Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday 21 September 2014

"கே vs திருநங்கை" - குழப்பம் வேண்டாமே!!!....






“அவன் ஆண்கள் மீது ஈர்ப்புள்ளவனாம்...!”
“ஓஹோ... அப்படின்னா அவன் திருநங்கையா?”
நீண்ட நெடுங்காலமாக ஒருபால் ஈர்ப்போடு மூன்றாம் பாலினத்தை தொடர்புபடுத்தி குழப்பிக்கொள்வதும், பிறரை குழப்பியே கொல்வதும்தான் பெரும்பாலானவர்களின் அரைகுறை புரிதலின் வெளிப்பாடு... பல பதிவுகளில் மேலோட்டமாக சொல்லப்பட்ட இரண்டு தரப்பிற்குமான வேறுபாட்டை இங்கே கொஞ்சம் ஆழமாக விவாதிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது...
திருச்சியை சேர்ந்த ஒரு நபர், தன்னை ஒரு திருநங்கையாக நினைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, வேறு மாநிலத்தில் உள்ள திருநங்கைகளை நாடி சென்றுவிட்டார்... அங்கு சென்றபிறகு, அங்கிருந்த சில தெளிவான திருநங்கைகள், அந்த பதின்வயது இளைஞனுடன் பேசிய பிறகுதான், அவன் திருநங்கை இல்லை என்பதும், ஒருபால் ஈர்ப்புடையவன் என்பதும் அவர்களுக்கு தெரிய வந்திருக்கிறது... அதன்பிறகுதான் தன்னை பற்றிய தெளிவான ஒரு முடிவை அந்த இளைஞனால் எடுக்க முடிந்திருக்கிறது.... இது இப்போ மட்டுமில்ல, நிறைய முறை இப்படி பாலீர்ப்பு பற்றிய புரிதல் இல்லாமல், அரைகுறை புரிதலோடு குழப்பத்தில் சிக்கித்தவிப்போர் ஏராளமாக இருக்கின்றனராம்....
பாடப்புத்தகம் முதல் சமூக ஊடகங்கள் வரை “ஆண் என்றால் பெண் மீது ஈர்ப்புகொள்ள வேண்டும் என்பதும், பெண் என்றால் ஆண் மீது ஈர்ப்புகொள்ள வேண்டும் என்பதும்” எழுதப்படாத விதியாக வெளிப்படுத்தி வருகிறது... அதை தாண்டிய ஒரு மாற்றத்தை இந்த சமூகம் எதிர்கொள்ளும்போது, அதற்கான தெளிவைப்பெற கொஞ்சம் பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கிறது.... அதாவது, ஆண் பெண் தாண்டிய நம் சமூகத்திற்கு தெரிந்த ஒரே விஷயம் “திருநங்கை” மட்டுமே... ஆகையால் மட்டுமே, மாறுபட்ட பாலீர்ப்பை இந்த சமூகம் “திருநங்கை” என்ற ஒற்றை கண்ணாடியில் மட்டுமே கவனிக்கிறது...
திருநங்கை என்பவர் தன்னை முழுமையாகவே பெண்ணாக உணர்பவர், தன் ஆணுடலை அறவே வெறுப்பவர்... ஆனால், ஒருபால் ஈர்ப்பினர் (கே’க்கள்) தாங்கள் ஆணாகவே இருக்க விரும்புபவர்கள், தங்கள் ஆணுடலை அப்படியே விரும்பி ஏற்பவர்கள்...
