“உமா, என்ன பண்ணிட்டு
இருக்க இவ்ளோ நேரமா?... மணி நாலு ஆகிடுச்சு, ஆறு மணிக்கு வந்திடுவாங்க... இங்க பாரு சோபா’லாம் தூசியா இருக்கு, நியூஸ்
பேப்பர் மூலைக்கு ஒண்ணா கெடக்கு...” படபடப்பாய் இயங்கிக்கொண்டிருந்தார் சேகர்...
இயங்கிக்கொண்டிருந்தார் என்பதைவிட, உமாவை இயக்கிக்கொண்டிருந்தார் என்றுதான் சொல்ல
வேண்டும்...
“இப்ப என்ன பிரச்சின உங்களுக்கு?... நான்
என்ன சும்மாவா இருக்கேன்?... காலைலேந்து சமையல்கட்டே கதின்னு கெடக்குறத நீங்க
பாத்துக்கிட்டுதானே இருக்கீங்க?... அது அங்க கெடக்கு, இது இங்க கெடக்குன்னு சொல்ற
நேரத்துல, அதை நீங்க சுத்தம் செய்ய கூடாதா?... வர்றது உங்க பிரென்ட்தானே?...
எள்ளுதான் எண்ணைக்கு காயுதுன்னா, எலிப்புழுக்கையும் எதுக்கு காயனும்?”...
“அப்டி இல்லம்மா... வர்றவன், வீட்டை பார்த்து முகம் சுளிச்சா உனக்குத்தானேம்மா கெட்ட பேரு... வீட்டை
கூட ஒழுங்கா வச்சுக்க தெரியலைனா உன்னைத்தானே தப்பா சொல்வாங்க?” வாளை உயர்த்தி
போருக்கு போன சேகர், எதிரியின் பலம் அறிந்து வெள்ளைக்கொடி வீரனாக மாறிவிட்டார்...
“ஓஹோ.. அப்டியா?... அப்ப உங்களுக்கும் இந்த
வீட்டுக்கும் எதுவும் சம்மந்தம் இல்லையா?... அப்டின்னா வர்ற உங்க நண்பரை எதாச்சும்
சத்திரத்துக்கு கூட்டிகிட்டு போய்டுங்க... உடுத்தச் சேல இல்லன்னு சின்னாத்தா
வீட்டுக்குப் போனா, அவ ஈச்சம்பாயக் கட்டிக்கிட்டு
எதுக்க வந்த கதையா இருக்கே!”
“இங்க பாரு உமா, என்னை கெட்ட வார்த்தையாலகூட
திட்டிக்க, இன்னொரு தடவை இப்டி யோசிக்க வைக்குற மாதிரி பழமொழி சொல்லி என்னைய
டயர்ட் ஆக்கிடாத... இந்த பழமொழி எல்லாத்தையும் பட்டிமன்றத்தோட நிறுத்திக்க... நீ வேணும்னா
போய் ரெஸ்ட் எடு, நானே வேலைய பார்த்துக்கறேன்...” சொல்லி முடித்து, நாளிதழை
அடுக்கியவாறே வேலைகளை தன்வசமாக்க தொடங்கிவிட்டார் சேகர்... வாதம் புரிந்து உமாவை
வெல்ல முடியாது என்பது அவருக்கு தெரியும், தர்க்கம் புரியும் “பட்டிமன்ற
பேச்சாளரிடம்” விவாதத்தில் வெல்ல முடியாது என்கிற காரணத்தால்தான் சேகர் இப்போதும்
அமைதியாகிவிட்டார்... “சிந்தனை செல்வி” உமா சேகர் என்ற பெயரை எங்காவது ப்ளெக்ஸ்
தட்டிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம்.... இன்னும் தொலைக்காட்சி சிறப்பு
பட்டிமன்றங்களில் “நடுவர் அவர்களே!” என்று சொல்லும் வாய்ப்பு வந்திடாவிட்டாலும்,
திருச்சி சுற்றுவட்டாரத்தில் பெரும்பாலான விழாக்களிலும், லோக்கல் தொலைக்காட்சி
பட்டிமன்றங்களிலும் அவ்வப்போது தலைகாட்டி சிந்தனையை தூண்டிக்கொண்டிருக்கும்
செல்விதான் அவள்....
உமாவின் பட்டிமன்ற பேச்சுகள் பெரும்பாலும்,
சேகரை மையமாக வைத்தே சுழலும்... “என் வீட்டுக்காரரு பேரு ராஜ சேகர்... எவ்வளவு
அழகான பேரு... அதை அவருக்கு ஏன் வச்சாங்கன்னு யோசிக்காதிங்க நடுவர் அவர்களே!”
