடீர் பிரேக் போட்டு, ஒரு நிறுத்தத்தில் நின்றது... அந்த பிரேக்கில், மது தன் மீது சாய்வார் என்று நினைத்தபடி அதிரடிகளுக்கு காத்திருந்தான் அந்த இளைஞன்.... கைகளால் கம்பிகளை இறுக்க பிடித்தபடி, தன்னை நிதானப்படுத்தி, பேருந்து நின்ற இடத்தில் தானும் இறங்கினார் அந்த “சிறந்த குடும்ப தலைவர்”.... (முற்றும்)

11 comments:

  1. உங்கள் படைப்புகளில் நான் முதலில் படித்தது இது தான்! பின்னிட்டீங்க!நாற்பதுகளை கடந்த ஒரு கே ஆணின் எல்லா உணர்வுகளையும் ரொம்ப அற்புதமா பிரதிபளிச்சுருகீங்க!! ஹாட்ஸ் ஆப்!! என் தாழ்மையான வணக்கங்கள்! :)

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சந்திர குமார்..... இதை எழுதியபிறகுதான் எனக்கே பயமா இருக்கு, ஒருவேளை நாற்பதுகளில் நானும் மதுவை போல ஆகிருவனொன்னு...
      என் மற்ற கதைகளையும் படித்து பார்த்து, உங்கள் கருத்துக்களை சொல்லவும்... நன்றி...

      Delete
  2. Miga arumaiyana oru padaippu....40 vayadhukku mel indha unarvugal nichayamaga ovvoru orina serkaiyalargalukkum vara koodiya ondrudhan....vaazthukal nanbare..

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நண்பரே....

      Delete
  3. சரியா வாழனுமுன்னு நினைக்கிற ஒவ்வொரு கேவும் சந்திக்ககூடிய பிரச்சனைகளை தான் இது. நம்முடைய உணர்வுகளை பிரதிபலிக்ககூடிய ஒரு நல்ல படைப்பு விக்கி.
    சேகர்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சேகர்...

      Delete
  4. very nice story!!! vicky congrage

    rajesh chennai

    ReplyDelete
  5. No words to say about vijay..we are all lucky to get you as our gay family..all your stories are excellent and reflecting all our gay lives..many time i shed tears while reading ur stories..missing u in chennaiforum..however im following you here..its my longterm wish to meet u...will i get a chance..prasad, Madurai

    ReplyDelete
  6. எனக்கும் அதே பயம் தான் விஜய் விக்கி

    ReplyDelete