ஒரு ஆண், சிறுவயது முதலே தன் ஆணுடலை வெறுத்து, தனக்குள் பெண்மையை உணர்ந்து, பெண்ணாகவே வாழவிரும்புவதுதான் திருநங்கை என அடையாளப்படுத்த வேண்டியவர்கள்... அவர்கள் ஆண் மீதுதான் ஈர்ப்புகொள்ள வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை... அதாவது, பெண்ணாக மாறிய திருநங்கை ஒருவர், வேறொரு பெண்ணின் மீது கூட ஈர்ப்பு கொள்ளலாம்.... அவர்களை ட்ரான்ஸ் லெஸ்பியன் (trans lesbian) என்று குறிப்பிடுகிறார்கள்.... அதேபோல, பெண்ணாக இருந்து ஆணாக மாறும் திருநம்பிகள், இன்னொரு ஆணின் மீது கூட ஈர்ப்பு கொள்ளலாம்.... அவர்களை, ட்ரான்ஸ்கே (trans gay) என்று குறிப்பிடுகிறார்கள்.... இதை எதற்காக நான் சொல்கிறேன் என்றால், திருநங்கைகளுக்கும் ஒருபால் ஈர்ப்புக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக உணரவைக்கத்தான்...
இப்போதும் கூட பாலீர்ப்பு பற்றிய புரிதல் இல்லாத பல ஒருபால் ஈர்ப்பினரும் தங்களை திருநங்கையாகவே நினைத்து வாழ்கிறார்கள்... நிச்சயம் அவர்கள் தங்களை சுயமதிப்பீடு செய்வது அவசியம்...
மூன்றாம் பாலினத்தை நம் சட்டம் முழுமையாக அங்கீகரித்துள்ள நிலையில், ஒரு நபரை எந்த விதத்தில் அந்த பட்டியலுக்குள் இணைக்கிறார்கள்? என்கிற குழப்பம் வெகுநாட்களாக எனக்கு இருந்தது.... அதுபற்றி ஓரினம் அமைப்பின் சகோதரர் ராம்கி அவர்கள் என்னை தெளிவுபடுத்தியமைக்கு நன்றியை கூற கடமைப்பட்டுள்ளேன்...
ஒரு ஆண் தன்னை பெண்ணாக கருதி, திருநங்கையாக மாறவிரும்பும்போது முதலில் அவர்களுக்கு முழுமையாக உளவியல் கலந்தாய்வு கொடுக்கப்பட்டு, நிஜமாகவே அவர்கள் உடலும் மனமும் மாற்றத்தை விரும்புகிறதா? என்பதை சோதிக்கிறார்கள்.... பிறகு, ஒரு வருடங்கள் அந்த நபரை தொடர் உளவியல் கண்காணிப்பு செய்கிறார்கள், அதன்பிறகு மட்டுமே இறுதியான மருத்துவ சான்றிதழோடு, அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்...
மனநல கலந்தாய்வு, ஒருவருட உளவியல் தொடர் கண்காணிப்பு போன்ற விஷயங்கள் எல்லாம், திருநங்கையாக தங்களை பாவித்து குழம்பும் ஒருபால் ஈர்ப்பினரை தெளிவாக்கத்தான்...