“நான் எங்கம்மா யோசிச்சேன்... இதை உங்க
கணவருதான் இனிமே யோசிக்கணும்” நடுவரும் சிரித்தார்...
“வடிவேலு நடிச்ச படத்தை பார்த்ததுலேந்து
எங்க தெரு பசங்க பூரா அவரை ‘நாய்’சேகர், ‘நாய்’சேகர்னு கூப்பிட ஆரமிச்சுட்டாங்க....”
“அச்சச்சோ!... உங்க கணவர் ரொம்ப
கோவிச்சிருப்பாரே?”
“அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க?... அதை
கேட்டுட்டு என் வீட்டுக்காரரு பிள்ளையாரு மாதிரி அமைதியாதான் இருந்தாரு... அப்டி
கூப்பிட ஆரமிச்ச கோவத்துல, எங்க தெரு நாயல்லாம் கோவிச்சுக்கிட்டு பக்கத்து தெருவுக்கு
ஓடிடுச்சு...” அரங்கமே அதிரும் இந்த பேச்சுகளை அப்பாவியாக ஒரு மூலையில் அமர்ந்து
கேட்டுக்கொண்டிருப்பார் சேகரும்... அவருக்கு கவலையெல்லாம் நாய் சேகர்
பற்றியதில்லை, “மணி இப்பவே ஒன்பது ஆகிடுச்சு... இந்த பட்டிமன்றம் எப்ப முடிஞ்சு,
நான் எப்ப ஆபிஸ் போறது?.. இது முடியுற வரைக்கும் இங்க நான் இல்லைன்னா, வீட்டில்
பாத்திரங்கள் பறக்கும் தட்டுகளாக மாறும், காபி கசக்கும், ரசம் கூட கடல் நீராக
கரிக்கும்... இதல்லாம் தேவையா?” அமைதியாக எல்லோரும் சிரிக்கும்போது சிரித்தும், கை
தட்டும்போது தட்டியும் பொழுதை கழித்து தப்பிப்பார்....
சேகரின் அலுவலகத்தில் யாராவது இதைப்பற்றி
பேசினால்கூட, எப்போதும் மனைவியை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டார்... “அவளுக்கு
அது ஒண்ணுதானே பொழுதுபோக்கு?... தமிழ் இலக்கியம் படிச்சவ, பேச்சும் இயல்பாவே நல்லா
வருது... பேசட்டுமே?” என்பார்... அவர் உமாவிடம் பயப்படும் ஒரே விஷயம், அந்த
பழமொழிகள்தான்... பெரும்பாலும் அத்தகைய பழமொழிகள் கொஞ்சம் யோசித்தால்தான்
புரியும்... மேலும், சில சொலவடைகள் இரட்டை அர்த்தம் கொண்டதாகவும் இருக்கும்...
இதுதான் அந்த பயத்துக்கு காரணம்...
வீட்டை சுத்தமாக்கி, புகைப்படங்களை தூசி
நீக்கி, அலங்கார பொருட்களை அடுக்குகளில் முறைபடுத்தி, காலெண்டர் தேதிகள்
சரிபார்த்து, மொத்த வீட்டையும் “டச்சப்” செய்த பாம்பே ஹீரோயின் போல பொலிவாக
ஆக்கிவிட்டார்... வீட்டில் வித்தியாச தோற்றத்தோடு இன்னும் இருப்பது இரண்டு
மட்டும்தான்... சேகரும், உமாவும்தான் அந்த “இரண்டு”...
காலையிலேயே கருப்பு சாயம் நிரப்பப்பட்ட
தலைமுடிகள், முகத்தில் முளைத்திருந்த வெண்ணிற தாடியிடம் அந்நியப்பட்டு
தெரிந்தது... முப்பதுகளின் இறுதிக்குள் முடிகள் வெளுப்பது இப்போதெல்லாம் இயல்பான
ஒன்றாகிவிட்டது... சில நிமிடங்களில் தாடை முடிகள் தடம் தெரியாமல் அகற்றப்பட்டு,
மீசை அளவாக வடிவமைக்கப்பட்டுக்கொண்டு இருந்தன... உடல் புத்தாடையால்
புதுப்பிக்கப்பட்டு, வாசனை திரவியம் கமகமக்க அறையிலிருந்து சேகர் வெளிப்படும்போது
மணி ஐந்தரை ஆகிவிட்டது....
வேலைகளை முடித்துவிட்டு, பால்கனியில்
அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்த உமாவின் அருகே தயங்கியபடியே சென்றார்...