நம் நாட்டை போன்ற பாலியல் கல்வியை “சரோஜா தேவி” புத்தகம் போல பாவிக்கும் ஒரு நாட்டில், சிறுவயது முதல் ஒரு மாறுபட்ட பாலீர்ப்பை சந்தித்து வாழும் எந்த ஒரு நபரும், இத்தகைய குழப்பத்தில் ஆழ்வது இயற்கையே... நீங்கள், நான் என பெரும்பாலோர் நம் பதின் வயதில், நம் பாலீர்ப்பை உணரும்போது “ஒருவேளை நான் திருநங்கையா?” என்று நம்மையே கேட்டுக்கொண்டிருப்போம்... அதன்பிறகு, பாலீர்ப்பை பற்றி அறிந்த பிறகு, நம்மை ஒருபால் ஈர்ப்பினராக நாமே அடையாளம் கண்டபிறகு அந்த குழப்பம் நம்மை விட்டு அகன்றிருக்கலாம்... ஆனால், அத்தகைய தெளிதல் அடையாத பலரும் கூட இங்கே வாழ்வது நாம் ஏற்றாக வேண்டிய கொடுமை, அவர்களை தெளிவாக இனம்கண்டு பிரிப்பது நம் முதல் மற்றும் முக்கிய பணியாக இருத்தல் வேண்டும்...
எனக்கு வெகுநாட்களாகவே இன்னொரு சந்தேகமும் இருக்கிறது...
பெண் தன்மை உடைய நபர்கள் எல்லோரும் கே அல்ல என்பதையும், அவர்களுள் ஏறக்குறைய சரிசமமான நபர்கள் ஸ்ட்ரைட் நபர்கள் தான் என்பதையும் நான் முன்பே உங்களுக்கு கூறியிருக்கிறேன்.... ஆனாலும், என்னுள் இப்போதும் உறுத்தும் ஒரு கேள்வி, “பெண் தன்மை உடைய ஆண்களில், ஸ்ட்ரைட் ஆண்களை விட கே  நபர்கள் ஒப்பீட்டளவில் கொஞ்சம் அதிகமா?” என்பதுதான் அந்த சந்தேகம்.... இது எந்த அளவுக்கு உண்மை? என்பது எனக்கும் இன்னும் முழுமையாக புரிபடவில்லை....
என் சந்தேகத்திற்கு ஒரு காரணம் இருக்கிறது...
“சிறுவயது முதலாக ஒரு ஆண், தான் இன்னொரு ஆண் மீது ஈர்ப்பு கொண்டிருப்பதை உணர்ந்து குழம்புகிறான்... அப்போது, தான் ஆண் இல்லையோ? என்கிற ஒரு சிறு குழப்பத்தில் ஆழ்கிறான்... அந்த பதின்வயது குழப்பம், அவனாகவே தெளிவு பெற கிட்டத்தட்ட சில வருடங்கள் ஆகிவிடுகிறது.... அந்த இடைப்பட்ட சில வருடங்கள், தான் ஆணா? தனக்குள் பெண்மை இருக்கிறதா? என்ற குழப்பத்தில் தன்னை அறியாமலேயே மெல்லிய பெண்மையை புகுத்திக்கொள்கிறான்.... ஆண் என்றால் பெண்ணின் மீதுதான் ஈர்ப்பு கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் தான் ஒரு பெண்ணாக உணரப்பட்டே ஆணின் மீது ஈர்ப்புகொள்ள வேண்டும் என்ற ஒரு அறியாமைக்குள் நம்மில் பலரும் வந்திருப்போம்... அது அவன் சார்ந்த நடை, பாவனை, நடவடிக்கைகளில் பிரதிபலிக்கும்போது, பெண்தன்மை மிக்கவனாக இந்த சமூகத்துக்கு வெளிப்படுகிறது.... சில வருடங்களில், தான் ஆண்தான் என்றும், தனக்கு இருப்பது சமபால் ஈர்ப்பு மட்டும்தான் என்பதை அவன் உணரும்போதும் மனதளவில் அவன் தெளிவானாலும், அவனுக்குள் ஏற்கனவே உள்புகுந்துவிட்ட அந்த பெண் தன்மை அவனுடனேயே நிலைபெற்று விடுகிறது.... இது எல்லா ஒருபால் ஈர்ப்பு ஆண்கள் வாழ்விலும் இருப்பதாக நான் கூறவில்லை... வெகுசில (அதாவது ஒரு பத்து சதவிகிதம்) ஒருபால் ஈர்ப்பு நபர்கள் இந்த பிரிவுக்குள் அடங்குவார்களா? என்ற குழப்பம் எனக்கிருக்கிறது”...