மல்லிகை வாசம் தன் பின்னால் அடிப்பதை
உணர்ந்து திரும்பினார் உமாவும்...
“அட!... மதுரை மைனரு எங்கயோ கெளம்பிட்டார்
போல?... என்னாச்சு இன்னிக்கு உங்களுக்கு, இவ்ளோ ஸ்மார்ட்டா தெரியுறிங்க?”
வெட்கம் சிரிப்பாக வெளிப்பட, “ஒன்னும்
இல்லம்மா... அமரன் வர்றான்ல, அதான்... நீயும் கொஞ்சம் டிரெஸ் சேஞ் பண்ணி, டச்சப்
பண்ணலாம்ல?” பவ்யமாக கேட்டார்....
“எனக்கு ரொம்ப சந்தேகமா இருக்கு...”
“என்ன?”
“வர்ற உங்க நண்பர் ஆண்தானே?... நடக்குற
கூத்தல்லாம் பார்த்தா, ஏதோ உங்க முன்னாள் காதலி வரப்போற மாதிரி தெரியுதே?... அதுமட்டுமில்லாம,
இந்த ‘அமரன்’ பேரு கூட இதுவரைக்கும் நீங்க என்கிட்ட சொன்னதா நினைவில்ல...
இத்துப்போன இன்பராஜ் முதலா, செத்துப்போன செந்தில் குமார் வரைக்கும் நிறைய
கேரக்டர்ஸ் பேரு ஞாபகம் இருக்கு... இந்த அமரன், ஏதோ தமிழ்ப்படத்துல க்ளைமாக்ஸ்’ல
வர்ற போலிஸ் கேரக்டர் மாதிரில்ல இருக்கு?”
எச்சிலை விழுங்கிவிட்டு, தப்பிக்கும்
அளவிற்கான பதிலை தயார் செய்துவிட்டார்... “இவ்வளவு கேள்விக்கும் நான் பதில்
சொல்லனும்னா ரெண்டு மணி நேரம் ஆகும்... இன்னும் கால் மணி நேரத்துல அமரனும், அவன்
மனைவியும் வந்திடுவாங்க.... கொஞ்சம் கெளம்பும்மா” ஒருவழியாக உமாவை தன் கையாலேயே
எழுப்பி, அறைக்குள் அனுப்பிவிட்டு ஹாலில் பெருமூச்சு விட்டபடி அமர்ந்தார்...
இன்னும் கால் மணி நேரத்தில், எட்டு
வருடங்களுக்கு பிறகு அமரனை பார்க்கப்போகிறேன்.... கடைசியாக அவன் திருமணத்தில் தாலி
கட்டியதை, கலங்கிய கண்களோடும், இடிகளை தாங்கிய இதயத்தோடும் பார்த்ததுதான்...
அதன்பிறகு ஒரு அலைபேசி அழைப்போ, தற்செயலான சந்திப்போ கூட இருந்திடவில்லை...
அவ்வளவு ஏன்!, அந்த நாட்களில் உமாவிடம் நான் “அமரன்” பற்றி வாய் திறந்தது கூட இல்லை...
அதற்கும் காரணம் உண்டு... “அமரன்” என்கிற பெயரை உச்சரிக்கும்போது, என் கண்களை
நிறைக்கும் கண்ணீருக்கான காரணத்தை அவள் கேட்டால், நான் என்ன சொல்ல முடியும்?...
நேற்றுதான் அவனிடமிருந்து திடீர் அழைப்பு
வந்தது.... கடந்த எட்டு வருடங்களில், நான் மாற்றிய நான்காவது அலைபேசி எண்ணை அவன்
எப்படி கண்டுபிடித்தான்? என்றெல்லாம் எனக்கு யோசிக்க தோன்றவில்லை... தன்
மனைவியுடன் “நாளை வருகிறேன்!” என்று சொன்ன வார்த்தைகளுக்கு சொந்தக்காரன், அமரன்
தானா? என்று நான் உணரவே எனக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது... அந்த
நிமிடத்திலிருந்து “அவனிடம் என்ன பேசவேண்டும்?”, குறிப்பாக, “என்னவல்லாம்
பேசக்கூடாது?” போன்ற பட்டியலை பக்கம் பக்கமாக மனதிற்குள்
பதியவைத்துக்கொண்டிருக்கிறேன்....\
“என்னங்க... இப்ப ஓகேவா?” உமா தன் புடவையை
சரிசெய்தபடி அழைத்தபோதுதான் தன்னிலையை மீட்டார் சேகர்...
“ஹ்ம்ம்... நல்லா இருக்கு” பழமொழிகள் தன்னை
தாக்குவதற்கு முன்பாக சுதாரித்து பதில் சொன்னார்....
மணி ஆறை கடந்து சில நிமிடங்கள் ஆனது....
சேகரின் மனம் இன்னும் அதிக படபடப்பிற்கு உள்ளானது... முகத்தின் பூச்சுகளை மீறி
வழிந்த வியர்வையை துடைக்கும் பணியில், கைக்குட்டை ஒன்று தீவிரமாக இயங்கிக்கொண்டு
இருந்தது...
வாசலில் வாகனம் நிறுத்தும் சத்தம் கேட்க,
இதயத்தின் “டம்... டம்..” ஓசையை உணர்ந்தவாறே வாசலுக்கு சென்றார்... உயர் ரக
மகிழுந்து ஒன்றிலிருந்து நடுத்தர வயது தம்பதியாக இறங்கினர் அமரனும், அவன்
மனைவியும்... எட்டு வருடங்களுக்கு உரிய எவ்விதமான அடையாள மாற்றமும் அமரனுள்
தெரியவில்லை... அடர்த்தியான புருவங்களை இணைத்திடும், வெண்ணிற பாலம் போன்ற திருநீர்
பூச்சு கூட இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது... மனைவிதான், திருமணத்தின் போது
பார்த்ததைவிட இப்போதைக்கு கொஞ்சம் பருமனாக தெரிகிறாள்....
என்னை பார்த்து வழக்கமான தன் “தும்பைப்பூ”
சிரிப்பை உதிர்த்தான்... விரலில் வைர மோதிரம், கழுத்தில் பிளாட்டினம் செயின், வலது
கையில் பிரேஸ்லெட் போன்றவைகளுக்கு மத்தியில், இடது கை மட்டும் நான் அவனுக்கு
திருமண பரிசாக கொடுத்த பழைய மாடல் லெதர் ஸ்ட்ராப் கடிகாரத்தை தாங்கிக்கொண்டு
இருக்கிறது....
“என்ன சேகர், அப்டியே நிக்குற?...
வீட்டுக்குள்ள கூட்டிட்டு போறதா உத்தேசம் இல்லையா?” அருகில் வந்து அமரன்
அழைத்தபோதுதான், திடுக்கிட்டு தன்னை உணர்ந்தார் சேகர்...
“அவர் எப்பவும் அப்டிதான்... அடிக்கடி
எமோஷனல் ஏகாம்பரம் மாதிரி தன்னை மறந்து நின்னுடுவாரு.... நீங்க உள்ள வாங்க...”
இருவரையும் உமா அழைத்தபடி முன்னே செல்ல, சிரித்தவாறே ஹாலை அடைந்தனர் மற்றவர்களும்...
வீட்டை கண்களால் நோட்டமிட்டார் அமரன்...
அந்த நோட்டத்தின் காரணத்தை அறிந்த சேகர்,
“எனக்கு ஒரு பையன் அமர்... மூணு வயசு... அம்மா பாக்கனும்னு சொன்னாங்கன்னு, ரெண்டு
நாள் முன்னதான் கொண்டுபோய் ஊர்ல விட்டுட்டு வந்தேன்....” சொல்லிவிட்டு, மேசை
மீதிருந்த தன் மகனின் புகைப்படத்தை எடுத்து காட்டினார்....
புகைப்படத்தை தன் விரல்களால் வருடியவாறே, குழந்தையின்
அழகை ரசித்தார் அமரன்... துறுதுறுப்பான கண்கள், கூர்மையான மூக்கு, முன் நெற்றி வரை
வழிந்திருந்த முடிகள்... அப்படியே சிறுவயது சேகரின் நகலை போலவே புகைப்படத்தில்
சிரித்துக்கொண்டிருந்தது குழந்தை....
“அப்டியே உன்ன மாதிரியே இருக்கான் சேகர்....
கேரக்டரும் உன்ன மாதிரிதானா?” இன்னும் கண்களை புகைப்படத்திலிருந்து விலக்காதபடியே
கேட்டார் அமரன்...
சேகரின் பதிலுக்கு முன்பாக முந்திக்கொண்ட
உமா, “இல்லங்க... பையனுக்கு நல்ல பழக்கவழக்கங்கள்தான்... அவர் மாதிரி இல்ல”
சிரித்தாள்...
அமரும் மனைவியும் பெரிதாக சிரித்தார்கள்,
வழக்கமான தன் அசட்டு சிரிப்பை அரங்கத்தில் பதிவு செய்தார் சேகர்....