இந்த குழப்பம் பற்றியும் சகோ ராம்கி அவர்களிடம் கேட்டேன்....
“இதுபற்றி மேற்குலகில் ஒரு சர்வே எடுத்தாங்க விஜய்.... பெண் தன்மை மிக்க ஆண்களின் பாலீர்ப்பை பற்றி எடுத்தாங்க... ஆனால், அதில் நீங்க சொன்னபடி மாறுபாடல்லாம் வரவில்லை... எல்லா தரப்பை சார்ந்தவர்களும் சரிசமமாகவே பெண் தன்மை மிக்கவர்களில் இருந்தாங்க....” என்றார்....
ராம்கி சொல்வதை போலவே வைத்துக்கொண்டாலும் கூட, மேற்குலக நாடுகள் மாதிரி பாலியல் கல்வியை பதின்வயதுகளில் போதிக்கும் நாடுகளுக்கு அது சரியாக இருக்கலாம்... அவங்கள்லாம் பதின் வயதுகளிலேயே இதுபற்றியல்லாம் தெளிவா அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கு... ஆனால், நம் நாடு அப்படி இல்லையே... பாலீர்ப்பு பற்றிய குழப்பம் நிலவுவது இங்கதானே... அப்படிப்பட்ட சூழலில், சர்வே லாஜிக் இந்தியாவிற்கு பொருந்தாது என்பதையும் நாம் யோசிக்க வேண்டி இருக்கு....
சரி, இந்த லாஜிக் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகள் பற்றியல்லாம்விட, ஆராய்ச்சிக்கு உள்ளாக்கப்படும் பெண்ணிய தன்மை கொண்ட ஒருபால் ஈர்ப்பு நபர்களின் நிலைமை இங்கே “ஐயோ பாவம்!” ரகம்தான்...
இணைய டேட்டிங் தளங்கள் பலவற்றிலும் “வயதானவர்கள், பெண்ணிய தன்மை உடையவர்களுக்கு அனுமதி இல்லை” என்ற வாசகம் வாசலிலேயே இந்த நபர்களை ஒதுங்க சொல்கிறது.... இத்தகைய பெண்ணிய தன்மை உடைய ஒருபால் ஈர்ப்பு நபர்களின் உண்மையான விருப்பு, வெறுப்பு உண்மைகளை அறிவதற்கு முன்பே நம் மக்களே அவர்களை “பாட்டம்” வகையறாக்குள் இணைத்துவிட்டார்கள்....
 “ஒருபால் ஈர்ப்பு நபர் – பெண்ணிய தன்மை உடைய கே – திருநங்கை” என்று ஒன்றோடு ஒன்றை குழப்பி, மற்றவர்களையும் குழப்பாமல் கொஞ்சம் தெளிவாக்க முயன்றிருக்கிறேன்.... “ஒருவரை விட மற்றவர் உயர்வு” என கருதும் மனநிலை வந்தாலே, இந்த குழப்பங்களுக்கு அவசியம் இருக்காது....
எல்லோரையும் மனிதனாக நேசிப்போம்! மனிதத்தை காப்போம்!...