சிரிப்பொலிகள் அடங்கிய நேரத்தில் ஒரு
பைக்குள்ளிருந்து ஒரு சிறுபெட்டியை எடுத்து உமாவிடம் நீட்டினார் அமரன்...
என்னவென்று புரியாமல், யோசித்தபடி சேகரை பார்த்தாள் உமா...
“என்ன அமர் இது?”
“ஒண்ணுமில்ல... உங்க திருமணத்துக்கு என்னால
வரமுடியல, அதுக்கு சின்ன பரிசு..” பெட்டியை திறந்து காட்ட, அதனுள் இரண்டு
மோதிரங்கள் ஜொலித்தது...
இத்தனை வருடங்கள் கழித்து வந்திருக்கும்
திருமண பரிசை ஏற்பதா? வேண்டாமா? என்கிற குழப்பத்தில் தடுமாறிய உமாவின் கைகளுக்குள்
அந்த பரிசை திணித்தாள் அமரனின் மனைவி....
“உங்க கல்யாணத்தப்போ நாங்க யு.எஸ்
போய்ட்டோம்... இப்போதான் ரொம்ப வருஷம் கழிச்சு இந்தியா வர்றோம்... உங்களுக்காக அமர்
ரொம்ப தேடி பிடிச்சு இந்த மோதிரம் வாங்கினாரு... ரெண்டு பேரும் போட்டுக்கோங்க”
என்ன அழகாக ஒரு பொய்யை சொல்லி தன் மனைவியை
நம்பவைத்திருக்கிறான் அமர்!... அப்போதிருந்த ஒரு கோபத்தில் நான் அமருக்கு
அழைப்பிதழே கொடுக்கவில்லை... ஆனால், என்னை இங்கே கெட்டவன் ஆக்கிடக்கூடாது
என்பதற்காக தன்னை குற்றவாளி ஆக்கிக்கொண்டான்....
“ஏய் சேகர், அந்த மோதிரத்த சிஸ்டர்’க்கு
போட்டுவிடுப்பா...” அமரின் இந்த வார்த்தைகளை தொடர்ந்து, மோதிரங்கள்
மாற்றப்பட்டன...
“இன்னும் புதுமாப்பிள்ளை மாதிரி
வெட்கப்படுறான் பாரு...” சில நிமிடங்கள் அந்த வீடு கலகலப்பானது...
பின்பு மனைவிமார்கள் இருவரும் திருமண
புகைப்படங்களை புரட்டிக்கொண்டிருக்க, கணவன்கள் மொட்டை மாடியை நோக்கி சுற்றுலா
சென்றனர்...
ஆறரை மணிதான் என்றாலும், காரிருள் அப்பிய
அந்த இடத்தில், ஒரு சிறு விளக்கு மட்டும் வெளிச்சத்தை அளவாக பாய்ச்சிக்கொண்டு இருந்தது...
மாடியின் அந்த குட்டி சுவர் மீது ஏறி அமர்ந்த இருவரும், சில நொடிகள் எதுவும்
பேசிக்கொள்ளவில்லை.. நீண்ட நாட்களுக்கு பிறகு அமைந்திருக்கும் இந்த தனிமை,
சேகருக்குள் ஒரு மெல்லிய பதற்றத்தை படர வைத்திருந்தது....
நிமிடங்கள் நகர்ந்தோட, சேகர் பேச்சை
தொடங்கினார்...
“நல்ல க்ளைமேட்ல?”
“ஹ்ம்ம்.. ஆமா, கசகசன்னு உடம்பல்லாம்
அரிக்குது...”
“நிலா இன்னிக்கு ரொம்ப அழகா இருக்குல்ல?”
“ஆமாமா... அமாவாசை’க்கு எப்பவும் நிலா
அழகாகத்தான் இருக்கும்...”
சேகர் போடும் எல்லா பந்துகளுமே “நோ பால்”ஆக
தடம் புரள, அந்த பந்துகளையும் பவுண்டரிகளை
நோக்கி பறக்கவிட்டார் அமர்....
“அமெரிக்காவுல இப்போ என்ன நேரம் இருக்கும்?”
பொறுமை இழந்த அமர், “பஞ்சாங்கத்தை பார்த்து
சொல்லட்டுமா?” பொய்யாக சிரித்தபடி கேட்டார்...
அபத்தமான கேள்விகள், அதற்கு அர்த்தமில்லாத
பதில்கள்... ஏன் இப்படி?... இருவரும் யோசிக்கவில்லை... ஆனால், அந்த சூழலை
ரசித்தனர்... காலங்கள் பின்னோக்கி சுழன்று, கல்லூரி நாட்களை நினைவு படுத்தசெய்தது
அந்த அமைதி... எத்தனையோ நாட்கள் இப்படிப்பட்ட தனிமை, இருள் சூழ்ந்த மாடியில்,
முழுநிலவு வெளிச்சம் பரப்பிய சாலைகளில் என்று நிறையவே வாய்த்திருக்கிறது... ஆனால்,
இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் இப்படியொரு தனிமை இருவருமே எதிர்பார்த்திராத
ஒன்று... வார்த்தைகளால் நிரப்பப்பட முடியாத உணர்வுகளை, மனங்கள் இரண்டும் தேவைக்கு
அதிகமாகவே பரிமாறிக்கொண்டன...
சில நிமிடங்களை கபளீகரம் செய்தது அந்த அடர்த்தியான
அமைதி!... அந்த அமைதியையும் கபளீகரம் செய்யும் சிரிப்பு சத்தத்தோடு மாடியில்
ஐக்கியமாகினர் மகளிர் அணியினர்...
“நான் அப்பவே சொன்னேன்ல, கழுதை கெட்டா
குட்டி சுவருன்னு..” உமா சிரித்தபடியே சொல்லிக்கொண்டு வர, இரண்டு கழுதைகளும்
ஒன்றின் முகத்தை மற்றொன்று புரியாமல் பார்த்தபடி, அவசரமாக அந்த குட்டி
சுவற்றிலிரிந்து கீழே இறங்கியது...
“டின்னர் ரெடி, வாங்க சாப்பிடலாம்...” உமா
அழைக்க, மறுக்க மனமில்லாமல் தலையசைத்தபடியே கீழே போனார் அமரனும்....
டைனிங் டேபிளை மற்ற மூவரும்
ஆக்கிரமித்திருக்க, உமா பரிமாறினாள்...
“மாடில ரெண்டு பேரும் ரொம்ப சீரியஸா
பேசிட்டு இருந்திங்க போல?” அமரனின் மனைவி சீரியசாகவே கேட்டாள்...
“ஆமாமா.... ரொம்ப முக்கியமான விஷயங்கள்
தான், அதுல சில அதிர்ச்சியான விஷயங்கள் கூட... சேகர் இவ்வளவு ப்ரில்லியன்ட்
ஆகிட்டான்குறது எனக்கு இப்பதான் தெரியுது” அமரன் நமட்டு சிரிப்புடன் கூற, வழக்கமான
“சேகர் மார்க் அசட்டு சிரிப்பை” இப்போதும் உதிர்த்து வைத்தார் சேகர்...
“சப்பாத்தி பிடிக்காது அவனுக்கு, தோசை
வைம்மா... சாம்பார்’ல காய்களை வைக்காத... சிக்கன் கிரேவியா வை” தன்னை மறந்து, தன்
தட்டையே மறந்து அமரனுக்கு பரிமாறி பசியாறினார் சேகர்...
“என்னங்க ஆச்சரியமா இருக்கு?... அமர்
சாப்பாட்டை பற்றி இவ்ளோ டீட்டெயில் நுணுக்கங்கள் எல்லாம் தெரிஞ்சு
வச்சிருக்கிங்க.... என்னை கட்டிகிட்டதுக்கு பதிலா அவர் உங்கள கல்யாணம்
பண்ணிருக்கலாம் போல!” அமரனின் மனைவி சத்தமாக சிரிக்க, உமாவும் பித்தளை பாத்திரத்தில்
தண்ணீர் ஊற்றுவதை போல வித்யாசமாக சிரித்தாள்...
கலகலப்பு காட்சிகள் நிறைவாகி, விடைபெறும்
படலம் கொஞ்சம் சூழலை இறுக்கமுற செய்தது....
இறுதிகட்ட விடைபெறுதலுக்கு முன்பு, சூழலை
கலகலப்பாக்க விரும்பிய அமர், “சிஸ்டர், சேகரை கொஞ்சம் கவனிச்சுக்கோங்க... அடிக்கடி
குட்டிசுவருக்கு போயிடுறான்... பக்கத்துலதான் லேடிஸ் ஹாஸ்டல் கூட இருக்கு போல!...
அப்புறம் உங்களுக்குத்தான் ப்ராப்ளம்...” கொளுத்திவிட்டார்....