9 comments:

  1. உங்களுடைய அத்தனை கட்டுரைகளிலும், இது தான் மிகப்பிடித்த ஒன்று °
    குழப்பத்தின் உச்சத்திற்குப்போய் உங்களுக்கு நீண்ட ஒரு கடிதம் எழுதினேன், ஞாபகமிருக்கிறதா அண்ணா !
    அது தான் தெளிவின் திறவுகோல் ! அதற்குப் பிறகு உங்களுடைய சில கட்டுரைகள் ஜான் பாடைல சில கட்டுரைகள், கண்ணகி இளமைலருடன் ஒரு ஸ்கைப் காப், இவை எல்லாம் சேர்ந்து என்னை முழுத தெளிவு பெற்ற மனிதனாக மாற்றி விட்டது ! அதற்கு முதலில் கோடி நன்றிகள் அண்ணா !

    நம் நாட்டில், நம்மை சமூகம், ஏதாவது ஒரு வரை அறைக்குள் தள்ளவே முற்படுகிறது. இன்னமும் நிலவுடைமை சார்ந்த சமூகம், எஜமானன் இல்லாவிடில் அவன் அடிமையாகவே இருக்க வேண்டும் . மற்ற ஆண் போல் இல்லாதவன், பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று ரதோ ஒரு வரையறைக்குள் ஒருவனை இருத்திக்கொள்ளத் தள்ளுகிறது. வேட்டையாடும் பழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விட்டு விட்டாலும், இன்னமும் ஆண் என்பவன். மிருகம் படத்து ஆதி போல் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது.

    மனிதன் என்னும் மலர் எப்படி வேண்டுமானாலும் மலரலாம் என்பது கீழை நாடுகளுக்கு என்னமோ ( குறிப்பாக காலனி நாடுகளுக்கு ) புரிபட மாட்டேங்குது :(

    நீங்கள் கொடுத்த தெளிவு மற்றும் அயல் நாட்டில் இருக்கும் சுதந்திரம் இவை இரண்டும் சேர்ந்து, எனக்குள் இருந்த அந்த பெண்தன்மை, சுத்தமாக மறைந்து விட்டது. 'சுத்தமாக' என்று தான் சொல்லவேண்டும் !

    முன்னாள் தனிமையில் இருக்கும் பொது கண்டதைப் போட்டுக் குழப்பிக் கொள்வதால் எனக்கு அந்த எண்ணம் வந்திருக்கிறது. இப்போது கடந்த சில மாதங்களாக, நான், நானாக, எந்த சமுதாய நிர்பந்தத்திற்கும் ஆட்படாமல் வாழ்ந்து வருகிறேன். அதனால், இயல்பாகவே, எனக்குள் வீரமும், முரட்டுத் தன்மையும் பொங்கி வருகிறது ! எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது ! கலரி கத்துக்க வேண்டும் என்னும் ஆர்வம். மலை ஏற்றம் குதிரை ஏற்றம் எல்லாம் கத்துக்க வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது ! நம் நாடுகளில், இவை எல்லாம் ஆண்கள் மட்டுமீ செய்ய வேண்டியவை என்று இருப்பது இங்கு அந்த பாகுபாடெல்லாம் இல்லை, மன மலரை அழகாக மலர்வதற்கு துணையாக இருக்கிறது சமூக சூழல். நான் நானாக இருப்பதற்கு எல்லா விஷயத்திலும் ஊக்குவிக்கப் படுகிறது. அதனால் அனிச்சையாக, தான் கே தான், கே வாகத்தான் இருப்பேன் என்னும் தைரியமும் கிடைக்கப் பெறுகிறது. இது நம் நாட்டில் இல்லை.

    கூடவே, ஒரு மனித மனத்தின் உல் ஆண் தன்மையாக உணர்வதற்கும் பெண் தன்மையாக உணர்வதற்கும் ஒரு அழுத்தமான, அழிக்கப்பட முடியாத கொடு எதுவும் இல்லை என்று எண்ணுகிறேன். காலச் சூழ்நிலைகளுக்கேற்ப, எதிர்கொள்ளும் செயல்களுக்கேற்ப அது மாறி விடுகிறது. தன் உல் மனதை தன ஆளுமையில் வைக்கத்தேரிந்தவன் நிமிடத்திற்கு நிமிடம் தன்னை எப்படி வேண்டுமானாலும் ( மன்மையான பெண்மை உடையவனாகவோ, கடினமான ஆண்மையை உடையவனாகவோ ) மாற்றிக் கொள்ள முடியும் என்று எண்ணுகிறேன், விஸ்வரூபம் கமலைப் போல. நம் அடையாளத்தின் மீது நமக்கு ஒரு ஆளுமை வந்துய் விட்டால் எந்த வேடமானாலும், சூழ்நிலைக்கேற்ப போட்டுக் கொள்ளலாம் ! அது நடிப்பானாலும், உணர்வளவில் இது சாத்தியம் என்று எண்ணுகிறேன் !ஏனென்றால் நானே மாறி விட்டேனே !