“யாரு இவரா?... இந்த சிடுமூஞ்சியாவது
இன்னொன்னு செட் பண்றதாவது!... ஊசிப்போன மொச்சையிலே உழக்கு வாங்க மாட்டாதவன், பாம்பே
அல்வாயிலே பத்து டன் போடுன்னானாம்... உங்க நண்பர் அதுக்கல்லாம் ஆகமாட்டாரு...” சிரித்தபடியே சேகரின் தோளில்
சாய்ந்தபடி, தன் கணவரை வழக்கம் போல வாரினாள்...
வாசலோடு உமா வழியனுப்புவதை நிறுத்திக்கொள்ள,
மகிழுந்தின் கதவு வரை சென்றார் சேகர்... இருவருக்கும் இடையிலான கடைசி பார்வை,
பேச்சாக உருமாறியது... “அடுத்து எப்போ பார்க்கலாம்?” என்றார் சேகர்...
மென்மையாக சிரித்த அமர், “ஜூனியர் சேகரை
பார்க்க, கூடிய சீக்கிரம் வரேன்” சொல்லிவிட்டு சேகரின் கைகளை மெல்ல அழுத்தி,
விடைபெற்றுக்கொண்டார் அமர்.... சிறிய அழுத்தம் பெரிய அளவிலான தாக்கத்தை
சேகருக்குள் உண்டாக்கி, உணர்ச்சிகள் கண்ணீராய் வழிய, அவசரமாக அதை துடைத்துக்கொண்டார்....
அமர் வாகனத்தில் ஏற, மகிழுந்து சீறிப்பாய்ந்தது....
சில நிமிடங்கள் வாகனம் சென்ற திசையை
வெறித்தபடியே நின்று பார்த்துக்கொண்டிருந்த சேகர், மனம் முழுக்க மகிழ்ச்சியும்,
லேசான வருத்தமும் சுமந்தபடி வீட்டிற்குள் நுழைந்தார்...
வீட்டிற்குள் வரும் கணவனை வெறித்த
பார்வையில் பார்த்துக்கொண்டிருந்தாள் உமா... மனதினுள் இப்போது சேகருக்கு பதற்றம்
தொனித்தது... “என்ன பழமொழி சொல்லி எரிச்சல் படுத்த போறாளோ!” மெல்லிய பதற்றத்துடன்
மனைவியின் அருகில் வந்தார் சேகர்...
“இன்னிக்கு நீங்க ரொம்பவே சந்தோஷமா
இருந்திங்க... இப்டி நீங்க இருந்து நான் பார்த்ததே இல்ல... உங்க ரெண்டு பேருக்கும்
இடையில அப்டி ஒரு ஆழமான நட்பை நான் உணர்ந்தேன்... இவ்வளவு நாள் உங்க வாழ்க்கைல
காலியா இருந்த ஒரு வெற்றிடம் நிரப்பப்பட்டது போல இருக்கீங்க... போன ஜென்மத்துல
நீங்க ரெண்டு பேரும் காதலர்களா இருந்திருப்பிங்கன்னு நினைக்குறேன், அதான் இவ்ளோ ஆத்மார்த்தமான
கெமிஸ்ட்ரி உங்க ரெண்டு பேருக்குள்ளும்...” சிலாகித்து சொல்லிவிட்டு உமா, அடுத்த
வேலைகளில் தன்னை ஆட்படுத்திக்கொள்ள தொடங்கிவிட்டாள்....
போன ஜென்மத்து உறவாக நினைக்கும் உமாவிற்கு,
இது இந்த ஜென்மத்து உறவின் எச்சம்தான் என்பது புரியாமல் இருக்கும்வரை, இந்த உறவும்
கொஞ்சம் மிச்சம் இருக்கும்!... (முற்றும்)
Another GooD Story from yoU ViJay. I particularly liked the last stanza... (இந்த ஜென்மத்து உறவின் எச்சம்).
ReplyDeleteரொம்ப நன்றி ராஜு....
Deletefantastic story vijay.,
ReplyDeleteநன்றி மதன்...
Deleteஒவ்வொரு தருணாத்தையும் அழகாக செதுக்குறிங்க விஜய், ஒரு வேண்டுகோள், " பல காதல் ஜோடிகள், திருமணமான மகிழ்வன்-கள் பிரிவதற்கு காரணமாக இருக்கும் இரண்டு விஷயங்களை பற்றி ஒரு நல்ல கதையோ அல்லது சிறுகதையோ எழுத வேண்டுகிறேன்
ReplyDelete1. இணையாக, துணையாக இருக்கிறென் இருப்பது என்று முடிவெடுத்த பின் வெருஒருவருடன் உறவு கொள்வது.
2. உறவு கொண்டது தெரிந்தோ அல்லது யூகத்திலோ, பிரித்து பின் எடுத்த முடிவை நினைத்து வருத்தம் கொள்வது."
நீங்கள் எழுதும் கதையை படித்த பின் எந்த ஒரு காதலரும் பிரியவேண்டும் என்ற முடிவை எடுக்ககூடாது
எழுதுவீர்களா...
நன்றி கமல்... காதல் துரோகம் பற்றி ஏற்கனவே சில கதைகளில் சொல்லிருக்கேன் நண்பா... குறிப்பாக, "மார்ல சாஞ்சு அழனும்" கதையின் கருவே அதுதான்... உங்க முழு எதிர்பார்ப்பு என்ன?னு எனக்கு தெரியல, தனிப்ப்ட்ட முறையில் அதை நான் உங்ககிட்ட கேட்டுக்கறேன்....
DeleteSuperb Vicky. Am waiting for this moment in my life. Now we are living our our life Peaceful. Want to see him again with his family.
ReplyDeleteU made me to think of my...
மிக்க நன்றி ஹாஷிம்.... நல்ல விஷயம்தான், உங்களுக்கு உரியவரை சந்தித்தபின், அந்த அனுபவத்தை பகிர்ந்துக்கோங்க நண்பா....
Deleteமெல்லிய உணர்வுகளை உங்களை விடவும் புரிந்துகொள்ள வேறு யாருக்கும் முடியாது.....
ReplyDeleteரொம்ப நன்றி நண்பா...
Deleteromba soft ah padikave romba nalla irruku pa.........................
ReplyDeletesapadu visayathula sekar senjathu en valkai la nadanthathu polave irruku vijay.............
chinna visayangala collect panni oru mulu kathaya eluthi irrukiga..................
eppa parthalum kindal panni mathanga munadi varum uma kooda purinjukittanga valkai in verumai ku karanam.............
நன்றி ஸ்ரீதர்.... நீங்களும் கூட கதையை நல்லா புரிந்து வைத்திருக்கிறீர்கள்...
Deletecute story VJ
ReplyDeleteநன்றி சஞ்சீவ்...
Deletesuper! kanavan manaivikum idaila ulla purithalai nalla solli irukeenga. car kathava thirakum pothum, motta madiyil pesum pothum, saapidum pothum kathaiya supera kondu poirukeenga. kanavan manaivikulla etharthamana comedy. but antha comedyayum thandi katahiya supera kondu poirukeenga.amaran kaila sekaroda watch katti irunthathu romba miss pandratha irunthathu. vidai perum pothu sekar kangalil kanneer thuligal eakatha solluthu. sekaraiyum, amaranaiyum kaluthanu solli, kaluthakal irangiyathunu athula kooda ilakanam. nice!
ReplyDeleteரொம்ப நன்றி தீபன்.... கதையோடு பயணித்திருப்பது உங்கள் கருத்தின் மூலம் அறியமுடிகிறது...
Deleteromba nalla irunthathu vijay..short but sweet story. seriously expecting part 2 of this story
ReplyDeleteரொம்ப நன்றி பாலா.... உங்கள் தொடர் ஆதரவுக்கும் சிறப்பு நன்றி.... பாகம் இரண்டு பற்றி கொஞ்சம் யோசிக்கணும் நண்பா...
Deletenice story vijay, emotional lines were very nice. but story ends soon, please vicky try to elaborate the stories and situations.
ReplyDeletebecause your stories are so nice and very interesting. please do it vicky.....
நன்றி நண்பா... சிறுகதையில் இவ்வளவுதான் நண்பா எழுதமுடியும்.... ஒருவேளை இன்னும் அதிகமா சொல்லனும்னா, நிச்சயம் அடுத்த பாகம் எழுதுவது பற்றி யோசிக்கிறேன்...
Deleteரொம்ப எதார்த்தமான அழகாண கதை விக்கி. சேகரின் சந்தோசத்தை உமாவைப்போல் நம்மாலும் உணரமுடியுது. அடுத்த பகுதி எழுதுவிங்கனா அவங்க காதலைப் பற்றி சொல்லுங்க விக்கி.
ReplyDeleteரொம்ப நன்றி சேகர்... கதையின் நாயகனும் உங்க பெயர் கொண்டவர்தான்... அடுத்த பகுதி பற்றி இன்னும் யோசிக்கல நண்பா... கரு உதித்தால், கதையை உருவாக்கிடுறேன்....
DeleteSuperb story vijay, thrillers, melodrama, love, friendship, each one better than the other, my ,
ReplyDeletelong long request is a story with ... in it