    கட்டுரைக்கு நன்றி !

    ReplyDelete
    Replies
    1. நீண்டதொரு கருத்திற்கு நன்றி தம்பி... ரொம்ப பெருமையான தருணங்கள் தாங்கள் சொல்வதை காணும்போது... நீங்கள் மட்டுமல்ல நானும் அத்தகைய குழப்பங்களிலிருந்து மீண்டு வந்தவன்தான்... நம்மைப்போல குழப்பத்தில் சிக்காமல் தெளிவு கிடைக்க இனிவரும் நபர்களுக்கு ஏதுவாகத்தான் இக்கட்டுரை.... தாங்கள் மாறியதாக சொல்வது மிக்க மகிழ்ச்சி... மீண்டும் நன்றிகள் தம்பி...

      Delete
  2. கே திருநங்கை இரண்டுக்கும் உள்ள வேறுபாடு பற்றிய தெளிவான விளக்கம், முக்கியமான பதிவு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர்....

      Delete
  3. nalla katturai. enakku endrumey intha kuzhappam irunthathillai. naan oru eighth ninth padikkum pothellam kooda ennai ...enmel kaazhpu unarchhi kondavargal ombodhu endru kindaalaga koopittapodhum enakkul intha kuzhappam endrum vanaththillai. naan irupaal eerpullavan endra purithal irunthathu. aanal samugathil palaridam ulla kuzhappaththi intha katturai pokkum.
    melum sameebathil sun tvil vivathamedyil thirunangaigalukkana angeegaram pattri oru vivatham nadanththathu. athil pesiya oru oru pal eerpaalarin aathangam sattrey ulukkiyadhu. thirunangaigal yaar endrum avragali moondarvathu paal endrum angeegaritha arasaangam . engalai en angeegarikka maaten engireergal endu kettar
    nammai innum kaamam saarntha paalinarai paarpathaaleye intha angeegaram marukkupadugirathu. ithai kuriththu ungal katturaiyayi ethirpaarkiren

    ReplyDelete
    Replies
    1. கருத்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா.... தாங்கள் சொல்வது போல திருநங்கைகளுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை... ஆனாலும், அந்த அங்கீகாரத்துக்காக திருநங்கைகள் நடத்திவந்த போராட்டம் அளப்பரியது.... நம் போராட்டங்கள் இப்போதுதான் தொடங்கியுள்ளது... ஆகையால், காலம் விரைவில் நமக்கான அங்கீகாரமும் கிடைக்குமென நம்புவோம்.... இதைப்பற்றி அவ்வப்போது சில கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.... ஆனாலும், தாங்கள் சொல்வது போல ஒரு கட்டுரைக்கான களம் கிடைத்தால் நிச்சயம் அதுபற்றி எழுதுகிறேன்..... நன்றி அண்ணா...

      Delete
    2. இந்த தலைப்பில் ஒரு கட்டுரையை மும்பே நான் எதிர்பார்த்தேன். Top, Bottom பற்றி தெளிவு உள்ளவர்கள்ளுக்கு கூட, gay, Bi, Straight ஐ பற்றி துளியும் தெரிவது இல்லை. தன் பாலீர்ப்பு பற்றிய தெளிவு பதின் வயதிலே இருப்பவர்கள் தான் தன்னை பற்றி வீட்டில் கூறி தன் காதலனுடன் வாழ்வதாக எனக்கு தெரிகிறது.

      Delete
    3. கருத்திற்கு நன்றி இசை... மாறிவரும் கால சூழலில் இப்போதெல்லாம் பலரும் தங்களை வீட்டில் வெளிப்படுத்திக்கறாங்க நண்பா... நம்மவர்களின் புரிதல் அந்த அளவுக்கு சிறப்பான வகையில் தொடர்கிறது,,,

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete